Wednesday, March 10, 2010

பொய் சொல்கிறதா ஆண் ஆதிக்கம்?

பெண்களுக்கான 33 விழுக்காடு இட ஒதுக்கீடு மசோதா, பல சர்ச்சைகளுக்குப் பிறகு, பல மோதல்களுக்குப் பிறகு நேற்று இந்தியாவின் மாநிலங்களவையில் விவாதத்திற்கு விடப்பட்டது. விவாத நிறைவில், வாக்களிப்பு நடத்தப்பட்டது. அந்த வாக்கெடுப்பில் தற்போதுள்ள நிலையில் அந்த மசோதாவை நிறைவேற்றக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து 28 வாக்குகள் பதிவாகின. வாக்கெடுப்பில் மசோதாவை ஆதரிக்கவும் செய்யாமல், எதிர்க்கவும் செய்யாமல் இருந்த எண்ணிக்கைகள் 6 என்றால், அதில் 2 உறுப்பினர்கள் அவைக்கு வராமலும், 4 உறுப்பினர்கள் ஆதரிப்பதா அல்லது எதிர்ப்பதா என்று முடிவு செய்யாத நிலையிலும் இருப்பதாக முதலில் கூறப்பட்டது. இந்தியாவின் நாடாளுமன்ற ஜனநாயகம் இருக்கின்ற லட்சணத்தை அது காட்டுகிறது. இதைத்தான் இந்திய ஜனநாயகத்தின் இதயம் சரியான இடத்தில், வலுவாக இருக்கிறது என்று நேற்று தலைமை அமைச்சர் மன் மோகன் சிங் கூறியிருக்கிறார் போலும்.
முக்கியமாக மாநிலங்களவையில் இரண்டு நாட்களாக சண்டையும், சச்சரவும் நடக்கிறது. சண்டைக்கும், சச்சரவுக்கும் காரணமாக மசோதாவின் தற்போதைய நிலையை எதிர்க்கின்ற சமாஜ்வாதி கட்சியும், ராஷ்ட்ரீய ஜனதா தளமும், பகுஜன் சமாஜ் கட்சியும், ஐக்கிய ஜனதா தளத்தின் ஒரு பிரிவினரும், கோருவது பிற பிற்படுத்தப்பட்டோருக்கான மற்றும் சிறுபான்மையினருக்கான உள்ஒதுக் கீட்டை மசோதாவிற்குள் உறுதி செய்ய வேண்டும் என்பதே. அதற்காக அவர்கள் வைக்கின்ற வாதம், இந்தியாவின் ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட, அடக்கப்பட்ட சமூகங்களின் பெண் பிர திநிதிகள் நாடாளுமன்றத்திற்கும், சட்ட மன்றத்திற்கும் வரவேண்டும் என்பதே தங்களது நோக்கம் என்று தெரிவித்தனர். தற்போதைய நிலையில் மசோதா நிறை வேற்றப்பட்டால், நகர்புறங்களைச்
சேர்ந்த மேட்டுக்குடி ஆதிக்க சாதிகளின் பெண் பிரதிநிதிகள் மட்டுமே இடஒதுக் கீட்டில் வரமுடியும் என்பதாக வாதம் செய்தனர். அதற்காகத்தான் தாங்கள் சண் டையிடுகிறோம் என்பதாகவும், அவர்கள் கூறிவந்தார்கள்.
14 ஆண்டுகளாக இந்தியாவின் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படாமல் இந்த பெண்கள் இடஒதுக்கீடு
மசோதா இழுபறியாக இருந்து வந்தது. அதன் வரலாறு கணக்கிட்டுப் பார்க்கும் பொழுது, வேதனையைத் தருகிறது. 1996ம் ஆண்டு செப்டம்பர் 12ம் நாள் தேவகவுடா தலைமை அமைச் சராக இருந்த நேரம் அப்போது முதன் முதலாக பெண்களுக்கான இடஒதுக் கீடு
மசோதா மக்களவையில் அறிமுகப்படுத் தப்பட்டது. மறுநாள் வாக்கு விடுவதற்கு அன்றைய பேரவைத்தலைவர் சங்மா உடன்படவில்லை. அதனால் அப்படியே நின்று போனது. ஆனால் மறுநாள் பல மக்களவை உறுப்பினர்கள் இந்த மசோதாவை எதிர்த்து குரல் எழுப்பியவுடன், பல உறுப்பினர்களது கோரிக்கையை ஏற்று, அது கூட்டு நாடாளுமன்ற குழுவுக்கு ஆய்வுக்காக கொடுக்கப்பட்டது. அதே ஆண்டில் டிசம்பர் 6ம் நாள் இதன் மீதான ஆய்வு அறிக்கையை கூட்டு நாடாளு மன்றக் குழு மக்களவைக்கு முன்னால் வைத்தது.
1998ம் ஆண்டு தேசிய ஜனநாயக கூட்டணியினுடைய ஆட்சி நடக்கும் போது, ஜுன் 26ம் நாள் இந்த
மசோதா மீண்டும் முன்வைக்கப்பட்டது. அப்போதும் கடுமையான எதிர்ப்பு அத னுடைய பொதுத் தன்மைக்கு எதிராக எழுந்தது. அந்த நேரமும் முலயாம் சிங் யாதவும், லாலு பிரசாத் யாதவும் எதிர்ப் பில் முதன்மைப் பங்கைச் செலுத்தினர். 1999ம் ஆண்டு தேசிய ஜனநாயக கூட்டணியுனுடைய ஆட்சி நடக்கும் போதே, அட்டல் பீகாரி வாஜ்பாய் தலைமை அமைச்சராக இருக்கும் போதே, இந்த பெண்கள் மசோதா மீண்டும் மக்கள வையில் முன்வைக்கப்பட்டது. ஆனால் பலத்த எதிர்ப்புகள் மக்களவையினுடைய அமர்வுகளையே தள்ளிப்போட வைக்கும் அளவுக்கு எழுந்ததால் மீண்டும் நிறைவேற்ற முடியாமல் போனது. அதே போல அவர்கள் ஆட்சியிலேயே, 2002ம் ஆண்டு ஒருமுறையும், 2003ம் ஆண்டு ஒருமுறையும் இதே மசோதா கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட முடியாமல் போனது. அதன் பிறகு தற்போது 2010ம் ஆண்டு, நூறாவது ஆண்டு உலக பெண்கள் தினத்தை முன்னிட்டு, 2 நாட்கள் தொடர் போராட்டத்திற்கு பிறகு, முதலில் மாநிலங்களவையில் இந்த பெண்கள் இடஒதுக்கீடு மசோதா நிறைவேறி இருக்கிறது.
