உலகப் பெண்கள் தினத்தின் நூற்றாண்டு இது. இந்த உலகம் ஆணாதிக்க உலகம் என்பதாக அறியப்படுகிறது. வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகள், ஏழை நாடுகள், தீவு நாடுகள் என்பதாக எத்தனைப் பிரிவுகளாக உலக நாடுகள் பிரிந்து கிடந்தாலும், அத்தனை நாடுகளிலும் ஆணாதிக்கம் மட்டுமே கோலோச்சுகிறது. மேற்கு உலகம், கிழக்கு உலகம் என்ற வேறுபாடு இல்லாமல் ஆண்களின் ஆதிக்கம் உலகெங்கிலும் பரவிக் கிடப்பதால்தான், பெண்கள் மீதான அடக்குமுறை, பெண்கள் மீதான வன்முறை, பெண்கள் மீதான வன்புணர்ச்சி ஆகியவை உலகின் ஒவ் வொரு நாட்டிலும் நிகழ்ந்து வரும் நடை முறையாக இருக்கின்றது. அதனால் தான் நூறு ஆண்டுகளுக்கு முன்னால், உலகம் முழுவதிலும் உள்ள பெண்களின் உரிமைக்காக, விடுதலைக்காக மார்ச் 8ம் நாளை உலகப் பெண்கள் தினம் என்று அறிவித்திருக்கிறார்கள். இன்னமும் நமது நாட்டில் மட்டுமில்லாமல், உலகம் எங்கி லும் பெண்கள் மீதான வன்முறைக்கு எதி ரான பெண்கள் இயக்கம் என்பதாக தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன.
நமது நாட்டிலோ 50 விழுக்காடு மக்கள் தொகையினரான பெண்களுக்கு, 33 விழுக்காடு இடஒதுக்கீட்டை, நாடாளு மன்றத்திலும், சட்டமன்றத்திலும் சட்டமாக்கு வதற்கு நாம் போராடி வருகின்ற நிலையைப் பார்க்கிறோம். புராதன பொதுவுடைமைச் சமுதாய அமைப்பில், பெண்களும், ஆண்களும் மானூட உயிர்களாக உலாவி வந்தனர். வேட்டையாடுதலைத் தொழிலாக அவர்கள் கொண்டிருந்த காலத்தில், பாலினப் பாகுபாடுகள் மானூடத்திற்குள் எழவில்லை. தங்கள் குழு வேட்டையாடுதலுக்கு செல்வ தற்காக வலுப்படவேண்டும் என்ற அடிப் படையில், அதிகமான குழந்தைகளை பெற்றுக் கொள்வது அன்றைய தேவையாக இருந்தது. நிலவுடைமை உறவுகளை உருவாக்கி, அதற்கான சமுதாய அமைப்பாக நிலவுடைமை சமுதாய அமைப்பை கட்டி எழுப்பிய போது, பாலினப் பாகுபாடுகள் வேர்விடத் தொடங்கின.
தனிச் சொத்துரிமை என்ற சிந்தனைப் போக்கும், செயல்பாடும் காலூன்றிய காலத்தில், தங்கள் சொத்துரிமைக்கு வாரிசு வேண்டும் என்ற தேடலில் மனிதன் தள்ளப்பட்டபோது, தான் அள்ளிச் சேர்த்த சொத்து தனது மரபு வழி வாரிசுக்கு செல்ல வேண்டும் என்று கருதத்தொடங்கினான். அதற்காகவே பாலின உறவுகளைப் பேணத் தொடங்கினான். அதுதான் பெண்களை பாலினப் பாகுபாட்டோடு சிறுமைப்படுத்திப் பார்ப்பதற்கான அளவுகோலை அவனுக்கு கொடுத் தது. குடும்பம் என்ற அலகை அவன் ஏற்படுத் திக் கொண்டபோது, அதற்குள் தலைமை எடுப்பவராக ஆண்மகனே அமர்ந்து கொண்டான். குடும்பம் என்ற அந்த கட்டமைப்பிற்குள் பெண்கள் பண்பாட்டு ரீதியில் ஒடுக்கப்பட்டவராக, ஓரங்கட்டப் பட்டவராக ஆக்கப்பட்டனர். தனது மரபு வழி வாரிசுக்கு தான் அள்ளிச் சேர்த்த சொத்துக்கள் சேர வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு ஆணாதிக்கப் பண்பாடு ஏற்படுத்தப்பட்டு, அதுவே ஒட்டுமொத்த சமூகத்தின் பண்பாடு என்பதாக சித்தரிக்கப் பட்டு, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அமலாக்கப்பட்டு வருகிறது.
