Thursday, April 27, 2017

மன்னார்குடி மகுடிக்கு மன்னார்குடியே சிக்கியதா? -

சிறப்புக் கட்டுரை: மன்னார்குடி மகுடிக்கு மன்னார்குடியே சிக்கியதா? - T.S.S.மணி

சிறப்புக் கட்டுரை: மன்னார்குடி மகுடிக்கு மன்னார்குடியே சிக்கியதா? - T.S.S.மணி
டி.டி.வி.தினகரனின் கைது பல அரசியல் கேள்விகளை எழுப்பியுள்ளது. ஒருவர் இந்தியாவின் ‘புனிதமான’ தேர்தல் ஆணையத்தையே ‘லஞ்சம்’ கொடுத்து லாபம் பெறப் பார்த்தால், கண்டிப்பாக அவரைக் கைது செய்ய வேண்டும். வழக்கு போட வேண்டும். விசாரிக்க வேண்டும். தண்டனை வழங்க வேண்டும். இதுதான் நாம் எல்லோரும் எதிர்பார்க்கும் ஒன்று. அவ்வாறுதான் டி.டி.வி.தினகரன் கைதும் நடந்தது என்றால் பிரச்னை இல்லை. ஆனால், விடுதலைச் சிறுத்தை தலைவர் தொல்.திருமாவளவன் சொல்வது போலவும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் முத்தரசன் சொல்வது போலவும், காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கருதுவது போலவும் இந்தக் கைது ‘ஒரு அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை’ என்றால், இது மிகவும் ‘கேவலமான’ ஒன்று. அதை நடுவண் அரசை நடத்தும் பாஜக செய்தது என்று நிரூபணமானால் அது நாட்டின் மரியாதையைக் கெடுக்கக் கூடியது.
சுகேஷ் சந்திரசேகர் என்பவர் குறைந்தபட்சம் 16 வழக்குகளில் கைது செய்யப்பட்டவர். அவர் எப்போதுமே ‘மோசடி’ வழக்குகளில் அதிகமாகச் சிக்குபவர். அப்படிப்பட்டவர் ரூ.1.50 கோடி பணத்துடன் பிடிபடுகிறார். எப்படி இந்தப் பணம் வந்தது என்றால், அதிமுக-வுக்கு இரட்டை இல்லை சின்னத்தை வாங்கித் தர ரூ.50 கோடி பேசி, ரூ.10 கோடி வாங்கி, அதில் இது மீதி பணம் என்று டெல்லி காவல்துறை கண்டுபிடித்தார்களாம். டெல்லி காவல்துறை, டெல்லியை ஆள்வதற்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் கட்டுப்பாட்டில் இல்லை. நடுவண் அரசின், ‘உள்துறை’யின் கீழ்தான் உள்ளது என்ற உண்மை, டெல்லியில் கெஜ்ரிவால் ஆட்சிக்கு வந்தபின், அவர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் மூலம் நாட்டுக்குத் தெரிந்த செய்தி. இதுவரை டெல்லியை ஆண்டுவந்த காங்கிரஸ் கட்சியிலும், நடுவண் அரசிலும் அவர்களே ஆண்டதால் இந்த ரகசியம் நமக்கு கசியவில்லை.
நமது நாட்டு காவல்துறையைப் பொறுத்தமட்டில், ‘ஒரு முன்னாள் குற்றவாளி’யைப் பயன்படுத்தி, தாங்கள் விரும்பும் வழக்குகளை ‘புனைந்து’ கொள்வார்கள் என்பது தெரிந்த செய்தி. அதிலும் பிரபல ‘மோசடி’ வழக்குப் பேர்வழியைப் பயன்படுத்தியே, அடுத்த மோசடி வழக்கையும் புனைவது அவர்களது ‘அவசரத்துக்கு எளிதான செயல்’. அவ்வாறுதான் டெல்லி காவல்துறை என்ற ‘உள் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கையாளுதலில் உள்ள இலாகா செய்துள்ளதா?’ என்பது போகப்போகத்தான் தெரியும். அப்படியே தினகரன் லஞ்சம் கொடுக்க ‘முயன்றார்’ என்று நிரூபணமானாலும், அது லஞ்சம் கொடுத்த வழக்காக ஆகாது. மாறாக லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்காகத்தான் இருக்கும். அதேபோல, டெல்லி காவல்துறையினர் தினகரனை நான்கு நாள்களாக, மாலை முதல் நள்ளிரவு வரை கேள்விகள் கேட்டுத் துளைத்து விசாரித்தார்களாம். அதுவே ஒரு மனிதனைச் சோர்வடைய வைத்து, ‘உளவியல் ரீதியாகச் சித்ரவதை மூலம் பெறவேண்டிய சொற்களை பெரும்முறை’. அதேசமயம், ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு, அஇஅதிமுக கட்சியை நெருங்க முடியாமல் இருந்த நடுவண் அரசுக்கு, டெல்லி காவல்துறை மூலமே நெருங்கி அதன் துணைப் பொதுச்செயலாளரையே கைது செய்து, ‘அவமானப்படுத்தி விட்டோம்’ என்ற திருப்தியைப் பெற்றுக் கொள்ளலாம்..
