Friday, December 27, 2019

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் நிலை மாறுகிறாரா?

சிறப்புக் கட்டுரை: ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் நிலை மாறுகிறாரா?

 சிறப்புக் கட்டுரை: ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் நிலை மாறுகிறாரா?

டி.எஸ்.எஸ்.மணி

வியாழக் கிழமை டிசம்பர் 26 அன்று ஆங்கில ஏடுகளில் ஒரு செய்தி. டைம்ஸ் ஆப் இந்தியா "ஹிந்து, முஸ்லீம் பிளவு ஏற்படாது" என்று மோகன் பகவத் கூறியதாக தலைப்பிட்டு செய்தி வெளியிட்டது. ஹிந்து ஏடு, " 130 கோடி இந்தியர்களும் ஹிந்து சமூகம்" என்று தலைப்பிட்டு, மோகன் பகவத் கூறியதாக வெளியிட்டிருந்தது. இதனைப் பார்த்த அனைவரும் ஹிந்து ராஷ்டிரீயத்தை ஏற்படுத்த, இந்திய மக்களிடையே, சிறுபான்மை மதத்தவரை ஓரங்கட்டுவது தானே ஆர்.எஸ்.எஸ் வழி என்று ஆச்சரியப்பட்டிருப்பார்கள். எல்லோருக்கும் இருப்பது போல நமக்கும் ஒரே ஆச்சரியம்.
பா.ஐ.க.வின் சமீபகால செயல்பாடுகளை கூர்ந்து கவனிப்பவர்கள், சி.ஏ.பி (குடியுரிமை சட்டத் திருத்த நகல் அறிக்கை) கொண்டு வரப்படும்போதே, சிறுபான்மையினரை ஒதுக்குவதை மாற்றி, கிருத்துவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், பவுத்தர்கள் ஆகியோரை உள்வாங்கிக் கொண்டு முஸ்லிம்களை மட்டுமே தனிமைப்படுத்துவது என்ற புதிய தந்திரத்தை எடுத்துள்ளார்கள் என்று அறிவார்கள். அதுவே, ஆர்.எஸ்.எஸ்.அமைப்பின் கொள்கையாக இருக்கும் எனவும் நாடு தழுவிய விவாதம் உண்டு.
அத்தகைய முஸ்லிம்களை தனிமைப்படுத்துவது என்ற கொள்கை, அசாமில் தொடங்கி, நாடெங்கும் தோல்வியை சந்தித்தது. ஏன் என்றால் அசாமில், பாதிக்கப்படும் ஹிந்துக்கள் அதிகம் பேர் முஸ்லிம்களுடன் சேர்ந்து தெருவுக்கு வந்து போராடினார்கள். உத்தரப் பிரதேசத்தில், முஸாபர்பூர் மாவட்டத்திலும், பிஜனுர் மாவட்டத்திலும், போராட வந்த முஸ்லிம்கள் மீது காவல்துறையை விட்டு யோகி அரசாங்கம் துப்பாக்கி சூடு நடத்தினாலும், அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகம் உட்பட அனைத்து பல்கலைக் கழகங்களிலும், கல்லூரிகளிலும், சமாஜ்வாடி கட்சியின் மாணவர் அணி பெரும் அளவில் இந்து மாணவர்களை திரட்டி, முஸ்லீம் மாணவர்களுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டதை கண்கூடாக காண முடிந்தது. உ.பி.யின் எல்லா நகரங்களிலும், சமாஜ்வாடி கட்சி தொண்டர்கள் குறிப்பாக யாதவர்கள் என்று ஊருக்கே தெரிந்தவர்கள் போராட்டங்களில் பெரும் பங்கு வகித்ததை காண முடிந்தது. அவர்களுடன் சேர்ந்து, இடது சாரி கட்சியினரும், பீம் ஆர்மி என்ற சந்திரசேகர ஆசாத் ராவண தலைமையிலான தலித் சமூக தொண்டர்களும் பெரும் அளவில் கலந்து கொண்டனர். அதை பார்த்த மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியும் போராட்டத்தில் இறங்க ஆயத்தமாகி வருகின்றனர்.
அதுவே கர்நாடகாவில், மங்களூரு, பெங்களூரு நகரங்களில், இந்து மாணவ, மாணவிகள் பெரும் அளவில் முஸ்லிம்களுடன் சேர்ந்து தெருவுக்கு வந்து போராடியதையும் காண முடிந்தது. நமது சென்னையில்கூட வள்ளுவர் கோட்டத்தில் நடத்தப்பட்ட பல்வேறு அமைப்புகளின் ஓன்று கூடலில், அதிக அளவில் முஸ்லிம் அல்லாத இளம் ஆண்களும், பெண்களும் முஸ்லிம் ஆண்கள், பெண்களுடன் இணைந்து கலந்து கொண்டது ஒரு செய்தியை கூறிக் கொண்டே இருந்தது. அதுதான், இந்தியாவை முஸ்லிம்கள், முஸ்லீம் அல்லாதோர் எனப் பிரிக்க முடியாது என்ற செய்தியாகும்.
பாஐகவிற்கும் நாடு ஒரு செய்தியைக் கூறுகிறது. என்.ஆர்.சி. என்ற குடியுரிமை மக்கள் பதிவேடு கொண்டுவரப்பட்டால், எதிர்ப்போம் என்று பல மாநிலங்கள் அறிவித்து விட்டன. சட்டமாக நிறைவேற்றப்பட்ட சிஏஏ வையும், வர இருப்பதாக கூறப்பட்ட என்.ஆர்.சி. யையும் எதிர்ப்போம் என்பதே பல மாநிலங்களிலும், எதிரொலிக்கிறது. கர்நாடகா பாஜக முதல்வர் எடியூரப்பவும், என்.ஆர்.சி. யை ஏற்கமாட்டோம் எனக் கூறிவிட்டார். பாஜகவின் கூட்டணியாக உள்ள "சிரோன்மணி அகாலி தள்" கட்சியும் எதிர்த்து விட்டது. நேற்றைய பாஜகவின் கூட்டணியாக சிவ சேனையும், இன்றைக்கும் கூட்டணியாக உள்ள நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளமும் என்.ஆர்.சி. யை எதிர்த்து விட்டன. பிரதமர் மோடியும் தனது டில்லி உரையில் "நாடெங்கும் என்.ஆர்.சி. வராது" என்று கூறி விட்டார். கடைசியாக உள்துறை அமைச்சர் அமித் ஷா வும் அதையே வழி மொழிந்து விட்டார்,
இருபது நாட்களாக நாட்டையே குலுக்கிக் கொண்டிருந்த இந்த விவகாரத்தில், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் இதுவரை எந்த கருத்தையும் சொல்லாமலிருந்தார். இப்போதுதான் வாயைத் திறந்து கருத்துக் கூறியிருக்கிறார். "இந்து மதம் வேற்றுமையில் ஒற்றுமை காணும் லட்சியம் கொண்டது” என்றதோடு, ஆங்கிலேயர்கள் இந்த நாட்டை இந்து-முஸ்லீம் என்று பிரிக்க முயன்ற போது, இந்த நாட்டில் அது நடக்காது என்று தாகூர் சொன்னதை மோகன் பகவத் மேற்கோள் காட்டியுள்ளார்.
"இந்துக்களும், முஸ்லிம்களும் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டு, ஒருவரை ஒருவர் அழித்துக்கொள்ள மாட்டார்கள். மாறாக இணைந்து ஹிந்து ராஷ்டிரத்தை அமைப்பார்கள். நான் இந்து என்று கூறும் போது, இந்த நிலத்தையும், அதன் மக்களையும், அதன் காடுகளையும், இங்குள்ள எல்லாவற்றையும் நேசிப்பவர்கள் இந்துக்கள் என்ற பொருளில் கூறுகிறேன். அவர் எந்த மதத்தவராகவும், இந்தப் பிராந்தியத்தவராகவும், எந்த சாதியாகவும், அல்லது எந்த கடவுளை வணங்குபவராகவும் இருக்கலாம். எதிர்கால நம்பிக்கையுடனான ஒரு மாற்றத்திற்கான நேரம் வந்து விட்டது. தேசத்தின் முழுமையான மகிழ்ச்சிக்காக எல்லோரும் கை கோர்ப்போம்.இந்த மண்ணின் இயற்கை தன்மையே, வேற்றுமையில், ஒற்றுமைதான்.". இப்படி ஆர்.எஸ்.ஏ.ஸ். தலைவர் மோகன் பகவத் ஹைதராபாத் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களிடையே புதன் கிழமை பேசியுள்ளார்.
"இந்த நாட்டில் ஒவ்வொரு மனிதரும் சமமானவர்கள். பல பாரம்பரியங்கள், பழக்கங்கள் இந்தியாவில் இருக்கலாம். ஆனால் நமது குறிக்கோள், எல்லோருமே மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதே" என்றும், "அரசியல்வாதிகள் மட்டுமே இந்த நாட்டின் எதிர் காலத்தை தீர்மானித்து விட முடியாது. ஆர்.எஸ்.எஸ் இந்த நாட்டில் உள்ள அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கவும், அதற்காக உழைக்கவும் நம்பிக்கை கொண்டது" இப்படியும் பேசியுள்ளார். என்ன இது? என்ற குழப்பத்திற்கு உள்ளாகிறீர்களா?
அடுத்து, சுவாமி விவேகானந்தரையும் மேற்கோள் காட்டுகிறார். "மக்கள் பல்வேறு ஆண் கடவுள்களையும்,பெண் கடவுள்களையும் வழிபடலாம். ஆனால் எல்லோருமே முதலில் பாரத மாதாவை வழிபட வேண்டும். ஹிந்து ராஷ்டிரா உலகத்திற்கே ஒரு வழிகாட்டி என்பதில் நம்பிக்கை வைத்திருக்கிறோம் " என்று கூறியுள்ளார்.
இத்தனை போராட்டங்களுக்குப் பிறகு, வாய் திறக்கும் ஆர்.எஸ்.எஸ் தலைவரது இத்தகைய கூற்றிலிருந்து என்ன புரிகிறது ? அரசியல்வாதிகள் மட்டுமல்ல எல்லா அதிகார பசியுள்ளவர்களும் காலத்திற்கு ஏற்றார் போல பேச வல்லவர்கள் என்பது மட்டும் புரிகிறது. தங்களது பிளவு படுத்தும் முயற்சி தோற்று விட்டது என்ற படிப்பினையாக இருக்குமா? புதிய தந்திரமாக இருக்குமா? என்று நாடு குழப்பிக் கொள்ளட்டும் என்றும் இருக்கலாமோ?

Wednesday, December 25, 2019

மோடி - ஷா வேறுபாடுகள் மேஜைக்கு வந்தன!

சிறப்புக் கட்டுரை: மோடி - ஷா வேறுபாடுகள் மேஜைக்கு வந்தன!

சிறப்புக் கட்டுரை: மோடி - ஷா வேறுபாடுகள் மேஜைக்கு வந்தன!

