ஆகஸ்ட் 23ம் நாள் மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வன இலாகா, ஒரிசா மாநிலத்தில் பாக்சைட் என்ற தாதுப்பொருளை தோண்டி எடுக்கும் சுரங்கத்தை நடத்தி வரும் வேதாந்தா நிறுவனத்திற்கு அனுமதி மறுத்துள்ளது. வேதாந்தா நிறுவனம் வனஉரிமை சட்டத்தையும், சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டத்தையும் உள்ளிட்ட பல்வேறு விதிகளை மீறியிருப்பதாகவும், அதனால் தான் அதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது என்றும் அறிவித்துள்ளது. யார் இந்த வேதாந்தா நிறுவனம் என்று கேட்டால், இங்கிலாந்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் ஒரு பன்னாட்டு மூலதன நிறுவனம் என்பதாகக் கூறுகிறார்கள். ஆனால் அதன் அதிபர் அல்லது முதலாளி யார் என்று வினவினால், அனில் அகர்வால் என்ற வடநாட்டு இந்தியர் என்ற செய்தியும் வெளிவருகிறது. குறிப்பாக வேதாந்தா நிறுவனம் பற்றி புரிய வேண்டும் என்றால், தமிழ்நாட்டில் தூத்துக்குடி நகரில் கடந்த 15 ஆண்டுகளாக சுற்றுச்சூழலை முழுமையாக கெடுத்து வருவதற்கு பெயர் பெற்ற ஸ்டெர்லைட் நிறுவனம் தான் என்று தெரிய வருகிறது.
ஸ்டெர்லைட் தாமிர உருக்காலைத் திட்டம் என்ற நிறுவனம், தூத்துக்குடியில் அடிக்கல் நாட்டப்பட்ட காலத்திலிருந்தே கடுமையான குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி வருகிறது. சமீபத்தில் அந்த ஸ்டெர்லைட் நிறுவனத்தின் துணைத் தலைவர் வரதராசன் கைது செய்யப்பட்டார். ரூ.746 கோடியை வரி செலுத்தாமல் ஏமாற்றியதாக அவர் குற்றம் சாட்டப்பட்டார். உண்மைகளை மறைத்து, ஏமாற்று வேலை செய்து வரிகட்டுவதிலிருந்து தப்பி விட்டதாக குற்றம் சாட்டப்பட்டார். 1962ம் ஆண்டின் சுங்கவரிச் சட்டப்படி பிரிவு 135(1)(டி) ஆகியவற்றில் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதன் மூலம் பெரும் பணக்கார கம்பெனி என்று அறியப்பட்ட ஸ்டெர்லைட் கள்ளத்தனமான சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டது பகிரங்கமானது.
அடுத்து அதே தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை ஏற்றுமதி செய்த சரக்குகளில் கள்ளத்தனமாக, கணக்கில் வராத சரக்குகளை அனுப்பியது கையும், களவுமாக பிடிப்பட்டது. கலால் வரி அதிகாரிகள், தாமிர கழிவுகளில் இருக்கும் தங்கத்தையும், வெள்ளியையும் பிரிப்பதற்காக என்ற பெயரில் வெளிநாட்டிற்கு கப்பல் மூலம் ஸ்டெர்லைட் ஆலை ஏற்றுமதி செய்த போது, அதில் கணக்கில் காட்டப்படாத விலையுயர்ந்த தாதுப்பொருட்களான பிளாட்டினமும், பல்லடியமும் இருந்தன என்பதை கண்டுபிடித்தார்கள். தூத்துக்குடிமதுரை சாலையில் இதுபோல 36 கண்டெய்னர்கள் தாமிர கழிவுகளை ஏற்றிச் செல்லும் போது பிடிபட்டன. அதிலிருந்த ஆவணங்கள், தாமிரக் கழிவுகள் தங்கத்தையும், வெள்ளியையும் கொண்டிருப்பதாகவும், அவற்றை பிரித்தெடுக்க வெளிநாட்டிற்கு அனுப்பப்படுவதற்காக சென்னை துறைமுகத்திற்கு எடுத்துச் செல்லப்படுவதாகவும் கூறின. ஆனால் அதில் ரூ.18 கோடி மதிக்கத்தக்க விலையுயர்ந்த பிளாட்டினம் மற்றும் பல்லடியம் இருந்தது பிடிப்பட்டுள்ளது. கடந்தகால தாமிர கழிவுகள் ஏற்றுமதியில் பலநூறு கோடி ரூபாய்கள் வரிகட்டாமல் முழுங்கப்பட்டுள்ளன என்பது தெரியவந்துள்ளது.
