Monday, June 18, 2012

மண்டபம் அகதிகள் முகாமில் ஈழப் பெண்களை கொடுமை படுத்தும் கயவர்கள்


மண்டபம் தாயகம் திரும்பியோர் முகாம் இராமேசுவரத்திலிருந்து 21 கிமீ தூரத்தில் கடலோரத்தில் அமைந்திருக்கும் அகதிகள் முகாம் ( பேச்சு வழக்கு )

31.01.2005 வரை இங்கே 52,332 தாயகம் திரும்பியோர் 14,031 குடும்பங்களுடன் 103 முகாம்களில் இருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது . இன்று அதிகரித்திருக்க கூடும் . 

இம்முகாம்களில் வாழும் மக்களுக்கு மனிதர்கள் என்ற அடிப்படை மரியாதை கூட மறுக்கப்படுகிறது . பள்ளிக்கு செல்லும் பெண் குழந்தைகளின் முடியை பிடித்து இழுப்பதும் , நீ விடுதலைப்புலிதானே என திடீரென்று கொடுமைப்படுத்துவதும் சொல்லி மாளாது . HUMAN RIGHTS , HUMANITY என்று கூக்குரலிடும் இச்சமுதாயம் இந்த விடயங்களில் மட்டும் அடக்கி வாசிக்கிறது , ஊடகங்களுடன் .

இத்தகைய சிறப்பு வாய்ந்த மண்டபம் அகதிகள் முகாமில் காவல் துறையினரின் பாலியல் வன்முறையால் சில பெண்கள் பாதிக்கபட்டுள்ளதாக செய்தி நண்பர்களிடம் இருந்து வந்துள்ளது. வெளியே சொல்ல முடியாமல் , சொன்னால் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் ஆபத்து வரும் என்ற காரணத்தினால் அவர்கள் இதை சொல்ல தயங்குகின்றனர்... அதிலும் முன்னாள் போராளி குடும்பத்தினர் மிகவும் துன்புறுத்தப்படுகின்றனர். 

முகாமில் இருந்து ஒரு சகோதரி கூறியதில் இருந்து....

ஆனந்தபுரத்தில தீபன் அண்ணா, கடாபி அண்ணா, துர்க்கா அக்கா, விதுசா அக்கா ஆக்களோடு 700 போராளிகள் வீரச்சாவடைந்தது தெரியும்தானே?. அந்த ஆனந்தபுரத்தில அண்ணனும்தானே (தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன்) சிறீலங்கா இராணுவத்தின்ர பெட்டிக்குள்ள மாட்டினவர்? அப்போது அவரை எப்படியாவது காப்பாத்தவேணும் என்று போராடி வெளிய கொண்டுவந்த ஆக்கள்ல என்ர அவர் முக்கியமான ஆள். கடாபி அண்ணாவோடதான் இருந்தவர். ஆனந்தபுரத்தில படுகாயத்தோட கடாபி அண்ணனைக் கைவிடவேண்டிய துயரமான சூழலிலும் எப்படியோ அண்ணனக் காப்பாத்திட்டோம் என்று சந்தோசப்பட்டவர். கடாபி அண்ணன நினைச்சுத் தனக்குத்தானே ஆறுதல் சொல்லிக்கொண்டவர்.

முள்ளிவாய்க்கால்ல மே 09ஆம் நாள் அவரைக் கடைசியாப் பார்த்தது. நீங்க சனத்தோட போங்கோ என்று என்க்கும் பிள்ளையள் இருவருக்கும் சொல்லிற்று, நாங்கள் அண்ணன எப்படியாவது காப்பாத்தவேண்டும். இனி என்ன நடக்குமெண்டு சொல்லமுடியாது. பிள்ளையள வடிவாப் பார்த்துக்கொள்ளுங்கோ என்று சொல்லிவிட்டுப்போனவர்தான். அதற்குப் பிறகு பார்க்கவேயில்லை.

