Thursday, May 6, 2010

மக்கள் கணக்கெடுப்பில், சாதி புள்ளி விவரம்

நேற்று ஊடகங்களில் வந்துள்ள செய்தி முக்கிய விவாதத்தை கிளப்பியுள்ளது. நாடாளுமன்றத்தில் சமாஜ்வாதி கட்சியும், ராஷ்ட்ரீய ஜனதா தளமும், ஐக்கிய ஜனதா தளமும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், அவர்களுடன் பா.ஜ.க. உட்பட ஒரு பிரச்சினையை கிளப்பியிருக்கிறார்கள். தொடங்கப்பட்டுள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பில், சாதிவாரியான புள்ளி விவரங்களையும் சேர்த்து எடுக்க வேண்டும் என்பதே அவர்களது கோரிக்கை. நேற்றைய நாடாளுமன்றத்தில் இதுபற்றிய விவாதம் எழுந்துள்ளது. அப்போது ஒரு பா.ஜ.க. உறுப்பினர், வங்கதேசத்தின் அகதிகளை கணக்கெடுக்கக்கூடாது என பிரச்சினையை, வேறுபுறம் திருப்பி விட்டார். 1931ம் ஆண்டு வரை இந்திய மக்கள் தொகையை கணக்கெடுக்கும் போது, சாதிவாரியான புள்ளி விவரங்களையும் சேர்த்து எடுத்தது போல இப்போதும் கணக்கெடுப்பில் அதை இணைக்க வேண்டும் என்று இவர்கள் கேட்டனர்.
இந்த கோரிக்கை எதிர்க்கட்சிகள் மட்டத்தில் மட்டும்தான் நின்றதா? அப்படிக் கூறிவிடமுடியவில்லை. இன்று சாதிவாரி புள்ளி விவரங்களை கோரி வரும் பின் தங்கிய வகுப்பினர், ஆளும் கட்சியிலும், ஆளும் கூட்டணியிலும் இல்லையா? அப்படி இருப்பதனால்தான், ஆளும் காங்கிரஸ் கட்சிக்குள்ளும் இதே கோரிக்கை பலரால் எழுப்பப்படுகிறது. அதன் விளைவாக மத்திய அமைச்சரவையிலும் அது எதிரொலிக்கிறது. அப்படி எதிரொலிக் கும் போது, தலைமை அமைச்சர் மன்மோகன் சிங் தலைமையில், மத்திய அமைச்சரவை இதன் மீது விவாதிக்க வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. அப்போது ஒத்த கருத்தில் மத்திய அமைச்சர வை இந்த விவகாரத்தில் இல்லை என்பது புரிந்திருக்கிறது.
மக்கள் தொகை கணக்கெடுப்பில், சாதிவாரி புள்ளி விவரங்களை இணைக்கக்கூடாது என்ற கருத்தை வலியுறுத்திய மத்திய அமைச்சர்களின் பெயர்கள் வெளி வந்துள்ளன. செவ்வாய்கிழமை நடந்த அமைச்சரவை கூட்டத்தில் சாதி கணக்கு எடுக்கக் கூடாது என அமைச்சர்கள் ப.சிதம்பரம், பிரணாப் முகர்ஜி, கபில்சிபல் ஆகியோர் வலியுறுத் தியுள்ளனர். ஆனாலும் அரசாங்கத்திற் குள்ளேயும், ஐ.மு.கூட்டணியில் உள்ள உறுப்பு கட்சிகளுடனும், அதிகமான விவாதம் செய்ய வேண்டி இருக்கிறது என்பதாக தலைமை அமைச்சர் கூறியுள்ளார்.
1881ம் ஆண்டு இந்திய கணக்கெடுப்புக் குழு தனது பணியை முதலில் தொடங்கியது. 1931ம் ஆண்டு வரை சாதி வாரி கணக்கெடுப்பையும் அது எடுத்தது. ஆனால் 80 ஆண்டுகளாக எஸ்.சி., எஸ்.டி. தவிர மற்ற பின்தங்கிய வகுப்புகளைப் பற்றிய புள்ளி விவரம் எடுக்கப்படவில்லை. இதுவே 80 ஆண்டுகளில் கூடியிருக்கும் தங்களது சாதி எண்ணிக்கையை கணக்கில் எடுக்காமல் இருக்கும் அவல நிலை என்று பாதிக்கப் பட்டோர் குரல் எழுப்புகின்றனர். 1931ம் ஆண்டு வரை எடுக்கப்பட்ட புள்ளி விவரப்படியே மண்டல் ஆணைய அறிக்கை, பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு இடஒதுக் கீடு செய்துள்ளது. அத்தகைய மண்டல அறிக்கை இன்றைக்கும் அமுலில் இருப்பதால், பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக் கான கல்வி மற்றும் வேலை வாய்ப்பு உரிமைகளான இடஒதுக்கீடு, புதிய புள்ளி விவரங்களை கணக்கில் எடுக்காமல் எப்படி நியாயமாக கொடுக்கப்பட முடியும் என்பதே அவர்களது வாதம்.
சாதி அடிப்படையில் மட்டுமே இட ஒதுக்கீட்டை அமுல்படுத்துகின்ற ஒரு அரசாங்கம், அதை சரியாகவும், உண்மை யாகவும், புள்ளி விவரப்படியும் செய்ய மறுப்பது ஏன்? என்பதே அவர்களது கேள்வி.
இடஒதுக்கீடு என்பது ஒரு உலகம் தழுவிய விவாதமாக இருக்கிறது. அமெரிக்காவில் 1964ம் ஆண்டின் சிவில் உரிமைகள் சட்டத்தின் ஒப்புதலுக்கு பிறகு, 1970ன் ஆண்டுகளில் இன ரீதியான இடஒதுக்கீடு அமுலாகத் தொடங்கியது. அன்றைய அதிபர் ரிச்சர்டு நிக்சனின் தொழிலாளர் அமைச்சரான ஜார்ஜ் பி ஸ்குல்ஸ் என்பவர் கறுப்பர்களுக்கு எதிரான கட்டுமான சங்கங்களில், கறுப்பர்களையும் குறிப்பிட்ட ஒதுக்கீட்டில் இணைக்க வேண்டும் என்று கோரினார். அமெரிக்க உச்சநீதிமன்றத்தின் வழக்கு ஒன்றில், இன ரீதியான பாரபட்சம் சட்ட விரோதமானது என்று கூறிய பிறகு, பல நிறுவனங்கள் தாங்களாகவே இடஒதுக்கீடு கொடுக்கத் தொடங்கினர். 1973ம் ஆண்டு நீதிமன்ற வழக்கில், கனக்டிக்கட் மாநில காவல் துறையில் புதிய ஊழியர்களை எடுக்கும் போது, பாதி பேராவது கறுப்பர்கள் இருக்க வேண்டும் என்பதாக தீர்ப்பானது. 1974ம் ஆண்டில் நீதித்துறை மற்றும் அமெரிக்க எஃகு தொழிலாளர் சங்கம் அதிகமான ஒதுக்கீடு செய்ய திட்டமிட்டது. 1978ம் ஆண்டு இதே போல உச்சநீதிமன்ற தீர்ப்பு ஒன்று வெளியானது. 1989ம் ஆண்டு அமெரிக்க உச்சநீதிமன்றத்தில், தனியார் நிறுவனங்களும் தங்களது இடஒதுக்கீட்டை அறிவிக்க வலியுறுத்தப்பட்டது. 1990ல் அமெரிக்க உச்சநீதிமன்றம், மாநில ஒப்பந்தக் காரர்கள் 10% இனவழி ஒதுக்கீடு செய்ய அனுமதி கொடுத்தது. அதே சமயம் 1991ல் அதிபர் ஜார்ஜ் புஷ் இது போன்ற இடஒதுக்கீடுகளை அறவே நீக்க முயற்சி எடுத்தார். அதை 1991ன் சிவில் உரிமைகள் சட்டம் என்பதாக உருவாக்க முயன்றார். ஆனால் வெல்லவில்லை. ஜார்ஜ் புஷ் அணுகுமுறையை, இந்தியாவின் மத்திய அமைச்சர்களான ப.சிதம்பரம், பிரணாப் முகர்ஜி, கபில்சிபல் ஆகியோர் பின்பற்று கிறார்களா என்பது தெரியவில்லை.
அமெரிக்காவில் ஆக்கபூர்வமான ஒதுக்கீடு அணுகுமுறை என்று 1961ம் ஆண்டு மார்ச் 6ம் நாள் அதிபர் ஜான் எஃப் கென்னடியால் கையெழுத்திடப்பட்டது. அதே போல நிர்வாக ஆணை 1965ம் ஆண்டு செப்டம்பர் 24ல் அதிபர் லிண்டன் ஜான்சனால் கையெழுத்திடப்பட்டது. பெண் களுக்கு இடஒதுக்கீட்டையும் இணைக்க வேண்டும் என்று 2967ம் ஆண்டு அக்டோபர் 13ம் நாள் அமெரிக்க நிர்வாக ஆணை அமுலாக்கப்பட்டது. அமெரிக்காவி லேயே இத்தகைய நிலை என்றால், சாதி ஏற்றத்தாழ்வு உள்ள இந்தியாவில் ஏன் ஆரோக்கியமான அணுகுமுறை இல்லை என்ற கேள்வி எழுகிறது.
இந்தியாவில் இடஒதுக்கீடு என்பது அரசாங்கத்திலும், பொதுத்துறையிலும் மற்றும் தனியார் கல்வி சாலைகளிலும் இருக்கிறது. ஆனாலும் கூட மத, மொழி அடிப்படையிலான கல்வி நிறுவனங்களில் கட்டாயப் படுத்தப் படுவதில்லை. இட ஒதுக்கீடு 50%க்கு மேல் செல்லக் கூடாது என்று உச்சநீதிமன்றம் கூறியிருக்கும் நிலையில், பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு 27% என்பது அமுலில் உள்ளது.
மண்டல் ஆணைய அறிக்கையின் படி இந்தியாவில் உள்ள சாதிகளின் பின்தங்கிய நிலைமைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதையொட்டி பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்களுக்கும் இடஒதுக்கீடு என்பது அமுலாக்கப்பட்டது. மண்டல் அறிக்கையை அமுலாக்கினால், உள்நாட்டுப் போர் வெடிக்கும் என்று கூறியவர்களும் உண்டு. அத்தகைய சக்திகளின் மிச்ச சொச்சங்களால் இப்போது மக்கள் தொகை கணக்கெடுப்பில், சாதி வாரி புள்ளி விவரத்தை எடுக்கவிடாமல் தடுக்க வைக்க முடியலாம். ஆனால் அதுவே இந்தியாவின் எதிர்காலமாக இருக்காது.
மண்டல் 11 விதமான அடையாளங்களை கூறியுள்ளார். சமூக ரீதியில் பின்தங்கிய சாதிகள். தங்கள் வாழ்க்கைக்காக உடல் உழைப்பை சார்ந்து நிற்கும் சாதிகள். 17 வயதிற்குள் திருமணமான பெண்கள் எண்ணிக்கை 25% என்று கிராமங்களிலும், 10% என்று நகரங்களிலும் இருந்தால், இடஒதுக்கீடு. 17 வயதிற்கு முன்னால் திருமணமான ஆண்கள் 10% கிராமத்திலும், 5% நகரத்திலும் இருந்தால் ஒதுக்கீடு. மாநில சராசரியை விட 25% அதிகமாக பணியில் ஈடுபடும் பெண்கள் இருந்தால் ஒதுக்கீடு. மாநில சராசரியை விட 25% பள்ளிக்கு செல்லாத 5 முதல் 15 வயதுள்ள குழந்தை கள். அதே போல பொருளாதார மதிப்பீட்டை யும் மண்டல் கூறுகிறார். மாநில சராசரியை விட 25% குறைவாக உள்ள குடும்பங்களின் சொத்துக்கள் மதிப்பீடு எடுத்துக் கொள்ளப்படவேண்டும் என்கிறார். 50% குடும்பங்கள் அரைகிலோ மீட்டருக்கு மேல் சென்று குடிதண்ணீர் பெற வேண்டும் என்றால் அவர்களுக்கும் ஒதுக்கீடு என்கிறார். மாநில சராசரிக்கு மேல் 25% நுகர்வு கடன் வாங்கும் குடும்பங்கள் சேர்க்கப்பட வேண்டும் என்கிறார். இப்படியாக சமூக, கல்வி, பொருளாதார நிலைகளையும் ஆய்வு செய்து, பிற்படுத்தப்பட்ட சமூகங்களை மண்டல் முன்வைக்கிறார்.
இத்தகைய விரிவான ஆய்வை அமுலாக்கி வரும் இந்தியாவில், எந்த ஒரு முறையான அளவு கோலையும் எடுத்துக் கொள்ளாமல் மக்கள் தொகை கணக்கீடு செய்து என்ன பயன்? நிலச்சீர்த்திருத்தங்களையும் மண்டல் முன்வைக்கிறார். அதுபோல சாதிவாரி புள்ளி விவரம் இணைக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு மட்டுமே, இன்றைய இந்தியாவின் வறுமை சூழலை, மாற்றுவதற் கான திட்டத்தை முன்வைக்க ஆள்வோருக்கு உதவப் போகிறது. அத்தகைய அக்கறை ஆட்சியாளர்களுக்கு இல்லையா? என்ற கேள்வி எழுகிறது.

