Wednesday, September 1, 2010

வறுமையை கணக்குப் பார்க்கயிருக்கும் ஐ.நா. சபை.

வருகிற செப்டம்பர் 20 முதல் 22 வரை அமெரிக்காவிலிருக்கும் நியுயார்க் நகரில், ஐ.நா. பொதுச்சபையின் உயர்மட்ட சிறிய மாநாட்டுக் கூட்டம் நடைபெறவிருக்கிறது. அதில் ஐ.நா. சபையின் அனைத்து உறுப்பு நாடுகளும் பங்குகொள்ளும். அந்த மாநாட்டுக் கூட்டத்தில், 2000மாவது ஆண்டில், ஐ.நா. பொதுச்சபையில் ஒப்புக்கொள்ளப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றியிருக்கிறார்களா என்ற அறிக்கையை ஒவ்வொரு நாடும் முன்வைக்க வேண்டும். உலகம் முழுவதிலும் வறுமையும், ஏழ்மையும், சமூக புறக்கணிப்பும், சிசுக் கொலைகளும், பெண் கருக்கொலைகளும், கல்வியின்மையும், எய்ட்ஸ் போன்ற நோய்களும், சுற்றுச்சூழல் பாதுகாப்பின்மையும், வளர்ச்சியின்மையும், பெண்ணடிமையும் இருப்பதை அனைத்து உலகநாடுகளும், ஐ.நா. பொதுச்சபையில் ஒப்புக்கொண்டன. அவற்றை போக்குவதற்கும், ஆரோக்கியமான உலகத்தை உருவாக்குவதற்கும் திட்டமிட வேண்டும் என்றும் அவர்கள் அப்போது ஒப்புக்கொண்டனர். அதையெட்டி புத்தாயிரம் வளர்ச்சி லட்சியங்கள் என்பதாக 8 லட்சியங்களை உருவாக்கினார்கள். அவை தீவிர வறுமை நிலையை ஒழிக்கவேண்டும் என்றும், பிரபஞ்சம் தழுவிய ஆரம்பகல்வியை எட்டவேண்டுமென்றும், பாலினச் சமத்துவத்தையும், பெண்கள் அதிகார மேம்படுத்தலையும், சாதிக்க வேண்டுமென்றும், குழந்தைகள் மரணத்தை குறைக்கவேண்டுமென்றும், பிரசவ மரணங்களை தவிர்க்கவேண்டுமென்றும், சுற்றுச்சூழலில் நீடித்தத் தன்மையை ஏற்படுத்தவேண்டுமென்றும், வளர்ச்சிக்கான உலக பங்களிப்பை வளர்க்கவேண்டுமென்றும் 8 வகைகளாக கூறப்பட்டுள்ளன. மேற்கண்ட லட்சியங்களை எட்டுவதற்காக 2000ம் ஆண்டிலிருந்து 2015ம் ஆண்டு வரை கால அளவு நிர்ணயிக்கப்பட்டது. அத்தகைய இலக்குகளை 10 ஆண்டுகளில் எந்த அளவிற்கு நிறைவேற்றியிருக்கிறோம் என்பதை கணக்குப் பார்ப்பதற்காக, மேற்க்கூறப்பட்ட ஐ.நா. உச்சி மாநாடு நடத்தப்படவிருக்கிறது. நாடுகள் தாங்கள் செய்ததையும், செய்யப்போவதையும் கணக்கு காட்டும்போது, ஐ.நா.வும் தனது 27 அமைப்புகள் மூலம் அது பற்றிய விவரங்களை சேகரிக்கும். அதற்காக அனைத்து நாட்டு தொழிலாளர் அமைப்பு, ஐ.நா.வின் உணவு மற்றும் விவசாய அமைப்பு, ஐ.நா.வின் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பு, ஐ.நா. தொழில் வளர்ச்சி அமைப்பு, உலக சுகாதார அமைப்பு, உலக வங்கி, அனைத்து நாட்டு நிதியம், அனைத்து நாட்டு தொலைத்தொடர்பு யூனியன், ஆப்பிரிக்காவிற்கான பொருளாதார ஆணையம், ஐரோப்பாவிற்கான பொருளாதார ஆணையம், லத்தீன் அமெரிக்காவிற்கான பொருளாதார ஆணையம், ஆசியா மற்றும் பசிபிக் நாடுகளுக்கான பொருளாதார ஆணையம், மேற்கு ஆசியாவிற்கான பொருளாதார ஆணையம், எச்.ஐ.வி./எய்ட்ஸ் போன்றவற்றிற்கான ஐ.நா. கூட்டுத் திட்டம், ஐ.நா. குழந்தைகள் நிதி, வர்த்தகம் மற்றும் வளர்ச்சிக்கான ஐ.நா. மாநாடு, பெண்களுக்கான ஐ.நா. வளர்ச்சிநிதி, ஐ.நா. வளர்ச்சித் திட்டம், ஐ.நா. சுற்றுச்சூழல் திட்டம், பருவநிலை மாற்றத்திற்கான ஐ.நா. தொடர்பு கட்டமைப்பு, அகதிகளுக்கான ஐ.நா. ஆணையம், ஐ.நா. மனித குடியேற்றத் திட்டம், ஐ.நா. மக்கள்தொகை நிதி, அனைத்து நாட்டு வர்த்தக மையம், அனைத்து நாட்டு நாடாளுமன்ற யூனியன், பொருளாதார கூட்டுறவுக்கும், வளர்ச்சிக்குமான அமைப்பு, உலக வர்த்தக அமைப்பு ஆகியவற்றிலிருந்து ஒவ்வொரு நாட்டை பற்றிய புள்ளிவிவரங்களையும் சேகரிக்கிறது. எம்.டி.ஜி. என்ற புத்தாயிரம் வளர்ச்சி லட்சியங்கள் என்ற ஆவணத்தில் 212 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. இன்னும் 5 ஆண்டுகளே இலக்கை எட்டுவதற்கு இருப்பதனால், உலகத் தலைவர்கள் அனைவரும் வருகிற செப்டம்பர் உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு, முன்னேற்றத்தை துரிதப்படுத்தி இலட்சியங்களை அடையவேண்டும் என ஐ.நா. பொதுச் செயலாளர் பான்கீமூன் அறைகோல்விடுத்துள்ளார். தீவிர வறுமை என்பது உலக அளவில் உடனடி அவசரப் பிரச்சனையாக பார்க்கப்படுகிறது. வறுமை, பட்டினி, நோய், பிரசவ மரணங்கள் மற்றும் குழந்தை மரணங்கள் 2015 என்ற காலக்கெடுவிற்குள் ஒரு கட்டுக்குள் கொண்டுவரப்படவேண்டும் என்பதே அதன் குறிக்கோள். உலகத்திலுள்ள நாடுகளில் இந்தியாவும், சீனாவும் மட்டும்தான் குறைந்தபட்சம் மேற்கூறிய லட்சியங்களை எட்டுவதில் முன்னேறியிருக்கின்றன. அதனால் மட்டுமே இந்த இரு நாடுகளின் நிலமை ஆரோக்கியமாக இருப்பதாக பொருள்கொள்ள முடியாது. இந்தியா முழுவதும் இருக்கின்ற புள்ளிவிவரங்களை எடுத்து, ஒப்புக்கொள்ளப்பட்ட இலக்குகளை இந்த நாடு அடைந்துள்ளதா என்று கணக்குப் பார்க்கும் பணியை, அரசு சாரா நிறுவனமான “வாதா ந தோடோ அபேயன்” டெல்லியை தலைமையாகக் கொண்டு செயல்ப்பட்டு வருகிறது. அது கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதா என்ற கேள்வியுடன் விவரங்களைத் தொகுக்குகிறது. அதேபோல ஒவ்வொரு மாநிலத்திலும் இருக்கும் சில அரசு சாரா நிறுவனங்கள், அரசாங்கம் ஒப்புக்கொண்ட இலக்குகளை எட்டியிருக்கிறதா என்று கணக்குப் பார்க்கிறார்கள். அவ்வாறு எடுக்கப்பட்ட புள்ளிவிவரங்களையும், சம்மந்தப்பட்ட மக்களையும் உள்ளடக்கிய, பெண்கள் தீர்ப்பாயம் ஒன்று சென்னையில் சென்ற வாரம் நடத்தப்பட்டது. தமிழ்நாட்டில் அவ்வாறு எடுக்கப்பட்ட புள்ளிவிவரங்களில், கடந்த 10 ஆண்டுகளில் ஒப்புக்கொள்ளப்பட்ட 8 லட்சியங்களில் 37% மட்டுமே அடைந்துள்ளோம் என்பதற்கான விவரங்களை அவர்கள் தொகுத்துள்ளார்கள். வறுமையை பாதியாக குறைப்பதாக ஒப்புக்கொள்ளப்பட்ட இந்தியாவிலும், தமிழ்நாட்டிலும் இருக்கும் நிலமையை ஆய்வு செய்திருக்கிறார்கள். 1998 முதல் 2005 வரை தமிழ்நாட்டிலுள்ள விவசாய நிலங்களின் அளவு குறைந்திருக்கிறது என்ற அடிப்படை உண்மையை வெளியிடுகிறார்கள். ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு கீழே உள்ள அரசு அதிகாரிகளுக்கு எம்.டி.ஜி. பற்றி எதுவுமே தெரியவில்லை. சிறு விவசாயிகளின் நிலங்கள் பறிபோன நிலையில், தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் மூலம், வேலை கொடுத்துவிட்டால் சரியாகிவிடுமா? என்ற கேள்வியும் எழுகிறது. மாநில அரசாங்கத்தின் புள்ளிவிவரப்படியே, 100 நாள் வேலைக்கு 54 நாட்கள் தான் வேலைக் கொடுக்கப்படுகிறது என்று தெரிகிறது. கிராமப்புற தலித் மக்களுக்கு கழிப்பறைகளும், பாதுகாப்பான குடிநீரும் கிடைக்கவில்லை. ஆனால் இலவச தொலைக்காட்சி கிடைத்துள்ளது. தலித் மற்றும் ஆதிவாசி குடும்பங்களின் ஆண் குழந்தைகளுக்கு ஆரம்ப கல்வியில் விகிதம் கூடவில்லை. பாலினச் சமத்துவம் ஆரம்ப பள்ளிகளிலும், உயர் பள்ளிகளிலும் சிறிது கூடியிருந்தாலும், கல்லூரிக் கல்விகளில் எட்டப்படவில்லை. எச்.ஐ.வி./எய்ட்ஸ் போன்றவை 15லிருந்து 41 வயது வரையுள்ள பெண்களை அதிகம் பாதித்துள்ளது. இந்திய மட்டத்தை விட கூடுதலாக தமிழகத்தில் பெண்கள் மீதான வன்முறை 42%ஆக இருக்கிறது. 44% மக்கள் நகர்புறங்களில் வாழ்கிறார்கள். அதில் உள்ள குடிசைப் பகுதிகளுக்கு வளர்ச்சித் திட்டங்கள் போய்ச் சேரவில்லை. கிராமங்களை சென்று அடைந்த சுகாதாரத் திட்டங்கள், இப்போது ஆரம்ப சுகாதார நிலையங்களில் மையம் கொள்வதால், கூலி மக்கள் அவற்றை அடைய முடிவதில்லை. இவ்வாறு தலித், சிறுபான்மை, தனித்துவிடப்பட்ட பெண்கள் ஆகியோரின் தமிழ்நாடு என்பது வேறுபட்டு நிற்கிறது என்று கூறும் சமூக ஆராய்ச்சியாளர்களின் கணிப்பை மாற்றுவதற்கு அரசு முயலுமா என்ற கேள்வி நமக்கு எழுகிறது. எப்படியானாலும் வரயிருக்கின்ற ஐ.நா.வின் உச்சி மாநாடு பல்வேறு விவரங்களை அம்பலப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

Tuesday, August 31, 2010

கச்சத்தீவை திரும்பப்பெற இந்திய அரசு உண்மையில் முயற்சிக்கிறதா?

