Friday, September 3, 2010
சித்ரவதை தடுப்பு மசோதாவை,இந்தியாவும் ஏற்றுக்கொண்டது.
கடந்த வியாழக்கிழமை மத்திய அமைச்சரவை நீண்ட காலமாகவே எடுத்துக் கொள்ளப்படாத சித்ரவதை தடுப்பு மசோதாவிற்கு ஒப்புதல் கொடுத்துள்ளது. அதையொட்டி அந்த மசோதா சட்டமாக்கப்படுவற்காக நாடாளுமன்றத்தின் முன்னால் வைக்கப்படும் சமீபத்தில் சத்தீஸ்கர் மாநிலத்தில் தண்டேவாடா பகுதியில் நடந்த படுகொலைகள் மற்றும் சித்ரவதைகள் சம்பந்தமாக, அந்த வட்டாரத்தில் இறக்கி விடப்பட்டுள்ள மத்திய துணை ராணுவப் படையினர், இத்தகைய மசோதாவை அங்கீகரிப்பதன் மூலம் தங்களது தார்மீக உணர்வுகளை இழந்துவிடுவார்கள் என்றும், நமது நாட்டின் பாதுகாப்புப் படையினர் கடமையாற்றுவதில் செயலிழந்து விடுவார்கள் என்றும் அதிகாரிகளால் முன்வைக்கப்பட்ட தடங்கல் ஆலோசனைகளை மீறி மேற்கண்ட மசோதாவிற்கு தலைமை அமைச்சர் ஒப்புதல் கொடுத்துள்ளார்.ஐ.நா. சபையில் முக்கிய ஒப்பந்தமாக இந்த சித்ரவதை சட்டம் கருதப்படுகிறது. கொடூரமான, மனிதத் தன்மையற்ற தண்டனைகள் மற்றும் காவலில் வைக்கப்படும் நபர்கள் மீது நடத்தப்படும் வன்முறைகள் இந்த சட்டத்தின்மூலம் தடுக்கப்படும். நாடெங்கிலும் காவல் சித்ரவதைகள், காவல் மரணங்கள் நிகழ்ந்து வரும் நேரத்தில், இத்தகைய மசோதா மனித உரிமை ஆர்வலர்களால் பெரிதும் வரவேற்கப்படுகிறது. இந்தியா மனித உரிமைகளை மதிக்கிறது என்றும், இங்குள்ள அரசாங்கம் தவறு செய்பவர்களை தண்டிக்க தயாராய் இருக்கிறது என்றும் புரிந்து கொள்வதற்கு இந்த மசோதா சட்டமாக வேண்டும் என்ற அவசியம் இருக்கிறது என்பதாக மன்மோகன் கூறியுள்ளார். கடந்த ஒராண்டாக இதற்கு அமைச்சரவை ஒப்புதல் கொடுக்கப்படாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்திய தண்டனைச் சட்டத்தில் சில மாற்றங்களை செய்தால் போதும் என்றும், மேற்கண்ட சித்ரவதை தடுப்பு சட்டம் தேவையில்லை என்றும் உள்துறை அமைச்சகத்தில் கருத்துக்கள் நிலவின. சாட்சிகள் சட்டத்தில் மாற்றங்கள் தேவை என்றும் விவாதிக்கப்பட்டன. இவ்வாறு மூன்று அல்லது நான்கு சட்டங்களை மாற்றுவதற்கு பதிலாக, புதிய சட்டத்தை கொண்டு வருவதற்காக பிரதமர் முடிவெடுத்துள்ளார்.ஐ.நா. சபையின் ஒப்பந்தத்தில், சித்ரவதை தடுப்பு சட்டத்தை கொண்டு வருவோம் என்று கையெழுத்திட்ட நாடுகளில் இந்தியா உள்பட சில நாடுகள் மட்டுமே இன்னமும் அதற்கான சட்டத்தை இயற்றாமல் இருக்கிறார்கள்.இந்திய குற்றவியல் சட்டங்களில் இதுபோன்ற அம்சங்கள் இருந்தாலும் கூட, ஐ.நா.சபையின் ஒப்பந்தத்தில் இருக்கின்ற, சித்ரவதை என்ற அம்சத்தை விளக்கும் தன்மை அவற்றில் இல்லை. கலக எதிர்ப்பு நடவடிக்கைகளை அரச படைகள் மேற்கொள்ளும் போது, அப்பாவி கிராமத்தவர்கள் அதற்கு இலக்காகி விடுகிறார்கள். அதேபோல, உள்கிடை ஆதிவாசிகள் பகுதிகளிலும், மேற்குறிப்பிடும் அடக்குமுறைகள் மக்கள் மீதான சித்ரவதைகளாக அம்பலமாகி உள்ளன. அதுவே, நக்சல்பாரி இயக்கம் வளர்வதற்கான சூழலை ஏற்படுத்தி விடுகிறது. உதாரணமாக மேற்கு வங்கத்தில் இருக்கும், மேற்கு மிதினாப்பூர் மாவட்டத்தில் லால்கர் பகுதி இன்று மாவோயிஸ்டு தளம் கொண்டது என்பதாக கருதப்படுகிறது. இந்த வட்டாரத்தில் இப்போது இயங்கி கொண்டிருக்கும் ஆதிவாசிகள் மக்கள் திரள் அமைப்பு, மேற்கண்ட காரணங்களினாலேயே வளர்ந்துள்ளது. அதற்கு காவல்துறை அராஜகங்களுக்கு