Saturday, February 27, 2010

பாலியல் குற்றச்சாட்டில் பிரபலம் பலியாகலாமா?

உ.ரா.வரதராசன் இப்போது விவா தத்திற்கு உள்ளாகியிருக்கிறார். தோழர் வரதராசனின் மரணத்தின் மூலம் அந்த விவாதம் பெரிதாகியிருக்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் பிரகாஷ்காரத் கொடுத்த விளக்க அறிக்கையினால், மேலும் விவாதங் கள் உருவாகியுள்ளன. வரதராசனின் மனைவி கூறியதாக ஊடகத்தில் வந்த குற்றச்சாட்டுகள் ஒருபுறம். இழப்பு ஏற்பட்டவுடன் கட்சியை குறை கூறவேண்டுமா என்ற கேள்வி மறுபுறம். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் தா.பாண்டியன், ஒரு கடுமையான விமர்சனத்தைக் கொடுத்துள்ளார். வரத ராசன் சமூக விரோத செயல்களிலோ, வர்க்க விரோத செயல்களிலோ ஈடு படவில்லை என்றும், கம்யூனிச இயக்கத்தில் மிக நீண்ட காலம் பயிற்சி பெற்றவர் என்றும், 50 ஆண்டுகளுக்கு மேலாக கம்யூனிஸ்ட் கட்சிகாக்காவும், சாதாரண மக்களுக் காகவும் பாடுபட்டவர் என்றும், அத்தகைய தலைவர் மீது நடவ டிக்கை எடுக்கும் முன் 100 முறை யோசித்திருக்க வேண்டும் என்றும் தா.பாண்டியன் கூறியுள்ளார். தவறு செய்திருந்தால் அவர் மீது எடுக்கப்படும் நடவடிக்கையின் மூலம், அதைத் திருத்தச் செய்வதாக இருந்திருக்க வேண்டும் என்றும் மாறாக உயிரைப் பறிப்பதாக இருந்திருக்கக் கூடாது என்றும் கடுமையான வார்த்தைகளில் விமர்சித்திருக்கிறார். இந்த மரணம் கம்யூனிச இயக்கத்திற்குள் மிக நீண்ட காலத்திற்கு விவாதத்தை எழுப்பிக் கொண்டே இருக்கும் என்றும் கூறியுள்ளார்.
பொதுவாக மக்களுக்கு மேற்கண்ட நிகழ்ச்சியாலும் அதுபற்றிய விமர்சனத்தாலும் பல்வேறு கேள்விகள் எழத்தான் செய்யும். ஒரு மனிதர் மீது சாட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டு பாலியல் தொந்தரவு சம்பந்தப்பட்டது. அது பிரபல தலைவர் மீது சாட்டப்படும் போது மட்டும்தான் 100 முறை யோசித்திருக்க வேண்டுமா? சாதாரண மனிதர்கள் மீது இதே போல குற்றச் சாட்டு கூறப்பட்டால், உடனடியாக முடிவு செய்தல் தவறில்லை என்று கூறுவதா? இப்படியும் கூட கேள்விகள் எழுகின்றன. நடந்த மரணம் ஒரு தற்கொலையாக இருந் தாலும், அது ஒரு விபத்து. அந்த விபத்திற்கு காரணமானது ஒழுங்கு நடவடிக்கைதான் என்பதாக புரிந்து கொண்டால் அது முழுமையாகுமா?
பிரகாஷ்காரத்தின் விளக்கம், கட்சிக் குள் இந்தக் குற்றச்சாட்டு எடுத்துச் செல்லப்பட்ட முறைகளைப் பற்றி விவரிக்கிறது. அதற்கு ஆதாரமாக பாலியல் தொந்தரவுக்கு உள்ளானவர் கூறிய புகார் சுட்டிக் காட்டப்படுகிறது. ஆனால் அப்படி ஒரு புகார் எழுத்துப்பூர்வமாக கொடுக்கப் படவில்லை என்ற செய்திகளும் வருகிறது. இதில் கட்சிக்குள் அதிகார மோதல் என்பதுதான் இந்த அளவுக்கு பிரச்சினையை இழுத்துக் கொண்டு சென்றுள்ளது என்றும் கூறுகிறார்கள். உ.ரா.வரதராசன் கட்சிக்குள் எப்படிப்பட்ட பதவிகளை தமிழ்நாட்டில் வகித்து வந்தார் என்பதும், டெல்லிக்கு எத்தகைய பொறுப்புகளுக்கு உயர்த்தப்பட்டார் என்பதும், அதுவே அவரிடம் மாறு பட்ட கருத்துள்ளவர்களுக்கு மோதலை ஏற்படுத்தியதா? என்பதும் அந்தக் கட்சிக்குள் உள்விவகாரம். அது முக்கிய காரணம் என்று யாரும் கருதமுடியாது. ஒரு காரியம் நடைபெறுவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்குமானால் இதுபோன்ற உள்கட்சி மோதல், அதிகார முரண்பாடு ஆகியவை அத்தகைய காரணத்தை தூண்டி விடவோ, துரிதப்படுத்தவோ ஒரு குறிப்பிட்ட பங்களிப்பை செலுத்தியிருக்கலாம். தேர்தல் அரசியலைச் சார்ந்தும் அதிகாரப் பகிர்வை நோக்கியும் செல்லுகின்ற ஒரு அரசியல் இயக்கத்திற்குள், இயக்கத்தின் கொள்கைகளை வலுப்படுத்துவதற்கும் அல்லது பலவீனப்படுத்துவதற்கும் இது போன்ற முரண்பாடுகள் எழுவது இயற்கையே. ஒரு நிலப்பிரபுத்துவ சமுதாய அமைப்பில், குடும்ப வாழ்க்கையில் அனைத்து விதமான சிந்தனைப் போக்குகளாலும் தாக்கம் செலுத்தப்படும் ஒவ்வொரு தோழரின் அணுகுமுறையும், பிறரால் பல்வேறு விவாதத்திற்கு உள்ளாக்கப்படுவது என்பது நிகழவே செய்கிறது. முதலாளித்துவக் கட்சிகளின் செயல்பாடுகளையும், சிந்தனைப் போக்குகளையும் முழுமையாக வேறுபடுத்தி மாற்றுச் செயல்பாடு, மாற்றுச் சிந்தனைப் போக்கு ஆகியவற்றை செயல்படுத்து பவர்களாக, தோழர்கள் இயங்கி வந்தால் அதுவேறு. ஆனால் நடை முறையில் மாறுபட்ட செயல்பாடு இல்லாத தோழர்கள் மத்தியில், இன்றைய உலகின் வணிகத் தனமான முதலாளித்துவ சிந்தனைப் போக்குகள் செல்வாக்கு செலுத்தாமல் இருக்குமா?
அப்படி பல்வேறு விதமான வெளிச்சிந்தனைகள், கட்சிக்குள் தாக்கம் செலுத்தும் போது, ஒரு கட்சி தலைமை நிதானமாக எந்த ஒரு குற்றச்சாட்டையும் ஆய்வு செய்ய வேண்டாமா? என்ற கேள்வி எழலாம். அது நியாயமான கேள்விதான் என்றாலும் இங்கே பிரச்சினைக்கு உள்ளாகியிருப்பது குறிப்பிட்ட குற்றச்சாட்டோ, அதை முழுமையாக ஆய்வு செய்யாமல் இருந்ததோ, அவசரமாக முடிவு செய்ததோ அல்ல என்பதை நாம் உணரவேண்டும். இதே போலத்தான் செங்கல்பட்டில் சி.ஐ.டி.யூ.என்ற மார்க்சிஸ்ட் கட்சி யின் தொழிற்சங்க மையத்தில் தலைமைப் பொறுப்பிலிருந்த தோழர் ராதாகிருஷ்ணன் கொலை வழக்கு விவாதிக்கப்பட்டது. ராதாகிருஷ்ணன் மணல் கொள்ளையை எதிர்த்து போராடினார் என்பதற்காக அப்போது தனிமைப் படுத்தப்பட்டதாக கருத்து எழுந்தது. மணல் கொள்ளையை எதிர்ப்பதற்கு மனமில்லாத சக்திகள், அந்த கொலை வழக்கில் குளிர் காய்ந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. அதுபோன்ற பிரச்சனையாக வரதரா சன் விவகாரத்தை பார்க்க முடியாது. ஏனென்றால் இது பாலியல் தொந்தரவு என்ற குற்றச்சாட்டு.
பாலியல் குற்றச்சாட்டுகள் பற்றி சமூகத்தில் நிலவுகின்ற கருத்துக்கள் அதே போல பெண்ணிய அமைப்புகள் சமரசமற்று பார்க்க வேண்டிய நிலைப்பாடுகள், பொதுவுடமைக் கட்சி அத்தகைய பிரச்சினைகளை தீர்ப்பதற்காக கையாளக் கூடிய அணுகுமுறை ஆகிய அனைத்தும் இந்த விவகாரத்தில் சம்பந்தப் படுகின்றன. மேற்கண்ட குறிப்பிட்ட வழக்கில், புகார் கூறியதாக கூறப்படுபவர் நேரடியாக விசாரிக்கப்பட்டாரா? என்ற விவகாரமும் சேர்ந்து எழுந்துள்ளது. எந்த பொறுப்பிலிருந்தாலும், கறாரான நடவடிக்கையை ஒரு கட்சி தலைமை எடுப்பது என்பது சரியாகத்தானே இருக்கும் என்ற பார் வையை குறை சொல்ல இயலாது. இப்போது ஏற்பட்டுள்ள இழப்பின் பளுவை யொட்டி, கறாரான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தவறு என்று கூறுவதும், தவறாகப் போய்விடும்.
குற்றம் சாட்டப்பட்ட தோழரும், அந்த புகாரைக் கையாண்ட தோழர் களும், தோழியர்களும் பாலி யல் உறவுகள் பற்றியும், பாலினப் பார்வைகள் பற்றியும் எத்தகைய கருத்துக்களை வைத்திருக்கிறார்கள் என்பதுதான் இந்த பிரச்சினைக்கான அடித்தளம். சமுதாயத்தில் நிலவுகின்ற பண்பாட்டுப் பிரச்சினைகள் மீதான பார்வையும், கட்சித் தோழர்கள் கொண்டுள்ள கருத்துக்களும் விவாதிக் கப்படவேண்டும். பல்வேறு விதமான இருதரப்பு விவரங்கள், ஆதாரங்கள், சாட்சிகள் ஆகியவற்றைத் தாண்டி, எத்தகையப் பார்வையில் இந்தப் பிரச்சினைகள் பார்க்கப்படுகின்றன என்பது இந்த விவகாரத்தில் முக்கிய மானது. ஒரு ஆண் மேலாதிக்க சமுதாய அமைப்பில், கட்சிக்கு வெளி யேயும், உள்ளேயும் இருக்கின்ற ஆண்கள் எத்தனை பேர் நிலவும் சமுதாய அமைப்பின் ஆதிக்க மனோ பாவங்களிலிருந்து தங்களை விலக்கி நிறுத்திக் கொள்வதில் வெற்றிப் பெற்றிருக்கிறார்கள் என்பது ஒரு அடிப்படையான கேள்வி.
பெண்ணியச் சிந்தனை, பெண் ணுரிமை ஆகியவற்றைப் பற்றி ஒரே விதமான கருத்துக் கோப்பு கட்சிக்குள்ளோ, தோழர்களுக்கு இடை யேயோ, நிலவிக் கொண்டிருக்கிறதா? என்பதும் கேட்கப்படவேண்டும். வரதராசன் தனது மரணத்தைத் தழுவிய நிகழ்வு எந்த விதத்திலும் ஏற்றுக் கொள்ளப்பட முடியாத ஒன்று. அதே சமயம் ஆண், பெண் உறவுகளில், பாலின நீதி கொண்ட உலகப் பார் வையை எவ்வாறு உருவாக்கப் போகிறோம் அல்லது விளங்கிக் கொள்ளப் போகிறோம் என்ற ஆழமான விவாதத்தை நம்மிடையே அந்த மரணம் ஏற்படுத்தியுள்ளது என்பதை மறுக்க முடியாது.

