Wednesday, June 16, 2010

போர் குற்றவாளியை வலுப்படுத்துவதில் போட்டியா?

பகிரங்கமாக ஒரு இன வாத போரை நடத்தி, ஒரு லட்சம் தமிழர்களை படுகொலை செய்து, ரத்தக் கறையுடன் இந்தியாவின் தலைநகருக்கு வந்துவிட்டு திரும்பி சென்றுள்ள மகிந்த ராஜபக்சே என்ற இலங்கை அதிபரை ஆதரிப்பதில் இந்திய அரசுடன், அமெரிக்க அரசு போட்டிக்கு வருகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது போட்டி அல்ல மாறாக கூட்டு நடவடிக்கை என்பதாக தெரிகிறது. 4வது வன்னிபோர் நடக்கும் தருணத்தில், இந்திய அரசு, பாகிஸ்தான் அரசும், சீன அரசும் இலங்கை அரசின் இன அழிப்பு போரை ஆதரித்து செயல்பட்டார்கள் என்பது உலகறிந்த செய்தி. ஆனால் அதே நேரத்தில் அமெரிக்க அரசு, ஈழத் தமிழர்கள் மீது பச்சாதாபம் கொண்டு, தமிழர்களின் உரிமைகளையும், சுயாட்சியையும் ஆதரிப்பதாக செய்திகள் வெளிவந்தன. அது மட்டும் இன்றி இலங்கை அரசும், சிங்கள ராணுவமும் நடத்தி வந்த மனித உரிமை மீறல்களையும், அமெரிக்க அரசு எதிர்த்து வந்ததாக செய்திகள் வெளியாயின. குறிப்பாக அமெரிக்க வெளி விவகாரத்துறை அமைச்சரான ஹிலாரி கிளின்டன், இலங்கையில் நடந்த போர் குற்றங்களின் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கூறிவந்தார். அதை கேட்டு உலக தமிழர்கள் பேருவகை கொண்டனர். அமெரிக்க அரசு தமிழர்களுக்கு சாதகமாக இருப்பதாக ஒரு மாயத் தோற்றம் உருவானது.
ஆனால் இலங்கை செய்த போர் குற்றங்கள் பற்றி, ஐ.நா. சபை ஒரு குழுவை அமைத்து ஆய்வு செய்வதற்கு தொடங்கிய போது, இலங்கை அதிபர் தானாகவே, ஒரு குழுவை அமைத்து ஆய்வு செய்ய போகிறோம் என அறிவித்தார். இந்த அறிவிப்பு, ஐ.நா. சபையின் ஆய்வை தடுப்பதற்கான முயற்சி என்று உலகம் கூறியது.
ஆனால் அமெரிக்க அரசின் ஹிலாரி கிளின்டன், இலங்கை அரசின் ஆய்வுக் குழு ஏற்பாட்டை திடீரென ஆதரித்துவிட்டார். இத்தகைய அமெரிக்க அரசின் திடீர் பல்டி, அமெரிக்கவை எதிர் பார்த்திருந்த உலக தமிழர்கள் மத்தியில் அதிர்ச்சியை கொடுத்தது. ஏனென்றால் பாரக் ஒபாமா அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டு வந்த உடன், தமிழர்கள் பெரும் எண்ணிக்கையில் தங்களது கோரிக்கைகளை, ஒபாமாவிற்கு அனுப்பி அதில் மகிழ்ச்சி அடைந்தனர். அமெரிக்கா பேசி வந்த மனித உரிமைகள் பற்றிய சொற்களை உலக தமிழர்கள் நம்பி வந்தனர். இப்போது அமெரிக்கவின் தெற்காசிய விவகாரங்களுக்கான உதவி அமைச்சர் ராபர்ட் ஒ பிளேக் ஒரு அதிர்ச்சி தகவலை கூறியுள்ளர். அதாவது இலங்கை பற்றிய வெளி விவகார கொள்கைகளில், அமெரிக்கவும், இந்தியாவும் ஒரே கருத்தில் இருக்கின்றன என்று கூறியுள்ளார்.
இலங்கை பிரச்சனையில் இந்தியாவும், அமெரிக்காவும் ஒன்றாக பணியாற்றி கொண்டிருக்கிறோம் என்பதாகவும் பிளேக் கூறியுள்ளார். வடக்கு மாகாணத்தில், போருக்குப் பிறகு உள் நாட்டு அகதிகளாக இடம் பெயர்ந்துள்ள தமிழர்களை, மீள் குடியேற்றம் செய்வதற்கான பணிகளில், அமெரிக்கா இந்தியாவுடன் இணைந்து செயல்படுவதாக அவர் கூறியுள்ளார். இந்தியாவிற்கும், அமெரிக்கவிற்கும் இலங்கையில் நிலவும் சூழ்நிலை பற்றி ஒரே கருத்து இருப்பதாகவும், எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் ஒரே கருத்து இருப்பதாகவும் பிளேக் கூறியுள்ளார். இப்போதாவது ஈழத் தமிழர்கள் பிரச்சனையில் இந்திய அரசு, துரோகத் தனமான நிலையை எடுத்ததாகவும், அமெரிக்க அரசு சாதகமான நிலையை எடுத்ததாகவும் நம்பி கொண்டிருந்த உலகத் தமிழர்களின் மதிப்பீட்டில் மண் விழுந்துள்ளது.
மேற்கண்ட அறிவிப்பு பற்றி கேள்விப்படும் தமிழர்கள் மத்தியில், இன்னொரு விதமான கருத்து நிலவுகிறது. அதாவது வன்னிப்போர் நடக்கும் நேரத்திலும், போருக்கு பிறகு அதிபர் தேர்தல் நேரத்திலும், அமெரிக்கா தமிழர்களுக்கு ஆதரவாக இருந்ததாகவும், இந்திய அரசு தான் அத்தகைய நேரங்களில் நேரிடையாக இன அழிப்புக்கு துணை நின்றதாகவும் அழுத்தமான ஒரு கருத்தை உலகத் தமிழர்கள் கொண்டிருந்தார்கள். அதில் இந்திய அரசின் நேரடி பங்களிப்பு பற்றி, ஆதாரபூர்வமான செய்திகளை உலகெங்கும் பரிமாறிக் கொண்டனர். இலங்கை அரசுக்கு உதவி செய்வதில், இந்திய அரசுக்கும், சீன அரசுக்கும் போட்டி இருந்தது என்பதாக சரியாகவே கணித்தார்கள். இந்தியாவும், சீனாவும் இலங்கை தீவில் குறிப்பாக தமிழர் பகுதிகளில், வணிக நோக்குடன் பங்கு போட துடிக்கிறர்கள் என்றும் சரியாகவே கணித்தார்கள். ஆனால் அத்தகைய வணிகப் போட்டியில், அமெரிக்கா என்ன செய்து கொண்டிருந்தது என்பது பற்றி ஒரு மதிப்பீடு இல்லாமல் இருந்தது.
ஆனால் இப்போது அத்தகைய மதிப்பீட்டை எட்டுவதற்கான உதவியாக, அமெரிக்க அமைச்சர் பிளேக்கின் கூற்றை நாம் எடுத்துக்கொள்ளலாம். அதாவது இலங்கையில் நிலவும் சூழ்நிலையில், கடந்த பல ஆண்டுகளாக நாங்கள் மிகவும் நெருக்கமாக இணைந்து பணியாற்றி கொண்டிருக்கிறோம் என்று அமெரிக்கவையும், இந்தியாவையும் பற்றி பிளேக் கூறியுள்ளார். அங்கே இருக்கும் நிலைமை எப்படி உருவானது என்பதில் எங்களுக்குள் ஒத்த கருத்து உள்ளது என்று பிளேக் கூறுகிறார்.
அதிலும் இடம்பெயர்ந்துள்ள உள் நாட்டு அகதிகளான, தமிழர்களுக்கு உணவு கொடுப்பதில் முக்கியமான நன்கொடையாளராக அமெரிக்காதான் இருந்தது என்று கூறுகிறார். வடக்கு மாகாணத்தில் புதிய வணிக வளர்ச்சியை உற்சாகப்படுத்துவோம் என்றும் கூறியுள்ளார். முப்பது ஆண்டுகளாக புலிகளின் ஆட்சியில் பாதிக்கப்பட்ட அந்த பகுதிகளில் வளர்ச்சி ஏற்படுத்த வேண்டும் என்று பிளேக் கூறியுள்ளார். அத்தகைய பணிகளில் இந்தியாவுடன் நெருக்கமாக இணைந்து செயல்படுவோம் என்றும் அறிவித்துள்ளார். அதேபோல சமீபத்தில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பெரிஸ் உடன் அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ஹிலாரி கிளின்டன் வாஷிங்டனில் சந்தித்து பேசியது, மிகவும் வெற்றிகரமாக அமைந்தது என்றும் பிளேக் கூறியுள்ளார்.
இலங்கை அதிபர் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை நாடாளுமன்றத்தில் பெற்றிருப்பதையும், பெரும் வெற்றியாக அமெரிக்கா கருதுகின்றது. இவை அனைத்துமே உலக தமிழர்களாது மதிப்பீடுகளுக்கு, எதிரானவையாக இருக்கின்றன. அதே சமயம் ஈழத் தமிழர்களின் உரிமை போருக்கு எதிராகவும், ஈழத் தமிழர்கள் மீதான இன அழிப்பு நடவடிக்கைகளில் முதன்மையாகவும் பங்களிப்பு செலுத்தியதாக நம்பப்படும் இந்திய அரசுக்கு, முழுமையான பின்னணி பலமாக அமெரிக்க அரசு செயல்பட்டது என்பதும், இனியும் செயல்படும் என்பதும் இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
அதே சமயம் இலங்கையிலும், தெற்காசியாவிலும், சீனாவின் செல்வாக்கிற்கு எதிராக இந்தியாவின் ஆதிக்கத்தை வலுப்படுத்தி, அதன் முலம் தனது வல்லரசு ஆதிக்கச் சுரண்டலை செயல்படுத்துவது தான் அமெரிக்கவின் நோக்கம் என்பது வெட்டவெளிச்சமாகியுள்ளது. இதை உலகத் தமிழர்கள் உணர வேண்டிய தேவை இப்போது எழுந்துள்ளது.

