Friday, March 19, 2010

ஆதிவாசி நிலங்களை, வளைத்துப் போடும் வணிகக் குழுமங்கள்

சத்திஸ்கர் மாநிலம் என்றாலே மாவோ யிஸ்டுகளுக்கும், மத்திய அரசு துணை ராணுவப்படையினருக்கும் இடையி லான மோதல் பகுதி என்பதாக ஒரு புரிதல் இருக்கிறது. அந்த மாநிலத்தின் காவல்துறை சல்வாஜுடும் என்ற கூலிப் படையை உருவாக்கி, அதன் மூலம் மாவோயிஸ்டுகள் நடமாடும் பகுதிகளில், அவர்களுக்கு ஆதரவாக சென்று விட்ட அல்லது செல்லக் கூடிய ஆதிவாசிகளை மிரட்டுவதற்கும், அடிப்பதற்கும், கொல்லு வதற்கும் பயன்படுத்தப்படுகிறது என்ற செய்திகள் பல நமக்கு வந்துள்ளன. காடுகளிலும், மலைகளிலும் வாழ்ந்து வருகின்ற ஆதிவாசி மக்களுடைய வாழ் வாதாரங்களாக இருக்கக் கூடிய நிலத்தையும், நிலத்தடி கனிமப் பொருட்களையும் களவாடுவதற்காக, பன்னாட்டு மூலதன நிறுவனங்கள் உள்ளே நுழைவதால் ஏற்படுகின்ற மோதல்களில் தான், அரசுப் படைகள் ஈடுபடவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது என்பதாகவும் பல செய்திகளைக் கேள்விப்பட்டோம். அந்தப் பகுதிகளில் ஆதிவாசி மக்களுடன் இரண்டறக் கலந்து விட்ட மாவோ யிஸ்ட்டுகளை எதிர்த்துப் போராட வேண்டிய அவசியம் இருக்கிறது என்பதாகவும் அரசுத் தரப்பிலிருந்து தொடர்ந்து கூறப்பட்டு வந்தது. அதுபோல அனைத்து மலைவாழ் மக்களின் பகுதிகளிலும், மாவோயிஸ்ட்டுகள் இருக்கிறார்களா? மாவோயிஸ்ட் வன்முறை நடக்கின்றதா? இப்படிப்பட்ட கேள்விகளும் இப்போது எழுந்துள்ளன.
மாவோயிஸ்ட்டுகள் நடமாட்டமோ அல்லது மாவோயிஸ்ட் வன்முறைகளோ சிறிதும் இல்லாத பகுதிகளிலும், ஆதிவாசி களுக்கு பாரம்பரியமாக சொந்தமான நிலங்களை கார்ப்பரேட் என்று அழைக்கப் படும் வணிகக் குழுமங்கள், வளைத்துப் போட்டு வருகின்றன என்பதாக செய்தி கள் இப்போது வரத்தொடங்கி யுள்ளன. அவ்வாறு ஆதிவாசி பகுதிகளில் அவர் களது பாரம்பரிய நிலங்களை, வணிகக் குழுமங்கள் ஆக்கிரமிக்கின்றன என்று தெரிகிறது. பணம் அதிகமுள்ள வணிகக்குழுமங்கள், ஏழ்மையிலிருக்கும் ஆதிவாசிகளது நிலங்களை அதிகப்பணம் கொடுத்து வாங்குவது எப்படித் தவறு என்றும் கேட்கிறார்கள். ஆனால் இந்த இடத்தில் வேறு ஒரு சட்டவிரோத நடைமுறை அமுலாகி வருகிறது என்பதுதான் முக்கியப் பிரச்சினை. அதாவது இந்தியாவின் உச்சநீதிமன்றத்தில் 1997ம் ஆண்டு ஒரு தீர்ப்புக் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் ஆதிவாசிகளுக்கு சொந்தமான நிலங்களை, எந்த ஒரு ஆதிவாசி அல்லாதவர்களுக்கும் சுரங்க ஒப்பந்தம் என்ற பெயரில் கூட, மாற்றிக் கொடுப்பது என்பது தடைசெய் யப்படுகிறது என்பதாக தெளிவாக உத்தர விடப்பட்டது. இந்த வழக்கை சமதா என்ற ஒரு அரசு சாரா நிறுவனம், ஆந்திரப் பிரதேச மாநில அரசின் மீதும், மற்றவர்கள் மீதும் தொடுத்திருந்தது. இது 1997ம் ஆண்டு ஜூலை 11ம் தேதி வழங்கப்பட்ட தீர்ப்பு. ஆல் இந்தியா ரிப்போர்ட்டர் என்ற உச்சநீதிமன்ற வழக்குகளைப் பற்றி வெளியிடும் 1997ம் ஆண்டின் அறிக்கையில், 3297ம் பக்கத்தில் இந்த தீர்ப்பு வெளியாகியுள்ளது. அதில் சுரங்கத் தொழிலுக்கு ஒப்பந்தத்திற்கு விடப்படும் ஆதிவாசிகளுடைய பகுதி நிலத்தில் வருகின்ற லாபத்தில் 20 விழுக்காடு ஆதிவாசிகள் சமூகத்தின் உறுப்பினர்களுக்காக என்று ஒதுக்கப்பட வேண்டும் என்றும் கூறப் பட்டுள்ளது. மாநிலங்களுக்கு இடையே ஒரே மாதிரியான நிலையை உறுதிப்படுத்துவ தற்காக, மத்திய அரசு ஆதிவாசிகள் பகுதிகளில்
சுரங்கத் தொழில் செய்வதற்கான, கொள்கைகளை தெளிவுபடுத்த வேண்டும் என்றும் அந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. மேற்கண்ட தீர்ப்பு ஆந்திரப்பிரதேசத்திற்கு மட்டுமின்றி, இந்தியா முழுவதற்கும் ஏற்புடையது. ஏனென்றால் அது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பாக அமைந்துள் ளது. அரசியல் சட்டத்தின் 5வது அட்டவணையில் குறிப்பிட்டுள்ள படி , பாரம்பரியமிக்க ஆதிவாசிகளுக்கு, அவர் களது உடைமைகளுக்கும், அவர்களை சுரண்டவும், மிரட்டல் வருவதை எதிர்த்து சிறப்பு பாதுகாப்பு கொடுப்பதற்காக, ஆதிவாசிகளது நிலங்களின் பாரம்பரிய உரிமைகளை பட்டியல் போட்டு உத்தரவாதம் செய்கிறது. வளர்ச்சித் திட்டங்களுக்கோ, தொழிற்
சாலைகளுக்கோ ஆதிவாசி பகுதி நிலங்களை அரசாங்கம் எடுக்க வேண்டும் என்றால், அங்குள்ள கிராமக் கவுன்சில்களை அரசு நிர்வாகத்தில் உள்ளவர்கள் கலந்தாலோசித்து செய்ய வேண்டும் என்ற சட்டமும் 1996ல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதையொட்டியே 1997ல் உச்சநீதிமன்றம் மேற்கண்ட தீர்ப்பை வழங்கியது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் சல்வாஜூடும் என்ற கூலிப்படை மூலம் பலாத்காரமாக காலி செய்யப்பட்ட 644 ஆதிவாசிகள் வாழும் கிராமங்களுக்கு சம்பந்தமில்லாத ஒரு பிரச்சினை இப்போது வந்துள்ளது. அது டாடா ஸ்டீல் கம்பெனி ஒரு ஆலை உருவாக்குவதற்காக அறிவித்த திட்டம் சம்பந்தப்பட்டது. டாடாக்கள் அவ்வாறு அறிவித்த பிற்பாடும், 5 ஆண்டுகளாக அந்த வட்டார ஆதிவாசி ஆண்களும், பெண்களும் தங்களது பாரம்பரிய நிலத்தில் உழுது வருகிறார்கள். 5,000 ஏக்கர் நிலம் டாடாவிற்கு தேவைப்படுகிறது என அறிவிக்கப் பட்டுள்ளது. வடக்கு பஸ் ஸ்டார் என அழைக்கப்படும் அந்த வட்டாரத்தில் உள்ள ஜக்தால்பூரில் மாவோயிஸ்ட்டுகளோ, சல்வாஜûடுமோ இல்லை. அதே போல தெற்கு பஸ் ஸ்டார் பகுதியிலும் கூட, எஸ்ஸார் நிறுவனம் நில ஆக்கிரமிப்பு செய்ய முயலும் இடத்திலும் மாவோயிஸ்டுகளோ, சல்வாஜூடுமோ இல்லை. இந்த பகுதிகள் சட்டவிரோதமாக ஆதிவாசி நிலங்களைக் கைப்பற்ற முயலும் வணிகக் குழுமங்களுக்கு, கையூட்டு பெறும் அதிகாரிகள் செய்து கொடுக்கின்ற அக்கிரமங்கள்தான். இவை எல்லாமே பலாத்காரமாக விலைக்கு வாங்கப்பட்ட நிலங்கள் என்பதாகச் சொல்லப்படுகிறது.
முதலில் நில அளவையர் வந்தார்கள். பிறகு டாடா நிறுவனம் பெரியதொரு ஸ்டீல் ஆலையை நிறுவப் போகிறது என்ற வதந்தியை கிராமங்களில் பரப்பினார்கள். கடைசியாக அரசாங்க அதிகாரிகள் லோகண்டிகுடா பகுதியிலுள்ள கிராமவாசி களிடம், குறிப்பாக கோண்ட் ஆதிவாசிகள் மத்தியிலுள்ள கல்வி கற்காத விவசாயி களிடம் பணம், வேலை மற்றும் நல்ல எதிர்காலம் கிடைக்கும் என வாக்குறுதி கொடுத்து, அவர்களது நிலங்களை விட்டு வெளியேறச் சொல்லிக் கேட்டுக் கொண்டார்கள். பணத்தை வைத்துக் கொண்டு தாங்கள் என்ன செய்யப் போகிறோம் என்றும், தங்கள் குழந்தை களுக்கு உணவூட்ட விவசாயம் செய்ய வேண்டும் எனவும் பதில் கூறிய விவசாயி பங்காராம் கைது செய்யப்பட்டார். 13 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார். அந்த நேரத்தில் அவரது மகன்கள் நிர்ப்பந்தத்தில் கையெழுத்திட்டு, இழப்பீட்டைப் பெற்றுக் கொண்டனர். அருகே சிந்தகாவோம் கிராமத்தில் உள்ள சுந்தர்காஷியாப், அரசாங்க மாட்டாஸ் பத்திரியில் ரூ.10,000 சம்பளம் வாங்கி வந்தார். அவரது பெரிய அதிகாரிகள் மிரட்டியதால், தனது தம்பிகளின் நிலத்தை நிர்ப்பந்தமாக விற்கவேண்டி வந்தது. கிராமத்து விவசாயிகள் தங்கள் நிலங்களை டாடாவிற்கு விற்பதற்கு சிறிதளவு கூட தயாராக இல்லை. இந்தியா முழுவதும் நடக்கின்ற நிர்ப்பந்தமான நிலப்பறிப்பு, இங்கும் கூட நடந்து வருகிறது. இந்தியாவின் ஆதிவாசிகள் பகுதிகளில் மட்டும்தான், அவை சட்ட ரீதியாக போராடப்படுகின்றன. இந்த இடத்தில் டாடா ஸ்டீல், எஸ்ஸார் ஸ்டீல், வேதாந்தா, தேசிய கனிமவள வளர்ச்சி வாரியம் ஆகியவை கனிம வளங்களை களவாடுவதற்காக செய்து வரும், சட்ட விரோத நிலப்பறிப்பு ஆதிவாசி மக்களால் சட்டப்படி எதிர்க்கப்படுகிறது. இதில் வேதாந்தா என்ற நிறுவனம், தூத்துக்குடி நகரை மாசுபடுத்தும் ஸ்டெர் லைட் ஆலையின் தாய் அமைப்பு. இந்தியாவில் உள்ள மக்கள் தொகையில், 8.4 விழுக்காடு ஆதிவாசிகள் என அறிவிக்கப் பட்டுள்ளனர். அரசாங்க உதவிகள் எட்டாத, கல்வி அறிவும் கிட்டாத உள்கிடைக் கிராமங்களில் ஏழ்மையில் அவர்கள் வாழ்கிறார்கள். அவர்களுக்கு வழங்கப் பட்டுள்ள சட்ட ரீதியான பாதுகாப்பையும், பறிக்கின்ற வேலையை பணக்கார வணிகக் குழுமங்களுக்கு சட்டவிரோதமாக செய்து கொடுக்கும் ஊழல் அதிகாரிகளை என்ன செய்யப்போகிறோம்?

