சிறப்புக் கட்டுரை: டிரம்பின் தோல்வி, மோடியின் தோல்வியா?
T.S.S. மணி
அமெரிக்க 46ஆவது ஜனாதிபதி தேர்தலில், குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் தோல்வியடைந்தார். அது இந்தியத் தலைமை அமைச்சராக இருக்கும் நரேந்திர தாமோதர் மோடியின் தோல்வி என எப்படிக் கூறுகிறோம்?
கடந்த ஆண்டான 2019இல், அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில், ஹூஸ்டன் நகரில், இந்திய - அமெரிக்கர்கள் 50,000 பேரை ஒரே மண்டபத்தில் கூட்டி, மேடையில் மோடியும்,டொனால்டு டிரம்பும் மாத்திரமே காட்சி தர அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கான சொற்பொழிவை அப்போது அமெரிக்கப் பயணம் மேற்கொண்டிருந்த மோடி நிகழ்த்தினார்.
அந்த மேடையில், 2020 அதிபர் தேர்தலுக்கான வேட்பாளராகக் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டொனால்டு டிரம்பை மோடி அறிமுகப்படுத்தும் விதமாக, வருகிற 2020 தேர்தலில் அமெரிக்காவில் டிரம்ப்தான் வெற்றி பெறுவார் என்று திருவாய் மலர்ந்தார். ஒரு நாட்டின் பிரதமர், அடுத்த நாட்டில் வரப்போகிற தேர்தலில் , இன்னார்தான் வெற்றி பெறுவார் என்று அந்த நாட்டுக்கே சென்று பேசுவது முறையா ? சரியா? அமெரிக்க நாட்டு சட்டங்கள் ஒப்புக்கொள்ளுமா? இந்திய நாட்டு வெளிவிவகாரக் கொள்கைக்கு அது பொருந்துமா? உலகம் சிரிக்காதா? அது என்ன ஆரூடம் கூறும் வேலையா?
இதுபோன்ற கேள்விகளைச் சிறிய ஊடகங்களில் நாம் பகர்ந்தாலும், பெரிய ஊடகங்களிலோ, எதிர்க்கட்சி வரிசையிலோ பெரிதுபடுத்தவில்லை. காரணம், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மீது அத்தனை பயம்! அதனாலேயே அவர் மீது இனம் புரியாத பாசம். இத்தகைய பயம் கலந்த பாசத்தின் வேஷங்கள் இப்போதும் அந்த கொடுமையான ஹூஸ்டன் விழாவைப்பற்றி வாய் திறக்க தயங்குவார்கள். அதுகூட மோடி மீதான யு.பி.ஏ. பயமா எனத் தெரியவில்லை.
அந்த ஹூஸ்டன் நிகழ்ச்சி எப்படி இருந்தது? ஒருபுறம் வேட்பாளர் டிரம்ப் நிற்க, இன்னொரு எல்லையில் அதே மேடையில் வேட்பாளரை அறிமுகப்படுத்த வெளிநாட்டிலிருந்து அழைத்து வரப்பட்ட இந்தியப் பிரதமர் மோடி நிற்கிறார். இப்படித்தானே, செல்வி ஜெயலலிதா அஇஅதிமுக தலைவியாக தேர்தல் கால மேடைகளில் ஒருபுறம் நிற்க, மேடையின் இன்னொரு மூலையில் அந்தத் தொகுதி வேட்பாளர் கைகளைக் குவித்த வண்ணம் கால்கடுக்க, பயபக்தியுடன், உடல் நெளிய நின்று கொண்டே இருப்பார் அதேபோலத்தான், ஹூஸ்டன் நகர அமெரிக்க வாழ் இந்தியர்களின் அபரிமிதமான கூட்டத்திலும், மோடி ஒரு புறம் நிற்க, டிரம்ப் ஒரு மூலையில் நின்று கொண்டிருந்தார். அந்த டிரம்பின் உடல்மொழி எப்படி இருந்தது? மாட்டுக்கார வேலன் திரைப்படத்தில் வரும் இரண்டாவது எம்.ஜி.ஆர். போல, வெட்கப்பட்டவராக, உடலை நெளிந்து, நெளிந்து அசைந்து நிற்பவராக டிரம்ப் நின்றுகொண்டிருந்தார். இத்தகைய ஒரு விழா சரிதானா என்ற கேள்வி ஒருபுறம். இது இந்திய நாட்டுக்கே அவமானமல்லவா என்ற பேச்சு டெல்லி அதிகார மட்டத்தில் எதிரொலித்ததாம். சரி.
