.
பயங்கரவாதம் என்றால் என்ன என்று இந்த உலகம் இப்போது புரிந்துகொள்ளுமா? பயங்கரவாதத்திற்கு எத்தனை முகம்? விடுதலை போர்களை பயங்கரவாதம் என்று முத்திரை குத்தினார்களே? தேசிய இன விடுதலை போர்கள் மக்கள் சார்பு போர்கள்தானே? மக்கள் சார்பு போர்கள் எப்படி பயங்கரவாதமாக ஆகமுடியும்? இந்த கும்பல்கள் பகத்சிங் பயங்கரவாதி என்று இந்திய சுதந்திர போர் நேரத்தில் கூறியவர்கள்தானே? அடுத்து நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், மக்கள்சார்பாக படை அமைத்து, ஆங்கிலேயரை எதிர்த்து போராடியதை, ஆங்கிலேயருடன் சேர்ந்துகொண்டு பயங்கரவாதி என்றும், வன்முறையாளர் என்றும் கூறியவரின் வாரிசுகள்தானே? ஈராக் நாட்டை ஆண்டுவந்த சதாம் ஹுசைனை கவிழ்ப்பதற்காக பலமுறை படையெடுத்தும், அருகில் உள்ள நாடுகள் மூலம் சதி செய்தும் வெற்றிபெறாத நிலையில், அமெரிக்க அரசு தனது நேட்டோ அணி நாடுகளை சேர்த்துக்கொண்டு, சதாமை பயங்கரவாதத்திற்கு துணை செல்பவர் என்றும், பயங்கரவாத ஆயுதங்களான பேரழிவு ஆயுதங்களை வைத்திருக்கிறார் என்றும் பொய் கூறி அதற்காக ஐ.நா.வை சாட்சிக்கு இழுத்து அதன்மூலமும் நிரூபணம் ஆகவில்லை என்று தெரிந்தபின்னால், நேரடியாக படை எடுத்து ஈராக்கை ஆக்கிரமித்தது. இவ்வாறு பயங்கரவாதம் என்ற பெயர், உலகை ஆளும் பெரும் வல்லரசுகளால் யார் மீதெல்லாம் முத்திரையாக குத்தப்படுகிறதோ, அவர்கள் நியாயமான போராட்டவாதிகளாக இருப்பார்கள் என்பதற்கு பல வரலாற்று முன்னுதாரணங்கள் இருக்கின்றன.
ஆனால் மேற்கண்ட நிகழ்வுகள் ஒவ்வொன்றிலும் ஈடுபட்ட ஆங்கிலேய, மற்றும் அமெரிக்க சக்திகளும் அவர்களுக்கு துணை செல்பவர்களும்தான் உண்மையான பயங்கரவாதிகளாக இருக்கிறார்கள் என்பது கண்கூடு.
இந்திய சுதந்திர போர் உதாரணம் போல, ஈராக் மீது நடத்தப்பட்ட போர் போல, அனைத்து இடங்களிலும் ஆதிக்க சக்திகளுக்கும், விடுதலைக்கு போரிடும் சக்திகளுக்கும், நடக்கும் கருத்து போரில் விடுதலை சக்திகள் தங்களது வெற்றிகரமான தாக்குதல்களை நடத்தும்போதெல்லாம், ஆதிக்க சக்திகளுக்கு விடுதலை வீரர்களை பயங்கரவாதிகள் என்று அழைப்பதை தவிர வேறு வழி இல்லை. அமைப்பாக்கப்பட்ட வன்முறை கருவியை கையில் வைத்திருக்கும் இந்த ஆதிக்க சக்திகள் , உரிமை கோரும் ஒவ்வொரு இனத்தின் மீதும் வன்முறையை, கட்டவிழ்த்துவிடுகின்றன. அத்தகைய வன்முறைகளில் பல நிராயுதபாணியான அப்பாவி மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் அல்லது பலியாகிறார்கள். அவ்வாறு வன்முறைகளை கட்டவிழ்த்து விடும் சக்திகளாக ராணுவமோ, காவல்துறையோ இருக்கிறது. அவ்வாறு நடக்கும் போதெல்லாம் அததகைய வன்முறை செய்த சக்திகளை, யாரும் பயங்கரவாதிகள் என்று அழைக்க மாட்டேன் என்கிறார்கள். அத்தகைய வன்முறைகளை, அதாவது நிராயுதபாணியான அப்பாவி மக்கள் மீது நடத்தப்படும் வன்முறைகளை பயங்கரவாதம் என்று அழைக்காமல் வேறு எப்படி அழைப்பது?
