Thursday, September 23, 2010
கல்மாடிக்கு கல்தா. களவாண்டதற்கு மன்னிப்பா?
வழமையாக நமது அரசாங்க திட்டங்களுக்கு முதலில் செலவு கணக்கு ஒன்று போடப்படும். பிறகு திட்டம் நடைமுறைக்கு வரும்போது, அதிக செலவு ஆகிவிட்டது என்றும், அதிக செலவு ஆகும் என்றும் ஒரு புதிய கணக்கை கூறுவார்கள். இத்தகைய போக்கு இங்கே காமன்வெல்த் விளையாட்டு போட்டியிலும் நடந்தது. அதாவது ரூ. 655 கோடி செலவாகும் என்று முதலில் கூறப்பட்டது. அதையே மனிசங்கரையர் போன்றவர்கள் கேள்வி கேட்டனர். அந்த அளவுக்கு விளையாட்டு போட்டிக்கு செலவழிப்பதற்கு பதில், அதையே இந்த நாட்டில் வறுமையில் வாடும் மக்களுக்கு உணவளிக்க பயன்படுத்தலாம் என அவர்கள் கூறினார். ஆனால் காலம் ஆக, ஆக செலவு கணக்கு அதிகரிக்கத்தொடங்கியது. 11490 கோடி ரூபாய் வரை செலவு கணக்கை கூட்டினார்கள். பகிரங்கமாக இந்தியா வறுமையிலும், வேலையில்லா திண்டாட்டத்திலும் உழன்று கொண்டு இருக்கும் போதே, இவர்கள் விளையாட்டு போட்டிக்காக பல ஆயிரம் கோடிகளை செலவழிப்பது நாட்டு மக்களை எரிச்சலடைய செய்தது.காமன்வெல்த் போட்டிக்கான செலவு இவ்வளவு என்று அதன் ஒருங்கிணைப்பு குழு கூறும்போதே, இந்த விளையாட்டு போட்டிக்காக, டில்லி பெருநகருக்குள், அரசு அதாவது டில்லி யூனியன் பிரதேச அரசு உள்கட்டுமான ஏற்பாடுகளை செய்யவேண்டி வந்தது. அதற்க்கான செலவாக டில்லி அரசு 17000 கோடியை செலவு செய்துள்ளது. அது டில்லியின் எதிர்கால தேவைகளுக்கும் பயன்படும் என்பது அவர்களது வாதம்.
கல்மாடி தலைமையின் மீது பல்வேறுவிதமான குற்றச்சாட்டுகள் வந்தபோதும், வாங்கிய கருவிகள் விசயத்தில், கருவிகளின் விலையைவிட அதிகமான அளவு கொடுத்து வாடகைக்கு கருவிகளை வாங்கினார் என்ற விமர்சனம்கூட வந்த போது அவர் கலங்கவே இல்லை. அந்த அளவுக்கு அவருக்கு காங்கிரசு தலைமையின் அழுத்தமான ஆதரவு இருந்தது தெரியவந்தது. அதேநேரம் காமன்வெல்த் விளையாட்டு போட்டிக்காக தீம்பாடல் என்று ஏ.ஆர்.ரஹ்மான் பாட, பகிரங்கமாக மேடை போட்டு, கல்மாடி டிஷர்ட் போட்டுக்கொண்டு வெளிட்டதை நாம் காட்சி ஊடகங்களில் காண முடிந்தது. .இப்படிப்பட்ட கல்மாடி அராஜகத்திற்கு ஒரு முடிவு கட்ட வேண்டுமென்று பலரும் காங்கிரஸ் கட்சிக்குள் விரும்பினர்.
காமன்வெல்த் விளையாட்டு போட்டி நடக்குமிடங்களில், பல்வேறு விளையாட்டு அரங்கங்கள் கட்டவேண்டி வந்தது. அதில் நேரு, இந்திராகாந்தி, என்று ஒவ்வொரு விளையாட்டு அரங்கிற்கும் பல நூறு கோடி ரூபாய்க்கு கட்டுமானப்பணிக்காகவே செலவழித்துள்ளார்கள். ஆனாலும் அவ்வாறு கட்டப்பட்ட விளையாட்டு அரங்கங்கள் ஒவ்வொரு நாளும், ஒரு அரங்கம் என்று உடைந்து விழுவதை கண்டு ஊரே சிரிக்கிறது. உதாரணமாக ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கில், நடைமேடை பாலம் உடைந்து விழுந்தது. அதில் இருபத்தேழு பேர் தொழிலாளர்கள் காயம் அடைந்துள்ளார்கள் என்ற செய்தி இன்னொரு இடியாக வந்து விழுந்தது. அதற்கு மறுநாளே, பளு தூக்கும் போட்டி நடைபெற இருந்த அரங்கில், செயற்கை கூரை ஒரு பகுதி உடைந்து விழுந்தது. இவையெல்லாம் எல்லா ஊடகங்களிலும் உலகெங்கிலும் பெரிதாக காட்டப்பட்டது. அதன்விளைவாக பல பங்குபெறும் நாடுகள் தங்கள் அதிருப்தியை தெரிவித்தனர். காமன்வெல்த் நாடுகள் என்று பெயர் பெற்ற பெரிய நாடுகளான இங்கிலாந்து, அயர்லாந்து, நியூசிலாந்து, போன்ற நாடுகள், விளையாட்டு போட்டிகளில் தாங்கள் கலந்துகொள்ளப்போவது இல்லை என்றும் அறிவித்தனர். அதில் சில நாடுகள் தாங்கள் பொறுமையாக தங்கள் நாட்டு விளையாட்டு வீரர்களை செப்டம்பர் கடைசியில் இந்தியாவிற்கு அனுப்புவோம் என்றும் கூறி உள்ளனர். தங்கள் நாட்டு குடிமக்களையும், விளையாட்டு வீரர்களையும், எந்த ஒரு பயங்கரவாத தாக்குதல்களிலும் மாட்டாமல் இருப்பதற்காக எச்சரிக்கையாக இருக்குமாறு இந்த நாடுகள் கேட்டுக்கொண்டுள்ளன. காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளின் நாடுகளின் கூட்டமைப்பு தலைவர் மைகேல் ப்பேணல், காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளுக்கான கிராமம், சுத்தமாக இல்லைஎன்றும், கட்டி முடிக்கப்படவில்லைஎனவும், கடுமையான விமர்சனங்களை வைத்தார்.
இத்தனை விமர்சனங்களுக்கு பிறகும் ஒருபுறம் முதல்வர் ஷீலா தீட்ஷித் தாங்கள் எல்லா குறைபாடுகளையும் சரி செய்து விடுவோம் என்றும், இப்போது எழுகின்ற குறைபாடுகள், விளையாட்டு போட்டிகளை ஒருபோதும் தடுத்து விடாது என்றும் கூறினார். இன்னொருபுறம் அந்நிய நாடுகள் பார்க்கும் தரம் என்பது வேறு என்றும், இந்த நாட்டில் தரம் என்று நாம் பார்ப்பது வேறு என்றும் பதில் கூறிக்கொண்டிருந்தனர். அசுத்தம், சுகாதாரம் பற்றிய விமர்சனகளுக்கு இப்படி பதில் சொல்ல இந்த நாட்டு அதிகாரிகளாலும், அரசியல்வாதிகளாலும் முடிகிறது என்று சொன்னால், இந்த நாட்டின் மரியாதை உலக நாடுகள் மத்தியில் எந்த நிலையில் இருக்கும் என்பது சொல்லாமலேயே தெரியமுடியும். இப்படி சூழலில்தான் நேற்று தலைமை அமைச்சர் மன்மோகன், ஒரு தீவிர நடவடிக்கையாக கல்மாடியை இந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளின் ஒருங்கிணைப்பாளர் பொறுப்பிலிருந்து ஓரங்கட்டிவிட்டு , ஜெயபால் ரெட்டியையும், எம்.எஸ்.கில்லையும் பொறுப்பில் போட்டு, அமைச்சர்கள் குழுவை முழு பொறுப்பையும் கவனிக்க அந்த இடத்தில் நியமித்தார்.. அதுபற்றி கூறிய மணி சங்கர் ஐயர் இந்த விளையாட்டு போட்டி நடத்துவதில் உள்ள குறைகளை தான் ஏற்கனவே நாலு ஆண்டுகளுக்கு முன்பே கூறியதாகவும், இப்போது ஒருங்கிணைப்பாளரை மாற்றியதால் இனி விளையாட்டு போட்டி சரியாக நடைபெறும் என்று கூறியுள்ளார். அந்த அளவுக்கு காங்கிரசு கட்சிக்குள் பிளவுகள் இருப்பது பகிரங்கமாக வெளிவந்துள்ளது.
