மோடிக்குப் பதில் நிதின் கட்கரியா? – டி.எஸ்.எஸ்.மணி
மீண்டும் பாஜக தலைமையில் ஆட்சி அமைப்பதற்கான ஆர்எஸ்எஸ்ஸின் திட்டம் என்ன?
நரேந்திர மோடிக்குப் பதில் நிதின் கட்கரி - இப்படி ஒரு பேச்சு அடிபடுகிறதா அல்லது கிளப்பிவிடப்படுகிறதா?
தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கத்தின் சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் நீர்நிலைகள், நதிகள் பாதுகாப்பு, கங்கையைச் சுத்தப்படுத்தல் துறைகளின் அமைச்சர் நிதின் கட்கரி, ஒரு மாதம் முன்னால், 2014இல் நாங்கள் ஆட்சிக்கு வருவோம் என நினைக்கவில்லை. அதனால் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளைக் கொடுத்துவிட்டோம் என்றார்.
கட்கரி 2010 முதல் 2013 வரை பாரதிய ஜனதா கட்சியின் அகில இந்தியத் தலைவராக இருந்தவர். மூன்று மாநிலங்களில் பாஜக தோற்றவுடன் கட்கரி, தேர்தல் தோல்வியை ஒப்புக்கொள்வதுதான் தலைமைக்கு அழகு என்றார்.
சில நாட்களுக்கு முன்னர் கட்கரி, ‘வீட்டைப் பார்த்துக்கொள்ள முடியாத ஒருவரால், நாட்டை எப்படிப் பார்க்க முடியும்?’ என்றார். அது யாரைக் குறிவைத்து என்பது பெரிதும் பேசப்பட்டது.
பிப்ரவரி 7ஆம் தேதி, மக்களவையில், நிதின் கட்கரி கேள்வி ஒன்றுக்குப் பதில் அளித்தவுடன் பாஜக உறுப்பினர்கள் மேசையைத் தட்டிப் பாராட்டினார்கள். கட்கரியின் பதிலை உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டிருந்த சோனியா காந்தி, தலையை ஆட்டி, மேசையைத் தட்டிப் பாராட்டு தெரிவித்தார் .உடனே காங்கிரஸ் கட்சியின் மக்களவைத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயும், மற்ற காங்கிரஸ் எம்.பி.க்களும், மேசையைத் தட்டி வாழ்த்துக் கூறினர். கட்கரி நன்றி தெரிவித்தார்.
புனேவில் ஒருமுறை கட்கரி, ‘நாங்கள் சாதியவாதத்தின் மீது நம்பிக்கைக் கொண்டவர்கள் அல்லர். மற்றவர்களைப் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால், நமது ஐந்து மாவட்டங்களில் சாதி என்கிற பேச்சுக்கே இடமில்லை. யாராவது சாதியைப் பற்றிப் பேசினால், அவர்கள் விளைவுகளைச் சந்திக்க நேரிடும்' என்றார். நாக்பூர் தொகுதியிலிருந்துதான் கட்கரி மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கட்கரி என்னும் மாற்று?
பிப்ரவரி 7 அன்று நடந்த நாடாளுமன்ற நிகழ்ச்சியை வெளியிட்ட சென்னை பதிப்பு டைம்ஸ் ஆஃப் இந்தியா, பிப்ரவரி 8ஆம் நாள் ஏட்டில் இன்னொரு செய்தியையும் வெளியிட்டிருந்தது. அதாவது, மோடி தலைமையிலான பாஜகவின் கூட்டணி, வருகிற மக்களவைத் தேர்தலில், 200க்குக் குறைவாக வெல்லுமானால் மோடி மாற்றப்பட்டு கட்கரி வருவார் என்பதே அந்தச் செய்தி.
