Friday, April 16, 2010
நாட்டுப்பற்றா? ஸ்டெர்லைட் ஆலைப்பற்றா?
நேற்று இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் பெரும் அமளி ஏற்பட்டது. தண்டேவாடேயில் நடந்த மாவோயிஸ்ட் தாக்குதல் பற்றி எதிர்கட்சிகள் கேள்விகளை எழுப்பினர். அரசு முழுமையான அறிக்கை யை வெளியிடவேண்டும் என்று எதிர்கட்சி கள் சண்டையிட்டனர். கூச்சல், குழப்பத்தால் மக்களவையும், மாநிலங்களவையும் மாறி, மாறி தள்ளி வைக்கப்பட்டன. ஆளும் கூட்டணி மத்தியிலிருந்தும் எதிர்ப்பு குரல்கள் எழுந்தன. பா.ஜ.க.வின் எஸ்வந்த்சிங், ஆந்திராவில் மாவோயிஸ்ட்களுடன் அரசாங் கம் அரசியல் லாபங்களுக்காக சமரசம் செய்து கொண்டதாக குற்றம் சாட்டினார். இது ஆளும் கட்சி பக்கத்திலிருந்து எதிர் கூச்சலைத் தூண்டிவிட்டது. உள்ளபடியே சென்ற முறை ஆந்திர சட்டமன்ற தேர்தலில் தெலுங்கு தேசம் மற்றும் பா.ஜ.க. கட்சி களுக்கு எதிராக, பாதிக்கப்பட்ட மாவோ யிஸ்ட்கள் கொடுத்த மறைமுக ஆதரவால் தான் காங்கிரஸ் வெற்றி பெற்றது என்ற புரிதலில் பா.ஜ.க. எம்.பி. அப்படிப் பேசி யிருக்கிறார்.ஆளும் ஐ.மு.கூ. ஆட்சிக்கு உள்ளேயே, மாவோயிஸ்ட்களை கையாள்வதில் கருத்து வேறுபாடு இருப்பதாக பா.ஜ.க. குற்றம் சாட்டியது. தங்கள் கட்சி ப.சிதம்பரத்திற்கு ஆதரவு கொடுப்பதாக பா.ஜ.க. மக்களவையில் பகிரங்கமாக அறிவித்தது. அதே சமயம் காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே சில தலைவர்கள் சிதம்பரத்தை எதிர்ப்பதாக வும் பா.ஜ.க. குற்றம் சாட்டியது. அதை விளக்கும் போது, பா.ஜ.க. நக்சலிசத்தை ஒடுக்குவதில், உள்துறை அமைச்சகத்துக்கும், மத்திய அரசுக்கும் முழுஆதரவு தருகிறது என்றும் அதே போல காங்கிரஸ் கட்சியும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியும் முழு ஆதரவு தருமா என்று ஒரு குழப்பமான கேள்வியை எழுப்பியது. பச்சை வேட்டையை நடத்தும் மத்திய அரசு மாநில அரசை ஈடுபடுத்தாமல், தயாரிப்பின்றி தாக்குதலை தொடங்கி விட்டார்கள் என்பது பா.ஜ.க. வாதம். சி.ஆர்.பி.எஃப். இதற்காகவே பயிற்சி எடுத்ததாக சிதம்பரம் கூறினார். மாநிலங் களுக்குத்தான் இந்த பிரச்சினையில் முதன்மைப் பொறுப்பு என்பதையும் வலியுறுத்தினார். அதன் மீது விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாகவும், ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி ராம்மோகனின் ஒரு நபர் ஆணையம் அந்த விசாரணைரயை செய்யும் என்றும் சிதம்பரம் பதில் அளித்தார். இரண்டு வாரத்திற்குள் அந்த விசாரணை அறிக்கை முடிக்கப்பட்டு, நாடாளுமன்றத்தில் வைக்கப்படும் என்பதாக சிதம்பரம் சமாதா னம் கூறினார். எதிர்கட்சி வரிசையையும், ஆளுங்கட்சி வரிசையையும் சமாதானப்படுத்த, அடுத்த தந்திரத்தை சிதம்பரம் கையாண்டார். எங்களை, உங்களை நம் எல்லோரையும் எதிர்த்துதான் மாவோயிஸ்ட்கள் ஆயுதப் போராட்டத்தில் நம்பிக்கைக் கொண்டவர்கள் என்று ஒரு போடு போட்டார். இதுவே நாடாளுமன்றவாதிகள் மத்தியில் ஒற்றுமை யை ஏற்படுத்தும் என்பது அவரது எதிர்பார்ப்பு. ஆனால் பச்சை வேட்டையால் பலன் பெறுகின்ற, சத்தீஸ்கர் மாநில பா.