Thursday, March 18, 2010

ஆஸ்திரேலியா தமிழர்களுக்கு பாதுகாப்பான நாடு: இந்தியர்களுக்கு இல்லையா?

ஆஸ்திரேலிய நாட்டில் படிக்கச்சென்ற இந்திய மாணவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல்கள் நடப்பதாகச் செய்திகள் கூறப்படுகின்றன. இது இனவெறித் தாக்குதல் என்பதாகவும் வருணிக்கப்படுகிறது. ஆஸ்திரேலியா அரசு தொடர்ந்து இதை மறுத்து வருகிறது. இந்திய மாணவர்கள் மீது நடந்த வன்முறை தாக்குதல்களில் சில இனவெறித் தாக்குதல்களும் நடந்துள்ளன என்றும், ஆனால் எல்லாத் தாக்குதல்களும் இனவெறித் தாக்குதல் அல்ல என்றும், ஆஸ்திரேலிய அரசு நிர்வாகம் கூறி வருகிறது. இந்த நேரத்தில் ஆஸ்திரேலிய நாட்டின் தூதர் பீட்டர் வர்கீஸ், தமிழக முதல்வரை சந்தித்திருக்கிறார். ஆஸ்திரேலியாவில் நடக்கின்ற வன்முறைகள் பற்றி வருத்தம் தெரிவித்திருக்கிறார். அதிலும் முக்கியமாக இலங்கைத் தமிழர்களுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து, ஆஸ்திரேலிய தூதர் நமது முதல்வரிடம் பேசியிருக்கிறார் என்பது தான். தமிழ் நாட்டில் இருக்கும் ஈழத் தமிழ் அகதிகளுக்கு, அனைத்து நாட்டு விதிகள் படி ஆஸ்திரேலியாவில் அடைக்கலம் தருவதற்கான வாய்ப்புக்களைப் பற்றியும், அவர் அப்போது எடுத்துச் சொன்னார் என்பது ஊடகங்களில் வெளியாகியிருக்கிறது. சட்டவிரோத நுழைவுகளைத் தான் தாங்கள் உற்சாகப்படுத்த முடியாதே தவிர, நியாயமான அகதிகளை சட்டப்பூர்வமாக அதிகமாக எடுத்துக்கொள்ள ஆஸ்திரேலியா தயார் என்பதையும் அப்போது கூறியுள்ளார். இது முக்கியமாக கவனிக்கத்தக்க ஒரு செய்தி. ஏற்கனவே தமிழ்நாட்டில் அதிகமான பாதிப்புக்கு மத்தியில் உழன்றுக் கொண்டிருக்கும், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஈழத் தமிழ் அகதிகள் அனைவருக்கும் இந்திய குடியுரிமை கொடுக்கலாமா என்பது பற்றி ஒரு விவாதம் இங்கே அரசியல் அரங்கில் எழுந்தது. அவர்கள் வேண்டுவது பத்தாண்டுகளுக்கான நிரந்தர பாஸ்போர்ட் தான் என்பதையும் கூட, எடுத்துச்சொல்லியிருந்தார்கள். இத்தகையச் சூழலில் ஆஸ்திரேலிய அரசே நேரில் வந்து இதுபோன்ற அடைக் கலம் கொடுப்பதற்கு சிவப்பு கம்பளம் விரிப்பது என்பது, உலகத்தமிழர்கள் மத்தியில் ஆறுதலான ஒரு சொல்தான். அதனால் தமிழர்கள் அனைவரும் இந்த நேரத்தில், ஆஸ்திரேலியாவில் நடப்பதாகக் கூறப்படும் இனவெறி தாக்குதல் பற்றி அதாவது இந்திய எதிர்ப்பு தாக்குதல் பற்றி உண்மையான நிலவரங்களைத் தெரிந்துக் கொள்ளவேண்டியிருக்கிறது.
ஆஸ்திரேலியாவில் படிக்கச் சென்ற இந்திய மாணவர்களில், தென்னிந்திய மாணவர்கள் மீது குறிப்பாக தமிழ்நாட்டு மாணவர்கள் மீது எந்தத் தாக்குதலும் இதுவரை நடந்ததில்லை. அப்படியானால் அங்கே என்னதான் நடக்கிறது. கிட்டத்தட்ட 1991ம் ஆண்டிலிருந்து இந்திய மாணவர்களுக்கு, கல்விக் கற்க ஆஸ்திரேலிய விசா கொடுக்கப்படுகிறது. வணிகம் பற்றிய உயர்க் கல்வி படிப்பிற்காக இங்கிருந்து
செல்லும் மாணவர்கள் அனுமதிக்கப்பட்டார்கள். அவர்கள் இந்தியாவில் பட்டப்படிப்பு முடித்தவர்களாகவோ, உயர்கல்வி முடித்தவர்களாகவோ இருக்க வேண்டும் என்பது நிபந்தனையாக இருந்தது. அதன்பிறகு 2001ம் ஆண்டிற்குப் பின் கல்விக்கான விசா நிபந்தனைகள் தளர்த்தப்பட்டன. பட்டப்படிப்பு படிப்பதற்கே இங்கிருந்து மாணவர்கள் அனுமதிக்கப்பட்டார்கள். கிட்டத்தட்ட 2004ம் ஆண்டையொட்டி அதுவும் கூட தளர்த்தப்பட்டது. சாதாரணமான படிப்புகளாக இருக்கும் சமையல்கலை, பீங்கான் சாமான் செய்தல், வெல்டிங், கணினி வேர்டு டாக்குமென்ட், தாள் கலைகள் போன்ற குடிசைத் தொழில் மட்டத்திலான கல்விகள் கற்க செல்லும் மாணவர்களும் அனுமதிக்கப்பட்டனர். 12ம் வகுப்பு படித்திருந்தால் மட்டும் போதும் என்ற நிபந்தனையுடன் பல மாணவர்களும் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு அப்படிப்பட்ட கல்வி கற்றுக் கொடுக்க, வீட்டிலேயே அலுவலகம் மற்றும் கல்விக் கூடத்தை உருவாக்கியுள்ள போலி கல்வி தாளாளர்கள் அதிகமாகத் தொடங்கினர். அவர்கள் பெரும்பாலும் இந்தியர்களாகவும், குறிப்பாக குஜராத்தைச் சேர்ந்த பட்டேல்களாகவும் இருக்கிறார்கள். இத்தகைய கல்விக்கான விசா கொடுப்பத்தில் அரசு அறிவித்த தளர்வு தான், ஆஸ்திரேலிய அரசு செய்தத் தவறு. அதிகமாக பணம் வரும் என்பதனால் இத்தகைய தளர்வுகளை அனுமதித்திருந்தார்கள். அதன் விளைவு பல்லாயிரக்கணக்கில் அங்கே சென்ற வடஇந்திய மாணவர்கள், அரசு அனுமதித்த வாரத்திற்கு 20 மணி நேரம் வேலை என்பதையும் செய்துவிட்டு, சட்டவிரோதமாக மேலும் 20 மணி நேர வேலையை ஒவ்வொரு வாரமும் செய்து, பொருள் ஈட்டினார்கள். ஒரு மணி நேரத்திற்கு வேலைச் செய்தால், 15 ஆஸ்திரேலிய டாலர் சம்பளம் கிடைக்கும். அது இந்திய பணம் ரூ.41க்கு சமம். பல்கலைக்கழகங்களில் படிக்கச் சென்றால் ரூ.15 லட்சம் செலவாகும். போலி நிறுவனங்களான சிறிய வேலைகளுக்கு படிக்கச் சென்றால் ரூ.5 லட்சம் மட்டுமே செலவாகும். ஆங்கிலம் தெரியாத, இந்தி மட்டுமே பேசத் தெரிந்த வடஇந்திய மாணவர்கள், இரண்டே வருடங்களில் சம்பாதித்து, சேமிக்கத் தொடங்கினார்கள். ஒரு அறையில் சட்டப்படி ஒருவர் மட்டுமே தங்க வேண்டும் என்ற அந்த நாட்டு விதியை மீறி நாலு பேர் வரை தங்கினார்கள். இரண்டு பேர் தங்கும் அறைகளில் 10 பேர் தங்கினார்கள். வடஇந்திய கிராமப்புறத்து இளைஞர்கள் தாங்கள் வளர்ந்து வந்த இந்திய பண்பாட்டுப் படி, அந்த நாட்டு பண்பாட்டைப் புரியாமல் குழு, குழுவாக அலைந்தார்கள். 10,000 பேருக்குப் பதில், 1,00,000 பேர் வந்ததால், ஆஸ்திரேலியாவிற்கு அதிக பணம் கிடைத்தது. ஆனால் சமீபத்திய நடவடிக்கைகள் புதிய குழப்பத்தையும், முத்திரையையும் கொடுத்து விட்டது.
இந்தியர்கள் தங்களை பிறர் மதிக்க வேண்டும் என்ற மனோபாவத்துடன் அங்கே விலைக்கூடிய கைப்பேசி, ஷûக்கள், வாட்ச்கள், கார்கள், லேப்டேப்புகள் ஆகியவற்றுடன் பவனி வந்தார்கள். வெள்ளைக்கார பெண்களையும், ஆண்களையும் பார்த்து முறைத்துப் பார்த்தார்கள். இதுவே தனிநபர் உரிமைகள் சமூகத்தைப் பாதிக்கக் கூடாது என கருதும் ஆஸ்திரேலியர்களுக்கு எரிச்சலை உருவாக்கும். வெயில் காலத்தில் அக்டோபர், நவம்பர், டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் அங்கே கொளுத்தும் வெயிலைப் பார்க்கலாம். அப்போது வெள்ளைக்காரர்கள் கடற்கரைக்கு அரைக்கால்
சட்டையுடனோ, ஜட்டியுடனோ, பாதி உடையிலோ வருவது வழக்கம். இதற்கு நேர்மாறாக வடஇந்திய இளைஞர்கள் ஜீன்ஸ், முழுக்கைச் சட்டை, ஷûக்கள்
சகிதம் 10 பேராக நடமாடுவார்கள். இந்தி மொழி மட்டுமே சத்தமாகப் பேசுவார்கள். இதுவே அங்குள்ள பொதுச் சூழலை அதிரவைக்கும்.
நடந்த வன்முறைகளின் பட்டியலை ஆய்வுச் செய்தால், நள்ளிரவில் வேலை முடித்து தனியாக வந்த இந்திய இளைஞனை காசுக்காக அடித்த பொறுக்கிகளின் செயல் என்ற ஒரு வகை குற்றம் புரியப்படும். பச்சிளம் குழந்தையை கொலை செய்ததாக வந்த சமீபத்திய குற்றச்சாட்டு, இந்திய வாடகைக் கார் ஓட்டுனரே செய்தார் என்றும் அம்பலமாகியுள்ளது. தனது காருக்கு காப்பீடாக 10,000 டாலர் கிடைக்கும் என்பதற்காக, வடஇந்திய மாணவர் தீ வைத்த சம்பவமும் அம்பலமானது. லெபனான் நாட்டு இளைஞர்களுக்கும், வடஇந்திய இளைஞர்களுக்கும் பலமுறை போதையில் சண்டை நடந்துள்ளது.
தமிழ்மொழி அனைத்து ஆஸ்திரேலிய பள்ளிகளிலும், 2வது மொழியாக கற்றுக் கொடுக்கப்படுகிறது. அது ஈழத் தமிழர்கள் எழுப்பிய உரிமைக் குரலால் கிடைத்த பரிசு. முருகன் கோவில், வெங்கடேச பெருமாள் கோவில், துர்காதேவி கோவில் ஆகியவை அரசு நிதியிலேயே கட்டப்பட்டுள்ளன. பாலஸ்தீனர்களுக்காக மசூதிகளையும் அரசு கட்டிக் கொடுத்துள்ளது. அங்கு காவல்துறை ஒரு பைசாக் கூட லஞ்சம் வாங்குவது இல்லை.
இத்தனை வன்முறைகள் நடந்ததாக வருணிக்கப்பட்டாலும், எந்த இந்திய மாணவனும் இந்தியாவிற்கு திரும்பி வரவில்லை. இப்போது ஆஸ்திரேலியா அரசு கல்வி விசாவில் உள்ள தளர்வுகளை நிறுத்தி விட்டது. பட்டதாரிகளை மட்டும் உயர் கல்விக்காக எடுப்பது என முடிவு செய்துள்ளது. போலி இந்திய கல்வி வியாபாரிகளது கூடங்களை மூடிவிட்டது. அதனால் வடஇந்திய போலி வியாபாரிகள் பாதிக்கப்படுவதால், அவர்கள் இந்திய ஊடகங்களில் பொய்களை கட்டவிழ்த்து விட்டிருக்கலாம். அதற்கு இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சகமும் பலியாகயிருக்கலாம்.
இதே நேரத்தில் ஈழத் தமிழர்கள் அங்கே ஜனநாயக உரிமைகளுடன் செயல்பட முடிகிறது. சிட்னியிலும், மெல்போர்னிலும், கேன்பராவிலும் 10,000 பேர் கலந்துக் கொள்ளும் பேரணிகளை, ஈழத்திற்காக நடத்தியிருக்கிறார்கள். அவற்றில் 2,000 பேர் வரை வெள்ளைக்காரர்களே, தோழமைக் காட்டி கலந்துக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே ஆஸ்திரேலியா தமிழர்களுக்கு பாதுகாப்பான நாடு என்பதில் இரண்டாவது கருத்து உருவாக வழியில்லை. வடஇந்திய இளைஞர்களின் பண்பாட்டு செழிப்பையும், மொழி கற்றலையும் மாற்றியமைக்க வேண்டிய பொறுப்பு இந்திய அரசிடம் இருக்கிறது.

