Wednesday, January 6, 2010

காமன்வெல்த் நாடுகளும், ஜனநாயக உரிமைகளும்

புதுடெல்லியில் நேற்றுமுன்தினம் தொடங்கிய காமன்வெல்த் நாடுகளின் 5நாள் மாநாடு, இந்திய நாடாளுமன்ற பேரவைத் தலைவர் மீரா குமாரால் தலைமை தாங்கப்பட்டது. மாநாட்டை தொடங்கி வைத்து தலைமை அமைச்சர் மன்மோகன் சிங் உரையாற்றினார். பல்வேறு வளரும் நாடுகள் அதிகாரத்துவமிக்க அரசு முறையை தேர்வு செய்தபோது, பலகட்சி ஜனநாயகம் இந்தியாவால் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது என்று பெருமிதமாக கூறினார். காமன்வெல்த் என்றால் என்ன? காமன்வெல்த் நாடுகள் என்றால் யார், யார்? காமன்வெல்த் நாடுகள் ஜனநாயக வளர்ச்சிக்கு உதவக் கூடியதா? இதுபோன்ற கேள்விகள் முறையாக நமது மக்களுக்கு எழவேண்டும். ஆனால் அநேகமாக நமது அரசியல்வாதிகள், அதிகாரிகள் உட்பட பெரும்பான்மையோர்க்கு, இந்த காமன்வெல்த் அமைப்புப் பற்றியும், அதன் உறுப்பு நாடுகள் பற்றியும் அதிகமான அறிதல் இல்லாமலிருக்கிறது.
54 உலக நாடுகளை உள்ளடக்கியது இந்த காமன்வெல்த் அமைப்பு. அதில் சில நாடுகள் உறுப்பினர் பொறுப்பிலிருந்து, இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 6 கண்டங்களைச் சேர்ந்த நாடுகள் இந்த அமைப்பில் அங்கம் வகிக்கின்றன. அது உலகமக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு. காமன்வெல்த் உறுப்பு நாடுகளின் ஒட்டுமொத்த மக்கள்தொகை 210 கோடி. இதில் ஒரு உறுப்பு நாடான இந்தியாவின் மக்கள் தொகை மட்டுமே 117 கோடி. ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா நாடுகளைச் சேர்ந்தவர்கள், 94% இந்த அமைப்பிலிருக்கிறார்கள். இந்தியாவிற்கடுத்து பாகிஸ்தான் நாடுதான் 17 கோடியே 60 லட்சம் மக்கள் தொகையுடன் 2வது பெரிய நாடாக இந்த அமைப்பிலிருக்கிறது. வங்காளதேசம் 15 கோடியே 60 லட்சம் மக்கள் தொகையுடனும், நைஜீரிய 15 கோடியே 40 லட்சம் பேருடனும், இங்கிலாந்து 6 கோடியே 10 லட்சம் மக்கள் தொகையுடனும், தென் ஆப்பிரிக்கா 4 கோடியே 90 லட்சம் மக்கள் தொகையுடனும், உள்ளதிலேயே குறைவாக வெறும் 12 ஆயிரம் மக்கள்தொகையுடன் துவலு என்ற நாடும் இதில் உறுப்பினராக இருக்கிறது.
நினைவுபடுத்திப் பார்த்தால் நடந்து முடிந்த டென்மார்க் நாட்டின் கோபன்ஹெகன் நகரில் நடந்த, ஐ.நா. சபையின் பருவநிலை மாற்ற மாநாட்டில், வளரும் நாடுகளுக்கு தலைமை ஏற்று சீனாவும், இந்தியாவும், வளர்ந்த நாடுகளான அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு அடிபணியாமல் இருந்த நேரத்தில் சிறிய தீவு நாடுகளை சேர்த்துக் கொண்டு இதே துவலு நாடுதான், இங்கிலாந்தால் வழிகாட்டப்பட்டு வளரும் நாடுகளின் ஒற்றுமையை உடைக்க ஏற்பாடு செய்தது என்பது புரியும். அத்தகைய பண்புகளைக் கொண்ட இங்கிலாந்து நாடுதான், காமன்வெல்த் நாடுகளுக்கு தலைமை எடுக்கிறது என்ற செய்தி சுவையாக இருக்காது.
ஆங்கிலேய மன்னர் ஆட்சிக்கு கட்டுப்பட்டிருந்த முன்னாள் காலனி நாடுகள் பெரும்பான்மையும் இந்த காமன்வெல்த் அமைப்பில் உறுப்பு நாடுகளாக இருக்கிறார்கள். ஆங்கிலேய மன்னர் ஆட்சியின் வாரிசாகத்தான் இந்த அமைப்பு பலராலும் பார்க்கப்படுகிறது. 1884ம் ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு வருகை தந்த ரோஸ் பெர்ரி பிரபு, ஆங்கிலேய மன்னர் ஆட்சியிலிருந்து விடுதலைப் பெற்ற சில நாடுகளை, காமன்வெல்த் நாடுகள் என்று அழைத்தார். 1887க்கு பிறகு 1911ல் இம்பீரியல் மாநாடு என்று உருவாக்கப்படும் வரை, ஒவ்வொரு காலத்திலும் முறையாக ஆங்கிலேயர் மற்றும் காலனி நாடுகளின் பிரதமர்கள் மாநாடுகளாக கூடி வருகிறார்கள். தொடக்கத்தில் 1921ம் ஆண்டு பிரிட்டிஷ் காமன்வெல்த் நாடுகள் என்று அவை அழைக்கப்பட்டன. 1926ம் ஆண்டு இம்பீரியல் மாநாட்டில் பால்பர் பிரகடனம் வெளியிடப்பட்டது. அதில் ஒவ்வொரு நாடும் தங்களுக்கு உள்ளேயும், வெளியேயும் உள்ள விவாகரங்களில், ஒருவருக்கொருவர் தாழ்ந்தவர் அல்ல என்றும், சம தரத்தில் உள்ளவர்கள் என்றும், பொதுவான இணைப்பை பிரிட்டிஷ் ராணியிடம் வைத்துக் கொள்வார்கள் என்றும், அதை பிரிட்டிஷ் காமன்வெல்த் நாடுகள் என்று அழைக்கலாம் என்றும் அறிவித்துக் கொண்டனர். 