நேற்று மக்களவையில் தமிழ்நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பல உறுப்பினர்கள் ஒரே கோரிக்கையை எழுப்பினர். கச்சத்தீவை திரும்பப் பெறுவதற்காக மக்களவையில் நேற்று சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அது இந்திய அரசால் இலங்கை அரசுக்கு தாரைவார்த்துக் கொடுக்கப்பட்ட, கச்சத்தீவை மீண்டும் இந்தியாவிற்கு திரும்பப்பெற வேண்டும் என்ற கோரிக்கை. வரலாற்றில் இல்லாத அளவிற்கு, தி.மு.க., அ.தி.மு.க., ம.தி.மு.க., இடது சாரிகள் ஆகிய எதிரெதிர் கூட்டணிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களும், கச்சத்தீவை மீட்க வேண்டும் என்ற கோரிக்கைக்காக விரிவாக பேசியுள்ளனர். தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் ஒரே கோரிக்கையை பேசுவது என்பதும், அதுவும் தமிழ்நாடு பற்றிய கோரிக்கையை எழுப்புவது என்பதும், குறிப்பாக இந்திராகாந்தி ஆட்சிக் காலத்தில் இலங்கை அரசை தங்கள் பக்கம் ஈர்ப்பதற்காக, தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு முக்கியத் தீவை, தமிழ்நாட்டு மக்களுக்கு தெரியாமலேயே, டெல்லியிலேயே முடிவு செய்து தாரைவார்த்துக் கொடுக்கப்பட்ட ஒரு தீவை, மீண்டும் இலங்கையிடமிருந்து பெற்றுக் கொள்வது என்ற கோரிக்கை நமது மக்களவையில் இந்த அளவிற்கு எழுவது என்பது ஆச்சரியமான ஒன்றே. கச்சத்தீவை மீண்டும் பெறுவதற்கான கோரிக்கையை தி.மு.க. மக்களவை கட்சித் தலைவர் டி.ஆர்.பாலு ஆவேசமாக மக்களவையில் பேசினார். கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்க்க கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தை மறுபரீசிலனை செய்து, மறுஒப்பந்தம் போட்டு திரும்பப் பெற வேண்டும் என்று பாலு அப்போது பேசினார். அ.தி.மு.க.வின் மக்களவை உறுப்பினர் தம்பிதுரை, தொடர்ந்து தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் படுகொலைச் செய்யப்படுவதும், துன்புறுத்தப்படுவதும், கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்ததனால்தான் தொடர்கிறது என்று பேசினார். அதையடுத்து பேசிய ம.தி.மு.க. உறுப்பினர் கணேசமூர்த்தி பேசும் போது, தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்படுவது, இந்திய இரையாண்மையையே கேள்விக் குறியாக்குகிறது என்றார். தமிழக மீனவர்களை இந்தியக் குடிமக்களாக இந்திய அரசு ஏற்கவில்லையா என்று கேட்டார். இந்தியா என்ற நாடு உருவாவதற்கு முன்பே தமிழகத்துடன் கச்சத்தீவு இணைந்திருந்தது என்றும், தமிழகம் இந்தியாவுடன் சேர்ந்த பிறகுதான் கச்சத்தீவை இழந்தோம் என்றும் கூறினார். தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதும், கொல்லப்படுவதும், கச்சத்தீவை தாரைவார்த்த பிறகுதான் என்று இடது சாரிகளும் பேசினார்கள். மேற்கண்ட தமிழக எம்.பி.க்கள் பேசிய பேச்சுக்கள், தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழ்நிலைக்காகவும், வருகின்ற சட்டமன்றப் பொதுத் தேர்தலுக்காகவும் என்று மட்டுமே எண்ணிவிட முடியாது. எனென்றால் இதற்கு பதில் பேசிய வெளிவிவகாரத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா மேற்கண்ட கோரிக்கையை, இலங்கை சென்றிருக்கும் வெளிவிவகாரத்துறை செயலாளர் நிரூபமாராவ், இலங்கை அரசிடம் பேசுவார் என்று கூறியிருக்கிறார். அப்படியானால் இலங்கை சென்று எந்தெந்த கோரிக்கைகளை நிரூபமாராவ் இலங்கை அரசிடம் பேச வேண்டுமென்பதை, நேற்றைய நாடாளுமன்ற சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பிறகு மத்திய அரசு முடிவு செய்துள்ளது என்று பொருளா? அப்படியிருக்க முடியாது. ஏற்கனவே கடந்த 4 வாரங்களாக, மத்திய அரசு தனது சிறப்புத் தூதரை இலங்கைக்கு அனுப்பி வைக்கும் என்ற செய்தியை, ஆட்சியாளர்கள் நமக்கு சொல்லிவருகிறார்கள். இரண்டு நாடுகளுக்கு மத்தியில், அதாவது இரண்டு அரசுகளுக்கு மத்தியில் நடத்தப்படும் பேச்சுவார்த்தைக்கு முன்பே, அதற்கான திட்டமிடலும், பேச வேண்டிய நிகழ்ச்சிநிரலும் தயாரிக்கப்பட்டு, இரண்டு அரசுகளுக்கும் மத்தியில் பரிமாறப்படும். அதையொட்டியே அடுத்த நாட்டிற்குச் செல்லும் ஒரு நாட்டின் பிரதிநிதி, தனது பேச்சுவார்த்தையை நடத்துவார். திடீரென்று புதிதாக ஏதாவது விபத்துகளோ, தாக்குதல்களோ நடத்தப்பட்டு அதைப்பற்றிய விவரங்களும் கூடுதலாக பேசப்படும் என்று கடைசி நேரத்தில் ஒரு அரசு முடிவு செய்யலாம். ஆனால் அப்படிப்பட்ட எந்த ஒரு புதிய விபத்தும் நடக்காத சூழலில், கச்சத்தீவைப் பற்றி மக்களவையில் நேற்று எழுப்பப்பட்ட காரணத்தினால் மட்டுமே, பேச்சுவார்த்தையில் அதையும் சேர்த்து சிறப்பு தூதர் பேசுவாரா? திடீரென சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதிலளிக்கும் போது, வெளிவிவகாரத்துறை அமைச்சர் கச்சத்தீவு பற்றிய விவகாரத்தையும், இலங்கை போய்ச் சேர்ந்திருக்கும் நிரூபமாராவ் பேசுவார் என்று எப்படிக் கூற முடியும்? இரு நாடுகளுக்கும் இடையில் உள்ள பெரியதொரு விஷயத்தை, மத்திய அமைச்சரவையின் குறிப்பாக தலைமை அமைச்சரின் முடிவு எடுக்கப்படாமல், மக்களவையில் வெளிவிவகாரத்துறை அமைச்சரால் வாக்குறுதி கொடுக்க முடியுமா? அதாவது எஸ்.எம்.கிருஷ்ணாவின் பதில் என்பது, தமிழக எம்.பி.க்கள் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மூலம், கச்சத்தீவு சர்ச்சையை எழுப்பியதனால் கூறப்பட்டது அல்ல. மாறாக ஏற்கனவே மத்திய அரசால் முடிவுச் செய்யப்பட்டு, இலங்கை அரசிடம் சில நிர்ப்பந்தங்களை ஏற்படுத்துவதற்காக பேச வேண்டிய சில விஷயங்களில், கச்சத்தீவு பிரச்சனையும் ஒன்றாகயிருக்கிறது. அப்படி இலங்கை அரசை, இந்திய அரசு குறைந்தபட்சம் நிர்பந்தம் செய்வதற்கு ஏற்பட்டுள்ள தேவைகள் என்ன? தமிழ்நாட்டு மக்கள் மத்தியிலும், தமிழக மீனவர்கள் மத்தியிலும், புலம்பெயர்ந்த உலகத் தமிழர்கள் மத்தியிலும், டெல்லி ஆட்சியாளர்கள் மீது நம்பிக்கையின்மை ஏற்பட்டுள்ளது என்பதை உணர்ந்ததனால் அதைச் சரிக்கட்ட டெல்லி செய்கின்ற தந்திரமா? தமிழகத்தில் சட்டமன்றப் பொதுத் தேர்தல் வரப்போகின்ற காலம் என்பதனால், இங்குள்ள மக்களின் அதிருப்தியை சரிச் செய்வதற்கான முயற்சியா? கூட்டணிக்குள் இருக்கின்ற தி.மு.க.விற்கும், காங்கிரசிற்கும் இடையேயுள்ள இடைவெளியை நிரப்புவதற்கான செயல்பாடா? மேற்கண்ட அனைத்து காரணங்களையும்விட, இலங்கை அரசு இந்திய அரசின் உதவிகளை வாங்கிக்கொண்டு, சீனாவின் செல்வாக்கு இலங்கையில் அதிகரிக்க அனுமதித்துவிட்டது என்பதனால் தான். அத்தகைய நிலையில் தெற்காசியாவில் சீனாவின் செல்வாக்கிற்கு எதிராக இந்திய அரசின் மூலம், அமெரிக்கா தடுப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த சூழ்நிலையில்தான் சிறப்பு தூதராக நிரூபமாராவ் அனுப்பப்பட்டுள்ளார். அவர் அப்போது பேசப்போகின்ற விஷயங்களையும், சில நாட்களுக்கு முன்னால் சென்னை வந்தபோது, தமிழக முதல்வரிடம் எடுத்துக்கூறியிருக்கிறார். அதையொட்டியே மத்திய அரசின் ஏற்பாட்டிலேயே, மக்களவையில் சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம், கச்சத்தீவுப் பற்றி எழுப்பப்பட்டுள்ளது. அதனால்தான் கிருஷ்ணாவால் உடனடியாக பதில் கூற முடிந்திருக்கிறது. அப்படியானால் இந்த முறை கச்சத்தீவு பற்றி பேசப்போவதும் உண்மையான பேச்சு அல்ல என்று தெரிகிறது. இரண்டு அரசுகளுக்கும் மத்தியில் பேசப்படும் பேரத்திற்கு, கச்சத்தீவு இந்த முறையும் ஒரு பலிகடா ஆகுமா என்பதே கேள்வி.

