Friday, October 1, 2010

அலகாபாத் தீர்ப்பு ஒரு அரசியல் சதி என்று ஏன் கருதப்படவேண்டும்?

அறுபது ஆண்டுகளாக எதிர்பார்த்திருந்த ஒரு தீர்ப்பு அலகாபாத் நீதிமன்றத்திலிருந்து வெளியிடப்பட்டிருக்கிறது. 8189 பக்கங்களுக்கு அந்த தீர்ப்பு எழுதப்பட்டுள்ளது. அப்படியானால் தீர்ப்பு எழுதிய மூன்று நீதியரசர்களும் கண்டபடி பக்கம், பக்கமாக எழுதி கிழித்து விட்டார்களா என்று நாம் எண்ணிவிடக்கூடாது. மூன்று நீதியரசர்களான சர்மா, அகர்வால், கான் ஆகியோரில், அகர்வால் 5238 பக்கங்களில் தனது தீர்ப்பை எழுத, சர்மா 2666 பக்கங்களில் தனது தீர்ப்பை தர, கான் மட்டும் 285 பக்கங்களில் தனது தீர்ப்பை எழுதியுள்ளார். கான் தான் கண்டதை அல்லது கண்டுபிடித்ததை சுருக்கமாக எழுதியிருக்கும் போது, ஏன் இந்த இந்து மதம் சார்ந்த இரு நீதியரசர்களும் அதிகமான பக்கங்களை விரயம் செய்திருக்கிறார்கள் என்பது சிதம்பர ரகசியம். அதாவது அவர்கள் தங்கள் கற்பனைகளை, அல்லது தாங்கள் கண்டுபிடித்ததை அல்லது தங்களுக்கு பிடித்ததை எழுதி இருக்கிறார்கள் போல தெரிகிறது.

இது " கண்ணாடி. எச்சரிக்கையாக கையாளுங்கள்" என்று சொல்லக்கூடிய மதம் சம்பத்தப்பட்ட விஷயம் இல்லயா? அந்த கவனம் அவர்களுக்கு இல்லையே? ஆனாலும் தமிழ் நாட்டில் உள்ள, அறிவுஜீவிகள் மத்தியில் உலாவும் ஏடு என்று பெயர் பெற்ற ஒரு தமிழ் ஏடு இதை, "அரசியல்தனமான தீர்ப்பு" என்று தலைப்பிட்டு தலையங்கம் எழுதிள்ளது. அந்த ஏடு அப்படி எழுதியது உள்ளபடியே ஆச்சர்யமான ஒன்றுதான். ஏன் என்றால் அவர்களிடம் இந்துத்துவா வாடை வரும் என்பதுதான் எல்லோரது எதிர்பார்ப்பும். கட்டபஞ்சாயத்து தீர்ப்பு போல உள்ளது என்று அந்த இதழ் எழுதியுள்ளது. இதையா உயர்நீதிமன்றத்திடம் எதிர்பார்த்தோம் என்று கேட்டுள்ளனர்.
தொல்லியல் ஆய்வு துறை கூறிய அறிக்கையில், ஒரு புராதன கோவில் இருந்தது என்பதையும் அது ராமர் கோவிலா என்று தெரியாது என்பதையும் விளக்கியுள்ள நீதிமன்றம், எப்படி அங்கு ராமர் பிறந்தார் என்று கூற முடியும்?

அதுமட்டுமின்றி, கோவிலை இடித்து விட்டுத்தான் மசூதியை கட்டினார்கள் என்பதற்கான ஆதாரம் இல்லை என்றும் கூறியிருக்கிறார்களே? ஆனால் 1992 ஆம் ஆண்டில் ஒரு மசூதியின் கட்டிடம் அதாவது ஒரு வழிபாட்டுத்தலம் இடிக்கப்பட்டதை அனைவரும் காட்சி ஊடகங்களில் கண்டோமே? அப்படியானால் அந்த மசூதி என்பது யாருக்கோ பல நூறு ஆண்டுகளாக சொந்தமாக இருந்தது என்றுதானே அர்த்தம்? அதை இடித்ததனால் மட்டுமே அந்த சொந்தக்காரர்கள் இல்லாமல் போய்விடுவார்களா? அது பற்றி ஏன் இந்த நீதிமன்றம் முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க பார்க்கிறது? இந்த எல்லா கேள்விகளுக்கும் பதில்தான் "இது ஒரு அரசியல்தனமான தீர்ப்பு" என்ற கருத்து. அதுவும் ஒரு இந்து மத நம்பிக்கை உள்ள பிரபல தமிழ்நாட்டு ஆசிரியர் ஒருவரிடமிருந்து வந்திருக்கும் கருத்து. எப்படிப்பட்ட அரசியல்தனம் அது என்பதை நாம் ஆராயலாம்.

முதலில் சாதாரணமாக அரசியலை அலசுபவர்கள் இதை காங்கிரசு கட்சி தன்மீது இப்போது சாட்டப்படும் குற்றமான, காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளின் ஊழலிலிருந்து தப்பித்துக்கொண்டு இன்னொரு நிகழ்ச்சி நிரலை மக்கள் மத்தியில் ஏற்படுத்திவிட்டது என்கிறார்கள். அதையும் நாம் மறுப்பதற்கில்லை. ஆனாலும் அதைவிடப்பெரிய பல அரசியல்கள் இதில் இருப்பது தெரிய வருகிறது. இந்தியாவில் இந்துக்கள், முஸ்லிம்கள் மத்தியில் ஒற்றுமை இல்லாமல் ஆக்கும் ஒரு அரசியல் இருக்கிறது. அதை பாபர் மசூதி இடிப்பு ஏற்படுத்தியது. அந்த இடிப்பை செய்த இந்துத்துவா அமைப்பினர் ஒரு அரசியல் லாபத்திற்காக செய்தார்கள் என்பது நாடறிந்த ரகசியம்.

அப்போது ஆட்சியில் இருந்தது நரசிம்மராவ்வின் தலைமையிலான காங்கிரசு ஆட்சி. இந்த 1949 ஆம் ஆண்டு சிலைகள் மசூதிக்குள்,வைக்கப்பட்டன என்ற நிகழ்வும், காங்கிரசு கட்சி ஆளும்போது ஏற்பட்டதுதான். 1985 இல் பூட்டை உடைத்து உள்ளே போய் ராமரை வழிபட ஏற்பாடானதும் காங்கிரசு கட்சி ஆளும் காலத்தில்தான். இப்போது 2010 இல் தீர்ப்பு வரும்போதும் மத்தியில் காங்கிரசு ஆட்சிதான். அப்படியானால் காங்கிரசு கட்சியும் பெரும்பான்மை மத உணர்வுகளை அறுவடை செய்யத்தான் முயர்ச்சிக்கிறதா? என்ற கேள்வி எழும். அதற்கு காங்கிரசு கட்சியே தனது முரண்பாடான நிலைப்பாடுகள் மூலம் இந்த நேரத்திலேயே தனது வர்ணத்தை நிரூபித்துள்ளது. உச்சநீதிமன்றம் இந்த அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்பை தடை செய்தபோது, சென்ற வாரத்தில் காங்கிரசு கட்சி அந்த தடையை ஆதரித்தது. அதே காங்கிரசு கட்சி உச்சநீதிமன்றம் தடையை நீக்கியபோது உடனே அதையும் ஆதரித்தது. இப்போது வெளிவந்திருக்கும் தீர்ப்பையும் காங்கிரசு கட்சி ஆதரித்து வரவேற்றிருக்கிறது. இதுதான் இந்திய தேசிய காங்கிரசு கட்சி.

அடுத்து நாம் வரவேண்டியது இந்த அரசியல் சதியால், லாபம் பெறப்போகும் சக்திகள் யார்? யார்? என்று வரிசைப்படுத்தி பார்க்கவேண்டும். இந்தியாவில் மக்கள் மத்தியில் அமைதி கெடுமானால், இந்திய மக்கள் மத்தியில் பிளவு ஏற்படுமானால், அது யாருக்கு லாபமாக அமையும்? நிச்சயமாக இந்த நாட்டையோ, இந்த நாட்டு மக்களையோ நேசிக்கின்ற யாருக்கும் அது லாபம் பயக்காது. மாறாக இந்தியாவில் ஒற்றுமை மக்கள் மத்தியில் இருக்க கூடாது என்று என்னும் சக்திகளுக்குதான் அதனால் மகிழ்ச்சி ஏற்படும். அப்படிப்பட்ட சக்திகள் இந்திய மக்களின் ஒற்றுமை இன்மையால் பலன்பெறும் சக்திகளாக இருப்பார்கள். அவர்கள் கண்டிப்பாக இந்திய நாட்டை சுரண்டி கொழுக்க வேண்டும் என்ற சக்திகளாகத்தானே இருப்பார்கள்? அவர்கள் இந்தியாவை காலனி சுரண்டல் செய்ய விரும்பும் ஏகாதிபத்திய சக்திகளாகத்தானே இருக்க முடியும்? அதற்கு பெயர்தானே " பிளவு படுத்தி, ஆள்வது" என்று பெயர்.

இந்த பெயர் இந்தியாவை ஆண்டுவந்த ஆங்கிலேயருக்கு பொருத்தமாக இருந்த காலம் உண்டல்லவா? இப்போது அப்படி பிளவு படுத்தி, இந்தியாவை ஆளவேண்டிய தேவை யாருக்கு இருக்கிறது? அது அமெரிக்காகாரனுக்குதானே இருக்கிறது?

இந்தியாவில் அதிகமான மூலதனமிட்டு, சுரண்டிவரும் அமெரிக்க கம்பனிகளும், பன்னாட்டு மூலதன நிறுவனங்களும் இந்திய மக்களுக்குள் பிளவு இருக்கவேண்டும் என்றும், ஒற்றுமை இருக்க கூடாது என்றும் எண்ணுவார்களா? மாட்டார்களா? அதுமட்டுமின்றி இன்று அமெரிக்க அரசு இந்திய அரசுடன் ஒரு அணு சக்தி ஒப்பந்தத்தை போட்டுக்கொண்டு வருகிறது. அதற்காக ஒரு அணு சக்தி விபத்து இழப்பீடு சட்டத்தையும் கொண்டு வந்துள்ளது. இவையெல்லாம் அமெரிக்க அரசுக்கு தேவையான மற்றும் லாபகரமான செயல்கள். அதற்காக அமெரிக்க அரசு எத்தனை கடினப்பட்டு இந்த சட்டங்களை கொண்டுவர வேண்டியுள்ளது என்பது அனைவருக்கும் தெரியும். அந்த அணுசக்தி விபத்து இழப்பீடு சட்டத்திற்காக, காங்கிரசு கட்சியை ஒருபுறமும், பா.ஜ.க.வை இன்னொரு புறமும் அமெரிக்க அரசு தயார் செய்து பிறகுதான் அந்த சட்டத்தை ஒரு பெரிய நாடகத்தை நாடாளுமன்றத்தில் நடத்தி நிறைவேற்ற வைத்திருக்கிறது. அப்போதே அமெரிக்காவை பொறுத்தவரை அவர்களுக்கு காங்கிரசு என்ற ஆளும் கட்சியும் வேண்டும், பா.ஜ.க.என்ற எதிர்க்கட்சியும் வேண்டும் என்பது நமக்கு புரிய வேண்டும்.

