Friday, April 22, 2011

மகிந்தாவை குற்றம் சாட்ட இந்தியா தயாரா?-ஜெ. கேள்வி.

மகிந்த இராசபக்சேவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜெயலலிதா

மஹிந்த ராஜபக்ச மற்றும் அவருடைய சகாக்களின் போர்க்குற்றங்களை விசாரிக்கும் வகையில், அவர்களை சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்த உடனடி நடவடிக்கைகளை தனது பங்கிற்கு இந்திய அரசு எடுக்க வேண்டும் என தெரிவித்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இலங்கையில் எந்த மாறுதலும் ஏற்படவில்லை என்பதைத் தான் அண்மையில் நான்கு இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்ட கோரச் சம்பவம் நினைவூட்டுகிறது. இன்னும் சொல்லப் போனால், இந்தியர்கள், குறிப்பாக தமிழர்களுக்கு எதிரான இலங்கை அரசின் கொடூர மனப்பான்மைக்கு உண்மையிலேயே ஆதாரம் தேவை என்றால், இலங்கை அதிகாரிகளின் சித்திரவதையால் அழுகிய நிலையில் சிதைந்து கிடந்த மீனவர்களின் சடலங்களே சாட்சி.

இந்தியாவைச் சேர்ந்த தமிழர்கள் மீதே இது போன்ற கொடூரத் தாக்குதலை இலங்கை அரசு நடத்தியிருக்கும் நிலையில், யாருமே நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு அனைத்து விதமான மனித உரிமை மீறல் குற்றங்களுக்கும் ஆளாகி, இலங்கை அரசின் அடக்குமுறைக்கு அடிபணிந்து இலங்கைத் தீவில் வாழ்ந்து கொண்டிருக்கும் அப்பாவி தமிழர்களின் நிலைமை என்ன என்பதை கற்பனை செய்து பார்க்கவே அச்சமாக இருக்கிறது.

ஓர் தமிழ் இளைஞரை துப்பாக்கியால் சுடுவதற்கு முன்பு, அவரை நிர்வாணமாக்கி, கண்களை மூடி, கை, கால்களைக் கட்டி, காலால் எட்டி உதைத்து இலங்கை இராணுவத்தினர் பேரானந்தம் அடைந்த காட்சியை 25.8.2009 அன்று 40 வினாடிகளுக்கு பிரிட்டிஷ் டி.வி. ஒளிபரப்பி உலகத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

இந்த இளைஞரின் பிணம், இதேபோன்று ஒன்பது சடலங்கள் இருந்த இடத்திற்கு உருட்டி விடப்பட்டது. இந்த கொடுஞ்செயலுக்கு எதிராக சர்வதேச அளவில் கூக்குரல் எழுப்பப்பட்டதோடு மட்டுமல்லாமல், இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ச சர்வதேச நீதிமன்றம் முன்பு ஆஜர்படுத்தப்பட்டு, போர்க் குற்றத்திற்காக விசாரிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

ஆனால், இந்திய அரசோ, தமிழக அரசோ இது குறித்து எதிர்ப்பையோ அல்லது வருத்தத்தையோ கூட தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மாறாக, இலங்கை அதிபருடன் விருந்துண்டு மகிழ்வதற்காக, 2009ம் ஆண்டு அக்டோபர் மாதம், கனிமொழி உட்பட தி.மு.க., காங்கிரஸ் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை இலங்கைக்கு அனுப்பி வைத்தார் கருணாநிதி.

பரிசுப் பொருட்களுடன் திரும்பிய நாடாளுமன்றக் குழுவினர் இலங்கையில் எல்லாமே நன்றாக இருக்கிறது என்றும், அங்குள்ள தமிழர்கள் குறைபட்டுக் கொள்ளும் அளவுக்கு புகார் ஒன்றுமில்லை என்றும் தெரிவித்தனர். என்னதான் நற்சான்றிதழ் கொடுத்தாலும், அங்குள்ள தமிழர்களின் நெஞ்சை உருக்கும் நிலையைக் கண்டு மனித உரிமை ஆர்வலர்கள், முற்போக்கு நாடுகளைச் சேர்ந்த அரசுகள், ஐக்கிய நாடுகள் சபை ஆகியவை பொங்கி எழுந்தன.