Wednesday, March 17, 2010

நாடாளுமன்றத்தில் இழுபறியாகும் சட்டமுன்வடிவுகள்

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்றோடு நிறைவுற்றது. மீண்டும் ஏப்ரல் 12ம் நாள் கூடும் என அறிவிக்கப்பட்டது. இந்த முறை நாடாளுமன்றத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு முக்கியமான சட்டமுன் வடிவுகள் தாக்கல் செய்யப்படும் புதிய சூழல் உருவானது. 14 ஆண்டுகளாக இழுபறி நிலையில் இருந்த, பெண்கள் இடஒதுக்கீடு சட்டமுன்வடிவு, தனது மாநிலங்களவை தாக்கலிலேயே பெரும் புயலைக் கிளப்பி விட்டது. அதற்கு முன்பு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் போது, என்றும் இல்லாத அளவுக்கு எதிர்கட்சிகள் எதிர்த்து முழக்கமிட வும், வெளிநடப்பு செய்யவும் என்பதாக புதிய கலகலப்பு, அந்த கட்டிடத்தில் எதிரொலித்தது. அதை விட அதிகமான தாக்கத்தை, பெண்கள் இடஒதுக்கீட்டின் சட்டமுன்வடிவு ஏற்படுத்தியது. மாநிலங்க ளவையில் அந்த முன்வடிவை தாக்கல் செய்வதையே எதிர்த்து சில எதிர்கட்சிகள் கிளர்ச்சி செய்தன. குடியரசு துணைத் தலைவர் அன்சாரியின் மைக் பறிக்கப் பட்டது. பெண்கள் இடஒதுக்கீட்டு சட்டமுன்வடிவு பறிக்கப்பட்டு, கிழிக்கப் பட்டது. இந்த முறையில் போராடினால் பெண்களுக்கான இடஒதுக்கீடு சட்டமாவதை தடுத்துவிடலாம் என சில நாடாளுமன்ற கட்சிகள் நினைத்தார்கள் என்றால் அது ஒரு ஆச்சரியமான செய்திதான். அதற்காக சில உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப் பட்டார்கள். மன்னிப்புக் கேட்டால் மீண்டும் அவைக்கு வரலாம் என்ற குடியரசு துணைத் தலைவரின் அறிவிப்பைக் கூட ஏற்பதற்கு சிலர் தயாராக இல்லை. இந்த அளவுக்கு ஆண் உறுப்பினர்களிடமிருந்து, பெண் இடஒதுக் கீட்டிற்கு எதிர்ப்பு என்பது எந்த ஒரு தாக்கத்தையும், இந்திய சமூகத்தில் ஏற்படுத்தியதாகத் தெரியவில்லை. அந்த அளவுக்கு நாடாளுமன்ற அவை விவகாரங் கள், நாட்டு மக்களுடன் சம்பந்தப்பட்டதாக இருக்கிறது.
மாநிலங்களவையில் வாக்குக்கு விடப் பட்ட சட் டமுன்வடிவு, ஒரே ஒரு எதிர்ப்பு வாக்கை மட்டும்தான் பதிவு செய்தது என்பது இன்னொரு செய்தி. இத்தகைய செய்தி எந்தவொரு புதிய மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. தொடர்ந்து பெண்கள் இடஒதுக்கீட்டிற்கு, மக்களவையில் எதிர்ப்புக் கொடுப்போம் என்ற செய்தியை எதிர்ப்பவர் கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். சில எதிர்கட்சிகள் விவாதம் இல்லாமல் எப்படி நிறைவேற்ற முடியும் என்ற கேள்வியை எழுப்பினார்கள். அதையொட்டி அனைத்துக் கட்சிகளையும் கூட்டி விவாதம் நடத்திவிட்டு, மக்களவைக்கு கொண்டு வருவோம் என அமைச்சர் உறுதி கூறியுள்ளார். அதன் பிறகு பல எதிர்ப்பாளர்கள் உடன்பட்டிருக்கிறார் கள். இப்போது தள்ளிவைக்கப்படும் நாடாளு மன்ற அவை, ஏப்ரல் 12ம் நாள் கூடும் என்கிறார்கள். அப்போதுதான் இந்த பெண்கள் இடஒதுக்கீடுப் பற்றிய அடுத்தகட்ட முயற்சிகள் மேற்கொள்ளப் படும். அதற்குள் ஆளும் கூட்டணி, அனைத்து கட்சிகளையும் இணங்க வைத்து அமைதியான முறையில் அதை நிறைவேற வைத்தால், அதுவே பெரும்பாடு.
இந்த சூழ்நிலையில் நவம்பர் 20ம் நாள் மத்திய அமைச்சரவையின் எதிர்ப்பற்ற ஒப்புதலைப் பெற்றுக் கொண்ட, அணு உலை விபத்துகளுக்கான இழப்பீட்டை, பொதுமக்கள் மேல் சுமத்தக்கூடிய இன்னொரு சட்டமுன்வடிவு எதிர்பார்க்கப்படு கிறது. ஊடகங்களில் மற்றும் எதிர்க்கட்சி களில் எதிர்ப்பு முழக்கம் வந்தால், திங்கட்கிழமை அதைக் கொண்டு வராமல், ஆளுங்கட்சி சுதாரித்துக் கொண்டிருக்கலாம். ஆனால் அடுத்த மாதம் அமெரிக்க செல்ல இருக்கும் தலைமை அமைச்சர் மன்மோகன் சிங், அந்த சட்டமுன்வடிவை நிறைவேற்றிய கையோடு சென்றால் மட்டும்தான் மரியாதை என்று எழுதுகிறார்கள். யாருக்கு யாரிட மிருந்து மரியாதை என்ற கேள்வி எழுகிறது. அமெரிக்க பன்னாட்டு மூலதன நிறுவனங் களிடமிருந்து, மன்மோகன் சிங்கிற்கு கிடைக் கும் மரியாதைதான் இந்த நாட்டிற்கான பெருமையா? அமெரிக்காவிடமிருந்து 10,000 மெகாவாட் உற்பத்தி செய்யும் அணு உலைகளை வாங்கிக் கொள்வதாக, வாஷிங்டன்னுக்கு இந்திய அரசு வாக்குறுதி கொடுத்ததால், இத்தனை அவசரம் காட்டப்படுகிறது என்று சி.பி.எம். பொதுச் செயலாளர் பிரகாஷ்காரத் கூறுகிறார். ரஷ்யாவுடனும், பிரான்சுடனும் அணு உலைகளை வாங்குவதற்கு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன என்றும், அந்த நாடுகள் அமெரிக்கா கேட்பது போல, அணு உலைகளை விலைக்கு வாங்குவதற்கு முன்பே, இழப்பீட்டுத் தொகையை பொது மக்கள் பொறுப்பேற்கும் சட்டத்தைக் கொண்டு வரவேண்டும் என்று கேட்க வில்லை என்பது காரத்தின் வாதம். கடந்த ஆண்டே அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகார உதவிச் செயலாளர் ராபர்ட் பிளேக், இதுபோன்ற ஒரு சட்டத்தை இந்திய அரசு கொண்டு வரவேண்டும் என மத்திய வெளிவிவகாரக் குழுவிடம் கூறிவிட்டார் என்ற செய்தி, மேலும் மத்திய அரசு மீதான கேள்விகளை எழுப்பியுள்ளது.
இப்போது இடதுசாரி கட்சிகள் மற்ற எதிர்க்கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர் களின் ஆதரவை, இந்த சட்டமுன்வடிவுக்கு எதிராகத் திரட்டி வருகின்றனர். இந்த சட்டமுன்வடிவு நாட்டினுடைய இறையாண் மையையே கேள்விக்குறியாக ஆக்கக் கூடியது. அடுத்து ஒரு சட்ட திருத்தம் அறிமுகப்படுத்தப் படுவதற்காகத் தயாராக இருக்கிறது. அதுவும் பெண்கள் சம்பந்தப் பட்ட ஒரு சட்டத்திருத்தம்தான். கற்பழிப்பு என்ற சொல்லை, பாலியல் தாக்குதல் என்பதாக மாற்ற வேண்டும் என்று கூறக்கூடிய சட்டம் முன்வடிவு. இதையும் பெண்களுக்கு ஆதரவான ஒன்று என்ற எண்ணத்தில், லாலுவும், முலாயமும் எதிர்ப்பார்களா என்பது நமக்குத் தெரியாது. ஆனால் கற்பழிப்பு என்ற சொல், பல ஆண்டுகளாக இருந்து வரக்கூடியது என்றும், அதை மாற்றக் கூடாது என்றும் அவர்கள் வாதிடலாம். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, எப்படி பெண்கள் இடஒதுக்கீடு சட்டமுன் வடிவு பொதுவான ஆதரவைப் பெற்றதோ, அதே போல இந்த சொல் மாற்றும் திருத்தமும் ஆதரவைப் பெற வாய்ப்புள்ளது. தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோரின் இடஒதுக்கீடு நடைமுறையில் தேர்தல்க ளிலும், நிறுத்தும் வேட்பாளர்களிலும் செயல்பட்டு வருவதால், உள்ஒதுக்கீட்டிற் கான மாபெரும் கிளர்ச்சி எழவில்லை. அதுபோல கற்பு என்ற சொல்லை, இருபாலருக்கும் பொதுவென வைப்போம் என்று கூறிய பாரதியும், கற்பு என்ற சொல் பெண்களை அடிமைப்படுத்துவதற்கான சொல் என்று கூறிய பெரியாரும் தொடர்ந்து உச்சரிக்கப்படுவதால், இங்கே பெரும் எதிர்ப்பு எழ வாய்ப்பில்லை. ஏற்கனவே தமிழ்நாட்டின் பிரபல ஊடகங்கள் பாலியல் வன்முறை, பாலியல் தாக்குதல், பாலியல் வன்புணர்ச்சி ஆகிய சொற்களைப் பயன் படுத்தி வருவதாலும், இங்கே எதிர்ப்பு க்கு அதிக வாய்ப்புகள் இல்லை. ஆனால் கிரிமினல் புரொசீஜர் கோடு என அழைக்கப் படும் குற்றயியல் நடைமுறைச்சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவது என்பதற்கான சட்டமுன்வடிவு வர இருக்கிறது. அதில் 7 ஆண்டு தண்டனைப் பெறக்கூடிய குற்றங்களுக்கான புகார்களின் மீது, ஒருவர் கைது செய்யப்படவேண்டும் என்ற அவசியம் இல்லை என்ற திருத்தமும், கைது செய்யப்பட்டாலும், கைது செய்யப்படா விட்டாலும் அதற்கான காரணத்தை குறிப்பிட்ட அதிகாரி விளக்க வேண்டும் என்ற திருத்தமும் முக்கியமானவை. மாலிமத் குழுவின் இந்தப்பரிந்துரை வழக்கறிஞர்கள் மத்தியில் கூட, எதிர்ப்பை உருவாக்கியது. ஆனால் இது நடைமுறைப்படுத்தப்பட்டால், இதுவரை கடுமையான குற்றப்புகார்களில் கூட, தப்பித்துவிடும் பணக்காரர்கள் மற்றும் அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு சிக்கலாகி விடும். 150 ஆண்டு வரலாறு கொண்ட இந்தியத் தண்டனைச் சட்டத்தில், இப்படி சில மாற்றங்கள் கொண்டு வருவதே கூட, பாலினப் பார்வையில் வந்துள்ள சிறிய மாற்றம்தான்.
இன்னொரு சட்டமுன்வடிவு மத்தியமைச் சரவையின் ஒப்புதலைப் பெற்றுள்ளது. இந்தியக் கல்வி வளாகங்களில், அந்நிய நாட்டுப் பல்கலைக்கழகங்கள் வருவதற்கு அனுமதி கொடுப்பது என்ற ஒரு முடிவு, இப்போது அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்றுள்ளது. 50 கோடி ரூபாயை முன்பண மாகக் கட்டக்கூடிய, அந்த வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் உள்ளே நுழைவது, இந்த நாட்டின் கல்வியை எங்கே கொண்டு செல்லும் என்ற கேள்வி எழும்பியுள்ளது. கல்வியை வியாபாரமாக்கி தனியாருக்கு விற்றதனால், ஏற்கனவே கிளம்பியுள்ள நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், கல்விச் சூழலைக் கெடுத்து வருகின்றன. சுயநிதி கல்விச் சாலைகளைச் சார்ந்து இருக்கும் இந்த நாடு, நாட்டு முன்னேற்றத்திற்குக் கல்வியை பயன்படுத்தவிடாமல் தடுக்கின்ற நிலையில் உள்ளது. இந்நேரத்தில் அன்னியப் பல்கலைக் கழகங்கள் நாட்டிற்குள் நுழைந்தால், கல்வி நிலை என்னாகும்? இப்படி எல்லாமே இந்திய நாட்டின் இறையாண்மையை உடைக்கின்ற செயல் திட்டங்களாக வருவதை, பொது மக்கள் என்ன செய்யப்போகிறார்கள்?
சமூக முன்னேற்றத்திற்கான பாலின உரிமைகளுக்கான சட்டமுன்வடிவுகளும், அன்னிய நாட்டு நிறுவனங்களுக்குச் சொந்த நாட்டை அடகு வைக்கும் சட்டமுன் வடிவுகளும் ஒரே நேரத்தில் கொண்டு வரும் கூட்டணி ஆட்சி, இந்திய மக்கள் மீது தந்திரமாக ஒரு தாக்குதலை நடத்துகிறதா என்று கேள்விக் கேட்கத் தோன்றுகிறது.

