சூரிய, சந்திர கிரகணங்கள் எனும் வானியல் அரிய நிகழ்வுகள் ஆயிரம் ஆண்டுகளாக மனித குலத்திற்கு வியப்பையும் வினாக்களையும் ஏற்படுத்தி வருவனவாகும். பூமி உட்பட அனைத்துக் கோள்களும் சூரியனைச் சுற்றி வருகின்றன. இவ்வாறு சூரியன் என்றும் நட்சத்திரத்தைச் சுற்றி வருகின்ற பூமி எனும் கோளினை சுற்றி வருவது சந்திரன் என்னும் துணைக்கோள். இவ்வாறு பூமியை சுற்றி வரும் சந்திரன், ஒரு கட்டத்தில் சூரியன் இருக்கும் பக்கத்திலும் இன்னொரு கட்டத்தில் சூர்யனுக்கு நேர் எதிர்பக்கத்திலும் வருகிறது. இந்த இயக்கப்போக்கில், சந்திரன், பூமியிலிருந்து பார்க்கையில் சூரியன் இருக்கும் பக்கத்தில் வரும்போது, அதாவது சந்திரன் பூமிக்கும் சூரியனுக்கும் நடுவில் வரும்போது அமாவாசை என்கிறோம். சந்திரன், சூரியனுக்கு எதிர்ப்பக்கத்தில் வரும்போது அதாவது பூமி, சூர்யனுக்கும் சந்திரனுக்கும் நடுவில் இருப்பதாக அமையும் போது பௌர்ணமி என்கிறோம்.
சூரிய கிரகணம் எப்போதும் அமாவாசையில் தான் வரும். அதாவது பூமிக்கும் சூரியனுக்கும் நடுவில் சந்திரன் வரும் போது சூரியனை நோக்கியுள்ள சந்திரனின் ஒரு பகுதியில் சூரிய ஒளிபடுகிறது. அந்தப் பகுதிக்கு எதிர்ப்பக்கமுள்ள பகுதி தான் பூமியை நோக்கி இருக்கிறது. அது சூரிய ஒளியின்றி இருட்டாக இருப்பதால், பூமியிலிருந்து பார்ப்பவர்களுக்கு சந்திரன் தெரிவதில்லை. இதுதான் அமாவாசை. இத்தகைய அமாவாசைகளுள் சிலவற்றில், பூமியிலிருந்து பார்க்கையில், சூரியனும் சந்திரனும் ஒரே பக்கத்தில் வருவதோடு சூரியன், சந்திரன், பூமி ஆகிய மூன்றும் இதே வரிசையில் ஒரே நேர்கோட்டிலும் குறிப்பிட்ட காலத்திற்கு வருகின்றன. இவ்வாறு நேர்கோட்டில் வருவதால் சூரியனின் தோற்றம் சந்திரனால் முழுக்கவும் மறைக்கப்படுகிறது. இது தான் சூரிய கிரகணம். இவ்வாறு நேர்கோட்டில் வருவது எந்த அளவிற்கு துல்லியமாக இருக்கிறதோ அந்த அளவிற்கு கிரகணம் முழுமையானதாக இருக்கும். துல்லியத்தன்மை குறைவால் கிரகணம் பகுதியளவு கிரகணமாக அமைந்து விடுகிறது.
சந்திர கிரகணம் எப்போதும் பௌர்ணமியில் தான் வரும். அதாவது பூமியைச் சுற்றிவரும் சந்திரன், சூரியன் இருக்கும் பக்கத்திற்கு நேர் எதிர்பக்கத்திற்கு வரும் போது முழு சந்திரனும் பூமியிலிருந்து பார்ப்பவர்களுக்குத் தெரியும். இதுதான் பௌர்ணமி. இத்தகைய பௌர்ணமிகளுள் சிலவற்றில் பூமிக்கு ஒரு பக்கம் சூரியனும் அதற்கு நேர் எதிர்பக்கத்தில் சந்திரனும், வருவதோடு, சூரியன், பூமி, சந்திரன் ஆகியவை இதே வரிசையில் ஒரே நேர்கோட்டிலும் குறிப்பிட்ட காலத்திற்கு வருகின்றன. இது தான் சந்திர கிரகணம். இதிலும் நேர்கோட்டில் வருவதன் துல்லியத்தன்மையைப் பொருத்தே கிரகணம் முழுமையானதாகவோ, பகுதியளவானதாகவோ அமைகிறது. பகுதியளவான சந்திர கிரகணம் ஆண்டுக்கு 2 நிகழும்.
