Thursday, December 24, 2009
மழலையர்களை மிரட்டும் நர்சரிப் பள்ளிகள்
இன்று பள்ளி செல்லும் சிறுகுழந்தைகளை, மாணவ, மாணவியரை ஏற்றி செல்லும் வாகனங்கள், ஒவ்வொரு ஊராக கவிழ்ந்ததையும், கவிழ்ந்ததற்கான காரணமாக ஓட்டுனநர்களின் பொறுப்பற்ற தன்மையையும், ஊடகங்கள் தொடர்ந்து காண்கிறோம். கைப்பேசியில் பேசிக்கொண்டு சென்ற ஓட்டுநர்கள், குழந்தைப் பிள்ளைகளை வாகனத்துடன் பள்ளத்தில் விழவைத்தார்கள் என்பதால், காவல்துறையினர் கைது செய்து நடவடிக்கை எடுக்கிறார்கள். அதே போல உரிமம் இல்லாத ஓட்டுநர்களை, பணிக்கு வைத்ததால் பள்ளி நிர்வாகங்கள் மீதும், கல்வித்துறை நடவடிக்கைகள் தொடர்கின்றன. விதிமுறைகள் படி நடந்து கொள்ளாத பள்ளி நிர்வாகங்களுக்கு, அனுமதி கொடுத்ததற்காக கல்வி இயக்கக அதிகாரிகளும் கேள்விக்குள்ளாகிறார்கள். ஒரு விபத்து நடந்ததை யொட்டி, அல்லது ஒரு விபத்து ஊரில் எல்லோரையும் உசுப்பி விட்டதையொட்டி, ஊடகங்களில் பெரிய அளவில் அம்பலமானதை யொட்டி, அரசாங்கமும், அதிகாரிகளும் துரித நடவடிக்கையாக சிலர் மீது குற்றம் சுமத்தலாம். ஆனால் ஒரு விபத்து இந்த நாட்டில் தன்னை அறிவித்துக் கொள்ளாமலேயே, தொடர்ந்து நடந்த வருகிறது. அந்த விபத்துதான் கல்வியை வியாபாரமாக்கிய ஒரு சமூகத்தில், மழலைப் பிள்கைளுக்கு கல்வி கொடுப்பதற்காக என்ற பெயரில், நர்சரிப் பள்ளிகளை எங்கெணும் தொடங்கியுள்ளார்கள். நர்சரிப் பள்ளிகளை தொடங்கியவர்கள் தனியார்கள் என்றால், அதற்கு அனுமதி கொடுத்தது. பள்ளிக் கல்வி இயக்ககம் தானே என்ற கேள்வி தானாகவே எழும். கடந்த 20 ஆண்டுகளாக, தமிழ்நாட்டில் புற்றீசல் என வளர்ந்து விட்ட இந்த நர்சரிப் பள்ளிகளின் பண்பாடு, அனைத்துதரப்பு மக்களையும் ஒரேடியாக இழுத்துக் கொண்டு செல்கிறது. அனைத்து நர்சரி பள்ளிகளிலும் ஆங்கிலம்தான் பயிற்று மொழி. இப்படி மழலைப் பிள்ளைகளுக்கு, தொடக்கத்திலிருந்தே ஆங்கிலக்கல்வி கொடுப்பது என்பது ஆரோக்கியமானதா? அதற்காக பிள்ளைகளின் பெற்றோர் செலவழிக்கின்ற பணம், அதிகமாக இல்லையா? ஆரம்பக்கல்வியை இப்படி தனியாருக்கும், ஆங்கில பயிற்று மொழிக்கும் தாரை வார்ப்பது, ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு வழிவகுக்குமா? ஆங்கில மொழி என்பது அறிவாக மாறுமா? அறிவியல் பார்வையை, தாய்மொழி தவிர எந்த மொழியின் மூலமும் கற்றுக் கொடுக்க முடியுமா? ஆங்கிலப் பயிற்று மொழி படைப்பாற்றலை ஊக்குவிக்குமா? இளம் சிறார்களுக்கு