சிறப்புக் கட்டுரை: தேர்தலைத் தீர்மானிப்பது எது? பணமா, சின்னமா, அரசியலா?
டி.எஸ்.எஸ். மணி
தினகரனின் வெற்றி பல்வேறு செய்திகளைக் சொல்லிக்கொண்டு வருகிறது. ஆர்.கே.நகர் தேர்தல் முடிவுகள், டி.டி.வி.தினகரன்தான் இனி உண்மையான அதிமுக என்று நிரூபணமாக்கி இருக்கிறது. அதாவது வி.கே.சசிகலா அணிதான் உண்மையான அதிமுக என்ற கருத்தை, ஆர்.கே.நகர் வாக்காளர்கள், தமிழ்நாட்டு மக்கள் சார்பாகத் தேர்தல் ஆணையத்துக்குப் புரியும் மொழியில் கூறியுள்ளார்கள். அது மட்டுமல்ல, அங்கீகரிக்கப்பட்ட தேசியக் கட்சியான பாஜகவும், அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சியான திமுகவும் கட்டுத்தொகையை இழந்துள்ளன. தேர்தல் ஆணையத்தால் வெறும் சுயேச்சை வேட்பாளர் என்ற மரியாதையை மட்டுமே பெற்ற தினகரன் சாதாரணமாக 40,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
இது எப்படி ‘பணம்’ மட்டுமே தேர்தலைத் தீர்மானிக்கும் என்ற கருத்தைக் கொடுக்கும்? இதில் என்ன அரசியல் செய்தியைப் படிக்கப் போகிறோம்?
தமிழ்நாட்டை ஆளும் ஒரு கட்சியை இடைத்தேர்தலில் தோற்கடிக்க முடியும் என்பதில் அரசியல் இல்லையா? அகில இந்திய அளவில் ஆளும் ஒரு கட்சி, ‘நோட்டோ’வை விடக் குறைவாக வாக்குகள் வாங்கி, கட்டுத் தொகையை இழந்துள்ளது அரசியல் இல்லையா? தமிழ்நாட்டில் மக்கள் மன்றத்திலும், சட்ட மன்றத்திலும் எதிர்க்கட்சியாக இருக்கும் திமுக தோற்பது மட்டுமின்றி, கட்டுத் தொகையையும் இழந்துள்ளது. இதுவும், அரசியலாகத் தெரியவில்லையா?
பணம் என்பது ஒன்றுக்கு மேற்பட்ட கட்சிகள் பக்கத்திலிருந்து விளையாடியது என்பது உண்மைதான். ஆனால், அது எப்போதும் தீர்மானிக்கும் பங்கை வகிக்குமா? உதாரணமாக திமுகவின் ஒரு வாக்காளர், பணம் பெற்றதற்காக மாற்றிப் போடுவாரா? அதிமுகவின் ஒரு உறுப்பினர் பணம் பெற்றதற்காக மாற்றிப் போடுவாரா? அப்படி வாய்ப்பே இல்லை.
பணம் தருவது புதுப் பழக்கமா?
ஒவ்வொரு கட்சியும் தங்களது கட்சியின் உறுதியான வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கும் பழக்கத்தை வைத்திருக்கிறார்கள். அதற்கு அவர்களும் சரி, வாக்காளர்களும் சரி, ஒரு நேர்மையற்ற ‘விளக்கத்தை’
வைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒருநாள் வேலைக்குச் செல்லாமல் வாக்களிக்கச் செல்வதால், தங்களது பணிக்கூலியை இழப்பதாகவும் அதை நிரப்பவே பணம் வாங்கிக்கொள்வதாகவும் ஒரு வித்தியாசமான விளக்கத்தைக் கூறி வருகிறார்கள். இது ஜனநாயகத் தேர்தல் முறையைக் கேள்விக்குள்ளாக்குகிறது. ஆகவே, நாம் ஏற்க முடியாதுதான். ஆனால், எல்லோரும் அதை ஒரு பழக்கமாக ஆக்கிவிட்டார்கள்.
இந்தப் பழக்கம், நான் சிறு வயதில் 1960 காலத்தில் நேரில் பார்த்த நிகழ்ச்சியை நினைவுக்குக் கொண்டு வருகிறது. ‘காங்கிரஸ் கட்சிக்காரர்களால் எங்கள் தெருவில் உள்ள வாக்குச் சாவடியில், உள்ளாட்சித் தேர்தலில்கூட, அதாவது நகராட்சிக்கு நடந்த தேர்தலில், ஒரு வீட்டில் சாப்பாடு போட்டு, வாக்காளர்களை அனுப்புவதை, திருநெல்வேலியில் சந்திப்பு பகுதியில் ஸ்ரீபுரம் தெருவில் பார்த்தவன் நான். அது மட்டுமல்ல... காங்கிரஸ் கட்சி மாட்டு சின்னத்தில் ஓட்டுப் போடச் சொல்லி ஒரு ரூபாயும், இரண்டு ரூபாயும் கொடுத்ததைத்தான் கம்யூனிஸ்டுகள் பாடலாகப் பாடினார்கள். ‘ஒரு ரூபாய் நோட்டும் தாரேன், உப்புமா, காப்பி தாரேன். மாட்டுச் சின்னம் பார்த்து நீ ஓட்டைப் போடு’ என்ற பாடல் அது.
