மாநிலங்களவையில் நிறைவேற்றப் பட்ட மகளிர் மசோதா, நாடெங்கிலும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வடஇந்திய அரசியல் தலைவர்கள் சிலர், பல்வேறு காரணங்களைக் கூறி, மகளிர் மசோதாவை எதிர்த்துக் குரல் கொடுத்து வருகிறார்கள். முக்கியமாக பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பி னருக்கான உள்ஒதுக்கீடு செய்யப் படவில்லை என்பது அவர்களது வாதம். இந்த வாதம் பெரிய அளவில் எடுபடாமல் போய் விட்டது. அதாவது நீதியரசர் ராஜிந்தர் சச்சார் போன்றவர்கள் இப்போது நாடாளுமன்றத்தில் இருக்கின்ற 200 பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பைச்
சேர்ந்த உறுப்பினர்கள், தங்கள் தகுதியின் அடிப்படையிலோ, திறமையின் அடிப் படையி லோ நாடாளுமன்றத்திற்கு தேர்ந் தெடுக்கப் படவில்லை என்றும், தங்களது சாதிப் பின்னணியை வைத்து மட்டுமே தேர்ந் தெடுக்கப் பட்டுள்ளார்கள் என்றும் உண்மை யைப் போட்டு உடைத்து விட்டார்கள். அதனால்தானோ என்னவோ இப்போது முலாயம் சிங் யாதவும், லாலு பிரசாத் யாதவும், உள்ஒதுக்கீடு பற்றி பேசும் போது, தலித்களுக்கும், முஸ்லிம் களுக்கும் மகளிர் மசோதாவில் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்ற குரலை உயர்த்துகின்றனர்.
கடந்த 14 ஆண்டுகளாக மீண்டும், மீண்டும் நாடாளுமன்றத்தில், இந்த மகளிர் மசோதா எதிர்க்கப்படும் போதெல்லாம், நாம் முலாயம் மற்றும் லாலு ஆகியோ ருடைய கட்சிகளைத் தான் கண்டு வந் தோம். என்ன காரணத்தினாலோ இந்த முறை சற்று காலம் தாழ்ந்து, ராம்விலாஸ் பஸ்வானும் அவர்களுடன் சேர்ந்து கொண்டார். அதற்கு பிறகே யாதவ் தலைவர்களுடைய குரலிலும், தலித், முஸ்லிம் சொற்கள் அதிகம் வருகின்றன. ஆனால் இந்திய அரசியல் சட்டத்தில் அடிப்படையிலேயே தலித்களுக் கான இடஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டு விட்டதால், மகளிர் இடஒதுக்கீட்டிற்கு உள்ளேயும் அது இணைக்கப்படுவதற்கு எந்த தடையும் இருக்கப் போவதில்லை. அதே சமயம் முஸ்லிம்களுக்கான உள்ஒதுக்கீடு என்பது, சமூக நீதியின் தரப்பில் மிக நியாயமான ஒன்றாக இருந்தாலும், இன்னமும் இந்தியாவில் பொதுவாகவே முஸ்லிம் இடஒதுக்கீடு முழுமையான சட்ட அங்கீகாரத்தைப் பெறவில்லை. அப்படி இருக்கும் போது இப்போது நிறைவேற்ற வேண்டிய மகளிர் மசோதாவில், முஸ்லிம் இடஒதுக்கீடு மட்டுமே தடுக்கப்படுவது போல, இந்த வடஇந்திய தலைவர்கள் படம் காட்டவேண்டியதில்லை. ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லி, மகளிர் மசோதாவை இந்த நேரத்தில் கொண்டு வரவிடாமல் தடுப்பது, ஆணாதிக்க உணர்வு அல்லாமல் வேறென்ன? என்ற கேள்வி எழுகிறது. ஆனால் லாலு ஊடகங்களுக்குச் சொல்லும் போது, தாங்கள் மகளிர் இடஒதுக்கீட்டிற்கு எதிரி கள் அல்ல என்று கூறியுள்ளார். இந்த கூற்றுக் கூட, மாநிலங்களவையில் மசோதா நிறைவேறியப் பிறகே நடந்துள்ளது.