Wednesday, May 5, 2010

கேரள அரசின் பேய் பங்களா?

கேரளாவில் நடந்துவரும் ஆட்சி வித்தியாசமான செய்திகளை அன்றாடம் நமக்கு தந்து வருகிறது. கர்நாடக அரசுதான் தனது அமைச்சர் ஒருவரை பாலியல் குற்றங்களுக்காக பதவியிறக்கம் செய்தது என்றால், அதை ஒட்டி அவர்மீது வழக்கு போட்டது என்றால், அதனாலேயே அவர் தலைமறைவாகப் போய்விட்டார் என்றால், தமிழ்நாடு அரசு எந்த சிக்கல் எந்த அமைச்சருக்கு வந்தாலும், தலைசிறந்த ஒரு அரசியல் மேதையை முதல்வராகக் கொண்டிருப்பதால் தப்பித்து விடும் என்றால், கேரளா அரசு அப்படிப்பட்ட நிலை இன்றி, மாட்டிக்கிட்டு முழிக்குதே என்று என்ன வேண்டியிருக்கிறது.
ஏன் என்றால் அங்கு முதல்வருக்கும், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளருக் கும் மத்தியில் உள்ள தகராறுதான் அனைவருக்கும் உடனடியாக நினைவுக்கு வரும். அதாவது வி.எஸ்.அச்சுதானந்தத் திற்கும், பினராய் விஜயனுக்கும் இருக்கின்ற முரண்பாடுதான் எல்லோர் நினைவிற்கும் வரும். ஆனால் இப்போது வந்திருப்பது இடதுசாரிக் கூட்டணிக்கும் காங்கிரசிற்கும் மத்தியில் உள்ள பிரச்சனை, சமீபத்தில் இடதுசாரி கூட்டணியில் ஒரு கட்சியாக இருபது ஆண்டுகளாக இருந்துவரும் கேரளா காங்கிரசு ஜோசப் கட்சிக்கும் உள்ள பிரச்ச னையாக இது இப்போது எழுந்துள்ளது.
பி.ஜே.ஜோசப் என்ற அந்த பொதுப் பணித்துறை அமைச்சர் இப்போது இடது கூட்டணிக்கு தலைவலி கொடுத்து வெளியே வந்து விட்டார். இவரது கட்சிக்கு நாலு சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அந்தக்கட்சியின் தலைவரான பி.ஜே.ஜோசப், பொதுப்பணித்துறை அமைச்சராக இருபது ஆண்டுகள் இருந்தது மாத்திரமின்றி, இடது சாரி கூட்டணிக்கு தொடர்ந்து தோழமையாக இருப்பவர். இவர் கடந்த சில வாரங்களாக இடது கூட்டணியை விட்டு வெளியே வரும் நோக்கத்தில், காங்கிரஸ் கட்சியின் துணையோடு செயல்பட்டு வருகிறார். இப்போது முழுமையாக இடது கூட்டணியை விட்டு வெளியே வந்துவிட்டார். அத்தோடு நில்லாமல் தன்னோடு சேர்த்து மூன்று சட்டமன்ற உறுப்பினர்களையும் வெளியே கொண்டுவந்து விட்டார். இவரது கட்சியைச்சேர்ந்த ஒரு சட்டமன்ற உறுப்பினரை பிடித்து வைத்துக்கொண்டு அவரை அமைச்சராக ஆக்கிவிட்டது மார்க்சிஸ்ட் கட்சி. இப்போது கட்சி தாவல் தடைச்சட்டப்படி அந்த மீதமிருக்கும் உறுப்பினர் பதவி இழப்பார் என்பது வெளியே வந்தவர்களின் குற்றச்சாட்டு. அதேசமயம் அங்கே இருக்கும் சட்டமன்றத்தில் மொத்தம் நூற்று முப்பத்தி நாலு உறுப்பினர்கள் உண்டு. அவர்களில் இடது கூட்டணி முதலில் நூற்று இரண்டு பேருடன் இருந்தது. இருபத்தி ஆறு பேர் முஸ்லிம் லீகில் மட்டும் சட்ட மன்ற உறுப்பினர்களாக இருக்கின்றனர்.
இப்போது மார்க்சிஸ்ட்களுடன், சி.பி.ஐ.யும், புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியும் மட்டும் தான் அவர்களது கூட்டணியில் உள்ளனர், இதற்கு இடையில் காங்கிரஸ் மோனி கோஷ்டி என்ற ஒருகட்சி இருக்கிறது. இவர்களுக்கு பதினெட்டு சட்டமன்ற உறுப்பினர்கள் வரை இருக்கிறார்கள். மோனி கோஷ்டியும், ஜோசப் கோஷ்டியும், கிருத்துவர்களின் ஓட்டுக்களை முழுமையாக வாங்கிவிடுகிறார்கள். முற்போக்கு கேரளாவில் கிருத்துவர் ஒட்டு கிருத்துவர் கட்சிக்குத்தானா எனக்கேட்டு விடாதீர்கள். தமிழ்நாட்டிலோ, வேறு எந்த மாநிலத்திலோ நீங்கள் பார்க்காத ஒரு செய்தியை கேரளாவில் காணலாம். அதாவது கிருத்துவர் வாக்கு கிருத்துவர் கட்சிக்கு என்ற உண்மையைப் பார்கலாம். கிருத்துவர்களில் இந்தியாவில் உள்ள அனைத்து சாதிகளும் இருந்தாலும் கூட, இந்த நிலைமை தொடர்கிறது. அதனால் தான் ஆதிவாசி மக்களுடைய நிலங்களை எல்லாம், கிருத்துவ பணக்காரர்கள் கைப்பற்றியிருந்த போது, அவற்றை ஆதிவாசிகளுக்கு எடுத்து கொடுப்பதற்கு பதில், ஆக்கிரமிப்பவர்களுக்கே சொந்தமாகும் சட்டத்தை மார்க்சிஸ்ட்டுகளே, கொண்டு வந்தார்கள். எத்தனை முறை குடியரசு துணைத்தலைவராக இருக்கும் போதும், பிறகு குடியரசுதலைவராக ஆனபோதும் கே.ஆர்.நாராயணனால் எவ்வளவு முயன்றும் தடுக்க முடியாத ஒரு சட்டமாக அது ஆகிவிட்டது. இந்த அளவு அங்கே பணம் படித்த கிருத்துவர்கள் அதிகாரம் இருக்கிறது. அது கட்சியிலும் செல்வாக்கு செலுத்தாமல் இருக்குமா?
வெளியே வந்திருக்கும் ஜோசப் கும்பலை காங்கிரஸ் ஒழுங்காக ஏற்றுக்கொள்ளுமா? அதுவும் பிரச்சனைதான். ஏன் என்றால் ஏற்கனவே காங்கிரசு கட்சியை நம்பி தேசியவாத காங்கிரசு கட்சியிலிருந்து வெளியே வந்த பிரபல முன்னாள் காங்கிரசுக் கட்சி தலைவர் கருணாகரனின் மகன் முரளீதரனை, ஒரு உறுப்பினராகக்கூட சேர்ப்பதற்கு காங்கிரசுக்கட்சி தயாராயில்லை. இது உம்மண்சாண்டி பாணி. இந்த சூழ்நிலையில் இப்போது பிரபலமாக இருக்கும் பேச்சு வேடிக்கையானது. திருவனந்தபுரத்தில் அமைச்சர்கள் தங்கும் அரசு பங்களா ஒன்று இருக்கிறது. அதற்கு மன்மோகன் பங்களா என்று பெயர். அந்த பங்களா இப்போது பேய் பங்களா என அழைக்கப்படுகிறது.
ஏன் என்றால் அதில் தங்கிய எல்லா அமைச்சர்களும் பதவி காலி ஆகி இருக்கி றார்கள். இது வரலாற்று நிகழ்வாக இருக் கிறது. இருபது ஆண்டுகளுக்கு முன்பு காங் கிரசு கட்சியின் பெரும் தலைவரான கருணாகரன் முதலமைச்சராக இருக்கும் போது அந்த பங்களாவில் தங்கியிருந்தார். பாமாயில் ஊழலில் அப்போது சிக்கினார். உடனடியாக பதவி இழந்தார். அதே போல அந்த பங்களாவையும் காலி செய்தார். அதற்குப் பிறகு காங்கிரசு கட்சியின் போக்குவரத்து அமைச்சராக பாலகிருஷ்ணன் பிள்ளை இருந்தார். இதே மன்மோகன் பங்களாவில் தங்கி இருந்தார். வருவாய் துறை வரி ஏய்ப்பில் மாட்டிக்கொண்டார். பதவி இழந்தார். அந்த பங்களாவை காலி செய்தார். அடுத்து இடதுகளின் ஆட்சியில், அதாவது இப்போதுள்ள அச்சுதானந்தனின் ஆட்சியில், உள்துறை அமைச்சராக கொடியேறி பாலகிருஷ்ணன் இருந்தார். அவர் பினராய் விஜயனின் ஆள். அந்த பங்களாவை சீர்செய்வதற்காக என்று 59 லட்சரூபாயை செலவு செய்தார். முதல்வர் அச்சுதானந்தத்தால் கடுமையாக கண்டிக்கப் பட்டு, ஆட்சி வந்த ஒரு மாதத்திலேயே நான்கு ஆண்டுகள் முன்பு காலி செய்யப் பட்டார். அதன்பிறகு இந்த பொதுப் பணித்துறை அமைச்சர் பி.ஜே.ஜோசப் அந்த பங்களாவில் குடியேறினார். ஒரு வருடம் முன்பு சென்னையிலிருந்து விமானத்தில் வரும்போது ஒரு பெண்ணிடம் சில்மிஷம் செய்ததற்காக பதவி இழந்தார். அதற்குப்பதில் அவரது கட்சியைச்சேர்ந்த பி.ஜே. குருவில்லாவை பொதுப்பணித்துறை அமைச்சராக ஆக்கினார்கள். அவர் புறம்போக்கு நிலத்தை பட்டா போட்டு தருவதாக சொல்லி 3 கோடி ரூபாயை வாங்கி பட்டாவும் கொடுக்கவில்லை என்று குற்றஞ்சாட்டப்பட்டு, பதவி இழந்தார். அதன்பிறகு கேரளா காங்கிரசுவின் இன்னொரு அமைச்சர் பதவி எடுத்தார். அதற்குள் அந்த கட்சியின் தலைவர் பி.ஜே.ஜோசப் வழக்கு முடிந்து விடுதலை யாகி மீண்டும் பதவிக்கு வந்துவிட்டார். அதனால் அந்த அமைச்சர் பதவியை, கட்சி தலைவரே எடுத்துக்கொண்டு, அந்த பங்களா வாசத்தையும் வாங்கிக்கொண்டார். இப்போது பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த பி.ஜே.ஜோசப் தனது பதவியையும் இழந்து அதை ஒட்டி பங்களாவையும் இழந்து உள்ளார். ஆகவே அந்த மன்மோகன் பங்களா அவ்வளவு பிரபலமாக ஆகி விட் டது. மன்மோகன் பெயரில் இருப்பதினாலா? சரி.
எப்படியோ முற்போக்கு பேசும் கேரளாவில் இப்படி ஒரு மூடநம்பிக்கை இப்போது பேசப்படுகிறது. ஏற்கனவே இடதுசாரி கட்சியில் இருந்து கொண்டே ஐயப்பன் தரிசனம் போகிறவர்கள்தானே என்று நீங்கள் நினைக்கலாம். அது நமக்குத்தெரியாது. இப்போது வெளியே வந்துள்ள பி.ஜே.ஜோசப் மீது பெரிய குற்றத்தை முதல்வர் போட்டுவிட்டார். பொதுப்பணித் துறையில் உள்ள வீட்டு வசதி வாரியத்தில் 300 வீடுகளை, மோசடி செய்துவிட்டார் என்ற குற்றச்சாட்டில் அத்தனை வீடுகளையும் ரத்து செய்து விட்டார். அதுவே வழக்காக மாறும். ஜோசப் உள்ளே போக வேண்டி வரும். அடுத்து இருபத்திஎட்டு கோடி ரூபாயை வாய்வழி மூலமே, சாலை போட பொதுப்பணித்துறை யில் ஒதுக்கியதாக ஒரு குற்றச்சாட்டு. இந்த இரண்டு குற்றச்சாட்டுகளிலும் ஜோசப் தப்ப முடியாது. காங்கிரசு கட்சிக்கு சென்றாலும் எடுபடாது. அடுத்த தேர்தலில் நிற்க முடியாது. இது எப்படி இருக்கு? இதுதான் கேரளா அரசியல். இக்கரைக்கு அக்கரை பச்சைதான்.

