Thursday, April 16, 2015

ஹைதராபாத் நீதிமன்றத்தில் இரண்டாவது வெற்றி உத்தரவு.

ஹைதராபாத் நீதிமன்றத்தில் இரண்டாவது வெற்றி உத்தரவு.
-------------------------------------------------------------------------------------------------
      திருப்பதி படுகொலைகளை நடத்திய ஆந்திர மாநில காவல்துறை,குறிப்பாக "செம்மரக்கடதடத்தல் தடுப்பு அதிரடிப்படை" திட்டமிட்டு, முன்கூட்டியே கைது செய்த தமிழ் தொழிலாளர்களை,பிடித்து சித்திரவதை செய்து பிறகு, சேஷாசலம் ரிசர்வ் காடுகளுக்கு கொண்டுவந்து, படுகொலைகளை செய்துள்ளனர் என்ற "உண்மையறியும் குழு"வின் கண்டுபிடிப்பை நிருபிக்கும் முயற்சியில், ஏற்கனவே 20 உடல்களையும் "உடற்கூறு ஆய்வு"செய்த ஆந்திர அரசின் செயல்பாட்டில், அதன் கீழ் பணியாற்றும் மருத்துவர்களின் செயல்பாட்டில் "முழு நம்பிக்கை" இல்லாத "சொந்தங்களை பறிகொடுத்தோர்" போட்ட "மறு உடற்கூறு ஆய்வு" வழக்கை, சென்னை உயர்நீதிமன்றம் கடந்த திங்கள் கிழமை அன்று "ஹைதேராபாத் உயர்நீதிமன்றம்" சென்று நீதி கேளுங்கள் என்று கூறியதால், பா.ம.க.வழக்கறிஞர் பாலு,தான் ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றத்தில் பெற்ற உத்தரவான "ஏப்ரல் 17 ஆம் தேதிவரை" எரிக்கப்படாத உடல்களான திருவண்ணாமலை போளூர் வட்டம் 6 உடல்களுக்கும் "மறு உடற்கூறு ஆய்வு" கேட்டு, செவ்வாய்கிழமை ஆந்திராவின் ஒன்றுபட்ட உயர்நீதிமன்றமான ஹைதராபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கை தொடர்ந்தார்.

 அது இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வாதங்களை கேட்ட நீதியரசர், ஒரு உத்தரவை வழங்கினார்."ஆந்திராவோ,தமிழ்நாடோ, இந்த பிரச்சனையில் சம்பந்தப்பட்டிருப்பதால்" அவை இரண்டும் இல்லாத "மூன்றாவது மாநிலம் ஒன்றில் வேறு சிறப்பு தன்மை உள்ள மருதுவமனையின் சிறப்பு மருத்துவர்களைக் கொண்டு பிரேத பரிசோதனை வேண்டும்" என்ற கோரிக்கையை வழக்கறிஞர் பாலு வாதாட அதை ஏற்று, "ஆந்திராவும் வேண்டாம்.தமிழ்நாடும் வேண்டாம். மூன்றாவது மாநிலமான தெலுங்கானாவில்  சிறப்பு தன்மை உள்ள நிஜாம் மருதுவமனியின் சிறப்பு மருத்துவர்களை கொண்டு மறு உடற்கூறு ஆய்வு" செய்ய உத்தரவிட்டார். அதேநேரம் 6 உடல்களுக்கு என்று ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றத்தில் சென்ற வாரம் வழக்கறிஞர் பாலு கேட்டிருந்த வேண்டுகோளின் அடிப்படையில், இந்த வழக்கு தொடர்வதால், அந்த ஆறு பேருக்கும் மறு உடற்கூறு ஆய்வு வேண்டும்" என்று பாலு வாதிட்டார். ஆனால் என்ன காரணத்தாலோ, நீதியரசர் "நேரில் வந்த மனு செய்த சசிகுமார் என்பவரது உடலுக்காக போராடிய அவரது மனைவி முனியம்மாளின் மனு மீது மட்டும் தனது உத்தரவு" என்று தீர்ப்பு கொடுத்தார்.

                           எப்படியும் ஹைதராபாத் உயர்நீதிமன்றத்தில், நேற்று சந்திரகிரி காவல் நிலையத்தின் "முதல் தகவல் அறிக்கையில் காவல்துறை அதிகாரிகள் மீது 302, 364 ஆகிய கொலை,கடத்தல் பிரிவுகளில் இந்திய தண்டனைஉ சட்டம் 34 இன் கீழ் வழக்கு பதிவு செய்த" முதல் வெற்றியை கண்டோம்.இன்று "இறந்தவர்களின் உடலில் மறு உடற்கூறு ஆய்வு" என்பதும் முதலில் ஒரு உடலுக்கு கிடைத்த வெற்றியை காண்கிறோம்.நமக்கு கிடைத்த தகவ்லகளின்படி, "காவல்துறையினர், மருத்துவர்களின் உதவியோடு, உடற்கூறு ஆய்வில் சில தில்லுமுல்லுகளை செய்வது பழக்கமாம்".அதாவது "எந்த கோணத்தில் காணொளிக் கருவியை[ கேமராவை] வைப்பது, எந்த அளவுக்கு விளக்கின் வெளிச்சத்தை உடல் மீது எந்த இடத்தில செலுத்துவது" என்பதில் கூட சில தில்லு முல்லுகளை செய்யமுடியுமாம். அப்படி செய்வது சில "கருப்பு ஆடுகளுக்கு கை வந்த கலையாம்". இதை கேள்விப்பட்டதனால்தான் நமக்கு, "மூன்றாவது மாநிலத்தில், சிறப்பு மருத்துவமனையில், சிறப்பு மறுத்தவர்களை வைத்து சோதனை" என்ற கருத்தே உருவானது.

ஆந்திரக்கதை-புகார் கொடுத்ததால், குற்றம் பதிவு செய்யப்பட்டது.

 ஆந்திரக்கதை-புகார் கொடுத்ததால், குற்றம் பதிவு செய்யப்பட்டது.
----------------------------------------------------------------------------------------------------
      தமிழ்நாடு பி.யு.சி.எல்.காரர்களான  நான்,பிரான்சிஸ், சரவணன் மூவரும், டில்லி பி.யு.டி.ஆர்.தோழர்கள் சண்டனு,அஜிதா இருவருடனும் திருப்பதி சென்று "ஆல் இந்தியா ரேடியோ பை பாஸ்" சாலையில் உள்ள வழக்கறிஞர் கிராந்தி சைதன்யாவின் அலுவலகத்திற்குள் நுழைந்தோம். அன்று வெள்ளிக்கிழமை.ஏப்ரல் 10 ஆம் நாள்.இரவு 7 மணி இருக்கும். மறுநாள் சனிக்கிழமை "காட்டிற்குள் சென்று கொலைகள் நடந்த இடத்தை"காண்பதுதான்,ஆந்திரபிரதேச சிவில் உரிமைக் குழு சார்பாக அவர்  எங்களிடம் கொடுத்திருந்த திட்டம். ஆனால் நாங்கள் சென்ற உடன் அவர் முக்கியமான ஒரு கோரிக்கையை முன்வைத்தார்.கொலை செய்யப்பட்டவர்கள் 20 பேரும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என்பதால்,  "தமிழ்நாட்டில் உள்ள தோழர்களிடமும், தொடர்புகளிடமும் தான் பேசி வருவதாகவும்", யாராவது இறந்தவர் ஒருவரின் உறவினர் ஒருவரை கொண்டுவந்த சம்பவம் நடந்த காவல் நிலையமான  "சந்திரகிரி" காவல் நிலையத்தில்  "ஒரு புகாரை பதிவு"செய்யவைததால் அதுவே ஆந்திர உயர்நீதிமன்றம் ஏற்கனவே அன்று வெள்ளிக்கிழமை கூறியிருந்தபடி,"உச்சநீதிமன்ற வழிகாட்டலின் படி" நடந்த துப்பாக்கி சூட்டிற்கு "கொலை வழக்கு" பதிவு செய்ய ஏதுவாக இருக்கும் என்பது அவரது முன்வைப்பு. அவருக்கு எங்களுடன் "உண்மை அறியும் குழு"வை கூட்டிச்செல்லும் பணியுடன், இந்த புகார் பதிவு செய்யும் கூடுதல் பணியும் சேர்ந்து கொண்டது என உணர்ந்தோம்.

         அங்கிருந்தே தொலைபேசியில், "தமிழ்நாடு பெண்கள் இணைப்பு குழு தலைவி ஷீலுவை" தொடர்பு கொண்டு  அவர்களது அமைப்பினர் "திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வட்டத்தில்" தொடர்ந்து பணியாற்றுவதால் அவர்களால் "ஒரு இறந்தவரின் உறவினரை "அழைத்துவர முடியுமா? என வினவினோம். அவரும் அவர்களது பணியாளர் ராஜா அதற்கு "தயார்"என்று கூறியதாக தெரிவித்தார்.பிறகு மீண்டும் ராஜா கூறிய செய்தியை கூறினார். அதாவது திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வட்டத்தில் உள்ள "கண்ணமங்கலம்" பகுதியில் இருந்து ஆந்திரா சென்ற 7 பேர்தான் கொலை செய்யப்பட்டவர்கள் என்றும், அவர்களில் 6 பேர் வன்னியர் சமூகம் என்றும், ஒருவர் போயர் சமூகம் என்றும், "பா.ம.க.அவர்களுடன் தொடர்பில் உள்ளது" என்பதுமே அந்த செய்தி. சரி.பா.ம.க.வால் இந்த பணியை கண்டிப்பாக செய்யமுடியும் என்பதே எனது கணிப்பாகவும் இருந்தது. உடனேயே நான் "பா.ம.க.வழக்கறிஞர் பாலு", மற்றும் "பசுமை தாயகம் அருள்" ஆகிய இருவரையும் தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். அருள் உடனடியாக கிடைத்துவிட்டார். விவரத்தை எடுத்து கூறியவுடன் "கண்டிப்பாக உடனடியாக செய்துவிடலாம்" என்றும் கூறினார். வழக்கறிஞர் பாலுவும் உடனடியாக தொடர்புக்கு வந்து மறுநாள் "காலையிலேயே" உறுதியாக நிற்கக்கூடிய ஒருவரை கண்டுபிடித்து அழைதது வருகிறோம் என்று கூறினார். மறுநாள் சனிக்கிழமை.பாலு இதே சம்பவத்திற்காக ஒரு"சிறப்பு வழக்கு" போட  சென்னை உயர்நீதிமன்றம் செல்ல வேண்டும். ஆகவே அந்த குறிப்பிட்ட வட்டாரத்தை சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் "எதிரொலி மணியனை" இந்தப்பணியை செய்ய ஏற்பாடு செய்திருந்தனர்.