அதே நிலைதான் இந்த தீர்ப்பிலும் ஏற்பட்டுள்ளது. இதுவும் காங்கிரசு மற்றும் பா.ஜ.க. என்ற இரண்டு கட்சிகளும் சேர்ந்து மகிழக்கூடிய ஒரு நிலைதான். அதாவது இந்திய மக்கள் மத்தியில் ஒரு நீண்ட கால பிளவை ஏற்படுத்திவிடலாம் என்ற ஏற்பாட்டில் செய்யப்பட்டதுதான்.
இவ்வாறு ஒரு தீர்ப்பை அறிவிப்பது பெர்ய காரியமல்ல. ஆனால் அதை அவர்களது எதிர்பார்ப்புப்படி மக்கள் மத்தியில் பிளவை ஏற்படுத்தும் நோக்கத்தை நிறைவேற்றுவதுதான் கடினமான செயல். அதை செய்வதில் வளர்ந்து இருக்கும் உயர் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி சாதிப்பதுதான் ஏகாதிபத்தியத்தின் சதி. இதை அரசியல் சதி என்றும் அழைக்கலாம்.

அத்தைகைய ஒரு செயலை இந்த விசயத்தில் அவர்கள் செய்திருக்கிறார்கள் எனபது தான் நாம் கவனிக்க வேண்டிய செய்தி. அதாவது அரசியலை, மத உணர்வுடன் இணைத்து, அதிகாரத்தை கைப்பற்ற இந்துத்துவா சக்திகள் எண்ணியபோதுதான் அவர்கள் பாபர் மசூதி- ராம ஜன்ம பூமி விஷயத்தை கையில் எடுத்தார்கள். அப்போது அவர்கள் கூறியது என்னவென்றால், பெரும்பான்மை மக்களுடைய மத உணர்வு என்றார்கள். அதுதான் உண்மை என்றால் அவர்கள் ஊருக்கே தெரியாமல் இருந்த பாபர் மசூதியை, ஒரே நாளில் போய் இடித்துவிட்டு ராமர் கோவிலை அங்கேயே கட்டி இருக்க முடியும். அது அவர்களது நோக்கம் அல்ல. அரசியல் செய்து இந்து மக்களை ஏமாற்றி அவர்களது வாக்குகளை வாங்கி, அரசியல் அதிகாரத்திற்கு வரவேண்டும் என்பதுதான் அவர்களது அன்றைய நோக்கம். அதனால்தான்.அவர்கள் அன்று இந்தியா முழுவதும் ரத யாத்திரை நடத்தி, அதன்மூலம் மூலை,முடுக்குகளிலும் கூட அவர்களுக்கு தெரியாத பாபர் மசூதி பற்றியும், ராமர் கோவில் பற்றியும், அயோத்தி பற்றியும் தெரியப்படுத்தினார்கள்.அதற்கு அவர்கள் பல ஆண்டுகாலம் இந்திய மக்களை பரப்புரை மூலம் தயார் செய்தார்கள். ஏமாந்தது என்னமோ இந்து உணர்வு உள்ள மக்கள்தான்.

இப்போது அதேபோல காங்கிரசும், பா.ஜ.க.வும் இப்போது சேர்ந்து, இந்த தீர்ப்பை எழுத வைத்திருக்கிறார்கள் என்றால், இரண்டு கட்சிகளும் அமெரிக்க மேலாண்மைக்கு ஆதரவான நிலை எடுப்பதை அதில் காண முடியும். அதற்காக பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு வழிபாட்டுத்தள இடிப்பு, மீண்டும் அதே உணர்வை ஏற்படுத்தாதே என்ற எண்ணத்தில் அதை மீண்டும் தூண்டி விடுவதற்கு இந்திய அரசு எவ்வளவு பாடுபட்டது என்பது நமக்கு தெரியும். அதாவது ஊடகங்களை பயன்படுத்தி, தீர்ப்பு வரப்போகிறது, அமைதி காத்திடுங்கள், கலவரம் வேண்டாம், ஆயுதம் தாங்கிய படையை நிறுத்திவிட்டோம், என்பதாக தினசரி சேதிகளை கொடுத்துக்கொண்டே இருந்த இந்திய அரசின் முதலாளி விசுவாசம் நிச்சயமாக அமெரிக்க அரசால் பாராட்டப்படும்.

அதுமட்டுமின்றி இந்த தீர்ப்பை யாரும் கவனிக்காமல் இருந்துவிடக் கூடாதே என்று, அதற்கு எதிராக அதை தடை விதிக்க கோரி உச்சநீதி மன்றத்தின் படிக்கட்டுகளில் ஒருவரை ஏற்றி, இறக்கி, பிறகு தடை விதித்து, அதையும் ஒரு பரப்புரையாக ஆக்கி மகிழசசி அடைந்தார்கள் என்பது எண்ணிப்பார்கப்படவேண்டும். அதற்கும் மக்கள் செவி மடுக்காமல் இருப்பார்களோ என்று மீண்டும் தீர்ப்பை வெளியிடும் நாள் அன்று கடுமையான பாதுகாப்பு ஏற்பாடு என்று விளம்பரங்கள் செய்து அதற்கு தலைமை அமைச்சர் பெயரில் வேண்டுகோள் என்று அரசு செலவில் பெரிய அளவில் விளம்பரங்கள் செய்து அதன் மூலம் முழுமையான மக்களின் கவனத்தை ஈர்த்து விட்டோம் என்ற செய்தியை அமெரிக்க முதலாளிகளிடம் கொண்டு போய் சேர்த்தால்தான், இந்த இந்திய அடிவருடிகளுக்கு உற்சாகம் வரும். அதை செய்து விட்டார்கள்.

இந்திய அரசு அரசியல் சட்டத்தின் முகப்புரையில் கூறியிருக்கும் மதச்சார்பற்ற அரசு அல்ல என்பதையும், பெரும்பான்மை மதத்திற்கு சாதகமான ஒரு மதச்சார்பு அரசு என்றும் இதன்மூலமாவது புரிந்து கொள்ளப்படவேண்டும். அதுமட்டுமின்றி இந்த உண்மை பகிரங்கமாக தெரியும் பட்சத்தில் இந்த அரசு இயந்திரத்திற்கு எதிரான ஒரு அரசாங்கம் படைக்கிறோம் என்று கூறி செயல்படும் மாவோவாதிகள்தான் பயன்பெறுவார்கள் என்பதும் உணரப்படவேண்டும். இந்த நேரத்தில் இந்திய மக்களின் ஒற்றுமைக்கு எதிரானவர்கள் என்று அறியப்பட்ட அந்த சக்திகளின் அரசியல் சதியை முறியடிக்க விரும்புகிறவர்கள், பெரும்பான்மை மக்கள் மத்தியில் இந்த சிறுபான்மை உரிமைகளை எடுத்து சொல்லி, அதன் மூலம் ஏமாற்றப்படும் அந்த இந்து மத உணர்வுள்ள மக்களை விழிப்படையச்செய்ய வேண்டும். போராட்டங்களை விட, மோதல்களை விட, அவற்றை எதிர்பார்த்து மக்களின் ஒற்றுமையை உடைக்க விரும்பும் சக்திகளின் முயற்ச்சியை முறியடிக்க பெரும்பான்மை மக்கள் மத்தியில் உண்மை செய்திகளை கொண்டு செல்வோம். மக்கள் ஒற்றுமையை வலுப்படுத்துவோம்

Thursday, September 30, 2010

மதம் சார்ந்தவர்கள் மதம் சார்ந்த சொத்து வழக்கில் நீதி தரக்கூடாது. நாத்திகர்களே இதுபோன்ற வழக்குகளில் நீதி சொல்லவேண்டும்.

மதம் சார்ந்தவர்கள் மதம் சார்ந்த சொத்து வழக்கில் நீதி தரக்கூடாது. நாத்திகர்களே இதுபோன்ற வழக்குகளில் நீதி சொல்லவேண்டும்.
மூன்று நீதியரசர்களில், இரண்டு பேர் ஷர்மாவும், அகர்வாலும். இந்துக்கள். அதனால் அவர்கள் கொடுத்த தீர்ப்பில், அயோத்தியில் சர்ச்சைக்குர்யா இடத்தில், ராமர் கூரையின் கீழ் பிறந்திருக்கலாம் என்று கூறியுள்ளனர். யாராவது நீதியரசர் என்ற பெயரில் உள்ளவர்கள் "லாம்" போட்டு ஒரு தீர்ப்பை கொடுப்பார்களா? இவர்கள் இந்துத்துவாவாதிகளாக இருப்பது இதிலேயே தெரிகிறது. அதேபோல கான் என்ற ஒரு நீதியரசர் மட்டும், 1949 ஆம் ஆண்டு 23 ஆம் நாள்தான் ராமர் சிலையை கொண்டுவந்து மசூதிக்குள் வைத்தார்கள் என்கிறார். அவர் இந்து இல்லை என்பதனால் தைரியமாக இப்படி சொல்ல முடிகிறதா? அதேபோல அந்த இரண்டு இந்து நீதியரசர்களும், கோவிலை இட்த்துதான் மசூதியை கட்டியுள்ளார்கள் என்று கூறியுள்ளார்கள். இந்த அதி புத்திசாலிகளுக்கு எப்படி இந்த ரகசியம் தெரிந்த்தது என்று சொல்லவேண்டும். இல்லாவிட்டால் இந்திய மக்கள் இவர்களை கல்லைக்கொண்டு அடித்துக்கொல்லலாமா என்று யாராவது கேட்டுவிடக்கூடாது.
கற்பனை கதைகளை சொல்லவும், கடவுள் அங்கே பிறந்திருக்கலாம் என்று சொல்வதற்கும் இது ஒன்றும் அந்த தாத்தாக்களின் வீட்டு பேரன்களுக்கு சொல்லும் கதை இல்லையே? இது நீதி மன்றம் என்பது அவர்களுக்கு தெரியாதா? சொத்து யாருக்கு சொந்தம் என்று வழக்கு கேட்டால், ஆளுக்கு பாதி எடுத்துகிடுங்க என்பதற்கு இவர்கள் அப்பன் வீட்டு சொத்தா? இவர்கள் பிரித்துக்கொடுத்தது அயோத்தியில் உள்ள நிலத்தை அல்ல, மாறாக இந்த நாட்டு மக்களது நெஞ்சங்களை. இவர்கள் பிரித்து கொடுத்தது இந்த நாட்டு மக்களின் உணர்வுகளை. இந்த நாட்டு மக்களின் மனதுகளை. இதற்க்கு ஒரு நீதியரசர் மற்றும் நீதிமன்றம் தேவையா?
இது ஒருமதச்சர்பு அரசு என்பது பலருக்கு தெரிவதில்லை. அதனால்தான் இங்குள்ள நீதிமன்றமும் ஒருமதச்சார்பு நீதிமன்றமாக இருக்கிறது. தியோகிரடிக் என்று ஆங்கிலத்தில் கூறப்படும் ஒருமதச்சார்பு அரசு மற்றும் நீதிமன்றம் இருப்பது இப்படியாவது அம்பலமானதே.

