தலித் மக்கள் நிலைமை, இந்திய துணை கண்டத்தில், கொடூரமான சமூக ஒடுக்குமுறைக்கு உள்ளாகி இருப்பதை நாம் உணர்ந்திருக்கிறோம். நாம் மட்டுமல்ல, ஐ.நா. சபையே உணர்ந்துள்ளது என்பதை டர்பன் மாநாடு நிரூபித்து காட்டியது. அதாவது ஐ.நா.வால் "இனவெறி பாகுபாடு எதிர்ப்பு மாநாடு" என்ற உலகம் தழுவிய மாநாடு தென்னாப்பிரிக்காவில் டர்பன் நகரில் நடத்தப்பட்டது. அதில் இந்திய நாட்டிலிருந்து ஆதாரபூர்வமாக தலித் சமூகத்தின் மீது நடத்தப்படும் தொடர் கொடுமைகள் பட்டியலிடப்பட்டன. சமூக, பண்பாட்டு, அரசியல் தளங்களிலும், அன்றாட வாழ்க்கையில் தலித் மக்கள் ஆதிக்க சாதியைச்சேர்ந்த சாதி இந்துக்களால் கொடுமைப்படுத்தப்படுவதை படம் பிடித்து உலக நாடுகளின் மக்களுக்கு காட்டுவதற்கு அந்த உலக மாநாடு உதவியது. இந்தியாவில் இருக்கும் சாதி கட்டுமானத்தை உலக மக்கள் உணர்வதற்கு அது உதவியது. தீண்டாமை என்ற கொடிய நோய் ஒன்று, இந்தியாவை தொற்றிக்கொண்டுள்ளது என்ற யதார்த்த நிலவரம் உலக மக்கள் மத்தியில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது..
இத்தகைய தீண்டாமை கொடுமை பற்றிய இந்திய யதார்த்தம், உலக அரங்கில் விவாதிக்கப்பட்டபோது ஐ.நா. சபையின் மனித உரிமை ஆணையத்தில் சர்ச்சைக்கு உள்ளானபோது, இந்திய அரசின் பக்கத்தில் முன்வைக்கப்பட்ட சட்டரீதியான தடுப்பு நடவடிக்கைகள் கவனிக்கப்படவேண்டும். ஏன் என்றால் ஒரு அரசு நிலவுகின்ற சமூக அநீதி பற்றி என்ன கருதுகிறது என்பதுதான் முக்கியமான விஷயம்.
இந்தியாவிற்கான ஒரு அரசியல் சட்டம் எழுதப்ப்படும்போதே, அதில் தீண்டாமை ஒழிப்பு என்பதற்காக ஒரு சட்டப்பிரிவு எழுதப்பட்டுள்ளது. ஆனால் அது தீவிரமான செயல்பாட்டிற்கு செல்லவில்லை. ஏன் என்று பார்த்தோமானால் தீண்டாமை என்பதும், சாதி இழிவு படுத்தல் என்பதும், சாதி கட்டுமானம் என்பதும், இங்கு நிலவுகின்ற சமூக, பொருளாதார, அரசியல் தளங்களுடன் இணைந்த ஒரு அம்சமாக இருக்கிறது. இது ஆண்டாண்டு காலமாக இந்திய கிராமங்களிலும், நகரங்களிலும்கூட, நடைமுறை செயல்பாடுகளாக இருந்து வருகிறது. அதாவது நிலவிவரும் நில உறவுகள் அத்தகைய சாதி கட்டுமானத்தை உயிரோடு வைத்திருப்பதில் கவனமாக இருக்கின்றன. சாதி இந்துக்கள் கரங்களில் இந்திய கிராமப்புறங்களில் உள்ள நில உறவுகள் இருந்துவருவதால், அவர்கள் தங்கள் அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்வதர்க்காக, சாதி கட்டுமானத்தை இறுக்கமாக்கி வருகிறார்கள்.
அதனால் சாதி ஆதிக்கம் என்பது ஒரு சமூக வன்முறையை கட்டவிழ்த்து விடுவதற்கு ஏதுவாகிறது. சமூக வன்முறை என்பதாக இந்த தீண்டாமை கொடு நோய் புரியப்படவேண்டும். அதனால்தான் அரசாங்கம் எந்த ஒரு சட்டத்தை கொண்டுவந்தாலும், அதை அமுல்படுத்துவதற்க்கோ, குற்றம் செய்தவர்களை கைது செய்வதற்கோ, தண்டனை வழங்குவதர்க்கோ, அதிகாரிகள் தயாராக இல்லை என்ற சூழல் நிலவுகிறது.
