சென்னையில் நடந்த கூட்டத்தில், வர இருக்கும் தேர்தலில் பண பலத்தையும் அடியாள் பலத்தையும் எதிர்த்து போராடி, சுதந்திரமான, நேர்மையான தேர்தலை நடத்துவதற்க்கான, ஒரு ஆலோசனைக்கூட்டம் அது என்று வானளாவ பறந்து, பறந்து அறிவித்து கொண்டது. ஐந்தாவது தூண் என்று அதன் அமைப்பாளர்கள் தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டனர். இன்றைய தலைமை தேர்தல் அதிகாரியான குரேஷி, முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்த தமிழ்நாட்டை சேர்ந்த கோபால்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர். அது தேர்தல் ஆணையமும், பொதுமக்களும் கலந்து பேசும் கூட்டம் என்று கூறப்பட்டது. தேர்தல் ஆணையர் அரசியல் கட்சிகளின் தலைவர்களைத்தான் வழக்கமாக சந்திப்பார் . அதுவும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளைத்தான் அத்தகைய கூட்டங்களிலும் அனுமதிப்பார்கள். ஆனால் இந்த முறை, பொதுமக்கள் பங்கு கொண்டனர். கேள்வி கேட்க அனுமதிக்கப்பட்டனர். கேள்விகளுக்கு தலைமை தேர்தல் ஆணையர் குரேஷி பதில் கூறினார். இது ஒரு முன்னேற்றம்தான். எப்படியோ மக்களுக்கு தேர்தல் மீது உள்ள அவநம்பிக்கையை போக்கிவிடுவார்களோ?
அரசியல் சட்டத்தின் 324 வது பிரிவின் ஒன்றாவது விதியின் படி, இந்தியாவின் அனைத்து தேர்தல் பொறுப்புகளும், இந்த தேர்தல் ஆணையத்தின் கைகளில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நேர்மையான, சுதந்திரமான தேர்தல்கள் நடத்தப்படவேண்டும் என்று உச்சநீதிமன்றம் வேறு கூறிவிட்டது. இத்தகைய நம்பிக்கைகளை அடிப்படையாக வைத்து, அந்த மக்கள் சந்திப்பு கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தார்கள். அதனால் அவர்கள் தலைமை தேர்தல் ஆணையரிடம் கொடுத்த மனுவில், தேர்தலில் பணபலம் அதிகரித்துவருவதை கவலையுடன் சுட்டி காட்டியிருந்தனர். அதாவது வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுக்கப்படுகிறது என்பது அவர்களது குற்றச்சாட்டு. அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் இந்தியாவில் நிலவும் தேர்தல் முறையில் அடிப்படை நம்பிக்கை உள்ளவர்களாகவும், அத்தகைய நம்பிக்கையை வாக்குகளுக்கு பணம் கொடுக்கும் பழக்கம் கெடுத்துவிடுகிறது என்றும் கருதினார்கள். அது நாடாளுமன்ற தேர்தல் முறையையே பாழ்படுத்திவிடும் என்று அவர்கள் அனைவரும் நம்பினார்கள். அதனால் தமிழ்நாட்டில் நடந்த தேர்தலில், திருமங்கலம் தேர்தல் முறை என்று பிரபலமாக அழைக்கப்படும் அணுகுமுறை பற்றியே எல்லோரும் பேசினார்கள். அல்லது எல்லோரும் அதை நினைத்தே கொந்தளித்தார்கள் என்றே சொல்லலாம்.