உள்ஒதுக்கீடு செய்யப்படாத நிலை யில், இப்போது முன்வைக்கப்பட்ட மசோதா மீதான எதிர்ப்புகளை சமூக நீதியின் பெயரிலும், அரசாங்க ஆதரவைத் திரும்பப் பெறுவோம் என்ற மிரட்டலின் பெயரிலும் எதிர்க்கும் கட்சிகள் குரல் எழுப்பினர். அப்படி சமாஜ்வாதி கட்சியும், ராஷ்ட்ரீய ஜனதா தளமும் தாங்கள் அரசாங்கத்திற்கு கொடுத்து வந்த ஆதரவைத் திரும்பப் பெற்றுக் கொள்வோம் என மிரட்டியவுடன், ஊடகங்கள் கணக்குப் போட்டன. 321 உறுப்பினர்களின் உள், வெளி ஆதரவுடன் மன்மோகன் அரசாங் கம் இப்போது பீடுநடை போடுகிறது என்றனர். ஆனால் சமாஜ்வாதி கட்சியின் 22 உறுப்பினர்களும், ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் 4 உறுப்பினர்களும் தங்கள் ஆதரவைத் திரும்பப் பெற்றுக் கொண்டால், மன்மோகன் அரசாங்கத்திற்கு உள், வெளி ஆதரவு 295 என்பதாகக் குறைந்து விடும் என்று ஒரு கணக்கை வெளியிட்டனர். 21 பகுஜன் சமாஜ் கட்சி உறுப்பினர்கள், இப்போதுள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்திற்கு ஆதரவு கொடுப்பதிலிருந்து, ஆதரவைத் திரும்பிப் பெற்றுக் கொள்ளும் நிலை உருவாகலாம். ஏனென்றால் அவர்களும் உள்ஒதுக்கீட்டை ஆதரிப்பவர்கள். அப்போது அரசாங்கத்திற்கு ஆதரவு என்பது 274 உறுப்பினர்கள் என்பதாக குறைந்து விடும். அப்படி ஒரு சூழல் ஏற்பட்டால் எந்த நேரத்திலும் அது இப்போதுள்ள அரசாங்கத்திற்கு சிக்கலை உருவாக்கலாம். மேற்படி மிரட்டல்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் விடப்பட்டன. பெண்கள் இடஒதுக்கீடு அமுல்படுத்தப்படுமானால், 543 உறுப்பினர்கள் கொண்ட மக்களவையில், 181 பெண் உறுப்பினர்கள் வருவார்கள் என்றும், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி யினருக்கு 122 தொகுதிகள் ஒதுக்கப்படும் போது, மீதி பொதுத் தொகுதியாக ஆண்களுக்கு கிடைக்கும் வாய்ப்பு 282 தொகுதிகள்தான் என்பதும் இன்னொரு கணக்காகக் காட்டப்படுகிறது.
இப்போது மாநிலங்களவையில் நிறைவேறியிருக்கும் மசோதாவிற்கு, மாநிலங்களவை உறுப்பினர்களான 233ல் 185 உறுப்பினர்களின் வாக்குகள் கிடைத்துள்ளன. ஒரு உறுப்பினர் மட்டுமே இந்த மசோதாவை எதிர்த்து வாக்களித்துள்ளார். இந்த நேரத்தில் உள் ஒதுக்கீடு என்ற பெயரில் இந்த மசோ தாவை எதிர்த்தவர்கள் உண்மையில் பிற்படுத்தப்பட்டோருக்கான உள்ஒதுக் கீட்டிற்காக குரல் எழுப்பினார்களா? அல்லது பெண்கள் இடஒதுக்கீடு மசோ தா வை அடிப்படையிலேயே ஆணாதிக்க மனோபாவத்துடன் எதிர்த்தார்களா? இது ஒரு முக்கியமான கேள்வி.
மசோதாவை ஆதரித்து பேசியவர் களில், அதிலும் பெண் உறுப்பினர்களில் குறிப்பாக மாநிலங்களவையின் உறுப் பினரான கனிமொழி பேசும் போது, இத்தனை ஆண்டுகளும் பொதுத் தொகுதிகளில், பிற பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு இடஒதுக்கீடு கேட்காத சக்திகள், இப்போது மட்டும் பெண்கள் மசோதா வரும் போது, அத்தகைய உள்ஒதுக்கீட்டை கேட்பதற்கான உள் நோக்கம் என்ன என்று புரியும்படி ஒரு கேள்வியை எழுப்பியுள்ளார். தமிழ் நாட்டில் தாழ்த்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டில் 3விழுக்காடு உள்ஒதுக்கீடாக அருந்ததியர் களுக்கு ஒதுக்கியது போல, இந்த மசோதா நிறைவேறிய பிற்பாடு திருத்தத்தை உள்ஒதுக் கீட்டிற்காக கொண்டுவர முடியும் என்றும் அவர் அப்போது கூறினார். பட்டங்கள் ஆள்வதும், சட்டங்கள் செய் வதும்,பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் என்ற மகாகவி பாரதியின் கனவுகள் இன்று நனவாகியுள்ளன என்று மாநிலங்களவையில் கனிமொழி செய்த பதிவு ஒரு மைல்கல்லாக நிற்கிறது.
அதே சமயம் தலித் மக்களுக்கான உள்ஒதுக்கீட்டை பெண்கள் மசோதாவில் சேர்க்க வேண்டும் என்று தான் கூறுவதாக லாலு சொல்வது உண்மையா என்ற பார்க்க வேண்டும். இந்திய அரசியல் சட்டத்தில் தலித் மக்களுக்கான உள்ஒதுக்கீடு, எல்லா இடஒதுக்கீட்டிற்குள்ளும் தானாகவே சேர்க்கப்பட வேண்டிய நிலை உள்ளது. உதாரணமாக தமிழ்நாட்டின் உள்ளாட்சி மன்ற பெண்களுக்கான இடஒதுக்கீட்டில், தானாகவே தலித் உள்ஒதுக்கீடு சேர்க்கப் பட்டதை நினைவு கூற வேண்டும். அதே போல வடஇந்திய மாநிலங்களில், குறிப்பாக உ.பி., பீகார், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் உள் ஒதுக்கீடு
கிடைக்காவிட்டால், பிற்படுத்தப்பட்ட சமூகப் பெண்கள் வெற்றிப் பெற்று வர வாய்ப்பில்லை என்ற செய்தியை அவர்கள் கூறி வருவது உண்மைதானா என்று ஆராய வேண்டும். மண்டல் கமிஷன் அறிக்கை வெளியான பிற்பாடு, வட இந்தியாவில் பிற்படுத்தப்பட்டோர் மத்தியில் ஏற்பட்ட விழிப்புணர்வின் காரணமாக, பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தின் குறிப்பிட்ட சாதிகள் செல்வாக்காக இருக்கும் தொகுதி களில், அந்த சாதிகளைச் சேர்ந்த ஆண் அல்லது பெண் உறுப்பினர்கள் மட்டுமே வெற்றி பெற முடியும் என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. பெண்கள் இடஒதுக்கீடு அமுலாகும் பட் சத்தில், தானாகவே ஏகப்பெரும்பான்மை பெண் தொகுதிகளில், பிற்படுத்தப்பட்ட சமுதாயப் பெண்கள் மட்டுமே அனைத்துக் கட்சிகளாலும் வேட்பாளர்களாக நிறுத்தப் படுவார்கள். அவர்களே வெல்வதற்கு வாய்ப்பு உள்ளவர்கள். உண்மை இப் படி இருக்கும் போது, உள்ஒதுக்கீட்டை காரணம் காட்டி பெண்கள் மசோதவை எதிர்க்கும் எண்ணம் ஆணாதிக்க மனோ பாவம் தானே என்ற கருத்து தானாகவே வருகிறது. அப்படியானால் இங்கே ஆணாதிக்க சக்திகள் பொய் சொல் கின்றனவா என்ற விவாதம் எழுப்பப் படவேண்டும்.

