Wednesday, October 13, 2010

தூத்துக்குடி ஸ்டெர்லைட் செய்த இன்னொரு கொலை.

நேற்று செப்டம்பர் --பன்னிரெண்டாம் நாள், அதர்ச்சி செய்தி கேட்டு, தூத்துக்குடியில் ஆர்வலர்கள் அரசு மருத்துவ மனைக்கு சென்றனர். அங்கே ஸ்டெர்லைடில் பணியாற்றும் முத்துக்ரிஷ்ணன் என்ற தொழிலாளி, அவசர் சிகிச்சை பிரிவில் இருக்கிறார் என்றும், தலை முதல் முகம், நெஞ்சு என எல்லா பகுதிகளும் அமிலம் பட்டு எரிந்து போய் விட்டது எனவும் செய்திகள் கிடைத்தன. அதற்குள் அந்த நாசகார ஆலையின் நிர்வாகம், சம்பந்தப்பட்ட தொழிலாளியின் அண்ணனையும், அண்ணியையும் அணுகி தொகை தந்து
விடுகிறோம், சமாளியுங்கள் அன்று சொல்ல ஒரு நாடகத்திற்கு வீட்டாரும் தயார் ஆனார்கள். அண்ணன் முத்துபாண்டி, ஆலை எதிர்ப்பாளர்களை பார்த்து, என் தம்பி விசயத்தில் நீங்கள் எப்படி தலையிடலாம்; அது உரிமை மீறல் என்றார். உரிமை பற்றியும் ஆலை நிர்வாகிகள் கற்று கொடுத்து விட்டார்கள்.

அதற்கு ஆர்வலர்கள் உங்கள் தம்பி விஷயம் உங்க வீட்டு விசயம்தான்; ஆனால் ஸ்டெரிலைட் பணியாளர் விஷயம் எங்களுக்கும் சம்பந்தப்பட்ட விஷயம் என்று பதில் கொடுக்க, முதுக்ரிஷ்ணனின் அண்ணியார் என் கொழுந்தன் அவசர சிகிச்சை பிரிவில் இருப்பதால் யாரும் உள்ளே போய் பார்த்தால் அவருக்கு பாதிப்பு வரும் என்று சொல்ல, ஆர்வலர்கள் பின்வாங்கினர். அவர் உடல் தேறிவிட்டது எனவும், தாங்கள் தங்கள் சொந்த ஊரான ஊத்துமலைக்கு கூட்டி செல்லப்போவதாகவும், அவர்கள் அறிவித்துவிட்டு ஆலை நிர்வாகம் நல்லா கவனிச்சுகிட்டாங்க என்றனர். யாரை கவனிச்சு கிட்டாங்க என்று அப்போதுஅவர்கள் சொல்லவில்லை.ஊத்துமலையில் மறவர் சமூகத்தை சேர்ந்த திருமணமாகாத இளைஞர் முத்துகிருஷ்ணன் , ஓட்டுனராக அந்த ஆலையில் பணியாற்றிவந்தவர். அவரை விபத்து நடந்தவுடன் செப்டம்பர் பதினெட்டாம் தேதியிலேயே முதலில் தனியார் ஏ.வி.எம்.மருத்துவமனையிலும், பிறகு அரசு முத்துவ மனையிலும் சேர்த்துள்ளனர்.
.

அன்பிறகு இன்று புதன் காலையில், அந்த தொழிலாளி இரந்து விட்டார் என்றும், அவருக்கு அவசர் அவசரமாக பிரேத பரிசோதனை நடத்தப்படுவதாகவும் செய்தி கேட்டு, ஆர்வலர்கள் மருத்துவ மனைக்கு ஓடினர். அங்கே உண்மை தெரிந்தது. சல்பூரிக் அமில துறையில், அமிலம் மேலே கொட்டி அந்த தொழிலாளி முத்துகிருஷ்ணன் அடிபட்டு, சென்ற மாதம் பதினெட்டாம் தேதியே மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். நேற்று மரணமடைந்த அவரை வெள்யே எடுக்க, அண்ணன் முத்துபாண்டி குடும்பத்திற்கு ஐந்து லட்சம் பேசப்பட்டு, ஒரு சிறு தொகை முதலில் கொடுக்கப்பட்டுள்ளது. இப்போது விவகாரம் அம்பலத்திற்கு வந்துவிட்டது. அதுவும் ஆர்வலர்கள் மருத்துவமனை முன்பு போராட தொடங்கி விட்டனர். வேறு வழி இல்லாமல் காவல்துறை வழக்கு பதிவி செய்ய முன்வந்தனர். தீவிர கவனக்குறைவு என்ற பிரிவில் 304 -அ என்ற பிரிவில் வழக்கை அங்குள்ள சல்பூரிக் அமில துறையை சேர்ந்த பொறுப்பாளர் சங்கர நாராயணன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆர்வலர்களும் கொலை வழக்கு போடச்சொல்லி கத்தியும் பலிக்கவில்லை.

இரண்டு நாட்கள் முன்பு , செபடம்பர் பதினோராம் நாள் ஒரு மாபெரும் ஊர்வலத்தை ஸ்டெரிலைட் எதிர்ப்பாளர்கள் தூத்துக்குடி நகரில் நடத்தினர். அதில் 10000 பேர் பங்குகொண்டனர். அதில் மீனவர்கள், வணிகர்கள், பெண்கள், வழக்கறிஞர்கள், கல்வியாளர்கள், விவசாயிகள், மற்றும் அனைத்து கட்சியினர் கலந்து கொண்டனர். தோழர் இரா. நல்லகண்ணு அந்த பேரணியை தொடங்கி வைக்க, பேராசிரியர். பாத்திமாபாபு தலைமை தாங்கி சிறப்பாக செய்தனர்.பேரணிக்கு சில நாட்கள் முன்பு அரசு எல்லா கல்லூரிகளுக்கும், பள்ளிகளுக்கும் ஒரு சுற்றறிக்கையை அனுப்பியது. அதில் எந்த ஒரு வெளி போராட்டங்களுக்கும், ஆர்ப்பாட்டங்களுக்கும், ஊர்வலங்களுக்கும், மாணவ, மாணவிகள் செல்லக்கூடாது என்று இருந்தது. அது என்ன புதிய உத்தரவு? மாநிலத்திற்கு முழுவதற்கும் இல்லாமல் ஒரு மாவட்டத்திற்கு மட்டுமா? அதாவது ஸ்டெரிலைட் நிர்வாகத்திற்கு ஆதரவாக தமிழக அரசு ஏன் வரிந்துகட்டுகிறது?

மறுநாள் அரசு நடத்திய புகை பிடித்தல் எதிர்ப்பு பேரணியில் பள்ளி சிறுவர்களை அழைத்துவந்தனர். அவர்கள் அங்கே வந்து ஸ்டெரிலைட்டை இழுத்து மூடு என்று முழக்கமிட்டது அந்த நகரின் மனச்சாட்ச்சியை காட்டியது எல்லா ஊடகங்களுக்கும், அந்த நாசகார ஆலை விளம்பரம் கொடுத்து கை நிறைய பணம் கொடுத்துவிட்டான். அதனால் எந்த ஊடகமும் அந்த பேரணியை பெரிதாக போடவில்லை. இங்கே பணம் மாட்டும்தான் ஊடகங்களுடன் பேச முடிகிறது.இந்த ஆலையில் தாமிரம் உருக்கப்படுகிறது. அது அந்த நகரம் முழுவதையும் கடுமையாக சுற்று சூழல் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

இந்த ஸ்டெரிலைட் ஆலையை உயர்நீதிமன்றம் சென்ற மாதம் மூடச்சொன்னது.
. ஆனால் உச்சநீதிமன்றம் முதலாளிக்கு கருணை காட்டி உயர்நீதிமன்ற ஆணைக்கு, தடை கொடுத்துவிட்டது. இப்படி பணம் மூலமே அணில் அகர்வால் எல்லா இடத்திலும் வேதாந்தா என விலை பேசிவருகிறார். இந்த நிகழ்வு இன்னொரு போபால் இங்கே வரலாம் என்பதை காட்டுகிறது. இதே போல இரண்டு மாதம் முன்னால், சென்னை அருகே ஒருபோபால்
முயற்சி நடந்தது.

சென்னை அருகே திருபெரும்புதூரிலிருந்து வந்த செய்தி, அதிர்ச்சியை தந்தது. அங்கே ஒரு ஆலையில் நச்சு கசிவு வெளியாகி, நூற்று இருபது தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர். அவர்கள் வாந்தி எடுத்தனர். மருத்துவமனையில் காதிலிருந்து ரத்தம் கசிந்ததாக கூறுகின்றனர். விபத்து ஏற்ப்பட்ட ஆலை, சீனா நாட்டுக்காரர் ஆலை. சீனாவைச்சேர்ந்த அந்த பெரிய நிறுவனம், சீன நாட்டில் பெரிய அளவில் பெயர் பெற்ற ஆலை. அது ஒரு பன்னாட்டு மூலதன ஆலை என்று பிரபலம் அடைந்த நிறுவனம். சீன மக்கள் குடியரசுக்கு எதிரான சீன நாடாக உலகம் புரிந்துள்ள தைவான் நாட்டிற்கு சொந்தமான பன்னாட்டு மூலதன ஆலை அது. தைவானை சார்ந்த அந்த ஆலையில், ஹய்பேட் என்று கூறப்படும் காதில் வைத்து பாட்டு கேட்கும் இயந்திரம், அப்போலோ போன் என்ற பெயரில் உற்பத்தியாகிறதாம்.