Tuesday, June 15, 2010

தீர்ப்பு தரும் ஊடகங்களும், திருப்தி அடையாத ஊடகங்களும்

இப்போது தமிழ்நாட்டில் அச்சு ஊடகங்கள் மத்தியில், விழுப்புரத்தில் நடந்த ரயில்வே தண்டவாள தகர்ப்பு பற்றிய தர்க்கம் ஒரு உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. குறிப்பாக இந்திய ஊடகங்கள் எந்தவொரு நெருக்கடியான நிகழ்ச்சி நடந்தாலும், அதுபற்றி நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்வதற்கான ஆவணங்கள் தயாராவற்கு முன்பே, தாங்களாகவே புனைந்த கதைகளை எழுதுவதும், ஒளிபரப்புவதும் பழக்கம்.
அதுமட்டுமின்றி, சம்மந்தப்பட்ட நிகழ்ச்சியில் சம்மந்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் எந்தவொரு நபரைப் பற்றியோ அல்லது அமைப்பை பற்றியோ தங்களது கருத்துக்களை அல்லது மதிப்பீடுகளை அல்லது விருப்பங்களை முத்திரையிட்டு, அதை வெளியிடுவதை ஊடகங்கள் வழக்கமாக கொண்டிருந்தன. தொடர்ந்து இவ்வாறு ஊடகங்கள் செயல்படுவது விமர்சிக்கப்பட்டு வந்தன. சில குண்டுவெடிப்புகள் எங்காவது நடந்தால், அதை இஸ்லாமிய தீவிரவாதிகள் என்ற பெயரில் முத்திரை குத்தி தங்களது கருத்துக்களை பரப்பிவருவது, வழமையாக நடைபெற்று வரும் ஒரு நிகழ்வு. இத்தகைய முத்திரை குத்துதலை சிறுபான்மை இயக்கங்களும், மனித உரிமை ஆர்வலர்களும் வழக்கமாக குறைகூறுவார்கள். இதன் மூலம் ஒரு விதமான கருத்துருவாக்கம் மக்கள் மத்தியில் உருவாக்கப்படும். அதுவே, சிறுபான்மை மக்களின் பாதுகாப்பிற்கு இடையூறாக சென்று முடியும். உளவியல் ரீதியாக பெரும்பான்மை மக்கள் மத்தியில், இதுபோன்ற பரப்புதல்களின் விளைவாக சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பின்மை ஏற்படுகிறது. ஆக்கப்பூர்வமான மதநல்லிணக்கதிற்கு வழிகோல வேண்டிய ஊடகங்கள், தங்களையும் அறியாமல் மதங்களுக்கு மத்தியில் நம்பிக்கையின்மையை ஏற்படுத்துவதற்கு ஊதுகுழலாக மாறிவிடுகின்றன. திட்டமிட்டு மதமோதலை அல்லது மதப்பகைமையை அல்லது மத இழிவுபடுத்தலை உருவாக்குவதற்காக ஏற்படுத்தப்படும் ஊடகங்கள் பற்றி நாம் இங்கே கவலைப்பட முடியாது. ஆனால் பொதுமக்கள் மத்தியில், பொதுவான நடுநிலையான அச்சு ஊடகங்கள், காட்சி ஊடகங்கள் என்று பெயர் பெற்றிருப்பவை, இதுபோன்ற குந்தமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய பரப்புரையை செய்யும் போது, அது வருத்தத்தை உருவாக்குகிறது.
இவ்வாறு நடக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சியையும், அவசரப்பட்டுக் கொண்டு, அல்லது முந்திக் கொண்டு தீர்ப்பு சொல்ல வேண்டிய ஆதங்கத்தில் சோக நிகழ்வுகளுக்கான காரணங்கள் என்று யாரையாவது முத்திரை குத்துவது, வணிக நோக்கத்திற்காக செய்யப்படுகிறது.
இவ்வாறு ஊடகங்கள் வணிக நோக்கங்களுக்காக அவசர, அவசரமாக சில செய்திகளை முத்திரைகுத்தி, பரபரப்பை ஏற்படுத்தும் முறையில் வெளியிடுவது பாரதூரமான பாதிப்புகளை சமூகத்தில் ஏற்படுத்துகிறது. இதை ஊடகங்கள் முன்கூட்டியே வழங்கும் தீர்ப்பு என்பதாக விமர்சிப்பார்கள். அதாவது புலனாய்வுக்குப் பிறகு காவல்துறை பதிவு செய்கின்ற வழக்குகளை, சாட்சிகளுடன் நீதிமன்றத்தில் கொண்டுபோய் விவாதம் செய்து, அந்த விசாரணையில் கொடுக்கப்படும் தீர்ப்பு என்ற நமது சட்ட முறைக்கு எதிராக, ஊடகங்கள் தீர்ப்பு வழங்கி விடுகின்றன என்பதாக அந்த விமர்சனம் செய்யப்படுகிறது.
தீர்ப்பு வழங்கும் ஊடக முறை செல்வாக்கு செலுத்துகின்ற நமது நாட்டில், இந்தமுறை விழுப்புரம் ரயில்வே தண்டவாள தகர்ப்பு பற்றி வித்தியாசமான வெளிப்பாடுகள் ஊடகங்களில் தென்படுகின்றன. சமீபத்தில் மேற்கு வங்கத்தில் நடந்த ரயில் வண்டிகள் மோதல் பற்றி, மேற்கு வங்க காவல்துறையும், ஊடகங்களும் முன்கூட்டியே, மாவோயிஸ்டு சதி என்பதாக அந்த நிகழ்வை சித்தரித்தார்கள். முதலில் ஒரு வெடி வெடித்தபிறகுதான் அந்த ரயில்கள் மோதல் நடந்தது என்பதாக காவல்துறை அதிகாரிகளும், அதையொட்டி ஊடகங்களும் பரப்பின. அதன்பிறகு அப்படியொரு வெடியே வெடிக்க வில்லை என்ற செய்தி வெளியானது. அதன்பிறகு ரயில்வே தண்டவாளத்தில் உள்ள பிஷ் பிளேட்டுகள் கழட்டப்பட்டன என்றும் அதனால்தான் ரயில்கள் மோதல் ஏற்பட்டன என்றும் ஊடகங்கள் படம் பிடித்துக் காட்டின. இத்தகைய செயல்கள் எல்லாம் மாவோயிஸ்டுகள் தான் செய்வார்கள் என்ற பொதுவான ஒரு கருத்து இருப்பதால், அதை வலுப்படுத்தும் விதத்தில் அவர்களது பரப்புரை அமைந்தது. அதன்பிறகு அந்த செய்தியும் உண்மையல்ல என்று நிருபனமானது. வட்டார காவல்துறை அதிகாரிகளுக்கு, மாநில அரசாங்கத்தின் அரசியலை பாதுகாக்க வேண்டும் என்ற சிந்தனை இருப்பதால், அவர்கள் தொடர்ந்து மாவோயிஸ்டுகள் மீதான குற்றச்சாட்டை விடவில்லை. அந்த வட்டாரத்தில் இருக்கின்ற பெரிய மக்கள் திரள் அமைப்பான, காவல்துறை அராஜகத்திற்கு எதிரான மக்கள் அமைப்பு என்பதை மாவோயிஸ்டு செல்வாக்கு உள்ளவர்கள் என்று முத்திரை குத்தி, நடந்து முடிந்த ரயில்வண்டிகள் மோதலுடன் தொடர்பு படுத்த சில அதிகாரிகள் முயன்றனர். அதையொட்டி ரயில்வே என்ஜீன் ஒட்டுனரை இந்த மக்கள் திரள் அமைப்பினர் கடத்தி கொண்டு சென்றதனால், அந்த ரயில் வண்டிகள் மோதல் நடந்தது என்பதாக ஊடகங்களில் வெளிப்படுத்தினர். இவ்வாறு ஊடகங்கள் ஒவ்வொரு முக்கியமான நிகழ்விலும், கறாரான நடுநிலையை நிலைநிறுத்தாமல் இருந்து விடுகின்றன.
இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் தமிழ்நாட்டில் சமீபத்தில் நடந்த விழுப்புரம் ரயில்வே தண்டவாள வெடி விபத்து பற்றி, தமிழகத்தில் இருந்து வெளிவரும் ஏடுகள் வித்தியாசமான கருத்துக்களை விதைத்துள்ளன என்பது விசித்திரமான உண்மை. வழமையாக செய்திகளை வெளியிடும்போது, அரசு தரப்பு அல்லது அதிகாரிகள் தரப்பு அல்லது தனிப்பட்ட அதிகாரிகள் வெளிப்படையாக மற்றும் ரகசியமாக கூறுகின்ற செய்திகளை ஊடகங்கள் வெளியிடுகின்றன. அவ்வாறு வெளியிடும்போது தங்களது விருப்பத்திற்கேற்ற முத்திரையை குத்துவது என்பதை பழக்கமாக கொண்டுள்ளன. அப்படித்தான் இந்த விபத்துபற்றிய செய்தியை முதலில் வெளியிடும்போது, அது மாவோயிஸ்டு சதி என்றும், தமிழ் தீவிரவாதிகளின் சதி என்றும் வெளியிட்டனர். உடனடியாக தமிழக காவல்துறை தலைமை அதிகாரிகள், அந்த நிகழ்வை மாவோயிட்டு சதி அல்ல என்று பதில் கொடுக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. அடுத்து உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு வைக்கப்பட்ட குறி என்பதாக ஒரு பரபரப்புச் செய்தியை வெளியிட்டு ஊடகங்கள் மகிழ்ந்தன. அதுவும் கூட உடனடியாக மறுக்கப்பட்டது மட்டுமின்றி, சம்மந்தப்பட்ட ப.சிதம்பரத்தாலேயே மறுக்கப்பட்டது.
அதன்பிறகு, சென்னையில் இருந்து வெளிவரும் ஒரு ஆங்கில ஏட்டில், காவல்துறை உயர்அதிகாரிகளும், சம்மந்தப்பட்ட ரயில்வே துறையும் கூறுகின்ற விவரங்களில் முரண்பாடு இருப்பதை வெளிச்சம் போட்டு காட்டியது. சேலம்சென்னை விரைவு வண்டியின் ஒட்டுனர் தனது ரயில் வண்டி வெடிவிபத்தின் காரணமாக ஆட்டம் கண்டதாக உணர்ந்தார் என்று தமிழக காவல்துறைத் தலைவர் சொன்ன செய்தி, ரயில்வே துறை கூறிய செய்தியிலிருந்து முரண்படுவதை இந்த ஆங்கில ஏடு அம்பலப்படுத்தியது அதாவது அந்த ரயில் வண்டியின் கடைசிப் பெட்டியில் வரும் கார்டு தான் அதை உணர்ந்தார் என்றும், உடனடியாக நிலைய அதிகாரிக்கு கூறினார் என்றும் ரயில்வே துறை தெரியப்படுத்தியது அதேபோல டி.ஜி.பி. சித்தனி பக்கத்தில் வெடிவெடித்ததாக கூறியதையும், ரயில்வே துறை பேரணி பக்கத்தில் வெடி வெடித்ததாக தெரிவித்ததையும் இந்த ஆங்கில ஏடு வெளிப்படுத்தியது. இவ்வாறு ஆய்வு தொடங்குவதற்கு முன்பே, நடந்த நிகழ்ச்சி பற்றிய வெவ்வெறு துறையின் அதிகாரிகளின் அறிவிப்புகளில் உள்ள முரண்பாடுகளை வெளியிடுவதன் மூலம் நிகழ்ச்சி பற்றிய ஐயத்தை இந்த ஏடு ஏற்படுத்தியது.
சில தமிழ் ஏடுகள் மட்டுமே தமிழ்நாட்டில், தலையங்கம் எழுதி வரும் வழக்கம் இருக்கும்போது, பாரம்பரியமாக வெளிவரும் பிரபல ஏடு ஒன்று ஒரு மாத காலமாக தலையங்கம் எழுத தொடங்கியிருப்பது நல்லதொரு அறிகுறியாக இருக்கிறது. அதிகமான அளவில் விற்பனையாகும் இந்த ஏட்டின் தலையங்கத்தில், யாருக்கு குறிவைக்கிறார்கள் என்று தலைப்பிட்டு எழுதியுள்ளார்கள். அதில் விழுப்புரம் தண்டவாள தகர்ப்பு பற்றி எழுதும் போது, ராஜபக்சே பற்றி விரிவாக கூறுகிறார்கள். விமர்சன நையாண்டியுடன், ராஜபக்சே குளுகுளு பிரதேசமான சிம்லாவுக்கு தன் மனைவி ஷிராந்தியுடன் பறந்தார் என்றும், அங்கே கடைவிதிக்கும் சென்று பொருட்களை வாங்கினார் என்றும் விளக்கியுள்ளார்கள். இப்படி யொரு அருமையான இடமாக இருக்கிறதே சிம்லா ஆனந்தமாக அந்த குளுகுளு பிரதேசத்தில் பொழுதை கழித்தார் என்றும் எழுதியிருக்கிறார்கள். தான் சென்ற இடங்களில் எந்த எதிர்ப்பையும் சந்திக்காமலும், உற்சாகமாக பவனி வந்தார் என்றும், அதிபரின் மனைவி ஷீராந்தியும் சிம்லா கடைவீதிகளில் மிக மகிழ்ச்சியோடு சுற்றி வந்தார் என்றும், இவ்வாறு இந்தியாவில் தங்கள் பொழுதை இனிமையாகவும், உற்சாகமாகவும் கழித்த அவர்கள் இனிதே இலங்கை திரும்பி சென்றார்கள் என்பதாக எழுதியுள்ளார்கள். இந்த பாணி தமிழர்கள் மத்தியில் இருக்கின்ற வெறுப்புணர்வின் வெளிபாடாக புரிய முடிகிறது.
விழுப்புரம் தண்டவாள தகர்ப்பை விமர்சிக்க வந்த அந்த தலையங்கம், அவர்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் என்றால், ராஜபக்சே வந்திறங்கி டெல்லி பட்டணத்திலோ, அவர் ஆனந்தமாக பொழுதை கழித்த சிம்லாவுக்கோ சென்றோவல்லவா எதிர்ப்பை காட்டியிருக்க வேண்டும் என்று எழுதியிருக்கிறார்கள். இத்தகைய முறையில் கருத்துக்களை உருவாக்குவது, பொதுவாகவும் சரி, இந்த ஏட்டிற்கும் புதியதொரு அணுகுமுறையாக தென்படுகிறது. அதேபோல, தரமான தமிழ்நாளேடு என்பதாக அறியப்பட்ட ஒரு ஏட்டின் தலையங்கத்தில், இதே விழுப்புரம் தண்டவாள தகர்ப்பு பற்றி, சதி... சதி... சதி... என்ற தலைப்பில் தலையங்கம் தீட்டியுள்ளார்கள். அதில் முழுமையான விசாரணை நடைபெறுவதற்கு முன்பே, மாவோயிஸ்டுகள் என்றும், விடுதலைப்புலிகள் ஆதரவாளர்கள் என்றும் சதிக்கான காரணத்தை அதிகாரிகள் முத்திரை குத்துவதை கடுமையாக விமர்சித்துள்ளார்கள். இது தமிழ்நாட்டில் ஊடகங்களின் கருத்தில் வந்திருக்கும், நல்லதொரு மாற்றம் மேலும் அந்த தலையங்கத்தில் இலங்கை அதிபர் தனது இந்திய வருகையின்போது, ஏற்கெனவே இந்தியாவில் குற்றவாளி பட்டியலில் இருக்கும் ஒரு அமைச்சரை கூட்டி வந்ததை விமர்சித்திருக்கிறார்கள். அதுமட்டுமின்றி இலங்கை அரசின் உளவுத்துறையே கூட ஏன் இப்படியொரு சதித்திட்டத்தை அரங்கேற்றி, பழியை விடுதலைப்புலிகள் மீது போட்டு, டக்ளஸ் தேவானந்தா கைது பிரச்சினையை முடி மறைக்க முற்பட்டிருக்கக் கூடாது என்பதாக ஒரு கேள்வியை எழுப்பியுள்ளனர்.
இவ்வாறு, அரசு தரப்பு மற்றும் ஆர்வமுள்ள தரப்புகள் எழுப்பிய முத்திரைகளுக்கு, முற்றுப்புள்ளி வைக்க தமிழ்நாட்டின் பிரபல ஏடுகள் எழுதுகின்றன என்பது ஒரு புதிய வரலாறு. இலங்கை அரசின் உளவுப்படையினர் இங்கே செயல்படுவதானால், அவர்கள் டக்ளஸ், வரதராஜ பெருமாள், ராஜன் அமைப்பைச் சேர்ந்த நபர்கள் மூலம்தான் செயல்பட்டிருப்பார்கள் என்ற பார்வை நாட்டை பாதுகாக்கும் அதிகாரிகளுக்கு ஏன் எழவில்லை என்பதான கேள்வி நமக்கும் எழுகிறது. எப்படியோ, தீர்ப்பு கொடுக்கும் நிலையில் இல்லாமல், ஊடகங்கள் இன்று திருப்தியடையாத நிலைக்கு வந்துள்ளன என்று தெரிகிறது.

