Wednesday, May 26, 2010

தமிழக அரசுக்கு டெல்லி தரும் நெருக்கடியா?

தமிழகத்தை ஆண்டுவரும் ஆளுங்கட்சி, டெல்லியை ஆண்டுவரும் அதாவது இந்தியாவை ஆண்டுவரும் ஆளுங்கட்சியுடன் கூட்டணியாக செயல்படுவது உண்மை தான். அதுமட்டுமின்றி இந்த கூட்டணியான ஐக்கியமுற்போக்கு கூட்டணி தனது 2வது ஆட்சியின் முதல் ஆண்டை முடித்திருப்பதும் உண்மை தான். அதைப்பற்றி ஓராண்டாக தான் சந்திக்காத ஊடகவியலாளர்களை, தலைமை அமைச்சர் சந்தித்ததும் உண்மை தான். எந்தவொரு கேள்விக்கும் விரிவான விடையை தலைமை அமைச்சர் கொடுக்கவில்லை என்பதே ஊடகக்காரர்களின் வருத்தம். ஆனாலும் சில கேள்விகளுக்கு அவர் விரிவாக விடையளித்ததாகத் தான் தெரிகிறது. உதாரணமாக ஸ்பெக்ட்ரம் ஊழல் பற்றிய கேள்விகளுக்கு, தவறு எதுவும் நடக்கவில்லையென்று மத்திய அமைச்சர் ஆ.ராஜாவிற்கு ஒரு பாராட்டே கொடுத்துள்ளார். ஆனாலும் கடைசியில் தவறு நிரூபணமானால், நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இந்த இடத்தில் தான் ஒரு சிறிய நெருடல் தெரிகிறது.
மாநிலத்தில் தேர்தல் வரயிருக்கும் காலத்தில், கூட்டணி கட்சிகளுக்குள் அதுவும் பெரிய கட்சிகளுக்குள் ஒரு பேர உரசல் இருக்கத்தான் செய்யும். தங்கள் தங்கள் பாணியில் ஒவ்வொருவரும், தங்கள் பேரத்தை அதிகப்படுத்துவதற்காக நெருக்கடி தருவார்கள். மத்திய அரசை ஆளுகின்ற பாரம்பரியக் கட்சியான காங்கிரஸ் கட்சி இப்படிப்பட்ட நெருக்கடிகளை தருகின்ற பாணியே தனிதான். அப்படிப்பட்ட ஒரு அடிநீரோட்ட காய் நகர்த்தல்கள் காங்கிரஸ் கட்சியால் நடத்தப்படுகிறதா? மாநில ஆட்சியில் கூட்டணி ஆட்சியை நிறுவ, ஏதாவது நிர்ப்பந்தம் இப்போதிலிருந்தே கொடுக்கப்படுகிறதா? அதற்காக மத்திய ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்த முயல்கிறார்களா? எதிர்கட்சிகள் மீது சி.பி.ஐ. வழக்குகள் மூலம் நிர்ப்பந்தம் கொடுப்பதாக காங்கிரஸ் மீது ஏற்கனவே புகார் இருக்கிறதே? அதையும் கூட பிரதமர் தனது பேட்டியில் மறுத்திருக்கிறாரே?
இப்போது வெளிவரப்பட்டுள்ள உள்துறை அமைச்சகத்தின் குறிப்பிட்ட அதிகாரப்பூர்வமான அறிக்கை, அப்படிப்பட்ட சந்தேகங்களை ஏற்படுத்துகிறது அல்லவா? மத்திய உள்துறை இணைச்செயலாளர் தர்மேந்திர சர்மா, வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தியாவுக்கு கள்ளத்தோணி மூலம் விடுதலைப்புலிகள் வந்துள்ளனர் என்பதாகவும், விடுதலைப்புலி ஆதரவாளர்களால் தமிழக பாதுகாப்புக்கு ஆபத்து என்பதாகவும் கூறியுள்ளார். இதுதான் இப்போது மேல்மட்டங்களில், பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அந்த அறிக்கையில் இலங்கையில் நிலவும் கொந்தளிப்பைப் பயன்படுத்தி விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆதரவு திரட்ட, அதன் ஆதரவு அமைப்புகள் ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தி அமைதியற்ற நிலையை ஏற்படுத்தி தமிழகத்திற்கு ஒரு பாதுகாப்பற்ற நிலையை ஏற்படுத்தியுள்ளனர் என்பதாக கூறுகிறார். இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பான செய்தி.
ஏனென்றால் இலங்கைத் தீவில், விடுதலைப்புலிகள் அமைப்பில் போரில் வென்று, அதிபர் மகிந்தா அந்த வெற்றியின் ஓராண்டை கொண்டாடியும் விட்டார். அதனால் அங்கே கொந்தளிப்பான சூழல் இல்லை. தமிழ்நாட்டிலும் காவல்துறை விடுதலைப்புலி ஆதரவாளர்களுக்கு, எந்தவொரு ஊர்வலம், ஆர்ப்பாட்டம் நடத்தவும் எளிதாக அனுமதிக் கொடுப்பதில்லை. நீதிமன்ற உத்தரவில் அனுமதிப் பெற்றவர்களையும், ஆயிரம் நிபந்தனைப் போட்டு அடக்கி வருவது தமிழக காவல்துறையின் வழக்கமாக ஆகிவிட்டது. அப்படியிருக்கும் போது தமிழகத்தில் நிலவும் சட்டஒழுங்கு நிலைமைப் பற்றி அபாண்டமாக மத்திய அரசு ஓர் அறிக்கையை வெளியிட வேண்டிய தேவை என்ன?
உள்துறையின் அறிக்கையில் எஞ்சியுள்ள விடுதலைப்புலியின் போராளிகளும், தலைவர்களும் நம்பிக்கை துரோகிகள் என இந்திய அரசையும், எதிரிகள் என இலங்கை அரசையும் பழிவாங்கும் நோக்கத்துடன் தமிழகத்தில் ஒன்று சேர்ந்து வருகின்றனர் என்று பொறுப்பற்ற ரீதியில், ஒரு பொல்லாப்பை கூறியுள்ளது. கடல்வழியாகவும், முறையான ஆவணங்கள் மூலமாகவும், இலங்கை தமிழ் அகதிகள் என்ற போர்வையில் இந்தியாவுக்குள் நுழைவதற்கான வாய்ப்புகள் இருப்பதை புறந்தள்ளிவிட முடியாது என்று உள்துறை கூறுகிறது. இத்தகைய கூற்று, உள்துறையின் தாக்கும் குறிகளாக அப்பாவி ஈழ அகதிகள் இருக்கிறார்கள் என்பதை காட்டுகிறது. தமிழக முதல்வர் தனது முயற்சியில், ரூ.100 கோடியை ஒதுக்கி தமிழகத்தில் வாழும் ஈழ அகதிகளுக்கு மேம்பாட்டு உதவிகளை செய்து வருகின்ற நேரத்தில், அந்த அப்பாவி 1 லட்சம் மக்கள் மீது இப்படிப்பட்ட அபாண்ட பழியை, மத்திய அரசு சுமத்த வேண்டிய காரணம் என்ன?
இணையதளத்தில் ஈழப்போரின் தோல்விக்கு இந்தியாவே காரணம் என்ற இந்திய விரோதப்போக்கை, இலங்கைத் தமிழரிடையே விதைக்கின்ற வகையில் கட்டுரைகள் எழுதப்படுவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இது உலக அரங்கில் இருக்கின்ற தமிழர்களின் கருத்துரிமைக்கு, எழுத்துரிமைக்கு எதிராக இந்திய அரசு தொடுக்கின்ற மிரட்டல் என்பதாகத் தான் எடுத்துக்கொள்ளப்பட முடியும். இதே கருத்தை மக்களவையிலும், மாநிலங்களவையிலும் தமிழ்நாட்டு எம்.பி.க்கள் பேசியிருக்கிறார்கள். அவர்களிடம் முறையாக அந்த அவைகளில் பதில் சொல்லாத, உள்துறை அமைச்சகம் இந்த நேரத்தில் இப்படிப்பட்ட அறிக்கையை வெளியிடுவதன் நோக்கம் என்ன?
மாநில நிர்வாகத்தின் நடவடிக்கைகள் மீதும் புலி ஆதரவாளர்கள் வெறுப்புற்றிருக்கிறார்கள் எனவும் மத்திய அரசு கூறுகிறது. அதனால் தான் விடுதலைகள் புலிகள் அமைப்பை சட்டவிரோதமானது என்று மத்திய அரசு அறிவித்துள்ளதாக ஒரு நியாயப்படுத்தல் அறிக்கையை, உள்துறை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை மாநில ஆட்சியை நெருக்குவதற்கும், மிரட்டுவதற்கும் என்று சொன்னால் சரியாக இருக்குமா? இதற்கு முன்னால் மத்திய அரசு இதுபோன்று மாநில அரசை மிரட்டிய வரலாறு உண்டா? அதற்காக பொய்க் காரணங்களை கூறிய ஆதாரங்கள் இருக்கிறதா? இந்த கேள்விகளுக்கு பதிலை நாம் தேட வேண்டும்.
2005ம் ஆண்டு தமிழகத்தில் ஜெயலலிதாவை முதல்வராகக் கொண்டு, அ.தி.மு.க. ஆட்சி நடந்து வந்தது. அப்போது மத்திய அரசின் உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் இதுபோன்ற பீதியுற வைக்கும் கடிதத்தை, மாநில அரசுக்கு அனுப்பி வைத்தது. 200405 ஆண்டுக்கான உள்துறை அறிக்கையில், சிவராஜ் பாட்டீல் தமிழ்நாட்டில் புலிகள் நடமாட்டம் இருப்பதாக ஒரு அச்சுறுத்தும் அறிக்கையை வெளியிட்டார். 200304 ஆண்டுக்கான அறிக்கையில், உள்துறை அமைச்சர் அத்வானி அப்படிப்பட்ட எந்தவொரு சட்டஒழுங்கு பிரச்சனையையும் தமிழ்நாடு பற்றி கிளப்பவில்லை. இடைப்பட்ட ஓராண்டில் எதுவும் நடக்காதபோது, மத்திய உள்துறை ஏன் அப்படி பீதியை கிளப்பியது? அடுத்து அன்றைய முதல்வரை கொலை செய்வதற்காக, 2 விடுதலைப்புலிகளின் தற்கொலை பெண்புலிகள் இறங்கியிருப்பதாக, முதலமைச்சருக்கு உள்துறை அமைச்சர் கடிதம் அனுப்பினார். இவை அனைத்துமே தமிழ்நாட்டில் சட்டஒழுங்கு இல்லை என்ற கற்பித்தலை ஏற்படுத்தத்தான் என்று அன்றைய முதல்வர் அறிக்கை விடுத்தார்.
இப்போது செம்மொழி மாநாட்டிற்கான துரிதப் பணிகளில், தமிழக ஆட்சியாளர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள். உலகம் முழுவதும் செம்மொழி தமிழ் மாநாடு மூலம், விரும்பியோ, விரும்பாமலோ, தமிழின உணர்வும், தமிழ் மொழி உணர்வும் மேலோங்கும் என்ற அச்சம் மத்திய அரசுக்கு இருக்கிறது. அதனால் தான் இந்த சந்தர்ப்பத்தில், இப்படியொரு அச்சுறுத்தல் அறிக்கையை அவர்கள் வெளியிட்டுள்ளார்கள். இதை புரிந்துக்கொள்ளும் தமிழக அரசியல் சக்திகள், சரியான வழியில் பதில் கொடுத்து, அச்சுறுத்தும் அறிக்கைகளை முறியடிக்க முடியும். தேர்தல் அரசியல் களத்தில் இருக்கும் தமிழக அரசியல் சக்திகள், விவரம் புரிந்து வியூகம் உடைப்பார்களா என்பதே நமக்கு எழுகின்ற கேள்வி.