இப்படிபட்ட பின்னணியில்தான் நாம் தலித் மக்களுக்கு சாதகமாக, தலித் மக்களுக்கு பாதுகாப்பிற்காக கொண்டுவரப்பட்ட சட்டங்களைக்கூட, அமுலாக்கமுடியாத ஒரு நாட்டில் வாழ்ந்துவருகிறோம் என்பது வெட்கப்படவேண்டிய ஒரு செய்தியாக இருக்கிறது..
வட மாநிலங்களில் சாதி பாகுபாடு என்பது, பகிரங்கமாக அறிவிக்கப்படுவது மட்டுமின்றி, ஒவ்வொரு ஆதிக்க சாதிகளுக்கும் ஒரு ஆயுதம் தாங்கிய படை அமைக்கப்பட்டு, அதன் மூலம் ஒடுக்கப்படும் சாதி மக்களை மிரட்டியும், தாக்கியும், கொலை செய்தும் வருவது அன்றாட நிகழ்ச்சியாக இருக்கிறது. உதாரணமாக பீகார் மாநிலத்தில், ராஜபுத்திரர்கள் எனும் ஆதிக்க சாதியான ஜமீன்தார்களுக்கு ஒரு தனி ஆயுதப்படை, அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல பூமிஹார் என்ற இன்னொரு பண்ணையார் சாதிக்காக இன்னொரு ஆயுதம் தாங்கிய படை அமைக்கப்பட்டு இயங்கிவருகிறது. இவ்வாறு சாதி என்பது படை பரிவாரங்களுடன் இயங்குவது, இந்தியாவின் பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்திலும் இருக்கிறது. இதுபோன்ற ஒரு சூழல் தமிழ்நாட்டில் இல்லை. இங்கே அரசியவாதிகள்கூட, சாதி கூடாது என்பதை வாயளவில் கூறி வருகின்றனர். தந்தை பெரியாரால் சாதி எதிர்ப்பு பரப்புரையும், சாதி ஒழிப்பு செயல்பாடுகளும் தமிழக மண்ணை செல்வாக்கு செலுத்தி வரும் காரணத்தாலும், சாதி இங்கே பகிரங்கமாக பேசப்படுவது அசிங்கமான செயல் என்ற கருத்து இருக்கிறது.
இப்படிப்பட்ட சூழலில், தமிழகத்தில் நிலவும் தீண்டாமை செயல்பாடுகளை காண வேண்டும்.
அதாவது தமிழ்நாட்டில், தீண்டாமை இன்னமும் மக்கள் மத்தியில், ஆதிக்க சாதிகள் மனங்களில் ஆழமாக குடியிருந்தாலும், பகிரங்கமாக இங்கே தீண்டாமையை ஆதரிக்கிறேன் என்று சொல்லக்கூடிய நிலையில் யாரும் இல்லை. அதுமட்டுமல்லாது இங்கே இருக்கும் அரசியல் கட்சிகளோ, ஊடகங்களோ, தீண்டாமை என்பது ஒரு கொடூரமான நோய் என்பதை புரிந்தே வைத்துள்ளனர். ஆனாலும் தன்கள் நலுனுக்காகவும், தங்களது சாதி நலனுக்காகவும் தீண்டாமையை அங்கீகரித்து ஆதரிக்கிறார்கள். ஆகவே இங்கே இதே நோயை வித்தியாசமான முறையில்தான் எதிர்கொள்ளவேண்டும். அதாவது சட்டரீதியாகவே எதிர்கொள்ளமுடியும்.
உதாரணமாக ராஜஸ்தான் மாநிலத்தில், இந்திய அரசியல் சட்டத்தால் தடை செய்யப்ப்பட்ட உடன்கட்டை ஏறுதல் என்ற கொடிய பெரிய பெண்ணடிமை நோயை, அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதரிக்கின்றன. இவ்வாறு சட்டத்தை எதிர்த்து அரசியல் கட்சிகளே பெண்ணடிமையை ஆதரிக்கும் உத்திர பிரதேசம் எங்கே? பெண்ணடிமையையும், தீண்டாமையையும் எதிர்த்து ஆட்சிக்கு வரும் தமிழ் நாட்டு கட்சிகள் எங்கே? ஆகவே தமிழ்நாடு இத்தகைய விசயங்களில் வேறுபட்டுத்தான் நிற்கிறது. ஆனாலும் தமிழ்நாட்டில் ஏன் இன்னமும் தீண்டாமை கொடுமை நிகழ்ந்து வருகிறது?