Monday, March 8, 2010

போர்க்களம் பெண்களை அதிகாரமேம்படுத்துகிறது

உலகப் பெண்கள் தினத்தின் நூற்றாண்டு இது. இந்த உலகம் ஆணாதிக்க உலகம் என்பதாக அறியப்படுகிறது. வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகள், ஏழை நாடுகள், தீவு நாடுகள் என்பதாக எத்தனைப் பிரிவுகளாக உலக நாடுகள் பிரிந்து கிடந்தாலும், அத்தனை நாடுகளிலும் ஆணாதிக்கம் மட்டுமே கோலோச்சுகிறது. மேற்கு உலகம், கிழக்கு உலகம் என்ற வேறுபாடு இல்லாமல் ஆண்களின் ஆதிக்கம் உலகெங்கிலும் பரவிக் கிடப்பதால்தான், பெண்கள் மீதான அடக்குமுறை, பெண்கள் மீதான வன்முறை, பெண்கள் மீதான வன்புணர்ச்சி ஆகியவை உலகின் ஒவ் வொரு நாட்டிலும் நிகழ்ந்து வரும் நடை முறையாக இருக்கின்றது. அதனால் தான் நூறு ஆண்டுகளுக்கு முன்னால், உலகம் முழுவதிலும் உள்ள பெண்களின் உரிமைக்காக, விடுதலைக்காக மார்ச் 8ம் நாளை உலகப் பெண்கள் தினம் என்று அறிவித்திருக்கிறார்கள். இன்னமும் நமது நாட்டில் மட்டுமில்லாமல், உலகம் எங்கி லும் பெண்கள் மீதான வன்முறைக்கு எதி ரான பெண்கள் இயக்கம் என்பதாக தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன.
நமது நாட்டிலோ 50 விழுக்காடு மக்கள் தொகையினரான பெண்களுக்கு, 33 விழுக்காடு இடஒதுக்கீட்டை, நாடாளு மன்றத்திலும், சட்டமன்றத்திலும் சட்டமாக்கு வதற்கு நாம் போராடி வருகின்ற நிலையைப் பார்க்கிறோம். புராதன பொதுவுடைமைச் சமுதாய அமைப்பில், பெண்களும், ஆண்களும் மானூட உயிர்களாக உலாவி வந்தனர். வேட்டையாடுதலைத் தொழிலாக அவர்கள் கொண்டிருந்த காலத்தில், பாலினப் பாகுபாடுகள் மானூடத்திற்குள் எழவில்லை. தங்கள் குழு வேட்டையாடுதலுக்கு செல்வ தற்காக வலுப்படவேண்டும் என்ற அடிப் படையில், அதிகமான குழந்தைகளை பெற்றுக் கொள்வது அன்றைய தேவையாக இருந்தது. நிலவுடைமை உறவுகளை உருவாக்கி, அதற்கான சமுதாய அமைப்பாக நிலவுடைமை சமுதாய அமைப்பை கட்டி எழுப்பிய போது, பாலினப் பாகுபாடுகள் வேர்விடத் தொடங்கின.
தனிச் சொத்துரிமை என்ற சிந்தனைப் போக்கும், செயல்பாடும் காலூன்றிய காலத்தில், தங்கள் சொத்துரிமைக்கு வாரிசு வேண்டும் என்ற தேடலில் மனிதன் தள்ளப்பட்டபோது, தான் அள்ளிச் சேர்த்த சொத்து தனது மரபு வழி வாரிசுக்கு செல்ல வேண்டும் என்று கருதத்தொடங்கினான். அதற்காகவே பாலின உறவுகளைப் பேணத் தொடங்கினான். அதுதான் பெண்களை பாலினப் பாகுபாட்டோடு சிறுமைப்படுத்திப் பார்ப்பதற்கான அளவுகோலை அவனுக்கு கொடுத் தது. குடும்பம் என்ற அலகை அவன் ஏற்படுத் திக் கொண்டபோது, அதற்குள் தலைமை எடுப்பவராக ஆண்மகனே அமர்ந்து கொண்டான். குடும்பம் என்ற அந்த கட்டமைப்பிற்குள் பெண்கள் பண்பாட்டு ரீதியில் ஒடுக்கப்பட்டவராக, ஓரங்கட்டப் பட்டவராக ஆக்கப்பட்டனர். தனது மரபு வழி வாரிசுக்கு தான் அள்ளிச் சேர்த்த சொத்துக்கள் சேர வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு ஆணாதிக்கப் பண்பாடு ஏற்படுத்தப்பட்டு, அதுவே ஒட்டுமொத்த சமூகத்தின் பண்பாடு என்பதாக சித்தரிக்கப் பட்டு, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அமலாக்கப்பட்டு வருகிறது.
இப்படிப்பட்ட ஒரு சமுதாய அமைப் பைத் தான் நாம் இன்று எதிர் கொண்டு வருகிறோம். ஒரு முறை ஐ.நா.சபையின் மனித உரிமை குழுவில் இருந்து, ஆசிய பசிபிக் மனித உரிமை மாநாட்டிற்கு புனே நகருக்கு வந்திருந்த பெண் பிரதிநிதி, ஐ.நா.வின் அமைப்புகளில் கூட அறிக்கைகள் வெளி யிடும் போது ஆண் என்ற குறிப்புதான் வருகிறது என்றும், அதில் ஆண் அல்லது பெண் என்ற சொல்லை சேர்ப்பதில் தாங்கள் வெற்றி யடையவில்லை என்றும் கூறியது நினைவுக்கு வருகிறது. மேற்கத்திய நாடு களில் செல்வாக்கு செலுத்துகின்ற மத நிறுவனங்களில் கூட இன்றும் மதப் போதனை செய்ய பெண்களுக்கு உரிய இடம் கொடுக்கப்படுவதில்லை என்ற நிலைமைதான் நீடிக்கிறது. வளர்ந்து விட்ட முதலாளித்துவப் பண்பாடு கூட, மேற்கத்திய நாடுகளின் மதங்களில் கூட இத்தகைய பெண் அடிமை சிந்தனை மற்றும் செயல்பாடு புரையோடி இருப் பதைக் காணமுடிகிறது.
கீழ்த் திசை நாடுகளில் நிலைமை கேட்கவே வேண்டாம். எத்தனை
சட்டங்களை விழிப்புணர்வின் காரண மாக உருவாக் கினாலும், அதை அமல் படுத்தும் இடத்தில் ஆணாதிக்கம் கொண்ட ஆண்களும், பெண்களும் அமர்ந்திருக்கிறார்கள் என்பதை நாம் காணமுடிகிறது. ஆனாலும் கூட பெண்கள் அமைப்புகள், பெண்களை அதிகாரமேம்படுத்துவதற்கான தொடர் இயக்கங்களை நடத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஒரு காலத்தில் திருமணம் பற்றியும், குடும்பம் என்ற அமைப்பு பற்றியும் குறை சொல்வதற்கோ, விமர்சிப் பதற்கோ அச்சப்படும் சூழல் இருந்தது. ஆனால் இப்போது திருமணம் செய்யாமல் தனித்து வாழும் பெண்கள் பற்றி கூட அக்கறையோடு, உச்சநீதிமன்றம் வரை உரையாடப்படுகிறது. அதுபோலவே குடும்பம் என்ற அமைப்பிற்குள் நடந்து வரும் வன்முறைகளை ஒப்புக்கொண்டு, குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் என்பதாக அரசு ஒரு சட்டத்தை அரங்கேற்றி யுள்ளது. திருமணம் முடிந்து குடும்பம் நடத்துபவர்கள் செயல்படுத்தும் வன்முறை கள் மட்டுமின்றி, திருமணம் செய்யாமல் இணைந்து வாழும் ஆண், பெண் மத்தியில் உள்ள வன்முறைகளையும், குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட வரையறைக்குள் அடக்கலாம் என்ற புரிதலும் கிடைத்துள்ளது. இந்த அளவு மனித உரிமைகளின் விழிப்பு ணர்வு வளர்ந்துள்ளது.
உலகம் எங்கிலும் உழைக்கும் மக்களை அழுத்திக் கொண்டிருக்கும் பொருளாதார சுரண்டல் கூட, குடும்பத்திற்குள் நுழை கின்ற ஏழ்மையை பெண்கள் மட் டுமே அதிகமாக சுமக்கின்ற போக்கு அம் பலப்பட்டுள்ளது. அதாவது கிடைக்கின்ற உணவை, முதலில் ஆணுக்கும், பிறகு குழந்தைகளுக்கும், பிறகுதான் தனக்கும் என்று ஒவ்வொரு தாயாரும் பகிர்ந்து கொள்ளும் நிலைமைதான் நமது நாட்டின் பண்பாடாக இருக்கிறது.
விடுதலை இயக்கங்கள் உழைக்கும் வர்க்கத்தாலும், தேசிய இனங்களாலும், ஒடுக்கப்படும் சமூகங்களாலும் நடத் தப்படும் போது, புதியதொரு சமுதாய அமைப்பை உருவாக்குகின்ற அத்த கைய இயக்கங்களில் பெண்களின் பங் களிப்பு, அதிகார மேம்படுத் தலுக்கு இட்டுச் செல்கிறது. அதிலும் ஆயுதம் ஏந்திய போராட் டங்களை நடத்துகின்ற இயக்கங்களில், பெண்களின் மேம்படுத்தல் தெளிவாக அறுதியிடப்படுகிறது. ஈழத் தமிழர்கள் மத்தியில் சைவ மதம் மேலோங்கிய செல்வாக்கு கொண்ட மதம். அதன் பெண்ணடிமைத்தனம் ஆண்டாண்டு காலமாக படிந்திருக்கக் கூடிய ஒன்று. அத்தகைய மண்ணில் விடுதலை கீதம் பாடப்பட்ட போது, அதிகமாக அந்தப் போர்க்களத்தில் முன்நின்றவர்கள் பெண் புலிகள் தான். அதுவே அவர்களது அதிகார மேம்படுத்தலுக்கு அச்சாரமானது. ஆப்ரிக்கா விலும் விடுதலைப் போராட்ட இயக்கங் களில், துப்பாக்கி தூக்கிய பெண்கள் வரலாறு படைத்துள்ளார்கள்.
80ன் பத்தாண்டுகளின் கடைசியில் யாழ்ப்பாணத்தில் பெண் புலிகளின் போர்க் களப் பங்களிப்புகள் குறிப்பிடத்தக்கவை. இலங்கை ராணுவத்தின் மீதான தாக்குதல் களை பலமுறை வெற்றிகரமாக நடத்தியவர் கள் இந்த பெண் புலிகள். அதில் யாழ்ப்பாண டெலிகாம் ராணுவ முகாம், மயிலிய தாணி தாக்குதல், புலிப்படை தளபதி லெப்.கர்னல் ராதா தலைமையிலான காங்கேசந்துறை முகாம்கள் மீதான தாக்குதல் குரும்பச்சிட்டி, நெல்லியாடி முகாம்கள் மீதான தாக்குதல் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. பெண் புலிகள் பல்வேறு பதுங்கு குழிகளையும், சோதனைச் சாவடிகளையும் பாதுகாத்து வந்தனர். பெண் புலிப்படையின் கொரில்லாப் போராளிகள், தமிழினத்தின் விடுதலைக்காக தங்கள் உயிரை தியாகம் செய்த செயல்பாடுகள், பல்வேறு பெண்களைப் பேராளிகளாக மாற்றியது. 20 ஆண்டு பெண் புலிக் கொரில்லாக்களின் வரலாறு என்பதாக அது தொகுக்கப்பட்டது. 1985ன் தொடக்கத் திலிருந்து பெண் புலிப் படை தனது அரசியல் கட்டமைப்பை யாழ். குடாநாடு மட்டுமின்றி, வடக்கு மாகாணங்கள், மற்றும் கிழக்கு மாகாணங்கள் அனைத்திலும் செயல்பட்டு வந்தது. பிரபல பெண்கள் அமைப்புகளுடனும், தொழிற்சங்கங்க ளுடனும், தொழில் பயிற்சி மையங்க ளுடனும், சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு சங்கங்களுடனும், கல்வி நிறுவனங்க ளுடனும், அவர்களது ஒருங்கிணைந்த செயல்பாடு பல சாதனைகளைக் காட்டியது. கரும்புலிப் படைகளாக, பெண் புலிகள் ஈடுபட்ட போர்க்கள நிகழ்வுகள் வரலாற்றுப் பதிவுகளாகின. உண்மையான பெண்களின் அதிகார மேம்படுத்தல் என்பது ஆயுதம் தாங்கிய பெண்கள், விடுதலைப் போரில் தங்களை அறுதியிட்டுக் கொள்ளும் போது, நிரூபிக்கப்படுகிறது. உலக மகளிர் தினத்தை முன்னிட்டு அயர்லாந்து தலைநகரான டப்ளினில், பீட்டி ஆர்னஸ்ட் தயாரித்த தமிழீழ விடுதலைப்புலிகளின் பெண் புலிப் போராளிகள் வாழ்க்கை மற்றும் கொள்கை என்ற ஆவணப்படம் நேற்று திரையிடப் பட்டது. ஆதிக்கத்தை எதிர்த்த அனைத்து சமூகங்களின் விடுதலையும் அதன் உயர்ந்த கட்டப் போராட்டங்களில் மட்டுமே பதிவு செய்யப்படுகிறது. அதே முறையில் பெண் கள் தின நூற்றாண்டில் போராளிப் பெண்கள் வாழ்க்கை மற்றும் அனுபவம், உலகம் முழுவதும் உள்ள பெண்களுக்கு அதிகார மேம்படுத்தலுக்கான வழிகாட்டலாக அமை யும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