Thursday, April 29, 2010

கொலையுண்ட தமிழ் ஊடகத்தார் சிவராமின் 6வது நினைவு ஆண்டு

இலங்கைத் தீவில் சிறுபான்மை இனமான தமிழர்களுக்கு எதிராக, ஒரு இனவாதப் போர் நடத்தப்பட்டு, இன அழிப்பு நடந்தேறியது என்பது உலக மக்களுக்கு இப்போது தெரியும். அதிலும் போர்க் குற்றங்களை நடத்தித்தான் மகிந்தாவின் அரசாங்கம், தனது போர் வெறியை, போர் வெற்றியாக சித்தரித்துக் கொண்டுள்ளது என்பதும் உலகம் முழுவதும் உள்ள மனித உரிமை ஆர்வலர் களுக்குப் புரியும். அதே சமயம் களத்தில் போர் புரிய இறங்கிய போராளிகள், தங்கள் உயிரை துச்சமென மதித்து இறங்குவதால், அவர்களது வீரச்சாவுகள் வரலாறுகளாக பதிந்து விடுகின்றன. ஆனால் தங்கள் தொழிலை ஊடகவியலாளராக தொடங்கி யவர்கள் யாரும், அல்லது தொடர்ந் தவர்கள் யாரும் முதலில் எதிர்பார்ப்பது சரியான அங்கீகாரமும், சுதந்திரமும்தான். உலகம் முழுவதும் கருத்துச் சுதந்திரம் என்பது பெரிதாக மதிக்கப்படுகிறது. அப்படிப்பட்ட கருத்துச் சுதந்திரத்தை அன்றாடம் சுவாசிக்கப் பிறந்தவர்கள், ஊடகவியலாளர்கள். அப்படி ஒரு ஊடக வியலாள ராகத்தான் சிவராம் தர்மரத்னமும் இருந்தார். 2005ம் ஆண்டு ஏப்ரல் 28ம் நாள் சிவராம், சாலையில் சென்று கொண்டிருக்கும் போது, ஒரு கும்பலால் வாகனத்தில் கடத்தப்பட்டார். மறுநாள் அதிகாலையில் சிவராமின் உயிரற்ற சட லம் இலங்கை நாடாளுமன்ற கட்டிடத் திற்கு அருகேயே அடையாளம் காணப் பட்டது. இது உலகின் பல மூலைகளில் உள்ள பல்வேறு ஊடகவியலாளர்களை அதிர்ச்சிக் குள்ளாக்கியது. பிரபல மற்றும் முக்கிய மூத்த ஊடகவியலாளர்கள் அனைவரும் சிவராமை ஏதாவது ஒரு விதத்தில் தெரிந்து வைத்திருந்தனர். சிவராம் மிகவும் அறிமுகமான, தைரி யமான ஒரு அரசியல் ஆய்வாளர். அவரது எழுத்தின் மூலமே, தமிழ்நெட் என்ற இணைய தள ஆங்கில ஏட்டிற்கு மூத்த ஆசிரியராக பணியாற்றி வந்தார். 1959ம் ஆண்டு மட்டக்கிளப்பு மாவட்டத்தில் ஆகஸ்ட் 11ம் தேதி பிறந்த வர். அக்கரைப் பட்டு அருகே ஒரு நிலவு டமை யாளர் குடும்பத்தில் பிறந்தவர். மட்டக் கிளப்பிலும், பின்னர் கொழும்பிலும் கல்லூரி வாழ்க்கை யை பயணித்தவர். 1982ம் ஆண்டு பெரடேனியா பல்கலைக் கழகத்தில் படித்த போது, முதல்கட்ட இலங்கை உள்நாட்டுப் போர் காரணமாக வெளியேற்றப் பட்டவர். அதையொட்டி முகுந்தன் என்ற உமா மகேஸ்வரன் தலைமையில் இருந்த தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் என்ற பிளாட் அமைப்பின் முன்னணி அமைப்பாக இருந்த காந்தீயம் என்ற வடிவில் தன்னை இணைத்துக் கொண்டார். 1983ம் ஆண்டு இலங்கையின் உள்நாட்டுப் போர் ஒரு இனமோதலாக உருவான பிற்பாடு, சிவராம் பிளாட் போராளியாக மாறினார். அந்த அமைப்பின் ராணுவத்திலும், அரசியல் பிரிவிலும் சிவராம் ஒரு முக்கிய பங்காற்றினார். 1987ல் இந்திய இலங்கை ஒப்பந்தம் உருவான பிற்பாடு, இந்திய அமைதிப்படை இலங்கை சென்று இறங்கிய தற்குப் பிறகு, பிளாட் தலைவர் உமாமகேஸ் வரன் ஒரு வெகுமக்கள் அரசியல் முன்னணியை உருவாக்கினார். அந்த அரசியல் முன்னணிக்கு, ஜன நாயக மக்கள் விடுதலை முன்னணி என்று பெயர். டி.பி.எல்.எப். என்று அழைக்கப்பட்ட அந்த முன்னணிக்கு, பொதுச் செயலாளராக சிவராமை, உமா மகேஸ்வரன் நியமித்தார். அதுவே ஒரு பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாக இயங்கத் தொடங்கியது. காந்தியம் அமைப்பில் இருந்த மார்க்சி யவாதி சந்ததியார் பிளாட் அமைப்பால் கொல்லப்பட்ட பிறகு, அதை நிறுவிய டேவிட் அய்யா பிளாட் அமைப்பால் ஓரங் கட்டப்பட்ட பிறகு, பிளாட் அமைப்பின் படையணிக்கு தலைமை வகித்த கண்ணன் என்ற ஜோதிஸ்வரனும், சுபாஷ் என்ற பவானந்தனும், மட்டக்கிளப்பிலேயே விடுதலைப் புலிகளால் சுட்டுக் கொல்லப் பட்டப் பிறகு, உமாமகேஸ்வரனுடன் தொடர்ந்து சிவராம் இயங்கி வந்தார்.இந்தியஇலங்கை ஒப்பந்தத்தை, புலி கள் அமைப்பின் மீது திணித்து, இந்திய அமைதிப்படையிடம் புலிகள் அமைப்பை அடையாளமாக ஆயுதங்களை ஒப் படைக்க இந்தியா வற்புறுத்திய பிறகு, பிளாட் தலைவர் உமாமகேஸ்வரன் அதை எதிர்த்து நின்றார். அப்போது உடன் இருந்தவர் சிவராம். இந்தியாவின் விரிவாக்க மனப்பான்மையை எதிர்த்து, தென்னிலங்கை யின் ஜே.வி.பி.யுடன் தொடர்பு கொண்டு செயல்பட, முகுந்தன் முயன்ற போது சிவராம் அதை எதிர்த்தார். அதே போல வீரசாகசமாக மாலத்தீவை கைப்பற்ற முனைந்து, முகுந்தன் தோற்ற போது, சிவராம் அதையும் எதிர்த்தார். 1989ம் ஆண்டு மேற்கண்ட காரணங் களால், சிவராம் பிளாட் அமைப்பை விட்டு வெளியேறினார். தன் சொந்த ஊரான மட்டக்கிளப்பிலேயே 1988ல் திருமணம் செய்த சிவராம், வைஷ்ணவி, வைதேகி என்ற பெண்களுக்கும், சேரலாதன் என்ற மகனுக்கும் தந்தையானார். டி.பி.எல்.எப்.பில் இருக்கும் போதே, சிவராமின் திறமையால், அரசியல் ஆய்வாளராக ஐ.நா.நிதியில் இயங்கும் இண்டர் பிரஸ் சர்வீஸில் எழுதத் தொடங்கினார். அதே போல ஐலண்ட் என்ற ஆங்கில இதழிலும் தராக்கி என்ற புனைப் பெயரில் எழுதத் தொடங்கினார். தாரக்கியின் கட்டுரைகள் பிரபலமடைந்தன. சரியான புள்ளி விவரங்கள், உள்விவ காரங்கள், ராணுவ, அரசியல், யுத்த தந்திர விவரங்கள், இலங்கையின் இனவாத மோதலில் இரு தரப்பிலும் இருக்கின்ற செயல் தந்திர மதிப்பீடுகள் ஆகியவை சிவராமின் எழுத்துக்கள் மூலம் உயிர் பெற்றன. ராணுவ அறிவியலில் அவரு டைய பரந்த படிப்பும், மார்க்சிஸம் என்ற அரசியல் சிந்தாந்த அறிவும், அவருக்கு சிறந்த கட்டுரைகளை எழுத உதவியது. அதன் மூலம் அவரது எழுத்துக்கள் மிக வும் பிரபலமடைந்தன. ஊடகவியலாளராகவும், நடிகராகவும் இருந்த ரிச்சர்டு டி சொய்சா என்ற நண்பர்தான் சிவராமனை ஊடகத்து றைக்கு இழுத்தவர். அந்த டி சொய்சா 1990ம் ஆண்டில் அவரது வீட்டிலி ருந்து கடத்தப்பட்டு, படுகொலை செய்யப் பட்டபோது, அந்த உடலை அடையாளம் காட்டியவர் சிவராம். தராக்கி என்ற பெய ரில் சிவராம் எழுதிய கட்டுரைகள் 1990ன் தொடக்க காலங்களில் பிரபலமாகி, கட் டாயமாக படிக்கக் கூடிய ஒரு பத்தியாக மாறிவிட்டது. அதை பிரான்சில் உள்ள தமிழ் சமூகம் தொகுப்பு புத்தகமாக வெளியிட்டது. ஐலண்ட், சன்டே டைம்ஸ், லண்டன் தமிழ் டைம்ஸ், டெய்லி மிரர், வீரகேசரி ஆகிய ஊடகங்களுக்கு, சிவராம் எழுதி வந்தார். 1997ல் தமிழ்நெட் டாட் காம் என்ற இணைய தள ஏட்டுக்கு ஒரு செய்தித் தாளாக புதிய முகவரி தந்தவர் சிவராம். அவர் கடத்தப்பட்ட நாளில், இரவு 7.30 மணிக்கு தமிழ் நெட் இணைய தளத்திற்கு தனது கட்டுரையை எழுதி அனுப்பி விட்டு வந்திருக்கிறார். இதழியலுக்கு மட்டுமின்றி, தமிழ் அரசியலுக்கும், இலக்கியத்திற்கும், அவர் பல்வேறு பங்களிப்புகளைச் செய்துள்ளார். இலங்கையின் சிக்கலான வரலாறு அவரது முக்கியத்துவத்தை உயர்த்தி விட்டது. அவர் வரலாற்று ஆசிரியர்களுடன், அரசியல் அறிவியலாளர்களுடன், மானூடயியலாளர் களுடன், கொள்கை நிபுணர்களுடன் இலங்கைப் பல்கலைக் கழகங்களில் பூகோளயியலாளர்களுடன் என பல்வேறு மட்டங்களில் விவாதம் செய்து வந்தார். மட்டக்கிளப்பு பூர்வ சரித் திரத்திற்கு ஒரு உயர்தர முன்னுரையை, 2005ம் ஆண்டு ஏப்ரலிலேயே எழுதிக் கொடுத்தார். 90களின் மத்தியில் பல அரசாங்க மற்றும் மனித உரிமை அமைப்புகள் அவரிடம் ஆலோசனைகள் கேட்டதுண்டு. ஐரோப்பா, ஆசியா, வடஅமெரிக்கா ஆகிய நாடுகளில் பயணம் செய்து மனித உரிமை ஆர்வலர்களுடன் ஊடாடல் செய் துள்ளார். அவருடைய எழுத்துக்கள் மூலமாக தொடர்ந்து ராணுவ சக்திகளிடமிருந்து மிரட்டல்கள் வந்து கொண்டிருந்தன. ஆனா லும் கொழும்பை விட்டு வெளியேற மறுத்தார். 2004ல் காவல்துறை அவரது இல்லத்தை இரண்டு முறை சோத னையிட்டது. பல ஆயுதக்குழுக்கள் அவருக்கு மிரட்டல் விடுத்தன. போராடும் விடுதலைப்புலி அமைப்பிற்கு பயன்படும் வகையில், அரசாங்கத்தின் இனவாத, இன அழிப்பு போர்த்தந்திரங்களை அம்பலப்படுத்திய ஒரு தமிழ் எழுத்தாளர் இதே நாளில் 5 ஆண்டுகளக்கு முன்னால் கொலை செய்யப்பட்டுள்ளார். அவர் கடத்தப்பட்ட உடனேயே கிடைத்த செய்தியையொட்டி, தமிழ்நாட்டில் உள்ள அவரது ஊடக நண்பர்கள் டெல்லிக்கு தொடர்பு கொண்டு, பிரதமர் மன்மோகன் மூலம் நிர்ப்பந்தம் கொடுத்து அவர் உயிரைக் காப்பாற்ற முயன்றனர். ஆனால் அதற்குள் அவரது உயிரற்ற உடல் கண்டுபிடிக்கப்பட்டது என்ற செய்தி, மறுநாள் அதிகாலை இணையதளத்தில் வெளியானதைப் பார்த்து, உறைந்து போயினர். இதுவே இலங்கையின் ஊடகச் சுதந்திரத்திற்கு எடுத்துக் காட்டு.

