Wednesday, August 11, 2010
பா.ஜ.க.வுடன் இடதுசாரிகள் சேர்ந்தது எதனால்? யாருக்காக?
கொல்கத்தா அருகே ஒரு மாபெரும் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. அந்த பொதுக்கூட்டம் கட்சி சார்பற்றது என்பதாக அறிவிக்கப்பட்டது. அதை அரசியல் சார்பற்றது என்பதாக ஊடகங்கள் விளக்கின. அரசியல் என்பதை தேர்தலில் போட்டியிடும் வேலையாக மட்டும் கருதிக்கொண்டிருக்கும் ஒரு சிந்தனைப் போக்கின் விளைவே அவ்வாறான சித்தரிப்பு. தேர்தல் அரசியல் தவிர, சமூகப் பிரச்சனைகள், பொருளாதார கோரிக்கைகள், அரசியல் உரிமைகள் போன்ற அனைத்துமே அரசியல் தான் என்ற செய்தி இன்னமும் நமது நாட்டில் பிரபலமாக புரியப்படவில்லை. சாதாரண பொது மக்களுக்கு மட்டுமின்றி, அறிவுஜீவிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும், ஏன் ஊடங்களுக்கும் கூட இன்னமும் அரசியல் என்பதற்கான பரந்த பொருளை உட்கொள்வதில் சிரமம் இருக்கிறது. தேர்தலில் போட்டியிடும் கட்சிகளுக்குள் உள்ள அரசியல், கட்சி அரசியல் என்பதாக அழைக்கப்பட வேண்டும். அப்படிப் பார்க்கும் போது கட்சி சார்பற்ற அரசியல் என்று ஒன்று சமூகத்தில் நிலவிவரும் உண்மையை புரிந்துகொள்ள வேண்டிவரும். அப்படிப்பட்ட ஒரு கட்சிச் சார்பற்ற அரசியல் மேடை தான் கொல்கத்தா அருகே அமைக்கப்பட்டது. அந்த மேடையில் முக்கியமாக மத்திய ரயில்வே அமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பேனர்ஜி அமர்ந்திருந்தார். இந்திய மக்கள் அனைவருக்கும் கடந்த 30 ஆண்டுகளாக பிரபலமாக அறிமுகமான பெண் சமூக ஆர்வலர், மேதா பட்கர் அமர்ந்திருந்தார். நர்மதா நதிக்கு குறுக்கே அணைக்கட்டும் முயற்சி, 2 லட்சம் ஆதிவாசி மக்களை தங்களது பாரம்பரிய பசுமை நிலத்தை விட்டு இடம்பெயரச்செய்யும் என்பதனால், 25 ஆண்டுகளுக்கு மேலாக போராடி வரும் மக்கள் இயக்கத்திற்கு தலைமை தாங்கி வருபவர் மேதா பட்கர். அவர் வழிநடத்தும் தேசிய மக்கள் இயக்கங்களின் கூட்டமைப்பு, பல்வேறு விதமான அரசியல் உரிமைகளை மக்களுக்கு பெற்றுக்கொடுப்பதற்காக போராடி வருகிறது. ஆகவே அவரை அரசியலற்றவர் என்று கூறிவிட முடியாது. ஆனால் அவர் இந்திய நாடாளுமன்றப் பாதையில் போட்டியிடும் கட்சிகளுக்கு அப்பாற்பட்டவர். ஆகவே அவரை கட்சிச் சார்பற்றவர் என்று அழைக்கலாம். அதே போல அந்த மேடையில் அமர்ந்திருந்த சுவாமி அக்னிவேஷ் ஒரு சமூக ஆர்வலர். அவர் கொத்தடிமைத் தனத்தை எதிர்த்து 30 ஆண்டுகளாக போராடி வருபவர். கொத்தடிமைகளை விடுதலை செய்யும் இயக்கம் ஒன்றை நடத்திவருபவர். அப்படிப்பட்ட அவரது தொடர் சமூகப் பணிகளை கணக்கில் கொண்டு, மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டவர். கட்சிகள் ஆக்கிரமித்துள்ள மாநிலங்களவையில், இது போன்ற கட்சிச் சார்பற்ற பிரதிநிதிகளும் அவ்வபோது தேர்ந்தெடுக்கப்படுவது வழக்கம். அவரும் கூட கட்சிச் சார்பற்ற ஒரு பிரமுகர். அதேசமயம் அடிப்படை மக்களின் அரசியல் உரிமைக்காக போராடி வருபவர். ஆகவே அவர்களெல்லாம் அரசியல் அற்றவர்கள் அல்ல. அதேசமயம் கட்சிச் சார்பற்றவர்கள். அதனால் அந்த மேடை கட்சி சார்பற்ற மேடையாக அர்த்தப்படுத்தப்பட வேண்டும். அந்த மாபெரும் பொதுக்கூட்டத்திற்கு அணிதிரட்டப்பட்ட மக்களும், கட்சி சார்பற்றவர்கள். மம்தா பானர்ஜி தவிர அவரது கட்சியை சேர்ந்த எந்த ஒரு அமைச்சரோ, நாடாளுமன்ற உறுப்பினரோ, தலைமை பொறுப்பாளர்களோ அந்த மேடையில் அமரவில்லை. அதனால் மம்தாவின் கட்சியும் தங்கள் கட்சித் தொண்டர்களை, அந்த கூட்டத்திற்கு கொடியுடன் கூட்டிவரவில்லை. லால்கர் என்று அழைக்கப்படும் மேற்கு மிதினாபூர் மாவட்டத்தில், மேற்கு வங்க மாநிலத்தில் அந்த கூட்டம் நடத்தப்பட்டது. ஒரு மாதம் முன்பே மேதா பட்கரும், சுவாமி அக்னிவேஷும் லால்கர் நோக்கி அணிவகுப்போம் என்பதாக அறிவித்து அணிதிரட்டி வந்தனர். மேற்குவங்க மாநிலத்தை ஆளும் மார்சிஸ்ட் கட்சி அத்தகைய அணிதிரட்டலுக்கு அனுமதிக்காத ஒரு சூழ்நிலையில், மம்தா பானர்ஜியும் அந்த நிகழ்ச்சிக்கு இணைக்கப்பட்டார். காவல்துறையின் அராஜகத்திற்கு எதிரான மக்கள் குழு என்ற ஆதிவாசி மக்களை ஆயிரக்கணக்கில் அணிதிரட்டி வரும் மக்கள் அமைப்பு ஒன்று மேற்கு மிதினாபூர் மாவட்டத்தில் இயங்கி வருகிறது. அதன் தலைவர்களாக இருக்கின்ற மகதோக்களை, மேற்கு வங்க அரசு வேட்டையாடி வருகிறது. அவர்களை கைது செய்யவும், சிறைப்பிடிக்கவும் எளிதான முறையாக, மாவோயிஸ்டுகள் என்ற முத்திரையை குத்திவிடுகிறார்கள். அதனால் மக்கள் திரள் அமைப்பின் தலைவர்களாக இருக்கும் மகதோக்கள் இதன் மூலம் வன்முறையாளர்களாக அரசாங்கத்தின் நல்லாசியுடன் சித்தரிக்கப்பட்டார்கள். அப்படி சித்தரிக்கப்பட்ட ஒரு மகதோ, மம்தாவுடன் அந்த மேடையில் தோன்றினார் என்பது மார்க்சிஸ்ட் கட்சியின் ஒரு குற்றச்சாட்டு. இந்தக் குற்றச்சாட்டை ஆதரிக்கும் கட்சியாக பா.ஜ.க. இருக்கிறது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மேற்கண்ட பொதுக்கூட்டம் பற்றிய காரசாரமான விவாதத்தை பா.ஜ.க. கிளப்பியது. அதை மார்க்சிஸ்ட் கட்சி ஆதரித்தது. இவ்வாறாக நாடாளுமன்றத்தின் பாதையில் பயணம் செய்யும் கட்சிகளில், எதிரெதிர் துருவங்களை சேர்ந்த கட்சிகள் மாவோயிஸ்டுகளை எதிர்ப்பது என்ற பெயரில் மம்தாவிற்கு எதிராக குரல் எழுப்பியுள்ளனர். மேற்கண்ட கூட்டத்தில் மாவோயிஸ்டு கட்சியின் முக்கிய தலைவரான ஆசாத் என்ற செருகுரி ராஜ்குமார், கைது செய்யப்பட்ட பிறகு அராஜகமாக கொலைச் செய்யப்பட்டார் என்ற செய்தியும் கண்டத்திற்குள்ளானது. இதுவரை இத்தகைய கண்டனக் குரலை எழுப்பிவந்த சுவாமி அக்னிவேஷ், மேதா பட்கர் ஆகியோருடன் இந்த முறை மம்தா பானர்ஜியும் கலந்து கொண்டார். இது சிலருக்கு செரிக்கமுடியாத செய்தியாக அமைந்துவிட்டது. மாவோயிஸ்டு கட்சியின் தலைவர்களில் ஒருவரான கிஷன்ஜி, ஆசாத் படுகொலைப் பற்றி விசாரணை கேட்காத பா.ஜ.க. மற்றும் சி.பி.எம். கட்சிகளை சாடியுள்ளார். மத்திய அரசின் சதித்திட்டத்தால் ஆசாத் படுகொலை செய்யப்பட்ட பிறகும், தங்கள் மாவோயிஸ்டு கட்சியின் தலைமை பேச்சுவார்த்தை பற்றி முறையாக சிந்திப்பதாக கிஷன்ஜி கூறியுள்ளார். மத்திய அரசு பச்சைவேட்டையை நிறுத்தி, வன்முறையை கைவிடுமானால், தாங்கள் பேச்சுவார்த்தைக்கு தயார் என்ற அணுகுமுறையை புரட்சியாளர்கள் முன்வைக்கிறார்கள். மேதா பட்கரையும், சுவாமி அக்னிவேஷையும் அதற்கான இயக்கத்தை எடுக்குமாறு கிஷன்ஜி கோரியுள்ளார். இப்போது கட்சி சார்பற்ற அரசியல் மக்கள் மத்தியில் எடுபடத் தொடங்குவதால், கட்சி அரசியல்வாதிகளுக்கு கிலி பிடிக்கத் தொடங்கிவிட்டது. கட்சி அரசியல் அனைத்துமே மக்கள் விரோதமாக செல்லும் காரணத்தினால், கட்சி சார்பற்ற அரசியல் மக்களுக்காக வேர்விட தொடங்கியிருக்கிறதா என்ற விவாதம் எழுந்துள்ளது. 63வது சுதந்திரத் தினத்தை இந்த நாடு சந்திக்கயிருக்கும் நேரத்தில், கட்சிகளின் அரசியல் பன்னாட்டு நிறுவனங்களின் மற்றும் கார்பரேட்டுகளின் நலனுக்காக செல்வதும், அதனாலேயே கட்சி சார்பற்ற அரசியல் மக்கள் நலனுக்காக எழுவதும் குறிப்பாக கவனிக்கப்படவேண்டியிருக்கிறது. சுதந்திரம் என்பதை வாயால் பேசுவது கட்சி அரசியலா? சுதந்திரம் என்பதை உண்மையில் நேசிப்பது கட்சி சார்பற்ற அரசியலா? இத்தகைய விவாதம் எழுந்துள்ளது. அதனால் தான் கட்சிகளுக்குள் உள்ள வலது துருவமும், இடது துருவமும் இணைகிறதா என்பதே நமது கேள்வி.
