Tuesday, April 27, 2010
சாதி அடிப்படையில் இடஒதுக்கீடு, சாதிகளை இறுக்கமாக்குமா? அல்லது தளர்த்துமா?
இந்திய துணைக் கண்டம் அதனுடைய சிறப்பு அம்சமாக, சாதிகளை அதிகமான அளவில் உள்ளடக்கி வைத்துள்ளது. சாதிகளின் பெயரில் இங்கே ஆதிக்கங்களும், ஏற்றத்தாழ்வுகளும், அதையொட்டி இழிவுபடுத்தல்களும், வெளியேற்றல்களும், அடக்கி வைத்தல்களும், தீண்டாமைகளும், காணாமைகளும் நடந்து வருகின்றன. அதன் மூலம் ஏற்கனவே சில காரணங்களால் முன்னேறிவிட்ட சாதியினர் மட்டும், 2000 ஆண்டுகளாக, அனைத்து செல்வங்களையும் இந்த நாட்டில் அனுபவிக்க முடிகிறது. நாட்டு வளங்களை கடுமையான உழைப்பால் உருவாக்கிக் கொடுக்கும் சாதி சனங்கள், இத்தகைய ஏற்றத்தாழ்வில் கீழே தள்ளப்படுகின்றன. கீழே தள்ளப்படும், ஓரங்கட்டப்படும், தீண்டாமைக் கொடுமைக் குள்ளக்கப்படும், முன்னேற வாய்ப்பு கிடைக்கப் பெறாத சாதிகளுக்கு, முன்னேறி வருவதற்காக ஒரு புதிய ஏற்பாடு செய்யப்பட்டது. சாதிகளுடைய நிலைமை களைப்பற்றிய ஆய்வின் அடிப்படையில், கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் இடஒதுக்கீடு வழங்கப் படலாம் என, அரசாங்கம் தீர்மானித்து, அதற்காக ஆய்வு செய்ய குழு அமைத்தது. அவ்வாறு நேரு காலத்தில் அமைக்கப்பட்ட குழுதான், காகா கலேல்கர் ஆணையம். சமூக ரீதியில், கல்வி ரீதியில் பின்தங்கிய சாதியினருக்கு, கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் இடஒதுக்கீடு வழங்கி, அதன் மூலம் அந்த சாதி சனங்களுக்கு, முன்னேறு வதற்குள்ள வாய்ப்புகளை நல்கவேண்டும் என்ற எண்ணத்தில் அப்படிப்பட்ட ஒரு ஆணையம் அமைக்கப்பட்டது. அந்த ஆணை யத்தின் மதிப்பீடும், இந்தியாவில் உள்ள சாதிகளில் வெவ்வேறு தட்டுக்களிலும், தரங்களிலும் வாழ்ந்து வரும் எதார்த்தங்களை கணக்கில் எடுத்து, இடஒதுக்கீடு வழங்குவதற் கான அடிப்படைகளை அந்த ஆணையம் முன்வைத்தது. அதே நேரத்தில்தான் தமிழ்நாட்டில் சாதி அடிப்படையிலான ஏற்றத்தாழ்வுகளை நீக்குவதற்காக, வகுப்புவாரி பிரதிநிதித்துவம் என்ற முழக்கத்தை தந்தை பெரியார் தொடங்கி வைத்தார். காகா கலேல்கர் ஆணையத்தின் முதல் உரையிலேயே, அரசாங்கத்தில் பங்கு கொள்ளாத சாதிகள், தங்களுடைய பிரதிநிதிகளும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கிறார்கள் என்ற உணர்வை பெறுவதற்காக, இடஒதுக்கீடு அவசியம் என்ற கருத்தைத்தான் முன்வைத்துள் ளது. அதாவது சாதிகளை ஒழிப்போம் என்றோ, கீழே தள்ளப்பட்ட சாதி சன ங்களை முழுமையாக மேலே கொண்டு வருவோம் என்றோ, சாதிகளுக்கு மத்தியில் உள்ள ஏற்றத்தாழ்வைப் போக்கி, சமன்படுத்துவோம் என்றோ, அந்த ஆணையம் கூறவில்லை. மாறாக அத்தகைய சாதிகளின் பிரதிநிதிகள் அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதாக அவர்கள் உணர்வதற்காக என்ற சொல்லைத்தான் பயன்படுத்துகிறார்கள். அதாவது சமூகத்தில் புரட்சிகரமான மாற்றத்தை கொண்டு வருவதற்காக, இத்தகைய இடஒதுக்கீடுகளை அரசாங்கம் முன்வைக்கவில்லை. மாறாக அரசாங்கத்தில் அங்கம் வகிக்காமல் பெருவாரியான சாதி சனங்கள் ஒதுக்கப்பட்டு நிற்கும் போது, அதனால் அராங்கத்திற்கு எந்த நேரமும் ஆபத்து வரலாம் என்ற எண்ணத்தின் அடிப்படையில், அடிப்படை சாதியினரையும் அரசில் அங்கம் வகிப்பதாக உணர வைக்க இந்த இடஒதுக்கீடு என்பது தான் அவர்களது அன்றைய வாதமாகவே இருந்தது.