இரண்டு நாட்கள் முன்பு தலைநகர் சென்னையில், சிறுபான்மை சுயநிதி பள்ளிகளைச் சேர்ந்த தமிழ்வழிக் கல்வி கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்கள் ஒரு பட்டினிப் போராட்டம் நடத்தினார்கள். ஏற்கனவே இதுபோல ஒரு ஆர்ப்பாட் டப் பேரணியையும் சமீபத்தில் நடத்தி யிருந்தார்கள். தமிழ் நாடெங்கும் பல்வேறு மாவட்டங்களிலிருந்து இந்த ஆசிரியர்கள் சென்னை வந்திருந்தார்கள். அவர்களில் பெரும்பாலும் பெண் ஆசிரியைகளாக இருந்தார்கள். கிறித்துவ மதத்தின் பள்ளிகளில் பணியாற்றும் கன்னியாஸ்திரிகளும் அந்தப் போராட் டத்தில் கலந்து கொள்ள, தமிழ்நாட்டின் பல்வேறு முனைகளிலிருந்தும் வந்திருந் தார்கள். கத்தோலிக்க குருமார்களும், புரொட்டஸ்டன்ட் சாமியார்களும் பள்ளி களில் ஆசிரியர்களாக இருப்பவர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்குகொள்ள ஆர்வத்தோடு வந்திருந்தார்கள். இது தவிர கிறித்துவ திருச்சபைகளின் ஆயர்கள் சிலரும், இந்தப் போராட்டத்தை வாழ்த்திப் பேச வந்திருந்தார்கள். அதேபோல முஸ்லிம் அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்களும், முன்னோடிகளும் இதில் கலந்து கொண்டார்கள். கிறித் துவ, முஸ்லிம் உடைகளுடன் போராட்டத் தில் கலந்து கொண்டவர்கள், இது சிறுபான்மை சமூகங்களின் பிரதிநிதித்துவம் தான் என்பதை பறைசாற்றினார்கள். அவர்களுடைய பிரச்சனை தொடர்ந்து குரல் கொடுத்தும், தங்களது நியாயமான கோரிக்கை அரசால் கவனிக்கப்பட வில் லையே என்பதாக இருந்தது.
சுயநிதிப் பள்ளிகள் என்று அழைக் கப்படும் கல்விச் சாலைகள் மத்தியில் இந்த சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் மெலிந்து இருப்பதை காணமுடிந்தது. ஒரு காலத்தில் பள்ளிக்கூடங்களை நடத்தும் தனியார்கள் தர்மகர்த்தா உணர்வோடு, கல்விச் சேவை செய்து வந்தனர். அப்போது தமிழகத்தின் கிராமப்புறங்களில் இருக்கின்ற ஏதாவது ஒரு கல்விச் சாலைக்கு, அந்த வட்டாரம் முழுவதும் மாணவர்களை அனுப்பி வைப்பார்கள். கல்விக் கட்டணமும் பெரிய அளவுக்கு சுமையாக இருக்காது. கல்விச் சேவை செய்கின்ற வள்ளலாக அன்று சிலர் நாட்டுப்புற மாவட்டங்களில் கருதப்பட்டார்கள். அந்தக் காலம் மலையேறி விட்டது. அதன் பிறகு வணி கம் செய்வதற்காக இந்த நாட்டிற்குள் நுழைந்த ஆங்கிலேயர்கள் தங்கள் மதப் பரப்புரையை செய்து வந்த போது, தேவாலயங்களை ஏற்படுத்தினார்கள். அப்போது அவர்கள் செய்த முக்கியமான காரியமே, கல்வி நிறுவனங்களை உருவாக்கி, சாதி, மத பேதமின்றி கல்விக் கொடுக்க முயற்சித்தது தான். உருவாக்கப்பட்ட கல்வி நிலையங்களை ஒட்டியே, தேவாலயங்கள் கூட எழுந்தன.