நீதிமன்றம் ஒரு சார்பு தீர்ப்பு வழங்கலாமா? குழப்பலாமா?

அல்லஹாபாத் உயர்நீதிமன்றம் பாபர்--கோவில் விவகாரம் பற்றிய வழக்கில், யாருக்கு அந்த இரண்டரை ஏக்கர் நிலம் சொந்தம் என்ற வழக்கை மட்டுமே எடுத்துக்கொண்டுள்ளது. ராமர் பிறந்த இடம் என்று சொல்லப்படும் இடம் உண்மையிலேயே ராமர் பிறந்த இடமா? அதில் ஒரு ராமர் கோவில் இருந்ததா? அல்லது அது விவரம் தெரிந்த காலத்திலிருந்து பாபர் கட்டிய மசூதி இருந்த இடமா? இதுதான் அந்த நீதிமன்றம் முன்னால் உள்ள வழக்கு. அறுபது ஆண்டுகளாக நீண்டுகொண்டே போகின்ற ஒரு வழக்காக இந்த வழக்கு இருக்கிறது. இந்திய வழக்காடுமன்றங்களில் இத்தனை ஆண்டுகளாக இழுத்துக்கொண்டு இருக்கும் வழக்கு இது என்பதாகவும் தெரிகிறது. அல்லஹாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ கிளை இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த வழக்கை பாபர் மசூதி வழக்கு என்றும், ராமர் பிறந்த இடம் பற்றிய சர்ச்சை வழக்கு என்றும் ஒவ்வொரு விதமாக அழைக்கப்படுகிறது.
அந்த நிலம் அறுபது சதுர அடிக்கு, நாற்பது சதுர அடி என்ற நிலப்பரப்பு யாருக்கு சொந்தம் என்ற பிரச்சனைதான். அந்த இடத்தில்தான் பாபர் மசூதி 1992 ஆம் ஆண்டு டிசம்பர்-6 ஆம் நாள் வரை இருந்தது. அனைவரும் காட்சி ஊடகத்திலாவது பார்க்கும் வண்ணம் அன்றைய நாளில் உடைக்கப்பட்டது. ஒரு வழிப்பாட்டு தளத்தை உடைக்கலாமா என்ற பிரச்சனை எழுந்தது. இந்த பிரச்சனை அதாவது அந்த குறிப்பிட்ட இடம் பாபர் மசூதிக்கு சொந்தமானதா? அல்லது ராமர் கோவிலுக்கு சொந்தமானதா? என்ற பிரச்சனை 1885 முதல் இருக்கிறது. பாபர் மசூதி என்ற அந்த கட்டிடத்திற்குள், இருக்கும் ராமர் சிலைக்கு வழிபாடு செய்ய அனுமதிக்கவேண்டும் என்று அந்த ஆண்டு நிர்மொஹி அகாரா என்ற அமைப்பு அனுமதி கேட்டு, வழக்கு ஒன்றை நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றது. அப்போது அனுமதி கொடுக்கப்படவில்லை.
ஆனால் அடுத்த ஆண்டே அதாவது 1886 இல் பைசாபாத் நீதிமன்றத்தின் மாவட்ட நீதியரசர் எப்.ஈ.ஏ. சமீர் ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளார். அதில் இந்துக்களால் புனித இடமாக நம்பப்படும் ஒரு இடத்தில் குறிப்பாக ஒரு மசூதியை கட்டியிருக்கிறார்கள் என்பது கெடுவாய்ப்பானது என்றார். அது 356 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது என்பதால் இப்போது அதை நிவர்த்தி செய்வது என்பது முடியாத காரியம். 1950 தொடங்கி அலஹாபாத் நீதிமன்றம் முன்னால் ஐந்து வழக்குகள் யாருக்கு அந்த நிலம் சொந்தம் என்று போடப்பட்டுள்ளது. அதில் நான்கு வழக்குகள் இந்துக்களுக்கு ஆதரவாகவும், ஒன்று சன்னி வக்போர்டால் முஸ்லிம்களுக்கு ஆதரவாகவும் போடப்பட்டுள்ளது. அனைத்து வழக்குகளுமே அந்த குறிப்பிட்ட ஒன்றரை ஏக்கர் நிலம் தங்களுக்கே சொந்தம் என்று போடப்பட்டுள்ளன. அந்த குறிப்பிட்ட வழக்குகள்தான் இப்போது அந்த அலஹாபாத் நீதிமன்றம் முன்னால் உள்ள மூன்று நீதியரசர்கள் முன்பு வந்த வழக்குகள். மூன்று நீதியரசர்களும், அகர்வால், சர்மா, கான் என்று பெயர்கொண்டவர்கள்.

1528 இல் மிர் பாகி, பாபர் மசூதியை கட்டுவதற்கு முன்பு அந்த சர்ச்சைக்குரிய இடத்தில் ஒரு கோவில் இருந்ததா? என்ற கேள்வி நீதியரசர்கள் முன்னால் நின்றது. 1961 இல் சன்னி வக்போர்டால் போடப்பட்ட வழக்கு, கால கெடுவால் தடுக்கப்பட்டதா? என்பதற்கும் பதில் வேண்டி நீதிமன்றம் முன்னால் நின்றது. அதேபோல அயோத்தியா உண்மையில் ராமர் பிறந்த இடமா? என்பதற்கும் நீதியரசர்கள் பதில் சொல்லவேண்டும் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. அதேபோல இந்துக்கள் அந்த இடத்தில் நீண்ட காலம் வழிபட்டுக்கொண்டிருந்தார்கள் என்பதற்கு ஆதாரம் இருக்கிறதா? என்ற கேள்வியும் இருந்தது. 1934 இல் முஸ்லிம்கள் அந்த மசூதியை வழிபாட்டு இடமாக பயன்படுத்துவதிலிருந்து கைவிட்டு விட்டார்கள் என்றால், ராமர் சிலைகள் அந்த மசூதிக்குள் திடீரென தோன்றியது மந்திரமா? என்ற கேள்வியும் எழுந்தது.
இந்த கேள்விகள் கடந்த ஆறு பத்தாண்டுகளாக தீவிரமாக விவாதிக்கப்படும் கேள்விகள். உணமைகளை சொல்வது என்பது மட்டுமின்றி, நம்பிக்கைகளா சம்பந்தப்பட்ட விசயங்களில் அந்த நீதிமன்றம் என்ன சொல்லப்போகிறது என்று இந்த நாடு எதிர்பார்த்தது. நம்பிக்கைகள் விசயத்தில் நீதிமன்றங்கள் தீர்ப்பு சொல்ல முடியுமா? என்றால் அந்த கேள்வியும் சட்டத்தில் கவனிக்கப்படவேண்டும். 1949 இல் டிசம்பர்-22 ஆம் நாள் திடீரென அந்த இடத்தில் தோன்றிய ராமர், சீதை, லட்சுமணன் சிலைகள் மீது முரண்பாடு வந்தவுடன் அரசு அந்த இடத்தை கைப்பற்றியது பற்றியும் தெளிவுபடுத்தவேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

தீர்ப்பு வரும் நாள் என்று செப்டம்பர் முப்பதாம் நாளை அறிவித்து அதை ஊடகங்கள் மூலம், பதட்டம் வேண்டாம், பதட்டம் வேண்டாம் என்று அடிக்கடி சொல்லி பதட்டத்தை ஏற்ப்படுத்திய அணுகுமுறை அரசின் அணுகுமுறையாக இருந்தது. நீதிமன்றத்திற்குள் வழக்கு போட்ட நபர்கள்தான் செல்லவேண்டும் என்று கூறி மேலும் பதட்டம் ஏற்ப்படுத்தப்பட்டது. அலஹாபாத் உயர் நீதிமன்றத்தில் உள்ள அதிகமான இந்து மதம் சார்ந்த வழக்கறிஞர்கள் குரல் எழுப்பி ஊடகங்களில் பதட்டத்தை கூட்டினர். நீதிமன்றத்திற்குள் செல்பவர்கள் தீர்ப்பு கூறி முடிக்கும்வரை வெள்யே வரக்கூடாது என்று அறிவிக்கப்பட்டது. சன்னி வக்போர்ட் மற்றும் நிர்மோகி அகாரா தொடுத்த வழக்கு கால கெடு முடிந்து விட்டது என்பதாக கூறத் தொடங்கினார்கள்
மூன்று பகுதிகளாக அந்த நிலம் பிரிக்கப்பட வேண்டும் என்றும் தீர்ப்பை பற்றி காட்சி ஊடகங்கள் கூறத்தொடங்கின. அலஹபாத் உயர்நீதிமன்ற இணையதளம் திடீரென சிக்கிவிட்டது. சிலைகளை அங்கிருந்து அகற்றவேண்டியதில்லை. மூன்று மாதங்களில் நிலம் பிரிக்கப்படவேண்டும். இந்துக்களின் வழக்கறிஞர் ரவிசங்கர் காட்சி ஊடகங்களில் விளக்கினார். ராமர் பிறந்த நிலம் என்பதை அந்த நீதிமன்றம் ஒப்புக்கொண்டுள்ளது. இதுதான் பிரச்னையை மேலும் சிக்கலாக்கும். தீர்ப்பு மிகவும் தவறு என்று வழக்கறிஞர் ராஜீவ் தவான் கூறினார். 1992 இல் மசூதி இடிக்கப்பட்டது உண்மையா இல்லையா என்று கேட்டார். அப்படி இடிக்கப்பட்டது உண்மை என்றால், அந்த இடத்தின் சொந்தக்காரர்களான சன்னி வக்போர்டு தொடுத்த வழக்கை எப்படி காலாவதியானதாக கருதி தள்ளுபடி செய்ய முடியும்? என்று வினவினார்.