Tuesday, May 25, 2010

கள்ளத்தோணியும், நல்ல தோணியும்

இந்திய அரசுக்கு எப்போதுமே அறிக்கைகள் கொடுப்பதில் ஒரு அலாதி பிரியம் உண்டு. அதுவும் இந்தியாவில் அரசியல்வாதிகளுக்கு பதில், அமைச்சர்களுக்கு பதில், உயர் அதிகாரிகள் மூலம் அறிக்கைகள் கொடுப்பதில்தான் அந்த அலாதிப் பிரியம் வெளிப்படும். இந்தமுறை அத்தகைய ஒரு அறிக்கையை மத்திய உள்துறையின் இணைச்செயலாளர் தர்மேந்திர சர்மா மூலம் வெளியிட்டுள்ளனர். இந்தியாவின் உள்நாட்டு அடக்குமுறையை மாவோயிஸ்டுகள் பெயரில் கட்டவிழ்த்துவிட, உள்துறை செயலாளர் ஜி.கே.பிள்ளை மூலம் வெளியிடுவார்கள். அதை அடுத்த ஒரு திட்டத்திற்கு இப்போது இணைச் செயலாளரை பயன்படுத்துகிறார்கள் போலத்தெரிகிறது. இந்த அறிக்கையில் மத்திய அரசின் குறி, விடுதலைப்புலிகள் மீது. இந்திய அரசும், இலங்கை அரசும் ஏற்கனவே விடுதலைப்புலிகள் முழுமையாக அழிக்கப்பட்டுவிட்டனர் என்று அறிவித்தார்களே என்று நீங்கள் அப்பாவித்தனமாக கேட்கலாம். அதுவும் உண்மைதான். திட்டமிட்டு ஏழு நாடுகள் அல்லது இப்போது புரிவதுபோல இருபது நாடுகள் சேர்ந்து திட்டமிட்டு புலிகள் இயக்கத்தை அழித்துவிட வேண்டுமென்று, இலங்கை அரசுக்கு முழுமையான உதவியைச்செய்தன. அதன் உண்மைப்பொருள் புலிகள் இயக்கத்தை அல்ல, ஆனால் ஒட்டுமொத்த தமிழ் இனத்தை என்பதை அப்போது பலரும் புரிந்து கொள்ளவில்லை. உள்ளபடியே இலங்கை அரசுக்கும், அண்டை நாடுகளில் உள்ள விரிவாக்க சிந்தனையுள்ள அரசுகளுக்கும், தமிழ் இனத்தின் எழுச்சி என்பதன் மீது ஒருவிதமான அச்சம் இருக்கிறது.
பாரம்பரியமிக்க தமிழ் தேசிய இனம், ஆங்கிலேயரின் ஆட்சி காலத்திலேயே அவர்களது தேவைக்காக ஒவ்வொரு நாட்டுக்கும் இந்தியாவிலிருந்து அனுப்பிவைக்கப்பட்டனர். அதாவது அன்று ஆங்கிலேயர்களுக்கு குடிக்க தேநீர் தேவைப்பட்டது. அதற்காக தேயிலைத்தோட்டங்களை மலைப்பகுதிகளில் நிறுவ முயன்றனர். தாங்கள் காலனிகளாக ஆக்கிரமித்துள்ள நாடுகளில் மலைப்பிரதேசங்களை அடையாளங்கண்டனர். அப்படி அவர்கள் அடையாளங்கண்ட நாடுகள் மலேசியாவும், இலங்கையும். அந்த இரு நாடுகளுக்கும் தேயிலைத்தோட்டங்களை உருவாக்க கடினமாக உழைக்கும் கூட்டம் அவர்களுக்கு தேவைப்பட்டது. ஆங்கிலேயர்கள் கண்டுபிடித்த கடின உழைப்பாளர்கள் தமிழர்களே. அதனாலேயே இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டிலேயிருந்து கூலித்தொழிலாளர்களை கூட்டம், கூட்டமாக அந்த இரு நாடுகளுக்கும் ஆங்கிலேயர்கள் எடுத்து சென்றனர். அப்படி அந்த நாடுகளுக்கு சென்ற தமிழர்கள் இலங்கையிலும், மலேசியாவிலும், மலைகளை, காடுகளை வெட்டி, பண்படுத்தி, தோட்டங்களாக மாற்றி, அவற்றில் தேயிலைச் செடிகளை வளர்த்து, அந்த தேயிலைச் செடிகளுடன் அதிகாலை ஆறு மணியிலிருந்து போராடி, மாலை வரை உழைத்து, கோடி, கோடியாக அந்த நாடுகளுக்கு சம்பாதித்து கொடுத்துள்ளனர். அப்படிப்பட்ட தமிழர்களை இலங்கை அரசு, குடியுரிமை தராமல் பல ஆண்டுகள் அடிமைகளாக நடத்தி வந்தது. அதன்பிறகு இன்று வரை மலையக தோட்டத்தொழிலாளர்களான இந்திய வம்சாவழியினருக்கு, எந்த ஒரு முன்னேற்றமும் கொடுக்க வில்லை. மாறாக அவர்களது அரசியல் பிரதிநிதிகளை அடிமைகளாக இலங்கையின் சிங்கள அரசு நடத்தி வருகிறது. சுதந்திரமான தொழிற்சங்கத்தையோ, தொழிலாளர்களின் அரசியல் பிரதிநிதிகளையோ வளர விடுவதில்லை. அன்றைய காலத்தில் ஷண்முகதாசன் தொடங்கி, இன்றைக்கு மனோகணேசன் வரை தோட்ட தொழிலாளர்கள் மத்தியிலிருந்து வளரும் தலைவர்களை வெற்றி பெற விடுவதில்லை.
அதையும் மீறி எதிர்கட்சியான ஐ.தே.க. எம்.பி.யாக, மலையகப் பகுதியான நுவரலியாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட காதரையும் ஆளுங்கட்சி இப்போது இழுக்கிறது. தென்னிலங்கையில் இந்திய வம்சாவழி தமிழர்கள், சிங்கள பெரும்பான்மை மக்கள் மத்தியில் அச்சத்துடன்தான் வாழ முடிகிறது. இதே நிலைமைதான் மலேசியாவிலும் நடந்து வருகிறது. மலேசியாவில் மலாய் இனத்தவருக்கு போட்டியாக பெரும்பான்மையாக இருக்கும் சீன இனத்தை இணைத்துக் கொண்டுதான், தமிழர்கள் அங்கே அரசியல் களத்தில் வெற்றி பெற முடிகிறது. உதாரணமாக ஜனநாயக செயல்கட்சி என்ற சீன இனத்தவர் தலைமையிலான கட்சியில் தங்களை இணைத்துக்கொண்டு, பிணாங்கு மாநிலத்தில் துணை முதல்வராகவும், அதேபோல எம்.பி.க்களாகவும், எம்.எல்.ஏ.க்களாகவும் தமிழர்கள் தங்களை அறுதியிட்டுக் கொள்கின்றனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் திறமையும், தகுதியும், கடின உழைப்பும் உள்ள தமிழர்கள் விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று ஆளுகின்ற ஆட்சியாளர்கள், இந்த வட்டாரத்திலும் எண்ணுகிறார்கள்.
