Monday, December 28, 2009
காங்கிரஸ் கட்சியின் 125வது ஆண்டிலாவது, ஊழல் ஒழிப்பில் சீனாவை, இந்தியா பின்பற்றுமா?
அண்டை நாடுகளாக இருந்தாலும், ஒரே எல்லைக்கோடுதான் இரண்டு நாடுகளுக்கும் என்று சொன்னாலும், ஆசியா கண்டத்திற்குள்ளே இருக்கும் இந்தியாவும், சீனாவும் தங்களுக்குள் நல்லுறவை வளர்த்துக் கொள்வதில் பலவீனமாகவே இருந்தன. உலக அரங்கில் இருக்கின்ற நாடுகள் எல்லாம் இணைந்து, அகில அளவில் வளர்ந்து வரும் பருவநிலை மாற்ற ஆபத்தையும், பூமி வெப்பமடையும் அபாயத்தையும் எதிர்கொள்வதற்காக டென்மார்க்கில் கூடினர். டென்மார்க் நாட்டிலுள்ள கோபன்ஹெகன் நகரில் கூடிய அந்த ஐ.நா. சபையின் ஏற்பாடான மாநாட்டில், வளரும் நாடுகளான இந்தியாவும், சீனாவும் வளர்ந்த நாடுகளின் ஆதிக்கத்தை உணர்ந்தனர். வேறுவழியே இல்லாமல் இந்த இரு நாடுகளும், அந்த மாநாட்டின் 12 நாட்களும், இணைந்தே செயல்படும்படி கட்டாயப்படுத்தப்பட்டனர். ஊர் திரும்பினால், எல்லைப் பிரச்சினையில் ஒருவரையொருவர் கடித்துக் கொள்வார்கள் என்ற நிலைமையிலும் கூட, நல்ல விசயத்திற்காக கோபன்ஹெகனில் கூடிப் பேசி, குலாவிக்கொண்டார்கள் என்பது நல்ல செய்திதான். அதே போல மக்கள் சீன அராசங்கம் புதிதாக தொடங்கியிருக்கின்ற ஒரு இயக்கத்தை, இந்திய அரசாங்கமும் பின்பற்றுவார்களா என்று நமக்கு கேட்கத் தோன்றுகிறது. அதுதான் ஊழல் எதிர்ப்பு இயக்கம். கடந்த டிசம்பர் 26ம் நாள், மக்கள் சீன குடியரசின் முதல் தலைவராக இருந்த மாசேதுங் பிறந்த நாளன்று, ஒரு நல்ல காரியத்தை அந்த அரசாங்கம் முன் வைத்துள்ளது. அந்த நாளை ஊழல் எதிர்ப்பு நாளாக அவர்கள் கடைபிடிக்க அறிவித்தார்கள்.அதையொட்டி ஊழல் எதிர்ப்பு இயக்கம் என்று ஒன்றையும் கட்டவிழ்த்து விட்டார்கள். 2008ம் ஆண்டுக்குள் ஊழல் செய்த அதிகாரிகள் என்று பட்டியலிடப்பட்டு, சீன நாடெங்கிலும் தண்டிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,960. இத்தகைய நிகழ்வை முன்னுதராணமாக இந்திய அரசும், பின்பற்றலாமே என்ற ஒரு நப்பாசை நமக்கு ஏற்படுகிறது. ஏனென்றால் மக்கள் சீன குடியரசு என்று அழைக்கப்படும் சீனநாட்டினுடைய அரசாங்கத்தை, சீன நாடு 1949ல் விடுதலையான பிற்பாடு வழிகாட்டி, தலைமை தாங்கி நடத்திக் கொண்டிருப்பது சீன கம்யூனிஸ்ட் கட்சி. அப்படிப்பட்ட ஒரு கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் நடத்தப்படும் அரசாங்கத்திலேயே, ஊழல் நடப்பது என்பதும், அதை கண்டுபிடித்து அந்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கிறது என்பதும், நாம் கற்றுக் கொள்ள வேண்டிய இன்றைய உலக விதி. இந்திய அரசாங்கம், நாட்டு விடுதலைக்கு பிறகு 61 ஆண்டுகளாக, இடையில் சில ஆண்டுகள் விடுபட்டாலும், தொடர்ந்து இந்திய தேசிய காங்கிரஸ் என்ற காங்கிரஸ் கட்சியால் ஆளப்பட்டுவருகிறது. அந்த காங்கிரஸ் கட்சி இன்று தனது 125வது வயதை எட்டுகிறது. 1885ம் ஆண்டு டிசம்பர் 28ம் நாள், இன்றைய மும்பையில், அன்றைய பம்பாயில் காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்டது. ஏ.ஓ.