இப்போது நமக்கு எழுகின்ற கேள்வி என்னவென்றால், கல்மாடியை நீங்கள் நீக்கலாம் அல்லது ஓரங்கட்டலாம். ஆனால் கலமாடியின் தலைமையின் கீழ் நடத்தப்பட்டுள்ள குளறுபடிகள், வீண்செலவுகள், மற்றும் ஊழல்கள் ஆகியவை அப்படியே எடுத்துக்கொள்ளப்படுமா? அவற்றை நீக்குவதற்கோ, போக்குவதர்க்கோ, அல்லது ஊழல்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கோ காங்கிரஸ் கட்சி தலைமை என்ன செய்யப்போகிறது? அல்லது ஏதாவது செய்யவேண்டும் என்ற எண்ணமாவாது அவர்களுக்கு இருக்கிறதா? இந்தநாடு ஒரு பெரிய பஞ்சத்தை, எதிர்நோக்கி இருக்கும்போது, பெரும் அளவில் வறுமையை தாங்கிக்கொண்டு இருக்கும்போது, இவ்வாறு 77000 கோடி ரூபாய் பணத்தை உலக நாடுகளிடம் பெயர் வாங்க வேண்டும் என்பதற்காக செலவழிக்கலாமா? இது இந்த நாட்டிற்கு இழுக்கா? அல்லது பெருமையா என்பது அவரவர் கண்ணோட்டத்தில் இருக்கிறது.
Wednesday, September 22, 2010
முருகன் கொலைக்கு சி.பி.ஐ விசாரணை வேண்டும்
இன்று 22.09.2010 காலை 10.00 மணிக்கு புதிய தமிழகம் கட்சி அலுவலகத்தில் நிறுவனர் தலைவர் டாக்டர்.க.கிருஷ்ணசாமி அவர்கள் அளித்தப் பேட்டி வருமாறு.
தூத்துக்குடி நகரில் குடிமைப் பொருள் விநியோக உதவி தரக்கட்டுபாடு அதிகாரி முருகன் 25 ஆண்டுகலமாக பணியாற்றி வருகிறார்.குடிமை பொருள் கிட்டங்கியில் கடத்தல் நடக்குமானால் அதை மேலதிகாரிகளுக்கு புகாராக தெரிவித்து வந்துள்ளார் இறந்த முருகன் சென்ற மாதமே குடிமை பொருள் விநியோக துறையில் நடந்துவரும் கள்ள கடத்தல் பற்றி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்தப்புகாரை மேலதிகாரிகளின் வலியுறுத்தலில் திரும்பப் பெற்றதாக அவரது மனைவி கூறியுள்ளார்.
இந்நிலையில் விஷம் அறுந்தியதாக 7.9.2010 அன்று அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரை கொண்டுவந்து சேர்த்தவர்கள் அவர் பாலிடால் குடித்து தற்கொலை செய்ய முயன்றதாக கூறியிருக்கிறார்கள் அரசு ஊழியராக இருகின்ற முருகனது தொழிலை கூலி என்று எழுதி பிறகு அதை அடித்து பணம் கட்டும் நோயாளி என்பதாக எழுதி விபத்து பதிவு ஏட்டில் நிரப்பியிருக்கிறார்கள் இது தொடக்கம் முதலே அவரை கொண்டுவந்து சேர்ந்தவர்கள் மற்றும் மருத்துவமனையில் பதிவு செய்தோர் உட்பட பலர்மீதும் பல கேள்விகளை எழுப்புகிறது.
அந்த பதிவேட்டில் நாடிதுடிப்பு,இரத்த அழுத்தம் ஆகியவை கேள்விக்குறியாக குறிக்கப்பட்டுள்ளது. அப்படியானல் அவரது உயிர் அப்போது இருந்ததா?பிரிந்துவிட்டதா? என்ற சந்தேகத்தை எழுப்புகிறது அது தவிர அப்போது அவர் நினைவற்று இருந்ததாக முதலில் எழுதப்பட்டு பிறகு அதுவே அரை நினைவில் இருந்ததாக மாற்றப்பட்டுள்ளது. இரண்டு இடங்களில் இதேபோல மாற்றப்பட்ட ஆங்கில எழுத்துக்களை பதிவேட்டில் பார்க்கமுடிகிறது. அதனால் திட்டமிட்டு தவறாக பதிவு செய்யப்பட்டதா? என்ற சந்தேகம் எழுகிறது. அவர் உடலில் வேறு எந்த காயமும் இருந்ததாக விபத்து பதிவேட்டில் குறிக்கப்படவில்லை செப்டம்பர் 11-ஆம் நாள் முருகன் இறந்துவிட்டதாக அரசு மருத்துவமனை அறிவித்தது. செப்டம்பர் 12 ஆம் நாள் பிரேத பரிசோதனை அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த பிரேத பரிசோதனை அறிக்கையில் 10 இடங்களில் அவரது உடலில் காயம் இருப்பதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இடது பாதத்திலும்,இடது கையிலும், கழுத்தின் இடபுறமும், தோளின் இடது புறமும், இடது முழங்கையிலும் இடது கையின் பின்புறமும், உதட்டின் கீழ்புற மத்தியிலும் கடுமையான காயங்கள் அந்த பிரேத பரிசோதனை அறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேற்கண்ட காயங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களில் முருகன் அடித்து கொல்லப்பட்ட்டுள்ளார் என்பதை நிருபிக்கும் வண்ணம் அமைந்துள்ளது.
இதுபற்றி நேற்று 21.9.2010 அன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சி தலைவர் பிரகாசிடம் நேரடியாக கேட்டபோது, அவரால் எந்தவொரு பதிலையும் கொடுக்க முடியவில்லை. இறந்த முருகனின் மனைவி செல்வி ஒரு வாரகாலமாக நியாயம் கேட்டு குடும்பத்துடன் ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்னால் பட்டினி போராட்டம் நடத்தி வருகிறார். அவரது புகாரில் கூறப்பட்டுள்ள குற்றம் சாட்டப்பட்டவர்கள் யாரையுமே இதுவரை காவல்துறை விசாரனைகூட செய்யவில்ல்லை.
இறந்த முருகன் தாழ்த்தப்பட்ட வகுப்பை சார்ந்தவர்ராக இருப்பதனால் அவரது மரணம் பற்றிய வழக்கில் 1989-ன் எஸ்.சி/எஸ்.டி தாழ்த்தப்படோர் மற்றும் பழங்குடி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் குற்றங்கள் பதிவு செய்யவேண்டும். அதையும் இந்த அரசு செய்யவில்லை ஆகவே இந்த மரணத்திற்கு பின்னால் தூத்துக்குடி மற்றும் தென் மாவட்டங்களில் மட்டுமின்றி மாநில மெங்கும் நடக்கும் ரேஷன் பொருள் கடத்தல் என்ற மாபெரும் சதி இருப்பதாக சந்தேகம் எழுகிறது. அரிசி மட்டுமின்றி உழுந்தும் பருப்பும் கடத்தப்படுகின்றன் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.இவ்வாறு முருகனின் மரணத்திற்கு பின்னால் பெரிய அளவில் ஒரு சதி வலை பின்னல் இருக்கக்குடிய நிலைமை இருப்பதனால் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு கொண்டு செல்ல வேண்டும்.
Tuesday, September 21, 2010
தலித் மக்கள் பாதுகாப்பு சட்டத்தை படிக்க மாட்டீர்களா?
இத்தகைய தீண்டாமை கொடுமை பற்றிய இந்திய யதார்த்தம், உலக அரங்கில் விவாதிக்கப்பட்டபோது ஐ.நா. சபையின் மனித உரிமை ஆணையத்தில் சர்ச்சைக்கு உள்ளானபோது, இந்திய அரசின் பக்கத்தில் முன்வைக்கப்பட்ட சட்டரீதியான தடுப்பு நடவடிக்கைகள் கவனிக்கப்படவேண்டும். ஏன் என்றால் ஒரு அரசு நிலவுகின்ற சமூக அநீதி பற்றி என்ன கருதுகிறது என்பதுதான் முக்கியமான விஷயம்.
இந்தியாவிற்கான ஒரு அரசியல் சட்டம் எழுதப்ப்படும்போதே, அதில் தீண்டாமை ஒழிப்பு என்பதற்காக ஒரு சட்டப்பிரிவு எழுதப்பட்டுள்ளது. ஆனால் அது தீவிரமான செயல்பாட்டிற்கு செல்லவில்லை. ஏன் என்று பார்த்தோமானால் தீண்டாமை என்பதும், சாதி இழிவு படுத்தல் என்பதும், சாதி கட்டுமானம் என்பதும், இங்கு நிலவுகின்ற சமூக, பொருளாதார, அரசியல் தளங்களுடன் இணைந்த ஒரு அம்சமாக இருக்கிறது. இது ஆண்டாண்டு காலமாக இந்திய கிராமங்களிலும், நகரங்களிலும்கூட, நடைமுறை செயல்பாடுகளாக இருந்து வருகிறது. அதாவது நிலவிவரும் நில உறவுகள் அத்தகைய சாதி கட்டுமானத்தை உயிரோடு வைத்திருப்பதில் கவனமாக இருக்கின்றன. சாதி இந்துக்கள் கரங்களில் இந்திய கிராமப்புறங்களில் உள்ள நில உறவுகள் இருந்துவருவதால், அவர்கள் தங்கள் அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்வதர்க்காக, சாதி கட்டுமானத்தை இறுக்கமாக்கி வருகிறார்கள்.
