Minnambalam---11-09-21 இயக்குநர் ஜனநாதனின் ‘லாபம்’ - இளைய தலைமுறைக்கு ஓர் ‘அறிவுப் பெட்டகம்’!
டி. எஸ். எஸ். மணி
இயக்குநர் ஜனநாதன் பற்றி, நடிகர் விஜய் சேதுபதி கூறியது போல், “அவரிடம் பொழுதுபோக்கு படத்தை எதிர்பார்க்காதீர்கள். அறிவுபூர்வமான கருத்தாழம் மிக்க படங்களையே அவர் தருவார்” என்ற சொல்லை நிரூபித்து நிற்கிறது லாபம் திரைப்படம். விவசாயிகளின் போராட்டம் நாட்டையே குலுக்கிக்கொண்டிருக்கும் இன்றைய சூழலில், இப்படி ஒரு படம் விவசாய சங்கம் பற்றியும், அவர்களது வாழ்க்கையை உய்விப்பது பற்றியும் வெளிவந்திருப்பது சிறப்பு. ஜனா மறைவுக்குப் பிறகு ‘லாபம்’ படம் மூலம் அவர் உயிர் பெற்று மீண்டும் முழுமையாக வெளிவந்துள்ளார்.
ஜல்லிக்கட்டு எழுச்சி, ‘மெரினா எழுச்சி’ என அழைக்கப்பட்டபோது அதில் ஈடுபட்ட லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு ஜல்லிக்கட்டு பற்றி தெரியாது. ஆனால், அது ‘உரிமைப் போர்’ என்று தெரியும். அதேபோல, இன்று எல்லோரும் விவசாயிகள் போராட்டம் பற்றியும், விவசாய சங்கங்கள் பற்றியும் பேசுகிறார்கள். அதைப் பற்றி ஆழமாகத் தெரியாமலேயே இந்தியாவின் முதுகெலும்பான விவசாயிகள் பற்றி சமூக வலைதளங்களிலே லட்சக்கணக்கில், இளைஞர்கள் தோழமை காட்டுகிறார்கள். அத்தகைய இளைஞர்களுக்கு, ஆழமான புரிதலை உருவாக்க ஜனாவின் இந்தப் படம் ஒரு கல்விப் பெட்டகமாக அமைந்திருக்கிறது.
நடிகர் விஜய் சேதுபதி வழமை போலவே நாயகனாக, விவசாய சங்கப் போராளியாக தூள் பறத்துகிறார். ஸ்ருதிஹாசனும் அவரது பாத்திரத்தைச் சிறப்பாகச் செய்து, ரசிகர்களின் மனதில் காதல், பாடல்,நடனம், நாயகனைக் காப்பாற்றும் பாங்கு என ஒளிர்விடுகிறார். வில்லன் நடிகர்களும் கலக்கிவிட்டனர்.
விவசாயத்தை எப்படி ஆண்டு முழுவதும் செய்ய முடியும் என்று விளக்கம் கூறும் நாயகன் ஒரு வழிகாட்டியாக நிற்கிறார். இன்றைய தலைமுறைக்கு, நமது விவசாயத்துக்குத் தடைகளாக வரும் பெரும் முதலாளிகள், அரசு இயந்திரம் ஆகியோரைப் பற்றி, படம் கிழித்துத் தொங்க விடுகிறது. பெரிய முதலாளி நிலத்தில் ஆமணக்கு போட்டு, கோடிக்கணக்கான பணத்தை அந்நிய நாடுகளிடம் அள்ள நினைக்கும்போது, அவருடன் இருந்த சிறு முதலாளிகள் அதை எதிர்க்கின்றனர். புரட்சிகர விவசாய சங்கத் தலைவருடன் வந்து சேர்ந்து கொள்கிறார்கள்.
இவ்வாறு புதிய ஐக்கிய முன்னணியையும் விவசாய சங்கத்துக்கு ஜனா ஏற்படுத்தித் தருகிறார். அக்கறையுள்ள ரசிகர்களுக்கு இது படமல்ல; பாடம் என்று கூடச் சொல்லலாம். தஞ்சைத் தரணியில் சீனிவாசராவ் பங்களிப்பு பற்றியும் ஜனா விளக்கி விடுகிறார். துப்பாக்கிச் சூடுகள் பற்றியும், கட்சி சார்பற்ற போராட்டங்களில் லட்சக்கணக்கில் மக்கள் கலந்து கொள்வதை, தூத்துக்குடி, கதிராமங்கலம் உட்பட வசனங்களிலேயே ஜனா கொண்டுவருகிறார்.
சண்டைக் காட்சிகளுக்கும் குறைவில்லை. விவசாயம் தோற்றுவிட்டதென விரக்தி அடைபவர்களுக்கும், நம்பிக்கை தருகின்ற ‘கூட்டுப் பண்ணை’ பற்றி புதிய உற்சாகம் தருகிறார் இயக்குநர். எத்தனை புதிய செய்திகள் என ஆர்வமுள்ள இளைஞர்கள் ஆச்சரியப்படுவார்கள்.
நம் கண்முன்னே பார்க்கும் வயல்வெளிகளை இந்த அளவுக்கு விளக்குவது ஒரு பெரும் சாதனை. பசுமை நிறைந்த வயல்களை உருவாக்கக் கொடுக்கப்படும் ‘டிப்ஸ்’ பலருக்கும் உதவிகரமாக இருக்கும். நாட்டையே புரட்டிப் போட தகுதி உள்ள விவசாயிகளின் போராட்டத்தை, ‘எதிர்கால வரலாறு’ என ஆக்கி விட்டாரே இயக்குநர்!