ஹியூம் என்ற ஆங்கிலேயரால் அப்போது தொடங்கப்பட்டது. ஆங்கிலேயருடைய ஆட்சியிலேயே அந்தக் கட்சி துவங்கப்பட்டதால், இன்று வரை அதனுடைய துவக்கம் பற்றிய அல்லது துவக்கத்திற்கான நோக்கம் பற்றிய விமர்சனங்கள் இருந்து கொண்டே இருக்கின்றன. நாட்டு விடுதலைக்குப் பிறகு சீன நாட்டை ஆண்டுவரும் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், நாட்டு விடுதலைக்குப் பிறகு இந்திய நாட்டை ஆண்டு வரும் காங்கிரஸ் கட்சிக்கும் இருக்கின்ற ஒத்த விசயங்களையும், வேறுபாடுகளையும் நாம் ஒப்பிட்டு இந்த சூழ்நிலையில் இப்படிப்பட்ட கேள்வியை எழுப்பவேண்டியிருக்கிறது. அதாவது, காங்கிரஸ் கட்சி தனது 125வது ஆண்டிற்குள் நுழையும் நாள் என்பதனால், குறைந்த பட்சம் ஊழல் எதிர்ப்பிலாவது அண்டைய நாட்டின் அனுபவங்களை பின்பற்றுவார்களா? என்ற கேள்வியை எழுப்புகிறோம். காங்கிரஸ் கட்சியினுடைய வரலாற்றில், அந்த கட்சியின் தலைமையும், தொண்டர்களும் சுதந்திரத்திற்காக தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட ஒரு காலகட்டம் உண்டு. அப்படிப்பட்ட காலத்தில் காங்கிரஸ் கட்சி இந்தியாவிலுள்ள பல்வேறு மொழிகளை சேர்ந்த, பல்வேறு சாதிகளை சேர்ந்த, பல்வேறு மதங்களை சேர்ந்த மக்களை எல்லாம் ஓரணியில் திரட்டி, இந்திய நாடு சுதந்திரம் அடைய வேண்டும் என்ற நல்லதொரு கொள்கையை முன்வைத்து தனது கட்சியின் தலைமையில், ஒரு இயக்கத்தை நாட்டின் இயக்கமாக நடத்தி வந்த வரலாறு அனைவரும் அறிந்ததே. ஆங்கிலேயர் ஆட்சியில் ஆங்கிலேயர் ஒருவரால் தொடங்கப்பட்ட ஒரு கட்சியாக இருந்தாலும், ஆங்கிலேயர் வழிகாட்டலில் ஒரு நாடாளுமன்றத்தை பயிற்சிக்காக உருவாக்கி, அதை ஜவஹர்லால் நேருவின் தந்தையான மோதிலால் நேருவின் கரங்களில் கொடுத்த வரலாறு ஒரு புறம் இருந்தாலும், காங்கிரஸ் கட்சி ஆங்கிலேயர்களுடைய நேரடி ஆட்சியை இந்தியாவிலிருந்து விரட்டி அடிப்பதற்காக, ஒரு மாபெரும் ஐக்கிய முன்னணியை கட்டி எழுப்பியது என்ற செய்தியை நாம் மறுப்பதற்கில்லை.ஆட்சி அதிகாரம் தங்கள் கரங்களில் வந்த பிற்பாடு, காங்கிரஸ் கட்சியின் செயல்பாட்டில் ஊழலும், லஞ்சமும் எந்த அளவுக்கு உள்ளே புகுந்தது என்பதையும் இந்த 125 ஆண்டு வரலாற்றைக் கண்டு பெருமைப்படக்கூடிய நாம் சிந்திக்க வேண்டியுள்ளது. 5 ஆண்டு திட்டங்களையும், பொதுத்துறைகளையும் வளர்த்து நாட்டினுடைய உள்கட்டுமான ஏற்பாடுகளை உருவாக்கிய காங்கிரஸ் கட்சித் தலைமை, பிற்காலத்தில் ஒவ்வொரு தனியார் துறையிலிருந்தும் எந்தளவுக்கு கையூட்டுப் பெற்றுக் கொண்டு, நாட்டின் முக்கியமான ஆலைகளையும், திட்டங்களையும் தாரை வார்த்தார்கள் என்ற சிதைவுகளை நாம் கணக்குப்பார்க்கவேண்டிய தருணம் இது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மக்கள் சீனத்தை உருவாக்குவதற்காக, பெரியதொரு புரட்சியை நடத்தியது. அத்தகைய புரட்சியை நடத்துவதற்கான மக்கள் படையை உருவாக்கி, அந்த இயக்கப்போக்கில் பல்வேறு தோழர்களின் உயிர் தியாகங்களைச் செய்து அதன் மீதே தங்கள் நாட்டின் மக்கள் குடியரசை கட்டி எழுப்பியது. அப்படிப்பட்ட