ஜ.க. அரசாங்கம், தனது நன்றியை சிதம்பரத்திற்கு தெரிவித்துக் கொள்வது போல, மேற்கு வங்கத்தில் பலன் பெறக்கூடிய மார்க்சிஸ்ட் அரசாங்கமும், மறைமுகமாக மகிழும் என்பது எதிர்பார்ப்பு. ஆனால் அதன் எதிரொலியாக, மேற்கு வங்கத்தில் பச்சை வேட்டையின் மூலம் சி.பி.எம். அரசுக்கு ஆதரவு தருவது தவறு என்ற குரலை, நாளைய மேற்கு வங்க ஆட்சியாளராக வரயிருக்கின்ற மம்தா பேனர்ஜி கிளப்பினார். இதுவே ஐ.மு.கூ. என்ற ஆளும் கூட்டணிக்குள் இருக்கும் கருத்து வேறுபாட்டை வெளிச்சம் போட்டு காட்டியது.பா.ஜ.க.வின் அருண்ஜெட்லி சில புதிய செய்திகளையும் கூறினார். அதில் பெருவாரியாக மாவோயிஸ்ட்கள் பெற்றிருக்கும் ஆயுதங்கள், இந்திய பாதுகாப்பு படையிடம் இருந்து பறித்தெடுத்த ஆயுதங்கள் என்ற செய்தியைக் கூறினார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் பொதுச் செயலாளர்களில் ஒருவருமான, திக்விஜய்சிங் ஏற்கனவே சிதம்பரத்தை கடுமையாகத் தாக்கியிருந்தார். நக்சலைட் ஒருவரது துப்பாக்கியிலிருந்தும், காவல்துறையின் துப்பாக்கியிலிருந்தும் வெளிவருகின்ற ஒவ்வொரு தோட்டாவும், ஒவ்வொரு இந்திய குடிமகனது உயிரைப் பறிக்கப்போகிறது என்பதாக திக்விஜய்சிங் கூறியிருந்தார். அதன் மூலம் உள்நாட்டுப் போரில் அரசப்படைகள் தாக்குதல் நடத்துவதைக் கேள்விக்குறி யாக்கியிருந்தார். நாட்டுப் பற்றை உயர்த்திப் பிடிக்கும் பார்வையும் அதில் வெளிப்பட்டது. அவரது அறிக்கையை முன்னாள் மத்திய அமைச் சரும், புதிய மாநிலங்களவை உறுப்பினரு மான மணிசங்கர் அய்யர் ஆதரித்துள்ளார். அடுத்து இன்னொரு மூத்த காங்கிரஸ் தலைவரான கேஷவ்ராவ், மாவோயிஸ்ட் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு பேச்சு வார்த்தை மட்டுமே ஒரே தீர்வு என்று கூறியுள்ளார்.மேற்கண்ட கருத்து வேறுபாடுகள் எதுவும் செயலுக்கு செல்வதில்லை. ஆனால் மாவோயிஸ்ட்கள் பெயரைச் சொல்லி, பழங்குடி மக்கள் மீது நடத்தப்படும் போர் செயலுக்குச் செல்கிறது. அதை நடத்தும் இடத்தில் உள்துறை அமைச்சர் இருக்கிறார். அதனால் பயன்படும் இடத்தில், மாநில பா.ஜ.க. அரசு மட்டும் தான் இருக்கிறதா? இவ்வாறு எழும் கேள்விகளுக்கு இன்னொரு வகையில், முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர் பதில் கூறுகிறார். ஆங்கில ஊடகத்தில் தன் பெயரிலேயே கட்டுரையாக எழுதிய, அந்த தமிழ் ஐ.ஏ.எஸ். அதிகாரி, தமிழகத்தில் மாசுபடுத்தலில் பிரபலமாக உள்ள ஸ்டெர் லைட் ஆலை நிறுவனத்திற்கு உதவவே ப.