இலங்கைத்தீவு ஒரு பெரும் தேர்தலை சந்தித்து நிற்கிறது. அரசத்தலைவர் பதவிக்கான தேர்தல் இது. தமிழர்கள் யாருக்கு வாக்களிக்கப் போகிறார்களோ, அவர்களே வெற்றி பெறுவார்கள் எனவும் கூறப்படுகிறது. தமிழர் வாக்குகளை ஒட்டுமொத்தமாகப் பெற முயற்சிப்பவர் சிலர். தமிழர் வாக்குகளைப் பிளவுபடுத்தி, பெற முயற்சிப்பவர்கள் பலர். தமிழர் வாக்குகள் இவ்வாறாக முக்கியத்துவம் பெற்றுவருகிறது. தமிழர்கள் சிறுபான்மையானவர்கள் என்று அறிவிக்கப்படுகிறது. தமிழர்கள் இலங்கைத் தீவில், எப்போதுமே சிறுபான்மையானவர்கள் தானா? தமிழர்களின் வரலாறு என்ன? மக்கள் தொகையில் தமிழர்கள் குறைக்கப்பட்டுள்ளனரா? இதுபோன்ற கேள்விகள் இந்த நேரத்தில் எழுகின்றன.
6000 ஆண்டுகளாக தமிழர்கள் இந்தப் பிராந்தியத்தில் வாழ்ந்து வருகிறார்கள். ஆரியர்களின் ஆக்கிரமிப்புக் காலத்திற்கு, காலம் பற்றிய இந்த வாதம் இட்டுச்செல்கிறது. தமிழர்கள், திராவிட இனக் குடும்பத்தில் வருகிறார்கள். ஆரியர்கள் ஆக்கிரமிப்பு வந்தபோது திராவிடர்கள் தென்புலத்திற்கு தள்ளப்பட்டார்கள் என்றும் கூறப்படுகிறது. இன்றைய இந்தியாவில் உள்ள தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகியவை, இத்தகைய திராவிடப் பண்பாட்டைச் சார்ந்தவர்களாக இருக்கிறார்கள். மன்னராட்சிக் காலத்தில், சேர, சோழ, பாண்டியர் ஆட்சிகளாக தமிழர்களின் ஆட்சிமுறை இருந்தது. அப்போது இலங்கைத் தீவிலும் இவர்களது ஆட்சி, தொடர்பு, வணிகம், இவர்களுக்குள் நடந்த போர் ஆகியவை எதிரொலித்தன.
தமிழர்கள் கடல் வாணிபம் செய்பவர்களாக இருந்திருக்கிறார்கள். நாவாய் என்ற கப்பலைப் பயன்படுத்தி, கடல் வணிகம் செய்ததாக வரலாற்றில் எழுதுகிறார்கள். கடாரங்கொண்டான் போன்ற சொற்றொடர்கள் மூலம், இங்கிருந்து சேர, சோழ, பாண்டிய மன்னர்களின், கடல்பயணம், மற்ற நாடுகளுக்கு வணிகம் செய்யப்போவதும் அதையொட்டி நாடுகள் மீது செல்வாக்கும் அதிகாரமும் செலுத்துவதும், வழக்கமாக இருந்தது. அகஸ்தஸ் காலத்தில் ரோமுடனேயே, வணிகம் செய்துள்ளனர். இந்திய பெருங்கடலின் கரைகளில் உள்ள பல நிலங்களுக்கும், கப்பல்களை தமிழர்கள் அனுப்பியுள்ளனர். அந்தக் கப்பல்கள் மூலம் வணிகர்களும், அறிஞர்களும், வாழ்க்கை முறைகளும், அந்தப் பூமிகளுக்கு பயணம் செய்தன. பண்பாடு பரவியது. இன்றைய இலங்கைத் தீவை அன்று தமிழர்கள் ஈழம் என்றே அழைத்தார்கள். அதனால்தான் இன்றும் தமிழர் வாழும் பகுதியைத் தமிழீழம் என்று அழைக்கிறார்கள். தமிழ் சங்பகாலம் என்பது, கிறிஸ்து பிறப்பதற்கு முன்பு முதல் நூற்றாண்டிலிருந்து, கிறிஸ்து பிறந்த பின் இரண்டாவது நூற்றாண்டு வரை என