               நாங்களும் இந்த செய்தியை ஆந்திரபிரதேச சிவில் உரிமை குழு வின் வழக்கறிஞர்கள் கிராந்தி சைதன்யாவிற்கும் , ஹைதராபாத்தில் உள்ள இந்த வழக்கை உயர்நீதிமன்றத்தில் வாதாடி வரும் வழக்கறிஞர் ரகுனாததிற்கும் தெரிவித்து விட்டோம்.எங்கள் எதிர்பார்ப்பு மறுநாள் சனிக்கிழமை மதியததிற்குள் "புகார் கொடுப்பதர்கான் உறவினர்கள்" வந்துவிடுவார்கள்  எனபதே.ஆனால் உடனடியாக சம்பந்தப்பட்ட மக்களை திரட்ட முடியவில்லை என்ற சூழலில், வழக்கறிஞர் பாலு தொடர்பு கொண்டு "ஞாயிற்றுக் கிழமை" காலை எப்படியும் தானே இருந்து அழைத்துவந்து விடுகிறேன் என்றார். அன்று சனிக்கிழமை அந்த திருவண்ணாமலை பகுதிக்கு பா.ம.க.வின் மருத்துவர் அன்புமணி எம்.பி.வருகை புரிந்து இந்த பணியில் "மனித உரிமை ஆர்வலர்களுக்கு" முழுமையாக ஒத்துழைக்கும்படி கோரினார் என்பதையும் பிறகு அறிந்தோம். 

அன்று சனிக்கிழமை நாங்கள் "காட்டிற்குள் சென்றதும்" அதுவே காட்சி ஊடகங்களில் தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டதும், மாலையில் 4 மணிக்கு "ஊடகவியலாளர் கூட்டத்தில்" நாங்கள் காவல்துறையின் "பொயகூற்றை"அம்பலப்படுத்தியதும், நாடெங்கிலும் உள்ள குறிப்பாக "ஆந்திரா,தமிழ்நாடு" ஆகிய மாநிலங்களில் உள்ள அனைத்து மக்களுக்கும் "தொலைக்காட்சிகள்"மூலம் சென்றுவிட்டது என்பதும்  தெரியமுடிந்தது.அதுவே ஆந்திர காவல்துறைக்கு குறிப்பாக திருப்பதி காவல்துறைக்கு அதிலும் குறிப்பாக "செம்மரக்கடத்தல் எதிர்ப்பு அதிரடிப்படை உயர் அதிகாரிகளுக்கும்,வன இலாககாவின் அதிகாரிகளுக்கும்"பெரும் எரிச்சலை ஏற்படுத்தி இருக்க வேண்டும்.அதனால்தான் அவர்கள் குறிப்பிட்ட வன இலாக்கா அதிகாரியை சந்தித்து நியாயம் கேட்க சென்ற எங்கள் மீது "அனுமதி இன்றி காட்டிற்குள் நுழைந்தவர்கள் என்று வழக்கு பதிவு" செய்துள்ளார்கள் என்பதை அறிந்தோம்.

         மறுநாள் எங்கள் மீது "வழக்கு பதிவு" செய்திருப்பது, தெலுங்கு, மற்றும் தமிழ், ஆங்கில ஏடுகளுக்கு" ஒரு செய்தியாக ஆகிவிட்டது. அதுவே நேரில் நின்று "பா.ம.க.கொண்டுவரும் புகார்களை" உடன் இருந்து பதிவு செய்வது என்பதில் சிறிது குழப்பத்தை ஏற்படுத்தியது. ஆனாலும் ஆந்திர சிவில் உரிமைக் குழு செயலளார் வழக்கறிஞர் சந்திரசேகரும், கிராந்தி சைதன்யாவும், பா.ம.க.வழக்கறிஞர் பாலு,அருள்,எதிரொலி மணியன் ஆகியோருடன் இணைந்து  "புகார்களை தயார் செய்வதும்,அதை படி எடுப்பதும்" என்ற பணிகளில்  ஈடுபட்டார்கள். அதில் சம்பந்தப்பட்ட "சந்திரகிரி காவல் நிலையத்திலேயே நேரில் சென்று சந்திரசேகரும், மும்பையிலிருந்து வந்திருந்த சி.பி.டி.ஆர்.[ ஜனநாயக உரிமைக்கான பாதுகாப்பு குழு} அஜ்மல் என்ற இளைஞரும் உடன் இருந்து, அந்த புகார்களை பதிவு செய்ய உதவினர். பா.ம.க. அருளும்,பாலுவும் முக்கிய பங்கு வகித்தார்கள். அவர்கள் காவல் நிலையம் வருவதற்குள் "35 தெலுங்கு தொலைக் காட்சிகளும்,10 தமிழ் தொலைக் காட்சிகளும்,15 அச்சு ஊடகங்களும்" சந்திரகிரி காவல்நிலையம் முன்பு நின்று கொண்டு பொறுமை இழந்து எனக்கு தொலை பேசிக் கொண்டே இருந்தார்கள்.அந்த கூட்டமே காவல்துறையை "மிரட்டி" இருக்கவேண்டும். அங்கு வந்த டி.எஸ்.பி.அருளிடம் "இந்த காவல்நிலயமே இப்போது உங்கள் கட்டுப்பாட்டில்தான்" என்று கூறினாராம்.

        நம்மவர்களும், கொலை செய்யப்பட "சசிகுமார் என்பவரின் மனைவி முனியம்மாள்" கொடுக்கும் "புகாரை" முதலில் விரிவாக எழுதி, மரணம் அடைந்த "20 பேரின் சார்பாக" என்று எழுதி, அதில் "பிடித்து சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்டுள்ளார்கள்" என்பதையும், "கொலை செய்த காவலர்கள் மீது கொலை வழக்கை பதிவு செய்" என்றும் எழுதி புகாரை கொடுத்துள்ளார்கள். பா.ம.க.வினர் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வட்டத்தின் கண்ணமங்கலம் பகுதியின் கொல்லப்பட்ட 6 பேரின் உறவினர்களையும்,திருவண்ணாமலை மாவட்ட ஜவ்வாது மலையின் கொலை செய்யப்பட 5 பழங்குடி மக்களின் உறவினர்களையும், தருமபுரி மாவட்டம் அரூர்  வட்டம் கொலை செய்யப்பட 7 பேரின் உறவினர்களையும் அழைத்து வந்திருந்தனர். அதனால் அதுவே கொலை செய்யப்பட 20 தமிழர்களில்,18 பேரின் உறவினர்களை அங்கே கொண்டுவந்து நிறுத்திவிட்டார்கள்.இதுவே ஆந்திரத்து ஊடகங்களுக்கும், காவல்துறைக்கும் பெரும் அதிர்ச்சியாக போய் விட்டது. அதனால் அவர்கள் "ஆடிப்போய் விட்டார்கள்".

      நேற்று ஹைதராபாத் உயர்நீதிமன்றத்தில் "புகார் கொடுத்த முனியம்மாளை   " நேரில் அழைத்து சென்று "சித்திரவதை செய்து தனது கணவர் கொலை செய்யப்பட்டுள்ளார்" என்றும், அதனால் மீண்டும் "பிணக்கூறு ஆய்வு" செய்யவேண்டும் என்றும் மனு கொடுத்தனர்.திங்கள் கிழமை சென்னை உயர்நீதிமன்றத்தில் பாலு தொடுத்திருந்த "மறு பிரேத பரிசோதனை" வழக்கில், ஆந்திர உயர்நீதிமன்றத்தை அணுகவும் என்று நீதியரசர் கொடுத்த தீர்ப்பினால் அவர் அங்கே செவ்வாய்கிழமை அணுக வேண்டி வந்தது.அதேசமயம் ஏற்கனவே ஹைதராபாத் உயர்நீதிமன்றத்தில் "ஆந்திர சிவில் உரிமைக் குழு" போட்ட வழக்கு இருப்பதால் அதில் "முனியம்மாளின் புகாரை" அடிப்படையாக வைத்து " 302 வது பிரிவின் கீழ்" வழக்கு பதிவு செய் என நீதிமன்றம் காவல்துறைக்கு "கட்டளை" இட்டிருந்தது. அதையொட்டி இன்று நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது.

                     இன்று[15-04-2015] சந்திரகிரி காவல் நிலையம் சார்பாக ஆந்திர உயர்நீதிமன்றம் முன்பு முன்வைக்கப்பட்ட "முதல் தகவல் அறிக்கையில்" "கொலைகளும், கடத்தல்களும்" நடைபெற்றதற்கான "குற்றப் பிரிவுகளை" பதிவு செய்து முன்வைத்தனர். அதாவது "பிரிவு எண் 302, பிரிவு எண் 364-இந்திய தண்டனை சட்டம்-341 இன்கீழ் " என்று  "குற்ற வழக்கு" பதிவு செய்யப்பட்டதை  அறிவித்துள்ளனர். இது "ஆந்திர காவல்துறையினர் மீது அதாவது செமம்ரக்கடத்தல் தடுப்பு பிரிவு அதிரடிப்படையினர் மீது" என்பதாக வழக்காக பதிவு ஆகியுள்ளது.இதுவரை ஆந்திரா "எத்தனையோ போலி மோதல் சாவு வழக்குகளை கண்டுள்ளது" என்றும் ஆனால் இதுவரை "இப்படி காவல்துறையின் மீதே கொலை,மற்றும்கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டதில்லை" என்றும் ஆந்திர சிவில் உரிமைக் குழு செயலாளர் தோழர் வழக்கறிஞர் சந்திரசேகர் நம்மிடம் தொலைபேசியில் கூறினார்.

     இது மனித உரிமை போராளிகளுக்கு கிடைத்த முதல் "வெற்றி" என்றால், பா.ம.க.வினர் முனியமமாள்  மூலம் தொடுத்துள்ள வழக்கு நாளை வருகிறது.. அது "இரண்டாவது உடற்கூறு ஆய்வு" கோரிக்கையைக் கொண்டது. அதுவும் தர்மபுரியை சேர்ந்த கொலை செய்யப்பட 7 பழங்குடிமக்களின் உடல்கள் ஏற்கனவே"எரிக்கப்பட்ட நிலையில்" மற்றும் சேலத்தை ஒருவரின் உடலும் எரிக்கப்பட்ட நிலையில்,மீதமுள்ள திருவண்ணாமலையை சேர்ந்த 12 பேரின் உடல்களாவது அந்த "மறு உடற்கூறு ஆய்வுக்கு" உட்பட வேண்டும் என எதிர்பார்ப்போம்.

திருப்பதி கொலைகள்-நியாயம் கேட்டோம். வழக்கு போட்டார்கள்.

