Wednesday, February 24, 2010

தெலுங்கானா மாநிலம் ஒரு அடிப்படை உரிமை

தெலுங்கானா தனி மாநில கோரிக்கை தீவிரமாக வலுவடைந்து வருகிறது. அந்தப் பகுதியிலிருந்து வருகின்ற செய்திகள் புதிய எழுச்சியை படம் பிடித்துக் காட்டுவதாக இருக்கிறது. அதாவது தனித் தெலுங்கானா மாநில கோரிக்கையை தொடர்ந்து முன்வைத்து வரும் சந்திரசேகராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியும், பா.ஜ.க.வும், அவ்வப்போது தெலுங்கு தேசம் கட்சியும், தெலுங்கானா பகுதியிலுள்ள காங்கிரஸ் தலைவர்களும், இப்போது தெலுங்கானா மக்கள் மத்தியில் ஆழமான பிடிப்புடன் அங்கீகரிக்கப்படவில்லை. மாறாக அது ஒரு மக்கள் பிரச்சினையாக மாறிவிட்டது. இன்னமும் சொல்லப்போனால், ஹைதராபாத்திலிருக்கும் உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்கள் கைகளுக்கு அந்தப் போராட்டம் சென்று விட்டது. தேர்தல் கட்சிகள் யாரையும் இப்போது அந்த மக்கள் நம்பத் தயாராக இல்லை. நடிகர் விஜயசாந்திக்கு தெலுங்கானாவை ஆதரித்ததற்காக இருந்த ஆதரவு கூட, அவர் டி.ஆர்.எஸ். கட்சியில் சேர்ந்த பிறகு இல்லாமல் போய் விட்டது. உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்கள், போராட்டத்தின் திசை வழியை தீர்மானிப்பதால், போராட்டத்தை தொடர்ந்து கொண்டு செல்வதால், தெலுங்கானா தனி மாநிலத்திற்கு எதிரான சக்திகள், குறிப்பாக மாநிலத்தை ஆளுகின்ற காங்கிரஸ் கட்சி தனது தாக்குதலை உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்கள் மீதே செலுத்த முயல்கிறது. அதன் ஒரு அறிகுறி தான் அந்த மாணவர்கள் மத்தியில் மாவோயிஸ்ட் தூண்டுதல் இருப்பதாக அவர்கள் சாட்டி வரும் குற்றச்சாட்டு.
இந்த குற்றச்சாட்டு உயர்நீதிமன்றத்தால் ஏற்கப் படாமல், பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவிகளை மானபங்கம் செய்ததாக, துணை ராணுவத்தினர் மீது சுமத் தப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில், ராணுவமே பல்கலைக்கழக வளாகத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று ஹைதராபாத் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதையும் ஆந்திர அரசாங்கம் எதிர்த்து உச்சநீதிமன்ற மேல் முறையீட்டுக்குச் சென்று, தற்காலிகமாக ராணுவம் பல்கலைக்கழகத்திற்குள் இருக்கலாம் என்ற இடைக்கால உத்தரவைப் பெற்றது. அதையும் கூட அடுத்து வந்த விசாரணையில் உச்சநீதிமன்றம் கேள்விக்குள்ளாக்கியது. ஆந்திர அரசாங்கத்திடம் மாவோயிஸ்ட் தூண்டுதல் பற்றி ஆதாரம் கொண்டு வா என்று கேட்டுள்ளது.
உள்ளபடியே உஸ்மானியா பல்கலைக்கழக மாண வர்கள் மத்தியில் மாவோயிஸ்ட் சிந்தனை இருக்கிறதா அல்லது இருந்ததா அல்லது அவர்கள் அதை நோக்கி ஈர்க்கப்பட வாய்ப்பு உள்ளதா என்று ஆராய்வோமானால், இந்தக் குற்றச்சாட்டின் ஆழமற்ற போக்கு புரியும். ஏனென்றால் நக்சல் பாரி இயக்கம் தொடங்கிய 1967ம் ஆண்டில் தொடங்கி, ஆந்திர மாநிலத்திலுள்ள அனைத்து உயர்கல்வி நிலையங்களிலும், இந்தியா முழுவதும் உள்ள மற்ற மாநிலங்களைப் போலவே, மாவோ சிந்தனைகள் மாணவர்கள் மத்தியில் வெள்ளம் என புரண் டோடியது என்பது உண்மை தான். அதில் உஸ்மானியா பல்கலைக்கழகம் தப்பவில்லை. ஆந்திர மாநிலத்தில் இருந்த பல்வேறு பிரிவு நக்சல் பாரி இயக்கங்களில், ஒவ்வொரு பிரிவின் மாணவர் அமைப்பும் உஸ்மானியா பல்கலைக்கழக வளாகத்தில் சிறப்பாகவே செயல்பட்டு வந்தன. புரட்சிகர மாணவர் சங்கம் என்ற மக்கள் போர் குழுவினரின் மாணவர் அமைப்பு தங்களது பரப்புரையை வழமையாகவே செய்து வந்தது. அதைவிட முற்போக்கு ஜனநாயக மாணவர் சங்கம் என்ற பீ.டி.எஸ்.யு என்ற மாணவர் பிரிவு, சந்திரபுல்லா ரெட்டி தலைமையிலான நக்சல் பாரி பிரிவினுடைய மாணவர் அமைப்பாக, அதிக வலுவுடன் செயல்பட்டு வந்தது. அதனால் அப்படிப் பட்ட சிந்தனை உள்ளவர்கள் அந்த வளாகத்திற்கு புதிய வர்கள் அல்ல. அந்த வளாகத்தின் கட்டிடங்களில் உள்ள செங்கல்கள் கூட, மாவோ சிந்தனைகளை உரைத்துக் கொண்டேயிருக்கும். அப்படியிருந்தும் அமைதியாக இருந்த உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்களை, இப்போது உசுப்பி விட்டிருப்பது யார் என்று பார்க்க வேண்டும்.
தனித் தெலுங்கானாவிற்காக தொடர்ந்து குரல் கொடுத்த டி.ஆர்.எஸ். கட்சியை, இந்தியாவின் ஆட்சியாளர்கள் மாறி,மாறி ஏமாற்றிய பிறகு, அவர் பட்டினிப் போராட்டம் அறிவித்தார். அவரை வற்புறுத்தி போராட்டத்தை ஆட்சியாளர்கள் நிறுத்திய காரணத் தினால், உஸ்மானியா மாணவர்கள் அவருக்கு எதிராகவே போராட புறப்பட்டனர். மத்திய உள்துறை அமைச்சர் தனித் தெலுங்கானா அமைக்கப்படும் என்று முதலில் வாக்குறுதி கொடுத்துவிட்டு, பிறகு பின்வாங்கியதால் உஸ்மானியா மாணவர்கள் உசுப்பி விடப்பட்டுள்ளனர். இதற்கு மாவோயிஸ்ட்கள் காரணம் என்று சொன்னால், கேழ்வரகில் நெய் வடியுது என்று சொன்னால், கேக் கறவன் புத்தி எங்க போச்சு என்பதாக கிராமத்தில் சொல் வார்கள் என்பது தான் நினைவுக்கு வரும்.
இப்போது தெலுங்கானா பகுதியின் 9 மாவட் டங்களும் முழுமையாக மக்கள் எழுச்சியை சந்தித்துக் கொண்டிருக்கிறது. எல்லாக் கிராமங்களிலும் அன்றாடம் தனித் தெலுங்கானா கோரிக்கைக்காக, கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. புரட்சிக் கலைஞர் கத்தார், தனது பாடல்கள் மூலம் தெலுங்கானா தனி மாநிலத்திற்கான கோரிக்கையை முதலில் பரப்பினார். இப்போது ஒவ்வொரு தெலுங்கானா கிராமத்திலும், பல கத்தார்கள் உருவாகி விட்டனர். கத்தார் அணிந்திருக்கும் உடையான வேட்டியும், தோளில் போட்டிருக்கும் கருத்த போர்வையும், ஆதிவாசிகளின் உடை. அதேபோல உடையணிந்து இளைஞர்களும், மாணவர்களும், கிராமம், கிராமமாக புதிய பாடல்களை கத்தார் பாணியில் எழுதி, கத்தார் பாணியிலேயே பாடி, ஆடத் தொடங்கி விட்டனர். இதுவே கிராமங்கள் வரை வேர் போல ஆழமாகச் சென்றிருக்கின்ற எழுச்சியை காட்டுகிறது. தவிர தெலுங்கானா கிராம நிலங்களை, ஆந்திரா பகுதி கம்மா பண்ணையார்கள் விலைக்கு வாங்கி, கார்ப்ப ரேட்டுகளுக்கு விற்று வருகிறார்கள். அதனால் தான் தெலுங்கானா மக்கள் நிலமற்ற, வறியவர்களாக ஆகியிருக்கிறார்கள். அதனால் கார்பரேட்டுகளுக்கு எதிரான, ஏழை விவசாயி களுடைய போராட்டமாகவும், தெலுங்கானா போராட்டம் மாறியிருக்கிறது.
சமீபத்திய தெலுங்கானா போராட்டம் 3 மாதங் களுக்குள், மாணவர்களிடையே கடுமையான மன அழுத்தத்தை ஏற்படுத்தி, அதன் விளைவாக இதுவரை 285 மாணவர்கள் தங்களது உயிரை நெருப்பிட்டு மாய்த்துக் கொண்டுள்ளனர் என்ற கணக்கை அங்கே உள்ள பி.யூ.சி.எல். கொடுக்கிறது. ஹைதராபாத் தலை நகரில் இருக்கின்ற அரசாங்க அலுவலகங்களில், 90% பணியாளர்கள் தெலுங்கானா அல்லாத ஆந்திராவை சேர்ந்தவர்கள். தனித் தெலுங்கானா கிடைக்காமல், அந்த வட்டார மாணவர்களுக்கு எதிர்காலம் இல்லை. அதனால் தான் அவர்கள் மன அழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள். உயிர்பலி செய்து கொள்கிறார்கள். போராட்டத்தை கொண்டு செல்கிறார்கள்.
வரலாற்றுப் புள்ளிவிவரங்கள் இதற்கான ஆதாரங்களை முன்வைக்கின்றன. 1953ம் ஆண்டு டிசம்பர் மாதம், இந்திய பிரதமர் ஜவஹர்லால் நேரு, மொழி வாரி மாநிலங்கள் அமைப்பதற்காக, ஒரு மாநில புனரமைப்பு ஆணையத்தை நிறுவினார். அதற்கு நீதியரசர் பசல் அலியை தலைவராக நியமித்தார். அந்த ஆணையத்தை, 1954ம் ஆண்டு உள்துறை அமைச்சராக இருந்த கோபிந்த் வல்லப் பந்த் மேற்பார்வையிட்டார். அந்த ஆணையம் தெலுங்கானா பகுதியை, ஆந்திராவுடன் இணைக்கக் கூடாது என்று கூறியது. தெலுங்கு பேசும் விரிந்த ஆந்திராவை, ஆந்திரா பகுதி மக்கள் விரும்பினாலும், தெலுங்கானா பகுதி மக்கள் இன்னமும் அதை ஏற்கவில்லை என்று ஆணையம் எழுதியது. தெலுங்கான பகுதி பொருளாதாரத்தில் வளர்ச்சியற்று இருக்கிறது என்றும் கூறியது. அதனால் தெலுங்கானாவில் இருக்கும் வளங்களையும் இணைத் தால் ஆந்திரப் பகுதியினர் தங்கள் நலனுக்கு எடுத்துச் செல்ல வாய்ப்பிருக்கிறது என்று பசல் அலி எழுதினார். அரசாங்க வேலைகளிலும், கல்வியிலும் ஆந்திரப் பகுதி யினர் அதிக லாபம் பெற்று விடுவர் என்பது போன்ற விவரங்களை, ஆணைய அறிக்கை 382வது பாராவில் பசல் அலி எழுதியிருக்கிறார்.
மாநில புனரமைப்பு ஆணைய அறிக்கையின் 386வது பாராவில், ஹைதராபாத் மாநிலம் என்று அழைக்கப் பட்ட பகுதியை, தெலுங்கானா மாநிலம் என்று தனி மாநிலமாக அறிவிக்கலாம் என முடித்துள்ளார். 1961ன் பொதுத் தேர்தலில் ஹைதராபாத் மாநில மக்கள் மூன்றில் இரண்டு பங்கு, ஒன்றுபட்ட ஆந்திராவுக்கு ஆதரவாக வாக்களித்தால் ஒன்றுபடுத்தலாம் என்றும் கூறியுள்ளார். அதன் பிறகு கட்டாயமாக சேர்க்கப்பட்ட ஒன்றுபட்ட ஆந்திராவில், தனித்தெலுங்கானாவிற்காக 1969ம் ஆண்டே மாணவர்கள் போராட்டம் எழுந்தது. 362 உறுப்பினர்களை பலி கொண்டது. இந்த உயிர் பலிகள் தொடர வேண்டுமா? தெலுங்கானா வட்டார மக்களது வாழ்வாதாரம் காக்கப்பட வேண்டுமா? இப்படி கேள்விகளை அருகே இருக்கும் நாமாவது எழுப்பக் கூடாதா?