பிரச்னையை மிகவும் சிக்கலாகக் நீதியரசர்கள் ஏற்பாடு செய்து விட்டார்கள். இந்த நாடு மதச்சார்பற்ற நாடு அல்ல என்பதாக இதன்மூலம் சொல்லுகிறார்களா? இது ஒரு ஒருமதச்சார்பு அரசு இயந்திரம் என்று இதன்மூலம் தெரிகிறதா? தீர்ப்பு ஒரு சார்பானது என்பதை ராஜீவ் தவான் கூறினார். மூன்றில் ஒரு பகுதியை முஸ்லிம்களுக்கு கொடுக்கவேண்டும் என்று கூறிவிட்டு, மீதம் இரண்டு பகுதிகளை இரண்டு இந்து அமைப்புகளுக்கு கொடுக்கவேண்டும் என்று தீர்ப்பு கொடுக்கப்பட்டது. இது இரண்டு இந்து அமைப்புகளுக்கு சேர்த்து, மூன்றில் இரண்டு பங்கு இந்துக்களுக்கு என்றும், ஒரு பங்குதான் முஸ்லிம்களுக்கு என்றும் தீர்ப்பு கூறுவதாக பொருள் .இது ஒருமதச்சார்பு தீர்ப்பு இல்லையா? பாபர் மசூதி கமிட்டிக்கு ஒரு பகுதியை கொடுத்தால், அதில் பாபர் மசூதியை கட்டிக்கொள்ளுங்கள் என்று கூறுகிறார்களா? ஒரு பகுதியை நிர்மோகி அகாரா அமைப்பிற்கு கொடுக்க வேண்டும் என்றும், இன்னொரு பகுதியை புதிதாக அமைக்கப்படும் அறக்கட்டளைக்கு கொடுக்கவேண்டும் என்றும் தீர்ப்பு கூறியிருப்பதன் நோக்கம் என்ன?
இது பிரச்னையை மேலும் சிக்கலாக்கவா? இது கட்டப்பஞ்சாயத்து போல இல்லையா? நீதிமன்றம் ஒரு சிவில் வழக்கில், சொத்து வழக்கில் ஒனக்கும் இல்லை, அவனுக்கும் இல்லை, இரண்டு பேருக்கும் கொஞ்சம், கொஞ்சம் என்று கூறுமா? நமக்கு தலை சுற்றுகிறது. இந்த நாட்டு மக்களுக்கும் தலை சுற்றட்டும் என்று இப்படி ஒரு விளையாட்டா? எப்படியோ இந்த நாட்டு மக்களுக்குள் ஒற்றுமை இருக்கக்கூடாது என்பது ஆள்வோரின், அதாவது சட்டம் மூலம் ஆளும் நீதியரசர்களின் நோக்கமா? இப்படி குழம்பி திரிகிறார்கள் ஒற்றுமை விரும்புவோர்.

Wednesday, September 29, 2010

அயோத்தி நிலம் யாருக்கு சொந்தம்? ராமர் பிறந்தது எங்கே?-மக்கள் மன்றம் தீர்ப்பு வழங்குமா?

இந்தியாவில் ஒரு பிரச்சனையில்லா பிரச்சனை உருவாக்கப்பட்டு, வளர்க்கப்பட்டு அதுவே மத நம்பிக்கையாக கற்ப்பிக்கப்பட்டு, பிற மத நம்பிக்கையுடன் மோதல் இருப்பதாக வரலாறு கூறப்பட்டு, அந்த வரலாற்றை மீண்டும் படைக்க வந்ததாக தங்களை தாங்களே சிலர் வர்ணித்துக்கொண்டு, இன்று நாடே அந்த மத மோதல் சகதியில் விழா இருப்பதாக அரசால் கூறப்படுகிறது. அலஹாபாத் உயர்நீதிமன்றம் அதற்க்கான வழக்கில் தீர்ப்பு கூறப்போவதனால் இந்த பதட்டம் ஏற்பட்டுள்ளது என அரசு கூறுகிறது. அலஹாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறப்போகும் வழக்கு, அங்குள்ள நிலம் யாருக்கு சொந்தம் என்பது பற்றியது. அதாவது அந்த சர்ச்சைக்குரிய அயோத்யா நிலம் ராமர் பிறந்த இடமா? அல்லது பாபர் மசூதி கட்டப்பட்ட இடமா? என்பதுதான் அந்த வழக்கின் சர்ச்சை. இதை ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வரலாற்று ஆராய்ச்சியாளர்கள், மூன்று கேள்விகளை முன்வைக்கிறார்கள். ஒன்று, ராமர் பிறந்த இடம் என்பதற்கான ஆதாரம் என்ன உள்ளது? இரண்டாவது, ராமர் கோவில் ஒன்று இருந்ததை இடித்துவிட்டுத்தான் அதே இடத்தில் பாபர் மசூதி கட்டப்பட்டது என்பதற்கான ஆதாரம் உள்ளதா? கோவில் இருந்ததாகவோ, அது இடிக்கப்பட்டதாகவோ, ஒரு பிரபல கருத்து அன்றைய காலத்தில் இருந்ததா? அல்லது சமீபத்தில் உருவாக்கப்பட்டதா? இப்படிப்பட்ட மூன்று கேள்விகளை ஆராய்ச்சியாளர்கள் அடிப்படையாக எடுத்துக்கொள்கிறார்கள்.
மகாராஜா விக்ரமாதித்தன் ராமர் கோவிலை கட்டினான் என்று ஒரு கருத்து உள்ளது. விக்ரமாதித்தன் என்ற பெயர் கொண்ட அரசன் ஒருவன் அல்ல ; பலர் இருந்திருக்கிறார்கள். எந்த விகிரமாதித்த அரசன் என்று சரியாக கூறுவதற்கு இந்துத்துவாவாதிகளிடம் சான்று இல்லை. வால்மீகி தனது ராமாயணத்தில், அயோத்தி மன்னர் ராமர் என்று குறிப்பிட்டுள்ளதும், எந்த அயோத்தி என்பதற்கான ஆதாரத்தை இந்துத்துவா சக்திகளால் கொடுக்க முடியவில்லை. கிருத்து பிறப்பதற்கு முன்பு 3102 ஆம் ஆண்டில் காலி யுகத்திற்கு முன்பு என்று அயோத்தி நகரை குறிப்பிட்டுள்ளார்கள். அதுவும் தொல்பொருள் ஆராய்ச்சி கழகத்தாரால் ஆதாரமாக கொடுக்கப்பட முடியவில்லை. வால்மீகி ராமாயணம் ஒரு கற்பனைக்கதை என்றும் பல வரலாற்று ஆசிரியர்கள் கூறியுள்ளனர். அயோத்தி என்று அவர்கள் குறிப்பிட்டிருப்பது ஒரு வளர்ச்சி அடைந்த நகரம் என்பதாக காவியத்தில் குறிக்கப்பட்டுள்ளது. அப்படி ஒரு வளர்ந்த நகரை நம்மால் இந்தியாவில் காண முடியவில்லை. மிகவும் பின்னுள்ள ஒரு காலத்தை சேர்ந்ததாக அந்த அயோத்தி நகர் பற்றிய கதை எழுதப்பட்டிருக்கவேண்டும் என்று தெரிகிறது. சகேடா நகர் என்பதைத்தான் அவர்கள் அயோத்தி என்று கூறுகிறார்கள் என்பதாகவும் தெரிகிறது.
ஸ்கந்த குப்தா என்ற விகிரமாதித்தனைத்தான் இவர்கள் அயோத்தி நகரை உருவாகியதாக குறிப்பிடுவதாக தெரிகிறது. கிருத்து பிறந்த பின்பு ஐந்தாவது நூற்றாண்டின் கடைசியில் சூரியவம்ச அரசு அயோத்தியில் இருந்தது. அந்த அயோத்தியில் புத்திசம், சமண மதம், இந்து மதம் ஆகியவை இருந்துள்ளது. ராமர் வழிப்பாடு என்பது மிக அண்மைகாலத்தில் தான் வந்துள்ளது. ஒன்றாவது மற்றும் நான்காவது சமண தீர்த்தகாரன் மரபு என்பது அங்கே இருந்திருக்கிறது. பர்ஷ்வனாதா, மகாவீரா ஆகியோரது வருகை அயோத்தி நகரில் நிகழ்ந்துள்ளது. இரண்டாவது நூற்றாண்டு வரை அந்த இடத்தில் ராமர் வழிபாடு இருந்ததற்கான ஆதாரம் எதுவும் யாரிடத்திலும் இல்லை. பதினோராவது மற்றும் பன்னிரெண்டாவது நூற்றாண்டுவரை ராமர் என்ற பேச்சுக்கே அங்கே இடமில்லை. இதுதான் வரலாற்று உணமையாக இருக்கிறது.
1528 இல் பாபர் மசூதி இந்தியாவில் உள்ள அயோத்தியில் கட்டப்பட்டிருக்கிறது. அயோத்தி நகரம் எந்த நதிக்கரையில் இருந்தது என்ற ஆதாரம் வேறு புதிய குழப்பத்தை ஏற்ப்படுத்துவதாக இருக்கிறது. கங்கை நதிக்கரையில்தான் இந்தியாவில் உள்ள அயோத்தி இருக்கிறது... . ஆனால் சகேடா என்ற நகர் சரயு நதிக்கரையில் இருக்கிறது. அன்றைய அயோத்தியும் சரயு நதிக்கரையில்தான் இருந்தது.. அந்த சரயு நதி இன்றைய ஆப்கானிஸ்தானில் இருக்கிறது. இந்தியாவின் அயோத்திக்கு புத்தர் இரண்டு முறை வருகை புரிந்துள்ளார். இவ்வாறு வரலாறு கூறும் எந்த ஆதாரமும் இவர்கள் இன்று கூறுகின்ற அயோத்தியை ராமர் பிறந்த இடம் என்று சொல்வதற்கான ஆதாரமாக இல்லை. அப்படியானால் இவர்கள் கூறும் ராமர் பிறந்த இடமான அயோத்தி என்ற பெரிய நகரம், சராயு நதிக்கரையில் ஆப்கானிஸ்தானில் உள்ள அயோத்தியாக இருக்கலாம். அதை கேள்விப்பட்டதனால், ஆத்திரம், மதரீதியான பகைமை ஆகியவற்றால் உந்தப்பட்டு, இந்திய அயோத்தியை சர்ச்சைக்குரிய இடமாக மதவாதிகள் ஆக்கியிருக்கலாம் அதுவே பின்னாளில் மதத்தை வைத்து அரசியல் செய்யவேண்டும் என்று எண்ணியவர்களுக்கு சாதகமாக போய் இருக்கலாம். அதனாலேயே இந்தியாவில் உள்ள அயோத்தி இப்போது பெறும் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது.