அண்ணல் அம்பேத்கரின் அரிய முயற்சியால், இந்திய அரசியல் சட்டத்திலேயே, தாழ்த்தப்பட்ட மக்களாக தீண்டாமை கொடுமையால் பாதிக்கப்பட்டுக் கொண்டி ருக்கும் மக்கள் இருப்பதை எண்ணிப் பார்த்து, அவர்களுக்கான இடஒதுக்கீட்டை கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் ஏற்படுத்தி தர அரசியல் சட்டத்திலேயே வழிவகை செய்யப்பட்டது. அதன் மூலம் மத்திய, மாநில அரசாங்கங்களிலும், அனைத்து கல்விக் கூடங்களிலும், தலித் மக்களுக்கான இடஒதுக்கீட என்பது சட்ட ரீதியாக அங்கீகரிக்கப்பட்டது. அங்கீகரிக்கப் பட்ட அந்த உரிமையைக் கூட, அரசாங்கங்கள் வேலை வாய்ப்பில் நிரப்பவில்லை என்ற குரல் 63 ஆண்டு சுதந்திரத்திற்குப் பிறகும் நிலவுகின்ற நிலைமையாக இருக்கிறது. அதாவது பின்னடைவு காலிப்பணியிடங்கள் மத்திய, மாநில அரசாங்கங்களில், தலித் மக்கள் 10 லட்சம் பேருக்கு இருக்கிறது என்ற உண்மை இப்போது தலித் இயக்கங்களால் எழுப்பப் படுகிறது. அப்படியானால் சட்டம் கொடுத்த உரிமைகளைக்கூட, தீண்டாமைக் கொடுமையில் வாழும் மக்கள் தொகையினருக்கு, சமூகமும் அசராங்க அதிகாரிகளும் கொடுக்கத் தயாராக இல்லை என்ற உண்மை இந்த இடத்தில் அம்பலமாகிறது. இதுபோன்ற ஆதிக்கசாதி மனப்பான்மை, எங்கெணும் பரவிக் கிடப்பதால் இன்னமும் இடஒதுக்கீடு அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யாததை காண முடிகிறது. இதே போல அடுத்து வந்த அரசாங்கங்களால் மண்டல் குழு அமைக்கப்பட்டது. மண்டல்குழுவின் ஆய்வு என்பது புதிய சூழ்நிலையில், சாதிகளின் குறிப்பாக பிற்படுத்தப்பட்ட சாதிகளின் பொருளாதார, சமூக, அரசியல் நிலைமைகளைப் பற்றி ஆய்வு செய்தது. அத்தகைய ஆய்வின் மூலம் கொடுக்கப்பட்ட அறிக்கையையும், மத்திய காங்கிரஸ் அரசாங்கம் கிடப்பில் போட்டு வைத்திருந்தது. வி.பி.சிங் ஆட்சிக்கு வந்த பிற்பாடு மண்டல் குழு அறிக்கை தூசி தட்டப்பட்டு, வெளியே கொண்டு வரப்பட்டது. அது நாடெங்கிலும் சமூக ரீதியான அணி சேர்க்கையில், ஒரு ஆட்டத்தை ஏற்படுத்தியது. அதனால் வெறுப்படைந்த அனுபவித்து வரும் கூட்டம், பிரச்சினையை கிளப்பி, அதன் விளைவாக மத்திய அரசு கவிழ்ந்தது. மண்டல்குழு அறிக்கையின் அமுலாக்கம் குறிப்பாக உ.பி., பீகார், ம.