கார்பரேட்களின் நாடா இது?--அருந்ததி,பினாயக் கேள்வி.
மாவோயிஸ்டுகளின் நடவடிக்கைகள் யாருக்கு லாபமாக போனாலும், போகாவிட்டாலும், ஒரு உண்மையை அம்பலத்திற்கு கொண்டுவந்துள்ளது. அதுதான் இந்திய நாட்டை ஆள்வது யார் என்ற கேள்வி. கார்பரேட்கள் என்ற அந்நிய பெருவணிக குழுமங்கள் இந்திய நாட்டை ஆள்கின்றனவா என்ற விவாதம் இன்று ஆங்கில காட்சி ஊடகங்களின் அன்றாட அம்பலப்படுத்தலாக ஆகிவிட்டது. அதேசமயம் சென்னை வந்திருந்த டாக்டர் பினாயக் சென் சில செய்திகளை இரண்டு வாரங்களுக்கு முன்பு சொல்லிச்சென்றார். அதாவது சட்டிஸ்கரில் நடந்து வருகின்ற வன்முறைகள், அது துணை ராணுவத்தின் மற்றும் காவல்துறையின் வன்முறையானாலும், மாவோவாதிகளின் வன்முறையானாலும் எங்கிருந்து தொடங்கியது என்று எடுத்து சொன்னார். இப்போது அரசாங்கத்தால் அதிகமாக பேசப்படும் பொதுவிநியோக முறையை விட முக்கியமானது உணவு பாதுகாப்பு. உணவு பாதுகாப்பு என்பது வெறும் உணவுப்பொருள்களை சேமிப்பு கிடங்கில் சேர்த்து வைப்பதுதான் என்று பார்க்கும் பார்வை இன்று பரவிக்கிடக்கிறது. அதையே உச்சநீதிமன்றமும், நாட்டின் பிரதமரும் பொருள் கொள்கிறார்கள். உச்சநீதிமன்றம் சேமிப்பில் இருக்கும் உணவு பொருள்களை வறுமையில் வாடும் மக்களுக்கு இலவசமாக கொடு என்றது. அதை பிரதமர் மன்மோகன் முடியாது என்றார். அதாவது எதற்க்காக மக்கள் வறுமையில் வாடுகிறார்கள். வறுமையில் வாடும் மக்கள் வேலை செய்ய மறுப்பவர்களா? அவர்களுக்கு அரசு வேலை கொடுக்காமல் இருப்பதால் வறுமையில் இருக்கிறார்களா? அவர்களுக்கு இந்த வேளைபசிக்கு,சேமிப்பில் இருக்கும் உணவை எடுத்து கொடுத்துவிட்டால் பிரச்சனை தீர்ந்துவிடுமா? அடுத்தவேளை உணவுக்கு என்ன உத்திரவாதத்தை உச்சநீதிமன்றம் சொல்கிறது? இப்போது பசிக்கு சேமிப்பில் இருக்கும் உணவை கொடுக்க மறுக்கும் பிரதமர் மன்மோகன், அந்த வறுமையில் உழலும் மக்களுக்கு என்ன பதில் சொல்கிறார்? ஏற்கனவே இந்தமுறை ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன், இதே மன்மோகன் தொடர்ந்து பல மாநாடுகளை நடத்தி, இந்தமுறை நமது நாட்டில் பெரும் பஞ்சம் வரப்போகிறது என்றும் அதை எப்படி சந்திப்பது என்றும் பேசினார். அவரது முதல் நூறு நாட்கள் இப்படிப்பட்ட பஞ்சம் பற்றி பேசும் மாநாடுகள் மட்டுமே நடந்தன என்பதை இப்போது நாம் நினைவுபடுத்தி பார்க்க வேண்டும். அதில் மாபெரும் அறிவாளிகளான மன்மோகனும், திட்டக்குழு துணைத்தலைவரான மான்டெக் அலுவாலியாவும் ஒரே தீர்வை திரும்ப, திரும்ப பேசினர். அதுதான் ஆண்டுக்கு நூறு நாள் கொடுக்கப்படும், தேசிய ஊரக வேலை உறுதி சட்டம். அந்த சட்டத்தின் மூலமே அனைத்து வேலையில்லா பிரச்சனையையும், மற்றும் வறுமை பிரச்சனையையும் தீர்த்துவிடலாம் என்று பேசினார்கள். அப்படி தீராததால் இப்போது வேறு வழிகளை பேசுகிறார்கள். ஆனால் வெறும் மழை இல்லாததால் மட்டுமே இந்த வறுமை என்பதும், பஞ்சம் என்பதும் வந்துள்ளதா? இந்த கேள்விகளுக்கு பினாயக் சென் பதில் சொல்கிறார்.