அதுவே விடுதலை அமைப்புகளால் நடத்தப்படும் தாக்குதல்களில் நடைபெறுமானால், அதை உடனே பயங்கரவாத நடவடிக்கை என்றும், அதில் ஈடுபட்டவர்களை பயங்கரவாதிகள் என்றும் அழைக்கிறார்கள். அதுவே பகத்சிங் நடத்திய நாடாளுமன்ற தாக்குதலை வைத்து அவரை ஆங்கிலேயர் முத்திரை குத்துவதற்கு ஏதுவாக போய்விட்டது. அதுவே நேதாஜி விசயத்திலும் அவர் கட்டிய ஆயுதம் தாங்கிய கட்டுப்பாடுள்ள படைவரிசையை கண்டு அஞ்சிய ஆங்கிலேயர்களும், காங்கிரஸ்காரர்களும் அவரை பயங்கரவாத தலைவர் என்பதாகவே அழைத்து, நேதாஜி போஸ் இந்தியாவிற்குள் எப்போது நுழைந்தாலும் காங்கிரஸ் அரசு அவரை பிடித்து ஆங்கிலேயர் வசம் ஒப்படைப்பது என்று கூறினார்கள் அதே பகத்சிங்கும், சுபாஷ்போசும், இன்று இந்திய மக்களால் மாபெரும் தேசிய சுதந்திர போராட்ட வீரர்களாக மதிக்கப்படவில்லையா?
இதே நிலைதான் அருகாமை நாடான இலங்கையில், சிறுபான்மை தமிழ் தேசிய இனம் தனது விடுதலைக்காக போராடும்போது, அனைத்து தமிழ் தேச விடுதலை இயக்கங்களையும், பயங்கரவாதிகள் என்பதுபோல சித்தரித்தது இலங்கை அரசு. இன்று இந்திய மற்றும் இலங்கை அரசுடன் நட்பு கொண்டு அலையும் சில அமைப்புகளை, அந்த நேரம் அதாவது அந்த அமைப்புகள் ஆயுதம் தாங்கிய புரட்சியை முன்னெடுத்த நேரத்தில் என்ன கூறின? அதாவது ந.பா.என்ற பத்மனாபா தலைமையில் இயங்கிய ஈ.பி.ஆர்.எல்.எப்.என்ற ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி என்ற அமைப்பு, தமிழீழத்திற்க்காக போராடுவது மட்டுமின்றி, தெற்க்கே இருந்த சிங்கள புரட்சியாளர்களைக்கொண்ட, ஜனதா சங்க மேவா என்ற ரகசிய அமைப்புடன் சதி செய்து இலங்கை அரசை கவிழ்க்க ஆயுதம் தாங்கிய புரட்சியை நடத்த திட்டமிட்டார்கள் என்று சதித்திட்ட வழக்கை அந்த தலைமையின் மீது போடவில்லையா? அதற்கு இந்தியாவில் அப்போது இருந்த நக்சல்பாரி அமைப்பான விநோத்மிஸ்ரா தலைமையிலான சி.பி.ஐ.[எம்.எல்.] உடன் சேர்ந்து சதி செய்ததாக வழக்கு போட்டதே? அதை எந்தவரிசையில் சேர்ப்பது? அதேபோல உமா மகேஸ்வரன் என்ற முகுந்தன் தலைமயிலான பிளாட் அமைப்புடன் சேர்ந்து ஜனதா சங்க மேவா அமைப்பினரும், இந்தியாவின் வினோத் மிஸ்ரா அமைப்பை சேர்ந்தவர்களும் சதி செய்து இலங்கை அரசை கவிழ்க்க ஏற்பாடு செய்ததாக இன்னொரு வழக்கை, இலங்கையில் பயங்கரவாத தடுப்பு சட்டம் அமுலில் இருக்கும்போது போடவில்லையா? இப்போது அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் அங்கேயும், இங்கேயும் தேர்தல் அரசியலுக்கு வந்துவிட்டதால் பயங்கரவாத பட்டியலில் இல்லாமல் போகவில்லையா?