Monday, August 30, 2010

காவி பயங்கரவாதம் பற்றிய பேச்சு--ஒரு செயல் தந்திரமா?

இந்திய அரசியல் வாதிகள் இப்போதெல்லாம், மேற்கத்திய நாடுகளின் அரசியல் தலைவர்கள் போல தங்களது பேச்சுகளின் மூலம், ஊடகங்கள் மத்தியில் புயலைக் கிளப்புவதற்கு கற்றுக்கொண்டு விட்டனர். ஆகஸ்டு 25ம் நாள் காஷ்மீர் பகுதியின் காவல்துறை மற்றும் உளவுத்துறை அதிகாரிகளின் கூட்டத்தில் கலந்து கொண்ட, மத்திய உள்துறை அமைச்சர் பா.சிதம்பரம், காவி பயங்கரவாதம் பற்றி பேசியிருக்கிறார். சமீபகாலங்களில் பல வெடிகுண்டு தாக்குதல்கள் காவி பயங்கரவாதத்தால் செய்யப்பட்டன என்பதாக அம்பலமாகியிருக்கிறது என்பதை கூறியிருக்கிறார். அத்தகைய பயங்கரவாதத்தை எதிர்கொள்ள மத்திய அரசு மற்றும் மாநில அரசு மட்டங்களில் நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்பதும் உள்துறை அமைச்சரின் ஒரு ஆலோசனை. மேற்கண்ட கருத்துகளை ஜம்முகாஷ்மீர் பகுதியில் நடந்த காவல்துறை அதிகாரிகளின் மூன்று நாள் மாநாட்டில் உள்துறை அமைச்சர் பேசியிருந்தார். சிதம்பரம் காஷ்மீர் செல்லும்போது, அந்த வட்டாரத்தில் காவல்துறையினுடைய அராஜகங்களை எதிர்த்து பொதுமக்களின் எழுச்சி நடந்துகொண்டிருந்தது. ஆகவே அவற்றை கெடுவாய்ப்பான நிகழ்வுகள் என்று சிதம்பரம் வர்ணித்தார். எதிர்பாளர்களை தான் சந்திக்க முயல்வாதாகவும், மக்களுடைய உரிமைகளையும், அந்தஸ்த்தையும் மீட்டுக் கொடுக்க உறுதியளிப்பதாகவும், அதன் மூலம் சமாதானத்தை ஏற்படுத்த முயல்வதாகவும், அவ்வாறு தொடங்கும் பேச்சுவார்த்தை ஒரு தீர்வை கொடுக்கும் என்றும் அப்போது அவர் தெரிவித்தார். கல்லெறிகள், தடியடிகள், கண்ணீர்புகை வீச்சு, துப்பாக்கி சூடு ஆகியவை உயிர் பலிகளை ஏற்படுத்துகின்றன என்றும், அதுவே மேலும் கல்லெறிகளை தூண்டிவிடுகின்றன என்றும் அப்போது கூறினார். அமர்நாத் யாத்திரைக்கு சென்ற ஆண்டு 292000 பேர் சென்றார்கள் என்று, இந்த ஆண்டு 457,324 பேர் சென்றிருப்பதாகவும், ஜம்முகாஷ்மீருக்கு சென்ற ஆண்டு வருகைபுரிந்த 355,960 பயணிகள் எண்ணிக்கை, இந்த ஆண்டு 516,970 என்று கூடியிருப்பதையும் சுட்டிகாட்டினார். மேற்கண்ட மத்திய அமைச்சரின் புள்ளி விவரங்கள், காஷ்மீர் பகுதி மக்கள் முதிர்ச்சியை படம் பிடித்து காட்டியது. அமர்நாத் யாத்திரைக்கு செல்லும் இந்துக்களின் எண்ணிக்கை அதிகமாகியிருப்பது, காஷ்மீர் வாழ் மூஸ்லீம்களின் நல்லிணக்க மனோபாவத்தை காட்டுகிறது. அதே சமயம் தங்களுடைய சுயாட்சி உரிமைக்காக அவர்கள் ஆயுதம் தாங்கிய மத்திய அரசப்படையை எதிர்த்து நிற்கிறார்கள் என்பதையும் புரியவைக்கிறது. காஷ்மீர் மக்கள் மீது மத்திய அரசப்படைகள் நடத்திவரும் அடக்குமுறைகளை மறக்கடிக்கவைப்பதற்காக, காவி பயங்கரவாதத்தை பற்றி அங்கேபோய் சிதம்பரம் பேசினாரா என்பது தெரியவில்லை. காவி பயங்கரவாதம் தனது திட்டமிட்ட வெடிகுண்டு தாக்குதல்களை நடத்திய இடத்திலெல்லாம், மூஸ்லீம்கள் அத்தகைய தாக்குதல்களை நடத்தியதாக வெளிகாட்டுவதற்காகவே செய்திருக்கிறார்கள் என்பதும் அம்பலமாகியுள்ளது. காஷ்மீர் பிரச்சனையை மனதில் கொண்டு, மூஸ்லீம்கள் அவ்வாறு தாக்குதலில் ஈடுபட்டதாக கருதும் வண்ணம், காவி பயங்கரவாதம் தனது சதிகளை திட்டமிட்டு செய்துள்ளது என்பது தெரிகிறது. ஆகவே காஷ்மீர் சென்று காவி பயங்கரவாதத்தை எதிர்த்து, பேசுவதன் மூலம் அங்குள்ள பேராளிகளையும், அரசியல் உரிமை கோருவோரையும், ஈர்த்துவிடலாம் என்று உள்துறை அமைச்சர் நம்பியிருக்கலாம். காஷ்மீர் தேசிய இனத்தின் சுயநிர்ணய போராட்டத்தை, ஒரு மதம் சார்ந்த பிரச்சனையாக மாற்றுவதன் மூலம் அல்லது சித்தரிப்பதன் மூலம் அல்லது புரியவைப்பதன் மூலம், அந்த போராட்டம் அடிப்படையில் இழிவுபடுத்தப்படுகிறது. அத்தகைய வேலையை வெளிப்படையாக காவி பயங்கரவாதம் செய்து கொண்டிருந்தாலும், அதை குறை கூறும் இன்றைய மத்திய அரசும் அத்தகைய வண்ணத்தை பூச எண்ணியே, இத்தகைய கருத்துகளை காஷ்மீர் சென்று கக்குகிறாரோ என்ற ஐயம் உருவாகிறது. சிதம்பரத்தின் குற்றச்சாட்டுகளை உடனடியாக எதிரொலித்தவர் குஜராத் மாநிலத்தின் முதல்வர் நரேந்திரமோடி. காவி பயங்கரவாதம் என்ற சொல்லை பயன்படுத்துவதன் மூலம் இந்தியாவின் பண்பாட்டையே மத்திய அரசு அசிங்கபடுத்திவிட்டது என்றும், பயங்கரவாதத்திற்கு எந்த வண்ணமும் கிடையாது என்றும், வாக்கு வங்கிகளை அடைவதற்காக காவியுடன் பயங்கரவாதத்தை இணைத்து பேசியதாகவும், இந்திய தேசிய கொடியில் இருக்கின்ற வண்ணங்களில் ஒன்று காவி நிறம் என்றும், அதுவே இந்தியாவிலிருக்கும் துறவிகளும், இந்து கோயில்களும் பயன்படுத்துகின்ற வண்ணம் என்றும் கூறி ஒரு பெரும் பிரச்சனையை மோடி உருவாக்கிவிட்டார். அதற்காக பிரதமரிடமிருந்து மன்னிப்பும் கோரினார். அதேசமயம் பா.ஜ.க.வின் தேசிய உதவி தலைவர் கல்ராஜ்மிஷ்ரா, சிதம்பரத்தை குற்றம்சாட்டினார். இந்திய பண்பாட்டையும் இழிவுபடுத்தியதாக அவரும் கோரினார். மூஸ்லீம்களை தங்கள் பக்கம் இழுக்க சிதம்பரம், காவி பயங்கரவாதம் பற்றி பேசியதாக அவர் குற்றம்சாட்டினார். அதே சமயம் ராஷ்டிரிய ஜனதா தளமும், லோக் ஜனசக்தி கட்சியும், ஆர்.எஸ்.எஸ்.சை தடைசெய்ய வேண்டும் என்று கோரினர். ஜம்முகாஷ்மீர் பகுதிக்கு சுயாட்சி கொடுப்பது என்ற மத்திய அரசின் அணுகுமுறையையும், பா.ஜ.க. குறை கூறியது. தங்கள் அடிமடியில் கைவைக்கும் போது, பா.ஜ.க. இந்த கண்டுபிடிப்பை கூறுகிறது. அதாவது பயங்கரவாதத்திற்கு மதம் கிடையாது என்பது தான் அந்த கண்டுபிடிப்பு. நேற்றுவரை இஸ்லாமிய பயங்கரவாதம் என்று, அமெரிக்கா தொடங்கி, பா.ஜ.க. வரை கூறிவந்த முத்திரைக் குத்தல் இப்போது தங்களையே தாக்குவதால், அறிவு வந்திருக்கிறது போலும். அதேபோல சிவப்பு பயங்கரவாதம் என்று வண்ண முத்திரைக் குத்துவதில், இவர்கள் யாருமே சளைத்தவர்கள் அல்ல என்பதும் கவனிக்கப்படவேண்டும். 2006 ஆம் ஆண்டு செப்டம்பர் 8ம் தேதி நடத்தப்பட்ட மாலேகான் குண்டுவெடிப்பு, இந்துத்துவா பயங்கரவாதத்தை அம்பலப்படுத்தியது. மத்திய அரசின் அமைச்சரவை செயலாளராக இருந்த பி.ராமன், அப்போதே மேற்கண்ட மாலேகான் குண்டுவெடிப்பில் சில இந்துக்களின் தொடர்பை சந்தேகித்து எழுதியிருந்தார். ஒவ்வொரு குண்டுவெடிப்பையும் பாகிஸ்தானில் உள்ள லஷ்கர்இதெய்பா விற்கும், வங்காள தேசத்திலுள்ள ஹுஜி அமைப்பிற்கும் தொடர்புபடுத்தி பார்க்க கூடாது என்று அப்போதே எழுதியிருந்தார். இந்துதுவா சக்திகள் அப்பாவி இந்திய மூஸ்லீம்களை தாக்குவதற்காக முயலலாம் என்றும், ராணுவத்தில் உள்ள சில இந்துத்துவா சக்திகள் அவ்வாறு ஈடுபடலாம் என்றும், அவர் குறிப்பிட்டிருந்தார். பாகிஸ்தானுக்கு எதிராக பதிளடிகொடுக்க, நம் நாட்டு மூஸ்லீம்களை தாக்குவது என்பதை நமது நாட்டின் பாதுகாப்பு அதிகாரிகள் மட்டத்திலேயே ஆதரிப்போரும் உண்டு என்பது பி.ராமனின் கருத்து. ஐதரபாத்தில் உள்ள மெகா மசூதியில் நடத்தப்பட்ட தாக்குதலும், சம்ஜோதா விரைவு ரயில்வண்டியில் நடத்தப்பட்ட தாக்குதலும், மாலேகான் குண்டுவெடிப்பில் கைது செய்யப்பட்ட இந்துத்துவாவாதிகள் என்று இந்திய புலனாய்வுத் துறை கண்டுபிடித்தது. ஆனால் அவர்களை காப்பாற்ற, மேற்கண்ட தாக்குதல்கள் பாகிஸ்தானில் உள்ள ஜிகாதி அமைப்பினரால் நடத்தப்பட்டதாக அமெரிக்க புலனாய்வுத்துறை ஏன் கூறுகிறது என்பது கண்காணிக்கப்பட வேண்டும். இப்படிப்பட்ட ஒரு சிக்கலான விஷயத்தை, மேலும் சிக்கலாக்குவதற்கும், வாக்கு வங்கிகளை உருவாக்குவதற்கும், உரிமை போராட்டங்களை திசை திருப்புவதற்கும், ஆள்வோர் செயல் தந்திரங்களாக பயன்படுத்துகிறார்களா என்று மக்கள் மன்றம் தான் முடிவு செய்யவேண்டும்.