அதனால் சாதி ஆதிக்கம் என்பது ஒரு சமூக வன்முறையை கட்டவிழ்த்து விடுவதற்கு ஏதுவாகிறது. சமூக வன்முறை என்பதாக இந்த தீண்டாமை கொடு நோய் புரியப்படவேண்டும். அதனால்தான் அரசாங்கம் எந்த ஒரு சட்டத்தை கொண்டுவந்தாலும், அதை அமுல்படுத்துவதற்க்கோ, குற்றம் செய்தவர்களை கைது செய்வதற்கோ, தண்டனை வழங்குவதர்க்கோ, அதிகாரிகள் தயாராக இல்லை என்ற சூழல் நிலவுகிறது.
இப்படிபட்ட பின்னணியில்தான் நாம் தலித் மக்களுக்கு சாதகமாக, தலித் மக்களுக்கு பாதுகாப்பிற்காக கொண்டுவரப்பட்ட சட்டங்களைக்கூட, அமுலாக்கமுடியாத ஒரு நாட்டில் வாழ்ந்துவருகிறோம் என்பது வெட்கப்படவேண்டிய ஒரு செய்தியாக இருக்கிறது..
வட மாநிலங்களில் சாதி பாகுபாடு என்பது, பகிரங்கமாக அறிவிக்கப்படுவது மட்டுமின்றி, ஒவ்வொரு ஆதிக்க சாதிகளுக்கும் ஒரு ஆயுதம் தாங்கிய படை அமைக்கப்பட்டு, அதன் மூலம் ஒடுக்கப்படும் சாதி மக்களை மிரட்டியும், தாக்கியும், கொலை செய்தும் வருவது அன்றாட நிகழ்ச்சியாக இருக்கிறது. உதாரணமாக பீகார் மாநிலத்தில், ராஜபுத்திரர்கள் எனும் ஆதிக்க சாதியான ஜமீன்தார்களுக்கு ஒரு தனி ஆயுதப்படை, அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல பூமிஹார் என்ற இன்னொரு பண்ணையார் சாதிக்காக இன்னொரு ஆயுதம் தாங்கிய படை அமைக்கப்பட்டு இயங்கிவருகிறது. இவ்வாறு சாதி என்பது படை பரிவாரங்களுடன் இயங்குவது, இந்தியாவின் பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்திலும் இருக்கிறது. இதுபோன்ற ஒரு சூழல் தமிழ்நாட்டில் இல்லை. இங்கே அரசியவாதிகள்கூட, சாதி கூடாது என்பதை வாயளவில் கூறி வருகின்றனர். தந்தை பெரியாரால் சாதி எதிர்ப்பு பரப்புரையும், சாதி ஒழிப்பு செயல்பாடுகளும் தமிழக மண்ணை செல்வாக்கு செலுத்தி வரும் காரணத்தாலும், சாதி இங்கே பகிரங்கமாக பேசப்படுவது அசிங்கமான செயல் என்ற கருத்து இருக்கிறது.
இப்படிப்பட்ட சூழலில், தமிழகத்தில் நிலவும் தீண்டாமை செயல்பாடுகளை காண வேண்டும்.
அதாவது தமிழ்நாட்டில், தீண்டாமை இன்னமும் மக்கள் மத்தியில், ஆதிக்க சாதிகள் மனங்களில் ஆழமாக குடியிருந்தாலும், பகிரங்கமாக இங்கே தீண்டாமையை ஆதரிக்கிறேன் என்று சொல்லக்கூடிய நிலையில் யாரும் இல்லை. அதுமட்டுமல்லாது இங்கே இருக்கும் அரசியல் கட்சிகளோ, ஊடகங்களோ, தீண்டாமை என்பது ஒரு கொடூரமான நோய் என்பதை புரிந்தே வைத்துள்ளனர். ஆனாலும் தன்கள் நலுனுக்காகவும், தங்களது சாதி நலனுக்காகவும் தீண்டாமையை அங்கீகரித்து ஆதரிக்கிறார்கள். ஆகவே இங்கே இதே நோயை வித்தியாசமான முறையில்தான் எதிர்கொள்ளவேண்டும். அதாவது சட்டரீதியாகவே எதிர்கொள்ளமுடியும்.
உதாரணமாக ராஜஸ்தான் மாநிலத்தில், இந்திய அரசியல் சட்டத்தால் தடை செய்யப்ப்பட்ட உடன்கட்டை ஏறுதல் என்ற கொடிய பெரிய பெண்ணடிமை நோயை, அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதரிக்கின்றன. இவ்வாறு சட்டத்தை எதிர்த்து அரசியல் கட்சிகளே பெண்ணடிமையை ஆதரிக்கும் உத்திர பிரதேசம் எங்கே? பெண்ணடிமையையும், தீண்டாமையையும் எதிர்த்து ஆட்சிக்கு வரும் தமிழ் நாட்டு கட்சிகள் எங்கே? ஆகவே தமிழ்நாடு இத்தகைய விசயங்களில் வேறுபட்டுத்தான் நிற்கிறது. ஆனாலும் தமிழ்நாட்டில் ஏன் இன்னமும் தீண்டாமை கொடுமை நிகழ்ந்து வருகிறது?
இந்திய அரசியல் சட்டத்தில் தீண்டாமை எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக வடிவமைக்கப்பட்ட சட்டங்கள் தமிழ்நாட்டில் ஒழுங்க்காக செயல்படுத்தப்படுகிறதா? தமிழ் நாட்டு சூழலில், தீண்டாமை எதிர்ப்பு சட்டங்கள் ஒழுங்காக செயல்படுத்தப்பட்டாலே போதும் என்ற நிலை நிலவுகிறது. ஆனால் தீண்டாமை எதிர்ப்பு சட்டங்கள் தமிழ்நாட்டில் செயல்படாமல் இருப்பதற்கு யாரை காரணமாக சொல்ல முடியும்? சட்டங்களை அமுலபடுத்தவேண்டிய பங்கு வழமையாகவே அதிகாரிகள் கைகளில்தான் உள்ளது. சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டிய இடத்தில் உள்ள காவல்துறை அதிகாரிகளும், அதை கண்காணித்து செயல்படுத்த வழிகாட்டவேண்டிய வருவாய் துறை அதிகாரிகளும், ஏன் இந்த தீண்டாமை தடுப்பு, தலித் மக்கள் பாதுகாப்பு சட்டங்களை செயல்படுத்தாமல் இருக்கிறார்கள்? 1989 ஆம் ஆண்டின் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமை தடுப்பு சட்டம் என்பது, அதிகமான பற்களுடன் தலித் மக்களை பாதுகாக்கவும், அவர்களுக்கு எதிராக குற்றம் புரிவோரை கடுமையாக தண்டிக்கவும் இயற்றப்பட்டுள்ளது. ஆனால் அது ஏன் பயன்படவில்லை?
தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்களின் சமூகத்தை சேர்ந்த ஒருவரை, அந்த குறிப்பிட்ட சமூகங்களை சேராத ஒருவர், இழிவு படுத்தினாலோ, தாக்கினாலோ, காயம் அடைய வைத்தாலோ, கொலை செய்தாலோ, தலித் பெண்ணை மானபங்க படுத்தினாலோ, பாலியல் பலாத்காரம் செய்தாலோ, வீட்டை இடித்தாலோ, வீட்டை எரித்தாலோ, தலித்துக்கு சொந்தமான நிலத்தை பறித்து கொண்டாலோ, ஏமாற்றினாலோ, அத்தகைய வழக்குகள் இந்த வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கொண்டுவரப்படலாம் என்று அந்த சட்டம் கூறுகிறது. அதுமட்டுமின்றி, 1995 இன் விதிகள் என்று கொண்டுவரப்பட்ட விதிகள், ஒவ்வொரு தீண்டாமை குற்றத்திற்கும் ஏற்றார்போல, பாதிக்கப்பட்டவருக்கு அளிக்கப்படவேண்டிய இழப்பீடு தொகையையும், கூடுதலாக கொடுக்கப்படவேண்டிய சலுகைகளையும், வரிசைப்படுத்தி கூறுகிறது.