டி.எஸ்.எஸ்.மணி

‘மோடி - அமித் ஷா: மோதல் ஆரம்பம்?’ என்ற தலைப்பில் மின்னம்பலம் ஒரு கட்டுரையை ‘டிஜிட்டல் திண்ணை’யில் வெளியிட்டிருந்தது. இன்னமும் சிறிது கவனமாக கடந்த சில நாட்களாக நடக்கும் நிகழ்ச்சிகளையும், ஊடகங்களில் வந்த நடுவண் அரசாங்கத்தின் எதிரொலிகளையும் நாம் காண வேண்டும்.
‘குடியுரிமை திருத்தச் சட்டம்’, ‘தேசிய குடிமக்கள் பதிவேடு’ ஆகியவற்றைப் பற்றிய விவாதங்கள் அவை. அசாம் உட்பட வடகிழக்கு மாநிலங்களின் ‘இடம்பெயர்ந்த மக்கள்’ பற்றியே அந்தச் சர்ச்சைகள் தொடங்கின. அசாமில் குடியுரிமை திருத்தச் சட்டம் மூலம், 19 லட்சம் பேர் குடியுரிமை கிடைக்காதோர் பட்டியலில் சேர்க்கப்பட்டனர். அதில், 13 லட்சம் பேர் முஸ்லிம் அல்லாதவர்கள்.
40 ஆண்டுகளுக்கு முன்பே, ‘அனைத்து அசாம் மாணவர் சங்கம்’ தங்கள் மாநிலத்துக்குள் வந்துள்ள வங்காளிகள், தங்களுக்குச் சேர வேண்டிய கல்வி, வேலைவாய்ப்பை ஆக்கிரமித்துக் கொண்டுள்ளனர் என்று கூறி, அவர்களை வெளியேற்ற நடத்திய போராட்டத்தின் தொடர்ச்சியாக, காங்கிரஸ் ஆட்சியில், ‘அசாம் ஒப்பந்தம்’ போடப்பட்டது என்பதும், அதன் தொடர்ச்சி இப்போது நடக்கும் போராட்டத்திலும் வெடிக்கிறது என்றும் காண முடிகிறது. அதனாலேயே, அசாம் மாநிலத்தில் வாழும் இந்துக்களும், போடா பழங்குடிகளும், கரிபி அங்கலாங் பழங்குடிகளும், ஜார்க்கண்டிலிருந்து அசாம் மாநிலம் சென்று மலையகங்களில் தோட்டத் தொழில் செய்வோரும் சேர்ந்து தெருவில் இறங்கி போராடினார்கள் என்பவை சென்ற வாரத்து நிகழ்ச்சிகள்.
அவர்கள் தங்களுக்குக் குடியுரிமை மறுக்கப்பட்டதற்காகவும், வங்காளிகளுக்குக் குடியுரிமை கொடுக்கப்பட்டதற்காகவும் இரு வெவ்வேறு காரணங்களுக்காகப் போராடினார்கள். அதே நேரம் அங்குள்ள முஸ்லிம்களும் தங்களுக்கு மறுக்கப்பட்டதை எதிர்த்து போராடினார்கள். இந்த இரு துருவங்களும் இணைந்து போராடியதால், ராணுவம் ஒன்றும் செய்ய இயலாத நிலை உருவானது. அதுவும் நடுவண் அரசின் கவனத்துக்குச் சென்றது.
முஸ்லிம், முஸ்லிம் அல்லாதோர் என்ற பிரிவினை இல்லாமல் மக்கள் போராடினார்கள் என்பதை கண்டு நடுவண் அரசு துணுக்குற்று இருக்கிறது. அதுவே மாணவர்கள் போராட்டத்திலும் டெல்லி, உ.பி, பெங்களூரு, தமிழ்நாடு, கேரளம் என தொடர்ந்தது.
இந்தியத் தலைமை அமைச்சரைப் பொறுத்தவரை, நாட்டுக்குள்ளும் வெளியிலும் வருகிற எதிர்ப்பை கவனித்து, நிர்வாகத்தை நடத்திச் செல்ல வேண்டிய தேவை இருக்கிறது. அதே நேரம், ‘தேசிய குடிமக்கள் பதிவேடு’ என்பது பெரும் அச்சத்தைக் கிளப்பி விட்டது என்பது யாவரும் அறிந்ததே. அதையொட்டிதான், அமித் ஷா பேசிய பேச்சுகளும் டெல்லி பொதுக்கூட்டத்தில், மோடி பேசிய பேச்சுகளும் வேறுபட்டு உள்ளதை எதிர்க்கட்சியினர்கூட விவாதமாக்கினார்கள். அத்தகைய சூழலில், கடந்த வாரத்தில், வெளியான செய்திகள் கூறும் பின்னணியை நாம் கவனிக்க வேண்டும்.
மோடியின் டெல்லி உரைக்குப் பிறகு சில நாட்களாக நடுவண் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஊடகச் செய்திகளை வெளியிடவில்லை. மாறாக, உள் துறையின் ராஜாங்க அமைச்சர் கிஷோர் ரெட்டிதான் செய்திகளை வெளியிட்டார் அல்லது வெளியிட வைக்கப்பட்டார். முதலில், ‘சட்டமாக ஆக்கப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டம் அமலாக்கப்பட விதிகள் தயாரிக்கப்பட வேண்டும். அத்தகைய விதிகளைத் தயாரிக்கும் காலத்தை தள்ளிப்போட்டுள்ளோம்’ என்பதே. இதை, சிஏஏ எதிர்ப்புப் போராட்டங்களின் விளைவே என எடுத்துக் கொள்ளலாம்.
அடுத்து, ‘குடியுரிமை திருத்தச் சட்டம் பற்றிய கருத்துகளை, பரிந்துரைகளைப் பொதுமக்கள் அனுப்பலாம்’ என அதே, உள்துறையின் ராஜாங்க அமைச்சர் கிஷோர் ரெட்டி கூறினார். அதுவும் உள்துறை அமைச்சரின் மூலம் வெளியிடப்படவில்லை. நமக்கு இதில் புரியாத செய்தி, ‘வண்டிக்குப் பின்னால் குதிரையைக் கட்டுவதா? குதிரைக்குப் பின்னால் வண்டியைக் கட்டுவதா?’ என்பதுதான். ஏனென்றால், சட்டம் உருவாவதற்கு முன்னால், அதன் உள்ளடக்கம் ஒரு நகல் அறிக்கையாக (மசோதாவாக) வெளிவரும். ஆள்வோர் அதன் மீது பொதுமக்களின் கருத்தறிய விரும்பினால், வரை நகலை நாடாளுமன்றத்துக்குக் கொண்டு செல்வதற்கு முன்பே அதை பொது வெளியில் வெளியிட்டு, பொதுமக்களிடம் கருத்துக் கேட்பார்கள். ஆனால், இங்கே எல்லாமே தலைகீழாக நடக்கிறது. குடியுரிமை சட்டத் திருத்தம் என்ற வரை நகல், மக்களவைக்குக் கொண்டு செல்லப்பட்டு, நிறைவேறி, மாநிலங்களவைக்குக் கொண்டு செல்லப்பட்டு நிறைவேறி, குடியரசுத் தலைவரது ஒப்புதலையும் அவசரமாகப் பெற்று, சட்டமாகி விட்டது. அதன்பிறகு, நாடெங்கும் மத வேறுபாடு இன்றி பொதுமக்களின் எதிர்ப்பு உருவான பிறகு, ‘பொதுமக்களின் பரிந்துரைகளை அனுப்பலாம்’ என்றும், ‘சட்டத்தை அமலாக்குவதற்கான விதிகளை உருவாக்க கால தாமதம் ஆகும்’ என்பதாகவும், உள்துறை ராஜாங்க அமைச்சர் மூலம் வெளியிடப்படுகிறது. இந்த இடத்தில்தான் ‘புரிந்துகொள்பவர்களுக்குப் புரியும்’ என்பதாக அது பார்க்கப்படுகிறது. ஆள்வோருக்கு, அவசரம் எப்போதுமே திருப்பி அடிக்கும் வாய்ப்புடன் கூடியது என்பதை இது உணர்த்தியுள்ளது. இடையில், மோடியின் மனத்தை ஒட்டியவராகக் கருதப்படும், முன்னாள் நடுவண் அமைச்சரும், இன்றைய துணைக் குடியரசுத் தலைவருமான வெங்கையா நாயுடு அவர்கள், ‘அதிருப்திகள் ஜனநாயகத்தின் சாராம்சம்’ என்று கூறியுள்ளார்.
இவை அனைத்துக்கும் பிறகே, செவ்வாய்க்கிழமை காலையில் அவசரமாகக் கூட்டப்பட்ட நடுவண் அமைச்சரவை சில முடிவுகளை எடுத்துள்ளது. அந்த முடிவுகளும் மதியம் அமைச்சர்கள் ஜவடேகர், பியூஸ் கோயல் மூலம் ஊடகத்தாருக்கு அறிவிக்கப்படும் என்றுதான் கூறப்பட்டு செயல்படுத்தப்பட்டது. அப்போதும் உள்துறை அமைச்சர் மூலம் அது வெளியிடப்படவில்லை. ஆனால் அதற்குப் பிறகே, உள்துறை அமைச்சர் அமித் ஷா, ‘பிரதமர் மோடி கூறியது சரிதான். இப்போது தேசிய குடிமக்கள் பதிவேடு செயல்பாட்டுக்கு வராது. செயல்பாட்டுக்கு வரும் தேசிய மக்கள்தொகை பதிவு என்பது முற்றிலும் வேறுபட்டது’ என்ற செய்தியை வெளியிட்டுள்ளார். ஆள்வோருக்குள் கருத்து வேறுபாடுகள் வருவது புதிதும் அல்ல. தவறும் அல்ல. ஆனால், அது பொதுமக்களையும், நாட்டின் சட்ட ஒழுங்கையும் பாதிக்கும்போது, எப்படி அதை வழமைதானே என்று ஏற்றுக்கொள்ள முடியும்?

Friday, August 16, 2019

கிராம சபைகளின் சுதந்திரதின அபயக்குரல்கள்!

கிராம சபைகளின் சுதந்திரதின அபயக்குரல்கள்!