திருப்பதி கொலைகள்-நியாயம் கேட்டோம். வழக்கு போட்டார்கள்.
---------------------------------------------------------------------------------------------------
     தமிழ் தொழிலாளர்களை "காக்கை,குருவி" போல சுட்டுக் கொன்ற  ஆந்திர காவல்துறையினரையும், வனத்துரையையும்  நேரில் சந்தித்து "கேள்விகள்" கேட்க "உண்மை அறியும் குழு" முடிவு செய்தது. ஏப்ரல் 11 ஆம் நாள் சனிக்கிழமை திருப்பதியில் உள்ள "சேஷாசலம் ரிசர்வ் காடுகளில்" ஏப்ரல் 7ஆம் நாள் அதிகாலை சுட்டுக் கொல்லப்பட்ட 20 தமிழ்தொழிலாளர்கள் கிடந்த இடத்தை "பார்வையிட்டு" குறிப்புகளுடன் அன்று மதியம் திரும்பிய "உண்மையறியும் குழு"வினர் மாலை நாலு மணிக்கு "ஊடகவியலாளர் சந்திப்பு" இருக்கிறது என்று ஏற்பாட்டாளர்கள் கூறியவுடனேயே, வன்முறையை செலுத்திய தரப்பினரான "காவல்துறை,மற்றும் வனத்துறை"அதிகாரிகளை சந்தித்து அவர்களது தரப்பு செய்திகளை எடுப்பது முக்கியமாயிற்றே? என்ற வினா அந்த குழுவின் "திட்டமிடல் கூட்டத்தில்"எழுந்தது. அதை ஒட்டி "ஒவ்வொரு மனித உரிமை அமைப்பிலிருந்தும்,அல்லது மாநிலங்களிலிருந்தும்" ஒரு பிரதிநிதி கொண்ட ஒரு குழு "அரசாங்க அதிகாரிகளை" சந்தித்து பேசிவிட்டு, கருத்து எடுத்துக் கொண்டு வருவது என்று முடிவு செய்தோம்.அதுநேரம் தமிழ்நாட்டிலிருந்து வந்திருந்த "மக்கள் சிவில் உரிமைக்கழகம்", " மக்கள் உரிமை பாதுகாப்பு மையம்" தவிர, " சி.பி.சி.எல். என்ற சிவில் உரிமை பாதுகாப்பு குழு" தோழர்கள் வழக்கறிஞர் கேசவனும்,முருகனும் வந்துவிட்டார்கள்.

             எல்லோரும் திருப்பதி தேவஸ்தானம் நடத்தும் "வைஷ்ணவ நிவாசம்" என்ற பக்தர்கள் பெரும் அளவில் வந்து தங்கும்,விடுதியில்,ஒரு "டார்மன்றி என்ற பலர் ஓய்வெடுக்கும் பொது அறை" யில் கூடினோம். அங்குதான் திட்டமிடலுக்காக விவாதித்தோம்.   குழுவை வழிநடத்திய வழக்கறிஞர் கிராந்தி சைதன்யா, தங்களது "ஆந்திரபிரதேச சிவில் லிபர்டி குழு"சார்பாக அதன் செயலாளர் வழக்கறிஞர் சந்திரசேகர், டில்லி பி.யு.டி.ஆர். சார்பாக அஜிதா, ஆந்திர மாநில எச்.ஆர்.எப். என்ற மனித உரிமை மன்றம் சார்பாக கிருஷ்ணா, தமிழ்நாடு பி.யு.சி.எல்.சார்பாக டி.எஸ்.எஸ்.மணி [நான்] மற்றும் மும்பை டாடா இன்ஸ்டிடுட் சட்டக் கல்லூரி மாணவிகள் இருவர், மற்றும் தெலுங்கானா,ஆந்திரா சிவில் லிபர்டி கம்மிடீ தோழர்கள் என சிலரை அரசாங்க அதிகாரிகளை சந்திக்க தனி வாகனத்தில் அனுப்பி வைத்தார்.நாங்கள் வனத்துறை அலுவலகம் தேடிச் சென்றோம்.அங்கே அந்த வளாகத்திற்குள்ளேயே "செம்மரக் கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறை" டி.ஐ.ஜி.அலுவலகமும் இருந்தது. அந்த டி.ஐ.ஜி. பெயர் காந்தா ராவ். அவர்தான் "20 தமிழ் தொழிலாளர்களை"சுட்டுக் கொன்றதை நியாயப்படுத்தி, ஊடகங்களுக்கு அறிக்கையும், நேர்காணலும் கொடுத்தவர்.

            அந்த டி.ஐ.ஜி.காந்தாராவை சந்திக்க அவரது அலுவலகம் சென்றோம்.அதன் வாசலிலேயே நின்றுகொண்டிருந்த "காக்கி உடுப்பு போடாத காவலர்கள்" டி.ஐ.ஜி. அங்கே இல்லை எனவும், நீங்கள் யார் என்றும் கேட்டு முறையாக உளவு கூற குறித்துக் கொண்டனர். அந்த வளாகத்திற்குள் இருந்த அல்லது நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை ஆராய்ந்ததில், அனைத்தும் "தமிழ்நாட்டு எண்களை " கொண்டவையாக இருந்தன. அதாவது "செம்மரக் கடத்தலில் ஈடுபட்ட வாகனங்களை பறிமுதல் செய்ததில்,எஞ்சி நிற்பது தமிழ்நாட்டு வாகனங்கள மட்டுமே" என்று எண்ணத் தோன்றியது. .அதற்குள் எங்களுக்கு "வன இலாக்கா அதிகாரி"இருக்கும் அலுவலகத்தை டி.ஐ.ஜி.அலுவலக காவலர்கள் காட்டினார்கள்.அந்த அலுவலகம் " ஆராய்ச்சி நிலையம்" என்ற பெயருடன் நின்றது.அதற்குள் செல்வதற்கு முன்பே பலகையில் "வன இலாக்கா அதிகாரிகளின் பெயர்களை பொறித்திருந்தார்கள்.அதில் "ரவிக் குமார் ஐ.எப்.எஸ். என்றும் பொது தகவல் அதிகாரி- ஸ்ரீனிவாசலு எஸ்.எப்.எஸ். என்றும்" எழுதியிருந்தது. அதில் உள்ள ஸ்ரீனிவாசலு மட்டுமே எண்கள் குழு தலைவர் சந்திரசேகருக்கு  தொலைபேசியில் கிடைத்தார். அவரிடம் கேட்டுக் கொண்டு, இரண்டு நிமிடத்தில் வாருங்கள் என்றதால் அலுவலகம் உள்ளே சென்றோம்.

       அங்கே வன இலாக்கா அதிகாரி ஸ்ரீனிவாசலு வந்தார்.நாங்கள் அனைவரும் அமர " நீண்ட வடிவில் பெரிய மேசை" இருந்தது. இருக்கைகளும் இருந்தன.அனைவரும் அமர்ந்தோம். எடுத்த உடனேயே ஸ்ரீனிவாசலு  தெலுங்கிலேயே பேசினார்.நீங்கள் எல்லோருமே "வன இலாக்காவின் விதிகளை மீறி அனுமதி இன்றி காட்டிற்குள் சென்றுள்ளீர்கள் " என்று எங்கள் மீதே "பழியை" சுமத்தினார். "ரிசர்வ் காடுகளில் அனுமதி இன்றி சென்றால் பிணையுடன் கூடிய வழக்கு, சரணாலயத்தில் அனுமதி இன்றி நுழைந்தால் பிணை கொடுக்காத வழக்கு,தேசிய பூங்காவில் அதைவிட கடுமையான வழக்கு" என்று பட்டியல் போட்டு "மிரட்ட" பார்த்தார்."தமிழ்நாட்டிலிருந்து நேற்று வந்த சிவகாமி ஐ.எ.எஸ். அனுமதி கேட்டார்.கிடைக்கவில்லை. அதனால் அவர் வனத்திற்குள் செல்லவில்லை" என்று கூறினார். அவருக்கு தோழர்கள் சந்திரசேகரும், கிருஷ்ணாவும்" தெலுங்கிலேயே பதில் கூறிக் கொண்டிருந்தனர். டில்லி அஜிதாவும் தெலுங்கில் பதில் கூறினார். தெலுங்கு தெரியாத நாங்கள் முழித்துக் கொண்டிருந்தோம்.

             அடுத்து அவர் "நீங்கள் வந்த விவகாரத்திற்கு வாருங்கள்" என்றார்.அதாவது இதுவரை பேசியது "உங்களை சும்மா மிரட்ட" என்று அர்த்தமா? நம்மவர்கள் 20 தமிழ் தொழிலாளர்களை சுட்டுக் கொன்றது பற்றி கேள்விகளை தொடுத்தனர். அவர் அது "அதிரடிப் படையின் பணி" என்றார். வன இலாக்காவிற்கு இணைந்து செயல்படும் தன்மை உண்டு அல்லவா?" என்றனர். அதை அவர் மறுக்க முடியவில்லை. உடனேயே தான் 2011 ஆகஸ்ட் மாதம்தான் இங்கு பணிக்கு வந்ததாக கூறினார். அடுத்து "2013 ஆம் ஆண்டு  டிசம்பர் மாதம் சிறீதரன் உட்பட இரண்டு வன அதிகாரிகள் கல்லால் அடித்து கொல்லப்பட்டபோது" மனித உரிமை ஆர்வலர்களான நீங்கள் ஏன் வரவில்லை? என்று வினா எழுப்பினார். அதற்கு சந்திரசேகரும், கிருஷ்ணாவும் நல்ல பதிலடி கொடுத்தனர்." 2013 டிசம்பரில் வன அதிகாரிகள் கொலை செய்யப்பட்ட இரண்டு நாட்களிலேயே 430 பேரை காவல்துறை கைது செய்தது. தொடர்ந்து சிறையில் இருந்த 340 பேரில் தமிழக தொழிலலார்கலான 310 பேர் இன்னமும் "பிணை கிடைக்காமல்" சிறையிலேயே உள்ளனர்.தெலுங்கு தொழிலாளர்கள் 30 பேருக்கு மட்டும் பிணை கொடுக்கப்பட்டது. ஆனால் இந்த 20 தமிழ் தொழிலாளர்கள் கொலை செய்யப்பட்டதற்கு யாராவது இதுவரை காது செய்யப்பட்டுல்லார்களா? இதுபோன்ற அந்நியாயம் நடப்பதால் இப்போது மனித உரிமை ஆர்வலர்கள் வரவேண்டிய தேவை உள்ளது".என்றனர். அதற்குள் ஒரு தொலைபேசி வர ஸ்ரீனிவாசலு அதில் எதிர்ப்புறம் உள்ளவரிடம் "சார்....சார்,....சார்," என்றே பேசினார். அதாவது எதிர்புறமிருந்து, யாரோ உயர் அதிகாரி சில கட்டளைகளை இடுகிறார்  என்று புரிய முடிந்தது. எல்லோரிடமும் தாள்களை கொடுத்து உங்கள் பெயர் மற்றும் முகவரிகளை கொடுங்கள் என்று அவர் கேட்டார். நாங்களும் எழுதிக் கொடுத்தோம்.அதில் 9 நகரங்களில் இருந்து வந்துள்ள ஆண்களும், பெண்களும் இருக்கிறோம் என்றும்,"இப்படி படித்தவர்கள் அனுமதி பெறாமல் வனத்திற்குள் செல்வது குற்றமில்லையா?" என்றும் அவர் பொடி வைத்து பேசினார்.