Wednesday, April 28, 2010

சார்க் மாநாடு பசுமையையும், மகிழ்ச்சியையும் தருமா?

இன்று பூடான் நாட்டின் தலைநகரான திம்புவில் சார்க் நாடுகளின் உச்சி மாநாடு தொடங்குகிறது. இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது. தெற்காசிய நாடுகளின் பிராந்திய ஒத்துழைப்பு என்பது தான் சார்க் என அழைக்கப்படுகிறது. 8 நாடுகள் இந்த கூட்டமைப்பில் இருக்கின்றன. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காள தேசம், ஆப்கானிஸ்தான், நேபாளம், மாலத்தீவு, பூடான் ஆகிய நாடுகள் சார்க் கூட்டமைப்பு உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இவர்களுக்கு ஒத்துழைப்பதற்காக என்ற பெயரில் பார்வையாளர் நாடுகளாக ஆறு நாடுகள் இருக்கின்றன. அவை அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், ஜப்பான், ஆஸ்திரேலியா, தென்கொரியா, பர்மா ஆகியவை. இப்போது இருக்கும் 8 நாடுகளும் அநேகமாக இந்திய அரசின் செல்வாக்குக்கு உட்பட்டு இருப்பதாக ஒரு கருத்து இருக்கிறது. நாடுகள் என்று கூறும்போது, அந்தந்த நாட்டு அரசுகள் தான் சார்க் கூட்டமைப்பில் உறுப்பினர்களாக உள்ளார்கள். அதனால் அரசுகளின் மனப்பான்மைகளும், சிந்தனைப் போக்குகளும் இந்த கூட்டமைப்பில் இடம் பெறும் என்பதில் சந்தேகமில்லை. இந்த முறை திம்புவில் நடக்கும் 16வது சார்க் உச்சிமாநாட்டில் புதிய உறுப்பினர்களாக சீனாவையும், ஈராக்கையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்ற கருத்தை பாகிஸ்தான் ஏற்கனவே முன்வைத்தது. ஆனால் இந்திய அரசு அந்தப் பிரச்சினையை தந்திரமாக கையாண்டு தள்ளி வைத்து விட்டது. அதாவது கடந்த கால சார்க் கூட்டங்களில் நிறைவேற்றப்பட்ட ஒப்பந்தங்களை அமுல்படுத்துவதற்கு முதன்மை கொடுக்க வேண்டும் என்ற கருத்தை இந்திய அரசு முன்வைத்து, அதை மற்ற நாடுகளும் ஏற்றுக் கொண்டு விட்டன. 3 ஆண்டுகளுக்கு முன்னால் சார்க் கூட்டத்தில் ஆப்கானிஸ்தானை இணைப்பதற்கு இந்தியா வைத்த முன்வைப்பு, ஏற்றுக் கொள்ளப்பட்டது. 2012ம் ஆண்டில் பார்வையாளர் தகுதிக்கு பர்மா, ஈராக் மற்றும் சீனாவை சார்க் ஏற்றுக் கொள்ள இருக்கிறது. பூடான் நாட்டின் 25 ஆண்டு ஓட்டத்தில் முதன் முறையக பிராந்திய கூட்டமைப்பை கூட்டும் பெருமையைப் பெறுகிறது. அதனால் திம்புவில் ஏற்பாடுகள் தீவிரமாக நடக்கின்றன. இந்த மகத்தான உச்சி மாநாட்டிற்கு வருகின்ற விருந்தாளிகளை வரவேற்க பரோவிலிருந்து, திம்புவிற்கு மற்றும் புயன்ட்ஷோலிங்கிலிருந்து திம்புவிற்கு வருகின்ற நெடுஞ்சாலையில், பெரிய வாயிற்கதவுகள் நிறுவப்பட்டுள்ளன. பூடான் அரசுக்கு வருக என்பதாக எழுதப்பட்டுள்ளன. பூடானில் இப்போதும் மன்னராட்சிதான் நடந்து வருகிறது. திம்பு நகரை சுத்தமாக்கும் திட்டத்தில், ஏழ்மையானவர்கள் அகற்றப்பட்டு விட்டார்கள். நடைமேடைகள் சீர் செய்யப்பட்டுள்ளன. கழிப்பிடங்கள் சுத்தமாக்கப்பட்டுள்ளன. உச்சிமாநாட்டின் முழக்கத்திற்குஒப்ப நகரை பசுமையாக மாற்ற , சில இடங்களில் தோட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. சுவர் ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. ஏப்ரல் 19ம் நாள் தொடங்கிய பருவநிலை மாற்றம் பற்றிய தேசிய கலைப் போட்டி ஏப்ரல் 28ம் நாள் வரை நடைபெறுகிறது. பூடான் அரசப்படை 8 நாடுகளின் தேசிய கீதத்தையும் பாட பயிற்சி பெற்று விட்டார்கள். சார்க் விருந்தினர்கள் தங்குவதற்காக சுற்றுலாவாசிகள் அறைகளிலிருந்து காலி செய்யப்பட்டு விட்டனர். சார்க் நாடுகளின் அரசாங்கங்கள், மக்களுக்கு நன்மை செய்யவில்லை என்ற கருத்தை எதிரொலித்து, மாற்று கருத்தை முன்வைக்கும் மக்கள் சார்க் என்ற அரசுசாரா நிறுவனங்களின் கூட்டத்தை பூடானில் கூட்டுவதற்கு அரசு அனுமதிக்கவில்லை. அதனால் அந்த மக்கள் சார்க் சில நாட்கள் முன்பு டெல்லியில் கூடியது. அதில் மனித உரிமைகளுக்கும், ஊடக உரிமைக்கும் சார்க் அரசுகள் செய்து வரும் அடக்கு முறைகளை எதிர்த்தன. பூடான் நாட்டு அகதிகள் வெளிநாடுகளில் வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் பிரச்சினையை எழுப்பி விடக்கூடாது என்பது மக்கள் சார்க் நடத்துவதை பூடான் அரசு எதிர்ப்பதற்கான முக்கிய காரணமாக தெரிகிறது. சார்க் கூட்டம் பல உள்நாட்டு விவகாரங்களை விவாதிக்காமல், தப்பிப்பது உண்டு. 20 ஆண்டுகளுக்கு முன்னால் பூடான் நாட்டில் கருத்துரிமை கேட்டவர்கள் வெளியேற்றப்பட்டனர். பூடான் அரச வம்சம் ஒரு குறிப்பிட்ட பழங்குடி இனக்குழுவைச் சேர்ந்தது. வேறு இனக்குழுவை சேர்ந்த மக்கள், வெவ்வேறு பண்பாடுகளை பின்பற்றினார்கள். அரச குடும்பத்தைப் போன்ற உடைகளை அணிவதும், பழக்கவழக்கங்களை மேற்கொள்ளுவதும், மற்ற இனக்குழுக்கள் மீது திணிக்கப்பட்டன. அதனாலேயே அந்த நாட்டை விட்டு அவர்கள் வெளியேறி னார்கள். ஒரு லட்சத்து 8,000 பூடான் அகதிகள், கிழக்கு நேபாளத்தில் ஐ.நா.அகதிகளுக்கான உயர் ஆணையத்தின் கண்காணிப்பில், மூடப்பட்ட முகாம்களில் வாழ்கின்றனர். அங்கேயே 10,000 பூடான் அதிகாரிகள் வெளியே வாழ்கின்றனர். நேபாளம் தான் பூடான் அகதிகளில் அதிகமானவர்களை தாங்கிக் கொண்டிருக்கிறது. 6வது பூடான் அரசாட்சியில் இருக்கும் மக்கள் தொகையில், 6ல் ஒரு பங்கு அகதிகளாக வெளியில் இருக்கின்றனர். புத்தமதத்தை தழுவாது இருக்கும் நபர்கள் அகதிகளாகஆக்கப் பட்டுள்ளனர். அகதிகளில் இளைஞர்கள் மேற்கத்திய நாடுகளுக்கு சென்று விடுகின்றனர். நேபாளத்திலிருக்கும் பூடான் அகதிகளில் 30 விழுக்காடு, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, டென்மார்க், நார்வே ஆகிய நாடுகளில் புதிய வாழ்க்கையை தொடங்கிவிட்டார்கள். அகதிகளின் தலைவர்கள் நடைபெறும் சார்க் மாநாட்டில், தங்கள் மீள் குடியேற்றம் பற்றி பேசவேண்டும் என வற்புறுத்துகின்றனர். சார்க்கின் 8 நாட்டு அரசுகளுக்கும் அதுபற்றி மனு எழுதியுள்ளனர். பூடான் சிறையில் தங்களுக்கு ஏற்பட்ட சித்திரவதைகளை விவரித்துள்ளனர். மரியாதையுடன் தாங்கள் நடத்தப்படவேண்டும் என்றும், 1990ம் ஆண்டிலிருந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்யவேண்டும் என்றும், மக்கள் தொகையில் வாக்களிக்க மறுக்கப்படும் 14 விழுக்காடு வாக்காளர்களுக்கு, வாக்குரிமை வேண்டும் என்றும் அவர்கள் எழுதியுள்ளனர். இந்தியாவிலும் பூடான் அகதிகள் 25,000 பேர் இருக்கிறார்கள். உலகம் எங்கும் 30,000 அகதிகள் சிதறி வாழுகிறார்கள். நேபாளமும், பூடானும் அகதிகளின் மீள் குடியேற்றம் பற்றி 15 மேசைப் பேச்சுகள் நடத்திவிட்டன. நேபாள தலைமை அமைச்சர் மாதவ்குமார் நேபாள், சார்க் மாநாட்டில் அகதிகளை திருப்பி எடுத்துக் கொள்ளுதல் சம்பந்தமாக பேச வேண்டும் என கூறியுள்ளார். இந்தியா இதில் தலையிடாமல் பூடான் அகதிகள் நாட்டிற்கு திரும்ப வழியில்லை என்றும், பூடான் அகதிகளின் தலைவர் பலராம் பௌதைல் கூறினார். இவர் பூடானில் ஜனநாயகத்திற்கான தேசிய முன்னணி என்ற எதிர்கட்சி தலைவர். இந்திய அரசே இது இரு நாடுகளுக்கும் மத்தியில் உள்ள பிரச்சினை என்பதாக தட்டிக் கழிக்கிறது. இலங்கை அரசத்தலைவர் மகிந்தா, இந்திய பிரதமர் மன்மோகனை சார்க் மாநாட்டில் சந்திக்கிறார். போருக்குப் பிறகு இலங்கையின் பொருளாதார வளர்ச்சி பற்றி பேச இருக்கிறார். பசுமையுடன் கூடிய, மகிழ்ச்சியான தெற்காசியா என்பது மாநாட்டின் முழக்கம். வேண்டுமானால் அரசுகள் அந்தப் பெயரில் உள்ள பல ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு, தங்களை வர்த்தகத்தை பெருக்கிக் கொள்வார்கள். அது எந்த வகையிலும் எந்த நாட்டு மக்களுக்கும் பயனுள்ளதாக இருக்காது. பேரழிவுகளுக்கு எதிரான பொது திட்டத்தை வகுப்பதிலும், பிராந்திய உள் தொடர்புகளை வளர்ப்பதற்கான ஒப்பந்தங் களும் ஏற்படலாம். சார்க் பல்கலைக்கழகம் ஒன்றை டெல்லியில் நிறுவ விதிகளும், ஒழுங்குகளும் இந்த மாநாட்டில் உருவாக்கப் படலாம். மக்களிடமிருந்து மக்களுக்கான தொடர்புகளையும் பொருளா தார மற்றும் சமூக தொடர்பு களையும் ஏற்படுத்திக் கொள்ளவும் இந்த மாநாடு விவாதிக்கும் என கூறுகிறார்கள்.ஆனால் அரசுகளின் பிரதிநிதித்துவமும், இந்திய அரசின் செல்வாக்கும் உச்சிமாநாட்டு திசைவழியை ஒரு கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ளாதா? பூடானும், மால்தீவும் ஏற்கனவே இந்திய அரசின் செல்வாக்குப் பகுதிகளாக இல்லையா? வங்காள தேசத்துடனும், நேபாளத்துடனும் இந்தியாவிற்கு இருக்கின்ற நதிநீர் பிரச்சினைகள் பாரபட்சமின்றி தீர்க்கப்பட முடியுமா? சீனா பங்கு கொள்ளாத கூட்டத்தில் இந்திய அரசின் செல்வாக்கு இலங்கையில் அதிகமாவதற்கு இந்த மாநாடு பயன்பட்டு விடுமா? இதுபோன்ற கேள்விகள்தான் தெற்காசிய நாடுகளின் மனித உரிமை ஆர்வலர்களிடம் எழுந்துள்ளது.

Tuesday, April 27, 2010

சாதி அடிப்படையில் இடஒதுக்கீடு, சாதிகளை இறுக்கமாக்குமா? அல்லது தளர்த்துமா?

