சிறப்புக் கட்டுரை: மோடி - ஷா வேறுபாடுகள் மேஜைக்கு வந்தன!
டி.எஸ்.எஸ்.மணி
‘மோடி - அமித் ஷா: மோதல் ஆரம்பம்?’ என்ற தலைப்பில் மின்னம்பலம் ஒரு கட்டுரையை ‘டிஜிட்டல் திண்ணை’யில் வெளியிட்டிருந்தது. இன்னமும் சிறிது கவனமாக கடந்த சில நாட்களாக நடக்கும் நிகழ்ச்சிகளையும், ஊடகங்களில் வந்த நடுவண் அரசாங்கத்தின் எதிரொலிகளையும் நாம் காண வேண்டும்.
‘குடியுரிமை திருத்தச் சட்டம்’, ‘தேசிய குடிமக்கள் பதிவேடு’ ஆகியவற்றைப் பற்றிய விவாதங்கள் அவை. அசாம் உட்பட வடகிழக்கு மாநிலங்களின் ‘இடம்பெயர்ந்த மக்கள்’ பற்றியே அந்தச் சர்ச்சைகள் தொடங்கின. அசாமில் குடியுரிமை திருத்தச் சட்டம் மூலம், 19 லட்சம் பேர் குடியுரிமை கிடைக்காதோர் பட்டியலில் சேர்க்கப்பட்டனர். அதில், 13 லட்சம் பேர் முஸ்லிம் அல்லாதவர்கள்.
40 ஆண்டுகளுக்கு முன்பே, ‘அனைத்து அசாம் மாணவர் சங்கம்’ தங்கள் மாநிலத்துக்குள் வந்துள்ள வங்காளிகள், தங்களுக்குச் சேர வேண்டிய கல்வி, வேலைவாய்ப்பை ஆக்கிரமித்துக் கொண்டுள்ளனர் என்று கூறி, அவர்களை வெளியேற்ற நடத்திய போராட்டத்தின் தொடர்ச்சியாக, காங்கிரஸ் ஆட்சியில், ‘அசாம் ஒப்பந்தம்’ போடப்பட்டது என்பதும், அதன் தொடர்ச்சி இப்போது நடக்கும் போராட்டத்திலும் வெடிக்கிறது என்றும் காண முடிகிறது. அதனாலேயே, அசாம் மாநிலத்தில் வாழும் இந்துக்களும், போடா பழங்குடிகளும், கரிபி அங்கலாங் பழங்குடிகளும், ஜார்க்கண்டிலிருந்து அசாம் மாநிலம் சென்று மலையகங்களில் தோட்டத் தொழில் செய்வோரும் சேர்ந்து தெருவில் இறங்கி போராடினார்கள் என்பவை சென்ற வாரத்து நிகழ்ச்சிகள்.
அவர்கள் தங்களுக்குக் குடியுரிமை மறுக்கப்பட்டதற்காகவும், வங்காளிகளுக்குக் குடியுரிமை கொடுக்கப்பட்டதற்காகவும் இரு வெவ்வேறு காரணங்களுக்காகப் போராடினார்கள். அதே நேரம் அங்குள்ள முஸ்லிம்களும் தங்களுக்கு மறுக்கப்பட்டதை எதிர்த்து போராடினார்கள். இந்த இரு துருவங்களும் இணைந்து போராடியதால், ராணுவம் ஒன்றும் செய்ய இயலாத நிலை உருவானது. அதுவும் நடுவண் அரசின் கவனத்துக்குச் சென்றது.
முஸ்லிம், முஸ்லிம் அல்லாதோர் என்ற பிரிவினை இல்லாமல் மக்கள் போராடினார்கள் என்பதை கண்டு நடுவண் அரசு துணுக்குற்று இருக்கிறது. அதுவே மாணவர்கள் போராட்டத்திலும் டெல்லி, உ.பி, பெங்களூரு, தமிழ்நாடு, கேரளம் என தொடர்ந்தது.
இந்தியத் தலைமை அமைச்சரைப் பொறுத்தவரை, நாட்டுக்குள்ளும் வெளியிலும் வருகிற எதிர்ப்பை கவனித்து, நிர்வாகத்தை நடத்திச் செல்ல வேண்டிய தேவை இருக்கிறது. அதே நேரம், ‘தேசிய குடிமக்கள் பதிவேடு’ என்பது பெரும் அச்சத்தைக் கிளப்பி விட்டது என்பது யாவரும் அறிந்ததே. அதையொட்டிதான், அமித் ஷா பேசிய பேச்சுகளும் டெல்லி பொதுக்கூட்டத்தில், மோடி பேசிய பேச்சுகளும் வேறுபட்டு உள்ளதை எதிர்க்கட்சியினர்கூட விவாதமாக்கினார்கள். அத்தகைய சூழலில், கடந்த வாரத்தில், வெளியான செய்திகள் கூறும் பின்னணியை நாம் கவனிக்க வேண்டும்.