Monday, June 14, 2010

வெள்ளையும் அழகுதான்........

அவள் வெள்ளை என்றான்
பரவாயில்லை என்றேன்.
அவள் நெருப்பு என்றான்.
அதுதானே சூடேற்றும் என்றேன்
அவள் அறிவுகூர்மை என்றான்.
அது கற்க உதவுமே என்றேன்.
அவள் விரும்பமாட்டாள் என்றான்.
முயன்று தோற்கலாம் என்றேன்.
அவள் வெறுப்பாள் என்றான்.
அது அவள் எடுக்கும் உரிமை என்றேன்.
தோல்வி வலிக்காதா என்றான்.
வலி ஒரு சுகம்தானே என்றேன்.
உனக்கு கிறுக்கு என்றான்.
அதுதான் காதல் என்றேன்.

Sunday, June 13, 2010

நள்ளிரவில் நடந்த நிலநடுக்கத்தை ஏற்படுத்திய தீவிரவாதி யார்?

சூன்12ம் நாள் நள்ளிரவுக்கு மேல் பூமி அதிர்ந்தது. சென்னையிலும் பல இடங்களில் நில நடுக்கம். கட்டடங்கள் ஆடின. இரவுக் காவலர்கள் குடியிருப்புகளுக்கு வெளியே ஓடி வந்தனர். கடற்கரை ஓர மீனவர் குடியிருப்புகளில் கலக்கம். தென் சென்னையில் மயிலாப்பூரில் உள்ள, பெரிய மீனவக்குப்பமான நொச்சிக்குப்பத்திலும், குடியிருப்புகள் ஆடின. மக்கள் எல்லாம் வெளியே வந்து நின்று கொண்டிருந்தனர். இத்தனை கலக்கத்தை இந்த நள்ளிரவு நிலநடுக்கம் ஏற்படுத்தி விட்டது. ஏன் என்றால், 2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் நாள் இதே போன்ற நில நடுக்கம் அதிகாலை 615 மணிக்கு சென்னையில் உணரப் பட்டது. அப்போது இந்தோனேஷியா, இலங்கை, அந்தமான் நிகோபர் என வந்து, இந்தியாவில் கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா என முதலில் நிலநடுக்கமும், பிறகு சுனாமியும் நமது கடற்கரையைத் தாக்கியது. மறக்க முடியாத பேரழிவை ஏற்படுத்தியது.
இப்போது நள்ளிரவு தாண்டியதும், ஞாயிற்றுக்கிழமை விடியும் முன்பே, இந்த நிலநடுக்கம் வந்துள்ளது. அப்போதும் ஞாயிற்றுக்கிழமை அதிகாலைதான் நிலநடுக்கமும், அடுத்து சுனாமியும் தாக்கின. இப்போதும் அந்தமான் நிகோபரில் 7.7 ரிக்டர் என்று நிலநடுக்கத்தை அளவிடுகிறார்கள். இந்த நள்ளிரவுக்கு மேல் வந்த நிலநடுக்கம், சுனாமி பேரழிவாக மாறவில்லை. நல்வாய்ப்பாக, மனிதகுலம் தப்பியது. இதே போலத்தான் இந்த நிலநடுக்கத்திற்கு 24மணி நேரம் முன்பு, விழுப்புரம் அருகே ரயில்வே தண்டவாளத்தில், ஒரு வெடி வெடித்து தண்டவாளம் ஒன்று துண்டாடப்பட்ட செய்தி வெளிவந்தது. உடனடியாக அரசு தரப்பிலும், ஊடகத்தரப்பிலும், மாவோயிஸ்ட்டுகளா அல்லது தமிழ் தீவிரவாதிகளா என்ற கேள்வியை எழுப்பினார்கள். இந்தப் பரப்புரை நமது செவிகளில் இன்னமும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அதனால் 24 மணிநேரம் கூட முடியாத நிலையில், இந்த நில நடுக்கத்திற்கும், மாவோயிஸ்டுகளோ, தமிழ் தீவிரவாதிகளோ சம்பந்தப்பட்டிருப்பார்களோ என்ற சந்தேகம் நமக்கு எழுதுவதில் நியாயம் இருக்கிறது. நிலநடுக்கம் எப்படி சுனாமி பேரழிவாக இப்போது மாறவில்லையோ, அதே போல அதற்கு 24 மணிநேரம் முன்பு நடந்த ரயில் தண்டவாள வெடி விபத்து, எந்த மனித உயிர்ப்பலியையும், பேரழிவையும் ஏற்படுத்தவில்லை. இதனால்தான், இரண்டிற்கும் தொடர்பு இருக்குமோ என்ற ஐயம் வலுப்பெறுகிறது.
சுனாமிப் பேரழிவும், அதற்கு முன்வரும் நிலநடுக்கமும், தமிழ்நாட்டையும், இலங்கையையும் ஒரே நேரத்தில் தாக்கியது. அதைப் போலவே, இலங்கை அதிபரின் இந்தியப் பயணம் முடிந்து அவர் கொழும்பு சென்ற பிறகு, இந்த தண்டவாள வெடிவிபத்து நிகழ்ந்துள்ளது. அதுவும் ராஜபக்சே வருகையைக் கண்டித்து, அவர் நிம்மதியாகத் திரும்பிச் சென்ற பிறகு நடத்தப்பட்டுள்ளது. இலங்கை அதிபரின் வருகைக்கு முன்பு, அவரைக் கண்டித்து வெடித்திருந்தால், நமக்கும் தமிழ் உணர்வாளர்கள் மீது ஐயம் ஏற்படும். மூன்று நாள் ராஜபக்சேயின் இந்தியப் பயணத்தின் போது, இந்த வெடி வெடித்திருந்தால் அவர் இந்தியாவுடன் போட்ட ஒப்பந்தங்கள் கையெழுத்தாகாமல் கூட, போயிருக்கும். அதாவது எதிர்ப்பு வெடி உருவத்தில் வருவதைக் காரணங்காட்டி, ஒப்பந்தங்களில் கையெழுத்திடாமல், மனைவியுடன் உல்லாசமாக சிம்லா செல்வதையும் தவிர்த்து, ராஜபக்சே கொழும்பு சென்றிருப்பார். அந்த அளவுக்கு கொழும்பு நகரில் உள்ள சிங்கள அறிவுஜீவிகள் இந்தியாவுடனான ஒப்பந்தங்களுக்கு எதிராக இருந்தனர். ஆகவே தனக்கு எதிராக வெடிவிபத்து நடந்திருந்தால், அதைக் காரணங்காட்டி, ராஜபக்சே கையெழுத்திடாமலேயே, பறந்திருப்பார். இதையும் சம்பந்தப்பட்ட டெல்லி சக்திகள் விரும்ப வில்லை எனத் தெரிகிறது.
அதனால்தான், விழுப்புரம் ரயில்தண்டவாளம், ராஜபக்சே பயணம் நிறைவுற்ற பிறகு, வெடித்துள்ளது என்கிறார்கள். வளையாத இலங்கை அதிபரை, இந்தியாவுடன் கையெழுத்திட தயங்கிய ராஜபக்சேவை இணங்க வைத்து டெல்லிக்கு அழைத்து வந்தவர் இலங்கை அமைச்சர் டக்ளஸ். அத்தகைய காய் நகர்த்தலில் உதவி செய்த, பிரபல தமிழ் பத்திரிக்கையாளர் தனது டக்ளஸ் நட்பை பயன்படுத்தினார் என்கிறார்கள். அதுவும் அந்த நபர், தமிழ்நாட்டு ஆட்சிக்கு எதிராக, அரசியல் காய் நகர்த்துகிறார் என்று அரசியல் வட்டாரத்தில், நடப்பு நிகழ்வுகளைத் தொகுக்கிறார்கள். இந்த நேரத்தில் இலங்கை அமைச்சர் டக்ளஸ் பற்றி, பழைய கசப்பான நிகழ்ச்சிகளுக்கு உயிர் கொடுக்கப்பட்டதில், டெல்லியில் அந்த சில சக்திகள் ஆட்டம் கண்டன. அதற்கு பின்னணி என ஒரு மாநில அரசியலைப் பார்த்து, சம்பந்தப்பட்டவர்கள் முறைக்கிறார்கள்.
அதுவே ராஜபக்சே வருகையின் பலனை கையில் எடுத்த பிறகு, அவரது வருகைக்கு எதிராக வெடிக்கிறது என்ற ஐயத்தை வலுப்படுத்தியுள்ளது. ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது போல, மாநிலத்தில் சட்ட ஒழுங்கு கெட்டு விட்டது என்ற குரலை எழுப்பவும் அது பயன்பட்டு விட்டது. இடையில் சில கேள்விகளும் எழுகிறது. 25,000 பேரைக் கொலை செய்த, நச்சுக் கழிவுக்குக் காரணமான அமெரிக்க பன்னாட்டு மூலதன நிறுவன அதிபர் வாரன் ஆண்டர்சன்னை காப்பாற்றி தப்ப விட்ட குற்றத்தை செய்தவர், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திதான் என்ற மாபெரும் சர்ச்சையிலிருந்து நாட்டு மக்களை திசை திருப்ப வேண்டிய அவசியமும் சம்பந்தப்பட்டவர்களுக்கு இருக்கிறது.
இப்படி வன்முறைகளைத் தூண்டி, ஒரு மாநிலத்தில் சட்டஒழுங்கு கெட்டுவிட்டது என மத்தியில் உள்வர்கள் செய்யத் துணிவார்களா? என்ற கேள்வி எழுகிறது. 1984ம் ஆண்டு தமிழ்நாடே ஈழத்தமிழர் மீது நடக்கும் கொடூரங்களுக்கு எதிராக, கொந்தளித்த போது, மாணவர்கள் அந்தக் களத்தில் முதலில் நின்றார்கள்.
மதுரையில் அனைத்துக் கல்லூரி மாணவர்கள் நடவடிக்கைக்குழு கிளர்ச்சியின் மையமாக இருந்தது. அப்போதைய மாணவர் தலைவர்களை அணுகிய சம்மந்தப்பட்ட மத்திய அதிகாரம், ரெயில்களுக்கு நெருப்பிடும்படி ஆலோசனை கொடுத்தார்களே? அதை அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆரின் விசுவாச உளவுப் படையான மோகன்தாஸ் தலைமையிலான அணியிடம், மாணவர் தலைவர்கள் போட்டுக் கொடுத்தார்களே? இப்படியும் சர்ச்சைகள் கிளம்புகின்றன. அதே போல 4வது வன்னிப் போர் நேரத்தில், சென்னை ரயில் நிலையத்தில் மர்ம மனிதர் ஒரு ரயில் என்ஜினை ஓட்டிச் சென்று பெறும் விபத்தை ஏற்படுத்த முயன்றாரே? இதுவரை புலனாய்வு உண்மைக் குற்வாளியின் பின்னணியைக் கூறவில்லையே? அதுகூட சம்பந்தப்பட்ட சக்திகளால், தமிழினப் போராளிகள் மீது பழி சுமத்தவும், மாநில அரசின் தமிழ் பாசத்தை சட்டஒழுங்கு பெயரில் கட்டுப்படுத்தவும் தானே? எனக் கேட்கிறார்கள்.
மேற்கு வங்கத்தில் ரயில்வே தண்டவாளத்தில் பிஷ்பிளேட்டை கழற்றி, ரயில்களை மோதவிட்டு, மக்களைக் கொன்றார்கள். அதை மத்திய ரயில்வே அமைச்சர் மம்தா, அரசியல் சதி எனக் கூறினார். அதாவது மாநிலம், மத்திக்கு எதிராக செய்த சதி எனப் பொருள்பட்டார். இங்கே அது அப்படியே மாறி செயல்படுகிறதா? தெரியவில்லை.
எப்படியோ, பலியாவது என்னவோ, தமிழ் உணர்வாளர்கள்தான். இந்த வழக்கில் கருத்துரிமைக்குப் போராடும், இளம் தமிழ் எழுத்தாளர் கூட்டமைப்பின் அமைப்பாளரை குற்றம் சாட்டுவது, நடைமுறைப் பொறுத்தமாக இல்லை.
நமக்கு முக்கியமே நில நடுக்கத்தை ஏற்படுத்திய தீவிரவாதி யார்? என்பதுதான். கரியமிலவாயுவை உலகெங்கிலும் உற்பத்தி செய்து, பல லட்சம் கோடி டாலர்களைச் சேர்த்துவிட்ட, அமெரிக்க பன்னாட்டு மூலதன நிறுவனங்கள், பிராணவாயு மண்டலத்தில் ஓட்டை விழ வைத்தார்கள். அதுவே கடலுக்கடியில், நிலநடுக்கங்களை உருவாக்குகிறது. அப்படியானால் உண்மையான தீவிரவாதிகள் யார்?

