Saturday, February 27, 2010

பாலியல் குற்றச்சாட்டில் பிரபலம் பலியாகலாமா?

உ.ரா.வரதராசன் இப்போது விவா தத்திற்கு உள்ளாகியிருக்கிறார். தோழர் வரதராசனின் மரணத்தின் மூலம் அந்த விவாதம் பெரிதாகியிருக்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் பிரகாஷ்காரத் கொடுத்த விளக்க அறிக்கையினால், மேலும் விவாதங் கள் உருவாகியுள்ளன. வரதராசனின் மனைவி கூறியதாக ஊடகத்தில் வந்த குற்றச்சாட்டுகள் ஒருபுறம். இழப்பு ஏற்பட்டவுடன் கட்சியை குறை கூறவேண்டுமா என்ற கேள்வி மறுபுறம். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் தா.பாண்டியன், ஒரு கடுமையான விமர்சனத்தைக் கொடுத்துள்ளார். வரத ராசன் சமூக விரோத செயல்களிலோ, வர்க்க விரோத செயல்களிலோ ஈடு படவில்லை என்றும், கம்யூனிச இயக்கத்தில் மிக நீண்ட காலம் பயிற்சி பெற்றவர் என்றும், 50 ஆண்டுகளுக்கு மேலாக கம்யூனிஸ்ட் கட்சிகாக்காவும், சாதாரண மக்களுக் காகவும் பாடுபட்டவர் என்றும், அத்தகைய தலைவர் மீது நடவ டிக்கை எடுக்கும் முன் 100 முறை யோசித்திருக்க வேண்டும் என்றும் தா.பாண்டியன் கூறியுள்ளார். தவறு செய்திருந்தால் அவர் மீது எடுக்கப்படும் நடவடிக்கையின் மூலம், அதைத் திருத்தச் செய்வதாக இருந்திருக்க வேண்டும் என்றும் மாறாக உயிரைப் பறிப்பதாக இருந்திருக்கக் கூடாது என்றும் கடுமையான வார்த்தைகளில் விமர்சித்திருக்கிறார். இந்த மரணம் கம்யூனிச இயக்கத்திற்குள் மிக நீண்ட காலத்திற்கு விவாதத்தை எழுப்பிக் கொண்டே இருக்கும் என்றும் கூறியுள்ளார்.
பொதுவாக மக்களுக்கு மேற்கண்ட நிகழ்ச்சியாலும் அதுபற்றிய விமர்சனத்தாலும் பல்வேறு கேள்விகள் எழத்தான் செய்யும். ஒரு மனிதர் மீது சாட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டு பாலியல் தொந்தரவு சம்பந்தப்பட்டது. அது பிரபல தலைவர் மீது சாட்டப்படும் போது மட்டும்தான் 100 முறை யோசித்திருக்க வேண்டுமா? சாதாரண மனிதர்கள் மீது இதே போல குற்றச் சாட்டு கூறப்பட்டால், உடனடியாக முடிவு செய்தல் தவறில்லை என்று கூறுவதா? இப்படியும் கூட கேள்விகள் எழுகின்றன. நடந்த மரணம் ஒரு தற்கொலையாக இருந் தாலும், அது ஒரு விபத்து. அந்த விபத்திற்கு காரணமானது ஒழுங்கு நடவடிக்கைதான் என்பதாக புரிந்து கொண்டால் அது முழுமையாகுமா?