Tuesday, March 16, 2010

இந்திய வெளிவிவகாரக் கொள்கை ஒரு மாபெரும் தோல்வியா?

இந்திய அரசின் வெளிவிவகாரக் கொள்கைகள் தொடர்ந்து தோல்வி யடைந்து வருவதாக ஒரு கருத்து டெல்லியில் பரவி வருகிறது. குறிப் பாக பாகிஸ்தான் விஷயத்திலும், ஆப்கானிஸ்தான் விஷயத்திலும் இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சகம் மற்றும் இந்திய தலைமையமைச்சர் அலுவலகம் எடுக்கின்ற நிலைப்பாடுகள், வெற்றி பெறுவது இல்லை என்பதே அந்தக் குற்றச்சாட்டின் அடிப்படையாக இருக்கிறது.
சமீப காலங்களில் தலைமையமைச்சர் மன்மோகன் சிங்கின் சில கருத்துக்களும், வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் சில அறிக்கைகளும், உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் சில அறிவிப்புகளும் செய்து வந்தாலும், அவை சம்மந்தப்பட்ட வெளிநாடுகளில் எடுபட வில்லை. குறிப்பாக பாகிஸ்தானிலும், ஆப்கானிஸ்தானிலும் இந்த இந்திய தலைவர்களின் முயற்சிகள் எல்லாமே தோற்கடிக்கப்பட்டு வருகின்றன என்பதாக பட்டியல் போடப்படுகிறது. டெல்லியிலுள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திலும், டெல்லி பல் கலைக்கழகத்திலும், இந்திய வெளி விவகாரக் கொள்கைகளை ஆராய்ச்சி செய்கின்ற ஆய்வுக் குழுக்களிலும் இதுபோன்ற ஒரு விவாதம் நடந்து வருகிறது.
ஆப்கானிஸ்தானில் இந்தியா கையாண்டு வரும் அணுகுமுறைகள் அல்லது விருப்பங்கள், தொலைநோக்கு பார்வையில் பலன்களை தராது என்ற நிலை தெரிகிறது. பாகிஸ்தான் விஷ யத்திலும், இந்திய அரசின் அணுகு முறைகள் சிறிதளவு கூட வெற்றிப் பெற்றதாக தெரியவில்லை. குறிப்பாக ஆப்கானிஸ் தானில் நடந்து வருகின்ற அரசியல் நிகழ்வுகளில், இந்திய அரசின் பாத்திரம் என்பது பார்வையாளர் நிலைக்கு ஓரம் கட்டப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு புனரமைப்பு பணிகளை, அதிக ஈடுபாட்டுடன் செய்த இந்தியாவை, ஆப்கான் நாட்டின் எதிர்காலத்தை திட்டமிடுவதில் அமெரிக்கா ஓரங்கட்டிவிட்டது என்பதுதான் அந்த குற்றச்சாட்டின் முக்கியமான அம்சம். அதே சமயம் பாகிஸ்தான் அரசின் உள்நுழைவை, ஆப்கானிஸ்தான் நாட்டிற்குள் தவிர்க்கவிரும்பிய இந்திய அரசின் முயற்சிகள் அனைத்தும் அமெரிக்க ஏற்பாட்டில் தோல்வியைத் தழுவியுள்ளன. அமெரிக்காவினுடைய தலைமையில் அல்கொய்தாவை எதிர்த்தும், தாலிபன்களை எதிர்த்தும், ஆப்கானிஸ்தான் மண்ணில் நடத்தப்படும் போரில், உளப்பூர்வமாக ஆதரவு கொடுத்த இந்திய அரசு, பாகிஸ்தான் அரசின் கரங்கள் ஆப்கானிற்குள் நுழைய விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தது. ஆனால் அமெரிக்காவின் அணுகுமுறை வித்தியாசமாக இருக்கிறது. பாகிஸ்தான் அரசின் துணையோடு, ஆப்கான் நாட்டில் அல்கொய்தாவையும், தாலிபன்களையும் அடக்குவதற்கு, அமெரிக்கா திட்டமிட்டு செயல்படுவதால், அதில் இந்திய அரசின் தொலைநோக்குப் பார்வை தொலைந்து போனது. ஆப்கான் நாட்டில் இருக்கின்ற பெருவாரியான ஆப்கான் மக்கள், அல்கொய்தாவையும், தாலிபன்களையும், வெறுக்கிறார்கள் என்பது இந்திய அரசின் மதிப்பீடு. ஆனால் அமெரிக்க ராணு வமும், நேட்டோ கூட்டமைப்பின் ராணுவமும் கடந்த 8 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் தங்கியிருந்து, போரைத் தொடர்ந்து நடத்தியும் அதன் மூலம் ராணுவ ரீதியான வெற்றியை அடைந்தார்களா என்பது கேள்விக் குறியாகவே இருக்கிறது. கண்டகரில் நடந்த தற்கொலைப் படைத்தாக்குதல்கள் சமீபத்தில் கூட, அல்கொய்தாவினுடைய மற்றும் தாலிபன்களுடைய தீவிர செயல்பாடுகளை நிரூபித்த வண்ணமாய் இருக்கிறது.
இந்திய அரசைப் பொருத்தவரை ஆப்கானிஸ்தானில் இருக்கின்ற அத்தகைய போராளிக்குழுக்களுடன், பாகிஸ்தான் அரசு இணைந்து கொண்டால் அதுவே காஷ்மீர் மாநிலத்திற்குள் போராளிகளின் தாக்குதல் களுக்குப் பின்னணியாக அமைந்து விடும் என்பதுதான் முதல் கவலை. அதனால்தான் அமெரிக்க ராணுவமும், நேட்டோ கூட்டுப்படை ராணுவமும் ஆப்கான் நாட்டை விட்டு வெளியேறுவதை இந்திய அரசு ரசிக்கவில்லை. அது இந்திய தலைமை அமைச்சரின் ஆலோசனையில் வெளிப்பட்டது. அப்போதும் ஆப்கான் பிரச்சினையில் பாகிஸ்தானை அதிகமாக சார்ந்து இருக்கும் போக்கைத்தான் அமெரிக்காவின் புதிய ஆட்சியாளர்களும் எடுத்துள்ளார்கள். இதுவே இந்திய அரசு ராணுவ ரீதியாக எந்த வீர சாகசத்தையும், ஆப்கானுக்குள் செய்வதைத் தடுக்கிறது. அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் ஆப்கானிலிருந்து திரும்பச் சென்ற பிறகு, இந்திய அரசு பாகிஸ்தான் அரசை காரணம் கூறி, ஆப்கானிற்குள் தலையீடு செய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய அரசின் கொள்கை வகுப்பாளர்கள் எண்ணலாம் என்றும் அறிவுஜீவிகள் கருதுகிறார்கள்.
இந்திய அரசின் கொள்கை வகுப் பாளர்கள் கடந்த 60 ஆண்டுகளாக முயற்சித்தும் கூட, பாகிஸ்தான் அமெரிக்கா உறவு நெருக்கத்தை குறைப்பதற்கு அரசியல் அரங்கிலும், ராணுவ அரங்கிலும், பொருளாதார மட்டத்திலும் கூட தோற்றுவிட்டார்கள். காஷ்மீர் பிரச்சினையில் இந்திய அரசின் அணுகுமுறையை எப்போதுமே ஏற்காத பாகிஸ்தான் அரசின் நிலைப்பாட்டை, அமெரிக்க அதிபராக யார் வந்தாலும் எதிர்ப்பதில்லை என்பது கூட, இந்திய அரசின் வெளிவிவகாரக் கொள்கைக்கு கிடைத்திருக்கின்ற தோல்விதான்.
இந்திய அரசு இன்றைய நிலையில் தனது தேவைக்கு அதிகமாக, அமெரிக்க
சார்பாக நிர்ப்பதனால் மட்டுமே இத்தகைய தோல்விகளைத் தாங்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. அதனால் தான் சீன அரசின் சந்தேகப்பார்வையும், தெற்காசிய களத்தில் இந்தியாவிற்கு போட்டியாகவோ, அல்லது எதிர்ப்பா கவோ சீனாவை நிறுத்துகின்ற செயல் பாடுகளும் நடைபெறுகின்றன. 1962ம் ஆண்டின் இந்திய சீன எல்லை மோதலை ஏற்படுத்தியதற்கு காரணமாக இருந்தது அன்றைய அமெரிக்காதான் என சீன அரசு உறுதியாக நம்புகிறது. மீண்டும் உலக அரங்கில் இன்று பொருளாதார ரீதியாக பலவீனப்பட்ட நிலையில் இருக்கும் அமெரிக்கா, சீனா மற்றும் இந்தியாவின் பொருளாதார அறுதியிடல் பற்றி அச்சமடைந்துள்ள அமெரிக்கா, சீன இந்திய நட்பை உடைக்கவும், அதே சமயம் சீனாவுக்கு எதிராக இந்திய அரசைப் பயன்படுத்தவும் தயங்காது என்பது சீன அரசின் அனுபவரீதியான மதிப்பீடு. ஆகவே அமெரிக்காவைச் சார்ந்து இந்திய அரசு எடுக்கின்ற முடிவுகளை எல்லாம், தங்களுக்கு எதிராகச் செல்வதற்கே என்று சீன அரசு கருத வாய்ப்பு இருக்கிறது. அதுவே சீன அரசை, பாகிஸ்தான் அரசுக்கு ஆதரவாக செயல்படும்படி உந்தித் தள்ளுகிறது. அதனால் தான் நேற்று வரை சீனா தலையிடாமல் இருந்த, காஷ்மீர் விவகாரத்திலும் நேரடியாகத் தலையிடத் துவங்கியுள்ளது. அதற்கு ஒரு சான்றாக காஷ்மீர் பயணிகளுக்கு தனி விசாத் தாள் கொடுப்பதற்கு சீன அரசு முன் வந்ததைப் புரிந்து கொள்ள வேண்டும். இந்தியாவின் அமெரிக்கச் சார்பு இன்றைய காலத்தின் கட்டாயம் கிடையாது. அப்படி இருந்தும் கூட, அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தம், இந்தியப் பெருங்கடலைக் கண்காணிக்க அமெரிக்காவுடன் ஒப்பந்தம், அமெரிக்க கடற்படையுடன் இந்திய கடற்படையின் கூட்டுப் பயிற்சி என்பதாக தெற்காசிய வட்டாரத்தில் தொடர்ந்து, தற்போதைய இந்திய அரசு எடுத்துவரும் முயற்சிகள் அண்டை நாடுகளில் வலுவாக இருக்கும் சீனாவை எதிராக நிறுத்தி விடுகிறது. அத்தகைய அமெரிக்க ஆதரவு முயற் சிகளினால், இந்தியாவிற்கு எந்த வகை யிலும் அமெரிக்க அரசிடமிருந்து பலன்கள் கிடைத்திடவில்லை என்பது தெளிவாக விளங்குகிறது.
இந்திய நாட்டிற்கும், இந்திய மக்களுக்கும் சேவை செய்தற்காக இந்திய வெளிவிவகாரக் கொள்கை இருக்க வேண்டுமே தவிர, அரசு அதிகாரத்தில் அமர்ந்திருக்கின்ற சிலரு டைய விருப்பங் களுக்காகவோ, நலன்களுக்காகவோ இருக்கக்கூடாது என்று சுபாஷ் கபிலா போன்ற ஆய்வாளர்கள் கூறு கிறார்கள். ஆப்கானில் அமெரிக்காவின் நலன்களுக்கு ஆதரவு கொடுக்கப்போய், தேவையற்று அல்கொய்தாவின் எதிர்ப்பு இலக்காகவும் இந்தியாவை ஆக்கிக்கொள்வது
சாதுர்யமான நிலைப்பாடு அல்ல. மேற்கண்ட இந்திய அரசின் தவறான கொள்கைகள், பொதுமக்கள் மத்தியி லும் பகிரங்கமான விவாதத்திற்கு உள்ளாக்கப் படவேண்டும்.

Monday, March 15, 2010

பழங்குடி அதிகார முறிவுக்கு, புதுக்குடி அடக்குமுறையா?

