Monday, April 12, 2010
மாநகரப் போக்குவரத்து மக்களை மதிக்கிறதா?
தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகம் சமீப ஆண்டுகளில் அதிகமான அளவில் புதிய வாகனங்களை இறக்கி யுள்ளது. அதற்காக பலகோடி ரூபாய்களை அரசு பணத்தை ஒதுக்கியுள்ளது. புதிய பேருந்துகள் மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பப் படுகின்றன. அவற்றில் குளிர் சாதன வசதிகள் கொண்ட பேருந்துகளும், மாநிலமெங்கும் பயணமாகின்றன. இவை யெல்லாம் ஆட்சியாளர்கள் சாதனைகளாக எடுத்துரைத்தாலும், பொதுமக்களும் அனுபவித்து வரும் மகிழ்ச்சியான பயணங்களை காண முடிகிறது. சென்னை மாநகரத்தில் பயணிக்கும் பேருந்துகளில், பல வகைகள் இருக்கின் றன. அதாவது ஒரே வழித்தடத்தில், பல தரங்களில் பேருந்துகளை போக்குவரத்துக் கழகம் விட்டுள்ளது. அதில் சாதாரண கட்டணம் கொண்ட பேருந்துகள் உண்டு. ஆனால் அவை அதிகமாக பயணிகளின் பார்வைகளில் படுவதில்லை. அதைப் போல விரைவு வண்டிகள் என்ற பெயரில், சாதாரண கட்டணத்தை விட சற்று அதிகமாக வசூலிக்கும் பேருந்து களும் பயணமாகின்றன. இந்த இரண்டு வகை பேருந்துகளுக்குள், பொது மக்களுக்கு வித்தியாசம் தெரிவதில்லை. அதனால் அன்றாட கூலிகளாக வருகின்ற பொதுமக்கள், குறைவான காசை கையிலெடுத்துக் கொண்டு பணிக்கு வருகின்ற ஆண்களும், பெண்களும் முதல்வகை என எண்ணிக்கொண்டு, இரண்டாவது வகை பேருந்தில் ஏற நேரிட்டால், நடத்துனருடன் பயணச்சீட்டு தொகைக்காக சண்டை போட்டுக் கொள்ளும் சூழல் எழுகிறது. ஏதோ அந்த குறிப்பிட்ட விரைவு பேருந்துகளில் நடத்துனர்களாக பணியாற்றக் கூடிய தொழிலாளர்கள் தான், தாங்கள் பணிக்குச் செல்லும் பேருந்துகளில், பயணச்சீட்டு விலையை கூட்டி வசூலிக்கிறார்கள் என்பது போல, நமது பயணிகள் குறை பட்டுக் கொள்கிறார்கள். இந்த இரண்டு வகைகளையும் தாண்டி டீலக்ஸ் என்ற தாழ்தள பேருந்து என அழைக்கப்படும் பேருந்துகள், ஒவ்வொரு வழித்தடத்திலும் அதிகமான அளவு அனுப்பப்படுகின்றன. இது போக்குவரத்துக் கழகத்தின் கிளை மேலாளர்கள் செய்கின்ற தவறா அல்லது போக்குவரத்துக் கழகத்தின் தலைமை நிர்வாகமே, தங்களது நுகர்வோரின் நிலைமை தெரியாமல் விடுகின்ற பிழையா என்பது நமக்குத் தெரியவில்லை. இதை தெளிவுபடுத்த வேண்டியதும், சரிசெய்ய வேண்டியதும் போக்குவரத்துக் கழகத்தின் நிர்வாகத்தார் கைகளில் இருக்கிறது. இந்த டீலக்ஸ் பேருந்துகளில், புதிய வகை இருக்கைகள் போடப்பட்டுள்ளன. இந்த புதிய இருக்கைகளை, அதிக அளவில் இணைப்பதற்காக, நெருக்கமாக நிறுவியிருக்கிறார்கள். அப்படி நெருக்கமாக நிறுவப்பட்டுள்ள இருக்கைகளுக்குள், பொதுவாக பயணிகள் அமர முடியாது. அமர்ந்தாலும் உடனடியாக எழ முடியாது. இத்தகைய