கணிக்கப்படுகிறது. அப்போதுதான் சேர, சோழ, பாண்டியர் ஆட்சிகள் நடைபெற்றதாக அறிகிறோம். நான்காவது நூற்றாண்டின் கடைசிப்பாதியில், பல்லவர்கள் ஆண்டதாக அறியமுடிகிறது. அவர்கள் பெரிய கோயில்களைக் கட்டியுள்ளனர். அதுவே அடுத்த 400 ஆண்டுகளிலும் செல்வாக்கு செலுத்துகின்றன. காஞ்சியைத் தலைநகராக கொண்டு அவர்கள் தமிழ்நாட்டில் பெரும்பகுதியில் ஆட்சி நடத்தியிருக்கிறார்கள். அவர்களது ஆட்சி ஈழத்து நிலத்திலும் நீண்டுள்ளது மகேந்திர வர்மன், நரசிம்ம வர்மன் போன்ற மன்னர்கள் குறிப்பிடத்தக்கவர்கள் அபராஜிதா கடைசி பல்லவ மன்னர் எனத் தெரிகிறது. 9வது நூற்றாண்டில் அவரை ஆதித்ய சோழன் தோற்கடித்ததாகவும் சரித்திரம் கூறுகிறது. 9வது நூற்றாண்டில், சோழ சாம்ராஜ்யம் தென்னிந்தியாவில் மாபெரும் சக்தியாக விளங்கியது. மத்திய இந்தியப் பகுதிகளான ஒரிசா, மேற்கு வங்கத்தின் சில பகுதிகள் வரை சோழ சாம்ராஜ்யம் விரிவடைந்தது. முதலாம் ராஜ ராஜ சோழர், கிழக்கு சாளுக்கிய அரசை வென்றார். பாண்டிய அரசைத் தோற்கடித்து, ஈழத்தின் பெரும்பகுதியைக் கைப்பற்றினார். அதையும் தாண்டி அந்தமான், நிகோபார், லட்சத்தீவு, சுமத்திரா, ஜாவா, மலேயா, பெகு தீவு, ஆகியவற்றை தங்களது கப்பல்படை இம்மூலம் போராடி, வென்றார். ஆட்சி புரிந்தார். பீகார் மற்றும் வங்காளத்தில் மன்னராக இருந்த மகிபாலாவையும் வென்றார். அத்தகைய வெற்றிகளைக் கொண்டாட, அவர் கட்டியது தான் கங்கை கொண்ட சோழபுரம். ஆனால், 13ம் நூற்றாண்டில், சோழர்கள் வென்றதையெல்லாம் இழக்கத் தொடங்கினர். அப்போது 14ம் நூற்றாண்டில், பாண்டியர்கள் மீண்டும் எழுந்தனர்.பிறகு அவர்கள் முஸ்லிம் அரசர்களால் தோற்கடிக்கப்ட்டனர். 1316ம் ஆண்டில் கில்ஜி படையெடுத்து, சோழ, பாண்டிய அரசாட்சிகளைப் பிடித்தார். 14வது நூற்றாண்டில் இந்து மன்னர்கள் விஜயநகரம் சாம்ராஜ்யத்தை நிறுவினர். நாயக்கர்கள் ஆட்சி மதுரையிலும், தஞ்சையிலும் பிரபலமாக நிறுவப்பட்டது. தமிழர்கள் பூமி, தெலுங்கு நாயக்கர்கள் ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட்டது. 1609ல் புலிக்காட் பகுதி டச்சுக்காரர்கள் கைக்கு வந்தது. பிறகு, ஆங்கிலேயர்கள் கிழக்கிந்திய கம்பெனி மூலம் உள்ளே வந்தார்கள். வந்தவாசியில் 1760ல், பிரஞ்சுகாரர்களை போராடி ஆங்கிலேயர் வென்றனர். தரங்கம்பாடியில், டச்சுக்காரர்களை போராடி விரட்டினர். பிரஞ்சுக்காரர்கள், பாண்டிச்சேரிக்குள் முடக்கப்பட்டனர். மைசூர் மன்னருடன் 4 போர்களை ஆங்கிலேயர் நடத்தினர். ஹைதர் அலி, அவரது மகன் திப்பு சுல்தான் ஆகியோரை வென்று, தென்னிந்தியா முழுமையையும் ஆங்கிலேயர் கையிலெடுத்தனர்.