         இப்படி பதில்களை கூறி வரும்போதே சந்திரசேகரையும், கிருஷ்ணாவையும் "ஊடகவியலாளர் கூட்டத்திற்கு" உடனடியாக வரச் சொல்லி, தொலைபேசி அழைப்புகள் வந்தன.அவர்களும் தெலுங்கில் விளக்கம் கூறிக் கொண்டே எழுந்திருக்க, நாங்கள் எல்லோரும் கிளம்ப எழுந்தோம். அப்போது ஸ்ரீனிவாசலு "அமருங்கள். உங்களுக்கெல்லாம் தேநீர் வருகிறது" என்று கூறி எங்களது பயணத்திற்கு தடை போட்டார். நாங்கள் எல்லோரும்  புறப்பட்டு எங்கள் வாகனத்திற்கு வந்துவிட்டோம். வெளியே வரும்போது, நாங்கள் வரும்போது "ஒ" வென திறந்திருந்த வளாக நுழைவில் உள்ள  பெரிய இரும்பு கதவு, இப்போது "மூடப்பட்டு மூன்று காவலர்கள்" நின்று கொண்டிருந்தார்கள். எங்கள் வாகனம் வெளியே செல்ல "திறவுங்கள்" என்று நாங்கள் குரல் கொடுத்த பின்னால் "யோசித்துக் கொண்டே திறந்தார்கள்".நாங்களும் "ஊடகவியலாளர்கள் கூட்டம்" நடக்கும் ஊடகவியலாளர் சங்க அரங்கத்திற்கு வந்தடைந்தோம். வந்த உடனேயே ஊடகக்காரர்கள் எங்களிடம்"உங்கள் மீது அத்துமீறி நுழைந்த வழக்கு போட்டிருக்கிறார்களாமே ?" என வினவினர். அதாவது அத்தகைய செய்தியை அதற்குள் பரப்பி,"ஊடகவியலாளர் கூட்டத்தின் பொருளையே மாற்றிவிடலாம்" என அவர்கள் எண்ணியிருக்கலாம்.

              ஊடககாரர்களும் நாங்கள் கொடுத்த செய்திகளைத் தாண்டி சில கேள்விகளை கேட்டார்கள். அதில் 2013 ஆம் ஆண்டு வன அதிகாரிகள் கொலை செய்யப்பட்டதும் அடங்கும். அதற்கு வன அதிகாரியிடம் கூறிய பதிலையே கடும் கோபத்தில் சந்திரசேகர் கூறினார். .அதன்பிறகு "இது இரண்டு மாநிலத்திற்கும் உள்ள பிரச்சனையா? எதற்காக தமிழ்நாட்டில் ஆந்திர பவனையும், ஆந்திர பேருந்துகளையும் தாக்குகிறார்கள்?" என்று கோபமாக சிலர் கேட்டனர்.அவர்களுக்கு வேறு சக்திகளின் செல்வாக்கு கூட இருந்திருக்கலாம். ஆனாலும் பொறுமையாக நம்மவர்கள் பதில் கூறினர்." சந்திரசேகர், கிருஷ்ணா,டி.எஸ்.எஸ்.மணி,அஜிதா,ராஜு,முருகன்".ஆகியோர் பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகளாக அமர்ந்து அந்த கூட்டத்தை நடத்தினோம்.நாங்கள் விடுதிக்கு திரும்பி "டார்மன்ரியில்"அமரும்போது, விடுதியின் "கண்காணிப்பு துறை" மேலிருந்து உத்தரவு வந்துள்ளதாகவும், நாங்கள் உடனடியாக அறையை காலி செய்யவேண்டும் என்றும் கேட்டுள்ளனர் என கிராந்தி சைதன்யா கூறினார். அதுவே "அரசுத்துறை உண்மையறியும் குழு" மீது நெருக்கடியை கொடுக்கத் தொடங்கி விட்டது என்று புரிந்துகொள்ள எதுவாக இருந்தது  அன்று இரவே எங்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன என்பதை அறிந்தோம்.

     இத்தனையும் ஏன் நடந்தது? என்று உணரும்போது, "காட்டிற்குள் சனிக் கிழமை சென்று ஆய்வு செய்ததை, பலப்பல ஊடகங்கள் குறிப்பாக பல தெலுங்கு, தமிழ் தொலைக் காட்சிகள்" பிரபலப்படுத்தி விட்டனர். அதில் எங்களது நேர்காணல்களும் இருந்தன.20 அப்பாவி தொழிலாளர்களை கொன்றதில் கிளம்பிய அனுதாபம், உண்மையறியும் குழு மூலம், மனித உரிமை ஆர்வலர்கள், அதுவும் பிரபலமாக  அறிந்தவர்கள்  சென்று ஆய்வு செய்து, சம்பவ இடத்தில நின்று கொண்டே பேசி, அம்பலப்படுதுகிரார்களே? என்ற ஆதங்கமும், ஹைதராபாத் உயர்நீதிமன்ற வழக்கில்,காவல்துறைக்கு நீதியரசர் கொடுத்த உத்தரவும், அவர்களை எரிச்சலடைய செய்திருக்கும்.  அதன்விளைவே இந்த "அறையை காலி செய்ய சொல்வதும், வழக்கு போடுவதும்" என்பதை அறிய முடிந்தது.

           அதுமட்டுமின்றி, மீண்டும் மாலை 4 மணிக்கு ஊடகவியலாளர் கூட்டத்திற்கு, 30 க்கு மேற்பட்ட காட்சி ஊடகங்களும், பல அச்சு ஊடகங்களும் திரண்டு வந்து நிற்பதை கேள்விப்பட்ட டி.ஐ.ஜி. யின் உத்தரவே  எங்களுடன் பேசிக் கொண்டிருந்த வன அதிகாரி ஸ்ரீனிவாசலுவிற்கு தொலைபேசி மூலம் வந்தது என்பதையும், அதை ஒட்டியே எங்களை ஊடகவியலாளர் கூட்டத்திற்கு செல்லவிடாமல் தடுக்க "தேநீர் கொடுத்தல், வெளிக் கதவை மூடுதல்" ஆகிய தந்திரங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன என்பதையும் நாங்கள் உணர முடிந்தது. அதை நிருபிக்கும் வகையில் மறுநாள் எங்கள் 12 பேர் மீது மட்டும், அதாவது வன அதிகாரியை சந்தித்து பெயர் கொடுதோர் மீது மட்டமே போடப்பட்ட வழக்கு பற்றி ஊடகங்களுக்கு செய்தி கொடுத்த அதிகாரிகள்,ஸ்ரீனிவாசலு,ரவிகுமார்,ஆகியோர் டி.ஐ.ஜி.காந்தாராவ் பெயரை கூறியிருந்தார்கள்.

      வழக்குகள் நமது "திருப்பதி பயணத்தை அரசு ஆவணமாக்க  உதவும்" என்ற புரிதலை நாங்கள் பரிமாறிக் கொண்டோம். வாகன ஓட்டுனர் கூட தங்களது வாகனம் மாறி,மாறி,படம் எடுக்கப்பட்டது பற்றி சிறிது கலக்கமடைந்தார். ஆனாலும் மறுநாள் காலை ஞாயிறு அன்று 18 இறந்தோரின் உறவினர்களை அழைத்து வந்த பா.ம.கவினருக்கும், அங்கே காவல்நிலையம் முன்பு கூடி இருந்த ஊடகவியலாளர்களுக்கும் இணைப்பை ஏற்படுத்துவதிலும், அவர்களுக்கு உதவுவதிலும், ஆந்திர சிவில் லிபர்டி குழ தலைவர்களையும், பா.ம.க.தோழர்களையும் அறிமுகம் செய்விப்பதிலும் எங்களது பணியை செவ்வனே முடித்து விட்டு திரும்பினோம்.

Monday, April 13, 2015

ஆந்திரக்காடுகளில் 20 தமிழர் சடலங்கள்-உண்மை அறியும் குழு?

ஆந்திரக்காடுகளில் 20 தமிழர் சடலங்கள்-உண்மை அறியும் குழு?
---------------------------------------------------------------------------------------------------
      திருப்பதி வனப்பகுதியில் அந்தக் கொடுமை நடந்துள்ளது. அது சித்தூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதி.சந்திரகிரி காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதி.சேஷாசலம் ரிசர்வ் காடுகள் என அழைக்கப்படுகிறது. கொல்லப்பட்ட 20 தமிழர்களது உடல்களை கண்டவுடன்,அது ஒரு "படுகொலை"என்பதாக பலராலும் கூறப்பட்டது.அப்படிப்பட்ட கொலைகளை செய்தவர்களாக அறிவிக்கப்பட்டவர்கள், ஆந்திராவில் உள்ள குறிப்பாக "சீமாந்திராவில்" உள்ள "செம்மரங்களை" வெட்டி,கடத்தல் செய்யுய்ம் கும்பலை பிடிப்பதற்காக ஆந்திர அரசால் உருவாக்கப்பட்ட "செம்மரக் கடத்தல் எதிர்ப்பு அதிரடிப்படை" { R .S .A.S .T .F .}என்று [ ஆர்.எஸ்.எ.எஸ்.டி.எப்.\ அழைக்கப்படுகிறது. அதற்க்கு டி.ஐ.ஜி.ஆக காந்தா ராவ் இருக்கிறார். அவரது "ஆட்சி"தான் அங்கே நடக்கிறது.

          பி.யு.சி.எல் அகில இந்திய செயலாளர் சுரேஷ் இடமிருந்து ஒரு அழைப்பு வந்தது.ஆந்திராவில் உள்ள சிவில் லிபர்டி குழு,டில்லியில் உள்ள பி.யு.டி.ஆர்.உடனும்,தமிழ்நாட்டின் பி.யு.சி.எல்.உடனும் சேர்ந்து பல மனித உரிமை அமைப்புகளையும் இணைத்துக்கொண்டு உண்மையறியும் குழு அமைத்து,அந்த பகுதிக்கு செல்லலாம் .சனிக்கிழமை என்ற செய்தியை கூறினார்கள்.தமிழ்நாட்டு "மக்கள் சிவில் உரிமைக் கழகம்[பி.யு.சி.எல்]" தலைவரும்,அகில இந்திய துணைத் தலைவருமான பேரா.சரஸ்வதி என்னை போய்வரும்படி கேட்டுக் கொண்டார்.மாநில பி.யு.சி.எல்.செயலாளர் பாலமுருகனிடம் கேட்டதற்கு,சென்று வர சொன்னார்.மாநில பொருளாளர் சரவணன்,சென்னை மாவட்ட பொருளாளர் பிரான்சிஸ் ஆகியோரும் குழுவில் இணைந்து வர சம்மதம் தெரிவித்தார்கள். திருப்பதி சி.எல்.சி.பொறுப்பாளர் வழக்கறிஞர் கிராந்தி சைதன்யாவை தொடர்பு கொண்டபோது, டில்லியிலிருந்து வரும் இரண்டு பி.யு.டி.ஆர்.தோழர்களையும் சென்னையிலிருந்து அழைத்து வரும்படி கேட்டுக் கொண்டார். அதேபோல வெள்ளிக்கிழமை { 10-04-2015] மதியம் மூன்று மணிக்கு நாங்கள் டில்லியிலிருந்து வந்திருந்த பி.யு.டி.ஆர்.பிரதிநிதிகளான சண்டனு, அஜிதா இரண்டுபேரையும் அழைத்துக் கொண்டு திருப்பதி புறப்பட்டோம்.சென்னையிலிருந்து வாகனத்தில் சாலை வழியே நானும், பிரான்சிசும் டில்லி தோழர்களுடன் பயணம் ஆனோம்.