பிரகாஷ்காரத்தின் விளக்கம், கட்சிக் குள் இந்தக் குற்றச்சாட்டு எடுத்துச் செல்லப்பட்ட முறைகளைப் பற்றி விவரிக்கிறது. அதற்கு ஆதாரமாக பாலியல் தொந்தரவுக்கு உள்ளானவர் கூறிய புகார் சுட்டிக் காட்டப்படுகிறது. ஆனால் அப்படி ஒரு புகார் எழுத்துப்பூர்வமாக கொடுக்கப் படவில்லை என்ற செய்திகளும் வருகிறது. இதில் கட்சிக்குள் அதிகார மோதல் என்பதுதான் இந்த அளவுக்கு பிரச்சினையை இழுத்துக் கொண்டு சென்றுள்ளது என்றும் கூறுகிறார்கள். உ.ரா.வரதராசன் கட்சிக்குள் எப்படிப்பட்ட பதவிகளை தமிழ்நாட்டில் வகித்து வந்தார் என்பதும், டெல்லிக்கு எத்தகைய பொறுப்புகளுக்கு உயர்த்தப்பட்டார் என்பதும், அதுவே அவரிடம் மாறு பட்ட கருத்துள்ளவர்களுக்கு மோதலை ஏற்படுத்தியதா? என்பதும் அந்தக் கட்சிக்குள் உள்விவகாரம். அது முக்கிய காரணம் என்று யாரும் கருதமுடியாது. ஒரு காரியம் நடைபெறுவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்குமானால் இதுபோன்ற உள்கட்சி மோதல், அதிகார முரண்பாடு ஆகியவை அத்தகைய காரணத்தை தூண்டி விடவோ, துரிதப்படுத்தவோ ஒரு குறிப்பிட்ட பங்களிப்பை செலுத்தியிருக்கலாம். தேர்தல் அரசியலைச் சார்ந்தும் அதிகாரப் பகிர்வை நோக்கியும் செல்லுகின்ற ஒரு அரசியல் இயக்கத்திற்குள், இயக்கத்தின் கொள்கைகளை வலுப்படுத்துவதற்கும் அல்லது பலவீனப்படுத்துவதற்கும் இது போன்ற முரண்பாடுகள் எழுவது இயற்கையே. ஒரு நிலப்பிரபுத்துவ சமுதாய அமைப்பில், குடும்ப வாழ்க்கையில் அனைத்து விதமான சிந்தனைப் போக்குகளாலும் தாக்கம் செலுத்தப்படும் ஒவ்வொரு தோழரின் அணுகுமுறையும், பிறரால் பல்வேறு விவாதத்திற்கு உள்ளாக்கப்படுவது என்பது நிகழவே செய்கிறது. முதலாளித்துவக் கட்சிகளின் செயல்பாடுகளையும், சிந்தனைப் போக்குகளையும் முழுமையாக வேறுபடுத்தி மாற்றுச் செயல்பாடு, மாற்றுச் சிந்தனைப் போக்கு ஆகியவற்றை செயல்படுத்து பவர்களாக, தோழர்கள் இயங்கி வந்தால் அதுவேறு. ஆனால் நடை முறையில் மாறுபட்ட செயல்பாடு இல்லாத தோழர்கள் மத்தியில், இன்றைய உலகின் வணிகத் தனமான முதலாளித்துவ சிந்தனைப் போக்குகள் செல்வாக்கு செலுத்தாமல் இருக்குமா?
அப்படி பல்வேறு விதமான வெளிச்சிந்தனைகள், கட்சிக்குள் தாக்கம் செலுத்தும் போது, ஒரு கட்சி தலைமை நிதானமாக எந்த ஒரு குற்றச்சாட்டையும் ஆய்வு செய்ய வேண்டாமா? என்ற கேள்வி எழலாம். அது நியாயமான கேள்விதான் என்றாலும் இங்கே பிரச்சினைக்கு உள்ளாகியிருப்பது குறிப்பிட்ட குற்றச்சாட்டோ, அதை முழுமையாக ஆய்வு செய்யாமல் இருந்ததோ, அவசரமாக முடிவு செய்ததோ அல்ல என்பதை நாம் உணரவேண்டும். இதே போலத்தான் செங்கல்பட்டில் சி.ஐ.டி.யூ.என்ற மார்க்சிஸ்ட் கட்சி யின் தொழிற்சங்க மையத்தில் தலைமைப் பொறுப்பிலிருந்த தோழர் ராதாகிருஷ்ணன் கொலை வழக்கு விவாதிக்கப்பட்டது. ராதாகிருஷ்ணன் மணல் கொள்ளையை எதிர்த்து போராடினார் என்பதற்காக அப்போது தனிமைப் படுத்தப்பட்டதாக கருத்து எழுந்தது. மணல் கொள்ளையை எதிர்ப்பதற்கு மனமில்லாத சக்திகள், அந்த கொலை வழக்கில் குளிர் காய்ந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. அதுபோன்ற பிரச்சனையாக வரதரா சன் விவகாரத்தை பார்க்க முடியாது. ஏனென்றால் இது பாலியல் தொந்தரவு என்ற குற்றச்சாட்டு.
