இப்போது தமிழ்நாட்டில் அச்சு ஊடகங்கள் மத்தியில், விழுப்புரத்தில் நடந்த ரயில்வே தண்டவாள தகர்ப்பு பற்றிய தர்க்கம் ஒரு உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. குறிப்பாக இந்திய ஊடகங்கள் எந்தவொரு நெருக்கடியான நிகழ்ச்சி நடந்தாலும், அதுபற்றி நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்வதற்கான ஆவணங்கள் தயாராவற்கு முன்பே, தாங்களாகவே புனைந்த கதைகளை எழுதுவதும், ஒளிபரப்புவதும் பழக்கம்.
அதுமட்டுமின்றி, சம்மந்தப்பட்ட நிகழ்ச்சியில் சம்மந்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் எந்தவொரு நபரைப் பற்றியோ அல்லது அமைப்பை பற்றியோ தங்களது கருத்துக்களை அல்லது மதிப்பீடுகளை அல்லது விருப்பங்களை முத்திரையிட்டு, அதை வெளியிடுவதை ஊடகங்கள் வழக்கமாக கொண்டிருந்தன. தொடர்ந்து இவ்வாறு ஊடகங்கள் செயல்படுவது விமர்சிக்கப்பட்டு வந்தன. சில குண்டுவெடிப்புகள் எங்காவது நடந்தால், அதை இஸ்லாமிய தீவிரவாதிகள் என்ற பெயரில் முத்திரை குத்தி தங்களது கருத்துக்களை பரப்பிவருவது, வழமையாக நடைபெற்று வரும் ஒரு நிகழ்வு. இத்தகைய முத்திரை குத்துதலை சிறுபான்மை இயக்கங்களும், மனித உரிமை ஆர்வலர்களும் வழக்கமாக குறைகூறுவார்கள். இதன் மூலம் ஒரு விதமான கருத்துருவாக்கம் மக்கள் மத்தியில் உருவாக்கப்படும். அதுவே, சிறுபான்மை மக்களின் பாதுகாப்பிற்கு இடையூறாக சென்று முடியும். உளவியல் ரீதியாக பெரும்பான்மை மக்கள் மத்தியில், இதுபோன்ற பரப்புதல்களின் விளைவாக சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பின்மை ஏற்படுகிறது. ஆக்கப்பூர்வமான மதநல்லிணக்கதிற்கு வழிகோல வேண்டிய ஊடகங்கள், தங்களையும் அறியாமல் மதங்களுக்கு மத்தியில் நம்பிக்கையின்மையை ஏற்படுத்துவதற்கு ஊதுகுழலாக மாறிவிடுகின்றன. திட்டமிட்டு மதமோதலை அல்லது மதப்பகைமையை அல்லது மத இழிவுபடுத்தலை உருவாக்குவதற்காக ஏற்படுத்தப்படும் ஊடகங்கள் பற்றி நாம் இங்கே கவலைப்பட முடியாது. ஆனால் பொதுமக்கள் மத்தியில், பொதுவான நடுநிலையான அச்சு ஊடகங்கள், காட்சி ஊடகங்கள் என்று பெயர் பெற்றிருப்பவை, இதுபோன்ற குந்தமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய பரப்புரையை செய்யும் போது, அது வருத்தத்தை உருவாக்குகிறது.
இவ்வாறு நடக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சியையும், அவசரப்பட்டுக் கொண்டு, அல்லது முந்திக் கொண்டு தீர்ப்பு சொல்ல வேண்டிய ஆதங்கத்தில் சோக நிகழ்வுகளுக்கான காரணங்கள் என்று யாரையாவது முத்திரை குத்துவது, வணிக நோக்கத்திற்காக செய்யப்படுகிறது.
இவ்வாறு ஊடகங்கள் வணிக நோக்கங்களுக்காக அவசர, அவசரமாக சில செய்திகளை முத்திரைகுத்தி, பரபரப்பை ஏற்படுத்தும் முறையில் வெளியிடுவது பாரதூரமான பாதிப்புகளை சமூகத்தில் ஏற்படுத்துகிறது. இதை ஊடகங்கள் முன்கூட்டியே வழங்கும் தீர்ப்பு என்பதாக விமர்சிப்பார்கள். அதாவது புலனாய்வுக்குப் பிறகு காவல்துறை பதிவு செய்கின்ற வழக்குகளை, சாட்சிகளுடன் நீதிமன்றத்தில் கொண்டுபோய் விவாதம் செய்து, அந்த விசாரணையில் கொடுக்கப்படும் தீர்ப்பு என்ற நமது சட்ட முறைக்கு எதிராக, ஊடகங்கள் தீர்ப்பு வழங்கி விடுகின்றன என்பதாக அந்த விமர்சனம் செய்யப்படுகிறது.