மே 18, 2009 நாங்களும் அந்த முள்ளிவாய்க்கால் மண்ணைவிட்டு வெளியேறினோம். அவருக்கு என்ன நடந்தது என்று இதுவரை தெரியாது. மூன்று வருசம் ஆச்சு. ஆமி பிடிச்சு வைச்சிருக்கும், எங்கெங்கையோ சிங்களப் பகுதியில எல்லாம் சிறைகளுக்குள்ள எங்கட ஆக்கள வைச்சிருக்கினமாமே? அங்க எங்கயாவது அவரும் இருப்பார் என்ட நம்பிக்கையோடதான் இதுவரை காத்திருக்கிறன்.

சிலவேளை சண்டையில செத்திருக்கலாம், அல்லது ஆமி பிடிச்சுச் சுட்டுக் கொன்றிருக்கலாம். ஆனால் நம்பிக்கைதானே வாழ்க்கை. என்ர அவர் எங்கயாவது உயிரோட இருப்பார் என்டே இதுவரை மனசத் தேத்திக்கிறன். ஆனாலும் ஒவ்வொரு நாளும் அவர் நிலைமை என்னவோ என்ட கண்ணீரோடும் காத்திருப்போடும்தான் வாழ்க்கை போகுது. முள்ளிவாய்க்காலால வெளியவந்து மூன்று கிழமையில, அதாவது 2009ஜூன்ல எனக்கு மகள் பிறந்தவர். அப்ப பிறந்த பச்சைப் பிள்ளையோடயும், இந்தப் பிள்ளையள் இருவரோடயும் தடுப்பு முகாமில இருந்து அத்தனை கஸ்டமும்பட்டு போன வருசம் வெளியவந்தேன்.

அதற்குப் பிறகும் வெள்ளைவான்காரர் வந்து என்னை வைச்சிருந்த வீட்டுக்காரருக்கு தொல்லை கொடுத்தார்கள். உன்ர புருசன் எங்க, அவருக்கு என்ன நடந்தது என்டெல்லாம் இனி எங்காவது விசாரிச்சா அல்லது மனித உரிமை அமைப்பு அது இதென்டு திரிஞ்சா உன்னைப் போட்டுடுவம் என்று மிரட்டல், பிள்ளையள்ற நிலைமையை நினைச்சு அழுதழுது நாட்டைவிட்டே வெளியேற முடிவெடுத்து தமிழ்நாட்டுக்கு நானும் பிள்ளையளும் வந்தோம்.

அதுதான் நான் செய்த பெரிய தவறென்று இப்போ நினைக்கிறன். ஊரிலயே பிள்ளையளுக்கும் நஞ்சக்கொடுத்திற்று நானும் செத்துத் தொலைஞ்சிருக்கலாம். போரில செத்ததுகள் கடவுள்கள். கொடுத்து வச்சதுகள். மண்ணுக்கு உரமாப் போயிற்றுதுகள்.

நாங்கள் எல்லாம் தினம்தினம் செத்தபடி இருக்கிறம். இங்க வந்ததும் ஒரு குழு அவுஸ்திரேலியாவுக்குக் கப்பல் போகுது. போறதென்டா முதற்கட்ட கட்டணமா 3 இலட்சம் பணம் தரச்சொன்னாங்கள். இந்த முகாமில நடக்கிற அடி உதைகள், பாலியல் வல்லுறவுகள், எதிர்த்துக் கேட்கிறதுக்கு யார் இருக்கிறார் என்கிற அவதூறுப் பேச்சுக்கள், இதிலெல்லாம் இருந்து தப்பி ஓடிரலாம் என்று இருந்த நகையெல்லாம் வித்து நானும், என்னைப்போல இன்னும் சிலரும் அவங்களுக்கு பணத்தைக் கொடுத்தோம்.

கொஞ்ச நாளுக்குப் பிறகு அவர்களிடம் போய் எப்ப அனுப்புறீங்க? என்று கேட்டா, புலி என்டு சொல்லி உள்ள போட்டுருவம்னு மிரட்டுறாங்கள். சொல்றவங்கள் இந்த ஊர் காரர். அவங்களுக்கு அரசியல் பலம், பின்னணி இருக்கு. எங்களுக்கு ஆரு இருக்கிறது கேட்கிறதுக்கு? யார் சாட்சி? மௌனியா வாய்பொத்திட்டு இனி இதுதான் எங்கட விதி என்டு இந்த முகாமுக்குள்ளயே எல்லாரும் வாழுறம்.