கிராம சபைகளின் சுதந்திரதின அபயக்குரல்கள்!
இந்தியாவின் 73 வது சுதந்திர தினம் 15-08-2019.
டி.எஸ்.எஸ்.மணி
இந்திய அரசியல் சட்டத்திருத்தம் 73 ன் கீழ்1994 தமிழ்நாடு பஞ்சாயத்து ராஜ் சட்டப்படி,ஒவ்வொரு ஆண்டும் கிராமசபைக் கூட்டங்களை ஒவ்வொரு ஊராட்சியிலும் கூட்ட வேண்டும். கிராம சபைக்கு கூட்டங்கள், கிராம மக்களது கோரிக்கைகளை,பதிவு செய்வதற்காக ஏற்பாடு செய்யப்படுகின்றன. அதாவது "அதிகாரம்" பரவலாக்கப் படுவதற்காக, இந்த ஏற்பாடு. மாவட்ட ஆட்சித் தலைவர் நிர்வாகம் அதற்கு ஒழுங்கு செய்ய வேண்டும்.கிராம சபைக்கு கூட்டங்களை ஒவ்வொரு கிராமத்திலும் எந்த இடத்தில், எந்த நாளில், எந்த நேரத்தில் கூட்டுகிறோம் என்று மாவட்ட நிர்வாகம் "சுவரொட்டிகள்" மூலம் மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். ஒரு ஊராட்சியில், இரண்டு அல்லது மூன்று கிராமங்கள் இருந்தால், அதில் உள்ள ஒவ்வொரு கிராமத்திலும் அத்தகைய கூட்டங்களை, கிராம சபைகளை நடத்த வேண்டும். ஊராட்சி மன்றத் தலைவர்கள் கிராம சபைகளை நடத்துவார்கள்.ஊராட்சி மன்றத் தலைவர்கள் இல்லாத போது, பஞ்சாயத்து அலுவலர் நடத்துவார். ஒவ்வொரு கிராம சபை கூட்டத்திலும், சம்பந்தப்பட்ட கிராமத்தின் கிராம நிர்வாக அலுவலரும், தலையாரியும் கலந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு ஆண்டும்,குடியரசு தினம் ( ஜனவரி 26 ) , உழைப்பாளர் தினம் (மே 1 ), சுதந்திர தினம் ( ஆகஸ்ட் 15 ), காந்தி பிறந்த நாள் ( அக்டோபர் 2 ) ஆகிய நான்கு தினங்களும் கிராம சபைகள் கூட்டப்பட வேண்டும். கடந்த குடியரசு தினம் ஜனவரி 26 ல், கூடங்குளம் கிராம சபை "அணு உலைகளைை மூடு அணுக்கழிவுகளை இங்கு கொட்டாதே" என தீர்மானம் போட்டார்கள்.
இந்த முறை சுதந்திர தினமான ஆகஸ்டு 15 ல் தமிழ்நாட்டில், தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சிகள் இல்லாத காரணத்தால் கிராம சபைகளை, பஞ்சாயத்து அலுவலர்கள் கூட்ட வேண்டிய நிலைமை. இரண்டு நாட்களுக்கு முன்னால் ஒவ்வொரு கிராமத்திலும், அதுபற்றிய சுவரொட்டிகள் ஓட்டப் பட வில்லை, பல கிராம சபைக்கு கூட்டங்கள் நடத்தப்படவில்லை. நடத்தப்பட்ட கிராம சபை கூட்டங்களுக்கு, பல இடங்களில், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் தலையாரிகள் வந்தார்களா என்று தெரியவில்லை.
"ஆட்சித் தலைவர் வலியுறுத்தலில், ஒவ்வொரு
[B.D.O ] வட்டார வளர்ச்சி அதிகாரிகளும், கீழே உள்ள அதிகாரிகளிடம் சில கோரிக்கைகளை அவர்களே தயார்செய்து கொடுத்து, அவற்றை கிராம சபைகளில் நிறைவேற்றச் சொல்வதாகவும், வேறு மக்கள் சார்பு கோரிக்கைகளை அனுமதிக்கக் கூடாது " என்றும் கட்டாயப்படுத்தி அனுப்பியிருப்பதாகச் செய்தி வருகிறது.அதையும், "டைப் அடித்த ஏற்கனவே தயாரிக்கப்பட்ட காகிதங்களை, சில கோரிக்கைகளை எழுதி" அதை "ஊராட்சி மினிட்ஸ் புத்தகத்தில் ஒட்டி வைக்கும் வேலையைச் செய்ய பணிக்கப்பட்டுள்ளனர். இது மாபெரும் அநியாயம், சட்டப் பிரிவு 73 ன் படி, மாவட்ட நிர்வாகத்திலிருந்து கிராம சபைகளில் கலந்து கொள்ள வரும் அதிகாரிகள் வெறும் பார்வையாளர்களே ! அவர்கள் அங்கே எந்தக் கருத்தையும் பேசக் கூடாது. கிராம மக்கள் நிறைவேற்றும் தீர்மானங்களை, குறுக்கீடுகள் செய்யாமல் குறிப்பெடுத்து, மாவட்ட நிர்வாகத்திற்கு கொண்டு செல்வதுதான் அந்த அதிகாரிகளின் வேலை.ஆனால் பெரும்பாலான இடங்களில் அந்த உண்மை விதிகள் மீறப் பட்டுள்ளன.
தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சிகள் இல்லாத சூழலில், ஊராட்சி அலுவலர் என்ற பஞ்சாயத்து கிளார்க்குகள் மாநிலமெங்கும் கிராம சபைக் கூட்டங்களை நடத்தப் பணிக்கப்பட்டனர். கிராம சபைகளை நடத்தாமல், நடத்தினாலும் சுயமாக மக்களை தீர்மானம் போட விடாமல் எல்லா இடங்களிலும் தடுத்து விட்டனர். " டைப் அடிக்கப்பட்ட அரசாங்கத்திற்கு ஒத்து ஊதும் தீர்மானங்களை" கொண்டு வந்து, கிராம சபைக் கூட்டம் என்று அறிவிக்காமலேயே, நூறு நாள் வேலைக்குப் போனோரை கூட்டம் என அழைத்து கையெழுத்து வாங்கிய சதிச்செயல் பெரும்பான்மைக் கிராமங்களில் நடந்துள்ளது.குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் அது போன்ற நிலைமைகளைக் காண முடிகிறது.
ஆனாலும் அதிகாரிகளது எதிர்ப்பை மீறி தூத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளையூரணி, ஓட்டப்பிடாரம் கிராம சபைகளில் "ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடு" எனத் தீர்மானம் போட்டார்கள்.
திருவள்ளூர் மாவட்டத்தில், பழவேற்காடு பஞ்சாயத்து, லைட்ஹவுஸ் பஞ்சாயத்து, கோட்டக்குப்பம் பஞ்சாயத்து, தாங்கல் பெரும்புலம் பஞ்சாயத்து என்ற நான்கு மீனவக் கிராம சபைகளிலும், "இருக்கும் எல் & டி துறைமுகத்தை விலைக்கு வாங்கி, விரிவாக்கம் செய்யத் திட்டமிடும் அதானி துறைமுகத்தை அனுமதிக்கக் கூடாது." என்ற தீர்மானத்தை மீனவர் சங்கங்களின் முன் முயற்சியில், அரசு அதிகாரிகளின் எதிர்ப்பையும் மீறி நிறைவேற்றி பஞ்சாயத்துகளின் மினிட்ஸ் நோட்டுப் புத்தகத்தில் எழுதி மக்கள் கையெழுத்துப் போட்டு விட்டனர்.
இராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை வட்டம் உப்பூரில் இரண்டு 800 மெகா வாட் திறன் கொண்ட அனல்மின் நிலையம் அமைக்க தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகம் திட்டமிட்டுள்ளது. உப்பூர், வளமாவூர், திருப்பாலைக்குடி கிராமங்களை உள்ளடக்கிய பகுதியில் 952.5 குறுக்கம் பட்டா நிலமும், 379.6 குறுக்கம் புறம்போக்கு நிலமும் கையகப்படுத்தப்பட உள்ளது.
இவ்விடம், உப்பூர் அருகே கிழக்குக் கடற்கரைச் சாலையிலிருந்து 600 மீட்டர் தொலைவிலும், கடற்கரை யிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்திருக்கிறது. இத்திட்டத்திற்காக தூத்துக்குடி துறைமுகத் திலிருந்து நிலக்கரியை தொடர்வண்டி மூலம் கொண்டு வரவும், ராமநாதபுரத்திலிருந்து தனி ரயில் பாதை அமைத்து, திட்ட இடத்திற்கே கொண்டு செல்லவும் திட்டமிடப்பட்டுள்ளது
சுதந்திர தின கிராம சபைக் கூட்டத்தில், "உப்பூர் அனல் மின்சார ஆலைதொடர்பான அனைத்து வேலைகளும் நிறுத்தப்படவேண்டும்
உப்பூர் அனல்மின் நிலையம் அமைக்கக் கூடாது" என கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் போட வேண்டும் என அனைத்து மீனவ கிராம மக்களும் திரளாக சென்று கோரிக்கை வைத்தனர்
உப்பூர் அனல் மின் நிலையம் அமைக்க மீனவ கிராமங்கள் எதிர்ப்பு தெரிவித்து வேலை நிறுத்தம் செய்தும் வீடுகள் வீதிகள் தோறும் கருப்பு கொடி கட்டி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.அதிகாரிகள் ஒத்துழைப்பு இல்லாததால், கிராம சபை தீர்மானம் போட முடிய வில்லை.
கன்னியாகுமரி மாவட்டம்,சைமன்காலனி கிராமசபை 28/06/2019 அன்று கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட(11) தீர்மானத்தின் அடிப்படையில்
கேட்கப்பட்ட கேள்விகளுக்கு விளக்கமளிக்காமல் அரசு அதிகாரிகள் வெளிநடப்பு செய்தனர்.
ஆத்திரமடைந்த சைமன்காலனி கிராமசபை பொதுக்கள் அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்கள், கிராம சபைக் கூட்டத்தில் பதினோரு தீர்மானங்களை நிறைவேற்றினார்கள்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம் நெடுவாசல் கிழக்கு ஊராட்சியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுப்பது, நல்லன்டார்கொல்லை ,கல்லி கொல்லை, முள்ளங்குறிச்சி கோட்டைகாடு,வானக்காடு ஆகிய இடங்களில் அமைக்கப்பட்ட ஆழ்குழாய் கினறுகளை உடனே அப்புறப்படுத்தி நிலத்தை உரிமையாளரிடம் ஒப்படைக்கவேண்டுதல், ஆகிய தீர்மானங்களை நிறைவேற்றினார்கள்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம் சேந்தன்குடி ஊராட்சியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைக்கப்படுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு கன்னந்தங்குடி ஊராட்சியில் ஹைட்ரோ கார்பன் திட்டம் ரத்து செய்ய வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
திருவாரூர் மாவட்டம் பாபநாசம் ஒன்றியம் அம்மாபேட்டை, தீபாம்பாள்பரம்,நெய்க்குண்ணம் ஊராட்சிகளில் அமைக்கப்பட்ட ஆழ்குழாய் கினறுகளை உடனே அப்புறப்படுத்தவும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி திருவாரூர் மாவட்ட ஆட்சியர், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுப்பது என கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
திருவாரூர் மாவட்டம், கோட்டூர் ஒன்றியம் பணையூர் கிராம சபை கூடி, ஹைட்ரோகார்பன் இங்கே எடுக்கக் கூடாது என தீர்மானம் போட்டனர்.
திருவாரூர் மாவட்டம் இக்கரையில் "ஹைட்ரோ கார்பன் எடுக்கக் கூடாது" என்று தீர்மானத்தை, கிராம சபையில் நிறைவேற்றினார்கள்.
திருநெல்வேலி மாவட்டம், சுற்றுலாத் தலமான , அருவிகள் நிறைந்த குற்றாலம் பேரூராட்சி, மற்றும் காசி மேஜர்புரம், கிராம சபை கூடி, அவர்கள் வட்டாரத்தில் ஓடும் ஓடைகளையும், நீர்நிலைகளையும், சட்ட விரோதமாக ஆக்கிரமித்துள்ள ஆக்கிரமிப்புக் கட்டிடங்களை அகற்ற வேண்டும் என்றும்,குற்றாலத்தில் இருந்து வரும் அருவி தண்ணீரில் மனிதக் கழிவு கலப்பது சம்பந்தமாகவும், தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர், கூட்டத்தில் 60 நபர்கள் கலந்து கொண்டனர்
இவ்வாறாக பல்வேறு மாவட்டங்களில், கிராம சபைக் கூட்டங்களில், கிராம மக்கள், அரசின் "தடுப்பு நடவடிக்கைகளையும், அதிகாரிகளின் திசை திருப்பல்களையும்" உடைத்து மீறி எழுதத் தொடங்கி விட்டனர். ஆனாலும், கிராம சபைகளின் முக்கியத்துவத்தை இன்னமும் மக்கள் மத்தியில் எடுத்துச் செல்லாமல் இருக்கும் பரிதாபமே பெரும்பாலும் நிலவுகிறது.