உதாரணமாக இழிவான பொருள்களை அருந்தவைத்தால், ரூ.25000 என்றும், காயம் ஏற்படுத்தினாலோ, நிலத்தை கைப்பற்றினாலோ, அதேபோல தொகையையும், மரபு வழிகளை தடை செய்தால் ரூ.ஒரு லட்சம் என்றும், கொலை அல்லது மரணம் விளைவித்தால் வருமானம் பெறாத தலித் பாதிக்கப்படும்போது, ஒரு லட்சம் ரூபாயும் ,வருமானம் பெறுபவர் விசயத்தில் .இரண்டு லட்சம் ரூபாயும் கொடுக்கப்படவேண்டும். இதுதவிர கூடுதலாக பாதிக்கப்பட்டவரை சார்ந்து இருப்பவர்க்கு மதம் ரூ.1000 அல்லது அரசுப்பணி அல்லது வீடுமனை, விவசாய நிலம், போன்ற சலுகைகள் கொடுக்கப்பட வேண்டும். மேற்கண்ட உதவிகளை, வழக்கு பதிவு செய்த உடனேயே ஒரு தவணையையும், அடுத்து வழக்கு நிறைவு பெற்றபின் ஒரு தவணையையும் கொடுக்கவேண்டும். இதை மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகம் கொடுக்கவேண்டும். அதற்காக மாநில வரவு-செலவு திட்டத்தில் ஒரு பெரும்தொகையை ஒதுக்கீடு செய்து அதை மாவட்டங்களுக்கு மாநில அரசு அளிக்கவேண்டும்.
மேற்கண்ட விவரங்கள் தமிழ்நாட்டு சட்டமன்றத்தில் 1996 ஆம் ஆண்டிலிருந்து வாதம் செய்யப்பட்டு 1998 ஆம் ஆண்டு ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன் பிறகும் இவ்வாறான வழுக்குகளில், வன்கொடுமை தடுப்பு சட்டம் பயன்படுத்தப்படவில்லை என்ற செய்தி கெடுவாய்ப்பாக அமைந்துள்ளது. இவ்வாறு தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியை சேராத காவல் அதிகாரியோ, வருவாய் அதிகாரியோ, குறிப்பிட்ட தீண்டாமை குற்றங்களை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யாவிட்டால், அதை கடமை தவறியமை என்ற காரணத்திற்க்காக அந்த குறிப்பிட்ட அதிகாரி மற்றும் நீதியரசரை மூன்று ஆண்டு கடுங்காவல் விதித்து தண்டனை தரலாம் எனவும் அந்த சட்டம் கூறுகிறது. அப்படியானால் சமீபத்தில் தமிழ்நாட்டில் நடந்த சில, பல வழக்குகளில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அத்தைகைய குற்றம் செய்தவர்களாக கருதப்பட வேண்டும். தலித் என்ற சொற்றொடரை தங்கள் அரசியலுக்கு, அவ்வப்போது பயன்படுத்தும் அரசியல்வாதிகள் இதுபோன்ற நிலவும் தலித் பாதுகாப்பு சட்டங்களின் பிரயோகத்தை உற்சாகப்படுத்தாமல் இருப்பது வேதனை தருவதாகும்.
இதில் அடிப்படையான தவறை செபவர்கள் அதிகாரிகளே என்பது கவனிக்கப்படவேண்டும். அதிகாரிகள் ஏன் சம்பந்தப்பட்ட தீண்டாமை வழக்குகளில், வன்கொடுமை தடுப்பு சட்டத்தை பயன்படுத்தாமல் இருக்கிறார்கள்? சமீபத்திய சில நிகழ்வுகளில் ஒரு உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதாவது சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு, அதாவது காவல்துறையின் பெரிய அதிகாரிகளான மாவட்ட கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட ஆட்சி தலைவர் போன்றோருக்கு, வன்கொடுமை தடுப்பு சட்டம் பற்றிய புரிதல் இல்லாமல் இருக்கிறது என்பதே. இருக்கும் சட்டத்தை படிக்காமல், அதுபற்றிய அக்கறை இல்லாமல், அத்தகைய சட்டங்கள் பற்றிய உணர்வுகள் கொள்ளாமல் எப்படி மாவட்ட நிர்வாகத்தை இவர்கள் வகித்துவருகிரார்கள் என்ற கேள்வி எழுகிறது. முதலில் மேற்கண்ட அதிகாரிகள் இதுபோன்ற குறிப்பிட்ட முக்கியமான சட்டங்களை படிக்கட்டும். அதன் ஒவ்வொரு பக்கத்தையும், ஒவ்வொரு சொல்லையும் புரிந்து கொள்ளட்டும். அதை அமுல்படுத்த முயலட்டும். தமிழ்நாட்டு சூழலை பொறுத்தவரை இந்த வன்கொடுமை தடுப்பு சட்டத்தை படித்து அதிகாரிகள் பயன்படுத்தினாலே தமிழ்நாட்டு ஆதிக்க சாதிகள் தங்களது தீண்டாமை செயல்பாடுகளை விட்டுவிடுவார்கள். சட்டத்தின் மூலம் செய்யவேண்டிய வேலைகளை செய்யாமல், தலித் எழுச்சி வருகிறதே என்று கவலைப்படும் அதிகாரவர்க்கம், கையில் உள்ள அதிகாரத்தை பயன்படுத்த தெரியாமல், சட்ட ஒழுங்கு கெடுவதற்கு வழி செய்வதாக இதிலிருந்து தெரியவருகிறது.. இந்த அதிகாரிகளின் அறியாமையால் இந்த மாநிலத்தின் சட்ட ஒழுங்கு கெடவேண்டுமா?
Sunday, September 19, 2010
ராஜபக்சே வருகிறார். ஐ.நா.வே உஷார்.
அப்படி இருக்கும்போது, இப்போது எப்படி போர்க்குற்றவாளி மகிந்தாவை ஐ.நா. சபை வரவேற்கலாம் என்பதே உலக தமிழர்களின் கேள்வி. ஏற்கனவே ஐ.நா. சபையின் மனித உரிமை கழகம், ராஜபக்சேவின் மனித உரிமை மீறல்களை விசாரிக்க முயன்றது. அப்போது இந்திய அரசும், சீன அரசும் அந்த முயற்ச்சியை முறியடித்து, ஐ.நா.மனித உரிமை கழகத்தையே செய;ல்படவிடாமல் செய்து மகிந்தாவை காப்பாற்றியது. ஐ.நா.மனித உரிமை கழகத்தின் தலைவரான நவீன் பிள்ளை, போரில் நடந்த மனித உரிமை மீறல்களை விசாரிக்க எடுத்துக்கொண்ட அக்கறை, உலக தமிழர்கள் மத்தியில் ஒரு பெரும் எதிர்பார்ப்பை ஏற்ப்படுத்தியது. அதேபோல உலகத்தமிழர்கள் அமெரிக்காவையும், அதன் புதிய அதிபர் பாரக் ஒபமாவையும் பெரிதும் நம்பி, அவரிடம் ஈழத்தமிழர் பிரச்சனையை முறையிட்டு வந்தார்கள்.அமெரிக்காவும் தனக்கு இருக்கும் இரண்டு முகங்களில் ஒரு முகமான மனித உரிமை முகத்தை மட்டுமே ஈழத்தமிழர்கள் விசயத்திலும் காட்டிவந்தது. அதுநேரம் ராஜபக்சே,மேற்க்கத்தியநாடுகளுக்கு எதிரான ஆள் போல காட்டிக்கொண்டிருந்தார்.
அதுதான் உண்மை என்றால், இப்போது எப்படி இந்த போர்குற்றவாளி, ஐ.நா. செல்ல முடியும்? எப்படி அமெரிக்கா அவரை வரவேற்க முடியும்? உண்மையில் இதுவரை தமிழருக்கு புரியாமல் போனது என்ன? உண்மையில் அமெரிக்காவின் முகம்தான் என்ன? இப்போது விழுந்தடித்து ராஜபக்சேக்கு வரவேற்ப்பு கிடைக்க காரணம் என்ன?
ராஜபக்சேவின் வருகையை ஒட்டி, கனடா நாட்டு தமிழர்கள் இப்போது பெரும் ஆர்ப்பாட்டத்தை, அங்கே உள்ள ஐ.நா. தூதரகம் முன்பு செய்துள்ளார்கள். போர் குற்றவாளி என்றும், இலங்கையில் உள்ள முள்வேலி முகாம்களை மூடச்சொல்லியும், ஈழத்தமிழர்களை காப்பாற்றச்சொல்லியும் அவர்கள் முழக்கங்களை எழுப்பியுள்ளனர். போர்க்குற்றவாளி ராஜபக்சேவை, நீதிக்கு முன் கொண்டுவந்து நிறுத்துங்கள் என்ற கோரிக்கையையும் அவர்கள் அப்போது எழுப்பி உள்ளனர். அத்தகைய கோரிக்கைகளை அவர்கள் ஐ.நா.சபைக்கும், அமெரிக்க அரசிற்கும் கேட்டுள்ளார்கள். அத்தகைய கோரிக்கைகளை, இன்றைய நிலையில் ஐ.நா. சபையை நோக்கித்தான் கேட்கமுடியும். அதனால்தான் நாடு கடந்த தமிழீழ அரசின் சார்பாகவும் அத்தகைய கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளனது. அமெரிக்காவை பொருத்தவரை, தமிழீழ விடுதலைப்புலிகளை பயங்கரவாத சக்திகள் என்று முதலில் முத்திரை குத்தியதற்க்கான பொறுப்பு கொண்டவர்கள். அதேசமயம் அமெரிக்க முதலாளிகளின் நிறுவனங்கள் , தங்களது சாவு வியாபாரம் நடக்கவேண்டும் என்பதற்காக, உலகின் எந்த மூலையில் உள்ளவர்களுக்கும் ஆயதங்களை விற்க தயார் என்பதை நடைமுறைபடுத்துபவர்கள். அவ்வாறு ஆயுதங்களை விற்ப்பதில் அவர்கள் புலிகளுக்கு விற்பதற்கும் என்றும் தயங்கியதில்லை. ஆகவே அமெரிக்காவை புரிந்துகொள்ளவேண்டும் எனபதுதான் நமக்கு முன்னால் உள்ள விஷயம்.