Sunday, March 7, 2010

இந்தியாவிற்குள் இன்னொரு சுதந்திர நாடு?

சென்ற வாரம் இந்தியாவின் தலைநகரில் மிக முக்கியமான பேச்சு வார்த்தையை, மத்திய அரசாங்கத்தின் தலைமை அதிகாரத்தில் உள்ளவர்கள் நடத்தினார்கள். அதுவே இந்தியாவிற்குள் இன்னொரு சுதந்திர நாட்டை அங்கீகரிக்கப் போகிறார்களா என்ற கேள்வியை எழுப்பியது. அந்தப் பேச்சு வார்த்தையில் இந்தியாவின் தலைமை அமைச்சர் மன்மோகன் சிங்கும், உள்துறை அமைச் சர் ப.சிதம்பரமும் மத்திய அரசு சார்பாக பிரதிநிதிகளாக கலந்து கொண்டார்கள். எதிர்தரப்பில் நாகாலாந்து தேசிய சோச லிஸ்ட் கவுன்சில் தலைவர் ஐசக் சிசி ஸ்வு மற்றும் பொதுச் செயலாளர் துயிங்கலெங் முய்வா, அவர்களது அமைப்பின் நடத்தும் குழு அமைப்பாளர் வி.எஸ்.ஆடெம் ஆகியோர் கலந்து கொண்டனர். அதாவது இந்திய அரசாங்கம் தனது பிரதிநிதிகளுடன் மேசைக்கு ஒரு புறம் அமர்ந்திருக்க, மறுபுறம் நாகாலாந்து போராளிகள் அமைப்பின் தலைவர்கள் அமர்ந்து பேசினார்கள். அந்த பேச்சு வார்த்தையின் மூலமே, இந்திய அரசு நாகாலாந்து புரட்சியாளர்களை ஒரு தனித்த அடையாளமாக ஏற்றுக் கொண்டு பேசியது என்பது புலனாகும்.
1997ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இந்திய அரசாங்கத்துடன், நாகாலாந்து தேசிய சோசலிஸ்ட் கவுன்சில் அமைப்பு, ஒரு போர் நிறுத்த ஒப்பந்தத்தை செய்து கொண்டது. இதுவரை இந்திய அரசுடன் இந்த நாகர் போராளிகள் 67 முறை பேச்சு வார்த்தை நடத்தி விட்டார்கள். முன்னாள் மத்திய உள்துறை செயலாளர் கே.பத்மநாபய்யா, இந்திய அரசுக்கும், நாகா போராளிகளுக்கும் இடையே தூதுவராக இருந்து பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடுகள் செய்து வந்தார். அது ஒரு பத்தாண்டுகளுக்கு நீடித்தது. 1999ம் ஆண்டு ஜூலை மாதத்தில் இந்த பத்ம நாபய்யா, நாகா பேச்சு வார்த்தைக்கான இடைத்தூதுவராக ஓராண்டுக்ககு நியமிக் கப்பட்டார். அதன் பிறகு நமது நாட்டின் விசாரணை ஆணையங்களை வழக்கமாக நமது அரசாங்கம் கால நீட்டிப்புக் கொடுத்து, இழுத்துக் கொண்டே
செல்வது போல, இந்தப் பேச்சுவார்த்தை யையும் இழுத்துக் கொண்டே செல் வதற்காக, கால நீட்டிப்பு கொடுத்து வந்தது. அதுவே பத்தாண்டுகளை கடத்த வைத்து விட்டது. கடந்த ஆண்டுதான் பத்மநாபய்யாவினுடைய பதவிக்கு ஒரு முடிவு கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்தது. அதையொட்டி போராளி களுடன் நேரடியான பேச்சு வார்த்தையை அரசே நடத்தலாம் என்றும், அதன் மூலம் இந்த முடியாத பிரச்சினைக்கு ஒரு தீர்வு காணலாம் என்றும் மத்திய அரசு கூறிக்கொண்டது. ஆனாலும் கூட, நின்று போன பேச்சு வார்த்தைக்கு ஒரு உந்துதல் கொடுப்பதற்காக, இந்த ஆண்டு பிப்.12ம் தேதி புதிய இடைத்தூதராக பாண்டேயை மத்திய அரசு நியமித்தது. இவர் மத்திய அரசின் முன்னாள் பெட் ரோலியம் துறையின் செயலாளராக பணி யாற்றியவர். இந்த பாண்டே நாகாலாந்தின் முன்னாள் முதலமைச்சர் எஸ்.சி.ஜமீருக்கு நெருக்கமானவர் என்பதால், முய்வாவிற்கு அவர் மீது அவநம்பிக்கை உண்டு.
1980ம் ஆண்டில், நாகா தேசிய கவுன்சில் இந்தியஅரசாங்கத்துடன் செய்து கொண்ட சீல்லாங் ஒப்பந்தம் என்ற உடன்படிக்கை ஒரு சரணடைவு நடவடிக்கை என்று முத்திரை குத்திவிட்டு, அதை விட்டு வெளியே வந்து ஜனவரி 31ம் நாள் நாகாலாந்து தேசிய சோசலிஸ்ட் கவுன்சிலை ஐசக்கும், முய்வாவும், எஸ்.எஸ்.கப்லாங்கும் உருவாக்கினார்கள். மீண்டும் இந்திய அரசாங்கத்துடன் நடத்தப்பட்ட பேச்சு வார்த்தைகளில் வேறுபாடுகள் ஏற்பட்டதால், 1988ம் ஆண்டு ஏப்ரல் 30ம் தேதி நாகாலாந்து தேசிய சோசலிஸ்ட் கவுன்சில் இரண்டாக உடைந்தது. ஒன்று ஐசக் மற்றும் முய்வா தலைமையிலும், மற்றொன்று எஸ்.எஸ்.கப்லாங் தலைமையிலும் பிரிந்து செயல்படத் தொடங்கின.
பொதுவாக நாகாலாந்து புரட்சிகர இயக்கங்கள் ஒரு விரிந்த நாகாலாந்தை உருவாக்குவது என்ற கருத்தில் உறுதியாக இருப்பவர்கள். நாகலிம் என்பதாக அவர்கள் அத்தகைய அர சாங்கத்தை அழைக்கிறார்கள். சீனத் தலைவர் மாசேதுங்கின் தத்துவ வழிகாட்டல் படி, நாகாலாந்து மக்கள் குடியரசு என்ற புரட்சிகர அரசாங்கத்தை நிறுவுவதுதான் அவர்களது அடிப்படைக் கொள்கை. அவர்களது அரசியல் அறிக்கை நாகாலாந்தின் பொருளாதார வளர்ச்சிக்கு சோசலிச கொள்கைகளை அடிப்படையாகக் கொள்ள வேண்டும் என்பதாக எழுதப்பட்டுள்ளது. அவர்களுடைய ஆன்மீகப் பார்வை, நாகாலாந்து ஏசுபிரானுக்கு என்பதாக உள்ளது. ஐசக்முய்வா தலைமையிலான நாகாலாந்து தேசிய சோசலிஸ்ட் கவுன்சில், முக்கியமாக தங்குல் நாகர்கள் என்ற இனத்தைக் கொண்டதாக இருக்கிறது. அந்தப் பிரிவினர் நாகாலாந்தின் பெருவாரி யான பகுதிகளில் வாழ்கிறார்கள். அதையும் தாண்டி மணிப்பூர் மாநிலத் தின் மலைப்பகுதிகளில் அவர்கள் வாழ் கிறார்கள். அவர்கள் அனைவருமே பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள். மணிப்பூர் மாநிலத்தில் உள்ள சேனாபதி, உக்ரூல், சண்டெல், தாமெங்லாங் என்ற நான்கு மாவட்டங்களில் இந்தப் பிரிவினரது செல்வாக்கு இருக்கிறது. நாகாலாந்து மாவட்டத்தில் வோகா, பெக், சுனேபோடோ, கொஹிமா, ஆகிய பகுதிகளிலும், மோகாக்சங், துயன்சங் மாவட்டங்களிலும், ஐசக்முய்வாவின் அமைப்பு ஆழமான ஆதரவைப் பெற் றுள்ளது. அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள வடக்கு கச்சார் மலைப்பகுதியிலும், கரிபி ஆங்லாங் மாவட்டங்களிலும், நாகர்கள் வாழும் இடங்களில் எல்லாம் இந்த அமைப்பினர் செல்வாக்கோடு இருக்கிறார்கள். அருணாச்சல பிரதேச மாநிலத்தின் சில பகுதிகளிலும் இந்த நாகா புரட்சியாளர்கள் அதிகமான ஆதரவைப் பெற்றிருக்கிறார்கள்.
கடைசியாக இந்திய அரசாங்கத்திற்கும், இந்த நாகர் புரட்சிகர அமைப்பிற்கும், சுவிட்சர்லாந்தில் உள்ள சூரிச் நகரில் 2009ம் ஆண்டு மார்ச் மாதத்தில் பேச்சு வார்த்தை நடந்தது. அப்போது ஒரு தீர்வு கிடைக்காமல் தேக்கத்தில் நின்று விட்டது. அதன்பிறகு இப்போதுதான் இந்த மாதத்தொடக்கத்தில் அடுத்த பேச்சு வார்த்தை நடத்தப் பட்டுள்ளது. நாகாலாந்து புரட்சியாளர்கள் அமைப்பின் தலைவர்களான ஐசக்கும், முய்வாவும் நெதர்லாந்து நாட்டில் தாங்களாகவே அறிவித்துக் கொண்ட, புரட்சிகர அர சாங்கத்தின் தலைவர்களாக வாழ்ந்து வருகிறார்கள். அவர்களை இந்திய அரசு பேச்சு வார்த்தைக்காக டெல்லிக்கு அழைத்தது. அவர்கள் விரிந்த நாகாலாந்து என்ற ஒரு மலைகள் சார்ந்த நாகாலாந்தை சுதந்திரமான நாடாக அறிவிக்கக் கோரியும், அத்தகைய நாகா நாடு இந்திய அரசுடன் கூட்டமைப்பு உறவுகளை வைத்துக் கொண்டிருக்கும் என்றும் கூறிக்கொண்டே பேச்சு வார்த்தைக்கு வந்தார்கள். இறையாண்மை என்பது தங்களது உரிமை என்றும் அந்த உரிமை தங்களிடமிருந்து பிரிக்கப்பட முடியாது என்றும், நாகர்களின் வரலாறும், பூகோளமும், பண்பாடும் அதைத்தான் வலியுறுத்துகிறது என்றும் அவர்கள் கூறினார்கள். தங்களுடைய விடுதலைக்கான கோரிக்கையை விட்டுக் கொடுக்க முடியாது என்று அவர்கள் உறுதிபட அறிவிக்கிறார்கள். இதை டெல்லியில் படித்து வரும் நாகாலாந்து மாணவர்களை கூட்டி, அவர்களிடமே இந்த புரட்சிகர தலைவர்கள் அறிவித் தார்கள்.
இந்திய அரசாங்கம் சில மாற்று முன்வைப்புகள் வைத்திருக்கிறது என்று முதலில் தெரிந்தது. அவை எந்த அளவுக்கு தங்களுக்கு ஒத்துவரும் என்று தெரியாது என இந்தத் தலைவர்கள் கூறினார்கள். இந்திய அரசு தேக்கத்தை உடைத்து, சமாதான பேச்சுவார்த்தையை வெற்றி பெற வைக்க முயல்வதாக அரசு அதிகாரிகள் தெரிவித்தார்கள். நாகர்களுக்கு ஒரு பொருளாதார சுயாட் சியை அரசு அறிவிக்கலாம் என்றும் அதிகாரிகள் கூறினார்கள். ஆனால் நாகர் புரட்சியாளர்களோ எந்த ஒரு பொருளாதார சுயாட்சிக்கும் தாங்கள் போராடவில்லை என்றும், தங்களது நிலைப்பாடு உலகம் தெரிந்த ஒன்றுதான் என்றும் கூறியிருக்கிறார்கள். பேச்சு வார்த்தைகள் முறிந்தால் அதற்குக் காரணம் இந்திய அரசுதான் என்பது அவர்களது வாதம். ஐசக்முய்வாவின் அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் ரூ.20 கோடி முதல் ரூ.25 கோடி வரை நிதி நிலையைக் கையாள்கிறது. வடகிழக்கு மாநிலங்களில் உள்ள அனைத்து போராளி அமைப்புகளுக்கும் ஆயுதப் பயிற்சி கொடுக்கிறது. உலகம் முழுவதும், ஊடகங்களுடனும், தங்களது நாகாலாந்து மக்கள் குடியரசு என்ற புரட்சிகர அர சாங்கத்தின் மூலம் தொடர்பு கொண்டு செயல்பட்டு வருகிறது.
இந்திய அரசு முன்வைக்கும் அதிகபட்ச சுயாட்சி என்பதும், நாகர் புரட்சியாளர்கள் முன்வைக்கும் இறை யாண்மை கொண்ட விரிந்த நாகலின் என்பதும் இங்கே கருத்து மோதல்களாக வெடித்துள்ளன. ஒற்றை யாட்சித் தன்மையைக் கொண்ட இந்திய அரசு, நாகாலாந்தின் சுதந்திரத்தை எந்த விதத்தில் அங்கீகரிக்கப் போகிறது என்ற கேள்வி, காஷ்மீருக்கும், மத்திய இந்தியாவின் ஆதிவாசிகளுக்கும் தொடருமா என்ற கேள்வியும் இதையொட்டி எழுகிறது.

Saturday, March 6, 2010

பெண்கள் இடஒதுக்கீடு மசோதாஇந்த முறை நிறைவேறுமா?

