Thursday, October 16, 2014

பீ யு சி எல் சென்னையில் மாநகர மாவட்டமாக உதித்துள்ளது.----------------------------------------------------------------------------------------------
    2012 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒன்றாம் நாள் நீண்ட இடைவெளிக்கு பிறகு, நீண்ட போராட்டங்களுக்கு பிறகு, பீ.யு.சி.எல் தனது மாவட்ட குழுவை கட்டியது. அதுவும் காஞ்சி-திருவள்ளூர் மாவட்டங்களுடன் சேர்ந்துதான் உருவாக்கியது. காஞ்சிபுரம் மாவட்ட தோழர்களது உழைப்பு அந்த மாவட்ட குழுவின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியது. சென்னை- காஞ்சி-திருவள்ளூர் மாவட்ட குழு என்றே அது அழைக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளாக அதன் செயல்பாடு தமிழ்நாட்டில் ஒரு புதிய, முன்மாதிரியை ஏற்படுத்தியது. ஒவ்வொரு மாதமும் இரண்டு முக்கிய விசயங்கள் மீது, இரண்டு சனிக்கிழமைகளில் விவாதம் என்பதாக, நாற்பதுக்கு மேற்பட்ட  கலந்துரையாடல் விவாதங்கள்  நடந்தன. இருபதுக்கு மேற்பட்ட நிகழ்வுகள் கட்டமைக்கப்பட்டன. ஆர்ப்பாட்டங்கள், அறைக்கூட்டங்கள், உண்மையறியும் குழுக்கள், ஊடக நிகழ்வுகள், துண்டறிக்கைகள், சுவரொட்டிகள், என பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்பட்டன. மாநில மாநாடு தூத்துக்குடியில் நடந்த பிறகு காஞ்சிபுரம் மாவட்டம் தனித்து செயல்பட முயற்சிகள் ஈடேறின. பல்வேறு மக்கள் இயக்கங்களின் நீரோட்டங்களை உள்ளடக்கிய காஞ்சி மாவட்டம், திருவள்ளூர் உடன் சேர்ந்து, காஞ்சி-திருவள்ளூர் மாவட்ட குழுவாக உருவானது.

              இப்போது சென்னை மாநகர் மாவட்டம் தனித்து ஒரு மாவட்ட மைப்பை உருவாக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுவிட்டது. அதற்கான உறுப்பினர் கூட்டம் அக்டோபர் 11 இல் கூடியது. அதில் 13 பேர் கொண்ட மாநகர் மாவட்ட குழு ஏற்படுத்தப்பட்டது.தலைவராக பேராசிரியர்.சங்கரலிங்கம், செயலாளராக டி.எஸ்.எஸ்.மணி, பொருளாளராக பேரா.பிரான்சிஸ், துணை தலைவர்களாக பேரா.சுதிர், வழக்கறிஞர் கிருஷ்ணசாமி, இணை செயலாளர்களாக முகேஷ், ஆவின்பாபு, ஆகியோரும், மாவட்ட குழு உறுப்பினர்களாக ஓவியா, எஸ்.நடராசன், கெத்சி,மேரி லில்லி பாய், பானு,பிருத்வி  ஆகியோர் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர். இதில் பேராசிரியர்கள், ஊடகதார்கள், தவிர வழகக்றிஞர் கிருஷ்ணசாமி நகசல்பாரி இயக்கத்தில் "தூக்கு தண்டனை" பெற்றவர் என்பதும்,. ஒவ்வியா-பெண்ணுரிமை எழுத்தாளர் என்பதும், எஸ்.நடராசன்- பீ.&சி ஆலை தொழிற்சங்க தலைவர் என்பதும், பானு-திருநங்கைகளின் தலைவர் என்பதும், கெத்சி-அமைப்பு சாரா தொழிலாளர் சங்க தலைவர் என்பதும், மேரி லில்லி பாய் -பீ.எஸ்.என்.எல்.தொழிற்சங்க தலைவர் என்பதும்,ஆவின்பாபு-மீனவர்சங்க தலைவர் என்பதும், பிருத்வி-சட்டக் கல்லூரி மாணவர் தலைவர் எனபதும் சிறப்பு அம்சங்கள்.