Friday, May 17, 2019

கமல் கோட்சே பிரச்சினையைத் தொடர்வது ஏன்?

கமல் கோட்சே பிரச்சினையைத் தொடர்வது ஏன்?

கமல் கோட்சே பிரச்சினையைத் தொடர்வது ஏன்?

டி.எஸ்.எஸ். மணி

தமிழ்நாட்டில் மோடி எதிர்ப்பு அலை அதிகமாக இருப்பதாகப் பொதுவான அபிப்பிராயம் இருக்கிறது. பொதுவாக நாடு முழுவதும் அரசியல் கட்சிகளின் செயல்பாடுகள் மீது பொதுமக்களுக்கும், குறிப்பாக இளைய தலைமுறையினருக்கும் நம்பிக்கையின்மை அதிகரித்துவரும் வேளையில், புதிய சக்திகள் தேர்தல் களத்தில் இறங்குவதை, நாடாளுமன்ற ஜனநாயகத்தை உயர்த்திப் பிடிக்கிற சக்திகள் வரவேற்கின்றன. அதாவது, நாடாளுமன்றத் தேர்தல் முறை மீதே மக்களுக்கு நம்பிக்கை குறைந்துவரும் வேளையில், அதிலும் குறிப்பாக இளைய தலைமுறையினருக்கு இந்த முறை மீது வெறுப்பு அதிகரிக்கும் வேளையில் அதைச் சரிக்கட்ட ஆள்வோர் சில புதிய முறைகளைத் தேட வேண்டியுள்ளது. அதனாலேயே பிரபலங்கள் கட்சி தொடங்குவதையும் பிரபலங்கள் கட்சிகளின் வேட்பாளர்களாக நிறுத்தப்படுவதையும் காண முடிகிறது. பிரபலங்களைத் தேடி இளைய தலைமுறையினர் நம்பிக்கைக்கொண்டு திரள்வதையும் காண முடிகிறது. அத்தகைய பிரபலங்களில் விளையாட்டு வீரர்களும், திரைத் துறைக் கலைஞர்களும் முக்கியமாகத் திகழ்கின்றனர்.
மேற்கண்ட பட்டியலில் கமல்ஹாசன், ரஜினிகாந்த், சிரஞ்சீவி, பவன் கல்யாண், பிரகாஷ்ராஜ், கோபிகிருஷ்ணா, கவுதம் காம்பீர் முதலானோர் வருவார்கள் என்பது சொல்லாமலேயே விளங்கும். அதன் அடிப்படையில்தான் கமல்ஹாசனின் செயல்பாடுகளுக்கு உள்ள விளைவுகளைக் காண வேண்டியிருக்கிறது.
கமல்ஹாசன் இந்தியா முழுவதும் பிரபலமாக அறிமுகமானவர். எனவே, அவர் மக்கள் நீதி மய்யம் என்ற ஒரு கட்சியைத் தொடங்கித் தேர்தலில் நிற்பது என்பது நாடு தழுவிய அளவில் கவனிக்கப்படுகிறது. கவனிக்காமல் இருப்பவர்களைக்கூடக் கவனிக்கவைக்க, பினராய் விஜயன், அரவிந்த் கெஜ்ரிவால், மம்தா பானர்ஜி, ராகுல் காந்தி, யோகேந்திர யாதவ் எனப் பலரையும் சந்தித்து தனது அரசியல் பிரவேசத்தை நாடறியச் செய்தார் கமல்.
எல்லாமே கொடுக்கப்பட்ட வழிகாட்டல்களால் நடந்தவை என்ற விவாதத்துக்கு நான் வரவில்லை. ரஜினிகாந்த் அரசியலுக்கு வருகிறேன் என்று சொல்வதற்கு முன்பே, வடநாட்டு கார்ப்பரேட் நிறுவனமான கார்வி கருத்துக் கணிப்பொன்றை வெளியிட்டது. ரஜினிகாந்த் முதல்வராக வருவதற்குத் தமிழ்நாட்டில் 16% ஆதரவு இருக்கிறது என எட்டு மாதங்கள் முன்பே வெளியிட்டிருந்தது. அப்போதே அதை அம்பலப்படுத்தி மின்னம்பலத்தில் எழுதியிருந்தோம். ஆகவே, நடைபெறுபவை எல்லாம் தற்செயலாகவே நடக்கின்றன என்று நம்பும் நிலையில் நாம் இல்லை.
எனினும், கமல் அரவக்குறிச்சி தொகுதியில் முஸ்லிம் மக்கள் வாழும் பள்ளப்பட்டியில், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என கோட்சேவைக் குறிப்பிட்டுப் பேசியது தற்செயலாக, அங்கே இருந்த காந்தி சிலையைப் பார்த்தவுடன் உணர்ச்சிவசப்பட்டு நடந்தது என்றே நாம் நம்பிக்கொள்வோம். ஆனால், அதன் விளைவுகள் என்ன என்பதே இங்கே நமக்கு முக்கியம்.
நிச்சயமாக இன்றைய சூழலில் இந்துக்களோ, முஸ்லிம்களோ இதனால் ஆத்திரப்பட்டு மோதிக்கொள்ளப் போவதில்லை. ஏனென்றால், போதுமான அளவு மதவாதச் சண்டைகளைக் கேள்விப்பட்டு, அதை வெறுக்கும் மனோநிலைக்குப் பொதுமக்கள் வந்துவிட்டார்கள். ஆனால், தேர்தல் காலத்தில், அதுவும் கடைசிக் கட்ட வாக்குப்பதிவுக்கு முன்னால், இத்தகைய சர்ச்சை எழுப்பப்படுவதும், அது நாடும் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்துவதும் தற்செயலானவை அல்ல.
இந்தக் கூற்றைப் பிரபல நடிகர் விவேக் ஓபராய் கண்டிக்கிறார். இந்தியத் தலைமை அமைச்சர் கமலின் கருத்துக்குப் பதில் சொல்கிறார். ஹைதராபாத் முஸ்லிம் தலைவர் ஒவைசி கமலின் கருத்தைப் பாராட்டுகிறார். இதை அகில இந்தியப் பிரச்சினையாக மாற்றுவதற்கான முயற்சி நடக்கிறது. அதுவே ஊடகங்களில் முக்கியச் செய்தியாக மாற்றப்படுகிறது.
மன்னார்குடி ஜீயரின் மிரட்டல், தமிழிசை, ஹெச்.ராஜா ஆகியோரின் பதில்கள் என இந்தப் பிரச்சினையின் நெருப்பு அணையாமல் பாதுகாக்கப்படுகிறது. இதை இப்படியெல்லாம் ஊதி ஊதிப் பெரிதாக்குவது யாருடைய நன்மைக்காக? நாட்டில் முக்கிய அரசியல் பிரச்சினைகள் பின்தள்ளப்பட்டு கோட்சே பிரச்சினை முதன்மைப்படுத்தப்படுவதற்குக் கமல் பேச்சு காரணமாகிவிட்டதா, இல்லையா? அந்த சர்ச்சையை விடாமல் கமலும் தொடர்கிறாரா, இல்லையா?
இந்தச் சர்ச்சையின் விளைவுகள் ஏழாவது கட்ட வாக்குப்பதிவில் சிலருக்குச் சாதகமானால், அவர்கள் தங்களது முயற்சியில் வெற்றி பெற்றார்கள் என்று எடுத்துக்கொள்ளலாம். தமிழ்நாட்டில் நான்கு சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் ஆளும் கட்சிக் கூட்டணிக்கு ஆதரவாக இந்து மக்கள் வாக்குகளையும், கமல் கட்சிக்கு ஆதரவாக முஸ்லிம் வாக்குகளையும் இழுத்து, திமுக, அமமுகவுக்குச் செல்லும் வாக்குகளைப் பிரிக்கும் என்றும் கற்பனை செய்யலாம். ஆனால், அது அந்த அளவுக்கு நடக்கப்போவதில்லை.
நமக்கு ஆண்டாள் பற்றிய வைரமுத்து எடுத்துக் காட்டிய மேற்கோளை மையமாக வைத்து, நடத்தப்பட்ட பட்டிமன்றமும் திருவில்லிபுத்தூர் ஜீயர் கொதித்து எழுந்ததும் (பிறகு ஜீயர் மன்னிப்பு கேட்டது வேறு கதை) நினைவுக்கு வராமல் இல்லை. இந்தியா முழுவதும், இத்தகைய மத ரீதியான சர்ச்சையை ஏற்படுத்தினால், அப்போதாவது தாங்கள் கடைசி கட்ட வாக்குப் பதிவில் அதிகமான பலன்களைப் பெறலாமா என்ற எதிர்பார்ப்பில் இருப்பவர்களையும் அடையாளம் தெரிகிறது. இந்தச் சர்ச்சையில், ஈடுபட்டவர்கள் எல்லாமே, ஒன்று பாஜகவினர் அல்லது அவர்களுக்குத் துணை செல்பவர்கள் (பீ டீம்) என்று கருதப்பட்டவர்கள் என்பதை நாம் சவுகரியமாக மறந்துவிடலாம். ஆனால், எந்த நேரத்தில், யாருக்குப் பயன்படும்படி ஒரு செயல் நடைபெறுகிறது என்பதே நாம் காண வேண்டிய விவரம்.
கண்டுபிடித்தால் சரி.
.
.

Wednesday, February 13, 2019

மோடிக்குப் பதில் நிதின் கட்கரியா?

