Tuesday, July 13, 2010

அனைத்து நாட்டு குற்றவியல் நீதிமன்றமும், இன அழிப்பும்.

.
அனைத்து நாட்டு குற்றவியல் நீதிமன்றம் எத்தனை ஆண்டுகளாக செயல்பட்டு கொண்டிருந்தாலும், சமீபத்தில் உலக தமிழர்கள் மத்தியில் அதிகமாக அங்கலாய்க்கப்படுகிறது. ஈழத் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இன அழிப்பு போர் பற்றிய குற்றச்சாட்டுக்களும், அந்த இனவாதப் போரில் நடத்தப்பட்ட மனித உரிமை மிறல்களும், அனைத்து நாட்டு குற்றவியல் நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டி நிற்கிறது.
கடந்த திங்கட்கிழமை அனைத்து குற்றவியல் நீதிமன்றம் ஒர் அறிக்கையை வெளியிட்டது. அது சுடான் நாட்டினுடைய அதிபரான ஒமர் அல்பஷீர் பற்றியது. ஒரு குழுவினரது உடல் ரீதியான அழிவை ஏற்படுத்துவதற்கான ஒரு வாழ் நிலையை திட்டமிட்டு அவர்கள் மீது நடத்திய கொடுமை அவரால் இழைக்கப்பட்டது என்பதாக அந்த அறிக்கை குற்றம் சாட்டுகிறது. அதுவே இன அழிப்பு என்பதாகவும் கூறப்பட்டுள்ளது. உடல் ரீதியாகவோ அல்லது மன ரீதியாகவோ புண்படுத்தி அதன் மூலம் இன அழிப்பை செய்வது என்பதையும், கொலைகளின் மூலம் இன அழிப்பை செய்வது என்பதையும் அதிபர் பஷீர் இழைத்ததாக அந்த அறிக்கை குற்றம் சாட்டியுள்ளது. அதனால் அவரை கைது செய்வதற்கான ஒரு வாரண்டை பிறப்பித்துள்ளது. ஒரு நாட்டின் அதிபராக இருப்பவர் மீது இது போன்ற இன அழிப்புடப குற்றச் சாட்டை சாட்டுவது இதுவே முதல் முறையாகும்.
2009ம் ஆண்டு மார்ச் மாதம் போர்க் குற்றங்களுக்காக பஷீர் மீது இன அழிப்பு குற்றச் சாட்டையும், மானுடத்திற்கு எதிரான குற்றங்களை செய்ததாக, அதற்கான ஒரு வாரண்டையும் கூடுதலாக கையில் வைத்திருக்கும் அனைத்து நாட்டு குற்றவியல் நீதிமன்றம் இப்போது மேலும் பல தூதரக நிர்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளது. பஷீர் இலங்கையின் மகிந்த ராஜபக்சே போல அனைத்து குற்றச் சாட்டுகளையும் மறுத்துள்ளார்.
2000மாவது ஆண்டில் ரோம் நகரில் உருவான ஒரு தீர்மானம், அனைத்து நாட்டு குற்றவியல் நீதிமன்றத்தால் வழிகாட்டுதலுக்காக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அந்த ரோம் தீர்மானத்தில் அடிப்படையில் 2009ம் ஆண்டு ஆரம்ப கட்ட விசாரணையில் சூடான் நாட்டு அதிபர் பஷீர் மீது இன அழிப்பு என்ற குற்றச் சாட்டு, அனைத்து நாட்டு நீதிமன்றத்தால் மறுக்கப்பட்டது. அதன் பிறகு ஒரு மேல் முறையீட்டில், நீதி அரசர்கள் 3 விதமான இன அழிப்பு நடவடிக்கைகளுக்கு பஷீர் பொறுப்பானவர் என்பதாக நம்புவதற்கான ஆதாரங்கள் உள்ளன என்று தெரிவித்தார். இத்தகைய இன அழிப்புக் குற்றச்சாட்டு, அனைத்து நாட்டு நீதிமன்றத்தை அரசியல் நோக்கோடு செயல்படுவதாக சூடான் அமைச்சர்கள் குறை சொல்வதற்கும் வழிவகுத்தது. இது தான் இன்றைக்கு இலங்கை அரசாலும், உலக சமூகத்தின் மீது கூறப்படும் குற்றச்சாட்டு.