ஈழத்தமிழரின் சுய-நிர்ணய உரிமை போராட்டத்தை நேரடியாக அமெரிக்கா ஆதரிக்காதபோதும், ராஜபக்சே அரசு மேற்க்கத்திய நாடுகளை தங்கள் நாட்டு உள்விவகாரத்தில் தலையிடவிடமாட்டோமென பகிரங்கமாக அறிவித்து வந்தது., அது இலங்கை அரசின் திட்டமான அருகாமை நாடுகளை அதாவது அருகாமை நாட்டு அரசுகளை சார்ந்து தனது சிங்கள பௌத்த அரசை நடத்துவது என்ற எண்ணத்தின் அடிப்படையில் செய்யப்ப்பட்ட தந்திரமாகவே தெரிகிறது. அதற்காக மகிந்தா அரசு இந்தியா, சீனா, பாகிஸ்தான் ஆகிய அரசுகளின் உதவியுடன் செயல்படுவதே அதன் செயல்தந்திரமாகும். , இந்திய அரசு , தனக்கு சமமாக சீனாவையும், பாகிஸ்தானையும் வைப்பதை ஏற்றுக்கொள்ளாமல் இருப்பது இந்த செயல்தந்திரத்தில் மகிந்தா அரசுக்கு வசதியாகபோய்விட்டது. அதனால் இந்திய அரசுக்கும், சீன அரசுக்கும் உள்ள முரண்பாடுகளையும், இந்திய அரசுக்கும் பாகிஸ்தான் அரசுக்கும் உள்ள வேறுபாடுகளையும் மகிந்தா அரசு சரியாக பயன்படுத்தி கையாள தொடங்கியது. அதுவே வடக்கே மன்னார் கடற்கரையில், இந்திய அரசுக்கு 100 ஏக்கர் கொடுத்தால், சீன அரசுக்கும் 100 ஏக்கர் கொடுப்பது, அம்பந்தோட்டா கரையை சீனாவிற்கு துறைமுகம் கட்ட கொடுத்தால், அதன்மூலம் அருகே இந்தியாவில் உள்ள துறைமுகங்களுக்கு போட்டியாக சீன துறைமுகத்தை நிறுத்துவது, ரயில்வே பாதை போட இந்தியாவிற்கு கொடுத்தால், முல்லைதீவு கடற்கரையை மீன் பிடிக்க சீனாவிற்கு ஏலத்திற்கு விடுவது, இப்படியாக சீனாவையும், இந்தியாவையும் எதிர்,எதிராக நிறுத்தி அதன்மூலம் தனது காரியங்களை சாதித்துக்கொள்வது மகிந்தாவின் பாணியாக மாறிவிட்டது.
அதேபோல மகிந்தா பாகிஸ்தானையும், இந்தியாவையும் உள்ளே அனுமதித்து அதன்மூலமும் லாபம் பெற்றார். அப்படி செய்யும்போது ஏற்ப்பட்ட முரண்பாட்டில்தான், சேலை வியாபாரிகள் போல வந்த இந்திய அரசின் உளவு ஒற்றர்களை பாகிஸ்தான் உளவு ஒற்றர்கள் மட்டக்கிளப்பில் கொன்றுவிட்டார்கள் என்பதற்காக, லாகூர் தாக்குதலை இந்திய ஒற்றர்கள் செய்த செய்தி வெளிவந்தது. அதன்மூலம் இலங்கை--பாகிஸ்தான் உறவை கெடுக்கலாம் என இந்திய ஒற்றர்கள் திட்டமிட்டால் அது எதிரிடையாக சென்று விட்டது.
இப்போது மட்டக்கிளப்பில் நடந்த சீன கண்டைனர் வெடிப்பிலும் இதே கரங்கள் இருக்க வாய்ப்பு தெரிகிறது. ஏற்க்கனவே அந்த வட்டாரத்தில் ஒரு ராமு படை என்று போலி விடுதலை புலி படையை வைத்திருப்பதில் இந்திய ஒற்றர்கள் பெயர்பெற்றுள்ளனர். அதேபோல கிழக்கு பகுதியின் முதல்வர் பிள்ளையன் இந்திய அரசின் செல்லப்பிள்ளையாக இருப்பதால்தான் உயிருடன் கருணா குழு அவரை விட்டுவைக்கிறார்கள் என்ற செய்தியிலும் உண்மை இருக்கிறது. பிள்ளையன் ஆட்சிக்கு வருவதற்காக, சில குழுக்களுடன் ரகசிய ஒப்பந்தம் போட்டதும் வெளியே தெரியவந்துள்ளது. பாகிஸ்தானின் உளவுத்துறையுடன் மட்டுமின்றி, ஈரான் நாட்டுடனும் நல்லுறவை ராஜபக்சே அரசு வைத்துக்கொண்டுள்ளது. ஈரான் அதிபர் கொழும்பு வந்ததும், அவருடன் ராஜபக்சே இருக்கும் விளம்பர பலகைகள் கொழும்பில் பிரபலமாக இருந்ததும் வன்னி போர் நேரத்திலேயே நடந்தது. இது அமெரிக்காவால் ரசிக்க முடியாத செய்தி. ஆனாலும் இப்போது அமெரிக்கா எப்படி ராஜபக்சேவை ஏற்றுக்கொள்கிறது?
அதற்கும் இன்றைய இந்திய அரசே காரணம்.. அதாவது அமெரிக்காவிற்கு தன்னால் நேரடியாக இலங்கையில் அரசியல் செய்ய முடியாது என்பது தெரியும். அதேசமயம் ஆசியாவில், குறிப்பாக தெற்காசியாவில் சீனா செல்வாக்கு பெறுவது எதிர்காலத்தில் அமெரிக்காவுக்கு ஆபத்தாக முடியும். ஆகவே சீனா செல்வாக்கு இலங்கையில் பெருகுவதை தடுக்க ஒரே வழி, அதற்கு பிராந்திய போட்டியாளராக உள்ள இந்தியாவை வலுப்படுத்துவதாலேயே முடியும் என்பதை அமெரிக்கா உணர்ந்துள்ளது. அதனால்தான் வன்னி போர் முடிவுக்கு பின், அமெரிக்க தலைவர்கள் தங்களது அறிக்கைகளில், தான் இத்தனை ஆண்டுகளாக இந்தியா மூலம் கண்காணித்து, இலங்கை பிரச்சனையில் தலையிட்டு வருகிறோம் என்று கூறினார்கள். அதேபோல இலங்கைக்கு அமெரிக்க பிரதிநிதியை அனுப்பி தங்கள் ஆதரவை ராஜபக்சேவுக்கு தெரிவித்தனர்.
இப்போது சிங்கள எதிர்க்கட்சி உட்பட எல்லோரும் ராஜபக்சே அரசுக்கு எதிராக புதியதோர் அரசியல் போராட்டத்தை எடுத்துவருகின்றனர். மீண்டும் சட்டத்தை வளைத்து மூன்றாவது முறையும் அதிபரே ஆட்சியாளர்களாக தொடர்வதற்கான புதிய சட்ட திருத்தத்தை சிங்க பொதுமக்கள் எதிர்க்க தொடங்கியுள்ளனர். அதை ஜனநாயகம் கருதியாவது இந்திய அரசும், அமெரிக்க அரசும் ஆதரிக்கவேண்டுமல்லவா? அதை அவர்கள் செய்ய வில்லை.
ஆகவே இந்திய அரசின் வழியை எடுத்து ராஜபக்சே அரசுடன் சமரசபோக்குக்கு அமெரிக்க அரசு போய்விட்டதையே அது காட்டுகிறது.ஐ.நா.வை வளைத்து ராஜபக்சே அரசுக்கு சாதகமாக நிலை எடுக்கவைக்க அமெரிக்க அரசால் முடியும். அதுவே இந்திய அரசின் நிலைப்பாடாகவும் இருக்கும்.