மசோதா நிறைவேற்றத்திற்கு முன்னால், காங்கிரஸ், பா.ஜ.க. உறுப்பினர்கள் பல ரும் தங்கள் கட்சிகளின் கொறடாக்கள் கொடுத்த உத்தரவின் பெயரில் மட்டுமே, மசோதாவிற்கு ஆதரவாக வாக்களித்தார்கள் என்று தெரிகிறது. அதே சமயம் பல காங்கிரஸ், பா.ஜ.க. எம்.பி.க்கள், லாலு, முலாயம் கட்சியினரைச் சந்தித்து, நீங்களாவது மசோதாவை எதிர்த்துப் போராடுங்கள் என்று கூறியதாகவும் ஊடகங்களில் செய்திகள் வருகின்றன. அவையெல்லாம் உண்மைதான் என் றால், இந்தியாவில் நாடாளுமன்றத்தில் இருக்கின்ற பெருவாரியான ஆண் உறுப்பினர்களுக்கு, பெண்களுக்கான இடஒதுக்கீட்டைக் கொடுப்பதில் விருப்பம் இல்லை என்ற செய்தி பதி வாகும். அதே சமயம் நாடாளுமன்ற ஜனநாயகத்தில், எம்.பி.க்கள் என்ற தனிநபர்களுக்கு சுதந்திரம் இல்லையா? என்று சிலர் கேள்வி எழுப்புகின்றனர். நாடாளுமன்ற ஜனநாயகம் என்பதே, கட்சிகளுக்கு உறுப்பினர்கள் கட்டுப்பட வேண்டும் என்பதுதான். ஆகவே எல்லா விவகாரங்களிலும் நடைமுறையில் உள்ள கொறடா உத்தரவு, பெண்கள் மசோதாவிலும் அமுலாகியுள்ளது என்பதாகவே காணவேண் டும்.
வட இந்தியாவில் இது போல நேரடியாக மகளிர் மசோதா எதிர்க்கப்படுமானால், தமிழ்நாட்டிலும் அதை எதிர்ப்பதற்கான சக்திகள் இருக்கவே செய்கின்றன. இங்கே ஊடகத்தில் வெவ்வேறு திசைத் திருப்பும் கருத்துக்களை எழுதி, மகளிர் மசோதாவை இல்லாமல் செய்வதற்கான அணுகுமுறை எடுக்கப்படுகிறது. குறிப்பாக அப்படி தங்களது தலையங்கம் மூலம் எழுதிவரும் ஒரு பிரபல நாளேட்டிற்கு, தமிழக முதல்வரின் கையில் உள்ள நாளேடு பதில் கொடுத்து வருவதன் மூலம், அது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. உலகப் பெண்கள் தினத்தன்று நாடாளுமன்றத்தில் மகளிர் மசோதாவை எடுத்துக் கொள்ள முடியாத சூழலில் எழுதப்பட்ட தலை யங்கமாக, அந்த பிரபல நாளேட்டில் மறுநாள் காலை மார்ச் 9ம் நாள் சில கருத்துக்கள் வெளிவந்தன. அதில் மகளிர் நலத்தின் மீது அக்கறையால், அரசு மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தாக்கல் செய்திருப்பதாக யாராவது நினைத்தால் அது தவறு என்று தொடக்கத்திலேயே கூறப்பட்டது. அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தின் அடிப்படையில், அணு உலைகளை பன்னாட்டு மூலதன நிறுவனங்கள் இந்தியாவில் நிறுவ வேண்டு மானால், அணு உலை விபத்துக்கள் ஏற்படும் பட்சத்தில் அவர்களுக்கு நட்ட ஈடாக மக்கள் வரிப்பணத்திலிருந்து ரூ.1805 கோடியை கொடுப்பதற்கான ஒரு சட்டத்தை நிறைவேற்ற ரகசியமாக ஏற்பாடு செய்யும் அரசு, மக்களை திசைத் திருப்ப இந்த மகளிர் மசோதா வைக் கொண்டு வருகிறது என்பதாக எழுதியிருந்தனர். அதாவது தலையைச் சுற்றி மூக்கைத் தொடும் தலையங்கமாக அது இருந்தது. எப்படியோ மகளிர் மசோதாவை முக்கியமற்றது என்று கூறிவிட்டோம் என அந்த எழுத்தாளர் திருப்தியடைந்திருக்கலாம்.