Monday, August 9, 2010
இங்கிலாந்தின் சாவு வியாபாரிகளுக்கு லாபம்: இந்திய மக்களுக்கு பட்டை நாமம்
சமீபத்தில் இங்கிலாந்து நாட்டின் அதிபர் டேவிட் கேமரானுடைய வர்த்தக குழுவினர், தங்கள் இந்திய வருகையின் போது ஏற்படுத்திய வர்த்தக ஒப்பந்தங்கள் புதிய விவாதங்களைக் கிளப்பியுள்ளது. டேவிட் கேமரானுடன் இங்கிலாந்து நாட்டின் 6 மூத்த அமைச்சர்களும், 50 வணிக தலைவர்களும், 2 ஆயுத உற்பத்தி செய்யும் சாவு வியாபார நிர்வாகிகளும் வந்திருந்தார்கள். கேமரானுடைய வருகைக்கு முன்பு இங்கிலாந்து வெளிவிவகாரத் துறையும், பாதுகாப்புத் துறையும் இந்தியாவுடன் ஆயுத வியாபார ஒப்பந்தங்களுக்கு எதிராக இருந்தனர். அணுகுண்டு தடுப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத இந்தியாவுடன் எப்படி ஆயுத வர்த்தக பரிமாற்றம் செய்வது என்பதான விவாதம் இங்கிலாந்தில் இருந்தது. அதனால் அதிகமான அளவில் இந்தியாவுடன் வர்த்தகம் செய்து கொள்ளலாம் என்ற லாப வெறி கொண்ட தனியார் ஆயுத உற்பத்தியாளர்கள் இங்கிலாந்தின் ஆட்சியை செல்வாக்கு செலுத்தினர். அதையொட்டி இரு நாடுகளும் தனியார் துறை நிறுவனங்களுக்கிடையில், பெரும் ஆயுத வர்த்தக ஒப்பந்தத்தை செய்து கொண்டனர். இங்கிலாந்தின் பி.ஏ.இ. மற்றும் ரோல்ஸ் ராய்ஸ் என்ற 2 ஆயுத வியாபார நிறுவனங்களுடன், இந்தியாவின் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் என்ற தனியார் நிறுவனம் ஒப்பந்தம் செய்து கொண்டது. அதையொட்டி 57 ஹாக் பயிற்சி விமானங்கள் இந்தியாவிற்கு கொடுக்கப்படும். முந்தைய ஒப்பந்தத்தில் 66 ஹாக் விமானங்கள் கொடுக்கப்பட்டன. இப்போது பி.ஏ.இ. நிறுவனத்திற்கு 5000 லட்சம் பௌண்டு என்ற இங்கிலாந்து நாணயமும், ரோல்ஸ் ராய்ஸ் என்ற இங்கிலாந்து நிறுவனத்திற்கு 2000 லட்சம் பௌண்டும், ஆக மொத்தம் 7000 லட்சம் பௌண்டு மதிப்புள்ள ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதன் மூலம் இங்கிலாந்தில் 200 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் கூறப்பட்டது. இந்த ஒப்பந்தம் தங்களுடைய புதிய வணிக ரீதியான வெளிநாட்டு கொள்கைகயை நடைமுறைப்படுத்தியதால் கிடைத்தது என்று கேமரான் பெருமைப்பட்டுக் கொண்டார். இந்தியாவை இந்த பிராந்தியத்தில் ஏற்றுமதிக்கும், மூலதனமிடவும் முக்கியமான பொருளாதார பங்காளியாக, இங்கிலாந்து அரசாங்கம் காண்கிறது என்றும் வருகை புரிந்தவர்கள் அப்போது கூறினார்கள். உலகத்தை முழுக்க தங்கள் கதவடிக்கு கொண்டுவரும் தன்மையுள்ள இந்தியா தங்களுடைய எதிர்கால பங்காளியாக இருக்கும் என்று அப்போது கேமரான் எழுதினார். தனது வருகை இங்கிலாந்து நாட்டில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கம் கொண்டது என்றும் கூறினார். இங்கிலாந்தில் இருக்கின்ற இந்திய நிறுவனங்களில் 90,000 பேர் இதுவரை வேலை செய்வதாக இந்திய பிரதமர் கூறியதையொட்டி, இந்தியாவில் இங்கிலாந்து நிறுவனங்களுடைய நடவடிக்கையால் மேலும் பலருக்கு வேலை கிடைக்கும் என்று அப்போது கேமரான் கூறினார். இரு நாடுகளிலும் ஆயிரக்கணக்கானோருக்கு எதிர்காலத்தில் வேலை கிடைக்கும் என்று நம்பிக்கைக் கொடுத்தார். தனது வருகை வர்த்தக பயணமாக இருந்தாலும், வேலை தேடும் பயணமாக இருப்பதையே தான் விரும்புவதாகவும் அப்போது கூறினார். 2006ம் ஆண்டு ஏற்கனவே எதிர்க்கட்சி தலைவராக இருந்த கேமரான் இந்தியா வந்திருந்தார். அப்போது இங்கிலாந்தை தொழிலாளர் கட்சி ஆட்சி செய்தது. பழமைவாத கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சியும் தலைவராக அப்போது அவர் வருகை புரிந்தார். இங்கிலாந்தின் வாகன உற்பத்திக்கும், எஃகு உற்பத்திக்கும் இந்திய முதலாளிகள் ஈடுபட்டு வருவதை சுட்டிக்காட்டிய கேமரான், வங்கி, காப்பீடு, பாதுகாப்பு உற்பத்தி, சட்டபூர்வமான சேவைகளில் வர்த்தக தடைகள் இல்லாமல் பார்த்துக் கொள்ளுமாறு ஆலோசனை கூறியுள்ளார். இப்போது கையெழுத்தாகியுள்ள ஒப்பந்தத்தின் மூலம் ரூ.5,110 கோடிக்கான ஹாக் ஜெட் ஒப்பந்தம் ஒரு மாபெரும் வெற்றி என்பதாக இங்கிலாந்து ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஏனென்றால் தனியார் சாவு வியாபாரியான பி.ஏ.இ.க்கு ரூ.3,600 கோடியும், ரோல்ஸ் ராய்ஸ்க்கு ரூ.1,500 கோடியும் கிடைக்கும். இத்தகைய பல கோடி ரூபாய்க்கான ஆயுத விற்பனையை இந்தியாவிற்கு, இங்கிலாந்தின் ஆயுத நிறுவனங்கள் அறிவிப்பதற்கு ஒரு வாரம் முன்பு தான், ஆப்பிரிக்காவின் பாலைவனங்களை விட அதிகமான ஏழ்மையை இந்தியா சந்திக்கிறது என்ற உண்மையை இங்கிலாந்து மக்கள் கேள்விப்பட்டார்கள். ஆகவே அவர்களுக்கே கூட இது அதிர்ச்சி தரும் ஒப்பந்தம். இந்திய பெரும்பான்மை மக்களுக்கு உணவு பாதுகாப்பும், குடிநீரும், அடிப்படை சுகாதார தேவையும் கிடைக்காத சூழலில், அதிக செலவில் பெரும் ஆயுதங்கள் வாங்குவதற்கான தேவை எங்கே வந்தது என்ற கேள்வியை இங்கிலாந்து ஊடகங்களும் கேட்கின்றன. இத்தகைய ஒப்பந்தம் கொலைகள் செய்வதற்கான கருவிகளை விற்கக்கூடிய கொடூரமான நடைமுறையை முகமூடி போட்டு மறைக்கவும், ஒப்புக்கொள்ள வைக்கவும், அவை வேலைகளை உருவாக்கும் என்றும், நல்ல வர்த்தகத்தை கொடுக்கிறது என்றும் அரசாங்கமும், ஊடகங்களும் கூறுவதாக விமர்சனங்கள் அந்த நாட்டில் எழுந்துள்ளன. ஆனால் இவற்றால் பாதிக்கப்படும் இந்திய நாட்டிலோ, ஊடகங்கள் வாயிலாகவோ, எதிர்க்கட்சிகள் மூலமாகவோ எந்தவொரு கடுமையான விமர்சனங்களும் மக்கள் மன்றத்திற்கு வரவில்லை. இப்போது இந்தியா உலகத்திலேயே தனது பாதுகாப்புத் துறைக்கான பட்ஜெட்டை பத்தாவது பெரிய பட்ஜெட்டாக உருவாக்கியுள்ளது. இது ஆண்டுதோறும் சீன நாடு செலவழிக்கும் தொகையில் 40% வருகிறது. உலகிலேயே இந்தியா தான் அதிகமான அளவில் ஆயுதங்களை இறக்குமதி செய்யும் நாடு என்று ஸ்டாக் ஹோம் சமாதான ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது. 2000மாவது ஆண்டுக்குப் பிறகு இந்தியா தனது ஆயுத இறக்குமதியை 240% அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு மட்டும் பாதுகாப்பு துறைக்கான செலவை 34% உயர்த்தியுள்ளது. இந்தியாவிலிருக்கும் அதிகாரம் படைத்த மேட்டுக்குடி பணக்காரர்களுடைய விருப்பங்களையும், தேவைகளையும் இத்தகைய சாவு வியாபார வர்த்தகம் செய்யும் போது, 80 கோடி இந்தியர்கள் ஒரு நாளுக்கு ரூ.80 வருவாயில், ஆப்பிரிக்க பாலைவனங்களை விட 2 மடங்கு ஏழ்மையில் இருக்கிறார்கள் என்று இங்கிலாந்தின் ஊடகங்களே அம்பலப்படுத்தியுள்ளன. இந்திய அரசு பின்பற்றக்கூடிய நவீன தாராளவாத பொருளாதார திட்டத்தின் விளைவு தான் இத்தகைய சீரழிவு என்பதையும் அவர்கள் கூறுகின்றனர். ஒரு நாட்டின் தெருவில் நடமாடும் சாதாரண மக்கள் தான், அந்த நாட்டின் உண்மையான அடையாளம். அப்படியிருக்கையில் இந்திய நாட்டின் அடையாளம் என்பது ஏழ்மையில் உழலும் மக்கள் தான். அப்படிப்பட்ட ஒரு நாட்டிற்கு ராணுவ முறையில் ஆயுத சேகரிப்பை ஏற்படுத்துவது மற்றும் விளையாட்டுப் போட்டிக்கு கண்டபடி செலவழிப்பது மற்றும் சேர்க்கைக் கோள் திட்டங்களுக்கு பணத்தைக் கொட்டுவது ஆகியவை யாருக்கு நன்மை பயக்கும்? மேற்கண்ட சர்ச்சைகளை உலகத்தின் மௌனமான சாட்சியங்கள் விவாதித்து வருகின்றன. இந்திய நாட்டில் இருக்கின்ற பொதுமக்களும், முன்னோடிகளும், ஆர்வலர்களும், எதிர்கட்சிகளும், இன்னமும் போதுமான அளவிற்கு இத்தகைய பற்றி எரியும் நெருப்பான பிரச்சனையை விவாதிக்காமல் இருப்பது ஏன்? சொரணையற்ற ஒரு வாழ்க்கை இங்கிருக்கும் அறிவுஜீவிகளுக்கு தேவைதானா? நாடாளுமன்றத்தில் இப்போது எழுப்பப்படும் காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஏற்பாட்டிலுள்ள ஊழல் விவாதம், உதவாக்கரை வேலைகளுக்கு கோடிக்கணக்கில் பணத்தை கொட்டிச் செலவழிப்பதை தட்டிக்கேட்குமா? தடுத்து நிறுத்துமா?