அந்தச் செய்தியுடன் பெட்டிச் செய்தியாக ஒன்று வெளியானது. டேராடூனில் அதே வியாழக்கிழமை ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், நாட்டின் தலைமைப் பதவிக்கு கட்கரி வருவார் என்று பரவும் கருத்து பற்றிக் கேட்டதற்கு, “கட்கரி சூழ்ச்சி மனோபாவம் கொண்டவரல்லர். அவர் இருக்கும் பொறுப்பிலேயே திருப்தியடைபவர்” என்று பதில் கூறினார்.
இத்தனை செய்திகளிடையே, பிரபல ஊடகவியலாளர் எம்.ஜே.அக்பரின் நெருக்கமான நண்பர் சீமா முஸ்தபா என்ற ஊடகவியலாளர் (சங் பரிவாருடன் நெருக்கமாக இருக்கும் முஸ்லிம் அணியைச் சேர்ந்தவர்; தி சிட்டிசன் ஏட்டின் நிறுவன ஆசிரியர்), சந்திரபாபு நாயுடுவுடனும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பிரபுல் படேலுடனும், அஜித் பவாருடனும், நவீன் பட்நாயக்குடனும் திரிணமூல் காங்கிரஸுடனும், திமுகவின் இரண்டாம் நிலைத் தலைவர்களுடனும் கட்கரி பேசிக்கொண்டிருக்கிறார் என்று கூறியுள்ளார்.
ராமர் கோயில் விஷயத்தில் பல்டி
தி சிட்டிசன் ஏட்டில், பிப்ரவரி 7ஆம் தேதி சீமா முஸ்தபாவும் வெங்கடேஷ் கேசரும் எழுதிய அயோத்தி விவகாரம் குறித்த கட்டுரை, மோகன் பாகவத், ராமர் கோயில் கட்டும் விவகாரத்தை,மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு என்று ஏன் தள்ளிப் போட்டார் என்று கேள்வி எழுப்பியது. விஸ்வ ஹிந்து பரிஷத் மூலம் ராமர் கோயில் விவகாரத்தைத் தள்ளிப்போட வைத்து, அதை அப்படியே தானும் ஏற்றுக்கொண்டு, ராமர் கோயில் கட்டும் விஷயத்தை ஒரு கட்சியின் தேர்தல் விஷயமாக ஆக்க விரும்பவில்லை என்று மோகன் பாகவத் கூறியுள்ளதையும் கட்டுரை சுட்டிக்காட்டுகிறது.
ராமர் கோயில் விவகாரத்தில் ஆர்எஸ்எஸ் இப்படி திடீரெனப் பின்வாங்கியுள்ளது கவனிக்கத்தக்கது. ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளும், விஎச்பி நிர்வாகிகளும், தொண்டர்களும், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அங்கமான சிவசேனாவும், கடந்த மூன்று மாதங்களாக அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவோம் என்ற வாக்குறுதியை நிறைவேற்று என்று மோடி ஆட்சிக்கு எதிராகக் குரல் எழுப்பிவந்தன. உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கிறது என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும், பாஜக தலைவர் அமித் ஷாவும் கூறியபோது, உச்ச நீதிமன்றம் மக்களுக்கும் நம்பிக்கைக்கும் இடையில் தலையிடுவது குறித்து எச்சரிக்கையும் கொடுத்தவர்கள் இவர்கள். கோயில் கட்ட அவசரச் சட்டம் கொண்டுவா என்று கூறியவர்கள். இவர்கள் ஏன் இப்படி மாற்றிப் பேசுகிறார்கள்?