ஆனால் உலக தமிழர்கள் இப்போது அரசியல் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். அவர்கள் இந்த ஆயுதம் தாங்கிய அரசுகளின் மனித தன்மையற்ற கொள்கைகளை புறம் தள்ளிவிட்டு தொடர்ந்து போர் குற்றவாளிகளை தண்டிக்கவேண்டும் என்ற உறுதியான கோரிக்கையை தொடர்ந்தது எடுத்து செல்வார்கள். அதில் வெற்றியும் பெறுவார்கள். ஏன் என்றால் உலகம் முழுவதும் உள்ள தமிழர் கூட்டம் இப்போது ஒரே கோரிக்கையுடன் எழுந்து விட்டது. ஒவ்வொரு நாட்டிலும் அதன் எதிரொலி கேட்டே தீரும்.
Friday, September 17, 2010
கல்வியை வணிகமாக ஆக்கலாமா?
தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்ட கோவிந்தராஜன் ஆணையம் தனது ஆய்வின் மூலம், 10 934 சுய-நிதி பள்ளிகளுக்கு, கல்வி கட்டண கட்டமைப்பை நிர்ணயித்தது. அந்த ஆய்வு அறிக்கையை சட்டமன்றத்தில் பள்ளி கல்வி அமைச்சர் வைத்தபிறகே இந்த பிரச்சனை சூடு பிடித்தது. அப்போதுதான் இந்த மெட்ரிகுலேசன் பள்ளிகள் சங்கங்கள் இதை எதிர்க்க தலைப்பட்டனர். அரசு அதற்கு இணங்காத நிலையில் அவர்கள் முதலில் போராட நினைத்தனர். பள்ளிகளை இந்த ஆண்டு வழக்கமாக திறக்கும் காலத்தில் திறக்கவில்லை. அரசிடம் இருந்து தங்கள் பள்ளிக்கு எவ்வளவு கட்டணம் வாங்க வேண்டும் என்ற வழிகாட்டல் வரவில்லை என்றும், வந்த பின்தான் திறக்கமுடியும் என்றும் முதலில் கூறினார். பிறகு திறந்தனர். அப்போது ஒவ்வொரு பள்ளியிலும் மாணவ, மாணவிகளுக்கு குறைவான அளவில் கட்டணங்களை பெற்று சேர்த்துக்கொண்டனர். அதேசமயம் இந்த கல்வி முதலாளிகள் நீதிமன்ற படிக்கட்டுகளையே முழுவதும் நம்பி இருந்தனர். தமிழ்நாடு முழுவதும் உள்ள பெற்றோரும் தங்கள் பிள்ளைகளை இந்த குறைந்த கட்டண விகிதத்தில் சேர்த்துவிட்டனர். இப்போது நீதிமன்ற உத்தரவு வந்து விட்டது.
இந்த ஒய்வு பெற்ற நீதியரசர் கோவிந்தராசன் ஆணையம், 2009 ஆம் ஆண்டின் தமிழ்நாடு பள்ளிகள்[ கட்டண திரட்டல் விதிகள் ஒழுங்குபடுத்தல்] என்ற சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டது. அது 2009 ஆம் ஆண்டு ஆகஸ்ட் -7 ஆம் நாள் அமுலுக்குவந்தது. அதன்பிறகு 2009 ஆம் ஆண்டு டிசம்பர்--7 ஆம் நாள் அதற்க்கான விதிகள் தயாரிக்கப்பட்டன. அது சட்டமாக ஆக்கப்பட்ட உடனேயே எல்லா 10934 பள்ளிகளுக்கும் ஒரு கேள்வித்தாள் அனுப்பிவைக்கப்பட்டது. அந்த பள்ளிகளில் சுய-நிதி பள்ளிகளான சிறுபான்மை, சிறுபான்மை அல்லாத, அனைத்து பள்ளிகளும் அடங்கும். 41 பத்திகளைக்கொண்டதாக அந்த கேள்வித்தாள் அமைக்கப்பட்டிருந்தது. அதற்கு 10238 பள்ளிகள்தான் பதில் அனுப்பியிருந்தன. இப்போது இந்த கல்வி வியாபாரிகளின் வழக்கில், அவர்களுக்கு சாதகமான தீர்ப்பை நீதியரசர் வாசுகி வழங்கியுள்ளார். ஆகஸ்ட்--11 ஆம் நாள் அரசு வெளியிட்ட ஊடக செய்தியையும் இந்த நீதியரசர் தடை விதித்து தீர்ப்பு கூறியுள்ளார். அந்த ஊடக வெளியீட்டில், மேற்குறிப்பிடப்பட்ட கோவிந்தராஜன் ஆணைய வழிகாட்டல்படியான கல்வி கட்டண கட்டமைப்பை இந்த ஆண்டு அனைத்து பள்ளிகளும் கடைப்பிடிக்கவேண்டும் என்று இருந்தது. அதுமாத்திரமின்றி அந்த நீதியரசர் தனது தீர்ப்பில், கோவிந்தராஜன் ஆணையம் பற்றியும் கருத்துக்களை கூறியுள்ளார். அதாவது அந்த ஆணையம் ஆறு உறுப்பினர்களை கொண்டது என்றும், அவர்கள் மட்டுமே எந்த சார்டெட் அக்கவுண்டும் இல்லாமல் , இந்த கட்டண கட்டமைப்பை எல்லா விவரங்களையும் பார்த்து ஒருமாத காலத்திற்குள் சிறப்பாக செய்யமுடியாது என்றும் கருத்து கூறியுள்ளார். இவ்வாறு ஆணையத்தின் அதாவது ஒரு ஓய்வு பெற்ற நீதியரசரின் செயல்பாட்டை, அமர்வு நீதியரசர் விமர்சன ரீதியாக கருத்து சொல்வது என்பது பொதுவாக நடப்பது இல்லை. ஆனால் இங்கே அது நடந்துள்ளது.
இதன்மூலம் தமிழ்நாடு அரசை விட, மெட்ரிகுலேசன் பள்ளிகளின் சங்கங்களுக்கு அதிக அதிகாரம் இருப்பது போல தெரிகிறது. இந்திய அரசும், தமிழ் நாடு அரசும் இதுவரை கடைப்பிடித்து வந்த கல்வி கொள்கைகளினால்தான், இத்தகைய சுய-நிதி பள்ளிகள் நாடெங்கும் புற்றீசல் என பெருகி விட்டன. இப்போது அந்த பள்ளிகளே அரசை எதிர்த்து நிற்கும் அளவுக்கும், அரசை எதிர்த்து, நீதிமன்ற தீர்ப்பை பெரும் அளவுக்கும், பெரிய அதிகாரமாக ஆகிவிட்டன. தமிழக அரசு இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீட்டிற்கு செல்லப்போகிறது என்பது பெற்றோர்கள் மனங்களுக்கு ஒருபுறம் ஆறுதல் செய்தி. ஆனால் இன்று பெற்றோர்கள் நிலைமை மிகவும் மோசமான கட்டத்தை எட்டியுள்ளது.
உலக அரங்கில் இந்த விவகாரமான கல்வியை தனியார் கைகளில் ஒப்படைக்கலாமா என்ற கேள்வி பல நாட்களாகவே பெரும் சர்ச்சையாக இருக்கிறது. அதைப்பற்றி புத்தகங்களும் வெளிவந்திருக்கின்றன. தனியார்மயப்படுத்தல் என்பது கல்வியைப்பொருத்தவரை ஜனநாயக நடைமுறை போல தோற்றம் அளிக்கலாம். அதாவது திறமையும், போட்டியும் கல்வியை கற்றுத்தரும் தரத்தை உயர்த்தும் என்று கூறப்படுகிறது. ஆனால் தனியார் என்பது லாபம் தேடும் முயற்சி என்பதால் அவர்களின் லாப நோக்கு அங்கே முக்கியமான நிபந்தனையாக நிற்கிறது. அதன் விளைவு இப்போது தமிழ்நாட்டில் பாதிப்பை எதிரொலிக்க தொடங்கிவிட்டது.
சில நாட்களாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மெட்ரிகுலேசன் பள்ளி வாசல்களிலும் அதை பார்க்க முடிகிறது. அங்கே தாய்மார்கள் புலம்பிக்கொண்டிருப்பதை கேட்கவும், பார்க்கவும் முடிகிறது. அதாவது இந்த தாய்மார்கள் கோவிந்தராஜன் ஆணைய அறிவிப்புக்கு பின், நிம்மதியாக பள்ளியில் பிள்ளைகளை சேர்த்தனர். இந்த ஆண்டிற்கான கட்டண விகிதம் அரசு அறிவித்ததுபோலத்தான் வாங்கவேண்டும் என்று அறிவித்தபின் வேறு வழியில்லாமல், மேற்கண்ட பள்ளிகளில் மாணவ, மாணவிகளின் பெற்றோர்களிடம் குறைவான அளவில் பள்ளி நிர்வாகம் கட்டணங்களை பெற்றது.