Friday, February 26, 2010

மியான்மர் எனும் பர்மாவிற்கு ஜனநாயகம் திரும்புமா?

உலகில் மாபெரும் ஜனநாயக நாடு என்று அறியப்படும் இந்தியாவிற்கு அருகே அது ஒரு சிறிய நாடு. அன்றைக்கு அதற்குப் பெயர் பர்மா. இன்றைக்கு அதற்குப் பெயர் மியான்மர். ஐ.நா.வரை இப்போது அந்த சிறிய நாடு பிரபலமடைந்து விட்டது. அமெரிக்கா கூட அந்த நாட்டைப் பற்றிக் கவலைப்படுகிறது. அதிபர் ஒபாமா அதிகமாக கவலைப்படுவதாகக் கூறினார். அண்டை நாடான இந்தியா கவலைப்பட்டதா என்று நமக்கு இது வரை தெரியவில்லை. மியான்மர் நாடு பிரபலமடைந்தது, அதன் சாதனை களுக்காக அல்ல. அந்த நாட்டில் நடக்கும் ராணுவ ஆட்சியாளர்களால், அந்த நாட்டின் ஜனநாயகம் வேதனைப் படுகிறது என்பதனால். மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் நாடாளுமன்ற ஜனநாயகப் பாதை அந்த நாட்டிலும் இருந்தது. ஆனால் அங்கு மட்டும் மக்களால் வாக்களிக்கப்பட்டு வெற்றி அடைபவர்கள், நாடாளுமன்றம்
சென்று பதவி ஏற்பதற்கு பதில், வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்கள். அதில் தான் அந்த நாடு பிரபலமடைந்துள்ளது. நாடாளுமன்றப் பாதையைப் போற்றிப் புகழும் இந்தியத் திருநாட்டின், ஆட்சி யாளர்கள் கண்டு கொண்டார்களா என்பது இந்தியக் குடிமக்களுக்கு இன்னமும் விளங்கவில்லை.
ராணுவத்திற்குள் இருந்து மியான்மர் நாட்டில், ஜனநாயக சிந்தனையுள்ள அதிகாரிகளும் வெளியே வந்திருக்கிறார் கள். அதற்கு உதாரணமாகத் தான் டின்ஓ என்ற தலைவர் இருக்கிறார். அவர் ஒரு முன்னாள் ராணுவ அதிகாரி. அவருக்கு ராணுவ ஆட்சியாளர்களுடன் முரண்பாடு உருவானது. அதன் விளைவாக ராணுவ ஆட்சியாளர்களை விமர்சித்து விட்டு வெளியே வந்தார். வெளியே வந்தவர் 1988ம் ஆண்டு தேசிய ஜனநாயக லீக் என்ற கட்சியைத் தொடங்கினார். ஆங்சான் சூ கியூ என்ற பெண் தலைவருடன்
சேர்ந்து அந்த கட்சியை டின்ஓ தொடங் கினார். மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட
சூ கியூ வீட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு நோபல் சமாதான பரிசு அளிக் கப்பட்டது. அவர்களுடன் சேர்ந்து ஜனநாயக ஆதரவாளர்கள் 21,000 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
சென்ற வாரம் சனிக்கிழமை டின்ஓ என்ற அந்த வயதான தலைவர் வீட்டுக் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டார். மியான்மர் நாட்டின் மனித உரிமைகள் நிலைமை பற்றி நேரடியாக மதிப்பீடு செய்ய, கடந்த திங்கட்கிழமை ஐ.நா.சபையிலிருந்து சிறப்புத் தூதர் ஒருவர், மியான்மர் நாட்டிற்கு வருகை தந்தார். அதை முன்னிட்டோ அல்லது வேறு காரணத்திற்கோ அதற்கு இரண்டு நாள் முன்பு டின்ஓ விடுதலை செய்யப்பட்டார். சூ கியூ உட்பட எதிர்கட்சித் தலைவர்களை சந்திக்க ஐ.நா.வில் சிறப்புத் தூதர் முயற்சி செய்தார். இப்படித்தான் அந்த நாட்டின் ராணுவ ஆட்சியாளர்கள் நடப்பு இருக்கிறது. இது எந்த வகையிலும் இந்தியாவிற்கு தெற்கே உள்ள இலங்கை நாட்டின் அதிபர் ஆட்சியிலிருந்து மாறுபட்டு தெரியவில்லை.
7 ஆண்டுகள் வீட்டுக் காவலில் வைக்கப் பட்டிருந்த வயதான தலைவர் டின்ஓ, தான் விடுதலையானவுடன் தனது கட்சி ஆதரவாளர்களுடன் யங்கோன் நகரில், விவாதித்தார். அவரது விடுதலை என்பது மீண்டும் அரசியலில் ஈடுபடுவதற்கான உரிமை என்பதாக எடுத்துக் கொள்ளப்பட முடியாது. அதுதான் மியான்மர் ஆட்சியின் நிலைமை. பின் எதற்காக டின்ஓ விடுதலை செய்யப்பட்டார்?
இங்கிலாந்திலும், அமெரிக்காவிலும், தாய்லாந்திலும் புலம் பெயர்ந்த மியான்மர் நாட்டு குடிமக்கள் வாழ்ந்து வருகிறார்கள். மீண்டும் தங்கள் நாட்டில் ஒரு ஜனநாயக ஆட்சி அதிகாரத்தை, நிறுவுவதற்காக அந்த புலம் பெயர்ந்த பர்மாக்காரர்கள் முயன்று வருகிறார்கள். தான் ஒரு ராணுவ ஆட்சியின் தலைவர் என்பதால், ராணுவ தளபதி தான் ஷ்வே என்ற அதிபர், தேசிய சபைக்கான தேர்தல்கள் விரைவில் நடத்தப்படும் என்பதாக அறிவித்துள்ளார். இதுவரை அதற்கான தேதிகள் அறிவிக்கப்படாவிட்டாலும், ஒரு ராணுவ ஆட்சித் தலைமை, தனது நாட்டில் பொதுத் தேர்தல் நடத்தப்போகி றோம் என அறிவித்துள்ளது. தமிழ் தேசிய விடுதலைக்காக போராடிக்கொண்டிருக் கும், புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்கள் தங்கள் நாட்டில் ஜனநாயக பூர்வமான ஆட்சி மாற்றத்தை எதிர்பார்க்கும் போது, ராணுவத் தலைமையை கையில் வைத்திருக்கும் அதிபர் மகிந்த ராஜபக்சே, தானாகவே ஒரு அதிபர் தேர்தலுக்கான அறிவிப்பை செய்ததைப் போலவே, மியான்மர் நாட்டின் ராணுவத் தலைமையும் நடந்து கொள்கிறது. இரண்டு நாட்டு ஆட்சியாளர்களுக்கும், அண்டை நாடான இந்த பெரிய ஜனநாயக நாட்டின் ஆட்சியாளர்கள் ஆலோ
சனை கொடுத்தார்களா என்பது நமக்குத் தெரியாது.
மியான்மர் நாட்டு ராணுவத்தலைவர் தான் ஷ்வே, தனது நாட்டில் தேர்தல் என்பது சுதந்திரமாக, நியாயமாக நடக்கும் என்று முன்கூட்டியே அறிவித்துள்ளார். அதிருப்தியாளர்கள் கூற்றுப்படி, அந்த ராணுவத்தலைமை குறைந்த பட்சம், ஐ.நா.விற்கும், அனைத்து நாட்டு சமூகத்திற்கும், தான் ஜனநாயக ரீதியான தேர்தலை விரும்புவதாக காட்டிக் கொள்ள அப்படிக் கூறியிருக்கலாம். ஆனால் அனைத்து நாட்டு சமூகத்திற்கும், ஐ.நா.விற்கும் வளைந்து கொடுக்க மகிந்த ராஜபக்சே, இலங்கையில் முயன்றதாக நமக்கு தகவல்கள் இல்லை.
ஜனநாயக ரீதியான தேர்தல்களை மியான்மர் நாட்டில் நடத்த வேண்டும் என் றால், எதிர்க்கட்சி என்று பெயரளவுக்காவது ஒன்று இருக்க வேண்டும். ஜனநாயக ஆதரவு போராட்டங்கள் நடத்தப்பட்டு விடக்கூடாது. ஆனால் தேர்தலில் மட்டும் ஒரு பெயரளவு எதிர்க்கட்சி போட்டிப் போடவேண்டும். இது மியான்மர் நாட்டின் ராணுவ ஆட்சியாளர்களுக்குத் தேவையாக இருக்கிறது. இந்த பணியை செய்ய டின்ஓ தயாராக இருப்பார் என்று தெரிகிறது. அதே சமயம் இன்னொரு அபிப்ராயமும் அந்த நாட்டிற்குள் விவாதிக்கப்படுகிறது. ஐ.நா.சபையின் சிறப்புத் தூதர் தாமஸ் ஓஜியா குயின்டானா வருகையின் போது, மியான்மர் நாட்டில் நிலவுகின்ற மனித உரிமை நிலைமைகள் பற்றி பதிவு செய்யும் போது, ஜனநாயகம் பற்றி சில சொற்களை அனுமதிக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தத்திற்காக டின்ஓவை விடுதலை செய்திருக்கலாம். அந்த நேரத்தில் டின்ஓ பேசுகின்ற ஜனநாயகக் குரலை எல்லாம் அரசு தரப்பு பதிவு செய்து வைத்துக் கொள்ளலாம். ஐ.நா.தூதர் திரும்பிச் சென்று ஐ.நா. அலுவலகத்தில் தனது அறிக்கையை கொடுத்த பிற்பாடு, பதிவு செய்யப்பட்ட டின்ஓவின் கலகக் கருத்துக்களைக் காரணங்காட்டி, மீண்டும் டின்ஓ கைது செய்யப்படலாம்.
மேற்கண்ட சந்தேகங்கள் அந்த நாட்டின் ஜனநாயக சக்திகளுக்கு எழுகிறது. பழம் பெரும் எதிர்க்கட்சித் தலைவரான 87 வயதுள்ள டின்ஓவை விடுதலை செய்வதன் மூலம், ராணுவ ஆட்சியாளர்களுக்கு வெளிநாட்டு உதவி என்ற பெயரில் நிறைய நிதி கிடைக்க வாய்ப்பிருக்கிறது. அதே சமயம் அந்த வயதில் அந்த தலைவர் மக்களைத் திரட்ட முடியாதவராக இருக்கிறார். மியான்மரில் உள்ள ஜனநாயக இயக்கத் திற்கும், தான் எப்படி தேர்தலை எதிர் கொள்ளப்போகிறோம் என்பதில் மாறு பட்ட கருத்துக்கள் அவர்களிடையே நிலவுகின்றன. இதுதான் இலங்கையிலும் எதிர்க்கட்சிகளை உடைப்பதில் ஆளுங் கட்சிக்கு வெற்றித் தேடித்தந்தது. மியான்மர் நாட்டில் ராணுவ ஆட்சியாளர்கள் கொடுக்கும் வாக்குறுதிகளைக் கண்டு மயக்கமடைவோரும் உண்டு. தேசிய ஜனநாயக லீக் போட்டியிடுமானால், ஐ.நா.வின் மேற்பார்வை வேண்டும் என்று கருதுவோரும் உண்டு. தேசிய சபையில் பிரதிநிதித்துவம் பெறுவது என்ற குறைந்தபட்ச தேவையாவது நிறை வேறும் என எதிர்பார்ப்பதும் உண்டு. அப்படி தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் மூலமாக குரல் எழுப்பி, அனைத்து நாட்டு சமூகத்திற்கும், ஐ.நா.விற்கும் செய்தி கூறமுடியும் என்று எண்ணுவோரும் உண்டு. ராணுவ ஆட்சியாளர்கள் தாங்கள் தொடர்ந்து ஆட்சி செய்ய இந்த தேர்தலை, ஒரு துருப்புச் சீட்டாக பயன்படுத்த இருக்கிறார்கள் என்ற கருத்து பொதுவாக இருக்கிறது.
இப்படி ஒரு சிறிய நாட்டு நசுக்கப் படும் ஜனநாயக குரல்களுக்காக, பெரிய நாடு இந்தியா செவிமடுக்காதது ஏன்? என்ற கேள்வியை இந்திய மக்கள் எழுப்புவதில்லை. இலங்கையில் பயங் கரவாதத்திற்கு எதிரான போர் என்று காரணம் கூறி தப்பித்து வந்த நமது மத்திய அரசு, மியான்மர் நாட்டு விவகாரத்திற்கு என்ன பதில் கூறுவார்கள் என்று தெரிய வில்லை.