இத்தகைய செயலை அறுபது ஆண்டுகளாகப் பழக்கமாக்கி விட்டார்கள் என்பதால் நாம் நியாயப்படுத்த முடியாது. ஆனால், அத்தகைய பணம் மட்டுமே தேர்தலைத் தீர்மானிப்பதில்லை என்ற உண்மையைச் சொல்லியே ஆக வேண்டும்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஆளுகின்ற ஆட்சியாளர்கள் கையில் உள்ள கட்சி, அதாவது தேர்தல் ஆணையத்தால் அதிமுக என்ற அங்கீகாரத்தைப் பெற்ற ஒரு கட்சி, ஒவ்வொரு வாக்காளர்களுக்கும் ஆறாயிரம் ரூபாய் பணம் கொடுத்ததாக, அனைவரும் அடித்துச் சொல்கிறார்கள். அப்படியானால் அந்தப் பணம் வெற்றியை தீர்மானிக்கவில்லையே? அந்தப் பணம் எல்லா வாக்காளர்களுக்கும் போய்ச் சேரவில்லை என்பதால் பலருக்கும் ‘கோபம்’ என்ற செய்தி ஒன்று நமக்கு கிடைத்துள்ளது. அது வேறு விஷயம்.
தேர்தல் நாளுக்கு முந்தைய நாள் தினகரன் அணி, ஒரு இருபது ரூபாய் நோட்டைக் கொடுத்தோ அல்லது அந்த வீட்டில் இருக்கும் ஒரு இருபது ரூபாய் நோட்டின் சீரியல் எண்ணைக் குறித்துக் கொண்டு, தேர்தலுக்குப் பிறகு அந்த எண்ணைக் காட்டிப் பணம் வாங்கிக்கொள்ளுங்கள் என்று வாக்குறுதி கொடுத்தோ வேலை செய்ததால்தான் வாக்குகள் சேர்ந்தன என்று சொல்வார் உண்டு. அதற்கும் தினகரன் பதில் கூறினார். “நான் கடன் சொல்லி ஓட்டு வாங்கினேன் என்கிறீர்களா?” என்கிறார். அப்படியே இருந்தாலும் “கடன் சொல்லி வாக்கு வாங்கினேன் என்றால், என் மீது அந்த மக்களுக்கு நம்பிக்கை இருக்கிறது என்று நீங்களே சொல்வதாகத்தானே அர்த்தம்” என்று ஊடகவியலாளர்களைப் பார்த்துக் கேட்டார்.
அத்தகைய விவாதம் ஒருபுறம் இருக்கட்டும். நாம் மக்களது வாக்குகளில் உள்ள அரசியல் உணர்வுகளைக் காண வேண்டும்.
சின்னம் தீர்மானிக்குமா?
தேர்தலைப் பொறுத்தவரையில் சின்னம்தான் தீர்மானிக்கும் என்ற நிலை பழைய காலத்தில் இருந்தது உண்மையே. ஆனால், உயர் தொழில்நுட்பம் வளர்ந்த இக்காலத்தில், ஒரு சின்னம் என்பது புதிதாக அறிமுகம் ஆனாலும், அது மக்களை விரைவில் போய்ச் சேர்ந்துவிடும். அதுவே தினகரன் விஷயத்திலும் நடந்துள்ளது. தொப்பி சின்னம் எப்படி உடனடியாகப் பிரபலம் ஆனதோ... அது போலவே, குக்கர் சின்னம் இருபத்து நாலு மணி நேரத்தில் மக்கள் மத்தியில் பிரபலமாக அறிமுகம் ஆகிவிட்டது. ஆகவே, வேட்பாளர் மூலம் சின்னம் அறிமுகமாகிவிடும். சின்னம் மூலம் வேட்பாளர் அறிமுகமாக வேண்டியது இல்லை. இதுவே புதிய வரலாறு. இதையும் இந்தத் தேர்தல் நிரூபித்துள்ளது.