ஈழத்தில் அதாவது இலங்கையில் 1881ல் தமிழர்கள் 61.35%ம், சிங்களர்கள் 4.5%ம், முஸ்லிம்கள் 30.65%ம் இருந்தனர்.
1891ல் தமிழர்கள் 61.55%ம், முஸ்லிம்கள் 30.75%ம் சிங்களர்கள் 4.75%ம் இருந்தனர். 1901ல் தமிழர்கள் 57.5%ம் முஸ்லீம்கள் 33.15%ம் சிங்களர்கள் 4.7%ம் இருந்தனர். 1911ல் தமிழர்கள் 56.2%ம்,முஸ்லிம்கள் 36.0%ம் சிங்களர்கள் 3.75%ம் இருந்தனர். 1921ல் தமிழர்கள் 53.5%ம், முஸ்லிம்கள் 39.4%ம், சிங்களர்கள் 4.5%ம் இருந்தனர். 1946 முதல் சிங்களர்களின் மக்கள் தொகை கூடியது. தமிழர்களின் மற்றும் முஸ்லிம்களின் மக்கள் தொகை குறைந்தது. 1946ஆம் ஆண்டு சிங்களர்கள் 4%ம், 1953ல் 13%ம், 1963ல் 20.1%ம், 1971ல் 20%ம், 1981ல் 24.9% என கூடினார்கள். ஆனால் தமிழர்கள் முறையே 52.3%; 47.3%; 45.1%; 43.9%; 41.9% என குறைந்தனர். அதே போல, முஸ்லிம்கள் எண்ணிக்கையும் 1946 முதல் குறைந்தது. முறையே 39.1%; 38.1.%; 34.0%; 34.6% கடைசியாக 1981ல் 32.2% ஆக குறைந்தனர்.
11வது நூற்றாண்டில், சோழ சாம்ராஜ்யத்தில் இலங்கையில் தமிழர்கள் ராணுவத்திலும், நிர்வாகத்திலும் வலுவாக இருந்தனர். கிறிஸ்து பிறந்த பின் 1215ல் தமிழர்கள் அதிகமாக குடியேறினர். வடக்கு மாகாணமான யாழ்ப்பாணத்தை தலைநகராகக் கொண்டு, தமிழ் மன்னர்கள் ஆண்டு வந்தனர். சங்கிலி என்ற தமிழ் மன்னனின் ஆட்சி பிரபலமாக இருந்தது. அதைத்தான் “ஆண்ட பரம்பரை, மீண்டுமொருமுறை ஆள நினைப்பதில் என்ன குறை’ என்ற பாடலாக கவிஞர் காசி அனந்தன் பாடினார். இப்படி ஆண்ட ஒரு தமிழினம் அங்கே வீழ்ந்து கிடப்பதன் வரலாற்றைக் காணவேண்டும்.