அப்படியானால் ஆள்வோரை ஆதரித்தாலோ, ஆள்வோரின் தேர்தல் பாதையை ஆதரித்தாலோ ஒருவர் அல்லது ஒரு அமைப்பு பயங்கரவாதி என்ற முத்திரையிலிருந்து மாறி, ஜனநாயகவாதிகளாக ஆகிவிடுகிறார்கள். தொடங்கிய நிலையிலேயே கொள்கையில் உறுதியாக இருந்துவிட்டால் அவர்களை பயங்கரவாதிகள் என்று அழைப்பதை அரசும், ஆதிக்கவாதிகளும், அவர்கள் கைகளில் இருக்கும் ஊடகங்களும் சொல்லிக்கொண்டே இருக்கும். இதுதானே இந்த வரலாறுகள் காட்டும் உண்மை?
அத்தகைய வரலாற்றில்தான், பிரபாகரன் தலைமையிலான தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு பயங்கரவாதிகள் என்ற முத்திரை பெற்றுள்ளது. முதலில் உலகம் முழுவதும் பெரிய பயங்கரவாத நாடாக இருக்கும், பயங்கரவாதத்தை கண்டம் விட்டு கண்டத்திற்கு ஏற்றுமதி செய்யும் அமெரிக்காதான் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பை பயங்கரவாத அமைப்பு என்று முத்திரை குத்தியது. பிறகு அதை ஐரோப்பிய நாடுகளை பின்பற்ற சொன்னது. அவர்களும் அவ்வாறே அறிவித்தார்கள். அதன்பிறகு இந்தியா போன்ற அமெரிக்காவின் நேசநாடுகளை அவ்வாறு அழைக்கசொன்னது. இவர்களும் அதையே பின்பற்றினார்கள். அதற்கு அவர்கள் சொல்லிய காரணம், கரும்புலிகள் கண்டு அவர்களுக்கு ஏற்ப்பட்ட பயம் என்பதுதான்.
அதையேதான் ஈராக்கின் சதாம் ஹுசைன் விசயத்திலும் சொன்னார்கள். ஏன் என்றால் கருப்பு செப்டம்பர் என்ற பெயரில் முதலில் அரபு நாடுகளில் இருந்த பாலஸ்தீன புரட்சியாளர்கள், மனித வெடிகுண்டுகளாக மாறி எதிரியின் முக்கிய தளங்களை குறிவைத்து தாக்கினார்கள். அவர்களது தாக்குதல் அத்தோடு நிற்காமல், உலகின் முக்கிய விளையாட்டு போட்டிகளிலும், முக்கிய விமான தளங்களிலும், எதிரொலித்தது. அத்தகைய தாக்குதல்களால் மட்டுமே பாலஸ்தீன விடுதலை போராளிகளின் தியாக உணர்வையும், வீரத்தையும் உலகம் காண முடிந்தது. அதுவேதான் விடுதலை புலிகள் விசயத்திலும் உணமையாக இருந்தது. ஆகவே பாலஸ்தீன புரட்சியாளர்களின் மனிதவெடிகுண்டு தாக்குதல்களை, ஈராக்கின் சதாம் ஆதரித்தார் என்றும், அதற்கு ஏற்ப்பாடு செய்தார் என்றும் அவர் மீது அமெரிக்க போன்ற நாடுகள் குற்றம் சுமத்தி அவரை பயங்கரவாத பட்டியலில் சேர்க்க முனைந்தனர்.