தர்புரி என்ற மக்களுக்கும், மானுடம் முழுமைக்கும் கிடைத்த வெற்றி என்பதாகவும், பாதிக்கப்பட்ட அந்த இனத்தின் குரல் வெளிவந்தது. ரோம் தீர்மானத்தின் 58வது பிரிவின் படி மேற்கண்ட விசாரணை முறை நடத்தப்பட்டுள்ளது. சூடான் நாடு ரோம் தீர்மானத்தில் ஒரு பங்குதாரராக இருந்தாலும், அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை என்பதனால், நீதிமன்ற முடிவுப்படி, பஷீரை ஒப்படைக்க முடியாதென மறுத்துவிட்டது. இதில் வேடிக்கை என்னவென்றால், இந்த ஆண்டு ஐ.நா. வில் மேற்பார்வையில் நடத்தப்பட்ட சூடான் தேர்தலில் பஷீர் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அதிபராக தேர்தெடுக்கப்பட்டுள்ளார். இதே நிலைமைதான் இலங்கைக்கும் பொருத்தமாக அமையும். இலங்கை அரசும் ரோம் ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை ரோம் ஒப்பந்தத்திற்கு ஆதாராவாக அறைகூவல் விடுப்பதற்கு இலங்கை அரசு மறுத்துவிட்டது.
2009ம் ஆண்டு ஜூலை 21ம் நாள் வரை, அனைத்து நாட்டு குற்றவியல் நீதிமன்றத்தின் உறுப்பினர்களாக 110 நாடுகள் மட்டுமே இருக்கின்றன. தெற்காசிய நாடுகளில் ரோம் தீர்மானத்திற்கு ஒப்புதல் கொடுத்து இணைந்திருக்கும் முதல் நாடாக வங்காளதேசம் இருக்கிறது. அதன் மூலம் போர்க் குற்றங்கள் பற்றிய சாட்சிகளையும், மானுடத்திற்கு எதிரான குற்றங்களையும் கண்டுபிடிக்க உதவுவது, தேசிய விசாரணைகளை நடத்துவது, குற்றம் சாட்டப்படும் தனி நபர்களை சரணடைய வைப்பது ஆகியவற்றை செய்ய ஊக்கமாக இருக்கிறது. ஆசியா கண்டத்தில் ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், கம்போடியா, மங்கோலியா, கொரியா குடியரசு, தைமூர் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் ரோம் தீர்மானத்திற்கு ஒப்புதல் கொடுத்த 7 நாடுகளாகும்.
ஒரு நாட்டு அரசு தனது நாட்டிற்குள் மானுடத்திற்கு எதிரான குற்றங்களை இழைத்தாலோ, போர் குற்றங்களை இழைத்தாலோ, அந்த நாட்டு அரசின் மீதும், அந்த அரசில் பொறுப்பில் இருக்கும் அதிபர்கள் மீதும் அத்தகைய குற்றச்சாட்டுகளுக்காக பொறுப்பேற்க வைத்து, அவர்கள் மீது விசாரணை நடத்தி தண்டிப்பதற்கான அதிகாரத்தை பெற்றது தான், இந்த அனைத்து நாட்டு குற்றவியல் நீதிமன்றம். இந்த நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் முறைகளை முன் வைப்பது தான், ரோம் தீர்மானம். ஆகவே ரோம் தீர்மானத்தின் நீயாயங்களை ஏற்று, அதில் ஒவ்வொரு நாட்டின் அரசாங்கமும் ஒப்புதல் கொடுத்து கையெழுத்திட வேண்டும். இது உலக மனித உரிமை தளத்தில் எதிர்பார்க்கப்படும் ஒரு நியதி. இத்தகைய ஒப்புதலை இது வரை கொடுக்காத இலங்கை அரசையும், இந்திய அரசையும் அந்தந்த நாட்டு மக்கள் நிர்ப்பந்தம் கொடுத்து, கையெழுத்திட வைக்க வேண்டும்.