அதுமட்டுமல்ல... எந்த அதிமுக, ஜெயலலிதா தலைமையில் இருந்தபோது நடுவண் அரசு தனது ‘புதிய சட்டத் திருத்தங்கள்’ மூலம் ரயில்வே பாதுகாப்பு காவல்துறைக்கும், எல்லை பாதுகாப்பு படைக்கும், ‘மாநிலங்களுக்குள் நுழைந்து, மாநில அரசின் உதவியின்றியே கைது விசாரணை செய்யும் உரிமை’யைக் கொண்டுவர முயற்சி செய்தபோது, ஜெயலலிதாவால் தடுத்து நிறுத்தப்பட்டதோ, அதே அதிமுக கட்சியின் துணைப் பொதுச்செயலாளரை நடுவண் அரசின் கைகளில் உள்ள அதிகாரமான ‘டெல்லி காவல்துறை’ மூலம், ஒரு வழக்கை டெல்லியிலேயே புனைந்து, கைது செய்து சென்னைக்கே கொண்டுவர முடிகிறது என்ற ‘இறுமாப்பை’ காட்டும் ‘ஒற்றையாட்சி அதிகாரவர்க்க மனப்போக்கு’ என்றும் பார்க்க வேண்டியிருக்குமோ?
அதாவது ‘ஒற்றையாட்சி மனப்போக்கு’ என்பது இந்தியத் துணைக் கண்டம் முழுமையையும், ‘தானே தனது சித்தப்படியே’ ஆளும் ஒரு ‘வெறி’. அத்தகைய ஒற்றையாட்சியை எதிர்த்து, ஒரு காலத்தில், ‘மாநில சுயாட்சி’ என்றும், ‘மாநில உரிமைகள்’ என்றும் பேசப்பட்டது. ஆனால், அதன் பரிணாம வளர்ச்சியாக ஜெயலலிதா காலத்தில், அவராலேயே முன்மொழியப்பட்டு, 2014 நடாளுமன்றத் தேர்தல் களத்தில், ‘கூட்டுறவுடன் கூடிய கூட்டமைப்பு’ என்ற சொல்லாடல் இந்திய அரசியல் வானில், அறிமுகப்படுத்தப்பட்டது. அவ்வாறு ஒரு ‘கூட்டமைப்பு’ என்பது நிலவுகின்ற ‘ஒற்றையாட்சி’ கட்டமைப்பை அகற்றி, அதன் இடத்தில் நிறுவப்பட வேண்டிய ஒன்று. அதாவது, நடுவண் அரசுக்கு, ‘அனைத்து அதிகாரங்களும்’ என்ற சொல்லாடலை அகற்றிவிடக் கூடிய வீரியமுள்ளது. அதை ‘ஆண்டு, அனுபவித்த, அதிலேயே ரசித்து, சுவைத்த அதிகார வர்க்கம்’ எப்படி விட்டுக் கொடுக்கும்? எப்படித் தாங்கிக் கொள்ள முடியும்?
அதனால்தான், நடுவண் அரசில் ‘ஐக்கிய முற்போக்கு அரசு’ இருக்கும் காலத்தில், அதன் அங்கமாக இருந்த திமுக கட்சியின் கொள்கைப்பரப்பு செயலாளரைக் கூட, திமுக கட்சியின் தலைவர் மகளைக் கூட, நடுவண் அரசின் அதிகாரம், குறிப்பிட்ட வழக்கில் சம்பந்தப்பட்ட காங்கிரஸ் அமைச்சர்களைத் தொடாமல், கைதுசெய்து, வழக்கு நடத்த முடிகிறது. ‘உள் துறை’ என்பதும், ‘பிரதமர் அலுவலகம்’ என்பதும், அத்தகைய ஒற்றையாட்சி அதிகார மையமாகச் செயல்படுகின்றன. இந்த ஒற்றையாட்சி மாற்றப்பட்டு, ‘உண்மையான கூட்டமைப்பு’ ஒரு கட்டமைப்பாக உருவாகி வருமானால், இத்தகைய நடுவண் அதிகாரம் செயல்பட முடியாது.
இத்தகைய ‘ஒற்றையாட்சி மனோபாவம்’ இந்த டி.டி.வி. வழக்கிலும் செயல்படுகிறதோ என்ற சந்தேகம் நமக்கு எழுகிறது. ஏனென்றால், நடுவண் அரசு அதிகாரத்துக்குட்பட்டு, தேர்தல் ஆணையம், அதிக எண்ணிக்கை உள்ள ஒரு கட்சியின் சின்னத்தை, கொடியை, கட்சிப் பெயரை முடக்குகிறது. அத்தகைய செயல், நீதிமன்றம் செல்லும்போது, சில மாதங்கள் கழித்து தோல்வி அடையலாம். இந்த ‘சின்னம் பெற லஞ்சம்’ கொடுக்க முயன்ற வழக்கும், நீதிமன்றம் செல்லும்போது, சில மாதங்கள் கழித்து தோல்வி அடையலாம். ஆனால் வருகிற ஜூலை, ஆகஸ்ட் மாதத் தேவைகளுக்காகவே மோடி அரசு இத்தகைய செயல்களில் ஈடுபடுவதாகத் தெரிகிறது. அது என்ன தேவை?
