இரண்டு நாட்களாக ஊடகங்கள் இந்திய சுற்றுச் சூழல் மற்றும் வன இலாகாவின் அமைச்சரான ஜெய்ராம் ரமேஷ், தனது சீன பயணத்தின் போது பேசிய பேச்சுகளால் எழும்பியுள்ள பிரச்சனைகளை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன. சீனாவிற்கு பயணம் செய்த இந்த மத்திய அமைச்சர் நிறைய செய்திகளைப் பேசியுள்ளார். அவற்றில் சீன நாட்டின் மூலதனங்களை, இந்தியாவில் கொண்டு வருவதற்கு தேவையற்ற எச்சரிக்கைகளையும், மிகைப்படுத்தப்பட்ட பாதுகாப்புகளையும் பேசி வருகின்ற உள்துறை அமைச்சகத்தை ஒரு கடி கடித்துள்ளார். இதை ஊடகங்கள் பிரபலமாக வெளியிட்ட பிற்பாடு அவற்றிற்கு பதில் சொல்லும் முகத்தோடு, தலைமை அமைச்சர் மன்மோகன் சிங் குறுக்கிட்டுள்ளார். இன்னொரு நாட்டு மண்ணில் இருந்து கொண்டு இந்திய நாட்டின் இன்னொரு அமைச்சகமான உள்துறை அமைச்சகம் பற்றி மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் பேசியது கண்டிக்கத்தக்கது என்று கூறியுள்ளார். இதுவே எதிர்க்கட்சிகளுக்கும் சாதகமாகப் போய்விட்டது. பா.ஜ.க. உடனடியாக ஜெய்ராம் ரமேஷ் பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை வைத்துவிட்டது.
உள்ளபடியே இந்தியசீன நட்புறவை மேலும் பேணுவதற்கும், வலுப்படுத்துவதற்கும் மத்திய சுற்றுச் சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், சீன நாட்டிற்குச் சென்றார். அப்போது ஆக்கப்பூர்வமான உறவுகளை சீனாவிடம் வைத்துக்கொள்ள இந்திய அரசு விரும்புவதாக கூறியிருந்தார். அதுமட்டுமின்றி நடந்து முடிந்த கோபன் ஹெகனின் பருவநிலை மாற்ற மாநாட்டில், ஒரு முடிவான தீர்மானம் எழாதபோது, அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் தாங்கள் சொல்கின்ற நிபந்தனைகளை ஏற்க வேண்டும் என்று சீனாவை வற்புறுத்திய போது, இந்தியா சீனாவிற்கு ஆதரவாக நிலையெடுத்து சீனாவிற்கு உதவியது என்றும் ஜெய்ராம் ரமேஷ் திருவாய் மலர்ந்துள்ளார். உள்ளபடியே அந்த உலக மாநாட்டில் இந்த வேலையை செய்தவரும் ஜெய்ராம் ரமேஷ் தான்.
இந்தியாவின் தலைமை அமைச்சர் வழமையாக இந்த பருவநிலை மாற்றம் பற்றிய அனைத்து சந்திப்புகளிலும், இந்திய நாட்டின் நிலைப்பாட்டை கறாராக பின்பற்றி, கியோடா பிரகடனம் என்ற ஜி8 நாடுகள் உருவாக்கிய ஒப்பந்தத்தை அமுலாக்குவதற்காக குரல் கொடுப்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. மாறாக அந்த நேரத்தில் கடைசியாக அமெரிக்க அரசு எடுக்கின்ற நிலைப்பாட்டை நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஆதரித்து விடுகின்ற நிலைப்பாடுகளையே எடுத்திருக்கிறார். ஒரு முறை ஜி8 நாடுகளின் உச்சி மாநாட்டுக்கு பார்வையாளராக சென்ற இந்திய தலைமை அமைச்சர், கியோடா பிரகடனத்தை அமுலாக்க முதல் குரல் கொடுத்தார். ஆனால் விவாதத்தில் இறுதி வரை அதே குரலில் நிற்காமல் நழுவி விட்டார். கியோடா பிரகடனம் என்பது உலகில் குளோரோ புளோரோ கார்பன் என்ற வாயுவை உருவாக்கிக் கொடுக்கின்ற பன்னாட்டு மூலதன கம்பெனிகளின் உற்பத்தியை கட்டுப்படுத்தும் நிபந்தனையைக் கொண்டது. கரியமில வாயுவை அதிகமான அளவு காற்றிலே கலக்கவிட்டு, அதன் மூலம் பிராணவாயு மண்டலத்தில் ஓட்டை விழுவதற்கான ஏற்பாட்டை செய்வது தான் இந்த குளோரோ புளோரோ கார்பன்.