இந்திய துணைக் கண்டம் அதனுடைய சிறப்பு அம்சமாக, சாதிகளை அதிகமான அளவில் உள்ளடக்கி வைத்துள்ளது. சாதிகளின் பெயரில் இங்கே ஆதிக்கங்களும், ஏற்றத்தாழ்வுகளும், அதையொட்டி இழிவுபடுத்தல்களும், வெளியேற்றல்களும், அடக்கி வைத்தல்களும், தீண்டாமைகளும், காணாமைகளும் நடந்து வருகின்றன. அதன் மூலம் ஏற்கனவே சில காரணங்களால் முன்னேறிவிட்ட சாதியினர் மட்டும், 2000 ஆண்டுகளாக, அனைத்து செல்வங்களையும் இந்த நாட்டில் அனுபவிக்க முடிகிறது. நாட்டு வளங்களை கடுமையான உழைப்பால் உருவாக்கிக் கொடுக்கும் சாதி சனங்கள், இத்தகைய ஏற்றத்தாழ்வில் கீழே தள்ளப்படுகின்றன. கீழே தள்ளப்படும், ஓரங்கட்டப்படும், தீண்டாமைக் கொடுமைக் குள்ளக்கப்படும், முன்னேற வாய்ப்பு கிடைக்கப் பெறாத சாதிகளுக்கு, முன்னேறி வருவதற்காக ஒரு புதிய ஏற்பாடு செய்யப்பட்டது. சாதிகளுடைய நிலைமை களைப்பற்றிய ஆய்வின் அடிப்படையில், கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் இடஒதுக்கீடு வழங்கப் படலாம் என, அரசாங்கம் தீர்மானித்து, அதற்காக ஆய்வு செய்ய குழு அமைத்தது. அவ்வாறு நேரு காலத்தில் அமைக்கப்பட்ட குழுதான், காகா கலேல்கர் ஆணையம். சமூக ரீதியில், கல்வி ரீதியில் பின்தங்கிய சாதியினருக்கு, கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் இடஒதுக்கீடு வழங்கி, அதன் மூலம் அந்த சாதி சனங்களுக்கு, முன்னேறு வதற்குள்ள வாய்ப்புகளை நல்கவேண்டும் என்ற எண்ணத்தில் அப்படிப்பட்ட ஒரு ஆணையம் அமைக்கப்பட்டது. அந்த ஆணை யத்தின் மதிப்பீடும், இந்தியாவில் உள்ள சாதிகளில் வெவ்வேறு தட்டுக்களிலும், தரங்களிலும் வாழ்ந்து வரும் எதார்த்தங்களை கணக்கில் எடுத்து, இடஒதுக்கீடு வழங்குவதற் கான அடிப்படைகளை அந்த ஆணையம் முன்வைத்தது. அதே நேரத்தில்தான் தமிழ்நாட்டில் சாதி அடிப்படையிலான ஏற்றத்தாழ்வுகளை நீக்குவதற்காக, வகுப்புவாரி பிரதிநிதித்துவம் என்ற முழக்கத்தை தந்தை பெரியார் தொடங்கி வைத்தார். காகா கலேல்கர் ஆணையத்தின் முதல் உரையிலேயே, அரசாங்கத்தில் பங்கு கொள்ளாத சாதிகள், தங்களுடைய பிரதிநிதிகளும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கிறார்கள் என்ற உணர்வை பெறுவதற்காக, இடஒதுக்கீடு அவசியம் என்ற கருத்தைத்தான் முன்வைத்துள் ளது. அதாவது சாதிகளை ஒழிப்போம் என்றோ, கீழே தள்ளப்பட்ட சாதி சன ங்களை முழுமையாக மேலே கொண்டு வருவோம் என்றோ, சாதிகளுக்கு மத்தியில் உள்ள ஏற்றத்தாழ்வைப் போக்கி, சமன்படுத்துவோம் என்றோ, அந்த ஆணையம் கூறவில்லை. மாறாக அத்தகைய சாதிகளின் பிரதிநிதிகள் அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதாக அவர்கள் உணர்வதற்காக என்ற சொல்லைத்தான் பயன்படுத்துகிறார்கள். அதாவது சமூகத்தில் புரட்சிகரமான மாற்றத்தை கொண்டு வருவதற்காக, இத்தகைய இடஒதுக்கீடுகளை அரசாங்கம் முன்வைக்கவில்லை. மாறாக அரசாங்கத்தில் அங்கம் வகிக்காமல் பெருவாரியான சாதி சனங்கள் ஒதுக்கப்பட்டு நிற்கும் போது, அதனால் அராங்கத்திற்கு எந்த நேரமும் ஆபத்து வரலாம் என்ற எண்ணத்தின் அடிப்படையில், அடிப்படை சாதியினரையும் அரசில் அங்கம் வகிப்பதாக உணர வைக்க இந்த இடஒதுக்கீடு என்பது தான் அவர்களது அன்றைய வாதமாகவே இருந்தது.அண்ணல் அம்பேத்கரின் அரிய முயற்சியால், இந்திய அரசியல் சட்டத்திலேயே, தாழ்த்தப்பட்ட மக்களாக தீண்டாமை கொடுமையால் பாதிக்கப்பட்டுக் கொண்டி ருக்கும் மக்கள் இருப்பதை எண்ணிப் பார்த்து, அவர்களுக்கான இடஒதுக்கீட்டை கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் ஏற்படுத்தி தர அரசியல் சட்டத்திலேயே வழிவகை செய்யப்பட்டது. அதன் மூலம் மத்திய, மாநில அரசாங்கங்களிலும், அனைத்து கல்விக் கூடங்களிலும், தலித் மக்களுக்கான இடஒதுக்கீட என்பது சட்ட ரீதியாக அங்கீகரிக்கப்பட்டது. அங்கீகரிக்கப் பட்ட அந்த உரிமையைக் கூட, அரசாங்கங்கள் வேலை வாய்ப்பில் நிரப்பவில்லை என்ற குரல் 63 ஆண்டு சுதந்திரத்திற்குப் பிறகும் நிலவுகின்ற நிலைமையாக இருக்கிறது. அதாவது பின்னடைவு காலிப்பணியிடங்கள் மத்திய, மாநில அரசாங்கங்களில், தலித் மக்கள் 10 லட்சம் பேருக்கு இருக்கிறது என்ற உண்மை இப்போது தலித் இயக்கங்களால் எழுப்பப் படுகிறது. அப்படியானால் சட்டம் கொடுத்த உரிமைகளைக்கூட, தீண்டாமைக் கொடுமையில் வாழும் மக்கள் தொகையினருக்கு, சமூகமும் அசராங்க அதிகாரிகளும் கொடுக்கத் தயாராக இல்லை என்ற உண்மை இந்த இடத்தில் அம்பலமாகிறது. இதுபோன்ற ஆதிக்கசாதி மனப்பான்மை, எங்கெணும் பரவிக் கிடப்பதால் இன்னமும் இடஒதுக்கீடு அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யாததை காண முடிகிறது. இதே போல அடுத்து வந்த அரசாங்கங்களால் மண்டல் குழு அமைக்கப்பட்டது. மண்டல்குழுவின் ஆய்வு என்பது புதிய சூழ்நிலையில், சாதிகளின் குறிப்பாக பிற்படுத்தப்பட்ட சாதிகளின் பொருளாதார, சமூக, அரசியல் நிலைமைகளைப் பற்றி ஆய்வு செய்தது. அத்தகைய ஆய்வின் மூலம் கொடுக்கப்பட்ட அறிக்கையையும், மத்திய காங்கிரஸ் அரசாங்கம் கிடப்பில் போட்டு வைத்திருந்தது. வி.பி.சிங் ஆட்சிக்கு வந்த பிற்பாடு மண்டல் குழு அறிக்கை தூசி தட்டப்பட்டு, வெளியே கொண்டு வரப்பட்டது. அது நாடெங்கிலும் சமூக ரீதியான அணி சேர்க்கையில், ஒரு ஆட்டத்தை ஏற்படுத்தியது. அதனால் வெறுப்படைந்த அனுபவித்து வரும் கூட்டம், பிரச்சினையை கிளப்பி, அதன் விளைவாக மத்திய அரசு கவிழ்ந்தது. மண்டல்குழு அறிக்கையின் அமுலாக்கம் குறிப்பாக உ.பி., பீகார், ம.பி., ராஜஸ்தான், அரியானா போன்ற மாநிலங்களில், ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்தது. வீழ்ந்து கிடந்த பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்கள் பலரும் இதன் மூலம் விழிப்புணர்வு பெற்று, அரசியல் பிரதிநிதிகளாகவும் அறுதியிட முடிந்தது. ஆனாலும் கூட பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்களுக்கு, உயர்கல்வியில் இடஒதுக்கீடு இல்லை என்ற பிரச்சினை சமீபத்தில், மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தை எதிர்த்து ஒரு மக்கள் புயலை எழுப்பியதையும் நாம் காணமுடிந்தது. இந்திய நாடு முழுவதையும் ஆய்வு செய்வதற்கு பதிலாக, உதாரணமாக தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டு நாம் நமது ஆய்வை தொடங்கலாம். வானத்தில் பறக்கும் அத்தனைப் பறவைகளையும் பிடித்து, அவற்றின் உடலை பிரித்து பரிசோதிப்பதை விட, அதில் ஒரு பறவையைப் பிடித்து பரிசோதித்தால், அதைப் போலத்தான் பிற பறவைகளும் என்பதாக புரிந்து கொள்ளமுடியும் என்று கூறிய மாசேதுங்கின் மேற்கோளை பயன்படுத்தலாம். அதன்படி பிற்படுத்தப்பட்ட சமுதாயங்களாக பட்டியலிடப்பட்ட சாதிகளில், தமிழ்நாட்டில் உள்ள யாதவர் குலத்தை கணக்கில் எடுக்கலாம். சமீபத்தில் அவர்களது தனி இடஒதுக்கீடு கோரிக்கை, பெருமளவு கவனத்தை ஈர்த்திருப்பதனால் அதை எடுத்துக் கொண்டு விவாதிக்கலாம். தமிழ்நாட்டின் ஆட்சி அதிகாரத்தில், முற்பட்ட சாதியினருக்கு இருந்து வந்த செல்வாக்கு மாற்றப்பட்டு, கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக, பிற்படுத்தப்பட்ட சாதிகளின் செல்வாக்கு கொண்ட ஆட்சி நடைபெறுகிறது என்பதாக ஒரு மதிப்பீடு உண்டு. அது உண்மைதானா? பிற்படுத்தப்பட்ட சாதிகளில் சில சாதிகள் மட்டுமே, முன்னேறுவதற்கான இடஒதுக்கீடு வாய்ப்புகளை பெற்றுக் கொள்ளும் போது, யாதவர் சமூகம் போன்ற பல சமூகங்கள் ஏதுமற்று நிற்கின்ற நிலையையும் பார்க்கிறோம். அதுவே அவர்களை அணி திரட்டி குரல் எழுப்ப வைத்திருக்கிறது. அப்படியானால் இவர்கள் ஆளப்படும் பிற்படுத்தப்பட்ட சாதியினராக இருக்கிறார்கள். ஆளும் பிற்படுத்தப்பட்ட சாதியினர் அனுபவிக்கும் அனைத்து வாய்ப்புகளையும், ஆளப்படும் பிற்படுத்தப்பட்ட சாதிகளில் ஒன்றான யாதவ குலம் பெற்றுவிடவில்லை என்ற காரணம் தான், அவர்களது எழுச்சிக்கு அடிப்படையாக அமைகிறது. இத்தகைய சூழலில் மக்களின் உடனடி தேவைகளை கணக்கில் எடுக்காமல், அவர்கள் ஒட்டு மொத்தமாக சாதிகளை புறந்தள்ளி, தமிழினமாக அடையாளம் கண்டு கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையும் விவாதிக்கப்பட்டது. அது இன்றைய எதார்த்ததிலிருந்து, நாளைய எதிர்காலத்தை நோக்கி பயணம் செய்ய தடங்கலாக அமைகிறது. சாதிகளாக பிரிந்து கிடக்கும் அல்லது வைக்கப்பட்டிருக்கும் தமிழ் மக்கள், தங்களுடைய உடனடி தேவைகளுக்கு கிடைக்கப்பெறாத இடஒதுக்கீட்டை பெறுவதும், ஒட்டு மொத்தமாக சாதிகளை அழிக்கும் சூழலில், தமிழினமாக மலர்வதும் இணைந்த ஒரு பார்வையை பெறுவது அவசியமாகிறது.ஆகவே இன்றைய உடனடித் தேவையான இடஒதுக்கீட்டில் நின்று கொண்டே, நாளைய எதிர்கால தமிழர் ஒற்றுமையை கட்டுவதற்காக பாடுபடலாம் என்ற அறிவியல் திசைவழியை புரிந்து கொள்ள முயலலாம்.

Sunday, April 25, 2010

பாலியல் பட்டினியில் தமிழகம் மட்டும் தவிக்கவில்லையா?