சிவசேனா தலைவர் உத்தவ் தாக்ரே கோயில் கட்டுவதற்காக உரக்கக் குரல் எழுப்பியதையும் , விஎச்பி மூலம் ஐந்து லட்சம் மக்களைத் திரட்டி, ராமர் கோயில் கட்ட வேண்டும் என்று முழக்கமிட்டதையும் கேட்டு ஒருமாதம் கூட ஆகவில்லையே? உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ராமர் கோயில் விவகாரம் நீதிமன்றத்தில் இருப்பதால் சட்டத்துக்கு உட்பட்டே ராமர் கோயில் கட்டப்படும் என்றும் ராமர் சிலை ஒன்று அயோத்தியில் 202 மீட்டர் உயரத்தில் அமைக்கப்படும் எனவும் தீபாவளி அன்று அறிவித்திருந்தார் (ஒற்றுமைச் சிலை என்ற வல்லபபாய் படேல் சிலையின் உயரமான 182 மீட்டர் என்பதைவிட யோகி சொல்லும் ராமர் சிலை உயரமானது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது).
அத்தனை தீவிரம் காட்டியவர்கள் ஏன் இப்படி பல்டி அடிக்கிறார்கள்?
மாநிலக் கட்சிகளின் நிலை என்ன?
நாகபுரியில் உள்ள ஆர்எஸ்எஸ் தலைமையகத்திலிருந்து, தி சிட்டிசன் இதழுக்குக் கிடைத்த ஆதாரபூர்வமான தகவலின்படி மோடி, அமித் ஷா இருவரும் நாகபுரிக்குப் பணியவில்லை. அவர்கள் ஆட்சி அமைக்கத் தேவையான 272 என்ற எண்ணிக்கையைப் பெற மாட்டார்கள். 200க்கும் குறைவாகவே பெறுவார்கள். அப்போது, 80 தொகுதிகளின் உறுப்பினர்களது ஆதரவு தேவைப்படும். அதை மாநிலக் கட்சிகளிடமும் பிற எதிர்க்கட்சிகளிடமும்தான் பெற வேண்டியிருக்கும். ஆகவே, ஆர்எஸ்எஸ் பல பிராந்தியக் கட்சிகளிடமும் கூட்டணிக் கட்சிகளிடமும் பேசிவருகிறது. மோடி அல்லாத தலைமையை ஏற்றுக்கொண்டு பாஜகவை ஆதரிக்க வேண்டும் என்பதே அவர்களது வேண்டுகோள். ஏற்கெனவே ‘தி சிட்டிசன்’ ஏட்டில் ‘மக்களவைத் தேர்தல்: ஆர்எஸ்எஸ் மாற்றுத் திட்டம் (Plan B)’ என்ற கட்டுரை வெளியானது. அதில் ஆர்எஸ்எஸ் நிதின் கட்கரியை ஆதரிக்கிறது என்று எழுதியிருந்தார்கள்.
பாஜகவின் கூட்டணிக் கட்சியான சிவசேனா, தேர்தலுக்குப் பிறகு மோடி தவிர எந்த ஒரு வேட்பாளரையும் ஆதரிக்கும் மனோபாவத்தை வெளிப்படுத்திவருகிறது. அஸ்ஸாமில் பாஜகவின் கூட்டணிக் கட்சியாக இருந்த அஸ்ஸாம் கணபரிஷத், தேசியக் குடியுரிமை மசோதா மீது கடும் அதிருப்தி அடைந்து, கூட்டணியை விட்டு வெளியேறியுள்ளது. ஆனால், மோடி அல்லாத ஒரு தலைமையில் அதே கூட்டணி வருமானால் ஏற்றுக்கொள்வதாகக் கூறியுள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் முன்பு இருந்த பிராந்தியக் கட்சிகளிடம் ஆர்எஸ்எஸ் பேசிவருகிறது.
நேற்றைய தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அங்கமான கட்சிகள், மோடிக்குப் பதில் இன்னொரு தலைமையைத் தாங்கள் ஏற்றுக்கொண்டாலும், ராமர் கோயில் கட்டுவதைத் தாங்கள் அங்கமாக இருந்த காலத்திலேயே ஏற்றுக்கொள்ளவில்லை என்றும், அதுவே பாஜகவின் கொள்கையாக இருக்குமானால் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெளிவாகக் கூறிவிட்டன. ஆகவேதான், இன்று ஆர்எஸ்எஸ் கோயில் விஷயத்தில் பின்வாங்கியுள்ளது.