அங்கு எப்படி நச்சு வாயு கசிந்தது என்று தெரியவில்லை. ஆனால் அந்த செய்தியை ஊடகங்களுக்கு வரவிடாமல் செய்வதில், ஆலை நிர்வாகம் அதிக கவனம் எடுத்ததாகத் தெரிகிறது. பாதிக்கப்பட்ட நூற்று இருபது தொழிலாளர் களும், அருகே உள்ள ஜெயா மருத்துவ மனைக்கு எடுத்து செல்லப்பட்ட தாகவும், அங்கே இருபத்தைந்து தொழிலாளர்கள் ரத்த வாந்தி எடுத்ததாகவும், அதையொட்டி பூந்தமல்லி சுந்தர் மருத்துவமனை மற்றும் ராமச்சந்திரா மருத்துவமனை ஆகியவற்றுக்கு அவர்களை எடுத்து சென்றுள்ளதாகவும் செய்திகள் வந்தன. ஆனால் ஆலை நிர்வாகமும், காவல்துறையும் சேர்ந்து செய்திகளின் தாக்கம் வெளிவந்துவிடாமல் தவிர்க்க, ஊடகங்களுக்கு முறையான செய்திகளை செல்லவிடாமல் இருந்தனர் என்ற கருத்தும் நிலவியது. இந்த குறிப்பிட்ட நிறுவனம் பற்றி கிடைக்கும் செய்திகள் ஆவலை அதிகப்படுத்துகின்றன. அதாவது இந்த குறிப்பிட்ட சீன நிறுவனம், ஏற்கனவே சீன நாட்டில் மிகவும் பெயர் பெற்ற கெட்ட பெயரை சம்பாதித்திருக்கிறது.


உலகிலேயே அதிகமான அளவில் மின்னணு மற்றும் கணினி உறுப்புகளை உற்பத்தி செய்யும் நிறுவனம் என்ற பெயரை பெற்றதுதான் இந்த பாஃக்ஸ்கான் நிறுவனம். மற்ற நாடுகளுக்கு ஒப்பந்தத்தின் அடிப்படையில், உற்பத்தியை முக்கியமாக இது செய்து வருகிறது. ஆப்பிள் நிறுவனத்துக்கு, மக்மினி, ஐபெட், ஐபாட், ஐபோன் ஆகியவற்றை உற்பத்தி செய்து கொடுக்கிறது. அமெரிக்க கணினி நிறுவனங்களான டெல்,போன்றவற்றுக்கு பல்வேறு பொருள்களை தயார் செய்து கொடுக்கும் நிறுவனம் இது சில பாகங்களை .மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கும், மோட்டாரோலா, நோக்கியா ஆகியற்றுக்கு செல்லுலார் போன்களையும் தயார் செய்து கொடுக்கும் நிறுவனம். 1974 ல் பிளாஸ்டிக் பொருள்களை தயார் செய்யும் நிறுவனமாக இது தொடங்கியது.

தைவான் பங்கு சந்தையில் 1991 வரை இந்த நிறுவனத்தின் பெயர் பிரபலமாக இருந்தது. 1988 ல் தனது முதல் உற்பத்தி ஆலையை சீனாவில், ஷென்சென் பிராந்தியத்தில் தொடங்கியது. அதுதான் இப்போது இந்த நிறுவத்தின் மிகப்பெரிய ஆலையாக 420000 தொழிலாளர்களை கொண்டு இயங்கி வருகிறது. அந்த தொழிலாளர்கள் ஷிப்டு முறையில் இயங்குகிறார்கள். ஆனால் அனைவரும் தொழிற்சாலையின் வளாகத்திற்கு உள்ளேயே வாழ்ந்து வருகிறார்கள். இப்போது பாஃக்ஸ்கான் ஆலை, தனது ஷென்சென் ஆலை உட்பட, மக்கள் சீன குடியரசில் மொத்தம் 800000 தொழிலாளர்களை கொண்டதான ஆலையாக இயங்கி வருகிறது. 1994 முதல், இந்த பாஃக்ஸ்கான் நிறுவனம், அமெரிக்காவிலும், ஜப்பானிலும், வளர்ச்சி மையங்களை விலைக்கு வாங்கி தொழில் புரிந்து வருகிறது.


1997 லும், 1998 லும், அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும், கூடுதலான உற்பத்தி தொழிற்சாலைகளை இவர்கள் நிறுவினார்கள். 2007 ஆம் ஆண்டில், செக் குடியரசிலும், ஹங்கேரியிலும், மெக்சிகோவிலும், பிரேசிலிலும்,இந்தியாவிலும், வியட்நாமிலும், இந்த நிறுவனத்தின் ஆலைகளும், துணை ஆலைகளும் காணப்பட்டன. சமீபத்தில் இந்த நிறுவத்தின் மீது, அதன் தொழிலாளர் விரோதப் போக்குகளை பற்றிய பொதுமக்கள் விசாரணை என்பது வெளிவந்தது. சீனக்குடியரசில் இதுதான் மிகப்பெரிய ஏற்றுமதி நிறுவனம் என்றாலும், இதன் தொழிலாளர் விரோதப்போக்கு கம்யூனிஸ்ட் சீனா என்ற அந்த நாட்டிலேயே அதிகமாக இருந்தது என்பதே இந்த ஆலை பற்றிய ஒரு சித்திரத்தை நமக்கு தந்துவிடும்.


அதுமட்டுமின்றி இந்த ஆண்டிலேயே, ஐந்து மாதங்களுக்குள் இந்த ஆலையை சேர்ந்த பதின்மூன்று தொழிலாளர்கள், ஆலையின் சுவர்கள் மேலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்கள் என்ற செய்தி உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர் வர்க்கத்திற்கு பெரும் அதிர்ச்சியையும், அதே சமயம் எச்சரிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது. அதில் மூன்று பேர் மட்டுமே உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் உள்ளனர். மற்றவர்கள் எல்லாம் இறந்துவிட்டார்கள். இது உலகம் முழுவதும் பாஃக்ஸ்கான் ஆலை பற்றிய ஒரு கெட்ட பெயரை ஏற்படுத்தியது. உடனே இந்த ஆலை நிர்வாகம், தொழிலாளர்களுக்கான குறைந்த பட்ச சம்பளத்தை நூறு விழுக்காடு கூட்டி அறிவித்தது. இந்த அளவுக்கு இந்த ஆலையின் தொழிலாளர் நிலைமை இருக்கிறது என்பது இதிலிருந்தே வெளிப் படுகிறது.


இந்த பாஃக்ஸ்கான் ஆலை தனது வளாகத்திற்குள், தொழிலாளர்களை கொத்தடிமை போல வைத்திருந்ததாலேயே, அவர்கள் சுவர் ஏறி குதித்து தற்கொலை செய்து கொண்டார்கள் என்பது புரியப்பட வேண்டும்.
இப்படிப்பட்ட ஆலையில்தான் இங்கே திருபெரும்புதூரில், இதே ஆலையின் கிளையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. எல்லையில்லா பத்திரிகையாளர்கள் என்ற அமைப்பு இந்த ஆப்பிள் நிறுவனத்தின் தொழிலாளர் விரோத போக்கையும், அதை அம்பலப்படுத்த முயற்சித்த ஊடகங்களுக்கு எதிரான போக்கையும் வெளிப்படுத்தி இருந்தது இவர்களை அம்பலப்படுத்திய சீனா வணிக செய்திகள் என்ற இதழாளர்களுக்கு எதிராக பாஃக்ஸ்கான் நிறுவனம் வழக்கு தொடுத்து அவர்களுக்கு நாற்பது லட்சம் அமெரிக்க டாலர்களை அபராதமாக விதிக்கச் செய்தார்கள். இதன் மூலம் ஊடகங்கள் இந்த நிறுவனம் கண்டு அஞ்சத் தொடங்கின.


சீன குடியரசில் இருக்கும் இந்த பாஃக்ஸ்கான் நிறுவனத்தில், 2007ம் ஆண்டு ஜூன் 18ம் நாள் ஹூ என்ற 19 வயது பெண் தொழிலாளி, ஆலை வளாகத்திற்கு உள்ளேயே கழிப்பிடத்தில் தற்கொலை செய்து கொண்டார் என்பதாக அறிவிக்கப்பட்டது. அதே ஆண்டு செப்டம்பர் 1ம் நாள் 21வயது ஆண் தொழிலாளி லியூபிங், வேலையிலிருந்து நீக்கப்பட்ட 2மணி நேரத்தில் திடீரென இறந்து போனார். 2008ம் ஆண்டு மார்ச் 16ம் நாள் 28 வயது லீ என்ற ஆண் தொழிலாளி வேலை பளுவின் காரணமாக மரணமடைந்தார். 2009ம் ஆண்டு ஜூலை 16ல் சன் டன்யங் என்ற 25 வயது ஆண் தொழிலாளி தான் தங்கியிருந்த 12 வது தளத்திலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். 2009 ஆகஸ்ட் 20ல் 23வயது சென் சின் சாங் என்ற ஆண் தொழிலாளி ஆலையின் குளத்தில் இறந்து கிடந்தார். அதன் பிறகே 2010ம் ஆண்டு 5 மாதத்திற்குள் 13 தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொள்ள ஆலை சுவற்றிலிருந்து கீழே குதித்தனர் என்ற செய்தி வெளி வந்தது.

இந்த அளவுக்கு கொடுமையான தொழிலாளர் விரோத போக்கை மேற்கொண்ட இந்த பாஃக்ஸ்கான் ஆலை, ஆஸ்திரேலிய இணையதளத்தில் இந்த உண்மைகளை வெளியிட்டதற்காக, வழக்கு போட்டது. 2010 பிப்ரவரி 17ம் நாள் சீனாவில் உள்ள இதன் ஆலையில் ஒரு வெளிநாட்டு நிருபர் தாக்கப்பட்டார். இப்படிப்பட்ட ஆலைதான் திருபெரும் புதூரில் நச்சு வாயு கசிவை ஏற்படுத்தி விட்டு, இப்போது அதை மறைக்கப் பார்க்கிறது.

