Friday, April 22, 2011

என்.ராம் ஸ்பெக்ட்ரம் ஊழலில் மாட்டிக்கொண்டாரா?

என்.ராம் ஒரு பிரபல ஊடகத்தின் முதலாளியும், தலைமை ஆசிரியரும் ஆக இருக்கிறார். அவரது ஆங்கில ஊடகம் உலகம் முழுவதும் அப்படி பிரபலம். அண்ணா அந்த ஆங்கில ஊடகம் பற்றி கூறும்போது, மவுண்ட் ரோடு மகா விஷ்ணு என்றார். தனது தலையை வாஷிங்டனிலும்,தனது காலை மெட்ராசிலும் வைத்திருக்கும் மகா விஷ்ணு என்றார். அப்படி பெயர் பெற்ற அந்த மதம் பெயர் கொண்ட ஆங்கில ஏடு, தனது பணிகளில் சமீபத்தில் இலங்கை அதிபர் ராஜபக்சேக்கு ஊதுகுழல் வேலை செய்துவருவதும் எல்லோரும் அறிந்ததே.அதுமட்டுமின்றி, பிரபல சிங்கள ஊடகவியலாளர் ராஜபக்சே கொடுத்த விருதை மறுத்த போது, சிங்கள ஊடகவியலாளர்கள் எல்லோரும் ராஜபக்சே அரசை, கருத்துரிமைக்கு எதிரி என்று கண்டித்த போது, இலங்கைக்கு பறந்து சென்று ராஜபக்சே கொடுத்த விருதை வாங்கி மகிழ்ந்தவர் என்.ராம் என்பதும் அனைவருக்கும் தெரியும்.

தமிழர்கள் மீது இன அழிப்பு போரை நடத்திய ராஜபக்சேவை, புலி எதிர்ப்பு என்ற பயங்கரவாத எதிர்ப்பை நடத்துபவர் என்று பாராட்டி, சீராட்டி, ஆதரவு கொடுத்து வந்தது என்.ராம் தலைமையிலான "திஹிந்து" நாளேடு என்பதும் உலகிற்கு தெரியும். இதே என்.ராம் ஒருகாலத்தில் புலிகள் தலைவர் கிட்டுவுடன் நெருக்கமாக இருந்த போது, அவர் பற்றி அதிக ஆதரவு தந்து எழுதி வந்தவர் என்பதும் மறப்பதற்கில்லை. அதனால் தனது நட்பு எந்தப்பக்கமோ, அந்த பக்கம் எழுதுபவர் எப்படி ஊடகவியலாளராக இருக்க முடியும் என்று அறிவுஜீவிகள் எண்ணி பார்த்திருக்க வேண்டும். அதேபோல அவர் சிபிஎம் காரர்களுடன் நட்பு வைத்திருந்தார் என்பதால், அவர்களுக்காக எழுதுவதை பழக்கமாக கொண்டிருந்தார். அதை வைத்து அவரை இடதுசாரி என்று தவறாக என்னிக்கொண்டவர்கள் அதிகம். அவர் எஸ்.எப்.ஐ.யில் இருந்தார் மாணவ பருவத்தில் என்பதால், மேட்டுக்குடி வீட்டு பையன், கட்சியின் பொது செயலாளர் நம்பூதிரி பாட சென்னை வரும்போது, தனக்கு வீட்டில் கொடுத்திருந்த பீயத் காரில் விமான நிலையம் சென்று அந்த கேரள முதல்வரை கூட்டி வருவார் என்று பெருமையாக கட்சிகாரர்கள் கூறிக்கொள்வார்கள்.

அந்த காலத்தில் எஸ்.எப்.ஐ.மாணவர் தலைவர்களில் பலரும் ஜவஹர்லால் நேரு பலகலை கழகத்தில் "டிஸ்கோதே"என்ற மேற்கத்திய நடனத்தில் ஊறியவர்கள் என்பதும் அப்போதே வெளிவந்த செய்திகள். அதனால் அந்த கால நிகழ்வுகளை வைத்து எவரையும் மதிப்பிடக்கூடாது என்று விவரம் தெரிந்தவர்கள் புரிந்திருக்க வேண்டும். சமீபத்தில் கொலை குற்றத்திற்காக பிடிபட்ட சங்கராச்சாரியார் உள்ளே போன பின்பு, தப்பிக்கலாம் என்று எண்ணிய சின்ன சங்கராச்சாரியாரான விஜேந்திரன் என்.ராமின் உதவியை நாட, இந்த மனிதர் உடனே தானே தனது காரை எடுத்து கொண்டு போய், அவரை ஆந்திர எல்லையிலிருந்து கூட்டி வந்து காஞ்சிபுரத்தில் விட்டார். அடுத்த வாரமே பிரகாஷ் கரத் புதிய பொது செயலாளர்க சிபிஎம்.மிற்கு வந்தவுடன் அவரது சென்னை வருகையில் அவருக்கும் தனது வாகனத்தில் இடம் கொடுத்து கூட்டி வந்தார். இது ஒரு லிபரல் அதாவது தாராளமனது கொண்ட,கொள்கை இல்லாமல் நண்பர்களுக்காக உதவும் ஒரு பணக்கார மனிதரின் செயல்கள்தான். அதை புரியாத நமது மக்கள் அவரை இடதுசாரி என்று எண்ணினால் அது ஒரு மாயை.