அதன் பாதிப்புதான் இன்றைக்கு விடுதலை புலிகளுக்கு எதிராக மத்திய அரசு திடீரென எதிர்பாராதவிதமாக கொடுத்திருக்கின்ற அறிக்கை. ஈழத்தில் 4வது வன்னிப்போர் தோற்றப்பிறகு, ஆயுதம் தாங்கிய தமிழர்களின் படை தோற்கடிக்கப்பட்ட பிறகு, அவர்களது அனைத்து நாட்டு தொடர்புகளும், போராளிகளும், பிடிபட்டபிறகும் ஆள்வோருக்கு ஏன் இந்த கொலைவெறி என்பதாக தமிழர்கள் எண்ணிப் பார்க்கிறார்கள். அழிக்கப்பட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்ட புலிகள் இயக்கத்திற்கு, அடுத்த நாடான இந்தியாவில் இரண்டு ஆண்டுகளுக்கு தடை நீடிப்பு. அதையொட்டி, இப்போது அச்சுறுத்தும் வகையில் கள்ளத்தோணி பற்றி மத்திய உள்துறையின் அறிக்கை.
புலிகள் இயக்கத்திலிருந்து தப்பியோடி வந்தவர்கள், பழைய போராளிகள் இவர்களெல்லாம் மீண்டும் தமிழ்நாட்டில் கூடி, ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தப்போகிறார்கள் என்று நம்ப முடியாத ஒரு புதிய கதையை நமது உள்துறை அறிவித்துள்ளது. அதற்காக மூன்று காரணங்களையும் வரிசைப்படுத்தி எழுதியுள்ளது. வன்னிப்போரில் இந்திய அரசின் தமிழர் விரோத பங்களிப்பை பற்றி கோபத்துடனும், ஆதங்கத்துடனும், அழுகையுடனும் உலகம் முழுவதும் தமிழர்கள் எழுதி வருகின்ற எழுத்துக்கள், மத்திய அரசால் இங்கே கோடிட்டு காட்டப்படுகின்றன. உள்ளபடியே அரசியல் போராட்டத்தில் இனி ஈடுபடுவது மட்டுமே,
தமிழ் தேசிய இனத்திற்கு எதிர்காலத்தை உருவாக்கி கொடுக்கும் என்ற நம்பிக்கையில் உலகத் தமிழினம் செயல்பட்டு வருகிறது. அதற்காக ஒரு வடிவமைப்பையும், நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்ற பெயரில் ஏற்படுத்தி வருகிறது. எந்த விதத்திலும் ஆயுதங்களை பற்றிய சிந்தனை சிறிதும் இல்லாமல், அரசியல் போராட்டத்தில் மட்டுமே நம்பிக்கை வைத்து உலகத் தமிழர்கள் தங்கள் பாதைகளை வடிவமைத்து வருகின்றனர். தமிழ் தேசிய இனத்தின் உலகம் தழுவிய தாக்கத்தை புரிந்து வைத்துக் கொண்டுள்ள, எதிர் சக்திகள் இப்போது அத்தகைய அரசியல் போராட்டத்தை உடைப்பதற்காக பல்வேறு வழிகளில் சதிகளை கட்டவிழ்த்துவிட்டுள்ளனர்.
அவற்றில் மீண்டும் ஆயுதப் போராட்டம் தொடங்கும் என்றும், மீண்டும் புலிப் போராளிகள் தாக்குவார்கள் என்றும் வீர வசனங்களை பேசுகின்ற உணர்ச்சித் தமிழர்களையும், அப்பாவித் தமிழர்களையும் ஒருபுறம் அனுமதிக்கிறார்கள். இன்னொரு புறம், ஈழத்தில் மீண்டும் காடுகளில் ஆயுதம் தாங்கிய புலிகள் இருப்பதாக, அல்லது அணி சேர்வதாக ஒரு மாயையை, கதை வடிவில் வசனங்களுடன் வெளியிடுகிறார்கள். அதன்மூலம் இலங்கையின் வடக்கிலும், கிழக்கிலும் சிங்கள ராணுவத்தை தொடர்ந்து தக்க வைப்பதற்கும், அவசர நிலையை இலங்கைத் தீவில் தொடர வைப்பதற்கும், மிச்சமீதி போராளிகளை அடையாளம் கண்டு கைப்பற்றுவதற்கும் பயன்படுத்துகிறார்கள். அதேபோல, இந்தியாவில் புலிகள் மீதான தடையை நீட்டிப்பதற்கு அதையே காரணமாக பயன்படுத்துகிறார்கள். இப்போது, மேற்கண்ட தகவல்களை காரணங்களாக மாற்றி, ஓடிவந்த அல்லது தப்பிவந்த அல்லது விரக்தியடைந்த அல்லது மனைவி, மக்களுடன் நிம்மதியாக தமிழ்நாட்டில் வாழ்வதற்காக அடைக்கலம் தேடிவந்த, ஈழத் தமிழர்களை மேலும் ஒடுக்குவதற்காக இத்தகைய அறிக்கைகளை பயன்படுத்துகிறார்கள். மேற்கண்ட அச்சம் தமிழர்கள் மத்தியில் நிலவுகிறது. அதுமட்டுமின்றி மாநில அரசாங்கத்தில் இருக்கின்ற கட்சியின் மீது, ஒரு விதமான நெருக்கடியை உருவாக்குவதற்காக, மத்திய அரசு இத்தகைய அணுகுமுறைகளை செய்கிறதா என்ற சந்தேகம் மாநில ஆளுங்கட்சி வட்டாரத்தில் பிரதிபலிக்கிறது.
எது எப்படி இருந்தாலும், இந்திய குடிமக்களாகிய நாம் மத்திய அரசின் கொள்கைகளையும், அறிக்கைகளையும் நம்பி மட்டுமே வாழ்ந்து வருகிறோம். தமிழர்களுக்கு அமைதி வழியில், அறவழிப்பாதையில், அரசியல் போராட்டங்களின் மூலம் ஒரு ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்கி கொடுக்க, இன்றைய சூழலில் உறுதி எடுக்க வேண்டியது தேவையாக இருக்கிறது.