இப்போது குறிப்பாக உலகத் தமிழர்கள் மத்தியிலும், பொதுவாக உலக மனித உரிமை ஆர்வாளர்கள் மத்தியிலும் தீவிரமாக விவாதிக்கப்படுவது, ஈழத் தமிழர்கள் மீது இலங்கை சிங்கள அரசு நடத்திய கொடிய ஒரு போர் பற்றியது. அந்த இனவாதப் போரில் மானுடத்திற்கு எதிரான குற்றங்களும், ஜெனிவா ஒப்பந்தத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட போர் விதிகளை மீறிய குற்றங்களும் இப்போது ஆதாரபூர்வமாக பட்டியலிடப்படுகின்றன. ஜெனிவா ஒப்பந்தத்தை மீறும் குற்றங்களுக்கு, போர்க் குற்றங்கள் என்று பெயர். அத்தகைய போர்க் குற்றங்களை நடத்திய பொறுப்பாளர்கள், தலைவர்கள், அரசாங்கம் ஆகியவை இங்கே குற்றம் சாட்டப்படுகின்றன.
சூடான் அதிபர் பஷீருக்கு எப்படி அனைத்து நாட்டு குற்றவியல் நீதிமன்றம், விசாரித்து தண்டனை வழங்குவதற்காக, கைது வாரண்டை பிறப்பித்தது போல, இலங்கையில் நடந்த போர்க் குற்றங்களுக்கும், இன அழிப்புக்கும் உரிய தண்டனையை, சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் பெறவேண்டும் என்பதே, தமிழ் கூறும் நல்லுலகின் எதிர்பார்ப்பு.

கருணாநிதி வழுக்கி, வழுக்கி விழுகிறாரா?

ஈழத்தமிழர் விவகாரம் அதீதமாக தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் எதிரொலிக்க தொடங்கியதிலிருந்து, கருணாநிதி தொடந்து அதை பிடித்து மேலே ஏற முயல்வார்; வழுக்கி விழுவார்; என்பதாக ஒரு கதை அரங்கேறி வருகிறது. ஈழப்போர் நடந்தபோதும், நின்ற போதும், அது கணக்கு பார்க்கப்ப்படும்போதும், முள்ளிவாய்கால் ஆனாலும், முள்வேலிமுகாம் ஆனாலும், ஐ.நா. சபை ஆனாலும், போர்குற்றம் ஆனாலும், மீனவர் சாவு ஆனாலும், கருணாநிதி தொடர்ந்து தமிழர் தலைவராக ஆவதற்கு முயல்வார், மீண்டும், மீண்டும், விழுவார் என்பதாக வரலாறு எழுதப்பட்டு விட்டது. முதலில் வன்னிப்போர் காலம் கருணாநிதி கூட்டணி தலைமையான காங்கிரசை ஆதரிக்கவேண்டிய கட்டாய நிலைமை. தமிழ், தமிழர் என்பதை விட கூட்டணி, அதை காப்பாற்றினால்தான் வீட்டணி என்ற நிலைமை அவருக்கு. இந்திய அரசோ தனது பண்புகளின்படி எந்த ஒரு தேசிய இனத்தையும் ஆதரிக்கமுடியாத நிலைமை. ஏற்கனவே காஷ்மீரால், நாகாவால், அஸ்ஸாமால்,மிசோரத்தால், சீக்கியரால், தனது இறுப்புக்கே ஆபத்து விளையுமென இந்திய அரசு அஞ்சிக்கொண்டிருக்கும் நேரத்தில், தமிழ் இனம் தனது தேசிய அடையாளத்தை நிறுவிக்கொள்ள முன்வந்தால் எப்படி இந்திய அரசு அதை ஏற்றுக்கொள்ள முடியும்?