அதாவது சட்டிஸ்கரில் உள்ள தெற்கு பாஸ்டர் மாவட்டத்தில், 650 கிராமங்களில் உள்ள பழங்குடி மக்களை, கார்பரேட்களின் ஆக்கிரமிப்புகளுக்காக, இடம் பெயர்தலை பலாத்காரமாக அரசு செய்துள்ளது. அவ்வாறு இடம் பெயர்தல் செய்யப்பட பழங்குடி மக்கள் தங்கள் பாரம்பர்ய பகுதிகளான மலைகளிலும், காடுகளிலும் வசித்து வந்தவர்கள். அதாவது அவர்கள் அந்த காடுகளையும், மலைகளையும் பண்படுத்தி அதில் பயிர் வைத்து, அதன்மூலம் அத்தகைய காட்டு வளங்களையும், மலை வளங்களையும் பயன்படுத்தி வாழ்ந்து வந்தனர். அதாவது அவர்களுக்கான வாழும் நிலங்களாக, வாழ்க்கை கொடுத்த பூமியாக அந்த மலைகளும், காடுகளும் இருந்துவந்தன. அப்படிப்பட்ட மலைகளையும், காடுகளையும் வெளியே இருந்து வந்த பெருவணிக குழுமங்களான கார்பரேட்களுக்கு தாரை வார்த்து கொடுத்தவர்கள் யார்? அந்த இடங்களில் மக்களது பொது சொத்தாக இருந்த தாதுபொருள்களை, தனியார் பெருமுதலாளிகளுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் மத்தியஅரசு தாரை வார்த்து கொடுத்துள்ளது. இது 2005 ஆம் ஆண்டு ஜூன் 6 ஆம் நாள் நடந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிறகு, நடத்தப்பட்ட பலாத்கார இடம் பெயர்த்தல். அதை ஒட்டியே சல்வாசுடும் என்று அழைக்கப்படும் திட்டமிட்டு அரசு ஆரம்பித்த ஆயுதம் தாங்கிய கூலிப்படை, தோற்றுவிக்கப்பட்டது. அதாவது அரசு அந்நிய நாட்டு பெருவணிக குழுமங்களுக்கு, நமது நாட்டின் பொது சொத்தாக இருந்த மலைகளையும், காடுகளையும் எழுதிக்கொடுத்தபோதே, அங்கிருந்து இதுவரை ஆண்டு, அனுபவித்துவரும் ஆதிவாசி மக்களை விரட்டுவதற்காக ஒரு திட்டமிட்ட கூலிப்படையையும் அந்த நேரத்தில் உருவாக்கியது என்பதுதான், பினாயக்கின் உரையில் நமக்கு கிடைத்த செய்தியாக இருக்கிறது. பலாத்காரமாக இடம் பெயர்க்கப்பட்ட ஆதிவாசி மக்கள், தங்களது சுற்று சூழல் தொடர்புகளையும், சமூக தொடர்புகளையும் அதன் மூலம் இழந்துவிட்டனர். அதுமட்டுமே அவர்களை வறுமையில் தள்ளியுள்ளது. அதுமட்டுமே அவர்கள் மத்தியில் பஞ்சத்தை ஏற்படுத்தியுள்ளது. டாடா நிறுவனத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அரசு போட்ட பின்புதான் மேற்குறிப்பிட்ட சல்வாசுடும் என்ற கூலிப்படை உருவாக்கப்பட்டது என்பதையும் கூடுதல் தகவலாக பினாயக் கூறினார். இவ்வாறு அந்த மலைப்பகுதிகளில், வன்முறைக்கு தொடக்க கர்த்தாக்களாகவும், வித்திட்டவர்களாகவும் இருப்பது யார் என்பது புரியப்பட முடியும். 60000 பழங்குடி மக்கள் அந்த டாடா நிறுவன வரவால் இடம் பெயர்க்கப்பட்டனர். அவர்கள் மாவோவாதிகள் வசம் போகாமல் எங்கே போவார்கள் என்ற கேள்வி நமக்கு எழுகிறது.