           மேற்கண்ட சிறுப்பு அம்சங்களைக் கொண்ட சென்னை மாநகர் மாவட்ட குழு சிறப்பாக இயங்க வாழ்த்துக்கள்.

Sunday, August 17, 2014

நாம் ஒருசார்பாய் செய்தி கூறினால் யாருக்கு நட்டம்?

நாம் ஒருசார்பாய் செய்தி கூறினால் யாருக்கு நட்டம்?
-----------------------------------------------------------------------------------
   பாலஸ்தீனம் பற்றி எரிகிறது. இஸ்ரேலிய யூத வெறி குண்டுமாரி பொழிகிறது. நாம் கவலை கொள்கிறோம். கண்டனம் செய்கிறோம். இந்திய அரசு கண்டனம் செய்யவேண்டுமே  என்று குரல் எழுப்புகிறோம். சுஷ்மா ஸ்வராஜ் நாடாளுமன்றத்தில் நடந்துகொண்ட முறை, யூத வெறியர்களுக்கு ஆதரவானது என்பதை குற்றம் சாட்டுகிறோம். எல்லாம் சரி. பி.யு.சி.எல். ஒரு கூட்டம் நடத்தியது. அதில் வழக்கறிஞர் நாகசைலா ஒரு செய்தியை கூறினார். காசா பகுதியின் கடலோரம் கிடைக்கும் எரிவாயுவை எடுக்க "இங்கிலாந்து எரிவாயு நிறுவனம்" முதலில் ஹமாஸுடன் ஒப்பந்தம் போட்டிருந்தது. பிறகு இஸ்ரேல் அதை முறியடிக்க எண்ணி, காசா மீது "பொருளாதார தடை"யையும், இங்கிலாந்து நிறுவனத்துடன் தான் ஒரு ஒப்பந்தத்தையும் போட்டது. அதே இங்கிலாந்து நிறுவனம் நமது அம்பானியின் ரிலையனசுடன் சேர்ந்து, எரிவாயு ஒப்பந்தத்தை இந்தியாவில் போட்டுள்ளது. இந்திய அரசை எதிர்த்தே ஒரு வழக்கை உலக அரங்கில் இரண்டு நிறுவனங்களும் சேர்ந்து நடத்துகிறது. அதனாலோ என்னவோ, சுஷ்மா இந்த நிலைப்பாட்டை எடுத்தார் என்றார்.

      அதே சமயம் நாம் ஒன்றை மறக்கவோ, மறுக்கவோ,மறைக்கவோ  முடியாது. அதாவது தலைமை அமைச்சர் மோடி, பிரிக்ஸ் மாநட்டில் இஸ்ரேலை கண்டிக்கும்தீர்மானதில் கையெழுத்திட்டார். அது மட்டுமா? ஐ.நா. மனித உரிமை கழகத்தில், வாக்கெடுப்பில், இஸ்ரேலை கண்டிக்கும் தீர்மானத்தை எதிர்த்து, அமெரிக்க ஒற்றை வாக்கை போட்டபோது, ஐரோப்பிய நாடுகள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் ஓடிய போது,இந்தியா வாக்கெடுப்பை ஆதரித்து நரேந்திர மோடியின் வழிகாட்டலில்,வாக்களித்தது. அதை அடுத்து, ஐ.நா. காசாவில் நடக்கும் போற்குற்றன்களை விசாரிக்க ஒரு மூவர் குழுவை அறிவிக்கும் போது, அதற்கு ஆதரவாக இந்தியா பிரதமரின்  வழிகாட்டலில் வாக்களித்துள்ளது. இவை பாராட்டப்பட வேண்டிய செய்திகள். மோடிக்கும், சுஷ்மாவிற்கும் உள்ள முரண்பாடு என்ற அரசியல் வேறு.செய்தி. ஆனால் நமக்கு இந்திய அரசு இஸ்ரேலின் தாக்குதல்களை எதிர்த்து , போர்குற்றங்களை அம்பலப்படுத்த வேண்டும் என்பதே நோக்கம். இன்னமும் கூறப்போனால், ஈழத் தமிழர் விசயத்தில், இந்த நிலையை எடுக்காத மோடி அரசு, பாலஸ்தீன விசயத்தில் எடுத்துள்ளது. அதே சமயம் அரபு நாடுகள் மவுனம் சாதிப்பதன் மூலம் இஸ்ரேலின் தாக்குதலுக்கு துணை போகின்றன. இந்த உண்மைகளையும் சேர்த்து நாம் பார்த்தால்  மட்டும்தான் நமக்கு பாலஸ்தீன விசயத்தில், ஒரு திசைவழியை நோக்கி இந்த நாட்டு மக்களை கொண்டுசெல்ல எளிதாக இருக்கும். இதை தைரியமாக பா.ஜ.க.,மோடி என்பதை தாண்டி நாம் சிந்திக்க வேண்டாமா? உண்மையை ஒப்புக்கொண்டு பரப்ப வேண்டாமா? 