Friday, August 27, 2010

ராகுல் காந்தியின் புதிய வேடம்

காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் ராகுல் காந்தி திடீரென ஒரிசா மாநிலம் நியாம்கிரி மலைகளுக்கு பயணம் செய்துள்ளார். அங்கேதான் ஸ்டெர்லைட் ஆலையின் வேதாந்தா நிறுவனம், பாக்ஸைட் சுரங்கம் தோண்டுவதற்கான முதல்கட்ட அனுமதியை பெற்று, அந்த மலைத் தொடரை அழித்து வந்தது. அதன்மூலம் பல்லாயிரக்கணக்கான பழம்குடியினர் தங்கள் பாரம்பரிய மலையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். வெளியேற்றப் பட்டவர்களில் மிகச் சிலருக்கு குடியிருப்புகள் அங்கேயே கட்டிக் கொடுக்கப்பட்டது. ஆனால், அவர்களுடைய வாழ்வாதாரத்திற்கான எந்தவொரு வேலைவாய்ப்பும் கிடைக்காமல் பதற்றத்தில் இருக்கின்றனர். நியாம்கிரி மலைத் தொடரை தங்களுடைய கடவுளாக அந்த பழங்குடியினர் பூஜை செய்து வருகின்றனர். தங்கள் கடவுளையே வயிற்றில் குத்தி, உடைக்கிறார்களே என்று, வேதாந்தா நிறுவனம் மீது ஆத்திரம் கொண்டிருக்கின்றனர். அப்படிப்பட்ட வேதாந்தாவிற்கு, சென்றவாரம் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனஇலகா அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், பாக்ஸைட் சுரங்கம் தோண்டுவதற்கும், அலுமினியம் சுத்திகரிப்பு ஆலையை நடத்துவற்கும் கொடுக்கப்பட வேண்டிய சுற்றுச்சூழல் அனுமதியை மறுத்து அறிவித்தார். அதுவே, நாடு தழுவிய விவாதமாக மாறியது.நியாம்கிரி மலைத் தொடர் பகுதியில் உள்ள பழங்குடி மக்கள், தவிர்க்க முடியாமல் தங்கள் பாதுகாப்பிற்கு மாவோயிஸ்டுகளை நாடி சென்றிருந்தனர். இதை, அறிந்த மத்திய அரசின் தந்திரமாக, பழங்குடி மக்களை தங்கள் பக்கம் இழுக்க வேண்டிய கட்டாயம் அரசுக்கு இருந்தது. இத்தகைய சூழலில் தான், ராகுல்காந்தி தாடி வைத்த புதிய தோற்றத்துடன், நியாம்கிரி மலைகளுக்கு பயணம் செய்துள்ளார். மத்திய அரசு வேதாந்தா நிறுவனத்திற்கு சுரங்கம் மற்றும் சுத்தகரிப்பு ஆலை அனுமதி மறுப்பை அறிவித்து இரண்டே நாட்களில், ராகுல் காந்தியும் பயணம் அந்த மலையை நோக்கி நடத்தப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கியை, புதிய அவதாரத்துடன் ராகுல்காந்தி திறந்து வைத்துள்ளார் என்று ஒரு ஆங்கில ஏடு எழுதியுள்ளது.2004ம் ஆண்டு புதிய ஆட்சியை ஐ.மு.கூ. தொடங்கியபோது, ராகுல் காந்தி டெல்லியில் நமது ஆட்களின் ஆட்சி இனி நடைபெறும் என்று கூறினார். அதை இப்போது செய்துள்ளதாக கூறிக்கொள்கிறார். தலித்துகள் மற்றும் பின்தங்கிய மக்களின் குரல் கேட்கப்படுவதுதான் வளர்ச்சி என்று ராகுல் இப்போது புதிய விளக்கம் கூறியிருக்கிறார். லாஞ்சிகார் என்ற பகுதிக்கு ராகுல் சென்றுள்ளார். அங்கு வசிக்கும் டோங்கிரியா கோன்ட்ஸ் என்ற பழங்குடியின மக்கள் மத்தியில் பேசியிருக்கிறார்.உங்கள் சிப்பாயாக நான் வேலை செய்வேன் என்று அந்த பழங்குடியின மக்களிடம் ராகுல் கூறிய, தலைப்புச் செய்தியாக வெளிவருகிறது. ஒரிசா மாநிலத்தின் காலஹண்டி மாவட்டத்தின் ஜகன்நாத்பூர் என்ற ஊரில் நடந்த கூட்டத்தில் வந்திருந்த பழங்குடியின மக்களைப் பார்த்து, உங்களுக்காக டெல்லியில் இருந்து கொண்டு பணியாற்றுவேன் என்று கூறியிருக்கிறார். என் உதவி வேண்டும் போது அழையுங்கள் என்று புதிய அவதாரம் எடுத்த கடவுள் போல கூறியிருக்கிறார். வேதாந்தா நிறுவனத்திற்கு எதிராக போராடிவரும் அந்த பழங்குடி மக்களின் போராட்டத்தின் வெற்றிதான், வேதாந்தா நிறுவனத்திற்கான அனுமதி மறுக்கப்பட்டதும் என்று பழங்குடி மக்களின் பாராட்டியுள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே அங்கே சென்றபோது, அவர்களுக்காக போராடுவதாக தான் கூறியுள்ளதை நினைவுபடுத்தியுள்ளார். அந்த வட்டாரத்தில் பாரம்பரியமாக, மலைகளின் இயற்கை சூழலை சார்ந்து வாழ்ந்து வரும், டோங்கரியா கோண்ட்ஸ், மற்றும் குட்டியா கோண்ட்ஸ் என்ற இரண்டு பழங்குடியின மக்களது வாழ்நிலையை காப்பாற்ற தாங்கள் முயற்சியில் ஈடுபடுவதாக வாக்குறுதி கொடுத்துள்ளார். ஏழைகளை விரட்டுவதன் மூலம் பழங்குடி மக்களின் வளர்ச்சியை எட்டமுடியாது என்றும், ஏழைமக்களிடம் காது கொடுத்து கேட்பதன் மூலம் தான், வளர்ச்சியை எட்டமுடியும் என்றும் புதிய வியாக்கியானம் பேசியிருக்கிறார். பழங்குடி மக்களின் குரல்கள் நசுக்கப்படுகின்ற என்றும், அவை டெல்லியில் கேட்கின்றன என்றும் கூறியுள்ளார்.கடந்த 10 ஆண்டுகளாக அந்த வட்டாரத்தின் பழங்குடியின மக்களின் வாக்கு வங்கி காங்கிரஸ் கரங்களிலிருந்து மாறி, பாரதீய ஜனதா தளம் என்ற நவீன் பட்நாயக் கட்சிக்கு மாறியிருக்கிறது. அந்த பழங்குடியின மக்களின் வாக்கு வங்கியை, இளைஞர் ராகுல் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு கொண்டு வருவதற்காக இவ்வாறு அரும்பாடு படுகிறார் என்று கூறப்படுகிறது.