சிறப்புக் கட்டுரை: கந்தக அமிலம் மட்டுமா கசியும்?
டி.எஸ்.எஸ்.மணி
ஜூன் 16ஆம் நாள், சனிக்கிழமை. மூடிக் கிடக்கும் ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து கந்தக அமிலம் கசிவதாகத் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவருக்குத் தகவல் வருகிறது. அவர் 17ஆம் தேதி ஞாயிறு அன்று அதிகாரிகள் குழு ஒன்றை ஆலைக்குள் அனுப்புகிறார். அந்தக் குழுவில், மாசுக் கட்டுப்பாட்டு அலுவலக இணைத் தலைமை சுற்றுச்சூழல் பொறியியலாளர் மனோகரன், மாவட்டச் சுற்றுச்சூழல் பொறியியலாளர் லிவிங்ஸ்டன், தொழிற்சாலைகள் இணை இயக்குநர் சரவணன், துணை இயக்குநர் ரவிக்குமார் ஆகியோருடன் வருவாய்த் துறை அதிகாரிகளும், ஆலைக்குள் மாலை நான்கு மணிக்குச் சென்று, இரண்டு மணி நேரம் ஆய்வு செய்துவிட்டு வந்து, ‘கந்தக அமிலம் அது தேக்கி வைக்கப்பட்டிருக்கும் பகுதியிலிருந்து கசிகிறது’ என்பதாகக் கூறியுள்ளனர் என மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி கூறினார். நாம் கேட்பது, இந்தத் தாமிர உருக்கு ஆலையில் என்னவெல்லாம் ரசாயனக் கழிவுகள் இருக்கிறது என்பது சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும், அரசுக்கும் தெரியாதா? இதுவரை ஆலை நிர்வாகம் அளித்துள்ள புள்ளிவிவரங்களிலிருந்தே அவை தெளிவாகத் தெரிகின்றனவே?
தூத்துக்குடியில் கட்சி சார்பற்ற அரசியலைக் கையிலெடுத்த பொதுமக்கள், ஒரு லட்சத்திற்கும் மேல், மார்ச் 24ஆம் நாள் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி அணி திரண்டனர். அதன் பிறகு ஸ்டெர்லைட் ஆலையின் துணைத் தலைவர் சுமதி, ஒரு பிரபல தொலைக்காட்சியில் வெளியான தனது நேர்காணலில், ‘யார் வேண்டுமானாலும் ஆலைக்குள் வந்து பார்க்கலாம். நான் 23 ஆண்டுகளாக இந்த ஆலையில் வேலை செய்கிறேன். எனக்குப் புற்றுநோய் வரவில்லை’ என்று அறிவித்தார். அந்த அறிவிப்பால் தூண்டப்பட்டு, தூத்துக்குடி லயன்ஸ் கிளப் ஒரு உண்மையறியும் குழாமை ஸ்டெர்லைட் ஆலைக்குள், மார்ச் 30ஆம் நாள் அனுப்பியது. குழுவினர் மதியத்திற்கு மேல் ஸ்டெர்லைட் ஆலைக்குள் சென்று விசாரணை நடத்திவிட்டு, இரண்டு மணி நேரத்தில் திரும்பி வந்தனர். அந்தக் குழுவினர் கேட்ட கேள்விகளுக்கு, ஆலை நிர்வாகத்தார் கொடுத்த புள்ளிவிவரங்களை அடிப்படையாகக் கொண்டே இந்தக் கட்டுரையின் கேள்விகள் எழுப்பப்படுகின்றன.