தற்போது, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் அனுப்பிய குழுவின் அறிக்கை பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் இருந்து ஒரு சில பகுதிகளை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

ஐ.நா. குழுவால் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நம்பத் தகுந்த குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படின், சர்வ தேச மனிதாபிமானச் சட்டம் மற்றும் சர்வதேச மனித உரிமைச் சட்டம் ஆகியவற்றிற்கு எதிரான ஆபத்து விளைவிக்கக் கூடிய அத்து மீறல்களை இலங்கை அரசாங்கம் நிகழ்த்தியுள்ளது வெட்ட வெளிச்சமாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதில் சில குற்றங்கள் போர்க் குற்றங்கள் மற்றும் மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்கள் ஆகும். 2008ம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கும், 2009ம் ஆண்டு மே மாதம் 19 ம் தேதிக்கும் இடையே, வன்னி பகுதிக்கு முன்னேறிய இலங்கை இராணுவம், மிகப் பெரிய அளவில் பரவலாக குண்டு மழை பொழிந்து அப்பாவி தமிழர்கள் மாண்டு போவதற்கு காரணமாக இருந்தது.

இதன் மூலம் வன்னி பகுதி மக்களுக்கு பலவிதமான தொந்தரவுகளை இலங்கை இராணுவம் கொடுத்தது. கிட்டத்தட்ட 3 லட்சத்து 30 ஆயிரம் அப்பாவி தமிழர்கள் குண்டு மழை பொழிவிலிருந்து தப்பிக்க முடியாத அளவுக்கு மிகக் குறுகிய பகுதிக்குள் சிக்கிக் கொண்டனர்.

ஊடகங்கள் மற்றும் போர் விமர்சகர்களை பயமுறுத்தும் வகையிலும், அவர்களுக்கு வாய்ப்பூட்டு போடும் வகையிலும், வெள்ளை வாகனங்களில் மக்களை கடத்துவது, மறைத்து வைப்பது உட்பட பல்வேறு அச்சுறுத்தும் நடவடிக்கைகளை இலங்கை அரசு கையாண்டது.

குண்டு மழைக்கு விலக்களிக்கப்பட்ட பொதுமக்கள் வாழும் தொடர்ச்சியான மூன்று இடங்களில் இலங்கை அரசு மிகப்பெரிய அளவில் குண்டு மழை பொழிந்திருக்கிறது. மருத்துவ மனைகள் குறிவைத்து தொடர்ந்து தாக்கப்பட்டு இருக்கின்றன. வன்னிப் பகுதியில் உள்ள மருத்துவ மனைகள் அனைத்தும் பீரங்கிகளால் தாக்கப்பட்டு இருக்கின்றன.

மருத்துவமனைகள் இருக்கும் பகுதிகள் என்று இலங்கை அரசாங்கத்திற்கு நன்கு தெரிந்திருந்தும் சில மருத்துவமனைகள் மீண்டும், மீண்டும் தாக்கப்பட்டிருக்கின்றன. போர் பகுதியில் உள்ள மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் செய்யக் கூடிய உதவிகளான மருத்துவ உதவி, உணவு ஆகியவற்றை இலங்கை அரசாங்கம் தடுத்து அவர்களை மேலும் துன்பத் திற்கு ஆளாக்கி இருக்கிறது.

இதன் மூலம் போர் பகுதியில் உள்ள தமிழர்களின் எண்ணிக்கையை இலங்கை அரசு வேண்டுமென்றே குறைத்து மதிப்பீடு செய்தது. 2009 ஆம் ஆண்டு ஜனவரி முதல் மே வரை, மனித வர்க்கத்தின் படுகொலை நடந்த இறுதி நாட்களில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் அனாமதேயமாக செத்து மடிந்தனர்.