Saturday, June 12, 2010

தேடப்படாத, தேடப்படும் அறிவிக்கப்பட்ட குற்றவாளிகள்

இப்போது இந்தியத்துனைக்கண்டம் எங்கும், இரண்டு அறிவிக்கப்பட்ட குற்றவாளிகள் பற்றிய விவாதம், சூடு பறந்து வருகிறது. ஒருவர் அமெரிக்க குடிமகன். இன்னொருவர் இலங்கை குடிமகன். இந்த இரண்டு வெளிநாட்டு குற்றவாளிகள் பற்றி இப்போது பெரும் சர்ச்சை கிளம்பியுள்ளது. இவர்கள் இந்தியாவிற்குள் புரிந்த குற்றங்கள் இப்போது சர்ச்சையாகி உள்ளன. அமெரிக்க குடிமகனான வாரன் ஆண்டர்சன், போபால் நீதிமன்றத்தின் பிடிவாரண்டை தாங்கியவராய்,1984 -ம ஆண்டிலிருந்து இருந்து வருகிறார். அவர் செய்த குற்றம், ஒரே நள்ளிரவில் 8000 பேர் சாவதற்கும், இருபத்தைந்து ஆண்டுகளில் ௨௦,000 பேர் சாவதற்கும் காரணமாக இருந்தார் என்று குற்றம் சாட்டப்பட்டவர். அதாவது அவர் தலைவராக இருந்த யூனியன் கார்பைடு என்ற நிறுவனத்தின் பூச்சி கொல்லி மருந்து தயாரிப்பு ஆலையில், போபாலில் 1984 ஆம் ஆண்டு டிசம்பர் இரண்டாம் நாள் நள்ளிரவில் நடந்த நச்சு வாயு கசிவில் இறந்த அனைவருக்கும், மற்றும் தொடர்ந்து செத்துக்கொண்டிருக்கும் அனைவருக்கும், மற்றும் இன்று வரை பாதிக்கப்பட்ட ஐந்து லட்சம் பேருக்கும், இன்னும் பாதிக்கப்பட இருக்கும் வருங்காலத்தலைமுறைக்கும்
ஒருசேர காரணமானவர் என்ற குற்றச்சாட்டை தாங்கிவருபவர். இப்படிப்பட்ட பெரியதொரு கொலைக்குற்றச்சாட்டை உலகில் எந்த தனிமனிதனும்,ஆலை விபத்திற்க்காக
தாங்கியது இல்லை. இப்போது அந்த அமெரிக்க
குற்றவாளி வாரன் ஆண்டர்சன்னை, இந்திய ஆளும் கூட்டத்தார் தப்ப விட்டிருக்கிறார்கள் என்ற செய்தி பெரும் புயலாக கிளம்பி இருக்கிறது. அதிலும் ஆண்டர்சன்னை டிசம்பர்-7 ஆம் நாள், முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்து விட்டு, பிறகு அதே நாளில் கைதும் செய்துவிட்டு, பிறகு அமெரிக்க அரசிடம் இருந்து வந்த நிர்ப்பந்தத்தை ஒட்டி, விடுதலை செய்து அமெரிக்காவிற்கு அனுப்பிவிட்டார்கள் என்பது அதிர்ச்சியாக இப்போது வெளிவருகிறது. அதிலும் யார் இதற்க்கான உணமையான காரணகர்த்தா என்ற கேள்வி இன்று இந்தியாவையே ஆட்டிப்படைக்கிறது. முதலில் சி.பி.ஐ.யின் முன்னாள் தலைவராக இந்த வழக்கு வந்த நேரத்தில் இருந்த லால் என்பவர் ஒரு செய்தி வெளியிட்டார். அதாவது போபால் நச்சு வாயு வழக்கில், போடபபட்டிருந்த பிரிவு எண் 304 ஐ மாற்றி 304 -எ என்று உச்ச நீதி மன்றத்தில் மாற்றச்சொன்னதற்கு காரணம் யார் என்ற கேள்வி எழுந்தது. அப்போது சி.பி.ஐ. தான் அத்தகைய கோரிக்கையை உச்சநீதிமன்றத்தில் வைத்தது என்பது புரியப்பட்டது. முன்னாள் சி.பி.ஐ. அதிகாரி, தனது அந்த முயற்சிக்கு காரணமே அப்போது .இருந்த வெளிவிவகார அமைச்சகம்தான் என்று கூறிவிட்டார். அடுத்து அந்த குற்றவாளியை போபாலிலிருந்து விடுதலை செய்து கொண்டுசெல்ல யார் காரணம் என்ற கேள்வி எழுந்தது. முன்னாள் போபால் மாவட்ட ஆட்சி தலைவர் , அதை உத்தரவிட்டதே அப்போது முதல் அமைச்சராக இருந்த அர்ஜுன்சிங்குதான் என்று கூறிவிட்டார். அடுத்து அர்ஜுன்சிங் பதில் சொல்லவேண்டிய நிலை வந்தது. அவரோ அன்று இருந்த டில்லி தலைமையை காட்டி விட்டார். அடுத்து இப்போது பேசிய இன்னொரு காங்கிரசு தலைவரும், இன்னொரு முன்னாள் மத்திய பிரதேச முதல்வரான, திக்விஜய் சிங்கோ, அப்போது இருந்த மத்திய அரசின் மீதான அமெரிக்க அரசின் நிர்ப்பந்தம் தான் காரணம் என்று சொல்லிவிட்டார். உள்ளபடியே இதற்கு அர்த்தம் அப்போது இருந்த தலைமை அமைச்சரான ராஜீவ் காந்திதான் அமெரிக்காவுக்கு துணை போனார் எனச்சொல்வதாக அமைந்துவிட்டது. இப்போது ஒரு உண்மை அப்பட்டமாக அம்பலமாகிவிட்டது. அதாவது அமெரிக்க பன்னாட்டு மூலதனக் கம்பனியான யூனியன் கார்பைட் நிறுவனத்தை, மாபெரும் கொலைகளை செய்த குற்றம் இருக்கும் போதே காப்பாற்றி அவர்களது தலைவரை, தண்டனையிலிருந்து காப்பாற்ற மட்டுமின்றி கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பதில் இருந்து காப்பாற்றவும், அதே போல விசாரிக்கப்படுவதில் இருந்து காப்பாற்றவும் உதவி செய்தவர்கள் அல்லது ஏற்பாடு செய்தவர்கள் நாட்டை தலைமை தாங்கிய அரசியல்வாதிகள்தான் என்பது அப்பட்டமாகப்புரிந்து விட்டது. அந்த குற்றவாளி வரிசையில் அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி முதல், வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஊடாக, அன்றைய மத்தியபிரதேச முதல்வரான அர்ஜுன் சிங் வரை, அனைவருமே சம்பந்தப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.