தாமிரக் கனிமத்தின் கதிர் வீச்சு
ஆஸ்திரேலியாவில் உள்ள தாமிரக் கனிம வளச் சுரங்கங்களிலிருந்து மண்ணுடனும், கற்களுடனும் கலந்த தாமிரக் கனிமம் எடுக்கப்பட்டு, அது முதல்கட்டச் செறிவூட்டல் செய்யப்பட்டு கப்பலில் தூத்துக்குடி துறைமுகத்திற்குக் கொண்டு வரப்படுகிறது. அதாவது, வரும் முன்பே செறிவூட்டப்பட்டதால், கதிர் வீச்சுக்கள் கொண்டதாகவே அது தூத்துக்குடிக்குக் கொண்டு வரப்படுகிறது. ஆஸ்திரேலியாவில், சுரங்கத்திலிருந்து எடுக்கப்படும் தாமிரக் கனிமத்தில் தாமிரத்தின் அளவு, மூன்று முதல் ஆறு விழுக்காடு மட்டுமே இருக்கிறது. ஆஸ்திரேலியாவிலேயே செறிவூட்டப்பட்ட பிறகு, அதே கனிமத்தில், தாமிரத்தின் அளவு, முப்பது விழுக்காடாக மாறுகிறது. கப்பலில் அதிக செலவு செய்யாமல் இருப்பதற்காகவே அப்படி மாற்றிக் கொண்டு வரப்படுகிறது.
இவ்வாறாகக் கதிர்வீச்சு கொண்ட அந்தக் கனிமம் தூத்துக்குடி துறைமுகத்திற்கு வருகிறது. துறைமுகத்தில் குவிக்கப்பட்ட அந்தப் பச்சை நிறத் தாது மணல், ஒருமுறை எனக்கு வாந்தி எடுக்கும் உணர்வை ஏற்படுத்தியுள்ளது. கப்பலிலிருந்து இறக்கப்பட்ட அந்தப் பச்சை மணல், ஸ்டெர்லைட் ஆலைக்கு எடுத்து வரப்படுகிறது. அப்படி எடுத்துவரப்படும் தாமிரக் கனிமம் இந்த ஸ்டெர்லைட் ஆலையில் உருக்கப்படும்போது, முப்பது விழுக்காடு மட்டுமே தாமிரம் கிடைக்கிறது. மீதியில் முப்பது விழுக்காடு, இரும்பு உபரிப் பொருளாகக் கிடைக்கிறது. மீதி முப்பது விழுக்காடு கந்தக அமிலம் உபரிப் பொருளாகக் கிடைக்கிறது அல்லது எடுக்கப்படுகிறது. அந்தக் கந்தக அமிலம்தான் இப்போது தேக்கி வைக்கப்பட்ட இடத்திலிருந்து கசிந்துள்ளது. மீதி இருக்கும் பத்து விழுக்காடு, ஆபத்தான பொருள்கள் என்று அழைக்கப்படும் ஆர்சனிக், சிங்க் முதலான மிக ஆபத்தான பொருள்களாகக் கிடைக்கிறது. அதை ஆலை நிர்வாகம் ஆபத்தான பொருள்கள், கழிவுகள் என மதிப்பீடு செய்து அழைக்கிறது.
அந்தக் கழிவுகள், ஸ்டெர்லைட் ஆலை அருகே மலை போலக் குவிக்கப்பட்டுக் கிடக்கின்றன. இருபத்து மூன்று ஆண்டுகளாக இந்தக் கழிவுகள் அங்கேயே கொட்டப்பட்டுக் கிடப்பதை யார் வேண்டுமானாலும் ஆலை அருகே சென்று நேரில் பார்க்கலாம். ஒருமுறை பெரு மழை பொழிந்தபோது இந்தக் கழிவுகளிலிருந்து வெளியேறிய மழைத் தண்ணீர் தெருக்களில் போனதால், அருகே இருக்கும் வீடுகள் ஒவ்வொன்றின் சுவர்களிலும், காவி வண்ணத்தில் தண்ணீர் தேங்கிய அடையாளத்தை இப்போதும் நீங்கள் காணலாம். அந்த அளவுக்கு இந்தக் கழிவுகள் அழிக்க முடியாத அடையாளத்தை ஏற்படுத்தியுள்ளன.
கழிவுகளை என்ன செய்வது?
ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் கூறுகின்ற கணக்குப்படி, ஓர் ஆண்டில் அது நான்கு லட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்கிறது. அதாவது, தாமிரக் கனிமத்தில் முப்பது விழுக்காடு என்பதே அந்த நான்கு லட்சம் டன். அப்படியானால் ஒவ்வோர் ஆண்டும், இன்னொரு முப்பது விழுக்காடாக உள்ள கந்தக அமிலமும் அதே நான்கு லட்சம் டன் உபரிப் பொருளாக உற்பத்தியாகிறது. போதாக்குறைக்கு இரும்பு வேறு நான்கு லட்சம் டன் உபரியாக உற்பத்தியாகிறது. உபரி உற்பத்திப் பொருளான ஆர்சனிக், சிங்க், போன்றவை பத்து விழுக்காடு என்பது நான்கு லட்சத்தில் மூன்றில் ஒரு பங்கு. அதாவது, ஒரு லட்சத்து முப்பதாயிரம் டன் ஒவ்வோர் ஆண்டும் உற்பத்தியாகிறது.
அந்த ஆபத்தான கழிவுகளை இருபத்து மூன்று ஆண்டுகளாகச் சேர்த்துக் குவித்து வைத்துள்ளது ஆலை நிர்வாகம். அப்படியானால், இருபத்து ஒன்பது லட்சத்து தொண்ணூறாயிரம் டன் அளவுக்கு ஆபத்தான கழிவுகள் இருக்க வேண்டும். ஆனால், முதல் ஆண்டுகளில், ஆண்டுக்கு நான்கு லட்சம் டன் ஆண்டு உற்பத்தி நடக்கவில்லை என்பதால் கழிவுகளும் குறைந்திருக்கும். எனவே, கழிவுகள் மொத்தத்தில் இருபத்து நான்கு லட்சம் டன் இருக்கும் என்று உண்மையறியும் குழு மதிப்பீடு செய்கிறது. அந்தக் கழிவுகளை, ஆலை நிர்வாகம், வெளிப்படையாகக் குவித்து வைத்துள்ளது. இது, மாவட்ட ஆட்சித் தலைவர், ஊடகங்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் தெரியும். இது பகிரங்கமாகவே மக்கள் நடமாடும் பகுதியில் குவிக்கப்பட்டுள்ளது.
அப்பாவிப் பொதுமக்கள் தவிர வேறு எல்லோருமே ஏதோ ஒரு வகையில் ஆலை நிர்வாகத்துடன் இருபத்து மூன்று ஆண்டுகளாகத் தொடர்பில் இருக்கும் காரணத்தால் இதுவரை இந்தக் கழிவுகளைப் பற்றி யாரும் பெரிதுபடுத்தவில்லை. இப்போதாவது கழிவுகளையும் கசிவுகளையும் பற்றிப் பேசும் மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும் இந்தக் கழிவுகளை வெளியேற்ற என்ன செய்யப் போகிறார்கள்?
நிலம் திரும்பக் கிடைக்குமா?
இரண்டு நாட்கள் முன்பு மாவட்ட அமைச்சர் கடம்பூர் ராஜு ஓர் அறிவிப்பு வெளியிட்டார். அரசு, விவசாயிகளிடமிருந்து வாங்கி ஆலை விரிவாக்கத்திற்காகக் கொடுக்கப்பட்ட நிலத்தை அரசு திரும்பப் பெற்றுள்ள நிலையில், அந்த நிலம் மீண்டும் சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கே கொடுக்கப்படும் என்று கூறியிருந்தார். அந்த நிலம் ஏற்கெனவே, ஆலையின் கழிவுகளால், பாதிக்கப்பட்டு, நிலத்தடி நீரும் பாழ் செய்யப்பட நிலையில் அரசே அந்த நிலத்தைப் பண்படுத்தி விவசாயிகளுக்குக் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. அப்படிப் பண்படுத்த, ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தால், ஸ்டெர்லைட் ஆலைக்கு விதிக்கப்பட்ட நூறு கோடி அபராதத் தொகை மாவட்ட நிர்வாகத்தின் பொறுப்பில் உள்ளதே, அதிலிருந்து எடுத்துச் செலவு செய்யலாம் என்ற ஆலோசனையும் பொதுமக்கள் மத்தியிலிருந்து வந்தது.
