Sunday, August 17, 2014

நாம் ஒருசார்பாய் செய்தி கூறினால் யாருக்கு நட்டம்?

நாம் ஒருசார்பாய் செய்தி கூறினால் யாருக்கு நட்டம்?
-----------------------------------------------------------------------------------
   பாலஸ்தீனம் பற்றி எரிகிறது. இஸ்ரேலிய யூத வெறி குண்டுமாரி பொழிகிறது. நாம் கவலை கொள்கிறோம். கண்டனம் செய்கிறோம். இந்திய அரசு கண்டனம் செய்யவேண்டுமே  என்று குரல் எழுப்புகிறோம். சுஷ்மா ஸ்வராஜ் நாடாளுமன்றத்தில் நடந்துகொண்ட முறை, யூத வெறியர்களுக்கு ஆதரவானது என்பதை குற்றம் சாட்டுகிறோம். எல்லாம் சரி. பி.யு.சி.எல். ஒரு கூட்டம் நடத்தியது. அதில் வழக்கறிஞர் நாகசைலா ஒரு செய்தியை கூறினார். காசா பகுதியின் கடலோரம் கிடைக்கும் எரிவாயுவை எடுக்க "இங்கிலாந்து எரிவாயு நிறுவனம்" முதலில் ஹமாஸுடன் ஒப்பந்தம் போட்டிருந்தது. பிறகு இஸ்ரேல் அதை முறியடிக்க எண்ணி, காசா மீது "பொருளாதார தடை"யையும், இங்கிலாந்து நிறுவனத்துடன் தான் ஒரு ஒப்பந்தத்தையும் போட்டது. அதே இங்கிலாந்து நிறுவனம் நமது அம்பானியின் ரிலையனசுடன் சேர்ந்து, எரிவாயு ஒப்பந்தத்தை இந்தியாவில் போட்டுள்ளது. இந்திய அரசை எதிர்த்தே ஒரு வழக்கை உலக அரங்கில் இரண்டு நிறுவனங்களும் சேர்ந்து நடத்துகிறது. அதனாலோ என்னவோ, சுஷ்மா இந்த நிலைப்பாட்டை எடுத்தார் என்றார்.

      அதே சமயம் நாம் ஒன்றை மறக்கவோ, மறுக்கவோ,மறைக்கவோ  முடியாது. அதாவது தலைமை அமைச்சர் மோடி, பிரிக்ஸ் மாநட்டில் இஸ்ரேலை கண்டிக்கும்தீர்மானதில் கையெழுத்திட்டார். அது மட்டுமா? ஐ.நா. மனித உரிமை கழகத்தில், வாக்கெடுப்பில், இஸ்ரேலை கண்டிக்கும் தீர்மானத்தை எதிர்த்து, அமெரிக்க ஒற்றை வாக்கை போட்டபோது, ஐரோப்பிய நாடுகள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் ஓடிய போது,இந்தியா வாக்கெடுப்பை ஆதரித்து நரேந்திர மோடியின் வழிகாட்டலில்,வாக்களித்தது. அதை அடுத்து, ஐ.நா. காசாவில் நடக்கும் போற்குற்றன்களை விசாரிக்க ஒரு மூவர் குழுவை அறிவிக்கும் போது, அதற்கு ஆதரவாக இந்தியா பிரதமரின்  வழிகாட்டலில் வாக்களித்துள்ளது. இவை பாராட்டப்பட வேண்டிய செய்திகள். மோடிக்கும், சுஷ்மாவிற்கும் உள்ள முரண்பாடு என்ற அரசியல் வேறு.செய்தி. ஆனால் நமக்கு இந்திய அரசு இஸ்ரேலின் தாக்குதல்களை எதிர்த்து , போர்குற்றங்களை அம்பலப்படுத்த வேண்டும் என்பதே நோக்கம். இன்னமும் கூறப்போனால், ஈழத் தமிழர் விசயத்தில், இந்த நிலையை எடுக்காத மோடி அரசு, பாலஸ்தீன விசயத்தில் எடுத்துள்ளது. அதே சமயம் அரபு நாடுகள் மவுனம் சாதிப்பதன் மூலம் இஸ்ரேலின் தாக்குதலுக்கு துணை போகின்றன. இந்த உண்மைகளையும் சேர்த்து நாம் பார்த்தால்  மட்டும்தான் நமக்கு பாலஸ்தீன விசயத்தில், ஒரு திசைவழியை நோக்கி இந்த நாட்டு மக்களை கொண்டுசெல்ல எளிதாக இருக்கும். இதை தைரியமாக பா.ஜ.க.,மோடி என்பதை தாண்டி நாம் சிந்திக்க வேண்டாமா? உண்மையை ஒப்புக்கொண்டு பரப்ப வேண்டாமா? 

No comments:

Post a Comment