மோடிக்குப் பதில் நிதின் கட்கரியா? – டி.எஸ்.எஸ்.மணி

மோடிக்குப் பதில் நிதின் கட்கரியா? – டி.எஸ்.எஸ்.மணி

மீண்டும் பாஜக தலைமையில் ஆட்சி அமைப்பதற்கான ஆர்எஸ்எஸ்ஸின் திட்டம் என்ன?

நரேந்திர மோடிக்குப் பதில் நிதின் கட்கரி - இப்படி ஒரு பேச்சு அடிபடுகிறதா அல்லது கிளப்பிவிடப்படுகிறதா?
தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கத்தின் சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் நீர்நிலைகள், நதிகள் பாதுகாப்பு, கங்கையைச் சுத்தப்படுத்தல் துறைகளின் அமைச்சர் நிதின் கட்கரி, ஒரு மாதம் முன்னால், 2014இல் நாங்கள் ஆட்சிக்கு வருவோம் என நினைக்கவில்லை. அதனால் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளைக் கொடுத்துவிட்டோம் என்றார்.
கட்கரி 2010 முதல் 2013 வரை பாரதிய ஜனதா கட்சியின் அகில இந்தியத் தலைவராக இருந்தவர். மூன்று மாநிலங்களில் பாஜக தோற்றவுடன் கட்கரி, தேர்தல் தோல்வியை ஒப்புக்கொள்வதுதான் தலைமைக்கு அழகு என்றார்.
சில நாட்களுக்கு முன்னர் கட்கரி, ‘வீட்டைப் பார்த்துக்கொள்ள முடியாத ஒருவரால், நாட்டை எப்படிப் பார்க்க முடியும்?’ என்றார். அது யாரைக் குறிவைத்து என்பது பெரிதும் பேசப்பட்டது.
பிப்ரவரி 7ஆம் தேதி, மக்களவையில், நிதின் கட்கரி கேள்வி ஒன்றுக்குப் பதில் அளித்தவுடன் பாஜக உறுப்பினர்கள் மேசையைத் தட்டிப் பாராட்டினார்கள். கட்கரியின் பதிலை உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டிருந்த சோனியா காந்தி, தலையை ஆட்டி, மேசையைத் தட்டிப் பாராட்டு தெரிவித்தார் .உடனே காங்கிரஸ் கட்சியின் மக்களவைத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயும், மற்ற காங்கிரஸ் எம்.பி.க்களும், மேசையைத் தட்டி வாழ்த்துக் கூறினர். கட்கரி நன்றி தெரிவித்தார்.
புனேவில் ஒருமுறை கட்கரி, ‘நாங்கள் சாதியவாதத்தின் மீது நம்பிக்கைக் கொண்டவர்கள் அல்லர். மற்றவர்களைப் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால், நமது ஐந்து மாவட்டங்களில் சாதி என்கிற பேச்சுக்கே இடமில்லை. யாராவது சாதியைப் பற்றிப் பேசினால், அவர்கள் விளைவுகளைச் சந்திக்க நேரிடும்' என்றார். நாக்பூர் தொகுதியிலிருந்துதான் கட்கரி மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கட்கரி என்னும் மாற்று?
பிப்ரவரி 7 அன்று நடந்த நாடாளுமன்ற நிகழ்ச்சியை வெளியிட்ட சென்னை பதிப்பு டைம்ஸ் ஆஃப் இந்தியா, பிப்ரவரி 8ஆம் நாள் ஏட்டில் இன்னொரு செய்தியையும் வெளியிட்டிருந்தது. அதாவது, மோடி தலைமையிலான பாஜகவின் கூட்டணி, வருகிற மக்களவைத் தேர்தலில், 200க்குக் குறைவாக வெல்லுமானால் மோடி மாற்றப்பட்டு கட்கரி வருவார் என்பதே அந்தச் செய்தி.
அந்தச் செய்தியுடன் பெட்டிச் செய்தியாக ஒன்று வெளியானது. டேராடூனில் அதே வியாழக்கிழமை ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், நாட்டின் தலைமைப் பதவிக்கு கட்கரி வருவார் என்று பரவும் கருத்து பற்றிக் கேட்டதற்கு, “கட்கரி சூழ்ச்சி மனோபாவம் கொண்டவரல்லர். அவர் இருக்கும் பொறுப்பிலேயே திருப்தியடைபவர்” என்று பதில் கூறினார்.
இத்தனை செய்திகளிடையே, பிரபல ஊடகவியலாளர் எம்.ஜே.அக்பரின் நெருக்கமான நண்பர் சீமா முஸ்தபா என்ற ஊடகவியலாளர் (சங் பரிவாருடன் நெருக்கமாக இருக்கும் முஸ்லிம் அணியைச் சேர்ந்தவர்; தி சிட்டிசன் ஏட்டின் நிறுவன ஆசிரியர்), சந்திரபாபு நாயுடுவுடனும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பிரபுல் படேலுடனும், அஜித் பவாருடனும், நவீன் பட்நாயக்குடனும் திரிணமூல் காங்கிரஸுடனும், திமுகவின் இரண்டாம் நிலைத் தலைவர்களுடனும் கட்கரி பேசிக்கொண்டிருக்கிறார் என்று கூறியுள்ளார்.
ராமர் கோயில் விஷயத்தில் பல்டி
தி சிட்டிசன் ஏட்டில், பிப்ரவரி 7ஆம் தேதி சீமா முஸ்தபாவும் வெங்கடேஷ் கேசரும் எழுதிய அயோத்தி விவகாரம் குறித்த கட்டுரை, மோகன் பாகவத், ராமர் கோயில் கட்டும் விவகாரத்தை,மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு என்று ஏன் தள்ளிப் போட்டார் என்று கேள்வி எழுப்பியது. விஸ்வ ஹிந்து பரிஷத் மூலம் ராமர் கோயில் விவகாரத்தைத் தள்ளிப்போட வைத்து, அதை அப்படியே தானும் ஏற்றுக்கொண்டு, ராமர் கோயில் கட்டும் விஷயத்தை ஒரு கட்சியின் தேர்தல் விஷயமாக ஆக்க விரும்பவில்லை என்று மோகன் பாகவத் கூறியுள்ளதையும் கட்டுரை சுட்டிக்காட்டுகிறது.
ராமர் கோயில் விவகாரத்தில் ஆர்எஸ்எஸ் இப்படி திடீரெனப் பின்வாங்கியுள்ளது கவனிக்கத்தக்கது. ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளும், விஎச்பி நிர்வாகிகளும், தொண்டர்களும், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அங்கமான சிவசேனாவும், கடந்த மூன்று மாதங்களாக அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவோம் என்ற வாக்குறுதியை நிறைவேற்று என்று மோடி ஆட்சிக்கு எதிராகக் குரல் எழுப்பிவந்தன. உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கிறது என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும், பாஜக தலைவர் அமித் ஷாவும் கூறியபோது, உச்ச நீதிமன்றம் மக்களுக்கும் நம்பிக்கைக்கும் இடையில் தலையிடுவது குறித்து எச்சரிக்கையும் கொடுத்தவர்கள் இவர்கள். கோயில் கட்ட அவசரச் சட்டம் கொண்டுவா என்று கூறியவர்கள். இவர்கள் ஏன் இப்படி மாற்றிப் பேசுகிறார்கள்?
சிவசேனா தலைவர் உத்தவ் தாக்ரே கோயில் கட்டுவதற்காக உரக்கக் குரல் எழுப்பியதையும் , விஎச்பி மூலம் ஐந்து லட்சம் மக்களைத் திரட்டி, ராமர் கோயில் கட்ட வேண்டும் என்று முழக்கமிட்டதையும் கேட்டு ஒருமாதம் கூட ஆகவில்லையே? உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ராமர் கோயில் விவகாரம் நீதிமன்றத்தில் இருப்பதால் சட்டத்துக்கு உட்பட்டே ராமர் கோயில் கட்டப்படும் என்றும் ராமர் சிலை ஒன்று அயோத்தியில் 202 மீட்டர் உயரத்தில் அமைக்கப்படும் எனவும் தீபாவளி அன்று அறிவித்திருந்தார் (ஒற்றுமைச் சிலை என்ற வல்லபபாய் படேல் சிலையின் உயரமான 182 மீட்டர் என்பதைவிட யோகி சொல்லும் ராமர் சிலை உயரமானது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது).
அத்தனை தீவிரம் காட்டியவர்கள் ஏன் இப்படி பல்டி அடிக்கிறார்கள்?
மாநிலக் கட்சிகளின் நிலை என்ன?