1949ம் ஆண்டு ஏப்ரல் மாதம் லண்டனில் காமன்வெல்த் பிரதமர்களின் கூட்டம் ஒன்று கூடியது. அதில் லண்டன் பிரகடனம் வெளியிடப்பட்டது. குடியரசாக மாறிய சுதந்திரமடைந்த நாடுகள் காமன்வெல்த் அமைப்பில் உறுப்பினர்களாக தொடர முடியாது என்ற விதி இருந்து வந்தது. அத்தகைய விதியின் அடிப்படையில் 1950ம் ஆண்டு குடியரசாக மாறிய இந்திய அரசு பற்றிய விவாதம் எழுந்தது. அப்போது ஆங்கிலேய இறைமை என்ற சுதந்திரமான உறுப்பினர் நாடுகளின் சுதந்தரக் கூட்டு என்ற அடையாளத்தை, அதாவது ஆங்கிலேய ராணியாரின் காமன்வெல்த் தலைமையை ஏற்றுக் கொள்வதாக ஒப்புக் கொண்டு இந்தியா உறுப்பு நாடாக தொடர்ந்தது. இந்தியாவிற்கு கொடுத்தது போலவே பிற நாடுகளுக்கும் அங்கீகாரம் கொடுக்க வேண்டும் என்று பாகிஸ்தான் பிரச்சனையை கிளப்பியது. அதனால் லண்டன் பிரகடனம் என்பது நவீன காமன்வெல்த்தின் தொடக்கமாக மாறியது. இந்திய முன்னுதாரணத்தை வைத்துக் கொண்டு, பிறநாடுகளும் குடியரசாகவோ அல்லது சட்டரீதியான மன்னர் ஆட்சியாகவோ, ஆங்கிலேய மன்னர் ஆட்சியிலிருந்து வேறுபட்டு அல்லது ஒத்த வகையில், தனி சுதந்திரத்தோடு காமன்வெல்த் உறுப்பு நாடுகளாக ஆக தொடங்கின. காமன்வெல்த் வளர்ச்சிக்கு ஒப்ப 1945க்கு முன்னால் இருந்த நாடுகள் பழைய காமன்வெல்த் என்று பெயர் பெற்றன. 1932ல் புதிய காமன்வெல்த் இயக்கத்தை வின்ஸ்டன் சர்ச்சில் தலைமையில் தொடங்கினார்கள். அது சமாதானத்தை நிறுவுவதற்காக,ஒரு அனைத்து நாட்டு விமானப்படையை உருவாக்கும் இலக்கைக் கொண்டிருந்தது. இதன் பல அம்சங்கள் ஐ.நா. சபையின் கொள்கைப் பட்டியலிலும் பின்னால் இடம்பெற்றன.
உலகப் பரப்பில் 21% பகுதி காமன்வெல்த் நாடுகளின் நிலமாக இருக்கிறது. அதில் கனடா, ஆஸ்திரேலியா, இந்தியா ஆகியவை பெரும் நிலப்பரப்புக் கொண்ட நாடுகள். ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் பிடிக்குள் காலனியாக இருந்த நாடுகள், விடுதலை அடைந்த பிறகு காமன்வெல்த்தில் சேர்ந்தார்கள் என்றாலும், முன்னாள் போர்ச்சுகீசிய காலனியாக மொசாம்பிக் நாடும் அதில் 1995ல் இணைந்தது. தென் ஆப்பிரிக்காவும் 1994ல் மறுநுழைவு பெற்றது. ஆங்கிலேய ராணியார் ஆட்சியுடன் சட்டத் தொடர்பு பெற்றிராத ரிவாண்டா நாடும் 2009ம் ஆண்டில் காமன்வெல்த் உறுப்பினரானது. சூடான், அல்ஜீரியா, மடகாஸ்கர், ஏமன் ஆகிய நாடுகள் காமன்வெல்த் உறுப்பினருக்காக விண்ணப்பித்துள்ளன. மடகாஸ்கர் மற்றும் அல்ஜீரியா நாடுகள் எப்போதுமே ஆங்கிலேய காலனிகளாக இருந்ததில்லை. 2006ம் ஆண்டில் காமன்வெல்த் செயலாளர் நாயகம் டான் மகின்னான், இஸ்ரேலும், பாலஸ்தீனமும் கூட, காமன்வெல்த் உறுப்பினராகலாம் என்று கூறினார்.
ஜனநாயகத்தை மறுக்கும் நாடுகளும், ராணுவ ஆட்சியை கொண்டுவரும் நாடுகளும் காமன்வெல்த் இடைநீக்கம் செய்யப்பட்டன. ஜனநாயக அரசாங்கத்தை காப்பதற்கான பொறுப்பு அரேரே பிரகடனம் மூலம் அறுதியிடப்பட்டது. 1995 நவம்பர் 11லிருந்து, 1999 மே 29 வரை, பிஜி, நைஜிரியா ஆகியவை இடைநீக்கம் செய்யப்பட்டன. 1999 அக்டோபர் 18ல் பாகிஸ்தான் ராணுவ ஆட்சி வந்தவுடன் இடைநீக்கம் செய்யப்பட்டது. பாக்.கில் மீண்டும் சட்டபூர்வமான ஆட்சி வந்த பிற்பாடு 2004ம் ஆண்டு மே 22ல் இடைநீக்கம் ரத்துச் செய்யப்பட்டது. மீண்டும் அவசர நிலை அறிவித்ததற்காக 2007 நவம்பர் 22ல், 6 மாதத்திற்கு இடைநீக்கம் செய்யப்பட்டது. ராபர்ட் முகபேயின் தேர்தல் மற்றும் நிலச்சீர்திருத்த அணுகுமுறைகளுக்காக 2002ல் ஜிம்பாபாவே இடைநீக்கம் செய்யப்பட்டது.
இதுபோன்று ஜனநாயகம், பொருளாதாரம், பாலினம், நிர்வாகம், மனிதஉரிமைகள், சட்டம், சிறியமாநிலங்கள், விளையாட்டுகள், நீட்டித்ததன்மை, இளைஞர்கள் ஆகிய பகுதிகளில் காமன்வெல்த் தனது கவனத்தைக் குவிக்கிறது. அதையொட்டித் தான் நமது பிரதமர், பலகட்சி ஜனநாயகத்தில் மட்டுமே பெண்களுக்கும் அதிகார மேம்படுத்தல் சாத்தியம் என்று கூறியுள்ளார்.
காமன்வெல்த் விளையாட்டுகள் பிரபலமானவை. 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை அந்த போட்டிகள் நடைபெறும். ஆஸ்திரேலியாவில், மெல்போனில் 2006ல் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி நடந்தது. அடுத்து 2010ம் ஆண்டு இந்தியாவில் புதுடெல்லியில் நடக்கயிருக்கிறது. அதற்கான தயாரிப்புகளை பெருமளவில் டெல்லி அரசு செய்து வருகிறது. ஆகவே காமன்வெல்த் பற்றியும், அதன் விதிகள் பற்றியும், பொதுமக்கள் கற்று, தெளிந்துக் கொள்ளுதல், அவர்களுக்கான இன்னொரு வாய்ப்பு என்பதை புரிந்துக் கொள்ள வேண்டும்.