Tuesday, February 23, 2010

இடம் பெற வேண்டியது குழுவிலா? கூட்டணியிலா?

முல்லைப் பெரியாறு பிரச்சினை மீண்டும் தமிழ் நாட்டிற்குள் அரசியல் விவாதமாகி இருக்கிறது. 2006ம் ஆண்டு முல்லைப் பெரியாறு அணை தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றம் பிப்.27ம் நாள் வழங்கிய தீர்ப்பில் அணை பலமாகவே இருக்கிறது என்பதாக குறிப்பிட்டுள்ளார்கள். கேரள அரசு முல்லைப் பெரி யாறு அணை பலவீனமாக இருப்பதாகவும், அதனால் புதிய அணை ஒன்றை அதன் அருகிலேயே கட்ட வேண்டும் என்றும், உச்சநீதிமன்றத்தில் வாதம் செய்தது. அந்த வாதத்திற்கு பதிலடியாகத்தான் மேற்படி கருத்தை உச்சநீதி மன்றம் தெரிவித்தது.
வெறும் வாதங்களின் மூலம் அப்படிப்பட்ட முடிவுக்கு, உச்சநீதிமன்றம் வர வில்லை. மாறாக மிட்டல் தலைமையில் 7 நிபுணர்களைக் கொண்ட ஒரு குழுவை அமைத்து, அந்த அணையை உச்ச நீதிமன்றம் ஆய்வு செய்யக் கோரியது. அப்படி ஆய்வு செய்யப்பட்டு கொடுக்கப் பட்ட பரிந்துரையை அடிப் படையாகக் கொண்டு தான், மேற்கண்ட தீர்ப்பை, அதாவது அணை பலமாக இருக்கிறது என்ற கருத்தை உச்சநீதிமன்றம் 2006ம் ஆண்டு கூறியது. அப்போது தமிழகத்தில் அ.இ.அ.தி.மு.க. ஆட்சி நடந்து வந்தது. முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 136 அடியாக இருந்தது. அதை 142 அடியாக உயர்த்தலாம் என்றும் உச்சநீதிமன்றம் தனது உத்தரவில் கூறி யது. அதாவது நிலவும் முல்லைப் பெரியாறு அணையிலேயே, அதிக மான அளவு நீரைச்
சேர்த்து, போதுமான அளவு தமிழ்நாட்டிற்கு வழங்க முடியும் என்பதுதான் அந்த தீர்ப்பின் பொருள். அதன் மூலம் தமிழ்நாட்டின் எல்லைப் பகுதியில் இருக்கின்ற தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் தண்ணீர் இல்லாமல் தவிக்கின்ற விவசாயத்திற்கு மற்றும் குடிநீருக்கு தேவையான தண்ணீர் கிடைக்கும் என்பதுதான் அந்த தீர்ப்பையொட்டி, தமிழக மக்களின் எதிர் பார்ப்பு.
மேற்கண்ட தீர்ப்பை கேள்விப்பட்ட வுடனேயே கொந்தளித்து எழுந்தது கேரள சட்ட மன்றம். அப்போது கேரளாவில் ஆட்சியில் இருந்தது காங்கிரஸ் கட்சி. கேரள சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியாக இருந்தது மார்க்சிஸ்ட் கட்சி. கேரள மாநிலத்தை ஆண்ட ஐக்கிய முற்போக்கு கூட்டணியும், எதிர்கட்சி வரிசையிலிருந்த இடதுசாரி ஜனநாயக முன்னணியும், சற்றும் மாறுபாடு இல்லாமல் தங்கள் மாநிலத்தின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு, சட்டமன்றத் தில் ஒரு சட்டத்தை இயற்றி னார்கள். வழக்கமாக சட்ட மன்றங்களில் இயற்றப் படும் சட்டங்களுக்கான மசோதா, அந்த மாநில பிரச்சினைக்காக கொண்டு வரப்படும். ஆனால் அடுத்த மாநிலத்திற்கு பயன்படும் வகையில் உச்சநீதிமன்றத்தால் வழங்கப்பட்ட ஒரு தீர்ப்பை மறுப்பதற்காக அல்லது எதிர்ப்பதற்காக ஒரு சட்டம், பேரவையில் நிறைவேற்றப்படுகிறது என்றால் அது ஒரு விசித்தி ரமான நிகழ்வு.
அதாவது முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடி உயர்த்தலாம் என்ற ஆலோசனையை அல்லது உத்தரவை உச்சநீதிமன்றம் பிறப்பித்த உடனேயே, கேரள சட்டமன்றத்தில் புதிய அணை ஒன்று முல்லைப் பெரியாறு அருகே கட்டப்பட வேண் டும் என்று தீர்மானம் நிறை வேற்றப்பட்டு, சட்ட மாக்கப்பட்டது என்பதே அந்த விசித்திரம். அதற்கு அணைகள் பாதுகாப்பு சட்டத்திற்கான திருத்தம் என்று பெயரிட்டு, அதன் மூலம் வழங்கப்பட்ட உச்சநீதிமன்றத் தீர்ப்பையே செயல்படுத்தப்பட முடியாத ஒன்றாக ஆக்கி னார்கள்.
மேற்படி கேரள சட் டப்பேரவை இயற்றிய சட்டம் அல்லது சட்டத் திருத்தம் செல்லுமா? என்ற கேள்வியை, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசின் வழக்கறிஞர்கள் எழுப்பி னார்கள். விவாதித் தார்கள். அத்தகைய கேள்வி தமிழகத்தின் நலனிலிருந்து மட்டுமே எழுப்பப்பட்ட கேள்வி அல்ல. மாறாக ஒரு தீர்ப்பை உச்சநீதிமன்றம் கொடுத்திருக்கும் போது, அதற்கு எதிராகவே ஒரு மாநி லத்தின் சட்டப்பேரவை சட்டத்திருத்தம் ஒன்றை கொண்டு வரமுடியுமா என்று எழுப்பப்பட்ட கேள்வி. அதாவது மேற்படி செயல் நீதிமன்ற அவமதிப்பு என்பதாக எடுத்துக்கொள்ளப் பட வேண்டாமா என்பதுதான் தமிழக அரசு தொடுத்த வழக்கின் முக்கியமான முன் வைப்பு. ஆனால் தங்களது அதாவது உச்சநீதி மன்றத்தின் மரியாதையைக் காப்பாற்றிக் கொள்ள, மதிப்பை நிலைநாட்டிக் கொள்ள தமிழக அரசு
கொடுத்த ஒரு நல் வாய்ப்பு என்பதாகத் தான் உச்சநீதிமன்றம் அந்தப்பிரச்சினையை எடுத்துக் கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதை விட்டு விட்டு, முல்லைப் பெரியாறு அணை பற்றிய ஆய்வை மீண்டும் செய்வதற்காக, மீண்டும் ஒரு நிபுணர் குழுவை, மீண்டும் உச்சநீதிமன்றம் நிறுவியுள்ளது என்பதுதான் அதிர்ச்சியைக் கொடுத்தது.
புதிய நிபுணர் குழு 5 பேரைக் கொண்டதாக இருக்கும் என்பது உச்சநீதி மன்றத்தின் முன்வைப்பு. இந்த புதிய நிபுணர் குழுவே தேவையில்லை என்பதால், அதில் தமிழக அரசு கலந்துகொள்ள வேண்டிய தேவையில்லை என்று ஆளுங்கட்சியான தி.மு.க. தனது பொதுக்குழுவில் தீர்மானம் ஒன்றையும் நிறைவேற்றியுள்ளது. அந்த தீர்மானம் உரைப்பது போலவே, தமிழக அரசும் முடிவு செய்துள்ளது. மேற்படி தீர்மானத்தை எதிர்த்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிக்கை விடுகின்றார். அதாவது உச்சநீதிமன்றத்தின் முன் வைப்பை பயன்படுத்தி, தமிழகத்தின் சார்பான நிபுணர் ஒருவரை, அதற் குள் அனுப்பி வைக்க வேண்டும் என்பதே அவரது வாதம்.
தமிழகத்தின் சார்பில் யாரும் நியமிக்கப்பட வில்லை என்றால், தமிழகத் தின் கருத்துக்களை எப்படி பிரதிபலிக்க முடியும் என்று கேட்டு வைக்கிறார். அது தமிழகத்திற்கு எதிராகவும், கேரள அரசுக்கு சாத கமாகவும் அமையக் கூடிய ஒரு தீர்ப்பை வெளியிடும் நிலைமைக்கு கொண்டு போய் தள்ளிவிடாதா என்பதே முன்னாள் முதல்வரின் வாதம். அவரது வாதத்திற்கு வலு சேர்ப் பதற்காக சில சேதிகளையும் அவர் கூறுகிறார். உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசனப்பிரிவு தான், மேற்படி ஐவர் குழுவை அறிவித்துள் ளது என்றும், அதில் மத்திய அரசின் சார்பாக இரண்டு தொழில் நுட்ப நிபுணர்கள் இருந்தால், தமிழக அரசு சார்பாக ஒருவரும், கேரள அரசு சார்பாக ஒருவரும் இருக்க வேண்டும். அதில் தமிழக அரசு சார்பான தொழில் நுட்ப வல்லுநர் நியமிக்கப்படாமல் இருந் தால், தமிழகத்திற்கு சாத கமான முடிவு எப்படி கிடைக்கும் என்பதுதான் அவருடைய வாதமாக இருக்கிறது.
அதையும் தாண்டி உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன பெஞ்சின் தீர்ப்பை உதாசீனப்படுத்துவது, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மீறும் செயலாகும் என்றும் கடுமையான ஒரு கருத்தை வைக்கிறார். இது அரசியல் எதிரிகளுக்குள் நடக்கின்ற வாதமாக இருந்து விட்டுப் போகட்டும். ஆனால் இதே போல கர்நாடக மாநிலத்திற்கும், தமிழ்நாட்டிற்கும் இடையே தொடர்ந்து இருந்து வரும் காவிரி நதிநீர் பிரச்சினையில் உச்சநீதிமன்றத்தால் நிறுவப் பட்ட காவிரி நடுவர் மன்றம் கொடுத்த தீர்ப்பைக் கூட, கர்நாடக அரசு நிறைவேற்ற வில்லை. ஆகவே அண்டை மாநிலங்களுடன் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் பிரச்சினை வரும் பொழுதெல்லாம், உச்சநீதி மன்றத்தின் வழிகாட்டல்களை அத்தகைய அண்டை மாநிலங்கள் மீறுகின்றன. இதைக் கேட்பாரே கிடையாதா என்ற நிலையில்தான், ஆளுங்கட்சியின் பொதுக் குழு மேற்படி தீர்மானத்தை நிறைவேற்றும்படி தள்ளப்பட்டுள்ளது என் பதைத்தான் நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஏற்கனவே நீலகிரி மாவட்டத்தில் உள்ள, கூடலூர் பகுதியில், அம்பலமூலா என்ற கிராமத்தில் தமிழர்களுக்கும், மலை யாளிகளுக்கும் பிரச்சினை உருவாகியுள்ளது. அதா வது கேரள எல்லையில் உள்ள அந்த கிராமத்தில் தமிழர்கள் உருவாக்கிய முருகன் கோவிலின் அருகே உள்ள அம்மன் சிலை மீது ஜீப்பை மோதி உடைத்துள்ளனர். இத்தகைய பிரச்சினைகள் அதிகமாகாமல் தடுப்பதற்கு அரசியல்வாதிகள்
ஆவ ன செய்ய வேண்டும். மாறாக நீதிமன்றம் அறி வித்த குழுவில் சேருவதா, இல்லையா என்பது, தற்போதைய சூழலில் கூட்டணியில் சேருவதா, இல்லையா என்ற அடிப்படையிலிருந்து பார்க்கப்பட்டு விடக் கூடாது.

