Thursday, July 22, 2010

அங்கொரு கருணா, இங்கொரு...?

இதுதான் போராடும் எல்லா
இனங்களுக்கும் உள்ள நிலையா?
யூலை படுகொலை என்றவர்
அழைத்தார். கருப்பு யூலை
என்றும் அழைக்கிறார்.
சிறுபான்மை தமிழனை
ஆதிக்க சிங்களவன் வன்முறை
செய்து படுகொலை நடத்திய
கொடூர நாளை அப்படி குறித்தனர்.
அங்கே விடுதலை விழுதுகள்
எழுந்தன. சரணடைவு தத்துவம்
வீழ்ந்தது. ஆயுதம்தான் இனி என
தமிழ் இளைஞர் தன்நிலை உணர்ந்தனர்.
அந்த சிந்தனையை யூலை
இருபத்திமூன்று பதிவு செய்தது.
இங்கே
தாமிரபரணி படுகொலைகள் இதே
நாளில் திட்டமிட்டு நடத்தப்பட்டன.
மாஞ்சோலை தொழிலாளர்
மலையக தமிழரின் வாரிசுகள்
இங்கே திருநெல்வேலியில்
ஆதிக்க சக்திகளின் ஆயுத
காட்டாட்சிக்கு பலி ஆகினர்.
பதினேழு தோழர்கள்
பச்சிளங்குழந்தை உட்பட
ஈவிரக்கமின்றி அடித்து
தூக்கி, ஆற்றில் போட்டு
ஆபடியே அமுக்கி கொன்று
குவித்த அரசுதான் இப்போதும்
இங்கே அரியணை சுகத்தில்...
தமிழன் எங்கே இருந்தாலும்,
அவனுக்கு எதிராய் ஆலவட்டமிடும்
பருந்து கூட்டம், ஆளுகையில்....
அங்கொரு கருணா, அதனால்
தோல்வி என்றால், இங்கொரு.......

ஜூலை--23, இனப்படுகொலை நினைவு நாள்.