நியாம்கிரி மலை வட்டாரத்தில் வாழ்ந்து வரும் பழங்குடியின மக்கள் கடந்த 5 ஆண்டுகளாக வேதாந்தா நிறுவனத்தை எதிர்த்து போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் வேதாந்தா நிறுவனம் ஒரிசா மாநிலத்தில் அந்த அலுமினியம் சுத்திகரிப்பு ஆலைக்காக 540 லட்சம் டாலர்களை மூலதனமாக போட்டுள்ளது. அதனால் தனது திட்டத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளும் எண்ணமே அந்த ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு இல்லை. ஒரிசா அரசாங்கம் அவர்களுக்கு மாற்றுயிடம் ஏற்பாடு செய்யுமா? என்ற கேள்வியும் நிற்கிறது.ஸ்டெர்லைட்டின் நிறுவனமான வேதாந்தா ஒரு கார்ப்பரேட் என்று அழைக்கப்படும் பெரும் வணிகக் குழுமம். அது இங்கிலாந்தை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது. ஒரிசா மாநிலத்தில் வன பாதுகாப்பு சட்டம், வன உரிமை சட்டம், கிராம சபை விதிகள் ஆகியவற்றை உடைத்து தன்னுடைய சுரங்கத்தையும், ஆலைப் பணியையும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. முதல் கட்டத்தில் அதற்கு கொடுத்த சுற்றுச்சூழல் அனுமதி, முந்தைய ஐ.மு.கூ. ஆட்சியில்தான் மத்திய சுற்றுசூழல் மற்றும் வன இலாகாவால் கொடுக்கப் பட்டுள்ளது. ஆகவே, அனுமதி கொடுத்து ஆதிவாசிகளை அழிக்க வைத்த அதே காங்கிரஸ் கட்சி, இப்போது எதற்காக இரண்டாவது கட்டத்தில் அனுமதி மறுக்கிறது? கார்ப்பரேட் என்று அழைக்கப்படும் பெருவணிக குழுமங்களின் நலன்களுக்காக நாட்டை ஆண்டு வரும் காங்கிரஸ் கட்சி, இந்த குறிப்பிட்ட வேதாந்தா நிறுவனத்தின் செயல்பாட்டை மட்டும் ஏன் தடுக்கிறது? நாடெங்கிலும் வெளிநாட்டு பெருவணிகக் குழுமங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை, வரிசையாக கையெழுத்திட்ட காங்கிரஸ் அரசாங்கம், இந்த இடத்தில் மட்டும் பெருவணிகக் குழுமமான ஸ்டெர்லைட்டின் வேதாந்தாவை எதிர்ப்பதற்கு ஆதரவு கொடுப்பது ஏன்?மேற்கண்ட கேள்விகள் எழும்போது, அரசியல் தளத்தில் அதற்கான பதில்கள் எல்லாம் வாக்கு வங்கி அரசியல் என்பதாக மட்டும் புரியப்படுகிறது. அதாவது காங்கிரஸ் கட்சிக்கு எதிரான நவீன் பட்நாயக் கட்சியான பாரதிய ஜனதா தளத்தை எதிர்ப்பதற்காக, ஒரிசா மாநிலத்தில் இந்த அரசியல் நாடகம் நடத்தப்படுகிறது என்று கூறுகிறார்கள். அதே போல, சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆளுகின்ற பா.ஜ.க. ஆட்சிக்கு எதிராக, காங்கிரஸ் கட்சி இதே போன்ற பழங்குடி மக்களின் நலன் பற்றி பேசவும் தயாராக இருக்கிறது என்கிறார்கள். இதே நிலைமைதான் பா.ஜ.க. தளத்தில் கூட்டு சேர்ந்து வெற்றி பெற்று வரும், சிபுசோரனின் ஜார்க்கண்ட் விடுதலை முண்ணனியையும் எதிர்த்து, காங்கிரஸ் கட்சி ஜார்க்கண்ட் மாநிலத்திலும் பழங்குடி மக்கள் நலன் பற்றி அக்கறை காட்டும் என்றும் விளக்குகிறார்கள். இதே நிலைப்பாட்டில் தான், மேற்கு வங்கத்தில் இடது சாரிகளின் ஆட்சிக்கெதிராக, மம்தா கட்சியின் ஆதரவுடன் பழங்குடி மக்கள் பாதுகாப்பு பற்றி காங்கிரஸ் கட்சி பேசத் தயாராக இருக்கிறது என்பதாகவும் கூறப்படுகிறது. நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் ஒரிசா மாநிலத்தில் காசியாபூரில், டாடா ஆலைக்கெதிராக திரண்ட ஆதிவாசிகளை சுட்டுக் கொன்ற போது, 8 லட்சம் ஆதிவாசிகள் பேரணியாக புறப்பட்டார்கள். அப்போது அங்கே நேரில் சென்று துப்பாக்கி சூட்டில் இறந்த பழங்குடி மக்களுக்கு இழப்பீடு தொகையை சோனியா காந்தி வழங்கினார். இவ்வாறாக இந்தியாவின் இதயப் பகுதியில் வாழ்ந்து பழங்குடி மக்கள் பிரச்சனையில், மாற்றுக் கட்சி ஆட்சிகளுக்கெதிராக காங்கிரஸ் கட்சி காய் நகர்த்தி வருகிறது.அப்படியானால், பச்சை வேட்டை என்ற பெயரில் வெள்ளை உடையணிந்த உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், ஏன் மாவோயிஸ்ட்டுகளை ஒடுக்குவேன் என்ற பெயரில், பழங்குடி மக்களை வேட்டையாடி வருகிறார்? அத்தகைய பச்சை வேட்டைக்கும், இப்போது ராகுல் காந்தி மூலம் பழங்குடி மக்களுக்கு கொடுக்கப்படும் இனிப்பிற்கும் என்ன முரண்பாடு? ஒன்று கேரட் கொடுப்பது என்றும், மற்றது குச்சியால் அடிப்பது என்றும் எடுத்துக் கொள்ளலாமா? அரசு இயந்திரத்தை பாதுகாக்கும் எண்ணத்தில், சிதம்பரம் தூண்டிவிடும் பச்சை வேட்டை, தேர்தல் அரசியலில் வெற்றி பெற ராகுல் கொடுக்கின்ற மிட்டாய்களுக்கு எதிரானதா?இந்திரா காந்தி ஆட்சியில், பிருந்தன்வாலே பஞ்சாபில் காங்கிரஸ் கட்சியால் ஒரு கட்டம் வளர்க்கப்பட்டு, பிறகு ராணுவத்தின் நீல நட்சத்திர நடவடிக்கையால் அழிக்கப்பட வில்லையா? இந்திரா காலத்தில் புலிகள் உள்பட, ஈழப் போராளிகளுக்கு பயிற்சியும், ஆயுதமும் கொடுத்து விட்டு, ராஜிவ் காலத்தில் இந்திய அமைதிப் படையை அனுப்பி அவர்களை கொன்று விட்டு, சோனியா காலத்தில் ஈழத் தமிழ் இனத்தையே அழிப்பதற்கும் துணியவில்லையா? ஆகவே, இப்போது, ராகுல் காந்தி காட்டுகின்ற பச்சைக் கொடி என்பது அடிப்படையில் பழங்குடி மக்களுடைய நலன்களை பாதுகாக்க அல்ல. மாறாக பன்னாட்டு மூலதன நிறுவனங்களையும், பெருவணிகக் குழுமங்களையும் பாதுகாக்க புதிய, புதிய வேடங்களை போட்டுக் கொண்டு வருகிறார்கள். இத்தகைய புரிதல் வரலாற்றை உற்று நோக்குவோருக்கு வரத்தானே செய்யும்?