Saturday, February 20, 2010

ஸ்டெர்லைட்டின் வேதாந்தா குழுவை வெறுக்கும் வெளிநாட்டவர்

ஸ்டெர்லைட் ஆலை தூத்துக்குடியில் ஒரு பிரபலமான நிறுவனம். இந்த ஆலை தாமிர உருக்காலை திட்டத்தை செயல்படுத்துகிறது. பல்வேறு பிரச்சனைகளுக்கு மத்தியில் இந்த ஆலை, முத்துநகரில் தொடங்கப்பட்டு பல்வேறு புதிய பிரச்சனைகளையும் ஏற்படுத்தி, அவ்வப்போது மூடப்பட்டு, பிறகு மீண்டும் திறக்கப்பட்டு, உயிர்பலிகள், மூச்சுத் திணறல்கள், காற்று மாசுப்படுத்தல், நீர் வளத்தைக் கெடுத்தல், மண் வளத்தை சேதப்படுத்தல் போன்றவற்றில், புகழ் வாய்ந்த பெயரை எடுத்துள்ளது. தொடர்ந்து ஆட்சியாளர்களால் அரவணைக்கப்பட்டும், சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்டும், அரசியல் வாதிகள், அதிகாரிகள் ஆகியோருக்கு பயன்படும் வகையிலும் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனஇலாகா ஆகியவற்றின் நற்சான்றிதழ்கள், இந்த ஆலையின் தொடர்ந்த இயங்குதலுக்கு உதவிகரமாக இருக்கிறது.
இந்த தாமர உருக்காலைத் திட்டத்தின் தாய் நிறுவனமான வேதாந்தா குழுவினர், உலக அளவில் பெரும் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ளனர். சமீபத்தில் வந்திருக்கின்ற செய்திப்படி, இங்கிலாந்தில் இருக்கின்ற ஜோசப் ரவுண்ட்ரீ தர்ம அறக்கட்டளை என்ற நிறுவனம், தான் வேதாந்தா குழுமத்தில் விலைக்கு வாங்கியிருந்த 22 லட்சம் டாலர் பெறுமான பங்குகளை, சில நாட்கள் முன்பு விற்று விடுவது என முடிவு செய்து விட்டது. அதற்கு அவர்கள் கூறும் காரணம், சுற்றுப்புறச்சூழலை வேதாந்தா குழு, கெடுத்து வருகிறது என்பதுதான். உதாரணமாக ஒரிசா மாநிலத்தில், கோந்த் ஆதிவாசிகள் வசிக்கின்ற நியாம்கிரி மலைகளை, சுரங்கம் தோண்டுவது என்ற பெயரில் வேதாந்தா குழுமம் அழித்து வருகிறது என்பதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஒரிசா மாநிலத்தில் இருக்கின்ற நியாம்கிரி மலைகளில், பாரம்பரியமாக வாழ்ந்து வருகின்ற கோந்த் பழங்குடி மக்கள், அந்த மலையை தங்களது புனிதத்தலமாக நினைக்கிறார்கள். அந்த மலையை ஒரு பன்னாட்டு மூலதன நிறுவனம், தாதுப்பொருட்களை கொள்ளை யடிப்பதற்காக, சுரங்கம் தோண்டுவதற்கான உரிமத்தை ஏதோ ஒரு வகையில் அரசிடம் பெற்றுக் கொண்டு, அதை வைத்துக் கொண்டு, பாரம்பரியமாக வாழ்ந்து வரும் ஆதிவாசிகளின் இருப்பிடங்களை விட்டு, அவர்களை நிர்பந்தமாக இடம் பெயர வைப்பதும், மலை வளங்களை அழிப்பதும் என்று சுற்றுச்சூழல் கேடுகளை ஏற்படுத்த முயலும் போது, அந்த ஆதிவாசிகளின் பெரும் கோபத்திற்கு உள்ளாகிறார்கள்.
கோந்த் பழங்குடி மக்கள், அந்த நியாம்கிரி மலைகளைச் சார்ந்துதான், தங்களது உணவுகளையும் தேடிக்கொள்கிறார்கள். அதுமட்டுமின்றி அந்த ஆதிவாசி மக்களின் வாழ்வாதாரமே, நியாம்கிரி மலைகள்தான் என்ற அளவுக்கு அவர்கள் இருக்கிறார்கள். இயற்கையைச் சார்ந்து, மலைகளையும், நதிகளையும் தங்கள் அன்றாட வாழ்க்கைக்கு பயன்படுத்திக் கொண்டு, பல நூறு ஆண்டுகளாக நியாம்கிரி மலைப்பகுதிகளில் வாழ்ந்து வரும் அந்த ஆதிவாசி மக்களின், பண்பாட்டு அடையாளங்களும், அந்த மலைகளைச் சார்ந்தே உள்ளது. இது மாநகரங்களிலும், நகரங்களிலும் வாழ்ந்து வரும் பன்னாட்டு மூலதன நிறுவனங்களின் நிர்வாகத்திற்கு புரிய நியாயமில்லை. அதுமட்டுமின்றி சொகுசு வாழ்க்கையில் வாழ்ந்து வரும், மாநகர வளர்ப்பான பெரிய அதிகாரிகள் தாங்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அலுவலகங்களில் பணியாற்றினாலும், இயற்கையான ஆதிவாசிகளின் பண்பாட்டு அடையாளங்களையோ, அவற்றை செயற்கைத் திட்டங்களால் அழிப்பதையோ, உணரப் போவதில்லை. அதனால்தான் அத்தகைய அதிகாரிகளின் மற்றும் அரசியல்வாதிகளின் அனுமதியின் பேரில், இப்படிப்பட்ட மாசுபடுத்தும் சுரங்கங்களும், நிறுவனங்களும் உள்ளே நுழைகின்றன.
இங்கிலாந்தில் உள்ள ஜோசப் ரவுண்ட்ரீ நிறுவனம், சில நாட்கள் முன்பு தனது வேதாந்தா பங்குகளை விற்றது போலவே, சென்ற வாரம் ஒரு நிகழ்வும் நடந்துள்ளது. இங்கிலாந்தின் திருச்சபை என்ற அமைப்பு, தான் வேதாந்தா குழுமத்தில் விலைக்கு வாங்கியிருந்த 21 லட்சம் டாலர் பங்குகளை, சுற்றுச்சூழலை கெடுக்கின்ற வேதாந்தா நிறுவனத்திலிருந்து, நீதிக்கொள்கையின் அடிப்படையில் விற்றுவிட முடிவு செய்தது. இதே போல 2007ம் ஆண்டில் ஒரு லட்சத்து 30,000 டாலருக்கான தங்கள் பங்குகளை, நார்வே நாட்டு அரசாங்கத்தின் ஓய்வூதிய நிதி அமைப்பு, வேதாந்தா குழுமத்திலிருந்து விற்றுவிட்டது. 2009ம் ஆண்டில் 23 லட்சம் டாலர்கள் பெருமான பங்குகளை, வேதாந்தா குழுமத்திலிருந்து மார்ட்டின் கேரி என்ற நிறுவனம் தான் போட்ட மூலதனத்தை, விற்றுவிட்டது. இப்படியாக ஒவ்வொரு பங்குதாரரும், மேற்கண்ட பன்னாட்டு மூலதன நிறுவனத்தின் மோசமான, மக்கள் செயல்பாடுகளை தெரிந்துகொண்ட நேரத்திலேயே, தங்கள் பங்குகளை விற்றுவிடுகிறார்கள் என்ற செய்தி இத்தகைய மாசுபடுத்தும் நிறுவனங்களின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்குகிறது.
மனித உரிமை மீறல்களை செய்கின்ற பன்னாட்டு மூலதன நிறுவனங்களுக்கு, புதிய முறையில் இதுபோன்ற எதிர்ப்புகள் காட்டப்படுவது, அந்த நிறுவனங்களின் அடிப்படையாக இருக்கின்ற பொருளாதார அடித்தளத்தையே நிலைகுலைய வைக்கும் செயல். ஆனால் மேற்கண்ட வேதாந்தா நிறுவனமோ, தான் மக்களுக்காக சேவை செய்வதாக பரப்புரை செய்து வருகிறது. பல்வேறு சிக்கல்களுக்கு மத்தியில் தாங்கள் மேலாண்மை செய்து வருவதாகவும், ஒரு வலுவான உள்கட்டுப்பாடு இயங்கி வருவதாகவும் தனது கார்ப்பரேட் நிர்வாக ஆண்டறிக்கையில் கூறியுள்ளது. அது தவிர தங்கள் நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு என்ற பெயரில், ஒரு தொகையை ஒதுக்கி அதன் மூலம் தொண்டு நிறுவனங்கள் என்ற தன்மையில், தாங்கள் கெடுத்துவரும் சுற்றுச்சூழலில் வாழ்ந்து வரும் மக்களிடையே, காசுகளை இறைத்து செயல்பட்டு வருவதை பெருமையாக தங்கள் ஆண்டறிக்கையில் கூறுகிறார்கள்.
இந்தியாவில் 25 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த, உலக அளவிலான பெரும் தொழிற்சாலை விபத்தாக, போபால் யூனியன் கார்பைடு நச்சு வாயு கசிவு அறியப்படுகிறது. அதற்கு பிறகு இந்தியாவின் சுற்றுச்சூழல் விதிமுறைகள், பல்வேறு சட்டங்களின் மூலமாக வலுப்படுத்தப்பட்டுள்ளதாக அல்லது ஒழுங்கு படுத்தப்பட்டுள்ளதாக, அமெரிக்க போன்ற வெளிநாட்டவர்கள் எண்ணுகிறார்கள். ஆனால் அதே சமயம் அத்தகைய ஒழுங்கு படுத்தல் எதுவுமே நடைமுறையில் இல்லை என்பதுதான் அவர்களுடைய ஆய்வின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் உண்மை. இந்தியாவின் மலைகளிலும், காடுகளிலும் வசித்து வரும் ஆதிவாசி மக்களின் மற்றும் தலித் மக்களின் பாரம்பரிய உரிமைகள், மண்ணுரிமை, வாழ்வுரிமை, பண்பாட்டு உரிமை ஆகியவற்றை தகர்த்தெறியும் நடைமுறைகளை, சட்ட அங்கீகாரத்தையும், அரசாங்க ஒப்புதலையும் பெற்றுக் கொண்டு பன்னாட்டு மூலதன நிறுவனங்கள் செயல்பட்டு வருவதாக, உலக அரங்கில் தெரியத் தொடங்கியுள்ளது. அவ்வாறு சுரங்கம் தோண்டுதல் என்ற தொழிலில், வேதாந்தாவின் செயல்பாடுகள் அம்பலப்படுத்தப்பட்டுள்ளன. சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இன்றைய காலத்தில், புதியதொரு செயல் தந்திரத்தை மேற்கொள்கிறார்கள். ரோகர் மூடி என்ற ஒரு சுரங்கத் தொழிலாளர் சங்கத்தின் தலைவரும், சுற்றுச்சூழல் ஆர்வலருமான இங்கிலாந்து நாட்டுக்காரர், வேதாந்தா குழுமத்தில் சிறியதொரு பங்குதாரராக சேர்ந்து கொண்டு, லண்டனில் நடந்த பங்குதாரர் கூட்டத்தில், இந்தியாவில் ஒவ்வொரு பகுதியிலும் அந்த நிறுவனம் நடத்தி வரும் சுற்றுச்சூழல் கேடுகளை பட்டியல் போட்டு அம்பலப்படுத்தினார்.
இதுபோன்ற அம்பலப்படுத்தல்கள், உலக அரங்கில் சுற்றுச்சூழல்வாதிகளால் செய்யப்படும் போது, வேதாந்தா போன்ற சூழலைக் கெடுக்கும் கார்ப்பரேட்டுகள், பொதுவான பங்குதாரர்கள் மத்தியில் அசிங்கப்பட்டு தனிமைப்படுகின்றன. அரசன் அன்றே கொல்வான், தெய்வம் நின்று கொல்லும் என்ற மூதாதையர் பழமொழி போல, நமது ஊரில் சூழலைக் கெடுக்கும் ஸ்டெர்லைட் ஆலை, சற்று காலம் சென்று பங்குதாரர்கள் மத்தியில் பகிரங்கமாக தோற்கடிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட உதாரணம் இனி மனித உரிமை ஆர்வலர்களால் பயன்படுத்தப் படமுடியும். ஒவ்வொரு தவறுக்கும், கார்ப்பரேட்டுகள் ஒருநாள் பதில் சொல்லியே ஆகவேண்டும்.