இவ்வாறாக இந்தியாவில் நடந்த ஒரு பெரும் கொலைக்குற்றத்தை மறைத்து, சம்பத்தப்பட்ட கொலைகாரனை காப்பாற்றி தப்ப விட நாட்டை தலைமை தாங்கிய அரசியல்வாதிகள் ஏற்ப்பாடு செய்தது தெரிந்துள்ளது. போபால் நச்சு வாயு வெளியேற்றத்திற்கு தவறான அல்லது சரியில்லாத தீர்ப்பு வெளிவந்ததை ஒட்டியே இந்த விவகாரம் பெரியதாகி உள்ளது. அதனால் மட்டுமே இப்போது அரசியல்வாதிகள் அமபலமாகி உள்ளார்கள். அதேபோல, அடுத்து வெளிவந்திருக்கும் இன்னொரு பழைய குற்றம். டக்ளஸ் மீதானது. அன்றைய ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி யில், மக்கள் விடுதலை படையின் தலைவராக இருந்த டக்ளஸ், அந்த இயக்கத்தின் தலைவராக இருந்த பத்மநாபாவுடன் முரண்பட்டு 1986 இல் வெள்யே வந்தார். அதனால் சூளைமேடு பகுதியிலேயே, திருவள்ளுவர் நகரில் தனது கும்பலுடன் தங்கி இருந்தார். அப்போது அவர் தனது கும்பலுடன் சேர்ந்து தானியங்கி துப்பாக்கி மூலம் செய்த துப்பாக்கி சூட்டில் ஒரு உயிர் பலியானதும், மற்ற நான்குபேர் காயம் அடைந்ததும் , அவர் மீதும் அவரது கும்பலில் உள்ள ஒன்பதுபேர் மீதும் வழக்கை பதிவு செய்ய வைத்தது. அதன்பிறகு 1994 இல் டக்ளஸ் தலைமறைவானதும், அவரை அறிவிக்கப்பட்ட குற்றவாளியாக நீதிமன்றம் அறிவித்தது. அதுதவிர, 1989 மார்ச் ௨ இல் டக்ளஸ் ஒரு பையனை கடத்திய வழக்கில், குற்றவாளியானார். தவிர 1990 இல் வையவன் என்ற ஒருவரை தாக்கிய வழக்கில், மீண்டும் குற்றவாளியாக பதிவு செய்யப்பட்டார். இப்படி மூன்று குற்ற வழக்குகளில் சம்பத்தப்பட்ட இன்றைய இலங்கை அமைச்சர் ஒருவரை, கைது செய்யப்போகிறார்களா இல்லையா என்ற கேள்வி இப்போது இந்தியா முழுவதும் கிளம்பி உள்ளது. இப்படி அறிவிக்கப்பட்ட குற்றவாளி ஒருவருக்கு தங்குமிடம் அல்லது உறவு அல்லது பழக்கம் கொண்டிருந்த எவரையும் சட்டப்படி கைது செய்யலாம். அதுமட்டுமல்ல அவர்களுக்கு அதாவது உதவி செய்தவர்களுக்கு இ.பி.கோ. சட்டப்படி ஏழு ஆண்டுகள் வரை தண்டனை வழங்கலாம். அப்படிப்பட்ட குற்றத்தை இழைத்ததாக தமிழ்நாட்டில் உள்ள சில அரசியல் தலைவர்களும், சில பத்திரிகையாளர்களும், குற்றம் சாட்டப்படுகின்றனர். அவர்களுக்கும் விசாரணை வருமா அதை ஒட்டி யாருக்காவது வழக்கு வருமா என்ற கேள்வியும் மக்கள் மத்தியில் விவாதிக்கப்படுகிறது. அறிவிக்கப்பட்ட ஒரு குற்றவாளியை தமிழ் நாட்டின் பிரபல பத்திரிகையாளரும், அறிவாளியாக அறியப்பட்டவரும், சட்ட மேதையாக போற்றப்படுபவருமான, முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரான சோ ராமசாமி தனது அலுவலகத்திற்குள் அனுமதித்ததும், தொடர்ந்து பேசிவந்ததும்,இப்போது விவாதமாக ஆகி உள்ளது. ஆகவே யார்,யார் அறிவிக்கப்பட்ட குற்றவாளியுடன் தொடர்பு வைத்திருந்தார்கள் என்ற கேள்வியை கேட்டார்கள் என்றால், ராஜபக்சேவின் இப்போதைய டில்லி வருகையின் போது, அவரது குழுவில் டகளஸ் இருந்தார் என்பது பகிரங்கமாக தெரிந்த ஒன்றாக இருக்கிறது. அதாவது அந்த விருந்தில் பங்கு கொண்ட தலைமை அமைச்சர், காங்கிரசு கட்சி தலைவர் அனைவருக்கும் இது புதிய பிரச்சனையாக எழுந்துள்ளது. ஆனால் இது ஒரு பிரச்சனையே அல்ல என்று சாதாரண மக்கள் கூட கூறுகிறார்கள். ஏன் என்றால் ஒரு அறிவிக்கப்பட்ட குற்றவாளியை, இருபத்து ஆறு ஆண்டுகளுக்கு முன்பே இந்த நாட்டின் தலைமை அமைச்சர் உட்பட அனைத்து அரசியல் தலைவர்களும், அதிகாரிகளும் இணைந்து காரில் ஏற்றி போபாலை விட்டு வெளியே கொண்டுவந்து, அரசு ஏற்பாட்டில் தனியார் விமானத்தில் ஏற்றி, அங்கிருந்து டில்லி கொண்டு சென்று அங்கிருந்து அமெரிக்காவிற்கு அனுப்பிய நாடு அய்யா இது என்று கூறுகிறார்கள்.
ஆகவே நீங்கள் குற்றம் செய்தீர்களா, இல்லையா என்பது முக்கியமல்ல, மாறாக நீங்கள் அரசியல்தலைவர்களின் அதரவு பெற்றிருகிறீர்களா இல்லையா என்பது மட்டுமே தீர்மானிக்கும் என்பது சாதாரண மக்களுக்கும், இப்போது இந்த இரண்டு வழக்குகள் மூலம் தெரிந்து விட்டது.