அதுதான் வர இருக்கின்ற ஜூலை மாத குடியரசு தலைவர் தேர்தலும், ஆகஸ்ட் மாத துணைக் குடியரசு தலைவர் தேர்தலும். அந்தத் தேர்தல்களில், பிரதமர் நரேந்திர மோடி ஒரு பெரும் சவாலை எதிர்கொள்கிறார். அந்தச் சவால், எதிர்க்கட்சியான காங்கிரஸ் மூலமோ, அல்லது ஏதாவது மாநிலக் கட்சி மூலமோ அல்ல. அது தன்னை உருவாக்கி வளர்த்த ஆர்.எஸ்.எஸ். சக்திகளிடமிருந்து. ஆர்.எஸ்.எஸ். சக்திகள் ஏற்கெனவே, மோடி அரசு கொண்டுவந்த, கார்ப்பரேட் நலனுக்கான நிலம் கையகப்படுத்தும் சட்டத்தைக் கடுமையாக எதிர்த்தன. ஆர்.எஸ்.எஸ். வழிகாட்டலில், பாரதிய கிசான் சபா, வனாஞ்சல் சமிதி, பாரதிய மஸ்துர் சபா ஆகியவை லட்சக்கணக்கான விவசாயிகளையும், ஆதிவாசிகளையும், தொழிலாளர்களையும் திரட்டி எதிர்த்தது. அதுவே மோடியின் முதலாளிகளான கார்ப்பரேட்கள், அந்நிய ஏகாதிபத்தியங்களுக்குத் தலைவலியாகப் போய் விட்டது. அதேபோல அமெரிக்காவுடனான ஒப்பந்தங்களோ, இஸ்ரேலுடனான ஒப்பந்தங்களோ, பாகிஸ்தானுடனான ஒப்பந்தங்களோ அவர்களது எதிர்ப்பைச் சந்திக்கலாம். அதுவே சிவசேனா மூலம் அவ்வப்போது வெளிப்படுகிறது. அத்தகைய நேரங்களில், பிரதமருக்கு ‘இசைவாக செல்லக்கூடிய’ ஒருவரே குடியரசு தலைவராக கொண்டு வரப்பட வேண்டும்.
ஆர்.எஸ்.எஸ். சக்திகள் ‘முழுமையான மதவாதம்’ என்றால், மோடியினுடையது, ‘கார்ப்பரேட் மதவாதம்’ என்று அழைக்கலாம். இப்போது கார்ப்பரேட் மதவாதத்துக்கும், முழுமையான பழமை மதவாதத்துக்கும் உள்ள போட்டியே நாம் காணுகின்ற குடியரசு தலைவர் தேர்தல். கார்ப்பரேட் மதவாதம், தனது நேரடி மதவாதச் சக்திகளாக, ‘கார்ப்பரேட் ஆசிரமங்களை’ நிறுத்துகிறது. அதுவே மோடியால் ஆதரிக்கப்படும், யமுனை நதியைக் கெடுத்த ஸ்ரீ,ஸ்ரீ.ரவிசங்கரும், கோவை மேற்குத் தொடர்ச்சி மலையைக் கெடுத்த ஜக்கு வாசுதேவரும்.
கார்ப்பரேட் தலைமை தாங்க வேண்டுமா? அல்லது மதவாதம் தலைமை தாங்க வேண்டுமா? என்ற போட்டியே அவர்களது கூட்டணிக்குள் உள்ள குத்து, வெட்டு. அதாவது வருகிற குடியரசுத தலைவர் தேர்தலோ, துணைக் குடியரசு தலைவர் தேர்தலோ மக்களுடைய தேவைகளுக்காக அல்ல. மாறாக, ஆளுவோருக்குள், ஆளும் வர்க்கத்துக்கும், ஆளும் கூட்டத்துக்குள், ஆளும் கும்பலுக்கும் உள்ள போட்டியின் விளைவே.
அந்தப் போட்டியில், ‘அமைதிப்படை அமாவாசை’யாக மோடி வருகிறார். அதனால் தன்னை வளர்த்த முதியவர்களான அத்வானியோ, முரளி மனோகர் ஜோஷியோ குடியரசு தலைவர் பதவிக்கு நிறுத்தப்பட்டுவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார். அதன் விளைவே, தங்கள் கைகளில் உள்ள சக்கராயுதத்தை (ஒற்றையாட்சி அதிகாரத்தை) விஷ்ணு போல சுழட்டி, சி.பி.ஐ. மூலம்,, பழைய வழக்கு கோப்புகளைத் தூசு தட்டி எடுத்து, பாபர் மசூதி இடிப்பில் அத்வானி, ஜோஷி, உமா பாரதி பங்குகளை மறு ஆய்வு செய்ய உச்சநீதிமன்றம் மூலம் ஏற்பாடு செய்து விட்டார். அத்தகைய மோடி, எப்படி இந்தத் தேர்தலில், அஇஅதிமுக வாக்குகளைப் பெறுவது என்று சிந்திக்க மாட்டாரா? 50 நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாக்குகளும், 135 சட்டமன்ற உறுப்பினர்களின் வாக்குகளும், மொத்தமாகக் கிடைப்பது என்றால் சாமான்யமான விஷயமா?