Sunday, August 8, 2010
நாகசாகி நாள் : இழப்பீட்டை நிராகரிக்க ஒரு இழப்பீடு மசோதா
1945ம் ஆண்டு ஆகஸ்டு 9ம் நாள் அந்த கொடூரம் நடந்தது. அதாவது 2ம் உலகப் போரில் இறுதி நேரத்தில் அமெரிக்கா, ஜப்பான் நாட்டிலுள்ள நாகசாகி நகரின் மீது அன்று அணுகுண்டை வீசியது. ஹிரோஷிமா நகரின் மீது குட்டிப் பையன் என்ற ஒரு அணுகுண்டை வீசிய 3ம் நாள், நாகசாகி நகரின் மீது, "தடி மனிதன்" என்ற பெயர் கொண்ட அணுகுண்டை நாகசாகி மீது வீசியது. நாகசாகி நகரில் 80,000 பேர் வரை இந்த அணுகுண்டு தாக்குதலில் மரணமடைந்தார்கள். நாகசாகி நகர் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் 6வது நாள் அதாவது ஆகஸ்டு 15ம் நாள் ஜப்பான் அரசு, எதிர்தரப்பிடம் சரணடைந்தது. பசிபிக் போர் என்று அழைக்கப்பட்ட 2வது உலகப் போர் அதிகாரப்பூர்வமாக செப்டம்பர் 2ம் நாள் முடிவடைந்தது. ஜப்பான் சரணடைவுக்கான கையெழுத்தை அந்த நாளில் போட்டது. அதனுடன் சேர்ந்த ஜெர்மனி மே 7ம் நாள் ஐரோப்பாவில் போரை நிறுத்தி சரணடைவு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. அணு ஆயுதங்களை அனைத்து நாடுகளும் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை அப்போதிலிருந்து ஜப்பான் முன்வைத்து வருகிறது. உலகம் முழுவதும் அமைதிக்காகவும், சமாதானத்திற்காகவும் குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் நாடாக கடந்த காலங்களில் அறியப்பட்ட இந்திய அரசு, இப்போது இந்திய நாடாளுமன்றத்திற்கு முன்னால் ஒரு மசோதாவை சட்டமாக்குவதற்காக முன்வைத்துள்ளது. சமீபத்தில் சர்ச்சைக்குள்ளான ஒப்பந்தம் என்று கூறப்போனால், 123 அமெரிக்க இந்திய அணுசக்தி ஒப்பந்தத்தை கூறலாம். அதாவது இந்தியாவில் இருக்கின்ற அணுசக்தி உற்பத்தியை, ஆக்கத்திற்கான அணுசக்தி என்றும், அழிவிற்கான அணுசக்தி என்றும் பிரிக்கலாம் என்பதாகவும், பிரித்து அதில் ஆக்கத்திற்கான அணுசக்தியை அதிகமாக உற்பத்தி செய்வதற்காக அமெரிக்கா உதவி செய்யும் பொருட்டு உருவாக்கப்படும் ஒப்பந்தம் என்பதாகவும் அது சொல்லப்படுகிறது. உண்மையிலேயே உலகில் இருக்கின்ற எந்த நாட்டிலும் ஆக்கத்திற்கான அணுசக்தி என்பதையும், அழிவிற்கான அணுசக்தி என்பதையும் பிரிக்க முடியுமா? ஆக்கத்திற்கான அணுசக்தி என்பது நாட்டின் தேவைக்கான மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான அணுசக்தி என்பதாக விளக்கப்படுகிறது. அழிவிற்கான அணுசக்தி என்பது அணு ஆயுதங்களை உற்பத்தி செய்வதற்கான அணுசக்தி என்பதாக விவரிக்கப்படுகிறது. இந்தியாவில் இதுவரை இயங்கி வருகின்ற மின்சார உற்பத்திக்கான அணு உலைகள் என்பவை என்ன செய்து கொண்டிருக் கின்றன? மும்பையில் இருக்கும் தாராப்பூர் அணுசக்தி நிலையம் பற்றிய பல்வேறு சர்ச்சைகள் தொடரத்தான் செய்கின்றன. அதே போல சென்னை அருகே உள்ள கல்பாக்கத்தில் இருக்கின்ற அணுசக்தி நிலையம் பல்வேறு விவாதங்களால் கேள்வி கேட்கப்பட்டு வருகிறது. கர்நாடகாவில் இருக்கின்ற கெய்கா அணுசக்தி நிலையம் தொடங்கப்படுவதற்கு முன்பே அதற்கு எதிர்ப்புகள் கிளம்பின. அப்போது கர்நாடக அரசு இருதரப்பு கருத்துக்களையும் விவாதிப்பதற்கான ஒரு பெரிய அளவிலான கருத்தரங்கை ஏற்பாடு செய்தது. அதன் பிறகு வழக்கமாக அரசுகள் செய்வது போல, அந்த கெய்கா அணுசக்தி நிலையத்தை கொண்டு வந்தது.இத்தகைய விவாதங்கள் ஏற்கனவே இருந்து வரும் போது, 23 ஆண்டுகளுக்கு முன்னால் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கூடங்குளத்தில் ஒரு அணுஉலையை ரஷ்யாவின் உதவியுடன் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் அறிவிக்கப்பட்டன. அப்போதுதான் ரஷ்ய நாட்டில் இருக்கின்ற செர்னோபில் என்ற நகரத்தில் இருந்த அணுஉலை வெடித்து, அதனால் லட்சக்கணக்கான மக்களின் மரணத்தையும், பாதிப்பையும் இந்த உலகம் அதிர்ச்சியுடன் சந்தித்தது. செர்னோபில் நகரத்திலும், சுற்றுவட்டாரத்திலும் இருக்கும் புல், பூண்டுகள், செடி, கொடிகள் போன்ற தாவரங்களும் அதனால் பாதிக்கப்பட்டன. மாடுகள் கறக்கின்ற பாலிலும் அணுக்கதிர்வீச்சு பாதித்திருப்பதை கண்டுபிடித்தார்கள். இத்தகைய ஆபத்து வாய்ந்த அணுஉலைகளை, நமது மாநிலத்தில் கொண்டு வந்து இறக்குவதற்கு ரஷ்ய அரசுடன் சேர்ந்து கொண்டு இந்திய அரசும் கைகோர்த்தது. கடலோரத்தில் நிறுவப் படுகின்ற அணுஉலைகளின் கதிர்வீச்சுக்கள் கசிந்து, கடலில் உள்ள மீன்களைப் பாதிக்கும் என்றும், நச்சுத் தன்மை கொண்ட மீன்களை பிடித்து உணவுக்காக தொழில் செய்ய முடியாது என்று உணர்ந்த மீனவ மக்கள், இதை எதிர்த்துப் போராடத் தொடங்கினர். ஏற்கனவே கல்பாக்கம் நகரிலுள்ள அணுஉலைகளின் கதிர்வீச்சுக்கள், அருகாமை யிலுள்ள கடலில் பாதிப்புக்களை ஏற்படுத்தி வருகின்றன. அதனால் மீன்களுக்கும், மீனவர் களுக்கும் பாதிப்பு இருக்கிறது என அவர்களும் போராடி வருகிறார்கள். இந்த நிலையில்தான் கூடங்குளம் அணுஉலைகள் வந்து இறங்கியுள்ளன.கல்பாக்கத்தில் மின் உற்பத்திக்கான அணுஉலைகள் இயங்கத் தொடங்கியதும், அணுவைப் பிளந்து வெளிவரும் சக்திகளில் புளூடோனியம் என்பதை அணுகுண்டு தயாரிக்க பயன்படுத்துகிறார்கள். இப்படிப்பட்ட அழிவிற்கான அணுகுண்டு தயாரிப்பிற்கு, ஆக்கத்திற்கான என்று சொல்லப்படும் அணு உலைகள் பயன்படுகின்றன என்று அணு கதிர்வீச்சு எதிர்ப்பாளர்கள் குற்றம் சாட்டி வந்தனர். அதை அணுசக்தி துறை மறுத்து வந்தது. கல்பாக்கம் அணு உலையிலும் இதே போல பி.ஆர்.