ஐக்கிய நாடுகள் சபை குழுவின் அறிக்கை மிகத் தெளிவாக உள்ளது. இலங்கை அரசாங்கத்தின் போர்க் குற்றங்களை பட்டியலிட்ட தோடு மட்டுமல்லாமல், இலங்கை போர் முடிவிற்கு வந்து விட்டது என்று கூறி 27.4.2009 அன்று தனது மூன்று மணி நேர உண்ணாவிரத நாடகத்தை கருணாநிதி முடித்துக் கொண்டதற்குப் பிறகும், 2009 ஆம் ஆண்டு மே மாதம் இறுதி வரை இனப்படுகொலைகள் நடந்துள்ளன என்று தெளிவாக இந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

தமிழர்களுக்கு எதிராக தொடுக்கப்பட்ட, மனித குல வரலாற்றில் நிகழ்த்தப்பட்ட மிக மோசமான இனப்படு கொலைக்கு ஆதரவாகவும், உடந்தையாகவும், தட்டிக் கேட்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டும் இருந்த கருணாநிதி பகிரங்கமாக பொது மன்னிப்பு கோர வேண்டும் என்று தான் தமிழக மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

ராஜபக்ச மற்றும் அவருடைய சகாக்களின் போர்க் குற்றங்களை விசாரிக்கும் வகையில், அவர்களை சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்த உடனடி நடவடிக்கைகளை தனது பங்கிற்கு இந்திய அரசு எடுக்க வேண்டும். இல்லையெனில், அண்மையில் தமிழக வாக்காளர்கள் முன்பு இலங்கை குறித்து சோனியாகாந்தி தெரிவித்த கருத்துக்கள் வாய்மையற்றவை என்றாகி விடும்.

இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கு எதிரான படுகொலையை நடத்தியது இந்திய அரசு தான் என்று அடிக்கடி கூறப்பட்டு வந்த குற்றச்சாட்டு உண்மை என்று நம்புவதாக வழி வகுக்கும். இவ்வாறு அறிக்கையில் ஜெயலலிதா கூறி உள்ளார்.

என்.ராம் ஸ்பெக்ட்ரம் ஊழலில் மாட்டிக்கொண்டாரா?

என்.ராம் ஒரு பிரபல ஊடகத்தின் முதலாளியும், தலைமை ஆசிரியரும் ஆக இருக்கிறார். அவரது ஆங்கில ஊடகம் உலகம் முழுவதும் அப்படி பிரபலம். அண்ணா அந்த ஆங்கில ஊடகம் பற்றி கூறும்போது, மவுண்ட் ரோடு மகா விஷ்ணு என்றார். தனது தலையை வாஷிங்டனிலும்,தனது காலை மெட்ராசிலும் வைத்திருக்கும் மகா விஷ்ணு என்றார். அப்படி பெயர் பெற்ற அந்த மதம் பெயர் கொண்ட ஆங்கில ஏடு, தனது பணிகளில் சமீபத்தில் இலங்கை அதிபர் ராஜபக்சேக்கு ஊதுகுழல் வேலை செய்துவருவதும் எல்லோரும் அறிந்ததே.அதுமட்டுமின்றி, பிரபல சிங்கள ஊடகவியலாளர் ராஜபக்சே கொடுத்த விருதை மறுத்த போது, சிங்கள ஊடகவியலாளர்கள் எல்லோரும் ராஜபக்சே அரசை, கருத்துரிமைக்கு எதிரி என்று கண்டித்த போது, இலங்கைக்கு பறந்து சென்று ராஜபக்சே கொடுத்த விருதை வாங்கி மகிழ்ந்தவர் என்.ராம் என்பதும் அனைவருக்கும் தெரியும்.