Thursday, August 26, 2010

ஒருவார நாடகம் நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்டுள்ளது

கடந்த ஒரு வாரமாக இந்திய நாடாளுமன்றம் முக்கியமான எதிர்காலப் பிரச்சனைக்காக, ஒரு மாபெரும் விவாதத்தை அதிக சச்சரவு இல்லாமல் நடத்தி முடித்திருக்கிறது. அணுஉலை விபத்து இழப்பீடு மசோதா2010 மிக முக்கியமான, ஆழமாக விவாதிக்க வேண்டிய, அவசரப்படக்கூடாத, ஒரு பிரச்சனை என்று எதிர்கட்சியான பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங், நாடாளுமன்றத்தின் தனது உரையில் தெரிவித்தது உண்மை என்றால், அவர் உட்பட, அவரது கட்சி உட்பட இந்த ஒருவார கால விவகாரத்தை எப்படி நடத்தினார்கள் என்ற கேள்வி எழுகிறது. மேலும் காஷ்மீர் பிரச்சனைக்கு அரசியல் தீர்வுகாண முக்கியத்துவம் கொடுக்கும் மத்திய அரசு, மாவோயிஸ்ட் பிரச்சனைக்கு பேச்சுவார்த்தைக்குத் தயார் என்று அறிவிக்கும் உள்துறை அமைச்சர் ஆகியோர், அவற்றைவிட முக்கியமான அணுஉலை விபத்து இழப்பீடு மசோதாவை நிறைவேற்ற அவசரம் காட்டுவது ஏன் என்ற கேள்வியையும் அப்போது ஜஸ்வந்த் சிங் எழுப்பியுள்ளார். இத்தகைய கேள்வி பொதுமக்கள் மத்தியிலும், ஊடகங்கள் மத்தியிலும் போதுமான அளவுக்கு எழுப்பப்படவில்லை என்றாலும், இனியாவது விவாதிக்கப்பட வேண்டும் என்பதே நமது அவா.
வருகின்ற நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா இந்தியா வரயிருக்கிறார். அதற்கு முன்பே மேற்கண்ட மசோதாவை சட்டமாக்க மத்திய ஐ.மு.கூ. அரசு அவசரப்படுகிறது என்பது ஜஸ்வந்த் சிங்கின் குற்றச்சாட்டு. அதேசமயம் அமெரிக்காவில் கையசைவிற்கு ஏற்றார்போல் செயல்படுவதற்கு, இந்த சட்ட முன்வரைவை அவசரமாக அமுல்படுத்தாதீர்கள் என்றும் ஜஸ்வந்த் கூறினார். மேற்கூறிய அவரது கூற்றுக்கள் அனைத்தும் உண்மையா? ஒபாமா வருகைக்கு முன்பே இழப்பீடு சட்டத்தை உருவாக்கி அவரது காலடியில் வைக்க வேண்டும் என்பது காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூ.விற்கு மட்டும் இருக்கின்ற விசுவாசமா? பா.ஜ.க.விற்கும் அமெரிக்காவுடன் அப்படிப்பட்ட ஒரு கள்ளஉறவு இல்லையா?
மேலே காணும் கேள்விகளுக்கு பதில் தேட, கடந்த ஒருவார காலமாக நாடாளுமன்றத்தில், சம்மந்தப்பட்ட சட்டமுன்வரைவு மீது நடந்த விவாதங்களும், அரசியல் கட்சிகள் தெரிவித்த கருத்துக்களும், ஊடகங்கள் அம்பலப்படுத்திய செய்திகளும், அதையொட்டி பெரிய கட்சிகள் நிலை தடுமாறி எடுத்த நிலைப்பாடுகளும் நமக்கு உதவிகரமாக இருக்கும். அதன் அடிப்படையில் நடந்தது நாடகமா அல்லது உண்மையா என்பதை புரிந்துக் கொள்ள முடியும்.
அதேபோல எதிர்கட்சிகள் கேட்ட கேள்விகளுக்கு பதில் கூறுவதாக, இந்தியாவின் தலைமை அமைச்சர் மன்மோகன் சிங் கொடுத்த விளக்கங்களும், ஆழமாக கவனிக்கப்பட வேண்டும். இந்தியாவின் நலன்களை மேற்கண்ட இழப்பீடு மசோதா சமரசம் செய்யாது என்பது மன்மோகனது கூற்று. அணுஉலைகளை இயக்கும் போது பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும் என்றும் கூறினார். அணுசக்தி பாதுகாப்பு ஒழுங்குபடுத்தல் வாரியத்தை பலப்படுத்துவோம் என்றும் கூறினார். அதில் ஆளும் கட்சி எதிர்கட்சியின் கருத்தையே கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார். அதனால் எதிர்ப்பேயில்லாமல் அந்த மசோதாவை நிறைவேற்றித் தாருங்கள் என்று கேட்டுக் கொண்டார்.
ஜஸ்வந்த் சிங் தனது கவலைகளை தெரிவிக்கும் போது, சிறிய அமெரிக்க சந்தைக்காக, பெரிய இந்திய சந்தையை அடிபணியச் செய்யக்கூடாது என்றார். அதேசமயம் ‘அண்ட்’ என்ற ஆங்கிலச் சொல்லையும், பிறகு ‘இன்டன்ட்’ என்ற ஆங்கிலச் சொல்லையும், தந்திரமாக வரைவு நகலில் அரசாங்கம் திணித்துள்ளது என்று குற்றம்சாட்டினார். அதாவது வரைவு நகலின் 17வது திருத்தத்தில், அ பிரிவிற்கும், ஆ பிரிவிற்கும் இடையில் உள்ள இணைப்பாக அந்த அன்ட் என்ற ஆங்கிலச் சொல் வருவதன் மூலம், ஆ பிரிவில் வெளிநாட்டு விநியோகத்தர்களை பொறுப்பாக்கும் செயல் கட்டுப்படுத்தப்படும் என்பதே எதிர்கட்சிகளின் விமர்சனம். அதேபோல இ பிரிவில் சேர்க்கப்பட்ட, உள்நோக்கம் என்ற இன்டன்ட் எனும் ஆங்கில வார்த்தை, முழுமையாக வெளிநாட்டு விநியோகத்தர்களை பொறுப்பேற்க நிரூபிக்க முடியாமல் போகக்கூடிய வார்த்தை என்பது தான் எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டு. இந்த இரண்டையும் எடுத்து விடுகிறோம் என்று ஆட்சியாளர்கள் கூறிய பிற்பாடு, மசோதாவிற்கு பா.ஜ.க. ஆதரவு அறிவித்தது. அதையொட்டியே மக்களவையில் மசோதா நிறைவேறியது.
மேற்கண்ட சர்ச்சைகளும், விவாதங்களும் உண்மையாகவே நடந்ததா? அல்லது திட்டமிட்டு நடத்தப்பட்ட நாடகமா? உதாரணமாக மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் நிலைக்குழு, பல கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கியது. பா.ஜ.க.வால் குற்றம்சாட்டப்பட்ட அன்ட் என்ற ஆங்கிலச் சொல், அந்த நிலைக்குழுவின் கடைசி அமர்வில், அதாவது நாடாளுமன்றம் முன்னால் மசோதாவின் வரைவு நகலை முன்வைப்பதற்கு முன்பு நடந்த கடைசி அமர்வில் வைக்கப்பட்ட ஆவணத்தில் எழுதப்பட்டிருந்தது. அதை அந்த நிலைக்குழுக் கூட்டத்திலேயே, இடதுசாரி உறுப்பினர் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். அந்த எதிர்ப்பை பா.ஜ.க. உறுப்பினர்கள் உட்பட, அனைத்து நிலைக்குழு உறுப்பினர்களும், மறுத்து விட்டு அன்ட் என்ற ஆங்கிலச் சொல்லை, ஆவணத்தில் அனுமதித்திருக்கிறார்கள். அப்படியானால் விவரம் தெரிந்தே, பா.ஜ.க. பிரதிநிதிகள், காங்கிரஸ் பிரதிநிதிகளுடன் சேர்ந்து கொண்டு, நிலைக்குழு முன்னால் வைக்கப்பட்ட நகலை நிபந்தனையற்று ஆதரிக்க வேண்டும் என்ற கட்சித் தலைமையின் கட்டளையை ஏற்று, அனுமதித்திருக்கிறார்கள் என்பது அதில் அம்பலமாகிறது. அப்படியானால் அதையும் சுட்டிக்காட்டி, ஜஸ்வந்த் சிங் நாடாளுமன்றத்தில் குறை சொல்வது என்பது ஒரு நாடகமே என்பது புரிகிறது.
மேற்கண்ட நாடகத்தை நடத்துவதற்கு பா.ஜ.க.விற்கு என்ன அவசியம் வந்தது? அது சொராபுதீன் போலி துப்பாக்கிசூட்டு மரணத்தில், நரேந்திர மோடியை நிரபராதி ஆக்குவதற்கு ஆட்சியாளர்களின் உதவியுடன் சி.பி.ஐ. மூலம் கொடுத்த அறிவிப்பு மட்டும் காரணமா? அதையும் தாண்டி ஏதாவது அனைத்து நாட்டு காரணங்கள் இருக்கிறதா?
மக்களவையில் பெரும் எதிர்ப்பின்றி நிறைவேற்றப்பட்ட அணுஉலை விபத்து இழப்பீடு மசோதாவினால், உடனடியாக பயன்பெறப் போவதும், அதேபோல அப்படியொரு சட்டத்தைக் கொண்டு வருவதற்கு நிர்ப்பந்தித்ததும், அமெரிக்கா மற்றும் அணு எரிபொருள் விநியோகிக்கும் நாடுகள் என்ற உண்மையை யாரும் மறுப்பதற்கில்லை. அவ்வாறு அமெரிக்க நலனை பேணுவதற்காக ஆட்சியில் அமர்ந்திருக்கும் ஐ.மு.கூ. செயல்படுகிறது என்ற ஜஸ்வந்த் சிங்கின் விமர்சனம் எந்த அளவிற்கு சரியானதோ, அதேபோல தொடக்கத்திலிருந்தே நிபந்தனையற்ற ஆதரவை கொடுப்பதற்காக தயாராகயிருந்த பா.ஜ.க.வும் செயல்படுகிறது என்ற உண்மை இப்போது தெளிவாகத் தெரிகிறது.
நிலைக்குழுவில் பா.ஜ.க.வால் ஏற்கப்பட்ட அன்ட் என்ற ஆங்கிலச் சொல்லைப் பற்றிய விவரங்களை, சென்னையிலிருந்து வெளிவரும் ஆங்கில நாளேடு விரிவாக அம்பலப்படுத்தியப் பிற்பாடு, அதையே மேற்கோளாகக் கொண்டு அருண் ஜெட்லியும், சுஷ்மா சுவராஜும் மறுநாள் மற்ற பா.ஜ.க. தலைவர்களுடன் விவாதித்து, அதை எதிர்த்தார்கள் என்ற செய்தி ஊடகங்களில் அம்பலமானது. அது கூடுதலான சான்றாக இருக்கிறது. இதன் மூலம் நடந்தவையெல்லாம் நாடகம் தான் என்பதும் தெரிகிறது.
மேற்கண்ட மசோதாவை ஆகஸ்ட் மாதம் 2ம் வார தொடக்கத்திலேயே கொண்டு வந்து உடனடியாக நிறைவேற்ற மத்திய அரசு எண்ணியது. அதுவும் அமெரிக்காவின் விருப்பம் தான் என்பது தெரிகிறது. பொதுமக்கள் மத்தியில் விவாதத்திற்கு செல்லாமலேயே, மசோதாவின் நகலை அவசரமாக நிறைவேற்றுவது என்பது அமெரிக்காவின் திட்டம். ஏற்கனவே அமெரிக்கஇந்திய அணுசக்தி ஒப்பந்தம், இடதுசாரிகளின் முயற்சியாலும், ஊடகங்களின் ஒத்துழைப்பாலும் நாடு தழுவிய விவாதமாக மாறி, அணு அறிவியலாளர்களும் தங்களது எதிர்ப்பை அந்த ஒப்பந்தத்திற்கு தெரிவித்ததையொட்டி ஏற்பட்ட தாமதம் ஒரு படிப்பினையாக அமெரிக்காவால் உணரப்பட்டது. ஆகவே மேற்கண்ட இழப்பீடு மசோதா பற்றிய விமர்சன, விவாதங்களை பெரிய அளவில் அச்சு ஊடகங்களிலும், காட்சி ஊடகங்களிலும் வரவிடாமல் தடுத்த பங்கும் அமெரிக்காவையே சாரும். அதேபோல இந்திய தொழில் முதலாளிகளின் அமைப்புகள் இரண்டும், மசோதா பற்றிய விவாதத்தில் இறங்கி, வெளிநாட்டு விநியோகத்தர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தது, ஒரு அனைத்து நாட்டு திட்டமிடல் என்பது தெரிகிறது. ஒருவார கால நாடாளுமன்ற நாடகம் மக்கள் மத்தியில் எந்த ஒரு சலனத்தையும் ஏற்படுத்தாததால், நாடக ஏற்பாட்டாளர்களுக்கு அது வெற்றியைத் தந்துள்ளது.

Wednesday, August 25, 2010

அந்நியர், தனியார் கைகளில் தேசப்பாதுகாப்பு போய்விடுமா?