Monday, May 24, 2010

சிதம்பரத்தை குற்றம்சாட்டிய ஆய்வறிக்கை

கடந்த மாதம் சத்தீஸ்கர் மாநிலத்தில் தண்டேவாடா பகுதியில் மத்திய மற்றும் மாநில காவல்படையினர் 76 பேர் கொல்லப்பட்ட நிகழ்வு பற்றி ஆய்வு செய்ய, மத்திய அரசு எல்லைப்பாதுகாப்பு படையின் முன்னாள் பொது இயக்குநர் ராம்மோகன் மூலம் ஏற்பாடு செய்திருந்தது. இப்போது அந்த ராம்மோகனின் அறிக்கை வெளிவந்துள்ளது. அதில் மத்திய உள்துறை அமைச்சகம், சத்தீஸ்கர் அரசாங்கம், மற்றும் அரசு நிறுவனங்களை பொறுப்பாக்கி ஆய்வுகள் வெளியிடப்பட்டன. நடவடிக்கைகளுக்காக விதிகளை வழிகாட்டியிருந்தும் கூட, அவை சரியான முறையில் பின்பற்றப்படவில்லை என்று அதில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
கொல்லப்பட்ட மத்திய சிறப்பு காவல்படையின் 62வது அணியினர், தங்களுக்கு கொடுக்கப்பட்ட வழிகாட்டல்களை எச்சரிக்கையின்றி செயல்படுத்தினார்கள் என்று அந்த குற்றச்சாட்டுக் கூறுகிறது. காடுகள் வழியாக ஒரு அரைவட்ட வடிவில் முன்னேறி தேடுதல் வேட்டையை நடத்துமாறு வழிகாட்டல்கள் கொடுக்கப்பட்டிருந்தன. ஆனால் அவற்றை அலட்சியப்படுத்தி விட்டு துணை தளபதி சத்தியவான் யாதவ், சிந்தாள்நார் பகுதியிலிருந்து தனது படைவரிசையை, முக்ரம் என்ற கிராமத்திற்கு ஒற்றைவழிப் பாதை மூலம் பின்வாங்கி எடுத்துச் சென்றார் என்று குற்றம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த முயற்சி ஒரு தற்கொலை முயற்சி என்பதாக அறிக்கை வர்ணிக்கிறது. இது மத்திய சிறப்பு காவல்படையில் பலவீனமான தலைமை இருப்பதை சுட்டிக்காட்டுகிறது. சிந்தள்நார் முகாமில், வீரர்களுக்கு எந்தவொரு தற்காப்பு வாய்ப்புகளும் இல்லை. தங்கும் இடமும் கூட, சௌகரியமாக இல்லை.
மாநில காவல்படையும், மத்திய படையும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்று ராம்மோகன் கூறுகிறார். மத்திய சிறப்பு காவல்படைக்கு உள்ளேயிருக்கும் குறைபாடுகளை ஆய்வு செய்யும் போது, மாவோயிஸ்ட்களை எதிர்த்து தாக்குப்பிடிக்கும் அளவிற்கு தன்மை உள்ளவர்களாக அவர்கள் இல்லை. ஆய்வறிக்கை வெளியிடப்பட்டதையொட்டி மத்திய சிறப்பு காவல்படை தங்களின் 3 பெரிய அதிகாரிகளை இடமாற்றம் செய்துள்ளது. அதில் டி.ஐ.ஜி.நலின் பிரபாத், படை தளபதி விமல் பிசிட், ஆய்வாளர் சஞ்சிவ் பாக்ரே ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், மே 6ம் நாள் பேசச் சென்ற உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், தண்டேவாடா பிரச்சனை மீது விவாதம் எழுந்த போது, 1 ஐ.ஜி.யும், 2 டி.ஐ.ஜி.யும், 1 எஸ்.பி.யும் சிந்திக்காமல், திட்டமிடாமல் நடந்து கொண்டுள்ளனர் என்று பகிரங்கமாகவே அறிவித்தார். கட்டுப்பாடுள்ள மத்திய ஆயுதப்படையின் உள்விவகாரங்களை ஆய்வு செய்து அறிக்கை வெளியிடப்படுவதற்கு முன்பே, சம்மந்தப்பட்ட அமைச்சர் இப்படி பகிரங்கமாக உயர் அதிகாரிகளைப் பற்றி குற்றம்சாட்டி பொது இடத்தில் பேசலாமா என்பது நமக்கு புரியவில்லை. ஆனால் ஆய்வறிக்கையை வெளியிட்ட ராம்மோகன் குழுவும், விசாரணை நீதிமன்றம் கொடுத்துள்ள கண்டுபிடித்தல்களும், மேற்கண்ட மூன்று அதிகாரிகளுக்கு மிகவும் சிறிய அளவுதான் சம்பவத்தில் பங்கு உண்டு என்று கூறியுள்ளன. அதேசமயம் படைவீரர்களும், களத்தில் இருந்த தளபதிகளும் மேலிருந்து கொடுக்கப்பட்ட திட்டங்களை அலட்சியப்படுத்தி விட்டு, மேலிடத்திற்கு தங்கள் நடமாட்டத்தைப் பற்றிய பொய்ச் செய்திகளை கொடுத்துள்ளனர் என்று ராம்மோகன் குழு கூறியுள்ளது. மத்திய சிறப்பு காவல்படையை முழுமையாக சார்ந்து தான், மாவோயிஸ்ட் எதிர்ப்பு நடவடிக்கைகளை அரசு நடத்த வேண்டியுள்ளது. ஆகவே இது மிகவும் சிக்கலாகிவிட்ட ஒரு பிரச்சனை.
மாவோயிஸ்ட்கள் மத்திய சிறப்பு காவல்படை மீது நடத்திய தாக்குதல்கள் அனைத்துமே, 5கி.மி. தூரத்தில் இருக்கும் தங்களது முகாம்களில் இருந்து தான் நடத்தியுள்ளனர் என்பதும் இப்போது தெளிவாகியுள்ளது. அதாவது மாவோயிஸ்ட்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்குச் சென்ற, மத்திய அரசு படை தங்களுக்கு சுற்றுவட்டாரத்தில் இருக்கும் ஆயுதந்தாங்கிய மாவோயிஸ்ட்களின் குவிதலை அப்புறப்படுத்தாமல், அசட்டையாக இருந்துள்ளனர் என்பது இங்கு தெரிந்துள்ளது.
இப்போது இடமாற்றம் செய்யப்படும் அதிகாரியான பிஸ்ட், 62வது படையணியின் ஆல்பா கம்பெனியை, சுற்றுப்புறமுள்ள மாவோயிஸ்ட்களை விரட்டுவதற்கு கட்டளையிட்டிருக்கிறார். அந்த கட்டளையை அவர்கள் அலட்சியப்படுத்தி விட்டார்கள். இதை விசாரணை நீதிமன்றம் கண்டுபிடித்துள்ளது. ஏப்ரல் 4ம் நாள் மாலையில், 62வது படையணியிலிருந்து ஒரு ஒயர்லஸ் செய்தியை தங்களது தலைமைக்கு அனுப்பியுள்ளனர். அதில் தாங்கள் நடவடிக்கைகளை தொடங்கிவிட்டதாக எழுதியுள்ளனர். உண்மையில் அவர்கள் அப்போது தங்கள் இடத்தை விட்டு நகரவில்லை. மறுநாளான ஏப்ரல் 5ம் நாள் அதிகாலை 2.30 மணிக்கு, சிந்தாள்நார் முகாமை விட்டு அவர்கள் புறப்பட்டு, புர்காபால் என்ற கிராமத்தில் சோதனை நடத்த சென்றனர். மீண்டும் அரசப்படையினர் முக்ராம் என்ற கிராமத்திற்கு திரும்பி வந்தனர். மதியத்திற்கு மேல் முக்ராம் கிராமத்தின் அருகே மைதானத்தில் அமர்ந்தனர். தண்ணீருக்கும், எரியூட்ட கட்டைகளுக்கும் ஆள் அனுப்பினர். பெரியதொரு பாத்திரத்தில் கிச்சடியை உணவுக்கு தயார் செய்தனர். படையணிக்கு கொடுக்கப்பட்டிருந்த சமைக்கப்பட்ட உணவை அவர்கள் எடுத்துச் செல்லவில்லை. இந்த அளவுக்கு தங்களது பாதுகாப்பில் கட்டுப்பாடு இல்லாமல் இருந்திருக்கிறார்கள் என்பது இப்போது அம்பலமாகியுள்ளது. ஏப்ரல் 6ம் நாள் அதிகாலையில் முக்ரம் கிராமத்திற்கு திரும்பிய பின், தங்களது ஒயர்லஸ் செட் ஒன்று தொலைந்ததை படையணியினர் உணர்ந்துள்ளனர். இந்த நடமாட்டம் பற்றிய தெளிவான செய்திகளை, மாவோயிஸ்ட்கள் தங்களது ஒற்றர்கள் மூலம் அறிந்த பிற்பாடு, படையணி திரும்பி வரும் போது தங்களது தாக்குதலை நடத்தியுள்ளனர்.
மாவோயிஸ்ட்கள் நடமாட்டம் அதிகமாகயிருக்கும் பகுதிகளில், படையணியினர் சோதனை நடத்த தயங்குகின்றனர் என்ற செய்தியும் வெளியாகியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தின் தலைநகரான ரெய்பூரில் உள்ள உளவுத்துறை நிலையத்திற்கு, மே 5ம் நாளே அந்த பகுதியில் மாவோயிஸ்ட்கள் அதிகமாக குவிந்துள்ளது பற்றிய செய்தி கிடைத்துள்ளது. அதை அவர்கள் தண்டேவாடாவிலுள்ள சத்தீஸ்கர் காவல்துறைக்கு, மாலையிலேயே அனுப்பியுள்ளனர். ஆனால் வட்டார காவல்துறை அப்படிப்பட்ட செய்தி தாக்குதலுக்கு முன்பு கிடைக்கவில்லை என்பதாக கூறுகிறார்கள். அரசப்படையினர் காடுகளில் போர்புரியும் தந்திரங்களிலும் பயிற்சி பெற்றிருக்கவில்லை. இதே நேரத்தில் உத்திரபிரதேசத்தில் உள்ள ராம்பூர் தலைநகரில் அரசப்படையினர் பல்வேறு ஆயுதங்களையும், தோட்டாக்களையும் வட்டாரத்திலுள்ள கிரிமினல்களுக்கு விற்றதற்காக பிடிபட்டுள்ளனர்.
உள்துறை செயலாளர் ஜி.கே.பிள்ளை, மாவோயிஸ்ட்களுக்கு எதிரான கடுமையான போரை நடத்த வேண்டும் என்று கூறும் அதே நேரம், அவரது மனைவியான திட்டகமிஷன் உறுப்பினர் செயலாளர் சுதா பிள்ளை, வளர்ச்சித் திட்டங்களை எடுத்துச் செல்வதன் மூலம் மட்டுமே, மாவோயிஸ்ட்களை வெல்ல முடியும் என்று கூறியுள்ளார்.
அதேநேரம் எழுத்தாளர் அருந்ததி ராய் மாவோயிஸ்ட்கள் எந்தவொரு காந்தியவாதியை விடவும், அதிக காந்தியவாதியாக இருக்கிறார்கள் என்றும் கூறியுள்ளார். அரசு செயல்படாத பகுதிகளில் தான் மாவோயிஸ்ட்கள் செயல்படுகிறார்கள் என்றும் செய்திகள் அறிவிக்கின்றன. மேற்கண்ட அறிக்கைகளில் குற்றம்சாட்டப்படும் நிலையில் உள்ள அமைச்சர் ப.சிதம்பரம் அதற்கான பொறுப்பை ஏற்பாரா என்ற கேள்வி, மங்களூர் விமான விபத்திற்கு பொறுப்பேற்கிறேன் என்று அமைச்சர் ரபுல் பட்டேல் தெரிவித்த பிறகு நமக்கும் எழுகிறது.