எதிரான மக்கள் குழு என்று பெயர். அதையே மாவோயிஸ்டு ஆதரவு அமைப்பு என்று அரசு முத்திரை குத்துகிறது. சமீபத்தில் இந்த மக்கள் குழுவை சேர்ந்த தலைவர் ஒருவரை, காவல்துறை சுட்டுக் கொன்றது. அவர் அங்கே நடந்த ரயில் விபத்திற்கு காரணமானவர் என்பதாகவும் அரசு கூறியது. ஆனாலும் கூட ஒரு மக்கள் திரள் அமைப்புக்கு தலைவராக இருப்பவரை, வன்முறைச் செயல்களுக்கு முத்திரை குத்துவதும், பிறகு பிடித்துக் கொல்வதும் பொதுமக்களால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. ஏனென்றால் மேற்கு வங்க முதலமைச்சர் பயணத்தில் தாக்குதல் நடத்த மாவோயிஸ்டுகள் முயற்சி எடுத்ததையொட்டி, அந்த வட்டாரம் முழுமையிலும் உள்ள ஆதிவாசிகள், காவல்துறையால் கடுமையாக தாக்கப்பட்டார்கள். அந்த தாக்குதலுக்கு பிறகுதான், காவல்துறை அராஜக எதிர்ப்பு மக்கள் குழு என்ற ஆதிவாசிகள் அமைப்பு உருவானது. ஆகவே, மக்கள் மீதான காவலர்களின் சித்ரவதைகளுக்கு தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற நிர்பந்தம் மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ளது.அதே போல, ஜம்மு காஷ்மீர் பகுதியில் ஆயுத கலவரங்கள் நடந்து வரும் வட்டாரத்தில், பொதுமக்கள் மீதான சித்ரவதைகள் பட்டியலிடப்படுகின்றன. அவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்க இப்படியொரு சட்டம் அவசியம் என்று மத்திய அரசு கருதுகிறது. மாவோயிஸ்டுகளின் வன்முறைக்கு காரணமாக, அரசப்படைகளின் அடக்குமுறைகளும், சித்ரவதைகளும் மனித உரிமை ஆர்வலர்களாலும், அறிவிஜீவிகளாலும் முன்வைக்கப்படுவதனால், அவர்களது வாயடைக்க இப்படியொரு சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்று பிரதமர் கருதுவார் போலும்.மேற்கண்ட சட்டத்தை கொண்டுவருவதற்கு முன்னால், அதற்கான சட்ட முன்வரைவை இந்தியாவின் சட்ட ஆணையம் முழுமையாக சோதித்த பிறகு தான் அனுமதிக்கப்பட்டுள்ளது. 1948ஆம் ஆண்டு ஐ.நா. சபையால், மனித உரிமைகளுக்கான பிரபஞ்சம் தழுவிய பிரகடனம் என்று ஒன்று அறிவிக்கப்பட்டது. அது நவீன கால சமூதாயத்தில் சித்ரவதைகளை தடைசெய்வதற்கான ஒரு முயற்சி. அனைத்து நாட்டு பொதுமன்னிப்பு சபை, சித்ரவதை பற்றியும் அதன் கொடூரமான, மனிதத் தன்மையற்ற, தரம் குறைந்த கையாளுதல்கள் மற்றும் தண்டனைகள் பற்றியும் 150 நாடுகளிலிருந்து 1997 முதல் 2000 ஆண்டு வரை நடந்த நான்காண்டு நிகழ்வுகளை, பட்டியல் போட்டு கொடுத்துள்ளது. 70 நாடுகளில் அரசியல் கைதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளும், மேலும் 130 நாடுகளில் சாதாரண கைதிகள் மற்றும் காவலில் வைத்திருப்போர் சித்ரவதைகளும் அதில் பட்டியல் போடப்பட்டுள்ளது. அரசு தரப்பு செய்து வரும் சித்ரவதைகள் ஆவணமாக்கப் பட்டுள்ளன.சித்ரவதைகள் என்பது உண்மையை கரப்பதற்காக காவலர்களால் செய்யப்படுகின்ற செயல் மட்டுமல்ல, மாறாக பிடிபட்டவரின் மனஉறுதியை உடைப்பதற்காகவும் கையாளப்படுகிறது. அது அடக்குமுறையின் மற்றும் அதிருப்திக்கு எதிரான, அதிகார மேம்படுத்தலுக்காக பாடுபடும் சமூகங்களுக்கு எதிரான வடிவமாக இருக்கிறது. உதாரணமாக இந்தியா போன்ற நாடுகளில் மதச் சிறுபான்மையினர் மீதான அரசப் படைகளில் அடக்கு முறைகள் சித்ரவதைகளாக விளக்கப்படுகின்றன. தேடப்படும் குற்றம் சாட்டப்பட்டவரின் குடும்பத்தினர் மீதும், குடும்பத்து