தாங்கள் நிறுவிய கல்வி நிலையங்களில் பொறுப்புதாரர்களாக மட்டும் இல்லாமல், ஆசிரியர்களாகவும், ஆசிரியைகளாகவும், திருச்சபையின் குருமாரும், குமரிகளும் பணியாற்றத் தொடங்கினார்கள். அப்படி பணியாற்றியவர்கள் சிந்தனைகளில் வருமானம் என்பது முதன்மையாக இடம் பெறவில்லை. தாங்கள் நம்பு கின்ற ஆண்டவனுக்காக தங்களை அர்ப்பணிக்க வந்த அந்தத் துறவிகள், கல்விக்காகவும் தங்களை அர்ப்பணிக்கத் தொடங்கினார்கள். அதனால் அத்தகைய கிறித்துவப் பள்ளிகளில் கல்வி மற்றும் கற்பிக்கும் முறை ஆகியவை சிறந்து விளங்கின. தமிழ் நாடெங்கும் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஏதாவதொரு கிறித்துவப் பள்ளி அதிகமான மாணவர்களை அறிவார்ந்த ரீதியில் தயார் செய்து அளித் தது என்பதை யாரும் மறக்க முடியாது. அதிகாரத்திலும், அரசியலிலும் பெரும் பொறுப்புக்கு சென்றுள்ள பல பெரிய மனிதர்களும், தாங்கள் சிறு வயதில் பள்ளிக்கூடப் படிப்பை, கிறித் துவப்பள்ளியில் படித்தோம் என்று பெருமைபடக் கூறுவார்கள். அந்த அளவிற்கு பெயர் பெற்ற வரலாற்றைக் கொண்ட கிறித்துவ பள்ளிகளில் இருந்து தான், இப்போது இந்த சிறுபான்மை பள்ளிகளின் ஆசிரியர்கள் கூட்டமைப்பு நடத்திய போராட்டத்திற்கு வந்திருந்தார்கள்.
ஏன் இந்த மாற்றம் நிகழ்ந்தது? எப்போதிலிருந்து இந்த பள்ளிகள் பாதிப்புக்குள்ளாகின? முதன்மைப் பள்ளிகளாக இருந்த இது போன்ற பள்ளிகள் இன்று சிறுபான்மைப் பள்ளிகள் என்ற பெயருடன் போராட் டத்திற்கு தள்ளப்பட்டது எத னால்?
இந்தியாவின் கல்விக் கொள்கையில் சுயநிதி கல்விச் சாலைகள் என்ற ஒரு கருத்துக் கோப்பு, ராஜிவ் காந்தியால் கொண்டுவரப்பட்ட, புதிய கல்விக் கொள்கையையொட்டி அமுலுக்கு வந்தது. அதற்கு முன்பே சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் என உருவாகி வந்த கிறித்துவ, முஸ்லிம், மொழிச் சிறுபான்மை பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் தனி சிறப்புச் சலுகைகள் மத்திய அரசாங் கத்தால் வழங்கப்பட்டன. அதன் பிறகு சிறுபான்மை சுயநிதி பள்ளிகள் என்ற பெயரில், கல்விச் சேவையை நடை முறைப்படுத்த பல பள்ளிகள் தோன்றின. இதில் நேரடியாக திருச்சபையின் அல்லது முஸ்லிம் கல்வி அமைப்புகளின் மேற்பார்வையில் இருக்கும் பள்ளிகள் தவிர, தனியார் நிர்வாகத்தால் நடத்தப்படும் பள்ளிக்கூடங்களும் அடக்கம். அதிலும் தமிழ் வழிக் கல்வியை போதிக்கின்ற பள்ளிக்கூடங்கள் உருவாகின. தமிழ் வழிக் கல்வியை நடத்தும் பள்ளிக்கூட நிர்வாகங்கள், மாணவர்களிடமிருந்து அதற்கான கல்விக் கட்டணத்தை வசூலிக் கக் கூடாது என்ற அணுகு முறையையும், தமிழக அரசின் கொள்கையாக மேற்கண்ட கல்வி நிறுவனங்கள் பின்பற்றி வரு கின்றன.
1991ம் ஆண்டு தமிழக அரசாங் கம் இதுபோன்ற சிறுபான்மை சுய நிதி தமிழ் வழி பள்ளிகளுக்கு ஒரு உத்தரவை அமூல்படுத்தத் தொடங்கியது. அதாவது இத்தகைய சுயநிதிப் பள்ளிகள் ஆசிரியர்களின் சம்பளத்தை, அர
சாங்க உதவியிலிருந்து பெற முடியாது என்பது தான் அந்த உத்தரவு. அதாவது 1991ம் ஆண்டிற்குப் பிறகு தொடங் கிய சிறுபான்மை சுயநிதி தமிழ்வழி பள்ளிகளுக்கு மட்டுமே, மேற்கண்ட உத்தரவு பொருந்தும். அதாவது 91ம் ஆண்டிற்கு முன்னால் தொடங்கிய பள்ளி களுக்குப் பொருந்தாது. அப்போதி லிருந்தே கிடைக்காத இந்த அரசு உதவியை கோரி, இந்த ஆசிரியர்கள் போராடுகிறார்கள்.