வருகின்ற உலக பெண்கள் தினத்தன்று, தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் தள்ளிப் போடப்படுகின்ற பெண்கள் இடஒதுக்கீடு மசோதா, இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த முறை நிறைவேற்றப் படும் என்று காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி கூறியுள்ளார். எதிர்கட்சிகளான பா.ஜ.க.வும், இடதுசாரிகளும் இந்த மசோதாவை நிறைவேற்றுவதற்காக முழு முயற்சியில் இருப்பதாக செய்திகள் வருகின்றன. வழக்கம்போல் லாலுவும், முலாயமும் எதிர்க்கிறார்கள் என்ற செய்தியும் வந்து கொண்டிருக்கிறது. இதுவரை லாலுவோ, முலாயமோ பெண்களுக்கு நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் 33% இடஒதுக்கீடு கொடுக்கக்கூடாது என்று நேரடியாகக் கூறவில்லை. அதே சமயம் மற்ற பிற் படுத்தப்பட்ட சமுதாயங்களுக்கான இடஒதுக்கீடு உறுதி செய்யப்படாமல் பெண்கள் மசோதா நிறைவேறக்கூடாது என்றுதான் கூறுகிறார்கள். அதே சமயம் பெண்கள் இடஒதுக்கீடு வந்துவிட்டால், தாங்கள் நாடாளுமன்றத்தை விட்டு வெளியேறி விடுவோம் என்று அவர்கள் கூறியுள்ளார்கள். அத்தகைய கூற்றே அவர்களது உள்ளார்ந்த உணர்வில் இருக்கின்ற ஆணாதிக்க வெறியை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
முன்னாள் நீதியரசரும், மனித உரிமை ஆர்வலருமான ராஜிந்தர்சச்சார், பெண்களுக் கான இடஒதுக்கீடு மசோதா என்பது ஒரு சமூகத் தேவை என்றும், தேசத்தின் கடமை என்றும் கூறியுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் நாடாளுமன்றத்தில் இந்த மசோதாவை சட்டமாக்குவது பற்றி தீவிரமாகப் பேசப்படும். அப்படிப் பேசுவதில் எந்த ஒரு அரசியல் கட்சியும், இன்னொரு கட்சிக்கு சளைத்தவரல்ல என்பதாகக் காட்டிக் கொள்வார்கள். அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சி எல்லைகளைத் தாண்டி, பெண்களின் இடஒதுக்கீட்டுக்காக குரல் எழுப்புவார்கள். நாடாளுமன்ற வளாகத்திலேயே அனைத்துக் கட்சி பெண் உறுப்பினர்களும், கையை உயர்த்தி ஆர்ப்பாட்டம் செய்வார்கள். அத்தகைய ஆர்ப்பாட்டத்தில் வலது சாரி கட்சியான பா.ஜ.க.வும், இடது சாரி கட்சிகளான கம்யூனிஸ்ட்களும், இணைந்தே குரல் எழுப்புவார்கள். ஆனால் தங்கள் கட்சிகளுக்குள் அவர்களால் எந்த அளவுக்கு, கட்சித் தலைமையை நிர்ப்பந்தம் செய்து இந்த மசோதாவை நிறைவேற்றுவதற்காக முடிவு செய்ய முடிகிறது என்றால் அது ஒரு பெரும் கேள்விக்குறியாகவே நிற்கிறது. எல்லாக் கட்சிகளின் உள்ளேயும் மிகச் சாதாரணமாக ஆணாதிக்க உணர்வுகள் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருப்பதை யாரும் மறுக்க முடியாது. மென்மையான ஆணாதிக்கம், கடுமையான ஆணாதிக்கம் என்பதாக வேண்டுமானால் கட்சித் தலைமைகளைப் பிரித்துப் பார்க்கலாமே தவிர, ஆணாதிக்க உணர்வுகளை நீக்கிவிட்ட கட்சித்தலைமை என்று யாரையுமே இந்த நாடாளுமன்ற ஜனநாயக பாதைக்குள் நம்மால் அடை யாளம் காணமுடியவில்லை.
இதற்கிடையே புதிய புதிய ஆலோ சனை யை ஒவ்வொருவரும் வைக்கத் தொடங் கினார்கள். அதில் 1951ம் ஆண்டின் மக்கள் பிரதிநிதித்துவ சட் டத்தில் ஒரு திருத்தம் கொண்டு வந்து அனைத்துக் கட்சிகளும், குறைந்த பட்சம் தங்கள் கட்சியால் முன்நிறுத்தப்படும் வேட்பாளர் பட்டியலில் மூன்றில் ஒரு பங்கு வேட்பாளர்களை கட்டாயமாக பெண்களாக நிறுத்தவேண்டும் என்று கொண்டு வரலாம் என்ற ஆலோசனையும் வந்தது. அப்படியானால் தங்கள் கட்சியின் அங்கீகாரம் கலைந்து விடுமோ என்ற அச்சத்தில் அப்படிப்பட்ட ஒரு அணுகுமுறையை செய்ய ஒப்புக்கொள்வார்கள் என்பதாக விளக்கம் கூறப்பட்டது. ஆனால் அதுவும் அரசியல் ரீதியில் சரியல்ல என்றும், சட்ட அளவில் அனுமதி பெற முடியாது எனவும் விளக்கங்கள் வெளியாகி வந்தன. அது இந்திய அரசியல் சட்டத்தில் 19(1)(சி) பிரிவில் கொடுக்கப்பட்டுள்ள அமைப்பை உருவாக்கும் அடிப்படை உரிமையையே மீறுகிறது என்பதாக விளக்கப்படுகிறது. நாட்டின் இறையாண்மை, ஒருமைப்பாடு, பொதுநலன் ஆகியவற்றிற்காக மட்டும்தான் அப்படிப்பட்ட திருத்தங்களைக் கொண்டு வரமுடியும் என்றும் கூறப்பட்டது. அப்படிப்பட்ட திருத்தம் அனுமதிக்கப் பட்டாலும் கூட, கட்சிகள் மூன்றில் ஒரு பங்கு நிறுத்துகின்ற பெண் வேட்பாளர்கள், கணிசமாக வெற்றிப் பெற்று நாடாளு மன்றத்திற்குள் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்களாக வருவார்கள் என்ற உத்தரவாதம் கிடையாது. பொதுவாக ஆண் வேட்பாளர்கள் சிறப்பாக பெண்களை விட அரசியலில் செயல்படுவார்கள் என்ற பார்வை ஆணாதிக்க உலகில் நிலவுவதால், இந்த ஏற்பாடு செயல்பட்டாலும் தோல்வியையே சந்திக்கும் என்ற உண்மை இடதுசாரிகள் உட்பட சிலரால் ஒப்புக்கொள்ளப்பட்டது. கட்சிகளும் கூட தங்களுக்கு வெற்றி வாய்ப்பு இல்லாத தொகுதிகளில் மட்டும், அத்தகைய பெண் வேட்பாளர்களை நிறுத்தி விடுவார்கள். மேற்கண்ட விளக்கத்தை எல்லாம் கூறுகின்ற நீதியரசர் சச்சார், நாடாளுமன்றம் முன் வைக்கப்பட்டுள்ள இன்றைய மசோ தாவுக்கு தனது ஆதரவு உண்டு என்ற கூறுகிறார்.
நாடாளுமன்றத்தில் மேற்படி
மசோதாவை ஆதரிப்பதற்காக மூன்றில் ஒரு பங்கு ஆண் உறுப்பினர்கள் கூட, உடன்படமாட்டார்கள் என்றும், அவர்கள் காந்தியவாதிகள் அல்ல என்றும் சச்சார் கூறுகிறார். உலகில் 50 விழுக்காடு மக்கள் தொகையில் பெண்கள் இருந்தாலும் கூட, மூன்றில் ஒரு பங்கு குறைந்த பட்சம் அதிகார மட்டங்களில், குறிப்பாக முடிவுகள் செய்கின்ற இடங்களில் பங்கு கொள்ள முடிந்தால் அதுவே முடிவெடுக்கும் அதிகாரத்தை பெண்கள் பெற்றார்கள் என்பதாக பதிவாகும். ஒவ்வொரு பொதுத்தேர்தலிலும் பெண் களுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள், சுழற்சி முறையில் மாற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கை கூட, பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களை தங்கள் தொகுதி மக்களுடன் தொடர்ந்து தொடர்பில்லாமல் செய்வதற்கான அணுகுமுறையோ என்று எண்ண வேண்டியிருக்கிறது.
தொகுதி மறுசீரமைப்பு கமிட்டி 2001ன் மக்கள் தொகை புள்ளி விவரப்படி, தொகுதிகளை மறுசீரமைக்க கோரப்பட்ட போது, அரசியல் சட்டத்தின் 81வது பிரிவுப்படி மக்களவைக்கு 530 உறுப்பினர் களுக்கு மேல் இருக்கக் கூடாது என்று கூறியுள்ளது. 1971ம் ஆண்டு மக்கள் தொகை புள்ளிவிவரப்படி மக்களவை உறுப்பினர் எண்ணிக்கையை நீட்டிக் கொள்ளமுடியும் என்றும் கூறப்பட்டது. ஒவ்வொரு புள்ளிவிவரம் முடியும் போதும், தொகுதி எண்ணிக்கை மாற்றத்தை செய்து கொள்ளலாம் என சட்டப்பிரிவு 82 கூறுகிறது. 71ம் ஆண்டு புள்ளி விவரப்படி மொத்த மக்கள் தொகை 54 கோடி. 2001 புள்ளி விவரப்படி 102 கோடி. அதனால் அதையொட்டி 750 வரை தொகுதிகளை உயர்த்தலாம். அதுவே தங்கள் இருக்கை போய்விடுமோ என்று அஞ்சும் ஆண் உறுப்பினர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த எடுத்துச் சொல்லப்படலாம். கூடுதலாக இணைக்கப்படும் தொகுதிகளில், இரட்டை உறுப்பினர் தொகுதிகளாக உருவாக்கலாம். அதில் ஒரு உறுப்பினர் பெண்களுக்கு என ஒதுக்கலாம். இன்னொரு உறுப்பினர் விசயத்திலும், பொதுத் தொகுதியில் ஆணை விட பெண் அதிக வாக்குகள் பெற்று வென்று விடுவாரோ என்ற அச்சம் இருக்கிறது. அதுதான் 1957ம் ஆண்டு பொதுத் தேர்தலில் முன்னாள் குடியரசு தலைவர் வி.வி. கிரியின் விசயத்தில் நடந்தது. ஒன்றில் தாழ்த்தப்பட்டோரின் தனித் தொகுதியாக வும், இன்னொரு உறுப்பினரை பொதுத் தொகுதியாகவும் கொண்டு, கிரி போட்டி யிட்டார். அவரை விட அதிகமான வாக்கு களை மற்றொரு தலித் வேட்பாளர் பொதுத் தொகுதியில் பெற்று விட்டார்.
நகர்ப்புற ஆதிக்க சாதி பெண்கள் இடஒதுக்கீட்டை கபளீகரம் செய்வார்கள் என்ற கருத்தும் வருகிறது. இப்போது மக்களவையில் இருக்கின்ற 200 பிற பிற்படுத்தப்பட்ட உறுப்பினர்கள், தங்கள் பொதுச் சேவையின் மூலம் அல்லாமல், சாதி பின்னணியால் வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்பதே சச்சாரின் வாதம். முஸ்லிம் பெண்களுக்கு இடஒதுக்கீடு என்பது மதச்சார்பற்ற தன்மையை உடைக்கும் என்று கூறுவார்கள். மதத்தின் பெயரால் யாருமே நிராகரிக்கப்படக்கூடாது என்று சட்டப்பிரிவு 325 கூறுகிறது.
மனுஷி அமைப்பு வேறு சில மாற்று திட்டங்களை முன்வைக்கிறது. நாடாளு மன்றத்திற்கான நேரடித் தேர்வில் 44 பெண்கள் வந்தால், மூன்றில் ஒரு பங்காக வரவேண்டிய 181ல் 137 குறையும். அப்போது 595 ஆக மொத்த உறுப்பினர் தொகையை உயர்த்த வேண்டும். நேரடித் தேர்வில் 150 பெண்கள் வரமுடிந்தால், தங்கள் பங்கை எட்ட 31 உறுப்பினர்கள் குறையும். அப்போது 576 ஆக மொத்த உறுப்பினர் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் நேரடித் தேர்வில் 200 பெண் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால், இலக்கை எட்ட குறைவே இல்லாமல் இருக்கும். அப்போது 545 ஆக எண்ணிக்கையை வைத்திருக்கலாம். இப்படிப்பட்ட ஆலோசனைகளும் பெண்கள் அமைப்புகளில் இருந்து முன்வைக்கப் பட்டுள்ளது.
முதலில் பெண்கள் இடஒதுக்கீடு மசோதவை நிறைவேற்றவிடுங்கள்; பிறகு மற்ற பிற்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை இணைத்துக் கொள்ளலாம் என்று சட்ட அமைச்சர் கூறியுள்ள கூற்றையே, நாமும் இங்கே வழிமொழிய வேண்டியிருக்கிறது.

Friday, March 5, 2010

ஆசிரமச் சாமியார்கள்,கற்பனைக் கதாபாத்திரங்களா?