அந்த பாக்ஸ்கான் ஆலை அதிபர்களை நேரில்போய் பார்த்துவிட்டு வந்திருக்கிறார் நமது மாநிலத்தின் தளபதியாம், துணை முதல்வர் மு.க.ஸ்டாலின். அதன்மூலம் அதிக மூலதனத்தை இறக்க பேசிவிட்டு வந்திருக்கிறார். இவர்களையும் நாம் அடையாளம் காணவேண்டாமா?

சீன நாட்டினர் இலங்கைத்தீவில் தமிழர்களுக்கு எதிரான இன அழிப்புப் போரில் கொடியதொரு பாத்திரத்தை வகுத்தப் பின்பு, இப்போது தமிழ்நாட்டு தொழிலாளர் களை அழிப்பதற்காக வந்திருக்கிறார்களா என்று தமிழின உணர்வாளர்கள் சந்தேகிக்கிறார்கள். ஆனால் நம்மைப் பொறுத்தவரை போபால் நகரில் 26 ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு அமெரிக்க நிறுவனம், நச்சு வாயுவை அவிழ்த்துவிட்டு இந்திய மக்களை கொன்றது போதும். நமக்கு மீண்டும் ஒரு போபால் வேண்டாம். மேற்கண்ட விபத்தை முன்வைத்து, இங்கொரு போபால் இனியும் வேண்டாம் என்ற குரலை எழுப்ப வேண்டாமா

மரணத்திற்குப் பிறகும் படிப்பினைகள் தரும் தோழர் பழனியப்பன்!

பழம்பெரும் புரட்சியாளர் தோழர் பழனியப்பனை,இராவன்னா என்று அழைப்பார்கள்.அவர் காரைக்குடியில் சி.பி.ஐ கட்சியில் இருந்தார்.அப்போது 1967 ஆம் ஆண்டின் நக்சல்பாரி புரட்சி இவரையும் ஈர்த்தது.பழனியப்பன் பாத்திரங்கள் தயாரிக்கும் பணியில் இருந்தார்.உற்பத்திக்கான போராட்டம் என்று கூறப்படும் உழைப்பில் இருந்த பழனியப்பன்,தனது வாழ்க்கையை நக்சல்பாரி இயக்கத்திற்காக அர்ப்பணீப்பில் இறங்கினார். அன்றைய நக்சல்பாரி இயக்கத்தில்,சாருமஜீம்தாரின் வழிகாட்டல்கல் எல்லோராலும் ஏற்கப்பட்டன.தமிழ்நாட்டில் அப்படிப்பட்ட வழிகாட்டல்களில் செயல்பட்டு வந்த தோழர் எல்.அப்பு,வேலுரில் காவல்துறையால் கைது செய்யப்பட்டு ரகசியமாக கொலை செய்யப்பட்டார்.அது 1970ஆம் ஆண்டு நடந்தது.அண்ணாமலை பழ்கலைகழகத்தில் படித்து வந்த கே.என்.கணேசன், பென்னாடத்தில் வெடிகுண்டு தயாரிக்கும் போது வெடித்து சிதறி தியாகியானார்.அவருடன் விளாத்திகுளத்தை சேர்ந்த சர்ச்சிலும், சிறுமுகையை சேர்ந்த கன்னியப்பனும் மரணமடைந்தார்கள் அதுவும் 1970 ஆம் ஆண்டு நடந்தது.

1972ஆம் ஆண்டு தோழர் பழனியப்பன் சாருமஜிம்தார் வழியில் செயல்பட முடிவு செய்து,தென் மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் இறங்கினார். செங்கோட்டை அருகே மீனாட்சிபுரத்தில் தேவேந்திரகுல மக்கள் ஆதிக்க சாதியின் அடக்குமுறைகளுக்கு உள்ளாகி இருந்தனர். அந்த கிராமத்தில் விவசாய வேலைகள் செய்தபடி,பழனியப்பன் இறங்கி தலைமறைவு இயக்கப்பணிகளை தொடங்கினர்.ஒரு கட்டத்தில் அந்த கிராமம் காவல்துறையின் கியூ பிரிவினரால் சுற்றி வளைக்கப்பட்டது. அப்போது சுற்றி வளைப்பை உடைத்துக்கொண்டு பழனியப்பனும்,தோழர்களும் தப்பித்தார்கள் அந்த மீனாட்சிபுரம் கிராமம்தான் பிறகு முழுமையாக முஸ்லிம்மாக மாறியது. அதாவது புரட்சிகர மாற்றத்திற்கு தயாரான தலித் மக்களை அரசு அடக்குமுறை செய்யுமானால், அவர்கள் சாதி ஒடுக்கலில் இருந்து தப்பிப்பதற்காக மதம் மாறுவார்கள் என்பதற்கு இதுவே சான்று.

அதனாலேயே அந்த கிராமத்தை சேர்ந்த வாத்தியார் இராமசாமி, நாகூர்மீரான் போன்றோர் மிசாவில் சிறையில் தள்ளப்பட்டனர். அதன்பிறகு இராவண்ணா என்று அழைக்கப்பட்ட பழனியப்பன் இராஜபாளையம் அருகே சேத்தூர்,முகவூர்,தளவாய்புரம் கிராமங்களில் தங்கள் பனிகளை தொடர்ந்தார்..அதை ஒட்டி அந்த வட்டாரத்தில் நாலு பண்ணையார்கள் அழித்தொழிக்கபபட்டார்கள்.சாருமஜீம்தாரால் முன்வைக்கப்பட்ட, கொடுமைமிக்க வர்க்கக எதிரிகளை அழித்தொழியுங்கள் என்ற செயல் தந்திரம் அங்கே நிறைவேற்றப்பட்டது. அதன் மூலம் அந்த கிராமங்களை சேர்ந்த இரராயப்பன், மச்சக்காளை, ஆறுமுகம், ஆகியோரும், இரத்தினம்,அமல்ராஜ், ஆவுடையப்பன்,கல்லனை போன்றோரும் புரச்சிகர இயக்கத்தில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டனர். அதில் முதல் இரண்டு தோழர்களை காவல்துறை திட்டமிட்டு படுகொலை செய்தது.இதே போல மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் இராவன்னாவின் செயல்பாடு விரிவடைந்தது.அதில் குறிப்பிட்ட கிராமத்தில் புதிதாக இயக்கத்திற்கு வரும் தோழர்களை இராவன்னா அழைத்து செல்வார் அங்கே அவர்களுக்கு விவசாய வேலைகளை கற்றுக்கொடுப்பார்.அதன் மூலம் புதிய தோழர்கள் உற்பத்திக்கான போராட்டங்களில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு, தங்களது வர்க்கத்தன்மையை குறைத்துக்கொள்ள முற்படுவார்கள்.

இதைத்தான் மாவோவும், சாருவும் குறிப்பிட்டு இருக்கிறார்கள். உற்பத்திக்கான போராட்டம், வர்க்கப்போராட்டம் ஆகியவற்றில் புரச்சியாளர்கள் ஈடுபட்டு, அதன்மூலம் நிலமற்ற, ஏழை விவசாயிகள் மத்தியில் ஒன்றினை--ய வேண்டும் என்று சாருமஜீம்தார் வழிகாட்டல் கொடுத்து இருந்தார். அறிவு ஜீவிகள் தங்களை உழைக்கும் வர்க்கத்துடன் ஒன்றிணைத்துக்கொள்ள வேண்டும் என்று மா-சே-துங் கூறி இருக்கிறார்.

அப்படிப்பட்ட வழிகாட்டல்களை தமிழ்நாட்டில் செயல்படுத்திய தோழர்களில் பழனியப்பன் முக்கியமானவர். சாரு வழியில் செயல்பட்ட மாநில குழுவிற்கு,பழனியப்பன் செயலாளராக பொறுப்பு ஏற்று இருந்தார். அவர் கைது செய்யப்பட்ட பிறகு அவர் மீது போடப்பட்ட நான்கு கொலை வழக்குகளிலும் வழக்கறிஞர்கள் வைக்காமல் தானே வாதாடி அனைத்து வழக்குகளிலும் விடுதலை பெற்றார். அந்தக்காலத்தில் புரட்சியை தொழிலாக கொண்டவர்கள் என்பதாக கட்சியின் ஊழியர்கள் பெயர் பெற்று இருந்தனர். அவர்கள் தங்களது வர்க்கத்தன்மையை குறைத்துக்கொண்டு புரட்சியாளர்களாக இயங்கி வந்தனர். காலப்போக்கில் அதுவே நகரம் சார்ந்த நடமாட்டத்தை மட்டுமே மேற்க்கொள்ளும் ஊழியர்கள்,தங்களை முழுநேரஊழியர்கள் என்று அழைத்துக் கொண்டனர்.இவர்கள் பரப்புரை மட்டுமே செய்து வருபவர்கள். இவர்கள் தங்களது வர்க்கத்தன்மையை குறைத்துக்கொண்டு, பாட்டாளி வர்க்க உலக கண்ணோட்டத்தை உள்வாங்காமலேயே செயல்பட முடிகிறது.அதனால்தான் இவர்களால் ஒடுக்கப்படும் மக்களை பெருமளவிற்கு அணி திரட்ட முடியவில்லை.இவர்களது வேலை திட்டத்தை ஆய்வு செய்வதன் மூலம்,அவர்களுக்கு இருக்கின்ற புரட்சிகர வர்க்கப்போராட்ட பிடிப்புகளை அறிந்து கொள்ள முடியும்.இந்த விசயத்தில் பழனியப்பன் ஒரு புரட்சிகர முன் உதாரணத்தை படைத்து விட்டார்.