அதுமட்டுமல்ல. நான்கு மாநிலத் தேர்தல்களில், பாஜக வெற்றி பெற்றிருக்கும் சூழலில், எதிர்க்கட்சிகளை குடியரசு தலைவர் தேர்தலில் தோற்கடிக்க இன்னமும் 24,௦௦௦ வாக்குகள் தேவைப்படுகிறது. ஆகவேதான், மோடியின் அக்கறை அதிமுக பக்கம் திரும்புகிறது. முதலில் ஒன்றுபட்ட அதிமுக-வின் மொத்த வாக்குகளையும் அள்ளிவிடலாம் என எண்ணியவர், தங்களது நடுவண் அதிகாரத்தை, சசிகலா அணியினர் ‘ஏற்கவில்லை’ என்றவுடன், ‘உடையட்டும்’ என முயற்சித்து, பிறகு, ‘பெரும்பான்மை’ சசிகலா அணியிடம் இருப்பதைப் பார்த்து மிரண்டுபோய், ‘இணையட்டும்’ என முடிவெடுத்து, அதற்கான முயற்சிகளை முன்னெடுக்க உதவுவதும், ஆனால், சசிகலா அணியினரோ, குறிப்பாகத் தினகரனோ வந்துவிடக் கூடாதென, தேர்தலை ரத்து செய்வதும், தினகரனைக் கைது செய்வதும், அதன்மூலம் அசிங்கப்படுத்தி அவர்களை விலக்கி வைத்து, அதிமுக இணைப்பைச் சாதிப்பதும், எல்லாமே, குடியரசு தலைவர் தேர்தலுக்காக மட்டுமே. ஆகவேதான் இந்த வழக்குகளை ‘தற்காலிகமானவை’ என நாம் அழைக்கிறோம்.
இன்னொரு அச்சமும் பிரதமர் மோடிக்கு இருக்கிறது. இப்போது சோனியா களத்தில் இறங்கி, 16 கட்சிகளை குடியரசு தலைவர் தேர்தலுக்காக இணைக்கிறார். காங்கிரஸ் முயற்சியை ஆர்.எஸ்.எஸ். சக்திகள் ஆதரிக்குமோ என்ற அச்சமும் மோடிக்கு உண்டு. ஏனென்றால் ஏற்கெனவே 1984ஆம் ஆண்டு, டெல்லியில் நடந்த சீக்கியருக்கு எதிரான கலவரத்தில், காங்கிரஸின் சேவாதளத்துடன் ஆர்.எஸ்.எஸ். சக்திகளும் இறங்கினர் என்ற பழைய செய்தி நினைவுக்கு வருகிறது. கேரளாவின் தேர்தலில், சி.பி.எம். கட்சியைத் தோற்கடிக்க காங்கிரஸ் கட்சிக்கு ஆர்.எஸ்.எஸ். சக்திகள் ஆதரவு கொடுத்த செய்திகளும் நிறையவே உள்ளன. ஆகவே சோனியாவின் வேட்பாளரை, மோடிக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ். ஆதரித்துவிட்டால் என்ன செய்வது? இருக்கும் பாஜக வாக்குகளே உடையுமே? ஆகவே ‘கையில் உள்ள அதிமுக வாக்குகளை விடக் கூடாது’ என எண்ணுகிறார். அதன் விளைவே இந்த ‘அவசர’ செயல்பாடுகள்.
இதில் ஓ.பி.எஸ். அணியினர், ‘மன்னார்குடி குடும்பம்’ விலக்கப்பட வேண்டும் என்று கூறுவது இன்னொரு கேலிக்கூத்து. ஏனென்றால் ம.நடராசனோ, திவாகரனோ, தொடக்கத்திலிருந்தே தினகரனுக்கு எதிராகச் செயல்படுகிறார்கள். அதனால் தினகரன் ஒரு காட்சி ஊடக நேர்காணலில் பெயர் சொல்லி, ‘நடராசனோ, திவாகரனோ கட்சிக்குள் நிரந்தரமாக வர மாட்டார்கள்’ என்று கூறினார். அவரது பகிரங்க அறிவிப்புக்குப் பிறகு, தீபா தம்பி தீபக் என்ற அரசியலில் இல்லாத இளைஞனை அறிக்கை கொடுக்க வைத்து, அதில், ‘தினகரனை நீக்க வேண்டும்... ஓ.பி.எஸ். பொதுச்செயலாளர் ஆக வேண்டும்’ என்று சம்பந்தப்பட்டவர்கள் எழுதிக் கொடுத்ததும் நாடறிந்த ரகசியம். அதேபோல நடராஜனுக்கு வேண்டிய கவிஞர் சினேகன் நேரடியாக ஓ.பி.எஸ். அணியில் வந்து சேர்ந்ததும், யாருடைய வேலை என்பது சொல்லித் தெரிய வேண்டியது இல்லை.