கூட்டத்தில் கலந்து கொண்ட ஒருவர் தங்கள் அமைப்பின் மூலம், இதுவரை நூறு கிராமங்களுக்கு சென்று, வாக்குகளுக்கு பணம் வாங்க கூடாது என்று பரப்புரை செய்து வந்துள்ளதாகவும், அதற்கு கிராம மக்கள் மத்தியில் நல்ல ஆதரவு இருப்பதாகவும் எழுந்து நின்று கூறினார். உடனே ஏதோ எல்லாமே மாறிவிட்டது போலவும், அல்லது மாறிவிடும் என்பது போலவும் அனைவரும் கை தட்டி அந்த கருத்துக்களை வரவேற்றனர். திருமங்கலம் மாதிரி என்று அவர்கள் அனைவரும் வருத்தப்படும் முன்மாதிரி என்பது, ஒவ்வொரு வாக்காளருக்கும் ஐந்தாயிரம் ரூபாய் வரை கொடுக்கப்பட்டது என்பதுதான். அதுபற்றி ஒரு ஊடகவியலாளர் வித்தியாசமான செய்தியை நம்மிடம் கூறினார். அதாவது இன்றைய தமிழக சூழலில், கடுமையான வேலையின்மையையும், வறுமையையும், எதிர்கொண்டு வரும் கிராமப்புற மக்களுக்கு, தேர்தல் நேரத்திலாவது, அதாவது தேர்தலை சாக்காக வைத்தாவது, தாங்கள் பட்டுள்ள கடன்களை திருப்புவதற்கு ஒரு சிறிய அளவிலாவது அந்த வாக்குகளுக்கு கொடுக்கப்படும் பணம் உதவுமானால், அதை பெரிய பலனாக அவர்கள் கருதுகிறார்கள். அப்படித்தான் திருமங்கலம் தொகுதி மக்களும் கருதினார்கள். அவர்களுக்கு அந்த ஒரு வாக்குக்கு ஐந்தாயிரம் ரூபாய் என்பது, ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் குறைந்த பட்சம் ஐந்து வாக்குகளுக்கு இருபத்து ஐந்தாயிரம் ரூபாயை சம்பாதித்து கொடுத்து விட்டது. அது தங்கள் குடும்ப கடனை அடைக்க பயன்பட்டதே என்று அவர்கள் நினைத்ததாக அந்த ஊடக இயலாளர் கூறினார்.
அப்படியானால் தூய்மையான தேர்தலை விரும்பும் இந்த அறிவு ஜீவிகளுக்கும், வறிய நிலையில் உள்ள கிராமப்புற மக்களுக்கும் இந்த தேர்தலை சுத்தப்படுத்தி நடத்துவது என்பதில் அடிபப்டையிலேயே வேறுபாடு இருக்கிறதா? வறிய மக்களுக்கு தங்கள் அடுத்த வேளை சோறு என்பதுதான் முக்கிய பிரச்சனை. அதை புரிந்து கொண்ட, ஊழல் அரசியல்வாதிகள், அவர்களை காசு கொடுத்து வாக்கு வாங்கும் கருவிகளாக பார்க்கிறார்கள். ஆக்கிவிடுகிறார்கள். அதுதான் பச்சையாக திருமங்கலத்தில் நடந்தது. ஆள்வோர்களின் தந்திரமாக இந்த தேர்தல்கள் நடப்பதுபோல தெரிகின்றன. அதாவது எளிய மக்களை ஏமாற்றி வறுமையில் தள்ளிவிட்டு அவர்களை தங்கள் வறுமையை தவிர வேறு எதையும் சிந்திக்க முடியாத நிலைமையில் தள்ளிவிட்டு, பிறகு தேர்தல் என்று சொன்னால் அதில் அரசு கொடுக்கும் இலவசங்களும், தேர்தல் நேரத்தில் கொடுக்கும் லஞ்சங்களும் மட்டுமே தீர்மானிக்கும் பங்கை ஆற்றும் என்பதே இந்த அரசியல்வாதிகளின் திட்டமா? என்பதே கேள்வி. இந்த இடத்தில்தான் தேர்தலை ஒரு அரசியல் பிரதிநித்துவத்திற்க்கான அணுகுமுறையாக காணும் அரசியல் பார்வையுள்ள அறிவுஜீவிகளுக்கும், அரசியலற்ற நிலையில் உள்ள எளிய மக்களுக்கும் உள்ள வேறுபாடாக நிற்கிறது.