அதேபோல சத்தீஸ்கரின் வடக்கு பகுதியில், ஜிண்டால் என்ற பெருவணிக குழுமம் இறங்கி உள்ளது. நியம்கிரி மலைகளில் இவர்களது ஆக்கிரமிப்பு அதிகமாக ஆகியுள்ளது.அங்கே ராய்கர் மாவட்டத்தில் கிடைக்கும் மலை தண்ணீரை கொள்ளை அடிக்க இந்த நிறுவங்கள் இறங்கியுள்ளன. இது இந்தியாவில் மட்டுமின்றி, ஆப்கானிஸ்தானிலும் நடக்கும் கொடுமை. அங்கேயும் ஆதிவாசி மக்கள் வாழும் மலைப்பகுதிகளில், பொது சொத்தாக உள்ள கனிம வளங்களை கொள்ளையடிக்க,இதே போல அந்நிய ஏகாதிபத்திய நிறுவனங்கள் இறங்கியுள்ளன. அதனால்தான் அங்கே அவர்கள் தலிபான் போன்ற தீவிரவாதி குழுக்களுக்கு பின்னால் பழங்குடிகள் போய்விட்டார்கள் என்று அலறுகிறார்கள். அங்குள்ள கனிம வளங்கள் 3000 கோடி அமெரிக்க டாலருக்காக விற்கப்பட்டுள்ளன.திட்டமிட்டு இங்கே மத்திய ஆசிய பகுதியான பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஆகியவை தனியார் நிறுவன கொள்ளைகளுக்காக, தாரை வார்க்கப்பட்டுள்ளன அல்லது அவை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. மேற்கண்ட செய்திகளை பினாயக் கூறும்போது உணமையிலேயே மூச்சு நின்றுவிடும் போல இருந்தது. இவ்வாறு நமது மூச்சை நிற்க வைப்பது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளும் அந்த நாடுகளில் உள்ள பன்னாட்டு மூலதன நிறுவங்களும் என்பது புரியப்படவேண்டும்.அதேசமயம் இங்குள்ள ஆங்கில காட்சி ஊடகம் ஒன்று, சில நாட்கள் முன்பு அருந்ததிராயை பேட்டி கண்டது. கரன்தாப்பர் தனது வழமையான பாணியில் மடக்கு கேள்விகளை, பிசாசின் வழக்கறிஞர் என்ற பெயரில் கேட்டார்.
அதில் அரசாங்கம் இந்திய அரசியல் சட்டத்தின் ஒவ்வொரு பிரிவையும் உடைத்துக்கொண்டு, பழங்குடி மக்களின் பாதுகாபிற்க்கு இருக்கும் அந்த சட்டங்களை காலால் போட்டு மிதித்துவருவதை குறிப்பிட்டார். அதன்மூலம் பல பத்து லட்சம் பழங்குடி மக்களின் தாய்நாட்டை தாக்கி உள்ளார்கள் என்றார். இந்த நாட்டில் மட்டுமின்றி, இந்த உலகத்திலேயே அதிக ஏழைகளாக இருக்கும் இந்திய நாட்டு பழங்குடி மக்கள் மீது, ஒரு அரசு தனது ராணுவத்தை அனுப்பி தாக்கிவருவதை எப்படி ஆதரிக்கமுடியும் என்று வினவினார். தங்கள் நலன்களையும், தங்கள் உயிர்களையும் பாதுகாத்துக்கொள்ள அந்த பழங்குடி மக்கள் ஆயுதம் ஏந்தினால் எப்படி தவறு என்றும் கேட்டார். அரசுதான் வன்முறையை தூண்டுகிறது. அரசுதான் வன்முறையை ஏற்படுத்துகிறது. சமீபத்திய பஞ்சாயத் அறிக்கையை பார்த்தால் அதில் அரசுதான் பல சட்ட மீறல்களை செய்தது என்பதை புரிந்து கொள்ளலாம் என்றார். மாவோவாதிகள் செய்யும் வன்முறையையும் அவர் கண்டித்தார். ஆசாத் என்ற மாவோவாதியை பிடித்து கொலை செய்த அரசின் செயல் போன்றதுதான், மாவோவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை அதிகாரியை அவர்கள் கொலை செய்ததும் என்றார். ஆனால் அனைத்திற்கும் காரணமாக இன்றைய அரசு எப்படி அந்நிய பெருவணிக குழுமங்களான கார்பரேட்களின் நலன்களுக்காக இருக்கிறது என்பதையும், அதேபோல பெரும்பான்மை மதமான இந்து மத பாதுகாவலனாக அரசே செயல்படுகிறது என்பதையும் அந்த நேர்காணலில் அவர் வெளிப்படுத்தினார். ஆகவே இந்திய அரசு ஒரு கார்பரேட் நலன் காக்கும் அரசு என்பதை இந்த விவாதங்களை கண்ணுறும்போது யாராலும் மறுக்க முடியாது போலும்.
Tuesday, September 14, 2010
Subscribe to:
Posts (Atom)