ஆகஸ்ட் 25ம் நாள் நாடாளுமன்றத்தின் மக்களவையில், அணுஉலை விபத்து இழப்பீடு சட்ட முன்வரைவு விவாதத்திற்காக வைக்கப்பட்டது. எத்தகைய விவாதம் எழுந்தாலும், எப்படியாவது முன்வைக்கப்பட்ட சட்ட முன்வரைவை நிறைவேற்றி விட வேண்டும் என்ற துடிப்பு ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஆட்சியாளர்களிடம் தென்படுகிறது. அதற்காக ஒருபுறத்தில் பிரச்சனைகளை கிளப்பும் பா.ஜ.க.வுடனும், மறுபுறத்தில் இடதுசாரிகளுடனும் தனிநபர் பேச்சுவார்த்தைகளை ஆட்சியாளர்கள் ஏற்கனவே தொடங்கி விட்டார்கள். மார்க்சிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற கட்சித் தலைவர் சீத்தாராம் யெச்சுரியுடனும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் து.ராஜாவுடனும், தலைமை அமைச்சர் அலுவலகத்திலிருக்கும் மாநிலங்களவை அமைச்சர் பிருத்திவிராஜ் சவான், அரசாங்க அணுகுமுறை பற்றிய பேச்சுவார்த்தையை நடத்தினார். அணுஉலைகளுக்கு எரிபொருட்களை விற்பனைச் செய்கின்ற அந்நிய விநியோகத்தர்கள் நலன்களையும், உள்நாட்டு தனியார் சக்திகளின் நலன்களையும் பாதுகாப்பதற்காக, ஏற்கனவே எழுதப்பட்ட வரைவு நகலை நீர்த்துப்போக வைக்கும் திருத்தங்களை ஆட்சியாளர்கள் கொண்டு வந்திருக்கிறார்கள் என்பது இடதுசாரிகளின் தொடர் குற்றச்சாட்டாக இருக்கிறது. இழப்பீடு தொகைக்கான எல்லையை ரூ.500 கோடியிலிருந்து, ரூ.1500 கோடிக்கு உயர்த்தி இருக்கிறோம் என்ற செய்தியையே தொடர்ந்து பிருத்திவிராஜ் சவான் கூறி வந்தார். ஆனால் மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவரான யெச்சுரியின் வாதப்படி, ரூ.1500 கோடியிலிருந்து இழப்பீடு தொகை எல்லையை, ரூ.10,000 கோடிக்கு உயர்த்த வேண்டும் என்ற தங்களது ஆலோசனையை ஆட்சியாளர்கள் கேட்கவில்லை என்பதே. இழப்பீடு தொகையின் மீதான எண்ணிக்கை வாதம் ஒரு பெரும் தடங்கலாக ஆள்வோர் நினைக்கவில்லை.
அதேசமயம் திருத்தம் 17ல் உள்ள ஆ பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள, உள்நோக்கத்துடன் என்ற சொல்லாடல் நீக்கப்பட வேண்டும் என்பதாக இடதுசாரிகள் வைக்கின்ற வாதத்தை ஆட்சியாளர்கள் செவிமடுக்க தயாராயிருக்கிறார்கள். அதே பிரச்சனையை எழுப்பியுள்ள பா.ஜ.க.வின் கருத்தையும் ஏற்கத் தயார் என அறிவித்தார்கள். தனியார் துறைக்கு அணுஉலைகளை தாரை வார்ப்பதற்காக கடைசி மூன்று சேர்க்கைகளை, கடைசி நேரத்தில் அதாவது ஆகஸ்ட் 20ம் நாள் தலைமை அமைச்சரும், மத்திய அமைச்சகமும் இணைத்து விட்டன என்ற பிரச்சனை இடதுசாரிகளால் ஒப்புக்கொள்ளப்படவில்லை. அதாவது அரசாங்கத்தாலோ, அரசாங்கத்தின் நிறுவனங்களாலோ இயக்கப்படாமல், இயங்கி வரும் அணுஉலைகளில் விபத்து ஏற்பட்டு, பாதிக்கப்பட்ட மக்களுடைய தேவைகளுக்காக இழப்பீடு கொடுக்கப்பட வேண்டும் என்று அரசாங்கம் அறிவிப்பாணை கொடுக்குமானால், அத்தகைய நிகழ்வுகளிலும் முழு இழப்பீடு தொகை வழங்கப்படும் என்ற சேர்க்கையைத் தான் இடதுசாரிகள் அவ்வாறு கேள்விக் கேட்கிறார்கள். அதற்கு பதிலளித்த பிருத்திவிராஜ் சவான், அத்தகைய விளக்கம் தவறானது என்று மட்டும் கூறி தப்புவதற்கு முயன்றிருக்கிறார்.
என்.பி.சி.ஐ. என்ற இந்திய அணுசக்தி வாரியம், அனைத்து நாட்டு ஆய்வுக்குள் அடங்காது என்பதால், அரசாங்கமும் அதனால் ஏற்படும் பாதிப்பிற்கு இழப்பீடு தொகையை எழுதவில்லை என்றால், அத்தகைய அணுஉலைகளுக்கு பரிசோதனைக்கான காப்பீடு செய்யப்பட வேண்டும் என்பதையும் கூட இடதுசாரிகள் வலியுறுத்துகிறார்கள். அதேசமயம் சி.எஸ்.சி. என்று அழைக்கப்படும் துணை இழப்பீடு ஒப்பந்தத்தில், இந்திய அரசு இணையக் கூடாது என்ற கருத்தை இ.க.க. தலைவர் து.ராஜா, வலியுறுத்தியுள்ளார்.
தற்போது முன்வைக்கப்பட்டுள்ள வடிவத்திலேயே இந்த இழப்பீடு சட்டமுன்வரைவை ஏற்க முடியாது என்று இடதுசாரிகள் தெரிவித்தனர். அதேசமயம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட பிறகு அதன் மீது கருத்துக்கள் கூறுவதாகவும் கூறினர். அதேபோல தெலுங்கு தேசம் கட்சியும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்திருந்தனர். தேவையான மாற்றங்களை முன்வைக்கப்பட்ட மசோதாவில் கொண்டு வரவில்லை என்றால் தாங்கள் அதை ஏற்கமாட்டோம் என்று தெலுங்கு தேசக் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவும் அறிவித்தார்.
திடீரென இந்தியாவிலிருக்கும் அணுசக்தி தொழிலதிபர்களிடமிருந்தும் மேற்கண்ட மசோதாவிற்கு எதிர்ப்புக் கிளம்பியது. தலைமை அமைச்சருக்கு எழுதிய ஒரு கடிதத்தில், இந்திய வணிகம் மற்றும் தொழிற்சாலைகளின் கூட்டமைப்பு இதுபற்றி ஒரு கடிதத்தை, அதன் தலைவர் ராஜன் பார்த்தி மிட்டல் பெயரில் அனுப்பியது. அதில் 17வது திருத்தத்திலுள்ள ஆ பிரிவில் பிரச்சனையைக் கிளப்பியிருந்தார்கள். அதேபோல இந்திய தொழிற்சாலைகளின் கூட்டமைப்பின் பொது இயக்குநர் சந்திரஜித் பேனர்ஜியும், அதே போன்ற பிரச்சனையை அமைச்சர் பிருத்திவிராஜ் சவானுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்திருந்தார். மிட்டல் தனது கடிதத்தில் அணுஉலைக்கு எரிபொருள் விநியோகிக்கும் யாரையும் விபத்து இழப்பீட்டிற்கு பொறுப்பெடுக்க வைத்தால், அது குறிப்பாக எதிர்காலத்தில் இந்திய தொழிலதிபர்களை பாதிக்கும் என்று எதிர்ச்சால் ஒன்றை ஓட்டியுள்ளார். இப்போது இந்தியாவிற்குள் இருக்கும் 17 அணுஉலை நிறுவனங்களை ஆதரிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் குறைபாட்டிற்காக விநியோகத்தரிடம் இழப்பீடு பெறுவதை, அனைத்து நாட்டளவில் ஏற்றுக் கொண்டபடி, விநியோகித்த கருவியை அளித்த 12 மாதங்களிலிருந்து, 24 மாதங்களுக்குள் என்ற வரையறையை தாண்டினால், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அணுஉலை தொழில்நுட்பங்களை தொடர்ந்து பெறமுடியாது என்ற மிரட்டல் அம்சத்தையும் தனது கடிதத்தில் மிட்டல் கூறியுள்ளார்.
அதேசமயம் 17வது திருத்தத்தில் அமுலாக்குவதற்கான சாத்தியப்பாடோ, நியாயமோ இல்லை என்கிறார் அவர். விநியோகத்தர் அல்லது சேவை செய்வோர் தங்கள் விநியோகக் காலம் தாண்டி பொறுப்பெடுக்க வைத்தால், அதாவது திட்டத்தின் 60 வயதுடன் மேலும் 20 ஆண்டுகளைச் சேர்த்து காலம் நீட்டிக்கப்படுமானால், எதிர்காலத்தில் தங்களது பங்களிப்பு இருக்க முடியாது என்றும் கூறியுள்ளார். விநியோகத்தர் பட்டியலில், கருவிகள் கொடுத்தோர், சேவை ஈடுபடுவோர் என்ற வகையில் சிறிய மற்றும் நடுத்தர வணிகர்களையும் இணைத்து 300 நிறுவனங்களை இழப்பீடு பொறுப்பெடுக்கும் பட்டியலில் வருமானால், அது நடைமுறை சாத்தியமல்ல என்றும் தனியார் அணுஉலை எரிபொருள் வர்த்தகர்கள் சார்பாக தெரிவித்துள்ளார். அதற்காக 17வது திருத்தத்திலுள்ள ஆ பிரிவையே நீக்க வேண்டும் என்பது அவரது வாதம். காப்பீடு திட்டம் ஒன்று இல்லாமல், வெளிநாட்டு விநியோகத்தர்களும் பங்குக் கொள்ளமாட்டார்கள் என்பது அவரது வாதம்.
பா.ஜ.க. உதவியில்லாமல் மேற்கண்ட சட்டமுன்வரைவை, சட்டமாக்க முடியாது என்பதில் காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூ. ஆட்சியாளர்கள் உறுதியாக இருக்கிறார்கள். இந்த சட்டத்தால் அதிகமான நலனை பெறுபவர் என்று வருணிக்கப்படும் அமெரிக்காவும் இந்த இரு இந்திய பெரும் கட்சிகளை நம்பியே உள்ளது. இந்த நேரத்தில் பா.ஜ.க.வின் ஜஸ்வந்த் சிங், கொண்டு வந்த திருத்தங்களை ஏற்க ஆட்சியாளர்கள் சம்மதித்தனர். ஒபாமா வருகைக்கு முன்பு அவசரமாக இந்த மசோதாவை கொண்டு வந்ததாக குற்றம்சாட்டிய பா.ஜ.க., அமெரிக்காவை திருப்திப்படுத்த இதை கொண்டுவராதீர்கள் என்று கூறி, ஒரு போலியான அமெரிக்க எதிர்ப்பை மக்களவையில் பதிவு செய்தது. அதேசமயம் தங்கள் திருத்தங்கள் ஏற்கப்பட்டால், சட்டமாவதை ஆதரிப்போம் என்ற உள்கருத்தையும் கூறிவிட்டது.
இவ்வாறு ஒரு சட்டம் இந்திய மக்களின் மீது குறிப்பாக வரிசெலுத்துவோர் மீது ஏற்றப்படுகிறது. அதேசமயம் அந்நிய நாட்டு அணு எரிபொருள் முதலாளிகள் மற்றும் இந்திய நாட்டு முதலாளிகள் ஆகியோரை குளிர்வித்து, நாட்டின் பாதுகாப்பு அம்சத்தையே தனியார் கைகளில் கொடுப்பதற்கு வழிவகை செய்கிறது. இத்தகைய செய்திகளை நாட்டுப்பற்றுடன் ஊடகங்களும், பொதுமக்களும் புரிந்துக் கொள்ளப்போவது எந்த நாள் என்பது தான் இப்போது தொடங்கியிருக்கும் கணக்கு.

Tuesday, August 24, 2010

பழங்குடி நலனை அழிக்கும் ஸ்டெர்லைட்டிற்கு அனுமதி மறுப்பு?