பி. என்ற துறையில் புளூடோனியம் சேமிக்கப்பட்டு, அணுகுண்டு தயாரிப்பிற்கு ஏற்பாடு நடப்பதாக கூறப்பட்ட குற்றச்சாட்டையும், 20 ஆண்டுகளுக்கு முன்னால் அணுசக்தி துறை மறுத்தது. ஆனால் அதுவே இப்போது அம்பலமாகி யுள்ளது. சமீபத்தில் விசாகப்பட்டினத்தில் இந்தியாவின் தலைமை அமைச்சர், ஒரு அணுவிசை நீர்மூழ்கி கப்பலை தொடங்கி வைத்தார். உடனடியாக கல்பாக்கத்திலுள்ள அணு விஞ்ஞானிகள், தாங்கள் தான் அதற்கான அணுவிசையை, ரகசியமாக தயாரித்துக் கொடுத்தோம் என்று பெருமை தேடிக் கொண்டனர். இத்தகைய நிலையில் ஆக்கத்திற்கான அணுசக்தியை பிரித்து நிறுத்துவது என்ற அமெரிக்காவின் தந்திரமான செயலை, ஆதரிக்கும் இந்திய அரசின் நிலைப்பாடும் கேள்விக் குறியாகியுள்ளது. சென்னையில் ஹிரோஷிமா அணுகுண்டு வீச்சு நாளன்று, அணு உலைகளை எதிர்க்காமல், அணு ஆயுதங்களை மட்டும் எதிர்ப்பது என்ற சில அறிவுஜீவிகளின் அரங்கு கூட்டமும் கூட, அம்பலப்பட்டுப் போனது. இந்நேரத்தில்தான் இந்திய நாடாளுமன்றத்தில் முன்பு வைக்கப்பட்டுள்ள அணுசக்தி விபத்தை இழப்பீடு மசோதா 2010 என்பது பற்றிய விவாதம் எழுகிறது. இதே போன்ற விபத்து பாதுகாப்பு சட்டங்கள், அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் இருக்கின்றன. அவை தருகின்ற இழப்பீடு தொகையை விட, இந்திய அரசு முன்வைத்துள்ள மசோதாவிலுள்ள இழப்பீடு தொகை 23 மடங்கு குறைவாக இருக்கிறது. அணுஉலைகள் இயல்பாக இயங்கும் போதே, அதாவது விபத்து ஒன்று நடைபெறாத போதே, அணுக்கதிர்வீச்சு நடக்கத்தான் செய்யும். அந்த கதிர்வீச்சால் பாதிக்கப்படும் மக்களுக்கு அமெரிக்காவில் உள்ள சட்டத்தில் இழப்பீடு தொகை கொடுக்கப்படும். ஆனால் இந்திய மசோதாவில் விபத்து நடைபெறாத காலத்தில் நடக்கும் அணுக்கதிர்வீச்சு பாதிப்புகளுக்கு இழப்பீடு கேட்க முடியாது. அணுகதிர்வீச்சின் விளைவுகளாக தைராய்டு, புற்றுநோய், மல்டிபிள் மைலமோ போன்ற நோய்கள் ஏற்படுகின்றன. அத்தகைய குற்றச்சாட்டுகளுக்கு இல்லை என்றோ, ஆமாம் என்றோ அணுசக்தி துறை இங்கே கூற மறுக்கிறது. கதிர்வீச்சால் ஏற்படும் புற்றுநோய் அடையாளம் காணப்பட 10 ஆண்டுகள் காலம் பிடிக்கும். ஆனால் இழப்பீட்டிற்கான இந்திய மசோதாவில், 10 ஆண்டுகளுக்குள் இழப்பீடு கேட்டு விண்ணப்பிக்காவிட்டால், இழப்பீடு கிடைக்காது என்பதாக குறிப்பிடப் பட்டுள்ளது. இதன் மூலம் இழப்பீட்டை நிராகரிக்கின்ற ஒரு இழப்பீடு மசோதாதான் இந்திய நாடாளுமன்றம் முன்னால் வைக்கப்பட்டுள்ளது என்று தெரிகிறது. இது ஒரு கேலிக் கூத்தாக இருக்கிறது.
Thursday, August 5, 2010
ஹிரோஷிமா: அமெரிக்கா போட்ட அணுகுண்டு
1945ம் ஆண்டு 2ம் உலகப்போரின் கடைசிக் கட்டம். அமெரிக்காவும், இங்கிலாந்தும் ஒரு முகாம் என்றால், ஜப்பானும், ஜெர்மனியும் இன்னொரு முகாம் என்பதாக இரண்டாவது உலகப்போர் நடந்து வந்த காலம். ஜப்பான் நாட்டிலுள்ள ஹிரோசிமா என்ற நகரின் மீது ஆகஸ்ட் 6ம் நாள் அமெரிக்கா ஒரு அணுகுண்டை வீசியது. அந்த அணுகுண்டுவிற்கு ‘குட்டி பையன்’ என்று பெயர். அது துப்பாக்கி வடிவில் இருந்தது. யுரேனியம்235 ஆல் அது உருவாக்கப்பட்டது. டென்னேஸியில் உள்ள ஓக் ரிட்ச் என்ற இடத்தில் ராட்சச தொழிற்சாலையில், யுரேனியத்திலிருந்து அரிதான ஐசோடோப்பை எடுத்து அந்த அணுகுண்டு தயார் செய்யப்பட்டது. ஜுலை 16ம் நாளே புது மெக்சிகோவில் அலமோ கார்டோ அருகே டிரினிடி சைட்டில் முதலில் சோதிக்கப்பட்டது. அது மன்ஹட்டன் திட்டம் என்பதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. அதன் அறிவியல் ஆராய்ச்சி அமெரிக்க மருத்துவர் ராபர்ட் ஓபன்ஹீமர் என்பவரால் இயக்கப்பட்டது. அமெரிக்க ராணுவத்தின் பொறியியலாளர்கள் படையிலிருந்து தளபதி லெஸ்லி க்ரோவ்ஸ் அதிகாரத்தின் கீழ் அந்த முழு திட்டமும் தயார் செய்யப்பட்டது. 6 மாதங்கள் தொடர்ந்து நடத்தப்பட்ட குண்டுவீச்சுக்களால் ஜப்பான் நாட்டின் 67 நகரங்களை, அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் தாக்கியிருந்தன. அதன் பிறகு அமெரிக்கா கொடுத்த கெடுவையும் ஜப்பான் அரசாங்கம் அலட்சியப்படுத்தியது. அதனாலேயே அப்போதைய அமெரிக்க அதிபரான ஹேரி ட்ரூமன் ஹிரோஷிமா நகரின் மீது அந்த குட்டி பையனை ஏவிவிட தீர்மானித்தார்.
ஹிரோஷிமா நகரம் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்தது. ஜப்பானின் இரண்டாவது ராணுவ தலைநகராக இருந்தது. அது தவிர தொடர்பு மையமாகவும், சேமிப்பு கிடங்காகவும் இயங்கி வந்தது. ஹிரோஷிமா மீதான அணுகுண்டு தாக்குதலுக்குப் பிறகு 4 மாதங்களில், 90,000 பேரில் இருந்து 166,000 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். ஹிரோஷிமாவில் உள்ள சுகாதாரத்துறையின் மதிப்பீட்டின் படி, இறந்தவர்களில் 60% குண்டின் எதிரொலியிலோ, பற்றிய நெருப்பின் காயத்திலோ இறந்திருக்கிறார்கள். 30% பேர் உடைந்து விழுந்த கட்டிடங்களினால் இறந்திருக்கிறார்கள். 10% மற்ற காரணங்களால் இறந்திருக்கிறார்கள். அடுத்த சில மாதங்களில் தீப்புண்ணின் பாதிப்பிலும், கதிர்வீச்சின் நோயிலும், மற்ற காயங்களிலும் நோய்வாய்ப்பட்டு இறந்திருக்கிறார்கள். மொத்தத்தில் 20% வரை அணுகதிர்வீச்சு நோயாலும், 30% வரை தீப்புண்களாலும், 60% வரை மற்றக் காயங்களால் ஏற்பட்ட நோய்களாலும், பெரும்பாலும் பொதுமக்களே இறந்திருக்கிறார்கள்.
முதலில் இந்த தாக்குதலை நடத்துவதற்கான இலக்குகளாக கியோட்டா, ஹிரோஷிமா, யோகோஹாமா மற்றும் கோகுராவிலுள்ள ஆயுத தளவாட கிடங்கு ஆகியவை ராபர்ட் ஓபன்ஹீமர் தலைமையில், இலக்குக் குழு என்பதில் 1945ம் ஆண்டு மே 10,11 தேதிகளில் முன்வைக்கப்பட்டது. ஹிரோஷிமா நகரம் நகர்ப்புற தொழிற்சாலைப் பகுதிக்கு மத்தியில் அமைந்துள்ளது. அங்கு அதிகளவிலான சேதாரத்தை அந்த அணுகுண்டு தாக்குதல் ஏற்படுத்தும் என்று அனுமானிக்கப்பட்டது. அண்டையில் இருக்கும் மலைகளும், பயங்கரமான எதிரொலிகளைக் கொடுத்து வெடியின் பாதிப்பை அதிகமாக்கிக் கொடுக்கும் என்று தீர்மானித்தனர். போட்ஸ் டாம் பிரகடனத்தின் அம்சங்களை நிபந்தனையற்று சரணடைவுடன், ஜப்பான் சரணடைந்து ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காகத் தான், அந்த தாக்குதல் நடத்தப்பட்டது. தாக்குதல் இலக்குகள் மூலம் உளவியல் ரீதியான தாக்கங்களுக்குத் தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. அதேபோல அனைத்து நாட்டளவில் பகிரங்கமாக இத்தகைய முதல் அணுகுண்டு தாக்குதல் நடத்தப்படுவதன் மூலம், அதன் முக்கியத்துவத்தை போதுமான அளவு உணரவைக்க வேண்டும் என்பதும் நோக்கமாகும்.