Saturday, May 22, 2010

ராஜிவ்காந்தி நிலைப்பாடு தொடர்கிறதா?

19 ஆண்டுகளுக்கு முன்னால், மே 21ம் நாள் தமிழ்நாட்டில் உள்ள திருப்பெரும்புதூரில், முன்னாள் தலைமை அமைச்சர் ராஜிவ்காந்தி மனித வெடிகுண்டின் மூலம் கொல்லப்பட்டார். அந்த நாள் பயங்கரவாத எதிர்ப்பு நாளாக ஒவ்வொரு ஆண்டும் கடைப்பிடிக்கப்படுகிறது. ராஜிவ்காந்தி உயிரோடு இருக்கும் போது கடைப்பிடித்து வந்த கொள்கைகள், நிலைப்பாடுகள் தொடர்ந்து காங்கிரஸ் தலைமையால் செயல்படுத்தப்படுகிறதா என்ற கேள்வியை கேட்க வேண்டிய நாள் இது.
ராஜிவ்காந்தியின் நிலைப்பாடு என்றால் என்ன என்ற கேள்வி முதலில் எழுகிறது. ராஜிவ்காந்தி கொண்டு வந்த புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசும், மாநில அரசுகளும் கடைப்பிடித்து வருவதன் மூலம் திடீர் பணக்காரர்களை கல்வி வள்ளல்களாக மாற்றக்கூடிய சுயநிதி கல்விச் சாலைகளையும், நிகர்நிலை பல்கலைக்கழகங்களையும் ஏற்படுத்தியிருக்கின்றனர் என்பது உண்மை தான். அதன் விளைவாக கல்வியின் தரம் குறைந்து, காசுக்காக கல்வியை விற்கின்ற ஒரு நிலை உருவாகியுள்ளது. அதுவே மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையை பாதித்துள்ளது. அதன் விளைவாக இப்போது நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் பற்றி, மறுபரிசீலனை செய்யும் அளவிற்கு மத்திய அரசு தள்ளப்பட்டுள்ளது. இதுகூட அவரது நிலைப்பாட்டின் தொடர்ச்சிதான்.
ராஜிவ்காந்தியின் தாயார் இந்திராகாந்தி, இந்திய தலைமை அமைச்சராக கடமையாற்றும் காலத்திலேயே, சீக்கிய பயங்கரவாதிகளால் சுடப்பட்டு கொல்லப்பட்டார். அப்போது ஆத்திரமடைந்த காங்கிரஸ் கட்சியின் சேவாதள உறுப்பினர்கள், டெல்லியில் சீக்கிய வீடுகளில் புகுந்து மூவாயிரம் இளைஞர்களை படுகொலை செய்தனர். ஆத்திரத்தில் ராஜிவ்காந்தி அந்த படுகொலைகளை நியாயப்படுத்தி பேசினார். அத்தகைய அரசமனப்பான்மை இன்றைக்கும் காங்கிரஸ் தலைமையில் தொடர்கிறது. அதனால் அவரது நிலைப்பாடு தொடர்கிறது என்று சிலர் கூறிக்கொள்ளலாம். அரச வம்சமும், வாரிசு மனப்பான்மையும், பண்ணையாதிக்கச் சிந்தனையும், பழிவாங்கும் மனப்போக்கும், வன்முறையை நியாயப்படுத்தும் தன்மையும் மட்டுமே அவரது நிலைப்பாடுகள் என யாராவது எண்ணினார்கள் என்றால், அவர்கள் அவரது நிலைப்பாடு முறையாக தொடரத்தானே செய்கிறது என்று வாதிடலாம்.
ஆனால் இந்தியா என்ற மாபெரும் தீபகற்ப நாட்டில், 100 கோடிக்கு மேல் மக்கள் வாழும் போது, அவர்களது எதிர்காலத்திற்காகவும், இந்தியாவின் நிலையான தன்மைக்காகவும், ராஜிவ்காந்தி அளித்த பங்களிப்பு தொடர்கிறதா என்பது தான் ஆராயப்பட வேண்டிய கேள்வி. அதிலும் கூட இலங்கைத் தீவில் சமாதானம் ஏற்படுத்த என்ற பெயரில் ராஜிவ்காந்தி, இந்திய அமைதிப்படையை அனுப்பி வைத்தது தமிழர்களுக்கு எதிரானது தானே என்ற கேள்வியும் எழுகிறது. அப்படி தமிழர்களுக்கு எதிராக அவர் எடுத்த நிலைப்பாட்டை, மேலும் வலுப்படுத்தி ஈழத்தமிழர்களை இன அழிப்புச் செய்த, இனவாதப் போரை நடத்திய மகிந்தா அரசாங்கத்திற்கு ஆதரவு கொடுத்தது அவரது நிலைப்பாட்டை மேலும் தொடர்வது தானே என்று சில காங்கிரசார் வாதம் செய்யலாம்.
இந்தியா இலங்கை என்ற அளவில் தனது தலையீட்டை செய்து வந்த ராஜிவ்காந்தியின் நிலைப்பாட்டை விட, இன்றைய காங்கிரஸ் தலைமை இலங்கை ஆட்சியாளர்களின் தமிழின அழிப்பு நடவடிக்கைகளுக்கு நேரடியாக துணை நிற்பதும், அவர்களை உலக அரங்கில் நியாயப்படுத்த அனைத்து பணிகளையும் செய்வதும், ராஜிவ்காந்தியின் நிலைப்பாட்டை வலுப்படுத்தவில்லையா என்றும் அவர்கள் வினவலாம். ஆனால் நமது கேள்வி இந்திய மக்களுக்கு, இந்திய நாட்டிற்கு ராஜிவ்காந்தி அளித்த சாதகமான பங்களிப்பு இப்போது என்ன ஆயிற்று என்பது தான்.
ராஜிவ்காந்தியின் தாயாரான இந்திராகாந்தி இந்தியாவை ஆண்டு வரும் காலத்தில், அவர் மீதும் பல்வேறு விமர்சனங்கள் இருக்கத் தான் செய்தன. பொருளாதார கொள்கைகளில் பண்ணையார்களுக்கும், பெருமுதலாளிகளுக்கும், அதிகாரவர்க்க மூலதனத்திற்கும் வலுவேற்றிய பணியைத் தான் இந்திராகாந்தி செய்து வந்தார் என்பது போன்ற விமர்சனங்கள் உண்டு. ஜனநாயக உரிமைகளை மறுத்து, அவசர நிலை போன்ற பிரகடனங்களை செய்து, எதிர்கட்சிகளின் நடவடிக்கைகளையும், தொழிற்சங்கங்களின் செயல்பாடுகளையும் நசுக்கி வந்தார் என்பது போன்ற குற்றச்சாட்டுக்கள் அப்போதும் எழுந்தன. ஆனாலும் இந்திராகாந்தி சுயசார்பு பற்றி அதிகமாக பரப்புரை செய்தார். அமெரிக்க சார்பு நிலைப்பாட்டை அப்பட்டமாக எடுப்பதற்கு தயங்கினார்.
தன் தாயைப் போலவே இந்திய மக்கள் மத்தியில் பெருமளவில் செல்வாக்கை ராஜிவ்காந்தி பெற்றிருந்தார். அதன் காரணமாக அவர் தலைமையில் இருந்த போது, காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பலத்தை தேர்தலில் எட்ட முடிந்தது. அதன் மூலம் இந்திய அரசு நினைத்தப்படி, தங்களது வெளிநாட்டுக் கொள்கைகளை வகுக்க முடிந்தது. அதாவது அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளை சார்ந்து மட்டுமே சிந்திக்கும் நிலையில் அப்போது அரசாங்கம் இல்லை. எப்போதெல்லாம் ஒரு நாட்டின் தலைமை ஆட்சியாளர்கள், பெருத்த செல்வாக்கில் பெரும்பான்மை பலத்தில் ஆட்சி அமைக்க முடிகிறதோ, அப்போதெல்லாம் அவர்களால் உலக அரங்கில் சில முக்கிய விஷயங்களிலாவது, சுயமாக முடிவெடுக்கும் நிலைப்பாட்டை தக்கவைக்க முடியும்.
அப்படிப்பட்ட ஒரு நிலைப்பாடு இன்று இருக்கிறதா? இந்தக் கேள்வியை இப்போது நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டியிருக்கிறது. ராஜிவ்காந்தியின் மரணத்திற்குப் பிறகு, இந்திய அரசை ஆள்வதற்காக காங்கிரஸ் சார்பாக பி.வி.நரசிம்மராவ் தேர்ந்தெடுக்கப்படுகிறார். அப்போது அவரது ஆட்சி சிறுபான்மை அரசு என்ற நிலையில் தான் நிற்க வேண்டி இருந்தது. 1991ம் ஆண்டு இந்தியாவின் தலைமை அமைச்சராக நரசிம்மராவ் இருக்கும்போது தான், புதிய பொருளாதார கொள்கை என்ற பெயரில், அமெரிக்க வழிகாட்டலில் இந்திய கொள்கைகள் வகுக்கப்பட்டன. டங்கல், காட் போன்ற ஒப்பந்தங்கள் வந்திறங்கின. உலகமயமாக்கலின் தொடக்கம் இந்தியாவிற்குள் வரவேற்கப்பட்டது. தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல் ஆகியவை இந்தியாவின் முக்கிய பொருளாதார கொள்கைகளாக மாற்றப்பட்டன. நேரு, இந்திராகாந்தி, ராஜிவ்காந்தி காலத்தில் இருந்த பொதுத்துறை மெல்ல, மெல்ல வலுவிழக்கச் செய்யப்பட்டது. இத்தனையும் ராஜிவ் மரணத்திற்குப் பிறகு, நரசிம்மராவின் தலைமையிலான சிறுபான்மை காங்கிரஸ் அரசால் கொண்டுவரப்பட்டது. அதனால் அதிகமாக பயனடைந்தவர்கள் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய பன்னாட்டு மூலதன நிறுவனங்கள் தான். ராஜிவ் மரணம் இவ்வாறாக அமெரிக்க உள் நுழைதலுக்கு பயன்பட்டது.
இன்று மன்மோகன்சிங் தலைமையிலான இந்திய அரசாங்கத்தில், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளின் நேரடி அன்னிய மூலதனம் பெருமளவில் உள் நுழைந்துள்ளது. மன்மோகன், ப.சிதம்பரம், மான்டெக்சிங் அலுவாலியா ஆகியோர் பகிரங்கமாகவே அமெரிக்க பொருளாதார கொள்கைகளை பின்பற்றுபவர்கள் என்பது வெள்ளிடை மலையாக உள்ளது. அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தம் செய்யப்படுகிறது. அமெரிக்காவுடன் ராணுவ கூட்டுப்பயிற்சி நடத்தப்படுகிறது. அமெரிக்காவுடன் இந்திய கடலை கண்காணிக்கும் பங்காளியாக, இந்திய அரசு மாறுகிறது. இவையெல்லாம் ராஜிவ் காந்தி காலத்திய நிலைப்பாட்டின் தொடர்ச்சியா?
குடும்ப வாரிசும், கட்சி வாரிசும் நிலைப்பாடுகளை தீர்மானிப்பதில்லை. நாட்டிற்கு வகுக்கப்படும் கொள்கைகள் தான், நிலைப்பாடுகளை தீர்மானிக்கிறது. அவ்வகையில் பார்ப்போமானால், ராஜிவ்காந்தியின் மரணத்தால் இந்தியா இழந்திருக்கிறது; அமெரிக்கா பலனடைந்திருக்கிறது. இத்தகைய கணக்கீட்டை இந்திய மக்கள், இந்த நாளில் மதிப்பீடு செய்து பார்க்க வாய்ப்பிருக்கிறதா?