Friday, February 19, 2010

விடுதலைத் தாகம் அழியக்கூடியதா?

இப்போது தமிழ் மக்கள் மத்தியில் உலகமெங்கிலும் ஒரு தீவிரமான விவாதம் நடந்து வருகிறது. இனி மேல் ஈழத்திலும், இலங்கையிலும் என்ன நடக்கும் என்பதே அந்த விவாதத்தின் சாரமாகும். இலங்கையின் தமிழர் வாழும் பகுதிகள் மட்டு மின்றி, தமிழ் பேசும் முஸ்லிம்கள் வாழும் பகுதியிலும், இந்திய வம்
சாவழி தோட்டத் தொழிலாளர்கள் வாழும் மலையகப் பகுதி யிலும், நேரடியாக இத்தகைய விவாதம் தீவிரமடைந்துள்ளது. அதிபர் தேர்தல் நடந்து முடிந்தது. யார் யார் எந்தப் பக்கம் என்ற
சர்ச்சை இருந்தது. தேர்தல் முடிந்து முடிவுகளும் வந்தன. தமிழர் பகுதி களில் அதிக வாக்குகள் பொன் சேகாவிற்கே போய்ச் சேர்ந்தன. இப் போது நாடாளுமன்ற பொதுத்தேர்தல் அறிவிக் கப்பட்டுள்ளது. அதில் யார் யார் எந்தப்பக்கம் என்று மீண்டும் விவாதம் வந்தது. எந்தப்பக்கமும் இல்லாமல், தனித்து நிற்கின்ற அணிகளும் கிளம்பியுள்ளன. இது நிலவும் அரசியல் அமைப் பிற்குள், தமிழர்களுக்கான பிரதிநிதித்துவத்தை தீர்மா னிக்கின்ற முயற்சிகள். ஆனால் உலக அரங்கில், குறிப்பாக தமிழர்கள் மத்தியிலும், பொதுவாக மக்கள் மத்தியிலும் வேறொரு விவாதம் வேர் கொண்டு வருகிறது. அதுதான் நான்காவது ஈழப்போரில், விடு தலைப் புலிகள் முற்றாக அழிக்கப் பட்டு விட்டனரா என்ற விவாதம்.
இந்த விவாதத்தில் குதித்துள்ள பல்கலைக் கழகப் பேராசிரியர் அட்டேல் பார்க்கர் தனது ஆங்கில புத்த கத்தில் ஒரு புதிய விளக் கத்தை கூறுகிறார். இலங்கையில் இந்த அமெரிக்கப் பேராசிரியர் 20012002 ஆண்டுகளில் தங்கியிருந்து, அனுப வங்களைப் பெற்றுள் ளார். இலங்கை அர
சாங்கம் முற்றுமுழுதாக புலிகள் அமைப்பை அழித்து விட்டதாக கூறிக் கொண்டாலும், இன்ன மும் கூட அவர்களுக்கு அதில் கலக்கம் இருக் கிறது என்கிறார் அவர். ஈழத் தமிழர்களுக்கு அடிப் படை பிரச்சினைகளாக இருக்கும், நாட்டு வளங் களை சமமாக பங்கீடு செய்யாமை, கல்வி, வேலைவாய்ப்பில் காட்டப்படும் பாரபட்சம், போதிய நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் இல் லாமை போன்றவை மீண்டும் புலிகளை உருவாக்கியே ஆகும் என்று இந்த பேராசிரியர் வாதம் செய்கிறார்.
போராளிகள் அமைப் பின் உயர்மட்ட தலை வர்கள் கொல்லப்பட்ட தாகவும், அதுவே அவ் வியக்கத்தின் முடிவாக கருதப்படக் கூடாது என்றும் அவர் வாதம் செய்கிறார். போர் முடிந்த பிற்பாடும், அதே வட்டாரத்தில் அதிகள வில் ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர் என்று ஆதாரம் காட்டு கிறார். சந்தேகிக்கப்படு பவர்களை, இன்னமும் ராணுவம் முகாம்களில் அடைத்து வைக்கிறது என்கிறார் அவர். உலகம் விடுதலைப்புலிகள் பற்றி சரியாக அறிந்து கொள்ளவில்லை என்பது இந்தப் பேராசிரியரின் வாதம். அந்த இயக்கம் கடைபிடித்த ரகசியத் தன்மை அதற்கு காரண மாக இருக்கலாம் என்றும் எழுதுகிறார். இங்கிலாந்து ஊடகங்கள், இது பற்றிய விவரங்களை அமெரிக்க ஊடகங்களை விட அதிகமாக தெரிந்திருக் கின்றன என்றும் கூறியுள் ளார். விடுதலைப் புலிகள் அமைப்பு உறுதியான கொள்கைகளுடன் இறுக்கமாக ஒருங்கமைக்கப் பட்ட இயக்கம் என்கிறார் அட்டேல் பார்க்கர். பெரும் பான்மையான தமிழர்கள் பிரபாகரனின் லட்சியத்தையே வரிந்து கொண்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.
பௌத்த மதம் அடிப் படையில் அஹிம்சை, அன்பு, சமாதானம், தியானம் ஆகியவற்றை வலியுறுத்துகிறது என்ப தையும் குறிப்பிடுகிறார். இலங்கையில் புரிந்து கொள்ளப்பட்ட பௌத் தம் வேறுபோல இருக் கிறது என்பது அவரது கருத்து. மகாவம்சம் என்ற காப்பியத்தின்படி, இலங் கைக்கு புத்தர் வந்தார் என்று நம்பப்படுகிறது என்றார். அதனால் புத்த பிக்குகளும் அதை காப்பாற்ற, சிங்கள இனவாதிகளாக இருக்கிறார்கள் என்றும் சுட்டிக்காட்டுகிறார். இத்தகைய பார்வை அமெரிக்க பேராசிரியர் அட்டேல் பார்க்கருக்கு மட்டும் இருக்கிறதா? அண்டை நாடான இந்தியா வின் ஆட்சியாளர்களும், அறிவுசார் பிரிவினரும் இதே உண்மைகளை அறியாமல் இருக்கிறார் களா? உலக நாடுகளில் பரந்து கிடக்கும் தமிழ் மக்கள் மத்தியில், <<ஈழத் தமிழர் போர்முறை தெளி வுடன் புரியப்பட்டுள் ளதா? நாடு கடந்த தமிழீழ அரசை அமைப்பதற்கான முயற்சியை, உலகம் தழுவிய தமிழர்கள் எப்படி புரிந்து கொண்டுள் ளார்கள்?
மேற்கண்ட கேள்விக ளுக்கெல்லாம் விடை தேட வேண்டும் என்றால், நடந்து முடிந்த வன்னிப் போரின் ஒவ்வொரு கட்டத்தையும், அசை போட் டுப் பார்க்க வேண்டும். அதிலி ருந்து கிடைக்கின்ற படிப்பினைகள், பல் வேறு விடை தெரியாத கேள்விகளுக்கு விடை கொடுக்கும். உணர்ச்சி கரமான எல்லைகளுக்கு செல்வதிலிருந்து, தமிழர் களை சிந்திக்க வைக்கும். எதிர்கால நடவடிக்கைகளுக்கு திட்டமிட, இந்த தேசிய இனத்திற்கு திசைவழிகாட்டும். போர் விதிகள் பற்றிய அறிவையும் கூட கற்றுக் கொடுக்கும். வரலாற்றில் எடுத்து வைக்க வேண்டிய படிக்கட்டுகளை, வரி சைப்படுத்திக்காட்டும்.
ஒரு கட்டத்தில் புலி களின் துப்பாக்கிகள் மௌனிக்கப்பட்டுள் ளன. அதற்கு முன்னால் நடந்த நிகழ்வுகளை தொகுத்துப் பார்க்க வேண்டியிருக்கிறது. 60 ஆண்டுகளுக்கு முன்னால் உணரப்பட்ட, தேசிய இன உரிமைக்கான குரல் ஈழத்தில், அறவழிப் போராக தொடங்கியது. அது நாடாளுமன்ற பாதை யையும் பயன்படுத்த தவறவில்லை. வட்டுக் கோட்டை தீர்மானத்தின் மீது நடத்தப்பட்ட தேர்த லில் தமிழ் மக்களின் வாக்குகள், சுயநிர்ணயத்திற்கு ஆதரவாகவே அளிக் கப்பட்டன. அத்தகைய பாதைகளால் இனவாதத் தையும், இன ஒடுக் கலையும், இனத்தாக்கு தலையும் நிறுத்தமுடிய வில்லை என்பதனால், தமிழ் இளைஞர்களின் பார்வை ஆயுதப் போராட்டத்தை நோக்கித் திரும்பியது. ஆயுதப் போராட்டம், கடந்த காலத்தில் நடத்தப்பட்ட அறவழி அரசியல் போராட்டத்தை விட, உயர்ந்தது என்பதாக தமிழர்கள் உணர்ந்தார்கள். இப்போது நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்ற ஒரு திட்டத்திற் கான முயற்சி தொடங் கப் பட்டுள்ளது. அது உலகம் தழுவிய அளவிலான அரசியல் போராட்டம் என்பதாக அறிவிக்கப்படுகிறது. ஆனால் நடந்த ஆயுதப் போராட்டத்திற்கும், நடக்கயிருக்கும் அரசியல் போராட்டத்திற்கும் உள்ள உறவு என்ன என்பதுதான் சரியான முறையில், விளங்கிக் கொள்ளப்படாமல் இருக் கிறது. வன்னிப்போரில் தோற்றதனால், தமிழர்கள் அரசியல் போராட்டம் என்பதாக தங்களது இயலாமையைக் காட் டுகிறார்களா என்ற கேள்வியும், சிலரை செரிக்க விடாமல் செய் கிறது. ஆனால் உண்மை என்ன என்றால், ஆயுதப் போரான வன்னிப் போரின் தொடர்ச்சி தான் உலகம் எங்கும் நடத்தப் பட இருக்கும் அரசியல் போர். இத்தகைய அரசியல் போராட்டம், எந்த வகையிலும் ஆயுதப் போராட்டத்திற்கு குறைந் தது அல்ல.
இது எப்படி அதன் தொடர்ச்சியாக இருக்க முடியும் என்ற அப்பா வித்தனமான கேள்வி அனைவருக்கும் எழ வேண்டும். ஆயுதப் போரை நடத்திக் கொண் டிருந்த, தமிழீழ விடுத லைப் புலிகள் இயக்கமும், அதன் தலைவர் வே.பிரபா கரனும், எத்தகைய அனுபவங்களையும் மற்றும் படிப்பினை களையும் அதிலிருந்து கற்றார்கள் என்பது புரியப்படவேண்டும். உலகில் எந்த ஒரு தேசிய இனமும், முப்படைகளையும் உருவாக்கி, தங்களுடைய விடுதலைப் பகுதியில், புரட்சிகர அரசாங்கத்தையும் நிறுவி, போரில் ஈடுபட்ட வரலாற்றை, ஈழப் போராளிகள் நடத்திக் காட்டியது போல செய்து காட்டவில்லை. அப்படிப்பட்ட புலிகள் இயக்கம், 7 நாடுகளின் ஒத்துழைப்புடன், அரசப்படை நடத்திய போரை எதிர்கொண்டது. அதன் விளைவுகளை முன்கூட்டியே சரியாக உணர்ந்து கொண்டது. அதனாலேயே கிழக்கு மாகாணங்களிலிருந்து, புலிப்படையை அதன் தலைவர் திரும்பப் பெற் றார். வடக்கு மாகாணத்தில் கூட, கிளிநொச்சிக்குள் தமிழர் படைகளை உள்ளிழுத்துக் கொண் டார். அங்கும் தாக்குதல் தொடங்கிய போது, முல்லைத் தீவிற்கு பின் வாங்க வைத்தார். முல்லைத் தீவு நகருக்குள் சிங்களப் படை நுழைந் தவுடன், மக்கள் திரளுடன் புலிப்படை புதுக் குடியி ருப்புக்கு நகர்ந்தது. அங்கும் எதிரிப்படை இறங்கியவுடன், முள்ளி வாய்க்கால், ரெட்டை வாய்க்கால் பகுதிக்கு விடுதலைப் படை, தன்னை பின்னிழுத்துக் கொண்டது. இவை யெல்லாம் போர் விதிக ளின்படி, தற்காப்புப் போர் உத்திகளாகப் புரி யப்படவேண்டும்.
ஒவ்வொரு அங்கு லமும் தற்காப்புப் போரில் ஈடுபடுத்தப்பட்ட புலிப்படை, உலகத்திற்கு ஒரு செய்தியை உரக்கக் கூவியது. அதுதான் அரசியல் போராட்டமாக, புலம் பெயர் தமிழர்கள் இந்த விடுதலைப் போராட் டத்தை, முன்னெடுத்துச் செல்லவேண்டும் என்ற செய்தி. அதை உணர்ந்து தான் விடுதலைப் படை யின் தலைமையின் முழு வழிகாட்டலில் தான், பெற்ற படிப்பினைகளின் தொடர்ச்சியில் தான், இப்போது நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்ற அரசியல் போராட்டம் எழுந்துள்ளது. இது ஆயுதப் போராட்டத் திலிருந்து, அரசியல் போராட்டம் என்ற பரி ணாம வளர்ச்சிக்கு வந்தி ருக்கும் ஒரு இயங் கியல் விதி. அதனால் தமிழீழத் தாயகம் என்ற தமிழரின் தாகம், அழியக்கூடியதல்ல.