Thursday, February 25, 2010

மனித உரிமை போராளிகளும், மாவோயிஸ்ட்களும்!

மாவோயிஸ்ட்கள் வன்முறையை கைவிட்டால், பேச்சு வார்த்தை நடத்தலாம் என்கிறார் உள்துறை அமைச்சர். 72 நாட்கள் போர் நிறுத்தம் அறிவிக்கத் தயார் என்று மாவோயிஸ்ட் தலைவர் ஒருவர் கூறுகிறார். இடையில் அவ்வப்போது மத்திய உள்துறை அமைச்சர், வன்முறை செய்யும் மாவோயிஸ்ட்களுக்கு ஆதரவாகப் பேசுகின்ற மனித உரிமை ஆர்வலர்களும், அறிவு ஜீவிகளும், சமூக ஆர்வலர் களும் தங்கள் ஆதரவை திரும்பப் பெற வேண்டும் என்று கூறிவருகிறார். உள்துறை அமைச்சரின் தாக்குதல் இலக்கு முக்கியமாக மனித உரிமை ஆர்வலர்கள் மீது தான் இருக்கிறது. அப்படிப்பட்ட பட்டியலில் இருக்கின்ற மனித உரிமை ஆர்வலர்கள், காட்சி ஊடகங்களிலும், அச்சு ஊடகங்களிலும் தங்கள் பக்கத்து வாதங்களை முன்னெடுத்து வைக்கிறார் கள். அப்படி அவர்கள் தங்கள் கருத்துக்க ளைக் கூறும்போது, தெளிவாக தாங்கள் அனைத்து வன்முறைகளுக்கும் எதிராக இருக்கிறோம் என்பதை மறுக்காமல் பதிவு செய்கிறார்கள். சமீபத்தில் அவ்வாறு பதிவு செய்த டாக்டர் பினாயக் சென், தனது காட்சி ஊடக நேர்காணலில் வன்முறை எந்த வடிவத்தில் நிகழ்ந்தாலும், அது சாதாரண மக்களின் அமைதியான வாழ்நி லையை பாதிக்கிறது என்பதை எடுத்துச் சொன்னார்.
அதே போல மக்கள் சிவில் உரிமைக் கழகம் என்ற பி.யூ.சி.எல். அமைப்பின் பொதுச் செயலாளர், ஒரு காட்சி ஊடகத்தில் கூறும்போது, தங்கள் அமைப்பு அனைத்து வகையான வன்முறைக்கும் எதிரானது என்று கூறியுள்ளார். ஆனாலும் கூட 72 நாள் போர் நிறுத்த அறிவிப்புக்கு தயார் எனக் கூறிய மாவோயிஸ்ட் தலைவர் கிஷன் ஜி, அரசாங்கத்துடன் நடத்த இருக்கும் பேச்சு வார்த்தைக்கு, இடை ஏற்பாட்டாளராக மனித உரிமை ஆர்வலர்களும், அறிவு ஜீவிகளும் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அரசு தரப்பு ஒரு புறமும், மாவோயிஸ்ட் தரப்பு மறுபுறமும் நவீன ஆயுதங்களை குவித்து வைத்துக் கொண்டு, மோதல்களையும், துப்பாக்கிச் சூடுகளையும், உயிர்பலிகளை யும் ஏற்படுத்தி வரும் வேளையில் வன்முறையை அங்கீகரிக்காத மனித உரிமை போராளிகளை, இரு தரப்புமே குறி வைத்துப் பேசுவது நிகழ்ந்து வருகிறது. அப்படிப்பட்ட மனித உரிமை முன்னோடி அமைப்பான, பி.யூ.சி.எல். என்ற மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் அமைப்பாளர்கள், இந்த தீவிரமான சச்சரவு பற்றி கூடி விவாதித்திருக்கிறார்கள்.
கடந்த சனி, ஞாயிறு கிழமைகளில், பெங்களூரில் கூடிய தங்களது தேசிய கவுன்சில் கூட்டத்தில், இந்த மக்கள் சிவில் உரிமைக் கழகத்தைச் சேர்ந்தவர்கள், சத்திஸ்கர் மாநிலத்திலும், ஜார்கண்ட் மாநிலத்திலும் நடந்து வரும் அரசாங்க கெடுபிடிகளையும், சல்வாஜூடும் என்ற கூலிப்படையை ஏவி விடும் காவல் துறையின் நடவடிக்கைகளையும்,
சாதாரண ஜனநாயக சக்திகளும், காந்தியவாதிகளும் ஆதிவாசி மக்களை பாது காப்பதற்காக குறைந்தபட்ச அறவழிப் போராட்டங்களைக் கூட நடத்தமுடியாத நிலை இருப்பதையும், விரிவாகவும், விளக்கமாகவும் அலசினார்கள்.
இதே போல ஏற்கனவே பிரபல பெண் எழுத்தாளரும், மனித உரிமை ஆர்வலருமான அருந்ததிராய், நடந்து வரும் சத்திஸ்கர், ஜார்கண்ட் மற்றும் ஒரிசா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின் வன்முறைகளும், அரசாங் கம் ஆதிவாசி மக்கள் பகுதிகளின் மீது நடத்தும் போர் என்று கூறியிருந்தார். அதற்காக அருந்ததிராயைக் கூட, மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தயங்காமல் மாவோயிஸ்ட்களுக்கு ஆதரவு தருபவர் என்பது போல முத்திரைக் குத்தியிருந்தார். பன்னாட்டு மூலதன நிறுவனங்களுடன், இந்திய அரசு செய்து கொண்ட நூற்றுக்கு மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், அந்தப் பிராந்தியத்தின் காடுகளையும், மலைகளையும் ஆதிவாசிகளின் கரங்க ளிலிருந்து பறிப்பதற்காக திட்டமிடுகின்றன என்று அருந்ததிராய் கூறியிருந்தார். அதற்காகவே ஒரு போர் நடத்த மத்திய அரசு தயார் செய்கிறது என்றும் கூட குற்றம் சாட்டியிருந்தார். இத்தகைய அம்பலப்படுத்தலுக்காகவே எழுத்தாளர் அருந்ததிராய் போன்ற மனித உரிமை ஆர்வலர்களை, மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வம்புக்கு இழுப்பது போல, அவ்வப்போது பேசி வருகிறார்.