இந்திய அரசியல் சட்டத்தில் தீண்டாமை எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக வடிவமைக்கப்பட்ட சட்டங்கள் தமிழ்நாட்டில் ஒழுங்க்காக செயல்படுத்தப்படுகிறதா? தமிழ் நாட்டு சூழலில், தீண்டாமை எதிர்ப்பு சட்டங்கள் ஒழுங்காக செயல்படுத்தப்பட்டாலே போதும் என்ற நிலை நிலவுகிறது. ஆனால் தீண்டாமை எதிர்ப்பு சட்டங்கள் தமிழ்நாட்டில் செயல்படாமல் இருப்பதற்கு யாரை காரணமாக சொல்ல முடியும்? சட்டங்களை அமுலபடுத்தவேண்டிய பங்கு வழமையாகவே அதிகாரிகள் கைகளில்தான் உள்ளது. சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டிய இடத்தில் உள்ள காவல்துறை அதிகாரிகளும், அதை கண்காணித்து செயல்படுத்த வழிகாட்டவேண்டிய வருவாய் துறை அதிகாரிகளும், ஏன் இந்த தீண்டாமை தடுப்பு, தலித் மக்கள் பாதுகாப்பு சட்டங்களை செயல்படுத்தாமல் இருக்கிறார்கள்? 1989 ஆம் ஆண்டின் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமை தடுப்பு சட்டம் என்பது, அதிகமான பற்களுடன் தலித் மக்களை பாதுகாக்கவும், அவர்களுக்கு எதிராக குற்றம் புரிவோரை கடுமையாக தண்டிக்கவும் இயற்றப்பட்டுள்ளது. ஆனால் அது ஏன் பயன்படவில்லை?
தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்களின் சமூகத்தை சேர்ந்த ஒருவரை, அந்த குறிப்பிட்ட சமூகங்களை சேராத ஒருவர், இழிவு படுத்தினாலோ, தாக்கினாலோ, காயம் அடைய வைத்தாலோ, கொலை செய்தாலோ, தலித் பெண்ணை மானபங்க படுத்தினாலோ, பாலியல் பலாத்காரம் செய்தாலோ, வீட்டை இடித்தாலோ, வீட்டை எரித்தாலோ, தலித்துக்கு சொந்தமான நிலத்தை பறித்து கொண்டாலோ, ஏமாற்றினாலோ, அத்தகைய வழக்குகள் இந்த வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கொண்டுவரப்படலாம் என்று அந்த சட்டம் கூறுகிறது. அதுமட்டுமின்றி, 1995 இன் விதிகள் என்று கொண்டுவரப்பட்ட விதிகள், ஒவ்வொரு தீண்டாமை குற்றத்திற்கும் ஏற்றார்போல, பாதிக்கப்பட்டவருக்கு அளிக்கப்படவேண்டிய இழப்பீடு தொகையையும், கூடுதலாக கொடுக்கப்படவேண்டிய சலுகைகளையும், வரிசைப்படுத்தி கூறுகிறது.
உதாரணமாக இழிவான பொருள்களை அருந்தவைத்தால், ரூ.25000 என்றும், காயம் ஏற்படுத்தினாலோ, நிலத்தை கைப்பற்றினாலோ, அதேபோல தொகையையும், மரபு வழிகளை தடை செய்தால் ரூ.ஒரு லட்சம் என்றும், கொலை அல்லது மரணம் விளைவித்தால் வருமானம் பெறாத தலித் பாதிக்கப்படும்போது, ஒரு லட்சம் ரூபாயும் ,வருமானம் பெறுபவர் விசயத்தில் .இரண்டு லட்சம் ரூபாயும் கொடுக்கப்படவேண்டும். இதுதவிர கூடுதலாக பாதிக்கப்பட்டவரை சார்ந்து இருப்பவர்க்கு மதம் ரூ.1000 அல்லது அரசுப்பணி அல்லது வீடுமனை, விவசாய நிலம், போன்ற சலுகைகள் கொடுக்கப்பட வேண்டும். மேற்கண்ட உதவிகளை, வழக்கு பதிவு செய்த உடனேயே ஒரு தவணையையும், அடுத்து வழக்கு நிறைவு பெற்றபின் ஒரு தவணையையும் கொடுக்கவேண்டும். இதை மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகம் கொடுக்கவேண்டும். அதற்காக மாநில வரவு-செலவு திட்டத்தில் ஒரு பெரும்தொகையை ஒதுக்கீடு செய்து அதை மாவட்டங்களுக்கு மாநில அரசு அளிக்கவேண்டும்.