Monday, May 17, 2010

மே17, வன்னிப்படுகொலையின் ஓராண்டு நினைவு

இன்று 2010ம் ஆண்டின் மே17. இலங்கையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு, இந்த நாளில் மௌன அஞ்சலி செலுத்தும்படி தமிழ் மக்களை கேட்டுக் கொண்டுள்ளது. உலகமெங்கும் இருக்கும் தமிழர்கள் இந்த நாளை வலி சுமக்கும் நாளாக, கடைபிடிக்கிறார்கள். தமிழின அழிப்புப் போர் பற்றிய அனுபவங்களை தொகுக்கிறார்கள். வீரச்சாவை அடைந்த தமிழீழ விடுதலைப்புலிகளின் தியாகங்களை எண்ணிப் பார்க்கிறார்கள்.
உலகத் தமிழர்கள் அனைவருக்கும் ஈழத்தமிழர்கள் நடத்தி வந்த விடுதலைப் போர், ஒரு தலைநிமிர்வை ஏற்படுத்தியது. அதே சமயம் 4வது வன்னிப் போர் அவருடைய இக்கட்டான நிலைமையை சந்திக்கத் தொடங்கிய 2008ம் ஆண்டு இறுதியிலிருந்து, ஒரு இறுக்கமான மனப்போக்கை உலகத்தமிழர்கள் மத்தியில் ஏற்படுத்தியது. 2009ம் ஆண்டின் ஜனவரி மாதம் தொடங்கி, 7 நாட்டு அரசுகளின் உதவியுடன் சிங்களப் பேரினவாத அரசு நடத்திய இனவாதப் போர், உலகத்தமிழர்களின் உள்ளங்களில் எல்லாம் ஊசி கொண்டு தைத்தது. அந்த இனவாதப் போர் ஒரு இன அழிப்புப் போராக திசைத் திரும்புவதை முன்கூட்டியே உணர்ந்த நிலையில், உலகத்தமிழர்கள் கூக்குரலிட்டனர். முல்லைத் தீவு மாவட்டத்திற்குள் மூன்றரை லட்ச மக்களுடன், தமிழீழ போராளிகள் ஓரங்கட்டப்பட்ட போது, உலகத் தமிழர்கள் புலம்பித் தவித்தனர். 2009ம் ஆண்டின் மே 17ல் ஒரே நாளில் 30,000க்கும் மேற்பட்ட ஈழத்தமிழர்கள் ஒட்டு மொத்தமாக படுகொலை செய்யப்பட்ட போது, உலகத் தமிழர்கள் வாய் விட்டு அழுதனர். அந்த நாள்தான் இந்த நாள். ஓராண்டு நிறைவுற்று விட்டது. ஆனால் அன்று சிங்கள ராணுவத்திடம் சரணடைந்த 3 லட்சத்திற்கு மேலான தமிழர்கள் நிலை இன்று வரை, கூண்டில் அடைப்பட்ட நிலைமையிலேயே உள்ளது.
வன்னிப் போரில் வென்றதாக சிங்கள பேரினவாதம் கொக்கரித்தது. ஆனால் முள்ளிவாய்க்கால், இரட்டை வாய்க்கால் கிராமங்களில் சிக்கிய அப்பாவி தமிழ்மக்கள் 3 லட்சம் பேருக்கு மேல், ராணுவத்தின் அதிகாரமுள்ள பகுதிக்கு வரும்போது, அச்சத்துடனேயே சிங்கள ராணுவம் நடந்து கொண்டது. அப்பாவி தமிழர்கள் மத்தியிலிருந்து, புலிப்படையின் தற்கொலைப் படையினர் தாக்கி விடுவார்களோ என்ற அச்சத்தில், அனைத்து தமிழ் மக்களையும் ஆடைகளை களைந்து, நிர்வாணமாக தங்கள் அதிகாரப் பகுதிக்கு வருமாறு கட்டளையிட்டது. தமிழர்களின் ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள தந்தையும், தாயும், மகனும், மகளும், குழந்தைகளும் நிர்வாணமாக அந்த நெடியத் தூரத்தை நடந்து வந்து கடந்தனர். இத்தகைய ஒரு கொடுமை உலகில் எந்த ஒரு உலகப் போர் சூழலிலும் கூட, நடந்ததில்லை. போர் விதிகள் என்று ஐ.நா. அறிவித்துள்ள எந்த ஒரு விதிகளிலும், இத்தகைய அணுகுமுறை அங்கீகரிக்கப்படவில்லை. தமிழனுக்கு மட்டும் இந்த உலகில் தனியான விதிமுறைகள் தான் பின்பற்றப்படுகின்றன. கடுமையாக உழைக்கக் கூடிய அப்பாவி களாக இருக்கின்ற தமிழினத்திற்கு மாத்திரம் தனியான அணுகுமுறை என்பது புரியப்படவேண்டும். அதற்கான வரலாற்று காரணம் அறியப்படவேண்டும்.
உலகுக்கு வெளிப்படையாக தெரிந்த இன மோதல் நாள் 1983ம் ஆண்டின் ஜூலை 23. அன்றைய நாளில் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை, சிறைக்குள் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதை, யுலைப் படுகொலை நாள் என்பதாக ஈழத்தமிழர்கள் பதிவு செய்தார்கள். இனியும் அமைதியான வழியில், சிங்கள பேரினவாதத்தை எதிர்கொள்ள முடியாது என்று முடிவெடுத்த தமிழ் இளைஞர்கள் பேரினவாத அரசுக்கு எதிராக போர் பிரகடனம் செய்தார்கள்.
30 ஆண்டுகளாக நடத்தப்பட்ட ஆயுதப் போராட்டம் இந்த நாளில் ஒரு முடிவுக்கு கொண்டு வரப்பட்டதாக, அரசாங்கங்கள் அறிவித்தன. இதுவரை இந்தப் போரில் மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை, அரசாங்கக் கணக்குப்படி 80,000 பேர். தமிழர்களின் பட்டியலில் ஒரு லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டனர் என்று அறிவிக்கப்படுகிறது. விடுதலைப்புலிகளின் செயல் தந்திரங்களில் அல்லது ராணுவ முறைகளில் பயங்கரவாதம் இருப்பதாக, உலக வல்லரசுகள் குற்றம் சாட்டினர். அதனால் அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய யூனியனில் உள்ள நாடுகள், இந்தியா உட்பட 32 நாட்டு அரசாங்கங்கள், புலிகளை பயங்கரவாத அமைப்பு என்று அறிவித்து தடை செய்தனர். போர் முடிந்து விட்டது என அறிவித்த பிற்பாடும், விடுதலைப் புலிகள் முற்றுமுழுதாக அழிந்து விட்டனர் என்று கூறி பெரு மகிழ்ச்சியடைந்த இந்திய அரசு, சில நாட்கள் முன்பு புலிகள் மீதான தடையை இன்னமும் இரண்டு ஆண்டுகளுக்கு நீடித்துள்ளது.
இந்த 30 ஆண்டு ஆயுதப் போராட்ட காலத்திற்குள், 3 முறை பேச்சு வார்த்தை காலம் என்று அறிவிக்கப்பட்டு, மேசைப் பேச்சும் நடந்தது. ராஜீவ் ஜெயவர்த்தனா ஒப்பந்தத்தையொட்டி, 1987ல் இலங்கை சென்ற இந்திய அமைதிப்படை ஒரு பேச்சு வார்த்தைக்கான சூழலை ஏற்படுத்தியது. அது 1987ம் ஆண்டு முதல் 1990ம் ஆண்டு வரை நீடித்தது.
இந்திய இலங்கை அரசுகளின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு, அதிகார பிரதிநிதித்துவத்தை ஏற்றுக் கொள்ளாத புலிகள் மீது, இந்திய ராணுவம் மோதல் கொள்ளத் தொடங்கியது. அதனாலேயே முதல்கட்ட பேச்சு வார்த்தை, தொடக்க காலத்திலேயே மறைந்து விட்டது. 2001ம் ஆண்டு டிசம்பர் மாதம், புலிகள் பக்கத்திலிருந்து தன்னார்வமாக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. அனைத்து நாட்டு மேற்பார்வையுடன் கூடிய ஒரு போர் நிறுத்த ஒப்பந்தம் 2002ம் ஆண்டு, அரசுக்கும், புலிகளுக்கும் இடையில் கையெழுத்தானது. 2005ம் ஆண்டு அத்தகைய சூழலிலும் விரிசல் ஏற்பட்டது. 2006ம் ஆண்டு ஜூலையில் தொடங்கி, புலிகளுக்கு எதிராக ராணுவத்தின் தாக்குதல் அதிகரித்தது.
அதையொட்டி கிழக்கு மாகாணத்திலிருந்து புலிகள் பின்வாங்கிக் கொள்ள, சிங்கள ராணுவம் கிழக்கே வென்று விட்டதாக அறிவித்தது. 2007ம் ஆண்டு வடக்கு மாகாணங்கள் மீது ராணுவம் தனது தாக்குதலை விரிவுபடுத்தியது. 2008ம் ஆண்டு ஜனவரி 2ம் நாள் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து பின்வாங்கிக் கொள்வதாக அறிவித்தது. அதன் பிறகு தொடர்ந்த 4வது வன்னிப்போர்தான், தமிழனை இந்த நிலைமைக்கு தள்ளியது.
இலங்கையில் நடக்கும் இன உரிமைப் போர், வீச்சாக வளர்ந்ததற்கும் பிறகு வீழ்ந்ததற்கும், வெளிச்சக்திகளின் காரணங் களும் ஆராயப்படவேண்டும். மே8ம் நாள் சென்னையில் ஒரு வார ஏட்டால் நடத்தப் பட்ட கருத்தரங்கில் பேசிய பிரமுகர்கள் ஒரு செய்தியை சொன்னார்கள். இந்திய அரசு 4ம் வன்னிப்போரில் தமிழர்கள் தோற்பதற்கு முக்கிய காரணமாக இருந்ததாக குற்றம் சாட்டினார்கள். இந்திரா காந்தி காலத்திலிருந்து இந்தியாவின் தலையீடு என்பது, ஈழத்தமிழர்களின் உரிமைப் போருக்கு கேடு விளைவித்தது என்றும் கூறினார்கள். 80ம் ஆண்டுகளில் தொடக்கத்திலிருந்தே அத்தகைய தலையீடுகள் நடத்தப்பட்டன. இந்தியாவில் இருக்கின்ற தேசிய இனங்கள் தங்களது சுயநிர்ணய உரிமைகளுக்காக, போரிட்டு வரும் போது, இந்திரா காந்தி அரசு இலங்கையில் வாழும் ஈழத் தமிழருக்கு எந்த விதத்தில் நியாயம் செய்ய தலையிட்டார் என்பதாக இப்போது அறிவு ஜீவிகள் விவாதிக்கிறார்கள்.
தொடக்கத்திலிருந்தே இந்திய அரசுக்கு ஈழத்தமிழர்களின் உரிமைப் போரில் அக்கறை இல்லை. ஆனாலும் கூட அவர்களை பல்லாயிரக்கணக்கில் இந்தியாவிற்கு தருவித்து, ஆயுதப் பயிற்சி கொடுத்து, ஆயுதங்கள் கொடுத்து ஊக்குவித்த இந்திய அரசின் தொலை தூர நோக்கம் என்ன என்று விவாதிக்கிறார்கள். இப்போது நேரடி தலையீட்டின் மூலம், ஈழப்போர் தோற்பத ற்கும், தமிழீன அழிப்பு நடப்பதற்கும் காரணமாகி விட்டதாக கருதுகிறார்கள்.
ஒரு இனத்தின் விடுதலைக்காக போராட புறப்பட்ட இளைஞர்கள், அடுத்த நாட்டின் அரவணைப்பை முழுமையாக சார்ந்து நின்ற வரலாறு இப்போது கேள்விக்குள்ளாக்கப் பட்டுள்ளது. இதைத்தான் அன்றே கவிஞர் இன்குலாப் எழுதும் போது,
“நமது அவசரத்தில் அட்டைகளிடம் போய் ரத்ததானம் கேட்க வேண்டாம்.
கம்சனின் பிடியில் ஈழக்குழந்தை கதறுகின்றது உண்மைதான்.
அதற்காக பூதகியைப்போய் பாலூட்டச் சொல்லாதீர்கள்.” அதுதான் நினைவுக்கு வருகிறது.

Sunday, May 16, 2010

கல்வி வியாபாரமா? அடிப்படை உரிமையா?

