பகிரங்கமாக ஒரு இன வாத போரை நடத்தி, ஒரு லட்சம் தமிழர்களை படுகொலை செய்து, ரத்தக் கறையுடன் இந்தியாவின் தலைநகருக்கு வந்துவிட்டு திரும்பி சென்றுள்ள மகிந்த ராஜபக்சே என்ற இலங்கை அதிபரை ஆதரிப்பதில் இந்திய அரசுடன், அமெரிக்க அரசு போட்டிக்கு வருகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது போட்டி அல்ல மாறாக கூட்டு நடவடிக்கை என்பதாக தெரிகிறது. 4வது வன்னிபோர் நடக்கும் தருணத்தில், இந்திய அரசு, பாகிஸ்தான் அரசும், சீன அரசும் இலங்கை அரசின் இன அழிப்பு போரை ஆதரித்து செயல்பட்டார்கள் என்பது உலகறிந்த செய்தி. ஆனால் அதே நேரத்தில் அமெரிக்க அரசு, ஈழத் தமிழர்கள் மீது பச்சாதாபம் கொண்டு, தமிழர்களின் உரிமைகளையும், சுயாட்சியையும் ஆதரிப்பதாக செய்திகள் வெளிவந்தன. அது மட்டும் இன்றி இலங்கை அரசும், சிங்கள ராணுவமும் நடத்தி வந்த மனித உரிமை மீறல்களையும், அமெரிக்க அரசு எதிர்த்து வந்ததாக செய்திகள் வெளியாயின. குறிப்பாக அமெரிக்க வெளி விவகாரத்துறை அமைச்சரான ஹிலாரி கிளின்டன், இலங்கையில் நடந்த போர் குற்றங்களின் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கூறிவந்தார். அதை கேட்டு உலக தமிழர்கள் பேருவகை கொண்டனர். அமெரிக்க அரசு தமிழர்களுக்கு சாதகமாக இருப்பதாக ஒரு மாயத் தோற்றம் உருவானது.
ஆனால் இலங்கை செய்த போர் குற்றங்கள் பற்றி, ஐ.நா. சபை ஒரு குழுவை அமைத்து ஆய்வு செய்வதற்கு தொடங்கிய போது, இலங்கை அதிபர் தானாகவே, ஒரு குழுவை அமைத்து ஆய்வு செய்ய போகிறோம் என அறிவித்தார். இந்த அறிவிப்பு, ஐ.நா. சபையின் ஆய்வை தடுப்பதற்கான முயற்சி என்று உலகம் கூறியது.
ஆனால் அமெரிக்க அரசின் ஹிலாரி கிளின்டன், இலங்கை அரசின் ஆய்வுக் குழு ஏற்பாட்டை திடீரென ஆதரித்துவிட்டார். இத்தகைய அமெரிக்க அரசின் திடீர் பல்டி, அமெரிக்கவை எதிர் பார்த்திருந்த உலக தமிழர்கள் மத்தியில் அதிர்ச்சியை கொடுத்தது. ஏனென்றால் பாரக் ஒபாமா அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டு வந்த உடன், தமிழர்கள் பெரும் எண்ணிக்கையில் தங்களது கோரிக்கைகளை, ஒபாமாவிற்கு அனுப்பி அதில் மகிழ்ச்சி அடைந்தனர். அமெரிக்கா பேசி வந்த மனித உரிமைகள் பற்றிய சொற்களை உலக தமிழர்கள் நம்பி வந்தனர். இப்போது அமெரிக்கவின் தெற்காசிய விவகாரங்களுக்கான உதவி அமைச்சர் ராபர்ட் ஒ பிளேக் ஒரு அதிர்ச்சி தகவலை கூறியுள்ளர். அதாவது இலங்கை பற்றிய வெளி விவகார கொள்கைகளில், அமெரிக்கவும், இந்தியாவும் ஒரே கருத்தில் இருக்கின்றன என்று கூறியுள்ளார்.
இலங்கை பிரச்சனையில் இந்தியாவும், அமெரிக்காவும் ஒன்றாக பணியாற்றி கொண்டிருக்கிறோம் என்பதாகவும் பிளேக் கூறியுள்ளார். வடக்கு மாகாணத்தில், போருக்குப் பிறகு உள் நாட்டு அகதிகளாக இடம் பெயர்ந்துள்ள தமிழர்களை, மீள் குடியேற்றம் செய்வதற்கான பணிகளில், அமெரிக்கா இந்தியாவுடன் இணைந்து செயல்படுவதாக அவர் கூறியுள்ளார். இந்தியாவிற்கும், அமெரிக்கவிற்கும் இலங்கையில் நிலவும் சூழ்நிலை பற்றி ஒரே கருத்து இருப்பதாகவும், எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் ஒரே கருத்து இருப்பதாகவும் பிளேக் கூறியுள்ளார். இப்போதாவது ஈழத் தமிழர்கள் பிரச்சனையில் இந்திய அரசு, துரோகத் தனமான நிலையை எடுத்ததாகவும், அமெரிக்க அரசு சாதகமான நிலையை எடுத்ததாகவும் நம்பி கொண்டிருந்த உலகத் தமிழர்களின் மதிப்பீட்டில் மண் விழுந்துள்ளது.