இப்படிப்பட்ட ஒரு சமுதாய அமைப் பைத் தான் நாம் இன்று எதிர் கொண்டு வருகிறோம். ஒரு முறை ஐ.நா.சபையின் மனித உரிமை குழுவில் இருந்து, ஆசிய பசிபிக் மனித உரிமை மாநாட்டிற்கு புனே நகருக்கு வந்திருந்த பெண் பிரதிநிதி, ஐ.நா.வின் அமைப்புகளில் கூட அறிக்கைகள் வெளி யிடும் போது ஆண் என்ற குறிப்புதான் வருகிறது என்றும், அதில் ஆண் அல்லது பெண் என்ற சொல்லை சேர்ப்பதில் தாங்கள் வெற்றி யடையவில்லை என்றும் கூறியது நினைவுக்கு வருகிறது. மேற்கத்திய நாடு களில் செல்வாக்கு செலுத்துகின்ற மத நிறுவனங்களில் கூட இன்றும் மதப் போதனை செய்ய பெண்களுக்கு உரிய இடம் கொடுக்கப்படுவதில்லை என்ற நிலைமைதான் நீடிக்கிறது. வளர்ந்து விட்ட முதலாளித்துவப் பண்பாடு கூட, மேற்கத்திய நாடுகளின் மதங்களில் கூட இத்தகைய பெண் அடிமை சிந்தனை மற்றும் செயல்பாடு புரையோடி இருப் பதைக் காணமுடிகிறது.
கீழ்த் திசை நாடுகளில் நிலைமை கேட்கவே வேண்டாம். எத்தனை
சட்டங்களை விழிப்புணர்வின் காரண மாக உருவாக் கினாலும், அதை அமல் படுத்தும் இடத்தில் ஆணாதிக்கம் கொண்ட ஆண்களும், பெண்களும் அமர்ந்திருக்கிறார்கள் என்பதை நாம் காணமுடிகிறது. ஆனாலும் கூட பெண்கள் அமைப்புகள், பெண்களை அதிகாரமேம்படுத்துவதற்கான தொடர் இயக்கங்களை நடத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஒரு காலத்தில் திருமணம் பற்றியும், குடும்பம் என்ற அமைப்பு பற்றியும் குறை சொல்வதற்கோ, விமர்சிப் பதற்கோ அச்சப்படும் சூழல் இருந்தது. ஆனால் இப்போது திருமணம் செய்யாமல் தனித்து வாழும் பெண்கள் பற்றி கூட அக்கறையோடு, உச்சநீதிமன்றம் வரை உரையாடப்படுகிறது. அதுபோலவே குடும்பம் என்ற அமைப்பிற்குள் நடந்து வரும் வன்முறைகளை ஒப்புக்கொண்டு, குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் என்பதாக அரசு ஒரு சட்டத்தை அரங்கேற்றி யுள்ளது. திருமணம் முடிந்து குடும்பம் நடத்துபவர்கள் செயல்படுத்தும் வன்முறை கள் மட்டுமின்றி, திருமணம் செய்யாமல் இணைந்து வாழும் ஆண், பெண் மத்தியில் உள்ள வன்முறைகளையும், குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட வரையறைக்குள் அடக்கலாம் என்ற புரிதலும் கிடைத்துள்ளது. இந்த அளவு மனித உரிமைகளின் விழிப்பு ணர்வு வளர்ந்துள்ளது.
உலகம் எங்கிலும் உழைக்கும் மக்களை அழுத்திக் கொண்டிருக்கும் பொருளாதார சுரண்டல் கூட, குடும்பத்திற்குள் நுழை கின்ற ஏழ்மையை பெண்கள் மட் டுமே அதிகமாக சுமக்கின்ற போக்கு அம் பலப்பட்டுள்ளது. அதாவது கிடைக்கின்ற உணவை, முதலில் ஆணுக்கும், பிறகு குழந்தைகளுக்கும், பிறகுதான் தனக்கும் என்று ஒவ்வொரு தாயாரும் பகிர்ந்து கொள்ளும் நிலைமைதான் நமது நாட்டின் பண்பாடாக இருக்கிறது.