அப்போது, டிரம்ப் மீண்டும் 2020 ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவார் என மோடி அறிவித்த ஆரூடம் இன்று பொய்த்து விட்டதே! இனி எந்த முகத்தை வைத்துக்கொண்டு, அமெரிக்காவின் புதிய தலைவர்கள் முகத்தில் முழிக்கப்போகிறோம் என்று மானமுள்ள இந்தியனாக நாம் வேண்டுமானால் நினைக்கலாம். ஆனால் அரசியல்வாதிகளுக்கு அந்தக் கவலையெல்லாம் இல்லை என்பதுபோல, இந்தியத் தலைமையமைச்சர் அலுவலகத்திலிருந்து, அமெரிக்கத் தேர்தல் முடிவு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படுவதற்கு முன்பே ஜோ பிடெனுக்கு வாழ்த்துகள் பறந்து விட்டன.
அதுமட்டுமின்றி, 2020ஆம் ஆண்டு தொடக்கத்திலேயே, பிப்ரவரி 24இல், அமெரிக்க அதிபர் டிரம்பை குடும்பத்துடன் அழைத்து வந்து, மிகுந்த பொருட்செலவில், குஜராத்தில் ஒரு லட்சம் மக்கள் மத்தியில் அறிமுகப்படுத்தி உரை நிகழ்த்த வைத்த முயற்சி, 2020 நவம்பர் அமெரிக்கத் தேர்தலுக்கு, ‘முன்பரப்புரை’ கூட்டமில்லையா? அதில் டிரம்பை கதாநாயகனாக சித்திரித்து செய்த வேலை தேர்தலுக்கான அமெரிக்க - இந்தியர்களது வாக்குகளைக் கவருவதற்காக இல்லையா? அதன் காரணமாகவே, ஜனவரி மாதம் முதல் இந்தியாவில் தொடங்கியிருக்க வேண்டிய, ‘கோவிட் எதிர்ப்பு தவிர்ப்பு நடவடிக்கை’ மார்ச் மாதத்துக்குத் தள்ளிப் போடப்பட்டது என்ற எதிர்க்கட்சி குற்றச்சாட்டு எழுந்ததே!
டெல்லியில், ஷாஜன்பக் சி.ஏ.ஏ. எதிர்ப்பு மக்கள் திரள் கூடலில், கூட்டத்தை மத மோதலுக்குப் பயன்படுத்த சில வெளி ஆட்கள் வன்முறையைத் தூண்டியபோது அவர்களைக் கவனிக்க முடியாமல், டிரம்ப் பாதுகாப்புப் பணியில் கவனமாக இருந்து விட்டது டெல்லி மாநகரக் காவல்துறை என்ற விமர்சனம் எழவில்லையா?
அந்த அளவுக்கு, டிரம்பின் தேர்தல் வெற்றிக்காக உழைத்த இந்தியப் பிரதமர் அலுவலகம் அந்த முயற்சிகளில் வெற்றி பெறவில்லையே... அடுத்த நாட்டுத் தேர்தலில், யாரை வெற்றி பெற வைக்க வேண்டும் என்பது இந்தியாவுக்குத் தேவையான ஒன்றா?
சென்ற முறை இதே குடியரசுக் கட்சி வேட்பாளர் டிரம்ப், ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனை எதிர்த்து நிற்கும்போது, ரஷ்ய உளவுத்துறையான கே.ஜி.பி. டிரம்பிற்காக வேலை செய்தது என்று அமெரிக்க உளவு நிறுவனமான எஃப்.பி.ஐ. குற்றம் சாட்டியது. இந்த முறை அமெரிக்கத் தேர்தலிலும் ரஷ்யா பற்றி இதே குற்றச்சாட்டு வந்தது. டிரம்ப் கூட சீனா தனக்கு எதிராக தேர்தலில் தலையிடுகிறது என்று குற்றம் சாட்டினார்.
அவையெல்லாமே மறைமுகமாக நடைபெற்றதாக வந்த குற்றச்சாட்டுகள். ஆனால் இந்தியா , 2020 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் அத்தனை பகிரங்கமாகத் தலையிட்டு, பரப்புரை செய்து, தனது முயற்சியில் மண்ணைக் கவ்வியதால், இது மோடியின் தோல்விதானே!