மேற்கண்ட அறிவிப்பு பற்றி கேள்விப்படும் தமிழர்கள் மத்தியில், இன்னொரு விதமான கருத்து நிலவுகிறது. அதாவது வன்னிப்போர் நடக்கும் நேரத்திலும், போருக்கு பிறகு அதிபர் தேர்தல் நேரத்திலும், அமெரிக்கா தமிழர்களுக்கு ஆதரவாக இருந்ததாகவும், இந்திய அரசு தான் அத்தகைய நேரங்களில் நேரிடையாக இன அழிப்புக்கு துணை நின்றதாகவும் அழுத்தமான ஒரு கருத்தை உலகத் தமிழர்கள் கொண்டிருந்தார்கள். அதில் இந்திய அரசின் நேரடி பங்களிப்பு பற்றி, ஆதாரபூர்வமான செய்திகளை உலகெங்கும் பரிமாறிக் கொண்டனர். இலங்கை அரசுக்கு உதவி செய்வதில், இந்திய அரசுக்கும், சீன அரசுக்கும் போட்டி இருந்தது என்பதாக சரியாகவே கணித்தார்கள். இந்தியாவும், சீனாவும் இலங்கை தீவில் குறிப்பாக தமிழர் பகுதிகளில், வணிக நோக்குடன் பங்கு போட துடிக்கிறர்கள் என்றும் சரியாகவே கணித்தார்கள். ஆனால் அத்தகைய வணிகப் போட்டியில், அமெரிக்கா என்ன செய்து கொண்டிருந்தது என்பது பற்றி ஒரு மதிப்பீடு இல்லாமல் இருந்தது.
ஆனால் இப்போது அத்தகைய மதிப்பீட்டை எட்டுவதற்கான உதவியாக, அமெரிக்க அமைச்சர் பிளேக்கின் கூற்றை நாம் எடுத்துக்கொள்ளலாம். அதாவது இலங்கையில் நிலவும் சூழ்நிலையில், கடந்த பல ஆண்டுகளாக நாங்கள் மிகவும் நெருக்கமாக இணைந்து பணியாற்றி கொண்டிருக்கிறோம் என்று அமெரிக்கவையும், இந்தியாவையும் பற்றி பிளேக் கூறியுள்ளார். அங்கே இருக்கும் நிலைமை எப்படி உருவானது என்பதில் எங்களுக்குள் ஒத்த கருத்து உள்ளது என்று பிளேக் கூறுகிறார்.
அதிலும் இடம்பெயர்ந்துள்ள உள் நாட்டு அகதிகளான, தமிழர்களுக்கு உணவு கொடுப்பதில் முக்கியமான நன்கொடையாளராக அமெரிக்காதான் இருந்தது என்று கூறுகிறார். வடக்கு மாகாணத்தில் புதிய வணிக வளர்ச்சியை உற்சாகப்படுத்துவோம் என்றும் கூறியுள்ளார். முப்பது ஆண்டுகளாக புலிகளின் ஆட்சியில் பாதிக்கப்பட்ட அந்த பகுதிகளில் வளர்ச்சி ஏற்படுத்த வேண்டும் என்று பிளேக் கூறியுள்ளார். அத்தகைய பணிகளில் இந்தியாவுடன் நெருக்கமாக இணைந்து செயல்படுவோம் என்றும் அறிவித்துள்ளார். அதேபோல சமீபத்தில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பெரிஸ் உடன் அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ஹிலாரி கிளின்டன் வாஷிங்டனில் சந்தித்து பேசியது, மிகவும் வெற்றிகரமாக அமைந்தது என்றும் பிளேக் கூறியுள்ளார்.
இலங்கை அதிபர் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை நாடாளுமன்றத்தில் பெற்றிருப்பதையும், பெரும் வெற்றியாக அமெரிக்கா கருதுகின்றது. இவை அனைத்துமே உலக தமிழர்களாது மதிப்பீடுகளுக்கு, எதிரானவையாக இருக்கின்றன. அதே சமயம் ஈழத் தமிழர்களின் உரிமை போருக்கு எதிராகவும், ஈழத் தமிழர்கள் மீதான இன அழிப்பு நடவடிக்கைகளில் முதன்மையாகவும் பங்களிப்பு செலுத்தியதாக நம்பப்படும் இந்திய அரசுக்கு, முழுமையான பின்னணி பலமாக அமெரிக்க அரசு செயல்பட்டது என்பதும், இனியும் செயல்படும் என்பதும் இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
அதே சமயம் இலங்கையிலும், தெற்காசியாவிலும், சீனாவின் செல்வாக்கிற்கு எதிராக இந்தியாவின் ஆதிக்கத்தை வலுப்படுத்தி, அதன் முலம் தனது வல்லரசு ஆதிக்கச் சுரண்டலை செயல்படுத்துவது தான் அமெரிக்கவின் நோக்கம் என்பது வெட்டவெளிச்சமாகியுள்ளது. இதை உலகத் தமிழர்கள் உணர வேண்டிய தேவை இப்போது எழுந்துள்ளது.
Wednesday, June 16, 2010
Subscribe to:
Posts (Atom)