Tuesday, January 5, 2010

இலங்கை தேர்தலும், குழப்பமான பிரச்சாரங்களும்

இலங்கை தீவில் வரயிருக்கின்ற அதிபர் (ஜனாதிபதி) தேர்தலில் முக்கியமான போட்டி மகிந்தா ராஜபக்சேவிற்கும், சரத்பொன்சேகாவிற்கும் என்பதாக ஆகிவிட்டது. இதில் தமிழர் வாக்குகள் எந்தப் பக்கம் என்பது ஒரு இமாலய கேள்வியாக நின்றுக் கொண்டிருக்கிறது. அதை அடைவதற்கான முயற்சிகள் இரண்டு பக்கமும் தீவிரமான ஏற்பாடுகள், வாக்குறுதிகள், குற்றச்சாட்டுகள், வாய்ச்சவடால்கள், சூளுரைகள் விடப்படுகின்றன.
யாழ்ப்பாணத்திற்கு வந்திறங்கிய சரத்பொன்சேகா தமிழர்கள் மத்தியில் புதுவிதமான வாக்குறுதிகளை அள்ளி வீசியிருக்கிறார். அதில் தான் தன் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றால், அவசர கால சட்டம் உடனடியாக நீக்கப்படும் என்கிறார். இதை அவரை ஆதரிக்கும் ஐக்கிய தேசிய கட்சியும், ஜனதா விமுக்தி பெரமுனாவும் ஏற்கனவே சொல்லிவருகின்றன. யாழ்ப்பாணத்தில் உயர் பாதுகாப்பு வளையங்கள் அனைத்தும் முற்றாக அகற்றப்படும். காணாமற் போனவர் மற்றும் கைதுச் செய்யப்பட்டோர் தொடர்பாக உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். பலாலி விமான நிலையம் விரிவாக்கப்பட்டு, அனைத்து நாட்டு தரத்திற்கு மாற்றப்படும். மேற்கண்ட வாக்குறுதிகளை மக்களிடம் கூறியதுமட்டுமின்றி, ஊடகவியலாளர் சந்திப்பிலும் குறிப்பிட்டுள்ளார். உயர் பாதுகாப்பு வளையங்கள் இன்று தேவையில்லை என்றும், போர் முடிவடைந்த நிலையில் அவற்றின் அவசியம் இருக்கவில்லை என்பதும் அவரது கூற்று. போர் முடிந்த உடனேயே அவை நீக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் ஆனால் மகிந்தா ஆட்சியில் அது நடக்கவில்லை. இப்படித்தான் பொன்சேகாவின் பேச்சு இருக்கிறது. தான் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டால், முதலில் முகமாலை, தணங்கிளப்பு, அறியாலை, யாழ்நகர், பலாலி, நாகர்கோவில் பகுதிகளில் அமைந்துள்ள ராணுவ பாதுகாப்பு வளையங்கள் அனைத்தும் நீக்கப்படும் என்பதாக குறிப்பிட்டே பொன்சேகா கூறுகிறார்.
காணாமற்போனோர் மற்றும் கைது செய்யப்பட்டோர் ஆகியோரில் இன்னமும் சிறையில் உள்ளவர்களின் விவரங்கள் உடனடியாக பகிரங்கப்படுத்தப்படும் என்கிறார். இதில் போர்காலத்தில் கைது செய்யப்பட்டவர்கள் தவிர இப்போது முகாமில் வைக்கப்பட்டுள்ள 10,000க்கு அதிகமான இளைஞர்களின் விவரங்களும் அதற்குள் அடங்கும் என்கிறார். சிறையில் உள்ளவர்களை உடனடியாக விடுதலைச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார். காணாமல் போனவர்கள் உயிருடன் உள்ளவர்கள் குடும்பங்களுக்கு, உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறார்.
மீள்குடியமர்த்தல் என்ற பெயரில் இடம்பெயர்ந்த மக்களுக்கான, அடிப்படை கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படாமலேயே மக்கள் மீள்குடியேற்றப்படுகிறார்கள் என்றும், அதை மகிந்தா தேர்தல் நாடகமாக நடத்துவதாகவும் பொன்சேகா கூறியிருக்கிறார். அப்படி மீள்குடியேற்றம் நடத்தப்பட்ட பகுதிகளிலும், கள்ள ஓட்டுகள் போட ஆளும்கட்சி திட்டமிட்டிருப்பதாக அவர் கூறியிருக்கிறார். மீள்குடியேற்றத்திற்காக அனைத்து நாட்டு நிவாரண நிதி வந்தது என்றும், அதை ராஜபக்சே கம்பெனி களவாடி விட்டது என்றும் கூறுகிறார். உயர் பாதுகாப்பு வளையம் சம்மந்தப்பட்ட ராணுவ, அரசியல் விவரங்கள் தனக்கு தெரியும் என்கிறார் பென்சேகா. தன்னைப் போல் களத்தில் இல்லாமல் 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு வெளிநாட்டவர் போல பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சே அந்த இடத்திற்கு வந்தார் என்று பொன்சேகா குற்றஞ்சாட்டினார்.
தன்னை ராணுவ ஆட்சிக்கு வழிவகுப்பவன் என்று குற்றம் சுமத்துவதாகவும், அப்படி தான் நினைத்திருந்தால் இப்போதுள்ள அரசத்தலைமையை எப்போதோ சிறையிலடைத்து ஆட்சிக்கு வந்திருப்பேன் என்றும் பொன்சேகா கூறினார். இந்த நாடு அனைத்து குடிமக்களுக்கும் சொந்தம் என்றும், தமிழ் மக்களை இரண்டாந்தர குடிமக்களாக பார்ப்பது தவறானது என்றும் அவர் கூறியுள்ளார்.
தமிழ் முஸ்லிம்கள் கிழக்கு மாகாணத்தில் பெரும்பான்மையாகவும், வடக்கிலும், கொழும்பிலும் கணிசமாகவும் இருக்கிறார்கள். அவர்களது பெரிய கட்சியான முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கிம், பொன்சேகாவை ஆதரிக்கிறார். அவரும் வலிய பொன்சேகா ஆதரவு கூட்டத்தில் பேசும்போது திறந்த வெளிகளிலே தமிழ் மக்கள் ஒழுங்கான மலசல வசதிகள் கூட இல்லாமல், ஒழுங்கான மருத்துவ வசதிகள் இல்லாமல், பாடசாலைகள் இல்லாமல் ஆடு, மாடுகள் போல் விரட்டியடிக்கப் பட்டிருக்கிறார்கள் என்று மகிந்தாவை சாடிப் பேசுகிறார். மன்னார் மாவட்டத்திலே, சிலாவத் துறையிலே வாழ்கின்ற மக்களுக்கு நகருக்குச் செல்கின்ற சுதந்திரம் கூட இல்லை என்றும் கூறுகிறார். பொன்சேகா வந்தால் ராணுவ ஆட்சி என்கிறார்கள் என்றும் கிழக்கிலே நடப்பது என்ன என்றும் கேள்வி கேட்டு, திருகோண மலையிலே முன்னாள் ஜெனரல் தான் அரசாங்க அதிபர் என்றும் குற்றஞ்சாட்டினார். அனைத்து மக்களுக்கும் ஜனநாயகத்தை கொடுக்கின்ற மிகப்பெரிய பொறுப்பை பொன்சேகா ஏற்றுள்ளார் என்றும் புகழ்ந்து தள்ளியிருக்கிறார்.
ஆயுத கொள்முதலில் ஊழல் செய்ததாக மகிந்தாவை பொன்சேகா குற்றஞ்சாட்ட, பகிரங்க விவாதத்திற்கு தயாரா என மகிந்த தரப்புக் கேட்க, பொன்சேகா தயார் என பதில் சொல்ல, அரசத்தலைவர் மகிந்தா நேரடியாக பகிரங்க விசாரணையில் கலந்துகொள்ள முடியாது என்று அவர் தரப்பு பல்டி அடித்துள்ளது. இந்த சவால்கள் ஒருபுறம் இந்திய அரசியல் வாதிகளின் லாவணிக் கச்சேரியை நினைவுப்படுத்துகிறது. அதேபோல பொன்சேகா முதலிலேயே 13வது சட்டத்திருத்தத்தை தாண்டியும் தான் அதிகாரங்களை மாகாணங்களுக்கு கொடுக்க முடியும் என்று கூறிய சொற்றொடரை, இப்போது மகிந்தாவும் கூறத்தொடங்கியுள்ளார். அதிரடிப்படையினர் மத்தியில் மகிந்தாவிற்கு வாக்களிக்கக் கோரி, பிரத்தியக துண்டறிக்கைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
அதேநேரத்தில் இழவு விழுந்த எம் தமிழர் வீட்டில், இருவரும் வாக்குக் கேட்கவா வருகிறார்கள் என்ற கேள்வியும் தமிழர் நெஞ்சங்களில் எழுந்துள்ளது. மகிந்தா தோற்கடிக்கப்பட வேண்டும் என்ற கருத்தை யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும் அறிவித்துள்ளது. 2 கொலைகாரர்களில் யாரையும் அரசியல் என்ற பெயரில் ஆதரித்தோமானால், இனப்படுகொலை வாதத்தை மழுங்கடிக்கவே செய்யும் என்றும் கருத்துக்கள் வருகின்றன. கொலைக்கார இருவரில் ஒருவருக்கு ஆதரவாக தமிழ் சமூகம் செல்லுமானால், உலகத்தின் முன்னால் என்ன சொல்வீர்கள் என்றும் கேட்கிறார்கள்.
அதே நேரம் சில சிந்தனையாளர்களின் கேள்விகள் கூட, விவாதத்திற்கு வந்துள்ளது. ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப் பெற்றால், சகஜமான குடிமக்கள் நிர்வாகத்தை ஏற்படுத்துவேன் என்று பொன்சேகா கூறுகிறார். ஒவ்வொரு மாவட்டத்திலும் அதற்காக ஒரு குழு உருவாக்கப்படும் என்றும், அதில் ஜனாதிபதியின் நியமனப் பிரதிநிதி ஒருவரும், வட்டார செயலாளர்கள், மற்ற அதிகாரிகள், எம்.பி.க்கள், வட்டார அதிகாரப் பிரதிநிதிகள், நிதித்துறை அதிகாரிகள், பாதுகாப்பு படையின் தளபதிகள் மற்றும் காவல்துறை, குடிமக்கள் பிரதிநிதிகள் ஆகியோர் இருப்பார்கள் என்பது பொன்சேகாவின் விளக்கம். அவர்கள் ஒவ்வொரு மாதமும் அரசத்தலைவருக்கும், அமைச்சரவைக்கும், நாடாளுமன்றத்திற்கும் அறிக்கைகள் கொடுப்பார்கள் என்றும், முன்னேற்ற ஏற்பாடுகளை அரசத்தலைவர் கண்காணிப்பார் என்றும் பொன்சேகா விளக்கியிருக்கிறார். இதில் சகஜமான குடிமக்கள் நிர்வாகத்தை வடக்கே எப்படி நிறுவப்போகிறார் என்றும், எப்போது அது சாத்தியம் என்றும் கேள்விக் கேட்கிறார்கள்.
ஜனாதிபதி ஆட்சியை ஒழிக்க வேண்டுமென்றால், நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு இருக்க வேண்டுமே, அதை பொன்சேகா எப்படிப் பெறுவார் என்றும் கூட கேள்விகள் எழுந்துள்ளன. குடிமக்கள் நிர்வாகத்திற்கு பாதுகாப்புப் படையின் தளபதிகள் எதற்காக பிரதிநிதிகளாக வரவேண்டும் என்றும் அறிவு ஜீவிகள் கேள்விக் கேட்கிறார்கள். அது ஒரு வழியில் குடிமக்கள் நிர்வாகத்தை முழுமையாக ராணுவ மயமாக்கல் செய்வதாகத் தானே மாறும் என்றும் சிக்கலான கேள்விகளை எழுப்புகிறார்கள்.
இத்தனை குழப்பமான விவாதங்களுக்கு மத்தியில், மகிந்தாவை தோற்கடிப்பது என்ற மனோபாவம் பொதுவாக எழுந்து வருகிறது. இந்திய அரசு எந்தப் பக்கம் என்பதை பொறுத்து இருந்து தான், சொல்வார்கள் போலும்.