சீனஅரசாங்கம் செய்யும் எல்லா தவறுகளையும் தனது லாபத்திற்காக இந்த மனிதர் பாதுகாப்பார். சீனகம்யுனிஸ்ட் கட்சி செய்வது பற்றி அதிகம் இதுபோன்ற மேட்டு குடிகளுக்கு தெரிய அவசியம் இல்லை. அங்கே அரசாங்கம் செய்யும் பிற்போக்கு வேலைகளை தனியாகவும், கட்சி செய்யக்கூடியதை வேறாகவும் பார்ப்பது ஒரு வேடிக்கை.அதில் ஒன்று ராஜபக்சேவை ஆதரிப்பது. இந்த பெரிய மனிதருக்கு[ [என்.ராமுக்கு] ஜெயலலிதா ஆட்சியுடன் மோதல் வந்த போது, அன்றைய உள்துறை அமைச்சர் அத்வானி இவருக்கு ஆதரவாக மத்திய சிறப்பு காவல் படையை அனுப்பினார் என்பதை நாம் மறக்க கூடாது. அதேபோல அந்த ஏட்டின் நூறாவது ஆண்டு விழாவுக்கு பிரதமர் வாஜ்பாயை ராம் அழைத்து வந்தார் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். அதேபோல வாஜ்பாயியின் அமெரிக்கா பயணத்தில் ராமை அவர் அழைத்து சென்றார் என்பதையும் மறக்க முடியாது.

இப்போது என்.ரவி என்ற அவரது சொந்த தம்பி ஒரு கடிதம் எழுதி அண்ணனை அமபலப்படுத்தி உள்ளார். தன்னை ஆசிரியர் பொறுப்பிலிருந்து இந்த மாதம் மூன்று நாட்கள் முன்பு, பதினெட்டாம் தேதி ராம் நீக்கி விட்டார் என்று குற்றச்சாட்டை தொடங்கியுள்ளார். மேலாண்மை இயக்குனராக இருந்த தனது தம்பி என்.முரளியையும் நீக்கி விட்டார் என்.ராம் என்று என்.ரவி எழுதுகிறார். இணை ஆசிரியர் நிர்மலா லக்ஷ்மணன் என்பவரையும் நீக்கி விட்டார் என்கிறார். மாலினி பார்த்தசாரதி என்ற தங்கள் சித்தி மகளையும், நிர்வாக ஆசிரியர் பதவியிலிருந்து ராம் தூக்கி விட்டார் என்கிறார் அவர். ஏற்கனவே மாலினியை தூக்கி எறிந்து விட்டு, தலைமை ஆசிரியராக ராம் தானே வந்தார் என்பதும் அதை ஒட்டி மாலினி அனுமதித்திருந்த பத்தி எழுத்தாளர்களான கெயில்ஒம்வேல்ட், காஞ்சனஇல்லையா, கிரிஷ்ணானந், போன்றோரின் பத்திகள் வருவது நின்று விட்டது என்பதும் வாசகர்கள் அறிந்ததே.

இப்போது என்.ரவி தனது கடிதத்தில் பல குற்றச்சாட்டுகளை என்.ராம் மீது வைக்கிறார். அவற்றில் முக்கியமானது ராம் எப்படி ஆ.ராஜாவின் நேர்காணலை போட்டு அவரை காப்பாற்றும் நோக்கத்துடன் ஊடகத்தை தவறாக பயன்படுத்தினார் என்பது. அதில் அதற்காக அதே நேரம் அந்த தொலை தொடர்புஅமைச்சகத்திலிருந்து ஒரு பக்க வண்ண விளம்பரம் கொடுக்கப்பட்டது என்றும் குற்றம் சாட்டுகிறார். அதை "பணம் கொடுத்து செய்தி வரவழைக்கும் பாணி" என்று அவர் கூறுகிறார்.அதனால் ஸ்பெக்ட்ரம் ஊழலை மறைக்கும் முயற்சியில் ஈடுபட்டார் என்றும் கூறுகிறார். அப்படியானால் சுற்று சூழல் சாட்சியங்களின் படி இந்த என்.ராமும் ஸ்பெக்ட்ரம் ஊழலில் விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்படுவாரா என்ற கேள்வி நமக்கு எழுகிறது. அகில உலக அளவில் கொடுங்கோலன் ராஜபக்சே தண்டிக்கப்படும்போது, அவனது கைத்தடிகள் அவரவர் நாடுகளில் தண்டிக்கப்படுவது நடக்கத்தான் செய்யுமோ?

1 comment:

முத்துவேல் said...

பத்திரிக்கைகாரன் என்றால் முகத்தையும் பார்க்கணும் முதுகையும் பார்க்கணும் - கோ சினிமாவில் இருந்து

Post a Comment