அன்று நடந்த கூட்டத்தில், அறிவுஜீவிகள் எனப்படுவோரும் ஏறுக்கு, மாறாக பேசினார்கள். ஒரு முன்னாள் ஒய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். தான் முக்கியமான ஆலோசனைகளை தேர்தல் ஆணையத்திடம் வைப்பதாக கூறி, ஒரு நகைச்சுவையான ஆலோசனையை முன்வைத்தார். கோடிக்கணக்கில் பணம் செலவு செய்யும் வேட்பாளர்களை தடுக்க முடிவதில்லை என்பதால், ஆணையம் கடைசி நேரத்தில் தேர்தலை ரத்து செய்து விட்டு தள்ளி வைத்து விடவேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட கோடீஸ்வர வேட்பாளர் செலவு செய்தது எல்லாம் வீணாகி போகும் என்றும், பிறகு அடுத்த முறையும் அப்படியே திடீரென தேர்தல் நாளுக்கு முந்திய நாள் தேர்தலை தள்ளி வைத்து விடவேண்டும் என்றும், அதன்பிறகு அப்படிப்பட்ட கோடீஸ்வர வேட்பாளர்கள் கண்டபடி செலவு செய்ய அஞ்சுவார்கள் என்றும் ஒரு சிரிக்க தக்க ஆலோசனையை கூறினார். அதை யாரும் கவனமாக எடுத்துகொள்ளாததால் வாய் விட்டு சிரிக்கவில்லை. இப்படி பிரபல அறிவுஜீவிகளே விரக்தியின் விளிம்புக்கு சென்று, நகைச்சுவை ஆலோசனைகளை வழங்கினால் பாவப்பட்ட மக்கள் என்னதான் செய்வார்கள்?
இப்போது இந்திய தேர்தல் ஆணையம், தன்னுடன் உதவிகள் செய்வதற்காக, புதிய பிரிவுகளை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் செலவுகளை கண்காணிக்கும் துறையின் அதிகாரிகளையும், வாக்காளர்களுக்கு கல்வி கொடுக்கும் மற்றும் வாக்காளர்களை தேர்தலில் பங்கேற்க வைக்கும் பிரிவையும் ஏற்ப்படுத்தியுள்ளோம் என்று ஒரு புதிய அறிவிப்பை அங்கே தலைமை தேர்தல் அதிகாரி குரேஷி வெளியிட்டார். அதேபோல, " காசு கொடுத்து தங்களுக்கு ஆதரவான செய்திகளை தயார் செய்து வெளியிடும்" செயலை கண்டுபிடித்த்டிருப்பதாகவும் அதற்கு எதிரான நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் அறிவித்தார். இத்தகைய அறிவிப்பு தேர்தல் ஆணையத்தை ஏமாற்றி ஊடகங்கள் செய்த துரோகத்திற்கு எதிரொலியாக வந்துள்ளன. அதாவது தேர்தல் ஆணையம் வேட்ப்பாளர்கள் இந்த அளவுதான் விளம்பரத்திற்கு செலவு செய்ய வேண்டும் என்று ஒரு விதியை விதித்துள்ளது. அதை மீறி ஊடகங்கள் வேட்பாளர்களிடம் காசு வாங்கிக்கொண்டு விளம்பரம் என்ற பெயரில் இல்லாமல், செய்தி போல அந்த குறிப்பிட்ட வேட்பாளருக்கு ஆதரவாக செய்திகளை வெளியிடுவது என்ற தந்திரத்தை கையாண்டனர். அதில் சில பிரபல ஏடுகள் சிக்கிவிட்டன. அதை எதிர்த்து தங்கள் நடவடிக்கையை குரேஷி கூறினார்.
அடுத்து பயன்படுத்தப்படும் மின்னணு இயந்திரத்தின் மீது எழுந்துள்ள சந்தேகங்களை போக்க, வாக்காளர்களுக்கு வாக்கு அளித்ததற்கான ரசீது அளிக்கும் முறையை அரசியல் சக்திகள் கோரி இருந்தன. அதை ஏற்றுக்கொண்டு மின்னணு இயந்திரத்தில் இருந்து அப்படிப்பட்ட ரசீது எடுத்து கொடுக்க தேர்தல் ஆணையம் ஆயத்தமாக இருப்பதாக தெரிவித்தார். 49 [ஒ] என்ற பிரிவை மின்னணு இயந்திரத்திலே பொறிக்க வேண்டுகோள் வைக்கப்பட்டது. அந்த பிரிவு, நிற்கும் வேட்பாளர் யாரையும் பிடிக்கவில்லை என்ற ஒரு கருத்தை ஒரு வாக்காளர் பதிவு செய்ய உதவும். அதுவே தனது வாக்கை இன்னொருவர் கள்ளத்தனமாக போட்டு விடாமல் இருக்க உதவும். அதை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்வதாகவும், அரசுக்கு ஆலோசனையை நல்கி இருப்பதாகவும் கூறினார். அங்கே எழுப்பப்பட்ட பல கேள்விகளும், கொடுக்கப்பட்ட ஆலோசனைகளும், மனுக்களும், ஒரு புதிய தன்மையையே ஏற்படுத்தியிருப்பதாகவும் அதற்கு " சென்னை மனு" என்று பெயரிட்டு அழைக்கலாம் என்றும் அப்போது குரேஷி கூறினார்.