Monday, January 4, 2010

திரிசங்கு நிலையில் ஐதராபாத் நகரம்

தெலுங்கானா தனிமாநில கோரிக்கை தீவிரமாக எழுந்த பிற்பாடு, அதை மத்திய அரசு அங்கீகரிக்கும் மனோநிலை வெளிப்பட்டபிறகு, ராயலசீமா மாவட்டங்கள், ஆந்திரா மாவட்டங்கள் தங்களது எதிர்ப்பை, ஆத்திரத்தை அளவுக்கு அதிகமாகவே காட்டத்தொடங்கின என்பது நாடறிந்த செய்தி. அந்த எதிர்ப்புகள் மத்திய அரசினுடைய அதிகார மட்டத்தை ஆட்டிக்காட்டியதால், தெலுங்கானா தனி மாநில அறிவிப்பு திடீரென நிறுத்தப்பட்டது. மீண்டும் தெலுங்கானா மாவட்டங்களிலும், குறிப்பாக ஐதராபாத் தலைநகரிலுள்ள உஸ்மானியா பல்கலைக்கழகத்திலும் கலகக் கொடி உயர்ந்தது. இப்போது நியாயத்தின் அடிப்படையிலும், மக்கள் எழுச்சியின் காரணமாகவும் மீண்டும் ஒரு முடிவை எடுக்க வேண்டிய நிலைமையில் மத்திய அரசு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது. அதனால்தான் முதலில் தெலுங்கானா தனி மாநிலம் என்பதாக ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்த உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், பிறகு பல்டி அடித்து ஆந்திராவிலிருந்து வந்திருந்த காங்கிரஸ் தலைவர்களிடம் தற்போது எந்த முடிவும் இல்லை என்று அறிவித்தார். இப்போது மீண்டும் தெலுங்கானாவின் எழுச்சி, ப.சிதம்பரத்தை மீண்டும் மாற்றிப் பேசுவதற்கு தள்ளியுள்ளது.
எளிமையாக அனைத்துக்கட்சி தலைவர்களின் கூட்டத்தை 5ம் நாள் கூட்டுவதாக அறிவித்துள்ளார். இடையில் தமிழக முதல்வரை வந்து சந்தித்தார். அந்த சந்திப்பில் தன்னுடைய முதல் அறிவிப்பை நியாயப்படுத்தி விளக்கியுள்ளார். அவசரகதியில் முதல் அறிவிப்பை மத்திய அரசு கொடுக்கவில்லை என்பதாகவும், தெலுங்கானா பற்றி மத்திய அரசின் கொள்கை தடுமாற்றத்தில் இல்லை என்பதாகவும் ஊடகங்களுக்கு எடுத்துச் சொல்கிறார். இதிலிருந்து தெலுங்கானா தனி மாநிலமாக பிரிதல் என்ற இயற்கையான நிகழ்ச்சி நடக்கத்தான் செய்யும் என்று இடையில் உள்துறை அமைச்சர் கூறிய வார்த்தைகள் நினைவுக்கு வருகின்றன. அப்படியானால் ராயலசீமா, ஆந்திரா பகுதிகளிலிருந்து வருகின்ற தலைவர்களை எப்படி இணங்க வைக்கப்போகிறது மத்திய அரசு என்ற கேள்வி எழுகிறது.
அனைத்துகட்சி கூட்டத்தை தைரியமாக அறிவித்திருக்கும் மத்திய அரசு, அதற்காக என்ன திட்டத்தை வைத்திருக்கிறது என்ற விவாதம் எங்கெணும் எழுகிறது. தெலுங்கானா தனிமாநிலமாக செல்ல வேண்டும் என்ற அந்த மக்களின் எதிர்பார்ப்புக்கு, ஆதரவான குரல் நாடெங்கிலும் ஒலிப்பதற்கு அடிப்படை காரணமாக இருப்பது எது? அதிகாரத்தை பரவலாக்கினால் மட்டும்தான், பின்தங்கிய பகுதிகளாக இருக்கின்ற வட்டாரங்களுக்கும், அரசாங்கத்தின் சலுகைகளும், திட்டங்களும் போய் சேரும் என்ற அறிவியல் பூர்வமான அடிப்படையில்தான், ஜனநாயகம் வேண்டுகின்ற பல சக்திகளும் தனிமாநில கோரிக்கைக்கு ஆதரவாக குரல் எழுப்பியுள்ளனர்.
மக்களுடைய முழுமையான ஈடுபாட்டில் தெலுங்கானா என்ற முழக்கம் எழுந்து வருவதை உணர்ந்து கொண்ட பல கட்சிகளும், தங்களது நிலைப்பாடுகளை மாற்றி அமைத்துக் கொண்டு, இப்போது தெலுங்கானா தனி மாநிலம் என்ற கோரிக்கையை ஏற்றுக் கொண்டுள்ளனர். பா.ஜ.க. சற்று முன்பே தெலுங்கானா கோரிக்கையை ஆதரித்து விட்டது. சமீபத்திய மோதல்களுக்கு பிறகு மக்கள் உணர்வுகள் பற்றி கற்றுக் கொண்ட தெலுங்கு தேசம் கட்சி, வாக்காளர்களை மனதில் கொண்டு இப்போது தெலுங்கானா ஆதரவு நிலையை எடுத்துள்ளது. இந்திய கம்யூனிஸ்டு கட்சியின், இந்திய கம்யூனிஸ்டு கட்சி (மார்க்சிஸ்ட்)ம் இப்போது தங்களது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு, தெலுங்கானா தனி மாநிலத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இவர்களது பழைய ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சி, 60 ஆண்டுகளுக்கு முன்பே தெலுங்கானா கோரிக்கையை, ஆந்திர மகா சபா என்ற அமைப்பின் மூலமாக ஆதரித்துள்ளனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்டு) என்ற நக்சல் பாரி இயக்கத்தவர்கள் இன்று தெலுங்கானாவில் முழுமையாக களம் இறங்கி, போராட்டத்தை முன்னெடுக்கின்றனர்.
தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி என்ற சந்திரசேகர் ராவ் தலைமையிலான கட்சி தொடங்கிய போரட்டங்கள், அதற்கு பெருவாரியான மக்கள் மத்தியிலிருந்தும், மாணவர்கள் மத்தியிலிருந்தும் கிடைத்த ஆதரவு ஆகிய அனைத்துமே, நிபந்தனை அடிப்படையிலான ஆதரவுகள்தான். அவர்களுக்கு சந்திரசேகர ராவ் கட்சியின் மீது முழுமையான நம்பிக்கை இல்லாத நிலையில், அவரது தனி மாநில கோரிக்கையை மட்டும் ஆதரித்து கிளர்ச்சியில் ஈடுபட்டனர். அதனால்தான் உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்கள், சந்திரசேகர ராவின் பட்டினிப் போராட்ட நிறுத்த அறிவிப்பை எதிர்த்து கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இப்போது காங்கிரஸ் கட்சியின் அமைச்சர்கள், டெல்லி கொடுத்த வாக்குறுதிகளை நம்பி ராஜினாமாக்களை திரும்ப பெறும் போது, அவர்களையும் எதிர்த்து கிளர்ச்சியில் ஈடுபடுகின்றனர். இதன் மூலமே தங்கள் ஆதரவு நிபந்தனை அடிப்படையிலானது என்பதை அந்த மாணவர்கள் நிரூபிக்கிறார்கள். அதே சமயம் கடைசியாக மாவோயிஸ்டுகள் களத்தில் இறங்கியிருக்கிறார்கள். சனிக்கிழமை அவர்கள் ஒரு முழு அடைப்பை 10 மாவட்டங்களிலும் தனித்து நடத்தியிருக்கிறார்கள். இது அவர்களது பழம் பெரும் செல்வாக்கை, மறுபடி புதுப்பித்தல் போன்று தென்படுகிறது.
அதிகாரப் பரவலாக்கல் என்ற அடிப்படையில் மட்டும் ஆதரவும், எதிர்ப்பும் வருகிறதா? அல்லது அதற்கும் மேல் ஏதாவது சக்திகளின் தலையீடுகள் இருக்கிறதா? இப்படிப்பட்ட ஆய்விற்குள் செல்வோமானால், ஒன்று பட்ட ஆந்திரமாநிலத்தில் விவசாயம் தான் முக்கியமான பொருளாதாரம். அதில் அநேகமாக பெருவிவசாயிகள் மட்டுமே தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக சொல்லப்படுகிறது. பெரும் பண்ணையார்கள், பல்லாயிரக்கணக்கான நிலங்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது அந்த மாநிலத்தின் வரலாறு. அதிலும் பெரும்பண்ணைகளாக இருப்பவர்கள் சில குறிப்பிட்ட சமூகங்களை சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள்.
குறிப்பிட்டு சொல்லப்போனால் ரெட்டியார் சாதிப் பண்ணையார்களும், கம்மாநாயுடு சாதிப் பண்ணையார்களும் பெரும்பாலும் ஒன்று பட்ட ஆந்திராவின் பல்லாயிரக்கணக்கான நிலங்களை ஆதிக்கம் செலுத்துகிறார்கள். இவர்கள் பெருவாரியாக இருக்கக்கூடிய வட்டாரங்களாக ராயலசீமா மாவட்டங்களும், கடலோர மாவட்டங்களும் அடையாளம் காட்டப்படுகின்றன. ஆகவே அந்த வட்டாரங்களிலிருந்து எழுகின்ற ஒன்றுபட்ட ஆந்திரா என்ற முழக்கம், இத்தகைய சக்திகளின் பிரதிநிதித்துவத்தை புலப்படுத்துகிறது. இதில் குறிப்பாக சிக்கலுக்கு உள்ளான பகுதியாக, ஐதராபாத் நகரம் இருக்கிறது. ஒன்றுபட்ட ஆந்திராவின் தலைநகர் அது என்பதனால், மேற்கண்ட ஆதிக்க சாதிகள் தங்களது நலன்களுக்கான பல்வேறு சொத்துக்களையும், தொழில்களையும் ஐதராபாத் நகரிலேயே குவித்திருக்கிறார்கள். ஐதராபாத் நகரம் வரலாற்று ஆதாரப்படி, தெலுங்கானா உடன் சென்று விடும் என்ற கருத்து இவர்களை அச்சுறுத்திவிட்டது. அதுவே இவர்களது பெரும் எதிர்ப்புக்கு காரணமாக அமைந்துவிட்டது.
இப்போது ஐதராபாத் நகரையும் இழக்காமல், அதே சமயம் தனி தெலுங்கானாவிற்கும் இசைவு கொடுத்து மத்திய அரசு ஒரு சமரசத்தீர்வை வைக்கலாம் என்று சம்மந்தப்பட்டவர்கள் எண்ணுகிறார்கள். அதாவது தெலுங்கானா மாநிலத்திற்கும், ஆந்திர மாநிலத்திற்கும் பொதுவான ஒரு நகரமாக ஐதராபாத் நகரை ஆக்கிவிடலாம் என்பது அந்த சமரச திட்டத்தின் ஒரு பகுதி என்பதாகவும் செய்திகள் வருகிறது. அதே சமயம் உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்கள், தங்களது போராட்டத்தை டெல்லி வரை எடுத்துச் செல்ல தயாராகிவிட்டார்கள். ஐதராபாத் நகரம், ஆதிக்க சாதி பண்ணையார்களுக்கு, தனிநபர் நலன் சார்ந்த விசயமாக இருப்பதனால்தான், சிக்கல் கூடியுள்ளது என்பதை இப்போது மத்திய அரசு உணர்ந்திருப்பதாக தெரிகிறது.
எது எப்படி இருந்தாலும் தெலுங்கானாவில் இப்போது எழுந்து இருக்கும் எழுச்சி, அவர்களுடைய முன்னேற்றப்பாதைக்கு ஒரு முதல்படி என்பதை கூறாமல் இருக்கமுடியாது. அதுவே ஜனநாயகத்தின் அடித்தளத்தை வலுப்படுத்தும் என்றும் உணராமல் இருக்கமுடியாது.