பி., ராஜஸ்தான், அரியானா போன்ற மாநிலங்களில், ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்தது. வீழ்ந்து கிடந்த பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்கள் பலரும் இதன் மூலம் விழிப்புணர்வு பெற்று, அரசியல் பிரதிநிதிகளாகவும் அறுதியிட முடிந்தது. ஆனாலும் கூட பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்களுக்கு, உயர்கல்வியில் இடஒதுக்கீடு இல்லை என்ற பிரச்சினை சமீபத்தில், மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தை எதிர்த்து ஒரு மக்கள் புயலை எழுப்பியதையும் நாம் காணமுடிந்தது. இந்திய நாடு முழுவதையும் ஆய்வு செய்வதற்கு பதிலாக, உதாரணமாக தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டு நாம் நமது ஆய்வை தொடங்கலாம். வானத்தில் பறக்கும் அத்தனைப் பறவைகளையும் பிடித்து, அவற்றின் உடலை பிரித்து பரிசோதிப்பதை விட, அதில் ஒரு பறவையைப் பிடித்து பரிசோதித்தால், அதைப் போலத்தான் பிற பறவைகளும் என்பதாக புரிந்து கொள்ளமுடியும் என்று கூறிய மாசேதுங்கின் மேற்கோளை பயன்படுத்தலாம். அதன்படி பிற்படுத்தப்பட்ட சமுதாயங்களாக பட்டியலிடப்பட்ட சாதிகளில், தமிழ்நாட்டில் உள்ள யாதவர் குலத்தை கணக்கில் எடுக்கலாம். சமீபத்தில் அவர்களது தனி இடஒதுக்கீடு கோரிக்கை, பெருமளவு கவனத்தை ஈர்த்திருப்பதனால் அதை எடுத்துக் கொண்டு விவாதிக்கலாம். தமிழ்நாட்டின் ஆட்சி அதிகாரத்தில், முற்பட்ட சாதியினருக்கு இருந்து வந்த செல்வாக்கு மாற்றப்பட்டு, கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக, பிற்படுத்தப்பட்ட சாதிகளின் செல்வாக்கு கொண்ட ஆட்சி நடைபெறுகிறது என்பதாக ஒரு மதிப்பீடு உண்டு. அது உண்மைதானா? பிற்படுத்தப்பட்ட சாதிகளில் சில சாதிகள் மட்டுமே, முன்னேறுவதற்கான இடஒதுக்கீடு வாய்ப்புகளை பெற்றுக் கொள்ளும் போது, யாதவர் சமூகம் போன்ற பல சமூகங்கள் ஏதுமற்று நிற்கின்ற நிலையையும் பார்க்கிறோம். அதுவே அவர்களை அணி திரட்டி குரல் எழுப்ப வைத்திருக்கிறது. அப்படியானால் இவர்கள் ஆளப்படும் பிற்படுத்தப்பட்ட சாதியினராக இருக்கிறார்கள். ஆளும் பிற்படுத்தப்பட்ட சாதியினர் அனுபவிக்கும் அனைத்து வாய்ப்புகளையும், ஆளப்படும் பிற்படுத்தப்பட்ட சாதிகளில் ஒன்றான யாதவ குலம் பெற்றுவிடவில்லை என்ற காரணம் தான், அவர்களது எழுச்சிக்கு அடிப்படையாக அமைகிறது. இத்தகைய சூழலில் மக்களின் உடனடி தேவைகளை கணக்கில் எடுக்காமல், அவர்கள் ஒட்டு மொத்தமாக சாதிகளை புறந்தள்ளி, தமிழினமாக அடையாளம் கண்டு கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையும் விவாதிக்கப்பட்டது. அது இன்றைய எதார்த்ததிலிருந்து, நாளைய எதிர்காலத்தை நோக்கி பயணம் செய்ய தடங்கலாக அமைகிறது. சாதிகளாக பிரிந்து கிடக்கும் அல்லது வைக்கப்பட்டிருக்கும் தமிழ் மக்கள், தங்களுடைய உடனடி தேவைகளுக்கு கிடைக்கப்பெறாத இடஒதுக்கீட்டை பெறுவதும், ஒட்டு மொத்தமாக சாதிகளை அழிக்கும் சூழலில், தமிழினமாக மலர்வதும் இணைந்த ஒரு பார்வையை பெறுவது அவசியமாகிறது.ஆகவே இன்றைய உடனடித் தேவையான இடஒதுக்கீட்டில் நின்று கொண்டே, நாளைய எதிர்கால தமிழர் ஒற்றுமையை கட்டுவதற்காக பாடுபடலாம் என்ற அறிவியல் திசைவழியை புரிந்து கொள்ள முயலலாம்.
Subscribe to:
Posts (Atom)