நாகபுரியில் உள்ள ஆர்எஸ்எஸ் தலைமையகத்திலிருந்து, தி சிட்டிசன் இதழுக்குக் கிடைத்த ஆதாரபூர்வமான தகவலின்படி மோடி, அமித் ஷா இருவரும் நாகபுரிக்குப் பணியவில்லை. அவர்கள் ஆட்சி அமைக்கத் தேவையான 272 என்ற எண்ணிக்கையைப் பெற மாட்டார்கள். 200க்கும் குறைவாகவே பெறுவார்கள். அப்போது, 80 தொகுதிகளின் உறுப்பினர்களது ஆதரவு தேவைப்படும். அதை மாநிலக் கட்சிகளிடமும் பிற எதிர்க்கட்சிகளிடமும்தான் பெற வேண்டியிருக்கும். ஆகவே, ஆர்எஸ்எஸ் பல பிராந்தியக் கட்சிகளிடமும் கூட்டணிக் கட்சிகளிடமும் பேசிவருகிறது. மோடி அல்லாத தலைமையை ஏற்றுக்கொண்டு பாஜகவை ஆதரிக்க வேண்டும் என்பதே அவர்களது வேண்டுகோள். ஏற்கெனவே ‘தி சிட்டிசன்’ ஏட்டில் ‘மக்களவைத் தேர்தல்: ஆர்எஸ்எஸ் மாற்றுத் திட்டம் (Plan B)’ என்ற கட்டுரை வெளியானது. அதில் ஆர்எஸ்எஸ் நிதின் கட்கரியை ஆதரிக்கிறது என்று எழுதியிருந்தார்கள்.
பாஜகவின் கூட்டணிக் கட்சியான சிவசேனா, தேர்தலுக்குப் பிறகு மோடி தவிர எந்த ஒரு வேட்பாளரையும் ஆதரிக்கும் மனோபாவத்தை வெளிப்படுத்திவருகிறது. அஸ்ஸாமில் பாஜகவின் கூட்டணிக் கட்சியாக இருந்த அஸ்ஸாம் கணபரிஷத், தேசியக் குடியுரிமை மசோதா மீது கடும் அதிருப்தி அடைந்து, கூட்டணியை விட்டு வெளியேறியுள்ளது. ஆனால், மோடி அல்லாத ஒரு தலைமையில் அதே கூட்டணி வருமானால் ஏற்றுக்கொள்வதாகக் கூறியுள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் முன்பு இருந்த பிராந்தியக் கட்சிகளிடம் ஆர்எஸ்எஸ் பேசிவருகிறது.
நேற்றைய தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அங்கமான கட்சிகள், மோடிக்குப் பதில் இன்னொரு தலைமையைத் தாங்கள் ஏற்றுக்கொண்டாலும், ராமர் கோயில் கட்டுவதைத் தாங்கள் அங்கமாக இருந்த காலத்திலேயே ஏற்றுக்கொள்ளவில்லை என்றும், அதுவே பாஜகவின் கொள்கையாக இருக்குமானால் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெளிவாகக் கூறிவிட்டன. ஆகவேதான், இன்று ஆர்எஸ்எஸ் கோயில் விஷயத்தில் பின்வாங்கியுள்ளது.
இந்த ஆண்டு ஜனவரி 13ஆம் நாள், ஆந்திராவின் எதிர்க்கட்சியான ஜெகன்மோகன் ரெட்டி நடத்தும், சாக்க்ஷி என்ற இதழில், சந்திரபாபு நாயுடுவின் ஆர்எஸ்எஸ் - பாஜகவுடனான ரகசிய உறவு என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியானது. தான் மோடிக்குத்தான் எதிரானவர் என்றும், பாஜகவுக்கு அல்ல என்றும், கட்கரி தனக்கு உடன்பாடுதான் என்றும் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளது அதில் வெளியிடப்பட்டுள்ளது.
அருண் ஜேட்லி, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி ஆகியோருடன் நாயுடு நல்லுறவு கொண்டுள்ளார் என்கின்றனர். மூன்று மாநிலத் தேர்தல் முடிவுகளில் பாஜக தோற்றவுடன், நிதின் கட்கரி அது பற்றி கருத்து சொன்னதற்கு ஆலோசனை கூறியதே சந்திரபாபு நாயுடுதான் என்கின்றனர். தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குத் தேர்தல் முடிவுகளில் எண்ணிக்கை குறையுமானால், ஆதரவுக் கரம் நீட்டுவேன் என்று நாயுடு உறுதி கூறியுள்ளதாகவும் எழுதியுள்ளனர்.
ஆர்எஸ்எஸ் நிலைப்பாடு என்ன?
மோடி, தான் தேர்தலுக்குப் பிறகு, ஒன்று பிரதமராகவோ அல்லது எதிர்க்கட்சித் தலைவராகவோ இருக்க வேண்டும் என்பதில் தெளிவாக உள்ளார். ஆனால், எதிர்க்கட்சியாக இருப்பதை ஆர்எஸ்எஸ் விரும்பவில்லை. ஆகவேதான் இந்த முயற்சியில் ஈடுபடுகின்றனர்.
அதிகாரத்தில் இருந்ததன் மூலம் பெற்ற பலன்களைத் தொடர்ந்து பெற ஆர்எஸ்எஸ் விரும்புகிறது என்றும், வாஜ்பாயை விடச் சிறிது 'கடினமான’ ஒருவர் வேண்டும் எனவும், மோடியை விட எளிதாகக் கொண்டு செல்பவராக இருக்க வேண்டும் எனவும் ஆர்எஸ்எஸ் நினைப்பதாகக் கேள்விப்படுவதாக, சீமா தனது கட்டுரையில் குறிப்பிடுகிறார்.
மோடியும், ஷாவும் தங்கள் கையிலிருந்து அதிகாரத்தைக் கைவிடுவதாக இல்லை என்பதே ஆர்எஸ்எஸ்ஸுக்குப் பிரச்சினை. மோடியைவிட கட்கரி எதிர்க்கட்சிகளிடமும் பிராந்தியக் கட்சிகளிடமும் நல்ல உறவு வைத்துள்ளார் என்பதும், ஏற்கெனவே பாஜகவின் அகில இந்தியத் தலைவராக இருந்தார் என்பதால் கட்சிக்குள்ளும் நல்ல உறவுகளைக் கொண்டுள்ளார் என்பதும், கார்ப்பரேட் நிறுவனங்களும்கூட மோடியின் அதிகாரப் போக்கை விரும்பவில்லை என்பதும், ஆர்எஸ்எஸ் எடுக்கும் புதிய முயற்சிக்கு அடித்தளமாக அமைந்துள்ளன.
நிழல் யுத்தம்
கட்கரிக்கும் மோடிக்கும், நிழல் போர் நடந்துவருகிறது. கட்கரி தனக்கு வேண்டிய சாலை போக்குவரத்து இலாகாவை வேண்டிப் பெற்றுக்கொண்டவர். அதன் மூலம் நாடு தழுவிய அளவில் நேரடியாக உறவில் உள்ளவர். ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்துக்கு நெருக்கமானவர். சில மாதங்களுக்கு முன்பு, கட்கரியின் அமைச்சகத்திற்கு திடீரெனப் பிரதமர் அலுவலகத்திலிருந்து ஒரு தாக்கீது வந்தது. ஹரியானா, ராஜஸ்தான் மாநிலங்களில் சாலை போக்குவரத்துப் பணிகள் இருக்கும் நிலைமை பற்றிய அறிக்கையை மாலைக்குள் கொடுக்க வேண்டும் என்று காலையில் தாக்கீது வந்தது. உடனே கட்கரி இரண்டு ஹெலிகாப்டர்களை ஏற்பாடு செய்து, மூத்த அதிகாரிகளுடன் பறந்துசென்று பார்வையிட்டு அதே நாளில் அறிக்கையைக் கொடுத்தார்.
2018ஆம் ஆண்டு செப்டம்பரில், சிகாகோவில், உலக இந்து சமய மாநாடு நடந்தது. அதில் ஆர்எஸ்எஸ் தலைவருடன் சென்று கலந்துகொள்ளும் பெரும் வாய்ப்பு கட்கரிக்குக் கிடைத்தது. ஆனால், கட்கரி செல்ல கட்சி அனுமதி மறுத்துவிட்டது. அதே நேரத்தில் பாஜகவின் தேசிய செயற்குழுக் கூட்டம் இருக்கிறது என்று காரணம் கூறப்பட்டது. ஆனால் பாஜகவின் செயற்குழுக் கூட்டம் அறிவிக்கப்படுவதற்கு முன்பே மாநாட்டின் தேதி அறிவிக்கப்பட்டிருந்தது.
சமீபத்தில் கட்கரி, உளவுத் துறை அதிகாரிகளின் கூட்டத்தில் பேசியபோது, வெற்றிக்குப் பல தந்தையர், தோல்வி என்றுமே அநாதை என்னும் பழமொழியைச் சுட்டிக்காட்டினார். மூன்று மாநிலத் தேர்தல் முடிவுகள் பற்றித்தான் கூறுகிறார் என்பதை எல்லோருமே உணர்ந்தார்கள்.
மோடி சென்ற ஆண்டு மெட்ரோ ரயில் அடிக்கல் நாட்டலுக்காக மகாராஷ்டிரா சென்றிருந்தார். அந்தச் சமயத்தில், வசந்த்ராவ் நாயக் ஷெட்டி சுவவலம்பன் மிஷன் என்ற மகாராஷ்டிர விவசாய சங்க உறுப்பின் தலைவரான கிஷோர் திவாரி, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்துக்கும் செயலாளர் பையாஜி சுரேஷ் ஜோஷிக்கும் கடிதம் எழுதினார். அதில், ‘பணமதிப்பழிப்பும் ஜிஎஸ்டியும் அதிகாரத் தன்மை கொண்ட தலைவர்களால் கொண்டுவரப்பட்டுள்ளது. இது போன்ற தலைவர்கள் சமூகத்துக்கும், நாட்டுக்கும் ஆபத்தானவர்கள். மோடியும், அமித் ஷாவும் விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் எதிரான கொள்கைகளைக் கொண்டவர்கள். ஆகவே அவர்களை மாற்றிவிட்டு, 61 வயதுக்காரரான மென்மையான கட்கரியைப் பொறுப்புக்குக் கொண்டுவாருங்கள்’ என்று எழுதியிருந்தார் என்பது 2018 டிசம்பர் 11ஆம் நாள் ஏடுகளில் வெளிவந்தது.
மேற்கண்ட எல்லாச் செய்திகளும் எல்லா யூகங்களும் இப்போது உண்மையாகிக் கொண்டிருக்கின்றன என்பது கண்கூடு.