ஆகஸ்ட் 23ம் நாள் மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வன இலாகா, ஒரிசா மாநிலத்தில் பாக்சைட் என்ற தாதுப்பொருளை தோண்டி எடுக்கும் சுரங்கத்தை நடத்தி வரும் வேதாந்தா நிறுவனத்திற்கு அனுமதி மறுத்துள்ளது. வேதாந்தா நிறுவனம் வனஉரிமை சட்டத்தையும், சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டத்தையும் உள்ளிட்ட பல்வேறு விதிகளை மீறியிருப்பதாகவும், அதனால் தான் அதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது என்றும் அறிவித்துள்ளது. யார் இந்த வேதாந்தா நிறுவனம் என்று கேட்டால், இங்கிலாந்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் ஒரு பன்னாட்டு மூலதன நிறுவனம் என்பதாகக் கூறுகிறார்கள். ஆனால் அதன் அதிபர் அல்லது முதலாளி யார் என்று வினவினால், அனில் அகர்வால் என்ற வடநாட்டு இந்தியர் என்ற செய்தியும் வெளிவருகிறது. குறிப்பாக வேதாந்தா நிறுவனம் பற்றி புரிய வேண்டும் என்றால், தமிழ்நாட்டில் தூத்துக்குடி நகரில் கடந்த 15 ஆண்டுகளாக சுற்றுச்சூழலை முழுமையாக கெடுத்து வருவதற்கு பெயர் பெற்ற ஸ்டெர்லைட் நிறுவனம் தான் என்று தெரிய வருகிறது.
ஸ்டெர்லைட் தாமிர உருக்காலைத் திட்டம் என்ற நிறுவனம், தூத்துக்குடியில் அடிக்கல் நாட்டப்பட்ட காலத்திலிருந்தே கடுமையான குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி வருகிறது. சமீபத்தில் அந்த ஸ்டெர்லைட் நிறுவனத்தின் துணைத் தலைவர் வரதராசன் கைது செய்யப்பட்டார். ரூ.746 கோடியை வரி செலுத்தாமல் ஏமாற்றியதாக அவர் குற்றம் சாட்டப்பட்டார். உண்மைகளை மறைத்து, ஏமாற்று வேலை செய்து வரிகட்டுவதிலிருந்து தப்பி விட்டதாக குற்றம் சாட்டப்பட்டார். 1962ம் ஆண்டின் சுங்கவரிச் சட்டப்படி பிரிவு 135(1)(டி) ஆகியவற்றில் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதன் மூலம் பெரும் பணக்கார கம்பெனி என்று அறியப்பட்ட ஸ்டெர்லைட் கள்ளத்தனமான சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டது பகிரங்கமானது.
அடுத்து அதே தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை ஏற்றுமதி செய்த சரக்குகளில் கள்ளத்தனமாக, கணக்கில் வராத சரக்குகளை அனுப்பியது கையும், களவுமாக பிடிப்பட்டது. கலால் வரி அதிகாரிகள், தாமிர கழிவுகளில் இருக்கும் தங்கத்தையும், வெள்ளியையும் பிரிப்பதற்காக என்ற பெயரில் வெளிநாட்டிற்கு கப்பல் மூலம் ஸ்டெர்லைட் ஆலை ஏற்றுமதி செய்த போது, அதில் கணக்கில் காட்டப்படாத விலையுயர்ந்த தாதுப்பொருட்களான பிளாட்டினமும், பல்லடியமும் இருந்தன என்பதை கண்டுபிடித்தார்கள். தூத்துக்குடிமதுரை சாலையில் இதுபோல 36 கண்டெய்னர்கள் தாமிர கழிவுகளை ஏற்றிச் செல்லும் போது பிடிபட்டன. அதிலிருந்த ஆவணங்கள், தாமிரக் கழிவுகள் தங்கத்தையும், வெள்ளியையும் கொண்டிருப்பதாகவும், அவற்றை பிரித்தெடுக்க வெளிநாட்டிற்கு அனுப்பப்படுவதற்காக சென்னை துறைமுகத்திற்கு எடுத்துச் செல்லப்படுவதாகவும் கூறின. ஆனால் அதில் ரூ.18 கோடி மதிக்கத்தக்க விலையுயர்ந்த பிளாட்டினம் மற்றும் பல்லடியம் இருந்தது பிடிப்பட்டுள்ளது. கடந்தகால தாமிர கழிவுகள் ஏற்றுமதியில் பலநூறு கோடி ரூபாய்கள் வரிகட்டாமல் முழுங்கப்பட்டுள்ளன என்பது தெரியவந்துள்ளது.
இப்போது ஸ்டெர்லைட் ஆலையின் தாய் மற்றும் தந்தை நிறுவனமான வேதாந்தா சிக்கல்களை சந்திக்கிறது. வடஇந்தியாவில் மதிப்புமிக்க தாதுப்பொருட்களின் சுரங்கங்களை உருவாக்கி, அதன் மூலம் தனது தொழிலை நடத்தி வருவது தான், வேதாந்தா என்ற பன்னாட்டு நிறுவனம். தாமிர சுரங்கங்களை வெட்டி, அந்த கனிமப்பொருளை தோண்டியெடுத்து, அதை உருக்க ஆலையை உருவாக்கியது தான் வேதாந்தா. தாமிர உருக்கு ஆலையால் சுற்றுச்சூழல் கடுமையாகக் கெட்டு விடும் என்பதனால், மஹாராஷ்டிரா மாநிலத்தில் காலூன்ற முடியாமல் விரட்டப்பட்ட நிலையில் தான் தமிழ்நாட்டை குப்பைத்தொட்டி என்ற கருத்தில் கொண்டு, தூத்துக்குடி நகரில் வந்திறங்கியது இந்த ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலை.
அடிக்கல் நாட்டப்பட்ட போதே கடுமையான எதிர்ப்பை ஸ்டெர்லைட் ஆலை தூத்துக்குடியில் எதிர்கொண்டது. அதன்பிறகு மீனவர் இயக்கங்களும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், தொழிற்சங்கவாதிகளும், அரசியல்வாதிகளும் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து பெரும் போராட்டங்களை நடத்தினர். போராட்ட முன்னோடிகளை பல்வேறு வழிகளில் நீர்த்துப்போக வைத்த இந்த ஆலை தொடர்ந்து விபத்துக்களை ஏற்படுத்திக் கொண்டு, சுற்றுச்சூழலை கடலிலும், நிலத்தடி நீரிலும், காற்றிலும் கெடுத்துக் கொண்டு வருகிறது. பின்தங்கிய மக்களுக்கு பல வளர்ச்சித் திட்டங்களை, தானே உருவாக்கிய அரசுசாரா நிறுவனங்கள் மூலம் அளித்து, தனக்கு எதிரான போராட்டங்களையும், நீர்த்துப் போக செய்து வருகிறது. இப்போது அறிவிக்கப்பட்டுள்ள சட்டவிதிகளையே மீறியதற்காக பிடிபட்டு, அம்பலமாகி நிற்கிறது.
தூத்துக்குடியைப் போலவே, ஒரிசாவிலும் தனது விதிமீறல், சட்டமீறல் ஆகியவற்றால் இப்போது மாட்டிக்கொண்டுள்ளது. ரூ.50,000 கோடி வரை ஒரிசா மாநிலத்தில் மூலதனமிட திட்டமிட்டு, நியாம்கிரி மலையில் வேதாந்தா நிறுவனம் தனது பாக்சைட் சுரங்கத்தையும், சுத்திகரிப்பு ஆலையையும் நடத்தி வருகிறது. இந்த நியாம்கிரி மலைத்தொடர் அதிகமான அளவில் பாக்சைட் தாதுப்பொருளைக் கொண்டது. அந்த மலைகளை உடைத்து, நடு வயிற்றில் குத்தியதுப் போல வேதாந்தாவின் ஆலை அமைந்துள்ளது. வெண்புகையை கக்கி வரும் அந்த ஆலை, பசுமையான மலைப்பகுதியில் ஒரு பெரும் சொட்டையை ஏற்படுத்திய நிலையில், 100 கி.மீ.க்கு மேல் தனது விரிவாக்கத்தை செய்து வருகிறது. சுரங்கத்திலிருந்து வெட்டப்பட்ட மண் மலைப்போல் குவிந்துள்ளது. நியாம்கிரி மலையின் முக்கியப் பகுதியிலிருந்து பழங்குடி மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். அவர்களில் சிலருக்கு குடியிருப்பு கட்டிக் கொடுக்கப்பட்டாலும், தங்கள் வாழ்வாதாரத்திற்கு வேலை கிடைக்கவில்லை என்பதாக அந்த பழங்குடி மக்கள் அலறுகிறார்கள். காடும், மலையும் தான் தங்களது பாரம்பரிய வாழ்வாதாரம் என்று அவர்கள் கூறுகிறார்கள்.
சமீபத்தில் அமைச்சகத்திற்கு முன்வைத்த அறிக்கையில் என்.சி.சக்சேனா, நியாம்கிரி மலையில் சுரங்கம் தோண்டுவதை அனுமதித்தால், 2 முக்கிய பழங்குடி இனத்தவர் அதனால் தங்களது வாழ்வாதாரத்தை இழப்பார்கள் என்று கூறியுள்ளார். சத்திஷ்கரிலிருந்தும், மஹராஷ்டிராவிலிருந்தும் கொண்டு வரப்படும் தாதுப்பொருட்களை வைத்து அங்கே சுத்திகரிப்பாலை நடக்கிறது. ஒரிசா மாநிலத்தில் உள்ள காலஹண்டி மாவட்டத்தில் இருக்கும் லாஞ்சிகார் பகுதியில் இந்த வேதாந்தாவின் அலுமினிய சுத்திகரிப்பு ஆலை இருக்கிறது. அந்த மலைப்பகுதி குண்டியா கோந்த் என்ற பழங்குடி மற்றும் டோங்கோரியா என்ற பழங்குடி இனத்தவரின் பாரம்பரிய இருப்பிடம். வனஉரிமை சட்டத்தின் கீழும், கிராம சபை சட்டத்தின் கீழும் வனவாசிகளுக்கான உரிமைகள் அங்கீகரிக்கப்படுவதால் அவற்றை மீறி, இந்த வேதாந்தாவின் அதாவது ஸ்டெர்லைட்டின் பாக்சைட் சுரங்கத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்பதே மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வன இலாகாவின் குற்றச்சாட்டு.
மத்திய அரசால் நியமிக்கப்பட்ட ஒரு 3 உறுப்பினர் குழு, அந்த வட்டாரத்தில் நேரடியாக இறங்கி ஆய்வு அறிக்கையை பிப்ரவரி 25ம் நாள் முன்வைத்துள்ளது. அதில் சமூக வளர்ச்சிக்கான ஆய்வு மையத்தின் சார்பாக சட்ட நிபுணர் உஷா ராமநாதன், டேஹ்ராடன்னை சேர்ந்த வன உயிர்கள் பாதுகாப்பு முன்னாள் கூடுதல் இயக்குநர் வினோத் ரிஷி, புவனேஸ்வரிலுள்ள சுற்றுசூழல் வன அமைச்சகத்தின் வன பாதுகாப்பு தலைமை அதிகாரி ஜே.கே.திவாரி ஆகியோர் அத்தகைய ஆய்வை நடத்தி, தங்கள் பரிந்துரைகளை அமைச்சகம் முன் வைத்துள்ளனர். அதில் டோங்கிரியா கோண்ட் என்ற பழங்குடி மக்கள், மேற்கண்ட திட்டத்தால் எந்த அளவிற்கு பாதிக்கப்பட்டு, கோபம் கொந்தளிக்க எழுச்சி பெற்றுள்ளனர் என்பது விவரிக்கப்பட்டுள்ளது. அவர்கள் வாழ்க்கை வன உயிர்கள் சம்மந்தப்பட்டதாகவும், மருந்தாகப் பயன்படும் தாவரங்கள், பழங்கள், வேர்கள் ஆகியவை சம்மந்தப்பட்டதாகவும் இருப்பது அறியப்பட்டது. அவை அனைத்துமே வேதாந்தா திட்டத்தால் பாதிக்கப்படுகிறது. டோங்கார் என்று அழைக்கப்படும் அவர்களது கடவுளான நியாமராஜா, வேதாந்தாவால் தோண்டப்பட்டும், வெடிக்கப்பட்டும் சிதறுவதை அந்த பழங்குடி மக்கள் தாங்கத் தயாராக இல்லை. மேற்கண்ட பாதிப்புகள் அந்த போர்க்குணம் மிக்க பழங்குடி மக்களை, மாவோயிஸ்ட்கள் பக்கம் தள்ளி விடுகிறது என்ற உண்மையையும் மத்திய அரசு கவனிக்காமல் இல்லை. அப்படிப்பட்ட சூழலில் தான், வேதாந்தா என்ற அந்த பணக்காரத் திமிர் பிடித்த கம்பெனியின் சட்ட விரோத, விதி மீறல் செயல்களுக்கு ஒரு தடை போடப்பட்டுள்ளது. இந்த தடையை தொடர்வதற்கு மத்திய அரசிற்கும், அரசியல்வாதிகளுக்கும் மனஉறுதி தொடருமா என்பது கேள்விக்குறியே.