Friday, June 11, 2010

ஒரு அறிவுஜீவி தடுக்கி விழுந்தார்

அன்று ஜூன் மாதம் எட்டாம் நாள்.தமிழ் தொலைகாட்சி ஒன்றில், போபால் தீர்ப்பு சம்பந்தமாக ஒரு விவாதம் நடந்தது. அதில் போபால் நீதிக்கான அனைத்துநாட்டு பரப்புரை இயக்கம் சார்பாக ஒருவரும், பெண்கள் இயக்கம் சார்பாக ஒருவரும், அந்த குறிப்பிட்ட அறிவுஜீவியும் கலந்து கொண்டனர். தொலைக்காட்சியைச்சேர்ந்த நடுவர் இருந்தார்.அது நேரலை ஒளிபரப்பு. விவாதம் தொடங்கும்போதே, அந்த அறிவுஜீவி போபால் விபத்து நடந்த ஆண்டை 1984 என்று சொல்வதற்கு பதில், 1986 என்று தவறாக கூறினார். அது நேரலையாக ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சி. அதில் பேசும்போது அதிக அக்கறையுடன் பேசவேண்டுமே என்ற கவலை கூட அந்த அறிவயுஜீவிக்கு வந்ததாக தெரியவில்லை.மீண்டும் அதே தவறான செய்தியைக்கூரினார். நேயர்கள் திகைத்து நிற்கும்போது, நடுவராக இருந்தவர் 1984 என்று திருத்தினார். அதன்பிறகு அந்த அறிவுஜீவி, உலகமயமாக்கலின் பாதிப்பு இந்த போபால் நச்சு வாயு ஆலையின் செயல்பாட்டில் வெளிப்பட்டதாக கூறினார். உலகமயமாக்கல் என்ற சொல்லும், விவாதமும் வந்தது 1995 இல் என்ற உண்மை அந்த அறிவுஜீவிக்கு நினைவில்லை போலும். அதே சமயம் மறுநாள் இன்னொரு தமிழ் தொலைக்காட்சியில் இதே பிரச்சனை விவாதமாக ஆக்கப்பட்டது.அப்போது அந்த தொலைகாட்சி நடுவர், உலகமயமாக்கல் வருவதற்கு மிகவும் முன்பே இந்த போபால் ஆலை விபத்து நடந்துவிட்டதே எனக்குறிப்பிட்டதை எண்ணி தமிழ் நேயர்கள் சிரிக்கிறார்கள். அந்த அளவுக்கு இந்த அறிவுஜீவி வரலாற்றையே தவறாக சொல்லத்தொடங்கி விட்டார். அதுமட்டுமல்ல. இவர் உலகமயமாக்கல் வந்தபோது, 1995 இல், ஒரு குழுவினரால் திண்டுக்கல்லில் உலகமயமாக்கல் எதிர்ப்பு கூட்டத்தில் பேச அழைக்கப்பட்டார். அப்போது தான் உலகமயமாக்கலை ஆதரித்துதான் பேசுவேன் என இவர் கூறிவிட்டார். ஆனாலும் பேசுங்கள் என அவர்கள் கூப்பிட்டனர். அங்கே போய் உலகமயமாக்கலை எதிர்க்க முடியாது, அதனால் அதை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனபபேசியவர் தான் இந்த அறிவுஜீவி. இப்போது உலகமயமாக்கல் தோற்றுவ்ட்டது என்று உலகமே ஒப்புக்கொண்ட பிற்பாடு, உலகமயமாக்கலை எதிர்த்து சம்பந்தமில்லாத இடத்தில் கூட பேசத்தொடங்கி விட்டார்.அதனால்தான் இந்த விவாதத்திலும், போபால் ஆலை விபத்தை உலகமயமாக்கலுடன் சம்பந்தப்படுத்தி இவர் பேசி இருக்கிறார். இப்படி பேசிவரும் அறிவுஜீவி ஈழம் பற்றி பேசும்போது களத்தில் நின்று போராடும் புலிகளை தாக்கி பரப்புரை செய்துவருகிறாரே என்று பலரும் வருத்தப்படுகிறார்கள்.புலிகளை அழித்துவிட்டோம் என்ற அரசு தரப்பு பரப்புரையை வலுப்படுத்தி வரும் இந்த அறிவுஜீவிகள், அதற்கு பிறகும் புலி எதிர்ப்பு பரப்புரையை தமிழ்நாடு முழுக்க செய்து வருவது யாரை திருப்திப்படுத்த? அதற்கு பிரான்சு நாட்டிலிருந்து ஷக்தி ஆதரவு இருப்பதால் செய்து வருவது நாட்டிற்கு தெரிகிறது. அப்படியானால் இந்திய நாட்டு உளவுத்துறைகள் செய்ய வேண்டிய வேலையை செய்கிறார்களா? இது சில அறிவுஜீவிகளுக்கு வழமையாக ஆகி விட்டது. இவர்கள் ஒரு காலத்தில் மார்க்சிசம் பேசினார்கள். பிறகு அது தோற்று விட்டது என கண்டுபிடித்தார்கள். பிறகு மனித உரிமை பேசினார்கள். பிறகு அதற்க்கான அமைப்புகள் தோற்றுவிட்டதென கண்டுபிடித்தார்கள்.பிறகு தாங்களே அப்படி ஒரு அமைப்பை கண்டு பிடித்தார்கள். அதற்குபிறகு மாவோவாதிகளை நெருங்கினார்கள். மார்க்சிசம் தோற்றுவிட்டது என இந்த அறிவுஜீவி கூறியதை தெரிந்துகொள்ளாதவர்கள் அதற்கும் இடம் கொடுத்தார்கள்.பிறகு அரசியல் கைதிகள் விடுதலையிலும் இணைந்து கொண்டார்கள். அதையும் செயற்படுத்தவில்லை. அதற்க்குபிறகே அந்த அமைப்பை எடுத்துச்செல்பவர்கள் இந்த பெரிய மனிதர்களை அடையாளம் கண்டனர். அதற்கு பிறகு இவர்களுக்கு சுற்று சூழல் மத்தியில் இடம் கிடைத்தது. அப்போதுதான் மேற்கண்ட தடுக்கி விழுதலை செய்தார்கள். இவ்வாறு அடையாள நெருக்கடிக்காக தன்னை காட்டிக்கொள்பவர்களை எல்லாம் தொடந்து ஏதாவது ஒரு பெயரில் தூக்கிப்பிடிப்பதை தமிழன் நிறுத்திக்கொண்டாலே இந்த தலைவலிகள் தொடராது.

Thursday, June 10, 2010

ராஜபக்சே வருகை: வர்த்தக நோக்கமா?