இப்போது ஸ்டெர்லைட் ஆலையின் தாய் மற்றும் தந்தை நிறுவனமான வேதாந்தா சிக்கல்களை சந்திக்கிறது. வடஇந்தியாவில் மதிப்புமிக்க தாதுப்பொருட்களின் சுரங்கங்களை உருவாக்கி, அதன் மூலம் தனது தொழிலை நடத்தி வருவது தான், வேதாந்தா என்ற பன்னாட்டு நிறுவனம். தாமிர சுரங்கங்களை வெட்டி, அந்த கனிமப்பொருளை தோண்டியெடுத்து, அதை உருக்க ஆலையை உருவாக்கியது தான் வேதாந்தா. தாமிர உருக்கு ஆலையால் சுற்றுச்சூழல் கடுமையாகக் கெட்டு விடும் என்பதனால், மஹாராஷ்டிரா மாநிலத்தில் காலூன்ற முடியாமல் விரட்டப்பட்ட நிலையில் தான் தமிழ்நாட்டை குப்பைத்தொட்டி என்ற கருத்தில் கொண்டு, தூத்துக்குடி நகரில் வந்திறங்கியது இந்த ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலை.
அடிக்கல் நாட்டப்பட்ட போதே கடுமையான எதிர்ப்பை ஸ்டெர்லைட் ஆலை தூத்துக்குடியில் எதிர்கொண்டது. அதன்பிறகு மீனவர் இயக்கங்களும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், தொழிற்சங்கவாதிகளும், அரசியல்வாதிகளும் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து பெரும் போராட்டங்களை நடத்தினர். போராட்ட முன்னோடிகளை பல்வேறு வழிகளில் நீர்த்துப்போக வைத்த இந்த ஆலை தொடர்ந்து விபத்துக்களை ஏற்படுத்திக் கொண்டு, சுற்றுச்சூழலை கடலிலும், நிலத்தடி நீரிலும், காற்றிலும் கெடுத்துக் கொண்டு வருகிறது. பின்தங்கிய மக்களுக்கு பல வளர்ச்சித் திட்டங்களை, தானே உருவாக்கிய அரசுசாரா நிறுவனங்கள் மூலம் அளித்து, தனக்கு எதிரான போராட்டங்களையும், நீர்த்துப் போக செய்து வருகிறது. இப்போது அறிவிக்கப்பட்டுள்ள சட்டவிதிகளையே மீறியதற்காக பிடிபட்டு, அம்பலமாகி நிற்கிறது.
தூத்துக்குடியைப் போலவே, ஒரிசாவிலும் தனது விதிமீறல், சட்டமீறல் ஆகியவற்றால் இப்போது மாட்டிக்கொண்டுள்ளது. ரூ.50,000 கோடி வரை ஒரிசா மாநிலத்தில் மூலதனமிட திட்டமிட்டு, நியாம்கிரி மலையில் வேதாந்தா நிறுவனம் தனது பாக்சைட் சுரங்கத்தையும், சுத்திகரிப்பு ஆலையையும் நடத்தி வருகிறது. இந்த நியாம்கிரி மலைத்தொடர் அதிகமான அளவில் பாக்சைட் தாதுப்பொருளைக் கொண்டது. அந்த மலைகளை உடைத்து, நடு வயிற்றில் குத்தியதுப் போல வேதாந்தாவின் ஆலை அமைந்துள்ளது. வெண்புகையை கக்கி வரும் அந்த ஆலை, பசுமையான மலைப்பகுதியில் ஒரு பெரும் சொட்டையை ஏற்படுத்திய நிலையில், 100 கி.மீ.க்கு மேல் தனது விரிவாக்கத்தை செய்து வருகிறது. சுரங்கத்திலிருந்து வெட்டப்பட்ட மண் மலைப்போல் குவிந்துள்ளது. நியாம்கிரி மலையின் முக்கியப் பகுதியிலிருந்து பழங்குடி மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். அவர்களில் சிலருக்கு குடியிருப்பு கட்டிக் கொடுக்கப்பட்டாலும், தங்கள் வாழ்வாதாரத்திற்கு வேலை கிடைக்கவில்லை என்பதாக அந்த பழங்குடி மக்கள் அலறுகிறார்கள். காடும், மலையும் தான் தங்களது பாரம்பரிய வாழ்வாதாரம் என்று அவர்கள் கூறுகிறார்கள்.