கியோட்டாவில் தாக்குதல் நடத்தியிருந்தால், அது ராணுவத் தொழிற்சாலைகளின் மையமாக இருப்பதாலும், அறிவுஜீவி மையம் என்பதாக இருப்பதாலும், அந்த அணுகுண்டின் முக்கியத்துவம் மேலும் கூடியிருக்கும். ஆனால் இரண்டாம் உலகப்போரின் காலத்தில், அமெரிக்க ராணுவ உளவுசேவையில் ஜப்பான் பற்றிய நிபுணர் என்று கருதப்பட்ட எட்வின் ரெய்ஸ்சௌர் கியோட்டா மீதான குண்டுவீச்சை தவறுதலாக தவிர்த்து விட்டார். அதேசமயம் பல பத்தாண்டுகள் முன்னால் தனது தேனிலவை கியோட்டாவில் கொண்டாடிய ஹென்றி ஸ்டிம்சன் என்ற போர் செயலாளர், அந்த நகரின் மீது தனக்கிருந்த மரியாதையால் அதன் மீதான தாக்குதலை தவிர்த்தார். ஜுலை 26ம் நாள் அமெரிக்க அதிபர் ட்ரூமனும், கூட்டாளி நாடுகளின் தலைவர்களும், ஜப்பானை சரணடைய கோரும் போட்ஸ் டம் பிரகடனத்தை வெளியிட்டார்கள். அது ஒரு கெடுவாக வைக்கப்பட்டது. சரணடையாவிட்டால் தாக்குவோம் என அறிவித்திருந்தார்கள். முழுமையாக ஜப்பான் ஆயுதப்படையை அழித்து விடுவோம் எனவும், ஜப்பானிய தாய் நாட்டை உடைத்து விடுவோம் எனவும் அப்போதைய மிரட்டல் அமைந்திருந்தது. அதற்கு பொருள் அப்படிப்பட்ட தன்மைக் கொண்ட அணுகுண்டு ஒன்றை ஜப்பான் மீது வீசப்போகிறார்கள் என்று அப்போது புரிந்துக் கொள்ள முடியவில்லை. அதனால் ஜுலை 28ம் நாள் ஜப்பான் அரசாங்கம் அந்த மிரட்டல் பிரகடனத்தை நிராகரித்ததாக ஜப்பானிய ஊடகங்கள் வெளியிட்டன.
ஹிரோஷிமா நகரம் 3,81,000 மக்கள் தொகை கொண்டதாக இருந்தது. அணுகுண்டு வீச்சுக்குப் பிறகு, மக்கள் தொகை கணக்கெடுத்த ஆவணங்கள் கூட நெருப்புக்கு பலியாகியிருந்தன. அணுகுண்டு வீச்சு நடத்தப்பட்டதற்கு ஒரு மணி நேரம் முன்பு, சில அமெரிக்க விமானங்கள் ஜப்பானின் தெற்கு பகுதியை நோக்கி வருவதை ரேடார்கள் கண்டுபிடித்தன. அதையொட்டி எச்சரிக்கைக் கொடுக்கப்பட்டு, ஹிரோஷிமா உட்பட பல நகரங்களில் வானொலி கூட நிறுத்தப்பட்டது. வீசப்பட்ட ‘குட்டி பையன்’ என்ற அணுகுண்டு 65 கி.கிராம் யுரேனியம் 235 உடன் 43 செகண்ட்கள் நேரம் எடுத்து கீழே இறங்கியது.
மேற்கண்ட அணுகுண்டு தாக்குதல் உலகம் முழுவதிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சுமார் 100 கிலோ மீட்டர் வரை வெடித்த அணுகுண்டிலிருந்து வெளியேறிய அணுக்கதிர் வீச்சுகள் மக்களை தாக்கின. அதன் பாதிப்பு இன்னமும் மக்கள் மத்தியிலும், பல்வேறு உயிரினங்கள் மத்தியிலும் இருக்கிறது.
அணுகுண்டின் தாக்குதலால் ஏற்படுத்தப்படும் அணுக்கதிர் வீச்சுகள், பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் அழியாமல் உலகின் உயிரினங்களை அழித்துக் கொண்டிருக்கும் தன்மை கொண்டவை. அணுகதிர் வீச்சுகளிலிருந்து பாதுகாப்பு என்பது இதுவரை உலகில் கண்டுபிடிக்கப்படவில்லை. புளுட்டோனியம்239 என்பதன் அணுவின் அளவு பாதியாக குறைவதற்கே 24,000 ஆண்டுகள் ஆகும் என்று அறிவியலாளர்கள் அறிவிக்கிறார்கள்.
அணுகுண்டுகள் அழிவை ஏற்படுத்தக்கூடியது என்பதை உலக நாடுகள் அனைத்தும் ஒப்புக் கொள்கின்றன. ஆனாலும் வர்த்தகப் போட்டியிலும், அதற்கான அதிகார மற்றும் ஆதிக்க போட்டியிலும் ஈடுபடும் உலக நாடுகளின் அரசுகள், அணுகுண்டுகளை தயார் செய்வதில் முனைப்புடன் ஈடுபடுகின்றன. அமெரிக்கா போன்ற நாடுகள் அணுகுண்டுகளை அதிகமான அளவில் உருவாக்கி, அவற்றை சேமித்து பெரும் அளவில் வைத்திருக்கின்றன. அதேசமயம் அணுகுண்டு சோதனைகளை கட்டுப்படுத்துவதற்கான ஒப்பந்தத்தை, இன்னொரு புறம் முன்வைக்கின்றன. தங்களிடம் சேமிப்பில் உள்ள அணுகுண்டுகளால் தாங்கள் நிரந்தரமாக ஆதிக்கம் செலுத்துவதற்காக, பிற நாட்டு அரசுகள் அணுகுண்டு சோதனை செய்வதையும், அணுகுண்டு தயாரிப்பதையும் எதிர்க்கிறார்கள் என்பது வெட்ட வெளிச்சமாகிவிட்டது.
அணுகுண்டுகளை தயார் செய்வதற்கான புளுட்டோனியத்தை, அணுஉலைகளிலிருந்தே இந்திய நாட்டில் பெற்றுக் கொள்கிறார்கள். ஆகவே சமாதானத்திற்கான அணுசக்தி, அழிவிற்கான அணுசக்தி என்பதாக அமெரிக்கா கூறுவது போல, இந்திய அரசும் இணைந்து அறிவிப்பது போல ஒன்று உண்டா என்ற கேள்வியை பொதுமக்கள் கேட்கத் தொடங்கினால் தான், உண்மையைக் கூறும் நிலமைக்கு அரசு தள்ளப்பட முடியும்.
Tuesday, August 3, 2010
சட்டத்தின் முன்னால் அறியாமை தண்டிக்கப்பட வேண்டாமா?
மகாராஷ்டிரா மாநிலத்தில் பந்தாரா மாவட்டத்திலிருக்கும் ஒரு கிராமம் தான் கயர்லாஞ்சி. பய்யாலால் போட்மாங்கே என்ற ஒரு தலித் விவசாயியின் குடும்பம், ஆதிக்கசாதி வெறிக்கு பலியானது. 2006ம் ஆண்டு செப்டம்பர் 29ம் நாள் மாலையில், ஒரே தலித் குடும்பத்தைச் சேர்ந்த சுரேகா, சுதிர்,ரோசன், பிரியங்கா ஆகிய 4 பேரை படுகொலை செய்துள்ளனர். அதில் 19 வயது ரோசன் பிறவியிலேயே பார்வையிழந்தவர். 17 வயது உள்ள பிரியங்கா பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். கொடூரமாக அவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். குடும்பத் தலைவர் பய்யாலால் ஒரு சிறிய விவசாயி. தன்னுடைய சொந்த நிலத்தை உழுது பயிர் செய்பவராக இருந்தார். பண்ணை யார்களான ஆதிக்கசாதியினர், அவரது நிலத்தை அபகரிக்க பல்வேறு முயற்சிகளை எடுத்தனர். மகாராஷ்டிரா மாநிலம் ஆண்டு பலவாக ஆதிக்கசாதி பண்ணையார்களின் செல்வாக்கில் உள்ள கிராமங்களைக் கொண்டது. அதனால் தான் தலித் பட்டியலில் உள்ள மஹர் இனத்தை சேர்ந்த அம்பேத்கர், அந்த மாநிலத்தில் உள்ள தலித் மக்கள் விடுதலைக்காக போராட வேண்டிய கட்டாயத்திற்குள்ளானார். அதுமட்டுமின்றி லட்சக்கணக்கான தலித் மக்களை, நசுக்கி வரும் சாதி கட்டுமான பிடிப்புக் கொண்ட இந்து மதத்தை விடுத்து வெளியே கொண்டு வந்து, புத்த மதத்தில் சேர்த்தார். ஆனாலும் கூட அத்தகைய மதமாற்றம், சாதி ஆதிக்கத்தையோ, தீண்டாமை கொடுமையையோ நீக்கி விடவில்லை. கயர்லாஞ்சியில் நடந்த தலித் படுகொலைகள் இதையே இன்றும் நிரூபித்து நிற்கின்றன. மேலே குறிப்பிடப்பட்ட பய்யாலால் குடும்பத்தினரும், அம்பேத்கர் பிறந்த அதே மஹர் இனத்தை சேர்ந்தவர்கள் தான். அவர்களும் பலரை போல புத்த மதத்தில் சேர்ந்தவர்கள் தான். ஆனாலும் தீண்டாமையும், சாதிப் பகைமையும், அவர்கள் மீது தாக்குதல் நடத்தாமல் இருக்கவில்லை.