நடந்து வரும் மாவோயிஸ்ட் வன் முறைக்கு எதிராக, ராணுவகாவல் துறை கூட்டு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம் என்பதுதான் அரசாங்க அறிவிப்பு. மாநிலங்களுக்குள்ளான ஒருங்கிணைப்புடன் கூடிய தாக்குதலை, மாவோயிஸ்ட் கோட்டையில் நடத்தத் தொடங்கியிருக்கிறோம் என்று அரசு கூறுகிறது. பெருமளவில் ஆயுதங்களையும், தோட்டாக்களையும் கைப்பற்றி இருப்பதாக அரசு அறிவித்துள்ளது. ஒரு பகுதியின் மாவோயிஸ்ட் ராணுவத்தளபதி கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் வெற்றிச் செய்தியை ஊடகங்களுக்குக் கொடுக்கிறது. இவையெல்லாம் அர சாங்கம் தோற்றுவிடவில்லை என்று அறிவிப்பதற்காக இருக்கலாம். ஊடகங் களில் வருகின்ற செய்திகளின் மூலமாக, மாவோயிஸ்ட்டுகள் ராணுவ ரீதியில் வலுவாக இருக்கிறார்கள் என மக்கள் நம்புகிறார்கள். அத்தகைய நம்பிக்கையை உடைத்து, அரசும், அரசப்படைகளும் வலுவாக உள்ளன என்ற கருத்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கான பொறுப்பு அரசாங்கத்திடம் உள்ளது. அதைச் செய்வதற்காக மத்திய உள்துறை அமைச்சகம், மேற்கண்ட செய்திகளை ஊடகங்களில் வெளியிட்டிருக்கலாம். ஆனாலும் எல்லாமே ராணுவப்பலம் சம்பந்தப்பட்ட செய்திகளாக இருக்கின்றன. அப்படியானால் மாவோயிஸ்ட்டுகளின் சவால் என்பது, மத்திய அரசுக்கு ராணுவ ரீதியான பிரச்சினை மட்டும் தானா?
இந்த கேள்விக்கு பதில் கொடுக்க முனையும் அறிவுஜீவிகளும், சமூக ஆர்வலர்களும் கூறுகின்ற விளக்கம் வேறுமாதிரி இருக்கிறது. அதாவது சமூக, பொருளாதார கட்டமைப்பின் காரண மாக, நாட்டில் நிலவும் ஏற்றத்தாழ் வான நிலைமையும், வறுமையின் எல்லைக் கோட்டுக்கு கீழே தள்ளப்பட்ட மக்கள் போராடப் புறப்படும் சூழலும், குறிப் பாக மலைகளிலும், காடுகளிலும் வாழு கின்ற பழங்குடி மக்களின் கடினமான வாழ்க்கை முறையும் மட்டுமே மாவோ யிஸ்ட் வளர்ச்சிக்கும், அதனால் ஏற்படும் வன்முறைக்கு காரணம் என்பது அவர்களது வாதம். இந்த வாதத்தை அடிப்படையாகக் கொண்டு, மாவோ யிஸ்ட்களுக்கு அறிவுஜீவிகளின் ஆதரவு இருக்கிறது என்பது உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் கருத்து.
ஆனால் இந்த இரண்டு விசயங்க ளையும் தாண்டி, வேறொரு செய்தி அந்த காட்டுப்பகுதிகளிலிருந்து வந்து கொண்டிருக்கிறது. அதை ஊடகங்களோ, நியாயம் பேசும் அறிவுஜீவிகளோ உணர்ந்தார்களா என்பது தெரியவில்லை. மாவோயிஸ்ட்டுகள் வழிகாட்டலில், பழங் குடி மக்கள் மற்றும் காடும், காடு சார்ந்த இடமும் எனவும், மலையும் மலை சார்ந்த இடமும் எனவும் வாழ்ந்து வரும் மக்கள், தங்களது அதிகாரத்தை அங்கேயே நிறுவி வருகிறார்கள் என்ற செய்தி புதியதாக வந்தி ருக்கிறது. அப்படியானால் அத்தகைய மக்கள் அதிகாரத்தை சகிக்க முடியாமல், மாற்று அதிகாரமாக அந்தப் பகுதியில் செல்வாக்கு செலுத்த விரும்பும் அரசு அதிகாரம், தன்னுடைய நலனுக்கு ஏற்ற வகையில் செய்திகளைத் தருகிறதா என் றும் நாம் கேட்க வேண்டியுள்ளது.
ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல, சத்திஸ்கர் மாநிலத் தின் தண்டகாரண்யா பகுதியை நாம் எடுத்துக் கொண்டு ஆராயலாம். இந்த தண்டகாரண்யா காட்டுப்பகுதி, பிரபல இந்திய இதிகாசமான ராமாயணத்தில் தண்டகாகாடு என்று வருகிறது. இந்தக் காடு 35,600 சதுர மைல்களைக் கொண்டது. இந்தியாவின் கிழக்கு மத்தியப் பகுதியில் இது இருக்கிறது. மேற்கு திசையில் அபுஜ்மர் மலைகளையும், கிழக்கு திசையில் கிழக்கு தொடர்ச்சி மலைகளையும் கொண்டதாக இருக்கிறது. இந்தக் காடுகள் வடக்கே இருந்து தெற்கே வரை 200 மைல்களும், கிழக்கே இருந்து மேற்கே வரை 300 மைல்களும் கொண்ட பரந்த பகுதியில் இருக்கிறது. இது மத்திய பிரதேசம், சத்திஸ்கர், ஒரிசா, ஆந்திரா ஆகிய மாநிலங்களுக்குள் பரந்து விரிந்து இருக்கும் காடு. இதன் தெற்குப் பகுதி ஒரிசாவிலும், சத்திஸ்கரிலும் இருக்கிறது. இந்த வனப்பகுதி கடல்மட்டத்திலிருந்து 300 அடி உயரத்திலிருக்கிறது. சில ஆண்டுகளாக பழங்குடி மக்கள் வாழும் இந்த காடுகளின் வட்டாரத்தில் அனைத்து மக்களின் அதிகார அமைப்புகள் நிறு வப்பட்டு வருகின்றது. அத்தகைய மக்கள் அரசாங்கத்திற்கு, ஜனாதனா
சர்க்கார் என்று பெயர். இது தொடக்க நிலையில் இருக்கிறது. இந்த ஜனாதனா சர்க்கார் உற்பத்தி, பண்பாடு, கல்வி மற்றும் ராணுவப்பிரிவு ஆகியவற்றைத் தன்னகத்தே கொண்டுள்ளது.
உதாரணத்திற்கு மாட் என்ற பகுதியில் நடக்கும் நிகழ்வுகளை நேரில் கண்ட, பஞ்சாப் மாநிலத்தின் அறிவுஜீவிகள் குழாம் கொடுத்துள்ள அறிக்கையில் சில செய்திகளைக் காணலாம். இன்று நிலவி வரும் அரசாங்க அமைப்பில், கூட்டுற வுத்துறை அதிகமாக ஊழலால் பாதிக்கப் பட்டிருக்கும் நிலை பொதுமக்களை பெரிதும் திணறடிக்கிறது. அதே நேரம் இந்த புரட்சிகரமான மக்கள் அதிகாரத்தின் வழிகாட்டலில், கூட்டுறவுத்துறை அங்கே உருவாக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் கலப்பையையும், எருதையும் மட்டுமே வைத்திருக்கும் ஏழை விவசாயிகளுக்கு உழவுக் கருவிகள் குறிப்பாக ஏர் மற்றும் கலப்பை ஆகியவை கூட்டு விவசாயப் பணிகள் மூலம் வழங்கப்படுகிறது.