Sunday, January 3, 2010

பெண்களால் முடியாதது இல்லை ஆனால் முடியாது!

உலக வரலாற்றில் சாகசப்பயணங்கள் அனைவராலும் எப்போதும் வியந்து பாராட்டப்படும். அதிலும் குறிப்பாக அண்டார்க்டிக் பனிமலையின் உச்சத்தில் ஏறும் சாகசப்பயணம், பறந்து சென்று மேற்கொள்ளப்பட வேண்டிய ஒன்று. அதை காமன்வெல்த் நாடுகளின் அமைப்பு உருவாகி 60 ஆண்டுகள் நிறைவானதையொட்டி இந்த பயணம் மேற்கொள்ளப்பட்டது. 8 காமன்வெல்த் நாடுகளை சேர்ந்த 8 பெண்கள் அந்த சாகசப்பயணத்தில் ஒரே குழுவாக சென்றார்கள். இந்திய நாட்டின் பெண்மணியான ரீனா கவுசல் உடன், புரூனே, சைப்ரஸ், கானா, ஜமைக்கா, நியூசிலாந்து, சிங்கப்பூர், இங்கிலாந்து ஆகிய ஏழுநாடுகளின் சாகசப்பயணிகளும் அதில் அடக்கம். அந்த பயணத்தின் வெற்றியில், ரீனா கூறியிருக்கும் அனுபவம் வித்தியாசமானது. அதிலிருந்து அவர் எடுத்திருக்கும் படிப்பினை குறிப்பானது. அதில் தனது பயண வெற்றியை இந்தியப் பெண்களுக்கு காணிக்கையாக்குகிறேன் என்பதாக அறிவித்திருக்கிறார். பெண்களால் முடியாதது எதுவுமே கிடையாது என்பதாகவும் கூறியிருக்கிறார்.
அப்படியானால் பல சாதனைகளை பெண்களால் ஏன் சாதிக்கமுடியவில்லை என்ற கேள்வி ஒவ்வொருவருக்கும் எழவேண்டும். அண்டார்க்டிகா பனிமலையின் ஒப்பந்தம் ஒன்று, உலக நாடுகளால் கையெழுத்திடப்பட்டது. 1981ம் ஆண்டு அந்த ஒப்பந்தத்தில் இந்தியாவும் கையெழுத்திட்டது. அதன்பிறகு அறிவியல் ஆராய்ச்சிக்காக அண்டார்க்டிகாவில் பல்முனை அறிவியல் ஆய்வு நடத்தப்பட்ட அது அண்டார்க்டிகாவுக்கான தேசிய மையம் மற்றும் கடல் ஆராய்ச்சி ஆகியவற்றால் நடத்தப்படுகிறது. இந்தியாவிற்கும் கூட அங்கே ஒரு அறிவியல் ஆராய்ச்சி நிலையம் நிரந்தரமாக இருக்கிறது. 1988ம் ஆண்டு மைத்ரி என்ற பெயரில் கிழக்கு அண்டார்க்டிகாவில் அது நிறுவப்பட்டது. அதில் மண்ணியல், பூகோளம், மருத்துவம் ஆகியவை பற்றிய பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன. பிரியதர்ஷினி ஏரி என்ற தளத்தை சுற்றி சுத்தமான தண்ணீரில் இருக்கும் ஏரி இருக்கிறது. இந்தியா அங்கே இரண்டாவது ஆராய்ச்சி நிலையத்தை லார்ஸ் மண் மலையருகே நிறுவ இருக்கிறது. அது 2012ம் ஆண்டில் செயல்படத் தொடங்கும். அந்த இரண்டாவது நிலையம் கடல் ஆராய்ச்சியை முக்கியமாக நடத்தும்.
இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த அண்டார்க்டிகா பனிபிரதேசத்தில்தான், 7 நாட்டு பெண் வீராங்கனைகளுடன், இந்திய நாட்டின் வீராங்கனை ரீனாவும், தனது சாகசப்பயணத்தை நடத்திக் காட்டியிருக்கிறார். அதனால் அவரது அனுபவத்திலிருந்து எடுத்த படிப்பினைகளில், பெண்களால் முடியாதது எதுவும் இல்லை என்ற உணர்தல் அனுபவ ரீதியானது. ஆனாலும் நடைமுறையில் அத்தகைய அனுபவ சொற்கள் செயல்படுகிறதா? ஏன் செயல்படவில்லை? இப்படிப்பட்ட கேள்விகள் இதையொட்டி எழுப்பப்படவேண்டும்.
உலக நாடுகளில் அனைத்திலுமே பெண்களுக்கான உரிய அங்கீகாரம் கொடுக்கப்படவில்லை என்பதுதான் அறியப்பட்டுள்ள நியதி. ஐ.நா. சபையின் மனித உரிமை அமைப்பு உருவாக்கிய, அகிலத்தின் மனித உரிமை பிரகடனத்திலேயே பாலின சமத்துவம் இல்லை என்ற செய்தியையும், பாலின உரிமை அடிப்படையான மனித உரிமை என்ற குறிக்கோளையும் பதிவு செய்திருக்கிறார்கள். பெண்களுக்காக அவர்களது உரிமைக்களுக்காக ஐ.நா.சபையின் மூலம் பெய்ஜிங்கில் நடத்தப்பட்ட உலக பெண்கள் மாநாட்டில் இத்தகைய விவரங்கள் அலசப்பட்டன. பெண் உரிமையும், மனித உரிமையே என்ற முழக்கம், உலகம் எங்கிலும் பரவியது. இன்றுவரை தொடர்ந்து பேசப்படும் பெண்களுக்கான 33 விழுக்காடு ஒதுக்கீடு, நாடாளுமன்றத்திலும், சட்டமன்றங்களிலும் கொண்டு வருவதற்கான மசோதா, பல்வேறு காரணங்களால், பல்வேறு கட்சிகளின் தலையீடுகளால், பல்வேறு ஆட்சியாளர்களால் நேரடியாகவும், மறைமுகமாகவும் தடுக்கப்பட்டு வருகிறது என்பதை நாம் அறிவோம்.
வலிமையான பணிகளைப் பெண்கள் செய்யமுடியாது என்றும், கடுமையாக உழைக்க பெண்களால் முடியாது என்பதாகவும், தொழில் நுட்ப பணிகளை பெண்கள் அறியமாட்டார்கள் என்பதாகவும், போர் நடவடிக்கைகளில் பெண்கள் சாதிக்க வாய்ப்பில்லை என்பதாகவும் கருத்துக்கள் ஆண்களால், எங்கெணும் பரப்பப்பட்ட செய்திகள்தான் கடந்த காலங்களை நிரப்பி வந்தன. பெண்களுக்கென்று எளிமையான வேலைகளைக் கொடுத்துவிடுங்கள் என்றும், பெண்கள் மென்மையானவர்கள் என்றும், அதனால்தான் கடுமையான பணிகளை செய்ய இயலாதவர்கள் என்றும் ஒரு பரப்புரை இங்கே ஏற்கனவே பரப்பப்பட்டுள்ளது. அது அனுதாபத்தின் தருணமாக உருவான ஒரு கருத்தாக்கம் என்றுதான் பொதுவாக எண்ணுகிறார்கள். ஆனால் அதில் புதைந்து கிடக்கும் உண்மைகள் வேறு கோணத்தில் காணப்படவேண்டும்.
அதாவது பல்வேறு விதமான பணிகளில், குறிப்பாக கடினமான பணிகள் என்று அறியப்படும் வேலைகளில், பெண்களை ஈடுபடுத்தும் போது, அவர்களது கவனக்குவிதலும், அக்கறையும், விடாப்பிடியான உழைப்பும் சேர்ந்து அவர்களது தனித்திறமைகளை நிரூபிக்கும் நிலைமைக்கு கொண்டு விட்டுவிடும். அப்படி பெண்கள் தங்களை நிரூபித்துவிட்டால், ஆண்கள் எந்தவிதத்தில் பெண்களை விட உயர்ந்தவர்கள் என்ற மதிப்பீடு பிரச்சினை விவாதத்திற்கு வந்துவிடும். அப்படிப்பட்ட விவாதங்கள் ஆண்களுடைய தலைமையை, அல்லது ஆதிக்கத்தை அல்லது தனிப்பெருமையை நொறுக்கி விடும். இப்படி நொறுங்கி விழத் தயாரில்லாத, ஆண் ஆதிக்கம் என்பது இந்த இடத்தில் தனது வேலையைக் காட்டுகிறது. அது ஒரு சிந்தனைப்போக்கு. அந்த சிந்தனைப்போக்கு செல்வாக்கு செலுத்துகின்ற ஒரு காலக்கட்டத்தில், ஒரு சமூகத்தில் நாம் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அதனால் பெண்களை அவர்களது திறமையை வெளிப்படுத்தக்கூடிய களங்களுக்கு வரவிடாமல் செய்வது என்ற ஒரு தந்திரத்தை, ஆண்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. அதனால்தான் அதற்கான சூழலை ஏற்படுத்தக்கூடிய மதிப்பீடுகளை, நியதிகளை, கருத்துக்களை சமூகத்தின் கருத்துக்கோப்புகளாக உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.