இத்தகைய உற்பத்தியை அதிகமாக செய்கின்ற வேதியல் பொருட்களை பயன்பாட்டிற்கு இறக்கி விடுகின்ற நிறுவனங்கள் அமெரிக்க பன்னாட்டு மூலதன நிறுவனங்கள். அவற்றில் உற்பத்தியை குறைக்கச் சொல்வதற்கு, அமெரிக்க அரசாங்கம் தயாராகயில்லை. அதனால் அமெரிக்க சார்பு சிந்தனைகளை தன்னுடைய இறுதி முடிவாக வழக்கமாக எடுத்து வரும் இந்திய தலைமை அமைச்சரும் அத்தகைய நிபந்தனைகளை அமெரிக்க பன்னாட்டு மூலதன நிறுவனங்களின் மீது போடுவதை வலியுறுத்த தயாராகயில்லை. இதுதான் ஒவ்வொரு வேறுபாடுகளிலும், முரண்பாடுகளிலும் இந்திய மத்திய அமைச்சரவைக்குள் வெடித்து வெளியே வருகிறது.
அமெரிக்க பன்னாட்டு மூலதன நிறுவனங்களுக்கு இந்தியாவில் மூலதனமிட எந்தவொரு தடங்கலோ, எச்சரிக்கையோ இல்லாத நிலையில், சீன நாட்டிற்கு மாத்திரம் அத்தகைய நிலைகள் கடைப்பிடிக்கப்படுகிறதே என்ற ஒப்பீடுதான் ஜெய்ராம் ரமேஷை இவ்வாறு பேசவைத்துள்ளது. உதாரணமாக அமெரிக்க பன்னாட்டு மூலதன கம்பெனியான யூனியன் கார்பைடு, எவரெடி செல்களை அதாவது பேட்டரிகளை உருவாக்குகிறது. அதேசமயம் மத்தியபிரதேச மாநிலத்தில் போபால் நகரில் 1984ம் ஆண்டு டிசம்பர் 3ம் நாள் நள்ளிரவில் இந்த யூனியன் கார்பைடு கம்பெனி நடத்தி வந்த, பூச்சிக்கொல்லி மருந்து உற்பத்தி ஆலையிலிருந்து, நச்சுவாயு கசிந்தது. அதனால் ஏற்பட்ட விபத்தில் இதுவரை 20ஆயிரம் பேர் மரணமடைந்ததும், ஒரு லட்சம் பேர் பாதிக்கப்பட்டதும் அனைவருக்கும் தெரியும். ஆனால் இதுவரை போபால் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டு, பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட வாரண் ஆண்டர்சன் என்ற யூனியன் கார்பைடு முதலாளியை, கைது செய்ய இந்திய உள்துறை அமைச்சகம் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அமெரிக்க குடிமகனாக இருக்கின்ற வாரண் ஆண்டர்சன், அமெரிக்காவில் பாதுகாப்பாக இருக்க முடிகிறது. அதேபோல யூனியன் கார்பைடு கம்பெனியிடமிருந்து, அந்த போபால் நச்சு ஆலையை விலைக்கு வாங்கியுள்ள இன்னொரு அமெரிக்க பன்னாட்டு மூலதன நிறுவனமான டௌ கெமிக்கல்ஸ், இதுவரை நச்சுவாயு பாதிப்பிற்கு எந்த பொறுப்பையும் ஏற்க மறுக்கிறது. ஆனால் அந்த டௌ கம்பெனிக்கு இந்திய அரசு, சிவப்புக்கம்பளம் விரிக்கிறது. அமெரிக்க அதிபராக ஜார்ஜ் புஷ் இருக்கும் போது, அவரது இந்திய வருகை நேரத்தில், விருந்து கொடுத்த தலைமை