             இரவு 7 மணிக்கு திருப்பதியில் உள்ள கிராந்தியின் அலுவலகம் அடைந்தோம்.அங்கே அடுத்த நாள் "காட்டிற்குள்" செல்ல முடிவு செய்தோம். ஊடககாரர்களும் உடன் வர உறுதி கூறினர்.காலையில் எங்களுடன் ஆந்திர சிவில் லிபர்டி குழுவின் செயலாளர் சந்திரசேகர்,தெலுங்கான பேரா.லஷ்மணன் போன்ற பிரபலர்களும்,ஆந்திர மனித உரிமை மன்றத்தை சேர்ந்த கிருஷ்ணனும் இன்னும் பலரும் வந்தார்கள். சனிக்கிழமை காலையில் கடலூரிலிருந்து வந்த "மக்கள் உரிமை பாதுகாப்பு மையம்" நண்பர்கள் ராஜு மற்றும் சிலரும் இணைந்துகொண்டனர்.மனித உரிமை ஆர்வலர்கள் ஆண்களும், பெண்களும் சேர்ந்து 40 க்கு மேற்பட்டோர் வந்தனர்.சில வாகனங்களில் நாங்களும்,ஊடகததாரும், சில இருசக்கர வாகனங்களில் ஊடககாரர்களும் அந்த குறிப்பிட்ட காட்டுப் பகுதிக்கு சென்றோம்.சாலையிலிருந்து 4 கிலோ மேட்டார் தூரம் செல்ல வேண்டும் என்றார்கள். நாங்கள் முதலில் "சசினோடி பண்டா" என்ற வனப்பகுதிக்குள் சென்றோம்.அதை "ஈதகுண்டா"என்றும் அழைக்கிறார்கள்.அங்குதான் 11 தமிழர்களது உடல்கள் கண்டு எடுக்கப்பட்டனவாம். அது வனப்பகுதி போலவே தெரியவில்லை. வறண்ட காடு.குச்சி,குச்சியாக பல ஒல்லி மரங்கள் முற்களுடன் அங்கு இருந்தன.உள்ளே சென்று தமிழர்களின் உடல்கள் இருந்த இடத்திற்கு சென்றோம்.

       அங்கே ஒவ்வொரு உடல் இருந்த இடத்திலும் "ஒரு சிறிய தாளில் டி-1,டி-2,டி-3,டி-4,டி-5,டி-6,டி-7,டி-8,டி-9,டி-10,டி-11, என்று எழுதப்பட்டு அதன்மீது ஒரு கல் வைக்கப்பட்டு இருந்தது. அது "புலனாய்வுக்கு" உதவ காவல்துறை வைத்திருக்கும் அடையாளம். ஒவ்வொரு "தாள்"அருகேயும் கொல்லப்பட்டவரின் உடலிலிருந்து வெளியே வந்த "இரத்தம் " உறைந்து மண்ணில் கிடப்பதை காண முடிந்தது. ஒவ்வொரு உடல் கிடந்ததாக குறிக்கப்பட்ட இடத்திற்கும் இடைவெளி தூரம் 5 அடி,10அடி,15அடி என்று குறித்துக் கொண்டோம். அவை எல்லாமே ஒரே பகுதிக்குள் இருந்தன. மோதல் சண்டையும், சாவும் நடந்திருந்தால் ஆளாளுக்கு ஒரு பக்கம் ஓடியிருப்பார்களே? என்ற சந்தேகம் எழுந்தது. எல்லோருமே ஒரே இடத்திற்குள் கொண்டுவரப்பட்டு கொல்லப்பட்டார்களா?என்ற கேள்வியும் எழுந்தது. அந்த வனத்திற்குள் "செம்மரங்களே" இல்லையே என்ற கேள்வியை எழுப்பினோம். செம்மரங்கள் எங்கே எந்த காட்டிற்குள் இருக்கின்றன என்று வினவினோம்.10 கிலோமீட்டர் ,20 கிலோமீட்டர் தள்ளி மலை உச்சியில் செம்மரங்கள் உள்ளன என்றனர்.அந்த இடத்திற்கு பெயர் "திருமலா" காடுகள் என்றனர். அப்படியானால் 20 கிலோமேடர் தள்ளி எதற்காக  செம்மரம் வெட்டியவர்கள் என்ற பெயரில், தமிழர்கள் 20 பேர் சுட்டுக் கொல்லப்படவேண்டும்? என்ற கேள்வியும் எழுந்தது. அடர்த்தியான காடாகவும்  இது இல்லையே என்ற  கேள்வியும் எழுந்தது. ஒரு "துண்டு சீட்டில்" எண் குரிக்கப்பட்டதில், "பின்புறம்" இரத்தம் உறைந்து கிடந்தது. அது புதிய "ஆதாரத்தை" எங்களுக்கு உணர்த்தியது.அதாவது சுட்டுக் கொன்ற காவல்துறையினர் உடனடியாகவே "துண்டு காகிதங்களில் எண்களை" எழுதி அவற்றின் மீது கற்களை வைத்துள்ளனர்.அதில் ஒரு காகிதம் பின்புறம் இரத்தம் கட்டிக் கிடந்ததால், அது இரத்தம் உறைவதற்கு முன்பே போடப்பட்டுள்ளது என்று பொருள்.அப்படியானால் சுட்டுக் கொலை செய்த "அதிரடிப்படையினர்" நிதானமாக திட்டமிட்டு உடனடியாகவே அந்தப் பணியை செய்துள்ளனர். அதாவது அவர்கள் அவசரத்தில்,"மோதல் சண்டை" நடந்த சூழலில் இல்லை எனபது தெரிகிறது.அதுவும் சண்டையும்,சாவுகளும் நடந்து "ஆறு மணி நேரம்" கழித்தே "சந்திரகிரி காவல் நிலையத்தார்" முதல் தகவல் அறிக்கையை எழுதி உள்ளனர். ஆகவே "அதிரடிப்படையினர்" நிதானமாக அந்த கொலைகளை திட்டமிட்டு நடத்தியுள்ளனர் என்று அறியமுடிகிறது.அந்த "இரத்தம் படிந்த துண்டு சீட்டை" நாங்கள் ஊடகவியலா ளர்களிடம் அங்கேயே காண்பித்து எடுத்துரைத்தோம்.

     அதேபோல ஒரு 20 ரூபாய் நோட்டையும் நமது தோழர்கள் கண்டெடுத்தார்கள். அதில் "தோட்டா"பாய்ந்து இருந்தது. அதாவது கொல்லப்பட்ட தமிழர்களின் சட்டைப்பையிலிருந்து  விழுந்திருக்கலாம்.சுட்ட தோட்டா துளைதிருக்கலாம். இவ்வாறு சிந்திக்க முடிந்தது..ஆச்சர்யம் என்னவென்றால், ஒரு "செடியிலோ,மரத்திலோ" கூட,ஒரு சிறிய அளவில்கூட "தோட்டாக்கள்" துளைக்கவில்லை. அதாவது காவல்துறை கூறும் அந்த இரவு இருட்டில்கூட அவர்கள் "மரங்களைக் காப்பாற்றும்" சுற்றுச்சூழல் ஆர்வலர்களாக" நடந்துகொண்டு, "மனித உயிர்களை மட்டுமே கொல்லும்  திறன் படைத்தவர்களோ"??? என்று எண்ணத் தோன்றியது. அந்தாளவு ஒரு நாடகம் நிறைவேறியுள்ளது.

     இஅர்ண்டாவ்து காடு என்று அழைக்கப்பட்ட "சீக்கடீகலகொண்டா" என்ற ஒரு கிலோ மீட்டார் தூரத்தில் நாங்கள் சென்ற வழியிலிலேயே திரும்பவந்து,அந்த வனத்திற்குள் சென்றோம்.அங்கேதான் மீதி 9 தமிழர் உடல்கள் கொல்லப்பட்டு கிடந்தன..அதுவும் வறட்சியான, குச்சிகள்  போன்ற மரங்களைக் கொண்ட காடுதான்.இவை இரண்டுமே "காடுகள்" என்று சொல்வதற்கான எந்த "அருகதையும் அற்றவையே.". இங்கே ஒவ்வொரு "துண்டு சீட்டிலும் எண்"எழுதப்பட்டு இருந்தாலும்,அதன்மீது கல் வைக்கப்பட்டவை சில இருந்தாலும், அருகிலே அங்கே கண்டதுபோல "இரத்தம் உறைந்து இருப்பதை காண முடியவில்லை. அதாவது இந்த இடத்தில அவர்கள் சுட்டுக் கொல்லப்படவில்லை என்று பொருளா? தெரியவில்லை. கொல்லப்பட்டு பிறகு இங்கே கொண்டுவந்து போடப்பட்டுள்ளார்களா? கேள்விகள் எழுந்தன. இங்கே சில இடங்களில் சிதறிய  இரத்தம் உறைந்து இருந்தது. இப்படியாக எங்கள் "நேர்படக் காணுதல்" நடந்தது. அப்போது சனிக்கிழமை மதியம் ஆகிவிட்டது.நாங்கள் திறப்பதி திரும்பினோம். நாலு மணிக்கு ஊடகவியலாளர்கள் சந்திப்பு என்றும், அதற்கு முன்பே சில "அரசு அதிகாரிகளை சந்தித்து" நேரடியாக அவர்களது "கருத்தை" பதிவு செய்ய வேண்டும் என்றும் விரும்பினோம். அதில்தான் ஒரு திருப்பம்

Wednesday, February 25, 2015

தென் மாவட்டங்களில் கொலைக் களம் என்பது உண்மையா?