மேற்கண்ட போலியான அல்லது செயற்கையான உருவாக்கத்தை செய்ததைத்தான் ஆணாதிக்க உருவாக்கம் என்பதாக பெரியார் தொடங்கி அனைத்து பெண்ணியவாதிகளும் இன்று வரை அறுதியிட்டு கூறிக்கொண்டிருக் கிறார்கள். இத்தகைய காரணங்களினால்தான் இன்று வரை, அனைத்து துறைகளிலும் பெண்கள் பங்களிப்பு என்பது அறிமுகப்படுத்தப் படாமலேயே இருக்கிறது.
தமிழ்நாட்டில் வாகன ஓட்டுநராக பெண்கள் வரமுடியாது என்று இருந்த ஒரு சூழலில், நாகர்கோவிலைச் சேர்ந்த பெண் ஒருவர் ஓட்டியாக பயிற்சி பெற்று பணிக்கு வந்தார். அப்படி இருந்தும் தடுக்கப்பட்ட அவர், பெண்கள் இயக்கத்தின் ஒத்துழைப்புடன் அரசாங்கத்துடன் விவாதங்களை நடத்தி, தனது பணியிடத்தை தக்க வைக்க வேண்டிவந்தது. அதுபோல சமீபத்தில் நாடாளுமன்றத்தில் ராணுவப்பணிகளில் அதிரடி படை வீரர்களாக பெண்கள் எடுக்கப்படுவார்களா என்ற விவாதத்தில் சுஷ்மா சுவராஜிற்கு, பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி பதில் கூறினார். அந்த பதிலும் கூட, முடியும் ஆனால் முடியாது என்பதுபோல இருந்தது. அதாவது அதிரடிப் படையில் கமான்டோக்களாக பெண்கள் உடனடியாக வரமுடியாது என்றும், ஆனால் பெண்கள் எல்லாவற்றிலும் முன்னேறி வரமுடியும் என்பதால், ராணுவத்திலும் பல பெண்கள் சேர்க்கப்பட முடியும் என்றும் அமைச்சர் கூறினார். இப்படிப்பட்ட அந்தோணியாரின் சிந்தனைப்போக்குகள்தான், அல்லது முன்வைப்புகள்தான், வளைந்து கொடுத்து பதில் கூறும் ஆண்களிடம் அண்டிக்கிடக்கிறது.
பெண்களுக்கு 33 விழுக்காடு முடிவுகளை திட்டமிடுகின்ற, நாடாளுமன்ற, சட்டமன்ற அவைகளில் கொடுப்பது என்ற மசோதா, உலகளாவிய ஆய்வின் அடிப்படையில் உருவான ஒன்று. அதாவது ஒரு அமெரிக்க பல்கலைக்கழகத்தில், ஆராய்ச்சியின் மூலம் கிடைத்த விடையாக, குறைந்த பட்சம் திட்டமிடும் இடங்களில், தீர்மானிக்கும் தளங்களில் 3ல் ஒரு பங்கு விழுக்காடு இருக்கின்ற பாலினப்பிரிவு தங்களது உரிமைகளை தக்கவைத்துக்கொள்ள முடியும் என்பதாக கண்டுபிடிக்கப்பட்டது. அதையொட்டியே 100ல் 33% என்பதாக பெண்களுக்கான இடஒதுக்கீட்டை முதலில் பெறுவது என்ற முழக்கம், உலகெங்கிலும் பரவியது.
அப்படியானால் இந்த உலகம் ஆணாதிக்க உலகம் என்பதாக ஒப்புக்கொள்ளப்பட்டு, அதில் 50% உள்ள மக்கள் பிரிவினர், குறைந்த பட்சம் 33% பெற்றாலாவது பரவாயில்லை என்ற கோரிக்கைதான் உரிமைக் கோரிக்கையாக எழுப்பப்படுகிறது. அதற்குக் கூட வழியில்லாத ஒரு அரசியல் அமைப்பை, சமூக காரணங்களினால் இந்தியாவில் இன்று வரை நாம் கட்டிக்கொண்டு அழுகிறோம். எப்போதுதான் ரீனாக்களின் கனவுகளை நனவாக்கப்போகிறோம் என்று சொரணையோடு இந்த சமூகத்தை கேட்கலாம்.

Saturday, January 2, 2010

சந்திரசேகரன் மரணம்

கொழும்பு, ஜன. 2
சமூக அநீதி ஒழிப்புத்துறை அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான பெரியசாமி சந்திரசேகரன் நேற்று அதிகாலை மாரடைப்பால் காலமானார்.
இறக்கும் போது அவருக்கு வயது 52 ஆகும். நேற்று அதிகாலை மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து, அமைச்சரை உடனடியாக கொழும்பின் நவலோக வைத்தியசாலைக்கு எடுத்துச்சென்ற போதும் அங்கு அவர் உயிர் பிரிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலையகத்தில் பிரபல அரசியல்வாதியாக திகழ்ந்த அவர்,பல்வேறு போராட்டங்களிலும் பங்காற்றியவராவார்.
1957 ஆம் ஆண்டு ஏப்ரல் 16ம் தேதி பிறந்த சந்திரசேகரன், முதன் முதலாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மூலம் அரசியலுக்கு பிரவேசித்தார்.
இதற்கு முன்னர் அவர் வகித்து வந்த சமாதான நீதிவான் பதவியே அவரை சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்துக்கு கொண்டு சென்றது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸில் இருந்து விலகிய அவர் மலையக மக்கள் முன்னணியை ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியான ஈ.பி.ஆர்.எல்.எஃப்.தலைவர் பத்மநாபாவின் முன் முயற்சியுடன் தோற்றுவித்து, முகுந்தன் தலைமையிலான புளொட் அமைப்புடன் இணைந்து முதலாவது மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தமிழீழ விடுதலைப் போருக்கு ஆதரவளித்தார் என்ற வகையில் இவர் சில காலம் சிறையும் சென்றார்.
இதன் பின்னர் நாடாளுமன்றத்திற்கு தெரிவான அவரின் ஆசனம் மூலமே 2001 ஆம் ஆண்டு சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்காவின் அரசாங்கம் ஆட்சி அமைக்க கூடியதாக இருந்தது.
இந்தநிலையில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு வழங்கிவந்த அவர், ராஜபக்சே அரசாங்கத்தின் அமைச்சராக இருந்து வந்தார்.
இவருக்கு இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர்.
இந்தநிலையில் அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் பிரதிநிதியாகவும் செயற்பட்டு வந்தார். மலையகத்தில் தனி அலகு கொள்கையை இவரின் கட்சி கொண்டிருந்ததுடன் மலையகத்தின் பிரச்சினைகளை வெளியுலகிற்கும் கொண்டு சென்றது