இந்தியாவின் தலைநகர் டெல்லிக்கு மூன்று நாட்கள் பயணமாக, இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே தம்பதி சமையதராய் வருகை புரிந்துள்ளார். அவருக்கு சிவப்புக்கம்பள வரவேற்பு டெல்லியில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்திய மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய அரசின் முக்கியமான ராணுவத் தளபதிகள் தலைமையிலான அரசப்படை, ராஜபக்சேக்கு உயர்ந்தபட்ச வணக்கத்துடன் கூடிய மரியாதையை செலுத்தினார்கள். அண்டை நாடாக இருந்தாலும், நட்பு நாடாக இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டாலும், கடந்த ஆண்டில் ஒரு பெரிய இனஅழிப்புப் போரை நடத்தினார் என்ற பிரபலமான பெயருடன், கையில்பட்ட ரத்தக்கறைகள் உலர்வதற்குள் அவர் இந்தியா வருகை புரிகிறார் என்பது தான் முக்கியமானச் செய்தி.
உலக அரங்கில் இங்கிலாந்தில் உள்ள பி.பி.சி என்ற பிரிட்டிஷ் பிராட்காஸ்டிங் காப்பரேஷன், அமெரிக்க ஏடான தி டைம்ஸ், அனைத்து நாட்டு நெருக்கடிக் குழு, மனித உரிமைகள் கண்காணிப்பு, அனைத்து நாட்டு பொது மன்னிப்புச் சபை, எக்னாமிக்ஸ் ஏடு ஆகியவை ராஜபக்சேவை ஒரு போர்க்குற்றவாளியாக சித்தரித்துள்ளது. அதேபோல அனைத்து நாட்டு குற்றயியல் நீதிமன்றத்தில் ராஜபக்சே சகோதரர்கள், போர்க் குற்றங்களையும், மனித உரிமை மீறல்களையும் செய்துள்ளனர் என்று வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. அந்த வழக்கில் தமிழ்நாடு புதுச்சேரி கிளையான மக்கள் சிவில் உரிமைக்கழகம், தனது விரிவான குற்றச்சாட்டுகளையும், இணைத்துள்ளது. ஜுன் 8ம் நாள் தமிழ்நாடெங்கும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்களும், தொண்டர்களும், ராஜபக்சேயின் இந்திய வருகையை கண்டித்து, தெருவில் இறங்கி ஒவ்வொரு மாவட்டத்திலும், நூற்றுக்கணக்கில் போராட்டம் நடத்தியதற்காக கைதானார்கள். அதேசமயம் இதுபோன்ற ராஜபச்சே வருகையை கண்டித்து போராட்டம் நடத்திய அரசியல்வாதிகள், டெல்லி சென்று ராஜபக்சேயை சந்தித்து மனுக் கொடுக்கவும் செய்திருக்கின்றனர். இப்படி சில கேலிக் கூத்துக்கள் நடந்தாலும் கூட, தமிழ்நாட்டு மக்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பு என்பது, ஒவ்வொரு மாவட்டத்திலும் பல்வேறு அமைப்புகளின் மூலம் பதிவு செய்யப்பட்டது என்பது தான் வரலாறு.
உலக அரங்கில் போர்க்குற்றவாளியாக விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கும், ஒரு அரசத்தலைவரை உலகின் பெரிய ஜனநாயக நாடு என்று பெயர் பெற்ற இந்திய நாடு சிவப்புக்கம்பளம் கொடுத்து வரவேற்கிறது என்ற செய்தி ஆரோக்கியமாகத் தெரியவில்லை. ஆனால் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆளும் கூட்டணிக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மகிந்தாவைச் சந்தித்து ஈழத்தமிழர்களின் மீள் குடியேற்றத்திற்காக கோரிக்கைகளை முன்வைத்தார்கள் என்ற செய்தி வெளியாகியுள்ளது.
தமிழக முதல்வர் இந்திய தலைமை அமைச்சர் மன்மோகன்சிங்கிற்கு அனுப்பிய கடிதத்தில், இதே மீள்குடியேற்றம் பற்றி குறிப்பிட்டிருந்தாலும் அதுபற்றி ராஜபக்சே அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்ற அழுத்தமான செய்தியிருந்தது. 2009ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், முள்வேலி முகாம்களில் இருக்கின்ற ஈழத்தமிழர்களை முழுமையாக மீள்குடியேற்றம் செய்வோம் என்று தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கைச் சென்ற போது, அவர்களிடம் ராஜபக்சே வாக்குறுதி அளித்திருந்தார். அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்ற ஆழமான குற்றச்சாட்டுடன் கூடிய கோரிக்கை தமிழக முதல்வரின் கடிதத்தில் பிரதிபலித்தது. ஆனால் இப்போது டெல்லியில் ராஜபக்சேயை சந்தித்த தமிழக எம்.பி.க்கள் இப்படிப்பட்ட அழுத்தமான விவரத்தை எடுத்துச்சொன்னதாக அல்லது கேள்வி கேட்டதாக எதுவுமே தெரியவில்லை.
ஏற்கனவே உலக அரங்கில் மனிதஉரிமை மீறல்களுக்காக, ராஜபக்சே அரசாங்கம் குற்றம் சாட்டப்பட்ட போது, ஐ.நா.வின் மனித உரிமை கவுன்சிலில் இந்திய அரசு, ராஜபக்சே அரசுக்கு ஆதரவாக செயல்பட்டு பாதுகாத்தது என்ற அவப்பெயர் பதிவாகியுள்ளது. இப்போது டெல்லியில் சிவப்புக்கம்பள வரவேற்பு கொடுத்ததன் மூலம், மேலும் அத்தகைய அவப்பெயர் வலுப்பபெறத்தான் செய்யும். இதற்கிடையில் டெல்லி உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதியரசராக இருந்த ராஜேந்திர சஜ்ஜார் கலந்து கொண்ட, அயர்லாந்து நாட்டில் நடந்த டப்ளின் நிரந்தர மனிதஉரிமை தீர்ப்பாயத்தில், ராஜபக்சே சகோதரர்கள் போர்க்குற்றங்கள் இழைத்ததாக தீர்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதுவே டெல்லியிலுள்ள மற்றும் வடஇந்தியாவிலுள்ள பொதுமக்கள் மத்தியில், புதியதொரு கருத்துருவாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஈழவிடுதலைப் போர் ஆயுதப்போராட்டமாக நடந்து வந்த காலத்திலும், 4வது வன்னிப்போர் உக்கிரமமாக நடந்து வந்த நேரத்திலும், பிரபலமாக குற்றம்சாட்டப்படாத ராஜபக்சே அரசு, போர் முடிந்த நேரத்தில் கடுமையான போர்க் குற்றங்களுக்காக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இத்தகைய புதிய உணர்தல்கள் இந்தியா எங்கும் உருவாகியிருக்கும் நேரத்தில், டெல்லி ராஜபக்சே தம்பதியினருக்கு வரவேற்பு கொடுக்க வேண்டிய தேவை என்ன?
இந்திய அரசு இலங்கை அரசுக்கு தமிழர்களின் மறுவாழ்வுக்காக கொடுத்தனுப்பிய ரூ.500 கோடியை எப்படி செலவழித்தார் என்பதை அல்லது செலவழித்தாரா என்பதை அல்லது ஏன் செலவழிக்கவில்லை என்பதை விளக்கம் சொல்வதற்காக, ராஜபக்சே டெல்லி வந்தாரா? அப்படியானால் அதற்கு சிவப்புக்கம்பள வரவேற்பு கொடுப்பார்களா? தமிழ்நாட்டு எம்.பி.க்களுக்கு கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றவில்லையே என்பதற்காக, குற்ற உணர்வுடன் இந்த முறை காப்பாற்றுகிறேன் என்று சொல்வதற்காக அதன் மூலம் நட்புறவை பேணுவதற்காக டெல்லி வந்தாரா? அப்படியானால் அதற்காக இப்படியொரு பிரம்மாண்டமான வரவேற்பு தேவையில்லையே? டெல்லி சென்ற தமிழகத்து எம்.பி.க்கள் வீரமுடனோ, கோபமுடனோ, கோரிக்கையை வலியுறுத்தும் தன்மையுடனோ ராஜபக்சேயை சந்தித்ததாக தெரியவில்லை. மாறாக மரத்தடியில் நிற்கும் தமிழக எம்.பி.க்களை, காட்டுகின்ற காட்சி ஊடகம் அவர்களது எதிர்பார்ப்பை படம் பிடித்து காட்டியுள்ளது.
மேற்கண்ட எந்தக் காரணத்திற்கும் டெல்லியில் நுழையாத ராஜபக்சே, சி.ஈ.பி.ஏ. என்று அழைக்கப்படும் தொகுப்பான பொருளாதார பங்களிப்பு ஒப்பந்தங்களை கையெழுத்திடுவதற்குத் தான், டெல்லி வந்தார் என்பது வெளியாகியுள்ளது. அதை வெளியிடுகின்ற அரசு செய்திகள் 5 விதமான ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படுகின்றன என்று கூறியுள்ளன. 1. கூட்டாக பயங்கரவாதத்தை எதிர்த்து போராடுவதற்கான ஒப்பந்தம். 2. தண்டிக்கப்பட் கைதிகளை பரிமாற்றம் செய்வதற்கான ஒப்பந்தம். 3. குற்ற நடவடிக்கைகளில் பரஸ்பரம் சட்ட உதவிகளை செய்து கொள்வதற்கான ஒப்பந்தம். 4.பரஸ்பர பண்பாட்டு ஒத்துழைப்பு சம்மந்தப்பட்ட ஒப்பந்தம். 5. சிறிய மற்றும் நடுத்தர வளர்ச்சித் திட்டங்களுக்கு இந்தியாவின் உதவியை பெறுகின்ற ஒப்பந்தம்.
மேற்கண்ட 5 ஒப்பந்தங்களில் சில உண்மைகள் வெளிப்படுகின்றன. கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தில், ராஜபக்சே அரசின் அமைச்சரான டக்ளஸ் தேவனந்தா மீது உள்ள சென்னை மாநகர காவல்துறையின் 2 குற்றவழக்குகள் விசாரணைக்காக, அவர் அனுப்பப்படுவாரா என்ற கேள்வியை தமிழக எம்.பி.க்கள் யாரும் கேட்டிருக்க நியாயமில்லை. 1998ம் ஆண்டு இந்தியாவும், இலங்கையும் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டன. அப்போது தொடங்கி இன்றுவரை பல்வேறு முனைகளில் இருநாடுகளுக்கும் வர்த்தகம் விரிவடைந்து வருகிறது. அதனடிப்படையில் தான் 2003ம் ஆண்டிலிருந்து சி.ஈ.பி.ஏ. என்ற ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைத் தொடங்கியது. கடந்த சார்க் மாநாட்டு நேரம் மன்மோகன் கொழும்பு சென்றபோது கையெழுத்திடுவதாக இருந்த அந்த ஒப்பந்தம் தள்ளிப்போடப்பட்டது. இப்போது மீண்டும் ராஜபக்சே வருகையையொட்டி அதே ஒப்பந்தம் பேசப்படுகிறது. ஆனால் இலங்கையிலுள்ள சிங்கள அறிவுஜிவிகளை தூண்டிவிட்டு, ராஜபக்சே இந்தியாவுடனான அத்தகைய ஒப்பந்தத்திற்கு கையெழுத்திடுவதை எதிர்த்த குரலை எழுப்பி விட்டுத் தான், இங்கே வருகை புரிந்திருக்கிறார். ஆகவே இந்த முறையும் இந்திய அரசுக்கும், இந்திய முதலாளிகளுக்கும் வர்த்தக மட்டத்திலும் வெற்றி கிட்டவில்லை என்று தெரிகிறது.
ஜனநாயக அரங்கிலும் இலங்கைக்கு எந்தவொரு நெருக்கடியையும் இந்திய அரசால் கொடுக்க முடியவில்லை. மனிதாபிமான மட்டத்திலும் தமிழர்களுக்கு மறுவாழ்வோ, அரசியல் தீர்வோ பெற்றுத் தர இந்திய அரசால் இயலவில்லை. வணிக அரங்கிலும் இந்திய அரசும், இந்திய பெருமுதலாளிகளும் விரும்புகின்ற கொள்ளையை விரும்பும் அளவிற்கு அடிக்க முடியவில்லை. பின் எதற்காக இந்த போர்க்குற்றவாளியின் வருகைக்கு இப்படி சிவப்புக்கம்பள வரவேற்பு என்பதை உலகச்சமூகம் கேட்கத்தொடங்கியுள்ளது.