இங்க நிலைமை சொல்லி மாளாது. குடும்பமாக இருக்கிற ஆக்கள் கொஞ்சம் பரவாயில்லை. கஸ்டம் என்டாலும் பல்லக் கடிச்சுக்கொண்டு வாழப் பழகுதுகள். கணவர் இல்லாத பெண்கள், தனியே வந்த இளம்பெண்கள், இளைஞர்கள் படுகிற கஸ்டம் கொடுமையிலும் கொடுமை. படுகாயப்பட்டு வந்த ஆக்கள் அது பொதுமக்களாக இருந்தாலும் சரி, முன்னாள் போராளிகளாக இருந்தாலும், அதில வேறுபாடு இல்லாம எல்லாரும் புலிதான் என்பதுதான் இவங்கட கருத்து.

காயப்பட்ட ஆக்கள் எல்லாரையும் செங்கல்பட்டு சிறப்பு முகாமுக்கு அனுப்பி அங்க காயத்தோடயும் வலியோடயும் இருக்கிற அதுகளப்போட்டு செய்யிற சித்திரவதையில அவங்கள் எல்லாம் மனநிலை குழம்பியிருங்கள்.

இப்பிடித்தான் இங்க கொஞ்ச நாளுக்கு முதல் மூன்று பெண் போராளிகள், சரியான சின்னப்பிள்ளைகள் அதுகளக்கொண்டுபோய் எல்லாரும் கும்பல்கும்பலா பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி அதுகள் மனநிலை குழம்பிப்போய் நடைபிணங்களாயிட்டுதுகள். அதுகளச் சுற்றி என்ன நடக்குதெண்டே அதுகளுக்குத் தெரியாத நிலையில் இங்க கொண்டு வந்து போட்டுட்டுப் போயிற்றாங்கள் பாவியள்! சாப்பாடு வேணும் என்டு கூடக் கேட்காம பரக்கப் பரக்க முழித்தபடி இருக்குங்கள்.

நாங்கள் சிலர் பாவப்பட்டு குளுக்கோஸ் ஏதாவது கொண்டுபோய் இடையிடையே சாப்பிடக் கொடுக்கிறது. அதுகூடப் பயந்துகொண்டேதான் கொடுக்கிறது. அந்தப் பாவங்களுக்கு நாங்கள் உதவி செய்யப்போறதைப் பார்த்தா இங்க இருக்கிற அறுவான்கள் பார்த்தா 'உன்னோடயும் படுக்கிறதாடி?' என்று நாய்பேச்சுப் பேசி அடிப்பாங்கள். நினைக்கிற நேரம் எல்லாம் அந்தப் பிள்ளையளையும், வேறுசில தனியான பெண்களையும் போய் தங்கட விரும்பத்துக்கு ஏத்தமாதிரி நடத்திக்கொள்றது. தலைமயிரைப் பிடிச்சு இழுத்து சும்மா சும்மா அடிக்கிறது. இதெல்லாம் பார்க்க பொறுக்கவே முடியுதில்லை.

என்னை நம்பியிருக்கிற பிள்ளைகளை நினைச்சு நினைச்சு எங்களுக்குள்ளேயே பொருமுறது. உறக்கம் கெட்டு கழிவறைக்குள்ள போய் இருந்து அழுறது. ஒவ்வொரு நாளும் பிள்ளையள் பள்ளிக்கூடம் போற நேரம் வந்து 'என்னடி படுக்க வாறியா...? அல்லது புலி எண்டு சொல்லி உள்ள போடட்டா? உன்னை உள்ள போட்டுட்டா பிள்ளையள் யாரும் கேட்க நாதியற்று நடுரோட்ல நிக்கும் பரவாயில்லையா?' என்று வாய்கூசாமல் கேட்குதுகள். தனிய குழந்தைகளோட இருக்கிற பெண்களுக்கும், ஒற்றை ஆட்களாக இருக்கும் இளையவர்களுக்கும் ஒவ்வொரு நொடியும் இது நரகத்திலும் கேவலம்;. ஆண்போராளிகளும் சில பேர் இப்படித்தான். அதுகளப் போட்டுச்செய்த சித்திரவதையில மனநிலை பிசகி, உடுப்பில்லாம அம்மணமா எதுவும் விளங்காமத் திரியுதுகள்.