விவசாயிகள் மத்தியில் புரட்சிகரத் தலைமையின் வழிகாட்டலில் பணிக் குழுக்கள் அமைக்கப்பட்டு, அவற்றின் மூலம் குளங்களைத் தோண்டுவதும், மீன்பிடித் தொழிலை வளர்ப்பதும், விதைகளை விதைத்தல், நிலங்களை உழுதல், கிணறுகளைத் தோண்டுதல் ஆகிய செயல்பாடுகளும் முன் சென் றுள்ளன. அவற்றில் பொதுமக்களே பயிற்றுவிக்கிறார்கள். பொதுமக்களே தங்கள் வட்டாரத்திற்குத் தேவையான கிணறுகளையும், குளங்களையும் அமைத்தனர். தானியங்களையும், மீன்களையும் விற்க ஏற்பாடு செய்தனர். அதில் வருமானமும் பெற்றனர். கூட்டு செயல்பாடுகளினால் உற்பத்தி அதிகரித்தது. உற்பத்தி முறையில் மாற்றம் ஏற்பட்டது. கால்நடைகளையும், விவசாயக் கருவிகளையும் கூட்டான முயற்சிகளால் அதிகளவில் பயன்படுத்த முடிகிறது. மக்கள் அரசாங்கம் இந்தப் பகுதியில் மட்டும் 250 கால்நடைகளை வாங்கி, ஏழை விவசாயிகளுக்கு விநி யோகித்தது. நெல், எள், பருப்பு,
சோளம், சாமை போன்ற விதைகளை 540 குவிண்டால் அளவுக்கு, மக்கள் அரசாங்கம் மூலம் விநியோகித்தனர். வீடற்ற ஏழைகளுக்கு 70 வீடுகளைக் கட்டிக் கொடுத்துள்ளனர். வீடுகள் பழுதான விவ சாயிகளுக்கு 350 வீடுகளில் பழுதுபார்த்துக் கொடுத்துள்ளனர்.
மழை இல்லாததால் நம் நாட்டின் விவசாயிகள், உற்பத்தியில் ஈடுபட முடியவில்லை என்றும், அவர்களுக்கு தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் மூலம் ஊதியம் கொடுத்து வறுமையைப் போக்கலாம் என்றும் டெல்லியில் அமர்ந்து கொண்டு, ஆட்சிக்கு வந்த நாளிலிருந்து பல மாநாடுகளை நடத்தி, இந்திய நாட்டின் பிரதமரும், திட்ட கமிஷன் துணைத் தலைவரும் பேசி வருவது இந்த வட்டார மக்களை எட்டவில்லை. ஆனால் இந்த மாட் வட்டாரத்தில் ரூ.25,000 வறட்சி நிவாரணமாக, பழங்குடி மக்களை முதன்மையாகக் கொண்ட மக்கள் அர
சாங்கம் விநியோகித்துள்ளது. அதே போல சோம்பேறிப் பண்ணையார்களிடமிருந்து 1436 ஏக்கர் நிலத்தை பறிமுதல் செய்து, அதில் 1057 ஏக்கர் நிலத்தை 482 குடும்பங்களுக்கு விநியோகித்துள்ளது. மீதி 310 ஏக்கர் நிலம் மக்கள் அரசாங் கத்தின் கட்டுப்பாட்டிலும், 65 ஏக்கர் நிலம் கிராமப்புற முன்னோடிகளைக் கொண்ட குடிப்படை வசமும் ஒப்படைக் கப்பட்டுள்ளது. கூட்டுறவு முயற்சியில் பெண்களும் அதிகமாக உற்பத்தியில் பங்கேற்கின்றனர். விவசாய பணிகளில் பழைய காலத்தில் இந்த வட்டார பழங்குடி பெண்கள் அனுமதிக்கப்படாத பணிகளையும், இப்போது கூட்டுறவு முறையில் பெண்கள் ஈடுபட்டு செய்து வருகின்றனர். இதனால் மரபுவழி மூடநம்பிக்கைகள் உடைபடுகின்றன. அரசாங்க கூலிப்படையான சல் வாஜூடுமால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு, இந்த கூட்டுறவு அர
சாங்கம் உதவி செய்கிறது. மக்கள்படை சுய தேவைகளை பூர்த்தி செய்ததோடு நில்லாமல், தானியங்களை விளைவிப்பது, வருமானத்தைப் பெருக்குவது ஆகியவற்றின் மூலம், மக்கள் அரசாங்கத் திற்கும் உதவி வருகிறது. கால்நடைகளைப் பேணுவது என்பதிலும் கவனம் செலுத்தி வருகிறது. சல்வாஜூடும் கூலிப்படையால் இழந்த மாடுகள், ஆடுகள், கோழிக்குஞ்சுகளையும், மீன்வளர்ப்புக்கான மீன்களையும் இந்த மக்கள் அரசாங்கம் வழங்கி வருகிறது. காடுகள் பாதுகாப்புக் குழு என்பதாக தனியாக திட்டமிட்டும் செயல்பட்டு வருகிறார்கள். வீடுகள், விவசாயக்கருவிகள், கட்டிடங்கள் ஆகியவற்றை உருவாக்க தேவையான மரங்களை வெட்டுவதில் கூட, காடுகளைப் பாதுகாக்கும் அடிப்படையில், ஆய்வு செய்து, தேர்ந்தெடுத்து மரங் களை வெட்ட அனுமதிக்கிறார்கள். குடும்பங் களுக்குள்ளும், வெளியேயும் எழுகின்ற முரண்பாடுகளை, கிராமத்தலைவர்கள் முன்னால் பேசித் தீர்வு காணும் பழைய முறையை மாற்றி, மக்கள் அமைப்புகள் மூலம் அவற்றைத் தீர்வு காண்கிறார்கள். பண்பாட்டுக் குழு, கல்விக்குழு, நீதித்துறைக்குழு ஆகியவற்றையும் உருவாக்கியிருக்கிறார்கள்.
பழங்குடி மக்கள் மத்தியில் இருந்து வந்த மாந்திரீகம், பலதாரமணம் ஆகியவற்றை எதிர்த்து பெண்கள் அமைப்பின் போராட்டங்களின் மூலம், புதிய பண்பாட்டை ஏற்படுத்தி வருகிறார்கள். சல்வாஜூடும் என்ற கூலிப்படைக்கு எதிராக போராட மக்களைத் திரட்டி, பண்பாட்டு நடவடிக்கைகளையும், பாடல் களையும் உருவாக்கி உள்ளனர். இது போன்ற பழங்குடி மக்களின் அதிகாரம் அமைப்பாவதால்தான், அரசப்படைகளின் தாக்குதல் அங்கே குவிகிறதா என்ற கேள்வி எழுகிறது.

Sunday, March 14, 2010

அணுஉலை ஆபத்துகளையும், நஷ்ட ஈட்டையும் பொதுமக்கள் சுமப்பதா?