திவாகரன், தினகரனை கருத்தில்வைத்து, ‘எங்கள் குடும்பத்தினர் கட்சிக்குள்ளும், ஆட்சிக்குள்ளும் தலையிட மாட்டோம்’ எனக் கடிதம் எழுதி, அதை, முதல்வர் எடப்பாடிக்கும், சசிகலாவுக்கும் அனுப்பியதும் அனைவரும் அறிந்ததே. அதேபோல மகாதேவனின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட மூத்த அமைச்சர்கள் தங்கமணி அணியினரிடம் தினகரனுக்கு எதிராகக் காய் நகர்த்தச் செய்ததும் திவாகரன் என்பது ஊடகங்களில் வெளிவந்தது. இவ்வாறு, ஓ.பி.எஸ். அணியிலும் மன்னார்குடி குடும்பம், எடப்பாடி அணியிலும் மன்னார்குடி குடும்பம் இருப்பதால் ‘தினகரனே மன்னார்குடி குடும்பம்’ என்ற உண்மை புரியப்பட வேண்டும். ஆகவே, தினகரனின் கைதுக்குப் பின்னால் குடும்பத்தின் சதி இருக்குமானால், அது, மன்னார்குடி மகுடிக்கு, மன்னார்குடி சிக்கியதாகவே பொருள்படும்.

Wednesday, March 29, 2017

சிறப்புக் கட்டுரை: ஆர்.கே.நகர் தேர்தலையொட்டி, தமிழக அரசியலில் அணிச்சேர்க்கைகள்!

சிறப்புக் கட்டுரை: ஆர்.கே.நகர் தேர்தலையொட்டி, தமிழக அரசியலில் அணிச்சேர்க்கைகள்!

வியாழன், 30 மா 2017
ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதியின் இடைத்தேர்தலில், யார் வெற்றி பெறுவார்கள் என்ற கணிப்பை ஆளாளுக்கு ‘ஜோசியம்’ சொல்வதுபோல கணித்துக்கொண்டு இருக்கிறார்கள். எல்லோரும் ‘கிளி ஜோசியக்காரர்’களாக மாறிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், உண்மை நிலை அந்தத் தொகுதியில் ‘வேறு மாதிரி’ இருக்கிறது. ஊடகங்களின் அவதானிப்புகள், அதில் வரும் விவாதங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் பேசப்படுகின்றன என்பது என்னவோ உண்மைதான். அதையொட்டி கட்சிகளின் அல்லது குழுக்களின் தலைவர்களும், தங்களது ‘புதிய, புதிய’ கோரிக்கைகளை, அல்லது கருத்துகளை தூவுகிறார்கள். ‘2017ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் வரலாற்றில் ஒரு பெரும் மாற்றத்தை கொண்டு வந்திருப்பதை கவனித்துத்தான் இவர்கள் சூழலைக் கணிக்கிறார்களா?’ என்ற கேள்வி நமக்கு எழுகிறது.
2016ஆம் ஆண்டு இறுதி வரை தமிழ்நாட்டு அரசியலில் ஜெயலலிதா, கருணாநிதி என்ற இரண்டு பெரும் ‘ஆளுமைகள்’ இருந்தன. அல்லது அரசியல் வெளியை ஆக்கிரமித்துக் கொண்டு இருந்தன. ஜெயலலிதாவின் மறைவும், கருணாநிதியின் அமைதியும் அந்த ‘இரண்டு ஆளுமைகள்’ இல்லாத தமிழ்நாடாக இங்குள்ள ‘அரசியல் வெளியை’ வெளிச்சம்போட்டுக் காட்டிவிட்டன. அந்த ‘வெற்றிடத்தை’ நிரப்ப, மாநிலக் கட்சிகளும், அகில இந்தியக் கட்சிகளும் ‘விரும்புகின்றன’ என்பது உண்மை. ஆனால், அதற்கான எந்தச் சூழலும் தமிழ்நாட்டில் ‘இல்லை’ என்பதுதானே உண்மை. அந்த இரண்டு ‘பெரும் ஆளுமைகள்’ தலைமை தாங்கிய இரண்டு பெரும் கட்சிகள் தமிழ்நாட்டின் தேர்தல் அரசியல் பாதையை கிட்டத்தட்ட ‘ஆக்கிரமித்துக்’ கொண்டு பிற அகில இந்தியக் கட்சிகளுக்கோ, மாநிலத்தின் சிறிய கட்சிகளுக்கோ, நிற்கக்கூட இடமில்லாமல் செய்துவிட்டன. சமீபத்திய 2014 நாடாளுமன்றத் தேர்தலும், 2016 சட்டமன்றத் தேர்தலும் அதற்கான உதாரணமாக அமையவில்லையா? ஜெயலலிதாவின் செயல் தந்திரங்களில், 2016 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இடதுசாரிகள் உட்பட சிறிய கட்சிகளின் இருத்தலையே கேள்விக்குறியாக்கி விடவில்லையா? இனி மீண்டும் தாங்கள் வந்த பாதையில், தங்களது கட்சியை வளர்த்துக்கொள்ளல் என்பது அந்தச் சிறிய கட்சிகளுக்கு, சுலபமான காரியமா?