சித்தாந்த மட்டத்திலும், பழனியப்பன் இயங்கியல் மற்றும் இயக்கமறுப்பியல் ஆகியவை பற்றிய சர்ச்சைகளை தொடர்ந்து செய்து வந்தார். இப்போது பலரிடமும் இத்தகைய விவாதங்களை காண முடிவதில்லை.

சமீபத்தில் காரைக்குடியில் 24-09-2010அன்று மரணம் அடைந்த பழனியப்பன் இறுதி நிகழ்வில், மேற்கண்ட படிப்பினைகள் உணரப்பட்டன. தமிழ்நாட்டில், பிற மாநிலங்கள் போல் இல்லாமல் புரட்சிகர இயக்கங்கள் வெற்றி பெற்று, முன் செல்லாததற்கு, இத்தகைய காரணங்களும் இருக்கின்றனவா என்ற விவாதத்தை, தோழர் பழனியப்பன் வாழ்க்கை பரிசீலிக்க வைக்கிறது.

Tuesday, October 12, 2010

பீகார் ராணுவ காவலர் படையை கடந்து சென்ற "செம்படை"

"
இப்போது பீகார் ராணுவ காவல்படை பற்றி சேதிகள் வெளிவருகின்றன. அந்த படையிலுள்ள சிலரை மாவோவாதிகள் சுட்டு கொன்று விட்டனர் என்றும், சிலரை கடத்தி விட்டனர் என்றும் பிறகு கடத்தியவர்களை விடுதலை செய்து விட்டார்கள் என்றும் செய்திகள் வெளிவருகின்றன. ஆனால் அந்த பீகார் ராணுவ படை அந்த மாநிலத்தில், 1970 களின் தொடக்கத்திலிருந்தே நிறுத்தப்பட்டுள்ளது. உங்கள் கிராமத்தில் ஒரு அந்நிய படை ஆயுதங்களுடன் தங்கி இருப்பதும், உங்கள் ஊரின் சிறிய பையன்களை பிடிக்க அது முயலுமானால், நீங்கள் பொறுமையாக இருக்க முடியுமா? அந்த இணை ராணுவ படை மீது தானாகவே உங்களுக்கு கோபம் வருமல்லவா? இந்த நிலைமை பீகார் மாநிலத்தில் கடந்த நாற்பது ஆண்டுகளாக இருக்கிறது என்றால், அந்த கிராமப்புற மக்கள் என்ன சிந்தனையில் இருப்பார்கள்? எண்ணி பாருங்கள்.
எழுபதின் தொடக்கங்களில் இருந்தே அந்த பீகார் மாநிலத்தின் குறிப்பிட்ட மாவட்டங்களில், நக்சல்பாரி புரட்சியாளர்கள் வெற்றிகரமாக இயங்க தொடங்கி விட்டார்கள். பீகார் மாநில நக்சல் பொறுப்பாளராக இருந்த சத்ய நாராயன் சின்ஹா என்பவர், அகில இந்திய தலைவர் சாருவை எதிர்த்து கட்சியை விட்டு வெளியே வந்து, சமரச வாத பாதையை எடுத்தார். ஆனாலும் தொண்டர்கள் சாரு வழியில் உறுதியாக இருந்ததால், அவர்கள் ஆயுதப்போர் பாதையை விட்டு வெளியே வரவில்லை. அதனால்தான் சாரு மறைவுக்கு பிறகும், சாகர் என்ற சுப்ர தத்தா தலைமையில் பீகாரில் ஆயுதப்போராட்டம், கொரில்லா போர் முறையில் தொடர்ந்து நடந்து வந்தது. இருபத்தி நாலு மணிநேர கொரில்லா போரை இணை ராணுவத்திற்கு எதிராக நடத்தியதில், எழுபதின் மத்தியில் சாகர் பெயர் பெற்றார். சாகர் நடத்திய கொரில்லா போராட்டத்தில், சுரங்கம் தோண்டி அதிலிருந்து ராணுவத்தை எதிர்த்தது ஒரு வகை. அவ்வாறு கொரில்லா போர் நடந்து வரும் சூழலில்தான், அதன் எதிரொலியாக அரசியல் போராட்டம் உச்சகட்டத்தை எட்டியது.
அந்நேரம் இந்திரா காந்தியின் ஆட்சி மத்தியில் நடந்துவந்தது. எதேச்சாதிகார ஆட்சி என்று அது பெயர் பெற்றிருந்தது. அதை எதிர்ஹ்த்து அரசியல் போராட்டம் நடத்த எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் திராணி இல்லாத போது, பீகாரில் நடந்த நக்சல்பாரிகளின் எதிர்ப்புதான் பெரும் தலிவளியாக அந்த ஆட்சியாளர்களுக்கு இருந்தது. அப்போது மத்திய பீகாரில் நடத்தப்பட்ட கொரில்லா போராட்டத்தின் எதிரொலியாக, ஜெயப்ரகாஷ் நாராயணன் நடத்திய மக்கள் இயக்கம் காணப்பட்டது. "எவ்ரிடேஸ் பெர்ஸ்பெக்டிவ் ஒப் டுடே அண்ட் டுமாரோ"l [ everydays perspective of Today and Tomarrow ] என்ற வார எட்டை ஜெயப்ரகாஷ் நாராயணன் நடத்தினார். அதில் சாகர் தலைமையில் நக்சல்பாரிகள் நடத்திய கொரில்லா போராட்டத்தை பற்றிய செய்திகள் தொடர்ந்து வெளிவரும். அதை ஒட்டியே ஜே.பி. முழு புரட்சி என்ற முழக்கத்தை முன்வைத்தார். அதில் கல்லூரி செல்வோரையும், ராணுவத்தில் பணியாற்றுவோரையும் கூட, வேலைகளுக்கு செல்லாமல் மக்கள் புரட்சியை நடத்த வரும்படி அறைகூவல் விடுத்தார். இவ்வாறாக ஒரு ஆழமான கொரில்லா போர், ஒரு இடத்தில் குவித்து நடத்தப்படும்போது, அதன் எதிரொலியாக பரந்த இடங்களில் அரசியல் போராட்டம் வெடிக்கும் என்பதை அப்போது நம்மால் காண முடிந்தது. அதுதான் இப்போது சென்ற ஆண்டு வன்னி போரில் நடந்த நிகழ்வும் என்பது புரியப்படவேண்டும். வன்னியில் தமிழீழ தேசிய தலைவர் வே. பிரபாகரன் நடத்திய ஆயுதபோராட்டம் உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதன் விளைவாக, அகில உலக அளவில் ஒரு " நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்" என்ற பதாகை உயர்த்தி பிடிக்கப்படுகிறது. அதுவே உலகம் தழுவிய உரிமை போர் என்பதும், அரசியல் வடிவில் இப்போது வெளிப்படுகிறது என்பதும் அறியப்பட வேண்டும்.
அத்தகைய கொரில்லா போர் நடந்த பீகாரின், போஜ்பூர் மாவட்டத்திற்கு, 1978 ஆம் ஆண்டு செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டது. அப்போது சாகர் ராணுவத்துடனான நேரடி போரில் ஆயிரத்து தொள்ளாயிரத்து எழுபத்தாரில் கொல்லப்பட்டதன் விளைவாக, வினோத் மிஸ்ரா தலைமை எடுத்து புரட்சிகர இயக்கத்தை, அதன் கொரில்லா போரை நடத்தி வந்த காலம். அப்போதுதான் அறுந்து போயிருந்த தொடர்பு தமிழ் நாட்டிற்கு மீண்டும் கிடைத்தது. அதனால் மத்திய குழு கூட்டத்திற்கு போஜ்பூர் செல்ல புறப்பட்டோம். அப்போது எங்களை ரயிலில் ஒரு பகுதிவரை அழைத்து சென்றார்கள். அதற்கு பிறகு ரயில் பொக்குவரத்து பீகார் முழுவதற்கும் இல்லாத சூழ்நிலையில், நடை மூலமே இருபதுக்கு மேற்ப்பட்ட கிலோமீட்டர்கள் கூட்டி சென்றார்கள். எங்களுக்கு முன்பும், பின்பும் துப்பாக்கியை மறைத்து வைத்துக்கொண்ட கொரில்லாக்கள் பாதுகாப்புக்கு வந்தனர். அவர்கள் கூலி ஏழை விவசாயிகளாக இருந்தனர். வயல்கள் வழியாக நடந்தோம். வழியில் சிலர் யானை மீது ஏறி செல்வதை காண முடிந்தது. அவர்கள் ஆதிக்க சாதி பண்ணையார்கள் என்று தெரிந்து கொண்டோம். எங்களை ஒரு பெரிய கிராமத்திற்கு கொண்டு சென்றனர். அங்கே இருந்த மிக பெரிய வைக்கோல்போரில், ஆயுதம் ஏந்திய கொரில்லாக்கள் ஒளிந்திருந்தனர். அவர்கள் குறி முழுவதும் வழியின் மேல் விழி வைத்தே இருந்தது.
நாங்கள் உள்ளே ஒரு பெரிய வீட்டிற்குள் கூட்டி செல்லப்பட்டோம். அங்கே எங்கள் ரகசிய கூட்டம் நடந்தது. அன்று மாலைக்குமேல், ஒரு தோழர் வந்து இந்தியில் ஏதோ கூறினார். உடனே தலைவர்கள் கவனமாக மாற்று இடம் பற்றி ஆலோசனை நடத்தினார்கள். அதை ஒட்டி நாம் எல்லோரும் இன்று நள்ளிரவில் இந்த ஊரைவிட்டு, அடுத்த இடத்திற்கு செல்லப்போகிறோம் என்று அறிவித்தனர். அவ்வாறே இரவில் எங்களை கொரில்லாக்கள் வெள்யே அழைத்து சென்றனர். வயல் வழி வழியாக சென்றோம். வரப்புகளில் நல்ல இரவு இருட்டில் கடந்து சென்றோம். ஒருவர் பின்னால் ஒருவர் சென்றோம். ஒவ்வுறு தோழருக்கும் முன்னாலும், பின்னாலும் ஒரு கொரில்லா தோழர் துவக்குடன் வந்தார். ஏ.கே.-47 அவர்கள் கரங்களில் இருந்தது. நடுவில் ஒருவர் எஸ்.எம்.ஜி. வைத்திருந்தார். அது சிறிய இயந்திர துப்பாக்கி. அப்போது எங்கள் பாதைக்கு மிக அருகில் ஒரு கூடாரம் இருந்தது. அதில் மினுக், மினுக், என்று விளக்கு எரிந்து கொண்டு இருந்தது. அதுதான் பீ.எம்.பி. முகாம் என்று ஒரு தோழர் கூறினார். அதாவது பீகார் ராணுவ காவலர் படை முகாம் அங்கேயே இருந்ததை கண்டோம். ஆனால் அவர்களுக்கு சிறிதும் சத்தம் கேட்காமல் நாங்கள் அடி எடுத்து வைத்து அவர்களது முகாமை கடந்து சென்றோம். இப்படியேதான் அங்குள்ள கொரில்லாக்களின் வாழ்நிலை அன்றாடம் நடக்கிறது.
முப்பத்தி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே இதுதான் நிலைமை என்றால் இப்போது கேட்கவா வேண்டும்? பீகார் ராணுவ காவலர்கள் நாற்பது ஆண்டுகளாக அங்கேயே முகாம் போட்டு இருபாது இதிலிருந்தே தெரிகிறதே? அப்புறம் எப்படி ஐயா மக்கள் இந்த மத்திய அரசின் அர்சப்படைகளை ஏற்றுக்கொள்வார்கள்? அங்கு மக்களுக்கும், மத்திய அரசின் அரசபடைகளுக்கும் இடையேதான் மோதல் என்று விளங்குமா?