27 ஆண்டுகளுக்கு முன்னால், இலங்கைத் தீவில் சிறுபான்மை இனமாக இருக்கும் தமிழினத்தின் மீது, சிங்கள காடையர்களும், காவல் துறையும் சேர்ந்து நடத்திய கொடூரக் கொலைகள், இந்த நாளில் நினைவுப்படுத்தப்படுகின்றன. 1983ம் ஆண்டு ஜூலை 23ம் நாள் காடையர் கும்பலின் தாக்குதல் நடத்தப்பட்டது. 4000 தமிழர்கள் படுக்கொலைச் செய்யப்பட்டனர். பல்லாயிரம் தமிழர்களின் வீடுகள் இடிக்கப்பட்டன. கூட்டம் கூட்டமாக ஈழத் தமிழர்கள் வெளி நாடுகளுக்கு தப்பி ஒடினர். அந்த நாள் கறுப்பு ஜூலை நாள் என்று குறிக்கப்பட்டது. அதுவே தமிழ் இளைஞர்களை ஆயுதம் தூக்குவதற்கு நிர்பந்தித்தது.
1948ம் ஆண்டு இலங்கைக்கு ஆங்கிலேயர்கள் சுதந்திரம் அறிவித்த போது, சிங்கள தேசம், தமிழர் தேசம் என்ற இரண்டையும் ஒரே தீவிற்குள் அடைத்து, சிங்களர் கைகளில் அதிகாரத்தைக் கொடுத்தனர். ஆனால் பெரும்பான்மையான அரசு ஊழியர்கள், மற்றும் படித்தவர்கள் தமிழர்களாக இருந்தனர். இந்த பிளவுபடுத்தி ஆட்சி நடத்தும் ஆங்கிலேயரது தந்திரம், இரண்டு இனங்கள் மத்தியிலும் பகைமையை ஏற்படுத்தியது. 1956ம் ஆண்டு தமிழையும், ஆங்கிலத்தையும் புறம் தள்ளிவிட்டு, சிங்களம் மட்டுமே என்பதற்கான சட்டத்தை, பெரும்பான்மை மனோபாவம் கொண்டு வந்தது. தமிழர்களின் அறவழி எதிர்ப்பு 1958ல் கலவரத்தின் மூலம், சிங்கள காடையர்களால் தாக்கப்பட்டது. 60கள் தமிழர்களின் தொடர்ந்த எதிர்ப்பை பதிவு செய்தன. 1971ம் ஆண்டு தரப்படுத்தல் என்ற பெயரில், அரசு பணிகளுக்கு தமிழர்களை வடிக்கட்டும் முறைக்கு கொண்டு சென்றது. 1977ல் மீண்டும் இனக் கலவரம் தமிழர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டது. 1981ல் உலகப் புகழ் பெற்ற யாழ்பாணத்தின் தமிழ் நூல் நிலையம், சிங்கள வன்முறை கும்பலால் எரிக்கப்பட்டது. 83ம் ஆண்டு வரை தீவிற்குள் ஆங்கங்கே தமிழர்கள் மீதான வன்முறைகள் நடத்தப்பட்டன. தமிழ் இளைஞர்கள் சிலர் கொந்தளித்து பதிலடி கொடுத்தனர். உச்சக்கட்டமாக 1983 ஜூலை 23ல் சிங்கள காடையர்களின் பெரும் தாக்குதல் நடத்தப்பட்டது. ஆயுதம் தாங்கிய சிங்களப் படையினர் யாழ்பாணம் அருகே தாக்கப்பட்டனர். அவர்களது சடலங்கள் மறுநாள் கொழும்பில் புதைக்கப்படும் போது, சிங்கள வன்முறைக் கும்பல் தமிழர்கள் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தியது.
கொழும்பில் வசித்து வந்த தமிழர்கள் தாக்கப்பட்டனர். அவர்களது வீடுகள் எரிக்கப்பட்டன. அவர்களது அங்காடிகள் தீ வைக்கப்பட்டன. தமிழர்கள் பெரும் எண்ணிக்கையில் நாட்டை விட்டே வெளியேறினர். சிங்கள வன்முறையாளர்களின் தாக்குதல்களிலிருந்து, அப்பாவித் தமிழர்களை பல சிங்களர்களும், தமிழ் பேசும் முஸ்லீம்களும் பாதுகாத்தனர். முஸ்லீம் வீடுகளிலும், சிங்கள வீடுகளிலும், கோயில்களிலும் அரசாங்கக் கட்டிடங்களிலும் தமிழர்கள் அடைக்கலம் தேடினர். அரசு நெறுக்கடி நிலையை அறிவித்தது. சிங்கள காவல் துறை ஊரடங்கு உத்தரவை அமுல்படுத்த விரும்பவில்லை. கண்டி, மாத்தளை, நாவலபிட்டியா, பதுல்லா, நுவரெலியா உட்பட கணிசமாக தமிழர்கள் வாழும் பகுதிகளுக்கும் சிங்கள காடையரின் வன்முறை வெறியாட்டம் நீடித்தது.
ஜூலை 25ம் நாள், வெளிக்கடை சிறைச்சாலையில் தமிழ் கைதிகள் தாக்கப்பட்டனர். சிங்கள கைதிகள் வெளியிலிருந்து கொடுக்கப்பட்ட கத்திகளையும், கட்டைகளையும் வைத்து நிராயுதபாணியான தமிழ்க் கைதிகளை தாக்கினார்கள். அதில் 37 தமிழர்கள் கொல்லப்பட்டனர். அதேபோல ஜூலை 28ம் நாள் மீண்டும் அதே சிறைச்சாலையில் அதே பாணியில் தாக்குதல் நடத்தப்பட்டது. 15 தமிழர்கள் கொல்லப்பட்டனர். ஜூலை 26ம் நாள் நாடு தழுவிய அளவில் சிங்கள காடையர்களின் தாக்குதல்கள் தமிழர்கள் மீது பற்றிப் படர்ந்தன.
சிங்களர்களின் வன்முறைகளை அரசப்படைகள் வேடிக்கைப் பார்த்தன. பிரேமதாசா அப்போது பிரமராக இருந்தார். கொழும்பில் 20,000 தமிழர்கள் வீடற்றவர்கள் ஆனார்கள். பள்ளிக்கூடங்களில் தங்க வைக்கப்பட்டர்கள். தமிழ் அகதிகளின் எண்ணிக்கை 50,000 ஆனது. சிங்களர்கள் அதிகம் வசிக்கும் காலி, மாத்தரா, கம்போலா, நாவலப்பிட்டியா, புசெல்லவா, கீனிகத்தேனா, ஹட்டன், கன்டி, நுவெரெலியா, பதுல்லா, அனுராதபுரா ஆகிய இடங்களில், தமிழர்கள் தாக்கப்பட்டனர். 3,000 தமிழர்கள் படுகொலைச் செய்யப்பட்டனர். ஈழத் தமிழர்களும், மலையகத் தமிழர்களும் அதில் அடங்குவார்கள். வெளிக்கடை சிறையில் மட்டும் 53 தமிழ் கைதிகள் கொடூரமாக படுக்கொலைச் செய்யப்பட்டனர். 18,000 தமிழர் வீடுகள் நெறுக்கப்பட்டன. ஆயிரக்காணக்கான தமிழர்கள் ஐரேப்பா, ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளுக்கு பறந்த சென்றனர். பல்லாயிரக்கணக்கனோர் இந்தியாவிற்கு கடல் வழியாக தப்பி வந்தனர். தமிழ் இளைஞர்கள் ஆயுதக் குழுக்களில் இணையத் தொடங்கினர்.
27 ஆண்டுகள் கழித்து இந்த கொடூரமான இனப் படுக்கொலையை கண்டித்து உலகெங்கும் உள்ள தமிழர்கள் நினைவு கூர்கிறார்கள். மௌன அஞ்சலி செலுத்துகிறார்கள். கனடா, ஸ்விட்சர்லாந்து, நார்வே, டென்மார்க், ஜெர்மனி, பிரான்சு, லண்டன், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளில் ஒவ்வொரு ஆண்டும் இதே நாளில் நினைவு கூர்கிறார்கள்.
லண்டனில் நடைபெறும் பேரணியில், இப்போது 2009ம் ஆண்டு 4வது வன்னிப் போரில், போர்க் கைதிகளாக பிடிப்பட்டுள்ள தமிழர்களை சந்திக்க அனைத்து நாட்டு செஞ்சிலுவைச் சங்கத்தினரை அனுமதிக்க வேண்டும் என கோருகின்றனர். இங்கிலாந்திலிருந்து, ஜெனிவாவில் உள்ள ஐ.நா. தலைமையகத்தை நோக்கி நடைப்பயணமாக, சிவந்தன் என்ற தமிழ் இளைஞர், போர்க் குற்றவாளிகளை விசாரிப்பதற்கான கோரிக்கையுடன் இதே நாளில் புறப்படுகிறார். அனைத்து நாட்டு அரங்கில் இலங்கையில் நடந்த இன அழிப்பை பகிரங்கப்படுத்துவதற்கு, உலகத் தமிழர்கள் ஒன்றுப்பட்டு குரல் கொடுப்பதற்கான, அடையாள நாளாக இந்த நாள் அமைந்துள்ளது.
போர்க் கைதிகளாக 2009 மே18ல் சரணடைந்த விடுதலைப் புலியின் போராளிகள் கருதப்பட வேண்டும். இலங்கை அரசின் கண்க்குப்படி 11,000 போராளிகள் சரணடைந்துள்ளனர். அவர்களில் 3,000 பேர் விடுவிக்கப்பட்டதாக அரசு அறிவித்தது. அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால் விடுதலைப் புலிகளின் தலைவர்களான பாலகுமாரனும், யோகியும் கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டதாக அரசால் அறிவிக்கப்பட்டவர்கள் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை.
அவர்கள் இருவரின் மனைவிகள் விதவைகளாக உதவிக் கேட்டு வந்துள்ளனர் என்று இலங்கை அமைச்சர் அறிவித்துள்ளார். அதன் பொருள் சரணடைந்த இரு தலைவர்களும் போர் விதிகளுக்கு எதிராக கொலைச் செய்யப்பட்டுள்ளனர் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது பகிரங்கமான போர்க் குற்றம். இது போன்ற போர்க் குற்றங்களை இழைத்து வரும் போர்க் குற்றவாளிகளை விசாரிக்க வேண்டும் என்ற குரல், இன்றைய நாளில் உலகமெங்கும் தமிழர்களால் எழுப்பபடுவது பொருத்தமாக இருக்கிறது.