இத்தகைய சூழலில் தான் சத்திஸ்கர் மாநிலத்திலும், ஜார்கண்ட் மாநிலத்திலும் முதன்மையாக செயல்பட்டு வரும் மனித உரிமை அமைப்பான, மக்கள் சிவில் உரிமைக்கழகம் அந்த மாநிலத்தின் பொறுப்பாளர்களுடன், அகில இந்திய அளவிலான தேசிய செயற்குழு உறுப் பினர்களையும் அமர வைத்து, விவா தித்து இதற்கெல்லாம் விடை தேட முயற்சித்தது. இந்த சூழ்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு, இதே பி.யூ.சி.எல். அமைப்பின் அகில இந்திய மாநாட்டை, ஜார்கண்ட் மாநிலத் தலைநகரான ராஞ்சியில் கூட்டியிருந்தார்கள். அதிலும் மாவோயிஸ்ட்களுக்கும், அரசு படைகளுக்கும் இடையிலான போர் பற்றியும், பாதிக்கப்படும் ஆதிவாசி மக்களின் அவலம் பற்றியும், அதில் அமைதி ஏற்படுத்துவதற்கான பி.யூ.சி.எல். அமைப்பின் முயற்சிகள் பற்றியும் விவாதிக்கப்பட்டது. அந்த அகில இந்திய மாநாட்டை நடத்திக் காட்டிய, ஜார்கண்ட் மாநில பி.யூ.சி.எல். தலைவர் சுப்ரத்தோ பட்டாசார்ஜீ சமீபத்தில் மரணம் அடைந்தார். அத்தகைய சூழலில்தான் இப்போது அவர்கள் தேசிய கவுன்சிலில் கூடினார்கள்.
ஜார்கண்ட் மாநில பி.யூ.சி.எல். போல் அல்லாமல், சத்திஸ்கர் மாநிலத்தில் இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள், ஆளுகின்ற மாநில அரசாங்கத்தால் அதிகமான அளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஜார்கண்ட் மாநிலத்தின் முதலமைச்சராக இருக்கின்ற சிபுசோரன், ஆதிவாசிகள் இயக்கத்தின் தலைவராக இருக்கிறார். அதே சமயம் அவர் சில தொகுதிகளில் மாவோயிஸ்ட்களின் ஆதரவுடன் வெற்றி பெற்றதாக கூறுகிறார்கள். அங்கே நடந்த ஒரு ஊராட்சி ஒன்றிய அதிகாரியை, மாவோயிஸ்டுகள் கடத்திச் சென்று, கைதாகி உள்ள அப்பாவி ஆதிவாசிகளை விடுதலை செய்யவேண்டும் என்று கோரிக்கை வைத்த போது, சமீபத்தில் அந்த கோரிக்கையை ஏற்று மாநில முதல்வர் சிபுசோரன், அப்பாவி ஆதிவாசி களை விடுதலை செய்தார். அதே போல மாவோயிஸ்டுகளும் தாங்கள் பணயக் கைதியாக பிடித்து வைத்த, பி.டி.ஓ.வை விடுதலை செய்தார்கள். இத்தகைய செயல்பாடு ஜார்கண்ட் மாநிலத்தில் சாத்தியமாக இருக்கிறது. ஆனால் சத்திஸ்கர் மாநிலத்தில் நிலைமை அப்படியில்லை என்பதுதான், மக்கள் சிவில் உரிமைக்கழகத்தின் தேசிய செயற்குழுவில் ஏற்பட்ட புரிதலாக இருக்கிறது. மத்திய உள்துறை அமைச்சர், ராணுவ மயமாக்கும் ஒரு தந்திரத்தை பெரி யளவில் முயற்சிக்கிறாரா என்ற கேள்வி கூட அங்கே எழும்பியுள்ளது.
பச்சை வேட்டை என்ற பெயரில் ஒவ்வொரு வாரமும், சல்வாஜூடும் என்ற கூலிப்படையை ஏவி விட்டு 30லிருந்து 40 வரை பொதுமக்களை, குறிப்பாக ஆதிவாசிகளை கொலை செய்யக்கூடிய, ஒரு கொலை வெறித் தாண்டவம் சத் திஸ்கர் மாநிலத்தில் நடந்து வருகிறது என்ற செய்தி அதிர்ச்சியைத் தந்தது. தெற்கு சத்திஸ்கரில் உள்ள பாஸ்டர் பகுதியில், அந்த வட்டாரத்தையும், சல்வாஜூடும் அமைப்பையும், மாநிலத்தின் ஆளும் கட்சியான பா.ஜ.க.வின் தோழமை அமைப்பாக இருக்கும் ஆர்.எஸ்.எஸ். தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது என்ற செய்தி, பி.யூ.சி.எல். தேசிய கவுன் சிலையே அதிர வைத்தது. எந்த ஒரு பயிற்சியும் இல்லாமல், ஆயுதங்கள் கொடுக்கப்பட்டு 15,000 எஸ்.பி.ஓ.க்கள் என்ற சிறப்பு காவல் படை அங்கே இறக்கிவிடப்பட்டுள்ளது.
உண்மை அறியும் குழாமாக அந்த வட்டாரத்திற்கு சென்ற மனித உரிமை ஆர்வலர்களை ஆயுதம் தாங்கிய 500 பேர் கொண்ட கூலிப்படை சுற்றி வளைத்துக் கொண்டு, முட்டைகளால் தாக்கியது. அந்த தாக்குதலில் மேதாபட்கர் உட்பட அடிபட்டார்கள். இத்தகைய தொடர் தாக்குதல்களால் 643 கிராமங்களைச் சேர்ந்த, 60,000 ஏழை மக்கள், ஊர்களை காலி செய்து கொண்டு இடம் பெயர்ந்துள்ளனர். துணை ராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் 70,000 கிராம மக்கள் இடம் பெயர்ந்த அகதிகளாக அங்கே இருக்கிறார்கள். எஸ்.ஆர்.எம்., டாட்டா, புஷ் கம்பெனி ஆகிய முதலாளிகள் உள்ளே நுழைவதற்காக, ஆர்.எஸ்.எஸ்.ம், சல்வாஜூடுமும் இணைந்து வேலை செய்கிறார்கள்.
கிராமங்களில் மக்களின் வீடுகள் எல்லாம் எரிக்கப்பட்டு, விளைச்சல் நிலங்கள் எல்லாம் சேதப்படுத்தப்பட்டு, கால்நடைகள் கடத்தப்பட்டு, வெறும் கைகளுடன் உள்நாட்டு அகதிகளாக மக்கள் வெளியேறி இருக்கிறார்கள். மாவோயிஸ்ட்களுடனோ, அல்லது அரசு படைகளுடனோ மட்டும் தான் ஒருவர் உயிர் வாழ முடியும் என்ற நிலைமை நிலவுகிறது. எதிர்ப்பு குரல்கள் நெறிக்கப்படுகின்றன. காந்திய வாதி ஹிமன்ஷýகுமார் நடத்திய பாத யாத்திரை தடுக்கப்பட்டது. பிப்.6,7 தேதிகளில் நடத்தப்பட இருந்த பொது விசாரணைக்கு வர ஒப்புக் கொண்டிருந்த மத்திய அமைச்சர் சிதம்பரம், வராமல் புறக்கணித்தார். அரசாங்க நிதியுதவியுடன் இயங்கி வந்த வனவாசி சேத்னா ஆசிரமமும் கூட உடைக்கப்பட்டது. மார்ச் மாதம் 6ம் நாள் நடக்க இருக்கும் சத்திஸ்கர் மாநில பி.யூ.சி.எல். மாநாட்டையும் குலைக்க, பா.ஜ.க. அரசு சதி செய்கிறது.
இப்படிப்பட்ட பின்னணியில்தான் இப்போது மத்திய உள்துறை அமைச்சர், மாவோயிஸ்ட்களுடன் பேச்சு வார்த்தைப் பற்றி சிலாகித்து வருகிறார். மனித உரிமை அமைப்பை அங்கீகரித்து, மத்திய அரசு அந்த வட்டாரத்திற்கு அமைதி திரும்ப ஏற்பாடு செய்யுமா? செய்யாதா? என்ற கேள்வி முதன்மையாக நிற்கிறது.