Wednesday, January 30, 2019

ஜார்ஜ் பெர்னாண்டஸ்: மறக்க முடியாத மகத்தான ஆளுமை. . . .

ஜார்ஜ் பெர்னாண்டஸ்: மறக்க முடியாத மகத்தான ஆளுமை. . . .

ஜார்ஜ் பெர்னாண்டஸ்: மறக்க முடியாத மகத்தான ஆளுமை. . . .

டி.எஸ்.எஸ். மணி

ஜார்ஜ் பெர்னாண்டஸ் மறைவு பல அனுபவங்களை, படிப்பினைகளைக் கொடுத்துள்ளது. சரியாக இஸ்திரி போடப்படாத வெள்ளை ஜிப்பா, வெள்ளை பைஜாமா, தடித்த கண்ணாடி ஆகியவற்றுடன் எளிமையாகத் தோற்றமளிப்பவர். இந்தியாவின் இரும்பு மனிதர் என்று ஒரு காலத்தில் பெயர் பெற்றிருந்தார். காங்கிரஸ் அரசாங்கங்களிலேயே, உச்சகட்ட யதேச்சதிகாரி என்று பெயர் பெற்றிருந்த இந்திரா காந்தியின் உச்சகட்ட அடக்குமுறையாகக் கருதப்படும் நெருக்கடி நிலையை எதிர்த்துக் களம் கண்டவர்.
சாதாரணக் களமா அது? மனித உரிமைச் செயற்பாட்டாளர்களை எல்லாம் வேட்டையாடிவந்த இந்திரா காந்தியின் நெருக்கடி நிலை ஜெயப்ரகாஷ் நாராயணன் முதல், தமிழ்நாட்டு திமுகவினர் வரை, அனைவரையும் சிறையில் தள்ளியபோது, அரசின் கைகளுக்குச் சிக்காமல் தலைமறைவாக இருந்துகொண்டே, இயக்கம் கட்டிய வீரமிகு போராளி. நெருக்கடி நிலை வருவதற்குக் காரணமாக இருந்த அகில இந்திய ரயில்வே தொழிலாளர் வேலைநிறுத்தத்தை முன்னின்று நடத்திய மாபெரும் தொழிற்சங்கவாதி தோழர் ஜார்ஜ் பெர்னானடஸ். அவரது தாத்தா நானூறு ஆண்டுகளுக்கு முன்னால், தூத்துக்குடியை விட்டு மங்களூருக்குச் சென்று வாழ்ந்தவர். மீனவர் பின்னணியைக் கொண்ட தமிழர் என்பதே இவரது வரலாற்றுப் பின்னணி.
1930ஆம் ஆண்டு ஜூன் 3இல், மங்களூரில் ஜோசப் பெர்னாண்டோ, அலைஸ் மார்த்தா பெர்னாண்டோ தம்பதியர்களின் மூத்த மகனாகப் பிறந்தார். ஆறு குழந்தைகளில் இவர் முதலாமவர். இதே நாளில் பிறந்த இங்கிலாந்து அரசர் ஜார்ஜ் மேலுள்ள ஈர்ப்பின் காரணமாக இவருக்கு ஜார்ஜ் என்று இவரது தயார் பெயர் சூட்டினார். மங்களூரியன் கத்தோலிக்கக் குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்த ஜார்ஜ், சிறு வயதிலேயே, குடும்பத்தவர்களால் ரோமன் கத்தோலிக்க திருச்சபையில் பணி செய்ய, குருமார் ஆவதற்கான படிப்பில், 1946இல் பெங்களூரில் புனித பீட்டர்ஸ் செமினரியில் 16 வயதில் சேர்க்கப்பட்டார். இரண்டரை ஆண்டுகள் சித்தாந்தம் படித்தார். அங்கே ரெக்டர்களுக்குத் தனி மேசை, தனி உணவு என்று இருந்த ஏற்பாட்டில் இவருக்கு உடன்பாடில்லை.
இதுபோன்ற முரண்களைப் பற்றிய தனது சிந்தனைகளுக்கு முழுமையான விடை கிடைக்காத ஒரு நிலையில், ஜார்ஜ் செமினரியை விட்டு 1949இல் வெளியேறினார். மத நம்பிக்கையையும் இழந்தார். அப்போதே மங்களூரில் போக்குவரத்துத் தொழிலாளர்கள், உணவு விடுதித் தொழிலாளர்கள் மத்தியில் பணியாற்றினார். 1949இல் பம்பாய் சென்றார். தங்க இடம் இன்றித் தெருக்களிலும் சௌபாதி கடற்கரை மணலிலும் படுத்து உறங்குவார். நள்ளிரவில் காவலர்கள் வந்து எழுப்பி விரட்டிவிடுவார்கள்.
பம்பாயில், அந்தக் காலத்தில் பிரபலமாக இருந்த தோழர் பிளாசிட் டிமாலோ தலைமையிலான, போர்ட் & டாக் தொழிலாளர் சங்கம் துறைமுகத் தொழிலாளர்கள் மத்தியில் இயங்கிவந்தது. டிமாலோவின் தொழிற்சங்கப் பணிகளில் ஈர்க்கப்பட்டு, ஜார்ஜ் அவருடன் தொழிற்சங்கப் பணிகளில் ஈடுபட்டார். நாளிதழ் ஒன்றின் பிழை திருத்தும் பணியில் ஈடுபட்டார். அவரே பாம்பே டாக்சி சங்கம், நகராட்சி ஊழியர் சங்கம் போன்ற அடிமட்ட தொழிலாளர் சங்கங்களைக் கட்டி எழுப்பினார். ரயில்வே தொழிலாளர்கள் மத்தியில் தொழிற்சங்கப் பணிகளில் தீவிரமாகப் பணியாற்றத் தொடங்கினர்.
அந்நேரம் ராம் மனோகர் லோஹியாவின் சோஷலிஸக் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு அவருடன் சேர்ந்தார். சோஷலிச தொழிற்சங்கப் பணிகளில் ஈடுபட்டார். பம்பாய் நகராட்சித் தேர்தலில் வெற்றி பெற்று, 1961 முதல் 1968 வரை பம்பாய் நகராட்சி உறுப்பினராக இருந்தார். 1861 முதல் 1968 வரை பம்பாயில் நடந்த பல வேலை நிறுத்தங்களிலும் போராட்டங்களிலும் இணைந்து பயணம் செய்ததால், பொது வெளியில் செயற்பாட்டாளராக ஆனார்.
1967 பொதுத்தேர்தலில், தெற்கு பாம்பாய் தொகுதியில் 20 ஆண்டுகளாக அரசியலில் இருந்த பிரபல காங்கிரஸ் தலைவர் எஸ்.கே. பாட்டீல் என்ற சதாசிவ கனோஜி பட்டீலைத் தோற்கடிக்க இந்தப் பணிகள் மூலம் கிடைத்த ஆதரவும் புகழும் உதவின. ஜார்ஜ் 48.50% வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 1969இல், ஜார்ஜ் பெர்னானட்ஸ் சம்யுக்த சோசலிஸ்ட் கட்சியின் (எஸ்.எஸ்.பி.) பொதுச் செயலாளராக இருந்தார். 1973இல் எஸ்.எஸ்.பி.யின் தலைவரானார்.
சக்கரங்கள் ஓடாது!
1970இல் தொடக்கி, தனியார் நிறுவனர்களில் வேலை செய்யும் தொழிலாளர்களின் சங்க வேலைகளில் ஈடுபட்டார். ரயில்வே தொழிலார்களுக்கு, 1947 முதல் 1974 வரையிலான, மூன்று சம்பள ஆணையங்களிலும் சம்பள உயர்வு இல்லை. கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை. அகில இந்திய ரயில்வே கூட்டமைப்பு என்ற அமைப்பைக் கட்டி எழுப்பினார் ஜார்ஜ். 1974 மே 8இல், தேசிய ரயில்வே ஒருங்கிணைப்புக் குழு (என்.சி.சி.ஆர்.எஸ்.) உருவானது.
ரயில்வே தொழிலாளர் போராட்டம் என்ற இந்திய அளவிலான இதுவரை இல்லாத மாபெரும் போராட்டத்தை அறிவித்தார் ஜார்ஜ பெர்னாண்டஸ். சக்கரங்கள் ஓடாது என்ற அந்தப் போராட்ட முழக்கம் பிரபலமானது. பம்பாயில் இருந்த மின்வாரியத் தொழிலாளர்களும், போக்குவரத்துத் தொழிலாளர்களும் ரயில்வே போராட்டத்தை ஆதரித்தனர். பிகாரில் ரயில்வே தொழிலாளர்கள் கயாவில் தண்டவாளத்தில் அமர்ந்து மறித்தனர். சென்னை ஐ.சி.எஃப்.இல் இருந்த 10000 தொழிலாளர்கள் ஆதரவு தெரிவித்தனர். ஜார்ஜ் உட்பட முப்பதாயிரம் தொழிலாளர்கள் கைதானார்கள். தொழிற்சங்கத்திற்கு உள்ளேயே வேறுபட்ட பேச்சுக்கள் இருந்தது என்று ஜார்ஜ் கூறினார். அதனால், மே 27இல் போராட்டம் திரும்பப் பெறப்பட்டது. தொழிலாளர்கள் விடுதலை ஆனார்கள். ஜார்ஜ் விடுதலை செய்யப்படவில்லை. அந்த ரயில்வே தொழிலாளர் போராட்டம் ஜார்ஜை இந்தியாவின் இரும்பு மனிதர் என்ற நிலைக்கு உயர்த்தியது.
1875இல் இந்திரா காந்தி பல்வேறு நெருக்கடிகளால் கோபக்கனலாக மாறி, 1975 ஜூன் 25இல் நெருக்கடி நிலையை அறிவித்தார். ஜார்ஜ் முன்னின்று நடத்திய ரயில்வே வேலைநிறுத்தமும் அந்த நெருக்கடிகளில் ஒன்று என்பதால் ஜார்ஜ் மீது எப்.ஐ.ஆர். போடப்பட்டது. ஜார்ஜ் பெர்னாண்டஸ் தலைமறைவானார். ஜார்ஜ் எங்கே எனக் கேட்டுக் காவல் துறை, அவரது தம்பி லாரன்ஸ் பெர்னாண்டஸைச் சித்திரவதை செய்தது. ஜார்ஜின் நண்பர் ஸ்னேஹலதா ரெட்டி கைது செய்யப்பட்டார். விடுதலையாகி அந்தத் தாக்கத்தில் இறந்து போனார்.
புகலிடம் தந்த தமிழகம்
நெருக்கடி நிலையின்போது தலைமறைவான ஜார்ஜ் தமிழ்நாட்டில் தங்கியிருந்தார். அவருக்கு அப்போது முதல்வர் கலைஞரின் ஆதரவு கிடைத்தது. விழுப்புரத்தில் ரயில்வே தொழிலாளர் சங்கம் வலுவாக இருந்தது. திமுகவைச் சேர்ந்த வண்டிப்பாளையம் சுப்பிரமணியம் ஜார்ஜுக்கு அடைக்கலம் கொடுத்ததாகச் செய்தி பரவியதுண்டு. 1975 ஜூலையில் பரோடா டைனமைட் வழக்கு ஜார்ஜ் மீது போடப்பட்டது. பரோடா ஊடகவியலாளர் சங்கத் தலைவர் மீதும், அன்றைய டைம்ஸ் ஆப் இந்தியா நிருபர் மீதும் இணைத்து அந்த வழக்கு போடப்பட்டது. பின்னாளில் தமிழ்நாட்டில் ஆளுநராக இருந்த பட்வாரி மீதும் ஜார்ஜ் உடன் சேர்ந்து சதி செய்ததாக அந்த டைமனமைட் வழக்கு போடப்பட்டது.
டைனமைட் வெடிபொருளைத் தயார் செய்து, இந்தியா முழுதும், அரசு கழிப்பிடங்களில் வெடிக்கச் செய்வதும், இந்திரா காந்தி பேசிவரும் கூட்டங்களில் சிறிது தள்ளி, யாரையும் கொல்லாமல், பீதியை ஏற்படுத்தும் நோக்கத்தில் வெடிக்கச் செய்யவும் திட்டமிட்டார்கள் என்பதே அந்த வழக்கு. வாரணாசியில் இந்திரா காந்தி பேச வருவதற்கு நாலு மணிநேரம் முன்பு வெடிக்கச் செய்ய திட்டமிட்டதாக அந்த வழக்கு கூறியது. அதனாலேயே பரோடா டைனமைட் வழக்கு என்று அது பிரபலமானது. புனே அருகே பிம்ப்ரி யிலிருந்து பாம்ப்பே செல்லும் ரயில் வண்டியில்,வருகின்ற ஆயுதங்களை கொள்ளை அடித்து, அதை வைத்து நாடு முழுவதும் வெடி வெடிக்க ஏற்பாடு செய்தார் என்றும் ஜார்ஜ் மீது வழக்கு. அந்நிய நாட்டு உதவியுடன் ஹாம் வானொலி தயார் செய்யத் திட்டமிட்டதாகவும் வழக்கு. தலைமறைவாக இருக்கும்போதே ஜார்ஜ் பெர்னாண்டஸை கொன்று விட அரசு துடிப்பதாகச் செய்தி வந்தது. அதனால் ஜார்ஜ் கொல்கத்தாவில் கைதானார். பரோடா சிறையில் அடைக்கப்பட்டார். ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு, நார்வே, ஜெர்மனி, ஆஸ்திரியா ஆகிய நாடுகள் ஜார்ஜ் சிறையில் சித்திரவதைக்கு உள்ளாவதைக் கண்டித்தன. அவர் டில்லி திஹார் சிறைக்கு மாற்றப்பட்டார்.