தென் மாவட்டங்களில் கொலைக் களம் என்பது உண்மையா?
------------------------------------------------------------------------------------------------
     வள்ளியூர் பகுதியில் இதுபோன்ற சாதிக் கொலைகள் நடந்த தடயங்கள் வரலாற்றில் அதிகம் இல்லை. இப்போது திருவைகுண்டம் நகர புதிய தமிழகம் செயலாளர் பாஸ்கர் படுகொலையானதும், அதையொட்டி அவரது சடலத்தை வாங்க மறுத்து கொலைகாரர்களை கைது செய்யக் கோரியும், புதிய தமிழகத தினரின் மூன்று நாட்களாக மறியல் செய்தும் கூட, வட்டார அதிகாரிகள் எந்த ஆக்கபூர்வமான முயற்சியும் எடுக்கவில்லை எனபதே மக்களது குரல். டாக்டர் கிரூஷ்ணசாமி வருகிறார் என்றதும் வட்டாரத்தில் "தடை" உத்தரவு போட முடிந்த காவல்துறைக்கு, அவர் விமானத்தில் வந்து இறங்கியதும் "பாஸ்கர் கொலையை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு" உத்தரவிடத் தெரிந்த காவல்துறைக்கு, மூன்று நாட்களாக குறிப்பிட்ட "சுவரொட்டி விளம்பரப் புகழ் குற்றம் சாட்டப்பட்டவரை" கைது செய்ய இயலாவிட்டாலும், "முதல் தகவல் அறிக்கையில்" போட முடியாமல் போனது ஏன்? குறிப்பிட்ட "குற்றம் சாட்டப்படும்" கும்பல், தொடர்ந்து இதுபோன்ற கொலைகளை செய்வதாக மக்கள் கூறுவது பொய்யா?

அந்த வட்டாரத்தில் குறிப்பாக வள்ளியூர் பகுதியில் ஒரு அருந்ததியரை கொலை செய்து ஒரு மாதம் முன்பு நடந்த கொடும் செயலை கண்டித்து வட்டாரம் வந்த "அருந்ததியர் தலைவர் அதியமானுக்கும்" இப்போது கிரூஷ்ணசாமிக்கு நடப்பது போலவே,"உள்ளே நுழைய தடை" என்பது போடப்படவில்லையா?  சமூகத் தலைவர்களுக்கு "உள்ளே நுழைய தடை"போடுவதால் வன்முறைகளைத் தடுக்க முடியுமா? பலியான சமூகத்தின் மக்களை ஆறுதல் கூற வரும் தலைவர்களை தடுப்பது, ஒடுக்கப்பட்ட அல்லது அதிகாரத்தில் இல்லாத சமூகத்தினரின் "மன உணர்வை" எழவிடாமல் "அழுத்துவது" ஆகாதா?

சமீபத்தில் வள்ளியூர் பகுதியில் படுகொலை செய்யப்பட "டேவிட் என்ற நாடார் சமூக" நபருக்கும் இதே நிலைதானே? அவரது கொலையிலும் இதே "கொலைக் கும்பல்"தான் இருந்ததாகவும், வட்டார அணைத்து சமூக மக்கள் கூறுகின்றனரே? வட்டாரத்தில் தொடர்ந்து இதுபோன்ற "பயங்கரவாதச் செயல்களை" கட்டவிழ்த்து விடும் கும்பலின் நோக்கம் என்ன? அவர்கள் எங்கிருந்து இந்த தைரியத்தை பெறுகிறார்கள்? தங்கள் சமூகத்தினருக்கு "அதிகாரம்" கைக்கு வந்ததாக அவர்கள் நினைத்து பேசுவது காவல்துறையின் காதுகளுக்கு கேட்கவில்லையா?

        வள்ளியூர் பகுதிக்கு துணை கண்காணிப்பாளராக பாலாஜி வந்த பிறகு ஏன் இந்த கொலைகள் தொடர் நிகழ்வுகளாக ஆக்யுள்ளன" அவர் ஒடுக்கப்பட்ட சமூகம் ஆனாலும் அவருக்கு மட்டும் "அதிகாரம்"இல்லையா?. அதற்கு மக்கள் சொல்வதுபோல காவல்நிலைய ஆய்வாளர் குருனாதன் தான் காரணமா? அவர் இங்கே வள்ளியூரில் பொறுப்பெடுத்து சிறிது காலத்திலேயே இப்படியா? அவர்  கொலையாளிகளுடன் நெருக்கம் கொண்டவரா? மக்கள் இதுபோன்று பேசுவது மேலோட்டமான பார்வையா? உண்மை செய்தியா? அருந்தியர் ஒருவர் கொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராடும்போது, இந்த ஆய்வாளர் குருநாதன் கோவையிலிருந்து கொலையாளிகள் என்று சிலரை கொண்டுவந்து சரணடைய வைத்தாராமே? உண்மையா? இந்த குருநாதன் இப்போதும் தேடப்படும் குற்றவாளிகளுக்கு சாதகமனவரா? இந்த குருநாதன் தனக்கு மேலே உள்ள துணை கண்காணிப்பாளர் பாலஜியையே "மீறி" சாதி உணர்வுடன் செயல்படுகிறார் என்ற குற்றச் சாட்டும் உண்மையா?

  டாக்டர் கிருஷ்ணசாமி கூறும் குற்றச் சாட்டுக்கு, ஆதாரமாகதானே  இந்த வட்டாரத்தின் தொடர் கொலை நிகழ்வுகள் இருக்கின்றன? மீண்டும் தென்மாவட்டங்களில் "சாதி மோதலை" கிளப்பிவிட்டு "ஆர்சுக்கு நெருக்கடி" கொடுக்க எண்ணும் சக்திகள் "எந்த அதிகார மமதையில்" இப்படி செயல்படுகின்றன? இப்போது "நியாயம்" கேட்டு புதிய தமிழகத்தினர் விருதுநகர் மாவட்டம் முழுவதும், நெல்லை, தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் போராட,கைதாக தொடங்கிவிட்டது எதனுடைய "எதிர்வினை"?சாதிகளைத் தாண்டி அரசியல்வாதிகள் குறிப்பாக ஆதிக்கம் செலுத்தும் சமூகத்தின் அரசியல்வாதிகள் வெளியே வந்தால் மட்டும்தான் இந்த கொலைகார சூழல் மாறும். இது எப்படி அமைதி தவழும் தமிழ்நாடு என்று முதல்வர் ஒ.பன்னீர்செல்வம்தான் விளக்கவேண்டும்.



Saturday, February 7, 2015

சிறப்பு அகதிகள் முகாமில் சிங்கள மீனவர்கள்



        சிறப்பு அகதிகள் முகாம்கள் இப்போது திருச்சியிலும், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செய்யாரிலும் உள்ளது. அதில் ஈழத் தமிழர் அகதிகள் சிலரை தமிழக அரசு பிடித்து வைத்திருக்கிறதே? என்ற கேள்வி எல்லா தமிழர்கள் மத்தியிலும் தொடர்ந்து இருந்து வருகிறது. நடுவணரசில் காங்கிரஸ் இருக்கும்போது  கொடுக்கப்பட்ட வழிகாட்டலில் அத்தகைய "சிறப்பு அகதிகள் முகாம்கள்" ஏற்படுத்தப்பட்டன என்பதே அப்போது கிடைத்த பதில்.அப்படியானால் ஏன் பா.ஜ.க. அரசு வந்தபிற்பாடும் அவை நீடிக்கின்றன? என்ற கேள்வியும் தொடர்கிறது. "விடுதலைப் புலிகள் மீதான தடையை நீடிக்க" ஏதோ ஆதாரம் வேண்டுமே என்பதற்காக இததகைய சிறப்பு அகதிகள் முகாம்களை நீடிக்க வைக்க நடுவணரசு எண்ணுகிறது என்பதே கிடைக்கும் செய்தியாக இருக்கிறது. தமிழகத்தை ஆளும் திராவிடக் கட்சிகள் ஏன் இத்தகைய முகாம்களை நீடித்து வைத்திருக்க வேண்டும்? ஒவ்வொரு முறையும் சிலரை இந்த சிறப்பு முகாம்களில் இருந்து வெளியே அனுப்பும்போது, எதற்காக சம்பந்தமே இல்லாத சிலரை, வயதான மூப்புகளைக் கூட உள்ளே இதில் வைக்க வேண்டும்? என்ற கேள்வியும் மனித உரிமை ஆர்வலர்கள் இடையே உண்டு.

    நடுவணரசு இந்த சிறப்பு அகதிகள் முகாம்களின் இருத்தலுக்கு  "நியாயம்"  கற்பிக்க அவற்றில் சிறைவாசிகளின் எண்ணிக்கையை "தக்கவைக்க" விரும்புவதால் தவிர்க்க முடியாமல் தமிழக அதிகாரிகள் அவற்றில் யாரையாவது போட்டு நிரப்பி வருகிறார்கள் என்ற பதிலும் கிடைத்து வந்தது. ஒரு "ஒற்றையாட்சி இந்திய அரசில்" இப்படிஎல்லாம்தான் இருக்கும்போல என்றும் நம்மை எண்ணவைத்தது.இப்போது இந்தியாவிலும் ஆட்சி மாற்றம், இலங்கையிலும் ஆட்சி மாற்றம் வந்துள்ளது. இரண்டு புதிய அடசிகளும் "தமிழர்களுக்கு எதிரானவர்கள் தாங்கள் அல்ல" என்று உரக்க கூறி வருகிறார்கள்.அதை உண்மை என்று தமிழக மக்களோ, ஈழ மக்களோ நம்பவில்லை. இந்த நேரத்தில் இங்கே இருக்கும் திருச்சி, செய்யார் சிறப்பு அகதிகள் முகாம்களில் இருக்கும் ஈழத் தமிழர்களில் ஐந்து, ஐந்து பேரை, இரண்டு முகாம்களிலும் சேர்த்து " பாத்து பேரை" தமிழக அரசு சென்ற வாரம் விடுதலை செய்துள்ளது. இதுதவிர சிலர் உயர்நீதிமன்ற ஆணையின் மூலமும் வெளியே வந்துள்ளனர்.

               இந்த சூழலில்தான் சிங்கள மீனவர்கள் ஐந்து பேர் திருச்சி சிறப்பு அகதிகள் முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர். இது இரு தேசிய இனங்களின் இளைஞர்கள் மததியில் சிறப்பு முகாமிற்குள் பிரச்சனையை உருவாக்குமா? என்று சிலர் வினவினார்கள். உருவாக்காது. ஏன் என்றால் ஈழத் தமிழர்கள் "மனிதாபிமானம்" கொண்டவர்கள். சிங்கள மக்கள் மீது அவர்களுக்கு எந்த கோபமும் கிடையாது. சிங்கள ஆளும்கூட்டதின் மீதுதான் அவர்களுக்கு எதிர்ப்பு உணர்வு உண்டு என்று நாம் கூறினோம். ஆனாலும் இந்த நேரத்தில், அதாவது "இலங்கை நீதிமன்ற உத்தரவுப்படி,இந்தியத் தமிழ் மீனவர்களை விடுதலை செய்த சிங்கள அரசு அவர்களது படகுகள் 87 ஐ விடாமல்" பிடித்து வைத்துக் கொண்டுள்ளது., இந்த நேரம்பார்த்து, இலங்கை சிங்கள மீனவர்கள் நமது இந்திய கடலோரம் வந்து இயற்கையாக, வரலாற்று வழக்கப்படி, அதாவது இருபுறமும் உள்ள  மீனவர்கள் வரலாற்று வழக்கப்படி இருபுறமும் கரையோரம் சென்று மீன் பிடிக்கும் முறைப்படி, வந்தபோது, மாட்டிக் கொண்டார்கள். அவர்களை பிடித்து சிறையில் அடைத்தபோது, நீதிமன்றம் அவர்களை சிறப்பு அகதிகள் முகாமில் போடச் செய்துள்ளது.இந்த செயல் என்னதான் வருகிற 16 ஆம் நாள் இந்தியாவிற்கு இலங்கை அதிபர் சிரிசேனா வருவதற்கு முன்பே, வருகிற 9 ஆம் தேதியே இலங்கையில் பிடிததுவைக்கப்பட்டுள்ள 87 படகுகளை விடுதலை செய்வோம் என்று இலங்கை அமைச்சர் வேலாயுதம் ராமேஸ்வரம் வந்து கூறினாலும், இதுவரை நடந்துவந்த கடந்த கால நிகழ்வுகள் நம்பிக்கைகளை விதைக்கவில்லை.