இப்படித்தான் சமூகம் வழிகாட்டுமா? இதுபோன்ற கேள்விகள் எல்லாம், எந்த ஒரு சமூகப்பார்வை உள்ளவருக்கும் ஏழவேண்டும். இந்த நேரத்தில் இந்திய நாட்டில், இயங்கிவருகின்ற நர்சரி பள்ளிகள், எப்படி காசு உருவாக்கும் இயந்திரங்களாக இருக்கின்றன என்ற புள்ளி விவரங்களை ஒரு இணையதளம் அம்பலப்படுத்தி உள்ளது. நல்ல பள்ளிகள் என்று பெயரெடுத்த பள்ளிகளின் எண்ணிக்கை, குறைவாக இருக்கின்ற காரணத்தினால், அவற்றிலும் நூற்றுக்கணக்கான இடங்களே இருக்கின்றன என்ற நிலைமையில், ஆயிரக்கணக்கான பெற்றோர்கள் அந்த நூற்றுக்கணக்கான இடங்களுக்காக, போட்டிப்போட்டுக் கொண்டு, தனியார் கல்வி நிறுவனங்களை, கல்வியாண்டு தொடங்கும் போது, முட்டி மோதுகிறார்கள்.அந்த இணைய தள புள்ளி விவரம் கூறுகின்ற செய்திகள், ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்துவதாக இருக்கின்றன. இந்தியாவில் உயர்கல்வியில் முன்னேறிய கல்விச்சாலையாக கருதப்படுபவை ஐ.ஐ.டி.கள். அந்த ஐ.ஐ.டி.களில் நிலவுகின்ற கல்விக் கட்டணத்தின் அளவை விட, அதிகமாக நர்சரி பள்ளிகள் வசூலிக்கின்றன என்ற செய்தி வெளியாகியுள்ளது. ஐ.ஐ.டி. என்ற ஆராய்ச்சிக்கான கல்வியும் இணைந்த, உயர்க்கல்வி சாலைகள், மேற்கத்திய நாடுகளின் உதவிகளுடன், மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறையின் நிதியுதவியுடன் தொடங்கப்பட்டு நடத்தப்படுபவை. உதாரணமாக சென்னை அடையாறில் உள்ள ஐ.ஐ.டி. நிறுவனம், ஜெர்மன் நாட்டு உதவியுடன் நடத்தப்படுகிறது. இதுபோல கான்பூர் ஐ.ஐ.டி., துர்காப்பூர் ஐ.ஐ.டி., மும்பை ஐ.ஐ.டி. போன்ற கல்விச் சாலைகளும் இந்தியாவின் உயர்கல்வியில் முக்கிய இடம் பிடித்தவை. ஆராய்ச்சி படிப்புக்கான பட்டங்கள் இந்த கல்விச்சாலைகளில், குறிப்பாக அறிவியல் பாடங்களுக்கு பெயர் பெற்றவை. இவற்றிலிருக்கும் சோதனைச் சாலைகளும், உயர்ந்த தன்மைகளைக் கொண்டது. இந்த ஐ.ஐ.டி.க்கள், தனியான பெரிய வளாகங்களுக்குள் கட்டப்படுகின்றன. அவற்றிலிருக்கும் தங்கும் விடுதிகளும், உணவு விடுதிகளும் உயர்ந்த தரத்தைக் கொண்டவை. இப்படிப்பட்ட ஐ.ஐ.டி.களில் கல்விக்கட்டணமாக ஆண்டிற்கு ரூ.50,000 வசூலிக்கிறார்கள். அது தவிர தங்கும் விடுதி, முன்னாள் மாணவர் சங்கம், நுழைவுக்கட்டணம் ஆகியவற்றை சேர்த்து, ஆண்டிற்கு ரூ.20,000 வசூலிக்கிறார்கள். அதே நேரத்தில் தலைநகர் டெல்லியில் இருக்கின்ற பிரபல நர்சரி பள்ளிக்கூடத்தில் ஆண்டிற்கு ரூ.75,000 அல்லது