Wednesday, February 24, 2010

தெலுங்கானா மாநிலம் ஒரு அடிப்படை உரிமை

தெலுங்கானா தனி மாநில கோரிக்கை தீவிரமாக வலுவடைந்து வருகிறது. அந்தப் பகுதியிலிருந்து வருகின்ற செய்திகள் புதிய எழுச்சியை படம் பிடித்துக் காட்டுவதாக இருக்கிறது. அதாவது தனித் தெலுங்கானா மாநில கோரிக்கையை தொடர்ந்து முன்வைத்து வரும் சந்திரசேகராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியும், பா.ஜ.க.வும், அவ்வப்போது தெலுங்கு தேசம் கட்சியும், தெலுங்கானா பகுதியிலுள்ள காங்கிரஸ் தலைவர்களும், இப்போது தெலுங்கானா மக்கள் மத்தியில் ஆழமான பிடிப்புடன் அங்கீகரிக்கப்படவில்லை. மாறாக அது ஒரு மக்கள் பிரச்சினையாக மாறிவிட்டது. இன்னமும் சொல்லப்போனால், ஹைதராபாத்திலிருக்கும் உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்கள் கைகளுக்கு அந்தப் போராட்டம் சென்று விட்டது. தேர்தல் கட்சிகள் யாரையும் இப்போது அந்த மக்கள் நம்பத் தயாராக இல்லை. நடிகர் விஜயசாந்திக்கு தெலுங்கானாவை ஆதரித்ததற்காக இருந்த ஆதரவு கூட, அவர் டி.ஆர்.எஸ். கட்சியில் சேர்ந்த பிறகு இல்லாமல் போய் விட்டது. உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்கள், போராட்டத்தின் திசை வழியை தீர்மானிப்பதால், போராட்டத்தை தொடர்ந்து கொண்டு செல்வதால், தெலுங்கானா தனி மாநிலத்திற்கு எதிரான சக்திகள், குறிப்பாக மாநிலத்தை ஆளுகின்ற காங்கிரஸ் கட்சி தனது தாக்குதலை உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்கள் மீதே செலுத்த முயல்கிறது. அதன் ஒரு அறிகுறி தான் அந்த மாணவர்கள் மத்தியில் மாவோயிஸ்ட் தூண்டுதல் இருப்பதாக அவர்கள் சாட்டி வரும் குற்றச்சாட்டு.
இந்த குற்றச்சாட்டு உயர்நீதிமன்றத்தால் ஏற்கப் படாமல், பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவிகளை மானபங்கம் செய்ததாக, துணை ராணுவத்தினர் மீது சுமத் தப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில், ராணுவமே பல்கலைக்கழக வளாகத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று ஹைதராபாத் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதையும் ஆந்திர அரசாங்கம் எதிர்த்து உச்சநீதிமன்ற மேல் முறையீட்டுக்குச் சென்று, தற்காலிகமாக ராணுவம் பல்கலைக்கழகத்திற்குள் இருக்கலாம் என்ற இடைக்கால உத்தரவைப் பெற்றது. அதையும் கூட அடுத்து வந்த விசாரணையில் உச்சநீதிமன்றம் கேள்விக்குள்ளாக்கியது. ஆந்திர அரசாங்கத்திடம் மாவோயிஸ்ட் தூண்டுதல் பற்றி ஆதாரம் கொண்டு வா என்று கேட்டுள்ளது.
உள்ளபடியே உஸ்மானியா பல்கலைக்கழக மாண வர்கள் மத்தியில் மாவோயிஸ்ட் சிந்தனை இருக்கிறதா அல்லது இருந்ததா அல்லது அவர்கள் அதை நோக்கி ஈர்க்கப்பட வாய்ப்பு உள்ளதா என்று ஆராய்வோமானால், இந்தக் குற்றச்சாட்டின் ஆழமற்ற போக்கு புரியும். ஏனென்றால் நக்சல் பாரி இயக்கம் தொடங்கிய 1967ம் ஆண்டில் தொடங்கி, ஆந்திர மாநிலத்திலுள்ள அனைத்து உயர்கல்வி நிலையங்களிலும், இந்தியா முழுவதும் உள்ள மற்ற மாநிலங்களைப் போலவே, மாவோ சிந்தனைகள் மாணவர்கள் மத்தியில் வெள்ளம் என புரண் டோடியது என்பது உண்மை தான். அதில் உஸ்மானியா பல்கலைக்கழகம் தப்பவில்லை. ஆந்திர மாநிலத்தில் இருந்த பல்வேறு பிரிவு நக்சல் பாரி இயக்கங்களில், ஒவ்வொரு பிரிவின் மாணவர் அமைப்பும் உஸ்மானியா பல்கலைக்கழக வளாகத்தில் சிறப்பாகவே செயல்பட்டு வந்தன. புரட்சிகர மாணவர் சங்கம் என்ற மக்கள் போர் குழுவினரின் மாணவர் அமைப்பு தங்களது பரப்புரையை வழமையாகவே செய்து வந்தது. அதைவிட முற்போக்கு ஜனநாயக மாணவர் சங்கம் என்ற பீ.டி.எஸ்.யு என்ற மாணவர் பிரிவு, சந்திரபுல்லா ரெட்டி தலைமையிலான நக்சல் பாரி பிரிவினுடைய மாணவர் அமைப்பாக, அதிக வலுவுடன் செயல்பட்டு வந்தது. அதனால் அப்படிப் பட்ட சிந்தனை உள்ளவர்கள் அந்த வளாகத்திற்கு புதிய வர்கள் அல்ல. அந்த வளாகத்தின் கட்டிடங்களில் உள்ள செங்கல்கள் கூட, மாவோ சிந்தனைகளை உரைத்துக் கொண்டேயிருக்கும். அப்படியிருந்தும் அமைதியாக இருந்த உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்களை, இப்போது உசுப்பி விட்டிருப்பது யார் என்று பார்க்க வேண்டும்.
தனித் தெலுங்கானாவிற்காக தொடர்ந்து குரல் கொடுத்த டி.ஆர்.எஸ். கட்சியை, இந்தியாவின் ஆட்சியாளர்கள் மாறி,மாறி ஏமாற்றிய பிறகு, அவர் பட்டினிப் போராட்டம் அறிவித்தார். அவரை வற்புறுத்தி போராட்டத்தை ஆட்சியாளர்கள் நிறுத்திய காரணத் தினால், உஸ்மானியா மாணவர்கள் அவருக்கு எதிராகவே போராட புறப்பட்டனர். மத்திய உள்துறை அமைச்சர் தனித் தெலுங்கானா அமைக்கப்படும் என்று முதலில் வாக்குறுதி கொடுத்துவிட்டு, பிறகு பின்வாங்கியதால் உஸ்மானியா மாணவர்கள் உசுப்பி விடப்பட்டுள்ளனர். இதற்கு மாவோயிஸ்ட்கள் காரணம் என்று சொன்னால், கேழ்வரகில் நெய் வடியுது என்று சொன்னால், கேக் கறவன் புத்தி எங்க போச்சு என்பதாக கிராமத்தில் சொல் வார்கள் என்பது தான் நினைவுக்கு வரும்.
இப்போது தெலுங்கானா பகுதியின் 9 மாவட் டங்களும் முழுமையாக மக்கள் எழுச்சியை சந்தித்துக் கொண்டிருக்கிறது. எல்லாக் கிராமங்களிலும் அன்றாடம் தனித் தெலுங்கானா கோரிக்கைக்காக, கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. புரட்சிக் கலைஞர் கத்தார், தனது பாடல்கள் மூலம் தெலுங்கானா தனி மாநிலத்திற்கான கோரிக்கையை முதலில் பரப்பினார். இப்போது ஒவ்வொரு தெலுங்கானா கிராமத்திலும், பல கத்தார்கள் உருவாகி விட்டனர். கத்தார் அணிந்திருக்கும் உடையான வேட்டியும், தோளில் போட்டிருக்கும் கருத்த போர்வையும், ஆதிவாசிகளின் உடை. அதேபோல உடையணிந்து இளைஞர்களும், மாணவர்களும், கிராமம், கிராமமாக புதிய பாடல்களை கத்தார் பாணியில் எழுதி, கத்தார் பாணியிலேயே பாடி, ஆடத் தொடங்கி விட்டனர். இதுவே கிராமங்கள் வரை வேர் போல ஆழமாகச் சென்றிருக்கின்ற எழுச்சியை காட்டுகிறது. தவிர தெலுங்கானா கிராம நிலங்களை, ஆந்திரா பகுதி கம்மா பண்ணையார்கள் விலைக்கு வாங்கி, கார்ப்ப ரேட்டுகளுக்கு விற்று வருகிறார்கள். அதனால் தான் தெலுங்கானா மக்கள் நிலமற்ற, வறியவர்களாக ஆகியிருக்கிறார்கள். அதனால் கார்பரேட்டுகளுக்கு எதிரான, ஏழை விவசாயி களுடைய போராட்டமாகவும், தெலுங்கானா போராட்டம் மாறியிருக்கிறது.
சமீபத்திய தெலுங்கானா போராட்டம் 3 மாதங் களுக்குள், மாணவர்களிடையே கடுமையான மன அழுத்தத்தை ஏற்படுத்தி, அதன் விளைவாக இதுவரை 285 மாணவர்கள் தங்களது உயிரை நெருப்பிட்டு மாய்த்துக் கொண்டுள்ளனர் என்ற கணக்கை அங்கே உள்ள பி.யூ.சி.எல். கொடுக்கிறது. ஹைதராபாத் தலை நகரில் இருக்கின்ற அரசாங்க அலுவலகங்களில், 90% பணியாளர்கள் தெலுங்கானா அல்லாத ஆந்திராவை சேர்ந்தவர்கள். தனித் தெலுங்கானா கிடைக்காமல், அந்த வட்டார மாணவர்களுக்கு எதிர்காலம் இல்லை. அதனால் தான் அவர்கள் மன அழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள். உயிர்பலி செய்து கொள்கிறார்கள். போராட்டத்தை கொண்டு செல்கிறார்கள்.
வரலாற்றுப் புள்ளிவிவரங்கள் இதற்கான ஆதாரங்களை முன்வைக்கின்றன. 1953ம் ஆண்டு டிசம்பர் மாதம், இந்திய பிரதமர் ஜவஹர்லால் நேரு, மொழி வாரி மாநிலங்கள் அமைப்பதற்காக, ஒரு மாநில புனரமைப்பு ஆணையத்தை நிறுவினார். அதற்கு நீதியரசர் பசல் அலியை தலைவராக நியமித்தார். அந்த ஆணையத்தை, 1954ம் ஆண்டு உள்துறை அமைச்சராக இருந்த கோபிந்த் வல்லப் பந்த் மேற்பார்வையிட்டார். அந்த ஆணையம் தெலுங்கானா பகுதியை, ஆந்திராவுடன் இணைக்கக் கூடாது என்று கூறியது. தெலுங்கு பேசும் விரிந்த ஆந்திராவை, ஆந்திரா பகுதி மக்கள் விரும்பினாலும், தெலுங்கானா பகுதி மக்கள் இன்னமும் அதை ஏற்கவில்லை என்று ஆணையம் எழுதியது. தெலுங்கான பகுதி பொருளாதாரத்தில் வளர்ச்சியற்று இருக்கிறது என்றும் கூறியது. அதனால் தெலுங்கானாவில் இருக்கும் வளங்களையும் இணைத் தால் ஆந்திரப் பகுதியினர் தங்கள் நலனுக்கு எடுத்துச் செல்ல வாய்ப்பிருக்கிறது என்று பசல் அலி எழுதினார். அரசாங்க வேலைகளிலும், கல்வியிலும் ஆந்திரப் பகுதி யினர் அதிக லாபம் பெற்று விடுவர் என்பது போன்ற விவரங்களை, ஆணைய அறிக்கை 382வது பாராவில் பசல் அலி எழுதியிருக்கிறார்.
மாநில புனரமைப்பு ஆணைய அறிக்கையின் 386வது பாராவில், ஹைதராபாத் மாநிலம் என்று அழைக்கப் பட்ட பகுதியை, தெலுங்கானா மாநிலம் என்று தனி மாநிலமாக அறிவிக்கலாம் என முடித்துள்ளார். 1961ன் பொதுத் தேர்தலில் ஹைதராபாத் மாநில மக்கள் மூன்றில் இரண்டு பங்கு, ஒன்றுபட்ட ஆந்திராவுக்கு ஆதரவாக வாக்களித்தால் ஒன்றுபடுத்தலாம் என்றும் கூறியுள்ளார். அதன் பிறகு கட்டாயமாக சேர்க்கப்பட்ட ஒன்றுபட்ட ஆந்திராவில், தனித்தெலுங்கானாவிற்காக 1969ம் ஆண்டே மாணவர்கள் போராட்டம் எழுந்தது. 362 உறுப்பினர்களை பலி கொண்டது. இந்த உயிர் பலிகள் தொடர வேண்டுமா? தெலுங்கானா வட்டார மக்களது வாழ்வாதாரம் காக்கப்பட வேண்டுமா? இப்படி கேள்விகளை அருகே இருக்கும் நாமாவது எழுப்பக் கூடாதா?

Tuesday, February 23, 2010

இடம் பெற வேண்டியது குழுவிலா? கூட்டணியிலா?