தற்காலிகமாக ஒரு வங்காள தேசத்தை, பாகிஸ்தானை பிரிப்பதற்காக இந்திய அரசு ஆதரிக்கலாம். தற்க்காலிகமாக ஒரு இலங்கையை தன் கைக்குள் வைத்து கொள்வதற்காக ஈழத்தமிழருக்கு ஆயுதம் கொடுக்கலாம், பயிற்சி கொடுக்கலாம். அதற்காக ஈழத்தின் விடுதலையை, அருகே இருக்கும் இந்திய பேரரசு ஏற்றுக்கொள்ளமுடியுமா என்ன? அதனால் அங்கெ ஈழத்தில் விடுதலை பெரும் நிலைக்கு தமிழர்கள் செல்வார்கள் என்றால், வல்லாண்மை குணம் கொண்ட இந்திய அரசு அதை ஒடுக்கியே ஆகவேண்டும் என்பதுதானே அவர்களது சிந்தனையாக இருக்கமுடியும்? அதுதானே அமெரிக்கா இந்திய அரசிடம் விரும்புவதும்? ஆகவே இந்திய அரசு தெளிவாக ராஜபக்சே ஆதரவு நிலைப்பாட்டை ஏற்கனவே எடுத்து விட்டது. இதை உணராமல் என்றுமே கருணாநிதி அரசியல் நடத்தவில்லை. அதனால் இந்த ஈழத்தமிழர் விசயத்தில், கருணாநிதி தொடக்கம் முதலே மத்திய அரசின் நிலைப்பாட்டை அறிந்தே வைத்திருந்தார் என்பதும், அதை ஆதரித்தே வந்தார் என்பதும் கவனிக்கப்படவேண்டும். அதை அவ்வப்போது கருணாநிதியே சொல்லியும் வந்தார். தமிழ்நாட்டு அரசின் நிலைப்பாடு, மத்திய அரசின் நிலைப்பாடுதான் என்று அவ்வப்போது இலங்கை தமிழர் பற்றிய நிலையில் கூறிவந்துள்ளார்.
அவரது எதிர்ப்பார்ப்புக்கு மீறி ஈழத்தமிழர் போர் சென்றுவிட்டது. அதாவது எம்.ஜி.ஆர். காலத்தில், அவர் புலிகளுக்கு ஆதரவானவர் என்று பெயர் பெற்று இருந்தார். அதாவது எம்.ஜி.ஆர்.தான் பிரபாகரனுக்கு நெருக்கம் என்பதாகவும், எம்.ஜி.ஆர்.தான் புலிகளுக்கு பணம் கொடுத்தார் என்பதாகவும், ஒரு கருத்து இருக்கிறது. சமீபத்தில்கூட, யாழ்ப்பணத்தில், பிரபாகரனின் சொந்த ஊரான வல்வெட்டித்துறையில், இருந்த எம்.ஜி.ஆர். சிலையை, சிங்கள ராணுவத்தினர் இந்த கைதானே புலிகளுக்கு பணம் கொடுத்தது என்று கூறி, எம்.ஜி.ஆர்.சிலையின் கையை வெட்டினார்கள் என்பதாக கூறுகிறார்கள். அதேபோல ஜெயலலிதா ராஜபக்சே எதிர்ப்பு அறிக்கை விட்டதற்காக, அதே ராணுவத்தினர் எம்.ஜி.ஆர். சிலையை முழுமையாக உடைத்தனர் என்றும் கூறுகிறார்கள். இவ்வாறு தமிழ் கூறும் நல்லுலகம் முழுவதும் பிரபாகரன், எம்.ஜி.ஆருக்கு வேண்டியவர் என்ற கருத்து இருக்கிறது. அப்படியானால் கருணாநிதி இதை எப்படி பொறுத்துக்கொள்ள முடியும்? அன்றே எம்.ஜி.ஆர். இருக்கும்போதே கருணாநிதி, டெலோ தலைவராக இருந்த ஸ்ரீ சபாரத்தினத்திற்கு நெருக்கமானவர் என்பது ஒரு உண்மை. அப்போது டெலோ என்ற அமைப்பை ஆரம்பிக்க ரா என்ற இந்திய வெளிவிவகாரதுறையின் உளவு அமைப்பு முழுமையாக உதவியது என்பதும் வரலாறு. அகவே டெலோவையும்,ஸ்ரீ சபாரத்தினத்தையும், புலிகள் அழிக்கும்போது அது எம்.