அதற்கும் மேல் வசூலிக்கிறார்கள். அதிலும் குழந்தைகளும் பெற்றோருக்கு கடுமையான நேர்காணல்கள் நடத்தப்பட்டு, பல சோதனைகளுக்கு பிறகுதான் இத்தகைய நர்சரி பள்ளிகளில் குழந்தைகள் சேர்க்கப்படுகிறார்கள். டெல்லியையொட்டியுள்ள கர்காவோன் பகுதியில் ஒரு பள்ளியில், 2009 10 கல்வி ஆண்டுக்கான நுழைவுக்கட்டணமாக ரூ.75,000. அது தவிர அதே பள்ளியில் மற்ற கட்டணங்கள் ஆண்டிற்கு ரூ.1,70,000 வசூலிக்கிறார்கள். இது தவிர ஆண்டு முழுவதுக்குமான போக்குவரத்து கட்டணமாக ரூ.38,000 முதல் ரூ.44,000 வரை வசூலிக்கிறார்கள். இது தவிர ஐ.டி.என்றழைக்கப் படுகின்ற, உயர்தொழில் நுட்பத்திற்காக, ஆண்டிற்கு ரூ.6,000 முதல் ரூ.9,500 வரை வசூலிக்கிறார்கள். இது ஐ.ஐ.டி. வசூல்களை விட பல மடங்கு அதிகம் என்பது கண்கூடு.டெல்லிக்கு அருகே உள்ள நொய்டா பள்ளி ஒன்றில் நுழைவு கட்டணமாக ரூ.61,000மும், காலாண்டு கட்டணமாக ரூ.26,000மும் வசூல் செய்கிறார்கள். அதே நகரில் இன்னொரு பள்ளியில் நுழைவுக்கட்டணமாக ரூ.45,000மும், காலாண்டுக்கு கூடுதல் கட்டணமாக ரூ.11,000மும் வசூல் செய்கிறார்கள். இதுபற்றி டெல்லி மாநிலத்தின் கல்வி அமைச்சர், அரவிந்தர் சிங் லவ்லியிடம் கேட்டதற்கு, இப்படிப்பட்ட விதிமீறல்கள், பள்ளிகளில் நடப்பது தெரியும் என்றும், பெற்றோர்களிடமிருந்து புகார்கள் வந்தாலொழிய நடவடிக்கை எடுக்க இயலாது என்று கூறியுள்ளார். பெற்றோர்கள் ரசீதுகளை கொடுத்தார்கள் என்றால், அதன்மீது நடவடிக்கை எடுக்கலாம் என்றும், எந்த பெற்றோரும் அதற்கு முன்வருதில்லை என்றும் அந்த அமைச்சர் கூறியுள்ளார். இதே புராணத்தை எந்த மாநிலத்திலும், அமைச்சர்கள் கூறலாம். ஆனால் அப்படிப்பட்ட கல்விச்சாலைகளுக்கு, அனுமதி கொடுத்த கல்வி இயக்ககம், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆகியோர்கள் எப்போதுமே விசாரணை வளையத்திற்கு உள்ளே வரமாட்டேன் என்கிறார்கள். அதுபற்றி கூறும்போது, டெல்லியிலிருக்கின்ற கல்வி இயக்ககமும், பள்ளிக்கல்விக்கான உயர்அதிகாரிகள், பள்ளிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ள கட்டண முறைகள் பற்றிய வழிகாட்டல்கள் மீது எந்த கருத்தும் கூற மறுக்கிறார்கள் என்பதாக அந்த இணையதளம் குற்றம்சாட்டுகிறது. நொய்டா நகரில் உள்ள ஒரு பள்ளியில் நுழைவுகட்டணமாக ரூ.45,700 வாங்கிக் கொண்டு, போக்குவரத்து உட்பட காலாண்டு கட்டணமாக, ரூ.11,000 கூடுதலாகப் பெற்றுக் கொண்டு, ரசீது மட்டும் ரூ.700க்கு