எனக்குத் தெரிஞ்சே மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெரியபோராளி... அவருக்குத், தான் ஆரெண்டே தெரியுதில்ல. எனக்கு அவர் மட்டக்களப்பு என்று மட்டும்தான் தெரியும். அவர வன்னியில பார்த்து இருக்கிறன். எந்த ஊர், அவர் யாரு...சொந்தங்கள் எங்க? ஒண்ணும் தெரியாது. யாருக்கும் தெரியுதில்லை. அவர் கீழே காற்சட்டை இல்லாம வானத்தைப் பார்த்து சிரிச்சபடி நிக்கிறார்.

இதையெல்லாம் பார்த்துப் பார்த்து கதறி அழத்தான் முடியுது. ஒரு அண்ணா ஒருத்தர் இருக்கிறார், அவருடைய மூன்று சகோதரர்கள் கரும்புலியாப் போயிட்டினம். அம்மா, அப்பா முள்ளிவாய்க்கால்ல செல்லடியில செத்துப் போயிட்டுதுகள். இவர் இங்க தனிய மாட்டிக்கொண்டதுதான் அவர் செய்த பாவம். அவரைக் கொண்டுபோய் நீ புலிதானே...புலிதானே என்டு அடிச்சு, சித்திரவதை செய்து உடம்பு முழுதும் முப்பது இடத்தில காயம். அவருக்கும் மனநிலை குழம்பிப்போயிட்டுது.

எத்தனை கஷ்டங்களையும், உயிர் இழப்புகளையும் தாண்டி இங்க வந்திருப்பம். எதுக்காக? இந்தப் பாழாப்போன உயிருக்காகத்தானே? அந்த உயிரை தமிழ் மண்ணிலேயே இப்படியெல்லாம் வதைக்கிறவங்கள் தமிழர்களா? மனிதர்களா? 8 மணிக்குப் பிறகு முகாமைவிட்டு வெளியே போகமுடியாது. வெளியிலிருந்து முகாமுக்கு யாரும் வந்து பார்க்கக் கூடாது. அப்படியே வருவதாயின் கலெக்டர் அனுமதி வேணும். அப்படி யாரும் அனுமதிபெற்று எம்மைப்பார்க்க வந்து போனால், யார் அவர்? என்ன கொண்டு வந்தவர்? என்ன இருக்கு எண்டு விசாரிச்சு எங்களிடம் இருக்கிற எல்லாத்தையும் பறிச்சுக்கொண்டு போயிருவாங்கள். இந்தப் பயத்தாலேயே ஆராவது சொந்தம், உறவு எண்டு ஆக்கள் வாறதெண்டு சொன்னாலும் வரவேணாம் எண்டு நாங்கள் எல்லாரும் சொல்லியிருவம்.

தலைவர் அண்ணா...எங்களை எப்படியெல்லாம் வளர்த்தவர்? 13 வயசிலயே நாடு, மக்கள், மண் என்டு அவரிட்ட போயிட்டம். அவர் எங்களப் பதினெட்டு வயசுவரைக்கும் படிக்க வைச்சு, கம்ப்யூட்டர், அரசியல் எல்லாம் படிக்க வைச்சு, தாயை விட வடிவா எல்லோ பார்த்தவர். போர், சண்டை, இழப்பு என்டு வலி இருந்ததுதான். மற்றபடி என்ன குறை இருந்தது எங்களுக்கு? அண்ணா என்ன குறை வைச்சவர்?

இன்னைக்கு நாங்க இப்படி இருக்கிற நிலையப் பார்த்தா அவராலேயே தாங்க முடியாது. அண்ணா... வரமாட்டாரா? என்டு தினம் தினம் அழுறம்.