சென்ற ஆண்டு 2009ல் நவம்பர் 20ம் நாள் கூடிய மத்திய அமைச்சரவை, விபரீதமான விளைவுகளைப் புரிந்தோ, புரியாமலோ ஒரு சட்ட முன்வரைவுக்கு ஒப்புதல் கொடுத்துள்ளது. அந்த முன்வரைவு இதுவரை இந்திய வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு, இந்திய மக்கள் மீது அவர்களுக்கு சம்பந்த மில்லாத, அவர்களது சம்மதமும் இல்லாத, அணுஉலைகளை இந்த நாட்டில் இறக்கிவிடும் போது ஏற்படுகின்ற விபத்துக்கு இழப்பீடு மட்டும் அவர்களால் சுமக்கப்பட வேண்டும் என்று கூறுகிறது. அதற்குப் பெயர் 2009ம் ஆண்டின் அணுஉலை விபத்துக்களுக்கான பொறுப்பை பொதுமக்கள் ஏற்கும் சட்ட முன்வரைவு.
மேற்கண்ட சட்ட முன்வரைவு உருவாவதற்கான வரலாறே சிக்கலான ஒன்று. அமெரிக்கஇந்திய அணு
சக்தி ஒப்பந்தம் ஏற்பட்டதையொட்டி, ஆக்க சக்திக்கான அணுஉலைகளை உருவாக்கும் பணியை இந்திய அரசு சிரமேற்றது. அமெரிக்காவுடன் இந்திய அரசு போட்டுக்கொண்ட அணுசக்தி ஒப்பந்தம் நாட்டு மக்கள் மத்தியில் விவாதத்திற்கு விடப்பட்டு, பிறகு எடுத்த முடிவல்ல. இந்திய நாடாளுமன்றத்தின் முன்னால் பகிரங்கமான விவாதத்திற்கு வைக்கப்பட்டு, பெருவாரியான உறுப்பினர்களின் ஒப்புதலுடன் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தம் அல்ல. நாடாளுமன்றத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய அமைச்சரவை முன்னால் விவா திக்கப்பட்டு எடுக்கப்பட்ட முடிவல்ல. சென்ற ஆட்சியில் அரசாங்கத்திற்கு உள்ளேயும், வெளியேயும் இருந்த ஆதரவுக் கட்சிகளின் ஒட்டுமொத்த வழிகாட்டும் குழுவைக் கூட்டி எடுக்கப் பட்ட கருத்தல்ல. மாறாக இந்தியாவின் தலைமையமைச்சர் மன்மோகன் சிங், தானாக அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷûடன் போட்டுக் கொண்ட ஒப்பந்தக் கையெழுத்து. இது எப்படி ஜனநாயக நடைமுறையாகும் என்று வினவலாம். ஆனாலும் அதுதான் இந்தியாவில் நடைமுறையாக இருக்கின்ற ஜனநாயகம். பொதுமக்களுடைய பங்கு இல்லாமல், ஒரு ஒப்பந்தம் போடப்படலாமா? ஒரு
சட்ட முன்வடிவு முன்வைக்கப்படலாமா? இதுபோன்ற கேள்விகளும் எழுந்துள் ளன. அதற்குத் தான் இந்த சட்ட முன் வடிவுக்கே, அப்படியொரு பெயரை வைத்திருக் கிறார்கள் போலும். அணுஉலைகளில் விபத்துக்கள் ஏற்பட்டால், அதன் பொறுப்பை பொதுமக்கள் ஏற்கும் சட்ட முன்வடிவு என்பதாக அதற்கு பெயர் வைத்திருக்கிறார்கள். அதாவது பொறுப்பை பொதுமக்கள் ஏற்பார்கள் என்று கூறிவிட்டோமே என்று கூட ஆட்சியாளர்கள் விளக்கம் சொல்லலாம்.
உள்ளபடியே இந்த சட்ட முன்வடி வின் அவசியம் எங்கிருந்து வந்தது? அமெரிக்க இந்திய அணுசக்தி ஒப்பந்தம், இந்தியாவில் மின் உற்பத்தி செய்வதற்காக அதாவது ஆக்கப்பூர்வமான பணி களுக்கான அணுஉலைகளை உரு வாக்குவதற்காக, யுரேனியம் எரி பொருளை உலகச்சந்தையில் பெற்றுக் கொள்ள வழிவகை செய்கிறது. அதை யொட்டி அணுசக்தி ஆதரவு குழுக்கள் என்று அழைக்கப்படும் நாடுகளின் உதவி தேவைப்பட்டது. அதை அவகர்களிடம் அண்டிப் பெறுகின்ற வேலையை மத்திய அரசு செய்தது. அடுத்தகட்டமாக அணுஉலைகள் இந்தியாவில் நிறுவப் பட வேண்டும். ரஷ்யா மற்றும் பிரான்ஸ் நாட்டு நிறுவனங்கள் அதற்கான முன்முயற்சிகளில் முன் சென்றிருக் கிறார்கள். அவர்களுடன் போடப் பட்ட ஒப்பந்தங்களில், இந்திய அரசு விபத்துக்கள் ஏற்பட்டால் அதன் பொறுப்பை ஏற்கின்ற அம்சங்களையும் சேர்த்திருக்கிறது. ஆனால் அமெரிக்க நாட்டின் பெரும் நிறுவனங்களான ஜிஈ ஹிட்டாச்சி, வெஸ்டிங் ஹவுஸ் ஆகிய வற்றிற்கு, குஜராத்திலும், ஆந்திராவிலும் 10,000 மெகாவாட் அணுஉலைகளை ஏற்படுத்த 2 இடங்களை, இந்திய அரசு ஏற்கனவே அறிவித்து விட்டது. ஆனாலும் நிறுவப்படும் அணுஉலைகளில் விபத்துக்கள் ஏற்படுமானால், அவற்றிற்கு வழங்கப்பட வேண்டிய நஷ்ட ஈடை ஏற்கின்ற பொறுப்பு பற்றி எந்தவொரு
சட்ட ரீதியான உத்தரவாதத்தையும் இந்திய அரசு கொடுக்கவில்லை என்பது அந்த பன்னாட்டு மூலதன நிறுவனங்களுடைய குற்றச்சாட்டு. ஒரு அணுஉலை விபத்து நடக்குமானால், அதனால் ஏற்படுகின்ற இழப்புகள், காயங்கள், சொத்து
சேதங்கள், பொருளாதார நஷ்டம் மற்றும் சுற்றுச்சூழலை புனரமைக்க ஏற்படும் செலவுகள் ஆகியவற்றிற்கான பொறுப்பை, அந்த அணுஉலையை இயக்கும் நாடே ஏற்க வேண்டும் என்ப தாக அந்த சட்ட முன்வடிவு எழுதப் பட்டுள்ளது. மேலும் விபத்தின் தாக்கத்தை யொட்டி, விபத்து நடந்து 30 நாட்களுக்குள் மத்திய அரசு ஒரு அறிவிப்பாணையை வெளியிட வேண்டும். நஷ்ட ஈடு விண்ணப்பங்களை கவனிக்க ஒரு ஆணையரை அரசு நிறுவ வேண்டும். அந்த ஆணையர் ஒரு மாவட்ட நீதியரசர் மட்டத்திலோ, இயக்குனர் தரத்திலோ, அணுசக்தி பொறுப்பு விதிகள் பற்றிய விவரங்கள் அறிந்தவராக இருக்க வேண்டும்.
ஒரு அணுஉலை விபத்தில் ரூ.300 கோடிக்கு மேல் நஷ்ட ஈடு வழங்க வேண்டுமென்று அரசாங்கம் முடிவு செய்தால், ஒரு அணுசக்தி பாதிப்பு விண்ணப்ப ஆணையத்தை நிறுவலாம் என்றும் அந்த சட்ட முன்வடிவில் உள்ளது. அந்த விபத்து வேண்டு மென்று செய்யப்பட்டதாகவோ அல்லது பெரிய கவனக்குறைவினாலோ அல்லது கருவிகளாலோ அல்லது
சேவையாலோ ஏற்பட்டதாக அணுஉலை இயக்குபவர்கள் கருதுவார்களானால், அவர்கள் மேல் முறையீடு செய்யலாம். விபத்து நடந்த நாளிலிருந்து 10 ஆண்டுகள் வரை தான் நஷ்ட ஈடு கேட்டு விண்ணப்பிக்க முடியும்.
ரகசியமாக தயாரிக்கப்பட்டு, மின்னல் வேகத்தில் ஒப்புதல் பெற நாடாளுமன் றத்திற்கு வரவிருக்கும் இந்த சட்ட முன் வடிவில், 2வது அத்தியாத்தின் 6வது பிரிவில், விபத்து ஏற்பட்டால், ரூ.2,208 கோடி வரை என்றும் ரூ.2,385 கோடி வரை என்றும் அதிகபட்ச பொறுப்பேற்கும் தொகையாக இருக்கும் எனவும், இயக்கிய அமைப்பின் சட்டரீதியான பொறுப்பேற்பு ரூ.300 கோடி வரை இருக்கும் எனவும் எழுதப்பட்டுள்ளது. அதற்கு மேலும் பொறுப்பேற்க தேவை ஏற்பட்டால் மத்திய அரசு அதை ஏற்க வேண்டும் என்றும் எழுதப்பட்டுள்ளது. அணுஉலை நிறுவுதலின் ஆபத்தை கணக்கிலெடுத்து, ரூ.100 கோடிக்கு குறையாமல் பொறுப்புத் தொகை வழங்கப்பட வேண்டும். இந்திய அரசியல் சட்டத்தின் 21வது பிரிவில் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளையும், உச்சநீதிமன்ற தீர்ப்புகளையும் எதிர்க்கக்கூடியதாக, இந்த மக்கள் பொறுப்பேற்பு என்ற அணுகு முறை கருதப்படுகிறது. இதை இடது சாரி கட்சிகள் குற்றம் சாட்டுகின்றனர். அனைத்து கட்சிகளும் இந்த சட்ட முன்வடிவை எதிர்க்க வேண்டும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
1962ம் ஆண்டின் அணுசக்திச்
சட்டம், அரசாங்கத்தால் நடத்தப்படும் இந்திய அணுசக்தி கார்ப்பரேஷன் லிமிடெட் மட்டுமே, இந்த நாட்டில் அணுஉலைகளை இயக்கலாம் என்று கூறுகிறது. 2008ம் ஆண்டு செப்டம் பரில் அணுசக்தி விநியோகக் குழுவான நாடுகள், அனைத்து நாட்டு அணுசக்தி வர்த்தகத்தில் இந்தியாவை அனுமதித்தப் பிற்பாடு, மத்திய அரசாங்கம் 2030ல் 60 ஆயிரம் மெகாவாட் அணுசக்தியை உருவாக்குவதற்கான இலக்கை பெரும் பேராசையுடன் ஏற்படுத்திக் கொண்டுள்ளது. அதற்கு அந்நியநாட்டு நிறுவனங்கள் இந்தியாவிற்குள் அணு உலைகளை அமைக்க மத்திய அரசு அழைப்புக் கொடுக்கிறது. அவர்கள் கேட்டதற்காக இந்திய மக்களின் வரிச்சுமையில் கூடுதலாக பொறுப்பேற்கக்கூடிய ஒரு சட்டத்தை உருவாக்கி, அந்நியநாட்டு நிறுவனங்கள் அகமகிழ்ந்து உள்நுழைய ஏற்பாடு செய்ய முயல்கிறது. அதற்காகவே இத்தகைய சட்ட முன்வடிவை மத்திய அமைச்சரவை, சத்தமில்லாமல் அனுமதித்துள்ளது. இந்திய மண்ணில், அமெரிக்க நிறுவனங்கள் ஏற்படுத்தும் விபத்துகளுக்கு, நஷ்ட ஈட்டை இந்திய மக்கள் மீதே சுமத்துகின்ற ஆபத்தான அணுகுமுறையை இந்த சட்ட முன்வடிவு கொண்டுவருகிறது. இதன் மூலம் அந்நிய நிறுவனம் ரூ.500 கோடி தான் பொறுப்பேற்கும். மீதித்தொகையை இந்திய மக்கள் மீது சுமத்துவது எந்த வகையில் நியாயம் என்ற கேள்வியை, அரசியல்வாதிகள் மட்டுமல்ல, அனைத்து பொதுமக்களும் எழுப்ப வேண்டும்.

Saturday, March 13, 2010

ஜெயிக்கற சேவல் என் சேவல் என்பதா?