ஊழல் பிடித்த அரசு ஊழியர்கள் ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படுவார்கள் என்றும், ஆகவே அவர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்படகூடாது என்றும் பொதுவான குரல் அங்கே ஒலித்தது. அதற்கு குரேஷி ஊழல் பிடித்த அதிகாரிகள்கூட, தேர்தல் ஆணையத்தின் நேர்மையான தலைமையின் கீழ் செயல்பட வரும்போது நேர்மையாக சிறப்பாக செயல்படுகிறார்கள் என்றார். அதனால் கட்டளை தலைமை யார் என்பதுதான் முக்கியம் என்று கூறி சமாதானம் செய்தார். தேர்தல் பணிகளில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், தேர்தல் பணியில் ஈடுபடாத அரசு ஊழியர்கள் என்று பிரிவினை பார்த்து ஆட்சி நடத்தும் அரசியல்வாதிகளின் பாங்கு, பாவம் குரேஷிக்கு தெரிய நியாயமில்லை. சம்பள உயர்வு, அகவிலைபடி உயர்வு, மத்திய அரசு ஊழியர்களுக்கு நிகரான ஊதியம் இப்படி பல விசயங்களிலும் இரண்டு பிரிவினருக்கும் வேறுபாடு கண்டுபிடித்து, தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு மட்டுமே சலுகை வழங்க அரசியல்வாதிகளால் முடியுமென்பதும் குரேஷிக்கு தெரிய நியாயமில்லை.
பதட்டமான பகுதிகள் என்ற பழைய முறையை மாற்றி, பத்து புதிய நிபந்தனைகளுடன் வாக்கு சாவடிகளை கண்காணிப்பது செய்யப்படும் என்றார் குரேஷி. அதில் வாக்காளர் படங்கள் ஒட்டப்பட்ட அடையாள அட்டைகள் கொடுக்கப்படாத பகுதிகள், ஒவ்வொரு முறையும் அளவுக்கு அதிகமாக வாக்களிப்பு நடந்த சாவடிகள், மிகவும் குறைவாக வாக்கெடுப்பு நடந்த சாவடிகள், ஒரே வேட்பாளர் ஒவ்வொரு முறையும் அதிக வாக்குகள் வாங்கும் சாவடிகள், சாதி அல்லது மத ரீதியாக பதட்டம் உள்ள பகுதிகள், பணம் கொடுப்பதில் பெயர் பெற்ற வாக்கு சாவடிகள் இப்படியாக பத்து நிபந்தனைகள் அடிப்படையில் பிரித்து கண்காணிப்பு செய்யப்படும் என்றார்.
வருகிற ஜனவரி-25 அன்று இந்திய தேர்தல் ஆணைய பிறந்த நாள் வருவதால், அன்றைய நாளில், நாடு தழுவிய அளவில் பல லட்சம் இளம் வாக்காளர்களுக்கு, அதாவது 2011 ஆம் ஆண்டு ஜனவரியில் பதினெட்டு வயது முடியும் இளைஞர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும் என்று அறிவித்தார். எப்படியோ தலைமை தேர்தல் ஆணையரின் சென்னை வருகை என்பது, ஒரு திருப்புமுனையாக இருக்கும் என்ற எதிர்பார்ப்புடன் கலந்துகொண்ட மக்களும் கலைந்து சென்றனர். அதுபோல அவர்களது கனவுகளும் கலைந்து செல்லாமல் இருந்தால் சரிதான்.
Sunday, October 10, 2010
Subscribe to:
Posts (Atom)