பார்த்து ரசிப்பதற்கு அழகானது என்றால் ஒவ்வொரு சூரியோதயமும், சூரிய அஸ்தமனமும், சந்திரோதயமும் சந்திர அஸ்தமனமும் அழகானவை தான், ரசிக்கத்தக்கவை தான். ஆனால் அவை தினமும் நிகழ்வதால், பழகப் பழக பாலும் புளிக்கும் எனும் சொல்லடை சுட்டுவது போல் சாதாரண நிகழ்வுகள் ஆகிவிடுகின்றன. ஆனால் துல்லியமான கிரகணங்களின் நிகழ்வுகள் அரியவை என்பதாலும், அதாவது பகுதியளவான கிரகணங்களைப் போல ஆண்டுக்கு 2 முறை நிகழ்ந்திடாமல், பல ஆண்டுகளுக்கு ஒரு முறையோ அல்லது நூற்றாண்டுக்கு ஒரு முறையோ அல்லது நூற்றாண்டுகளுக்கு ஒருமுறையோ ஏற்படுகின்றன என்பதாலும் அவற்றின் துல்லியத்தன்மை அவற்றுக்கு அளிக்கும் அழகினாலும் கிரகணங்களைப் பார்ப்பதற்கான மனிதர்களின் ஆர்வம் பெரிதாக இருக்கிறது.
இதே காரணங்கள் தான், அதாவது அரிய தன்மையும் அழகும் தான், சிலர் அல்லது பலரின் அச்சத்திற்கும் காரணமாக அமைந்திருக்கிறது. பூமிப்பந்தில் செயல்படுகின்ற அனைத்து ஆற்றல்களுக்கும் மூலம் சூரியன் தான் என்பதைப் புரிந்து கொண்டிருக்கவில்லை என்றாலும் அபாயத்தை விளைக்கின்ற, அச்சமூட்டும் இரவின் இருட்டைப் போக்கி ஒளி கொடுத்து பகலை உருவாக்கி மனிதர்களின் அனைத்து இயக்கங்களுக்கும் செயல்பாடுகளுக்கும் உதவுவதால் சூரியன் மீது ஒருவித நன்றியுணர்வு ஆதிகாலத்து மனிதர்களிடமே தோன்றி விட்டது. இந்த நன்றியுணர்வு தான், வழக்கத்திற்கு மாறான முறையில் திடீரென சூரியன் மறைக்கப்படும் நிகழ்வானது சூரியனுக்கு நேரிடும் ஏதோ கெடுதல் என்றும் இதனால் மனிதர்களுக்கும் ஏதாவது கெடுதல் நேரிடும் என்றும் தோன்றிய அச்ச உணர்வுக்கு அடிப்படையாய் அமைந்தள்ளது. எப்பொழுதுமே, தர்க்கபூர்வமான அல்லது தர்க்கபூர்வமற்ற அச்சங்கள் மீதே தங்கள் கோட்டையை கட்டி வரும் மதங்கள் இந்த அச்சத்தையும் பயன்படுத்தி கட்டுக்கதைகள் இட்டுக்கட்டி சடங்குகளையெல்லாம் உருவாக்கி விட்டனர். உண்மையில் கிரகணங்களால் மனிதர்களுக்கு தனித்தன்மை கொண்ட நன்மையுமில்லை, தீமையுமில்லை. அமாவாசை, பௌர்ணமியால் எவ்வளவு நன்மை தீமையோ அதைப்போன்ற, நன்மை தீமைகள் தான் கிரகணங்களினாலும் ஏற்படக்கூடும்.
கிரகணங்களின் போது பூமியைப் பொருத்து சூரியன், சந்திரன் ஆகியவற்றின் இருப்பிட நிலைகளால், பூமியின் மீது இவற்றினால் ஏற்படும் ஈர்ப்பு விசையின் அளவு சிறு அளவுக்கு மாறுபாடு அடையலாம். இந்த மாறுபாடு காற்று மண்டலத்தின் இயக்கத்திலும் கடல் அலைகளின் இயக்கத்திலும் ஏதாவது விளைவுகளை ஏற்படுத்துகின்றனவா என்று விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர். மக்கள் திரளுக்கு வியப்பையளிக்கும் கிரகணங்கள், விஞ்ஞானிகளுக்கு விடைகளைத் தேடி நிற்கும் வினாக்களைக் கொண்டதாக இருக்கின்றன.
சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியாவில் பௌர்ணமி, அமாவாசை, கிரகணங்கள் வரும் காலத்தை கணிசமான அளவு துல்லியமாக கணிக்கும் திறன் உடையோர் இருந்திருக்கின்றனர். இது நாம் அனைவரும் பெருமிதம் கொள்ளவேண்டிய கணித, விஞ்ஞான வளர்ச்சி. ஆனால் அதே நேரத்தில் கிரகணம் என்பது சூரியனையும், சந்திரனையும் பாம்பு விழுங்கும் நிகழ்ச்சி என்று கூறிய வேடிக்கையும் இங்கே நிகழ்ந்தது என்பது மிக அரிய முரண்நகையே. இப்போது 10 வயது குழந்தைகள் கூட இந்த பாம்புக்கதையை நம்ப மாட்டார்கள். இப்போதும் பாம்புக் கதையை நம்பவில்லையென்றாலும் அதை ஒட்டி இருக்கும் வேறு தவறான நம்பிக்கைகளை கொண்டிருப்போரும் சிலர் இருக்கின்றனர்.
இந்தியாவில் பலர், கிரகணத்தையொட்டி சமைத்தல், சாப்பிடுதல், திறந்தவெளியில் திரிதல் ஆகியவற்றைத் தவிர்த்து விடுகின்றனர். இவற்றுக்கு இவர்கள் சொல்லும் காரணங்கள் விஞ்ஞானரீதியாக ஏற்றுக் கொள்ளப் படவில்லை. திறந்தவெளியைத் தவிர்த்து அறைக்குள் அடைந்து கிடப்பது எவ்விதத்திலும் பயனற்றது. ஏனெனில், பலவீனமானது என்று சொல்லப்பட்டாலும் ஈர்ப்புவிசை அனைத்தும் தழுவியது, நீக்கமற நிறைந்திருப்பது. பாதிப்பை ஏற்படுத்துமெனில் பாதாளத்திற்குள் பதுங்கியிருப்பினும் பாய்ந்து பாதிப்பை ஏற்படுத்தியே தீரும். ஆக, வீட்டிற்குள் முடங்கிவிடுவது என்பது பூனை கண்ணை மூடிக்கொள்ளும் செயலைப் போன்றதேயாகும். இப்போதைய காலம் விஞ்ஞான காலம். தொழில்நுட்பக் காலம் என்றெல்லாம் சொல்லுகிறோம். 21ம் நூற்றாண்டு என்று சொல்லுகிறோம். இப்பொழுதும் இத்தகைய விஞ்ஞானத்திற்கு முரணான கருத்துக்கள் சமூகத்தைப் பீடித்திருப்பது அனுமதிக்கக்கூடியதா? மதக்கருத்துகள் பலவும் கடந்த நூற்றாண்டில் மக்கள் மனங்களிலிருந்து வெளியேறிவிட்டதைப் பார்த்தோம். அப்படி மதக்கருத்துக்களை வெளியேற்றியது விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் தான். மிச்சமிருக்கிற தவறான புரிதல்களையும் கருத்துக்களையும் அவற்றை அடிப்படையாகக் கொண்டு உருவான உணர்ச்சிகளையும் விட்டு விடுதலையாகும் போது மானுடத்தின் வளர்ச்சி வேகம் மேலும் அதிகமாகுமல்லவா? விஞ்ஞானத்திற்கு முரணான இந்த கருத்துகளை எதிர்த்து பகுத்தறிவாளர்கள் சிலர் விஞ்ஞான விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் உண்ணும் விரதம், நடத்தியுள்ளனர். அப்படிப்பட்ட நிலை ஏற்படச் செய்வதற்காக, விஞ்ஞானக் கருத்துகளை சக மனிதர்களிடம் கொண்டு செல்லும் பணியை விரைவுபடுத்துவோம். அப்படியாயின், இந்த சூரிய கிரகணம் மானுடத்திற்கு நன்மை செய்திருக்கிறது என்று ஆகிவிடும்.
Saturday, January 16, 2010
Subscribe to:
Posts (Atom)