முல்லைப் பெரியாறு பிரச்சினை மீண்டும் தமிழ் நாட்டிற்குள் அரசியல் விவாதமாகி இருக்கிறது. 2006ம் ஆண்டு முல்லைப் பெரியாறு அணை தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றம் பிப்.27ம் நாள் வழங்கிய தீர்ப்பில் அணை பலமாகவே இருக்கிறது என்பதாக குறிப்பிட்டுள்ளார்கள். கேரள அரசு முல்லைப் பெரி யாறு அணை பலவீனமாக இருப்பதாகவும், அதனால் புதிய அணை ஒன்றை அதன் அருகிலேயே கட்ட வேண்டும் என்றும், உச்சநீதிமன்றத்தில் வாதம் செய்தது. அந்த வாதத்திற்கு பதிலடியாகத்தான் மேற்படி கருத்தை உச்சநீதி மன்றம் தெரிவித்தது.
வெறும் வாதங்களின் மூலம் அப்படிப்பட்ட முடிவுக்கு, உச்சநீதிமன்றம் வர வில்லை. மாறாக மிட்டல் தலைமையில் 7 நிபுணர்களைக் கொண்ட ஒரு குழுவை அமைத்து, அந்த அணையை உச்ச நீதிமன்றம் ஆய்வு செய்யக் கோரியது. அப்படி ஆய்வு செய்யப்பட்டு கொடுக்கப் பட்ட பரிந்துரையை அடிப் படையாகக் கொண்டு தான், மேற்கண்ட தீர்ப்பை, அதாவது அணை பலமாக இருக்கிறது என்ற கருத்தை உச்சநீதிமன்றம் 2006ம் ஆண்டு கூறியது. அப்போது தமிழகத்தில் அ.இ.அ.தி.மு.க. ஆட்சி நடந்து வந்தது. முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 136 அடியாக இருந்தது. அதை 142 அடியாக உயர்த்தலாம் என்றும் உச்சநீதிமன்றம் தனது உத்தரவில் கூறி யது. அதாவது நிலவும் முல்லைப் பெரியாறு அணையிலேயே, அதிக மான அளவு நீரைச்
சேர்த்து, போதுமான அளவு தமிழ்நாட்டிற்கு வழங்க முடியும் என்பதுதான் அந்த தீர்ப்பின் பொருள். அதன் மூலம் தமிழ்நாட்டின் எல்லைப் பகுதியில் இருக்கின்ற தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் தண்ணீர் இல்லாமல் தவிக்கின்ற விவசாயத்திற்கு மற்றும் குடிநீருக்கு தேவையான தண்ணீர் கிடைக்கும் என்பதுதான் அந்த தீர்ப்பையொட்டி, தமிழக மக்களின் எதிர் பார்ப்பு.
மேற்கண்ட தீர்ப்பை கேள்விப்பட்ட வுடனேயே கொந்தளித்து எழுந்தது கேரள சட்ட மன்றம். அப்போது கேரளாவில் ஆட்சியில் இருந்தது காங்கிரஸ் கட்சி. கேரள சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியாக இருந்தது மார்க்சிஸ்ட் கட்சி. கேரள மாநிலத்தை ஆண்ட ஐக்கிய முற்போக்கு கூட்டணியும், எதிர்கட்சி வரிசையிலிருந்த இடதுசாரி ஜனநாயக முன்னணியும், சற்றும் மாறுபாடு இல்லாமல் தங்கள் மாநிலத்தின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு, சட்டமன்றத் தில் ஒரு சட்டத்தை இயற்றி னார்கள். வழக்கமாக சட்ட மன்றங்களில் இயற்றப் படும் சட்டங்களுக்கான மசோதா, அந்த மாநில பிரச்சினைக்காக கொண்டு வரப்படும். ஆனால் அடுத்த மாநிலத்திற்கு பயன்படும் வகையில் உச்சநீதிமன்றத்தால் வழங்கப்பட்ட ஒரு தீர்ப்பை மறுப்பதற்காக அல்லது எதிர்ப்பதற்காக ஒரு சட்டம், பேரவையில் நிறைவேற்றப்படுகிறது என்றால் அது ஒரு விசித்தி ரமான நிகழ்வு.
அதாவது முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடி உயர்த்தலாம் என்ற ஆலோசனையை அல்லது உத்தரவை உச்சநீதிமன்றம் பிறப்பித்த உடனேயே, கேரள சட்டமன்றத்தில் புதிய அணை ஒன்று முல்லைப் பெரியாறு அருகே கட்டப்பட வேண் டும் என்று தீர்மானம் நிறை வேற்றப்பட்டு, சட்ட மாக்கப்பட்டது என்பதே அந்த விசித்திரம். அதற்கு அணைகள் பாதுகாப்பு சட்டத்திற்கான திருத்தம் என்று பெயரிட்டு, அதன் மூலம் வழங்கப்பட்ட உச்சநீதிமன்றத் தீர்ப்பையே செயல்படுத்தப்பட முடியாத ஒன்றாக ஆக்கி னார்கள்.
மேற்படி கேரள சட் டப்பேரவை இயற்றிய சட்டம் அல்லது சட்டத் திருத்தம் செல்லுமா? என்ற கேள்வியை, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசின் வழக்கறிஞர்கள் எழுப்பி னார்கள். விவாதித் தார்கள். அத்தகைய கேள்வி தமிழகத்தின் நலனிலிருந்து மட்டுமே எழுப்பப்பட்ட கேள்வி அல்ல. மாறாக ஒரு தீர்ப்பை உச்சநீதிமன்றம் கொடுத்திருக்கும் போது, அதற்கு எதிராகவே ஒரு மாநி லத்தின் சட்டப்பேரவை சட்டத்திருத்தம் ஒன்றை கொண்டு வரமுடியுமா என்று எழுப்பப்பட்ட கேள்வி. அதாவது மேற்படி செயல் நீதிமன்ற அவமதிப்பு என்பதாக எடுத்துக்கொள்ளப் பட வேண்டாமா என்பதுதான் தமிழக அரசு தொடுத்த வழக்கின் முக்கியமான முன் வைப்பு. ஆனால் தங்களது அதாவது உச்சநீதி மன்றத்தின் மரியாதையைக் காப்பாற்றிக் கொள்ள, மதிப்பை நிலைநாட்டிக் கொள்ள தமிழக அரசு
கொடுத்த ஒரு நல் வாய்ப்பு என்பதாகத் தான் உச்சநீதிமன்றம் அந்தப்பிரச்சினையை எடுத்துக் கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதை விட்டு விட்டு, முல்லைப் பெரியாறு அணை பற்றிய ஆய்வை மீண்டும் செய்வதற்காக, மீண்டும் ஒரு நிபுணர் குழுவை, மீண்டும் உச்சநீதிமன்றம் நிறுவியுள்ளது என்பதுதான் அதிர்ச்சியைக் கொடுத்தது.
புதிய நிபுணர் குழு 5 பேரைக் கொண்டதாக இருக்கும் என்பது உச்சநீதி மன்றத்தின் முன்வைப்பு. இந்த புதிய நிபுணர் குழுவே தேவையில்லை என்பதால், அதில் தமிழக அரசு கலந்துகொள்ள வேண்டிய தேவையில்லை என்று ஆளுங்கட்சியான தி.மு.க. தனது பொதுக்குழுவில் தீர்மானம் ஒன்றையும் நிறைவேற்றியுள்ளது. அந்த தீர்மானம் உரைப்பது போலவே, தமிழக அரசும் முடிவு செய்துள்ளது. மேற்படி தீர்மானத்தை எதிர்த்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிக்கை விடுகின்றார். அதாவது உச்சநீதிமன்றத்தின் முன் வைப்பை பயன்படுத்தி, தமிழகத்தின் சார்பான நிபுணர் ஒருவரை, அதற் குள் அனுப்பி வைக்க வேண்டும் என்பதே அவரது வாதம்.
தமிழகத்தின் சார்பில் யாரும் நியமிக்கப்பட வில்லை என்றால், தமிழகத் தின் கருத்துக்களை எப்படி பிரதிபலிக்க முடியும் என்று கேட்டு வைக்கிறார். அது தமிழகத்திற்கு எதிராகவும், கேரள அரசுக்கு சாத கமாகவும் அமையக் கூடிய ஒரு தீர்ப்பை வெளியிடும் நிலைமைக்கு கொண்டு போய் தள்ளிவிடாதா என்பதே முன்னாள் முதல்வரின் வாதம். அவரது வாதத்திற்கு வலு சேர்ப் பதற்காக சில சேதிகளையும் அவர் கூறுகிறார். உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசனப்பிரிவு தான், மேற்படி ஐவர் குழுவை அறிவித்துள் ளது என்றும், அதில் மத்திய அரசின் சார்பாக இரண்டு தொழில் நுட்ப நிபுணர்கள் இருந்தால், தமிழக அரசு சார்பாக ஒருவரும், கேரள அரசு சார்பாக ஒருவரும் இருக்க வேண்டும். அதில் தமிழக அரசு சார்பான தொழில் நுட்ப வல்லுநர் நியமிக்கப்படாமல் இருந் தால், தமிழகத்திற்கு சாத கமான முடிவு எப்படி கிடைக்கும் என்பதுதான் அவருடைய வாதமாக இருக்கிறது.
அதையும் தாண்டி உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன பெஞ்சின் தீர்ப்பை உதாசீனப்படுத்துவது, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மீறும் செயலாகும் என்றும் கடுமையான ஒரு கருத்தை வைக்கிறார். இது அரசியல் எதிரிகளுக்குள் நடக்கின்ற வாதமாக இருந்து விட்டுப் போகட்டும். ஆனால் இதே போல கர்நாடக மாநிலத்திற்கும், தமிழ்நாட்டிற்கும் இடையே தொடர்ந்து இருந்து வரும் காவிரி நதிநீர் பிரச்சினையில் உச்சநீதிமன்றத்தால் நிறுவப் பட்ட காவிரி நடுவர் மன்றம் கொடுத்த தீர்ப்பைக் கூட, கர்நாடக அரசு நிறைவேற்ற வில்லை. ஆகவே அண்டை மாநிலங்களுடன் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் பிரச்சினை வரும் பொழுதெல்லாம், உச்சநீதி மன்றத்தின் வழிகாட்டல்களை அத்தகைய அண்டை மாநிலங்கள் மீறுகின்றன. இதைக் கேட்பாரே கிடையாதா என்ற நிலையில்தான், ஆளுங்கட்சியின் பொதுக் குழு மேற்படி தீர்மானத்தை நிறைவேற்றும்படி தள்ளப்பட்டுள்ளது என் பதைத்தான் நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஏற்கனவே நீலகிரி மாவட்டத்தில் உள்ள, கூடலூர் பகுதியில், அம்பலமூலா என்ற கிராமத்தில் தமிழர்களுக்கும், மலை யாளிகளுக்கும் பிரச்சினை உருவாகியுள்ளது. அதா வது கேரள எல்லையில் உள்ள அந்த கிராமத்தில் தமிழர்கள் உருவாக்கிய முருகன் கோவிலின் அருகே உள்ள அம்மன் சிலை மீது ஜீப்பை மோதி உடைத்துள்ளனர். இத்தகைய பிரச்சினைகள் அதிகமாகாமல் தடுப்பதற்கு அரசியல்வாதிகள்
ஆவ ன செய்ய வேண்டும். மாறாக நீதிமன்றம் அறி வித்த குழுவில் சேருவதா, இல்லையா என்பது, தற்போதைய சூழலில் கூட்டணியில் சேருவதா, இல்லையா என்ற அடிப்படையிலிருந்து பார்க்கப்பட்டு விடக் கூடாது.

