தொடங்கியது விளையாட்டு. சாதாரண விளயாட்டா? மாபெரும் விளயாட்டு விழா? பாலிவுட் பாணி என விமர்சித்தது ஒரு ஏடு. முதல்நாள் உலகையே உலுக்கியது. டில்லியின் ஜவஹர்லால் நேரு ஸ்டேடியம் என்பது ஏற்கனவே புகழ் வாய்ந்த இடம். விழா தொடங்கும் போதே பண்பாட்டு நிகழ்வுகள். ஆட்டம், பாட்டங்கள். இரவு ஏழு மணிக்கு தொடங்கிய தொடக்கநாள் விழா, இரவு பதினோரு தாண்டியும் மாறி, மாறி நிகழ்வுகளால் நிரப்பப்பட்டது. வண்ண, வண்ண உடுப்புகளுடன், எல்லா நாட்டு விளயாட்டு வீரர்களும், வீராங்கனைகளும் வரிசையாக கொடி பிடித்து வர, அதை பின்னணியில் வர்ணனை செய்ய, அதை கூடியிருந்த 60000 பேர் ரசிக்க, ஒரே இடத்தில் பறந்து கொண்டிருந்த வாயு பலூன், ஒவ்வொரு நாட்டு பெயர்களையும் வரிசையாக காண்பிக்க, அதுவே பெரும் கரவொலிகளை எழுப்ப, அப்பப்பா....... இதுதான் இந்தியா என வந்தவர்கள் மகிழ்ந்திருப்பார்கள்.
காமன்வெல்த் நாடுகள் என்று சொல்லப்படுபவை, அந்த காலத்தில் ஆங்கிலேயர் ஆண்டுவந்த நாடுகளின் ஐக்கிய முன்னணி என்பதாக பெருமையாக கூறப்பட்டது. இதில் என்ன பெருமை இருக்கிறது? ஆங்கிலேயன் இந்தியா உட்பட பல நாடுகளை ஒரு காலத்தில் ஆண்டுவந்தனர். அது பெருமைப்படக்கூடிய செய்தியா? அல்லது வெட்கப்பட வேண்டிய செய்தியா?அப்படியானால் அதே நாடுகள் அதே ஆங்கிலேய அரசியின் தலைமையில் இணைந்து, அதற்கு காமன்வெல்த் நாடுகள் என்று பெயரிட்டுக்கொண்டு அதன் பெயரில் ஒரு விளையாட்டு போட்டியையும் நடத்தி அதை எப்படி பெருமை என்று கூறிக்கொள்ளமுடியும்?
அதுதான் இங்கே நமது டில்லியில் இப்போது கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அதாவது ஆங்கிலேயரின் ஆட்சிக்கு உட்பட்டு அடிமை நாடுகளாக இருந்த 71 நாடுகள் இப்போது இந்த காமன்வெல்த் நாடுகள் என்று அழைக்கப்படுகின்றன. அதாவது ஆங்கிலேயனிடம் அடிமையாக இருந்ததை இவர்கள் அதாவது இந்த நாட்டின் அரசுகள் பெருமையாக கருதுகிறார்களா? அல்லது இழிவாக கருதுகிறார்களா? என்ற அடிப்படை கேள்வி இதில் புதைந்து இருக்கிறது. ஏன் என்றால் இந்த மாபெரும் விழாவிற்கு யார் துவக்கிவைக்க வருவார்கள் என்ற கேள்வி அதிக சர்ச்சையை ஏற்படுத்தி வந்தது. அதில் இங்கிலாந்தின் ராணி வந்துதான் துவங்கி வைக்கவேண்டும் என்ற கருத்து வந்தது. அதன் பிறகு, இந்தியாவில் விழா நடக்கும்போது, இந்திய குடியரசு தலைவர் தான் துவங்கி வைக்க வேண்டும் என்ற கருத்து சுதந்திர குரல் என்பதாக எழுப்பப்பட்டது. அதன் பிறகு அதில் ஒரு சமரசம் செய்யப்பட்டது.
முதல்நாள் அதாவது அக்டோபர்-மூன்றாம் நாள், இரவு இங்கிலாந்து ராணியின் மகன் சார்லஸ் வந்திருந்தார். அவர் தனது தாயாரின் கடிதத்தை வாசித்தார்., அதன்மூலம் ராணி இந்த விழாவுக்கு வாழ்த்து கூறியிருந்தார். அதன்பிறகு தான் இந்த விளையாட்டு போட்டியை தொடங்கி வைப்பதாக அந்த சார்லஸ் கூறினார். அதை அடுத்து நமது குடியரசு தலைவர் பிரதீபா பாட்டில் பேசினார். அவரது பேச்சின் முடிவில் அவர் விளையாட்டை தொடங்கி வைக்கும் பாணியில், தொடங்குங்கள், தொடங்குங்கள் என்று உரத்த குரலில் கூறினார். ஏன் அப்படி அவர் கூக்குரலிட வேண்டும்?