இந்த 2017ஆம் ஆண்டு நிலைமையை ஆய்ந்து பார்த்தால், 2016 வரை நாம் செய்திருந்த சில மதிப்பீடுகளை மறுபரிசீலனைக்கு உள்ளாக்க வேண்டுமா? இல்லையா? அவை என்ன மதிப்பீடுகள்? ஜெயலலிதாவின் ஆளுமையென்று கூற வெட்கப்பட்டு, அ.இ.அ.தி.மு.க என்று ஒரு கட்சியின் பெயரை கூறி நாம் அழைத்து வந்தோம். கலைஞரின் ஆளுமை என்று கூற வெட்கப்பட்டு, அதை தி.மு.க. என்று ஒரு கட்சி பெயரில் அழைத்து வந்தோம். தி.மு.க. என்ற ஒரு பெரிய ஆலமரம் அண்ணாவால் உருவாக்கப்பட்டு, போராடி, எழுந்து உருவாக்கி வந்திருந்தாலும், கடைசியில், கலைஞர் என்ற ஆளுமைக்குள் அடங்கி விடவில்லையா? அ.தி.மு.க என்ற பெரிய கட்சியை எம்.ஜி.ஆர் என்ற பெரும் ஆளுமை உருவாக்கிக் கொடுத்து, வளர்ந்திருந்தாலும் அது கடைசியில் ஜெயலலிதா என்ற ஆளுமைக்குள் அடங்கி விட்டது உண்மைதானே? இரண்டு ஆளுமைகளும் இல்லாத இந்த புதிய ஆண்டில், நாம் அ.இ.அ.தி.மு.க. என்றோ, தி.மு.க. என்றோ இரண்டு அமைப்புகள் இருந்தாலும் அவற்றை ஒரு முழு கட்சியாகக் கணிக்க முடிகிறதா? இன்று அ.தி.மு.க என்பது பகிரங்கமாக தேர்தல் ஆணையம் மூலம் அழைக்கப்படக் கூடாது என்று தடை அறிவிப்பு தமிழ்நாட்டுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. இது என்ன புதிய விந்தை? இது என்ன புதிய வேதனை? இப்படி நமக்கே கேள்விகள் எழலாம். தேர்தல் ஆணையம் ஏன் செய்தது என்று நமக்கு பல காரணிகள் புலப்படலாம். ஆனாலும் ஒரு பெரிய ஆலமரம் அதன் விழுதுகள் எங்கும் பரவியுள்ள நிலையில், கண்ணுக்குத் தெரியக் கூடாது என்று நடுவண் ஆணைய உத்தரவால் மறுக்கப்படுவது சாதாரணச் செயல் அல்ல. இந்திய அரசியலுக்கே கடந்த நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில், சவால் விட்டு நின்ற ஒரு தமிழ்நாட்டு ஆளுமை இல்லை என்ற நிலையில்தானே, நடுவண் சக்திகளுக்கு அந்தத் துணிச்சல் வருகிறது? குஜராத்தின் மோடியா? தமிழ்நாட்டு லேடியா? என்று துணிச்சலாக கேட்ட ஒரு தமிழ்நாட்டு பெண் அரசியல்வாதி இல்லை என்ற நிலையில்தானே தேர்தல் ஆணையம் தனது அரசியலைப் பாய்ச்சுகிறது? ஒரு கோடியே எழுபது லட்சம் உறுப்பினர்கள் கொண்ட ஒரு கட்சியின் ஒரேயொரு கடைசித் தொண்டன்கூட, தேர்தல் ஆணையம் மீது கோபப்பட்டு, எந்த எதிர்ப்பையும், எந்த மூலையிலும் காட்டவில்லையே? ஏன்?
ஜெயலலிதா என்ற ஆளுமை வீழ்ந்ததை ஏற்றுக்கொள்ள முடியாத தமிழ் மனம் அதை பின்தொடர்ந்து வருவதாகக் கூறும் யாரையும் உடனடியாக ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தில் இல்லை. ஜெயலலிதா இல்லாத அ.தி.மு.க-வை அந்த மனங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இந்த நிலை, பின் ஒரு காலத்தில் மாறலாம். அது வேறு. ஆனால், இப்போது அத்தகைய சூழலில் இருக்கும் தமிழ்நாட்டு மக்கள் மத்தியில், அ.தி.மு.க. என்ற கட்சியின் பெயருக்குத் தடை போட்ட தேர்தல் ஆணையத்தை எதிர்க்க யாரும் தயாரில்லை. அப்படியானால் ஜெயலலிதா என்ற ஆளுமைதான் உண்மை, அ.தி.மு.க. என்ற கட்சி ஒரு மாயை என்று கூறிவிட முடியுமா? இந்திய நாடாளுமன்றத் தேர்தல் முறை அப்படிக் கற்றுக் கொடுக்கவில்லையே? கட்சி என்பதற்கு பல விதிகள் உள்ளன. அதன்படி அது செயல்பட வேண்டும். அதற்கு தேர்தல் ஆணைய அங்கீகாரம் வேண்டும். அதற்கு எம்.எல்.ஏ-க்கள் வேண்டும். எம்.பி-க்கள் வேண்டும். தேர்தல் சின்னம் வேண்டும். இப்படியெல்லாம் இந்திய அரசியல் சட்டத்தின் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் சொல்லிக் கொண்டிருக்கிறது. ஆனாலும்கூட, 122 எம்.எல்.ஏ-க்களும், 25 எம்.பி-க்களும், ஒரு கட்சியின் பெயரையும், சின்னத்தையும் அங்கீகரிக்கப் போதாது என்ற சீரிய முடிவை எடுத்துள்ள தேர்தல் ஆணையமும் ஒரு புதிய சாதனைதான் படைத்துள்ளது. எப்படி இருந்தாலும் இந்த புதிய சூழல் நமக்கு தனிநபர் ஆளுமையையும், கட்சியின் இருத்தலையும் பற்றி மறுபரிசீலனை செய்ய உதவ வேண்டும்.