தமிழீழ தேசியத்தலைவர் சிக்கனம் பற்றி........[ ஒரு வரலாற்று நிகழ்வு---வன்னி கள போராளி ஒருவர் சொல்லி t


புதுவை இரத்தினத்துரை ஒருமுறை மக்கள்மத்தியில் பேசும்போது, தலைவர் தலையணை இல்லாமல்தான் படுப்பார். அதுபோல நாமும் சிக்கனத்தை கடைப்பிடிக்கவேண்டும் என்றார். அதற்குப்பிறகு தமிழீழ தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன், ஒரு நாள் புதுவை ரத்தினதுரையை கூப்பிட்டார். அவரிடம் அன்று என்ன பேசினீர்கள் என்று கேட்டார். அவரும் கூறினார். இதோ நிற்கிறதே அந்த நான் பயன்படுத்தும் வெளிநாட்டு கார், என்ன விலை தெரியுமா? என்றார். புதுவையும் அது எழுபத்து ஐந்து லட்சம் இருக்கும் என்றார். அதற்கு தலைவர், சரி. அதன் விலை எண்பத்து ஐந்து லட்சம். இது தோட்டா துளைக்காத வாகனம். அதில் பயணம் செய்வது மட்டும்தான் போரை நடத்தும் ஒரு தலைவருக்கு பாதுகாப்பு. அதில் உள்ள ஒரு இருக்கையை விற்றால், ஒரு கிராமத்திற்கு முழுக்க தலையணை வாங்கலாம் தெரியுமா? என்றார். நான் வைத்திருக்கும் செயற்கைக்கோள் கைபேசி, வெளிநாட்டிலிருந்து வாங்கப்பட்டது. நான் சாதாரண கைபேசியை பயன்படுத்தினால், தினசரி வெளிநாடுகளுக்கு நேரடியாக பேசமுடியாது தெரியுமா? என்றார். அதனால் சிக்கனம் பற்றி ஏதாவது பேசாதீர்கள். சில விசயங்கள் கட்டாயத்தேவையாக இன்றைய சூழலில் இருக்கிறது என்றார். சிக்கனம் பற்றிக்கூட கற்பனாவாதத்தையும், விளம்பரத்திற்க்காக படம் காட்டும் இன்றைய தமிழக அரசியல் தலைவர்கள் போல, தமிழீழ தேசியத்தலைவர் இல்லை என்பது இதில் தெரிகிறது.

Monday, October 11, 2010

போர்--தற்கொலை பற்றிய..புதிய சதியில் தமிழர்களை ஏமாற்ற வரும் உளவியலாளர்கள்

.
ஏடுகளில் வந்துள்ள செய்திகள் அதிர்ச்சி தந்தன. போர் காலங்களில் உள்ளதைவிட போர் இல்லாத காலங்களில் இலங்கையில் அதிகமான தற்கொலைகள் நடந்துள்ளன என்ற மதிப்பீட்டை, இலங்கை நாட்டின் உளவியல் நிபுணர் தயா சோமசுந்தரம் கூறியதாக அந்த ஆங்கில ஏடு செய்தி வெளியிட்டிருந்தது இது சாதாரண மக்களை ஆச்சர்யத்திற்கு உள்ளாக்கலாம். ஆனால் உளவியல் நிபுணர்களை அல்ல. எமிலே துர்கீம் என்ற பிரான்ஸ் நாட்டு உளவியல் நிபுணர், போர் காலத்தில் அடையாளம் காணப்பட்ட எதிரியை எதிர்த்து அனைவரும் உளப்பூர்வமாக திரண்டு நிற்பார்கள் . அதனால் அன்றாட வாழக்கையில் மக்களுக்குள் பெரும் பிரச்சனை எழுவதில்லை என்று கூறியுள்ளார்.

அதையே இந்த சோமசுந்தரம் சற்று மாற்றி, தற்கொலை மனோபாவம், ஈழப்போர் நேரத்தில் வேறு ஒரு உணர்வாக மாற்றப்பட்டுவிட்டது என்று கூற முற்படுகிறார். உண்மை என்ன என்றால் உளவியல் ரீதியான பார்வையை பார்க்க முனையும் இது போன்ற உளவியல் நிபுணர்கள், தளத்தில் நடக்கும் போர் பற்றியோ அதை சம்பந்தப்படுத்தி மக்கள் மத்தியில் உருவாகும் உணர்வுகள் பற்றியோ என்ன புரிதலில் இருக்கிறார்கள் என்பதையும் சேர்த்தே இந்த நிபுணர்களின் அபிப்பிராயங்களை காண வேண்டி உள்ளது. ஈழம் என்பது அடைய வேண்டிய ஒரு இலக்கு என்பதை அங்கு வாழும் மக்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டார்கள் எனபது அவர்களது வேலை திட்டங்களில் இருந்தே அறியமுடியும்.

அதை விளக்க வருகிறேன் என்று சோமசுந்தரம் கூறும்போது, போர் தனக்கு வெளியே உள்ள எதிரியை அடையாளம் காண வைத்து அதன்மூலம் அந்த எதிரிக்கு எதிரான போரில் தன்னை மாய்த்துக்கொள்ள செய்கிறது. என்கிறார். போர் இல்லாத சூழலில் தனக்குள்ளேயே உள்ள முரண்பாடுகளை சந்திக்க வலு இன்றி தற்கொலை செய்து கொவதாக கூறுகிறார். உள்ளபடியே இது போன்ற அறிஞர்கள் தற்கொலைகளை தனி, தனியாக எடுத்து பார்ப்பதனால், அவர்களுக்கு சமூக சூழலை ஒட்டி அவற்றை படிக்க தெரிய வில்லை என்றுதான் கூறவேண்டும். பொது எதிரியை எதிர்த்து போரிட வாய்ப்பு இல்லாமல் போகும்போது, தனக்குள் உள்ள எதிரியை ஒருவர் தேடிக்கொள்வதாக இவர்கள் கூறுகிறார்கள். அதை சமாதான காலங்களில் என்று வர்ணிக்கிறார்கள். அதாவது இப்போது இலங்கை தீவில் குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சமாதான நிலைமை நிலவுவதாக கற்பனை செய்துகொண்டு, இந்த நிபுணர் கூறியுள்ளார். அதாவது அரசாங்கத்தின் அறிவிப்புகளை மட்டுமே குளிர்சாதன அறைக்குள் இருந்து கொண்டு, காணும் இந்த நிபுணர்களுக்கு உண்மை நிலைமை நாட்டில் என்ன இருக்கிறது என்பதோ, மக்கள் மத்தியில் எப்படிப்பட்ட பிரச்சனைகள் இருக்கின்றன என்பதை பற்றியோ தெரியவில்லை என்பதே இதிலிருந்து தெரிகிறது.