ஆதிக்கசாதி பண்ணையார்கள், தலித் மக்களை நிலவுடமையாளர்களாக காண்பதற்கு விரும்பவில்லை. குறிப்பிட்ட கயர்லாஞ்சி கிராமத்தில் பெரும்பான்மையாகவுள்ள ஆதிக்கசாதியினர் மத்தியில், விரல் விட்டு எண்ணும் அளவுக்கே தலித் குடும்பங்கள் இருக்கின்றன. அதனாலேயே அவர்கள் பாதுகாப்பற்ற சூழலில் இன்னமும் வாழ்கிறார்கள்.
மேற்கண்ட கொலை வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் 2008ம் ஆண்டு செப்டம்பர் 24ம் நாள் குற்றம்சாட்டப்பட்ட 8 பேர்களில், 6 பேருக்கு தூக்குத் தண்டனை விதித்தது. சக்ரு மஹகு பிஞ்சேவர், சத்ருகன் இஸ்ஸாம் தண்டே, விஷ்வநாத் ஹக்ரு தண்டே, ராமு மங்ரு தண்டே, ஜெகதீஷ் ரத்தன் மண்ட்லேக்கர், பிராபகர் ஜஸ்வந்த் மண்ட்லேக்கர் ஆகிய 6 பேர் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டனர். சிசுபால் விஷ்வநாத் தண்டே, கோபால் சக்ரு பிஞ்சேவர் ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
2010ம் ஆண்டு ஜுலை 14ம் நாள் மும்பை உயர்நீதிமன்றத்தின் நாகபுரி கிளை, தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட 6 ஆதிக்கசாதி வெறியர்களுக்கும், தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து அறிவித்தது. நீதிமன்ற அமர்வில் இருந்த ஏ.பி.லவாண்டே, ஆர்.சி.சௌகன் ஆகிய நீதியரசர்கள் மேற்கண்ட தீர்ப்பை வழங்கினர். அதேசமயம் நடந்த படுகொலைகளை, 1989ம் ஆண்டின் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்ட பிரிவில் பதிவு செய்து விசாரிக்க வேண்டிய, அதனடிப்படையில் தண்டிக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதாக அந்த நீதியரசர்கள் குறிப்பிட்டது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. 2006ம் ஆண்டு நடந்த அந்த படுகொலைகளை, பதிவு செய்யும் போதே முதல் தகவல் அறிக்கையில், வன்கொடுமைத் தடுப்புச் சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படவில்லை. இத்தகைய காவல் துறையின் செயல் கடுமையாக சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.
ஜுலை 14ம் நாள் சோனியா காந்தி தலைமையிலான தேசிய ஆலோசனை கவுன்சில் கூட்டத்தில், இந்த சர்ச்சை எழுப்பப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற நாகபுரி கிளை இந்த வழக்கின் குற்றவாளிகளுக்கு அளிக்கப்பட்ட தண்டனையை, குறைத்தது மட்டுமின்றி மேற்கண்ட குற்றம் சாதி அடிப்படையில் நடத்தப்பட்ட குற்றம் அல்ல என்றும் ஒரு கருத்தைத் தெரிவித்துள்ளது. அந்த கருத்து இந்திய நாடாளுமன்றத்தின் பேரவைத் தலைவரான மீரா குமார் மூலம் கடுமையாக சாடப்பட்டு, அதுவே நாடெங்கிலும் பெரும் விவாதத்தை கிளப்பி விட்டது.
தமிழ்நாட்டிலும் கூட அத்தகைய நீதியரசர்களின் முத்திரைக் குத்தல் கடுமையான ஆர்ப்பாட்டங்களுக்கும், கண்டனங்களுக்கும் இட்டுச் சென்றுள்ளது. மேற்கண்ட வழக்கை சாதாரண நிலப்பிரச்சனையாகவும், பழிவாங்கும் நடவடிக்கையாகவும் சித்தரித்த நீதியரசர்கள், அது 1989ம் ஆண்டின் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வராது என்ற கருத்தை தெரிவித்துள்ளனர். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தலித் மக்களுக்கெதிரான அனைத்து கொடூரமான குற்றங்களும், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று பேரவைத் தலைவர் மீரா குமார் கூறியது, ஊடகங்களுக்கு பெரும் செய்தியாக வெளிவந்தது. தாழ்த்தப்பட்ட மக்களுக்கெதிராக, தாழ்த்தப்பட்டோர் அல்லாத குற்றம் இழைத்தோர் செய்த கொடும் செயல் என்பதனால், மேற்கண்ட வழக்கு தானாகவே வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட வேண்டும் என்றும், அவ்வாறு பதிவு செய்யப்படும் போது அந்த சட்டமே அந்த வழக்கின் தீர்ப்பிற்கு சரியான முறையில் வழிவகுக்கும் என்றும் மீரா குமார் கூறியுள்ளார்.
உள்ளபடியே 1989ம் ஆண்டின் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமைத் தடுப்புச் சட்டம், தெளிவாகவே சில விளக்கங்களை கூறுகிறது. சாதாரணமாக நடத்தப்படும் தாக்குதல்கள், கொலைகள், வன்புணர்ச்சிகள், தீ வைத்தல், நிலத்தை பறித்தல் ஆகியவை பொதுவான குற்றயியல் பிரிவுகளின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்பது உண்மை தான். ஆனால் 1989ம் ஆண்டு தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டம் என்று ஒரு புதிய சட்டம் ஏன் கொண்டுவரப்பட்டது?
அந்த சட்டத்தில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த எவரையும், தாக்கவோ, கொலை செய்யவோ, வீட்டை தீ வைக்கவோ, நிலத்தை பறிக்கவோ, வன்புணர்ச்சி செய்யவோ, பாலியல் வன்முறை நடத்தவோ, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி சமூகத்தை சாராத ஒருவர் செய்வாரானால், மேற்கண்ட 1989ன் வன்கொடுமை தடுப்புச் சட்டம் பயன்படுத்தப்பட வேண்டும் என்று விளக்கியுள்ளது. அதை கூட விளங்காத நிலையில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யும் காவல்துறையோ, குறிப்பிட்ட வழக்கில் சி.பி.ஐ.யோ இருக்குமானால், அது சட்டம் தெரியாத அறியாமையாகவே கருதப்பட முடியும். அதுபோலவே மேற்கண்ட சட்டத்தில் உள்ள விளக்கத்தை படிக்காத அல்லது புரிந்துக் கொள்ளாத அல்லது அதன் அடிப்படையில் தீர்ப்பு வழங்காத ஒரு நீதியரசர் இருப்பாரானால், அவரும் சட்டம் தெரியாத அறியாமை என்ற தவறை செய்திருக்கிறார் என்றே பொருள். சட்டத்திற்கு முன்னால் அறியாமை என்பது மன்னிக்கப்பட முடியாது. அதுவும் கூட ஒரு குற்றமே என்ற உண்மை இந்த இடத்தில் பொருத்தப்பட்டு, பார்க்கப்படுமா?
மேற்கண்ட வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் அமுலாக்கத்திற்காக விதிகள் 1994ம் ஆண்டு உருவாக்கப்பட்டுள்ளன. அந்த விதிகளில் தாழ்த்தப்பட்டோர் அல்லாத ஒரு காவல் துறை அதிகாரியோ, நீதியரசரோ குறிப்பிட்ட வழக்கை வன்கொடுமை சட்டத்தின் கீழ் பதிவு செய்யாவிட்டால், அவர்களும் கடமை தவறியதற்காக 3 ஆண்டுகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று எழுதப்பட்டுள்ளது. மேற்கண்ட தவறான விளக்கத்தை, குறிப்பிட்ட சட்டத்திற்கு எதிராக தெரிவித்த நாகபுரி உயர்நீதிமன்ற நீதியரசர்கள், மேலே குறிப்பிட்ட படி 3 ஆண்டு தண்டனைக்குரிய குற்றத்தை செய்திருக்கிறார்கள். அவர்களை தண்டிக்க அரசும், அரசியல்வாதிகளும் தயாராக இருப்பார்களா?
Thursday, July 29, 2010
மனித கௌரவமும், மனித சோகங்களும்.
மனித கழிவுகளை மனிதர்களே அள்ளுவது தவறு என்றும், அதே போல கழிவு ஒடைகளில் உழைக்கும் மக்களை இறக்கிவிட்டு ஆபத்துகளை எதிர்கொள்ளவிடுவது பிழையானது என்றும், இந்திய நாட்டின் தேசிய மனித உரிமை ஆணையமும், பல்வேறு நீதி மன்றங்களும் கூறியுள்ளன. ஆனாலும் கூட இந்த நாட்டில் நிலவுகின்ற சாதி பாகுபாடும், தீண்டாமை இழிவுபடுத்தல்களும், மனிதர்களை அது போன்ற பணிகளில் நிர்பந்தித்துவருகிறது. அவ்வாறு செய்வது மனித கௌரவத்தை கேள்வி கேட்கின்ற ஒரு போக்கு என்று மனித உரிமை ஆர்வலர்கள் கொதித்துப் போகின்றனர்.
ஏற்கனவே மனித கழிவுகளை மனிதனே அள்ளக்கூடிய வேலைகளை தடை செய்யக் கோரி, தேசிய மனித உரிமை ஆணையம் 10 ஆண்டுகளுக்கு முன்பே கூறியிருந்தது. இந்திய அரசாங்கத்தின் அனைத்து துறைகளிலும் அது போன்ற செயல்பாடுகள் நிறுத்தப்படவேண்டும் என்று ஆணையிட்டது. அதை அமுல்படுத்தாத ரயில்வே துறையை கடுமையாக ஆணையம் கண்டித்தது. அதே போல கழிவு நீர் சாக்கடைகளில் பூமிக்குள் இறங்கி பணியாற்றச் செல்லும் தொழிலாளர்கள், கழிவுகளிலிருந்து வெளிவரும் நச்சு வாயுக்களால் தாக்கப்பட்டு, மரணமடைகின்ற நிகழ்ச்சிகளும் நாடெங்கிலும் நிகழ்ந்து வருகிறது. இத்தகைய கொடூரமான செயலை செயல்படுத்திவரும் அரசாங்கத் துறைகள் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துவருகின்றன. கழிவு நீர் சாக்கடைகளில் கொல்லப்படுகின்ற தொழிலாளர்கள் பற்றிய சோகச் செய்திகளும் ஊடகங்கள் மூலம் அம்பலப்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் உள்ள நகராட்சிகளில் இது போன்ற நிலைமை தொடர்கிறது. கழிவு நீர் சாக்கடைகளில் இதுவரை தமிழ்நாட்டில் மரணமடைந்த தொழிலாளர்களது எண்ணிக்கை 1000த்தை தாண்டும். மரணம் மட்டுமின்றி அத்தகைய தொழிலாளர்கள், கழிவு நீர்களுடனேயே கலந்து வாழ்வதால், பல விதமான தோல் நோய்களுக்கு உள்ளாகிறார்கள். அதன் மூலம் விரைந்து மரணத்தை பலர் சந்திக்கிறார்கள். பலர் நேரடியாக அரசாங்கம் மூலமாகவும், சிலர் தனியார் ஒப்பந்தகாரர்கள் மூலமாகவும் இத்தகைய வேலைகளில் ஈடுபடுகிறார்கள். இது இந்தியாவில் உள்ள தொழிலாளர் சட்டத்திற்கு எதிரானது.