ஜி.ஆர். ஆட்கள், தனது ஆட்களை அழித்தார்கள் என்பதாக கருணாநிதி எடுத்துக்கொள்வார் அல்லது எடுத்துக்கொண்டார் என்பது சிதம்பர ரகசியம் அல்ல. அதே சமயம் அதை பகிரங்கமாக கருணாநிதியால் சொல்லமுடியவில்லை. காரணம் டெலோ அமைப்பு மத்திய அரசுக்கு வேண்டிய ஒன்று என்பது அனைவருக்கும் தெரிந்திருந்தது. அதேசமயம் பிளாட் தலைவர் உமா மகேஸ்வரன் கொல்லப்பட்டபோது, கொன்றது ரா அமைப்பின் நெடுங்காலத்திட்டம் என்று தெரியாத கருணாநிதி, உமாவை கொன்றது புலிகள் என்று எண்ணி தனது அறிவாலய வளாகத்திலேயே ஒரு கண்டனக்கூட்டத்தை நடத்தினார். புலிகளுக்கு எதிராக செயல்படுவதாக எண்ணி, உமா சார்பாக அதிக எண்ணிக்கையில் ஆதரவாளர்கள் இருக்கிறார்கள் என்ற புரிதலில், அந்த கூட்டத்தை கருணாநிதி ஏற்பாடு செய்தார். இவ்வாறு தொடக்கம் முதலே புலிகளை தனக்கு எதிரான அமைப்பாக் எண்ணி வளர்ந்தவர் கருணாநிதி.
நாலாவது வன்னிப்போர் நேரம்.இங்கே ஒரு இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் தோன்றி கூட்டங்கள் போடத்தொடங்கியது. அதுவும்கூட, தன்னை ஈழத்தமிழர் என்ற பெயருடன் வெளிவரத்தயாராய் இல்லை. அதற்கு என்ன அரசியல் காரணமோ தெரியவில்லை. எல்லாம் தமிழ்நாட்டில் நாடாளுமன்ற அரசியல் விளையாட்டு. அவர்கள் நடத்திய கூட்டங்களுக்கு, தமிழ் நாட்டு மக்களது கவனம் செல்லத்தொடங்கியது. ஏன் என்றால் அதுமட்டுமே ஈழத்தமிழர் பற்றி பேசியது. கருணாநிதி சிந்தித்தார். மருத்துவமனையில் படுக்கையில் படுத்தபடி சிந்தித்தார். ஒரு புதிய மைப்பை உருவாக்க திட்டமிட்டார். இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்திற்கு எதிராக ஒரு புதிய அமைப்பை உருவாக்க சிந்தித்தார். சுப. வீரபாண்டியனை கூப்பிட்டு பேசினார். அவரோ காங்கிரசுடன் சேர்ந்து ஈழத்தமிழருக்காக அமைப்பை உருவாக்குவதில் உடன்படவில்லை. ஆனாலும் கருணாநிதி முடிவு செய்தார். ஒரு அமைப்பு உருவானது. இலங்கை தமிழர் நல உரிமை பேரவை என்று அதற்கு பெயர் வைத்தார். அதுவும் ஈழத்தமிழர் என்ற பெயரை மறைத்து எழுப்பப்படும் அமைப்பே. காங்கிரசு கட்சியுடன் கூட்டணியில் இருந்துகொண்டு ஈழத்தமிழர் என்று இந்திய அரசு நடத்தும் நாலாவது வன்னிப்போர் காலத்தில், கருணாநிதி ஒரு அமைப்பை நடத்த முடியுமா? அதனால்தான் அது இலங்கை தமிழர் என்று ஆனது. இரண்டு பக்கமும், ஈழத்தமிழர் இல்லாமல் போயினர். இலங்கை தமிழர் என்றால், இந்திய வம்சாவழியான, மலையக