ஊசலாட்ட வயதில் உள்ளவர்களுக்கு, தீவிர விரக்தியாலோ, உள்நாட்டு மோதல்களின் விளைவாகவோ, ஒருவிதமான நிலையற்ற மனோ நிலை ஏற்படுகிறது எகிறார் இந்த சோமசுந்தரம். அப்படி நேரங்களில் அத்தகைய இளைஞர்கள் போரில் போராளிகளுடன் சேர்ந்துகொண்டு, மரியாதைக்குரிய மரணங்களை எட்டிவிடுகின்றனர். அதற்காக அவர்களது பெயர்கள், " வீர சாவு" என்று பெயரிடப்பட்டு அவர்களுடைய படங்கள் சுவரொட்டிகளாக ஒட்டப்பட்டு அதன் மூலம் அவர்களது மரணங்கள் மரியாதைக்கு உரியதாக ஆக்கப்படுகின்றன. என்றும் இந்த நிபுணர் கருத்து சொல்லியிருக்கிறார். யாழ்ப்பாணத்தில் ஆனந்தராஜா என்ற ஒரு ஆறுதல் மையம் வைத்திருப்பவர் கூறிய கருத்துக்களை இந்த நிபுணர் தனது வாதத்திற்கு துணையாக எடுத்துக்கொள்கிறார். ஆனந்தராஜா கூற்றில் சில இளைஞர்கள் போர் நேரத்தில் தங்கள் பெற்றோரிடம், ஒன்று தற்கொலை செய்துகொள்வேன் அல்லது போராளிகளுடன் போய் சேர்ந்து விடுவேன் என்று கூறியுள்ளனர் என்ற வாதத்தை தனக்கு சாதகமாக எடுத்து கொள்கிறார்.

1980 இன் காலங்களில் சமாதான நேரத்தில் யாழ்ப்பாணத்தில்தான் அதிகமான தற்கொலைகள் நடந்துள்ளன என்று ஒரு கணக்கையும் இவர்கள் தங்கள் வாதத்தை நிரூபிக்க பயன்படுத்துகிறார்கள். உள்ளபடியே இவர்கள் எடுத்துள்ள கணக்கு என்ற எண்ணிக்கை உண்மைதான். ஆனால் அவை ஏன் என்ற காரணத்தை அறிவதற்கான அறிவு இவர்களுக்கு, அதாவது இந்த நிபுணர்கள் என்ற பெயரில் நடமாடும் புத்தி ஜீவிகளுக்கு இல்லாமல் போய்விட்டது. அதேசமயம் போர் நடக்கும் நேரத்தில், தற்கொலை செய்யும் ஆண்களின் எண்ணிக்கை 800 விழுக்காடும், தற்கொலை செய்துகொள்ளும் பெண்களின் எண்ணிக்கை 180 விழுக்காடும் குறைந்துள்ளன என்பது இவர்கள் எடுத்துள்ள கணக்கு. அந்த கணக்கில் நமக்கு பிரச்சனை இல்லை. அது உண்மையாக இருக்கலாம். ஆனால் அதற்க்கான காரணமாக அவர்கள் கூறும் கண்டுபிடிப்பில்தான் பிரச்சனை உள்ளது. பதினைந்து வயதிலிருந்து இருபத்துநான்கு வயது வரை உள்ள ஆண்களின் கணக்கில்தான் தாங்கள் கூறுவதாக இவர்களே அறிவித்துள்ளனர். இந்த வயதில் உள்ள ஆண்கள்தான் போர் இல்லாத காலங்களில் அதிகமான தற்கொலைகளில் மரணமடைந்தவர்கள் என்றும் இவர்களே கூறுகிறார்கள்.

உள்ளபடியே இலங்கை தீவில் ஒரு இன அடக்குமுறை இருப்பதோ, சிறுபான்மை இனத்தை சேர்ந்தவர்களாக தமிழர்கள் இருப்பதோ, அவர்கள் மீது சிங்கள பெரும்பான்மை அடக்குமுறை செலுத்துவதோ, இவர்களது உளவியல் ஆய்வுக்கு உட்படவே இல்லை. இன ஒடுக்கல் என்பது எந்த அளவுக்கு ஒரு தேசிய இனத்தின் இருத்தலுக்கே இடையூறாக அமையும் என்பதும் இவர்களுக்கு கணக்கில் வரவில்லை. வன்னியில் போர் நடக்கும் நேரத்தில், அன்றாடம் ஆயிரக்கணக்கில் தமிழர்கள் செத்துக்கொண்டிருக்கும் செய்திகள் வந்து அடையும் போது, இந்தியாவில் உள்ள தமிழகத்தில் நமக்கெல்லாம் எப்படி இருந்தது என்பதே இது போன்ற அறிவுஜீவிகளுக்கு தெரியாத செய்தியாக இருக்கிறது. இங்கே ஒவ்வொருவரும் கையறு நிலையில் இருந்தோம் என்ற சூழல் இவர்களது அறிவுக்கு எட்டவில்லை போலும். இங்கே இருக்கும் முதல்வர் கூட நாம் கையறு நிலையில் உள்ளோம் என்று கூறியது இவர்களுக்கு தெரியாது போலும். அந்த அளவுக்கு ஒரு தேசிய இன ஒடுக்கல் மக்களது மனங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது கூட தெரியாதவன் எப்படி உளவியல் நிபுணராக இருக்க முடியும்?

உரிமை என்பது மனிதனுக்கு அடிப்படையானது என்று தெரியாத ஒரு உளவியல் இருக்க முடியுமா? இலங்கை வரலாற்றில் நடக்கும் இன ஒடுக்கல் உளவியல்ரீதியாக எப்படி சிறுபான்மை மக்களை பாதிக்கும் என்பது தெரியாதவன் உளவியல் நிபுணனாக இருக்க முடியுமா? முறையாக போராளிகள் போரை நடத்துவதற்கு முன்பு, அனைத்து அறவழி முறைகளும் தோற்றுவிட்ட நிலையில், இளைஞர்கள் விரக்தியடைந்தால் யார் பொறுப்பு? கைகளில் போராட ஆயுதம் வந்த பிறகு எந்த முட்டாள் தற்கொலை செய்து கொள்வான் என்பதையும் என்பதும் புரியாதவன் உளவியலாளரா?

இப்போது போரில் பல்லாயிரக்கணக்கான தமிழர்களை கொலை செய்து விட்டு, போரில் வெல்லவும் முடியாத ஒரு சூழலில், சமாதானம் என்ற பெயரில் சிங்கள பெரும்பான்மை யாழ்ப்பானத்திர்க்குள் குடியமர்த்தப்படுவார்கள், அதை தட்டி கேட்க முடியாத நிலையில் இளைஞர்கள் என்ன செய்வார்கள்? தற்கொலைதானே செய்துகொள்வார்கள்? இதுகூட தெரியாதவன் உளவியலாளரா? இப்படி ஒரு ஆய்வை நடத்தி அதை பிரபல படுத்த மக்கள் மத்தியில் ஏடுகள் மூலம் கொடுப்பவனது நோக்கம் என்ன? இன உணர்வு என்பதோ, உரிமை என்பதோ சாத்தியப்படாத ஒன்றுதான் என்று உறுதிபடுத்துவதுதானே?

இப்போது இலங்கை தீவை ஆளும் கொள்ளை கூட்டத்திற்கும், அதில் பங்கு போட துடிக்கும் வட்டார, மற்றும் வெளிநாட்டு ஏகாதிபத்திய சக்திகளுக்கும், மீண்டும் ஒரு தேசிய இன உணர்வு துளிர்விடக்கூடாது என்பதுதானே நோக்கம்? அதற்கு ஏற்றார்போல பல திட்டங்களை அமுல்படுத்தும் அவர்கள், இந்த உளவியலாளர் என்ற பெயரில் சில குழப்பங்களை தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்தி அதன்மூலம் நம்பிக்கை இழப்பை ஏற்படுத்துவது எனபதை தவிர வேறு என்ன சிந்திப்பார்கள்? ஆகவே இவர்கள் மனோதத்துவ நிபுணர்களோ, உளவியல் அறிஞர்களோ அல்ல, மாறாக இவர்கள் உளவு சொல்லும் ஒற்றர்கள் என்பது தெளிவு. உளவியல்போர் ஒன்றை நடத்துவதே இப்போது தமிழின எதிரிகளின் முக்கிய தொழில் எனபதை நாம் உணர வேண்டியுள்ளது.

நக்சல்பாரி தலைவர் சாரு மஜும்தார் கைதாகும்போது கூறிய வார்த்தைகள்....

1972 ஆம் ஆண்டு ஜூலை--12 ஆம் நாள் கொல்கத்தாவில் ஒரு வீட்டில் தங்கி இருக்கும்போது, அதிகாலையில் காவல்துறையினர், சாருவை கைது செய்ய உள்ளே நுழைந்து விட்டனர். அப்போது சாரு மஜும்தார் என்றால், நக்சல்பாரி புரட்சிக்கு வித்திட்டவர் என்று காவல்துறை நடுங்கி கொண்டிருந்த காலம். நக்சல்பாரி புரட்சியின் தந்தை என்று சாரு அழைக்கப்பட்ட காலம். மேற்கு வங்கத்தில் தொடங்கி, ஆந்திரா, பீகார், மத்திய பிரதேசம், ஒரிசா, என சாருவின் நடமாட்டம் பற்றி காவல்துறை அலைந்து திரிந்து கொண்டிருந்த நேரம். சாருவுக்கு வயது அப்போது அறுபத்தி இரண்டு. அவர் அனுப்பி இருந்த " தொடர்பாளர்" [கொரியர்] முந்திய இரவில் திரும்பி வரவில்லை. அதனால் சாருவுக்கு சந்தேகம் ஒரு ஓரத்தில் இருந்திருக்கிறது. ஏற்கனவே தோழர்கள் சரோஜ் தத்தா, போன்ற முக்கிய தலைவர்களை வங்காளத்திலும், வேம்பட்டம்பு சத்யநாராயணா, ஆதிபத்திய கைலாசா, எம்.எல்.நாராயணா, பஞ்சத்ரி கிருஷ்ணமூர்த்தி, நிர்மலா கிருஷ்ணமூர்த்தி ஆகிய தலைமை தோழர்களை, ஆந்திராவில் எதிரிகளின் தோட்டாக்களுக்கு பலி கொடுத்த நேரம். அதனால் எந்த நேரமும் எதரியின் தாக்குதல் வரலாம் என்ற எதிர்பார்ப்பு அந்த தலைவரிடம் இருந்தது.