தீர்ப்பு வழங்கும் ஊடக முறை செல்வாக்கு செலுத்துகின்ற நமது நாட்டில், இந்தமுறை விழுப்புரம் ரயில்வே தண்டவாள தகர்ப்பு பற்றி வித்தியாசமான வெளிப்பாடுகள் ஊடகங்களில் தென்படுகின்றன. சமீபத்தில் மேற்கு வங்கத்தில் நடந்த ரயில் வண்டிகள் மோதல் பற்றி, மேற்கு வங்க காவல்துறையும், ஊடகங்களும் முன்கூட்டியே, மாவோயிஸ்டு சதி என்பதாக அந்த நிகழ்வை சித்தரித்தார்கள். முதலில் ஒரு வெடி வெடித்தபிறகுதான் அந்த ரயில்கள் மோதல் நடந்தது என்பதாக காவல்துறை அதிகாரிகளும், அதையொட்டி ஊடகங்களும் பரப்பின. அதன்பிறகு அப்படியொரு வெடியே வெடிக்க வில்லை என்ற செய்தி வெளியானது. அதன்பிறகு ரயில்வே தண்டவாளத்தில் உள்ள பிஷ் பிளேட்டுகள் கழட்டப்பட்டன என்றும் அதனால்தான் ரயில்கள் மோதல் ஏற்பட்டன என்றும் ஊடகங்கள் படம் பிடித்துக் காட்டின. இத்தகைய செயல்கள் எல்லாம் மாவோயிஸ்டுகள் தான் செய்வார்கள் என்ற பொதுவான ஒரு கருத்து இருப்பதால், அதை வலுப்படுத்தும் விதத்தில் அவர்களது பரப்புரை அமைந்தது. அதன்பிறகு அந்த செய்தியும் உண்மையல்ல என்று நிருபனமானது. வட்டார காவல்துறை அதிகாரிகளுக்கு, மாநில அரசாங்கத்தின் அரசியலை பாதுகாக்க வேண்டும் என்ற சிந்தனை இருப்பதால், அவர்கள் தொடர்ந்து மாவோயிஸ்டுகள் மீதான குற்றச்சாட்டை விடவில்லை. அந்த வட்டாரத்தில் இருக்கின்ற பெரிய மக்கள் திரள் அமைப்பான, காவல்துறை அராஜகத்திற்கு எதிரான மக்கள் அமைப்பு என்பதை மாவோயிஸ்டு செல்வாக்கு உள்ளவர்கள் என்று முத்திரை குத்தி, நடந்து முடிந்த ரயில்வண்டிகள் மோதலுடன் தொடர்பு படுத்த சில அதிகாரிகள் முயன்றனர். அதையொட்டி ரயில்வே என்ஜீன் ஒட்டுனரை இந்த மக்கள் திரள் அமைப்பினர் கடத்தி கொண்டு சென்றதனால், அந்த ரயில் வண்டிகள் மோதல் நடந்தது என்பதாக ஊடகங்களில் வெளிப்படுத்தினர். இவ்வாறு ஊடகங்கள் ஒவ்வொரு முக்கியமான நிகழ்விலும், கறாரான நடுநிலையை நிலைநிறுத்தாமல் இருந்து விடுகின்றன.
இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் தமிழ்நாட்டில் சமீபத்தில் நடந்த விழுப்புரம் ரயில்வே தண்டவாள வெடி விபத்து பற்றி, தமிழகத்தில் இருந்து வெளிவரும் ஏடுகள் வித்தியாசமான கருத்துக்களை விதைத்துள்ளன என்பது விசித்திரமான உண்மை. வழமையாக செய்திகளை வெளியிடும்போது, அரசு தரப்பு அல்லது அதிகாரிகள் தரப்பு அல்லது தனிப்பட்ட அதிகாரிகள் வெளிப்படையாக மற்றும் ரகசியமாக கூறுகின்ற செய்திகளை ஊடகங்கள் வெளியிடுகின்றன. அவ்வாறு வெளியிடும்போது தங்களது விருப்பத்திற்கேற்ற முத்திரையை குத்துவது என்பதை பழக்கமாக கொண்டுள்ளன. அப்படித்தான் இந்த விபத்துபற்றிய செய்தியை முதலில் வெளியிடும்போது, அது மாவோயிஸ்டு சதி என்றும், தமிழ் தீவிரவாதிகளின் சதி என்றும் வெளியிட்டனர். உடனடியாக தமிழக காவல்துறை தலைமை அதிகாரிகள், அந்த நிகழ்வை மாவோயிட்டு சதி அல்ல என்று பதில் கொடுக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. அடுத்து உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு வைக்கப்பட்ட குறி என்பதாக ஒரு பரபரப்புச் செய்தியை வெளியிட்டு ஊடகங்கள் மகிழ்ந்தன. அதுவும் கூட உடனடியாக மறுக்கப்பட்டது மட்டுமின்றி, சம்மந்தப்பட்ட ப.சிதம்பரத்தாலேயே மறுக்கப்பட்டது.
அதன்பிறகு, சென்னையில் இருந்து வெளிவரும் ஒரு ஆங்கில ஏட்டில், காவல்துறை உயர்அதிகாரிகளும், சம்மந்தப்பட்ட ரயில்வே துறையும் கூறுகின்ற விவரங்களில் முரண்பாடு இருப்பதை வெளிச்சம் போட்டு காட்டியது. சேலம்சென்னை விரைவு வண்டியின் ஒட்டுனர் தனது ரயில் வண்டி வெடிவிபத்தின் காரணமாக ஆட்டம் கண்டதாக உணர்ந்தார் என்று தமிழக காவல்துறைத் தலைவர் சொன்ன செய்தி, ரயில்வே துறை கூறிய செய்தியிலிருந்து முரண்படுவதை இந்த ஆங்கில ஏடு அம்பலப்படுத்தியது அதாவது அந்த ரயில் வண்டியின் கடைசிப் பெட்டியில் வரும் கார்டு தான் அதை உணர்ந்தார் என்றும், உடனடியாக நிலைய அதிகாரிக்கு கூறினார் என்றும் ரயில்வே துறை தெரியப்படுத்தியது அதேபோல டி.ஜி.பி. சித்தனி பக்கத்தில் வெடிவெடித்ததாக கூறியதையும், ரயில்வே துறை பேரணி பக்கத்தில் வெடி வெடித்ததாக தெரிவித்ததையும் இந்த ஆங்கில ஏடு வெளிப்படுத்தியது. இவ்வாறு ஆய்வு தொடங்குவதற்கு முன்பே, நடந்த நிகழ்ச்சி பற்றிய வெவ்வெறு துறையின் அதிகாரிகளின் அறிவிப்புகளில் உள்ள முரண்பாடுகளை வெளியிடுவதன் மூலம் நிகழ்ச்சி பற்றிய ஐயத்தை இந்த ஏடு ஏற்படுத்தியது.
சில தமிழ் ஏடுகள் மட்டுமே தமிழ்நாட்டில், தலையங்கம் எழுதி வரும் வழக்கம் இருக்கும்போது, பாரம்பரியமாக வெளிவரும் பிரபல ஏடு ஒன்று ஒரு மாத காலமாக தலையங்கம் எழுத தொடங்கியிருப்பது நல்லதொரு அறிகுறியாக இருக்கிறது. அதிகமான அளவில் விற்பனையாகும் இந்த ஏட்டின் தலையங்கத்தில், யாருக்கு குறிவைக்கிறார்கள் என்று தலைப்பிட்டு எழுதியுள்ளார்கள். அதில் விழுப்புரம் தண்டவாள தகர்ப்பு பற்றி எழுதும் போது, ராஜபக்சே பற்றி விரிவாக கூறுகிறார்கள். விமர்சன நையாண்டியுடன், ராஜபக்சே குளுகுளு பிரதேசமான சிம்லாவுக்கு தன் மனைவி ஷிராந்தியுடன் பறந்தார் என்றும், அங்கே கடைவிதிக்கும் சென்று பொருட்களை வாங்கினார் என்றும் விளக்கியுள்ளார்கள். இப்படி யொரு அருமையான இடமாக இருக்கிறதே சிம்லா ஆனந்தமாக அந்த குளுகுளு பிரதேசத்தில் பொழுதை கழித்தார் என்றும் எழுதியிருக்கிறார்கள். தான் சென்ற இடங்களில் எந்த எதிர்ப்பையும் சந்திக்காமலும், உற்சாகமாக பவனி வந்தார் என்றும், அதிபரின் மனைவி ஷீராந்தியும் சிம்லா கடைவீதிகளில் மிக மகிழ்ச்சியோடு சுற்றி வந்தார் என்றும், இவ்வாறு இந்தியாவில் தங்கள் பொழுதை இனிமையாகவும், உற்சாகமாகவும் கழித்த அவர்கள் இனிதே இலங்கை திரும்பி சென்றார்கள் என்பதாக எழுதியுள்ளார்கள். இந்த பாணி தமிழர்கள் மத்தியில் இருக்கின்ற வெறுப்புணர்வின் வெளிபாடாக புரிய முடிகிறது.