சுகாதாரத் தொழிலாளர்கள் என்ற பெயரில், ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த இந்த தொழிலாளர்களை, இப்படிப்பட்ட பணிகளில் நகராட்சிகள் ஈடுபடுத்துகின்றன. உதாரணமாக திருச்சி மாநகராட்சி இத்தகைய பணிகளுக்கு ஒப்பந்தகாரர்களிடம், கழிவு நீர் குழாய்களை பராமரிக்கும் வேலையை கொடுத்துள்ளது. அதில் தற்காலிகத் தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். திருச்சியில் உள்ள செந்தண்ணீர்புரம் என்ற இடத்தில் ஒரு கழிவு நீர் கிடங்கு உள்ளது. அதில் ஜுன் மாதம் 21ம் நாள் 2 தொழிலாளர்கள் வேலைச் செய்யும் போது, நச்சு வாயு தாக்கி மரணமடைந்துவிட்டனர். வேலையில் ஈடுப்பட்ட போது கீழ் உள்ளாடை மட்டுமே அணிந்திருந்தனர். அவர்கள் உடல் முழுவதும் சேறு படிந்திருந்தது. அவர்கள் வாயிலிருந்து ரத்தமும், திரவமும் வழிந்தது. மேற்கண்ட பரிதாபமான நிலைமை படங்களுடன் ஊடகங்களில் வெளிவருகிறது. இது போல எத்தனையோ விபத்துகள் சென்னையிலும் மற்ற மாநகராட்சிகளிலும் தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாகவே நடந்து கொண்டிருக்கிறது. எத்தனைதான் ஊடகங்களும், மனித உரிமை ஆர்வலர்களும் கத்தினாலும், மாநகராட்சி தரப்பினர் அசைவதாகவே இல்லை.
ஒவ்வொரு விபத்து நடக்கும் போதும், அரசுதரப்பு அதிகாரிகள் இனிமேல் கருவிகளைத் தான் கழிவு நீர் அகற்றலுக்கு பயன்படுத்துவோம் என்று ஊடக நேர்காணல்களில் கூறுகிறார்கள். ஆனால் நடைமுறையில் அவ்வாறு நடப்பதில்லை. 1993ம் ஆண்டு மனித கழிவுகளை மனிதர்கள் அள்ளுவதை தடுக்கும் சட்டம் இந்தியாவில் கொண்டுவரப்பட்டுள்ளது. அதை மீறித்தான் அரசுத் துறைகள் செயல்படுகின்றனவா என்ற கேள்வி எழுகிறது. 2008ம் ஆண்டு நவம்பர் 20ம் நாள் சென்னை உயர்நீதிமன்றம் இத்தகைய வேலைகளுக்கு எதிராக ஒரு ஆணையை பிறப்பித்துள்ளது. அதை மதிக்காமல் திருச்சி மாநகராட்சி தொழிலாளர்களுக்கு முழுகால்சராய், பாதுகாப்பு கவசங்கள், முகமூடிகள், பிராணவாயு குழாய்கள் ஆகியவற்றை அளிக்காமல் வேலைக்கு அனுப்பியுள்ளது.
மேற்கண்ட ஆணையை ஒட்டி 2009ம் ஆண்டு ஜுன் 16ம் நாளும், ஜூலை 10ம் நாளும், ஜூலை 24ம் நாளும், ஆகஸ்ட் 8ம் நாளும் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றம், தொடராணைகளை சட்டப் பிரிவு226,215 ஆகியவற்றின் கீழ் கொடுத்துள்ளது. அத்தகைய ஆணைகளை தமிழ்நாடு அரசின் நகராட்சி நிறுவாகம் மற்றும் குடிநீர் வினியோகத் துறை செயலாளர் கவனமாக எடுத்திருந்தால், மேற்படி விபத்துகளை தடுத்திருக்கலாம். அதேபோல சென்னை குடிநீர் மற்றும் கழிவு நீர் வாரியத்தின் மேலாண்மை இயக்குனரும் மேற்கண்ட உயர்நீதிமன்ற ஆணைகளை கவனத்துடன் அமுலாக்கியிருந்தால், விபத்துகள் தவிர்க்கப்படும்.
மேலே கூறப்பட்ட அரசுத் துறைகள், நீதிமன்ற ஆணையை மீறியதாக 2009ம் ஆண்டு ஒரு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டது. அதன்பிறகே மேலே கூறிப்பிடப்பட்ட 5 ஆணைகள் அதே ஆண்டில் நீதிமன்றத்தால் கொடுக்கப்பட்டது. அதன் மீது நீதிமன்றம் நடத்திய விசாரணையில், சம்பந்தப்பட்ட சென்னை பெருநகர குடிநீர் வினியோகம் மற்றும் கழிவு நீர் வாரியத்தின் மேலாண்மை இயக்குனரை தலைவராகப் போட்டு, ஒரு சிறப்பு குழுவை உயர்நீதிமன்றம் நியமித்தது. அந்த சிறப்பு குழு கழிவு நீர் குழாய் பராமரிப்பில் மேம்பாட்டை கொண்டுவந்து, மனிதர்கள் அந்த பணியில் பாதுகாப்பின்றி ஈடுபடுவதை தடுக்க வேண்டும் என்பது நீதிமன்றத்தின் வழிகாட்டலாக இருந்தது. அந்த சிறப்பு குழுவில் இத்தகைய வழக்கை தொடுத்தவரும் உறுப்பினராக சேர்க்கப்பட்டார்.
சுகதார தொழிலாளர்களை இத்தகைய கழிவு நீர் சாக்கடைகளுக்குள் நுழையவிடுவதை தடைச் செய்து கருவிகளை பயன்படுத்த வேண்டும் என்பதாக நீதிமன்றம் கூறியிருந்தது. ஆனால் குறிப்பிடப்பட்ட சிறப்பு குழு 4 கூட்டங்கள் வரை கூட்டப்பட்டும், வழிகட்டல்கள் அமுலாக்கப்படவில்லை என்ற விமர்சனத்துடன் மீண்டும் வழக்கு நீதிமன்றத்துக்கு சென்றது. அதற்கு ஆகஸ்டு முதல் வாரத்திற்குள் தெளிவான அறிக்கையை முன் வைக்குமாறு நீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.
மேற்கண்ட நீதிமன்ற விசாரணைகளும், வழிகாட்டல்களும் நமக்கு ஒன்றை உறுதியாக தெளிவுப்படுத்துகிறது. அதாவது எத்தனைச் சட்டங்கள் போட்டாலும், அவற்றை செயல்படுத்தும் இடத்தில் உள்ள மனிதர்கள் அதாவது அதிகாரிகள் அந்த சட்டங்களை கிரகித்துக் கொண்டால் தான், சிரமேற்றால் தான் அமுல்படுவார்கள் என்ற உண்மை தெளிவாகிறது. சமூகத்தில் சாதி வேறுபாடுகளும், சாதி இழிவுபடுத்தல்களும் இருப்பதனால், வேலைகளிலும் சிலவற்றை இழிவானவை என்று கருதும் போக்கு உள்ளது. உயிருக்கு ஆபத்தான, பாதுகாப்பு இல்லாத வேலைகளை சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கு ஒதுக்கும் போக்கும் நிலவுகிறது. அதனால் அத்தகைய தொழிலாளர்கள் மீது, ஆதிக்க மனோபாவம் கொண்ட அதிகாரிகளுக்கு அக்கறை இருப்பதில்லை. இத்தகைய பொறுப்பற்ற அதிகாரிகளின் போக்கை, சாதி மனோபாவமாக பார்த்து அதன் மீது அல்லது அவர்கள் மீது தீண்டாமை ஒழிப்பு சட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவேண்டும். அத்தகைய அதிகாரிகள் செய்கின்ற தவறுகள் அப்பாவி தொழிலாளர் உயிரை மட்டும் பறிக்கவில்லை; நீதிமன்ற அவமதிப்பு மட்டும் செய்யவில்லை; சமூக ரீதியான வன்முறையாகவும் காணப்பட வேண்டும். ஆகவே அவை தீண்டாமை ஒழிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கையை கோரி நிற்கிறது.

Wednesday, July 28, 2010
மக்கள் போராட்டம் ஒடுக்கப்பட்டால், ஆயுதப் போரா?
சமாதானத்திற்காகவும், நீதிக்காகவும் ஒரு நீண்ட பயணம் என்பதாக வருகிற ஆகஸ்ட்15ம் நாளுக்காக ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அது கொல்கத்தாவிலிருந்து லால்கர் நோக்கி என்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பிரபல சமூக சேவகர் மேதாபட்கர், கொத்தடிமை விடுதலை முன்னணியின் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் சுவாமி அக்னிவேஷ் ஆகியோர் இந்த அறிவிப்பில் கையெழுத்திட்டுள்ளனர். இது அறவழியில் மக்களை அணிதிரட்டி நடத்தப்பட இருக்கின்ற ஒரு போராட்டம் என்பது புரிகிறது. இந்தியாவில் நிலவுகின்ற பல்வேறு பிரச்சனைகள் இது போன்ற பல்வேறு மக்கள் போராட்டங்களை கோரி நிற்கின்றன.