மேற்கண்ட விவரங்கள் தமிழ்நாட்டு சட்டமன்றத்தில் 1996 ஆம் ஆண்டிலிருந்து வாதம் செய்யப்பட்டு 1998 ஆம் ஆண்டு ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன் பிறகும் இவ்வாறான வழுக்குகளில், வன்கொடுமை தடுப்பு சட்டம் பயன்படுத்தப்படவில்லை என்ற செய்தி கெடுவாய்ப்பாக அமைந்துள்ளது. இவ்வாறு தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியை சேராத காவல் அதிகாரியோ, வருவாய் அதிகாரியோ, குறிப்பிட்ட தீண்டாமை குற்றங்களை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யாவிட்டால், அதை கடமை தவறியமை என்ற காரணத்திற்க்காக அந்த குறிப்பிட்ட அதிகாரி மற்றும் நீதியரசரை மூன்று ஆண்டு கடுங்காவல் விதித்து தண்டனை தரலாம் எனவும் அந்த சட்டம் கூறுகிறது. அப்படியானால் சமீபத்தில் தமிழ்நாட்டில் நடந்த சில, பல வழக்குகளில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அத்தைகைய குற்றம் செய்தவர்களாக கருதப்பட வேண்டும். தலித் என்ற சொற்றொடரை தங்கள் அரசியலுக்கு, அவ்வப்போது பயன்படுத்தும் அரசியல்வாதிகள் இதுபோன்ற நிலவும் தலித் பாதுகாப்பு சட்டங்களின் பிரயோகத்தை உற்சாகப்படுத்தாமல் இருப்பது வேதனை தருவதாகும்.
இதில் அடிப்படையான தவறை செபவர்கள் அதிகாரிகளே என்பது கவனிக்கப்படவேண்டும். அதிகாரிகள் ஏன் சம்பந்தப்பட்ட தீண்டாமை வழக்குகளில், வன்கொடுமை தடுப்பு சட்டத்தை பயன்படுத்தாமல் இருக்கிறார்கள்? சமீபத்திய சில நிகழ்வுகளில் ஒரு உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதாவது சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு, அதாவது காவல்துறையின் பெரிய அதிகாரிகளான மாவட்ட கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட ஆட்சி தலைவர் போன்றோருக்கு, வன்கொடுமை தடுப்பு சட்டம் பற்றிய புரிதல் இல்லாமல் இருக்கிறது என்பதே. இருக்கும் சட்டத்தை படிக்காமல், அதுபற்றிய அக்கறை இல்லாமல், அத்தகைய சட்டங்கள் பற்றிய உணர்வுகள் கொள்ளாமல் எப்படி மாவட்ட நிர்வாகத்தை இவர்கள் வகித்துவருகிரார்கள் என்ற கேள்வி எழுகிறது. முதலில் மேற்கண்ட அதிகாரிகள் இதுபோன்ற குறிப்பிட்ட முக்கியமான சட்டங்களை படிக்கட்டும். அதன் ஒவ்வொரு பக்கத்தையும், ஒவ்வொரு சொல்லையும் புரிந்து கொள்ளட்டும். அதை அமுல்படுத்த முயலட்டும். தமிழ்நாட்டு சூழலை பொறுத்தவரை இந்த வன்கொடுமை தடுப்பு சட்டத்தை படித்து அதிகாரிகள் பயன்படுத்தினாலே தமிழ்நாட்டு ஆதிக்க சாதிகள் தங்களது தீண்டாமை செயல்பாடுகளை விட்டுவிடுவார்கள். சட்டத்தின் மூலம் செய்யவேண்டிய வேலைகளை செய்யாமல், தலித் எழுச்சி வருகிறதே என்று கவலைப்படும் அதிகாரவர்க்கம், கையில் உள்ள அதிகாரத்தை பயன்படுத்த தெரியாமல், சட்ட ஒழுங்கு கெடுவதற்கு வழி செய்வதாக இதிலிருந்து தெரியவருகிறது.. இந்த அதிகாரிகளின் அறியாமையால் இந்த மாநிலத்தின் சட்ட ஒழுங்கு கெடவேண்டுமா?
Tuesday, September 21, 2010
Subscribe to:
Posts (Atom)