மூன்று நாட்களாக தமிழகத்திலிருந்து வெளிப்படுத்தப்பட்ட பரபரப்புச் செய்தி யாக ஒரு இளம் சாமியாரின், துறவரத்தை துறந்த படக்காட்சிகள் எல்லோரையும் நிலை குலைய வைத்தது. சாமிகளை வணங்கும் பக்தர்கள் தங்களது தீராத பிரச்சினைகளுக்கு, நேரடியாக சாமிகளின் பெயர்களில் ஆசாமிகள் கொடுத்து வரும் தீர்வாலோசனைகளை, தாங்கள் ஏற்றுக் கொள்வது மட்டுமின்றி, மற்றவர்களுக்கும் பரப்பி மகிழ்ச்சியடைந்து வருகிறார்கள். உளவியல் ரீதியாக பலமின்றி இருக்கின்ற நமது மக்கள்தான் இதுபோன்ற ஆசாமி களின் ஆற்றலால் ஈர்க்கப் படுகிறார்கள். பொதுவாக ஏழைகள் முதல் பணக்காரர் வரை, மனத்திடம் போதுமான அளவு இல்லாதவர்கள்தான் இதுபோன்று ஈர்க்கப்பட்டு பிறகு தங்களையும் இழக்கும் பக்தர்கள். மேலே குறிப்பிட்ட திருவண்ணாமலையைச் சேர்ந்த சாமியார் நித்தியானந்தா, பெங்களூரில் பெரிய அளவிலும், அமெரிக்காவில் உள்ள லாஸ்ஏஞ்சல்சில் மிகப்பெரிய அளவிலும் ஆசிரமம் வைத்து செயல்படுபவர்.
அதையே ஒரு வியாபாரமாக, தொழி லாக ராஜசேகரன் என்ற பெயர் கொண்ட அந்த நித்தியானந்தா செய்து வருகிறார். தான் வேதமுறைப்படி பண்பாட்டை பரப்பி வருவதாக கூறுகிறார். தங்களது யோகா பயிற்சி, கிராமப்புறங்களில் பள்ளிகளுக்கு உதவி செய்தல் போன்ற சமூக சேவைகள் பல லட்சம் மக்களுக்கு பயன்பட்டுள்ளது என்பது இவர்களது வாதம். குறிப்பிட்ட இந்த சாமியார் 200 புத்தகங்களை, 20 மொழிகளில் எழுதியுள்ளராம். 7 ஆண்டுகளாக இந்த தொழிலை செய்து வருகிறாராம். 20 லட்சம் மக்கள் இவருடைய சக்தியை, பெற்றுள் ளார்களாம். இவையெல்லாம் இவருடைய இணையதளத்தில் கூறப்படுகின்ற பரப்பு ரைச் செய்திகள்.
மேலே குறிப்பிடப்படும் சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கும் சாமியார், தான் பெற்றுள்ள சக்தியை பிறருக்கு கொடுப் பதற்கு அவர்களது தலையிலோ அல்லது உடலிலோ தனது காலால் உதைப்பாராம். அப்படி உதை வாங்குபவர்களுக்கு இவரது சக்தி மாறிச் செல்லுமாம். இப்படி ஒரு கதையை கிளப்பி விட்டு அதை நம்புவதற்கு பெரும் பணக்காரர்கள் உட்பட இந்த நாட்டில் இருக்கிறார்கள். முன்னாள் கல்வி அமைச்சர் ஒருவர் இதுபோல தனது அறிவியல் கற்றுக் கொடுக்கும் கல்லூரியிலேயே, உதை வாங்கும் நிகழ்ச்சியை நடத்தியுள்ளார். நித்தியானந்தரிடம் அளப்பரிய சக்தி இருப்பதாகவும், அவரால் புற்றுநோயைக் குணப்படுத்த முடியும் என்றும், தமிழில் எழுதக்கூடிய எழுத்தாளர்கள் கூட பரப்பி இருக்கிறார்கள். இத்தகைய போலி சாமி யார்களை பெரும் தீரர்களாக வெளி வுலகுக்கு காட்டிய பேச்சாளர்களும், எழுத்தாளர்களும், இந்த போலி சாமியார் களை விட ஆபத்தானவர்கள்.
இதுபோல ஒரு கோயில் குருக்கள், கருவ றைக்குள் பெண்களை மயக்கி பாலியல் பலாத்காரம் செய்து, அதையே படம் எடுத்து ரசிப்பது மட்டுமின்றி வியாபாரமும் செய்திருக்கிறார் என்பது பிடிபட்ட பிறகு தெரிகிறது. இன்னொரு ஆசிரம சாமியார் பெண் பக்தைகளை பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கியதாலும், ஆசிரமத்திற்குள்ளேயே கொலை செய்ததாலும், இரண்டு ஆயுள் தண்டனைகளைப் பெற்று சிறைக்குள் தவித்துக் கொண்டிருக்கிறார். இன்னொரு மடாதிபதி பெண்களை தனது கட்டுப்பாட்டிற்குள் வன்புணர்ச்சி செய்ததற்காகவும், தட்டிக் கேட்டவரை கொலை செய்ததற்காகவும், குற்றம் சாட்டப்பட்டு நீதிமன்றப் படிக் கட்டுகளில் ஏறி, இறங்கி வருகிறார். இவர்களுக் கெல்லாம் உலகம் முழுவதிலும் ஆசிரமக் கிளைகள் இருக்கின்றன. பல்வேறு நாடுகளிலிருந்து அதிகமான அளவில் வெளிநாட்டுப் பணம் நன்கொடையாக வந்து குவிகிறது. அப்படியானால் இந்த ஆசிரம செயல்பாடுகளும், மடங்களின் நடவடிக்கைகளும் ஒரு வியாபாரமாக நடந்து வருகின்றன என்று தானே பொரு ளாகும். இப்படிப்பட்டவர்கள் ஆன்மீக வியாபாரிகள் என்று ஏன் அழைக்கக் கூடாது?
இப்போது மாட்டிக் கொண்டுள்ள சாமியார் சிறப்பாக பேசுவாராம். அறிவு பூர்வமாக, அழகாக எழுதுவாராம். இப்படி கதவைத் திறந்தால் காற்று வரும் என்ற எழுத்து வல்லுனர்கள், நமது நாட்டின் அல்லது உலக நாடுகளின் பக்தர்களைக் கவர முடிகிறது. இது யாருடைய குற்றம்? தங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வுத் தேடி, சாமியிடம் ஓடி அங்கும் கிடைக்காமல், ஆசாமியிடம் நாடி வரும் மக்கள் செய்யும் குற்றமா? மனத்தளவில் தங்கள் சுய முயற்சியிலேயே, எந்த ஒரு சவாலையும் சந்திக்க முடியும் என்ற நம்பிக்கையில்லாத மனிதர்கள், இப்படிப்பட்ட சாமி நாடல், ஆசாமியிடம் ஓடல் என்ற பழக்கத்தைக் கொண்டிருக்கிறார்கள்? அதைத்தான் நமது முதல்வரின் வார்த்தைகளில் சந்திர காந்தா, சொர்க்க வாசல், மனோகரா, வேலைக்காரி, பராசக்தி, தூக்குமேடை போன்ற திரைப்படங்கள் மூலம் காவியுடை தாரிகளின் கபட நாடகத்தை எடுத்துக் காட்டியும் கூட இன்னமும் புரிந்து கொள்ள முடியாத, புரிந்து கொண்டாலும் திரிந்துக் கொள்ள இயலாத மானுடர்களைப் பார்த்து வருத்தப்படுவதைத்தான் நாமும் செய்ய முடியும். அதையும் தாண்டி அத்தகைய காட்சிகளை, காட்சி ஊடகங்களிலும், அச்சு ஊடகங்களிலும் பரப்பி வருவதை, அறுவருக்கத்தக்கச் செய்திகள் மற்றும் படங்கள் என்று தமிழக முதல்வர் கலைஞர் கண்டித்திருப்பது சரியானதொரு தலை யீடு என்பதைச் சொல்லாமல் இருக்க முடியாது.
மத நூல்களிலும், புராணங்களிலும் அறிவியலைத் தேடுவது, மலத்தில் அரிசியைப் பொறுக்குவதற்கு ஒப்பாகும் என்று தந்தைப் பெரியார் கூறிய சொற்கள் இந்த இடத்தில் அழுத்தமாக புரியப் பட வேண்டியிருக்கிறது. மேற்கண்ட பிரச்சினைகளை உருவாக்குவதற்கு ஊற்றுக்கண்ணாக இன்றைக்கு புற்றீசலென வளர்ந்து விட்ட போலிச் சாமியார் களும், அவர்களது ஆசிரமங்களும் அடை யாளம் காணப்படுகின்றன. இவர்களுக்கு கிடைக்கின்ற ஆயிரக்கணக்கானக் கோடி நிதி, இவர்களை வலுப்படுத்துகிறது.
மத வேறுபாடு இல்லாமல் இத்தகைய ஆசிரமங்கள், வெளிநாட்டு நிதி உதவிகளில் முக்கியமாக வாழ்ந்து வருகின்றன. அதற்காகவே இந்த ஆன்மீக வியாபாரிகள் உருவாக்கியுள்ள இணையதளங்களும், விளம்பரங்கள் செயல்படுகின்றன. குருடர் களுக்கு பார்வைக் கொடுக்கிறோம்; முடவர்களை நடக்க வைக்கிறோம்; ஊமைகளைப் பேச வைக்கிறோம் போன்ற அற்புதங்களைக் காட்டி ஒரு மதத்தின் பெயரால் சிலர் வித்தை செய்கிறார்கள். பில்லி சூனியங்களை எடுக்கிறோம் என்று ஒலியுல்லாக்களின் சமாதிகளில் இருந்து ஒரு மதத்தின் பெயரால் சிலர் பிழைத்துக் கொள்கிறார்கள். இவ்வாறாக மூன்று மதங்களின் பெயர்களாலும், போலிச் சாமியார்கள் உலா வருகிறார்கள். சிலர் உயர் தொழில்நுட்ப அறிவாளிகளையும், உளவியல் நிபுணர்களையும் பயன்படுத்தி, மனச்சோர்வு பெற்றோருக்கு ஆறுதல் கூறி, அனைத்தையுமே ஆண்டவனுக்கு அடுத்த இடத்தில் இருக்கும் ஆசாமி என்று ஒருவரை உயர்த்திப் பிடிக்கிறார்கள். முற்போக்குப் பேசும் மனிதர்கள் கூட, தங்கள் மனக்குறைகளைத் தீர்க்க வழி தெரியாமல், இத்தகைய யோக சாலைகளில் மாட்டிக் கொள்கிறார்கள். இத்தகைய ஆசிரம முறைகளை, ஆன்மீக பன்னாட்டு மூலதன நிறுவனங்கள் என்று அழைக்கலாம்.
பன்னாட்டு மூலதன நிறுவனங்களின் பங்கை விட, பண்பாட்டு நிலைகுலைதலை ஏற்படுத்தும் இத்தகைய போதை மயக் கங்கள் ஆபத்தானவை. இவற்றை வைத்து வியாபாரம் செய்யலாம் என இறங்கு கின்ற ஊடக வியாபாரிகள், அதைவிட ஆபத்தானவர்கள்.
தாழ்வு மனப்பான்மைக் கொண்ட மானூடர்களுக்குத்தான், இதுபோன்ற ஆசிரமச்சாமிகள் ஊன்று கோல்களாகத் தேவைப்படுகிறது. தாழ்வு மனப்பான்மை யைத் தகர்த்தெறியுங்கள்; தரணியை வெல்லத் தாங்களும் அறுதியிடுங்கள் என்ற முழக்கத்தை நாம் எழுப்புவோம். நமது மக்கள் பலிகடா ஆவதில் இருந்து காக்க உதவுவோம்.

Thursday, March 4, 2010

ஆன்மீகத்தில் பார்ப்பனிய எதிர்ப்பின் வெற்றி!