இடதுசாரிகள் என்று பாராளுமன்ற இடதுசாரிகள் பெயர்வைத்துக்கொண்டு செய்த சேட்டைகள், கேரளாவில் கலாச்சாரக்காவலர்களாக அவர்களைக்காட்டியது . அதற்கு கேரளாவில் உள்ள ஆணாதிக்க பண்பாடும், அதை ஊற்றி வளர்க்கின்ற ஒரு நிலவுடமை உறவு நிலவிவருவதும் புரியப்படவேண்டும். சிறு நிலவுடமை உற்பத்தி உறவுகள் கேரளாவில் எங்கணும் நிறைந்து கிடக்கின்ற காரணமாக, அதன் பண்பாட்டு வெளிப்பாடுகள் அங்குள்ள மனிதர்கள் மத்தியில் ஆதிக்கம் செலுத்தவே செய்கின்றன. அதன் விளைவாக ஆண்கள் பொதுவாக பொறுமையிழந்து பெண்களின் அறுதியிடலைக்கண்டு, எரிச்சலடைவதும், அதனாலேயே கேரளப்பெண்கள் மீது அதிகமாக வெறுப்பை உமிழ்வதும் செய்கின்றனர். இதுவே கமலாதாஸ் போன்ற பெண்ணியச்சிந்தனையாலர்களுக்கு கேரளா ஆண்கள் மீது வெறுப்பை கொடுத்தது. அதேபோல இப்போது அருந்ததிராய் போன்ற கேரளப்பென்களையும் கடுப்படைய வைத்துள்ளது. அதேநேரம் கேரளாவில் மட்டும்தானா இந்த பாலியல் பட்டினி ஆண்களை வாட்டுகிறது? தமிழகத்தில் இல்லையா? இப்படிஒரு கேள்வியைக்கேட்க வேண்டியிருக்கிறது. ஏன் என்றால் சமீபத்தில் சாமியார் நித்தியானந்தா செய்த சாகசங்கள் வெளிச்சத்திற்கு வந்தபோது, தமிழகத்தில் நிலவும் பாலியல் பட்டினி பகிரங்கமாக படம்பிடித்துக்காட்டப்பட்டது. நித்தியானந்தா பொய்யாகச்சொல்லிவந்த துறவறம், அவரது தனிமைச்சூழலில் உடைக்கபட்டிருந்தது. இது நித்தியானந்தாவின் தவறா அல்லது துறவறத்தின் தவறா என்று ஆராயவேண்டும். அது பகுத்தறிவு. அப்படி ஆராய்வதற்குப்பதில் மனிதனைக்குற்றமாகப்பாற்கும் பார்வை இங்கு நிறைந்திருக்கிறது. இதுதான் நித்தியானந்தா மீது குற்றவழக்குகளைப்போட காவல்துறையை ஊக்குவித்தது. இன்றுவரை நித்தியானந்தாவை செல்லமாக நித்தி என அழைக்கும் தொலைக்காட்சிகளிடம் மக்கள் தேடுவது ஏதாவது புதுசா கிடைக்குமா என்பதுதான். இது என்ன? பாலியல் பட்டினி இல்லையா?
அறைக்குள் நித்தியானந்தா ரஞ்சிதாவுடன் கொஞ்சுகிறார் என்பதற்கான ஆதாரப்படங்கள் அந்த தொலைக்காட்சிக்கு கிடைத்துவிட்டன. இவர்களில் யார்தான் கிடைத்த பெண்களுடன் அப்படிக்கொஞ்சவில்லை? எசுநாதர் சொன்னதுபோல உங்களில் யார் அந்த தப்பை செய்யாதவர்களோ, அவர்கள் முதல் கல்லை எடுத்து அடியுங்கள் என்று சொன்ன உடனே, அந்தக்காலத்து ஜெரூசலம்வாசிகள் கலைந்து போய்விட்டார்கள், இந்தக்காலத்து தமிழ்நாட் டுக்கரர்கள் கலையவில்லையே? அதனால் இவர்களது பாலியல் பட்டினியும் குறைந்தது அல்ல. சரி. இப்போது உச்சநீதிமன்றம் குஷ்பு வழக்கில் ஒரு தீர்ப்பை சொல்லிவிட்டது. திருமணத்திற்கு முன்பு உறவு வைத்துக்கொள்வது நடக்கத்தான் செய்கிறது என்ற உண்மையை குஷ்பு சொல்லிவிட்டார். இது அப்படி உறவு வைத்துக்கொல்வதையே அன்றாடம் விருப்பமாக வைத்துக்கொண்டவர்களுக்கு கோபம் வந்துவிட்டதோ என்னவோ தெரியவில்லை. ஒரு பெரிய குழப்பமே இதன் மீது ஏற்படுத்தப்பட்டது. வழக்குகள் போடப்பட்டன.இப்போதுதான் தீர்ப்பு வந்துள்ளது. குஷ்பு மீதான ௨௨ வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டன.அப்போதும் அதே தொலைகாட்சி இதேபோல அந்த எதிர்ப்பை பெரியதாகி காட்டியது. இப்போது நித்தி வில்லங்கத்தை தொடர்ந்து போட்டு நல்ல வசூல் செய்து விட்டார்கள். அதுவும் மக்கள் மத்தியில் உள்ள பாலியல் பட்டினியில் நம்பிக்கைகொண்டுதானே செய்தார்கள்? அதற்குப்பிறகு ஒரு தொலைக்கட்சியில் இதுபற்றி கடுமையாகக்கண்டித்தோம். அதற்கு முதல்வரும் ஆதரவு என்று மக்கள் நினைப்பார்கள் என்றோம். அதுவேறு முதல்வரின் பேரன் தொலைகாட்சி. உடனேயே முதல்வர் கடுமையாக அந்த ஒளிபரப்பலை கண்டித்தார் பிறகுதான் நிறுத்தப்பட்டது. அறைக்குள் நடத்தப்பட்ட ஒரு காரியத்தை அம்பலத்துக்கு அதுவும் செய்திகள் வெளியிடும் பகுதியில் தொடர்ந்து வெளியிட்டார்கள். அது ஒரு நீலப்படம் போல வெளியிடப்பட்டது. வீடுகளில் சின்னப்பிள்ளைகள் இது என்ன என்று கேட்கத்தொடங்கிவிட்டன. பேராசிரியர் சரஸ்வதி, டாக்டர் கிருஷ்ணசாமி, , டைரக்டர் புகழேந்தி, அய்யநாதன், ஆகியோருடன் நானும் இந்த ஒளிபரப்பலை எதிர்த்து அறிக்கை வெளியிட்டார்கள். முதல்வர் கலைஞரும் கடுமையகத்தாக்கி அறிக்கை வெளியிட்டார். ஆனாலும் அந்த பாலியல் பட்டினியும், தாகமும் அம்பலத்திற்கு வந்துள்ளன என்பதுதான் இங்கே குறிப்பிடத்தக்கது. .
குறிப்பாக தமிழகத்தில் ஒரு மனைவியுடன் வாழும் கலாச்சாரம் தான் போற்றத்தக்கது எனவும், அதற்கு தமிழ் கலாச்சாரம் எனப்பெயரிட்டு அழைப்பதும் பிரபலமான ஒரு பழக்கம்.அதனால் எல்லோருமே தன்பயத்தில் ஒருவனுக்கு ஒருத்தி என்பதைகூறி பெண்களை மட்டுமே அடிமைப்படுத்தி வருகின்றனர். ஆனால் ஆண்களுக்கு என்று வரும்போது அந்த கலாச்சார விதிகள் பின்பற்றுவதில்லை. என்பதை, பாரதி சாடிஇருந்தாலும், கற்பென்று வந்தால் அக்தை இருபாலர்க்கும் பொதுவென வைப்போமேனக்கூறி யிருந்தாலும், அதைக்கண்டுகொளவது இல்லை. இது ஆண் ஆதிக்கச்சிந்தனையன்றி வேறில்லை. அரசியலில் அதிகாரத்தில் உள்ளவர்களே அந்தகாலத்து மன்னர்கள்போல அந்தப்புரங்கள் பாணியில் வாழ்வதும், ஒன்றுக்கு மேல் மனிவிமார்களைக்கொண்டிருப்பதும் அங்கிகரிக்கப்படுகிறது.ஆகவே தமிழகம் தன்னுடைய மௌனமொழியில் ஆணாதிக்க சிந்தனைகளை அழுத்தமாக வைத்திருப்பதற்கு, இங்குள்ள பெண்களும் பெரும் அளவு ஒத்தழைக்கிரார்கள். இங்குள்ள பெண்களிடம் ஆணாதிக்க சிந்தனைகள் அதிகமாக ஊறிப்போய் இருக்கின்றன. அதனால்தான் பெண்களால் விரும்பப்படும் எம்ஜியாரால்,"பொம்பளை சிரிச்சா போச்சு, புகையிலை விரிச்சா போச்சுன்னு" பாட முடிந்தது. தமிழகத்தில் இருக்கும் பெண்ணடிமை என்பது குவிந்து கிடக்கும் நிலவுடமை உறவுகளின் வெளிப்பாடாக இருக்கிறது. ஒவ்வொரு மண்ணிலும் நிலவும் நில உறவுகளை ஒட்டி, ஆணாதிக்கம் தனது முகத்தை காட்டும்போலத்தெரிகிறது. . . .

Saturday, April 24, 2010

ஈழத்தில் பெண்ணடிமை உடைய, புலிகள் காரணமா?