மறுநாளான மார்ச் 10ம் நாளுக்கான தலையங்கத்தை அதே ஏடு தீட்டும் போது, மகளிர் மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியிருந்தது. அது கண்டு பொறுக்க முடியாத தலையங்கமாக அந்த எழுத்துக்கள் தென்பட்டன. அதற்கு பதில் கூறும் வகையில் தமிழக முதல்வரின் ஏடான, முரசொலியில் மூன்று விமர்சனங்களை, வெவ்வேறு பக்கங்களில் கட்டம் கட்டி நேற்று வெளியிட்டிருந்தார்கள். தினமணியின் விதண்டாவதம் என்ற தலைப்பில், மகளிர் மசோதாவை ஆதரிக்கும் கட்சிகள் தங்கள் வேட்பாளர் பட்டியலில் 33 விழுக்காட்டை மகளிருக்கு ஒதுக்கலாமே என்றும், தங்கள் அமைப்புகளில் மகளிருக்கு சரிபாதி ஒதுக்கலாமே என்றும், கூறப்பட்டதை சுட்டிக்காட்டி பதில் கொடுத்திருந்தார்கள். தேர்தல் கட்சிகள் தங்கள் அமைப்புகளில் 50 விழுக்காடு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றால், தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் 33 விழுக்காடு ஒதுக்குவது எப்படி தவறாகும் என்று கேள்வி கேட்டிருந்தனர்.
அடுத்த கட்டம் கட்டிய பதிலாக அதே ஏட்டில் வெளியான செய்தியில் 36 வருட முயற்சியான மகளிர்
மசோதா, தலையங்கத்தில் மட்டும் எப்படி அவசர கோலத்தில் அள்ளித் தெளித்தாக ஆகமுடியும் என்று பதில் கேள்வியை எழுப்பியிருந்தனர். அதனால் தினமணி தலையங்கம்தான் அவசர கோலத்தில் அள்ளித் தெளித்த அலங்கோலம் என்றும் முரசொலி அம்பலப்படுத்தியிருந்தது.
3வதாக வெளியிட்டிருந்த கட்டம் கட்டிய செய்தியில், மகளிர் இடஒதுக்கீடு மசோதாவும், தினமணியின் கண்ணீரும் என முரசொலி தலைப்பிட்டிருந்தது. ஒரே தொகுதியில் 7 முறை, 8 முறை வெற்றி பெற்றோ வேறு தொகுதியில் வெற்றி பெற முடியாதா எனக் கேள்வி கேட்டு, கலைஞர், பேராசிரியர், எம்.ஜி.ஆர். என உதாரணங்களை முரசொலி எழுதியது. இது தமிழக ஊடகங்களில் வெளிப்பட்ட மகளிர் மசோதா பற்றிய சர்ச்சை என்றாலும், இதற்கு பின்னால் ஒரு அரசியலும், கருத்தியலும் இருக்கிறது. நேற்று (11032010) அதே ஏட்டில் வெளியான தலையங்கத்தில், 3ல் ஒன்றல்ல, சரிபாதி என்று தலைப்பிட்டு மீண்டும் மகளிர்
மசோதாவை பீய்த்தெறிய முயன்றுள் ளனர். முதலில் காங்கிரசிற்கு இதன் முழுப் பலனும் போய்விடக்கூடாது என்பதில் உள்ள அக்கறையைக் காட்டியுள்ளனர். அடுத்து ஒவ்வொரு தேர்தலிலும் தொகுதி மாறும் என்று சுழற்சி முறைபற்றிய விளக்கத்தைக் கூறி, அதன் மீது வீடு கட்டுகிறார் எழுத்தாளர். மக்களாட்சிப் பற்றி அதிகமாக கவலைப்பட்டிருக்கிறார். பொதுமக்களின் சரிபாதியாக இருக்கும் பெண்களுக்கான இடஒதுக்கீடு பற்றி விவாதம் வரும் போது மட்டும், இவர்கள் மக்களாட்சி பற்றி கவலைப்படுகிறார்கள். நடந்து வரும் ஆட்சிமுறையில், எத்தனை ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொகுதி மக்களை கவனிக்கிறார்கள் என்றோ, தொகுதிக்காக ஒதுக்கப்படும் நிதியைப் பயன்படுத்துகிறார்கள் என்றோ, அந்த ஆசிரியருக்கு நன்றாகத் தெரியும். நிதியைப் பயன்படுத்தினாலும், அது மக்களுக்கு சென்று சேருகிறதா என்பதும் அவருக்கு தெரியும். ஆனாலும் ஆண்கள் நிறைந்திருக்கும் இறுக்கைகளில், பெண்கள் வந்து அமர்வதைத் தாங்கிக் கொள்ளமுடியாத மனப்போக்கு இந்த இடத்தில் வெளிப் படுகிறது. கடைசியாக பூனை பையை விட்டு வெளியே வந்து விட்டது என்பதை தவிர வேறு என்ன கூறுவது?
Friday, March 12, 2010
Subscribe to:
Posts (Atom)