இந்த ஆண்டு ஜனவரி 13ஆம் நாள், ஆந்திராவின் எதிர்க்கட்சியான ஜெகன்மோகன் ரெட்டி நடத்தும், சாக்க்ஷி என்ற இதழில், சந்திரபாபு நாயுடுவின் ஆர்எஸ்எஸ் - பாஜகவுடனான ரகசிய உறவு என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியானது. தான் மோடிக்குத்தான் எதிரானவர் என்றும், பாஜகவுக்கு அல்ல என்றும், கட்கரி தனக்கு உடன்பாடுதான் என்றும் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளது அதில் வெளியிடப்பட்டுள்ளது.
அருண் ஜேட்லி, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி ஆகியோருடன் நாயுடு நல்லுறவு கொண்டுள்ளார் என்கின்றனர். மூன்று மாநிலத் தேர்தல் முடிவுகளில் பாஜக தோற்றவுடன், நிதின் கட்கரி அது பற்றி கருத்து சொன்னதற்கு ஆலோசனை கூறியதே சந்திரபாபு நாயுடுதான் என்கின்றனர். தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குத் தேர்தல் முடிவுகளில் எண்ணிக்கை குறையுமானால், ஆதரவுக் கரம் நீட்டுவேன் என்று நாயுடு உறுதி கூறியுள்ளதாகவும் எழுதியுள்ளனர்.
ஆர்எஸ்எஸ் நிலைப்பாடு என்ன?
மோடி, தான் தேர்தலுக்குப் பிறகு, ஒன்று பிரதமராகவோ அல்லது எதிர்க்கட்சித் தலைவராகவோ இருக்க வேண்டும் என்பதில் தெளிவாக உள்ளார். ஆனால், எதிர்க்கட்சியாக இருப்பதை ஆர்எஸ்எஸ் விரும்பவில்லை. ஆகவேதான் இந்த முயற்சியில் ஈடுபடுகின்றனர்.
அதிகாரத்தில் இருந்ததன் மூலம் பெற்ற பலன்களைத் தொடர்ந்து பெற ஆர்எஸ்எஸ் விரும்புகிறது என்றும், வாஜ்பாயை விடச் சிறிது 'கடினமான’ ஒருவர் வேண்டும் எனவும், மோடியை விட எளிதாகக் கொண்டு செல்பவராக இருக்க வேண்டும் எனவும் ஆர்எஸ்எஸ் நினைப்பதாகக் கேள்விப்படுவதாக, சீமா தனது கட்டுரையில் குறிப்பிடுகிறார்.
மோடியும், ஷாவும் தங்கள் கையிலிருந்து அதிகாரத்தைக் கைவிடுவதாக இல்லை என்பதே ஆர்எஸ்எஸ்ஸுக்குப் பிரச்சினை. மோடியைவிட கட்கரி எதிர்க்கட்சிகளிடமும் பிராந்தியக் கட்சிகளிடமும் நல்ல உறவு வைத்துள்ளார் என்பதும், ஏற்கெனவே பாஜகவின் அகில இந்தியத் தலைவராக இருந்தார் என்பதால் கட்சிக்குள்ளும் நல்ல உறவுகளைக் கொண்டுள்ளார் என்பதும், கார்ப்பரேட் நிறுவனங்களும்கூட மோடியின் அதிகாரப் போக்கை விரும்பவில்லை என்பதும், ஆர்எஸ்எஸ் எடுக்கும் புதிய முயற்சிக்கு அடித்தளமாக அமைந்துள்ளன.