உலகம் எங்கும் இருப்பது போல, இலங்கைத் தீவிலும் அதிலும் ஈழத்தமிழர் தேசத்திலும், ஆண்களின் ஆதிக்கம்தான் கோலோச்சி வருகிறது என்பது பொதுவான மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் பெண்ணுரிமையாளர்களின் புரிதல். ஆணாதிக்கம் என்பதோ, பெண்ணடிமை என்பதோ பண்பாட்டு அரங்கில், அரசியல் அரங்கில், பொது வாழ்க்கையில் இருந்து வரக்கூடிய ஒரு அவலம். அதில் பண்பாட்டு அரங்கு என்பது பல்வேறு அம்சங்களைக் கொண்டதாக இருக்கிறது. உடை உடுத்து வதற்கான உரிமை, குடும்பத்தில் வகிக்கின்ற பொறுப்பு, ஆகியவை கூட, பண்பாட்டு அரங்கில் இருக்கின்ற முக்கிய அம்சங்கள். பொதுவாக உலகம் எங்கிலும் இருக்கின்ற ஒவ்வொரு நாட்டிலும் நிலவுகின்ற பாலின வேறுபாடுகளையும், பாலின முன்னேற்ற த்தையும் ஐ.நா.வின் மதிப்பீட்டிலிருந்து பார்த்தோமானால் இலங்கைத் தீவும், அதிகமான தூரம் செல்லவேண்டியிருக்கிறது என்பதாக புரிந்து கொள்ளலாம். 1948ம் ஆண்டு காலனிய ஆட்சி முறையிலிருந்து சுதந்திரம் பெற்றதாக இலங்கைத் தீவு அறிவிக்கப்பட்ட பிற்பாடு அங்கு நிலவுகின்ற மானூட வளர்ச்சி விகிதம் முன்னேறியிருக் கிறது என்பது ஒரு மதிப்பீடு. எழுத்தறி விலும், குழந்தைப் பிறப்பிலும், குழந்தை வளர்ப்பிலும் தேசிய அளவில் முன்னேற்ற மான அம்சங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. வரலாற்று ரீதியாக அரசாங்கத்தினுடைய மூலதனம், அடிப்படை சுகாதாரத்திலும், கல்வியிலும் இருப்பதாக எண்ணப்படுகிறது. ஐ.நா.வின் வளர்ச்சித் திட்டம், 1998ம் ஆண்டின் தேசிய வளர்ச்சி அறிக்கையின் படி, வறுமையின் மட்டம் குறைந்திருப்பதாக கூறுகிறது. மற்ற ஆசிய நாடுகளை விட, சராசரி பாலின வளர்ச்சி கூடியிருப்பதாகவும், அது 69% இருப்பதாகவும், அதே சமயம் பாலின அதிகார மேம்படுதல் மிகவும் குறைவாக 20%தான் இருப்பதாகவும் கூறப்படுகிறது. உலகத்திலேயே ஒரு பெண்ணை நாட்டின் தலைவியாக கொண்டு வருவதில் முதல் நாடாக இருக்கிறது என்றும் பெயர் பெற்றுள்ளது. பாலின வளர்ச்சிக்கும், பாலின அதிகார மேம்படுத்தலுக்கும் இருக்கின்ற வேறு பாடுகள் இங்கே கவனிக்கப்படவேண்டும். அதாவது இலங்கையில் பெண்கள் மீதான தாக்கத்தை செலுத்தும் மறைந்திருக்கும் உண்மைகள் ஆய்வு செய்யப்படவேண்டும். அவை சமூக, பண்பாட்டு, பொருளாதார தன்மைகளையொட்டி நடந்துள்ளன. நடந்து முடிந்த போர், பெண்கள் மீது பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு மாகாணங்களில் மட்டும் 18,657 போரினால் விதவையானவர்கள் இருக்கிறார்கள். தென்னிலங்கையில் போருக்குச் சென்று மரணமடைந்த சிங்கள போர் வீரர்களது மனைவிகள் பல்லாயிரக்கணக்கில் விதவைக ளாக வீட்டில் அடைந்திருக் கிறார்கள். இலங்கையில் சுமார் 22% குடும்பங்களில், பெண்கள் தலைமை எடுத்து செயல்படும் நிலைமை இருக்கிறது. வருமானம் பெறுகின்ற வழிகளைப் பற்றி குறைந்த அளவுக்கு புரிதல் மட்டுமே உள்ள பெண்கள்தான், பல குடும்பங்களுக்கு உணவு பெற்றுக் கொடுக்கும் பொறுப்பில் இருக்கின்றனர். விதவைகளாக இருக்கின்ற பெண்களின் நிலைமை பொதுவாக மோசமாக இருக்கிறது. நிலவுகின்ற பண்பாட்டு சூழல் அவர்களை பரிதாபகரமான சூழ்நிலையில் தள்ளியுள்ளது. இத்தகைய பெண்களுக்கு தவிர்க்க முடியாமல், சமூக தனிமைப்படுதலே வறுமையை வரவழைத்து விடுகிறது. இளம் வயதிலேயே பல பெண்கள், விதவைகளாக மாறிவிடுகிறார்கள். பெண்கள் மத்தியிலுள்ள எழுத்தறிவு என்பது பிராந்தியத்திற்கு பிராந்தியம் மாறுபடுகிறது. ஆனாலும் பல ஆண்டுகளாக 87% எழுத்தறிவு பெண்கள் மத்தியில் நிலவுகிறது. நகர்ப்புறங்களுக்கும், கிராமப் புறங்களுக்கும் மத்தியில் உள்ள வேறுபாடும் கூட, இன்னமும் நிலவி வருகிறது. அவை தேசிய வளர்ச்சி மதிப்பீட்டில் இடம் பெறவில்லை. நகர்ப்புறங்களில் பெண்களுக் கான எழுத்தறிவு 90% என்றும், கிராமப்புறங் களில் 78% என்றும் மதிப்பீடு செய்யப்படு கிறது. பெண்கள் மத்தியில் இருக்கின்ற ரத்தசோகை 65% என்பதாக கூறப்படுகிறது. இவை அச்சடித்த ஆவணங்களில் இடம் பெறுவதில்லை. கல்வி என்பது வேறு ஒரு பிரச்சினை 1989ம் ஆண்டு இலங்கையில் உள்ள பெண்கள் பல்கலைக்கழகங்களில் 42% படிக்கச் சென்றார்கள் என்றும், 1999ல் 52% படிக்கச் சென்றார்கள் என்றும் கூறப் படுகிறது. அதிலும் பல்கலைக்கழக படிப்பு, மொத்த மக்கள் தொகையில் 1%க்கு மட்டும்தான் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பல்வேறு துறைகளில் பெண்களுடைய பங்களிப்பு இல்லை. வேலை வாய்ப்பு என்ற பிரமீடில், அடித்தளத்தில்தான் பெண்களுக்கு இடம் கிடைத்துள்ளது. அப்படிக் கிடைத்தாலும் கீழ்மட்டத்தில், குறைவான திறனில், குறைவான கூலியில் விவசாயத்திலும், தோட்டத் தொழிலிலும் மட்டுமே கிடைத்துள் ளது. ஆண்களை விட பெண்கள் மத்தியில் உள்ள வேலையில்லா திண்டாட்டம் இரு மடங்காக அதாவது 22% ஆக இருக்கிறது. கிடைக்கும் வேலைகளும் அமைப்பு சாரா தொழிலிலும், தற்காலிகத் தன்மையிலும் மட்டுமே இருக்கின்றன. இடம் பெயர்ந்த திறன் பெறாத பெண் தொழிலாளர்கள் 76% இருக்கிறார்கள். இவர்கள் எண்ணெய் வள நாடுகளிலும், தென்கிழக்கு ஆசியநாடுகளிலும் போய் வேலை செய்கிறார்கள். அத்தகைய பெண்கள் சொல்லமுடியாத