இந்தியாவெங்கும் பெரும் வரலாற்று ஆராய்ச்சியாளர் என்று பெயர் பெற்றவர் முன்னாள் குடியரசு தலைவரான டாக்டர் ராதாகிரிஷ்ணனின் மகனான சர்வபள்ளி கோபால், இந்த பாபர் மசூதி சர்ச்சை பற்றி எழுதியுள்ளார். அவர் எழுதிய புத்தகத்தின் பெயர், " மோதலை பற்றிய உடல்கூறு". அதில் பணிக்கர், ஸ்ரீவத்சவா, நூரானி ஆகியோர் எழுதிய ஆராய்ச்சி கட்டுரைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அந்த கட்டுரைகள் நேரடியாக மசூதி--கோவில் விவகாரத்தை பற்றி எழுதப்பட்டுள்ளன.அதில் பணிக்கர் கூறும்போது, வால்மீகியின் அயோத்தியா இன்றைய அயோத்தியா அல்ல என்று எழுதுகிறார். கிருத்துவின் முதல் நூற்றாண்டிற்கு பிறகுதான் ராமர் வழிபாடு தொடங்கப்பட்டது என்றால், ராமர் வழிபாட்டின் மையமாக அயோத்தியா உருவானது பதினெட்டாம் நூற்றாண்டில்தான் என்கிறார் அவர். அதேபோல பாபர் ஆட்சி மத சகிப்புதனமையற்று நடந்துகொண்டதாகவோ, கோவில் இடிப்பில் ஈடுபாட்டதாகவோ எந்த ஆதாரமும் வரலாற்றில் இல்லை என்பதை அவர் உறுதி செய்கிறார். ஆங்கிலேயர்களின் ஆட்சிக்கு முந்திய காலத்திய இந்து மத நூல்கள் எதிலுமே, கோவில்கள் எதுவும் இடிக்கப்பட்டதாக எழுதப்படவில்லை. இவ்வாறு வரலாற்று உண்மைகள் வித்தியாசமாக இருக்கும்போது, மத உணர்வுகளை வைத்து அரசியல் செய்யவேண்டும் என்று என்னுபவர்கல்தான் இந்த சர்ச்சையை பெரும் சிக்கலாக ஆக்கிவிட்டார்கள்.
ஆகவே அலஹாபாத் உயர்நீதிமன்றம், செப்டம்பர் முப்பதாம் நாள் எந்த தீர்ப்பை கொடுத்தாலும், இந்திய மக்கள் தங்களுக்குள் உள்ள ஒற்றுமையை உடைக்க எந்த மத உணர்வுகளையும் அனுமதிக்க கூடாது என்று நாமும் கேட்டுக்கொள்வோம்.

Tuesday, September 28, 2010

விவசாயம் பற்றிய அறிவு இன்றியே நெல்லுக்கு பெயர் வைப்பதா?

இந்திய நாட்டின் அடிப்படை பொருளாதாரம் விவசாய பொருளாதாரம். அதை பற்றிய அறிவு ஆள்வோருக்கு இருக்கவேண்டும் என்பது ஒரு எதிர்பார்ப்பு. சரி. விவசாயத்தை பற்றிய நேரடி அறிவு இல்லாவிட்டாலும் பரவாயில்லை. அதை பற்றி தெரிந்தவர்களிடம் கேட்டுதானே ஆழ வந்தோர் திட்டமிடுவார்கள்? அப்படி ஒரு நிகழ்வு தமிழ்நாட்டில் நடக்க மாட்டேன் என்கிறதே? இங்கே பாசன நிலங்களின் அளவு, நாளுக்கு நாள் குறைந்து வருகிறதே? பாசனத்திற்கு தஞ்சை டெல்டா மாவட்டங்களில் உள்ள நிலத்திற்கு தேவையான நீரை தருகின்ற காவேரி ஆற்றை தமிழ்நாட்டிற்கு கொண்டுவருவது பற்றி போதுமான அக்கறை இல்லையே? முல்லை பெரியார் அணை தண்ணீர் வந்தால்தான் தேனீ, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் விவசாயத்திற்கு தண்ணீர் கிடைக்கும் என்று ஆள்வோருக்கு அக்கறை இல்லையே? ஆந்திராவில் கட்டப்படும் தடுப்பணைகள் நிறுத்தப்பட்டால்தான், பாலாறு தமிழ்நாட்டிற்குள் சரியாக பாயும் என்பதும், அதனால் மட்டும்தான் காஞ்சி, வேலூர், கடலூர், மாவட்டங்களில் உள்ள விவசாயத்திற்கு பயன் கிடைக்கும் என்பதும் ஆளும் கூட்டத்திற்கு புரிவதில்லையே? இதற்கெல்லாம் காரணம் நாட்டை மாநிலத்தில் ஆளவந்தோர் விவசாயம் பற்றி அறியாதவர்கள். அக்கறையில்லாதவர்கள் என்று கூறினால் கோபம் கொள்கிறார்கள். ஆனால் இப்போது உண்மை பையிலிருந்து வெள்யே வந்த பூனை போல வெள்யே தெரிந்துவிட்டது
தமிழக முதல்வர் கலைஞர் தனது வாழ்நாள் சாதனையாக ராஜ ராஜ சோழனின் தஞ்சை பெரிய கோயிலின் ஆயிரமாவது ஆண்டு என்ற மாபெரும் விழாவை நடத்தி சாதனை புரிந்துள்ளார். அதில் மிகவும் நீடித்த தன்மை உள்ள சாதனை என்று அவர் நினைப்பது, தமிழக விவசாயத்தில் தனது தலையீடு என்று அவர் நினைக்கலாம். ராஜராஜன் 1000 என்ற பலமான ஒரு பெயரை, தான் செம்மை நெல்லுக்கு வழங்குவதாக அப்போது அறிவித்துள்ளார். அதற்கு விளக்கமும் கூறியுள்ளார். வீரபாண்டி ஆறுமுகம் என்ற விவசாயத்துறை அமைச்சர் தன்னிடம் அந்த நெல் அதிகமான விளைச்சலை தருவதாக கூறினார் என்கிறார் முதல்வர். நான்கு ஆண்டுகளுக்கு முன்பே இதற்க்கு செம்மை நெல் என்று பெயரிட்டதாகவும் கூறியுள்ளார். அப்படி ஒரு விசேசமான நெல் எது என்று நாம் ஆராய்ந்தோம். சி.பி.ஐ. கட்சியின் விவசாய சங்கத்தின் தலைவர் துரைமாணிக்கம் ஒரு அறிக்கையை இன்றைய ஜனசக்தி ஏட்டில் கூறியுள்ளார். அதில் அப்படி ஒரு நெல்லே கிடையாதே ? என்று கேள்வி எழுப்பியுள்ளார். அதனால் இந்த விவகாரம் மேலும் சிக்கலாக மாறுகிறது.
உண்மை என்ன என்று பார்ப்போம். Systamatic Rice Intensification என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் "நெல் உற்பத்தியை தீவிரமாக துரிதப்படுத்தும் ஒழுங்கமைக்கப்பட்ட முறை" என்பது நெல் உற்பத்தியில் புதிதாக பயன்படுத்தப்படுகிறது. இந்த முறையில் பழைய முறையிலிருந்து பல மாறுதல்கள் உள்ளன. அதாவது ஒரு ஏக்கர் நிலத்தில் கொத்து,கொத்தாக விதைகளை போடவேண்டியது இல்லை. மாறாக ஒன்றேகால் அல்லது ஒன்றரை கிலோ விதையை ஒரு ஏக்கருக்கு விதைத்தால் போதும். வழமையாக நாற்று பயிரை முப்பது அல்லது நாற்பத்தைந்து நாட்களுக்கு வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. மாறாக இந்த முறைப்படி ஏழு நாட்களிலிருந்து பதினைந்து நாட்களிலேயே நாற்றுகளை பிடுங்கி நட்டு விடலாம். அப்படி நடும்போது அது அதிகமாக வேர் பிடிக்கும். அதை அடி மண்ணுடன் சேர்த்து பிடுங்கி நடவேண்டும். வழக்கமாக நாற்றுகளை இரண்டிற்கு மேல் நடும் பழக்கம் போல இல்லாமல், இந்த முறையில் ஒரு அடிக்கு, ஒரு நாற்று என்று நடவேண்டும். அதை ஒற்றை நாற்று முறை என்று அழைக்கிறார்கள். இந்த ஒற்றை நாற்று முறையைத்தான் செம்மை நெல் முறை என்கிறார்கள். இந்த முறையிலான நாற்று நடுதலில் தண்ணீரை மூன்றடிக்கு நிற்கவைக்க வேண்டியது இல்லை. காய்ச்சலும், பாய்ச்சலுமாக காய்கறிகளுக்கு ஊற்றுவதுபோல தண்ணீரை பாய்ச்சினால் போதும். அதேபோல அறுவடையை 120 நாட்கள் காத்திருக்க வேண்டியது இல்லை. 110 நாட்களிலேயே அறுவடை செய்து விடலாம்.
நான்கு ஆண்டுகளுக்கு முன்னால், விவசாய அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், இந்த ஒற்றை நாற்று முறை எந்த அளவுக்கு அதிக விளைச்சலை கொடுக்கிறது என்று முதல்வரிடம் கூறினார் போல தெரிகிறது. விவசாயம் பற்றி கிஞ்சித்தும் தெரியாத முதல்வரோ, அப்படியானால் அதற்கு செம்மை நெல் என்று பெயர் வைத்து விடலாமே என்று கூறினார் போலும். இதை கேட்டு சிரிக்கவும் முடியாமல், அழவும் முடியாமல் விவசாயத்துறை அதிகாரிகள் அதையே " செம்மை நெல் சாக்படி முறை" என்று கூறத்தொடங்கியுள்ளனர். தான் ஒரு நெல்லுக்கு என்று பெயர் வைத்ததை இந்த விவசாய அமைச்சர்கள் சாகுபடி முறை என்பதாக கூறுகிறார்களே என்று முதல்வருக்கு மறுபரிசீலனை வந்திருக்க வேண்டும். வீரபாண்டியருக்காவது புரிந்திருக்க வேண்டும். தாங்கள் செய்வது எல்லாமே சரியானது என்று எதிர்க்கட்சிகாரர்களிடம் வாதாடுவதுபோல, இதிலும் இவர்கள் நடந்து கொண்டுள்ளார்கள். அதன் விளைவே இப்போது இந்த சாகுபடிமுரையை ஒரு நெல் என்று நினைத்துக்கொண்டு, தமிழக முதல்வர் அடஹ்ர்க்கு புதிய பெயராக ராஜராஜன் 1000 என்று பெயரிட்டுவிட்டார். அவருக்கு விவசாயம் பற்றி இருக்கும் அறிவை மட்டுமல்ல, அக்கறையையும் இது அம்பலப்படுத்தி விட்டது.

Monday, September 27, 2010

உயர் கல்வி இட ஒதுக்கீடு, பிற்படுத்தப்பட்ட சமூகத்தால் கைப்பற்றப்படுமா?