விழுப்புரம் தண்டவாள தகர்ப்பை விமர்சிக்க வந்த அந்த தலையங்கம், அவர்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் என்றால், ராஜபக்சே வந்திறங்கி டெல்லி பட்டணத்திலோ, அவர் ஆனந்தமாக பொழுதை கழித்த சிம்லாவுக்கோ சென்றோவல்லவா எதிர்ப்பை காட்டியிருக்க வேண்டும் என்று எழுதியிருக்கிறார்கள். இத்தகைய முறையில் கருத்துக்களை உருவாக்குவது, பொதுவாகவும் சரி, இந்த ஏட்டிற்கும் புதியதொரு அணுகுமுறையாக தென்படுகிறது. அதேபோல, தரமான தமிழ்நாளேடு என்பதாக அறியப்பட்ட ஒரு ஏட்டின் தலையங்கத்தில், இதே விழுப்புரம் தண்டவாள தகர்ப்பு பற்றி, சதி... சதி... சதி... என்ற தலைப்பில் தலையங்கம் தீட்டியுள்ளார்கள். அதில் முழுமையான விசாரணை நடைபெறுவதற்கு முன்பே, மாவோயிஸ்டுகள் என்றும், விடுதலைப்புலிகள் ஆதரவாளர்கள் என்றும் சதிக்கான காரணத்தை அதிகாரிகள் முத்திரை குத்துவதை கடுமையாக விமர்சித்துள்ளார்கள். இது தமிழ்நாட்டில் ஊடகங்களின் கருத்தில் வந்திருக்கும், நல்லதொரு மாற்றம் மேலும் அந்த தலையங்கத்தில் இலங்கை அதிபர் தனது இந்திய வருகையின்போது, ஏற்கெனவே இந்தியாவில் குற்றவாளி பட்டியலில் இருக்கும் ஒரு அமைச்சரை கூட்டி வந்ததை விமர்சித்திருக்கிறார்கள். அதுமட்டுமின்றி இலங்கை அரசின் உளவுத்துறையே கூட ஏன் இப்படியொரு சதித்திட்டத்தை அரங்கேற்றி, பழியை விடுதலைப்புலிகள் மீது போட்டு, டக்ளஸ் தேவானந்தா கைது பிரச்சினையை முடி மறைக்க முற்பட்டிருக்கக் கூடாது என்பதாக ஒரு கேள்வியை எழுப்பியுள்ளனர்.
இவ்வாறு, அரசு தரப்பு மற்றும் ஆர்வமுள்ள தரப்புகள் எழுப்பிய முத்திரைகளுக்கு, முற்றுப்புள்ளி வைக்க தமிழ்நாட்டின் பிரபல ஏடுகள் எழுதுகின்றன என்பது ஒரு புதிய வரலாறு. இலங்கை அரசின் உளவுப்படையினர் இங்கே செயல்படுவதானால், அவர்கள் டக்ளஸ், வரதராஜ பெருமாள், ராஜன் அமைப்பைச் சேர்ந்த நபர்கள் மூலம்தான் செயல்பட்டிருப்பார்கள் என்ற பார்வை நாட்டை பாதுகாக்கும் அதிகாரிகளுக்கு ஏன் எழவில்லை என்பதான கேள்வி நமக்கும் எழுகிறது. எப்படியோ, தீர்ப்பு கொடுக்கும் நிலையில் இல்லாமல், ஊடகங்கள் இன்று திருப்தியடையாத நிலைக்கு வந்துள்ளன என்று தெரிகிறது.
Tuesday, June 15, 2010
Subscribe to:
Posts (Atom)