தமிழரா? அல்லது இங்கிருந்து சென்ற தமிழ் பேசும் முஸ்லிம்களா? அல்லது ஈழத்தமிழர் என்ற பெயரை தாங்கியுள்ள வடக்கு, கிழக்கு மாகாண தமிழரா? என்று யாரும் குழம்ப வேண்டாம். அந்த வார்த்தைதான் இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டில் இந்திய இறையாண்மைக்கு கட்டுப்படும் தமிழர் என்பதை நிரூபித்துக்கொண்டே, புரட்சி பேசுவதற்கு லாயக்கான வார்த்தைகள். ஆகவே இங்குள்ள நாடாளுமன்ற கட்சிகள் இலங்கை தமிழர் என்ற பெயரில், போராடும் ஈழத்தமிழருக்கு ஆதரவு என்று இங்கே அரசியல் நடத்தவே விரும்பினார்கள்; விரும்புகிறார்கள் எண்பது கண்கூடு. ஆகவே கருணாநிதியும் தனது தி.மு.க. கட்சியின் செயற்குழுவை கூட்டி, 2009 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தீர்மானம் போட்டு, அதன்மூலம் இலங்கை தமிழர் நல உரிமை பேரவை என்ற அமைப்பை தொடங்கினார். அதில் தி.மு.க., தி.க., காங்கிரசு, த.மு.மு.க. ஆகிய அன்றைய தனது கூட்டணி கட்சிகளை சேர்த்து கொண்டார். அதாவது பச்சையாக தேர்தலுக்காக இந்த அமைப்பை ஒரு கூட்டணி அமைப்பாக உருவாக்கினார் என்பது தெரிந்தது.
ஈழத்தமிழர் பிரச்சனை நாடாளுமன்ற தேர்தல் முடிவை பாதிக்கும் என்று அனைவரும் அல்லது கருணாநிதியை எதிர்த்தவர்கள் எண்ணினார்கள். காங்கிரசு கட்சிதான் ஈழத்தமிழரை போரின் மூலம் கொல்லுவதற்கு துணை செல்கிறது என்பதை உலகமே புரிந்திருந்தது. அதை ஒட்டி, காங்கிரசு கட்சியின் கூட்டணிக்கு எதிராக தமிழ் நாட்டு மக்கள் வாக்களிப்பார்கள் என்று எல்லோரும் அல்லது எதிர்கருத்தாளர்கள் எண்ணினார்கள். ஆனால் தமிழ்நாடு மக்கள் அப்படி எண்ணவில்லை. அதற்கு காரணம் கருணாநிதி எடுத்த இந்த தந்திரம் தான். அதாவது ஈழத்தமிழருக்காக பேசுவதில், நெடுமாறன் தலைமையிலான இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தை போலவே, கருணாநிதியின் இலங்கை தமிழர் நல உரிமை பேரவையும் கூட்டம் போட்டு பேசத்தொடங்கியது. அதில் காங்கிரசுகாரர்களும் பேசினார்கள். அவர்களும் ஈழத்தமிழருக்கு ஆதரவாக பேசினார்கள். அதற்கு தி.மு.க. மேடை போட்டு கொடுத்தது. அதில்கூட த.மு.மு.க. தலைவர் பேரா.ஜவாஹிருல்லாஹ் பேசிய அளவுக்கு கூட யாரும் பேசவில்லை. ஜவாஹிருல்லாஹ் மத்திய அரசு இலங்கை அதிபர் ஆட்சிக்கு செய்துவரும் ஆயுத உதவி பற்றி வெள்ளை அறிக்கையை வைக்க வேண்டும் என பேசினார். இதுபோன்ற பேச்சுக்கள் கருணாநிதி குடும்பம் கையில் உள்ள சன்டி.வீ.யிலும், கலைஞர் டி.வீ.