இட ஒதுக்கீடு என்பது தமிழ்நாட்டிலிருந்துதான் இந்திய துனைக்கண்டத்திற்க்கே எடுத்து சொல்லப்பட்டது என்பது நாம் பெருமையாக கூறிக்கொள்ளும் ஒரு வரலாறு. தந்தை பெரியார் வழி வந்தவர்கள்தான், இட ஒதுக்கீட்டின் தேவையை உணர்ந்தவர்கள் என்று அரசியல்வாதிகளும், சமூக சிந்தனையாளர்களும், பிற்படுத்தப்பட்ட சமுதாய தலைவர்களும் கூறி வரக்கூடிய கூற்றுக்கு ஒரு அழுத்தமான கேள்வி இப்போது எழுந்துள்ளது. ஏற்கனவே மற்ற பிற்படுத்தப்பட்டோர் என்று இந்திய அளவில் கூறப்படும், பிற்படுத்தப்பட்டோர் சமுதாயம் தனது இட ஒதுக்கீட்டை பெறுவதில் ஒரு நீண்ட கால போராட்டம் தேவைப்பட்டது. அதை தமிழகம்தான் தொடங்கிவைத்தது. தொடர்ந்து நடத்தி வைத்தது.

அப்படி இருக்கையில் சமீபத்தில் மூன்று ஆண்டுகளாக சர்ச்சைக்கு உள்ளாக்கியுள்ள பிற்படுத்தப்பட்டோருக்கான உயர் கல்விக்கான இட ஒதுக்கீடு என்பது முதலில் மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சர் அர்ஜுன் சிங்கால் கொண்டுவரப்பட்டதாகவும், பிறகு சில மத்திய அமைச்சர்களால் மறுக்கப்பட்டதாகவும், பிறகு உச்சநீதிமன்றம் சென்ற ஆதிக்க சாதியினரின் வேண்டுகோள்படி அது தடை செய்யப்பட்டதாகவும் செய்திகள் தமிழ்நாடு போன்ற இட ஒதுக்கீடு ஆதரவு பகுதிகளை உலுக்கியது. ஐ.ஐ.டி. போன்ற கல்விச்சாலைகளிலும், மருத்துவ கழகத்திலும், ஜே.என்.யு. [ ஜவஹர்லால் நேரு பல்கலைகழகம்] போன்ற உயர் கல்வி பல்கலைக்கழகங்களிலும், இந்த ஒ.பி.சி. என்ற மற்ற பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு என்பது தடைகளையே தொடர்ந்து சந்தித்து வந்தது.
மத்திய அரசு சில சமூகங்களை, அவர்களது சமூக, கல்வி மற்றும் பொருளாதார நிலைமைகளை கணக்கில் எடுத்து அவர்களுக்கான இட ஒதுக்கீடு செய்யப்பட்டு கல்வி பெறுவதற்கான மற்றும் வேலை பெறுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுப்பது என முடிவு செய்தது. சுதந்திரம் பெற்ற பின்பு ஏற்ப்படுத்தப்பட்ட காகா கலேல்கர் ஆணையம், மற்றும் மண்டல் ஆணையம் ஆகியவற்றின் மூலம் ஆய்வின் அடிப்படையில் இந்த இட ஒதுக்கீடு சட்ட ரீதியாக அங்கீகாரம் பெற்றது. அனால் அதை அமுல்படுத்தும் போது ஒவ்வொரு கட்டத்திலும் வருகின்ற தடைகளை நீக்குவது என்பதுதான் பெரும் கடினமான விஷயம் என்பது இப்போது புரியப்படுகிறது. தாழ்த்தப்பட்ட, மற்றும் பழங்குடி மக்களுக்கான இட ஒதுக்கீடு என்பது ஆரம்பத்திலேயே சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்டு விட்டது. ஆனால் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு என்பது நீண்ட காலமாக ஆளும் வர்க்கத்தினரால் கவனிக்கப்படவில்லை. மண்டல் ஆணையம் அதை வலியிறுத்தியும்கூட, கிடப்பில் போடப்பட்டு இருந்தது.
அதை வெள்யே கொண்டு வந்தவர் வி.பி. சிங் என்பதால் அவர் முற்ப்பட்டோர் வகுப்பிலிருந்து வந்தவர் என்றாலும் பெரிதும் பிறபடுத்தப்பட்ட மக்களால் பாராட்டப்பட்டார்.
அதன் பின்பும், உயர் கல்வியில் அவர்களுக்கான இட ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்ற செய்தி தாமதமாக உணரப்பட்டது. அதற்கும் உச்சநீதிமன்றம் 2007 மார்ச்-29 அன்று இடைக்கால தடை விதித்து தீர்ப்பு கூறியிருந்தது. 27 விழுக்காடு உயர் கல்வியில் பிற்படுத்தப்பட்டோருக்கு என்பதே அந்த கோரிக்கை. 1985 க்கு முன்னால் பிற்படுத்தப்பட்டோருக்கான விவகாரம், உள்துறையில் இருந்த பிற்படுத்தபட்டோர் செல் மூலம் கவனிக்கப்பட்டது. அதன் பின் புதிதாக உரூவாக்கப்பட்ட தனி பிறபடுத்தப்பட்டோர் நல த்துறை, அதை கவனித்தது.. 1998 இல் அதுவே சமூக நீதி மற்றும் அதிகார மேம்படுத்தல் அமைச்சகம் என்று பெயர் பெற்றது. பிறகு 2008 ஆம் ஆண்டு ஏப்ரல்--10 அன்று உச்சநீதிமன்றம் தனது இறுதி தீர்ப்பில், மற்ற பிற்படுத்தப்பட்டோருக்கான 27 % இட ஒதுக்கீட்டை ஆதரித்து கூறியது. ஆனாலுல் கிரிமி லேயர் என்ற ஒரு பொருளாதார கணக்கை நிபந்தனையாக கொடுத்தது. அதேசமயம் அரசு உதவி பெறும், மற்றும் தனியார் கல்விச்சாலைகளும் இதை பின்பற்ற வேண்டும் என்று கூறியது.

சமீபத்தில் டில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் இந்த பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு விசயத்தில் ஒரு சதி நடந்துள்ளது. 2010 ஆம் ஆண்டு மார்ச்-18 இல் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் அகடமிக் கவுன்சில் கூட்டத்தில் ஒரு முடிவு நிறைவேற்றப்பட்டது. அது பொதுநுழைவு தேர்வில் எடுக்கப்படும் மதிப்பெண்ணில், எது குறைவான மதிப்பெண்ணாக இருக்கிறதோ அதைவிட பத்து எண் குறைவாக எடுத்த பிறபடுத்தப்பட்ட மாணவர்களுக்கு மட்டுமே இடம் தர முடியும் என்ற முடிவே. இது கடுமையாக பிற்படுத்தப்பட்ட மாணவர்களாலும், பிற மாணவர் சங்கங்களாலும் எதிர்க்கப்பட்டது. இதை எதிர்க்கும் பட்டினிப்போராட்டம் அந்த வளாகத்திர்க்குள்ளேயே நடத்தப்பட்டது..

ஜே.என்.யு. வில் உள்ள ஐசா என்ற அகில இந்திய மாணவர் கழகம் எனும் சி.பி.ஐ.எம்.எல்.[விடுதலை] அமைப்பின் மாணவர் அமைப்பும், எஸ்.எப்.ஐ. என்ற இந்திய மாணவர் கூட்டமைப்பு என்ற சி.பி.எம்.இன் மாணவர் அமைப்பும், டி.எஸ்.யு. என்ற ஜனநாயக மாணவர் சங்கம் என்ற புரட்சிகர சிந்தனை உள்ள மாணவர் அமைப்பும், பி.எஸ்.யு. என்ற முற்ப்போக்கு மாணவர் சங்கம் என்ற இன்னொரு எம்.எல். கட்சியின் மாணவர் அமைப்பும், எதிர்ப்பிற்கான மாணவர் அமைப்பும், இட ஒதுக்கீட்டை பாதுக்காக்கும் மற்றும் அமுல்படுத்துவதர்க்கான கூட்டமைப்பும், சேர்ந்தது போராட்டங்களை அந்த வளாகத்திற்குள் நடத்தியுள்ளனர். அதை அடுத்து ஒரு மாணவர் டில்லி உயர் நீதிமன்றத்திற்கு இந்த பிரச்னையை கொண்டு சென்றுள்ளார்.

அபூர்வா என்ற அந்த வடகிழக்கு மாநில மாணவனின் கோரிக்கைக்கு செவி மடுத்த டில்லி உயர்நீதிமன்றம் ஒரு நல்ல தீர்ப்பை கொடுத்துள்ளது. நீதியரசர் ராஜீவ் சஹாய் என்பவர் கொடுத்த அந்த தீர்ப்பில் நடைமுறையில் வந்துள்ள தடங்கல்கள் நீக்கப்பட்டுள்ளன. இந்திய அரசையும், ஜே.என்.யு. நிர்வாகத்தையும் பிரதிவாதிகளாக சேர்த்து இந்த தீர்ப்பை 2010 ஆம் ஆண்டு செப்டம்பர்-7 ஆம் நாள் நீதியரசர் கொடுத்துள்ளார். தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி மக்களுக்கு அதாவது மாணவர்களுக்கு எங்குமே இந்தியாவில் வெட்டு மதிப்பெண் என்று ஒன்று பார்க்கப்படுவதில்லை. அப்படி இருக்கையில் அதே காரணமான சமூக ரீதியில், மற்றும் கல்வி ரீதியில் பின்தங்கியுள்ளவர்களுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீட்டில், பிற பிற்படுத்தப்பட்டோருக்கும் கல்வியில் இட ஒதுக்கீடு வழங்குவது என்ற அணுகுமுறையில் எப்படி வெட்டு மதிப்பெண் என்று ஒன்று புதிதாக வர முடியும் என்ற வாதத்தை முன்வைத்துள்ளார். இப்படியாக நீதியரசர் வைக்கும் வாதங்கள்தான் சதி எண்ணத்துடன் அரசின் மற்றும் பல்கலைகழகங்களின் உயர்பதவிகளில் இருக்கும் ஆதிக்க சாதிவெறி படைத்தோரின் முகத்திரையை கிழிக்க உதவும்.
நுழைவு தேர்வ்களில் எத்தனை மதிப்பெண் பெற்றாலும், அவரவர்களுக்கு உள்ள அதாவது அந்த, அந்த சமூகங்களுக்கு உள்ள இட ஒதுக்கீட்டை நிரப்புவதுதானே கல்விச்சாலைகளின் வேலை? இந்த வழக்கை தொடுத்தவர்கள் தனி இட ஒதுக்கீட்டை, தனி வெட்டு மதிபெண் மூலம் பிற பிற்படுத்தப்பட்டோருக்கு அளிக்கவேண்டும் என்றுதான் கோரியிருந்தனர். நுழைவு தேர்வின் பொது மதிப்பெண்களில் எப்படி ஒரு குறைந்தபட்ச மதிப்பினை எடுத்துக்கொண்டு அதற்கும் பத்து மதிபெண் குறைவாக பெரும் பிற பிற்படுத்தப்பட்டோரை மட்டுமே சேர்த்துக்கொள்வோம் என கூறமுடியும் என்ற மாணவர்களின் வாதம் நன்றாக நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பை பயன்படுத்தி தமிழ்நாட்டு மாணவர்களும், ஏற்கனவே ஜே.என்.யு.வின் நிர்வாகத்தால் மறுக்கப்பட்டவர்கள் உள்ளே நுழையலாம் என்ற முயற்சி இப்போது செய்யப்படுகிறது.