விடுதலை இயக்கங்கள் உழைக்கும் வர்க்கத்தாலும், தேசிய இனங்களாலும், ஒடுக்கப்படும் சமூகங்களாலும் நடத் தப்படும் போது, புதியதொரு சமுதாய அமைப்பை உருவாக்குகின்ற அத்த கைய இயக்கங்களில் பெண்களின் பங் களிப்பு, அதிகார மேம்படுத் தலுக்கு இட்டுச் செல்கிறது. அதிலும் ஆயுதம் ஏந்திய போராட் டங்களை நடத்துகின்ற இயக்கங்களில், பெண்களின் மேம்படுத்தல் தெளிவாக அறுதியிடப்படுகிறது. ஈழத் தமிழர்கள் மத்தியில் சைவ மதம் மேலோங்கிய செல்வாக்கு கொண்ட மதம். அதன் பெண்ணடிமைத்தனம் ஆண்டாண்டு காலமாக படிந்திருக்கக் கூடிய ஒன்று. அத்தகைய மண்ணில் விடுதலை கீதம் பாடப்பட்ட போது, அதிகமாக அந்தப் போர்க்களத்தில் முன்நின்றவர்கள் பெண் புலிகள் தான். அதுவே அவர்களது அதிகார மேம்படுத்தலுக்கு அச்சாரமானது. ஆப்ரிக்கா விலும் விடுதலைப் போராட்ட இயக்கங் களில், துப்பாக்கி தூக்கிய பெண்கள் வரலாறு படைத்துள்ளார்கள்.
80ன் பத்தாண்டுகளின் கடைசியில் யாழ்ப்பாணத்தில் பெண் புலிகளின் போர்க் களப் பங்களிப்புகள் குறிப்பிடத்தக்கவை. இலங்கை ராணுவத்தின் மீதான தாக்குதல் களை பலமுறை வெற்றிகரமாக நடத்தியவர் கள் இந்த பெண் புலிகள். அதில் யாழ்ப்பாண டெலிகாம் ராணுவ முகாம், மயிலிய தாணி தாக்குதல், புலிப்படை தளபதி லெப்.கர்னல் ராதா தலைமையிலான காங்கேசந்துறை முகாம்கள் மீதான தாக்குதல் குரும்பச்சிட்டி, நெல்லியாடி முகாம்கள் மீதான தாக்குதல் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. பெண் புலிகள் பல்வேறு பதுங்கு குழிகளையும், சோதனைச் சாவடிகளையும் பாதுகாத்து வந்தனர். பெண் புலிப்படையின் கொரில்லாப் போராளிகள், தமிழினத்தின் விடுதலைக்காக தங்கள் உயிரை தியாகம் செய்த செயல்பாடுகள், பல்வேறு பெண்களைப் பேராளிகளாக மாற்றியது. 20 ஆண்டு பெண் புலிக் கொரில்லாக்களின் வரலாறு என்பதாக அது தொகுக்கப்பட்டது. 1985ன் தொடக்கத் திலிருந்து பெண் புலிப் படை தனது அரசியல் கட்டமைப்பை யாழ். குடாநாடு மட்டுமின்றி, வடக்கு மாகாணங்கள், மற்றும் கிழக்கு மாகாணங்கள் அனைத்திலும் செயல்பட்டு வந்தது. பிரபல பெண்கள் அமைப்புகளுடனும், தொழிற்சங்கங்க ளுடனும், தொழில் பயிற்சி மையங்க ளுடனும், சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு சங்கங்களுடனும், கல்வி நிறுவனங்க ளுடனும், அவர்களது ஒருங்கிணைந்த செயல்பாடு பல சாதனைகளைக் காட்டியது. கரும்புலிப் படைகளாக, பெண் புலிகள் ஈடுபட்ட போர்க்கள நிகழ்வுகள் வரலாற்றுப் பதிவுகளாகின. உண்மையான பெண்களின் அதிகார மேம்படுத்தல் என்பது ஆயுதம் தாங்கிய பெண்கள், விடுதலைப் போரில் தங்களை அறுதியிட்டுக் கொள்ளும் போது, நிரூபிக்கப்படுகிறது. உலக மகளிர் தினத்தை முன்னிட்டு அயர்லாந்து தலைநகரான டப்ளினில், பீட்டி ஆர்னஸ்ட் தயாரித்த தமிழீழ விடுதலைப்புலிகளின் பெண் புலிப் போராளிகள் வாழ்க்கை மற்றும் கொள்கை என்ற ஆவணப்படம் நேற்று திரையிடப் பட்டது. ஆதிக்கத்தை எதிர்த்த அனைத்து சமூகங்களின் விடுதலையும் அதன் உயர்ந்த கட்டப் போராட்டங்களில் மட்டுமே பதிவு செய்யப்படுகிறது. அதே முறையில் பெண் கள் தின நூற்றாண்டில் போராளிப் பெண்கள் வாழ்க்கை மற்றும் அனுபவம், உலகம் முழுவதும் உள்ள பெண்களுக்கு அதிகார மேம்படுத்தலுக்கான வழிகாட்டலாக அமை யும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
Monday, March 8, 2010
Subscribe to:
Posts (Atom)