சமீபத்தில் அமைச்சகத்திற்கு முன்வைத்த அறிக்கையில் என்.சி.சக்சேனா, நியாம்கிரி மலையில் சுரங்கம் தோண்டுவதை அனுமதித்தால், 2 முக்கிய பழங்குடி இனத்தவர் அதனால் தங்களது வாழ்வாதாரத்தை இழப்பார்கள் என்று கூறியுள்ளார். சத்திஷ்கரிலிருந்தும், மஹராஷ்டிராவிலிருந்தும் கொண்டு வரப்படும் தாதுப்பொருட்களை வைத்து அங்கே சுத்திகரிப்பாலை நடக்கிறது. ஒரிசா மாநிலத்தில் உள்ள காலஹண்டி மாவட்டத்தில் இருக்கும் லாஞ்சிகார் பகுதியில் இந்த வேதாந்தாவின் அலுமினிய சுத்திகரிப்பு ஆலை இருக்கிறது. அந்த மலைப்பகுதி குண்டியா கோந்த் என்ற பழங்குடி மற்றும் டோங்கோரியா என்ற பழங்குடி இனத்தவரின் பாரம்பரிய இருப்பிடம். வனஉரிமை சட்டத்தின் கீழும், கிராம சபை சட்டத்தின் கீழும் வனவாசிகளுக்கான உரிமைகள் அங்கீகரிக்கப்படுவதால் அவற்றை மீறி, இந்த வேதாந்தாவின் அதாவது ஸ்டெர்லைட்டின் பாக்சைட் சுரங்கத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்பதே மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வன இலாகாவின் குற்றச்சாட்டு.
மத்திய அரசால் நியமிக்கப்பட்ட ஒரு 3 உறுப்பினர் குழு, அந்த வட்டாரத்தில் நேரடியாக இறங்கி ஆய்வு அறிக்கையை பிப்ரவரி 25ம் நாள் முன்வைத்துள்ளது. அதில் சமூக வளர்ச்சிக்கான ஆய்வு மையத்தின் சார்பாக சட்ட நிபுணர் உஷா ராமநாதன், டேஹ்ராடன்னை சேர்ந்த வன உயிர்கள் பாதுகாப்பு முன்னாள் கூடுதல் இயக்குநர் வினோத் ரிஷி, புவனேஸ்வரிலுள்ள சுற்றுசூழல் வன அமைச்சகத்தின் வன பாதுகாப்பு தலைமை அதிகாரி ஜே.கே.திவாரி ஆகியோர் அத்தகைய ஆய்வை நடத்தி, தங்கள் பரிந்துரைகளை அமைச்சகம் முன் வைத்துள்ளனர். அதில் டோங்கிரியா கோண்ட் என்ற பழங்குடி மக்கள், மேற்கண்ட திட்டத்தால் எந்த அளவிற்கு பாதிக்கப்பட்டு, கோபம் கொந்தளிக்க எழுச்சி பெற்றுள்ளனர் என்பது விவரிக்கப்பட்டுள்ளது. அவர்கள் வாழ்க்கை வன உயிர்கள் சம்மந்தப்பட்டதாகவும், மருந்தாகப் பயன்படும் தாவரங்கள், பழங்கள், வேர்கள் ஆகியவை சம்மந்தப்பட்டதாகவும் இருப்பது அறியப்பட்டது. அவை அனைத்துமே வேதாந்தா திட்டத்தால் பாதிக்கப்படுகிறது. டோங்கார் என்று அழைக்கப்படும் அவர்களது கடவுளான நியாமராஜா, வேதாந்தாவால் தோண்டப்பட்டும், வெடிக்கப்பட்டும் சிதறுவதை அந்த பழங்குடி மக்கள் தாங்கத் தயாராக இல்லை. மேற்கண்ட பாதிப்புகள் அந்த போர்க்குணம் மிக்க பழங்குடி மக்களை, மாவோயிஸ்ட்கள் பக்கம் தள்ளி விடுகிறது என்ற உண்மையையும் மத்திய அரசு கவனிக்காமல் இல்லை. அப்படிப்பட்ட சூழலில் தான், வேதாந்தா என்ற அந்த பணக்காரத் திமிர் பிடித்த கம்பெனியின் சட்ட விரோத, விதி மீறல் செயல்களுக்கு ஒரு தடை போடப்பட்டுள்ளது. இந்த தடையை தொடர்வதற்கு மத்திய அரசிற்கும், அரசியல்வாதிகளுக்கும் மனஉறுதி தொடருமா என்பது கேள்விக்குறியே.