இருக்கைகளில் சம்மந்தப்பட்ட அமைச்சரும், மேலதிகாரிகளும் அமர்ந்து பார்த்தால் மட்டும் தான், அதன் கடி னத்தை அவர்கள் உணர முடியும். அதற்கும் மேலாக பேருந்தின் பின் சக் கரம் இருக்கின்ற இடத்திற்கு மேலே அமர்த்தப்படும் இருக்கை, உயரமான ஒரு மட்டத்தில் நிறுவப்பட்டுள்ளது. இதனால் இருக்கையில் அமருவதற்கு பயணிகள் அச்சப்படுகிறார்கள். மேற்குறிப்பிட்ட டீலக்ஸ் பேருந்துகள் அதிகமான எண்ணிக்கையில், ஒவ்வொரு வழித்தடத்திலும் விடப்படுகின்றன. இத்தகைய பேருந்துகளுக்கு ஒவ்வொரு பயணச்சீட்டிற்கும், கூடுதலான அளவு காசு வாங்கப்படுகிறது. இது சாதார ணமாக அன்றாடம் அதிகாலையில் தொடங்கி பயணம் செய்து வரும், அத்துக் கூலிகளுக்கோ, ஏறமுடியாத பேருந்துகளாக ஆகிவிட்டன. இத்தகைய நெருக்கடியை போக்குவரத்துக் கழகம், ஏழை, எளிய மக்கள் மீது சுமத்தும் பொருளாதார சுமை என்பதாக உணருமா என்பது நமக்குத் தெரியவில்லை. சென்னையில் உள்ள மக்கள் தொகையில் 60 விழுக்காடு பேர், பேருந்து களிலும், நடைமேடைகளில் நடந்தும் பயணம் செய்பவர்கள். மக்களின் வரிப்பணத்தை வாங்குகின்ற அரசாங்கம், பொதுச்சேவைக்காக என்று ஒதுக்கப்பட்டுள்ள பேருந்துகளை, பெருவாரியான பயனாளிகளுக்கு, எளிதாகப் பயன்படும்படி செலுத்த வேண்டாமா? தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் தனது இணையதளத்தில், பேருந்துகளில் பயணிகள் வரிசையில் நின்று ஏறவேண்டும் என்று முதல் முழக்கங்களிலேயே குறிப்பிடுகிறார்கள். ஆனால் ஒரு காலத்தில் நடைமுறையில் இருந்த, பேருந்து நிறுத்தங்களில் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் நின்று கொண்டு, பொதுமக்களை வரிசைப் படுத்தி பேருந்துகளில் ஏறுவதற்கு ஒழுங்குப்படுத்தி வந்தமுறை நினைவுக்குவருகிறது ஆனால் அப்படிப்பட்ட ஊழியர்கள் இப்போது பார்க்க முடியவில்லை. பேருந்துகளில் பின்புறம் வழியாக ஏறவேண்டும் என்றும், முன்புறம் வழியாக இறங்க வேண்டும் என்றும் ஒரு முறையும் கூட நடைமுறையில் இருந்து வந்தது. ஆனால் காலம் செல்லச் செல்ல, இத்தகைய ஒழுங்கு மற்றும் கட்டுப்பாடு விதிகள், பயணிகளுக்கு பயனுள்ள அளவு பயன்படுத்தப்படாமல் எங்கேயோ சென்று விட்டது. அத்தகைய ஒழுங்குமுறைகள் அமலாகுமானால், பேருந்துகளில் நெருக்கடிகளை ஒழுங்குப்படுத்த உதவிகரமாக இருக்கும். அதுமட்டுமின்றி முன்புற வழியாக ஏறிக்கொண்டு, பயணிகள் பின்புறத்திலிருக்கும் நடத்துனர்களுக்கு, பயணச்சீட்டிற்கான சில்லரையையோ, நோட்டையோ கொடுத்து விடுவதும், அது கைமாறி, கைமாறி பின்னால் இருக்கும் நடத்துனரிடம் செல்வதும், திரும்பி பயணச்சீட்டும், சில்லரையும் திரும்புவதும் என்ற ஒரு சிக்கலான பயிற்சி, பேருந்திற்குள் ஒவ்வொரு நாளும் நடந்து