எப்படி இந்த ஆண்டின் தொடக்கமே, ஜல்லிக்கட்டு எழுச்சி மூலம் பல புதிய வரலாறுகளை, படிப்பினைகளை ஏற்படுத்தியுள்ளதோ... பழைய மதிப்பீடுகள் பலவற்றைக் காலாவதியாக்கியுள்ளதோ... அதுபோல இந்தத் தேர்தலும் பல மதிப்பீடுகளைப் புதிதாக நிரூபித்துள்ளது. மக்களுடைய ஒட்டுமொத்த அரசியல் உணர்வுகளை, உதாரணமாக தமிழ்நாட்டு நலன்களுக்கு எதிராக இருக்கும் நடுவன் அரசின் செயல்களை எதிர்க்கும் மனோபாவம் என்ற அரசியல் உணர்வை, இந்தத் தேர்தல் பதிவு செய்துள்ளது. மத்திய அரசின் செயல்பாடுகள், தினகரனையும் அவரது குடும்பத்தாரையும் குறிவைத்துத் தாக்கியதைத் தமிழக மக்கள் கவனித்துக்கொண்டிருப்பது மட்டுமின்றி, கடுமையாக எதிர்க்கவும் செய்கிறார்கள் என்பதே அந்த அரசியல் உணர்வு. அதுவே தினகரனுக்கும், வி.கே.எஸ். அணிக்கும் ஆதரவாக எழுந்துள்ளது. அதற்கு, ‘ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்’ என்பதே ஆர்.கே.நகர் தேர்தல் முடிவு.
ஊடகங்களின் தப்புக் கணக்கு
ஊடகங்கள் வழக்கம் போலவே, தவறாக வெற்றி பற்றி கணித்தார்கள். சிலர் கணக்குப் போட்டு தாங்கள் ஆய்வு செய்ததாகக் கூறி, வழக்கம் போலவே, தங்களது சொந்த விருப்பத்துக்கு ஒரு கணிப்பு வடிவம் கொடுத்தனர். அதுவும் இப்போது பொய்யானது. சிலர் திமுக வாக்குகளை தினகரனுக்குப் போடச் சொல்லி ஒரு தந்திரத்தை திமுக தலைமை செய்துள்ளதா எனக் கேள்விகளையும் எழுப்பினர். அது திமுக தலைமையை இழிவுபடுத்தும் கூற்று.
திமுக தலைமை, வேட்பாளர் தேர்வில் சிறிது கவனமாக இருந்திருக்கலாம் என அவர்கள் கூறியிருந்தால் அதில் நியாயம் இருக்கிறது. ஏன் என்றால், சென்ற முறை ஜெயலலிதா நிற்கும்போது, திமுக வேட்பாளராக இருந்த சிம்லா முத்துச் சோழன் 39,000 வாக்குகள் வித்தியாசத்திலேயே தோற்றார். அவரே நிறுத்தப்பட்ட்டிருந்தால், திமுக நிலைமை இப்போது போல ஆகியிருக்க முடியாது. அது அவர்கள் கட்சிக்குள் விவாதிக்க வேண்டிய விஷயம்.
குறிப்பிட்ட வேட்பாளரின் ஆதரவாக இருக்கும் அவர்களது சமூக வாக்குகள் இப்போது கணிசமாக தினகரனுக்கு விழுந்துள்ளது என்ற பேச்சு எழுந்திருக்காது. அதேபோல, நடிகர் விஷால் நிற்க முனையும்போது, மொழியைக் காரணமாக்கி மதுசூதனின் வாக்குகளை அவர் பறிப்பார் என்று ஆளும்கட்சி பயந்ததாகச் சொல்லப்பட்டது. அதுவும் இப்போது பொய்யானது. நமது தமிழ்நாட்டு மக்கள் வேட்பாளரைப் பார்ப்பார்களே தவிர, மொழிப் பின்னணியைப் பார்த்து வாக்குகளைப் போடுவது இல்லை. அதுவும் இங்கே நிரூபணமாகியுள்ளது.
இவ்வாறாக அரசியல், சமூகம், வேட்பாளர், நம்பிக்கை எனப் பல வகைக் காரணங்கள் இந்த வெற்றிக்குப் பின்னே இருக்கின்றன என்பதைப் பார்த்துத்தான் ஆக வேண்டும். நமது முன் முடிவுகளைப் புறம் தள்ளிவிட்டுத் திறந்த மனத்தோடு சிந்தித்தால், ஒவ்வொரு தேர்தல் முடிவிலிருந்தும் நாம் பாடம் கற்றுக்கொள்ளலாம்.
கட்டுரையாளர் குறிப்பு
டி.எஸ்.எஸ்.மணி
தமிழின் முக்கியமான பத்திரிகையாளர்களில் ஒருவர். இந்திய அளவில் கவனிக்கத்தக்க பல முக்கியமான கட்டுரைகளை எழுதியுள்ளார். தொலைக்காட்சி விவாதங்களில் தொடர்ச்சியாகக் கலந்துகொண்டு அரசியல் நிகழ்வுகளை விவாதித்து வருபவர்.
தொடர்புக்கு: manitss.mani@gmail.com