Saturday, February 20, 2010

ஸ்டெர்லைட்டின் வேதாந்தா குழுவை வெறுக்கும் வெளிநாட்டவர்

ஸ்டெர்லைட் ஆலை தூத்துக்குடியில் ஒரு பிரபலமான நிறுவனம். இந்த ஆலை தாமிர உருக்காலை திட்டத்தை செயல்படுத்துகிறது. பல்வேறு பிரச்சனைகளுக்கு மத்தியில் இந்த ஆலை, முத்துநகரில் தொடங்கப்பட்டு பல்வேறு புதிய பிரச்சனைகளையும் ஏற்படுத்தி, அவ்வப்போது மூடப்பட்டு, பிறகு மீண்டும் திறக்கப்பட்டு, உயிர்பலிகள், மூச்சுத் திணறல்கள், காற்று மாசுப்படுத்தல், நீர் வளத்தைக் கெடுத்தல், மண் வளத்தை சேதப்படுத்தல் போன்றவற்றில், புகழ் வாய்ந்த பெயரை எடுத்துள்ளது. தொடர்ந்து ஆட்சியாளர்களால் அரவணைக்கப்பட்டும், சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்டும், அரசியல் வாதிகள், அதிகாரிகள் ஆகியோருக்கு பயன்படும் வகையிலும் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனஇலாகா ஆகியவற்றின் நற்சான்றிதழ்கள், இந்த ஆலையின் தொடர்ந்த இயங்குதலுக்கு உதவிகரமாக இருக்கிறது.
இந்த தாமர உருக்காலைத் திட்டத்தின் தாய் நிறுவனமான வேதாந்தா குழுவினர், உலக அளவில் பெரும் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ளனர். சமீபத்தில் வந்திருக்கின்ற செய்திப்படி, இங்கிலாந்தில் இருக்கின்ற ஜோசப் ரவுண்ட்ரீ தர்ம அறக்கட்டளை என்ற நிறுவனம், தான் வேதாந்தா குழுமத்தில் விலைக்கு வாங்கியிருந்த 22 லட்சம் டாலர் பெறுமான பங்குகளை, சில நாட்கள் முன்பு விற்று விடுவது என முடிவு செய்து விட்டது. அதற்கு அவர்கள் கூறும் காரணம், சுற்றுப்புறச்சூழலை வேதாந்தா குழு, கெடுத்து வருகிறது என்பதுதான். உதாரணமாக ஒரிசா மாநிலத்தில், கோந்த் ஆதிவாசிகள் வசிக்கின்ற நியாம்கிரி மலைகளை, சுரங்கம் தோண்டுவது என்ற பெயரில் வேதாந்தா குழுமம் அழித்து வருகிறது என்பதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஒரிசா மாநிலத்தில் இருக்கின்ற நியாம்கிரி மலைகளில், பாரம்பரியமாக வாழ்ந்து வருகின்ற கோந்த் பழங்குடி மக்கள், அந்த மலையை தங்களது புனிதத்தலமாக நினைக்கிறார்கள். அந்த மலையை ஒரு பன்னாட்டு மூலதன நிறுவனம், தாதுப்பொருட்களை கொள்ளை யடிப்பதற்காக, சுரங்கம் தோண்டுவதற்கான உரிமத்தை ஏதோ ஒரு வகையில் அரசிடம் பெற்றுக் கொண்டு, அதை வைத்துக் கொண்டு, பாரம்பரியமாக வாழ்ந்து வரும் ஆதிவாசிகளின் இருப்பிடங்களை விட்டு, அவர்களை நிர்பந்தமாக இடம் பெயர வைப்பதும், மலை வளங்களை அழிப்பதும் என்று சுற்றுச்சூழல் கேடுகளை ஏற்படுத்த முயலும் போது, அந்த ஆதிவாசிகளின் பெரும் கோபத்திற்கு உள்ளாகிறார்கள்.
கோந்த் பழங்குடி மக்கள், அந்த நியாம்கிரி மலைகளைச் சார்ந்துதான், தங்களது உணவுகளையும் தேடிக்கொள்கிறார்கள். அதுமட்டுமின்றி அந்த ஆதிவாசி மக்களின் வாழ்வாதாரமே, நியாம்கிரி மலைகள்தான் என்ற அளவுக்கு அவர்கள் இருக்கிறார்கள். இயற்கையைச் சார்ந்து, மலைகளையும், நதிகளையும் தங்கள் அன்றாட வாழ்க்கைக்கு பயன்படுத்திக் கொண்டு, பல நூறு ஆண்டுகளாக நியாம்கிரி மலைப்பகுதிகளில் வாழ்ந்து வரும் அந்த ஆதிவாசி மக்களின், பண்பாட்டு அடையாளங்களும், அந்த மலைகளைச் சார்ந்தே உள்ளது. இது மாநகரங்களிலும், நகரங்களிலும் வாழ்ந்து வரும் பன்னாட்டு மூலதன நிறுவனங்களின் நிர்வாகத்திற்கு புரிய நியாயமில்லை. அதுமட்டுமின்றி சொகுசு வாழ்க்கையில் வாழ்ந்து வரும், மாநகர வளர்ப்பான பெரிய அதிகாரிகள் தாங்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அலுவலகங்களில் பணியாற்றினாலும், இயற்கையான ஆதிவாசிகளின் பண்பாட்டு அடையாளங்களையோ, அவற்றை செயற்கைத் திட்டங்களால் அழிப்பதையோ, உணரப் போவதில்லை. அதனால்தான் அத்தகைய அதிகாரிகளின் மற்றும் அரசியல்வாதிகளின் அனுமதியின் பேரில், இப்படிப்பட்ட மாசுபடுத்தும் சுரங்கங்களும், நிறுவனங்களும் உள்ளே நுழைகின்றன.
இங்கிலாந்தில் உள்ள ஜோசப் ரவுண்ட்ரீ நிறுவனம், சில நாட்கள் முன்பு தனது வேதாந்தா பங்குகளை விற்றது போலவே, சென்ற வாரம் ஒரு நிகழ்வும் நடந்துள்ளது. இங்கிலாந்தின் திருச்சபை என்ற அமைப்பு, தான் வேதாந்தா குழுமத்தில் விலைக்கு வாங்கியிருந்த 21 லட்சம் டாலர் பங்குகளை, சுற்றுச்சூழலை கெடுக்கின்ற வேதாந்தா நிறுவனத்திலிருந்து, நீதிக்கொள்கையின் அடிப்படையில் விற்றுவிட முடிவு செய்தது. இதே போல 2007ம் ஆண்டில் ஒரு லட்சத்து 30,000 டாலருக்கான தங்கள் பங்குகளை, நார்வே நாட்டு அரசாங்கத்தின் ஓய்வூதிய நிதி அமைப்பு, வேதாந்தா குழுமத்திலிருந்து விற்றுவிட்டது. 2009ம் ஆண்டில் 23 லட்சம் டாலர்கள் பெருமான பங்குகளை, வேதாந்தா குழுமத்திலிருந்து மார்ட்டின் கேரி என்ற நிறுவனம் தான் போட்ட மூலதனத்தை, விற்றுவிட்டது. இப்படியாக ஒவ்வொரு பங்குதாரரும், மேற்கண்ட பன்னாட்டு மூலதன நிறுவனத்தின் மோசமான, மக்கள் செயல்பாடுகளை தெரிந்துகொண்ட நேரத்திலேயே, தங்கள் பங்குகளை விற்றுவிடுகிறார்கள் என்ற செய்தி இத்தகைய மாசுபடுத்தும் நிறுவனங்களின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்குகிறது.
மனித உரிமை மீறல்களை செய்கின்ற பன்னாட்டு மூலதன நிறுவனங்களுக்கு, புதிய முறையில் இதுபோன்ற எதிர்ப்புகள் காட்டப்படுவது, அந்த நிறுவனங்களின் அடிப்படையாக இருக்கின்ற பொருளாதார அடித்தளத்தையே நிலைகுலைய வைக்கும் செயல். ஆனால் மேற்கண்ட வேதாந்தா நிறுவனமோ, தான் மக்களுக்காக சேவை செய்வதாக பரப்புரை செய்து வருகிறது. பல்வேறு சிக்கல்களுக்கு மத்தியில் தாங்கள் மேலாண்மை செய்து வருவதாகவும், ஒரு வலுவான உள்கட்டுப்பாடு இயங்கி வருவதாகவும் தனது கார்ப்பரேட் நிர்வாக ஆண்டறிக்கையில் கூறியுள்ளது. அது தவிர தங்கள் நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு என்ற பெயரில், ஒரு தொகையை ஒதுக்கி அதன் மூலம் தொண்டு நிறுவனங்கள் என்ற தன்மையில், தாங்கள் கெடுத்துவரும் சுற்றுச்சூழலில் வாழ்ந்து வரும் மக்களிடையே, காசுகளை இறைத்து செயல்பட்டு வருவதை பெருமையாக தங்கள் ஆண்டறிக்கையில் கூறுகிறார்கள்.
இந்தியாவில் 25 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த, உலக அளவிலான பெரும் தொழிற்சாலை விபத்தாக, போபால் யூனியன் கார்பைடு நச்சு வாயு கசிவு அறியப்படுகிறது. அதற்கு பிறகு இந்தியாவின் சுற்றுச்சூழல் விதிமுறைகள், பல்வேறு சட்டங்களின் மூலமாக வலுப்படுத்தப்பட்டுள்ளதாக அல்லது ஒழுங்கு படுத்தப்பட்டுள்ளதாக, அமெரிக்க போன்ற வெளிநாட்டவர்கள் எண்ணுகிறார்கள். ஆனால் அதே சமயம் அத்தகைய ஒழுங்கு படுத்தல் எதுவுமே நடைமுறையில் இல்லை என்பதுதான் அவர்களுடைய ஆய்வின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் உண்மை. இந்தியாவின் மலைகளிலும், காடுகளிலும் வசித்து வரும் ஆதிவாசி மக்களின் மற்றும் தலித் மக்களின் பாரம்பரிய உரிமைகள், மண்ணுரிமை, வாழ்வுரிமை, பண்பாட்டு உரிமை ஆகியவற்றை தகர்த்தெறியும் நடைமுறைகளை, சட்ட அங்கீகாரத்தையும், அரசாங்க ஒப்புதலையும் பெற்றுக் கொண்டு பன்னாட்டு மூலதன நிறுவனங்கள் செயல்பட்டு வருவதாக, உலக அரங்கில் தெரியத் தொடங்கியுள்ளது. அவ்வாறு சுரங்கம் தோண்டுதல் என்ற தொழிலில், வேதாந்தாவின் செயல்பாடுகள் அம்பலப்படுத்தப்பட்டுள்ளன. சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இன்றைய காலத்தில், புதியதொரு செயல் தந்திரத்தை மேற்கொள்கிறார்கள். ரோகர் மூடி என்ற ஒரு சுரங்கத் தொழிலாளர் சங்கத்தின் தலைவரும், சுற்றுச்சூழல் ஆர்வலருமான இங்கிலாந்து நாட்டுக்காரர், வேதாந்தா குழுமத்தில் சிறியதொரு பங்குதாரராக சேர்ந்து கொண்டு, லண்டனில் நடந்த பங்குதாரர் கூட்டத்தில், இந்தியாவில் ஒவ்வொரு பகுதியிலும் அந்த நிறுவனம் நடத்தி வரும் சுற்றுச்சூழல் கேடுகளை பட்டியல் போட்டு அம்பலப்படுத்தினார்.
இதுபோன்ற அம்பலப்படுத்தல்கள், உலக அரங்கில் சுற்றுச்சூழல்வாதிகளால் செய்யப்படும் போது, வேதாந்தா போன்ற சூழலைக் கெடுக்கும் கார்ப்பரேட்டுகள், பொதுவான பங்குதாரர்கள் மத்தியில் அசிங்கப்பட்டு தனிமைப்படுகின்றன. அரசன் அன்றே கொல்வான், தெய்வம் நின்று கொல்லும் என்ற மூதாதையர் பழமொழி போல, நமது ஊரில் சூழலைக் கெடுக்கும் ஸ்டெர்லைட் ஆலை, சற்று காலம் சென்று பங்குதாரர்கள் மத்தியில் பகிரங்கமாக தோற்கடிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட உதாரணம் இனி மனித உரிமை ஆர்வலர்களால் பயன்படுத்தப் படமுடியும். ஒவ்வொரு தவறுக்கும், கார்ப்பரேட்டுகள் ஒருநாள் பதில் சொல்லியே ஆகவேண்டும்.

Friday, February 19, 2010

விடுதலைத் தாகம் அழியக்கூடியதா?