மோடியின் டெல்லி உரைக்குப் பிறகு சில நாட்களாக நடுவண் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஊடகச் செய்திகளை வெளியிடவில்லை. மாறாக, உள் துறையின் ராஜாங்க அமைச்சர் கிஷோர் ரெட்டிதான் செய்திகளை வெளியிட்டார் அல்லது வெளியிட வைக்கப்பட்டார். முதலில், ‘சட்டமாக ஆக்கப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டம் அமலாக்கப்பட விதிகள் தயாரிக்கப்பட வேண்டும். அத்தகைய விதிகளைத் தயாரிக்கும் காலத்தை தள்ளிப்போட்டுள்ளோம்’ என்பதே. இதை, சிஏஏ எதிர்ப்புப் போராட்டங்களின் விளைவே என எடுத்துக் கொள்ளலாம்.
அடுத்து, ‘குடியுரிமை திருத்தச் சட்டம் பற்றிய கருத்துகளை, பரிந்துரைகளைப் பொதுமக்கள் அனுப்பலாம்’ என அதே, உள்துறையின் ராஜாங்க அமைச்சர் கிஷோர் ரெட்டி கூறினார். அதுவும் உள்துறை அமைச்சரின் மூலம் வெளியிடப்படவில்லை. நமக்கு இதில் புரியாத செய்தி, ‘வண்டிக்குப் பின்னால் குதிரையைக் கட்டுவதா? குதிரைக்குப் பின்னால் வண்டியைக் கட்டுவதா?’ என்பதுதான். ஏனென்றால், சட்டம் உருவாவதற்கு முன்னால், அதன் உள்ளடக்கம் ஒரு நகல் அறிக்கையாக (மசோதாவாக) வெளிவரும். ஆள்வோர் அதன் மீது பொதுமக்களின் கருத்தறிய விரும்பினால், வரை நகலை நாடாளுமன்றத்துக்குக் கொண்டு செல்வதற்கு முன்பே அதை பொது வெளியில் வெளியிட்டு, பொதுமக்களிடம் கருத்துக் கேட்பார்கள். ஆனால், இங்கே எல்லாமே தலைகீழாக நடக்கிறது. குடியுரிமை சட்டத் திருத்தம் என்ற வரை நகல், மக்களவைக்குக் கொண்டு செல்லப்பட்டு, நிறைவேறி, மாநிலங்களவைக்குக் கொண்டு செல்லப்பட்டு நிறைவேறி, குடியரசுத் தலைவரது ஒப்புதலையும் அவசரமாகப் பெற்று, சட்டமாகி விட்டது. அதன்பிறகு, நாடெங்கும் மத வேறுபாடு இன்றி பொதுமக்களின் எதிர்ப்பு உருவான பிறகு, ‘பொதுமக்களின் பரிந்துரைகளை அனுப்பலாம்’ என்றும், ‘சட்டத்தை அமலாக்குவதற்கான விதிகளை உருவாக்க கால தாமதம் ஆகும்’ என்பதாகவும், உள்துறை ராஜாங்க அமைச்சர் மூலம் வெளியிடப்படுகிறது. இந்த இடத்தில்தான் ‘புரிந்துகொள்பவர்களுக்குப் புரியும்’ என்பதாக அது பார்க்கப்படுகிறது. ஆள்வோருக்கு, அவசரம் எப்போதுமே திருப்பி அடிக்கும் வாய்ப்புடன் கூடியது என்பதை இது உணர்த்தியுள்ளது. இடையில், மோடியின் மனத்தை ஒட்டியவராகக் கருதப்படும், முன்னாள் நடுவண் அமைச்சரும், இன்றைய துணைக் குடியரசுத் தலைவருமான வெங்கையா நாயுடு அவர்கள், ‘அதிருப்திகள் ஜனநாயகத்தின் சாராம்சம்’ என்று கூறியுள்ளார்.
இவை அனைத்துக்கும் பிறகே, செவ்வாய்க்கிழமை காலையில் அவசரமாகக் கூட்டப்பட்ட நடுவண் அமைச்சரவை சில முடிவுகளை எடுத்துள்ளது. அந்த முடிவுகளும் மதியம் அமைச்சர்கள் ஜவடேகர், பியூஸ் கோயல் மூலம் ஊடகத்தாருக்கு அறிவிக்கப்படும் என்றுதான் கூறப்பட்டு செயல்படுத்தப்பட்டது. அப்போதும் உள்துறை அமைச்சர் மூலம் அது வெளியிடப்படவில்லை. ஆனால் அதற்குப் பிறகே, உள்துறை அமைச்சர் அமித் ஷா, ‘பிரதமர் மோடி கூறியது சரிதான். இப்போது தேசிய குடிமக்கள் பதிவேடு செயல்பாட்டுக்கு வராது. செயல்பாட்டுக்கு வரும் தேசிய மக்கள்தொகை பதிவு என்பது முற்றிலும் வேறுபட்டது’ என்ற செய்தியை வெளியிட்டுள்ளார். ஆள்வோருக்குள் கருத்து வேறுபாடுகள் வருவது புதிதும் அல்ல. தவறும் அல்ல. ஆனால், அது பொதுமக்களையும், நாட்டின் சட்ட ஒழுங்கையும் பாதிக்கும்போது, எப்படி அதை வழமைதானே என்று ஏற்றுக்கொள்ள முடியும்?