வருவதை தவிர்க்கலாம். அத்தகைய பயிற்சியில் ஈடுபடும் காசு கொடுத்து அனுப்புபவர், தனது கையில் பயணச்சீட்டும், மீதக்காசும் வந்துச் சேரும் வரை பதட்டமாக இருக்க வேண்டிய நிலைமையையும் தவிர்க்கலாம். இதில் சிலருக்கு சில நேரங்களில் பயணச்சீட்டுகள் கைக்குக் கிடைத்தாலும், சில்லரைக் காசு திரும்பி வராமலேயே போய்விடுகிறது. இப்படிப்பட்ட ஒரு பதட்டமான பணியை, பணிக்குச் செல்லும் பயணிகள் பேருந்துக்குள் நடத்தியாக வேண்டுமா? முன்பெல்லாம் நடத்துனர்கள் பேருந்தில் முன்னேயும், பின்னேயும் நடந்து சென்று சீட்டுக் கேட்டு, கொடுப் பார்கள் என்ற பழக்கம் இருந்தது. ஆனால் இப்போதெல்லாம் பல பேருந்து களிலும், நடத்துனர்கள் தங்களது இருக்கையை விட்டு எழுவதற்கே மிகவும் கடினப்படுகிறார்கள். கூட்டம் அதிகமாக இருக்கின்ற நேரத்திலும், கூட்டமே பேருந்துக்குள் இல்லாத நேரத்திலும், இத்தகைய நடத்துனர்கள் தங்கள் இருக்கையிலேயே அமர்ந்து கொண்டு, பயணிகளிடம் ரிலே முறையில் காசை வாங்கிப் போடுபவர்களாக மாறியிருக்கிறார்கள். இத்தகைய மாற்றம் கணிசமான பேருந்துகளில் இருப்பது கவலையளிக்கிறது. இன்னமும் சில பேருந்துகளில் நடத்துனர்கள் நடந்துச்சென்று சீட்டுக் கொடுக்கிறார்கள் என்ற நல்ல செய்தியும் இருக்கிறது. போக்கு வரத்துக் கழகத்தின் தலைமையிலிருந்து இதற்கான வழிகாட்டும் நெறிகள் கொடுக்கப்பட்டால் நல்லது. தொழிற்சங்கங்கள் தங்களது தொழிலாளியின் பண்பை உயர்த்த, பொதுமக்களுடன் இனிமையான பழக்கத்தை மேற்கொள்ள கற்றுக்கொடுக்காத இன்றைய சூழலில், போக்குவரத்துக் கழக நிர்வாகம் தான் இதைச் செய்ய வேண்டும். கடந்த வாரம் இதேபோல பயணச்சீட்டு பரிசோதனை ஆய்வாளர்கள், ஒரு பேருந்தை மடக்கி நிறுத்தி கீழே இறங்கிய பெண் பயணியிடம், சீட்டை கேட்கிறார்கள். அவரது இருக்கைக்கு வந்து சீட்டுக் கொடுக்காத நடத்துனர், பேருந்தின் பின்புறத்தில் அமர்ந்து கொண்டிருந்ததைக் கூறி, அந்த பயணி பதிலளிக்கிறார். சீட்டுசோதனையாளர்கள் இதுபற்றி கவலைப் பட்டதாகத் தெரியவில்லை. இத்தகைய போக்குகளை அடிப்படையில் களைய, நடத்துனர்களை நடக்கச் சொல்லுங்கள் என்பதாக நிர்வாகத்திடம் கேட்க வேண்டியுள்ளது. அதிகக் கட்டணத்தை வசூலிக்கும் டீலக்ஸ் பேருந்துகள், அனைத்து நிறுத்தத்திலும் நின்று செல்ல வேண்டும் என்று, எழுத்து பூர்வமாக இல்லாமல், வாய் மூலம் கட்டளைகளை நிர்வாகம் அனுப்புகிறது. இது பேருந்தின் மீது மற்றும் போக்குவரத்துக் கழகத்தின் மீது, பயணிகளுக்கு இருக்கும் மரியாதையைக் குறைத்து விடும்.சட்டமன்றம் நடந்து வரும் இன்றைய வேளையிலாவது, மேற்கண்ட குறைகள் பேசப்பட்டு, தீர்க்கப்படுமா என்பது பயனாளிகளின் கேள்வி.
Subscribe to:
Posts (Atom)