கோபம் கொள்ளல் ஆகாது பாப்பா.

கோபத்தை கட்டுப்படுத்தவா?
அது எப்படி? சமாளிக்கத்தான்
முடியும். எதிராளி புண்படுத்தினால்,
கோபம் வருவது இயற்கைதான்.
புண்பட்ட நெஞ்சம் புயலாக மாறும்.
புயலாக மாறினால், கோபமாய்
வெடிக்கும். வெடிப்பதால் வெற்றி
கிட்டுமா? வெடிப்பதால் நரம்பு
தளரும். நம் உடல் உடையும்.
புண்படுத்தியது திருந்துமா?
நீ புண்படுத்தினாய் என்பதிலும்,
உன் செயல் புண்படுத்தியது
என்பதிலும், எத்தனை வேற்றுமை?.
தண்ணீர் குடி உடனே. வெடிப்பது
உடன் அடங்கும். இது புதிய குறுந்தகடின்
அறிவுரை. அது என்ன குறுந்தகடு?.
வேகமா? விவேகமா? என்ற ஒரு
புது தகடு. சிந்தித்து பேச சொல்லும்
ஒரு தகடு. கோபம் அதிகமானால்,
உச்ச கட்டம் போகும்போது,
உணர்ச்சிகளே வெளிப்படும்.
அறிவார்ந்த பதில் அறுந்து போகும்.
ஆத்திரமாக அதுவே மாறும்.
அதுவா சிறந்தது?
சிந்தித்து பேச இடைவெளி வேண்டாமா?
அதற்காக தண்ணீர் குடி. இது கலாசேத்ரா
கொடுக்கும் குறுந்தகடு.
புண்படுத்த நான் எண்ணவில்லை.
புண்படுத்தியதும் எனக்கு தெரியவில்லை.
ஆனால் வெடிகளை சுமக்கும்
கழுதை நான்.