இந்த நேரத்தில் நாம் இன்னொரு விவரத்தையும் காண வேண்டும். ஆண்டுக்கு நான்கு லட்சம் டன் உபரி உற்பத்தியாகும் கந்தக அமிலம், இருபத்து மூன்று ஆண்டுகளில், தொண்ணூற்றி இரண்டு லட்சம் டன் என்பதாகச் சேர்ந்துள்ளது. அந்தக் கந்தக அமிலத்தை எங்கே கொண்டு போய்க் கொட்டப் போகிறீர்கள் என்று அரசும் ஆலை நிர்வாகமும் விளக்கம் சொல்ல வேண்டும். இது தவிர, இந்தத் தாமிரக் கனிமத்தை உருக்கும்போது உருவாகும் கழிவுகளைத் தாங்கள் சுத்திகரிப்பு செய்துவைத்திருப்பதாக ஆலை நிர்வாகம் கூறிவருகிறது. அந்தச் சுத்திகரிப்புக்குப் பயன்படுத்தப்பட்ட தண்ணீர் ஸ்ரீவைகுண்டத்திலிருந்து கொண்டுவரப்பட்டது. அது வெளியே வரும்போது நச்சு கலந்த தண்ணீர்தானே. அந்த நச்சுத் தண்ணீரை எங்கே கொட்டினீர்கள்?
அதைக் கடலில் கொட்டவில்லை என்றும் கடலில் கழிவு எதுவும் வெளியேற்றப்படவில்லை என்றும் ஆலை நிர்வாகம் கூறிவருகிறது. அப்படியானால் அதை நிலத்தடி நீரில் கலக்கவிட்டீர்களா? அது அந்த வட்டாரத்திற்கே ஆபத்து இல்லையா? இதற்கும் அரசு தரப்பும், ஆலை நிர்வாகமும் பதில் சொல்ல வேண்டும். குறிப்பாக, அத்தகைய கழிவுநீரில் டி.டி.எஸ். என்ற கரையும் திடப் பொருள் ஒரு லிட்டருக்கு இருநூறு வரை இருக்கலாம். ஆனால், இந்தக் கழுவிய கழிவு கலந்த நீரில் இருபத்தி மூவாயிரம் டி.டி.எஸ். இருக்கிறது எனக் கூறப்பட்டுள்ளது. அத்தகைய நச்சுத்தனமான தண்ணீரை இருபத்து மூன்று ஆண்டுகளாக எங்கே கொட்டினீர்கள் என்று கேட்க வேண்டுமா, இல்லையா?
மொத்தத்தில், இத்தனை ஆண்டுகள் ஆண்ட ஆட்சியாளர்கள் எல்லோருமே சேர்ந்து தூத்துக்குடியைப் பாழ்படுத்தியாகிவிட்டது. இப்போது சுத்தம் செய்ய வேண்டும் என்றால், மேற்கண்ட கேள்விகள் அனைத்திற்கும் பதில் கூறியே ஆக வேண்டும்.
(கட்டுரையாளர் பற்றிய குறிப்பு: டி.எஸ்.எஸ்.மணி தமிழின் முக்கியமான பத்திரிகையாளர்களில் ஒருவர். இந்திய அளவில் கவனிக்கத்தக்க பல முக்கியமான கட்டுரைகளை எழுதியுள்ளார். தொலைக்காட்சி விவாதங்களில் தொடர்ச்சியாகக் கலந்துகொண்டு அரசியல் நிகழ்வுகளை விவாதித்து வருபவர். தொடர்புக்கு: manitss.mani@gmail.com)