தமிழர்கள் மீது இன அழிப்பு போரை நடத்திய ராஜபக்சேவை, புலி எதிர்ப்பு என்ற பயங்கரவாத எதிர்ப்பை நடத்துபவர் என்று பாராட்டி, சீராட்டி, ஆதரவு கொடுத்து வந்தது என்.ராம் தலைமையிலான "திஹிந்து" நாளேடு என்பதும் உலகிற்கு தெரியும். இதே என்.ராம் ஒருகாலத்தில் புலிகள் தலைவர் கிட்டுவுடன் நெருக்கமாக இருந்த போது, அவர் பற்றி அதிக ஆதரவு தந்து எழுதி வந்தவர் என்பதும் மறப்பதற்கில்லை. அதனால் தனது நட்பு எந்தப்பக்கமோ, அந்த பக்கம் எழுதுபவர் எப்படி ஊடகவியலாளராக இருக்க முடியும் என்று அறிவுஜீவிகள் எண்ணி பார்த்திருக்க வேண்டும். அதேபோல அவர் சிபிஎம் காரர்களுடன் நட்பு வைத்திருந்தார் என்பதால், அவர்களுக்காக எழுதுவதை பழக்கமாக கொண்டிருந்தார். அதை வைத்து அவரை இடதுசாரி என்று தவறாக என்னிக்கொண்டவர்கள் அதிகம். அவர் எஸ்.எப்.ஐ.யில் இருந்தார் மாணவ பருவத்தில் என்பதால், மேட்டுக்குடி வீட்டு பையன், கட்சியின் பொது செயலாளர் நம்பூதிரி பாட சென்னை வரும்போது, தனக்கு வீட்டில் கொடுத்திருந்த பீயத் காரில் விமான நிலையம் சென்று அந்த கேரள முதல்வரை கூட்டி வருவார் என்று பெருமையாக கட்சிகாரர்கள் கூறிக்கொள்வார்கள்.

அந்த காலத்தில் எஸ்.எப்.ஐ.மாணவர் தலைவர்களில் பலரும் ஜவஹர்லால் நேரு பலகலை கழகத்தில் "டிஸ்கோதே"என்ற மேற்கத்திய நடனத்தில் ஊறியவர்கள் என்பதும் அப்போதே வெளிவந்த செய்திகள். அதனால் அந்த கால நிகழ்வுகளை வைத்து எவரையும் மதிப்பிடக்கூடாது என்று விவரம் தெரிந்தவர்கள் புரிந்திருக்க வேண்டும். சமீபத்தில் கொலை குற்றத்திற்காக பிடிபட்ட சங்கராச்சாரியார் உள்ளே போன பின்பு, தப்பிக்கலாம் என்று எண்ணிய சின்ன சங்கராச்சாரியாரான விஜேந்திரன் என்.ராமின் உதவியை நாட, இந்த மனிதர் உடனே தானே தனது காரை எடுத்து கொண்டு போய், அவரை ஆந்திர எல்லையிலிருந்து கூட்டி வந்து காஞ்சிபுரத்தில் விட்டார். அடுத்த வாரமே பிரகாஷ் கரத் புதிய பொது செயலாளர்க சிபிஎம்.மிற்கு வந்தவுடன் அவரது சென்னை வருகையில் அவருக்கும் தனது வாகனத்தில் இடம் கொடுத்து கூட்டி வந்தார். இது ஒரு லிபரல் அதாவது தாராளமனது கொண்ட,கொள்கை இல்லாமல் நண்பர்களுக்காக உதவும் ஒரு பணக்கார மனிதரின் செயல்கள்தான். அதை புரியாத நமது மக்கள் அவரை இடதுசாரி என்று எண்ணினால் அது ஒரு மாயை.