சரணடைந்த விடுதலைப் புலிகளை

கொழும்பு, ஜன. 2கடந்த மே மாதம் 18 ஆம் நாள் சரணடைந்த விடுதலைப் புலிகளின் தலைவர்களையும், விடுதலைப் புலிகளையும் படுகொலை செய்த இலங்கை ராணுவத் தளபதிகளின் பெயர் விபரங்களையும், அதற்கு உடந்தையாக இருந்த அரசு அதிகாரிகளின் விபரங்களையும் ஊடகவியலாளர்ஒருவர் வெளியிட்டுள்ளார்< இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:வன்னியில் நடைபெற்ற இறுதிக்கட்ட போரின் போது மே 18 ஆம் நாள் சரணடைந்த விடுதலைப் புலிகளை படுகொலை செய்த இலங்கை ராணுவ அதிகாரிகளின் பெயர் விபரங்களை ஊடகவியலாளர் ஒருவர் வெளியிட்டுள்ளார்.இந்த அதிகாரிகள் போரியல் குற்றங்களை மேற் கொண்டவர்களாகும் என தெரிவிக்கப் படுகின்றது. பின்வரும் ராணுவ அதிகாரிகள் சரணடைந்தவர்கள் மீதானபடுகொலையை மேற்கொண்டவர்களாவார்கள்.59 ஆவது படையணியுடன் இணைந்து இயங்கிய சிறப்பு படை ரெஜிமென்ட்டின் ஆணைய அதிகாரி கர்ணல் அதுலா கொடிபிலி, 1 ஆவது சிறப்புப்படை பட்டாலியன் ஆணைய அதிகாரி மேஜர் மகிந்த ரணசிங்கா, 2 ஆவது சிறப்பு படை பட்டாலியன் ஆணைய அதிகாரி மேஜர் விபுலதிலக இகலகே.சிறப்பு படையின் கால்ஃப் கம்பெனியின் ஆணைய அதிகாரி கேப்டன் சமிந்த குணசேகரா,ரோமியோ கம்பெனியை சேர்ந்த கேப்டன் கவின்டா அபயசேகர, எக்கோ கம்பனியைசேர்ந்த மேஜர் கோசலா விஜகோன், டெல்ரா கம்பெனியை சேர்ந்த கேப்டன் லசந்தாரத்னசேகரா.மேற்கூறப்பட்டவற்றில் கால்ஃப் மற்றும் ரோமியோ கம்பெனிகள் 1 ஆவது சிறப்பு படைபற்றலியனின் கீழ் செயற்பட்டிருந்தன. எக்கோணஞண் ணீ;மற்றும் டெல்ரா கொம்பனிகள் 2 ஆவதுசிறப்பு படை பற்றலியனை சேர்ந்தவை.டிவிசன் (படையணி) தர அதிகாரிகள்:மேஜர் ஜெனரல் பிரசன்னா டீ சில்வா 59 ஆவது படையணியின் ஆணைய அதிகாரிமேஜர் ஜெனரல் சிவேந்திர சில்வா 58 ஆவது படையணியின் கட்டளை அதிகாரிமேஜர் ஜெனரல் கமால் குணரட்னா53 ஆவது படையணியின்ஆணைய அதிகாரிகர்ணல் ரவிப்பிரியா எட்டாவது நடவடிக்கை படையணியின் ஆணைய அதிகாரிஅரசு தரப்பில் போரியல் குற்றங்களை மேற்கொண்டவர்கள்:அரச தலைவர் மகிந்த ராஜபக்சேஅரச தலைவர் செயலாளர் லலித் வீரதுங்காபாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சேசிறப்பு ஆலோசகர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் அரசு ராஜபக்சேவெளிவிவகார செயலாளர் பாலித கோகன்னா ஆகியோர் அந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்