அதுவும் கொல்கத்தா நகருக்குள், ரகசியமான தாங்கும் இடங்களை தேர்வு செய்வதும் , அவற்றில் தங்கி இருப்பதும், அவ்வப்போது தங்கும் இடங்களை மாற்றிக்கொள்வதும், புரட்சியாளர்களுக்கு கை வந்தகலை. அதேசமயம் சாரு போன்ற தலைவர்களை இட மாற்றம் செய்யும்போது அதிக கவனத்துடன் பயணத்தை திட்டமிட வேண்டும். அன்றைய அதிகாலைக்கு முன்பே, இரவு வெகுநேரம் கழித்து, சாருவால் வெளியே அனுப்பப்பட்ட அந்த கொரியர் தோழர், திரும்பவில்லை என்ற செய்தியை செரிப்பதற்க்குள், காவல்துறையினர் உள்ளே நுழைந்துவிட்டனர். அதனால் ஒவ்வொரு நிமிடமும் அந்த புரட்சியாளறது மனதில் ஓடிய சந்தேகம் அப்போது உறுதியானது.

எந்த நேரமும் எதுவும் நடக்கலாம் என்ற மன நிலை அந்த தலைமை தோழருக்கு இருந்திருக்க வேண்டும். ஆகவே அவர் காவலர்கள் உள்ளே வந்தவுடன், " நான் எதிர்பார்த்தேன் " என்று கூறி இருக்கிறார். அதற்கு பொருளே தனிதான். எந்த நேரத்திலும் நகர்புறத்தில், அதாவது எதிரியின் கோட்டை என்று வர்ணிக்கப்படும் பெரு நகரில், எதிரியின் சுற்றி வளைத்தல் நடக்கலாம் என்பதுதான் புரட்சியாளர்களின் எதிர்பார்ப்பு. குறிப்பிட்ட நேரத்தில் அப்படி நடந்து விடவே அதுவே அவரது எதிரொலியாக இருந்திருக்கிறது.
அன்று கைது செய்த சாருவை, சிறையில் பன்னிரெண்டே நாட்கள் உயிருடன் வைத்திருந்த மார்க்சிஸ்ட் கட்சி ஆட்சி, அவர் ஜூலை-28 அன்று மரணமடைய காரணமாக இருந்தார்கள். கடும் இருதய நோயில் இருந்த அந்த தலைவனுக்கு தேவையான மருந்துகளை அளிக்காமல், அவரது மறைவுக்கு மறைமுகமாக காரணமாக இருந்துவிட்டார்கள். அதனால்தான் இன்று வரை அந்த மறைவு நாளை, "தியாகிகள் தினம்" என்று குறிப்பிடுகிறார்கள்.

Sunday, October 10, 2010

இந்திய தலைமை தேர்தல் ஆணையர், பண--ஆள் பலத்தை சமாளிக்கமுடியுமா?

சென்னையில் நடந்த கூட்டத்தில், வர இருக்கும் தேர்தலில் பண பலத்தையும் அடியாள் பலத்தையும் எதிர்த்து போராடி, சுதந்திரமான, நேர்மையான தேர்தலை நடத்துவதற்க்கான, ஒரு ஆலோசனைக்கூட்டம் அது என்று வானளாவ பறந்து, பறந்து அறிவித்து கொண்டது. ஐந்தாவது தூண் என்று அதன் அமைப்பாளர்கள் தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டனர். இன்றைய தலைமை தேர்தல் அதிகாரியான குரேஷி, முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்த தமிழ்நாட்டை சேர்ந்த கோபால்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர். அது தேர்தல் ஆணையமும், பொதுமக்களும் கலந்து பேசும் கூட்டம் என்று கூறப்பட்டது. தேர்தல் ஆணையர் அரசியல் கட்சிகளின் தலைவர்களைத்தான் வழக்கமாக சந்திப்பார் . அதுவும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளைத்தான் அத்தகைய கூட்டங்களிலும் அனுமதிப்பார்கள். ஆனால் இந்த முறை, பொதுமக்கள் பங்கு கொண்டனர். கேள்வி கேட்க அனுமதிக்கப்பட்டனர். கேள்விகளுக்கு தலைமை தேர்தல் ஆணையர் குரேஷி பதில் கூறினார். இது ஒரு முன்னேற்றம்தான். எப்படியோ மக்களுக்கு தேர்தல் மீது உள்ள அவநம்பிக்கையை போக்கிவிடுவார்களோ?

அரசியல் சட்டத்தின் 324 வது பிரிவின் ஒன்றாவது விதியின் படி, இந்தியாவின் அனைத்து தேர்தல் பொறுப்புகளும், இந்த தேர்தல் ஆணையத்தின் கைகளில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நேர்மையான, சுதந்திரமான தேர்தல்கள் நடத்தப்படவேண்டும் என்று உச்சநீதிமன்றம் வேறு கூறிவிட்டது. இத்தகைய நம்பிக்கைகளை அடிப்படையாக வைத்து, அந்த மக்கள் சந்திப்பு கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தார்கள். அதனால் அவர்கள் தலைமை தேர்தல் ஆணையரிடம் கொடுத்த மனுவில், தேர்தலில் பணபலம் அதிகரித்துவருவதை கவலையுடன் சுட்டி காட்டியிருந்தனர். அதாவது வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுக்கப்படுகிறது என்பது அவர்களது குற்றச்சாட்டு. அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் இந்தியாவில் நிலவும் தேர்தல் முறையில் அடிப்படை நம்பிக்கை உள்ளவர்களாகவும், அத்தகைய நம்பிக்கையை வாக்குகளுக்கு பணம் கொடுக்கும் பழக்கம் கெடுத்துவிடுகிறது என்றும் கருதினார்கள். அது நாடாளுமன்ற தேர்தல் முறையையே பாழ்படுத்திவிடும் என்று அவர்கள் அனைவரும் நம்பினார்கள். அதனால் தமிழ்நாட்டில் நடந்த தேர்தலில், திருமங்கலம் தேர்தல் முறை என்று பிரபலமாக அழைக்கப்படும் அணுகுமுறை பற்றியே எல்லோரும் பேசினார்கள். அல்லது எல்லோரும் அதை நினைத்தே கொந்தளித்தார்கள் என்றே சொல்லலாம்.

கூட்டத்தில் கலந்து கொண்ட ஒருவர் தங்கள் அமைப்பின் மூலம், இதுவரை நூறு கிராமங்களுக்கு சென்று, வாக்குகளுக்கு பணம் வாங்க கூடாது என்று பரப்புரை செய்து வந்துள்ளதாகவும், அதற்கு கிராம மக்கள் மத்தியில் நல்ல ஆதரவு இருப்பதாகவும் எழுந்து நின்று கூறினார். உடனே ஏதோ எல்லாமே மாறிவிட்டது போலவும், அல்லது மாறிவிடும் என்பது போலவும் அனைவரும் கை தட்டி அந்த கருத்துக்களை வரவேற்றனர். திருமங்கலம் மாதிரி என்று அவர்கள் அனைவரும் வருத்தப்படும் முன்மாதிரி என்பது, ஒவ்வொரு வாக்காளருக்கும் ஐந்தாயிரம் ரூபாய் வரை கொடுக்கப்பட்டது என்பதுதான். அதுபற்றி ஒரு ஊடகவியலாளர் வித்தியாசமான செய்தியை நம்மிடம் கூறினார். அதாவது இன்றைய தமிழக சூழலில், கடுமையான வேலையின்மையையும், வறுமையையும், எதிர்கொண்டு வரும் கிராமப்புற மக்களுக்கு, தேர்தல் நேரத்திலாவது, அதாவது தேர்தலை சாக்காக வைத்தாவது, தாங்கள் பட்டுள்ள கடன்களை திருப்புவதற்கு ஒரு சிறிய அளவிலாவது அந்த வாக்குகளுக்கு கொடுக்கப்படும் பணம் உதவுமானால், அதை பெரிய பலனாக அவர்கள் கருதுகிறார்கள். அப்படித்தான் திருமங்கலம் தொகுதி மக்களும் கருதினார்கள். அவர்களுக்கு அந்த ஒரு வாக்குக்கு ஐந்தாயிரம் ரூபாய் என்பது, ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் குறைந்த பட்சம் ஐந்து வாக்குகளுக்கு இருபத்து ஐந்தாயிரம் ரூபாயை சம்பாதித்து கொடுத்து விட்டது. அது தங்கள் குடும்ப கடனை அடைக்க பயன்பட்டதே என்று அவர்கள் நினைத்ததாக அந்த ஊடக இயலாளர் கூறினார்.