முதலாளிகள் மக்களை ஏமாற்ற முடியும். ஆனால், அது தற்காலிகமானது என்கிறது படம். இந்தப் படம் ‘பார்க்க, பார்க்கத்தான் அதிகமாகப் பிடிக்கும்’ என்று தனுஷ் வார்த்தைகளில்தான் சொல்ல வேண்டும். மறைந்த ஜனாவுக்கு செவ்வணக்கம் செலுத்தி, அவர் ‘லாபம்’ படம் பற்றிக் கூறியதையும் காட்டுகிறார்கள். ஜனா படப்பிடிப்பு நடத்தும் இடத்தில், நடிகர்களுடன் ஊடாடுவதை இறுதியில் காட்டும்போது, கண்களில் எவருக்குமே கண்ணீர் வந்துவிடும்.
நாயகன் செருப்புத் தொழிலாளி மகன் பக்கிரிசாமி என்று கூறும்போது, சோவியத் ரஷ்யாவின் ஸ்டாலினை மனதில் வைத்து எழுதியிருப்பாரோ! ‘ஆடு வெட்டினே... பிராமணர் ஆதரவை இழந்தே! மாடு வெட்டினே... ஒரு பகுதி மக்களின் ஆதரவை இழந்தே! பன்றி வெட்டி வியாபாரம் செய்யறே... எங்க ஆளுங்க ஆதரவையும் இழந்திருவே!’ என்று ஒரு முஸ்லிம் சொல்லும்போது, உணர்ச்சிகரமாக உள்ளது.
தொழில் செய்து பிழைப்போர் சமூகத்தில் உள்ள முரண்பாடுகளைச் சந்திப்பதை, ஜனா படம்பிடித்துக் காட்டுகிறார். தலித் மக்களுக்காக வழங்கப்பட்ட பஞ்சமி நிலங்களைப் படம்பிடித்துக் காட்டுகிறார் ஆங்கிலேயன் ஆட்சியில், நிலமற்றவர்களுக்கு வழங்கப்பட்ட செப்புப் பட்டயத்தை அப்படியே காட்டுகிறார். எத்தனை ஆராய்ச்சி, உழைப்பு!
காவல்துறை கண்களில் மண்ணைத் தூவ புரட்சியாளர்கள் ‘தந்தி கம்பி’களைப் பயன்படுத்துவது ஒரு புதிய யுக்தி. விவசாய சங்கம் நாகரிக உலகுக்கேற்ப வளைந்து செல்வதை, ஸ்ருதிஹாசனது நடன ஆட்ட வரவை சங்கம் அனுமதிப்பதில் பார்க்க முடிகிறது. கடவுள் பற்றி, “ நாம் பேசுவது அரசியல். ஆனால், மக்களுக்கு அது நம்பிக்கை” என்று கதாநாயகன் தனது தோழர்களிடம் கூறுவது அருமையான அறிவுரை. சமூகச் செயற்பாட்டாளர்கள் கற்றுக்கொள்ள நிறைய ‘லாபம்’ படத்தில் இருக்கிறது.
மொத்தத்தில் எந்தக் கட்சியோ, விவசாய சங்கமோ சொல்ல விரும்புவதை, ஒரு இரண்டரை மணி நேரத்தில் ஜனா படம்பிடித்துக் காட்டிவிட்டார். விவசாய சங்கம் புரட்சிகரமாகச் செயல்பட முடியும் என்பதை இந்தப் படம் பகர்கிறது. சினிமாவுக்கே உரிய கற்பனைக் காட்சிகளாக, படத்தில் வரும் நாயகனை, நாயகி காப்பாற்றுவது போன்ற கதைக்கும் இதில் பஞ்சமில்லை. பார்த்தால்தான் வரலாற்று பாடத்தை ரசிக்க முடியும். ‘கதை, வசனம், இயக்கம் – ஜனநாதன்’ என எழுத்துப் போடும்போது, ரசிகர்களின் வாழ்த்து எதிரொலித்தது.
தரமான ஒரு படத்தைப் பார்த்த திருப்தியோடு தியேட்டரை விட்டு வெளியே வந்தோம். படத் தயாரிப்பாளர், ‘தரமான ஒரு படத்தை எடுத்ததற்காகப் பெருமைப்படுகிறேன்’ என்று சொன்னாராம். ‘வணிகம் மட்டுமே நோக்கமாக இருந்தால், ஓடிடியில் மட்டுமே வெளியிட்டிருப்போம். தியேட்டருக்கு வந்தால்தான் விவசாயிகள் பார்த்துப் பயன்பட முடியும்’ என்றாராம்.
மொத்தத்தில், ஒரு ‘தாக்கம் செலுத்தும் பரப்புரை’ (Offensive Campaign) ஆகவும் உள்ளது. இப்படி ஒரு படம் எடுக்க அசாத்திய துணிச்சல் வேண்டும். அது ஜனாவிடம் நிறைய இருந்தது. ஒவ்வொரு வசனத்தையும் ஆழ்ந்து கவனித்து ரசிக்க வேண்டும். முறைப்படி ‘தேசிய விருது’ பெற தகுதியான படம்.