பாலியல் குற்றச்சாட்டுகள் பற்றி சமூகத்தில் நிலவுகின்ற கருத்துக்கள் அதே போல பெண்ணிய அமைப்புகள் சமரசமற்று பார்க்க வேண்டிய நிலைப்பாடுகள், பொதுவுடமைக் கட்சி அத்தகைய பிரச்சினைகளை தீர்ப்பதற்காக கையாளக் கூடிய அணுகுமுறை ஆகிய அனைத்தும் இந்த விவகாரத்தில் சம்பந்தப் படுகின்றன. மேற்கண்ட குறிப்பிட்ட வழக்கில், புகார் கூறியதாக கூறப்படுபவர் நேரடியாக விசாரிக்கப்பட்டாரா? என்ற விவகாரமும் சேர்ந்து எழுந்துள்ளது. எந்த பொறுப்பிலிருந்தாலும், கறாரான நடவடிக்கையை ஒரு கட்சி தலைமை எடுப்பது என்பது சரியாகத்தானே இருக்கும் என்ற பார் வையை குறை சொல்ல இயலாது. இப்போது ஏற்பட்டுள்ள இழப்பின் பளுவை யொட்டி, கறாரான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தவறு என்று கூறுவதும், தவறாகப் போய்விடும்.
குற்றம் சாட்டப்பட்ட தோழரும், அந்த புகாரைக் கையாண்ட தோழர் களும், தோழியர்களும் பாலி யல் உறவுகள் பற்றியும், பாலினப் பார்வைகள் பற்றியும் எத்தகைய கருத்துக்களை வைத்திருக்கிறார்கள் என்பதுதான் இந்த பிரச்சினைக்கான அடித்தளம். சமுதாயத்தில் நிலவுகின்ற பண்பாட்டுப் பிரச்சினைகள் மீதான பார்வையும், கட்சித் தோழர்கள் கொண்டுள்ள கருத்துக்களும் விவாதிக் கப்படவேண்டும். பல்வேறு விதமான இருதரப்பு விவரங்கள், ஆதாரங்கள், சாட்சிகள் ஆகியவற்றைத் தாண்டி, எத்தகையப் பார்வையில் இந்தப் பிரச்சினைகள் பார்க்கப்படுகின்றன என்பது இந்த விவகாரத்தில் முக்கிய மானது. ஒரு ஆண் மேலாதிக்க சமுதாய அமைப்பில், கட்சிக்கு வெளி யேயும், உள்ளேயும் இருக்கின்ற ஆண்கள் எத்தனை பேர் நிலவும் சமுதாய அமைப்பின் ஆதிக்க மனோ பாவங்களிலிருந்து தங்களை விலக்கி நிறுத்திக் கொள்வதில் வெற்றிப் பெற்றிருக்கிறார்கள் என்பது ஒரு அடிப்படையான கேள்வி.
பெண்ணியச் சிந்தனை, பெண் ணுரிமை ஆகியவற்றைப் பற்றி ஒரே விதமான கருத்துக் கோப்பு கட்சிக்குள்ளோ, தோழர்களுக்கு இடை யேயோ, நிலவிக் கொண்டிருக்கிறதா? என்பதும் கேட்கப்படவேண்டும். வரதராசன் தனது மரணத்தைத் தழுவிய நிகழ்வு எந்த விதத்திலும் ஏற்றுக் கொள்ளப்பட முடியாத ஒன்று. அதே சமயம் ஆண், பெண் உறவுகளில், பாலின நீதி கொண்ட உலகப் பார் வையை எவ்வாறு உருவாக்கப் போகிறோம் அல்லது விளங்கிக் கொள்ளப் போகிறோம் என்ற ஆழமான விவாதத்தை நம்மிடையே அந்த மரணம் ஏற்படுத்தியுள்ளது என்பதை மறுக்க முடியாது.