சீனஅரசாங்கம் செய்யும் எல்லா தவறுகளையும் தனது லாபத்திற்காக இந்த மனிதர் பாதுகாப்பார். சீனகம்யுனிஸ்ட் கட்சி செய்வது பற்றி அதிகம் இதுபோன்ற மேட்டு குடிகளுக்கு தெரிய அவசியம் இல்லை. அங்கே அரசாங்கம் செய்யும் பிற்போக்கு வேலைகளை தனியாகவும், கட்சி செய்யக்கூடியதை வேறாகவும் பார்ப்பது ஒரு வேடிக்கை.அதில் ஒன்று ராஜபக்சேவை ஆதரிப்பது. இந்த பெரிய மனிதருக்கு[ [என்.ராமுக்கு] ஜெயலலிதா ஆட்சியுடன் மோதல் வந்த போது, அன்றைய உள்துறை அமைச்சர் அத்வானி இவருக்கு ஆதரவாக மத்திய சிறப்பு காவல் படையை அனுப்பினார் என்பதை நாம் மறக்க கூடாது. அதேபோல அந்த ஏட்டின் நூறாவது ஆண்டு விழாவுக்கு பிரதமர் வாஜ்பாயை ராம் அழைத்து வந்தார் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். அதேபோல வாஜ்பாயியின் அமெரிக்கா பயணத்தில் ராமை அவர் அழைத்து சென்றார் என்பதையும் மறக்க முடியாது.

இப்போது என்.ரவி என்ற அவரது சொந்த தம்பி ஒரு கடிதம் எழுதி அண்ணனை அமபலப்படுத்தி உள்ளார். தன்னை ஆசிரியர் பொறுப்பிலிருந்து இந்த மாதம் மூன்று நாட்கள் முன்பு, பதினெட்டாம் தேதி ராம் நீக்கி விட்டார் என்று குற்றச்சாட்டை தொடங்கியுள்ளார். மேலாண்மை இயக்குனராக இருந்த தனது தம்பி என்.முரளியையும் நீக்கி விட்டார் என்.ராம் என்று என்.ரவி எழுதுகிறார். இணை ஆசிரியர் நிர்மலா லக்ஷ்மணன் என்பவரையும் நீக்கி விட்டார் என்கிறார். மாலினி பார்த்தசாரதி என்ற தங்கள் சித்தி மகளையும், நிர்வாக ஆசிரியர் பதவியிலிருந்து ராம் தூக்கி விட்டார் என்கிறார் அவர். ஏற்கனவே மாலினியை தூக்கி எறிந்து விட்டு, தலைமை ஆசிரியராக ராம் தானே வந்தார் என்பதும் அதை ஒட்டி மாலினி அனுமதித்திருந்த பத்தி எழுத்தாளர்களான கெயில்ஒம்வேல்ட், காஞ்சனஇல்லையா, கிரிஷ்ணானந், போன்றோரின் பத்திகள் வருவது நின்று விட்டது என்பதும் வாசகர்கள் அறிந்ததே.

இப்போது என்.ரவி தனது கடிதத்தில் பல குற்றச்சாட்டுகளை என்.ராம் மீது வைக்கிறார். அவற்றில் முக்கியமானது ராம் எப்படி ஆ.ராஜாவின் நேர்காணலை போட்டு அவரை காப்பாற்றும் நோக்கத்துடன் ஊடகத்தை தவறாக பயன்படுத்தினார் என்பது. அதில் அதற்காக அதே நேரம் அந்த தொலை தொடர்புஅமைச்சகத்திலிருந்து ஒரு பக்க வண்ண விளம்பரம் கொடுக்கப்பட்டது என்றும் குற்றம் சாட்டுகிறார். அதை "பணம் கொடுத்து செய்தி வரவழைக்கும் பாணி" என்று அவர் கூறுகிறார்.அதனால் ஸ்பெக்ட்ரம் ஊழலை மறைக்கும் முயற்சியில் ஈடுபட்டார் என்றும் கூறுகிறார். அப்படியானால் சுற்று சூழல் சாட்சியங்களின் படி இந்த என்.ராமும் ஸ்பெக்ட்ரம் ஊழலில் விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்படுவாரா என்ற கேள்வி நமக்கு எழுகிறது. அகில உலக அளவில் கொடுங்கோலன் ராஜபக்சே தண்டிக்கப்படும்போது, அவனது கைத்தடிகள் அவரவர் நாடுகளில் தண்டிக்கப்படுவது நடக்கத்தான் செய்யுமோ?