Thursday, February 18, 2010

மாவோயிஸ்ட் கோட்டையில் கண்ணிவெடிகள்

சமீபத்திய நாட்களில் மாவோயிஸ்ட்கள் நடத்திய தாக்குதல்கள் அல்லது அவர்கள் மீது அரசப்படை நடத்திய தாக்குதல்கள் என் பதாக செய்தி வராத நாளே இல்லை என்று கூறலாம். ஊடகங்களுக்கும் அத் தகைய செய்திகள், பர
ப ரப்பூட்டும் ஆய்வுகளை நடத்த உதவியுள்ளன. சமீபத்தில் நமது மத்திய உள்துறை அமைச்சர், தற்காலிகமாக அரசுக்கு ஏற்பட்ட தோல்வியையும், இந்திய அரசியல்
சட்டத்திற்குட்பட்ட ஆட் சியில் மாவோயிஸ் டுகளின் கொள்கைகளுக்கு இட மில்லை என்பதையும், விரிவாக விளக்கியிருந்தார். அது மேற்கு வங்க மாநி லத்திலுள்ள, மேற்கு மிதினாப்பூர் மாவட்டத்தில், மாவோயிஸ்ட்கள் நடத்திய தாக்குதல் பற் றியது. தாக்குதலில் பலியான அரசப்படை வீரர்கள் மீது, பலத்த அனுதாபம் ஏற்பட்டது. ஜர்க்ரம் பகுதியிலிருந்து கிடைக்கும் செய்திகள், ஆறு மாதங்களுக்குள் அரசப்படை மீது ஐந்து தாக்குதல்கள் நடந்து விட் டன என்று கூறுகிறது. 32 படைவீரர்கள் கொல்லப் பட்டனர். பல பத்துப் பேர் காயமடைந்தனர். ஆயுதங் கள் பறிக்கப்பட்டன. காவல் முகாம்கள் பிடிக்கப் பட்டன. அதேசமயம் மாவோயிஸ்டுகளின் முகாம்களில் மூன்று உடைக்கப்பட்டது. கொரில்லக்கள் என சந் தேகிக்கப்படும் 3 பேர் கொல் லப்பட்டனர். 190 பேர் கைது செய்யப்பட்டனர். கடத்தப்பட்ட படை அதி காரி அத்திந்தரநாத் தத்தாவை விடுதலை செய்வதற்காக 23 பேர் விடுதலை செய் யப்பட்டனர். மாவோ யிஸ்ட் தலைவர் கிஷன்ஜி, எல்லா விவரங்களையும் மறைந்து இருந்து கொண்டே, ஊடகப் பேட்டிகள் கொடுக்கிறார். ஜங்கல் மஹால் என்ற ஆதிவாசிகள் வசிக்கும் காட்டுப்பகுதியில், அரசப்ப டைகளுக்கு எதிராக மாவோயிஸ்ட்களை மக் கள் ஆதரிக்கிறார்கள்.
2008ம் நவம்பர் மாதத்திற்கு பிறகு, அதாவது காவல்துறை அராஜ கங்களுக்கு எதிரான மக் கள் குழுவை அமைத்த பிற்பாடு, ஒவ்வொன்றாக மாவோயிஸ்ட்கள், வெற்றி பெற்று வருகிறார்கள். 2009 ஜனவரியில் லால் கரில் காவல்துறையை புறக்கணித்தார்கள். காவல்துறைக்கு உளவுக் கொள்பவர்களை தீர்த்துக் கட்டினார்கள். 300 கிராமங் களிலுள்ள 3 லட்சம் மக் களை பாதுகாக்க லால்கரில் 36 காவலர்களே அப்போது இருந்தனர். உள்ளூர் உளவு கட்டமைப்புத் தான், காவல்துறைக்கு இருந்த ஒரே அமைப்பு. அதையும் மாவோ யிஸ்ட்கள் குறி வைத்து தாக்கினார்கள். இரவு ஆனபிறகு காவலர்கள் வெளியே வருவதில்லை. படுகொலைகள் மக்கள் மத்தியில் பீதியை கிளப்பி யுள்ளன. இதன் மூலம் விடுதலை பகுதியை ஏற்படுத்தி, மேற்கு மிதி னாப்பூரையும் தாண்டி, புருலியா மற்றும் பங்குரா மாவட்டங்களுக்கு, மாவோ யிஸ்ட்கள் செல்வாக்கு விரி வடைந்துள்ளது. கிணறுகள் தோண்டுதல், சாலைகள் அமைத்தல், சுகாதார மையங்கள் ஏற்படுத்துதல் ஆகியவற்றை வளர்ச் சியுறாத பகுதி களில் உருவாக்கி மக்கள் செல்வாக் கையும், மாவோயிஸ்ட்கள் பெற்று விட்டார்கள். அரசப்படைகளுக்கு இல்லாத அனைத்து கட்ட மைப்புகளும், அங்கே மாவோயிஸ்ட்களுக்கு இருக்கிறது.
9 மாதங்களாக அந்த வட்டாரத்திலேயே முகாமிட்டு இருக்கின்ற அரசப்படைகள், அந்த வட் டாரம் பற்றி இன்னமும் கற்றுக்கொள்ளவில்லை. அவர்களுக்கு கிராமப்புற பாதை தெரியவில்லை. காடுகளில் உள்ளே உள்ள வழிகள் தெரியவில்லை. காலை முதல் மாலை வரை தாங்கள் வலம் வரும் பகுதிகள் மட்டும் தான் தெரியும். இரண்டு வாரங்களாகத் தான் காடுகளுக்குள் அரசப்படைகள் செல்கின்றார்கள். புதிதாக உள்ளே செல்லும் போது குடிக்க தண்ணீர் கூட கிடைப்பதில்லை என்று, கையில் ஆயுதங்கள் இல் லாத நிலையில் அரசப்படை வீரர்கள் அலறுகிறார்கள்.
மேற்கண்ட நிலைமை மேற்கு வங்கத்தில் என்று சொன்னால், சத்திஸ்கர் மாநிலத்தில், பஸ்டர் பகு தியில் இருந்து வரும் செய்திகள், மாபெரும் உள்நாட்டு போர் சூழலை நமக்கு படம் பிடித்துக் காட்டுகின்றன. 14வது நூற்றாண்டில், பஸ்டர் என்ற அரசாட்சி அங்கே நடந்து வந்திருக்கிறது. ராமா யணத்தில் தண்டகாரண்யா என்று சொல்லப்படும் பகுதி தான் அது. மகாபாரதத்தில் கோசல ராஜ்யம் என்று அழைக்கப்பட்ட பிராந் தியம் தான் அது. 19ம் நூற்றாண்டின் தொடக் கக் காலத்தில், பஸ்டர் என்ற அந்த அரசாட்சி, ஆங்கிலேயர் ஆட்சியில் மத்திய பிராந்தியமாக அழைக்கப்பட்டது. 1948ம் ஆண்டு ஜனவரி 1ம் நாள், பஸ்டர் பகுதி இந்திய யூனியனுடன் இணைக்கப்பட்டது. 1956ம் ஆண்டு மத்திய பிரதேச மாநிலத்தின் ஒரு பகுதியாக மாறியது. 2000மாவது ஆண்டு சத் திஸ்கர் மாநிலத்தில், பஸ்டர் வட்டாரத்தின் ஒரு பகுதி