ஒரு வாரமாக நடந்து வரும் உச்சகட்ட விவாதம், 14 ஆண்டுகளாக ஓரங்கட் டப்பட்ட விவாதம் தான். ஆனாலும் ஒரு வாரமாக தவிர்க்க முடியாமல் முக்கிய நீரோட்ட விவாதமாக அது ஆக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், மற்றும் அனைத்து சட்டமன்றங்களிலும் 33 விழுக்காடு இடஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்ற சட்ட முன்வடிவு, பாதிக் கிணறைத் தாண்டியிருக்கும் நேரம் இது. அதாவது முக்கி, முனகி, முழக்கமிட்டு, முடிவாக மாநிலங்களவையில் பெய ரளவிற்கான ஒற்றைவாக்கு எதிர்ப் புடன், பெண்கள் சட்டமுன்வடிவு அரங்கேறி யிருக்கிறது. ஆனாலும் கூட இது பாதிக் கிணறு தான். மீதிக்கிணறு பாழ் கிணறு என்று சொல்வோரும் உண்டு. ஆனால் பெண்களுக்கான இடஒதுக்கீட்டை சட்ட முன்வடிவாக கொண்டு வரும்போது, அதை எதிர்த்து கடுமையாக பேசி வந்த சில எதிர்க்கட்சிகள், பல்வேறு முறைகளில் ஆளும் கூட்டணிக்கு மிரட்டல்கள் விடுத்துப் பார்த்தனர். அப்போது கூட மடங்காமல் அந்த சட்டமுன்வடிவை விடாப்பிடியாக, பெரிய எதிர்க்கட்சிகளின் ஆதரவையும் பெற்றுக் கொண்டு, ஆளும் கூட்டணி மாநிலங்களவையில் தாக்கல் செய்து அதில் வெற்றியும் பெற்றது. ஏதாவது ஒரு முறையில் எதிர்ப்பதற்கு நியாயங்களைத் தேடிவந்த அந்த சிறிய எதிர்க்கட்சிகள், கடைசியாக தாங்களும் பெண்களுக்கான இடஒதுக் கீட்டுக்கு ஆதரவாளர்கள் தான் என பேசத் தொடங்கிவிட்டனர். இத்தகைய மனோ பாவம் தான் பொதுவாக சமூகத்தில் நிலவு கிறது. அதையே சில ஊடகங்களும் கூட எதிரொலிக்கின்றன.
மேற்கண்ட மனோபாவம் என்பது பிரபலமடையும் ஒரு விவகாரத்தை, நேரடியாக எதிர்ப்பதற்கு மனத்தளவில் திராணியில்லாமல், அதில் அங்கே ஓட்டை, இங்கே ஓட்டை என புலம்புவது நாம் காணும் சமூகத்திலுள்ள பழக்கமாக உள் ளது. அதுவே தான் இங்கே பெண்கள் இடஒதுக்கீடு சம்பந்தப்பட்ட பிரச்
சனையிலும் நடந்துள்ளது. பொதுவாக நமது நாட்டில் அரசாங்கம் ஒரு செயலை செய்தால், அதை ஏற்றுக் கொள்வது என்ற மனோபாவம் மேலோங்கி நிற் கிறது. இது கருத்தாளர்களுக்கோ, அரசியல் வாதிகளுக்கோ, ஊடகக்காரர்களுக்கோ கருத்துறுதி இருக்கிறதா என்ற கேள்வியை எழுப்புகிறது.
உதாரணமாக ஒரு பிரபலமான மடாதி பதி, ஒரு கொலை வழக்கில் தமிழ்நாட்டு காவல்துறையால், அண்டை மாநிலத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். அவரு டைய மடம் இருக்கின்ற நகரில், ஒரு கோவில் மேலாளர் கொலை செய்யப்பட்ட போது, அதை சில ஊடகங்கள் மடாதி பதிக்கு சம்பந்தப்படுத்தி முதலில் எழுதின. அப்போது தமிழ்நாட்டில் இருக்கும் பக்தர்கள் யாரும் அதை ஏற்றுக் கொள்ள வில்லை. ஏற்காதது மட்டுமல்ல விவாதத்திற்குக் கூட எடுத்துக் கொள்ளவில்லை. அதன்பிறகு அரசு செயல்படத் தொடங்கியது. எதிர்பாராத ஒரு நிலையை அன்றைய அரசாங்கத்தின் தலைமை எடுத்தது. ஆதாரம் இருக்குமானால் எத்தகைய பிரபலமானவர்களும் கைது செய்யப்படலாம் என்ற நிலைப்பாடு, காவல்துறையை ஊக்குவித்தது. அதை யொட்டி காவல்துறை விரைந்து செயல் பட்டது. அதன் விளைவாக அண்டை மாநிலத்திற்கு சென்றிருந்த மடாதிபதி, அங்கேயே கைது செய்யப்பட்டார். இது அவர் தப்பித்துச் செல்ல விடாமல் எடுத்த முயற்சியாக இருக்கலாம். ஆனால் பொதுமக்களின் மனோநிலை எப்படி மாறியது என்பது தான் நமது விவாதம். அரசாங்க நடவடிக்கைக்குப் பிறகு, பொதுமக்கள் கருத்து முழுமையாக மடாதிபதிக்கு எதிராகத் திரும்பியது. தாங்கள் போற்றிப் பாராட்டி வந்த ஒரு பிரபலத்தை, அரசாங்கம் குற்றம் சாட் டிய பிற்பாடு, அதையொட்டி நடவ
டிக்கை எடுத்ததற்குப் பிறகு, உள்ளதில் பிரபலமான அரசாங்கத்தின் கருத்திற்கு அல்லது காவல்துறையின் கருத்துக்கு பொதுமக்கள் மாறத் தொடங்கினார்கள். இது சர்க்கார் சொன்னால் எல்லாம் சரிதான் என்ற மனோபாவம். இதேபோலத் தான் அதிகாரத்தை கையில் வைத்திருக்கும் அரசாங்கம் எடுக்கின்ற நிலைப்பாடுகளை ஒட்டியே சிந்திப்பதும், அதைச் சார்ந்தே தங்கள் கருத்துக்களை உருவாக்கிக் கொள்வதும் ஒரு பழக்கமாக இருக்கிறது. இத்தகைய மனப்பாங்கு தான் இப்போது பெண்கள் இடஒதுக்கீடு சட்ட முன் வடிவிலும் செயல்படுகிறதோ என்ற கேள்வி நமக்கு எழுந்துள்ளது.
ஏனென்றால் உள்ஒதுக்கீடு பேசியதன் மூலம், சட்டமுன்வடிவின் தாக்கலை எதிர்த்த வடஇந்தியத் தலைவர்கள், தாங்கள் இடஒதுக்கீட்டிற்கு எதிர்ப்பு இல்லை என்றும், நிறைவேறிய பிறகாவது தாங்கள் கேட்கும் சமூகங்களுக்கு உள்ஒதுக்கீடு வேண்டும் என்றும் கூறத் தொடங்கியுள்ளனர். அரசியல்வாதிகள் அப்படித்தான் இருப்பார்கள் என்று கூறலாம். சூழ்நிலைக்குத் தகுந்தாற்போல் மாறிக்கொள்ளும் சந்தர்ப்பவாதிகளாக அரசியல்வாதிகளை வேண்டுமானால் பலரும் குறை கூறலாம். ஆனால் ஊடகங் களின் கருத்துக்கள் அப்படியிருக்கக் கூடாது என்பது தானே பொதுவான எதிர் பார்ப்பு?
கட்சிகளில் அடிமட்டத்திலிருந்து, மேல் மட்டம் வரை பெண்களுக்கான சரிபாதி இடங்களை கொடுத்துவிட்டு, பிறகு பெண்கள் இடஒதுக்கீடு சட்டமுன்வடிவை கொண்டு வந்தால் மட்டும் தான் அது பலனளிக்கும் என்று பெண்களுக்குச் சாதகமாக இப்போது சில ஊடகங்கள் பேசுகின்றன. தொடக்கத்திலிருந்தே தற்காலிக சட்டமுன்வடிவு எதிர்க்கப்பட வேண்டுமென்றோ, திசைதிருப்பல் என்றோ, குறைபாடுகள் கொண்டது என்றோ அதை எதிர்த்து கூறி வந்தவர் களாக அவர்கள் இருக்கின்றனர். வண் டிக்கு முன் மாட்டைக் கட்டுவதா, அல்லது மாட்டுக்கு முன் வண்டியைக் கட்டுவதா என்ற கேள்வியாகக் கூட இதை எடுத்துக் கொள்ளலாம். இந்தியாவில் மட்டுமின்றி உலகெங்கிலும் இன்று ஆணாதிக்க சமூகம் நிலவி வருவது மறுக்க முடியாத ஒரு செய்தி. எந்தவொரு பெண்களுக்கான இடஒதுக்கீட்டையும் நீர்த்துப்போக வைக்க, அந்த ஆணாதிக்கம் தயாராக இருக் கிறது என்பதும் கூட ஊரறிந்த ரகசியம். அப்படியிருக்கையில் முழுமையான தீர்வை முன்வைத்து, அரை குறையாக இருந்தாலும் எடுத்து வைக்கப்படும் முதல் அடியை அல்லது படியை எதிர்ப்பது எத்தகைய போக்கு என்ற கேள்வி எழுகிறது.
கட்சிகள் பெண்களுக்கான இடஒதுக் கீடு செய்தால் போதும் என்றும், நாடாளுமன்ற, சட்டமன்ற அவைகளில் அது தேவையில்லை என்றும் ஒரு கருத்து முதலில் உலாவியது. அதை முன் னாள் நீதியரசர் ராஜிந்தர் சச்சார் சரியாக அம்பலப்படுத்தினார். அதன்பிறகு இப்படி சுற்றி வளைத்து அதே கருத்து வருகிறதா என்று தெரியவில்லை. இதற்கிடையில் ஆணாதிக்க மனோபாவத்தில் தவிர்க்க முடியாமல் இன்றைய சமுதாய அமைப்பில் இயங்கி வரும் கட்சிகளிலேயே, பெண் ணுரிமைக்கான நியாயமான குரல் எழுந்து வருவதையும் கவனிக்கத் தவறக் கூடாது. உதாரணமாக ஒரு கட்சியின் தலைமை கொடுத்திருக்கின்ற அறிக்கையில் பாலினப் பாகுபாடு நிகழ்வுகள் பற்றிக் கூறப்பட்டுள்ளது. பெண்கல்வி மறுக்கப் படுவது சுட்டிக் காட்டப்படுகிறது. பெண்களை வீட்டுக்குள்ளே முடக்க ஆணாதிக்கம் திட்டம் தீட்டியுள்ளதாக பகிரங்கமான அறிவிப்புகள் வெளிவருகின்றன. அந்த அளவிற்கு இந்த இடஒதுக்கீடு சட்டமுன்வடிவு, ஒரு பொதுமக்கள் கருத்தை உருவாக்கத் தொடங்கியுள்ளது.
அ.தி.மு.க. தலைமை பெண்களுக்கு அரசியல் பயிற்சி கொடுக்க திட்டமிட் டுள்ளது. தி.மு.க. தலைமையோ ஏற்கனவே பெண்களுக்கான அரசியல் பயிற்சி வகுப்புகளைத் தொடங்கிவிட்டது. இவையெல்லாம் நல்ல தொடக்கங்கள் என்று தான் ஊடகவியலாளர்கள் சிந்திக்க வேண்டும். மாறாக தங்கள் கருத்துக்களை வாதத்தில் வெல்ல வைப்பதற்காக, எழுதத் தொடங்கினால் அந்த எழுத்துக் கள் நிலைத்து நிற்பது கடினமாகிவிடும். பெண்ணியச் சிந்தனைகளை ஆண்கள் ஏற்பது கடினமான ஒரு முயற்சி தான். நமது நாட்டில் நிலவுகின்ற சாதி மற்றும் மதப் பிடிப்புகள், பெண்களை சமமாகக் காண்பதற்குத் தடையாக மட்டுமே இருக்கின்றன. அதனால் அப்படிப்பட்ட செல்வாக்கிலிருந்து குறிப்பாக ஆண்கள் விடுதலையாவது கடினமானது என்பது நமக்கும் புரிகிறது.
ஆனால் இங்கே நடக்கின்ற நாடகம் வேறு மாதிரி இருக்கிறது. கிராமத்தில் நடக்கின்ற சேவல் சண்டையில், இரண்டு புறமும் பந்தயம் கட்டுவார்கள். அதில் ஒருவன் ஜெயிக்கற சேவல், என் சேவல் என்பானாம். இதுதான் நமக்கு நினை வுக்கு வருகிறது.