       அததகைய சூழலில், இலங்கை சிங்கள மீனவர்களை நீதிமன்றம் விடுவித்தாலும், சிறப்பு அகதிகள் முகாமில் வைத்திருப்பது, இலங்கை அரசுக்கு  எட்டட்டும். அதை ஒட்டி அவர்கள் நமது மீனவர்களின் படகுகள் 87 ஐ உடனே விடுதலை செய்யட்டும்.அப்போது நமது அரசும், சிங்கள மீனவர்களை சிறப்பு முகாமிலிருந்து விடுதலை செய்யட்டும். இலங்கை சிங்கள மீனவர்கள் "இங்குள்ள சிறப்பு அகதிகள் முகாம்கள்" பற்றி" இலங்கை அரசுக்கு தொலைபேசியில் சொல்லட்டும்.{ சிறைகளில் சுதந்திர கைபேசி உரையாடல்கள் சாதியமில்லாவிட்டாலும், சிறப்பு அகதிகள் முகாம்களில் சாத்தியம்} அதன்மூலம் இலங்கை அரசு, இந்திய அரசான தனது நண்பரிடம் "சிறப்பு அகதிகள் முகாம்களை கலைக்க ஆலோசனை" கூறட்டும். அதுவே இந்திய நடுவணரசின் சிறப்பு அகதிகள் முகாம் கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்தட்டும்.இவ்வாறு தமிழர்கள் எண்ணிப்பார்ப்பது தவறல்லவே?இந்த அளவு சீரிய சிந்தனை செய்யும் அதிகாரிகள் வாழ்க.

Tuesday, February 3, 2015

ஆட்சி மாறியது; காட்சி மாறியதா?


      மகிந்தா வின் ஆட்சி காட்டுமிராண்டி ஆட்சி.உண்மைதான். தமிழின அழிப்பு ஆட்சி.உண்மைதான். ஒரு மாபெரும் இன அழிப்பு போரை நடத்தி, அதற்கு இந்திய வல்லரசுதான் முழு பொறுப்பு என்பதுபோல " இந்தியாவின் போரை நாங்கள் நடத்தினோம்" என்று பகிரங்கமாக நாடாளுமன்றத்தில் அறிவித்த ஒரு சிங்கள பவுத்த பேரினவாத ஆட்சியின் தலைவர்தான் மஹிந்த ராஜபக்சே. அப்படிப்பட்ட ஒரு கொடியவரின் குடும்பமே கொள்ளை அடித்துவந்த ஸ்ரீலங்கா நாட்டில், தென்னிலங்கை மக்களும்கூட வெறுக்கும் அளவுக்கு ஒரு ஆட்சியை நடத்திவந்த மகிந்தா, உலக சமூகத்தின் வெறுப்பையும் சம்பாதிததுவிட்ட மகிந்தா,ஐ.நா.மனித உரிமை கழகத்தின் தீர்மானப்படி, ஒரு உலக விசாரணையை சந்திக்கும் மகிந்தா,அமெரிக்காவின் மற்றும் ஐரோப்பாவின் வெறுப்பை சம்பாதித்து  விட்ட மகிந்தா, ஐ.நா.சபையின் பொதுச்செயலாளரின் கோபத்திற்கு உள்ளான மகிந்தா, இப்போது இலங்கை மக்களால் தேர்தல் மூலம் தூக்கி எறியப்பட்டுல்லார்ட் என்பது உண்மை. அதை மேற்கண்ட வெறுப்பு கொண்டவர்களும், கோபம் கொப்பளிததவர்களும், மகிழ்ச்சியுடன் வரவேற்பார்கள் அல்லது வரவேற்றார்கள் என்பதும் உண்மை.அது தமிழர்களுக்கும், ஜனநாயகம் விரும்புவோருக்கும் ஒரு " மூச்சுவிடும் வெளியை " அளித்துள்ளது என்பதும் உண்மைதான்.

    ஆனால் இலங்கை தீவில் ஏற்கனவே இருந்துவரும் "இனச்சிக்கல்" அல்லது "இன ஒடுக்கல்" அல்லது "இன அடக்குமுறை" அல்லது " இன விடுதலைப்போர்" அல்லது "இன விடுதலைக்கான போரை அடக்கும் மனோநிலை" அல்லது ஏற்கனவே இருந்துவரும் "சிங்கள பவுத்த" இனத்தவர் மட்டுமே ஆட்சித் தலைமைக்கு வரமுடியும் என்ற சட்டம் இந்த தேர்தல்மூலம் கிடைத்துள்ள "ஆட்சி மாற்றத்தால்"  மாற்றப்பட்டுவிடுமா? என்றால் "வாய்ப்பில்லை" என்பதே எல்லா திசைகளில் இருந்தும் வருகின்ற பதிலாக இருக்கும். இப்போது ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ள மைத்திரி பால சிரிசேனா, ரணில் விக்ரமசிங்கே, சந்திரிகா, சரத் பொன்சேகா, மற்றும் அவர்களை ஆதரித்து  ஆட்சிக்கு கொண்டுவதுள்ள புத்த பிக்குகளின் ஜாதிக கட்சி, ஜனதா விமுக்தி பெரமுனா, ஆகியவை மேற்கண்ட கேள்விகளுக்கான "விடைகளை" அல்லது "மாற்றை" தரக்கூடியவர்களா? என்றால் அதுவும் இல்லை.

      உலக சமூகத்தின் வெறுப்பை சம்பாதித்து, ஐ.நா.மனித உரிமை கழகத்தின் "போர் குற்ற விசாரணையை" எதிர்கொள்ளும் மகிந்தா அரசாங்கம், செல்வாக்கை இழந்த நிலையில், சிங்கள பவுத்த ஆளும்வர்க்கம் அல்லது ஆளும் கும்பல், என்ன நினைக்கும்?அல்லது நினைத்திருக்கும்? ஒட்டுமொத்த இலங்கை மக்களுக்கும் எதிரான ஒரு பொருளாதாரக் கொள்கையை நடைமுறைப்படுதியதால், தென்னிலங்கை மக்கள் மத்தியிலும் "கடுமையான பசி,பட்டினி, விலைவாசி உயர்வு" ஆகியவற்றை சந்தித்துவரும் வேளையில், அந்த இலங்கை தீவின் மக்கள் மத்தியில் "தொடர்ந்து" ஆள விரும்பும் சிங்கள பவுத்த பேரினவாதம் என்ன நினைக்கும்?அல்லது நினைத்திருக்கும்? செல்வாக்கு இழந்த கும்பலை தூர எறிந்துவிட்டு, புதிய கும்பலை ஆட்சிக்கு கொண்டுவந்து தங்கள் கொள்கைகளை தொடரத்தானே நினைக்கும்? அல்லது நினைத்திருக்கும்?

       அப்படிச் சூழலில்தான் மக்களின் கோபத்திலிருந்து தப்பிக்க "இந்திய ஆளும்வர்க்கமும், அமெரிக்க ஆளும்வர்க்கமும் " சரியான தருணத்தில் உதவிக்கு வந்தனர். அவர்களின் குறிப்பாக அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் ஏற்பாடுதான், மைதிரிபாலா சிரிசேனா. ஐ.தே.க.கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கே, ஏற்கனவே அமெரிக்க சார்பு கொள்கை உடையவர் என்பது ஊரறிந்த உண்மை. கடைசிவரை மகிந்தா நம்பி இருந்தது "இந்திய ஆளும்வரக்கத்தை". இந்திய ஆளுமவர்க்கமும் தனது மகிந்தா சார்பு நிலைப்பாட்டை கடைசிவரை மாற்றிக்கொள்ளவில்லை. டில்லியின் தலைமையிலிருந்து செயல்படும் "உளவுத் துறையினர்" கடைசி வரை மகிந்தாவை காப்பாற்றவே  விரும்பினர். அதற்கான காரணங்கள் ஊரறிந்தவைதான். ஐ.பி.கே.எப். என்ற "இந்திய அமைதிப் படை" மூலம் வடக்கு-கிழக்கு இலங்கையில் முதல் "தமிழின அழிப்பை" தொடங்கிவைத்த "பெருமை" இந்திய அரசுக்கே சொந்தம். அதை இரண்டாம் "கட்ட " இன அழிப்பு போருக்கு இட்டுச் சென்ற "பெருமைதான்" மகிந்தா ராஜபக்சேவிற்கு சொந்தமானது. இந்த செய்தியை மறைமுகமாக அவ்வப்போது கூறி, மகிந்தா இந்திய அரசை மிரட்டி வந்தார் என்பதும் தெரிந்த கதை.

      அதனால்தான் இந்திய அரசு, "ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம்" மன்மோஹன்சிங்  தலைமையில் இருக்கும்போதே, ஐ.நா.மனித உரிமைகழகத்தில், அமெரிக்காவால் கொண்டுவரப்பட்ட "இலங்கை போர்குற்றங்கள் அல்லது மனித உரிமை மீறல்கள்" பற்றிய தீர்மானத்தில், நீர்ததும்போகும் அளவுக்கு "திருத்தங்கள்" கொண்டுவருவதும், "இலங்கைக்கு உள்ளேயே" விசாரணை" என்ற பதத்தை பயன்படுத்தி, மகிந்தாவிற்கு "பிணை எடுத்துவிடும்" பணியை செய்வதுமாக இரண்டு முறையும், மூன்றாவது முறை தீர்மானம் வரும்போது,"வெளி விசாரணை எப்படியும் வந்துவிடும்" என்ற நிலையில், அதை "புறக்கணிப்பதும்" என்ற நிலையை எடுத்தது. இது மகிந்தா அரசை காப்பாற்றுவதற்கான செயல் என வெளிப்படையாக தெரிந்தாலும், இந்திய அரசு "தன்னை" ஒரு உலக விசாரணையிலிருந்து "காப்பற்றிக்கொள்வதற்கான" செயல் எனபதே அதன் சாரம்சமாகும்.