நிழல் யுத்தம்
கட்கரிக்கும் மோடிக்கும், நிழல் போர் நடந்துவருகிறது. கட்கரி தனக்கு வேண்டிய சாலை போக்குவரத்து இலாகாவை வேண்டிப் பெற்றுக்கொண்டவர். அதன் மூலம் நாடு தழுவிய அளவில் நேரடியாக உறவில் உள்ளவர். ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்துக்கு நெருக்கமானவர். சில மாதங்களுக்கு முன்பு, கட்கரியின் அமைச்சகத்திற்கு திடீரெனப் பிரதமர் அலுவலகத்திலிருந்து ஒரு தாக்கீது வந்தது. ஹரியானா, ராஜஸ்தான் மாநிலங்களில் சாலை போக்குவரத்துப் பணிகள் இருக்கும் நிலைமை பற்றிய அறிக்கையை மாலைக்குள் கொடுக்க வேண்டும் என்று காலையில் தாக்கீது வந்தது. உடனே கட்கரி இரண்டு ஹெலிகாப்டர்களை ஏற்பாடு செய்து, மூத்த அதிகாரிகளுடன் பறந்துசென்று பார்வையிட்டு அதே நாளில் அறிக்கையைக் கொடுத்தார்.
2018ஆம் ஆண்டு செப்டம்பரில், சிகாகோவில், உலக இந்து சமய மாநாடு நடந்தது. அதில் ஆர்எஸ்எஸ் தலைவருடன் சென்று கலந்துகொள்ளும் பெரும் வாய்ப்பு கட்கரிக்குக் கிடைத்தது. ஆனால், கட்கரி செல்ல கட்சி அனுமதி மறுத்துவிட்டது. அதே நேரத்தில் பாஜகவின் தேசிய செயற்குழுக் கூட்டம் இருக்கிறது என்று காரணம் கூறப்பட்டது. ஆனால் பாஜகவின் செயற்குழுக் கூட்டம் அறிவிக்கப்படுவதற்கு முன்பே மாநாட்டின் தேதி அறிவிக்கப்பட்டிருந்தது.
சமீபத்தில் கட்கரி, உளவுத் துறை அதிகாரிகளின் கூட்டத்தில் பேசியபோது, வெற்றிக்குப் பல தந்தையர், தோல்வி என்றுமே அநாதை என்னும் பழமொழியைச் சுட்டிக்காட்டினார். மூன்று மாநிலத் தேர்தல் முடிவுகள் பற்றித்தான் கூறுகிறார் என்பதை எல்லோருமே உணர்ந்தார்கள்.
மோடி சென்ற ஆண்டு மெட்ரோ ரயில் அடிக்கல் நாட்டலுக்காக மகாராஷ்டிரா சென்றிருந்தார். அந்தச் சமயத்தில், வசந்த்ராவ் நாயக் ஷெட்டி சுவவலம்பன் மிஷன் என்ற மகாராஷ்டிர விவசாய சங்க உறுப்பின் தலைவரான கிஷோர் திவாரி, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்துக்கும் செயலாளர் பையாஜி சுரேஷ் ஜோஷிக்கும் கடிதம் எழுதினார். அதில், ‘பணமதிப்பழிப்பும் ஜிஎஸ்டியும் அதிகாரத் தன்மை கொண்ட தலைவர்களால் கொண்டுவரப்பட்டுள்ளது. இது போன்ற தலைவர்கள் சமூகத்துக்கும், நாட்டுக்கும் ஆபத்தானவர்கள். மோடியும், அமித் ஷாவும் விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் எதிரான கொள்கைகளைக் கொண்டவர்கள். ஆகவே அவர்களை மாற்றிவிட்டு, 61 வயதுக்காரரான மென்மையான கட்கரியைப் பொறுப்புக்குக் கொண்டுவாருங்கள்’ என்று எழுதியிருந்தார் என்பது 2018 டிசம்பர் 11ஆம் நாள் ஏடுகளில் வெளிவந்தது.
மேற்கண்ட எல்லாச் செய்திகளும் எல்லா யூகங்களும் இப்போது உண்மையாகிக் கொண்டிருக்கின்றன என்பது கண்கூடு.
No comments:
Post a Comment