அய்யா வழி என்று அழைக்கப்படும் ஆன்மீகப் பாதை ஒரு வராலற்றை உருவாக்கியுள்ளது. 19 ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், திருவிதாங்கூர் மகாராஜா, ஆங்கிலேயர்களுடைய உதவிகளுடன் ஆட்சி புரிந்து வந்தார். கிழக்கிந்திய கம்பெனி அவருக்கு முழுமையாக உதவிகளைச் செய்தது. திருவிதாங்கூரில் தங்கியிருந்த ஆங்கி லேய ராணுவத்தை பராமரிக்க, கிழக் கிந்திய கம்பெனிக்கு திருவிதாங்கூர் மகாராஜா பெருந்தொகையைக் கொடுத்து வந்தார். அதற்கு ஈடாக அந்த மன்னர் மக்களின் மீது, குறிப்பாக ஒடுக்கப்பட்ட சமூகங்களாக இருக்கின்ற மக்கள் மீது கடுமையான வரிகளை விதித்து வந்தார். சாதி இந்துக்களின் கைப்பாவையாக அப்போது மன்னர் இருந்தார். அதனால் ஆதிக்க சாதிகள், ஒடுக்கப்பட்ட சாதிகளை மன்னரின் ஆட்சியைப் பயன்படுத்தி, கடுமையாகச் சுரண்டி வந்தனர். அத்தகைய இந்து மதத்தின் ஆதிக்க கட்டத்தில்தான், அந்நிய நாட்டிலிருந்து வந்திறங்கிய மதத்தாலும், ஒடுக்கப்பட்ட சமூகம் மத்தியில் பரவ முடிந்தது. அப்படி மதம் மாறியவர்களுக்கு அந்நிய ஆட்சியாளர்களிடமிருந்து பல சலுகைகள் கிடைத்தன. மன்றோ என்ற ராணுவத் தளபதி, ஆள்வோர் மற்றும் ஆதிக்க சாதிகளின் பிடிக்குள் மாட்டிக் கொண்டிருக்கும் ஒடுக்கப்பட்ட சமூகங்களை காப்பாற்றுவதற்காக பல சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தார். 1811ம் ஆண்டு டிசம்பர் 3ம் நாள், திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்கு உட்பட்ட பகுதியில் அடிமை வர்த்தகத்திற்கு தடை விதித்தார். மீன் வலைகளுக்கு போடப்பட்டிருக்கும் வரியையும் நீக்கினார். அதனாலேயே மீனவ மக்கள் பலரும் கிறித்துவ மதத் தை தழுவினர். இந்து மதத்தில் உள்ள ஆதிக்க சாதியினரிடம் இருந்து விடுதலை பெற்றோம் என்று உணர்ந்தனர். 1817ம் ஆண்டு ஒடுக்கப்பட்ட சா தியினர் தங்கள் வீட்டு ஓலைகளை ஓடுகள் வைத்து வேய்ந்து கொள்ளலாம் என்று அனுமதிக்கப்பட்டனர். அதற்கு முன்பு அப்படிப்பட்ட அனுமதியை மன்னரும், நம்பூதிரிகளும் அவர்களுக்கு வழங்கவில்லை.
ஒடுக்கப்பட்ட சமூகங்களாக அறிவிக்கப் பட்ட நாடார்கள், சாணர்கள், ஈழவர்கள் ஆகியோரது குடும்பப் பெண்கள் தங்கத்தையும், வெள்ளியை யும் நகைகளாக அணிய நம்பூதிரிகளும், மன்னர் ஆட்சியும் அனுமதிக்கவில்லை. அத்தகைய அனுமதி யை 1818ம் ஆண்டு ஆங்கிலேய தளபதி வழங்கினார். ஆனாலும் கூட நம்பூதிரி களின் கட்டுப்பாட்டில் இருந்த கோயில்களுக்குள், இத்தகைய ஒடுக்கப்பட்ட சமூகங்களை ஆதிக்க சாதியினர் அனுமதிக்கவில்லை. ஆங்கிலேயன் கொண்டு வந்த சீர்தி ருத்தங்களால் கூட, இந்து மதத்திற்குள் இருந்த பார்ப்பனிய சாதி இழிவை நீக்க முடியவில்லை. அந்த அளவிற்கு நிலப்பிரபுத் துவமும், மூட நம்பிக்கைகளும், ஆதிக்க
சாதி வெறியும், மன்னர் ஆட்சியில் மலிந்து கிடந்தது. சாதிப்பாகுபாடும், சாதி இழிவுபடுத்தலும் அன்றைய காலத்தின் நடைமுறையாக இருந்தது. 4 வர்ணங்கள் என்பதாக பிரிக்கப்பட்ட மனிதர்களை சாதிக்கட்டுமானத்திற்குள் ஏற்றுக் கொண்ட பார்ப்பனியம், அங்கே இருந்த ஒடுக்கப்பட்ட சமூகத்தை வர்ணமற்றவர்கள் என்றும், சாதிக் கட்டுமானத்திற்கு வெளியே உள்ளவர்கள் என்றும், ஒதுக்கி தீண் டாமைப் பாராட்டி வந்தனர்.
சாதி இந்துக்கள் நடந்து செல்லும் வழியில் எதிரே ஒடுக்கப்பட்ட
சாதியைச் சேர்ந்த உழைப்பாளி வருவாரானால், ஆதிக்க சாதிக்காரன் எதிரே வரும் தாழ்ந்த சாதிக்காரனை கொலை செய்ய உரிமை உண்டு என்ற பழக்கத்தை வைத்திருந்தனர். அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தில், அத்தகைய கொலைகள் குற்றமல்ல என்று கருதப்பட்டது. பிரம்மா என்ற கடவுளின் வழி வந்தவர்களாக பார்ப்பனர் களைக் கருதினார்கள். அவர்கள் எதை உளறினாலும் அதுவே அன்றைய ஆட்சியின் விதியாக மாறியது. அன்றைய ஆட்சியில் பார்ப்பனர் களுக்கே முதலிடம் கொடுக்கப்பட்டது. அன்றாடம் பார்ப்பனர்களுக்கு
சோறு கொடுக்க உணவுக் கூடங்கள், அந்த ஆட்சியில் நிறுவப்பட்டது. பார்ப்பனர்கள் வீடுகளுக்குள்ளே, ஒடுக்கப்பட்ட சமூகத்தின் பெண்கள் நுழைய முடியாது. அப்படியே நுழைந்தாலும் பின்புறம் வழிதான் செல்லவேண்டும். அப்போதும் கூட மார்பில் துணியின்றிதான் செல்ல முடியும். கடவுளுக்கு அடுத்ததாக பார்ப்பனர்களான நம்பூதிரிகளை, அரசன் மதித்து வந்தான். நாயர்கள் அதையடுத்து மதிக்கப்பட்டார்கள். அவர்களுக்கும் அடுத்து வெள்ளாளர்கள் அங்கீகரிக்கப்பட்டார்கள். நாயர்கள் பொதுவாக அரசு ஊழியர்களாக இருந்தார்கள். அரசுப் பொறுப்புகளில் 60% அவர்களே இருந்தார்கள். அவர்கள் பண்ணையார்களாக இருந்து கொண்டு, ஒடுக்கப்பட்ட சமூகங் களை மேற்பார்வையிட்டார்கள். நம்பூதிரிகள் முன்னால் குறைந்தது 12 அடி தள்ளித் தான் ஒடுக்கப்பட்ட சமூகங்கள் நிற்க முடியும். அந்த விதி கறாராகப் பின்பற்றப்பட்டது. நாடார் சமூகத்தின் ஆண்களும், பெண்களும் அந்த விதிக்குட்பட்டே செயல்படவேண்டும். ஆண்கள் தலைப்பாகை அணிய முடியாது. பெண்கள் மார்பு சேலை அணியக்கூடாது. கடுமையான பண் பாட்டு அடக்குமுறையை ஒடுக்கப்பட்ட சமூகங்கள் சந்தித்து வந்தன.
அப்போதுதான் பழமை மூட நம்பிக்கைகளை உடைத்தெறிந்து, சாதி கவுரவத் தையும், மத ஒடுக்கலையும் தூக்கி எறிந்து, ஒடுக்கப்பட்ட சமூகத்தை விடுதலை செய்ய வைகுண்டர் தோன்றினார். அவர் முடிசூடும் பெருமாள் என அழைக்கப்பட்டார். அவர் உருவாக்கிய வழி ஒரு மாற்று மதமாகவும், மாற்றுப் பண்பாட்டு பழக்கமாகவுமானது. அவருடைய வழிச் செல்வோர் பெரும்பாலும் ஏழை மற்றும் விளிம்பின சமூகத்தவர்களாக இருந்தனர். அவர்கள் ஒரு வித்தியசமான, சுயாட்சி தன்மைக் கொண்ட சமூகமாக பரிணமிக்கத் தொடங்கினர். தங்கள் பாதையை அய்யா வழி என்று அழைத்துக் கொண்டனர். 19ம் நூற்றாண்டின் மத்திய கால கிறித்துவ சபைகளின் அறிக்கைகள் இதைக் கோடிட்டுக் காட்டுகின்றன. தெற்கு திருவிதாங்கூர் சமஸ்தானத்திலும், தெற்கு திருநெல்வேலியிலும் அந்த வழி வேரூன்றி யது. 1840லிருந்து அய்யா வழி நம்பிக்கை முக்கியமானதாக வளரத் தொடங்கியது. 19ம் நூற்றாண்டின் கடைசியில், நாகர்கோவில் அருகே இருக்கும் சாமித் தோப்பு என்ற இடம் அய்யா வழியின் மையமாக கருதப் பட்டது. வைகுண்டரின் கற்பித்தலால் அது பரவியது. வைகுண்டரின் 5 சீடர்கள் நாடெங்கும் சென்று, அய்யா வழியை பரப்பினர்.
அய்யா வழி செல்வோர் தங்களுக் கென்று ஆங்காங்கே பதிகளை உருவாக்கிக் கொண்டனர். அந்தப் பதிகளுக்குள் உயரமான நிலைக் கண்ணாடி, கடவுள் சிலைக்கு பதிலாக வைக்கப்பட்டுள்ளது. சாமி தோப்பில் வைகுண்டரின் புனித பிரம்பு, தண்டையம், சுரைக்கூடு ஆகியவை உள்ளன. 1927ல் வெளியிடப்பட்ட அய்யா வழி நூலின் பெயர், அருள் நூல். 1931ல் அகிலம் என்ற நூல் வெளியிடப்பட்டது. 1940க்கு பிறகு அதாவது இந்திய சுதந்திரத்திற்கு பிறகு, அய்யா வழி மேலும் பரவியது என்று கூறுகிறார்கள். 90களின் ஆண்டுகள் அது வேகமாக பரவியது. 20ம் நூற்றாண்டில் அதன் பெயரில் பல சமூக அமைப்புகள் தோன்றின.
1994ல் கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் வைகுண்டர் தினத்தை விடுமுறையாக அறிவித்தது. பின்னர் 2006ல் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களிலும் அந்த விடுமுறை பின்பற்றப்பட்டது. தற்போது அய்யா வழியின் வாரி
சாக பால பிரஜாபதி அடிகளார், அந்த இயக்கத்தை வழி நடத்தி வருகிறார். அகிலத் திரட்டு என்று அழைக்கப் படும் நூலில் அனைத்து வழி காட்டல் களும் இருக்கின்றன என்று அவர் கூறுகிறார். அந்த நூலை 1841ல் ஹரி கோபாலன் என்ற அய்யா வழி சீடர் எழுதியுள்ளார்.
பார்ப்பனிய ஒடுக்கு முறை களிலிருந்து தப்பிக்க முடியாமல், இந்து மதத்திற்குள் திணறிக் கொண்டிருக்கும் சாதிச்சனங்கள் மத்தியில், இந்து மத விலங்கிலிருந்து விடுபட்டு, ஆன் மீகத்திலேயே புதிய பாதை யை ஏற் படுத்தி அறுதியிட்டுள்ளதால், அய்யா வழி இன்றும் உயிர்ப்புடன் இருக்கிறது. லட்சக்கணக்கான உழைக்கும் மக்கள் அந்தப் பாதையை பின்பற்றுகிறார் கள். துண்டை இடுப்பில் கட்டச் சொல்லும் சாதி ஒடுக்கலுக்கு எதிராக, துண்டை தலைப் பாகையாக அய்யா வழி பக்தர்கள் கட்டிக் கொள்கிறார்கள். கையைத் தொடாமல் எறியப்படும் திருநீற்றை மறுப்பதற்காக, வெள்ளை மாவை நெற்றியில் இட்டுக் கொள்கிறார்கள். பார்க்க அனுமதிக்கப்படாத கடவுள் சிலைகளுக்கு மாறாக, நிலைக் கண்ணா டியில் பார்த்துக் கொள்கிறார்கள். இது ஒரு வகை சித்தர் வழிபாடு என்பதாக கருதப்படமுடியும். 200 ஆண்டுகளுக்கு முன்னால், தோள் சேலைப் போராட்டம் ஒன்றை நடத்தி, அதன் மூலம் மார்புச் சேலை அணிய, ஒடுக்கப்பட்ட சமூகப் பெண்கள் உரிமைப் பெற்றார்கள்.
மேற்படி சாதி ஒழிப்பு, சமூக விடுதலை மற்றும் பண்பாட்டு உரிமை பெறுவதற்கு ஒடுக்கப்பட்ட சமூகத்திற்கு வழிகாட்டிய அய்யா வழி இன்றும் வலு வடைந்து வருகிறது. வைகுண்டரின் 178வது பிறந்த நாளான இன்று தமிழகம் எங்கும் எடுக்கப்படும் விழா இதை பதிவு செய்கிறது.

Wednesday, March 3, 2010

வரலாற்றில் உருவாக்கப்பட்ட சாதியம், மறுதலிக்கப்படுகிறதா?