இந்தியாவின் எதார்த்தத்தில் இருக்கின்ற சாதி பாகுபாடும், சாதி இழிவும், சாதிரீதியான ஒடுக்குமுறையும் ஒழிக்கப்படவேண்டுமானால், அதற்கு ஒடுக்கப்பட்ட சாதிகளைச்சேர்ந்த மக்கள் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் முன்னேறாமல் இந்த சாதிரீதியான ஏற்றத்தாழ்வை போக்கமுடியாது. அகவே பெரியாரால் கொண்டுவரப்பட்ட வகுப்புவாரி பிரதிநித்துவம் உணமையாக நடைமுறையாக, நாம் தொடர்ந்து போராட வேண்டியுள்ளது. இன்று நீதிமன்றங்களின் மூலம் நடத்தப்படும் சமூக நீதிக்கான இந்த போர், ஆதிக்க சாதிகளின் கரங்களில் சிக்கியுள்ள கல்வியையும், கல்விச்சாலைகளையும் ஒடுக்கப்பட்ட சமூகங்கள் கைகளில் எடுக்க வேண்டும். அதை ஊடகங்களும், சமூக ஆர்வலர்களும் இன்னமும் போதுமான அளவுக்கு கண்டுகொள்ளாதது கவலையளிக்கிறது. இனியாவது பிற்படுத்தப்பட்ட சமூகங்கள் இத்தகைய பிரச்சனைகளை கையில் எடுப்பார்களா?

Sunday, September 26, 2010

திலீபன் தியாகம் இன்றுவரை சில செய்திகளை அறைந்து சொல்கிறது

திலீபன் தியாகம் இன்றுவரை சில செய்திகளை அறைந்து சொல்கிறது.
திலீபன் பெயர் தெரியாத தமிழின உணர்வாளர்கள் இந்த பூவுலகில் இருக்க முடியாது. நேற்று அதாவது செப்டம்பர்-26 , திலீபன் நினைவை திரும்பி பார்க்கும் நான். அது நடந்தது 1987 இல். திலீபனின் இயற்பெயர் ராசையா பார்த்திபன், அவர் ராசையா என்ற பள்ளி ஆசிரியரின் மகன். யாழ்ப்பணத்தில் பிறந்தவர். குழந்தை பருவத்திலேயே தாயை இழந்தவர் திலீபன். யாழ்ப்பாணத்தின் பிரபலமான இந்து கல்லூரியில் பயின்றவர். தாய் தமிழீழத்தை அடைவதற்காக, தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பில், 1983 ஆம் ஆண்டு, அதன் கருப்பு ஜூலை நிகழ்ச்சியின் போது இணைந்தவர்.. அந்த கருப்பு ஜூலை படுகொலை நிகழ்வு, தமிழர்களுக்கு எதிரான படுகொலை நிகழ்வு மாத்திரமல்ல, தமிழினத்திற்கு எதிரான இன அழிப்பின் அடையாள நிகழ்வு என்பதை அன்றே புரிந்திருந்ததால்தான் திலீபன், புலிகள் இயக்கத்தில் சங்கமமானார். தமிழீழம் விடுதலை அடைவதே தங்கள் இலட்சியமாக கொண்ட விடுதலை புலிகள் இயக்கத்தில் அதனால்தான் இணைந்தார். யாழ் குடாநாட்டின் புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவு தலைவராக திலீபன் உயர்வு பெற்றார்.
1987 ஆம் ஆண்டு இந்திய அரசு, இலங்கை அரசுடன் ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டது. அதாவது இந்தியாவில் ஆறரை கோடி தமிழ் மக்கள் வாழும் போது, அந்த தமிழ் மக்களின் பிரதிநிதிகள் இல்லாமல், அந்த தமிழ் மக்களின் கலந்தாலோசித்தல் அல்லது பங்களிப்பு என்று எதுவும் இல்லாமல், அதேசமயம் இலங்கை தீவில் வாழும் ஈழத்தமிழர்களின் கலந்தாலோசனையோ, பங்களிப்போ, இல்லாமல், இலங்கையில் வாழும் இந்திய வம்சாவழி தமிழர்களான தோட்டத் தொழிலாளர்களான, மலையக தமிழர்களின் கலந்தாலோசனையோ, அல்லது பங்களிப்போ இல்லாமல், கிழக்கு மாகாணங்களில் இலங்கையில் வாழும் தமிழ் பேசும் முஸ்லிம்களின் கலந்தாலோசனையோ, பங்களிப்போ இல்லாமல், ஒரு ஒப்பந்தம் தயாரானது. அந்த ஒப்பந்தத்தை தயாரித்தவர்கள், இந்தியாவின் அரசியல் தலைமையில் வீற்றிருந்த தமிழர் அல்லாதவர்களாகவும், இலங்கையில் ஆட்சியில் இருந்த தமிழர் அல்லாதவர்களாகவும் இருந்தார்கள்.
இப்படி ஒரு ஒப்பந்தம் உலக அரங்கில் ஒரு குறிப்பிட்ட தேசிய இன பிரச்சனையைதீர்ப்பதற்கானஆவணமாகஎங்காவது ஏற்றுக்கொள்ளப்படமுடியுமா? அது இங்கே முடியும்,. அதுதான் இந்தியா. அதுதான் இலங்கை. ஒவ்வொரு நாட்டிலும் தேசிய இன பிரச்சனை என்பது பலமுறை, பல காலங்களில் வந்திருக்கிறது. காலம், காலமாக தேசிய இன பிரச்சனை என்பது பூமிப்பந்தின் ஒவ்வொரு மூலை, முடிக்கிலும், எழுந்து கொண்டே இருக்கும் ஒரு உரிமை பிரச்சனைதான். அப்போதெல்லாம் அத்தகைய தேசிய இன பிரச்னையை, கையாளும் ஆளும் கூட்டங்கள் தங்கள் இழுப்புக்கு வரக்கூடிய ஒரு சக்தியை தேசிய இன போராட்ட இயக்கத்திருந்து தேர்ந்தெடுத்து அதை வைத்து, மேசைப்பேச்சு என்று ஒன்றை நடத்தி, அதன்மூலம் ஒரு தீர்வை முன்வைத்து, அதில் அதிகாரம் செலுத்தும் சக்தியின் கையெழுத்தையும், அடிமைப்பட்டிருக்கும் சக்தியின் சார்பாக ஒரு பிரதிநிதியின் கையெழுத்தையும் பெற்று, உலகின் முன்னால் ஒரு தீர்வை அந்த குறிப்பிட்ட தேசிய இன பிரச்சனையில் எட்டிவிட்டோம் என்பதாக அறிவிப்பார்கள். நாமும் அதை அப்படியே நம்பி அதையே வரலாறாகவும், அதையே தீர்வாகவும் எண்ணி, அதை எட்டுவதற்கு பாடுபட்டவர்கள் என்று கருதப்படும் மென்மை முகம் கொண்ட ஆதிக்க சக்திகளின் கையாள்களை பாராட்டி, வரலாற்றில் ஏற்றி , பாடப்புத்தகத்தில் சேர்த்துவிடுவோம்.

இதுவே பாலஸ்தீன பிரச்சனைக்கும் நடந்தது. அங்கே பி.எப்.எல்.பி . என்ற ஜார்ஜ் ஹப்பாஸ் தலைமையிலான அமைப்பு போன்ற கருத்தியல் தெளிவான அமைப்புகள் ஆயுதப்போரில் இருந்தன. ஆனால் அமெரிக்கா இஸ்ரேலுடன் பேச, யாசர் அரபாத் தலைமையிலான பி.எல்.ஒ. என்ற ஒருங்கிணைப்பு என்று சொல்லி, அல்-படாஹ் அமைப்பை மட்டுமே மேசை பேச்சுக்கு உற்சாகப்படுத்தியது. அதன் விளைவு ஒரு நகராட்சி அளவுக்கு உள்ள இடத்தை விடுதலை பகுதி என்று பாலஸ்தீன மக்களுக்கு கொடுத்து விட்டு, அதிலும் வெள்யே வர, உள்ளே போக ஒரு பாதையை போட்டு அதை கண்காணிக்கும் பொறுப்பை இஸ்ரேல் நாட்டு ராணுவத்தின் கையில் கொடுத்ததே நடந்திருக்கிறது.
இவ்வாறு உலக ஆதிக்க சக்திகள் திட்டமிட்டு, தேசிய இன பிரச்சனைகளை தங்கள் கையை விட்டு சென்றுவிடாமல் பார்த்துக்கொண்டு பிறகு அதற்கு ஒரு தீர்வு என்ற பெயரில் சரணாகதி ஒப்பந்தங்களை செய்வது வழக்கம்,. இதுதான் காஷ்மீர் பிரச்சனையில், இந்திய அரசாலும், பாகிஸ்தான் அரசாலும் தொடர்ந்து செயல்பாட்டில் செய்யப்படும் தந்திரமாகும். அதாவது மதச்சார்பற்ற அமைப்பாக விடுதலை உணர்வோடு போராடிய ஜம்மு-காஷ்மீர் விடுதலை முன்னணி தலைவரை மக்பூல் பட்டை தூக்கிலிட்டு விட்டு, அங்கே மத அடிப்படையிலான பிரச்சனையாக மாற்ற முயற்ச்சித்து, தங்களுக்கு ஒத்துவரும் சில தலைவர்களுடன் பேச இந்திய அரசு முயற்ச்சிப்பதும் இதே வரிசையில்தான்.. இந்த வகையில்தான் இந்திய அரசு இலங்கை தமிழர்களாக அடையாளம் காட்டப்படும் ஈழத்தமிழர் பிரச்சனையிலும் கையாண்டுள்ளது.