அதேபோல தான் தி.மு.க-வும் உள்ளது. தலைவர் கலைஞர் அமைதியாகயிருக்கும் சூழலில், செயல் தலைவர் அறிவிக்கப்பட்ட நிலைமையில், பகிரங்கமாகத் தெரியாவிட்டாலும், தொண்டர்கள் மத்தியிலோ, அந்தக் கட்சியின் வாக்காளர்கள் மத்தியிலோ, முன்பு இருந்த நம்பிக்கை அதே போல இல்லை என்பதுதான் உண்மை. அங்கும்கூட தனிநபர் ஆளுமை என்பது, கலைஞரைப் போலவே, பொதுவெளிகளில் ஸ்டாலினுக்குக் கிடைப்பது என்பது இனிதான் என்ற நிலை உள்ளது. அதனால்தான் ஸ்டாலினுடைய செயல்பாடுகளில், பல கேள்விகள் தொண்டர்கள் மத்தியில் எழுகின்றன. உதாரணமாக, ஜெயலலிதாவின் ஆட்சியுடன் மோதாப் போக்கை கடைப்பிடித்ததோ, பன்னீர்செல்வம் ஆட்சி மீதும், அதே மோதாப்போக்கை செயல்படுத்தியதையும், கலைஞரது தலைமை செயல்பாடுகளிலிருந்து ஸ்டாலின் செயல்பாட்டை வேறுபடுத்திப் பார்க்க தொண்டர்களுக்கு உதவியுள்ளது. ஆகவே தி.மு.க-விலும்கூட, கலைஞரது ஆளுமை என்பதைக் கட்சியின் பலம் என எடுத்துக் கொண்டவர்களுக்கு பல கேள்விகள் எழுந்துள்ளன.
அந்தக் கேள்விகள் இந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலிலும், எழுந்துள்ளன. உதாரணமாக தி.மு.க-வின் வேட்பாளராக ஒரு சாதாரணத் தொண்டரை அல்லது கட்சியின் பகுதி பொறுப்பாளரை நிறுத்திய விஷயம். ஜெயலலிதாவை எதிர்த்து, நின்ற முன்னாள் அமைச்சர் சற்குணபாண்டியனின் உறவுக்கார பெண்மணியை நிறுத்தாமல், ஏன் இப்படி ஸ்டாலின் செய்தார் என்கிற கேள்வி தொண்டர்கள் மத்தியில் இருக்கிறது. அந்தப் பெண்மணிக்கு தொகுதி வாக்காளர் மத்தியில், ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் அடையாளம் என்ற செல்வாக்கும், வாக்கு வங்கியும் உள்ளதே என்றும் கேட்கிறார்கள். சாதாரண வேட்பாளரை நிறுத்தியே வெல்வோம் என்று வியாக்கியானங்கள் வந்தாலும், இதற்குப் பின்னால் என்ன உள்ளது என்ற கேள்வி எழாமல் இல்லை. பன்னீர்செல்வத்துக்காக சட்டப் பேரவையில் எடப்பாடி ஆட்சிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் பேசுவதும், அதையே கலகம் செய்யும் வேலையில் ஈடுபடுவதும் தி.மு.க-வுக்குத் தேவையா? எனவும் வினவுகிறார்கள். சபாநாயகருக்கு எதிராக இந்த நேரத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்து, அவருக்கு ஆதரவாக சபையையே மாற்றிவிட்டது ஏன் என்றும் கேட்கிறார்கள். நடுவண் அதிகாரத்தால் சின்னமும், கட்சிப் பெயரும் மறைக்கப்படும் வேளையில், தினகரன் அணிக்குப் பலம் சேர்ப்பதற்காக, சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்து அவர்களது பலத்தை நிரூபித்துக் காட்ட உதவினாரா? என்றும் ஸ்டாலின் பற்றி கேள்விகளை எழுப்புகிறார்கள். இத்தகைய கேள்விகளுக்கு இடம் கொடுக்காத அரசியலை, மோதல் அரசியலை கலைஞர் கொண்டிருந்ததால், அவரது ஆளுமை உயர்த்திப் பிடிக்கப்படுகிறது. இவ்வாறு இருப்பதால், தனிநபர் ஆளுமை கட்சியாக இதுவரை காணப்பட்டதா? இப்போது எதிர்பார்க்கும் அளவு கட்சி முன்புபோல இல்லையா? என்ற எண்ணம் வருகிறது. அதற்குள் அண்ணன், தங்கை அரசியல், அண்ணன், தம்பி அரசியல் என்பதும் பேசப்படாமலில்லை.