Sunday, July 27, 2014

சரிப் பார்வையும், சதிப் பார்வையும்.   உலக சமூகத்தின் மனச்சாட்சி உலுக்கியதால், இலங்கை அரசு மீது  ஒரு "போர்க் குற்ற விசாரணையை" ஐ.நா.மனித உரிமைகள் கழகம் தொடங்கியுள்ளது. அதன் "உலக அளவில் பெயர் பெற்ற மூன்று உறுப்பினர்கள்" இலங்கைக்கு அருகாமை நாடான இந்தியாவில் உள்ள "ஈழத் தமிழ் அகதிகளை" விசாரித்தால் "வன்னிப் போரின் கடைசி நிலவரங்களை" தெரிந்துகொள்ளலாம் என்பதால் அதை தடுக்கு நோக்கத்தில், இந்தியா வருவதற்கு நடுவணரசு "விசா" கொடுக்கவில்லை. மகிந்தா அதரவு சக்திகள் இன்னமும் நடுவணரசில் செல்வாக்கு செலுத்துவதால் இந்த "கொடுமை" நடக்கிறது. நடுவணரசை இணங்கவைக்க எததகைய "சாட்சியங்கள்" போர்க் குற்றத்தை அம்பலப்படுத்தும்?  எததகைய "சாட்சியங்கள்" தமிழக மக்களையும் கொந்தளிக்க வைத்து, போர்குற்ற விசாரணை நடத்த "நிர்ப்பந்தம்"தரும்? 

      கடைசி கட்டத்தில் வன்னிப் போரில் நடந்த சில முக்கியமான "காட்சிகள்" சேனல் 4 மூலம் அம்பலமான காட்சிகள் அவ்வாறு ஒரு நிர்ப்பந்தத்தை உரூவாக்கும் என்றால், அவற்றை "அழித்துவிடவோ", "உருமாற்றி" விடவோ, "திசை திருப்பி"விடவோ, மகிந்தாவின் உளவுத்துறையும், அதை ஒட்டியே சிந்திக்கும் "இந்திய உளவு துறையும்', சிந்திக்கும், செயல்படும் என்பதுதானே உண்மை. அப்படி அவர்கள் என்ன சிந்தித்தார்கள்? என்ன செயல்பட்டார்கள்? 

      "போர்குற்றங்களை" "இன அழிப்பு" என்று அழைக்கும் அளவுக்கு சில முக்கிய "தரவுகள்" அல்லது, "சாட்சியங்கள்" கிடைத்துள்ளன. அவற்றை  சேனல்-4 தொலைக் காட்சியும் வெளியிட்டுள்ளது. அவற்றில் முக்கியமானவை என்று சிலவற்றை கூறலாம். முதலில் " வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த  நடேசன், புலித்தேவன், கேப்டன் ரமேஷ்" ஆகியோர் "கொலை" செய்யப்பட காட்சிகள். இதற்கு இலங்கை அரசு "வேறு பதிலை" கொடுக்கிறது.ரமேஷ் உயிரோடு இருந்தபோது எடுத்த "விசாரணையை" வெளியிட்ட போது, அதற்கும்கூட, அவரை "போராளி" என்றும் பல குற்றங்களை செய்துள்ளார் என்றும் இலங்கை அரசு கூறிவருகிறது. அடுத்து "இசைப்பிரியாவின்" படுகொலை. இசைப்பிரியாவை ஒரு பயிற்சி பெற்ற போராளி என்றும், அவர் "போரில் இறந்தார்" என்றும் ஒரு தேதியை இலங்கை "ராணுவ இணைய தளத்தில்" வெளியிட்டு,  அதற்கும் ஒரு பதிலை பதிவு செய்கிறார்கள். ஆனாலும் விடாமல் அவர் பிடிபட்டு  இழுத்து செல்லப்படுவதை படமாக வெளியிட்டு, அந்த தேதிக்கும், கொல்லப்பட்டதாக இலங்கை அரசு வெளியிட்ட தேதிக்கும் உள்ள இடைவெளியை கூறி நாம் அம்பலப்படுதவேண்டியுள்ளது.அதையே சேனல்-4 பதிலாக  கூறுகிறது. 