அதுதான் சுதந்திர குரல்களுக்கும், அடிமைக்குரல்களுக்கும் உள்ள வேறுபாடு. அதாவது காமன்வெல்த் என்ற பெயரில் இன்னமும் இயங்குவதே, ஒரு வகையில் அடிமை உணர்வை ஏற்றுக்கொள்வதுதான் என்பது இவர்களது விவாதத்திற்கே வருவதில்லை. எழுபத்தியோரு நாடுகளும் இந்த வகையை சேர்ந்தவர்கள்தான் என்பது நமக்கு இப்போது புரிகிறது. இந்தியாவின் சுதந்திரம் ஏற்கனவே பிரச்னைக்கு உள்ளானது தான் என்பது பரந்து பட்ட மக்கள் மத்தியில் இருக்கும் கருத்து. அதை நிரூபிக்கும் வகையில் இந்த காமன்வெல்த் நடக்கிறது. அப்படிப்பட்ட காமன்வெல்த் நாடுகளின் விளயாட்டு போட்டிக்கு, யார் தொடங்கி வைத்து உரையாற்றுவது என்பதில் அவர்களால் இங்கிலாந்து நாட்டு ராணியையும், அவரது மகனையும் விட முடியவில்லை. அவர்களை முதலில் பேசவைத்து, அந்த ஏகாதிபத்தியவாதிகளுக்கு முதல் மரியாதை கொடுத்து பிறகுதான் இந்திய நாட்டின் குடியரசு தலைவர் தொடக்க உரை நிகழ்த்தவும், தொடன்கிவைக்கவும் முடிகிறது என்பதே அங்கே நிறைவேற்றப்பட்ட நடைமுறைகள்.
ஒதுக்கப்பட்டதாக கற்பனை செய்தவர்கள் மத்தியில், ஓரங்கட்டப்பட்டதாக வெளியிட்டவர்கள் மத்தியில், மீண்டும் கல்மாடி தோன்றினார். சுரேஷ் கல்மாடி என்ற பெயர் அறிவிப்புடன் பேசினார். தனது முதன்மை பங்கை நிரூபித்தார். அதற்கு பிறகு மொத்த விளையாட்டு குழுவின் தலைவர் மைக் பின்னர் பேசினார். அவர் கல்மாடிக்காக வாதிட்டார். அவதூறு செய்தவர்கள் தோல்வி அடையும் வகையில் இந்த போட்டி வெற்றிகரமாக நடக்கிறது என்றார். நம்மூர் அரசியல்வாதிகள் நினைவுதான் நமக்கு வந்தது.
அதன்பிறகு மீண்டும் ஒவ்வொரு மாநிலங்களின் ஆட்டங்களும், பாட்டுக்களும் அரங்கேற்றப்பட்டன. அதை வரிசையாக வந்து ஊர்வலம் போல செய்து காட்டினர். அதை எழுபத்தொரு நாடுகளின் விளயாட்டு வீரர்களும், வீராங்கனைகளும் மற்றும் வந்திருந்த விருந்தினர்களும், பார்வையாளர்களும் பார்த்து ரசித்தனர். அதாவது நமது நாட்டு மாநிலங்களின் பண்பாடுகளை காட்டி சுற்றுலா கழகத்திற்கு பயனுள்ள வேலையை செய்தனர். இடையில் யோகா கற்றுக்கொடுத்தனர். அதை சம்ஸ்கிருத மொழியில் பாடி காண்பித்தனர். யோகாவின் பல உடற்பயிற்சிகளை இளம் பெண்கள் செய்து காண்பித்தனர். அதையும் வெளிநாட்டினர் மகிழ்ந்து பார்த்தனர். அதுதான் இந்திய மக்களது பண்பாடு என்று அவர்களை இவர்கள் புரிய வைத்தனர். மணிபுரி நடனம் நடந்தது. மணிப்பூர் ஆதிவாசிகள் துயரம் தெரியாமல் மறைக்கப்பட்டது.அதன் பிறகு நமது மாபெரும் இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வந்தார். வழமையான அவரது பாடலை, ராகத்தை, பாடினார். ஜெய் ஹோ என்றார். எல்லோரும் அவருடன் சேர்ந்துகொண்டு ஜெய் ஹோ என்றனர். ஆகா. என்ன அருமையான இசையப்பா? அதற்கேற்ற ஒலி எழுப்பல்.? இப்படியாக முதல்நாள் முடிந்ததா?
இரண்டாம் நாள். அதுதான் விளையாட்டு போட்டிகள் உண்மையில் தொடங்கும் நாள். இந்தியாவின் சந்தியா ராணி தேவி அடம் ஒரு வெண்கல பதக்கம் வென்றார். அடுத்து ஒரு வெள்ளி பதக்கம் இந்தியாவிற்கு கிடைத்தது.. வாழ்க. ஆனால் இவ்வளவு செலவழித்து இந்த போட்டியால் யாருக்கு லாபம்? எழுபத்தொராயிரம் கோடி பணத்தை இதில் போடும் இந்தியாவில், இன்னமும் வறுமையின் எல்லை கோடிற்கு கீழே பல கோடி இந்தியர்கள் இருப்பதாக சொன்னார்களே? எல்லாம் பொய்தானா? விவசாயம் இந்த ஆண்டு பொய்த்து விட்டது என்று சொன்னார்களே? அதுவும் பொய்தானா? பஞ்சம் வரும் ஆபத்து இருக்கிறது என்று சொன்னார்களே? அதுவும் பொய்தானா? ஐ.நா. கொடுத்த இலட்சியத்தை இந்த புத்தாயிரத்தில் நிறைவேற்ற முடியாமல் இந்தியா வறுமையிலும், ஏழ்மையிலும் இருப்பதாக அறிவித்தார்களே? அதுவும் பொய்தானா?
Monday, October 4, 2010
Subscribe to:
Posts (Atom)