ஐ.நா. சபை சமீபத்தில் வறுமை பற்றி கொடுத்த ஒரு புதிய புள்ளி விவரத்தில் 28 ஏழ்மைமிக்க ஆப்ரிக்க நாடுகளை விட, 8 இந்திய மாநிலங்கள் வறுமையில் அதிகமான மக்களை தள்ளியுள்ளன என்பதாக கூறியுள்ளது. அது சம்பந்தப்பட்ட பல்வேறு செய்திகள் வெளியாகியுள்ளன. இந்திய மக்கள் தொகையில் 38 விழுக்காடு ஏழ்மையில் உழல்கிறார்கள் என்று ஒரு செய்தி. தெற்காசியாவில் தான் உலகிலேயே ஏழ்மை மக்களில் பாதி பேர் வாழ்கிறார்கள் என்று ஒரு செய்தி. பீகார், சத்திஸ்கர், ஜார்கண்ட், மத்தியபிரதேசம், ஓரிசா, ராஜஸ்தான், உத்திரபிரதேசம், மேற்குவங்கம் ஆகிய 8 மாநிலங்களில் மட்டும் 4 கோடியே 21 லட்சம் மக்கள் வறுமையில் வாடுகிறார்கள். பீகார் மாநிலத்தில் 81 விழுக்காடு ஏழை மக்கள். டெல்லியில் 15% ஏழைகள். இத்தகைய சூழ்நிலையில் பாதிக்கப்படும் மக்கள், போராட்டங்களில் ஈடுபடுவது இயற்கை தான்.
மற்ற மாநிலங்களை விட 43 ஆண்டுகளாக இந்தியாவின் பெரிய நாடாளுமன்ற இடது சாரி கட்சியின் ஆட்சி நடைபெறும் மேற்குவங்கத்தில் இந்த நிலைமை தொடர்வதற்கான காரணம் என்ன? மேற்குவங்கம் மாநிலத்தில் தங்கள் கோரிக்கைகளுக்காக போராடப் புறப்பட்ட மக்கள் இயக்கங்களை அரசு அனுமதித்ததா? அல்லது அடக்குமுறை செய்து நசுக்கியதா? சமீபத்தில் மேற்கு மிகினாபூர் மாவட்டத்தில் மாவோயிஸ்டுகளின் வட்டார தளபதி சிதுசோரன் மற்றும் 5 பேரை காவல் துறை படுகொலைச் செய்தது. அதை வெளியிட்ட அரசு, காவல் துறையின் அராஜகத்திற்கு எதிரான மக்கள் குழுவின் சிதுகானு மக்கள் தொண்டர்கள் என்ற போராட்ட முன்னணியை சேர்ந்தவர்கள் என்று கொல்லப்பட்டவர்களை வர்ணித்தது. அதாவது பிரபலமான மக்கள் திரள் அமைப்பை சேர்ந்தவர்களை, மாவோயிஸ்டுகள் என்ற பெயரில் கொலைச் செய்ததை அரசு அறிவித்துள்ளது. இவ்வாறு போராடும் மக்களமைப்புகளை நசுக்குவதும், அதன் முன்னோடிகளை கொலைச் செய்வதும் ஒரு அரசாங்கத்தின் வாடிக்கையாக இருப்பதனால் தான், போராட்ட முன்னோடிகளும், இளைஞர்களும் ஆயுதப் போராட்ட பாதையை நோக்கி செல்கிறார்கள் என்பதற்கு இதை விட போதுமான ஆதாரம் கிடைக்காது.
43 ஆண்டுகளாக அந்த மாநிலத்தை ஆளுகின்ற மார்க்சிஸ்ட் கட்சி, தனது கொள்கைகளை, மக்கள் ஜனநாயக புரட்சி என்று பரப்புரை செய்து, லட்சக்கணக்கான ஊழியர்களை திரட்டி வைத்திருந்தது. 1964ம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை சமரசவாதமாக செல்வதாக குற்றம் சாட்டி, புதிய கட்சியை சி.பி.எம். என்ற பெயரில் தொடங்கியது. அந்த கட்சி மக்களை திரட்டி புரட்சியை நடத்தப் போவதாக ஊழியர்கள் நம்பினார்கள். ஆனால் தன்னால் குற்றம் சாட்டப்பட்ட இ.க.க. தலைமையை போலவே தானும் சமரசவாத பாதைக்கு சென்றது. அதையொட்டியே 1967ல் டார்ஜிலிங் மாவட்டத்தில், நக்சல்பாரி கிராமத்தில் விவசாய புரட்சியை சாரு மஜும்தார் தொடங்கி வைத்தார். 1972ம் ஆண்டு அவரை ஜூலை 16ம் நாள் கைது செய்த மே.வங்க காவல் துறை ஜூலை 28ம் நாள் சிறையிலேயே மரணமடையவைத்தது. அதனால் தான் அவர் நினைவில் ஜூலை 28ம் நாளை புரட்சியாளர்கள் தியாகிகள் தினம் என்று கடைப்பிடிக்கிறார்கள். இப்போதும் மாவோயிஸ்டுகள் அதை அறிவித்துள்ளார்கள்.
சாருமஜும்தாரை திரிபுவாதத்திற்கு பதிலடி கொடுத்தவராக புரட்சியாளர்கள் பார்க்கிறார்கள். சி.பி.எம். கட்சி முன் வைத்த நாடாளுமன்ற பாதைக்கான ஐக்கிய முன்னணியை மறுத்து, மாவோ கூறிய புரட்சிக்கான ஐக்கிய முன்னணியை முன் வைத்தார் என்கிறார்கள். இந்தியா அரசியல் சுதந்திரம் பெற்றுவிட்டது என்ற சி.பி.எம்.மின் வாதத்தை மறுத்து, பொருளாதார சுதந்திரம் கிடைக்காமல், அரசியல் சுதந்திரம் கிடைக்காது என்ற வாதத்தையும் சாருவிடமிருந்து எடுத்துக் கொள்கிறார்கள். இந்தியாவை ஆள்வது பெருமுதலாளிகள் என்ற மார்க்சிஸ்ட் கட்சி மதிப்பீட்டை மறுத்து, தரகுமுதலாளிகள் ஆள்வதாக சாரு கூறியதை ஏற்றுக் கொள்கிறார்கள். மாவோவின் மக்கள் போர்ப் பாதை, கிராமப் புறங்களை விடுதலை செய்து, நகர்ப் புறங்களை சுற்றிவளைத்து விடுதலை செய்வது தான் என்ற சாருவின் கொள்கையை பின்பற்றுகிறார்கள். இவ்வாறு சாருமஜும்தாரை தங்கள் வழிக்காட்டியாக கொண்டதால் தான், இந்திய புரட்சியாளர்கள் அவரது நினைவு நாளை, தியாகிகள் நாளாக கடைப்பிடிக்கிறார்கள்.
அறவழியில், அமைதிப் பாதையில் மக்களைத் திரட்டி போராடக் கூடிய மக்கள் திரள் இயக்கங்களை முத்திரைக் குத்தி, அடக்குமுறை செய்வதனால் தான் இளைஞர்கள் ஆயுதம் தாங்கிய புரட்சிகரப்பாதைக்கு ஈர்க்கப்பட்டுள்ளார்கள். அது தான் இப்போது மேற்கு மிதினாப்பூர் மாவட்டத்தில் நடத்தப்பட்ட படுக் கொலைகளிலும் நடந்துள்ளது. அதனால் தான் மார்க்சிஸ்ட் கட்சி 43 ஆண்டுகளாக ஆண்டு வரும் மாநிலத்திலும், வறுமை இன்னமும் தாண்டவமாடுகிறது. ஆகவே வன்முறையை கைவிட்டு, நன் முறையில் மக்கள் பிரச்சனைகளை தீர்க்க கோரும் நீண்ட பயணம் பிரபலமாக எதிர் பார்க்கப்படுகிறது.
அவ்வாறு லால்கர் நோக்கி புறப்படுங்கள் என்ற மேதாபட்கரின், சுவாமி அக்னிவேஷின் நீண்ட பயணம் சில கோரிக்கைகளை முன்வைக்கிறது. மக்களது வாழ்க்கைக்கும், அந்தஸ்த்திற்கும் உள்ள உரிமை என்பது எப்போதும் மனிதத் தன்மையற்ற வழிகள் மூலம் நியாயப்படுத்தப்பட முடியாது என்பதாக அவர்கள் கூறுகிறார்கள். வன்முறைக்கு முடிவுக் கட்டுவோம் என்கிறார்கள்.
நிலம், தண்ணீர், காடுகள், கனிமவளங்கள் ஆகிய மூலாதாரங்களை பெறுவதற்கான உரிமை மக்களுக்கு, குறிப்பாக ஆதிவாசி சமூகங்களுக்கு வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளார்கள். பன்னாட்டு மூலதன நிறுவனங்களுக்கு, ஆதிவாசிகளின் மூலாதாரங்களை தாரைவார்க்க சுடாது. லால்கர் பகுதியில் அறிவிக்கப்பட்டுள்ள 144 தடை உத்தரவை திரும்ப பெற வேண்டும். வளர்ச்சி என்பது சமத்துவம், நீதி, ஜனநாயக முறை ஆகியவற்றின் மூலம் தான் எட்டப்பட முடியும். மக்களுக்காக அரசியல் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகள் கொடுக்கப்பட வேண்டும். 1996ன் பஞ்சாயத்துச் சட்டம், வனச்சட்டம் ஆகியவை அமுல்படுத்தப்பட வேண்டும். மக்கள் போராட்டங்கள் அனுமதிக்கப்பட வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளை இந்த அமைதி வேண்டுவோர் முன் வைக்கிறார்கள்.
இதே கோரிக்கைகளுக்காக நடத்தப்படும் மக்கள் இயக்கங்களை அரசு ஒடுக்கும்போது தானே, இளைஞர்கள் ஆயுதம் தாங்கிய அரசுக்கு எதிராக ஆயுதம் தாங்கும் வழியை தேர்வுச் செய்கிறார்கள்? இந்த முறை மேற்குவங்க அரசு தன்னை மாற்றிக் கொள்ளுமா? அல்லது தன்னை தூக்கியெறிய மக்களை தூண்டிவிடுமா? இதுதான் இன்றைய கேள்வியாக எழுகிறது.

Subscribe to:
Posts (Atom)