சீன நாட்டில் இன்றைக்கு பல்வேறு மட்டங்களில் இருக்கின்ற அரசாங்க பொறுப்பிலிருக்கும் அதிகாரிகள், ஊழல் செய்தவர்களாக அடையாளம் காட்டப்பட்டு, அவர்கள் மீது வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு, அவற்றை விசாரணை செய்து, தண்டிக்கும் அளவுக்கு சென்றிருக்கிறது என்றால், எத்தனை உருக்கு போன்ற கட்டுப்பாடுகள் இருக்கின்ற ஒரு கட்சியிலும், அந்த கட்சியில் தலைமையிலான அரசாங்கத்திலும், இப்படிப்பட்ட ஊழல் புகார்கள் வரமுடிகிறது என்று சொன்னால், ஒரு நாட்டின் உள்ளே இருக்கின்ற ஆட்சியாளர்கள், அரசாங்க அதிகாரிகள் மட்டுமே இத்தகைய பிரச்சினைகளுக்கு ஒட்டு மொத்த காரணமாக இருக்க முடியாது என்பது தெரிகிறது. அப்படியானால் வெளியே இருக்கும் காரணிகள் என்ன? இன்றைய உலகச் சூழலில் ஒரு நாடு தனது நிலத்தில் உற்பத்தியாகின்ற உற்பத்திப் பொருட்களை மட்டுமே சார்ந்து வாழ முடியாது என்ற நிலைமை இருக்கிறது. உணவுப் பொருட்கள் தொடங்கி, அத்தியாவசிய தேவைப்பொருட்கள், ஆடம்பர தேவைப்பொருட்கள், வாழ்வதற்கான பல்வேறு வகையான பொருட்கள் ஆகியவற்றை நாடுவதற்காக, எந்த ஒரு நாடும் உலக சந்தையை அணுகவேண்டியிருக்கிறது. அப்படிப்பட்ட உலக சந்தையில் லாபத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்ட, தனியார் முதலாளிகள் தாராளமாக உலா வருவதை யாரும் தடுத்து விடமுடியாது. அப்படிப்பட்ட தனியார் முதலாளிகள் தங்களது சரக்குகளை விற்பனை செய்வதற்காக, கையூட்டுகள் கொடுப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். மேற்கண்ட வழக்கத்தை பன்னாட்டு மூலதன நிறுவனங்கள், தங்களது நிர்வாகத் தலைமையிலேயே ஒரு தனிப்பிரிவாக ஒதுக்கி, ஒவ்வொரு நாட்டு அரசாங்கத்திலும் தீர்மானிக்கும் பொறுப்பிலிருக்கின்ற அதிகாரிகளின் பலவீனங்களை பட்டியல் போட்டு, அவர்களுக்காக பல கோடிகளை செலவு செய்யுமளவுக்கு ஒரு நடைமுறையை வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதை அவர்களது மொழியில் வர்த்தகத் திறமை என்பதாக கூறுகிறார்கள். இத்தகைய வர்த்தகத் திறமையில் அல்லது வர்த்தக சூதாட்டத்தில், சிக்கிக் கொண்ட அரசாங்க அதிகாரிகள் தான் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியாலும், சீன அரசாங்கத்தாலும், சீன நீதிமன்றத்தாலும் தண்டிக்கப்படுகிறார்கள்.நமது நாடு இதுபோன்ற பாதிப்புகளால் அதிகமாக சிக்கல்களை சந்தித்திருக்கிறது. நேருவின் குடும்பத்தினர் தங்கள் தலைமையை மீண்டும், மீண்டும் காங்கிரஸ் கட்சியின் மீதும், இந்திய அரசாங்கத்தின் மீதும் நிறுவிக்கொண்ட காலம்தான் இந்த நாட்டின் வரலாறு என்றால், நாட்டின் பாதுகாப்பிற்காக விலைக்கு வாங்கக் கூடிய பீரங்கிகளிலேயே, ஊழல் நடந்ததை அம்பலப்படுத்தியதுதான் போபர்ஸ் பீரங்கி ஊழல். இப்படி ஊழல் எலும்புக்கூடுகளை தனது பதக்கமாக வைத்திருக்கின்ற காங்கிரஸ் கட்சி, தனது 125வது ஆண்டு பிறந்த நாளிலாவது, ஊழல் எதிர்ப்பு என்பதை ஒரு சூளுரையாக அறிவிப்பார்களா என்று இந்த நாளில் நாமும் கேட்க விரும்புகிறோம்.
Subscribe to:
Posts (Atom)