யிலும், தொடந்து காட்டப்பட்டது. மானாட மயிலாட, தொடர் நாடகங்கள், சினிமா பாட்டுகள், மற்றும் செய்திகளை இந்த இரண்டு தொலைக்காட்சியிலும்தான் தமிழ் நாட்டு மக்கள் பார்க்கிறார்கள். அப்போது அவர்கள் கருணாநிதி நடத்தும் இலங்கை தமிழர் நல உரிமை பேரவை கூட்டங்களையும் பார்கிறார்கள். அதுமட்டுமல்ல. தனது அமைப்புமூலம் கருணாநிதி இலங்கை தமிழருக்காக எல்லா மாவட்டங்களிலும் ஊர்வலங்கள் நடத்தி காட்டினார். அது எதிர் தரப்பினர் செய்துவந்த கூட்டங்களை விட அதிக கூட்டத்தை காட்டியது. அதை அவர்களது தொலைக்காட்சிகளும் காட்டின. அதைத்தான் பெருவாரியான தமிழ்நாட்டு மக்கள் பார்த்தார்கள். அப்படியானால் அவர்களுக்கு எப்படி கருணாநிதியின் கூட்டணி ஈழத்தமிழருக்கு எதிரானது என்ற சிந்தனை அந்த தேர்தல் நேரத்தில் வந்திருக்கும்? வரவில்லை. மாறாக ஈழத்தமிழர் பிரச்சனை தேர்தல் பிரச்சனையாக தமிழ் நாட்டு மக்களால் பார்க்கப்படவில்லை. அதற்கு தமிழ் மக்கள் உணர்வற்றவர்கள் என்று பொருள் அல்ல. அவர்கள் இரண்டு குழுக்களுமே ஈழத்தமிழருக்காக குரல் கொடுப்பவர்கள் என்பதாக இந்த நாடகம் நம்ப வைத்தது அதனால் ஈழம் தேர்தல் விவாதமாக பின்தங்கிய மக்கள் மத்தியில் இல்லை. அதனால் மீண்டும் கருணாநிதி தரப்பு வென்றது.
ஆனால் நாலாவது வன்னிப்போர் தமிழருக்கு ஒரு தற்காலிக தோல்வியை ஏற்படுத்திய பிறகு, விடுதலை புலிகள் அழிக்கப்பட்டதாக அரசு தரப்பு அறிவித்தபிறகு நேற்றுவரை போரை நிறுத்த முயற்ச்சித்ததாக கருணாநிதி நடித்து வந்ததை தமிழர்கள் சந்தேகப்படத்தொடங்கி விட்டார்கள். அந்நேரம்பார்த்து புலம் பெயர்ந்த தமிழர் மத்தியில் குறிப்பாக ஈழத்தமிழர் மத்தியில் கருணாநிதி ஒரு இனத்துரோகி என்ற சொற்றொடர் பிரபலமாகத்தொடன்கியது. ஏனென்றால் தமிழ்நாடு உட்பட உலகம் எங்கும் பிரபாகரனை தமிழர் தலைவராக என்றுக்கொண்டார்களே தவிர கருணாநிதியை ஒருநாளும் ஏற்றுக்கொள்ளவில்லை. அதுவே இவர் பற்றிய துரோகி பெயர் வலுவாக உதவியது. அதை எப்படியாவது துடைக்க எண்ணிய கருணாநிதி அடுத்த சதியில் இறங்கினார். அதுதான் முதலில், 2010 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கோவையில் உலக தமிழர் மாநாடு என்று அறிவித்தார். உடனே ஜெயலலிதா தமிழ் ஆராய்ச்சி இல்லாமல் உலக தமிழர் மாநாடா என்றவுடன், தமிழ் ஆராய்ச்சியாளர்களை தொடர்பு கொண்டார். எல்லோரும் கை விட்டுவிடவே, உலக தமிழ் செம்மொழி மாநாடு என்ற புது பெயரில் மாநாடு அறிவித்தார். அதுவும் புலம் பெயர் தமிழர்களால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ஆனாலும் அதை பயங்கர அளவில் செலவு