        இலங்கை தீவிற்குள் இரண்டு இனங்களுக்கும் இடையே "சண்டை" நடந்தால், அல்லது "இன வேற்றுமை" இருந்தால், அதை பயன்படுத்திக் கொண்டு, இரண்டு "தேசிய இனங்களுக்கும்" இடையே "பிளவை" ஏற்படுத்தி, இரண்டு இனங்களுமே அருகிலே உள்ள "பெரிய அரசை" சார்ந்து நிற்க செய்யவேண்டும் என்று எந்த "பெரிய அரசுமே" நினைக்கத்தானே செய்யும்? அந்த நினைப்புதான் இந்திய அரசின் நினைப்பும். அதனால்தான் "இந்திராகாந்தி" காலத்தில் "ஈழப்போராளிக்குழுக்களுக்கு" கொடுக்கப்பட்ட "கருவிகளும், பயிற்சிகளும்" என்பதை எத்தனைபேர் சிந்தித்து பார்க்கப்போகிறார்கள்? அதேநேரம் "ஆளும் சிங்கள ராணுவத்திற்கும் " ஆயுதப்பயிற்சி கொடுக்காமல் இருந்ததா இந்திய அரசு? இல்லையே? அதற்க்கு என்ன பொருள்? அமேரிக்கா ஒரு உலக "சாவு வியாபாரியாக" உலகில் எந்த இடத்தில இரண்டு குழுக்களுக்குள், அல்லது நாடுகளுக்குள், அல்லது இனங்களுக்குள் "மோதல்" இருந்தாலும் இரண்டு பக்கத்திற்கும் தனது "ஆயுதங்களை" விற்று "பிழைப்பை" நடத்தும் என்று உரக்க கூவிவரும் நாம், அதேபோல்தான் இந்திய அரசும், தனது செல்வாக்கிற்கு உட்பட்ட "தெற்காசியாவிற்குள்" அல்லது "தென்கிழக்கு ஆசியாவிற்குள்" இரண்டு சக்திகள் மோதிக கொண்டால் இரண்டிற்கும் ஆயுதம் கொடுத்து,,இரண்டையுமே "தனது காலடியில்" விழ வைப்பதற்கான தன்மைகளை கொண்ட ஒரு" பிராந்திய மேலாதிக்க வல்லரசுதான்" என்பதை புரிந்துகொள்ளவோ, பகிரங்கமாக அறிவிக்கவோ ஏன் தயங்குகிறோம்?

       அத்தகைய ஒரு நிலையில்தான் இலங்கையில் நடந்து முடிந்த "அதிபர் தேர்தலின்" முடிவுகளையும், அதை ஆதரித்து ஓடிவரும் "இந்திய,அமெரிக்க அரசுகளையும்" நாம் காண வேண்டும். சந்திரிகா இந்திய அரசுக்கு நெருக்கமானவர் என்பதும், ரணிலும், மைத்திரி பாலாவும் அமெரிக்கக் அரசுக்கு நெருக்கமானவர்கள் என்பதும் நாடறிந்த உண்மைதான். அதை இலங்கை தேர்தல் முடிவுகளுக்கு பிறகு இன்றுவரை, இந்திய அரசை ஆட்சி செய்யும், "தேசிய ஜனநாயக கூட்டணி" தலைமையில் இருக்கும் நரேந்திர  மோடியை இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரசிங்கே சந்திப்பதும், இணைந்து திட்டமிடுவதும், அதை ஒட்டி "அகதிகளை திருப்பி அனுப்புவது" என்ற நிர்ப்பந்த அரசியலை ஆலோசிப்பதும், அதன்மூலம் மார்ச் மாதம் வர இருக்கும் "ஐ.நா.மனித உரிமை கழகத்தின்" விசாரணைக் குழு அறிக்கையிலிருந்து, இலங்கையையும், இந்தியாவையும் "காப்பாற்ற" திட்டமிடுவதும், அமெரிக்க வெளிவிவகார துணை அமைச்சர் இலங்கை வருகை தந்து "அமெரிக்காவின் முழு ஒத்துழைப்பை" உறுதி கூறுவதும், அதை ஒட்டி, "மைத்திரிபால இந்தியா வர இருப்பதும், அடுத்து மோடி இலங்கை செல்ல இருப்பதும்" எல்லாமே ஒரு திட்டமிட்ட "இந்திய-அமெரிக்க" ஆதிக்கத்தை இலங்கை மீது மட்டுமின்றி, இந்தியப் பெருங்கடல் மீது, "டியாகோ கார்சியா" என்ற  தளம் அமைக்கும் பழைய திட்டத்திற்கு புதிய மெருகு கொடுக்க முயற்சிப்பதாக இருக்கிறது என்று புரிய வேண்டாமா?

     இதை இந்திய மக்களையும், குறிப்பாக இந்தியாவில் உள்ள "தமிழ்நாடு மக்களையும்" ஏற்க வைக்க வேண்டும் என்றால், அதற்கு "சீனா ஆபத்து" என்ற ஒரு "மிகையான" செய்தியை பரப்புவது அவர்களுக்கு கை வந்த கலைதானே? ஒரு புறம் இந்திய அரசு "அமெர்க்காவையும்  திருப்தி செய்து, சீன நட்பையும்" உறுதி செய்யும் நேரத்தில், இலங்கையில் "சீனாவால் பெரும் ஆபத்து" என்ற பூதத்தை "ஊடகங்களுக்காக " கிளப்பிவிடும் இந்திய அரசின் "தந்திரத்தில்" அமெரிக்க குள்ள நரியும் ஒளிந்துகொண்டிருப்பதை புரிந்துகொள்ள முடியும். எப்படியும் சீனாவிற்கு "தென் சீனக் கடலில்" ஜப்பானுடன், "போர்த்திர" வகையில்,மோதல் இருக்கும்போது, ஜப்பானை பின்னாலிருந்து ஆதரிக்கும் அமெரிக்க வல்லரசு, ஒபாமாவின் இந்திய வருகையின்போது "இந்திய-அமெரிக்க" கூட்டு அறிக்கையில் "தென்சீனக் கடலில் இந்தியாவின் செல்வாக்கை உறுதி செய்வோம்" என்று "தேவையற்ற" சொற்களை சேர்த்து சீனாவை "வெறுப்படைய" செய்தது. ஒபமா விமானம் ஏறிய உடனேயே இந்திய அரசு, தனது வெளிவிவகார அமைச்சர் சுஷ்மாவை சீனாவிற்கு அனுப்பி தங்கள்" நட்பை" உறுதியாக  அறிவித்தது.அடுத்து மோடியின் சீன பயணத்தை அறிவித்துள்ளது. இதுதான் இலங்கைதீவில், இந்தியாவிற்கும், சீனாவிற்கும் "போட்டியும்,மோதலும்" முதனமையாக இருக்கிறது என்பதற்கான பொருளா? இருவரும் "சந்தைப்போட்டி" வைத்துக் கொண்டுள்ளனர் என்பதும், அமெரிக்காவை சார்ந்து அந்த சந்தைப்போட்டியில் இந்திய அரசு நிற்கிறது என்பதும் இதில் வெளிப்படையாக தெரியவில்லையா? இந்தப் பொருளில் ஏற்கனவே நவ சம சாச கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரத்னா பேசவில்லையா?

               பகிரங்கமாக "தமிழின அழிப்பு போரை" நடத்தி இனப்படுகொலை செய்த ராஜபக்சே கும்பலுக்கும், "போருக்கான நிதிநிலை அறிக்கையை" நாடாளுமன்றத்தில் ஆதரித்த "ஐக்கிய தேசிய கட்சித் தலைவர் ரணில் விகிரமசின்கேவிற்கும் " சாராம்சத்தில் வேறுபாடு இருக்கிறதா? கடைசி கட்ட வன்னிப் போரில், மகிந்தாவின் வெளிநாடு பயணத்தை ஒட்டி, "இன அழிப்பு போருக்கு" தலைமை முடிவுகள் எடுத்த மைத்திரிபால சிரிசேனா மாறுபட்டவரா? உலக சமூகத்தின் கோபத்திற்கு ஆளான போதும்,"ஐ.நா.மனித உரிமை கழகத்தின் விசாரணையை" அனுமதிக்க மாட்டேன் என்று முரட்டுத்தனமாக கூறிய மகிந்தாவும், இப்போது "இலங்கை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கான" ஐ.நா. ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை என்றும் அதனால்,வெளியிலிருந்து விசாரணை சாத்தியமில்லை எனவும், உள்நாட்டிலேயே போரில் மனித உரிமை மீறல் பற்றிய விசாரணை" என்றும்,அதுபற்றி தாங்கள் "ஐ.நா.மனித உரிமை கழகத்துடன் பேசுவோம்" எனவும் கூறுகின்ற இலங்கை பிரதமர் ரணில் விகிரமசின்கேவின் கூற்றும் வேறுபட்டவையா?

     ஆகவே எப்போது, சிங்கள ராணுவம் வடக்கு-கிழக்கு பகுதிகளை விட்டு வெளிஏறுகிறதோ , எப்போது மாகாணங்களுக்கு "நில உரிமை, காவல் உரிமை"வழங்கப்படுகிறதோ, எப்போது ஈழத் தமிழர்களது நிலங்கள் அவர்களிடம் ஒப்படைக்கப்படுகிறதோ, அதாவது சிங்கள ராணுவத்தாலும், சிங்கள குடியேற்றதாலும்  ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களிலிருந்து ஆக்கிரமிப்பு சக்திகள் அகற்றப்படுகிறதோ, அன்றுதான் ஆட்சி மாறியதால், காட்சி மாறியுள்ளது என்று கொள்ள முடியும்.அதுமட்டுமல்ல. 1987 இன் ராஜீவ் காந்தி-ஜெயவர்தனே  ஒப்பந்தப்படி வடக்கும்-கிழக்கும் இணைக்கப்பட்டால்தான் புதிய ஆட்சி மீதும் நம்பிக்கை பிறக்கும். தமிழர்களுக்கு அதிகாரம் தருவதற்கு ஓடிவரும் அமெரிக்க-இந்திய அரசுகள் தங்கள் சொல் கேட்கும் இலங்கை அரசிடம், "ஆங்கிலேயே அரசு  ஸ்காட்டிற்கு" நடத்திய " பொதுவாக்கெடுப்பு போல" ஒரு பொதுவாக்கெடுப்பை ஈழத் தமிழர் இடையே நடத்தி அதன்மூலம் உலகுக்கு தங்களது "ஜனநாயக அணுகுமுறையை" நிரூபிக்க தயாராவர்களா?--தெ.சீ.சு.மணி.ஊடகவியலாளர்.{ டிஎஸ்.எஸ்.மணி} மக்கள் சிவில் உரிமை கழக தேசியக் குழு உறுப்பினர்.{பி.யு.சி.எல். சென்னை பெருநகர மாவட்ட செயலாளர்}..