சிதம்பரம் இந்தப் போரை நடத்துகிறார் என்கிறார். பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி நேரடியாக ராணுவத்தை இறக்கக்கூடாது எனக்கூறியும், அதை மீறி சிதம்பரம் துணை ராணுவத்தின் மூலம் போர் தொடுக்கிறார் என்பது அந்த மூத்த அதிகாரியின் கருத்து. தனது ஏப்ரல்4 லால்கர் பயணத்தின் போது, சிதம்பரம் மாவோயிஸ்ட்களை காடுகளுக்குள் ஒளிந்திருக்கும் கோழைகள் என்று அழைத்ததனால், ஆயுதம் தாங்கிய மாவோயிஸ்ட் படையினர் இரண்டே நாட் களில் தங்களது தாக்குதலை நடத்திக் காட்டிவிட்டனர் என்பது அவரது வாதம். நடந்த மோதலுக்கு முழுக்காரணமும் சிதம்பரம்தான் என்று அந்தக் கட்டுரையாளர், இந்த நிகழ்ச்சிகளை கோடிட்டும் மட்டும் காட்டவில்லை. மாறாக பொருளாதார லாப உறவுகள் அதற்கு பின்னால் இருப்பதாக ஆய்வு செய்கிறார். தூத்துக்குடியில் 15 ஆண்டுகளாக மாசுபடுத்தலை, உச்சகட்ட மாக செய்து வரும் ஸ்டெர்லைட் தாமிரம் உருக்கு ஆலையின் தாய் நிறுவனமான வேதாந்தா என்ற பெரு வணிக குழுமம் பற்றி பேசுகிறார். அத்தகைய வேதாந்தா குழுவின ருடன் சிதம்பரத்திற்குள்ள பொருளா தார உறவுகள், அந்தக் கட்டுரையாளரின் முக்கிய குறிப்புகளாக உள்ளன. 2003ம் ஆண்டில் மும்பை உயர்நீதி மன்றத்தில், லண்டனை தளமாகக் கொண்ட வேதாந்தா பன்னாட்டு மூலதன நிறுவனத்திற் காக சிதம்பரம் வாதாடினார் என்ற செய்தியை அம்பலப்படுத்துகிறார். அதையடுத்து அதே வேதாந்தா நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் ஒருவராக மாறுகிறார் என்றும் ஆதாரம் தந்துள்ளார். 2004ம் ஆண்டு மத்திய அமைச்சரவையில் நிதியமைச்சர் பொறுப்பை ஏற்பதற்கு ஒரு நாள் முன்பு மே 22ம் நாள், தனது வேதாந்தா உறவை ராஜினாமா செய்கிறார் என்றும் அம்பலப்படுத்தியுள்ளார். அந்த வேதாந்தா நிறுவனம்தான் உலகத்தி லேயே பெரிய அளவுக்கு அலுமினியத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது. இந்தியாவின் ஒட்டுமொத்த அலுமினிய தயாரிப்பான 13 லட்சம் டன்களில், 3,85,000 டன் உற்பத்தி யை வேதாந்தா செய்கிறது. ஒரிசாவில் உள்ள ஆதிவாசிகள் பகுதியில், அலுமினியத்திற்கான கனிம வளத்தை ஜர்சுகுடா என்ற இடத்தில் வேதாந்தா கைப்பற்றியுள்ளது. அதை யொட்டி லாஞ்சிகார் பகுதியில் 50 லட்சம் டன் அலுமினிய சுத்திகரிப்பு ஆலையையும் வைத்துள்ளது. அதே போல 3,750 மெகா வாட் மின் உற்பத்தி ஆலையையும் அதே இடத்தில் நிறுவியுள்ளது. அதன் துணை நிறுவனமான பால்கோவின் உற்பத்தி 10 லட்சம் டன் வரை உயர்ந்துள்ளது. லாஞ்சி கார் பகுதியில் மட்டும் வேதாந்தா நிறுவனம் பாக்சைட் கனிம வளத்தை 750 லட்சம் டன் தேக்கி வைத்துள்ளது. மேலும் அதே அளவு பாக்சைட் எடுக்க அரசு வேதாந்தாவிற்கு வாக்குறுதி கொடுத்துள்ளது. இது மேலும் 50 ஆண்டுகளுக்கு பாக்சைட் வளத்தை கொள்ளையடிக்க அந்த தனியாருக்கு உதவிகரமாக இருக்கும். ஜர்சுகுடாவில் இன்னொரு பெரிய உருக்காலையை தொடங்கப் போவதாகவும் வேதாந்தா கூறி வருகிறது. இவை அனைத்துமே பழங்குடி மக்களின் பாரம்பரியமான செல்வங்கள். இந்தக் கொள்ளைக்கு நேரடி தொடர்பில் உள்ள ஒருவரே, இத்தகைய போரை இந்தப் பகுதி மக்கள் மீது நடத்த விரும்புகிறார் என்பதுதான் அந்த ஓய்வு பெற்ற அதிகாரியின் விவரிப்பாக இருக்கிறது. நாட்டுப்பற்றுக்கு எதிராக, ஸ்டெர்லைட் வீட்டுப்பற்றுதான் தண்டேவாடா தாக்குதல் களுக்கும் காரணம் எனும் போது அதிர்ச்சி யாக இருக்கிறது.
Subscribe to:
Posts (Atom)