இத்தனைக்கும் இடையில், அ.இ.அ.தி.மு.க. மூன்று அணிகளாக இருப்பதால் அவர்களது வாக்குகள் சிதறும் என்பதும், அதனால் தி.மு.க வெற்றி உறுதி என்றும், தி.மு.க. தொண்டர்களும், பொதுவான புரிதல்களும் இருக்கின்றன. மூன்று அணிகளா? இரண்டு அணிகளா? என்று அ.தி.மு.க பற்றி பலவாறு பேசப்பட்டாலும், இப்போது அதன் தொண்டர்கள் மத்தியில் இருக்கும் விஷயம் கட்சியின் பெயரையும், சின்னத்தையும் காப்பாற்றுவது எப்படி என்றும், தி.மு.க-வைத் தோற்கடிப்பது எப்படி எனவும் இருக்கிறது. தினகரனுக்கு எதிராக ‘தினகரன்’ நிருபரா? என்கிற கேள்வியையும் கூட அவர்கள் நகைப்புக்கிடையே வெளிப்படுத்துகிறார்கள்.
இந்த நேரத்தில், ஓ.பி.எஸ். அணியின் முக்கிய அறிவுஜீவிப் பேச்சாளர் முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், தனது நேர்காணலில், கட்சியை ஒற்றுமைப்படுத்த வேண்டும் என்றே திரும்ப, திரும்ப கூறுகிறார். சசிகலா அணிக்கு எதிராக அனைத்து வேலைகளையும், டெல்லி வரை சென்று செய்து பார்த்த பின்னால், ஆர்.கே.நகர் தொகுதியின் மண்ணின் மைந்தரை நிறுத்தியுள்ளோம் என வீராப்பு பேசிய பிற்பாடு, தேர்தல் நெருங்கும் நேரத்தில், களை இழந்து, கட்சி ஒன்றுபட வேண்டும் என்றும், தி.மு.க-வைத் தோற்கடிக்க வேண்டும் என்றும் பேசுவது, வேறு ஒரு செய்தியைக் கூறவில்லையா? அதுதவிர பாண்டியராஜன், ‘சபாநாயகரனுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் நாங்கள் உள்ளே இருந்தால் சபாநாயகருக்கு ஆதரவாக மயிலாப்பூர் எம்.எல்.ஏ. போட்டதுபோல் ஓட்டுப் போட்டிருப்போம்’ என்கிறார். அதற்கு வக்காலத்துப்போல, ‘அம்மாவால் நியமனம் செய்யப்பட்ட சபாநாயகர். அதனால் எதிர்க்க மாட்டோம்’ என்கிறார்.

ஜெயலலிதா மரணத்தில் கேள்விகளை எழுப்பிய பொதுமக்கள், சசிகலாவைக் கேள்விக்கு உள்ளாக்கியது முதற்கட்டம் நடந்த உண்மை. அதுவே சசிகலாவுக்கு சிறை என்ற அறிவிப்பு வந்ததும், ‘ஆண்டவனே தண்டித்துவிட்டான்’ என பொதுமக்கள் பேசுவதும் உண்மை. ஆகவே, அந்த எதிர்ப்பும், கோபமும், அப்படியே ஐம்பது விழுக்காடு இறங்கிவிட்டது என்பதையும் நாம் கணக்கில் எடுக்க வேண்டியிருக்கிறது. அத்தகைய எந்த எதிர்ப்பும், கோபமும், பொதுமக்களுக்கு டி.டி.வி. தினகரன் மீது இல்லை. அ.தி.மு.க. கட்சியின் தொண்டர்களைக் கையாளும் வட்டாரத்து தலைவர்களான வெற்றிவேல், நேதாஜி, கார்த்தி, அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் தினகரன் அணியிலேயே இருக்கிறார்கள் என்பதும் உண்மை. வாக்காளர்களை, வாக்குச்சாவடிக்கு கொண்டுவருவதும், அவர்களை வாக்களிக்க வைப்பதும் ஒரு பெரிய ‘கலை.’ இந்த கலையைத் தெரிந்த வட்டாரத்து தலைவர்கள் வெற்றிக்கு பெரிதும் உதவுவார்கள். ஆட்சி யார் கையில் இருக்கிறதோ, அது ‘இடைத்தேர்தல்களில்’ செல்வாக்கு செலுத்தும் என்பதும் உண்மை.
இவ்வாறாக கட்சியையும், சின்னத்தையும் முடக்கியவர்கள் என்ற கெட்ட பெயரை, ஓ.பி.எஸ். அணியும், ஸ்டாலின் அணியும் பெறும்போது, கட்சியையும், சின்னத்தையும் மீட்கும் பெரிய களத்தில் நிற்பவராக தினகரனை அந்தக் கட்சியின் தொண்டர்கள் பார்க்கத் தொடங்கிவிட்டார்கள் என்ற செய்தியும் இருக்கிறது. அதுவே புதிய ஒரு ஆளுமையை கொண்டுவர உதவுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
- டி.எஸ்.எஸ்.மணி,
சமூகச் செயற்பாட்டாளர்