சேர்க்கப்பட்டது. இந்தி ராவதி நதிக்கரையோரம் அந்த ஆதிவாசி மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். ஒரு புறம் ஒரிசா இன்னொரு புறம் ஆந்திரா. எல்லாம் காடுகள் இவ்வாறு வர லாற்று புகழ் பெற்ற அந்த பகுதி தான் இப்போது, மாவோயிஸ்ட்களுக்கும், அரசப்படைகளுக்கும் மத் தியில் ஒரு கயிறு இழுக்கும் போட்டி போல நடந்து வருகிறது.
ஒரு பிரபல ஊடகம் தண்டகாருண்யாவின் அடர்த்தியான காடுகளில், தர்பா என்ற பகுதியின் மாவோயிஸ்ட் குழு தலைவர்கள் 3 பேரை சந்தித்திருக்கிறது. பத்ரு, வினோத், தேவா என்ற அந்த மூன்று பேர் கொண்ட குழுவின் தளப தியான பத்ரு, ஊடகத் திற்கு கடுமையான நேர்காணலைக் கொடுத் துள்ளார். பன்னாட்டு மூல தன கம்பெனிகளுக்கு, தங்கள் பகுதியின் நிலங் களை விற்கத் துடிக்கின்ற மன்மோகன் சிங் மற்றும் சிதம்பரத்துடன் எந்த பேச்சுவார்த்தையும் செய்ய முடியாது என்றும் தாங்கள் அரசு ஏற்றுக் கொள்ளாத கொள்கையை கொண்டுள்ளதாகவும் கூறியுள்ளார். அதாவது அந்த வட்டார நிலங்கள் ஆதி வாசிகள் உட்பட வட்டார மக்களுக்கே சொந்தம் என்று அவர் தெரிவிக்கிறார். மாவோயிஸ்ட் ஆயுதக்குழு தலைவர் பத்ருவிற்கும், இந்திய உள்துறை அமைச் சர் ப.சிதம்பரத்திற்கும் எந்தவொரு வேறுபாடும் நம்மால் கண்டுபிடிக்க முடியவில்லை. அதாவது இருவருமே அவரவர் துப் பாக்கிகளை, துடைத்து வைத்துக் கொள்வதிலேயே கவனமாக இருக்கிறார் கள். இது தான் சமாதா னத்திற்கோ, பேச்சுவார்த் தைக்கோ, வழிவகுக்குமா என்ற கேள்வி தான் எழு கிறது.
அரசப்படைகளிட மிருந்து, அப்பாவி மக்களை தாங்கள் காப்பாற்ற விரும் புவதாகவும், அதற்காகவே தாங்கள் துப்பாக்கி தூக் கியிருப்பதாகவும், பத்ரு போன்றவர்கள் கூறுகி றார்கள். அப்பாவிகளைத் தான் அரசப்படைகள் கொலை செய்ய முடியுமே தவிர, தங்களை அல்ல என் றும் மாவோயிஸ்ட்கள் உரக்கக் கூறுகிறார்கள். அதன் விளைவாக அதிகமான மக்கள் துப் பாக்கி ஏந்துவார்கள் என்பதாகவும் அவர்கள் நம்புகிறார்கள். பச்சை வேட்டை என்ற பெயரில் அரசப்படையும், அரசால் ஆயுதபாணியாக்கப்பட்ட, கூலிப் படையான சல்வா ஜுடுமும், அப்பாவி மக்களை கொலை செய்வ தனால், எதிர் விளைவுகளே உருவாகும் என்று அவர்கள் எச்சரிக்கிறார்கள்.
ஆஸ்ரம பள்ளிகளை உடைத்தீர்களே என்ற கேள்விக்கு, அரசப் படைகள் அவற்றை ஆக் கிரமித்திருந்தன என்றும் பதில் கூறுகிறார்கள். பா.ஜ.க.வும், காங்கிர
சும் பன்னாட்டு மூலதன நிறுவனங்களை, அந்த வட்டாரத்திற்கு கொண்டு வந்து, பாரம்பரியமாக வாழும் மக்களை நிர்பந் தமாக இடம் பெயர வைக்கிறார்கள் என்பது அவர்களது குற்றச்சாட்டு.
அதேசமயம் அரசு தரப்பு செய்திகள், தாங்கள் செய்கின்ற பச்சை வேட்டை என்பது, பொது இடங்களில் மாவோயிஸ்ட்களால் நிலத்தில் புதைக்கப்பட்ட, கண்ணிவெடிகளை நீக்குவது தான் என்று கூறுகிறார்கள். அவ்வாறு பஸ்டர் பகுதியில் கண்ணிவெடிகளை நீக் குவதற்காக, இறங்கிய காவல்துறையினர் பலர் தங்களது உயிரை இழந்தி ருக்கிறார்கள். அவர்களில் பலர் தங்களது கால்களை இழந்திருக்கிறார்கள். இதுபற்றி மனித உரிமை அமைப்புகள் பேசு வதில்லை என்பது அரசுதரப்பு குற்றச்
சாட்டு. சாலைகளிலும், விவசாய நிலங்களிலும், காடுகளிலும், பொது இடங் களிலும் இதுபோன்ற கண்ணிவெடிகளை மாவோயிஸ்ட்கள் புதைத் திருக்கிறார்கள்.
அங்கே ஆதிவாசி பகுதி களில், ஒரு உள்நாட்டுப் போருக்கான சூழல் நில விக்கொண்டிருக்கிறது. அத னால் தான் ஆயுதந்தாங்கிய போராட்டத்தை நடத்தும் மாவோயிஸ்ட்கள்,
சாதாரணமாக தாங்கள் அறிவித்துள்ள விடுதலைப் பகுதிகளை, நெருங்கும் இடங்களிலெல்லாம் கண்ணிவெடிகளை புதைத் திருக்கிறார்கள். அதே சம யம் காவல்துறையின் சித் ரவதைகளை எதிர்த்து, 2005ம் ஆண்டு 25 வழக்குகள் போடப்பட்டுள்ளன. அவற்றில் சில தேசிய மனித உரிமை ஆணையத்தின் வழிகாட்டலுடன் பதிவு செய்யப்பட்டுள்ள. மனித உரிமைகள் என்ற அடிப்படையான அளவு கோல் மூலம் அந்த வட் டாரம் பார்க்கப்படுமா? 2005ம் ஆண்டு 26 மாவோயிஸ்ட்களும், 48 அரசப்படையினரும், 52 அப்பாவி மக்களும் கொல்லப்பட்டுள்ளனர். 2006ம் ஆண்டு 117 மாவோயிஸ்ட்களும், 55 அரசப்படைகளும், 189 அப்பாவி மக்களும் கொல்லப்பட்டுள்ளனர். 2007ம் ஆண்டு 73 மாவோயிஸ்ட்களும், 182 அரசப்படைகளும், 95 அப்பாவிமக்களும் கொல்லப்பட்டுள்ளனர். 2008ம் ஆண்டு 66 மாவோயிஸ்டுகளும், 67 அரசப்படைகளும், 35 அப்பாவி மக்களும் பலியாகியுள்ளனர். 2009ம் ஆண்டு 137 மாவோயிஸ்ட்களும், 121 அரசப்படைகளும், 87 அப் பாவிமக்களும் கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலைமை 2010லும் தொடர வேண்டுமா என் பதே நமது கேள்வி.

Wednesday, February 17, 2010

கனடாவிலிருந்து வந்த இயற்கை விஞ்ஞானம்!