சென்ற வாரம் தமிழக சட்டமன்றத்தில் பள்ளிக் கல்வி அமைச்சர், தனியார் பள்ளிகளுக்கு கட்டணங்களை ஒழுங்கு படுத்துவது பற்றிய அரசின் அறிக்கையை முன்வைத்தார். தமிழ்நாட்டில் இருக்கின்ற 10,934 தனியார் சுயநிதி பள்ளிகளுக்கு அரசு, கட்டண ஒழுங்கமைப்பு ஒன்றை அதில் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு 3 ஆண்டுகளுக்கு அமுலில் இருக்கும் என்ப தாகவும் கூறப்பட்டுள்ளது. கோவிந்தராஜன் குழு என்ற அரசால் நிறுவப்பட்ட, தனியார் பள்ளிகள் கட்டண நிர்ணயிப்புக் குழு, பல்வேறு பிரச்சினைகளை விரிவாக ஆய்வு செய்த பிறகு இந்த கட்டண ஒழுங்கமைப் பை ஆலோசனையாக வைத்தது. பெற்றோர் கள் மற்றும் பள்ளிகளின் நலனை கணக்கில் கொண்டு இந்த ஒழுங்கமைப்பு செய்யப் பட்டது என்று அறிவிக்கப் பட்டுள்ளது.
இதற்கான ஆய்விற்கு அந்த குழு ஒரு கேள்வித் தாளை 10,934 பள்ளிகளுக்கும் அனுப்பி வைத்தது. அதில் 10,233 பள்ளிகளிலிருந்து பதில்கள் வந்தன. அந்த பள்ளிகளின் வரவையும் செலவையும் அடிப்படையாகக் கொண்டு அவர்களுக்கான கட்டண ஒழுங்கமைப்பு உருவாக்கப் பட்டது. செலவை விட மாணவர்களிடம் வாங்கும் கட்டணம் மூலம் வரவு அதிகமாக இருந்தால், அதைக் குறைத்துக் கொள்ளும் படி அந்தப் பள்ளிகளுக்கு வழிகாட்டல் கொடுக்கப்பட்டது. செலவு வரவை விட அதிகமாக இருக்கும் பள்ளிகளுக்கு, நிலவும் கட்டணங்களை வாங்க அனுமதி கொடுக்கப் பட்டது. ஆய்வுக் குழுவின் கேள்விகளுக்கு பதில் தராத 701 பள்ளிகளுக்கு, அண்டை பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு போடப்பட்ட கட்டணங்களை குழு அறிவித்தது. நகரில் உள்ள ஆரம்பப் பள்ளிகளுக்கு ரூ.5000/யும், நடுநிலைப் பள்ளிகளுக்கு ரூ.8000/யும், உயர்நிலைப் பள்ளிகளுக்கு ரூ.9000/யும், மேல்நிலைப் பள்ளிகளுக்கு ரூ.11,000/யும் சராசரியாக குழு நிர்ணயித்தது.
நகரில் சில மேல்நிலைப்பள்ளிகளில் ரூ.35,000/ ஒவ்வொரு மாணவரிடமிருந்தும் வசூல் செய்கின்றன. அதே சமயம் நகரில் உள்ள ஆரம்பப்பள்ளிகளில் பெரும்பான்மை யானவர்கள் ஒரு மாணவனிடம் ரூ.2000/ தான் வசூல் செய்கின்றன. அதே சமயம் நெல்லை மாவட்டத்தில் உள்ள கடைய நல்லூரில் ஒரு விடுதியுடன் கூடிய பள்ளியில் ரூ.1.25 லட்சம் பணத்தை ஒரு ஆரம்பப் பள்ளி மாணவனிடம் வசூலிக்கிறார்கள் என்ற செய்தி அதிர்ச்சியாக வந்தடைந்துள்ளது. அந்தப் பள்ளி ரூ.3000/ ஒவ்வொரு மாணவருக்கும் செலவழிப்பதாக கணக்கு காட்டியதால், அதையே கட்டணமாக கோவிந்தராஜன் குழு நிர்ணயித்தது. இது தவிர பள்ளியின் வளர்ச்சிக்கான செலவாக, 10% செலவினத்தைக் கூட்டிக் கொள்ளவும் அந்தக் குழு அனுமதித்துள்ளது. மேற்கண்ட ஒழுங்கமைப்பை மீறும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட விவரங்கள் வியாபாரமாக்கி விட்ட கல்வியின் நிலைமையை படம் பிடித்துக் காட்டுகின்றது. அதே சமயம் மெட்ரிக்குலேசன் பள்ளிகள் மேற்கண்ட கட்டண ஒழுங்கமைப்பின் மூலம், பள்ளி களை நடத்த முடியாது என்று கலகம் செய்யத் தொடங்கி விட்டன. பள்ளிகளின் தரம் குறைந்து விடும் என்று அந்த கல்வி முதலாளிகள் கூக்குரலிடுகிறார்கள். தங்கள் ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்கவும், வகுப்பறைகளுக்கு வண்ணம்பூசவும் முடியாது என்று புதுப் பிரச்சினையை கிளப்புகிறார்கள். ஒரு மேல்நிலைப்பள்ளியில் ரூ.20,000க்கு குறைவாக கட்டணம் வசூலித்தல் நடைமுறை சாத்தியமில்லை என்று அந்த தனியார் கல்வி வியாபாரிகளின் பொறுப்பாளர் கூறியுள்ளார்.
ஓய்வு பெற்ற நீதியரசர் கோவிந்தராஜன் தலைமையிலான குழுவைப் பொறுத்தவரை அவர்கள் 8 அமர்வுகளில் விவாதித்து, தனியார் பள்ளிகளுடனும் விரிவான விவாதங் களை நடத்தி, பிறகே தங்களது ஆலோசனை யை வகுத்துள்ளார்கள். ஆனாலும் இப்போது தனியார் பள்ளி சங்கங்கள் அறிவிக்கப் பட்டுள்ள கட்டண ஒழுங்கமைப்பை எதிர்த்து, பள்ளிகளை திறக்க மாட்டோம் என்று அடம் பிடிக்கிறார்கள். அதே நேரத்தில் பெற்றோர் சங்கங்களிடம் இன்னொரு அச்சம் தோன்றியுள்ளது. அரசு அறிவிப்பிற்குப் பிறகு தனியார் பள்ளிகள், சிறப்பு கட்டணம் என்று கட்டாய வசூலில் ஈடுபடுவார்கள் என்றும், அந்த வசூலுக்கு ரசீது தரமாட்டார் கள் என்றும் பெற்றோர்கள் அச்சப்படத் தொடங்கியுள்ளார்கள்.
இந்த நேரத்தில் தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவெங்கும் ஒரு புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் முதல் தேதி, இந்திய நாடாளு மன்றத்தில் ஆரம்பக் கல்வியை கட்டாய மாக்கக் கூடிய ஒரு சட்டத்தை கொண்டு வந்துள்ளார்கள். அது கல்வியை ஒரு அடிப்படை உரிமை என்பதாக அறிவிக்கிறது. 6 வயதிலிருந்து 14 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு, 2009ம் ஆண்டின் இலவசமாக கல்வி பெறுவதற்கான உரிமையையும், கட்டாய கல்வி சட்டத்தையும் அது அறிவித்துள்ளது. அதன் மூலம் இப்போது பள்ளிக்கு செல்லாத அல்லது செல்லமுடியாத ஒரு கோடி குழந்தைகள் பயன் பெறுவார்கள். அவர்கள் சூழ்நிலையின் காரணமாக படிப்பை நிறுத்தியிருக்கலாம் அல்லது கல்விக் கூடத்திற்கே செல்லமுடியாமல் இருந்திருக்க லாம். அந்த சட்டப்படி தனியார் கல்வி நிறுவனங்கள் 25% இடத்தை, சமூகத்தின் நலிந்த பிரிவினர்களின் குழந்தைகளுக்கு ஒதுக்கவேண்டும். அத்தகைய குழந்தை களுக்கு செலவிடப்படும் தொகையில், 55% மத்திய அரசும், 45% மாநில அரசும் பொறுப்பேற்கும்.இந்த சட்டத்தை அமுல்படுத்த மாநிலங்களுக்கு ரூ.25,000, மத்திய நிதி ஆணையத்தால் கொடுக்கப்படும். சட்டத்தின் அறிவிப்பிலேயே 201011 ஆண்டுகளுக்கான ரூ.15,000 கோடிக்கு மத்திய அரசு ஒப்புதல் கொடுத்து விட்டது. இத்தகைய ஒரு மகத்தான சட்டமும், கல்வியை வியாபாரமாக்கும் தனியார் மத்தியில் இந்த நாட்டில் தான் அரங்கேறியுள்ளது. உலகில் உள்ள சில நாடுகள் மட்டுமே இதுபோன்ற கட்டாய இலவச கல்வியை, ஆரம்பப் பள்ளிக்கு அறிவித்துள்ளன.
மேற்கண்ட சட்டம் கல்வியை அடிப்படை உரிமையாக ஆக்குவதன் மூலம், மனித உரிமை தளத்தில் ஒரு சாதனையையும், அதே சமயம் அடுத்த தலைமுறைக்கு ஒரு உத்தரவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அரசாங்கங்களால் தங்கள் அறிவிப்புகளையே அமுல்படுத்த முடியாத ஒரு சூழ்நிலையை, தனியார் கல்வி வியாபாரிகள் உருவாக்குகிறார் கள் என்று சொன்னால், இதற்கான அடிப்படை காரணம் என்ன என்பதை ஆராய வேண்டும்.
கடந்த காலங்களில் தர்மகர்த்தா மனோநிலையில், தனியார்கள் சேவை மனோபாவத்தில் கல்விக் கூடங்களை ஏற்படுத்தினார்கள். அதன் பிறகு அரசு அந்தப் பொறுப்பை உணர்ந்து, கல்விச் சாலைகளை ஆரம்பக் கல்வி முதல் உயர்கல்வி வரை உருவாகியது. இத்தகைய நிலைமைக்கு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொண்டு வந்த, “புதிய கல்விக் கொள்கை” ஒரு முற்றுப்புள்ளியை வைத்தது. நிலவும் கல்விச் சாலைகளின் அவலநிலைகளை, அணு அணுவாக தொகுத்து முன்வைத்து, அதற்கான தீர்வாக தனியார் கைகளில் கல்வியைக் கொடுத்து விடுவது என்பது தான் அந்த புதிய கல்விக் கொள்கை. அதுவே புற்றீசல் என சுயநிதி கல்விச்சாலைகளை ஏற்படுத்தியது. தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர். ஆட்சியில், கல்வி அமைச்சரின் தனியார் நிறுவன பாசம், புற்றீசல் என கல்விக் கொள்ளையர்கள் மாநிலமெங்கும் உருவாக உதவி செய்தது. இப்போது அவர்களின் கூட்டமைப்பால், அரசின் நல்ல திட்டம் கூட மிரட்டப்படுகிறது. இவ்வாறு அரசால் அனுமதிக்கப்பட்டு, வளர்க்கப்பட்ட ஒரு நச்சு விதை,மரமாக வளர்ந்து பேயாக ஆடுகின்ற சூழலை காண்கின்றோம். இப்போதாவது மன உறுதியுடன் அரசு தொடர்ந்து செயல்பட வேண்டும் என்பதே நமது கோரிக்கையும்.