முள்ளிவாய்க்கால்ல செத்ததுகள் எல்லாம் கொடுத்து வச்சதுகள். நாங்கள் என்ன செய்ய முடியும்? ஆரு இந்த அநீதியைத் தட்டிக்கேட்கிறது? எங்களுக்கெண்டு யார் இருக்கிறாங்க?' ஏன் இந்தத் தமிழினத்துக்கு இந்த இழி நிலை? சிறீலங்காவிலதான் எதிரியால எங்களுக்கு அந்த நிலையெண்டா இங்க தமிழ்பேசுற தமிழ்நாட்டு ஆக்களாலேயே அதைப்போலக் கொடூரமான நிலையெண்டா நாங்க எங்கதான் போறது...?

இது என்ன தமிழ்நாடு? ஈழத்தமிழனுக்கு யாரும் இல்லையா?. என்ர புருசன் உயிரோட இருக்கிறாரோ இல்லையோ தெரியவில்லை. இருக்கவேணும் என்டுதான் நம்பிக்கையோட காத்திருக்கிறன். ஆனால் தலைவர் அண்ணா வந்தா.. உயிர் வந்தமாதிரி. அவர் மட்டுமிருந்தா இந்தப் போராளிகளுக்கு எல்லாம் இந்த நிலை வந்திருக்காது. அந்த ஆளோடயே இருந்து செத்து மண்ணோடு மண்ணாப் போயிருந்தாக் கூட இந்த உயிர் பிறவிப்பயனை அடைஞ்சது எண்டு சந்தோசமா செத்திருக்கலாம். 

இப்படிப்பட்ட கொடூரங்களை தட்டிக் கேட்பார்களா தமிழக தலைவர்கள் ? கருணை காட்டுமா தமிழக அரசு.
படங்கள் : ஜெய்  









தென்னேரி இருளர்களை ஆதிக்க முதலியார் அடிக்கலாம்?



       காஞ்சி மாவட்டம், வாலாஜாபாத் அருகே எட்டாவது கிலோ மீட்டரில், தென்னேரி கிராமம் உள்ளது. அதில் பத்து இருளர் குடும்பங்கள் வீடு கட்டி "நத்தம் புறம்போக்கில்" வாழ்கிறார்கள். நத்தம் புறம்போக்கைத்தான் ,அரசாங்கம் ஏழை எளிய மக்களுக்கு மனைக்கான நிலமாக தருவதாக திட்டமிட்டுள்ளது. அந்த நத்தம் புறம்,போக்கில் வாழும் இருளர் மக்களுக்கு, சாதி சான்றிதழ், ரேஷன் அட்டை, மின்சார தொடர்பு ஆகியவற்றை வாட்டட்சியர் செய்து கொடுத்துள்ளார். அடுத்து அந்த மணிகளை "பட்டா" போட்டு தருகிறேன் என்றும் கூறியுள்ளார். 

                         அந்த செய்தியை அதே தென்னேரி கிராமத்தை சேர்ந்த "ஏகாம்பர முதலியாரால்" தாங்கி  கொள்ள முடியவில்லை. அவர் உடனே தனது ஆட்கள் ஐம்பது பேரை அனுப்பி, ஞாயிறு காலை ஆறு மணி முதல் பன்னிரண்டு மணிவரை, அந்த கிராம இருளர்களை வீடு புகுந்து அடிப்பதும், ஆண், பெண் வேறுபாடு இல்லாமல் உதைப்பதும், இரண்டு வீடுகளை உடைப்பதும் என "வன்கொடுமைகளை" செய்துள்ளனர். அதுபற்றி புகார் கொடுக்க சென்ற மக்களை மன்றத்தினரிடம், வாலாஜாபாத் காவல் நிலையத்தினர் "புகார் எடுக்க" மறுத்துள்ளார்கள். மக்கள் மன்றத்தினர் அந்த அடிபட்ட பதின்மூன்று இருளர்களையும், மருத்துவமணையில் சேர்த்துள்ளனர். 

                        ஆதிக்க சாதியின் இந்த வான் கொடுமையை, பழ்ஜன்குடி இருளர் மீது காட்டுவதும், அதை புகார் எடுக்க மறுப்பதும், பழ்ஜன்குடி பிரதிநிதியை குடியரசு தலைவருக்கே நிறுத்தும் ஒரு முதல்வர் ஆளும் மண்ணில் "அதிகாரிகளால்" தைரியமாக செய்யமுடிகிறது.