1999ம் ஆண்டு தமிழக அரசு ஒரு சட்டத்திருத்தத்தைக் கொண்டு வந் தது. அது சட்டப்பிரிவு 14ஏ. அரசு உதவித்தொகையை இத்தகைய புதிய பள்ளிகளுக்கும், புதிய வகுப்புகளுக்கும், புதிய கல்வி முறைகளுக்கும் மறுப்பது தான் இந்தச் சட்டத்திருத்தம். 199192ல் தொடங்கிய பள்ளிகளுக்கு என்பதாக அந்தச் சட்டத்திருத்தம் எழுதப் பட்டுள்ளது. இது தனியார் பள்ளி என்ற பெயரில் உருவாக்கப்பட்ட
சட்டத்திருத்தம். அதன் விளக்கத்தில் தனியார் பள்ளி என்பது சிறுபான்மை பள்ளியையும் சேர்த்த அடக்கம் என்பதாக எழுதப்பட்டுள்ளது. மேற்கண்ட
சட்டத்திருத்தத்தை ரத்துச் செய்து, தமிழக அரசின் நிதி உதவி தங்களுக்கு கிடைக்கச் செய்ய வேண்டும் என்பது தான் அந்த ஆசிரியர்களின் கோரிக்கை.
ஆனால் இத்தகைய தமிழ்வழிக் கல்வியில் கட்டணத் தொல்லையும் இன்றி, இலவசமாக படிக்க வரும் எளிய குடும்பத்தின் இளைய தலைமுறை, படித்து முடித்ததும் வெளியே வந்து எத்தகைய பணிக்குச் செல்ல முடியும் என்பதே நமது கேள்வி. நாடெங்கிலும் ஆங்கில பயிற்று மொழியில் உள்ள கல்வி முறை ஆதிக்கம் செலுத்தும் போது, தமிழ் வழிக் கல்வி என்பது குறைவானது என்ற மனப்பான்மை நிலவி வருகிறது. அத்தகைய சூழலில் தமிழ் வழிக் கல்வி பயின்ற மாணவ, மாணவிகளுக்கு எதிர்காலம் என்ன?
போராடும் தமிழ் வழிக் கல்வி ஆசிரியர்கள், தங்கள் மாணவர்களுக்காக நியாயமான கோரிக்கையை இணைத் துக் கொண்டால் தான், நாடும், அரசாங் கமும் அவர்களை கவனிக்க முடியும். தமிழ் வழிக் கல்வி பயின்று வெளியே வரும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் பணியில் முன்னுரிமை வழங்கப்படும் என்ற உத்தரவை தமிழக அரசு பிறப்பிக்கும் போது மட்டுமே, அவர்களது எதிர்காலம் ஒளிமயமாகும்.
சமீபத்தில் தமிழகத்தின் உயர்கல்வி அமைச்சர், பொறியியல் கல்லூரிகளில் தமிழ் வழிக் கல்வி கற்றுக் கொடுக்கப்படும் என்று அறிவித்த முற்போக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அத் தகைய தாய் மொழிக் கல்வி கற்றுக் கொடுக்கப்படும் பொறியியல் கல்லூரி களுக்கு, செல்கின்ற மாணவர்கள் பள்ளிக் கல்வியிலேயே தாய்மொழிக் கல்வியை கற்றிருந்தால் தான், அது பயனுள்ளதாக அமையும். ஆகவே தமிழ் வழிக் கல்வி பயிற்றுவிக்கப்படும் பள்ளிக்கூடங்களை வலுப்படுத்துவது தமிழக அரசின் கொள்கையாக வளர வேண்டும். அதுமட்டுமின்றி தமிழ் வழிக் கல்வி படித்தவர்களுக்கு, தமிழக அரசு பணிகளில் முன்னுரிமை வழங்கப்படும் என்ற அறிவிப்பை, தமிழ்நாடு அரசு செய்யும் போது, பள்ளிகளிலும், உயர்கல்வியிலும், தொழிற்கல்வியிலும் தமிழ் வழிக் கல்வி என்பது அதிகமான மாணவர் சேர்க்கையை எதிர்கொள்ளும். அதுவே தமிழ்நாட்டின் எதிர்காலத்தை வளமையுள்ளதாகவும், படைப்பாற்றல் கொண்டதாகவும் உருவாக்கும். அத்த கைய அறிவிப்பு தமிழக அரசிடமிருந்து வெளிவந்தால், தமிழ்த் தாய் மகிழ்ச்சி அடைவார் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
Tuesday, March 2, 2010
Subscribe to:
Posts (Atom)