Saturday, May 15, 2010

ஈரான் எரிவாயு குழாய், தெற்காசிய முகத்தை மாற்றும்

இன்று இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, ஈரான் செல்கிறார். வளரும் நாடுகளின் ஜி15 உச்சி மாநாடு மூன்று நாட்கள் நடக்க இருக்கிறது. அப்போது ஈரானிய வெளிவிவகாரத்துறை அமைச்சர் மனோசெகர் மோட்டாக்கியை சந்திக்கிறார். அந்த சந்திப்பில் ஈரான் பாகிஸ்தான் இந்தியா எரிவாயு குழாய் திட்டம் பற்றி பேசுகிறார்.
70 லட்சம் டாலர் விலையுள்ள அந்த எரிவாயு திட்டம், மீண்டும் உயிர் பெறுமா என்று ஏங்குகிறது. அத்தகைய ஒப்பந்தத் திற்கு தடையாக உள்ள அனைத்தையும் நீக்கி, உயிர் பெற வைக்கமுடியும் என்று அதன் அனைத்து பங்காளிகளும், நேர்மை யாக நம்புகிறார்கள் என்பது கிருஷ்ணாவின் கருத்து.
அத்தகையதொரு ஒப்பந்தத்திற்கு அனைத்து தடைகளையும் போட்டுக் கொண்டிருப்பது அமெரிக்காதான் என்பது உலகறிந்த உண்மை. ஏற்கனவே ஒரு கட்டுரையில் நாம் குறிப்பிட்டது போல, அத்தகையதொரு ஒப்பந்தத்திற்கு முயன்றதால்தான் அமெரிக்க முயற்சியால் நட்வர் சிங், அமைச்சரவையிலிருந்து அகற்றப்பட்டார். அடுத்து பெட்ரோலிய அமைச்சராக இருந்த மணிசங்கர்ஐயர் இந்த குறிப்பிட்ட ஒப்பந்தத்திற்கு முயற்சி எடுத்ததால்தான், அமெரிக்க நிர்ப்பந்தத்தில் ஐயரது அமைச்சர் பொறுப்பு மாற்றப்பட்டது.
1988ம் ஆண்டு ஈரான் நாட்டின் தெற்கு பார்ஸ் வெளியில், இயற்கை எரிவாயு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அப்போதிலிருந்து ஈரான் அரசாங்கம் அதிகமான முயற்சி எடுத்து எரிவாயு ஏற்றுமதியை பிறநாடுகளுக்கு அனுப்புவதில் கவனம் செலுத்தியது. இந்தியா, பாகிஸ்தான் போன்ற தெற்காசிய நாடுகளில், இயற்கை எரிவாயு இருப்பு மிகவும் குறைவாக இருப்பதால், கிடைக்கின்ற எரிவாயு தேவைக்கு போதாமல் இருப்பதால், அங்கே அதிகமான லாபத்திற்கான வாய்ப்பை ஈரான் அரசு சிந்தித்துப் பார்த்தது.
1995ம் ஆண்டில் பாகிஸ்தானும், ஈரானும் ஒரு தொடக்க நிலை ஒப்பந்தம் செய்து கொண்டார்கள். பாரசீக வளைகுடாவில் இருக்கும் ஈரானிய தெற்கு பார்ஸ் இயற்கை எரிவாயு வெளியிலிருந்து, இயற்கை எரிவாயு குழாயை கராச்சியுடன் தொடர்பு கொள்ள கட்டியமைக்க வேண்டும் என்பதுதான் அந்த ஒப்பந்தம். கராச்சி அரபிக் கடலில் இருக்கின்ற பாகிஸ்தானின் முக்கியமான தொழில்துறை துறைமுகம். அதன் பிறகு அதே எரிவாயு குழாயை பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்கு நீட்டிக்கலாம் என்ற முன்வைப்பை ஈரான் வைத்தது.
ஈரானின் இயற்கை வாயு ஏற்றுமதியால் பாகிஸ்தானுக்கு பயன்கிடைக்கும் என்பது மட்டுமின்றி, இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்ய பாகிஸ்தான் நிலத்தை போக்குவரத்து பாதையாக பயன்படுத்தல் என்பதும் பாகிஸ்தானிற்கு இன்னொரு லாபம். இந்தியாவிற்கும், பாகிஸ்தானிற்கும் நிலவும் வரலாற்றில் பதட்ட உறவு நீடிப்பதால், இந்திய அரசுக்கு அதில் தயக்கமிருந்தது. அதனால் மாற்று வழியாக ஆழ்கடல் எரிவாயு குழாய் அமைத்தால், பாதுகாப்பு பிரச்சினை எழாது என்றும் இந்திய அரசு கருதியது.
2000வது ஆண்டில் இந்தியாவும், ஈரானும், பாகிஸ்தானும் தங்களது அரசாங்க அதிகாரிகள் மூலம், குழாய் வரும் பாதை, போக்குவரத்து வழி, மற்றும் பூகோள அரசியல் பிரச்சினைகளை அலசி ஆராய்ந்தார்கள். அத்தகைய பேச்சு வார்த்தையே இரு நாடுகளுக்கும் இடையிலும், பிராந்தியத்திற்கு உள்ளேயும் இருக்கும் அரசியலில் முக்கியமாக கருதப்பட்டது. இயற்கை எரிவாயு வருவதன் மூலம் பொருளாதார மற்றும் வளர்ச்சி பலன்கள் கிடைக்கும் என்பதால், இந்தியா, ஈரான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் அரசாங்கங்கள் காஷ்மீர், ஆப்கானிஸ்தான், தேசிய பாதுகாப்பு பிரச்சினைகள் ஆகிய பிராந்திய மோதல்களில், அதற்கான கொள்கைகளில் தங்களது பாத்திரங்களை மறுமதிப்பீடு செய்யத் தொடங்கினர்.
இந்த நாடுகள் தங்கள் தேவை யையொட்டியும், வளர்ச் சிக்காகவும் ஏற்றுக் கொண்டுள்ள எரிவாயு குழாய் திட்டம், பிராந்திய மோதல்களை தீர்க்கும் பட்சத்தில், ஒரு சமாதானத்திற்கான குழாய் திட்டமாக மறு உருப்பெற்றுள்ளது. அதன் மூலம் தெற்காசியாவின், பிராந்திய அரசியல் முகமே மாறுவதற்கான ஒரு சூழ்நிலை உருவாகியுள்ளது. இது பொருளாதார ஒத்துழைப்புகள் எப்படி சமூக மற்றும் அரசியல் பரிமாற்றத்தின் அதிகாரத்தை மாற்றியமைக்கின்றன என்பதற்கான முன்னுதாரணமாக நிற்கின்றது.
பிரச்சினைகள் பாகிஸ்தானிற்கும், இந்தியாவிற்கும் மட்டுமே இருக்கவில்லை. பாகிஸ்தானும், ஈரானும் முஸ்லிம் நாடுகள் என்பதால் அவர்களுக்குள் பிரச்சினை இல்லை என்று கணிக்கக் கூடிய, முஸ்லிம் அல்லாத பார்வையும் சரியல்ல. ஆப்கானிஸ்தான் பிரச்சினையில் பாகிஸ்தானிற்கும், ஈரானுக்கும் ஒரே பார்வை கிடையாது. அமெரிக்க ஆதிக்கத்தை ஒப்புக்கொள்ளும் பாகிஸ்தான் அரசு போல, ஆப்கானிஸ்தான் சிக்கலை ஈரான் பார்ப்பதில்லை. இந்த பிராந்தியத்தில் இருக்கின்ற ஷியா சன்னி என்ற பிரிவினர்களுக்கு இடையில் உள்ள சிக்கலிலும் ஈரான், பாகிஸ்தான் அரசுடன் ஒத்துப்போவதில்லை. ஈரான் நாடு முழுமையாக ஷியா பிரிவினரின் செல்வாக்கில் இருக்கிறது.
ஆனால் பாகிஸ்தானில் ஷியா பிரிவினர், சன்னி பிரிவினரால் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகிறார்கள். இத்தகைய முரண்பாட்டையும் கூட பொருளாதார தேவைகளையொட்டி, எரிவாயு குழாய் சமரசம் செய்து வைக்கிறது. அதனால் பொருளாதார உலகமயமாக்கல் காலத்தில், வணிகம் பிராந்தியத்திற்கு உள்ளேயும், வெளியேயும் மோதல்களை தவிர்க்க உதவுவது இயற்கையான ஒரு செயல்பாடுதான்.
உலகில் இருக்கின்ற இயற்கை எரிவாயு இருப்பில், ஈரான் நாட்டில் 9% இருக்கிறது. எண்ணெய் வள நாடுகளிலேயே, 2வது எண்ணெய் வள உற்பத்தி நடப்பது ஈரானில்தான். எண்ணெய் வளம் போலவே இயற்கை எரிவாயு உற்பத்தியிலும் உலகின் 2வது பெரிய நாடாக ஈரான் திகழ்கிறது. 812 லட்சம் கோடி கனஅடி வரை அது உற்பத்தி செய்கிறது.
அதே சமயம் ஏற்றுமதிக்காகவும் ஈரான் துடிக்கிறது. அதனால்தான் இந்தியாவுடன் உள்ள ஏற்றுமதிக்கான முன்வைப்பை 1993ம் ஆண்டிலிருந்து முயற்சிக்கிறது. பாகிஸ்தானின் முக்கிய நகரங்ளான கராச்சிக்கும், முல்தானுக்கும் பாரசீக வளைகுடாவில் உள்ள தெற்கு பார்ஸ் வெளியிலிருந்து வரயிருக்கும் இந்த எரிவாயு குழாய் நீட்டிக்கப்பட்டு, இந்தியாவில் உள்ள டெல்லிக்கு எடுத்து வரப்படும். ஈரானில் உள்ள அசாலுயே, பாகிஸ்தானில் உள்ள குஸ்தர், கராச்சி, முல்தான், டெல்லி என்பதாக அந்த பாதை வகுக்கப்படுகிறது.
ஈரானிலிருந்து கராச்சி வரை 870 மைல் நீளம் கொண்டதாக அந்த குழாய் இருக்கும். மொத்தம் 2670 கி.மீ. நீளமுள்ள, 48 விட்டம் கொண்ட குழாய் 32 லட்சம் டாலர் எரிவாயுவை எடுத்துச் செல்லும். போக்குவரத்துக்கு வழி விடுவதன் மூலம் பாகிஸ்தான் 5,000 லட்சம் டாலரை சம்பாதிக்கும். ஆஸ்திரேலியா நாட்டின் பி.எச்.பி. கம்பெனி, மலேசியா நாட்டின் என்.ஐ.ஜி.சி., பிரெஞ்சு நாட்டின் பெட்ரோனாஸ் கம்பெனிகள் இந்த குழாய் கட்டுமானத்தில் ஈடுபடும் என தெரிகிறது. 1999ம் ஆண்டு இந்தியாவும், ஈரானும் ஒரு தொடக்க நிலை ஒப்பந்தம் செய்து கொண்டனர்.
இத்தகைய இருநாட்டு பரஸ்பர ஒப்பந்தங்கள் போதாது. முத்தரப்பு ஒப்பந்தம் ஒன்று மூன்று நாடுகளுக்கு மத்தியில் போடப்படவேண்டும்.
மேற்கண்ட வர்த்தக உறவு தெற்காசிய நாடுகளுக்குள், முதன்மையான நிலையை கைப்பற்றியுள்ள இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்குள் இருக்கும் பரஸ்பர சார்புத்தன்மை கொண்ட ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்தும். அதுவே இந்த பிராந்தியத்தில் உள்ள இரு பெரும் நாடுகளுக்கு மத்தியில் உள்ள பிளவை பயன்படுத்தி, அமெரிக்கா தனது தலையீட்டை செய்வதை தவிர்க்கும்.
எண்ணெய் மற்றும் எரிவாயு தேவைகளுக்கும், அமெரிக்காவையும், அமெரிக்கா சார்பு நாடுகளையும் எதிர் பார்த்து நிற்பதை ஒரு முடிவுக்கு கொண்டு வரும். இத்தகைய இயற்கையான, தேவையின் அடிப்படையிலான திட்டமாக, இந்த சமாதான எரிவாயு குழாய் திட்டம் அமைவதை வரவேற்கலாம்.