நெருக்கடி நிலையை எதிர்த்து நாடே கொந்தளித்ததால் 1977 பொதுத் தேர்தலில் ஆட்சி மாற்றம் வந்தது. ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தது. மொரார்ஜி தேசாய் பிரதமரானார். பிகார் மாநிலத்தில் உள்ள முஸாபர்பூர் தொகுதியில் வென்ற ஜார்ஜ் ரயில்வே அமைச்சரானார். அந்த அமைச்சரவையில் பாரதிய ஜனசங்கமும் ஒரு அங்கம். ஜனதா என்னும் பெயரில் ஜனசங்கம் உள்ளிட்ட பல கட்சிகள் ஒன்றாக இணைந்திருந்தன. ஜனதாவில் உறுப்பினராக இருந்துகொண்டு, ஆர்எஸ்எஸ் அமைப்பிலும் உறுப்பினராக இருக்கக் கூடாது என்று ஜார்ஜ் பிரச்சினையைக் கிளப்பினார். அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் ஆட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டது. ஆட்சியில் பங்கு வகித்திருந்த சரண்சிங் பிரதமர் மொரார்ஜிக்கு எதிராகக் கலகக் கொடி எழுப்பினார். இதனால் 1979இல் ஜனதா கட்சி உடைந்தது. ஆட்சி கவிழ்ந்தது. சரண்சிங் பிரதமரானார்.
1980இல் நடைபெற்ற ஏழாவது பொதுத் தேர்தலில் ஜனதா தோற்றது. காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தது. ஜார்ஜ் அந்தத் தேர்தலில், பெங்களூர் வடக்கு தொகுதியில் நின்றார். அவரை எதிர்த்த ஜாபர் சேட் வெற்றி பெற்றார். 1989இல் பிகாருக்கு ஜார்ஜ் மாறினார். 1989, 1991 தேர்தல்களில், பிகார் மாநிலத்தில், முஸாபர்பூர் தொகுதியில் நின்று வென்றார்.
1988இல் பெங்களூரில் ஜனதா தளம் உருவானது. அதில் ஜார்ஜ் முக்கியப் பங்காற்றினார். அடுத்து வந்த வி.பி. சிங் தலைமையிலான ஆட்சியில் அமைச்சரானார். கொங்கண் ரயில்வே திட்டம் கொண்டுவந்தார். பிகாரில் லாலு பிரசாத் யாதவுக்கும் நிதிஷ் குமாருக்கும் சண்டை பெரிதானது. ஜனதா தளம் உடைந்தது. லாலுவிற்கு எதிராக சமதா கட்சியை நிதிஷுடன் சேர்ந்து 1994இல் ஜார்ஜ் உருவாக்கினார்.
தமிழகப் போராட்டக் களத்தில் ஜார்ஜ்
இடையில் ஜார்ஜ் தமிழ்நாட்டு இயக்கங்களில் முக்கியப் பங்காற்றினார். 1989இல் கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டு எங்களுக்கு வழி காட்டினார். தூத்துக்குடியில் பெரிய பேரணியை எங்களுடன் நடத்தினார். எங்களுக்கு அன்று அணு உலை எதிர்ப்பைக் கற்றுக் கொடுத்த, ஜீ. ராமேஷ் என்ற ஊடகவியலாளரும், அறிவியலாளருமான தோழர் நாகார்ஜுனன், ஜார்ஜுக்கு நெருக்கடி நிலை காலத்திலேயே நெருக்கமானவர். ஜார்ஜை எனக்கும், ஆண்டன் கோமஸுக்கும் அவர் அறிமுகம் செய்துவைத்தார்.
‘அதர் சைடு’ என்ற ஆங்கில ஏட்டில் எழுதிய அணு உலை எதிர்ப்பு பற்றிய கட்டுரையை எங்களுக்கு விளக்கி வகுப்பு எடுத்தார் ஜார்ஜ். அதேபோல, 1996இல், தனது நண்பர் கருணாநிதியால் தொடங்கப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து எங்களுடன், தூத்துக்குடியில் மாபெரும் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் பேரணிக்கு தலைமை தாங்கினார். தனது நண்பர் கருணாநிதி ஏன் காவல் துறையை ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்களான, சூழலியல்வாதிகளுக்கு எதிராகப் பயன்படுத்துகிறார் என்று தூத்துகுடி மேடையிலேயே கேள்வி எழுப்பினார்.
பாஜகவுடன் ஜார்ஜ்
1996, 1998 ஆகிய ஆண்டுகளில் அமைந்த இரண்டு கூட்டணி ஆட்சியிகளிலும் ஜார்ஜ் அமைச்சராக இருந்தார். பிறகு, அவருடைய சமதா கட்சி பாஜகவுடன் கூட்டணி வைத்துக்கொண்டது. இந்த நடவடிக்கைகள் எல்லாமே காங்கிரஸ் எதிர்ப்பு என்ற அவரது கொள்கையிலிருந்தே முடிவு செய்யப்பட்டன. தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அமைப்பாளராக ஜார்ஜ் நியமிக்கப்பட்டார்.
1999 ஜூலையில் ஐக்கிய ஜனதா தளத்துடன் சமதாவை இணைத்தார். இரண்டாவது, மூன்றாவது தேஜகூ ஆட்சியில் அமைச்சராக இருந்தார். பாதுகாப்புத் துறை அவருக்குக் கொடுக்கப்பட்டது. கார்கில் யுத்தத்தை வெற்றிகரமாக நடத்தியதற்காகப் போற்றப்பட்டார். பொக்ரான் அணுகுண்டு சோதனையை நடத்தினார். எந்த ஜார்ஜ் அணு குண்டு மாத்திரமல்ல, அணு உலையே கூடாது என்று எங்களுடன் போராடினாரோ, அதே ஜார்ஜ் ஆட்சிக்கு வந்தவுடன், அணு குண்டு சோதனையை நடத்தினார் என்பதே விந்தை!
மனித உரிமைச் செயற்பாட்டாளராக ஜார்ஜ் பெர்னாண்டஸ், ஜெயபிரகாஷ் நாராயணனால் நெருக்கடி நிலை காலத்தில், சிறைக்குள் இருந்தே தோற்றுவிக்கப்பட்ட பி.யு.சி.எல். என்ற மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் தேசியக் குழு உறுப்பினராக இருந்தார். 1980இம் ஆண்டு, சென்னையில் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் ஒரு விடுதியில் நடந்த பியுசிஎல் தேசியக் குழுவில் பங்குகொண்டார். அப்போது நக்சல்பாரிகள் மீதான காவல் துறையின் ஜோலார்ப்பேட்டை தாக்குதல் பிரச்சினையாக்கப்பட்டுப் பேசப்பட்டது.
இரண்டும் ஒன்றல்ல
அந்நேரம் பியுசிஎல் அமைப்பின் தமிழ்நாடு தலைவராக இருந்தவர் சோ ராமசாமி. அகில இந்தியப் பொதுச் செயலாளராக இருந்தவர் அருண் ஷோரி. அவர்கள் இருவரும், நக்சல்பாரிகள் வன்முறையையும், காவல் துறையின் வன்முறையையும் இரண்டையும் சமமாக, ஒன்றே போலக் காண வேண்டும் என வாதாடினர். அதை எதிர்த்து, ஜார்ஜ் பெர்னாண்டஸ், காவல் துறையின் வன்முறை என்பது வினை என்றும் நக்சல்பாரிகள் செய்வது எதிர்வினை என்றும் வாதாடினார். அவர் ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் உறுப்பினராகவும் இருந்தார்.
ஜார்ஜ் ஊடகவியலாளராகவும் செயல்பட்டார். 1948இலேயே ‘கொங்கண் யூத்’ என்ற மாத இதழ் ஆசிரியராக இருந்தார். பைதாவணி என்ற கன்னட வார இதழ் ஆசிரியராகப் பணியாற்றினார். 1952, 53 ஆண்டுகளில், டாக்மான் என்ற வார இதழில் பணியாற்றினார். அதர் சைடு என்ற ஆங்கில இதழின் ஆசிரியராகவும் இருந்துள்ளார்.
அண்டை நாடுகளில் நடந்துவரும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராகக் குரல் கொடுப்பதில் முதன்மையாகத் திகழ்ந்தார் ஜார்ஜ். 1997இல் டில்லியில், ஈழப் பிரச்சினை பற்றிய கருத்தரங்கை நடத்தி, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பகிரங்கமாகவே செயல்பட்டவர் ஜார்ஜ். 1999இல் ராமேஸ்வரத்தில் திராவிடர் கழகம் நடத்திய புலிகள் ஆதரவு மாநாட்டிற்கு வந்து சிறப்பித்தார்.
அதேபோல, சீனா திபெத்தை ஆக்கிரமித்ததாகக் கூறி, தலாய் லாமா குழுவைச் சேர்ந்த அகதிகள் இந்தியாவில் தஞ்சம் அடைந்தார்கள். அவர்களின் மனித உரிமை நியாயங்களை ஜார்ஜ் தொடர்ந்து பேசிவந்தார். அவரது டில்லி இல்லத்தில், நாம் திபெத்தியர்களைக் காணலாம். மியான்மர் ராணுவ ஆட்சிக்கு எதிராக, ஜநாயகத்திற்காகப் போராடிய இயக்கமான, ஆங் சாங் சு கியூவை ஆதரித்துப் பரப்புரை செய்துவந்தார்.
கார்கில் யுத்த காலத்தில், அவர் மீது சவப்பெட்டி ஊழல் குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டது. அவருக்கும் முப்படைத் தளபதிகள் சிலருக்கும் இடையில் நிகழ்ந்த முரண்பாடே இந்தக் குற்றச்சாட்டுகளாக மாறியது என்று கூறப்பட்டது.
கார்கில் யுத்தத்தின்போது, சியாச்சின் என்ற உயர்ந்த மலை உச்சிக்கு 18 முறை சென்று, பாகிஸ்தானின் ஊடுருவலை எதிர்த்துப் போராடும் இந்திய வீரர்களுக்கு உத்வேகமூட்டியவர் ஜார்ஜ். சியாச்சினுக்குச் சென்ற ஒரே பாதுகாப்புத் துறை அமைச்சர் அவர். அந்த வயதிலும், உச்சி மலைக்குச் சென்றதாலோ என்னவோ, தலையில் தாக்கம் ஏற்பட்டு, 2005ஆம் ஆண்டு முதல் அல்சைமர் என்ற மறதி நோய்க்கு ஆளானார். பதிமூன்று ஆண்டுகள் மறதி நோயால் அவதிப்பட்டு அவர் மறைந்தார்.
கடைசிக் காலத்தில் அவர் மறதி நோயால் பாதிக்கப்பட்டார். ஆனால், அவர் வாழ்நாள் முழுவதும் மேற்கொண்ட போராட்டங்களும், செய்த சாதனைகளும் அவரது பங்களிப்புகளும் என்றும் மக்களால் நினைவில் கொள்ளப்படும்.