பெண்கள் மீதும் சம்பந்தம் இல்லாமல் ஏவப்படும் அடக்குமுறைகள், விசாரணைகள், கைதுகள் ஆகியவை அத்தகைய சித்ரவதை வடிவங்களாக இருக்கின்றன. அதாவது சிறுபான்மை மதத்தினரான முஸ்லீம் சமுதாய மக்கள் மத்தியில், வீடுகளில் அரசப் படைகள் புகுந்து பெண்களை கரடுமுரடான முறைகளில் விசாரணை செய்வது, அவர்களது பர்தாவை தூக்கிப் பார்த்து அடையாளம் காண முயற்சிப்பது, இரவு நேரங்களில் அவர்களது வீடுகளுக்கு சென்று, விசாரணை என்ற பெயரில் தொந்தரவு செய்வது ஆகியவை சித்ரவதை வகைகளாகும்.அதேபோல சாதிய ஒடுக்குமுறை இருக்கின்ற ஒரு சமுதாய அமைப்பில், ஆதிக்க சாதிகளின் நலன்களை மனதில் கொண்ட அரசப் படைகள், தலித் சமூக மக்கள் வாழும் குடியிருப்புகளில் செய்கின்ற அத்துமீறல்கள் அனைத்துமே சித்ரவதை பட்டியலில் சேருகின்றன. சாதி மோதல்கள் நடக்கும் போதெல்லாம், திட்டமிட்டு அமைப்பாக்கப்பட்ட ஆயுதம் தாங்கிய அரசப் படைகள், ஆதிக்க சாதி பண்ணையார்களின் நலன்களை பாதுகாக்கும் திட்டத்தோடு, ஒடுக்கப்பட்ட சாதிகளின் மீது கண்முடித்தனமாக தொடுக்கின்ற தாக்குதல்கள் இந்த வகையில் சேர்க்கப்படுகின்றன.சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள மனித உரிமைகள் வேண்டி குரல் எழுப்புகின்ற அதிருப்தியாளர்கள், காவல்துறையால் சாதாரண காலங்களில் கூட ஒடுக்கப்படுவது வழக்கமாக இருக்கிறது. சட்டத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள், போராட்டங்கள் ஆகியவற்றை அனுமதிப்பதில் கூட, கஞ்சத்தனம் காட்டுகின்ற காவல்துறையின் அணுகுமுறைகள் சித்ரவதைகளாகத்தான் சித்தரிக்கப்பட வேண்டும். காவல்நிலையங்களில் நடைமுறையில் இருக்கின்ற லஞ்சம், ஊழல் ஆகிய அணுகுமுறைகளும், ஏழை மக்களுக்கு சித்ரவதைகளாகத்தான் இருக்கின்றன. ஐ.நா. சபையின் அழுத்தத்தின் காரணமாக, உலக வங்கி மற்றும் அனைத்து நாட்டு நிதியம் ஆகியவற்றின் உதவிகளை பெறுதவற்காக, தாங்களும் மனித உரிமை பண்புகளை உயர்த்திப் பிடிப்பதாக காட்ட வேண்டிய பொறுப்பு அல்லது நிர்பந்தம் மத்திய அரசுக்கு இருக்கிறது. அப்படிப்பட்ட நிர்ப்பந்தத்தின் காரணமாக, இப்படிப்பட்ட நல்லதொரு மசோதாவை சட்டமாக்கினார்கள் என்றால், அதை முறையாக உணர்வுப்பூர்வமாக அமூல்படுத்துவார்களா என்ற கேள்வியும் அதனுடனேயே எழுகிறது.அங்கோலா, அர்ஜன்டினா, பிரேசில், சிலி, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, கோட்டமாலா, ஈராக், இந்தியா, இஸ்ரேல் என்று உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டிலும் இதுபோன்ற சித்ரவதை நடத்தப்படுவதை மனித உரிமை ஆர்வலர்கள் பட்டியல் போடுகிறார்கள் அவ்வாறு பட்டியலிடப்படும் சித்ரவதைகள் இந்தியாவின் ஒவ்வொரு முளையிலும் நடந்து வருவதும், அதுவே ஒவ்வொரு ஆண்டும் ஐ.நா. சபையின் மனித உரிமை கவுன்சில் முன், பணிக்குழு என்ற பெயரில் விசாரிக்கப்படுவதும் நடந்து வருகிறது.சட்டமாக்கி விட்டோம் என்ற பெயரில் முதல் கட்டமாக இந்திய அரசு, உலக அரங்கில் குற்றம் சாட்டப்படுவதிலிருந்து தப்பிக்கலாம். ஆனால் அந்த சட்டத்தை எந்த அளவிற்கு உண்மையில் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்ற கேள்வியும் பின்னாலேயே எழுப்பப்பட இருக்கிறது என்பதையும் எழுப்பப்பட வேண்டும் என்பதையும் முன்னாலேயே நாம் சொல்லி வைப்போம்.
Subscribe to:
Posts (Atom)