அதேநிலைதான் பிரபாகரனுக்கும் ஈழ விடுதலை போராட்டத்தில் நடந்துள்ளது. நேத்தாஜியை பின்பற்றுகிறேன் என்று பகிரங்கமாக அறிவித்தவர் பிரபாகரன், அகவே அவருக்கு அவ்வாறு முத்திரை விழுந்தததில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லைதான். ஆனால் இன்று உணமையான பயங்கரவாதிகள் யார் என்பது தெரிய வருகிறது.
சமீபத்தில் பூனா என்ற இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்திலிருக்கும் நகரத்தில் நடந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு பொறுப்பானவர்கள் கைதானார்கள். அவர்கள் இலங்கையின் தலைநகரான கொழும்புவில் பயிற்சி எடுத்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. அதை இலங்கை அரசு மறுத்தாலும், இந்த அம்பலம் இந்திய அரசை இப்போது ஆட்டிவருகிறது. கொழும்பில் உள்ள பாகிஸ்தான் தூதரகம், வன்னி போர் நடக்கும் காலத்தில் ஒரு புதிய தூதரை நியமித்தது. அவர் யார் என்றால், பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. என்ற உளவு நிறுவனத்தின் முன்னாள் தலைவர் என்பது தெரிய வந்தது. அவர் மூலம் பயிற்ச்சிகள் சிலருக்கு நடத்தப்பட்டதும் அப்போதே பேசப்பட்டது. இப்போதுதான் அது நிரூபணமாக ஆகியுள்ளது. அவர்கள் அப்போது மட்டக்கிளப்பில் இந்திய வெளிவிவகார உளவுத்துறையான " ரா ".அமைப்பின் ஆட்களை கொலைசெய்ததாகவும், அதற்கு பதில்கொடுக்கவே, இலங்கை-பாக் உறவை உடைக்க இந்திய உளவு அமைப்பு லாகூரில் கிரிக்கட் ஆடவந்த இலங்கை வீரர்களை குண்டுவீசி தாக்க ஏற்பாடு செய்தது என்றும் அப்போது வந்த செய்திகளுக்கு இன்றுவரை தக்க மறுப்பு கிடைக்கவில்லை. இப்படி அவர்கள் தங்கள் தேவைக்கு பயங்கரவாதத்தில் ஈடுபட்டிருப்பது இப்போது தெரிய வருகிறது. இன்று அம்பலமாகியுள்ள பாகிஸ்தானின் லஷ்கர் -ஈ-தொய்பாவின் கொழும்பு தள நடவடிக்கையை , முன்னாள் இந்திய அரசின் மத்திய அமைச்சக செயலாளரான பி.ராமன் பகிரங்கமாக அமபலப்படுத்துகிறார்.
ஏற்கனவே ராஜபக்சே அரசு வெள்ளை கொடியுடன் வந்த அதாவது சரணடைந்த விடுதலை புலிகளை சுட்டுகொன்ற பயங்கரவாதிகள் என்பது, உலக நீதிமன்ற விசாரணையில் இருக்கிறது. இப்போது தெற்காசியாவில் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதாக இந்திய, பாகிஸ்தான், மற்றும் அமெரிக்க அரசுகளால் முத்திரை குத்தப்பட்ட லஷ்கர்-ஈ-தொய்பா, ராஜபக்சே அரசுடன் சேர்ந்து தென்தமிழ்நாட்டிலும், அதேசமயம் இந்தியா எங்கணும் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருவது தெள்ளந்தெளிவாக தெரியவந்துள்ளது. விடுதலைக்காக போராடுபவர்கள் நடத்தும் தாக்குதல்களையும், ஆதிக்கவாதிகள் மக்களை கொல்வதற்காக நடத்தும் தாக்குதல்களையும் பிரித்துப்பார்த்து யார் பயங்கரவாதிகள் என்று அடையாளம் காண ஊடகங்களாவது உதவுமா என்பதே நமது கேள்வி. இப்போது சிங்கள பயங்கரவாதம், பாகிஸ்தான் பயங்கரவாதத்துடன் சேர்ந்து பல்லிளிப்பதை பார்க்கமுடிகிறதா?
Thursday, September 16, 2010
Subscribe to:
Posts (Atom)