1981க்குப்பின் தொடர்ந்து தமிழர்களுடடைய எண்ணிக்கை குறைந்து வருவதும், சிங்களர்களுடைய எண்ணிக்கை கூடிவருவதும், இலங்கைத்தீவின் வரலாறாக இருக்கிறது. மலையக தமிழர்களாக தோட்டங்களில் வேலை செய்வதற்காக, ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில், தமிழ்நாட்டில் இருந்து 10 லட்சம் தமிழர்கள் இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்டார்கள். அவர்கள் அனைவருக்கும், இந்திய வம்சாவழியினர் என்ற காரணத்திற்காக, இலங்கை குடியுரிமை மறுக்கப்பட்டது. மறுக்கப்பட்ட நிலையில், வாக்குரிமையும் இல்லாமல் இருந்தது. அன்றைய சூழ்நிலையில் வடக்கில் இருந்து வந்த, ஈழத்தமிழர் தலைவர்கள், சிங்களர்களால் இணக்கமாக்கப்பட்டு, மலையக தமிழர்களுக்கு குடியுரிமை மறுப்பதில், ஒத்த கருத்திற்கு கொண்டுவரப்பட்டார்கள். இந்த பிரச்சனை பெரிய அளவில், இந்தியத் துணைக்கண்டத்தில் விவாதத்திற்கு வந்த பிறகு, இலங்கைத் தீவில் உள்ள தமிழர்களின் எண்ணிக்கையை, குறைக்கும் நோக்கத்தில் கணிசமான தோட்டத்தொழிலாளர்கள், இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்டார்கள். அதற்காக ஒரு ஒப்பந்தம் போடப்பட்டது. அதற்கு சாஸ்திரிசிறிமாவோ பண்டாரநாயகா ஒப்பந்தம் என்று பெயர். அதன் மூலமாக தாயகம் திரும்பிய, லட்சக்கணக்கான தமிழர்கள், தமிழ்நாட்டில் அங்கங்கே குடியேற்றப்பட்டனர். இன்று வரை நிலையான வாழ்க்கையை அவர்களால் எட்டமுடியவில்லை. இலங்கைத்தீவில் தென்னிலங்கையில் வாழ்ந்து வரும் அந்த மலையக தமிழர்கள், எண்ணிக்கை குறைந்த நிலையில் இன்று தங்களது மெலிந்த அளவிலான பிரதிநிதிகளை, இலங்கை நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வருகிறார்கள்.
வடக்கிலும், கிழக்கிலும் வாழுகின்ற தமிழர்களும், இந்துக்கள், கிறித்துவர்கள், முஸ்லீம்கள் என்ற வேறுபட்ட மத நம்பிக்கைகளுடன் வாழ்ந்து வருகிறார்கள். அதில் குறிப்பாக தமிழ் பேசும் முஸ்லிம்களை, பிரித்து நிறுத்துவதில் சிங்கள பேரினவாத சக்திகள் வெற்றி பெற்றிருக்கறிர்கள். நடைபெற இருக்கின்ற, அரசுத் தலைவர் தேர்தலிலும் தமிழர்கள் மத்தியிலான இந்தப் பிளவுகள், சிங்கள ஆட்சியாளர்களுக்கு பயன்படுமா? அல்லது ஈழத்தமிழர்களும், தமிழ் பேசும் முஸ்லீம்களும், மலையக தமிழர்களும் இணைந்து ஒரே நோக்கோடு வாக்களிப்பார்களா? மேற்படி கேள்வி பதில் கிடைக்காமல் நிற்கிறது.
பழங்காலத்திலும் சரி, அறவழிப்போராட்ட காலத்திலும் சரி, ஆயுதப்போராட்ட காலத்திலும் சரி, இப்போது போருக்குப் பிறகு தேர்தல் களத்திலும் சரி, தமிழர்களின் ஒற்றுமை எட்டப்படாதா? என்ற ஏக்கம் உலகெங்கும் வாழ்கின்ற தமிழர்கள் மத்தியில் இருந்து வருகிறது.
Sunday, January 24, 2010
Subscribe to:
Posts (Atom)