கொடுக்கிறார்கள் என்ற ஒரு பெற்றோரின் குமுறலும் அதில் வெளியாகியுள்ளது. பெருவாரியான பள்ளிகள் இதே கொள்கையைத்தான் பின்பற்றுகின்றன என்றும், ஒரு நர்சரி இடத்திற்கு அவர்கள் வாங்கக் கூடிய முழு கட்டணத்திற்கும், என்றைக்கும் ரசீது கொடுப்பதில்லை என்பதாக இன்னொரு பெற்றோர் முறையிடுகின்றார். பள்ளிநிர்வாத்தின் கைகளில் பெற்றோர்கள் தொடர்ந்து வதைக்கப்படுகிறார்கள் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கல்வி இயக்ககத்தின் வழிகாட்டல்களை பின்பற்றாத பல பள்ளிகள் உள்ளன. அவை அநேகமாக, அங்கீகரிக்கப்படாத பள்ளிகளாக இருக்கின்றன. டெல்லி மாநகரில் ஏறத்தாழ 1000 அங்கீகரிக்கப்படாத பள்ளிகள் இருக்கின்றன என்றும், அவை கல்வி இயக்கத்தின் வழிகாட்டல்களை பின்பற்றுவதில்லை என்றும் தெளிவாக தெரிகிறது. 1973ம் ஆண்டின் டெல்லி கல்விச்சட்டத்தின் கீழ் அவை கொண்டு வரப்படமுடியாததால், அவற்றின் மீது கல்வி இயக்ககத்தால் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை என்ற நிலைமை இருக்கிறது. நொய்டாவிலிருக்கும் ஒரு பிரபல பள்ளியின் நிர்வாகம் இதுபற்றி கேட்கப்பட்ட நிலையில், உங்களுக்கு நல்ல கல்வி வேண்டுமென்றால், நீங்கள் அதிகமாக கட்டணம் செலுத்தவேண்டும் என்றும், உங்கள் குழந்தைக்கு பள்ளிக்கூடம் செலவழிக்கின்ற நிதியை ஒப்பிடும் போது, நீங்கள் கொடுக்கின்ற பணம் அதிகமானதல்ல என்றும் அவர்கள் நியாயப்படுத்தினார்கள். தங்கள் பள்ளிகள் 8 மணி நேரம் நடத்தப்படுவதாகவும், சிறந்த கலைவடிவிலான உள்கட்டுமான வசதிகள் இருப்பதாகவும், அதனால் தாங்கள் பெறுகின்ற கட்டணம் நியாயமானதே என்றும் இந்த கல்வி வியாபாரிகள் கூறுகிறார்கள். மேற்கண்ட நிலைமை டெல்லியில் மட்டும்தானா? சென்னையிலும், தமிழ்நாட்டின் பிற நகரங்களிலும், இப்போது கிராமங்களில் கூட இத்தகைய மழலையர்களுக்கு உருவாக்கப்பட்டிருக்கும், ஆங்கில வழி நர்சரி பள்ளிகள் இதே போல நடந்து கொள்ளவில்லையா? புற்றீசல் என வளர்ந்து விட்ட இந்த ஆங்கில நர்சரிப் பள்ளிகளுக்கு யார் பொறுப்பு? தாய் மொழியில் பயிற்று மொழி இல்லாமல், சிறு குழந்தைகளுக்கு ஆங்கிலத்தில் கற்றுக்கொடுப்பது, அவர்களது சிந்தனையை தூண்டி விடுமா? வளர்க்க உதவுமா? சமச்சீர் கல்வி பற்றி பேசிவரும் நாம், முதலில் ஆரம்பக்கல்வியை ஒழுங்கு படுத்துவதற்கு திட்டமிடலாமா? இந்த கேள்விகள் ஆட்சியாளர்களுக்கு எழ வேண்டும் என்பதே நமது அவா.
Subscribe to:
Posts (Atom)