இப்போது தமிழ் மக்கள் மத்தியில் உலகமெங்கிலும் ஒரு தீவிரமான விவாதம் நடந்து வருகிறது. இனி மேல் ஈழத்திலும், இலங்கையிலும் என்ன நடக்கும் என்பதே அந்த விவாதத்தின் சாரமாகும். இலங்கையின் தமிழர் வாழும் பகுதிகள் மட்டு மின்றி, தமிழ் பேசும் முஸ்லிம்கள் வாழும் பகுதியிலும், இந்திய வம்
சாவழி தோட்டத் தொழிலாளர்கள் வாழும் மலையகப் பகுதி யிலும், நேரடியாக இத்தகைய விவாதம் தீவிரமடைந்துள்ளது. அதிபர் தேர்தல் நடந்து முடிந்தது. யார் யார் எந்தப் பக்கம் என்ற
சர்ச்சை இருந்தது. தேர்தல் முடிந்து முடிவுகளும் வந்தன. தமிழர் பகுதி களில் அதிக வாக்குகள் பொன் சேகாவிற்கே போய்ச் சேர்ந்தன. இப் போது நாடாளுமன்ற பொதுத்தேர்தல் அறிவிக் கப்பட்டுள்ளது. அதில் யார் யார் எந்தப்பக்கம் என்று மீண்டும் விவாதம் வந்தது. எந்தப்பக்கமும் இல்லாமல், தனித்து நிற்கின்ற அணிகளும் கிளம்பியுள்ளன. இது நிலவும் அரசியல் அமைப் பிற்குள், தமிழர்களுக்கான பிரதிநிதித்துவத்தை தீர்மா னிக்கின்ற முயற்சிகள். ஆனால் உலக அரங்கில், குறிப்பாக தமிழர்கள் மத்தியிலும், பொதுவாக மக்கள் மத்தியிலும் வேறொரு விவாதம் வேர் கொண்டு வருகிறது. அதுதான் நான்காவது ஈழப்போரில், விடு தலைப் புலிகள் முற்றாக அழிக்கப் பட்டு விட்டனரா என்ற விவாதம்.
இந்த விவாதத்தில் குதித்துள்ள பல்கலைக் கழகப் பேராசிரியர் அட்டேல் பார்க்கர் தனது ஆங்கில புத்த கத்தில் ஒரு புதிய விளக் கத்தை கூறுகிறார். இலங்கையில் இந்த அமெரிக்கப் பேராசிரியர் 20012002 ஆண்டுகளில் தங்கியிருந்து, அனுப வங்களைப் பெற்றுள் ளார். இலங்கை அர
சாங்கம் முற்றுமுழுதாக புலிகள் அமைப்பை அழித்து விட்டதாக கூறிக் கொண்டாலும், இன்ன மும் கூட அவர்களுக்கு அதில் கலக்கம் இருக் கிறது என்கிறார் அவர். ஈழத் தமிழர்களுக்கு அடிப் படை பிரச்சினைகளாக இருக்கும், நாட்டு வளங் களை சமமாக பங்கீடு செய்யாமை, கல்வி, வேலைவாய்ப்பில் காட்டப்படும் பாரபட்சம், போதிய நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் இல் லாமை போன்றவை மீண்டும் புலிகளை உருவாக்கியே ஆகும் என்று இந்த பேராசிரியர் வாதம் செய்கிறார்.
போராளிகள் அமைப் பின் உயர்மட்ட தலை வர்கள் கொல்லப்பட்ட தாகவும், அதுவே அவ் வியக்கத்தின் முடிவாக கருதப்படக் கூடாது என்றும் அவர் வாதம் செய்கிறார். போர் முடிந்த பிற்பாடும், அதே வட்டாரத்தில் அதிகள வில் ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர் என்று ஆதாரம் காட்டு கிறார். சந்தேகிக்கப்படு பவர்களை, இன்னமும் ராணுவம் முகாம்களில் அடைத்து வைக்கிறது என்கிறார் அவர். உலகம் விடுதலைப்புலிகள் பற்றி சரியாக அறிந்து கொள்ளவில்லை என்பது இந்தப் பேராசிரியரின் வாதம். அந்த இயக்கம் கடைபிடித்த ரகசியத் தன்மை அதற்கு காரண மாக இருக்கலாம் என்றும் எழுதுகிறார். இங்கிலாந்து ஊடகங்கள், இது பற்றிய விவரங்களை அமெரிக்க ஊடகங்களை விட அதிகமாக தெரிந்திருக் கின்றன என்றும் கூறியுள் ளார். விடுதலைப் புலிகள் அமைப்பு உறுதியான கொள்கைகளுடன் இறுக்கமாக ஒருங்கமைக்கப் பட்ட இயக்கம் என்கிறார் அட்டேல் பார்க்கர். பெரும் பான்மையான தமிழர்கள் பிரபாகரனின் லட்சியத்தையே வரிந்து கொண்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.
பௌத்த மதம் அடிப் படையில் அஹிம்சை, அன்பு, சமாதானம், தியானம் ஆகியவற்றை வலியுறுத்துகிறது என்ப தையும் குறிப்பிடுகிறார். இலங்கையில் புரிந்து கொள்ளப்பட்ட பௌத் தம் வேறுபோல இருக் கிறது என்பது அவரது கருத்து. மகாவம்சம் என்ற காப்பியத்தின்படி, இலங் கைக்கு புத்தர் வந்தார் என்று நம்பப்படுகிறது என்றார். அதனால் புத்த பிக்குகளும் அதை காப்பாற்ற, சிங்கள இனவாதிகளாக இருக்கிறார்கள் என்றும் சுட்டிக்காட்டுகிறார். இத்தகைய பார்வை அமெரிக்க பேராசிரியர் அட்டேல் பார்க்கருக்கு மட்டும் இருக்கிறதா? அண்டை நாடான இந்தியா வின் ஆட்சியாளர்களும், அறிவுசார் பிரிவினரும் இதே உண்மைகளை அறியாமல் இருக்கிறார் களா? உலக நாடுகளில் பரந்து கிடக்கும் தமிழ் மக்கள் மத்தியில், <<ஈழத் தமிழர் போர்முறை தெளி வுடன் புரியப்பட்டுள் ளதா? நாடு கடந்த தமிழீழ அரசை அமைப்பதற்கான முயற்சியை, உலகம் தழுவிய தமிழர்கள் எப்படி புரிந்து கொண்டுள் ளார்கள்?
மேற்கண்ட கேள்விக ளுக்கெல்லாம் விடை தேட வேண்டும் என்றால், நடந்து முடிந்த வன்னிப் போரின் ஒவ்வொரு கட்டத்தையும், அசை போட் டுப் பார்க்க வேண்டும். அதிலி ருந்து கிடைக்கின்ற படிப்பினைகள், பல் வேறு விடை தெரியாத கேள்விகளுக்கு விடை கொடுக்கும். உணர்ச்சி கரமான எல்லைகளுக்கு செல்வதிலிருந்து, தமிழர் களை சிந்திக்க வைக்கும். எதிர்கால நடவடிக்கைகளுக்கு திட்டமிட, இந்த தேசிய இனத்திற்கு திசைவழிகாட்டும். போர் விதிகள் பற்றிய அறிவையும் கூட கற்றுக் கொடுக்கும். வரலாற்றில் எடுத்து வைக்க வேண்டிய படிக்கட்டுகளை, வரி சைப்படுத்திக்காட்டும்.
ஒரு கட்டத்தில் புலி களின் துப்பாக்கிகள் மௌனிக்கப்பட்டுள் ளன. அதற்கு முன்னால் நடந்த நிகழ்வுகளை தொகுத்துப் பார்க்க வேண்டியிருக்கிறது. 60 ஆண்டுகளுக்கு முன்னால் உணரப்பட்ட, தேசிய இன உரிமைக்கான குரல் ஈழத்தில், அறவழிப் போராக தொடங்கியது. அது நாடாளுமன்ற பாதை யையும் பயன்படுத்த தவறவில்லை. வட்டுக் கோட்டை தீர்மானத்தின் மீது நடத்தப்பட்ட தேர்த லில் தமிழ் மக்களின் வாக்குகள், சுயநிர்ணயத்திற்கு ஆதரவாகவே அளிக் கப்பட்டன. அத்தகைய பாதைகளால் இனவாதத் தையும், இன ஒடுக் கலையும், இனத்தாக்கு தலையும் நிறுத்தமுடிய வில்லை என்பதனால், தமிழ் இளைஞர்களின் பார்வை ஆயுதப் போராட்டத்தை நோக்கித் திரும்பியது. ஆயுதப் போராட்டம், கடந்த காலத்தில் நடத்தப்பட்ட அறவழி அரசியல் போராட்டத்தை விட, உயர்ந்தது என்பதாக தமிழர்கள் உணர்ந்தார்கள். இப்போது நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்ற ஒரு திட்டத்திற் கான முயற்சி தொடங் கப் பட்டுள்ளது. அது உலகம் தழுவிய அளவிலான அரசியல் போராட்டம் என்பதாக அறிவிக்கப்படுகிறது. ஆனால் நடந்த ஆயுதப் போராட்டத்திற்கும், நடக்கயிருக்கும் அரசியல் போராட்டத்திற்கும் உள்ள உறவு என்ன என்பதுதான் சரியான முறையில், விளங்கிக் கொள்ளப்படாமல் இருக் கிறது. வன்னிப்போரில் தோற்றதனால், தமிழர்கள் அரசியல் போராட்டம் என்பதாக தங்களது இயலாமையைக் காட் டுகிறார்களா என்ற கேள்வியும், சிலரை செரிக்க விடாமல் செய் கிறது. ஆனால் உண்மை என்ன என்றால், ஆயுதப் போரான வன்னிப் போரின் தொடர்ச்சி தான் உலகம் எங்கும் நடத்தப் பட இருக்கும் அரசியல் போர். இத்தகைய அரசியல் போராட்டம், எந்த வகையிலும் ஆயுதப் போராட்டத்திற்கு குறைந் தது அல்ல.
இது எப்படி அதன் தொடர்ச்சியாக இருக்க முடியும் என்ற அப்பா வித்தனமான கேள்வி அனைவருக்கும் எழ வேண்டும். ஆயுதப் போரை நடத்திக் கொண் டிருந்த, தமிழீழ விடுத லைப் புலிகள் இயக்கமும், அதன் தலைவர் வே.பிரபா கரனும், எத்தகைய அனுபவங்களையும் மற்றும் படிப்பினை களையும் அதிலிருந்து கற்றார்கள் என்பது புரியப்படவேண்டும். உலகில் எந்த ஒரு தேசிய இனமும், முப்படைகளையும் உருவாக்கி, தங்களுடைய விடுதலைப் பகுதியில், புரட்சிகர அரசாங்கத்தையும் நிறுவி, போரில் ஈடுபட்ட வரலாற்றை, ஈழப் போராளிகள் நடத்திக் காட்டியது போல செய்து காட்டவில்லை. அப்படிப்பட்ட புலிகள் இயக்கம், 7 நாடுகளின் ஒத்துழைப்புடன், அரசப்படை நடத்திய போரை எதிர்கொண்டது. அதன் விளைவுகளை முன்கூட்டியே சரியாக உணர்ந்து கொண்டது. அதனாலேயே கிழக்கு மாகாணங்களிலிருந்து, புலிப்படையை அதன் தலைவர் திரும்பப் பெற் றார். வடக்கு மாகாணத்தில் கூட, கிளிநொச்சிக்குள் தமிழர் படைகளை உள்ளிழுத்துக் கொண் டார். அங்கும் தாக்குதல் தொடங்கிய போது, முல்லைத் தீவிற்கு பின் வாங்க வைத்தார். முல்லைத் தீவு நகருக்குள் சிங்களப் படை நுழைந் தவுடன், மக்கள் திரளுடன் புலிப்படை புதுக் குடியி ருப்புக்கு நகர்ந்தது. அங்கும் எதிரிப்படை இறங்கியவுடன், முள்ளி வாய்க்கால், ரெட்டை வாய்க்கால் பகுதிக்கு விடுதலைப் படை, தன்னை பின்னிழுத்துக் கொண்டது. இவை யெல்லாம் போர் விதிக ளின்படி, தற்காப்புப் போர் உத்திகளாகப் புரி யப்படவேண்டும்.
ஒவ்வொரு அங்கு லமும் தற்காப்புப் போரில் ஈடுபடுத்தப்பட்ட புலிப்படை, உலகத்திற்கு ஒரு செய்தியை உரக்கக் கூவியது. அதுதான் அரசியல் போராட்டமாக, புலம் பெயர் தமிழர்கள் இந்த விடுதலைப் போராட் டத்தை, முன்னெடுத்துச் செல்லவேண்டும் என்ற செய்தி. அதை உணர்ந்து தான் விடுதலைப் படை யின் தலைமையின் முழு வழிகாட்டலில் தான், பெற்ற படிப்பினைகளின் தொடர்ச்சியில் தான், இப்போது நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்ற அரசியல் போராட்டம் எழுந்துள்ளது. இது ஆயுதப் போராட்டத் திலிருந்து, அரசியல் போராட்டம் என்ற பரி ணாம வளர்ச்சிக்கு வந்தி ருக்கும் ஒரு இயங் கியல் விதி. அதனால் தமிழீழத் தாயகம் என்ற தமிழரின் தாகம், அழியக்கூடியதல்ல.