செய்து, ஐந்து நாட்கள் திருவிழா போல நடத்திவிட்டார். துரோகி பட்டத்தை இதன்மூலம் துடைத்துவிட்டோம் என எண்ணி அவர் மகிழ்ந்து வந்த நேரத்தில், ஜெயலலிதா ஒரு அறிக்கை விட்டார். அது இவரை போர்க்குற்றவாளி என முத்திரை குத்தியது. அதில் மீண்டும் கருணாநிதி உடைந்து போனார். இது எதிர்பாராத தாக்குதலாக அவருக்கு ஆகியது. உலகத்தமிழர் மத்தியிலும் கருணாநிதியை தாக்குவதற்கு ஒரு புதிய ஆயுதம் கிடைத்துவிட்டது. போர்க்குற்றவாளி என்ற சொல் உள்ளபடியே கருணாநிதிக்கு வழக்கையிலேயே கிடைக்காத கிடைக்கமுடியாத ஒரு சொல். அது அழகாகவே இருக்கிறது. இந்தநாள்வரை தமிழுக்காகவும், தமிழருக்காகவும் வாழ்ந்ததாக உரக்க கூவி வந்த ஒரு தலைவருக்கு, அவரது வாழ்நாள் காலத்திலேயே எண்பத்து ஏழு அகவையில், இப்படி ஒரு அவப்பெயர் என்றால் அது ஒரு சரித்திர நிகழ்வாக ஆகிவிட்டது.
வரலாற்றில் தமிழ் பயிற்று மொழிக்காக செவி மடுக்காத ஒரு தலைவர் தனது கடைசி காலத்தில் தன் மீது விழுந்த துரோகி பட்டம் நீங்குவதற்காக தமிழ் பயிற்றுமொழியை, பொறியியலுக்கும், அடுத்து மருத்துவத்திற்கும் கொண்டுவர எடுக்கும் முயற்சி உள்ளபடியே நல்ல முயற்சி ஆனாலும் அதன் பலனை அவர் பெறமுடியாமல், மீண்டும் ஒரு முத்திரை அதாவது போர்க்குற்றவாளி முத்திரை விழுந்துவிட்டது. அதை திசை திருப்ப இன்னொரு முயற்ச்சியை கருணாநிதி செய்தார். அதுதான் மீனவர் ஒருவர் வேதாரண்யத்தில் சிங்கள கப்பல்படையினால் அடித்து கொல்லப்பட்டபோது, உடனே தனது கட்சியின் மீனவர் அணி மூலம், ஒரு ஆர்ப்பாட்டத்தை இலங்கை தூதரகம் முன்பு நடத்த வைத்தார். அது ஒரு திசை திருப்பும் முயற்ச்சியாக அவர் எண்ணி செய்தார். ஆனால் அதிலும் மீண்டும் தோற்றுபோனார். ஏன் என்றால் அதே நேரம் சீமான் சிங்கள அரசுக்கு எதிராக ஐ.நா. சபையின் போர்க்குற்ற விசாரணைக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்த, அதில் சீமான் சிங்களரை கொல்லவேண்டும் எனக்கூறியதாக கைது செய்யப்பட, அதுவே கருணாநிதியின் அடுத்த தமிழ் முகமூடியையும் கிழித்து விட்டது. சீமானை இப்போது தேசிய பாதுகாப்புசட்டத்தின் கீழ் கருணாநிதியால் .அடைத்துள்ளார்.அதன்மூலம் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு கருப்பு சட்டங்களை கருணாநிதி தமிழர் உணர்வுகளுக்கு எதிராக பயன்படுத்துகிறார் என்பது அம்பலமாகி உள்ளது.இவ்வாறு நாளுக்கு நாள் தான் எடுக்கும் ஒவ்வொரு தந்திரமுயற்ச்சியிலும் கருணாநிதி தோற்று வருவது இன்றைய தமிழ்நாட்டு அரசியலாக இருக்கிறது.