இன்று இந்தியா எங்கும் விவாதப் பொருளாகி வருவது, மரபணு மாற்று உணவு நல்லதா, கெட்டதா என்பதே. சமீபத் தில் நாடெங்கிலும் பல நகரங்களில் நடந்து முடிந்த, மலட்டு கத்தரிக் காய் பற்றிய கலந்துரையா டல்கள், சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷை, மரபணு மாற்று கத்தரிக்காய்கள் விற்ப னைக்கு அனுமதிக்கப் படுவதை, குறைந்த பட்சம் தள்ளிப் போட்டது. அதே சமயம் மத்திய அறிவியல் மற்றும் தொழில் நுட்ப அமைச்சர் அதே மரபணு மாற்றை, கெடுதல் அல்ல என்பதாகக் கூறிய கூற் றும் வெளிவந்தது. இதே ஊடகங்கள் ஐக்கிய முற் போக்கு கூட்டணி அர சாங்கத்திற்குள், இரண்டு கருத்துக்கள் என்பதாக எழுதியிருந்தன. இன்ன மும் தீர்க்கப்படாத பிரச்சினையாக, இந்தியா வில் இந்த மரபணு மாற்று விதைகளும், உணவு களும் இருக்கின்றன. அதனால்தான் தங்கள் தலைமேலே, கூர்வாள் தொங்கிக் கொண்டிருக் கிறது என்று இயற்கை விவசாயிகளும், சுற்றுச் சூழல் ஆர்வலர்களும், அறிவியலா ளர்களும் கூறுகிறார்கள். கேரள மாநிலம், கர்நாடக மாநிலம் ஆகியவற்றின் அரசாங்கங் கள் கறாராக மரபணு மாற்று விதைகளை மறுப்பது போல செய்யா விட்டாலும், தமிழக அரசு தற்போதைக்கு அனுமதிக்க முடியாது என்றாவது கூறியுள்ளதே என்ற ஆறுதல் ஒருபுறம். அதே சமயம் விவசாயப் பல்கலைக்கழகங்கள், குறிப்பாக தமிழ்நாட்டி லும், பஞ்சாபிலும் இந்த மரபணு மாற்று விதை களை சந்தையில் இறக்கி விடும் பன்னாட்டு நிறுவனங் களுக்கு, பயன்பாடாக
சென்று கொண்டிருப்பதை கவனிக்காமல் இருக்க முடியாது.
பஞ்சாப் மாநிலம் இந்தியாவில் விவசாய உற்பத்திக்கு பெயர் பெற்றது என்பதாக கூறு கிறார்கள். அந்த பஞ்சாபி லிருந்து பிறந்து 1960ம் ஆண்டு முதல் கனடா நாட்டில் வாழ்ந்து வரும், இயற்கை விஞ்ஞானி டாக்டர் சிவ்சோப்ரா, இந்தியா வந்துள்ளார். இவர் ஹைதராபாத், சென்னை, கொச்சி, மைசூர், பெங்களூரு, புவனேஸ்வரம் ஆகிய நகரங்களுக்கு சென்று தனது கருத்துக்களை தெளித்துக் கொண்டிருக் கிறார். மரபணு மாற்று உணவுகளின் அரசியலும், அதனால் ஏற்படும் சுகாதார தாக்கங்களும் என்பதுதான் இவரது விளக்கத்தின் தலைப்பு. அறிவியல், சமூகம், மதம் பற்றி பல் வேறு வெளியீடுகளை வெளியிட்டுள்ள இவர், கால்நடை மருத்துவம் மற்றும் மைக்ரோ பயாலஜி ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றிருக்கிறார்.
கனடா நாட்டில் எல்லாமே முன்னேறி இருக்கும் என்ற நம் பிக்கை நம்மவர்களுக்கு உண்டு. ஆனால் இந்திய வம்சாவழியான இந்த விஞ்ஞானியின் அனு பவம், மாறுபட்ட ஒன்றாக இருக்கிறது. பஞ்சாப் மாநிலத்தில் விவசாய உற்பத்தி பெருகியதற்கு காரணம், பசுமைப் புரட்சிதான் என்று சில அரசியல்வாதிகளும், சில அதிகாரிகளும் இன்னமும் கீறல் விழுந்த இசைத் தட்டு போல கூறிக் கொண்டிருக் கிறார்கள். ஆனால் ஆங்கிலேயனுடைய ஆட்சி இருக்கும் போது, இந்தியாவும், பாகிஸ்தா னும் ஒன்றாக ஆளப்பட்ட போது, பஞ்சாப் மாநிலம் விவசாய விளைச்சலில் இயற்கையாகவே, சிறந்து விளங்கியது. அதில் முக்கிய விளைச்சல் பகுதிகள் பாகிஸ்தானுடன் சென்று விட்டன. ஆனாலும் அந்தக் காலக்கட்டத்தில், வெள்ளைக்காரர்கள் நிரந்தரமாக தாங்கள் இந்தி யாவை ஆளப்போகி றோம் என்ற எண்ணத்தில், பஞ்சாப் விளைச்சலை அதிகப்படுத்தினார்கள் என் கிறார் சோப்ரா. அதற்காக நிலமற்ற உழவர்களுக்கு, நிர்ப்பந்தமாக நிலச் சீர்திருத்தம் செய்து, நிலங்களைப் பிரித்துக் கொடுத்தார்கள். இலவச மின்சாரம் அனைத்து விவசாயிகளுக்கும் அளித்தார்கள். எந்த ஒரு ஆலை உற்பத்தியும் இல்லாமல், பஞ்சாப் விவ சாயத்தை மட்டுமே சார்ந் திருந்தது. அத்தகைய காரணங்களினால் விளைந்த விளைச்சல், பஞ்சாப் உட்பட இந்தியா முழுமைக்கும் உணவு தந்தது. இப்படியாக பஞ்
சாப் பற்றி நமக்கு ஒரு புதிய வரலாற்றுச் செய்தியை, சோப்ரா அளிக்கிறார்.
ஆங்கிலேயே ஆட்சி யாளர்களது அன்றைய
சதித்திட்டத்தையும்
சோப்ரா அம்பலப்படுத் தினார். இந்தியாவை வணி கத்தின் மூலம் அதிகாரம் செலுத்திய, கிழக்கிந்திய கம்பெனி கடுமையாக ஊழல் செய்யத் தொடங் கினார்கள். அதைக் கட்டுப்படுத்துவதற்காக ஆங்கிலேயே அரசு மெக்காலே பிரபுவை, இந்தியாவிற்கு ஆளுநராக இறக்கிவிட்டது. 1833ம் ஆண்டு மெக்காலே இங்கு வந்தார். இந்தியா முழுவதும் சுற்றிப்பார்த் தார். பிச்சைக்காரர்களோ, திருடர்களோ இந்த பூமி யில் இல்லை என்று அதிர்ச்சியுடன் எழுதினார். இந்தியாவிலிருக்கும் வளத்தையும், மனத்தி
டத்தையும், மரபையும், பண்பாட்டையும் உடைத்து இந்தியர்களின் முதுகெலும்பை முறிக்கவேண்டும் என்று ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்கு எழுதினார். அதற்காக அடிமைக்கல்வியை அறிமுகப்படுத்தினார். 1858ல் மெக்காலே மறைந்தார். 1859ல் ராணி விக்டோரியாவின் தலைமையில் இந்தியா முழுமையான காலனி நாடாக ஆனது. இப்படி ஒரு அரசியல் வரலாற்றை தொகுத்து, அதன் மூலம் இந்திய விவசாயத்தின் முதுகெலும்பாக இருந்த, சுயசார்பு பொருளா தாரத்தை எப்படி உடைத் தார்கள் என்று சோப்ரா விளக்குகிறார்.
பருத்தியை விளைச் சல் செய்யுங்கள். ஆனால் இங்கிலாந்தில் கொண்டு போய் நெய்து கொள்கிறோம். இப்படிப் பட்ட கொள்கையுடன் ஆங்கிலேயே ஏகாதிபத் யம், இந்திய விவசாயத்தை தனக்கான உற்பத்திப் பின்னிலமாக ஆக்கியது என்பதே சோப்ரா கொடுக்கின்ற வரைபடம். பருத்தி இந்தியாவின் பாரம்பரிய, சுயமான உற்பத்தி. இந்தியாவை காலனியாக்கிய ஆங்கிலே யர்களுக்கு பருத்தி உற்பத்தி பற்றியும், பருத்தி உடைகள் பற்றியும் தெரியாது. மேற்கிந்திய, கிழக்கிந்திய மொரீசியஸ் நாடுகளுக்கு, இந்திய விவசாயிகளை கூட்டிச் சென்று, பருத்தி உற்பத்தியை அவர்கள் பரவலாக்கினர். இப்படி வரலாற்று நிகழ்வுகளை தொகுக்கின்ற அந்த இயற்கை விஞ்ஞானி, பசுமைப் புரட்சி பற்றி யும், மரபணுக்களை மாற்றி புதிய செயற்கை விதைகளை உருவாக்கும், பன்னாட்டு மூலதன நிறுவனங்கள் பற்றியும், அதன் தாக்கம் பற்றியும் விளக்குகிறார்.
வீரிய விதைகள் அறிமுகப்படுத்தப்படும் போதே, அவற்றினால் ஏற்படும் பூச்சிகளை அழிக்க, அவர்களே தயாரித்து பூச்சிக் கொல்லி மருந்துகள் விற்பனைக்கு தயாரானதை சுட்டிக் காட்டுகிறார். உயிரியல் தொழில் நுட்பம், இந்தியாவின் பாரம்பரிய விவசாயத்தில், இயற்கை யாகவே 6,000 ஆண்டுகளுக்கு முன்னால் இருந் தது என்று கூறுகிறார். இப்போது வந்திருக்கும் மரபணு மாற்று விதைகள் உருவாக்கப்படும் செயற்கை முறைகளை விளக்குகிறார். பாக்டீரியா எனப்படும் குறிப்பிட்ட கிருமியை, குறிப்பிட்ட உயிரினத்திலிருந்து எடுத்து, பால் உற்பத்தியை அதிகப்படுத்த மாட்டுக்கு கொடுப்பதோ, கத்தரிக்காய் உற்பத்தியை அதிகப்படுத்தவோ, பருத்தி உற்பத்தியை அதிகப் படுத்தவோ, அந்தந்த பொருள்களுக் குள் ஊசி மூலம் ஏற்று வதோ, மரபணு மாற்று என்று கூறுகிறார்கள்.
மரபணு மாற்று கத்த ரிக் காய்கள் விளையும் போது, பூச்சிக் கொல்லி மருந்து களுக்கு வேலையே இல்லை என்பது சிலரது வாதம். தானாகவே அந்த மரபணு மாற்று ஊக்கி, பூச்சிகளைக் கொன்று விடுகிறது என்பது அவர்களது விளக்கம். உள்ளபடியே தன்மீது அமரும் பூச்சிகள் மீது, ஒரு பாம்பு தன்னை பாதுகாத்துக் கொள்ள, எப்படி நச்சை கக்குகிறதோ, அப்படி நச்சைக் கக்கி இந்த ஊக்கிகள் (ஹார் மோன்கள்) அனைத்துப் பூச்சிகளையும் கொன்று விடுகின்றன என்பதே
சோப்ரா கொடுத்த விளக்கம். அதனால் பயிருக்கு பயனுள்ள பூச்சிகளும் கூட அழிக்கப்படும் என்பதே விளைவு. ஆகவே இந்த மரபணு மாற்று உணவுகள், எந்த விதத்திலும் இயற்கையான ஆரோக்கிய தன்மை கொண்டவை அல்ல என்பது தெளிவாகிறது.
கனடா நாட்டு நாடாளு மன்றம், மான்சான்டோ என்ற மரபணு மாற்று விதைகளை உற்பத்தி செய்யும் அமெரிக்க பன்னாட்டு நிறுவனத்திற்கு, ஆதரவாக நிலை எடுத் தது. பால் உற்பத்தியை அதிகப்படுத்த, மாடுகளுக்கு மரபணு மாற்று ஊக்கிகளை உள்ளே செலுத்தும் முறையை, கனடா நாட்டு அரசாங்க அதிகாரியாக இருந்த
சோப்ரா எதிர்த்திருக்கிறார். பொவைன் வளர்ச்சி ஊக்கி என்று அழைக்கப்படும் மரபணுவை, மாட்டுக்கு செலுத்துவது ஆபத்தானது என்று கனடா நாடாளுமன்றத்தில் வாய்ப்பு கிடைத்தபோது, சோப்ரா ஆதாரபூர்வமாக முன்வைத்துள்ளார். அதையொட்டி கனடா நாடு தனது அனுமதியை நிறுத்தி வைத்தது. ஆனால் அமெரிக்கா மட்டும் தனது அனுமதியைத் தொடர்ந்தது. இத்தகைய அம்பலப்படுத்தலால்
சோப்ரா அரசு பணியை இழந்தார். தனது பணியை விட, மக்களது ஆரோக்கியமும், இயற் கையான உற்பத்தியும் தான் முக்கியம் என்று உணர்ந்த சோப்ராக்கள், இளைய தலைமுறையில் உருவா கமாட்டார்களா என்று நாம் ஏங்க வேண்டி யுள்ளது.