இப்போது நீதிமன்ற ஆணை வந்ததை ஒட்டி இதே பள்ளி நிர்வாகங்கள், பிள்ளைகளின் பெற்றோரை அழைத்து நீங்கள் இன்னொரு பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் கட்டவேண்டும் என்று கட்டாயப்படுத்துகின்றனர்,. இது நடுத்தர, மற்றும் கீழ் நடுத்தர குடும்பங்களில் உள்ள தாய்மார்களுக்கும், தந்தைமார்களுக்கும் இயலாத காரியமாக இருக்கிறது. தங்கள் வரவுக்கு ஏற்றபடி அவர்கள் முதலில் பள்ளிகள் கூறிய கட்டணங்களை கட்டினார்கள். இப்போது நீதிமன்ற தீர்ப்பு அவர்களை இப்படி புதிய நிர்ப்பந்தங்களுக்கு உள்ளாக்குமானால் , பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு கல்வி கொடுப்பது என்ற முடிவை மாற்றிக்கொள்ள வேண்டிவரும். . அதாவது அரசாங்கம் எடுக்கும் கல்வி பற்றிய முடிவு பெற்றோர்களை வம்புக்கு இழுத்து, அலையவிட்டு, தவிக்கவிடுவதாக இருக்கிறதா என்ற கேள்வி அந்த பெற்றோர்கள் மனங்களில் உருவாவது நல்லதல்ல என்பதுமட்டும் நமக்கு புரிகிறது
பெரியார் பிறந்த நாளில் ......
பணக்காரர் முன்னால்.....
தலை குனிய வேண்டாம்
ஆதிக்க சாதி முன்பு......
தலை குனிய வேண்டாம்
அரசியல்வாதிகளை கண்டு.
தலை குனியவேண்டாம்
காவல்துறையை கண்டதும்
தலைகுனியாதீர்.. அதிகாரம்
கொண்டவர் கண்டு.......
தலைகுனியுங்கள் தவறு
செய்தோம் என்றால்......
தலை குனியுங்கள்....
குனிந்து கீழே உள்ளவரை
தூக்கிவிட........
இன்றுமட்டுமல்ல உறுதி
எடுப்போம் என்றும்...
Thursday, September 16, 2010
பயங்கரவாதம், பயங்கரவாத துணையுடன் பல்லிளிக்கிறது
பயங்கரவாதம் என்றால் என்ன என்று இந்த உலகம் இப்போது புரிந்துகொள்ளுமா? பயங்கரவாதத்திற்கு எத்தனை முகம்? விடுதலை போர்களை பயங்கரவாதம் என்று முத்திரை குத்தினார்களே? தேசிய இன விடுதலை போர்கள் மக்கள் சார்பு போர்கள்தானே? மக்கள் சார்பு போர்கள் எப்படி பயங்கரவாதமாக ஆகமுடியும்? இந்த கும்பல்கள் பகத்சிங் பயங்கரவாதி என்று இந்திய சுதந்திர போர் நேரத்தில் கூறியவர்கள்தானே? அடுத்து நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், மக்கள்சார்பாக படை அமைத்து, ஆங்கிலேயரை எதிர்த்து போராடியதை, ஆங்கிலேயருடன் சேர்ந்துகொண்டு பயங்கரவாதி என்றும், வன்முறையாளர் என்றும் கூறியவரின் வாரிசுகள்தானே? ஈராக் நாட்டை ஆண்டுவந்த சதாம் ஹுசைனை கவிழ்ப்பதற்காக பலமுறை படையெடுத்தும், அருகில் உள்ள நாடுகள் மூலம் சதி செய்தும் வெற்றிபெறாத நிலையில், அமெரிக்க அரசு தனது நேட்டோ அணி நாடுகளை சேர்த்துக்கொண்டு, சதாமை பயங்கரவாதத்திற்கு துணை செல்பவர் என்றும், பயங்கரவாத ஆயுதங்களான பேரழிவு ஆயுதங்களை வைத்திருக்கிறார் என்றும் பொய் கூறி அதற்காக ஐ.நா.வை சாட்சிக்கு இழுத்து அதன்மூலமும் நிரூபணம் ஆகவில்லை என்று தெரிந்தபின்னால், நேரடியாக படை எடுத்து ஈராக்கை ஆக்கிரமித்தது. இவ்வாறு பயங்கரவாதம் என்ற பெயர், உலகை ஆளும் பெரும் வல்லரசுகளால் யார் மீதெல்லாம் முத்திரையாக குத்தப்படுகிறதோ, அவர்கள் நியாயமான போராட்டவாதிகளாக இருப்பார்கள் என்பதற்கு பல வரலாற்று முன்னுதாரணங்கள் இருக்கின்றன.
ஆனால் மேற்கண்ட நிகழ்வுகள் ஒவ்வொன்றிலும் ஈடுபட்ட ஆங்கிலேய, மற்றும் அமெரிக்க சக்திகளும் அவர்களுக்கு துணை செல்பவர்களும்தான் உண்மையான பயங்கரவாதிகளாக இருக்கிறார்கள் என்பது கண்கூடு.
இந்திய சுதந்திர போர் உதாரணம் போல, ஈராக் மீது நடத்தப்பட்ட போர் போல, அனைத்து இடங்களிலும் ஆதிக்க சக்திகளுக்கும், விடுதலைக்கு போரிடும் சக்திகளுக்கும், நடக்கும் கருத்து போரில் விடுதலை சக்திகள் தங்களது வெற்றிகரமான தாக்குதல்களை நடத்தும்போதெல்லாம், ஆதிக்க சக்திகளுக்கு விடுதலை வீரர்களை பயங்கரவாதிகள் என்று அழைப்பதை தவிர வேறு வழி இல்லை. அமைப்பாக்கப்பட்ட வன்முறை கருவியை கையில் வைத்திருக்கும் இந்த ஆதிக்க சக்திகள் , உரிமை கோரும் ஒவ்வொரு இனத்தின் மீதும் வன்முறையை, கட்டவிழ்த்துவிடுகின்றன. அத்தகைய வன்முறைகளில் பல நிராயுதபாணியான அப்பாவி மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் அல்லது பலியாகிறார்கள். அவ்வாறு வன்முறைகளை கட்டவிழ்த்து விடும் சக்திகளாக ராணுவமோ, காவல்துறையோ இருக்கிறது. அவ்வாறு நடக்கும் போதெல்லாம் அததகைய வன்முறை செய்த சக்திகளை, யாரும் பயங்கரவாதிகள் என்று அழைக்க மாட்டேன் என்கிறார்கள். அத்தகைய வன்முறைகளை, அதாவது நிராயுதபாணியான அப்பாவி மக்கள் மீது நடத்தப்படும் வன்முறைகளை பயங்கரவாதம் என்று அழைக்காமல் வேறு எப்படி அழைப்பது?
அதுவே விடுதலை அமைப்புகளால் நடத்தப்படும் தாக்குதல்களில் நடைபெறுமானால், அதை உடனே பயங்கரவாத நடவடிக்கை என்றும், அதில் ஈடுபட்டவர்களை பயங்கரவாதிகள் என்றும் அழைக்கிறார்கள். அதுவே பகத்சிங் நடத்திய நாடாளுமன்ற தாக்குதலை வைத்து அவரை ஆங்கிலேயர் முத்திரை குத்துவதற்கு ஏதுவாக போய்விட்டது. அதுவே நேதாஜி விசயத்திலும் அவர் கட்டிய ஆயுதம் தாங்கிய கட்டுப்பாடுள்ள படைவரிசையை கண்டு அஞ்சிய ஆங்கிலேயர்களும், காங்கிரஸ்காரர்களும் அவரை பயங்கரவாத தலைவர் என்பதாகவே அழைத்து, நேதாஜி போஸ் இந்தியாவிற்குள் எப்போது நுழைந்தாலும் காங்கிரஸ் அரசு அவரை பிடித்து ஆங்கிலேயர் வசம் ஒப்படைப்பது என்று கூறினார்கள் அதே பகத்சிங்கும், சுபாஷ்போசும், இன்று இந்திய மக்களால் மாபெரும் தேசிய சுதந்திர போராட்ட வீரர்களாக மதிக்கப்படவில்லையா?