அளவுக்கு கடினங்களையும், அடிகளையும், சித்ரவதை களையும் வாங்குகிறார்கள். அதில் மரணங்கள் அடிக்கடி சம்பவிக்கின்றன. இருநாடுகளுக்கு மத்தியில் ஆரோக்கியமான ஒப்பந்தங்கள் இல்லாததால், இந்த அவல நிலை தொடர்கிறது. இப்படிப்பட்ட சூழலில் இப்போது வெளிவந்திருக்கக் கூடிய செய்திக் கட்டுரை வித்தியாசமான ஒரு நிலவரத்தை, படம் பிடித்துக் காட்டுகிறது. பழமைவாதக் கருத்துக்கள் மற்றும் பாரம்பரியமாக இருந்து வரும் கட்டுப்பாடுகளில் இருந்தும், யாழ்ப்பாணப் பெண்கள் சிறிது, சிறிதாக விடுதலை பெற்று வருவதாக ஒரு செய்தி அறிக்கை கூறுகிறது. இலங்கையின் உள்நாட்டுப் போர் தமிழ் பெண்களின் மீது ஏற்படுத்திய பாதிப்புக்கள் குறித்து சர்வதேச செய்தி நிறுவனங்களில் வெளிவந்துள்ளது. ஒரு செய்தியாளர் மனித உரிமைகளுக்கான இல்லத்தின் பணியாளரான ஷெரீன் சேவியரைச் சந்தித்து கலந்துரையாடி யுள்ளார். ஈழத்தமிழர்கள் விடுதலை பெறுவதற்காக நடத்தப்பட்ட போரில் தமிழீழ விடுதலைப் புலிகள் தோல்வி அடைந்திருந் தாலும், பெண் என்றால் இப்படித்தான் வாழ வேண்டும் என காலாதிகாலமாக இருந்து வரும் கட்டுப்பாடுகளைக் கடந்து யாழ்ப்பாணப் பெண்கள் தமக்கான புதிய வாய்ப்புகளையும், வழிகளையும் தேடுவ தற்கு விடுதலைப்புலிகளுக்கே நன்றி தெரிவிக்க வேண்டும் என ஷெரீன் சேவியர் கூறியதாக அந்தக் கட்டுரை தெரிவித்துள்ளது. தமக்கு தனிப்பட்ட ரீதியில் ஏற்பட்டுள்ள துன்பங்கள் காரணமாகவும் யாழ்ப்பாணப் பெண்கள், சமூக ரீதியான கட்டுப்பாடுகளைக் கடந்து, தமக்கான புதிய வாய்ப்புகளைத் தேடுவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். போரின் காரணமாக தங்களது கணவன்மாரை இழந்துள்ள ஆயிரக்கணக்கான பெண்களும் இதற்குள் அடங்கியுள்ளனர். இலங்கைப் படையினருக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் போர் நடைபெற்ற வேளையில் யாழ்குடா நாட்டிலும், ஏனைய பிரதேசங்களிலும் பெண்கள் முதன்மையான பங்கினை வகிக்க வேண்டியிருந்ததாக ஷெரீன் தெரிவிக்கின்றார். தமது கணவன்மார்கள் உயிருடன் இருந்தாலும் குறித்த சில குடும்பப் பெண்கள் முதன்மையான பங்கினை வகிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தனர். போர் நடைபெற்ற காலப்பகுதியில் தனக்கு ஏற்படக்கூடிய அச்சுறுத்தலின் காரணமாக ஆண் வெளியில் செல்ல முடியாத நிலையில் இருந்ததால், குடும்பத்திற்குத் தேவையான வெளிவேலைகளைச் செய்ய வேண்டிய நிலைக்குப் பெண்கள், சூழல் காரணமாக நிர்ப்பந்திக்கப் பட்டார்கள். போர் இடம் பெற்ற காலங்களில் சந்தேகத்தின் பேரில் இலங்கைப் படையினரால் ஆண்கள் வீடுகளிலிருந்து இழுத்துச் செல்லப்பட்ட தால், பல ஆண்கள் விடுதலை இயக்கங்க ளோடு இணைந்து கொள்வதற்கு நிர்ப்பந்திக்கப் பட்டார்கள். இக்காலப் பகுதியில் குடும்பப் பெண்கள் எவ்வாறு நிலைமையினைக் கையாண்டார்கள் என்பதை யாழ்ப்பாணத்தின் முதியவர்கள் கீழ்வருமாறு விவரிக்கிறார்கள். இவர்களுக்கு இரட்டைச்சுமை. குடும்பத்தினை நிர்வகிப்பதோடு, குடும்பம் தொடர்பான தேவையான முடிவுகளையும் எடுக்க வேண்டும். குடும்பத்தினை நிர்வகித்தல் என்ற முதலாவது பணியையே, பெரும்பாலான பெண்கள் காலம், காலமாகச் செய்து பழக்கப்பட்டவர்கள். இந்நிலையில் யாழ்ப்பாணப் பெண்கள் புதிய வாய்ப்பு களைத் தமதாக்குவதைச் சமூகம் அனுமதிக்க ஆரம்பித்துவிட்டது. குடும்ப அங்கத்தினர் களின் நல்வாழ்வு மற்றும் கல்வி ஆகிய விசயங்கள் தொடர்பான முடிவுகளைத் தற்போது பெண்களே எடுத்து வருகின்றார் கள். யாழ்ப்பாணச் சமூகத்தைப் பொறுத்து, இத்தகைய முடிவுகளை எடுப்பது ஆண்களுக்குரிய பணியாகவே கருதப்பட்டு வந்தது. இந்நிலையில் பெண்கள் கூட தம்முடன் இணைந்து செயற்படலாம் என்ற நிலையினை விடுதலைப் புலிகள் உருவாக்கினார்கள். பெண்களுக்கே உரிய வெட்கம் போன்ற இயல்புகளைக் கொண்ட கிராமத்துப் பெண்களை இலட்சியத்துக்காக ஆயுதங்களை ஏந்த வைத்து ஜீன்சுடனும், சட்டையுடனும் இயங்கும் நிலைக்கு விடுதலைப் புலிகள் அவர்களை மாற்றிக் காட்டியிருந்தார்கள். சமூகத்தில் தமக்கிருந்த கட்டுப்பாடுகளை ஒதுக்கிவிட்டு பெண் விடுதலை என்ற இலட்சியத்துடன் இருந்த தமிழ்ப் பெண்கள் தாம் சமமாக நடத்தப்படும் நாளுக்காக காத்திருந்தார்கள். இப்பெண்கள் எதிர்பார்த்த பால் ரீதியான சமத்துவத்தினை விடுதலைப் புலிகள் வழங்கினார்கள் என ஷெரீன் சேவியர் கூறுகின்றார். கணவருடன் இருந்தாலும் பாலினச் சமத்துவம் மற்றும் பெண் விடுதலை தொடர்பில் தெளிவான கருத்துக்களைக் கொண்டிருந்த விடுதலைப் புலிகளின் உறுப்பினராக இருந்த அடேல் பாலசிங்கம் போன்ற பெண்கள் தங்களுக்கு முன்னுதாரணமாகச் செயற்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகராக அன்ரன் பாலசிங்கம் செயற்பட்ட வேளையில், அவரது மனைவியான ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த அடேல் நடைமுறையில் விடுதலைப் புலிகளின் பெண்கள் பிரிவின் தலைவியாகச் செயற்பட்டு வந்ததாக அவர் குறிப்பிட்டுள் ளார்.விடுதலைப் போர் அதன் இயக்கப் போக்கிலேயே, சாதி வேறுபாடு, பாலின வேறுபாடு ஆகியவற்றை இல்லாமல் செய்து விடுகிறது என்பதற்கு இதுவே நல்லதொரு உதாரணமாகத் திகழ்கிறது.