அறியாமை இருவகைப்படும்

அறியாமை என்பது பொதுவாக பொதுமக்கள் மத்தியில், கல்வியின்மையாலும், தொடர்பு சாதனங்கள் இன்மையாலும், குறுகிய வட்டத்திற்குள் தங்கள் வாழ்க்கையை கழித்து வருவதனாலும் இருந்து வரக்கூடிய ஒன்று என்பது தான் உலகளாவிய அளவில் ஒப்புக்கொள்ளப்பட்டு வருகிறது. அறியாமை என்பதை பரந்துபட்ட மக்கள் மத்தியில் காணும்போது, அவர்கள் மீது ஒருவித அனுதாபத்தோடு யாருமே நோக்குகிறார்கள். அதே அறியாமையை சட்டத்தைப் பற்றிய விவகாரத்தில் மன்னிக்க முடியாத குற்றம் என்பதாக விளக்குகிறார்கள். ஒரு அரசாங்கத்திற்கு அல்லது ஆட்சியாளர்களுக்கு அல்லது நிர்வாகத்திற்கு அல்லது அதிகாரிகளுக்கு, சொல்லப்போனால் அரசியல் வாதிகளுக்கு அதே அறியாமையிருக்குமானால், அதை குற்றம் என்று சொல்லுகிறார்களோ இல்லையோ, அதனால் விளையும் பாதிப்புகள் அல்லது தீமைகள் அதிகம் என்பதை கூறாமலிருக்க முடியாது. ஒரு அரசாங்கத்தை நடத்திச் செல்லும் ஆட்சியாளர்கள், எந்தப் பிரச்சனையை அணுகுகிறார்களோ அந்த பிரச்சனையை பற்றிய அறிவு என்பது அடிப்படையான தேவையாக அவர்களுக்கு இருக்கிறது. அதைப்பற்றிய அறிவை பெறுவதற்கு அவர்களுக்கு அதிகமான அளவில் வாய்ப்புகள் இருக்கின்றன. அவர்களது அமைச்சகத்தில் ஏராளமான அதிகாரிகளும், அந்த அதிகாரிகளுக்கு உதவி செய்வதற்கான உதவியாளர்களும், அவர்களுக்கு ஆதாரப்பூர்வமான புள்ளி விவரங்களை எடுப்பதற்கான ஆவணங்களும், கோப்புகளும் அங்கே அதிகமான அளவில் குவிந்துகிடக்கின்றன. ஒவ்வொரு பிரச்சனை மீதும், சம்மந்தப்பட்ட அலுவலகங்களில் மட்டும் தான், வேறு எங்கும் கிடைக்காத அளவிற்கு புள்ளி விவரங்கள் கிடைக்க முடியும். அப்படி பரந்துபட்ட வாய்ப்புகள் இருந்தும் கூட, ஒரு ஆட்சியாளர் அதுபற்றிய விவரங்களில் அறியாமை இருப்பதாக கூறினாலோ, அறியாமை அடிப்படையில் செயல்பட்டாலோ, அது மாபெரும் குற்றமாக கருதப்பட வேண்டும். அப்படி இன்று கருதப்படுகிறதா என்று கேள்வி கேட்பதை விட, பொறுப்புணர்வு கொண்ட ஆட்சியாளர்கள் அறியாமை இருட்டிலே அகப்பட்டுக்கொண்டு, அதனாலேயே பொதுமக்களுக்கு தேவயான திட்டங்களோ, வளர்ச்சிகளோ, முன்னேற்றமோ போய்ச்சேரவில்லை என்று வரும்போது அது பொறுப்புணர்வற்ற அறியாமை என்ற மாபெரும் குற்றமாகத் தான் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். அரசியல்வாதிகளின் அறியாமை என்பது பல நேரங்களில் வெறும் கேலியாகவும், கிண்டலாகவும் ஆக்கப்பட்டு நிறைவடைந்து விடுகிறது. உதாரணமாக சட்டமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் தங்களது தேர்தல் வெற்றிக்கான சான்றிதழை, தேர்தல் அதிகாரியிடம் பெற்றபிறகு, சட்டபேரவையில் தனது பொறுப்பை ஏற்பதற்கு முன்னால், அந்த சான்றிதழை ஆதாரமாக சட்டபேரவை தலைவரிடம் ஒப்படைக்க வேண்டும். ஆனால் 40 ஆண்டுகளுக்கு முன்னால், தென் மாவட்டத்தில் தமிழகத்தில் தேர்தலில் வெற்றிபெற்ற ஒரு சட்டமன்ற உறுப்பினர், தனக்கு வழங்கப்பட்ட வெற்றி சான்றிதழை சட்டபேரவை தலைவரிடம் கொண்டுபோய் ஒப்படைக்க வேண்டும் என்ற விவரம் தெரியாமல், அந்த சான்றிதழை பிரேம் போட்டு வீட்டிலே மாட்டிவிட்டார் என்பதாக ஒரு செய்தி வெளியானது. இது அந்த உறுப்பினரின் அறியாமையை காட்டுகிறது. இது கடுமையாக கேலிச் செய்யப்பட்டது. இப்படி தனியொரு அரசியல்வாதி அடிப்படை பிரச்சனைகளை அறியாமலேயே செய்கின்ற அறியாமை தவறுகள், கேலி கிண்டலோடு முடிந்து விடுகின்றன. அதுவே ஒரு குறிப்பிட்ட மக்கள் பிரச்சனையின் மீது, ஆட்சியாளர்களோ அல்லது தீர்மானிக்கும் இடத்தில் இருக்கின்ற அதிகாரிகளோ, அரசியல்வாதிகளோ பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் அளவுக்கு ஒரு திட்டத்தைப் பற்றியோ, அதன் விளைவுகளைப் பற்றியோ, அதன் பொருத்தப்பாட்டைப் பற்றியோ அறியாமைலிருந்தால் அது ஆபத்தான குற்றம் என்று கணக்கிட வேண்டுமா இல்லையா? உலக வங்கி கடனை ஆட்சியாளர்கள் தாராளமாக வாங்குகின்ற பக்குவத்திலிருக்கிறார்கள். அப்படி கடன் கொடுக்கக் கூடிய உலக வங்கி, தன் நலனுக்காக சில நிபந்தனைகளை முன்வைக்கிறது. அத்தகைய நிபந்தனைகள் நமது நாட்டிற்கோ, நாட்டு மக்களுக்கோ நன்மை பயக்கக்கூடியதா என்று ஆராய வேண்டிய பொறுப்பு ஆட்சியாளர்களுக்கு இருக்கிறது. அதை சுட்டிக் காட்டி, எடுத்துக் கொடுக்கவேண்டிய பொறுப்பு அதிகாரிகளுக்கு இருக்கிறது. ஆனால் ஆட்சியாளர்களாக இருக்கும் அரசியல்வாதிகளோ, அல்லது அதிகாரிகளோ அப்படிபட்ட தங்களது பொறுப்பை சரியாக கவனிக்காமலோ அல்லது தட்டிக்கழித்தோ இருந்தார்களானால், அவர்கள் மூலம் உருவாக்கப்படும் திட்டங்களும், அதைச் செயல்படுத்தும் முறைகளும் எதிர்விளைவை தந்துவிடுகின்றன. இந்த இடத்தில் மேற்கண்ட இடைவெளி என்பது சம்மந்தப்பட்ட ஆட்சியாளர்கள் அதாவது சம்மந்தப்பட்ட அரசியல் பிரதிநிதிகளும், சம்மந்தப்பட்ட அதிகாரிகளும், சம்மந்தப்பட்ட பிரச்சனை மீது அறியாமை இருட்டிலே உழன்று இருப்பதனால் வருகின்ற எதிர்விளைவு என்பதாகத் தான் எடுத்துக்கொள்ள முடியும். அப்படிப் பார்க்கும்போது அது ஒரு மாபெரும் குற்றமாக கருதப்படவேண்டும். உதாரணமாக விவசாயத்தில், பயிர் பாசன வாய்ப்புள்ள நிலங்களை, தரிசுகளாக ஆக்கும் அரசாங்கத் திட்டங்கள் சில அமுல்படுத்தப்படுகின்றன. பாசன நிலங்களை தக்கவைப்பதும், மேம்படுத்துவதும் விவசாயம் பற்றிய அறிவு. அத்தகைய அறிவில் அறியாமை இருக்குமானால், சம்மந்தப்பட்ட அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் செய்கின்ற பிழை என்பதாகத்தான் அது கருதப்படவேண்டும். அதேபோல மேற்கத்திய நாடுகளிலிருந்து, அவர்களது நலன்களுக்காக, அவர்களால் தயாரிக்கப்பட்ட வீரிய விதைகளும், ரசாயன உரங்களும், இந்த நாட்டில் இருக்கும் பாசன நிலங்களை பாதிக்கும் தன்மைக் கொண்டதாக இருந்தாலும், அந்நியநாட்டு சரக்குகள் என்ற ஒரே காரணத்திற்காக இறக்குமதி செய்யப்படுமானால், நமது விளைநிலங்களை பாதிக்கும் அத்தகைய ஏற்பாடுகள் இங்கே அனுமதிக்கப்படுமானால், அது இந்த நாட்டின் விவசாயத்தைப் பற்றிய விவரங்கள் என்பதில் அறியாமை காரணமாக அனுமதிக்கப்படுகின்றன என்று தான் கொள்ளவேண்டும். இத்தகைய அறியாமை இந்த நாட்டின் முதுகெலும்பான விவசாய பொருளாதாரத்தையும், சுயசார்பு சிந்தனையுள்ள, சுயமரியாதைக் கொண்ட விவசாய பெருங்குடி மக்களையும் பாதிக்கக்கூடிய பெரும் குற்றத்தை இழைத்துவிடுகிறது. ஆகவே சம்மந்தப்பட்ட ஆட்சியாளர்கள் இப்படிப்பட்ட அறியாமைக்காக குற்றம் சாட்டப்படுதல் வேண்டாமா? மலைகளைப் பற்றியும், காடுகளைப் பற்றியும், அதில் வாழும் மனிதர்களைப் பற்றியும் அதிகமாக அறிந்திராத காரணத்தினால், அறியாமையிலிருக்கும் ஆட்சியாளர்கள் மூலமாக, அத்தகைய வட்டாரங்களிலிருக்கின்ற கனிமவளங்களை அடையாளம் கண்ட அந்நிய மூலதன வாதிகள் மற்றும் பெரும் முதலாளிகளின் சூறையாடலுக்கு வழிவகை செய்கின்ற, புரிந்துணர்வு ஒப்பந்தங்களை ஒரு ஆட்சி திட்டமிடுமானால், அதன் பாதிப்புகள் எதிர் விளைவுகளை தோற்றுவிக்கக் கூடியவை. ஏனென்றால், மலைகளையும், காடுகளையும் தங்களுடைய பாரம்பரியமான இருப்பிடங்களாக, வாழும் இடங்களாக கொண்டுள்ள பழங்குடி மக்களான, ஆதிவாசி மக்கள் அத்தகைய பகுதிகள் தங்களிடமிருந்து பறிக்கப்படும் போது, எழுந்து போராட துணிகிறார்கள். அப்படிப்பட்ட போராட்டங்களை தாங்க முடியாமல், அரசு தரப்பு அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விடுகிறது. அது மேலும் பல சமூக சிக்கல்களை ஏற்படுத்தி விடுகிறது. இத்தகைய நிலமைகளுக்கெல்லாம் அடிப்படை காரணமாக அமைவது அரசுதரப்பின் அறியாமை தான் என்று சொன்னால், சாதாரணமாக அது விட்டுவிடக்கூடிய ஒன்றா? அதுபோலவே கடல்சார் பழங்குடி மக்களான, மீனவ மக்கள் எத்தகைய வாழ்நிலையில், கடலுக்குச் சென்று மீன்பிடித் தொழிலை செய்கிறார்கள் என்றும், அவர்களது தொழில் சார்ந்த விதிகள் எப்படி இருக்கமுடியுமென்றும் அறியாத நிலையில், அந்நிய நாட்டின் கோரிக்கைகளை ஏற்று தங்களது சட்டங்களையும், திட்டங்களையும் ஒரு அரசு உருவாக்குமானால், புதிய நெருக்கடிகள் கடலோரங்களில் கொண்டுவரக்கூடிய அத்தகைய செயல்பாடுகளும், அரசின் அறியாமையை காட்டுகிறது. ஆகவே அறியாமை என்பது இரு வகைப்படும். பொதுமக்களிடமிருந்தால் அவர்கள் குற்றமல்ல. ஆட்சியாளர்களிடமிருந்தால் அது மாபெரும் குற்றம். இந்த புத்தாண்டிலாவது இந்த புதிய பாடத்தை படித்துக் கொள்வோமா?