அதாவது 1987 இல் செய்யப்ப்பட்ட இந்திய--இலங்கை ஒப்பந்தம், ராஜீவ்--ஜெவர்தனே ஒப்பந்தம் என்றுதான் அழைக்கப்பட்டது. அதிலேயே நாம் சம்பத்தப்பட்ட சக்திகளை அடையாளம் கண்டுகொள்ளலாம். அந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளாத புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனை கூட்டிவந்து வற்ப்புறுத்தி அவர்கள் அந்த ஒப்பந்தப்படி, பெயர் அளவுக்கு ஆயுதங்களை ஒப்படைப்பது போல நடந்து கொள்ளசொன்னதும், அப்படியே பிரபாகரன் நடந்துகொண்டதும், அதை ஒட்டி இந்திய அமைதி படை என்ற பெயரில் ஒரு தமிழர் விரோத மனப்பான்மையை மனதிலும், கொள்கையிலும் கொண்ட தமிழர் அல்லாத படையை இந்திய அரசு அனுப்பியதும் அம்பலமான பழைய செய்திகள். ஆனாலும் தமிழர் விடுதலைக்காக தியாகம் செய்ய போர்க்களம் இறங்கிய பிரபாகரனோ, புலிப்படையோ, ஆக்கிரமிப்பு பாணியில் ஈழமண்ணில் இறங்கிய இந்திய அரசப்படைகளை ஏற்றுக்கொள்ளவில்லை. அத்தகைய ஒரு வரலாற்று திருப்புமுனையை, சாதித்த நிகழ்வுதான் திலீபனின் தியாகம். அதை போர்க்களம் கண்டுவந்த பிரபாகரன், பிரபல காந்தீய வழியான பட்டினி போராட்டத்தின்மூலம் சரியாகவே கையாண்டார். போராட்டம் எப்போதுமே பல முனைகளிலும் நடத்தப்படவேண்டும். விடுதலை போர் என்பது அதையே நிரூபித்து காட்டுகிறது. தேசிய இன விடுதலை போராட்டங்கள் மட்டுமே, நேரடியாக இன்று உலகை ஆளும் ஏகாதிபத்தியவாதிகளை உடைப்பதற்கான வழிமுறையாகும். ஏகாதிபத்தியங்கள் எப்போதுமே தங்களுக்கான சந்தைகளை தேடுபவர்கள். அவற்றை தக்கவைத்து கொள்பவர்கள். அவர்களுக்கு அப்படிப்பட்ட சந்தைகளாக இருக்கும் நிலங்களை, தேசிய இன போராட்டங்கள் மட்டுமே உடைக்கின்றன . அதனால் அவர்கள் தேசிய இன விடுதலை போராட்டங்களுக்கு எதிராகவே தங்களது காய்களை நகர்த்துவார்கள். இதை தேசிய இனங்கள் அடிப்படையில் புரிந்துகொள்ளவேண்டும்.

இதே சிக்கல்தான் இந்திய அரசின் அணுகுமுறையிலும் நடந்தது. டில்லியை ஆளும் சக்திகள் நாகா, மிசோ, மணிப்பூர், அஸ்ஸாம், காஷ்மீர், போன்ற பல சிக்கலான தேசிய இன பிரச்சனைகளை சந்தித்து வருபவர்கள். அவற்றில் பலவற்றை அடக்கியதிலும் தேர்ச்சி பெற்றவர்கள். அவர்களிடம் அந்த அனுபவம் அதிகமாக இருக்கிறது. அப்படிப்பட்டவர்கள் ஈழப்பிரச்சனையில் தலையிட்ட காலங்களில், தமிழ்நாட்டில் இரு பெரும் கருத்துக்கள் இருந்து வந்தது. ஒன்று இந்திய அரசை சார்ந்து தங்கள் போராட்டத்தை ஈழ போராளிகள் பெற்றுவிடலாம் என்ற கருத்து. அதற்காக இந்திய அரசப்படையை இலங்கைக்கு அனுப்பி விடுதலைக்கு உதவ செய்வது என்று அந்த கருத்து உள்ளவர்கள் அபிப்பிராயப்பட்டாகள். அதில் தமிழ்நாட்டு ஆளும்வர்க்க கட்சிகள் தொடங்கி, தமிழ் இன உணர்வாளர்கள் வரை பலரும் வரிசைப்பட்டார்கள். தமிழ் நாட்டு அப்பாவி மக்களின், உணர்வுகளும், ஏன் ஈழ தேசத்து தமிழ் மக்களின் உணர்வுகளும் கூட, அப்படியே இந்திய அரசை நம்பும் போக்கையே வெளிப்படுத்தியது. .இன்னொரு கருத்து இந்திய உதவி பற்றி எச்சரித்து வந்தது. அது புரட்சியாளர்களின் கருத்து.
இந்தியாவில் உள்ள தேசிய இனங்கள் இந்திய அரசை நம்புகிறார்களோ இல்லையோ, தமிழீழ மக்கள் இந்திய அரசின் மீது, அப்படி ஒரு அசைக்கமுடியாத நம்பிக்கையை வைத்து இருந்தார்கள். அந்த நம்பிக்கையை உடைத்த முதல் நிகழ்வு என்பதால்தான் திலீபனின் நினைவு இன்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.
இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு சென்ற இந்திய அமைதிப்படை அங்கே சிறிது, சிறிதாக போராளிகளின் போக்குகளையும், நடமாட்டங்களையும், நடவடிக்கைகளையும் கண்காணிக்கும், மற்றும் கட்டுப்படுத்தும் செய்களில் ஈடுபட தொடங்கினார்கள். அப்போது இந்திய அமைதிப்படையை எதிர்த்த பிளாட் அமைப்பின் தலைவர் உமா மகேஸ்வரனும், பாபி தலைமையில் இருந்த டெலோவும் ,டெலா அமைப்பின் சிறு பிரிவும் களத்தில் போர் புரிந்தார்கள். நிர்ப்பந்தத்தின் காரணமாக சுடுமலையில் ஒரு கூட்டம் ,அதில் பெயரளவுக்கு ஆயுதம் ஒன்றை ஒப்படைத்த பிரபாகரன் அடுத்தட கட்ட அதிகார கைப்பற்றலுக்கு தயாராகி கொண்டிருந்தார்.

அதற்க்கான பேச்சுவார்த்தையில், எழுப்பப்பட்ட கோரிக்கைகளை திலீபனின் பட்டினிப்போர் மூலம், புலிகள் இயக்கம் முன்வைத்தது. அதில்தான் 1 ] பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்ப்பட்ட எல்லா தமிழ் கைதிகளையும் உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என்ற கோரிக்கையை முதல் கோரிக்கையாக வைத்தது. 2 ] மறுவாழ்வு என்ற பெயரில் தமிழர் பகுதிகளில், சிங்களர்களை கொண்டுவந்து குடியேற்றும் காலனிமயப்படுத்தல் என்ற இன அடையாள அழிப்பு எதிர்ப்பு என்பதை இரண்டாவது கோரிக்கையாக முன்வைத்தது. 3 ] ஒரு இடைக்கால அரசாங்கத்தை நிறுவும்வரை அத்தகைய காலனிமயப்படுத்தும் நடவடிக்கைகளை தடை செய்ய வலியுறுத்தி மூன்றாவது கோரிக்கையாக வைக்கப்பட்டது . 4 ] வட-கிழக்கு மாகாணங்களில் புதிய காவல் நிலையங்களை திறப்பதிலிருந்து சிங்கள அரசை தடுக்க வேண்டும் என்பது நான்காவது கோரிக்கை. 5 ] தமிழர் கிராமங்களில் உள்ள பள்ளிக்கூடங்களில் ஆக்கிரமித்துக்கொண்டுள்ள , இலங்கை ராணுவத்தையும், இலங்கை காவல்துறையையும், திரும்ப அழைக்கவேண்டும். இந்திய ராணுவத்தின் மேற்பார்வையில், இலங்கை அரசால், ஊர்காவல் படைக்கு கொடுக்கப்பட்டுள்ள ஆயுதங்களை திரும்ப பெறவேண்டும். இவ்வாறு ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து திலீபன் தனது பட்டினப்போரை தொடங்கினார். அதாவது புலிகளின் அரசியல்பிரிவின், யாழ் குடாநாட்டு தலைவர் மேற்க்கண்ட கோரிக்கைகளை முன்வைத்து தனது பட்டினிபோரை நடத்தினார் என்பது புலிகளின் அரசியல் போராட்டமாக காணப்படவேண்டும்.
மேற்கண்ட ஜனநாயக ரீதியான கோரிக்கைகளை ஏற்காமல் இந்திய அரசு திலீபனின் மரணத்தை அனுமதித்தது என்றால், அதன் போரும் என்ன என்பதை இருபத்து மூன்று ஆண்டுகளுக்கு பிறகு இப்போதாவது உலக தமிழர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.
இலங்கை-இந்திய ஒப்பந்தத்தை போட்டவர்கள், அன்றைய நிலையில் தமிழர்களின் அடிப்படை கோரிக்கைகளான திலீபனின் கோரிக்கைகளை ஏற்க்கவில்லை என்பதை அரசியல்ரீதியாக புரிந்து கொள்ளவேண்டும். அன்றைய சூழலில் ஈழத்தமிழர்கள் இந்திய அரசின் மீது அசைக்கமுடியாத நம்பிக்கையை வைத்திருந்தார்கள். அப்படிப்பட்ட நம்பிக்கைகளில் ஒரு பகுதியையாவது, புலிகளும் வைத்திருந்ததால்தான், கடைசி கோரிக்கையில் இந்திய ராணுவத்தின் மேற்ப்பார்வையில் என்பதாக திலீபனின் கோரிக்கையும் அமைந்தது. இத்தகைய கோரிக்கைகளை ஏற்காத இந்திய அரசு, திலீபனின் காந்தீய முறை போராட்டத்தை கூட ஏற்காத நிலையில், அவரது தியாகம் அங்கே எழுதப்பட்டது. அதுவரை டில்லியை நம்பிய தமிழ் உள்ளங்கள் கூட அப்போதுதான் முதல்முறையாக டில்லி எதிர்ப்பு மனோபாவம் கொண்டனர். அதன்விளைவே புலிகளின் படைகளுக்கும், இந்திய ராணுவத்திற்கும் மோதல்கள் வெடித்தன. அதேசமயம் ஈ.பி.ஆர்.எல்.எப்.பும், செல்வம் தலைமையில் டெலோவும், ஈ.என்.டி.எல்.எப்.பும் த்ரீ ஸ்டார் என்ற பெயரில் இந்திய அரசு செயல்களுடன் சேர்ந்துகொண்டார்கள். தற்க்காலிக அரசை இந்திய அடிவருடி அரசாக அமைத்தார்கள்.
இதுவே திலீபனின் மரணம், அதாவது தியாகம் நமக்கு கொடுக்கின்ற பாடம். உலகத்தமிழர்கள் இந்த பாடத்தையும் இன்றாவது புரட்டிப்பார்ப்பார்களா?