அமைச்சர் மன்மோகன் அந்த விருந்தில், இந்த டௌ கெமிக்கல்சையும் அழைத்து விருந்தாளியாக ஆக்கினார். அமெரிக்க கம்பெனிகள் இந்திய மக்களின் பாதுகாப்பிற்கு, ஆபத்தை விளைவித்தாலும் அவர்களுக்கு இந்திய அரசு சிவப்புக்கம்பளம் விரிக்கிறது என்ற உண்மை இதன் மூலம் வெளிப்படுகிறது. அதேசமயம் அண்டை நாடான சீனாவிலிருந்து வருகின்ற கம்பெனிகளுக்கு, உள்துறை அமைச்சகம் முன்கூட்டியே எச்சரிக்கை என்ற பெயரில் தடங்கல்கள் விதிக்கிறது. இந்த உண்மையைத் தான் ஜெய்ராம் ரமேஷ் போட்டு உடைத்துவிட்டார்.
இந்திய அரசு தனது உள்நாட்டு பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதனால் தான், சீன நாட்டின் கம்பெனிகளுக்கு அப்படிப்பட்ட எச்சரிக்கை மணியை ஒலிக்கிறது என்றே நம்புவோம். அப்படியானால் மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதல் தான், இந்தியாவின் பாதுகாப்பிற்கு பெரியதொரு ஆபத்தாக இருக்கிறது. அதில் சிக்கியுள்ள அஜ்மல் கசாபிற்கு தூக்குத் தண்டனை வாங்கிக் கொடுத்து, மகிழ்ச்சியடைந்த உள்துறை அமைச்சகம், அந்த தாக்குதலின் மூளையாக செயல்பட்ட அமெரிக்க குடிமக்களான ஹெட்லியையும், ராணாவையும் இந்தியாவிற்கு அழைத்து வந்து, விசாரிக்க எத்தகைய முன்முயற்சி எடுத்தது?
ஹெட்லியை அமெரிக்கா சென்று விசாரிப்பதற்கே இதுவரை இந்திய அதிகாரிகளுக்கு அனுமதி கொடுக்காத அமெரிக்காவை, நமது உள்துறை எச்சரிக்கை அணுகுமுறையில் வைக்கவில்லை. அதேபோல ராணா பற்றி எந்த கேள்வியையும் எழுப்புவதற்கு, இந்திய உள்துறை அமைச்சகம் இதுவரை வாயைத் திறக்கவில்லை. ஆகவே இந்தியாவின் பாதுகாப்பிற்காகத் தான், ப.சிதம்பரம் தலைமையிலான உள்துறை அமைச்சகம் சீன நாட்டின் முதலீடுகளை எச்சரிக்கையோடு தணிக்கைச் செய்கிறது என்ற வாதம் எடுபடப்போவதில்லை.
அமெரிக்காவிற்கு ஒரு அணுகுமுறை, அதேசமயம் சீனாவிற்கு வேறொரு அணுகுமுறை என்பது தான் இந்திய அரசிடம் இருக்கிறது என்பது இதிலிருந்து விளங்குகிறது. அமெரிக்க மூலதனம் மற்றும் ஐரோப்பிய மூலதனத்திற்கு போட்டியாக சீனாவிலிருந்து மூலதனம் இறக்குமதி செய்யப்படல் கூடாது என்று இந்திய உள்துறை அமைச்சகம் எண்ணுகிறதா என்று கேள்வி கேட்கத் தோன்றுகிறது. அதனால் தான் ஜெய்ராம் ரமேஷ் எழுப்பிய கேள்வியில் என்ன தவறு இருக்கிறது என்று நாமும் கேட்கலாம்.
Tuesday, May 11, 2010
Subscribe to:
Posts (Atom)