      ஆனால் "பாலச்சந்தர்" விஷயம் அப்படியல்ல. அந்த சிறுவன் பச்சிளம் பாலகன் என்பது  உலகுக்கு தெரிந்துவிட்டது. அந்த சிறுவன் தனது தந்தையிடம் "துப்பாக்கி" இருப்பதையே ஏற்றுக் கொள்ளாதவன் என்பதும் பதிவாகி விட்டது. அப்படிப்பட்ட "அப்பாவி சிறுவனை" எப்படி விசாரித்து பிறகு, சுட்டுக் கொன்றுள்ளார்கள்? என்பது உலக சமூகத்தின் மனச்சாட்சியை உலுக்கவே செய்துள்ளது. அதுவே தமிழக மக்களையும் கொந்தளிக்க செய்துள்ளது. அந்த "சாட்சியை" எப்படி "கலைப்பது" என்பதுதான் இலங்கை-இந்திய உளவு துறையினருக்கு முன்னே நிற்கும் "சவால்". அந்த சவாலை சந்திக்கத்தான் இந்த புதிய படம் வெளிவர இருக்கிறது. அதாவது "புலிப்பார்வை" என்ற இந்த படத்தின் சொந்தக்காரர்கள் என்றைக்கும் ஈழத் தமிழர்கள் மீது அக்கறையோ, அனுதாபமோ, கொண்டவர்கள் அல்ல. மாறாக எதையுமே "வணிகமாக்கலாம்" என்று எண்ணுபவர்கள். அதனால் அவர்களது இந்த சித்தரிப்பு ஒரு திட்டமிட்ட "சதி" யாகவே படுகிறது.

                 அதாவது பாலச்சந்த்ரனை ஒரு "போராளியாக" சித்தரித்தால், அவன் "போரில் இறந்தான்" என்றும், "குழந்தைப் போராளிகளை" விடுதலை புலிகள் பயன்படுத்தினார்கள் என்பதாகவும், ஒரு "நச்சு பரப்புரையை" செய்துவிடலாம் என்று  சம்பந்தப்பட்டவர்கள் "சதித் திட்டம்" போடவேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளனர். ஏன் என்றால், ஐ.நா. விசாரணை குழுவிற்கு இந்தியா விசா கொடுக்க மறுத்ததை எதிர்த்து, பெரும் புயல் தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியாவின் நாடாளுமன்றத்திலும் கிளம்பி விட்டது. ஆளவே அதன் வீச்சு நடுவணரசை அசைப்பதற்கு முன்னால் இப்படி ஒரு "திசை திருப்பலை" செய்ய அவர்கள் முயற்சிக்கிறார்கள். அதனால்தான் அந்த பட விளம்பரதில்கூட, அவர்கள், "இது ஒரு பாலா பற்றிய நமபமுடியாத உண்மை" என்று பரப்ப தொடக்கி விட்டார்கள். சம்பந்தப்பட்ட நிறுவனம் "பிரபல காட்சி ஊடகங்களை"  வைத்திருப்பதால், அந்த காட்சி ஊடகத்தில் "தங்கள் முகம்" வரவேண்டும் என்ற எண்ணத்தில் பல "தமிழ் ஆர்வலர்கள்" கண்டிக்க மறுக்கிறார்களோ என்ற கருதும் தமிழ்நாட்டில் இருக்கிறது.