அப்படியானால் தூய்மையான தேர்தலை விரும்பும் இந்த அறிவு ஜீவிகளுக்கும், வறிய நிலையில் உள்ள கிராமப்புற மக்களுக்கும் இந்த தேர்தலை சுத்தப்படுத்தி நடத்துவது என்பதில் அடிபப்டையிலேயே வேறுபாடு இருக்கிறதா? வறிய மக்களுக்கு தங்கள் அடுத்த வேளை சோறு என்பதுதான் முக்கிய பிரச்சனை. அதை புரிந்து கொண்ட, ஊழல் அரசியல்வாதிகள், அவர்களை காசு கொடுத்து வாக்கு வாங்கும் கருவிகளாக பார்க்கிறார்கள். ஆக்கிவிடுகிறார்கள். அதுதான் பச்சையாக திருமங்கலத்தில் நடந்தது. ஆள்வோர்களின் தந்திரமாக இந்த தேர்தல்கள் நடப்பதுபோல தெரிகின்றன. அதாவது எளிய மக்களை ஏமாற்றி வறுமையில் தள்ளிவிட்டு அவர்களை தங்கள் வறுமையை தவிர வேறு எதையும் சிந்திக்க முடியாத நிலைமையில் தள்ளிவிட்டு, பிறகு தேர்தல் என்று சொன்னால் அதில் அரசு கொடுக்கும் இலவசங்களும், தேர்தல் நேரத்தில் கொடுக்கும் லஞ்சங்களும் மட்டுமே தீர்மானிக்கும் பங்கை ஆற்றும் என்பதே இந்த அரசியல்வாதிகளின் திட்டமா? என்பதே கேள்வி. இந்த இடத்தில்தான் தேர்தலை ஒரு அரசியல் பிரதிநித்துவத்திற்க்கான அணுகுமுறையாக காணும் அரசியல் பார்வையுள்ள அறிவுஜீவிகளுக்கும், அரசியலற்ற நிலையில் உள்ள எளிய மக்களுக்கும் உள்ள வேறுபாடாக நிற்கிறது.

அன்று நடந்த கூட்டத்தில், அறிவுஜீவிகள் எனப்படுவோரும் ஏறுக்கு, மாறாக பேசினார்கள். ஒரு முன்னாள் ஒய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். தான் முக்கியமான ஆலோசனைகளை தேர்தல் ஆணையத்திடம் வைப்பதாக கூறி, ஒரு நகைச்சுவையான ஆலோசனையை முன்வைத்தார். கோடிக்கணக்கில் பணம் செலவு செய்யும் வேட்பாளர்களை தடுக்க முடிவதில்லை என்பதால், ஆணையம் கடைசி நேரத்தில் தேர்தலை ரத்து செய்து விட்டு தள்ளி வைத்து விடவேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட கோடீஸ்வர வேட்பாளர் செலவு செய்தது எல்லாம் வீணாகி போகும் என்றும், பிறகு அடுத்த முறையும் அப்படியே திடீரென தேர்தல் நாளுக்கு முந்திய நாள் தேர்தலை தள்ளி வைத்து விடவேண்டும் என்றும், அதன்பிறகு அப்படிப்பட்ட கோடீஸ்வர வேட்பாளர்கள் கண்டபடி செலவு செய்ய அஞ்சுவார்கள் என்றும் ஒரு சிரிக்க தக்க ஆலோசனையை கூறினார். அதை யாரும் கவனமாக எடுத்துகொள்ளாததால் வாய் விட்டு சிரிக்கவில்லை. இப்படி பிரபல அறிவுஜீவிகளே விரக்தியின் விளிம்புக்கு சென்று, நகைச்சுவை ஆலோசனைகளை வழங்கினால் பாவப்பட்ட மக்கள் என்னதான் செய்வார்கள்?

இப்போது இந்திய தேர்தல் ஆணையம், தன்னுடன் உதவிகள் செய்வதற்காக, புதிய பிரிவுகளை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் செலவுகளை கண்காணிக்கும் துறையின் அதிகாரிகளையும், வாக்காளர்களுக்கு கல்வி கொடுக்கும் மற்றும் வாக்காளர்களை தேர்தலில் பங்கேற்க வைக்கும் பிரிவையும் ஏற்ப்படுத்தியுள்ளோம் என்று ஒரு புதிய அறிவிப்பை அங்கே தலைமை தேர்தல் அதிகாரி குரேஷி வெளியிட்டார். அதேபோல, " காசு கொடுத்து தங்களுக்கு ஆதரவான செய்திகளை தயார் செய்து வெளியிடும்" செயலை கண்டுபிடித்த்டிருப்பதாகவும் அதற்கு எதிரான நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் அறிவித்தார். இத்தகைய அறிவிப்பு தேர்தல் ஆணையத்தை ஏமாற்றி ஊடகங்கள் செய்த துரோகத்திற்கு எதிரொலியாக வந்துள்ளன. அதாவது தேர்தல் ஆணையம் வேட்ப்பாளர்கள் இந்த அளவுதான் விளம்பரத்திற்கு செலவு செய்ய வேண்டும் என்று ஒரு விதியை விதித்துள்ளது. அதை மீறி ஊடகங்கள் வேட்பாளர்களிடம் காசு வாங்கிக்கொண்டு விளம்பரம் என்ற பெயரில் இல்லாமல், செய்தி போல அந்த குறிப்பிட்ட வேட்பாளருக்கு ஆதரவாக செய்திகளை வெளியிடுவது என்ற தந்திரத்தை கையாண்டனர். அதில் சில பிரபல ஏடுகள் சிக்கிவிட்டன. அதை எதிர்த்து தங்கள் நடவடிக்கையை குரேஷி கூறினார்.

அடுத்து பயன்படுத்தப்படும் மின்னணு இயந்திரத்தின் மீது எழுந்துள்ள சந்தேகங்களை போக்க, வாக்காளர்களுக்கு வாக்கு அளித்ததற்கான ரசீது அளிக்கும் முறையை அரசியல் சக்திகள் கோரி இருந்தன. அதை ஏற்றுக்கொண்டு மின்னணு இயந்திரத்தில் இருந்து அப்படிப்பட்ட ரசீது எடுத்து கொடுக்க தேர்தல் ஆணையம் ஆயத்தமாக இருப்பதாக தெரிவித்தார். 49 [ஒ] என்ற பிரிவை மின்னணு இயந்திரத்திலே பொறிக்க வேண்டுகோள் வைக்கப்பட்டது. அந்த பிரிவு, நிற்கும் வேட்பாளர் யாரையும் பிடிக்கவில்லை என்ற ஒரு கருத்தை ஒரு வாக்காளர் பதிவு செய்ய உதவும். அதுவே தனது வாக்கை இன்னொருவர் கள்ளத்தனமாக போட்டு விடாமல் இருக்க உதவும். அதை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்வதாகவும், அரசுக்கு ஆலோசனையை நல்கி இருப்பதாகவும் கூறினார். அங்கே எழுப்பப்பட்ட பல கேள்விகளும், கொடுக்கப்பட்ட ஆலோசனைகளும், மனுக்களும், ஒரு புதிய தன்மையையே ஏற்படுத்தியிருப்பதாகவும் அதற்கு " சென்னை மனு" என்று பெயரிட்டு அழைக்கலாம் என்றும் அப்போது குரேஷி கூறினார்.

ஊழல் பிடித்த அரசு ஊழியர்கள் ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படுவார்கள் என்றும், ஆகவே அவர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்படகூடாது என்றும் பொதுவான குரல் அங்கே ஒலித்தது. அதற்கு குரேஷி ஊழல் பிடித்த அதிகாரிகள்கூட, தேர்தல் ஆணையத்தின் நேர்மையான தலைமையின் கீழ் செயல்பட வரும்போது நேர்மையாக சிறப்பாக செயல்படுகிறார்கள் என்றார். அதனால் கட்டளை தலைமை யார் என்பதுதான் முக்கியம் என்று கூறி சமாதானம் செய்தார். தேர்தல் பணிகளில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், தேர்தல் பணியில் ஈடுபடாத அரசு ஊழியர்கள் என்று பிரிவினை பார்த்து ஆட்சி நடத்தும் அரசியல்வாதிகளின் பாங்கு, பாவம் குரேஷிக்கு தெரிய நியாயமில்லை. சம்பள உயர்வு, அகவிலைபடி உயர்வு, மத்திய அரசு ஊழியர்களுக்கு நிகரான ஊதியம் இப்படி பல விசயங்களிலும் இரண்டு பிரிவினருக்கும் வேறுபாடு கண்டுபிடித்து, தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு மட்டுமே சலுகை வழங்க அரசியல்வாதிகளால் முடியுமென்பதும் குரேஷிக்கு தெரிய நியாயமில்லை.

பதட்டமான பகுதிகள் என்ற பழைய முறையை மாற்றி, பத்து புதிய நிபந்தனைகளுடன் வாக்கு சாவடிகளை கண்காணிப்பது செய்யப்படும் என்றார் குரேஷி. அதில் வாக்காளர் படங்கள் ஒட்டப்பட்ட அடையாள அட்டைகள் கொடுக்கப்படாத பகுதிகள், ஒவ்வொரு முறையும் அளவுக்கு அதிகமாக வாக்களிப்பு நடந்த சாவடிகள், மிகவும் குறைவாக வாக்கெடுப்பு நடந்த சாவடிகள், ஒரே வேட்பாளர் ஒவ்வொரு முறையும் அதிக வாக்குகள் வாங்கும் சாவடிகள், சாதி அல்லது மத ரீதியாக பதட்டம் உள்ள பகுதிகள், பணம் கொடுப்பதில் பெயர் பெற்ற வாக்கு சாவடிகள் இப்படியாக பத்து நிபந்தனைகள் அடிப்படையில் பிரித்து கண்காணிப்பு செய்யப்படும் என்றார்.
வருகிற ஜனவரி-25 அன்று இந்திய தேர்தல் ஆணைய பிறந்த நாள் வருவதால், அன்றைய நாளில், நாடு தழுவிய அளவில் பல லட்சம் இளம் வாக்காளர்களுக்கு, அதாவது 2011 ஆம் ஆண்டு ஜனவரியில் பதினெட்டு வயது முடியும் இளைஞர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும் என்று அறிவித்தார். எப்படியோ தலைமை தேர்தல் ஆணையரின் சென்னை வருகை என்பது, ஒரு திருப்புமுனையாக இருக்கும் என்ற எதிர்பார்ப்புடன் கலந்துகொண்ட மக்களும் கலைந்து சென்றனர். அதுபோல அவர்களது கனவுகளும் கலைந்து செல்லாமல் இருந்தால் சரிதான்.