இதே நிலைதான் அருகாமை நாடான இலங்கையில், சிறுபான்மை தமிழ் தேசிய இனம் தனது விடுதலைக்காக போராடும்போது, அனைத்து தமிழ் தேச விடுதலை இயக்கங்களையும், பயங்கரவாதிகள் என்பதுபோல சித்தரித்தது இலங்கை அரசு. இன்று இந்திய மற்றும் இலங்கை அரசுடன் நட்பு கொண்டு அலையும் சில அமைப்புகளை, அந்த நேரம் அதாவது அந்த அமைப்புகள் ஆயுதம் தாங்கிய புரட்சியை முன்னெடுத்த நேரத்தில் என்ன கூறின? அதாவது ந.பா.என்ற பத்மனாபா தலைமையில் இயங்கிய ஈ.பி.ஆர்.எல்.எப்.என்ற ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி என்ற அமைப்பு, தமிழீழத்திற்க்காக போராடுவது மட்டுமின்றி, தெற்க்கே இருந்த சிங்கள புரட்சியாளர்களைக்கொண்ட, ஜனதா சங்க மேவா என்ற ரகசிய அமைப்புடன் சதி செய்து இலங்கை அரசை கவிழ்க்க ஆயுதம் தாங்கிய புரட்சியை நடத்த திட்டமிட்டார்கள் என்று சதித்திட்ட வழக்கை அந்த தலைமையின் மீது போடவில்லையா? அதற்கு இந்தியாவில் அப்போது இருந்த நக்சல்பாரி அமைப்பான விநோத்மிஸ்ரா தலைமையிலான சி.பி.ஐ.[எம்.எல்.] உடன் சேர்ந்து சதி செய்ததாக வழக்கு போட்டதே? அதை எந்தவரிசையில் சேர்ப்பது? அதேபோல உமா மகேஸ்வரன் என்ற முகுந்தன் தலைமயிலான பிளாட் அமைப்புடன் சேர்ந்து ஜனதா சங்க மேவா அமைப்பினரும், இந்தியாவின் வினோத் மிஸ்ரா அமைப்பை சேர்ந்தவர்களும் சதி செய்து இலங்கை அரசை கவிழ்க்க ஏற்பாடு செய்ததாக இன்னொரு வழக்கை, இலங்கையில் பயங்கரவாத தடுப்பு சட்டம் அமுலில் இருக்கும்போது போடவில்லையா? இப்போது அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் அங்கேயும், இங்கேயும் தேர்தல் அரசியலுக்கு வந்துவிட்டதால் பயங்கரவாத பட்டியலில் இல்லாமல் போகவில்லையா?
அப்படியானால் ஆள்வோரை ஆதரித்தாலோ, ஆள்வோரின் தேர்தல் பாதையை ஆதரித்தாலோ ஒருவர் அல்லது ஒரு அமைப்பு பயங்கரவாதி என்ற முத்திரையிலிருந்து மாறி, ஜனநாயகவாதிகளாக ஆகிவிடுகிறார்கள். தொடங்கிய நிலையிலேயே கொள்கையில் உறுதியாக இருந்துவிட்டால் அவர்களை பயங்கரவாதிகள் என்று அழைப்பதை அரசும், ஆதிக்கவாதிகளும், அவர்கள் கைகளில் இருக்கும் ஊடகங்களும் சொல்லிக்கொண்டே இருக்கும். இதுதானே இந்த வரலாறுகள் காட்டும் உண்மை?
அத்தகைய வரலாற்றில்தான், பிரபாகரன் தலைமையிலான தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு பயங்கரவாதிகள் என்ற முத்திரை பெற்றுள்ளது. முதலில் உலகம் முழுவதும் பெரிய பயங்கரவாத நாடாக இருக்கும், பயங்கரவாதத்தை கண்டம் விட்டு கண்டத்திற்கு ஏற்றுமதி செய்யும் அமெரிக்காதான் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பை பயங்கரவாத அமைப்பு என்று முத்திரை குத்தியது. பிறகு அதை ஐரோப்பிய நாடுகளை பின்பற்ற சொன்னது. அவர்களும் அவ்வாறே அறிவித்தார்கள். அதன்பிறகு இந்தியா போன்ற அமெரிக்காவின் நேசநாடுகளை அவ்வாறு அழைக்கசொன்னது. இவர்களும் அதையே பின்பற்றினார்கள். அதற்கு அவர்கள் சொல்லிய காரணம், கரும்புலிகள் கண்டு அவர்களுக்கு ஏற்ப்பட்ட பயம் என்பதுதான்.
அதையேதான் ஈராக்கின் சதாம் ஹுசைன் விசயத்திலும் சொன்னார்கள். ஏன் என்றால் கருப்பு செப்டம்பர் என்ற பெயரில் முதலில் அரபு நாடுகளில் இருந்த பாலஸ்தீன புரட்சியாளர்கள், மனித வெடிகுண்டுகளாக மாறி எதிரியின் முக்கிய தளங்களை குறிவைத்து தாக்கினார்கள். அவர்களது தாக்குதல் அத்தோடு நிற்காமல், உலகின் முக்கிய விளையாட்டு போட்டிகளிலும், முக்கிய விமான தளங்களிலும், எதிரொலித்தது. அத்தகைய தாக்குதல்களால் மட்டுமே பாலஸ்தீன விடுதலை போராளிகளின் தியாக உணர்வையும், வீரத்தையும் உலகம் காண முடிந்தது. அதுவேதான் விடுதலை புலிகள் விசயத்திலும் உணமையாக இருந்தது. ஆகவே பாலஸ்தீன புரட்சியாளர்களின் மனிதவெடிகுண்டு தாக்குதல்களை, ஈராக்கின் சதாம் ஆதரித்தார் என்றும், அதற்கு ஏற்ப்பாடு செய்தார் என்றும் அவர் மீது அமெரிக்க போன்ற நாடுகள் குற்றம் சுமத்தி அவரை பயங்கரவாத பட்டியலில் சேர்க்க முனைந்தனர்.
அதேநிலைதான் பிரபாகரனுக்கும் ஈழ விடுதலை போராட்டத்தில் நடந்துள்ளது. நேத்தாஜியை பின்பற்றுகிறேன் என்று பகிரங்கமாக அறிவித்தவர் பிரபாகரன், அகவே அவருக்கு அவ்வாறு முத்திரை விழுந்தததில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லைதான். ஆனால் இன்று உணமையான பயங்கரவாதிகள் யார் என்பது தெரிய வருகிறது.
சமீபத்தில் பூனா என்ற இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்திலிருக்கும் நகரத்தில் நடந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு பொறுப்பானவர்கள் கைதானார்கள். அவர்கள் இலங்கையின் தலைநகரான கொழும்புவில் பயிற்சி எடுத்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. அதை இலங்கை அரசு மறுத்தாலும், இந்த அம்பலம் இந்திய அரசை இப்போது ஆட்டிவருகிறது. கொழும்பில் உள்ள பாகிஸ்தான் தூதரகம், வன்னி போர் நடக்கும் காலத்தில் ஒரு புதிய தூதரை நியமித்தது. அவர் யார் என்றால், பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. என்ற உளவு நிறுவனத்தின் முன்னாள் தலைவர் என்பது தெரிய வந்தது. அவர் மூலம் பயிற்ச்சிகள் சிலருக்கு நடத்தப்பட்டதும் அப்போதே பேசப்பட்டது. இப்போதுதான் அது நிரூபணமாக ஆகியுள்ளது. அவர்கள் அப்போது மட்டக்கிளப்பில் இந்திய வெளிவிவகார உளவுத்துறையான " ரா ".அமைப்பின் ஆட்களை கொலைசெய்ததாகவும், அதற்கு பதில்கொடுக்கவே, இலங்கை-பாக் உறவை உடைக்க இந்திய உளவு அமைப்பு லாகூரில் கிரிக்கட் ஆடவந்த இலங்கை வீரர்களை குண்டுவீசி தாக்க ஏற்பாடு செய்தது என்றும் அப்போது வந்த செய்திகளுக்கு இன்றுவரை தக்க மறுப்பு கிடைக்கவில்லை. இப்படி அவர்கள் தங்கள் தேவைக்கு பயங்கரவாதத்தில் ஈடுபட்டிருப்பது இப்போது தெரிய வருகிறது. இன்று அம்பலமாகியுள்ள பாகிஸ்தானின் லஷ்கர் -ஈ-தொய்பாவின் கொழும்பு தள நடவடிக்கையை , முன்னாள் இந்திய அரசின் மத்திய அமைச்சக செயலாளரான பி.ராமன் பகிரங்கமாக அமபலப்படுத்துகிறார்.
ஏற்கனவே ராஜபக்சே அரசு வெள்ளை கொடியுடன் வந்த அதாவது சரணடைந்த விடுதலை புலிகளை சுட்டுகொன்ற பயங்கரவாதிகள் என்பது, உலக நீதிமன்ற விசாரணையில் இருக்கிறது. இப்போது தெற்காசியாவில் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதாக இந்திய, பாகிஸ்தான், மற்றும் அமெரிக்க அரசுகளால் முத்திரை குத்தப்பட்ட லஷ்கர்-ஈ-தொய்பா, ராஜபக்சே அரசுடன் சேர்ந்து தென்தமிழ்நாட்டிலும், அதேசமயம் இந்தியா எங்கணும் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருவது தெள்ளந்தெளிவாக தெரியவந்துள்ளது. விடுதலைக்காக போராடுபவர்கள் நடத்தும் தாக்குதல்களையும், ஆதிக்கவாதிகள் மக்களை கொல்வதற்காக நடத்தும் தாக்குதல்களையும் பிரித்துப்பார்த்து யார் பயங்கரவாதிகள் என்று அடையாளம் காண ஊடகங்களாவது உதவுமா என்பதே நமது கேள்வி. இப்போது சிங்கள பயங்கரவாதம், பாகிஸ்தான் பயங்கரவாதத்துடன் சேர்ந்து பல்லிளிப்பதை பார்க்கமுடிகிறதா?