Tuesday, February 16, 2010

60 ஆண்டுகளாக பற்றி எரியும் நாகர்கள் பிரச்சினை

அனைத்து நாட்டு நாகர் ஆதரவு மையம் என்ற அமைப்பு, நெதர்லாந்து நாட்டில் உள்ள ஆம்ஸ்டர் டாங் நகரில் இருந்து ஒரு எச்சரிக்கை அறிக்கையை வெளியிட்டிருந்தது. அதில் இந்திய அரசு தங்கள் இனமக்கள் மீது மோதல் போக்கை கையாளுவதாக குற்றம் சாட்டியிருந்தனர். அமைதிக்கான பேச்சு வார்த்தைகள், நாகர் புரட்சியாளர்களுக்கும், இந்திய அரசுக்கும் மத்தி யில் தொடர்ந்து நடந்து கொண்டே இருந்தாலும், அது இழுத்துக் கொண்டே இருக்கிறது. நிபந்தனை யற்ற பேச்சு வார்த்தை என்பதாகத்தான், இரு சாராருக்கும் இடையில் பேச்சுவார்த்தை தொடங் கியது. இந்திய அரசுக் கும், நாகர்களுக்கும் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தமானது, இரண்டு நாடுகளுக்கு இடையிலானது என்பதாக அந்த அனைத்து நாட்டு அமைப்பு நினைவு படுத்துகிறது. அதாவது நாகர்கள் தங்களை இந்தியாவின் ஒரு அங்கமாக ஏற்றுக் கொண் டதே இல்லை. இந்திய அரசுடன் பேச்சு வார்த்தை தொடங்கும் போதும், அத்தகைய ஒரு புரிதலை அவர்கள் கொண்டிருக்க வில்லை. தங்களை இந் தியர்கள் என்பதாக, எந்த நாகரும் இதுவரை எண்ணவும் இல்லை. இதை இந்தியாவெங்கும் பல்வேறு வேலை களுக்காக, நடமாடும் நாகர்கள் அனைவருமே தங்களது சிந்தனையாகக் கொண்டுள்ளனர்.
தென்னிந்தியர்கள் வட இந்தியா செல்லும் போதோ, வேறு இடங்களிலோ, நாகர்களை சந்தித்தால், சந்தித்து அவர்களது தேசிய இனப்பிரச்சினையின் மீது அக்கறையுடன் விவாதித்தால், நீங்கள் எப்போது இந்தியாவை விட்டு வெளியே வரப் போகிறீர்கள் என்ற கேள் வியை சாதாரணமாக நாகர் கள் எழுப்புகிறார்கள். அந்த அளவுக்கு பல்வேறு தேசிய இனங்களைக் கொண்ட, இந்தியாவை அவர்கள் புரிந்து வைத்துள்ளார்கள். தங்களுடைய பிரச்சனை கள் மட்டும் அல்லாமல், இந்தியாவிலிருக்கின்ற அனைத்து தேசிய இனங் களும், சுயநிர்ணய உணர் வுள்ளவர்கள் என்பதாக நாகர்கள் எண்ணுகி றார்கள்.
பேச்சு வார்த்தையின் இந்த கட்டத்தில் இந்திய அரசு, இந்திய அரசியல் சட்டத்துக்கு உட்பட்ட வகையில் பேச்சு வார்த்தை நடத்தப்படவேண்டும் என்று விரும்புகிறது. ஆனால் நாகர்களோ, நிபந்தனையற்ற பேச்சு வார்த்தைகள் நடத்தப் படவேண்டும் என்று, முன்பு இந்திய அரசு ஒப்புக்கொண்டுள்ள விவ ரத்தை வெளியே கூறி, தங்களது நிலைப்பாட்டை உறுதி செய்கிறார்கள். பேச்சுவார்த்தையின் மூலம் நல்லதொரு தீர்வை எட்டலாம் என நாகர்கள் முயற்சிப்பதாகவும், ஏற் கனவே ஒப்புக் கொண்ட விதிகளை மீறுவதன் மூலம், இந்திய அரசு அத்தகைய பேச்சுவார்த் தையை உடைத்து விட முயற்சிக்கிறது என்றும், நாகர்கள் குற்றம் சாட்டுகி றார்கள். பேச்சு வார்த்தை உடைந்தால், அதற்காக நாகர்கள் மீது குற்றம் கூறக் கூடாது என்றும் அவர் கள் எச்சரிக்கை விடுத்துள் ளனர்.
இப்போது இருந்து வரும் போர் நிறுத்தம் தொடர்ந்து 12 ஆண்டுகளாக நடைமுறையில் இருக்கிறது. இதுவரை நாகர் தலைவர்களுக்கும், இந்திய அரசுக்கும் மத்தியில் 60வது முறை பேச்சு வார்த்தை நடந்துள்ளது. சென்ற ஆண்டு நாகாலாந்து சட்டப்பேரவையில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. இந்திய நாட்டின் வரலாற்றில் இல்லாத முறையில், ஒரு முக்கிய அரசியல் நிகழ்வு என்ப தாக அந்த தீர்மானம் அழைக்கப்பட்டது. சட்ட மன்றத்தில் இருக்கின்ற, அனைத்துக் கட்சி உறுப்பி னர்களும் ஒரே குரலில் அந்த தீர்மானத்தை நிறைவேற்றினார்கள். அதில் நாகா அரசியல் பிரச்சினையின் மீது ஆய்வு செய்ய, ஒரு கூட்டு நாடாளுமன்ற குழுவை ஏற்படுத்த வேண்டும் என்பதாக எழுதப்பட்டது. பல பத்தாண்டுகளாக தீர்க்கப்படாமல் இருக் கின்ற இந்தியநாகா அரசியல் பிரச்சினைக்கு, ஒரு நிரந்தர தீர்வை எட்டுவதற்காக தங்களது புதிய நேர்மையான முயற்சியை எடுப்பதாக, இந்திய பிரதமரையும், உள்துறை அமைச்சரையும், அந்த தீர்மானம் பாராட்டியுள் ளது.
மேற்படி செய்தியை மாநிலங்களவை உறுப் பினர் கேகிஹோ சிமோமி, நாடாளுமன்றத்தில், சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் மத்தியில் தெரிவித்தார். அப்போது உள்துறை அமைச்சர் மட்டத்தில் பேச்சுவார்த்தை என்பது தேக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும், ஆகவே பிரதமர் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்றும் கூறினார். மேலும் தலைமறைவு நாகர் குழுக்களான, ஐசக்முய்வா தலைமையிலான நாகா லாந்து தேசிய சோசலிச கவுன்சிலும், கப்லாங் தலை மையிலான நாகாலாந்து தேசிய சோசலிஸ்ட் கவுன்சிலும் மற்றும் நாகா தேசிய கவுன்சிலும் எந்த ஒரு நாகர்களுக்கான சிறந்த தீர்வையும், பல் வேறு குழுக்களும் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கின்றன என்று நாடாளுமன்றத்தில் அந்த எம்.பி. கூறினார்.
1950ம் ஆண்டு காலகட்டங்களிலேயே, நாகா எழுச்சி, பிசோ தலைமையில் உருவான நாகா தேசிய கவுன்சில் மூலமாகக் கிளம்பியது. அது சுதந்திரமான, தனி இறை யாண்மை கொண்ட ஒரு நாகா தேசத்தை அடைவதுதான் தங்கள் லட்சியம் என்பதை முன்வைத்தது. அப்போது அஸ்ஸாம் மாநிலத்திற்கு வட்டார நிர்வாகத்தின் கீழ், நாகா மலைகளின் மாவட்டம் என்பது இருந்தது. அத னால் அப்போது கிளம்பிய நாகா எழுச்சியை, உள்ளே நுழைந்த இந்திய ராணு வம் அடக்கி விட்டது. அதனாலேயே நாகா தேசிய கவுன்சிலின் புரட்சிகர உறுப்பினர்கள், தலைமறைவாகச் செல்ல நிர்பந்திக்கப்பட்டனர். அவர்களுடைய தலைவர் பிசோ லண்டனுக்கு தப்பி ஓடினார். கிறித்துவ பாதிரியாரான மைக்கேல் ஸ்காட் பொறுப்பில் பிசோ, லண்டனிலேயே தங்கியிருந்து ஆங்கிலேய நாட்டின் குடியுரிமைப் பெற்று, தொடர்ந்து தன் மக்களுக்கான பிரதிநிதித் துவத்தை, மறையும் வரை தொடர்ந்தார். மிதவாத நாகா தலைவர் சிலுஆவோ தலைமையில் வந்தவர்கள், இந்திய அரசுடன் பேசி தீர்க்க முதன்மை கொடுத்தார்கள். அதனால் 1963ம் ஆண்டு ஜனவரி முதல் நாளே, தனி நாகாலாந்து மாநிலம் உருவானது. அதன் முதல் முதலமைச்சராக சிலுஆவோ பொறுப் பேற்றார். ஆனாலும் நாகா தேசிய கவுன்சில் பெயரில் சில தலைவர்கள் ஆயுதப் போராட்ட நடவடிக் கையை தொடர்ந்தார்கள். அன்றைய கிழக்கு பாகிஸ் தானுக்கும், சீனாவிற்கும் சென்று, கொரில்லா போராட்ட பயிற்சிகள் எடுத்து, ஆயுதங்களையும், தோட்டாக்களையும் பெற்று வந்து தாக்கு தல்கள் நடத்தினார்கள். 1976ம் ஆண்டு இந்திய அரசுடன், நாகர்கள் போர் நிறுத்தம் செய்து வந்தார்கள். அப்போது அஸ்ஸாம், மணிப்பூர், நாகாலாந்து மற்றும் திரி புராவுக்கு ஆளுநராக இருந்த எல்.பி.சிங் முயற் சியில், சில்லாங் சமாதான ஒப்பந்தம் ஒன்று கையெ ழுத்தானது. அந்த ஒப்பந்தத்தை நிராகரித்த
ஐசக் ஸ்வு மற்றும் துயிங்கலன் முய்வா ஆகி யோர் பிசோ தலைமை யிலான நாகா தேசிய கவுன்சிலில் இருந்து வெளியே வந்து புதிய நாகா புரட்சிகர குழுவை உருவாக்கினார்கள். 1980ம் ஆண்டு அது நாகாலாந்து தேசிய சோசலிஸ்ட் கவுன்சில் என்று பெயர் பெற்றது. ஆயுதப் போராட் டத்தை அது தொடர்ந்து நடத்தியது. அந்த அமைப்பு இரண்டாக உடைந்து, அதில் ஒன்றை கப்லாங் தலைமையேற்றார்.
ஐசக்கும், முய்வாவும் 1995ம் ஆண்டு பாரீஸ் நகரிலும், பிறகு நியூயார்க் நகரிலும், இந்திய பிரதமர் பி.வி.நரசிம்மராவுடன் பேச்சுவார்தையில் ஈடு பட்டனர். 1997ம் ஆண்டு பிப்ரவரியில் சூரிச் நகரில் பிரதமர் தேவகவுடாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். 2002ம் ஆண்டில் டோக்கியோவில் பிரதமர் வாஜ்பாயுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். இவ்வாறு 9 ஆண்டுகளாக ஒரு தீர்வு வேண்டி, பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. 50 ஆண்டுகளுக்கு மேலாக நாகர்கள் எழுப்பி வரும், சுதந்திரமான தனி இறையாண்மை கொண்ட அரசு என்ற கோரிக்கையை கைவிடுவதோ, அல்லது இந்தியாவிற்கு உட்பட்டு, பெரிய அளவில் சுயாட்சி கொண்ட நாகா மாநிலத்தை உருவாக்குவது என்பதோ, பேச்சு வார்த்தை நிறை வில் காணப்படும். மணிப்பூர், அஸ்ஸாம், அருணாச்சலபிரதேசம் ஆகிய மாநிலங்களின் பலப் பகுதிகளை, நாகாலாந் துடன் சேர்க்க வேண்டிய நிர்ப்பந்தம் எழலாம். 50க்கும் மேற்பட்ட பல்வேறு பாரம்பரிய ஆதி வாசி இனங்கள் அங்கே வாழ்கின்றனர். அங்கு வாழும் மைத்தி இன மக்கள் இந்துக்களாகவும், அனைத்து மலைவாழ் பழங்குடியினர் கிறித்துவர் களாகவும் இருக்கிறார்கள். ஒருவருக்கொருவர் நிலப்பிரச்சினையில் மோதல்களையும் கொண் டிருக்கிறார்கள். அந்த இடைவெளியில்தான் இதுவரை இந்திய அரசு தனது அதிகாரத்தை நிலைக்க வைத்துக் கொண் டிருக்கிறது.
இந்திய அரசுக்கு எச்சரிக்கை விடுக்கும் அளவுக்கு வலுவாகவும், மக்கள் செல்வாக்கு மிக்கவர் களாகவும், தங்களுக்கென ஒரு தலைமறைவு அர
சாங்கத்தை நடத்திக் கொண் டிருப்பவர்களாகவும், ஆயுதம் தாங்கிய படை யணியையும், போது மான தளவாடங்களையும் வைத்திருப்பவர் களாகவும், 60 ஆண்டு போராட்ட வரலாற்று அனுபவத்தை பெற்றவர்களாகவும் இருக்கின்ற நாகா புரட்சியாளர்களுடன், இந்திய அரசு ஒரு மரியாதைக்குரிய தீர்வை எட்டுமா என்பதே எதிர் காலத்தை நோக்கி நிற்கும் கேள்வி.