சென்ற ஆண்டு நவம்பர் மாதம் கடை சியில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஒரு ஆய்வுரை வழங்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பாக அம்பேத்கர் நோக்கில் சாதிகளுடைய தோற்றம் பற்றி விரி வாகக் கூறப்பட்டது. அம்பேத்கர்
சாதியத்தை அழிப்போம் என்று எழு திய நூல் ஆழமான அடித்தளத்தை முன்வைக்கிறது. சாதியம் ஒரு நோய் என்று ஏற்கப்பட்டாலும், அது இந்திய சமூகத்தில் ஆழமாக வேரூன்றியுள்ளதை யாரும் மறுக்க முடியாது. மேற்படி கூட்டத்தில் உரையாற்றிய பேராசிரியர் சிவசுப்பிரமணியன் சிலவற்றை கோடிட்டு காட்டுகிறார். 1946ம் ஆண்டு இந்தியாவில் சாதிஅதன் செயல்பாடு தோற்றம் என்ற நூலை, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஹட்டன் எழுதியதையும் மேற்கோள் காட்டினார். இதுவரை 5000த்திற்கும் மேற்பட்ட நூல்கள் இந்தியாவில் உள்ள சாதிகள் பற்றி வெளியாகியுள்ளன. சமூகக் கொள்கைகளின் அடிப்படையில்
சாதிகளை ஆய்வு செய்யும் தன்மையுள்ள நூல்களை மட்டும், இவற்றில் நாம் எடுத்துக் கொள்ளலாம். ஏனென்றால் மற்ற நூல்கள் ஒவ்வொரு சாதியையும், வானம் வரை உயர்த்தி எழுதப்பட்ட நூல்களாக இருக்கின்றன. உதாரணமாக தமிழ்நாட்டில் சேர,சோழ,பாண்டிய மன்னர்கள் ஆண்டார்கள் என்பது வரலாறு. தங்கள் சாதியை மன்னர் பரம்பரை என்று
சொல்லிக் கொள்ள, ஒவ்வொரு சாதிக் காரர்களும் விரும்புகிறார்கள். இதுதான் பெருமைக்குரியது என்றும் நம்புகிறார்கள். அதனால் சேர, சோழ, பாண்டிய மன்னர்களாக தங்கள் சாதியை சேர்ந்த வர்கள்தான் ஆண்டார்கள் என்று சொல் லிக் கொள்வதில் அத்தனை விருப்பம். அத்தனை வேகம். அதன் விளைவாக ஒரு
சாதியைச் சேர்ந்த பெரும் பணக்காரர் ஒருவர் தனக்கு நெருக்கமான பேச்சாளரிடம், நிதி கொடுத்து தங்கள் சாதியின் வரலாறு பற்றி ஆய்வு செய்யச் சொன்னாராம். அவரும் மூவேந்தர்களும் தங்கள் சாதிதான் என்று ஆய்வுக் கட்டுரைகளை எழுதி விட்டாராம். அந்த குறிப்பிட்ட சாதியை எதிர்த்து தங்கள் ஆதிக்கத்தை தொடர்ந்து நிலை நிறுத்த விரும்பிய இன்னொரு
சாதியின் திடீர் பணக்காரர் ஒருவர், தங்கள்
சாதியின் படித்த ஒருவரை அழைத்து வந்து, லட்சங்கள் செலவழிக்க தயார் என்றும், தங்கள் சாதிதான் மூவேந்தர்களாக ஆண்டு வந்தவர்கள் என்பதாக ஒரு வரலாற்று ஆய்வை எழுதச் சொல்லிப் பணித்தாராம். இப்படித்தான் இங்கே சாதிப் பெருமை பீற்றிக் கொள்ளப்படுகிறது.
மேற்கண்ட பொய்யான அல்லது போலியான அல்லது மாயையான தோற்றத்தை உருவாக்க எண்ணுபவர்கள், வேதங்களையும், உபநிசத்துக்களையும், ஆதாரமாகக் காட்டி, தங்கள் சாதியின் தோற்றம் மிகவும் பழமையானது என்றும் வாதாடுகிறார்கள். வாக்கு வங்கி அரசியலில் சாதிகளின் பங்களிப்பு, பகிரங்கமாக வெளிப்படுகிறது. அதைப் பயன்படுத்தி இன்றைய அரசியல் அதிகாரத்தில் மேலே வருபவர்கள், அத்தகைய ருசியை விடாமல் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். சாதிய ரீதியில் ஒடுக்கப்பட்ட மக்கள், விளிம்பு நிலை மக்கள் என்று அழைக்கப் படுகிறார்கள். தமிழகத்து அரசியலில் ஒவ்வொரு மாவட்டத்திலும், செல் வாக்குப் பெற்ற சாதியினர் மட்டுமே எல்லாக் கட்சிகளிலும், பொறுப்புக்கு வரமுடியும். அதைப் போல அந்த மாவட்டத்தில் செல்வாக்குப் பெற்ற சாதியின் பிரதிநிதிகள்தான், நாடாளுமன்றம், சட்ட மன்றம் ஆகியவற்றிற்கான தேர்தலில் வேட்பாளர்களாக நிற்கமுடியும். முற்போக்கு பேசுகின்ற கட்சிகளானாலும், சாதி மறுப்பு கொள்கைகளை பேசுகின்ற கட்சிகளானாலும், மாவட்ட கட்சியின் தலைமைக்கான தேர்தல் வரும்போதும், சட்டசபை, நாடாளுமன்ற தேர்தல்கள் வரும்போதும், தங்கள் கட்சியில் உள்ள குறிப்பிட்ட பகுதிச் செல்வாக்குக் கொண்ட சாதியின் அடையாளத்துடன் கூடிய நபர்களையே நியமனம் செய்கிறார்கள். ஓரங்கட்டப்பட்டு வந்த தலித் சமூகத்தைச் சேர்ந்த பிரதிநிதிகளை, மேற்கண்ட பொறுப்புகளுக்கு நியமிக்காத போக்கே இருந்து வந்தது. விளிம்பு நிலைப் பட்டியலில் இருந்து வந்த தலித் சமூகம், தங்கள் சுயமரியாதைக்காக லட்சக்கணக்கில் தெருவில் இறங்கி போராட வந்தபோது, அவர்களது சமூக இயக்கம் பிரதான நீரோட்டமாக இருக்கின்ற சமூக, அரசியல் நீரோட்டத்தில் அறுதியிடத் தொடங்கியது. அதுவே பெரிய கட்சிகளை சிந்திக்க வைத்தது. அதன் விளைவாக மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் அத்தகைய சமூகத்தைச்
சேர்ந்த பிரதிநிதிகளை இணைச் செயலாளர் களாகவும், துணைச் செயலாளர்களாகவும் நியமிக்கத் தொடங்கினர்.
இந்தியாவில் இருக்கின்ற சாதிகள், நிலவும் நிலவுடைமை உற்பத்தி உறவுகளுடன் பின்னிப் பிணைந்து கிடக்கின்றன. ஆகவே அத்தகைய நிலவு டமை உறவுகளை தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கும் பெரும்பான்மை மதமும், சாதிப் பிரிவினைகளுக்கு முழுமையாக இடம் கொடுக்கிறது. சாதிகளை முறைப் படுத்த வருணம் என்பது தொடக்கக் காலத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒரே குடும்பத்திற்குள் பல்வேறு வருணங்கள் இருக்கலாம் என்ற ஒரு பண்டைக்காலம் இருந்து வந்திருக்கிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூரில், பழங்கால கல்வெட்டு ஒன்று உள்ளது. அது குடவோலை முறை தேர்தல் பற்றி பறை சாற்றும் ஒரு ஆதாரமான கல்வெட்டு. ஊராட்சியில் தேர்ந்தெடுக்கப் படுவதற்காக போட்டிப் போடுவதற்கு தகுதியுள்ள நபர்கள் பற்றி அதில் எழுதப்பட்டுள்ளது. 4 வகை வேதங்களை கற்றவர்களும், நிலத்தை சொத்தாக வைத்திருப்பவரும் மட்டுமே ஊராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட முடியும் என்ற நிபந்தனை அதில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதுவே குறிப்பிட்ட ஆதிக்க சாதியினர் மட்டுமே, அரசியல் அதிகாரத்தில் அமரமுடியும் என்ற சூழல், தொடக்க கால தேர்தல் முறையிலேயே அடிப்படையாக இருந்திருப்பது அம்பலமாகிறது. அந்த அளவிற்கு ஆழமாக நாம் நடந்து வந்த அல்லது கடந்து வந்த வரலாறு என்பது சாதிகளையும் குறிப்பாக ஆதிக்கசாதியின் அரசியல் அதிகாரப் பிடிப்பையும் கொண்டதாகத் தான் இருந்திருக்கிறது என்பது இங்கே வெளிப்படுகிறது.
உழைக்கும் வர்க்கமாக அறியப்படும் சா திகள் கீழே அழுத்தப்பட்டுள்ளன. ஆதிக்க சாதிகள் தான் நிலவுடமைகளை கைப்பற்றி வைத்திருந்ததாக வரலாறே கூறுகிறது. அதனால் மன்னர்களாக இருந்தவர்கள் மதிக்கப்படவேண்டியவர்கள் அல்ல. உழைக்கும் வர்க்க சாதிகளை அடக்கி, ஒடுக்கி, சுரண்டிக் கொழுத்தவர்களே மன்னர்களாக இருந்திருக்கிறார்கள். அதனால் தங்கள் சாதிதான் மன்னர்களாக இருந்தவர்கள் என்று பீற்றிக் கொள்ள வேண்டிய அவசியம் உழைக்கும் வர்க்க சாதியினருக்குத் தேவையில்லை. ஆனால் 40 ஆண்டுகளாக தமிழ்நாட்டின் ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்திருப்பதாக எண்ணும் இடைப்பட்ட சாதியினர், தங்களுடைய விருப்ப ஆய்வில், மன்னர் பாரம்பரியமாக சித்தரித்துக் கொள்கிறார்கள். உழைக்கும் வர்க்கமாக இருக்கும் பாரம்பரியம்தான் சிறந்தது என்ற பண்பு இங்கே பரப்பப் படவில்லை. மாறாக மன்னர் வழி என்பது மதிக்கத்தக்கது என்ற புரிதல் இன்னமும் தூசு தட்டப்படாமல் இருக்கிறது.
சாதியத்தின் தோற்றக்காலங்களில் இருந்த சாதிகளுக்கு இடையிலான இடைவெளி, இடைக்காலங்களில் மோதல்களாக மாறி, புதிய சமன்பாடுகள் ஏற்பட்டுவிட்டன. தமிழகம் சாதி மறுப்பு திருமணங்கள் பலவற்றை சந்தித்து விட்டது. பரப்புரை அளவிலாவது சாதி மறுப்பு என்பது இங்கே பகிரங்கமாக செல்வாக்கு செலுத்துகிறது. ஆனால் வடஇந்திய மாநிலங்களிலோ, சாதிப் பாகுபாடு இன்று வரை பகிரங்கமான அறிவிப்பாகவும், ஒவ்வொரு
சாதியும் தனித்தனியாக செயல்படுவது நடைமுறையாகவும் இருந்து வருகிறது. தமிழகம் அந்த விதத்தில் தந்தை பெரியாரின் கருத்துக்களை, குறைந்த பட்சம் சாதி மறுப்பு விசயத்திலாவது, உள் நீரோட்ட சிந்தனையாகக் கொண்டுள்ளது. ஆகவே இன்று கிளப்பப்படும் சாதி அடையாளங்கள், ஒன்று அடக் கப்பட்டவரின் அறுதியிடலுக்காகவோ, அல்லது ஆதிக்க சாதிகளில் இருக்கின்ற தனி நபர்களின் நலன்களுக்காகவோ மட்டும்தான் வெளிவருகிறது. காலப் போக்கில் கண்டிப்பாக உதிர்ந்து விடும் என்ற இந்த சாதி அடையாளங்கள், அனைத்து மக்கள் அதிகாரத்தின் மூலம் வெளித்தள்ளப்படுவது உறுதி.